(2)
சமையில் மேடையில் அமர்ந்தவாறு இரு பக்கங்களும் தொடைக்கு அருகாமையில் தன் கரங்களைப் பதித்து, கால்களை ஆட்டிக் கழிவறை சென்ற கணவன் திரும்பி வரும் வரைக்கும் அவன் நினைவோடு காத்திருக்க, அவஸ்தை குறைந்த மகிழ்ச்சியுடன் வந்துகொண்டிருந்தவனைக் கண்டு விழிகளில் குறும்பு கூத்தாடப் பார்த்துக்கொண்டிருந்தாள் மிளிர்மிருதை.
தன்னவளின் விழிகளில் தெரிந்த கிண்டலைக் கண்டு எப்போதும் போல இளகியவனாகத் தன் தலையை ஆட்டி விரைந்து அவளை நெருங்கியவன், மெல்லிய கூரான நாசியைச் சுண்டு விரலுக்கும், நடு விரலுக்கும் இடையில் வைத்து அழுத்திப் பிடித்து ஆட்டியவாறு,
“ஏன்டி… என்னைக் கஷ்டப் படுத்துவதில் அத்தனை சந்தோஷமா உனக்கு?” என்றவாறு அவளை நோக்கி மேலும் குனிந்தான்.
மெல்லிய படபடப்போடுக் குனிந்தவனின் உதடுகள் உரசும் நேரத்திற்காக ஒரு வித ஆர்வத்துடன் சூரியனின் கூட்டுறவுக்காகக் காத்திருக்கும் தாமரை போலத் தன் மலர் முகத்தைச் சற்று அண்ணாந்து பார்த்தாள்.
அவனுடைய உயிர் மூச்சு அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது. அவனுடைய கூரிய விழிப் பார்வை அவள் விழிகளுடன் உரசி அவள் புத்தியை அப்படியே சுழற்றித் தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தது. இரு உதடுகளும் உரசும் தூரம் வெறும் சொற்ப அளவு மட்டுமே. சற்று அசைந்தாலும் முட்டிக்கொள்ளும். தொட்டுக் கொள்ளும். அப்படித் தொட்டால் போதும், தீ பற்றிக் கொள்ளும். அந்தத் தருணத்திற்காய் ஏக்கமாய் பார்த்திருந்தாள் அந்தக் கோதை.
‘இதோ நெருங்கிவிட்டது… வருடும் தூரம் அதிகமில்லை… இதோ ஏக்கத்துடன் காத்திருக்கும் என்னுடைய மெல்லிய உதடுகளைக் காளையை அடக்கும் வீரனாய் பாய்ந்து பற்றப்போகிறான்… அதில் உருகிக் குழைந்து அவனுக்குள் புதையப் போகிறேன்… இதோ… வெறும் கதிர்முனை அளவுதான் தூரம்…’ என்று எண்ணியவளாகத் தன் விழிகளுக்கு மிக மிக அருகே நெருங்கியிருந்த அந்தக் கம்பீரம் நிறைந்த முகத்தை ஒரு வித போதை கலந்த ஏக்கத்துடன், அந்தக் கூரிய விழிகளுடன் தன் விழிகளைக் கலந்து உறவாட முயன்றாள்.
ஆனால் அந்தோ பரிதாபம், அவள் முகத்தில் நர்த்தனம் ஆடிய அப்போதை விழிகளை நீண்ட நேரமாகப் பார்க்கும் சக்தி அவளுக்கு இருக்கவில்லை. ஒரு வித படபடப்புடன், தன் விழிகளை மெதுவாக மூடிக்கொண்டவளுக்கு அவனுடைய சுடும் மூச்சுக் காற்றுச் சாமரம் வீச ஒரு வித கிளர்ச்சியுடன் அவனுடைய அழுத்தம் நிறைந்த அந்த உதடுகளின் வருடலுக்காகக் காத்திருந்தாள்.
அவனுடைய நிலையோ அவளை விடப் படு பயங்கரமாக இருந்தது. இதயம் படு வேகமாகத் துடித்தது. இதோ யாருக்கும் கிடைக்காத தேவாமிர்தம் உதடுகள் தொடும் தூரத்தில் இருக்கிறது… ஆனால் தொட முடியாது… சூரியனுக்குத் தாமரையைத் தொலைவிலிருந்து பார்க்க மட்டும்தானே அதிகாரமிருக்கிறது. சற்று நெருங்கினாலும், அவனைக் காதலித்த குற்றத்திற்காக அந்த மலர்கள் பொசுங்கிப்போய்விடுமே. அதுபோலத்தானே அவளும்… காதல் என்னும் உணர்வால் இரண்டறக் கலந்திருப்பவள், அவனை நெருங்கினால், அவள் நிலைப் படு பயங்கரமாகிவிடுமே… ஏற்கெனவே அனுபவப் பட்டவனுக்கு மீண்டும் அதே தவறைச் செய்ய எங்கனம் மனம் வரும்? அவள் வதங்கினால் இவன் உயிர் காயுமே. தவிர, அவளாக அவனை அணுகாமல் இவன் எப்படி காமபாடம் படிப்பான். ஆனாலும், குரங்குப் புத்தி ஒரு இடத்தில் நிற்கிறதா? மனம் வேறு ஒன்று சிந்திக்கப் புத்தியோ மனையாளைத் தாபத்துடன் நெருங்கச் சொன்னது. வலது கரம், அவனையும் மீறி, அவன் அனுமதியையும் வேண்டாது அவளுடைய முழங்காலில் பதிந்து மெதுவாக அழுத்திக் கொடுத்தது.
அது போதாதென்று நினைத்த கரங்கள், அப்படியே சற்று மேலேறித் தொடையைத் தழுவி மேலும் முன்னேறி, இடையைச் சென்றடைய முயன்ற நேரம், விழிகளை மூடிக் கிடந்தவள், அந்த ஆண்மகனின் கரத்தின் வருடலில் சிலிர்த்துத் தன் விழிகளைப் படக்கென்று திறந்து கொண்டாள்.
அவசரமாக அவனைத் தள்ளிவிட முயன்று பரந்து விரிந்த மார்பில் தன் கரங்களைப் பதிக்க, அடடே…! எதற்காகக் கரங்களை அங்கே பதித்தோம் என்பதே அந்தக் கோதைக்கு மறந்து போயிற்று.
ஏதோ ஒரு மாயையில் கட்டுண்டவளாக, அவன் விழி வீச்சில் சுழன்று சுருங்கி அவனுக்குள் விழுந்து கலந்து செல்ல முயன்ற அந்த விநாடி, சுதாரித்துக் கொண்ட அபயவிதுலனின் உதட்டில் மெல்லிய கிண்டல் புன்னகை ஒன்று மலர்ந்தது.
அவளுடைய கன்னம் நோக்கிச் சென்றவனின் முகம், சற்று நிதானித்துத் தாடையால் மென் கன்னத்தை உராய்ந்தவாறு நிற்க, அவள் இடையை நோக்கிச் சென்ற கரமோ, இடையைத் தாண்டிச் சென்று அவளுக்குப் பின்னால் இருந்த கொஃபி மேக்கரில் இருந்த கப்பை எடுக்க, அவன் வருடலின் சுகத்திற்காகக் காத்திருந்தவள் அது நடக்காமல் போக என்னவாக இருக்கும் என்கிற யோசனையுடன் விழிகளைத் தாழ்த்திப் பார்த்தாள்.
அவன் எடுத்த பொருளைக் கண்டதும், ‘வடை போச்சே…’ என்பது போலச் சற்று வாய் பிளந்து தன் முன்னால் நின்றிருந்த அபயவிதுலனைப் பெரும் எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்தாள்.
எப்படியாவது அவன் உதடுகள் தன் உதட்டோடு முட்டி மோதி விளையாடும், கரங்கள் இடையில் சதுரங்கம் ஆடும் என்று பெரிதும் நம்பியிருக்க, அவனோ, வெறும் கொஃபிமேக்கரை இழுத்தெடுக்கிறானே…
பெரிய சத்தியவான்…! சொன்ன சொல்லைக் காக்கிறாராம்…! யாருக்கு வேண்டும் அவர் நேர்மை…? ஏன்… இதழோடு இதழ் ஒற்றி எடுத்தால்தான் என்னவாம்…? பெரிய அரிச்சந்திரன்… வம்சம்…! சொன்ன வாக்கைக் காத்துக் கொள்ள… சே… அவசரப்பட்டுக் கற்பனையைப் பறக்க விட்டுவிட்டேனே… என்று முகம் சுருங்கத் தன்னவனைப் பார்த்து முறைத்தாள் மிளிர்மிருதை.
ஆனால் அவனோ அதைக் கண்டு கொள்ளாதவனாகக் கொஃபி மேக்கரில் தநீர் வார்ப்பதற்கான முயற்சியில் இறங்கிக்கொண்டிருக்க, இவளோ அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். பாலைக் காய்ச்சுவதற்காகப் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, இவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் புன்னகை கசிந்தது.
ஒவ்வொரு முறையும் நடப்பதுதான் இது. அவனது அறையில் படுக்கும் போதும் சரி, இல்லை அவர்களுக்கான பொது அறையில் அவள் தனியாக உறங்கும் போதும் சரி, அபயவிதுலன், அவர்களின் அறையை விட்டு வெளியே சென்றால், உடனே தூக்கம் கலைந்து எழுந்துவிடுவாள் மிளிர்மிருதை.
அதன் பின் அவன் வீட்டில் இருக்கும் நாள் முழுவதும், அவன் பின்னே குட்டிபோட்ட பூனை போல அங்கும் இங்குமாக அலைந்து திரிவாள். அதுவும் காலையில் அவனுக்குத் தேநீர் வார்த்துத் தருகிறேன் என்று அவனோடு சமையலறைக்குள் நுழைந்தால், நடப்பது வேறாக இருக்கும்.
பேச்சு என்னவோ அவனுக்குத் தேநீர் வார்த்துக் கொடுப்பது என்பதுதான்… ஆனால், நிலைமைதான் வேறு. மற்றவர்கள் கையால் வார்ப்பார்கள், இவள் வாயால் வார்ப்பாள். இதோ இப்போது போல, கடைசியாக அவன்தான் தேநீர் வார்த்து அவளுக்கும் கொடுத்து இவனும் குடிப்பான்.
அவளும்தான் என்ன செய்வாள். இப்படி மகாராணிகாக உணர வைத்து, அவளுக்கு சேவகம் செய்து, சிறு தூசி கூடப் படாது பாதுகாத்து, இப்படித் தேநீர் வார்த்துக் கொடுக்கும்போது ஏற்படும் ஆனந்தத்தை எப்படி இழப்பாள். அதுவும் அவன் கரத்தால் தேநீர் வாங்கிக் குடிப்பதில் உள்ள அலாதி சுகம் வேறு எதிலும் அவளுக்கு இருந்ததில்லை.
எப்போதும் போல, அவளுக்குப் பிடித்தாற்போல, அளவான பால் சாயம் கலந்து இரண்டு கரண்டி சர்க்கரை சேர்த்து அவளிடம் நீட்டிவிட்டுத் தனக்குச் சர்க்கரை கலக்காது வார்த்துக்கொண்டு, முன்னறைக்குச் செல்ல, இரும்பு இழுபட்ட காந்தமாக அவன் பின்னால் சென்றாள் மிளிர்மிருதை.
முன் கதவைத் திறந்து எட்டிப் பார்க்க, செய்தித்தாள்கள் தபால் பெட்டியில் செருகியிருந்தது. அதை இழுத்து எடுத்தவாறு நிமிர்ந்து பார்த்தான்.
அக்டோபர் மாதத்தின் இடைக்காலம் என்பதால், இலையுதிர் காலம் தொடங்கிவிட்டிருந்தது. இலைகள் பல வர்ண நிறத்தில் மாறி விழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என்று அனைத்தும் கலந்த கலவையாக மரங்கள் கண்களைப் பறிக்க, சைவருக்கும் மேல் பதினெட்டுப் பாகை குளிர் காற்றோடு அவனைத் தீண்டிச் சென்றது.
அவன் பின்னால் வந்த மிளிர்மிருதையோ, குளிர் உடலில் பட,
“விதுலா…! கதவை மூடுங்கள்… குளிர்கிறது…” என்று சிலிர்க்க, அவசரமாகக் கதவை மூடிவிட்டுத் திரும்பித் தன் மனைவியைப் பார்த்து,
“சாரிமா…” என்றுவிட்டுச் சோபாவில் அமர்ந்தான்.
அவளும் பொத்தென்று அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவன் தோளில் தலை சரித்து அவன் திறந்து வைத்திருந்த செய்தித்தாளில் தன் விழிகளைச் செலுத்தியவாறு கரத்திலிருந்த தேநீர் கோப்பையை உதட்டிற்குள் பொருத்திப் பொருத்தி எடுத்தாள்.
அதிலிருந்த கேலிச்சித்திரக் கதை, அவள் கவனத்தைக் கவர, தன் கணவனை இடித்து நெரித்துச் செய்தித்தாளில் தன் முகத்தைப் புதைக்க, அந்தோ பரிதாபம். அவனுக்குப் படித்துக்கொண்டிருந்த செய்திக்குப் பதில் கரிய தலைதான் தெரிந்தது.
தன்னை மீறி அவள் செய்கையில் நகைத்தவனுக்கு அவளை எண்ணியே வியப்பாக இருந்தது.
அவனை விடச் சிறிய உருவம்தான். உடலால் பொத்தினால் மறைந்து போவாள்… ஆனால் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறாள்… நினைக்கும் போதே புன்னகை மேலும் விரிந்தது. கூடவே ஏக்கமும் தோன்றியது.
இரண்டு வருடங்களாகத் தவமிருக்கிறான், அவன் செய்த தவற்றை மறப்பதற்கு. ஆனால் இதுவரை மறந்ததுபோலத் தெரியவில்லையே… எப்போது மறப்பாள்… நினைக்கும் போதே ஆயாசமானது.
சீக்கிரமாக நான் செய்ததை மறந்துவிடடி…’ என்று மனதிற்குள் வேண்டியவாறு அவளுக்கு வேண்டிய பகுதியை மட்டும் பிரித்து நீட்ட, அவளோ, அவனுடைய வாசிப்பைக் குழப்பிய எந்த வித கிலேசமும் இன்றி, அவன் கொடுத்த பகுதியைப் பறித்து உடனேயே அதில் ஒன்றிப்போனாள். கூடவே பெரும் நகைப்புடனே கேலிச் சித்திரத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
படிக்கப் படிக்க அவள் உதடுகளின் சிரிப்பு அதிகரிக்க, அப்படித் தன் மனைவியைச் சிரிக்க வைக்கும் மகிமை அந்தக் கேலிச் சித்திரத்தில் என்ன இருக்கிறது என்று அவனும் எட்டிப் பார்த்தான். பார்த்தவனின் உடலும் நகைப்பில் மெல்லியதாகக் குலுங்கியது.
அந்தக் கேலிச் சித்திரத்தை எழுதியது யார் என்று ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் நகைத்த தன் மனைவியை ஆவலுடன் பார்த்துவிட்டு தன் கரத்திலிருந்த செய்தித்தாளில் கவனத்தைத் திசை திருப்ப, காந்திமதி சுத்தபத்தமாகக் கீழே வந்துகொண்டிருந்தார்.
(3)
முன்னறையில் இருவரையும் கண்ட காந்திமதியின் முகம் மலர்ந்து போனது. எப்போதும் ஆறு மணிக்கு விழிக்கும் தம்பி, அதிகாலை ஐந்தரைக்கு விழித்ததைக் கண்டு வியந்தவராக,
“அடடே… என்ன இத்தனை வேளைக்கு எழுந்துவிட்டீர்கள்…” என்றார்.
“நத்திங் ஸ்பெஷல்கா… இன்று ஒரு முக்கியக் கூட்டம் இருக்கிறது போக வேண்டும்…” என்றவன் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். ஆறு மணியைத் தொடப் பத்து நிமிடங்களே இருந்தன. இனி கிளம்பவேண்டியதுதான் என்றவாறு செய்தித்தாளை மடிக்க, அவன் முன்னே வந்த காந்திமதி,
“அபயா… சித்தார்த் ஆராதனா திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று சந்திரன் சார் கேட்டார்… ஆராதனாவின் படிப்பும் முடிந்துவிட்டதே… இனி தாமதித்துப் பயனில்லை…” என்று அவர் கேட்கச் சற்று நேரம் அமைதி காத்தான் அபயவிதுலன்.
“என்னப்பா யோசிக்கிறாய்… காலாகாலத்துக்கு அது அது நடப்பதுதானே நல்லது… பாவம் கடந்த மூன்று வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்…” என்றவரிடம், எதுவும் கூறாது எழுந்தவன்,
“யோசிக்கலாம்கா…” என்றவாறு கையிலிருந்த செய்தித்தாளை மடித்து முன்னிருந்த தேநீர் மேசையில் போட்டுவிட்டு தன் அறை நோக்கிச் செல்ல, காந்திமதி சென்றுகொண்டிருந்தவனின் முதுகையே ஒரு கணம் வெறித்துப் பார்த்தார்.
அவர் தோளில் ஒரு கரம் விழத் திரும்பிப் பார்க்க, மிளிர்மிருதைதான் தன் விழிகளை ஒரு முறை மூடித் திறந்து,
“நான் அவரோடு பேசிக்கொள்கிறேன் அம்மா… யோசிக்காதீர்கள்…” என்றவள், மெல்லிய புன்னகையைச் சிந்தி, “விதுலனையும் தப்பு சொல்ல முடியாதேம்மா… ஆராதனாமீது அதீத அன்பு கொண்டவர்… அவர் தயங்குவதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்… எதுவாக இருந்தாலும் நான் பேசிக்கொள்கிறேன்…” என்று கூறிவிட்டு அபயவிதுலனின் பின்னால் விரைந்து செல்ல,
சரிதான் என்று தலையை மெதுவாக ஆட்டிவிட்டுச் சமையலறை நோக்கிச் சென்றார் காந்திமதி.
தங்களது பொது அறைக்குச் சென்றபோது, அபயவிதுலன் ஏற்கெனவே குளியலறைக்குச் சென்றிருந்தான். இன்று முக்கியக் கூட்டம் இருக்கிறது என்று வேறு சொன்னான். இதைப் பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணியவளாகக் குழந்தைகளை எழுப்புவதற்காக அபயவிதுலனின் அறைக்குள் நுழைந்தாள்.
இருவரும் தாரு மாறாகப் படுத்திருந்தனர். ஆத்விகனின் தலை கிழக்குப்புறமாக நிமிர்ந்திருக்க, சாத்விகனின் தலையோ மேற்கு புறமாகக் குப்புற இருந்தது. போதாததற்குச் சாத்விகனின் கால், ஆத்விகனின் நெஞ்சின் மீது கிடக்க, ஆத்வீகனுடைய காலோ சாத்விகனின் கைப்பிடி அணைப்பில்.
அதைக் கண்டு மெல்லியதாக நகைத்தவள், அவர்களை நெருங்கி எழுப்ப முயல, எப்போதும் போல எழுந்து கொள்வதற்கு அவர்கள் அவளைப் பாடாய்ப் படுத்தினர்.
“ஆத்விகன்… என் கண்ணல்லவா… நேரம் போகிறதுடா… பள்ளிக்கூடம் போகவேண்டும்… எழுந்துகொள்… சாத்வி… உன்னையும்தான்… பள்ளிக்கூடம் போகவேண்டாமா…?” என்று தட்டி எழுப்ப, ஒருத்தன் நெளிந்து வளைந்து எழும்புவது போல உடலை வளைத்தாலும், மீண்டும் குப்பிறப் படுத்து உறங்கத் தொடங்க மற்றவனோ, முழங்காலை மடித்துக் கட்டிலில் வைத்துப் பிட்டம் மட்டும் மேலெழுந்திருக்க உறங்கத் தொடங்கினான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் முடியாது போக,
“டேய்… இருவரும் எழுந்துகொள்ளப் போகிறீர்களா இல்லையா…” என்றாள் தன் குரலை உயர்த்தி.
ஆத்விகன் மட்டும் ஒற்றை விழியைத் திறந்து, தன் தாயின் முகத்தைப் பார்த்தான். அங்கே குரல் மட்டும்தான் உயர்ந்திருந்ததன்றி முகத்தில் எந்தக் கோபமும் தெரியவில்லை. அப்போ அது டம்மிபீசு என்பது புரிந்தவனாகத் திரும்பிப் படுக்க அவனுடைய விழிகளுக்கு விருந்தானது சாத்விகனின் பிட்டம்.
எப்போதும் போலக் குறும்பு அவனை உசுப்பிவிட, படக்கென்ற எழுந்தமர்ந்தவன், தன் இரு பாதங்களையும் ஒன்றோடொன்று தேய்த்துவிட்டு, அவன் பிட்டத்தில் வைத்து ஒரு தள்ளுத் தள்ள, நல்ல உறக்கத்திலிருந்தவன், தள்ளிய வேகத்தில் குத்துக்கரணம் அடித்துத் தள்ளிச்சென்று மறு பக்கத்தில் விழுந்தான்.
விழுந்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை. குழப்பத்துடனேயே எழுந்தவன், கட்டிலின் மீது கரத்தை வைத்துத் தன் விழிகளைச் சுருக்கி, ஆத்வீகனையும் மிளிர்மிருதையையும் பார்த்துவிட்டு ஏதோ கனவு காண்கிறோம் போலும் என்கிற எண்ணத்தில் மீண்டும் தொப்பென்று தலையைக் கட்டிலில் போட்டு உறங்கத் தொடங்க, அதைக் கண்டு ஆதவீகன் நகைக்கத் தொடங்கினான்.
அவன் சாத்வீகனை உதைந்தபோதே, அதிர்ந்துபோய் நின்ற மிளிர்மிருதை, அவனைத் திட்டுவதற்காக வாய் எடுத்த போது, சாத்விகன் எழுந்த விதத்தையும் அவன் தொப்பென்று தலையைக் கட்டிலில் போட்ட விதத்தையும் கண்டு கோபம் மறந்து க்ளுக் என்று சிரித்துவிட்டாள்.
அதே நேரம் குளியலறை கதவு திறக்கும் சத்தம் இவர்களுக்குக் கேட்க, கீழே கிடந்த சாத்விகன் சடார் என்று கட்டிலின் மேலே ஏறி அமர்ந்து ஆத்வீகனைப் பொருள் பொதிந்த பார்வையொன்றைப் பார்த்தான்.
இருவரின் முகத்திலும் குறும்புப் புன்னகை. நல்லவேளை மிளிர்மிருதை அதைக் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தச் சில விநாடிகளில் பொது அறையிலிருந்த ஆடை மாற்றும் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
ஆனால் மிளிரோ
“டேய்… எழுந்திருங்கள்… நேரமாகிவிட்டது…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, ஆத்விகன்,
“வன்… டூ… த்ரீ… ஃபோர்… ஃபைவ்… சிக்ஸ்… செவன்… எய்ட்… நைன்…” என்று தங்கள் பிஞ்சு விரல்களை ஒவ்வொன்றாக விரித்தவாறு எண்ணியவன், “டென்…” என்று முடிக்க முதலே இருவரும் கட்டிலில் விழுந்து விழிகளை மூட, அதைக் கண்டதும் மிளிர்மிருதையின் கோபம் அதிகரித்தது.
“இத்தனை சொல்கிறேன் மீண்டும் உறங்கத் தொடங்கிவிட்டீர்களா… எத்தனை தைரியம்… உங்களை…’ என்றவாறு அவர்களை உலுப்ப முயன்ற வினாடி, அறைக் கதவு திறந்தது. திரும்பிப் பார்க்க அபையவிதுலன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.
கரத்தில் கோட்டை ஏந்தியவாறு, அதே நிறத்தில் பான்ட் போட்டு, வெள்ளை நிறத்தில் ஷேர்ட் அணிந்து பட்டன்களைப் போடாது உள்ளே வந்துகொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் மிளிர்மிருதையின் கவனம் அவசரமாகக் குழந்தைகளை விடுத்துத் தன்னவன் மீது திசை திரும்பியது.
திறந்திருந்த ஷேர்ட்டானாலும், உள்ளே வெண்ணிற பனியன் அணிந்திருந்தான். ஆனாலும் அவனுடைய கம்பீரமான உடற் கட்டு அவளுடைய மூச்சை அடைக்கத்தான் செய்தது.
இவன் என்னவன், எனக்காகவே கடவுளால் படைக்கப்பட்டவன், என்கிற கர்வம் அவளையும் மீறி ஆட்கொள்ள, நெஞ்சம் நிமிர்ந்தது.
ஓடிச் சென்று முடியடர்ந்த இறுகிய ஆண்மை பொருந்திய அந்த மார்பில் கரங்களால் கோலம் போட எழுந்த ஆவலை அடக்கியவாறு, அவன் மேனியில் படரத் துடித்த விழிகளுக்குக் கடிவாளமிட முடியாதவளாகத் தன் குழந்தைகளின் மீது கவனம் செலுத்த முயன்றவளுக்குப் பெரும் தோல்வியே எழுந்தது.
சற்றுத் திக்கித் திணறித் தடுமாறியவளாக,
“ட்.. டேய்… எழுந்து கொள்ளுங்கள்டா… பள்ளிக்கூடம் போகவேண்டும்…” என்று கிசு கிசுக்க, அதைக் கண்ட அபயவிதுலன், அவளின் கவனத்தைச் சிதறடிக்கிறோம் என்கிற எண்ணம் சற்றும் இல்லாதவனாகத் தன் கரத்திலிருந்த கோர்ட்டையும் டையையும் அங்கிருந்த கதிரையின் மேற்புறத்தில் வைத்தவாறு,
“ஏன்மா அவர்களை எழுப்புகிறாய்… தூங்குகிறார்கள்… தூங்கட்டுமே… ஒருநாள் பள்ளிக்கூடம் போகாவிட்டால் என்ன? இவர்கள் என்ன பல்கலைக்கழகமா போகிறார்கள்… பதறி அடித்து ஓட…” என்று குழந்தைகளுக்காகப் பரிந்து பேசினான்.
அதைக் கேட்டு கோபத்துடன் திரும்பி அபயவிதுலனைப் பார்த்து முறைக்க முயன்றவளுக்கு மீண்டும் சிந்தை சிதறியது. அவனுடைய ஷேர்ட் திறந்திருப்பதால் தானே இந்தச் சிக்கல்? என்று எண்ணியவள், அவனை நெருங்கி, அவனுடைய ஷேர்ட்டின் கொலரைப் பற்றி அதைச் சரியாக்கி ஷேர்ட்டையும் ஒழுங்கு படுத்தி, ஒவ்வொரு பொத்தானாகப் போட்டவாறு,
“விதுலா…! குழந்தைகளுக்குப் படிப்பு முக்கியம்… அதுவும் எல்லாக் குழந்தைகளும் நன்றாக மதிப்பெண்கள் எடுக்கும் போது, உங்கள் குழந்தைகள் குறைவாக எடுத்தால் நன்றாகவா இருக்கும்… கல்வி ஒரு மனிதனுக்கு எத்தனை முக்கியம்… அது தெரிந்தும் இப்படிப் பேசுகிறீர்களே…” என்று கேட்டவளின் தோள்களில் கரங்களைப் பதித்து நெற்றியோடு தன் நெற்றியை முட்டி எடுத்தவன்,
“மனிதனின் வாழ்வில் இனிமையான பருவமே இந்தக் குழந்தைப் பருவம்தான்… அது எல்லோருக்கும் மகிழ்ச்சியாகக் கிடைத்துவிடுவதில்லை…” என்று ஒரு வித ஏக்கத்துடன் கூறியவன், பின் தன் மனைவியைப் பார்த்து,
“நம்முடைய குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கிறது கண்ணம்மா… அதையேன் பறிக்க முயல்கிறாய்… கல்வி முக்கியம்… அதே நேரம் குழந்தைகளுக்கான தூக்கமும், விளையாட்டும் மிக மிக முக்கியம்…” என்றவனைப் பார்த்து முறைத்தவள்,
“விதுலா…! அவர்களுடைய பள்ளிக்கூடத்தில் நிறையத் திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள்… அவர்களுக்கு இணையாக உங்கள் குழந்தைகள் இருக்கவேண்டாமா?” என்று கேட்டவாறு கதிரையில் கிடந்த அவனுடைய டையை எடுக்க, இவனோ தன் தலையை ஆட்டி மறுத்தவாறு,
“மற்றவர்கள்…! அவர்களுக்காக நாம் ஏன் நம்முடைய குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கவேண்டும்…? இப்படி அடுத்தவனுக்காகப் பயந்து பயந்து நம்முடைய தனித்துவத்தை இழந்துகொண்டு வருகிறோம்.. போட்டி… பொறாமை… ஒரு குழந்தையுடன், இன்னொரு குழந்தையை ஒப்பிடுவது… பறக்க முயலும் குழந்தையின் சிறகை உடைப்பது… இதெல்லாம் எதற்கு…? நாம் நாமாகவே இருப்போமே… அது பெரும் குற்றமா என்ன?” என்றவரிடம்,
“என்ன? இன்றைய தத்துவமா? மிஸ்டர் அபயவிதுலன்… இது இருபத்தோராம் நூற்றாண்டு… குழந்தைகள் மற்றவர்களுடன் எதிர்நீச்சல் அடித்தால்தான் முன்னுக்கே வரமுடியும்… நம்முடைய சந்தோஷம் முக்கியம் என்று இருந்தால் அவ்வளவும்தான்… அப்படியே நம்மை ஒரு ஓரமாக ஒதூக்கிவிட்டுப் பின்னால் இருப்பவன் முன்னேறிப் போய்க்கொண்டேயிருப்பார்கள்…” என்றவாறு டையை அவன் தலை வழியே போட முயல, அவனுடைய உயரத்திற்கு அது சாத்தியமாக இருக்கவில்லை. அவன் வேண்டுமென்றே நிமிர்ந்து நிற்பதைக் கண்டவள், அவன் மேல் கரத்தில் அழுத்தமாக ஒரு அடிக் கொடுத்து,
“விதுலா…! குனியுங்கள்…” என்றாள் கறாராய்.
அதை ரசித்தவாறு, தன் உடலை அவள் பக்கமாகச் சற்றுச் சரிக்க, கழுத்தில் கொளுவி முடிச்சிட்டவாறே,
“ரொம்பப் படுத்துகிறார்கள் விதுலா…! ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது ஆசிரியர்களைச் சந்திக்க வைத்துவிடுகிறார்கள்… நான் என்ன செய்யட்டும்… முன்பு எப்படியோ… வளர வளரப் பயமாக இருக்கிறது…” என்றாள் மெல்லிய கலக்கத்துடன்..
அதைக் கண்டு, சிரிப்பு மாறாமலே, தன் அழகியின் எழில் முகத்தை ஒரு கணம் ஆவலுடன் பார்த்தவன், அவளுடைய தோள்களின் மீது தன் கரங்களை மாலையாகப் போட்டவாறு, அவளுடைய தலைக்கு மேலாகவே தன் குழந்தைகளைப் பார்த்து,
“இப்படிப் படுத்தும் குழந்தைகள்தான் அறிவாளிகளாக வளர்வார்கள்… எவ்வளவு குறும்பு செய்கிறார்களோ, அந்தளவு திறமையும் அவர்களிடம் இருக்கும்…” என்று அவன் மென்மையாகக் கூற, கோபத்துடன் தன்னவனைப் பார்த்தவள்,
“ஏன் சொல்ல மாட்டீர்கள்… அவர்களின் முன்னேற்ற அறிக்கையைப் பார்க்கும்போது ‘பக்’கென்று ஆகிறது… பெறுபேறுகள் சொல்லிக்கொள்வது போல இல்லை… எதிர்நீச்சல் போட்டால்தானே கரை ஒதுங்க முடியும்…” என்றாள் மெய்யான வருத்தத்துடன். அவனுக்கோ அது சற்றும் உறுத்தியதாகத் தெரியவில்லை. அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி நின்று,
“எதற்கு எதிர்நீச்சல் போடவேண்டும்… எல்லாரும் பல்லாக்கில் ஏறி இருந்தால் தூக்குவது யார்? எதிர்நீச்சல் வாழ்க்கையில் போட்டால் போதுமானது மிருதா… கல்விக்கு எதிர்நீச்சல் போடுமளவுக்கு வேர்த்தில்லை…” என்றவனிடமிருந்து விலகியவள், டையின் முடிச்சைப் போட்டு, அதை மேலே கொண்டு சென்று, சரியாக்கிவிட்டு, டை கட்டி முடிந்துவிட்டது என்பதை அறிவுறுத்துவது போல, அவன் மார்பில் மெல்லியதாகத் தட்டிவிட்டு விலகித் தன் கணவனின் கம்பீரத்தை எப்போதும் போல இரசித்தவாறு,
“விதுலா கல்வி பற்றிப் பெரியோர்கள் நிறையச் சொல்லி இருக்கிறார்கள்… நீங்கள் சொல்வதைக் கேட்டால், வள்ளுவன் தொடக்கம் ஒளவை வரை உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்திருப்பார்கள்” என்றாள் கிண்டலாக. அதைக் கேட்டு நகைத்தவன்,
“இல்லை மிருதா… இன்றைய ஏட்டுக் கல்வியைக் கொண்டு வந்தவனைத்தான் சாடியிருப்பார்கள்… நம் அறிஞர்கள் யாரும் யாரோ எழுதியதைப் பாடமாக்கி தங்கள் அறிவை வளர்க்கவில்லை… அவர்கள் சொன்ன கல்வி வேறு, நாம் இன்று கல்வி என்று நினைப்பது வேறு…” என்றவன் அவளிட்ட சுருக்கை சற்றுச் சரிப்படுத்தியவாறு,
“யாரோ ஒருத்தன் தன் திறமையால் கண்டு பிடித்ததை, பாடமாக்கிப் பொதுப் பரீட்சையில் துப்புவதுதானே இன்றைய கல்வி… அத்தகைய கல்வியைத் திணிப்பதை விட, படிக்காமல் இருப்பது எவ்வளவோ மேல்…” என்றவன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு
“கல்வியால் வரும் பட்டம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால் அனுபவம் இருக்கிறது பார்… அதிலிருந்து அவர்கள் பெறும் அறிவை எதிலிருந்து பெற முடியாது. அதுதான் உண்மையான அறிவும், தேவையான அறிவும் கூட…” என்றவனைப் பார்த்து முறைத்தவள்,
“எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்…! உலகம் போகிற போக்கைப் பாருங்கள்… இன்று ஒரு பட்டம் வாங்காமல் ஆணி கூடப் பிடுங்க முடியாது…”
“தப்பு… பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜொப்ஸ், ஓப்ரா, மார்க் சுக்கர்பேர்க்… இப்படி நிறைய வெற்றியாளர்கள் தங்களுடைய கல்வியை நம்பி முன்னுக்கு வரவில்லை… வாழ்வில் வெற்றிப் பெறுவதற்கும் இன்றைய கல்விக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது கண்ணம்மா… இன்றைக்கு நாம் படிக்கிற கல்வி முறைகள் இருக்கிறதே… அது நம்மை முட்டாளாக்க வைத்திருக்கும் ஒரு வித தந்திரம்… நம்முடைய சிந்திக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக நம் மீது திணிக்கப்பட்ட அழுத்தம்…” என்று அலட்சியமாகக் கூயிவனை எரிச்சலுடன் பார்த்தவள்,
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கற்பவர்கள் முன்னுக்கு வர முடியாது என்கிறது போலல்லவா இருக்கிறது… நீங்கள் என்னவாம்?” என்றாள் பட்டென்று. அவள் கன்னத்தைத் தட்டியவன்,
“நீ என்னைத் தப்பாகப் புரிந்துகொண்டாய்… கல்வி என்கிறது விரும்பிப் படிக்கவேண்டியது… அதைத் திணிக்க முயன்றால் கசப்புதான் தோன்றும்… கணித மேதை. இராமானுஜர் பற்றி உனக்குத் தெரியுமல்லவா… கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர்… இத்தனை தேற்றங்களைக் கண்டு பிடித்தபோது இவருக்குப் பின்னால் என்ன பட்டங்கள் இருந்தன? எதுவும் இல்லை… கணக்கின் மீதிருந்த வேட்கை அவரை உலகின் முதலாவது கணித மேதையாக்கியது…” என்றவன் நிமிர்ந்து தன்னவளை உற்றுப் பார்த்து,
“என்னைப் பற்றிக் கேட்டாயே… என் பின்னால் பட்டங்கள் போட்டதற்குக் காரணம்… என்னவென்று உனக்குத் தெரியும்…” என்று கூற அதைக் கேட்டவளுக்கு முகம் வெளிறிப் போனது.
இருவருமே எதுவும் பேச முடியாது சற்று நேரம் அமைதி காக்க, ஒருவாறு தன்னைச் சமப்படுத்திய அபயவிதுலன், மிளிர்மிருதையை நெருங்கி, அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கி,
“நான் என்னை நம்பியவன், என் வாழ்க்கை, இளமைக் காலத்தில் நான் பட்ட வலி, அது கொடுத்த அனுபவம்… அதுதான் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது… ஒரு மனிதனின் வெற்றிக்கும் பள்ளிக்கூடம் சென்று கற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை மிருதா… அன்று மட்டுமல்ல, இன்றும, என்றும்… சுதந்திரமாக விளையாடித் திரியவேண்டிய குழந்தைகளை, எட்டு மணி நேரம் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து… கற்பிக்கும் கல்விக்கு நான் எதிரிதான்…” என்று தன் மனைவியைப் பார்த்துக் கூறியவன், வெளியே இருந்த ஷேர்ட்டைப் பான்ட்டிற்குள் செருகியவாறு, கோர்ட்டை அணிந்து, அங்கிருந்த கண்ணடியில் தன் முகத்தைப் பார்த்துச் சீப்பை எடுத்து வாரத் தொடங்க,
“அப்படியானால் எதற்கு அவர்களைப் பள்ளிக்கூடம் அனுப்புகிறீர்களாம்?” என்று மிளிர்மிருதை ஆதங்கத்துடன் கேட்கத் திரும்பித் தன் மனைவியை ஏறிட்டவன்,
“நான் அனுப்பவில்லை… நீ, அக்கா… எல்லோரும் சேர்ந்துதான் அவர்களைத் தள்ளிவிட்டீர்கள்… உங்கள் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தேன்… அவ்வளவுதான்…” என்றவாறு மீண்டும் கண்ணாடியைப் பார்த்து வாரியவாறு,
“நாம நம் குழந்தைகளுக்கு எப்படி நல்லவர்களாக இருக்கவேண்டும் என்றும், மற்றவர்களை எப்படி மதித்து வளரவேண்டும் என்றும், முக்கியமாகப் பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுத்தால் போதுமானது. மிச்சத்தைத் தாமாகவே பெற்றுக்கொள்வார்கள்…” என்றவன், சீப்பைக் கண்ணாடி மேசையில் போட்டுவிட்டு அவள் புறம் திரும்பி, அவளுடைய முகத்தைப் பற்றி மென் நெற்றியில் முத்தமிட்டு விலகி,
“இவர்களால் இப்போது மட்டும்தான் இனிமையாகத் தூங்க முடியும்… தூங்கட்டும் விடுமா…” என்று வேண்ட,
“அப்படிச் சொல்லுங்கள்பா… அப்போ இன்று பள்ளிக்கூடம் கட்டா…”என்று தன்னை மறந்து துள்ளிக் குதித்து எழுந்த ஆத்வீகனைக் கண்டு மிளிர்மிருதை அதிர்ந்து போனாள்.
“டேய்… இத்தனை நேரம் தூங்குவது போலவா நடித்தீர்கள்…” என்று வாயில் கை வைக்க, அபயவிதுலனோ தன் மகன்களைப் பார்த்துப் பொய்யாக முறைத்தான்.
“படவா… தூங்குவது போல நடித்தாயா… உன்னை…” என்றவாறு மகனை நெருங்கியவன், அவனை இழுத்துப் பிடித்துத் தன்னோடு இறுக்கி அணைக்கத் தந்தையின் பொய்க் கோபத்தைக் கண்டு, கிளுகிளுத்துச் சிரித்தவாறு தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்துத் தொங்க, அடுத்தக் கணம் சாத்வீகனும் தந்தையோடு இணைந்துகொண்டான்.
பெரியவனின் முக்கைப் பற்றி இழுத்து ஆட்டியவாறு,
“டேய்… அம்மாதான் எழுப்புகிறார்கள் அல்லவா… ஒழுங்காக எழுந்து பள்ளிக்கூடம் போனால் என்னவாம்…” என்று மெல்லியதாகக் கடிய,
“போரடிக்கிறதுப்பா… போகவே பிடிக்கவில்லை… ஒரே பாட்டு பாடிப் பாடி… உவ்வே…” என்று குழந்தை கூறப் பொருள் பொதிந்த பார்வையாகத் தன் மனையாளைப் பார்த்தான் அபயவிதுலன்.
“பள்ளிக்கூடம் போக ஒரு பிள்ளை மறுக்கிறது என்றால், அது பிள்ளையில் தப்பில்லை மிருதா… அது அந்த வகுப்பின் தப்பு. கற்பிக்கும் ஆசிரியரின் தப்பு…” என்றவன், குழந்தைகளை விட்டு விலகி,
“ஓக்கே பாய்ஸ்… நான் கிளம்பப் போகிறேன்… அம்மாவைத் தொல்லை செய்யாமல் இருக்கவேண்டும்… சரியா?” என்கிற உத்தரவுடன், வேலைக்குக் கிளம்ப அவனை வழியனுப்பப் பின்னாலேயே சென்றாள் மிளிர்மிருதை