NPNN 10
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா.. என் பைங்கிளி… பாடல் ஆவணி மாதத்துக் கொண்டல் காற்றுடன் கலந்து பரவிக் கொண்டிருந்தது.
அன்றைய அறுவடைகளை எடை போடும் வேலையை அமைதியாக செய்து கொண்டு இருந்தான் மகிழ்வேந்தன். மனம் சற்றே சிணுக்கத்தில் இருந்தது. சில நாட்களாக வீட்டின் நிகழ்வுகளை என்ன கணக்கில் எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எல்லா காரியங்களும் தன் கைமீறி செல்வதாக உணர்வாகிற்று.
புதிய குத்தகைக்கு என்று, க்ருஷ்ணா கோட்ஸ் ஆட்களிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொண்டு கொடுக்கச் சொல்லி, பணம் தயார் செய்து எடுத்துக் கொண்டு பெரிய மாமாவிடம் கேட்கப் போனால் ,
‘அதெல்லாம் நாணயமான காரியம் இல்ல.. பத்திரம் போட்டது போட்டது தான், வாக்கு மாற்றக் கூடாது என்கிறார்.
அந்த பாரி, ஒத்திக்கு எடுத்த கார்த்தி நிலத்தில் செய்த அடாத வேலைகளை கேட்க ஆரம்பித்ததற்கு , சின்ன பையன் ஏதோ புதுசா சாதிக்கும் ஆர்வத்தில பண்ணிட்டானாருக்கும் டே.. பெரிய சேதுபதி கூட சொல்லிட்டாரு, அதெல்லா இனி பத்திரத்து சரத்தெல்லா சரியா பாத்துக்கிடலாம். அதான் சம்பந்தி ஆகப் போறமே என்றாராம்..
மண்ணை அயலானிடம் விட்டது போல பெண்ணையும் தரத் தயாராக இருக்கும் சின்ன மாமாவைப் பார்த்து என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதுவாவது ஒத்தி காலம் முடிந்ததும் , எப்படியாவது மீட்டெடுத்துடலாம்.. ஆனால்!!’ சன்னமாக பெருமூச்சு விட்டவனைக் கலைத்தது, செந்திலின் குரல்.
என்ன வேந்தா, எடக் கல்லைய மொறச்சு பாத்தானைக்கு இருக்க? சிட்டையக் கொடு.. வண்டி கெளம்பட்டும்.. எனவும்
ப்ச் என்றவன், சமாளிக்கும் விதமாய்,
கணக்கு நோட்டைப் பார்த்து, எங்கடே நெல்லி , பப்பாளி, கொய்யா, எலுமிச்ச எல்லாம் இன்னும் மூட்ட கட்டியாறலையோ.. என்றவன் , அந்த மரங்கள் இருந்த நிலம்தான் ஒத்திக்கு விடப்பட்டு விட்டது, என்று நினைவு வந்தவனாய் கண்மூடித் திறந்தான்.
செந்திலோ மிகுந்த ஆற்றாமையுடன், அந்தப் பழங்களை எல்லாம் இனி எல்லாம் இயற்கை முறைல வெளஞ்ச கிருஷ்ணா விவசாயப் பண்ணை பொருளுங்கன்னு டப்பால போட்டு விப்பாங்கடே.. வம்பாடு பட்டவ நீ.. பலனு அவனுங்களுக்கு.. என்று பேசுபவனை நிறுத்துபவனாய், சிட்டையைக் கையில் வைத்தவன்,
அடுத்த சோலியப் பாருடே.. பூர்வீக நெலத்தில தண்ணிச் சுத்துறது காணாது.. அதனால ட்ராகன் பழம், பேரீச்சை, ஈச்சை வச்சு விட்றலாம்னு இருக்கேன். ட்ராகன் கள்ளிச் செடி துண்டு , நேத்திக்கே சொல்லிட்டனாக்கும். கமிஷன் கடைல பழங்கள இறக்கிட்டு நம்ம கேடிஎஸ் லாரி சர்வீஸ்ல இருக்கும் , முள்ளு பாத்து பதனமா தூக்கிட்டு வாடே.. புரிஞ்சதா.. நடுவால நம்ம கோழிக் கூண்டுகள மாத்திக்கிடலாம். இன்னொரு ஐடியாவும்
இருக்கு..
ஏதே.. கள்ளிச் செடியா.. விளையலைன்னாலும் பிஞ்சக் காடு வேந்தா , அந்த மண்ணுல இதெயெல்லாம் போடுவாகளா.. என்றவன் அவனின் பார்வை இவன் புறமாய் முறைப்பாய் திரும்புவது கண்டு..
ஆங் நீ சொன்னா சரியாத்தே இருக்கும். நா போயிட்டு லோட எறக்கிட்டு , அந்த முள்ளுச் செடிகள எடுத்து வந்திடறேன். என்றவன் அவசரமாய் வாகனத்தை நோக்கி நகர்ந்தான்.
அது நட்ட கையோட அதுக்கு ஸ்டாண்டு போல சப்போர்ட்டு கொடுக்கனும் டே. பாவநாசத்தில நாம கல்லு எடுப்பமில்லா , அவனுங்கட்ட சொல்லி ஒராள வரச் சொல்லனும். அப்புறம் கமிஷன் கடைக்காரன் அம்பது தாரேன்னான். வாங்கி பெரிய மாமா கைல ஒப்படைச்சிரு.. என்று உரக்க சொன்னவன், தோளில் இருந்த துண்டை உதறி முகம் துடைத்தான்.
பழக்கமான வாகன ஒலி.. ஆனால் அதில் வித்யாசமான உறுமல் கேட்டு துண்டை விலக்கி எட்டிப் பார்த்தான்.
நீலாம்பரியின் என்டார்க் வாகனத்தில் தவ்வி தவ்வி குதித்தவாறு கொண்டிருந்தாள் தேவ மஞ்சரி. நீலுவின் கையில் கன்றுக்குட்டியாய் பாய்ந்து வரும் வாகனம் இவளின் கையில் மிரட்சி அடைந்த மான்குட்டி போல துள்ளியது கண்டவனின் வாய் சிரிப்பில் முகிழ்த்தது.
வந்து நிறுத்தி, அப்பாடி என்று பெருமூச்சு விட்டவளிடம், என்னா டீச்சரம்மா.. அதிசயமா காட்டுப் பக்கம்? ஓ.. வருங்கால பண்ணையாரம்மா? உங்க கிருஷ்ணா விவசாயப் பண்ணைய பார்வையிட வந்தீகளோ.. என்றான்..
நிமிர்ந்து முறைத்தவள்,
அக்கா கார்த்தி அண்ணே, அண்ணியோட அகத்தியரு அருவி கெளம்புதா.. என்றவள், கொண்டு வந்த பையை எடுத்து நீட்டி, இதைப் புடிங்க. கொரியர்ல வந்தது. அக்கா வண்டியில ஏறிகிட்டு இருந்த அவசரத்திலேயும் , உடனே உங்கட்ட கொடுக்கனும்னு என்னிய தொரத்திவிட்டுட்டா , விதையா உரமா.. தெரியல, குளு குளுன்னு இருக்கு. என்றவள் கையிலிருந்த பார்சலில் பார்வை பதித்தவன் அவசரமாய் வாங்கினான்.
எடுத்தவன், ஏன் நீ போகலையா? காலேஜூ லீவுதானே போட்ருக்க.. என்று கேட்டவாறு வேகமாக நடக்கத் தொடங்க, மஞ்சரியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.
ஊஹூம், அவக குளிக்கவா போறாக, பூசாரியம்மா நீலூ தலைமைல பில்கிரிமேஜ் டூர் நமக்கெல்லாம் செட் ஆகாது. வேகமாக அடித்த காற்றில் கும்மென்று பாசுமதி அரிசி வாசம் வர, சிறு சிரிப்புடன், ஊருணிக் கரைல பிரியாணிக் கடே ஏதும் தொறந்திட்டீங்களா என்னா? இம்புட்டு வாசனை.. என்றாள்.
ஆச்சரியமாய் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் , தொடர்ந்து நடந்தவாறே, பரவால்லயே, திடீர்னு செல நாளா பேசாமடந்தையா மாறிப் போனதப் பாத்து, இனி இந்தில பேசுனாத்தா பேசுவ போலன்னு பயந்துட்டே. இப்ப என்னா, உள்ளூருல்லேயே மாப்பிள்ளன்னதும் பேச்சு வருதோ.. என்றவன் , கால்கள் அவர்களின் உரக் குழிகள் இருக்கும் நிலம் நோக்கிச் சென்றன.
தண்ணீர் தேக்கிய வயலில் நாற்றுகள் நீச்சல்குள பச்சை அழகிகளாய் ஒய்யாரம் காட்டி நின்றன. தண்ணீரில் வளைவாய் அசைவு கண்டவள், உற்றுப் பார்த்தாள், பாம்போ என்று..
நடந்து கொண்டிருந்தவன் அவள் தொடராதது கண்டு , திரும்பிப் பார்த்தான். அவளின் மிரட்சியான முகம், கூர்மையாய் அலையும் விழிகள் கண்டு, என்னா பிஸிக்ஸ் டீச்சரு , இதுல எவ்ளோ தண்ணி தேங்கிருக்குன்னு கணக்கு போட்டு பாத்திட்டு இருக்கியா? என்றான்.
எச்சில் விழுங்கியவள், இல்ல பாம்பு போல இருந்தது.. என்றவள் ஏறக்குறைய கத்தினாள்.. அதோ இருக்கு பாருங்க.. என கைகாட்டினாள்.
ஏ பாம்புக்கும் மீனுக்கும் உனக்கு வித்யாசம் தெரியாதா.. என சொன்னவன் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தான்.
என்னாதூ நெல் வயல்ல மீனா.. என அவள் வாய் பிளக்கவும்..
ஆமா.. நாட்டு மீனுங்க விட்ருக்கு. அதான் வெவசாய நிலத்தில பல்லுயிர் சூழல் உருவாக்கறது. பயிருக்கு பாச்சுற தண்ணீர், அடியுரத்தில இருந்த சத்துக்கள் எடுத்து மீனும் நல்லா வளம்மா வளரும், மீனுங்க விடற கழிவுல கெடைக்கிற இயற்கையான என்பிகே சத்துக்களால பயிரும் உரம்மா வளரும். என்றவன் பார்வை எதிரே வயலின் ஓரங்களில் இருந்த புதர் செடி, முட்களை சுத்தம் செய்யும் ஆட்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பாரியின் மேல் நிலைத்தது.
ஹூம்.. பாடுபட்டு யோசித்து நாம பயிருங்கள காப்பாத்த உயிர்வேலி உருவாக்கி வச்சிருந்தா அதோட அருமை தெரியாம பிச்சுப் போட்டுட்டு இருக்கான் பாரு, அடுத்து ஒன்னத்துக்கும் ஆவாத வேலிக்கல்லு நட்டு கம்பி வேலி வைக்கப் போறான் போல , அடிப்படையே அறியாம இருக்க இவேம் கையில இன்னும் ஒரு நிலம் வேற தூக்கி கொடுத்தாச்சு நம்மூட்டு ஆளுங்க .. என்றவன் சிறு விரக்திச் சிரிப்புடன்.. பூர்வீக நிலம் பக்கமாக நடந்தான்.
ஓங்கியடித்துக் கொண்டிருந்த கொண்டல் காற்று , இவனின் வார்த்தைகளை , அவனின் காதுகளில் கொண்டு சேர்த்ததோ.. தன்னைப் பற்றிய பேச்சு என்ற உணர்வாலோ, விருட்டென்று திரும்பி இவர்கள் புறம் பார்த்தான் பாரி.
மஞ்சரி தாழ்ந்த குரலில், நீங்க பேசுனது அவுகளுக்கு கேட்ருச்சு போல, நல்ல விசயங்கள எட்ட நின்னு பேசறது விட , கிட்ட போய் சொல்லலாம்ல , பாவம் விவசாயத்துக்கு புதுசு தானே அவங்களும்.. என்றவளின் பதிலில், அப்படியே நின்றவன்,
முறுவலுடன், என்னம்மோ! வருங்கால மாப்பிள்ளைக்கு வக்காலாத்தா.. நீ வேண்ணா போய் சொல்லேன். கேட்டுட்டுத்தா மறுவேலை பாப்பான் அந்த வேட்டைக்காரரு பேரன். போ, போய் பேசு. கலியாணத்துக்கு மின்ன பேசிப் பழகினா மாரி இருக்கும். நா வேணா இங்கனையே நிக்கேன். என்றான் கேலியாக மெல்லிய குரலில் .
உதட்டை சுழித்தவள், அவனைத் தாண்டி நடந்தவாறு, ஆங்.. அவரு கூட நா ஏன் பேசோணும்.. பழகோணும்.. அவரு கட்ட ஆசப்படுறது நீலாக்காவத்தானே.. என்றவாறு கடந்தவளின் கையை நகரவிடாமல் பற்றினான்.
என்ன? என்று உறுமலாய் வந்தது குரல்.
புருவம் சுருங்கத் திரும்பியவள், என்ன என்ன? உங்க சின்ன மாமா, அதா எங்கய்யா சொல்லலியா? உங்களுக்கு தெரியாதா? நேத்து ராவுலயே பேச்சு வந்திச்சே. பெரிய சேதுபதி அய்யாவே கேட்டாக போல.. நெசம்மா இன்னுமா உங்க காதுக்கு வரலை..
எங்காதுக்கு வாரது இருக்கட்டும்.. மாமா என்ன பதில் சொன்னாக? என்றான் நிதானமாய்.
என்ன சொல்வாங்க.. வீட்ல கலந்து பேசிட்டு சொல்லுதேன்னு அந்த பெரிய சேதுபதி ஐயாட்ட சொன்னாக தா. ஆனா யார்ட்டையும் எதுவும் பேசல.. உங்கட்டையும் ஏதும் சொல்லலன்னு இப்போ புரிஞ்சது.
யோசனையில் புருவம் நெரிய நின்றவனிடம், இந்த ஆட்கள் பேசனதுல நடந்த நல்ல விசயம், அந்த மும்பாயி ஆட்கள்ட்ட அய்யா, மன்னிச்சுக்கிடுங்க.. நீங்க வேற எடம் பாத்துக்கிடுங்கன்னு சொன்னது, இன்னொன்னு இந்த பெரிய வள்ளலு, என்று கண்களால் பாரியை சுட்டியவள், கட்டுனா நீலாவத்தா கட்டுவேம்ங்காறாராம். என்னியவே ஆயிரம் தடவை புத்தி சொன்னவா.. அக்காவா சம்மதிப்பா.. அதனால அய்யா கம்முன்னு ஆயிட்டாரு..
எந்தலை தப்பிச்சது.. என்று பழைய கலகலப்பு திரும்பியவளாய் பேசுபவளை .. திரும்பி பார்த்தவன், கோபத்தில் ஏறியிருந்த புருவங்கள் இறங்க , சிறு முறுவலும் எட்டிப் பார்த்தது.
இவிங்க கெடக்கானுங்க.. இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு செயலு.. ஆனா, நெசம்மா அந்த கிஸோரை எனக்குப் புடிச்சுருந்தது மஞ்சூ.. மிஸ் பண்ணிடாதே..
களுக் என சிரித்தவள், எந்தக் கோணத்திலேருந்து பாத்தாலும் உங்காளு ராமராசன் சாயலில்லியே. எப்படி புடிச்சுது அத்தான்..
சிரிப்பில் லேசாக உடல் குலுங்க, அட, உனக்கும் அவருக்கும் செட்டாகும் தோனுது. நீ உம்னு மட்டும் ஒர் வார்த்தை சொல்லேன்..
ஊஹூம் என்று வேகமாய் தலையசைத்தவள், நமக்கெல்லாம் தாமிரபரணி தண்ணீ தான்.. பொதிய மலைக்காத்து தா செட்டாகும். அரபிக்கடலு உப்புக் காத்து.. செட்டாகாது.. விடுங்க விடுங்க. என்றாள்.
மீண்டும் ஒரு முறை இவர்கள் புறம் திரும்பியும் பாராமல் வேலையாட்களை நிலத்தினை உற்று நோக்கி கொண்டிருந்தவனைக் கண்டவன், கையில் கொண்டு வந்த பார்சலை எடுத்தவாறு கோழிக் கூண்டுகள் பக்கமாக செல்லத் தொடங்கினான்.
கோழி தீவனமா, அதுக்கா இவ்ளோ பில்டப்பு என்று கேட்டவாறு அவன் அங்கிருந்த கூண்டின் மீது வைத்து கவனமாக பிரிப்பதை எட்டிப் பார்த்தவள்.. அவன் கையில் அள்ளி எடுத்து மண்புழுக்களை, உரப்படுகையில் இடுவதைப் கண்டு ஆச்சரியம் அடைந்தாள்.
புழுவா , நம்ம தோட்டத்தில இல்லாததா.. இதையா பார்சல் போட்டு அனுப்பினாங்க.. என்று கேட்டாள்.
ம்.. எல்லாம் நாட்டு மண்புழுக்கள் , ஒரு முறை ஒரு விவசாய ஆஃபீஸர் சொன்னது கேட்டு, ஆப்ரிக்க மண்புழுக்களை வாங்கி விட்டேன். உரம் எக்கச்சக்கமா கிடைச்சாலும், அவை நம்ம நிலத்துக்கு பெரிதா நல்லது செய்வதில்லைனு தெரிஞ்சது. அது மட்டுமில்லாம நமது மண்ணுல இருக்குற மண்புழுக்கள அவை அழிக்கறதாகவும் இப்போ நடக்குற ஆராய்ச்சி சொல்லுது. அதான் இப்போ இந்த மாதிரி நமது பாரம்பரிய மண்புழுக்கள பெருக்கணும்னு ஒருத்தருக்கொருத்தர் ஷேர் பண்ணிக்கறோம்.
அய்யா.. எனும் குரலில் திரும்பி பார்த்தான். பாரியுடன் நின்று கொண்டிருந்த வேலை ஆள்.
பாரி வேந்தனய்யா , இந்த கூண்டுங்களை, ஒரக்குழிங்கள எப்போ எடுப்பீகன்னு கேட்காரு.. என்று மெதுவாய் சொல்லி விட்டு மஞ்சரியைப் பார்த்து , நீலாம்மா இன்னும் வரலை யா? என்று கேட்கவும் ,
மகிழ் வேந்தன் நிதானமாய் தன் வேலையை செய்தவாறே பதில் கூறினான், அறுவடைக்கு தான் நேற்றிலிருந்தே கணக்கு. இதெல்லாம் மாத்தம் பண்ண பத்து நாள் டைம் இருக்கு. அதுக்குள்ளே செய்வோம்னு சொல்லு போ.. என்றவன், நகரத் தொடங்கியவனிடம்,
இங்காரும் அண்ணாச்சி.. என்றான்..
ஏனுங்க தம்பி என்று திரும்பியவனிடம்,
முறைத்தவாறே ,
இந்த அடைசல், முள்ளுன்னு நினைச்சு உங்க பாரி அய்யா கழிக்கதெல்லாம் உயிர் வேலின்னு உமக்காச்சும் தெரியுமா தெரியாதா.. என்று கேட்கவும் தலையை சொறிந்தவன்..
முள்ளுச்செடி வேலியா, அதெல்லா அந்தக் காலம் தம்பி, இப்போ அய்யா, கரெண்டு வேலி வைக்க போறார் . அதுலேயே பூச்சி புடிக்க பொறி, சோலாரு லைட்டெல்லா போடப் போறாரு தெரியுமா. பெரிய மூளக்காரரு எங்கய்யா.. என்றவன் குரலில் பெருமை..
சரிதா.. தப்பித்தவறி கூட எங்க பிஞ்சைல கை வச்சிராதீக.. புரிஞ்சதா.. என்றவனின் இறுகிய அடிக்குரலில் மிரண்டு வேகமாக தலையசைத்தவன்,
அது தம்பி, நீலாம்மா, ஊருணிக்கரை ஒட்டி உங்க பனமரத்தில பதனீக்கு கலயம் வைக்க சொன்னாக. எங்கூட வேல செய்ய வந்தவனுகள்ல ஒருத்தே பனையேறி.. கலயம் வைக்கலாமா, என்ன சைசுலன்னு என்னான்னு அவகட்ட கேட்கனும். என்றான்.
அக்கா அகத்தியர் அருவி கோவிலுக்கு… என்றவளை இடைமறித்த மகிழ் வேந்தன்,
அவ இனி வரமாட்டா. பதனீக்கு நா வேற ஏற்பாடு பண்ணிக்கிடுதேன்.. நீரு போரும்.. என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.
ஏனத்தா அப்படி சொன்னீங்க. அவ என்னைக்கு வயலுக்கு வராத இருந்திருக்கா.. சாயங்காலத்துக்கு வந்துருவா. கார்த்தி அண்ணனுக்கு பதநீ சாதம் பிடிக்குமில்ல.. நைட்டுக்கு பண்ணனும்னு சொன்னா, அதுக்கு தா இவங்கட்ட கேட்டுருப்பாளாருக்கும்.
ப்ச், இவிங்க சங்காத்தமே வேணா, நீலூ.. இனி… நீயும் இங்கெல்லாம் .. என்று சொல்ல வந்தவன் நிறுத்தி, பதனீ இன்னிக்கு பொழுதோட ஊட்டு சமயலறைல இருக்கும், அது நா பாத்துக்கிடறேன். நீ வா.. வந்ததுக்கு கோழி, மீனு எல்லாம் அடுக்கு மொறைல வளக்கிற கூண்டு ரெடி பண்ண போறே. அதுக்கு ஐடியா சொல்லு என்றவன், பிடித்து இழுக்காத குறையாக அவளை தங்களது நிலம் நோக்கி தள்ளிச் சென்றான்.
பாரியிடம் திரும்பிச் சென்றவன் , ஐயா, ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள ஒதுக்கி தந்துடுவாகளாம்.. என்றவன் தயங்கி, நா சொல்லுதே தப்பா நினைக்காதீங்க. சம்பந்தம் கலக்க பேசிட்டு இருக்க தேரத்துல இம்புட்டு கராரா கேட்கலாமாய்யா.. அதும் கட்னா அந்தூட்டுப் பொண்ணத்தா கட்டனும்னு மனசுல வச்சதுக்கு அப்புறம், அவக ஒறமுறைகூட என்னாத்துக்கு தகராறு? எனவும்,
திரும்பி பார்த்தவனின் கண்களில் இருந்த குளிர் கண்ணாடி கைக்கு நகர்ந்ததால், கூரிய பார்வை விழுந்ததில் கேட்டவனிற்கு குளிர் ஏறியது.
என்னவோய்யா , ஏதோ தோனுச்சு சொல்லிபுட்டேன், பாத்துக்கிடுங்க , என்றவன், ஏடே முருகா, வேந்தனய்யா காட்டுப் பனயேற வேணாவாம், நீலாம்மா இனிமேட்டு இந்த பக்கமே வரமாட்டாகளாம்.. ஹூம்… என்றவன் , துண்டை தலையில் கட்டிக் கொண்டு வேலையில் இறங்கினான்…
தாடை இறுக , ஊருல இப்படி பேச்சு பரவிக் கெடக்கா.. இனி வரமாட்டாளா.. பாத்துறலாம் என்று முணங்கியவன்..
சத்தமாய், இந்த வேலை மதிய சாப்பாட்டுக்கு முன்னே முடிச்சுறனும். மூனு மணிக்கு மருந்தடிக்க ஆட்கள் வருவாங்க. அதுக்குள்ள அய்யனார் கோயில் நிலத்திலேயும் வேலைங்க முடிச்சுடுங்க. என்றவன், மணி பார்த்து விட்டு தனது வாகனம் நோக்கி நடந்தவாறு தனது பெரிய தந்தைக்கு அழைத்தான்.
**************
அண்ணி பார்க்க ஆசைப்பட்ட தாமிரபரணியைக் காட்ட அண்ணனை கிளப்பினால், பெரியன்னையோ பாவநாசர் சமேத உலகம்மையை பார்த்து வர சொல்லிவிட்டார்கள். நீலாம்பரிக்கு மிகப் பிடித்தமான கோவில்.
தாமிரபரணி நடக்கும் தடத்தில் அமைந்த.. பாடல் பெற்ற ஸ்தலம் . ஈசன் கல்யாண சுந்தரராய் அகத்தியருக்கு காட்சியளித்த இடம்.
அகத்தியர் அருவியில் நீராடி , கொண்டு வந்திருந்த உணவையும் அங்கேயே அமர்ந்து, உண்டு விட்டு கிளம்பி கோவிலுக்கு வந்த நேரம் சரியாக உச்சி கால பூஜை. உலகம்மைக்கு மஞ்சள் சாற்றும் வைபவம் நடந்து கொண்டிருக்க, பெரியப்பாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.
” பெரியம்மை உன்னையும் மஞ்சரி பிள்ளையும் இந்த பூசைக்கு நிக்க வைக்கனும்னு சொல்லிட்டே இருந்தா.. அண்ணியும் நீயும் மஞ்சளும் கயிறும் வாங்கிட்டு வாங்க, பூசை ஆனதும் இங்கே சுத்தி வார சுமங்கலிகளுக்கு கன்னிப் பொண்ணுங்களுக்கு கொடுங்க .. என்னப்பன் அருளால எல்லாம் நல்லதா நடக்கும்.” என்று சொன்னவர் கோவிலை வலம் வரப் போய்விட, மஞ்சள் கயிறுகள் வாங்கித் தந்த அண்ணன், தூக்கத்தில் விழித்து சிணுங்கிய குழந்தையை சமாளிக்க, அங்கு இருந்த மரங்களில் இருந்த மந்திகளை காட்டி சமாதானப் படுத்த நகர்ந்து விட, அண்ணியுடன் இணைந்து கோவிலை வலம் வந்தவாறு கண்ணில் பட்ட சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறும், கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கும் கொடுத்தவாறு வந்தனர். அன்று வெள்ளிக் கிழமை , முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் நல்ல கூட்டமும் கூட..
நீலா , நீ கொடுத்திட்டு இரு, நான் போய் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வந்துவிடுகிறேன் என்று கிளம்பிய அண்ணியிடம், மந்திகள் நடமாட்டம் இருப்பதால், பிஸ்கட் பழம் போன்ற தின்பண்டங்கள் வெளியே எடுக்க வேண்டாம் என்று கவனப் படுத்தி அனுப்பினாள். அகத்தியர் சன்னிதி வாசலில்,மர நிழலில் அமர்ந்திருந்து ஏதோ சிறிய புத்தகம் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த பெண்மணியை நெருங்கியவள், அவர் நிமிர்ந்து பார்க்கவும் அப்படியே நின்று விட்டாள்.
அழகிய பட்டுடுத்தி , அம்சமாய் அளவாய் நகைகள் பூட்டி இருந்தவரின் முகத்தில் கண்களில் வெறுமை.. இவளைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தவர், தலையசைத்து அருகில் அழைத்தார். தயக்கத்துடன் நெருங்கியவள், மஞ்சள் கயிற்றையும் மஞ்சள் கிழங்கையும் தர, மகிழ்வுடன் கை நீட்டி வாங்கிக் கொண்டவர், சைகையால் அருகில் அழைத்து, தனது கைக்கு அருகில் வைத்திருந்த குங்குமக் கிண்ணத்திலிருந்து இரு விரல்களில் எடுத்தவரின் உத்தேசம் அறிந்து , அவரருகில் சிறு தயக்கத்துடன் மண்டியிட்டு அமர்ந்தவள், நெற்றியைக் காட்டினாள்.
புன்னகை சிரிப்பாய் மாற, பொட்டிட்டவர், அய்யனார் கோயில்ல உன்னியப் பாத்த போது , ஒம் போலப் பொண்ணு மருமகளா வந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்டா.. கல்யாணமே கிடையாதுன்னு குதிச்சிட்டு இருந்த பையன் உன்னியன்னா கட்டிக்கிறேன்னு சொன்னதும் சந்தோஷம் தாங்க முடியல.. என்று அவளின் கன்னம் தொட்டவரை சங்கடத்துடன் பார்த்தவள், தலை குனிந்து கையூன்றி மெதுவாக எழுந்து திரும்பியவள் அவள் இருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து வேகமாக எதிர் திசையில் நகர்ந்து கிட்டதட்ட ஓடினாள். கண்களால் அண்ணன் அண்ணி இருக்கும் இடம் தேட,
அசந்தர்பத்தில் குரல் கொடுத்தார் அந்த பெண்மணி,
ம்மா.. அம்பரி கண்ணு, இந்த பூவை வச்சுக்கோடா.. என்னும் குரலில் வயிறு அதிர தடுமாற்றத்துடன் , காது கேட்காதவள் போல வேகமாக நடக்க,
அழுத்தமான காலடிகள் தொடர்ந்து அவளின் முன்னே நீட்டப்பட்ட கையினால் வழி தடைபட
ஏய் உன்னைத் தானே கூப்படறாங்க. காது கேட்கலையா.. எனும் குரலில் நிமிர்ந்து பார்த்தவள்.
ஒரு பெரிய மனுசி கூப்படறாங்க, என்ன மதிக்காத போற எனும் உறுமலில் இருந்த எகத்தளத்தில் முறைத்தாள்.
மண்ணை மதிச்சு பொண்ணை துதிச்சு வாழ்த்தறவங்க கையிலிருந்தது தான் எதையும் வாங்கி எனக்கு பழக்கம். மிதிச்சு முறிக்கறவங்க தாரது ஏதும் வேண்டாம். என்று நகர்ந்தவளின் முன் வந்து நின்று பாதையை தடை செய்தவன்,
இனி உனக்கும் உங்க குடும்பத்துக்கும் வேற ஆப்ஷன் இல்லயே பொண்ணு.. என்றவன் குரலில் அத்தனை நக்கல்,
கண்கள் சுருங்க நிமிர்ந்து பார்த்தவள், உதடுகள் துடிக்க வாய் திறந்தவளிற்கு, அத்தானின் அறிவுரை ஞாபகம் வந்துவிட கப்பென்று வாய் மூடிக் கொண்டவளாய், விலகி நடக்க முற்பட, அருகில் வந்து கொண்டிருந்த கார்த்திக் மீது மோதிக் கொண்டாள்.
பயந்து தடுமாறியவளை கைபிடித்து ஆசுவாசப்படுத்தியவன்,
என்னடாம்மா. பாத்து வரக்கூடாது என்றவாறு நிமிர்ந்து பின்னால் நின்றவனைப் பார்த்தவன்,
ஹலோ என்றான். என்னாச்சு என்று தங்கையிடம் தாழ்ந்த குரலில் விசாரிக்க பதில் தள்ளி நின்று கொண்டிருந்தவனிடம் இருந்து வந்தது.
அம்மா, சாமி பூவு கொடுத்தாங்க.. என்றவன் ஓரடி முன் வந்து , நீலாம்பரி கையில் இருந்த பூஜைக் கூடையில் பூவை போட்டான்.
அவ்ளோ தான். என்றவன், கார்த்திக்கிடம், உன்கிட்ட. ஹூம் உங்கட்ட பேசனும், நாளைக்கு கிளம்பறீங்கன்னு அப்பா சொன்னாங்க. அதுக்கு முன்னே மீட் பண்ணலாம். என்றவன் திரும்பி தன் தாயாரை நோக்கிச் சென்றான்.
ஹூ இஸ் ஹீ என்று கேட்கும் அண்ணியிடம், அண்ணன் ஏதோ சொல்லுவதையும் அண்ணி ஆச்சர்யமாக திரும்பி பார்த்து ஏதோ சொல்லியவாறு வருவதை கண்டு கொள்ளாதவாறு , பத்மாசனத்தில் அமர்ந்து இறைவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்த பெரிய தந்தை நோக்கிப் போனாள்.
மஞ்சள் கயிறெல்லாம் கொடுத்தாச்சா பிள்ள? என்று கேட்கவும் கையில் இருந்த பூஜைக்கூட மிகவும் கனப்பது போன்ற உணர்வாக, ஆம் என்று தலையசைத்தாள்.
ரொம்ப சந்தோஷம் என்று எழுந்தவர், அவளின் உச்சந்தலையில் கை வைத்து, வீட்டுக்கு போகலாம் .. என்றார்.
காரில் ஏறப் போகையில், பின்னால் அடுத்து இருந்த காரில் தன் தாயார் ஏற உதவிக் கொண்டிருந்தவனை பார்த்த ரோஷிணி, கார்த்திக்கிடம்,
ரியிலி ஹீ இஸ் டால், ஃபேர் அண்ட் ஹௌண்ட்சம் தென் வேந்தன் அண்ணா அண்ட் கிஷோர் நோ.. என்று சொல்வதைக் கேட்டவள், மனம் கடுத்துப் போனது.
ம்க்கும்.. புத்தி, பேச்சு அழகாயில்லியே.. ப்ச், அய்யனாரப்பா, என்று முனங்கியவாறு, பூஜைக் கூடையில் இருந்த பூவினை எடுத்து, காரின் கண்ணாடியில் தொங்க விட்டவள், அதில் தெரிந்தவனின் உருவம் கண்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள்.
நாயகன் ஆடுவான்..