NPNN 8
தனை வரச்சொல்லி விட்டு, மடியில் கோர்த்திருக்கும் கையையை பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய மாமனை ஆச்சரியமாகப் பார்த்தான் மகிழ் வேந்தன்.
கார்த்தியும் அவன் மனைவியும் திருநெல்வேலி டவுனுக்கு போயிருந்தார்கள். அத்தை மாத்திரை போட்டு விட்டு உறங்குகிறார்கள் போலும். ஒரு நோய் எப்படி ஓடியாடித் திரிந்த மனிதியை ஒன்றுக்கும் உபயோகமற்றவராக மனம் சுணங்க வைத்து முடக்கி விடுகிறது?
பெரிய அத்தை சிவகாமி, மூத்த மருமகளாக வீட்டிற்கு வந்தவர். இந்த குடும்பம் தாண்டி ஏதும் யோசிக்கத் தெரியாது. அவரைப் பொறுத்த வரை கார்த்தி, வேந்தன், மஞ்சரி எல்லோரும் ஒன்று, சமமே. அப்படித்தான் இருப்பார். மஞ்சரி சிறு பிள்ளையாக இருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தில் சின்னத்தை ராஜேஸ்வரி இறந்த பின் என்று இல்லை , அதற்கும் முன்பே அவர் இரு பெண்களுக்கும் பெரிய அன்னை தான். மடி சுமந்து பெற்ற பெண்களாகத் தான் வளர்த்தார்.
இன்று இருவரும் பொறுப்பும் அருமையான குணங்களுடன் இருப்பது நிச்சயமாக அது அவரது வளர்ப்பினால் மட்டுமே.
சுவரில் இருந்து புகைப்படம் கூட மஞ்சரி சடங்கு நீர் ஊற்றும் விழாவன்று அனைவரும் குடும்பமாக இருக்கும் படமும் கார்த்தி திருமண சமயம் எல்லோரும் இணைந்து நின்று எடுத்த படமும் தான்.
அவையே அவர் இக்குடும்பத்தின் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த பாசத்தைச் சொல்ல, அப்பு எனும் அவரழைப்பின் நினைவில் மனம் லேசாக விம்மியது. ஏதோ யோசனையில் இருக்கும் பெரிய மாமனை தொந்தரவு செய்யாமல் படங்களை பார்வையிட்டவாறு நின்றான்.
க்கும் என்ற செறுமலில் தலை திருப்பியவன்,
அத்தைக்கு இன்னும் சில முறை ட்ரீட்மெண்ட் போக வேண்டியதிருக்கும் போல வேந்தா. இன்னும் சில லட்சங்கள் தேவைப்படும் . கார்த்தி வாங்கின மும்பை ஃப்ளாட்டுக்கு இறுதி இன்ஸ்டால்மெண்ட் பணம் கட்டனும் போல.. லேசா சொன்னான்.
என்று சொல்லியவர் அமைதியாக,
ம், வாழை வித்தது இருக்குமே மாமா. அவனுக்கு கொடுங்க. பத்தலைன்னா நம்ம வயலை அடமானம் வச்சு பணம் வாங்கினோம் மாமா.. அதிலேயே இன்னும் லோன் போட்டுக்கலாமா? இல்லாட்டி நம்ம சொரிமுத்து அய்யனார் கோவில் பக்க ப்ளாட்ட விற்றிடலாம் மாமா.. என்று சொல்லவும் மறுப்பாக தலையசைத்தார்.
அது நாளபின்ன நல்லதா வீடு கட்டனும்னா வேணும். அந்த பிஞ்சை நிலத்துக்கு பைனான்ஸ் கம்பெனி , இதுக்கு மேல கேட்டா இன்னும் ஏதாச்சும் நம்மள கொண்டாரச் சொல்வான். சிக்கல்ல மாட்டுவான் வேணா..
மகிழ்வேந்தன் யோசித்து, அப்படி கேட்டா எம் பேர்ல உள்ளது கொடுக்கலாம் மாமா, இன்னும் ஒன்றிரண்டு மாசம் தான் தாக்கு பிடிச்சிட்டா, கரும்பு ரூவா வந்திடும்.
மறுப்பாய் தலையசைத்தவர், நிலம் எல்லாத்தையும் வில்லங்கத்தில மாட்டிற வேண்டாம் கேட்டியா! அந்த நிலத்தை வித்திறலாம்னு கார்த்தி ரோசனை சொல்லுதான். எனவும் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
என்னது, நல்ல கேணியுள்ள புஞ்சை நிலத்தை விக்கிறதா.. இந்த பக்கம் அந்த பாரி அந்த பக்கம் எவனோ வந்து பயிரு வைக்க , நடுவில இருக்க காட்டில பின்னால நாம என்ன பண்ணுறது? எப்படி இப்படி சொல்றார்? என்று திகைத்தவன்..
இதுக்கு தான் முன்னமே சொன்னேன் மாமா , பேரு யாரது என்றெல்லாம் யோசிக்காதீங்க.. கிணறு இல்லாத நம்ம பூர்வீக நிலத்தை அடமானத்தில வைங்கன்னு சொன்னேன். நீங்க , மாமா இரண்டு பேரும் வேணாம் சொல்லிட்டீங்க. என்றான் வருத்தமாய்.
இல்லப்பா , அது நம்ம குலகௌரவம் அதை எங்கும் அடகு வைக்க முடியாது. அதுல பெரியவங்க பாடுபட்ட யோகம் தா இப்ப நாம வெள்ளாம பண்ற காடுகள் வாங்க வச்சது. அதை கொண்டு அடமானம் வைக்கறது எனக்கு சரின்னு படல. ம் நீயும் ஆஃபீஸராகிட்டா நிலம் பாக்க ஆள்தோது இல்லாம போய்டும், எனக்கோ செவந்திக்கோ ஏலாது. ஹூம்.
மறுப்பாய் தலையசைத்தவன், அதெல்லாம் வேலைக்கு போனாலும் பாத்துக்கலாம். அதான் நம்ம ஆக்களுக்கு சரியா நா ட்ரெயினிங் கொடுக்கேனே. நீலு நல்லா பார்த்துப்பா மாமா. பணத் தேவைன்னா என் பெயர்ல உள்ளது வச்சு கடன் வாங்கலாம். ப்ச்.. நான் வேற இந்த நேரத்தில நாட்டு மாடுங்க வாங்கி செலவு பண்ணிட்டேன். பேசாம அதுங்கள கூட வித்திடலாம் மாமா. பெரிய ஒன்னு ரூவா கூட வந்திடும். எனவும்
அடிபடுவ என்று கை ஓங்கியவர், அவனின் தோளணைத்து,
அதெல்லாம் விக்க கூடாது அய்யா. மாடு கன்னு விக்கற அளவு நாம தாழ்ந்து போகல கேட்டியா. அந்த ஃபினான்ஸ் ஆட்கள்ட்ட கேட்டு பார்ப்போம்.. என்றவர் இன்னும் சிந்தனையில் ஆழ,
மெதுவாக எழுந்தவாறு, உங்களுக்கும் அத்தைக்கும் ஒன்னுன்னா செய்ய எல்லோரும் இருக்கோம். நா வேற ஏதும் ஏற்பாடு பண்ண முடியுதா பாக்கிறேன். அவசரப்பட்டு யார்ட்டையும் ஏதும் பேச வேண்டாம் மாமா. நாளை காலை ஒரு பொழுது டைம் கொடுங்க. என்றான்.
ஆமோதிப்பாய் தலையசைத்தவர் , ஆமா, இந்த மஞ்சரிப் பிள்ள என்ன சொல்லுது? பெரியம்ம நாளு குறிக்கலையா குறிக்கலையான்னு என்னிய கொடயுதா.. எனவும்,
அது.. ஊரு குடும்பம் விட்டு போறோம்னு வெசனப் படுது போல மாமா, ஆனா, எனக்குத்தா இன்னும் ஒரு வருசம் செண்டு செஞ்சா எல்லாம் சரியா வரும் னு தோனுது. இந்நேரம் ஏங் கல்யாணம், செலவு .. என்றவனை
கையமர்த்தித் தடுத்தவர், அதெல்லாம் சுபச் செலவு, எந்த கொறவும் இல்லாம செஞ்சுப்புடலாம். அதெல்லா சின்னப்பிள்ளைங்க நீங்க நினைக்கப்பிடாது கேட்டியா? என்று அதட்டிய மாமனைப் பார்த்து பக்கென்று சிரித்தான்.
இந்த சின்ன்ன்னப் பிள்ளைகளுக்கு தா நீங்க கல்யாணம் கட்டி வைக்கப் பாக்கறீங்க.. ஹூம். என்றான்.
அது அப்படியில்லடா மருமவனே.. வளர்த்தில கல்யாண வளர்த்தின்னு ஒன்னு இருக்குது. வெவரமில்லாத திரியறதுங்க கூட கல்யாணம் ஆனதும் அறிவு கூடிப்புடும். அதான்.. இவனின் மாமன் ஆயிற்றே, கண்கள் மட்டும் மின்ன, அதே அலட்டாத சிறு முறுவலுடன் சொல்லவும்,
தலையசைத்தவன், அப்படின்னா இந்த பள்ளிக்கூடம், காலேஜெல்லா போய் படிக்கறது வேஸ்ட்டா மாமா.. ஆளாளுக்கு கல்யாணம் மட்டும் பண்ணாப் போதுமோ. என்று மிகுந்த சிந்தனையில் இருப்பது போன்ற முக பாவனையுடன் கேட்டவுடன், கவலையால் சுருங்கியிருந்த மாமனின் முகம், தனது விளையாட்டால்.. விரிவது கண்டு இன்னும் வம்பிழுத்து சிரிக்க வைக்க எண்ணியவனாய்,
சொடுக்கிட்டு, ஆங், அம்மச்சி சொல்லிருக்காங்க. நீங்க கூட என் வயசுல இரண்டு வேள கோயில் போயிட்டு, ருத்திராட்சம் எல்லாம் போட்டுட்டு கல்யாணம் இப்போ வேணாம்ன்னு விரைப்பா சுத்திட்டு இருந்தீங்கன்னு.. சன்னியாசி ஆகிடுவீங்களோன்னு பயந்தாங்களாம்.. அத்தையப் பாத்ததும் மாறிட்டீகளோ.. அதாவது அதுக்கப்புறம் தா வெவரமானீகளோ..என கேலியாய் மொழியவும்
மென்மையாய் சிரித்தவர், சிவமே என்று இருந்தாலும் சக்தி இல்லைன்னா அது ஜடமாத்தான் போய்டும் வேந்தா. அது போலத்தா, சம்சார சாகரம் கடக்காதவே, சன்னியாசம் ஏற முடியாது கேட்டியா. அது போலத்தா நீங்க நிறைய சாதன செய்ய ஆசப்படுதீயல்ல, அதுக்கெல்லா நம்ம புள்ள துணையிருந்து ஏத்தி விடும் , அவள நீ உயர்த்தனும்.. அதா குடும்ப தர்மம் கேட்டியா..
வட்டமாய் தலையசைத்தவன், செரி நீங்க உறங்குற தேரமாசாச்சு. படுங்க மாமா. கார்த்தி வந்தா நா கதவு தெறந்து விட்ருறேன். என்றவாறு எழுந்து வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் தொலைக்காட்சி சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க , இரவு உணவை உண்டவாறே தொலைக்காட்சித் திரையை பார்த்துக் கொண்டிருந்த மாமனின் சின்ன மகளைக் கண்டு அவளை நோக்கிச் சென்றான்.
தோசையை பிய்த்து சாம்பாரில் தோய்த்தவள் கவனம் டீவியில் இருக்க, கறிவேப்பிலையையும் வாயில் வைப்பதை பார்த்தவன், என்ன டீச்சரு கரப்பான் பூச்சி சாம்பார் சாப்படறீயா? என்றான்.
வாயில் வைத்த கை அப்படியே நிற்க நாவின் நெருடலில், பதறி, ஓங்கரிக்க.. தூ என்று துப்பியவள், தட்டில் விழுந்த கறிவேப்பிலை கண்டு மனம் படபடக்க கண்களில் நீர் கோர்க்க அவனை முறைத்தாள்.
தலையில் தட்டியவன், பயம் வருதுல்லா.. பின்ன, சாப்பிடும் போது தட்டில கவனம் வைக்கனும்னு தெரியாது. உங்கத்தைக்கு சோடியா நீயும் சீரியல் பாக்கறியா.. ம்.. என்று சின்னத் திரையை பார்த்தவன், நா மாமா கூட பேச உள்ள போம்போது இந்தாளு கோவில சுத்த ஆரம்பிச்சான். இன்னும் சுத்தி முடியலையா. நல்ல வேள உருண்டு கொடுக்கிறது (அங்கப் பிரதட்சணம்) பண்றா போல சீனு எடுக்கல, அந்தாளு கொடலெல்லா வெளிய வந்திருக்கும். என்னா இழுவ இழுக்குறானுங்க. இதையும் பாக்கறீங்க.. என்றவன் அவள் கடுப்புடன் எழுந்ததும், மருவாதியா அந்த கரப்பான் பூச்சி சீ கறிவேப்பில சாம்பாரை வழிச்சு வாய்ல போடு. என்று மல்லுக்கு நின்றான்.
நவருங்க அத்தான். சாப்பிடும் போது கண்டதை சொல்லி சாப்பிட விடாத செஞ்சதே நீங்கதா. அப்படிதா பண்ணுவேன், குப்பைல தா போடுவேன். என்றவள் சமையலறைக்குள் செல்ல தனது தட்டுடன் வெளியே வந்தாள் நீலாம்பரி.
இன்னுமா நீ சாப்பிடல நீலு. என்ற மகிழின் கேள்விக்கு, அண்ணே அண்ணி வந்துருவாங்கனு பாத்தேன். இன்னும் நேரமாகுமாம். இப்போ தான் அங்கேருந்து ப்ளசர்(கார்) கெளம்புது.
ம்.. என்றவன் மஞ்சரி தனது அறைக்குள் சென்று மறைவது கண்டு, என்னா சொல்லுது மஞ்சு? மாப்பிள்ளைய பிடிச்சிருக்காமா? பேங்க் ஆஃபீஸரு , இந்தியா முழுக்க ராத்தல்ல வர்ற வேல. இவ போன நேரம் தமிழ்நாட்டு பக்கமா கூட மாத்தல் கிடைக்கலாம். ஆளுங்க நல்ல கொணமா இருக்காங்க. நல்ல இடம், நம்ம பிள்ளய சந்தோசமா வச்சுப்பாங்க தோனுது. கார்த்தியும் அங்கே இருக்கான் பின்ன என்ன கவலையாம், ஏன் கம்முன்னு இருக்கா. நீ எடுத்து சொல்லு நீலு.
எங்கத்தான், இது பத்தி பேசினாலே நகர்ந்துடறா.. இல்ல எங்கிட்டோ பாக்கிறா.. ஏதோ குட்டிச் சொவத்திட்ட பேசற மாதிரி இருக்கு.. எனவும்
நகைத்தவன், குட்டிச் சொவரும் அவளும் ஒன்றுதான் , அஞ்சடி ஒயரம் இரண்டும்.. பாப்போம், இல்லாட்டி அவ சொல்லுதாப் போல உள்ளூரு மாப்பிள்ள கிடைக்கது கஸ்டம், பாவநாசம் திருநவேலி பக்கமா தேடலாம்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவளிற்கு, சட்டென புரையேற, தலை தட்டியவன் , தண்ணீர் செம்பை அவள் புறமாய் நகர்த்தினான்.
நீ சாப்பிட்டு, மூனு வருஸம் மின்ன நம்ம எல்லோர் பேர்ல எஃப்டி கட்டினப்போ போட்ட பத்திரங்கள எடுத்திட்டு வா, நா சீரியல்ல அந்த கோவில சுத்துற பயல சித்த நேரம் பாக்கிறேன். என்றவன் எழுந்து சென்று தன் தாயின் அருகில் அமர்ந்தான்.
லேசாக சரிந்து தாய்க்குலமே, அப்பா உங்கள கூப்பிட்டாக. என்றவனின் புறம் கூட பார்வையை திருப்பாமல்,
மாட்டாக, அவக **** சூப்பருல உள்ளத்தை அள்ளித்தா படம் ஓடுது அத பாத்திட்டு இருக்காக. இன்னும் ஒரு மணி நேரம் தேட மாட்டாக,
அது சரி , புருசனை ரம்பாவ சைட்டடிக்க விட்டுட்டு கோவில் சுத்தற ஆள பாக்கீக, ஹூம் கொஞ்சம் கூட பொறுப்பேயில்ல, காலைல சீம்பால் கறக்க தனி சட்டியெல்லா தந்தீகளா..
எல்லா கொடுத்தாச்சு, ஆரு உங்கப்பாவா, போடா போய் உன் ரேகா போட்ட புது குட்டிக்கு வேறென்ன ராமராஜன் ஹீரோயின் போரு வைக்கலாம்னு ரோசி.. தொல்ல பண்ணாத, அங்கிட்டு ஓடிப் போ என்றவர் ப்ச்.. இன்னும் ஒரு சுத்து சுத்தியிருந்தா, அவளப் பாத்துட்டு பேசிருப்பான்.
உக்கும் , காமெரா ஆளு தலைசுத்தி அங்கனயே விழுந்திருப்பான் , உங்களுக்கு இப்படி பாக்கது கண்ணு, தல வலிக்கலயா தாய்க்குலமே.. என்னமோ பண்ணுங்க.. என்றவாறு எழுந்தவன் தனது செல்லப் பிள்ளைகளை பார்க்க நடக்க , வாய் சீழ்கை அடித்து பாடலை முணுமுணுத்தது,
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி..
*****************
வழக்கமான பாதையில் தனது வாகனத்தை ஓட்டியவாறு வந்து நாவல் மரத்தின் அடியில் நிறுத்தி, கையிலிருந்த பைகளை எடுத்து அங்கிருந்த கிளைகளில் மாட்டியவளின் நாசி ஏதோ மருந்து வாடையைக் கண்டு கொண்டது.
என்னது என்று மனம் முணுமுணுக்க சுற்றிலும் பார்த்தாள். அனிச்சையாய் டேவிட் அண்ணாச்சியின்.. ச்சே இப்போது பாரி வேந்தனின் காட்டுக்குள் பார்க்க நின்ற இலவம்பஞ்சு மரத்தின் கீழே சிறு சிறு பாக்கெட்டுகள், மணல் நிறத்தில் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஏதேதோ புரியாத மொழியில் அச்சடிக்கப்பட்டு இருந்த கவர்களும், அதனுள் இருந்த உருண்டைகளையும் பார்த்தவளிற்கு ஏனோ அடிவயிறு பயத்தில் சுருண்டது.
வேகமாக பார்வை திருப்பியவள், ஒரு மாத வளர்ச்சியில் அழகாய் நின்ற தமது வயல் நெல் நாற்றுகளைப் பார்த்தாள். ஒவ்வொரு குழியின் மூலையிலும் அழகாய் செதுக்கப்பட்ட தென்னை மட்டை கைகாட்டி மரம் போல நின்றிருந்தது. அதில் அந்தந்த குழியில் இருக்கும் நாற்றின் பெயரையும், விதைக்கப்பட்ட தேதிக் குறிப்பையும் தாங்கி நின்று கொண்டிருந்தது.
எல்லாம் அத்தானின் வேலை தான். அவனுக்கு எதுவானாலும் ஆவணப் படுத்திடனும். என்னென்ன நாட்களில் என்னென்ன இயற்கை உரங்கள், பூச்சி விரட்டி மருந்துகள் கொடுக்கப் பட்டது அனைத்தும் அவன் குறித்து தர இவள் அவற்றை வேர்ட் டாக்குமெண்டிலும் பதிந்து வைத்து விடுவாள். கோழி, ஆடுகள், மாடுகள் , உரங்கள் எல்லாவற்றிற்கும் இதே போல நடக்கும். மகிழ்வேந்தனின் படிப்பு அவனின் தந்தை ஆசைப்படி கணிதம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்ததாக இருந்தாலும் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு. வணிகவியல் சேரச் சொல்லி அனைவரும்
ஆலோசனை கூற, இவள் வேளாண்மை படிக்க ஆசைப் பட்ட போது முதல் ஆதரவு அவனிடமிருந்து தான் வந்தது. அவளின் யோசனைகளை கேட்டுத் தான் ஏதும் செய்வான். அவளது சோதனை முயற்சிகள் அவனிடம் கோடு போட்டால் போதும் அது பற்றிக் கொண்டு அதனை வெற்றிகரமாக செய்து முடித்து விடுவான். அத்தான் அத்தான் தான் என்று எண்ணியவாறே நடந்தவளிற்கு ஒரு குழியை கடக்கும் போது வந்த பிரியாணி வாசம் மூக்கைத் துளைக்க, ஆசையாக பார்த்தாள். முதல் முறையாக அவர்கள் காட்டில் பாசுமதி பயிரிடுகிறார்கள். நாற்றில் பெரியதாக வித்யாசம் தெரியவில்லை , ஆனால் இந்த வாசனை.. ஆழ்ந்து மூச்செடுத்து நுரையீரலில் நிரப்பிக் கொண்டவள், சூரியனைப் பார்த்து அடடா நேரமாகிடுச்சு.. வளர்ப்பு பறவைகளுக்கு தீவனம் கவனிக்கணும், அடுத்து பொருட்களை சந்தைக்கு அனுப்பனும்.. என்று எண்ணியவாறு விரைந்து நடந்தாள்.
ஸ்டோர் ரூமிலிருந்து கோழி வளர்ப்பு
தீவனத்தை ஏந்தியவாறு வந்த செந்தில், அப்பாடி வந்தியாம்மா? நாட்டுக் கோழிங்களுக்கு, இந்த புதுசா வாங்குன கருங்கோழிங்களுக்கு ஏதோ மருந்து கொடுக்கனுமாமே. வேந்தன் டவுன்ல நிக்கிறானாம். உன்னட்ட கேட்டுக் கொடுக்க சொன்னான். என்ன மருந்துமா.. கால்பாலா, மஞ்ச டப்பா மாத்திரையா வெள்ளை டப்பா மாத்திரையா , சட்டுனு சொல்லு என்றான் ஓரமாய் இருந்த டப்பாக்களை பார்த்தபடி ..
சிரித்தவள், உங்களையே கண்ட மாத்திரை போடாதீங்கன்னு சொல்லிருக்கு, நீங்க கோழிங்களுக்கு கொடுக்க பாக்கறீங்க. எப்பவும் அத்தான் கூடவே நிக்கறீங்க அந்த டப்பால இருக்கது மாத்திரைங்க இல்லனு தெரியாதா. அதும் கால்பாலா . அதிமதுரம் , மணித்தக்காளி கீரைப் பொடி இருக்கு அண்ணே. அது இப்போ வேண்டாம். இன்றைக்கு அத்தான் பஞ்சகவ்யா தான் கொடுக்கனும் சொன்னாங்க. உரக் கிடங்குல இருந்து ஒரு பாட்டில்ல. ஊத்தி எடுத்திட்டு வாங்க .
என்னா பஞ்சகவ்யா , பயிருங்களுக்கு அடிக்கது, அதயா கோழிங்களுக்கு கொடுக்க என்று சிறு அதிர்வாய் கேட்க,
ஆமா , நாட்டுக் கோழி, கருங்கோழிக்கு இதெல்லா தான் கொடுக்கனும். நீங்க கொடுக்கற இங்கிலீஷ் மருந்தெல்லா அதுக்கு ஒத்துக்காது. நம்ம காட்டுல இருக்க மூலிகைங்களே போதும். பஞ்சகவ்யா நோயெதிர்ப்புக்கு நல்லது. இன்று அது குடுக்கிற நாள்.. என்றாள் அங்கிருந்த அட்டையை பார்த்தவாறு.
ஆங் அப்படி சொல்லுங்க நீலாம்மா.. நம்ம மருந்து தா நமக்கு நல்லது. காடு முழுக்க மணத்தக்காளி பொறக்கி நான் உங்களுக்கு தானே பொடி செஞ்சு கொடுக்கிறேன். அதெல்லா சாப்பிட்டு தா நம்ம கோழிங்க தெம்பா சுத்துதுங்க. சொன்னா இது நம்ப மாட்றது.. என்ற மூலிகை செல்வியை ஏற இறங்க பார்த்தவன் ,
ஏம்மா நீ எடுக்கறது பாதி வூட்டுக்கு தான மூட்ட கட்டுற. அவ்வளவும் ஹெர்பல் கம்பேனி ப்ரோக்கருக்கு தானே விக்கிற.. சம்பளம் இங்கே சைடு வருமானம் அங்கே.. போ போ.. போய் ஆடுங்களுக்கு அகத்திக் கீரை எடுத்தாந்து போடு போ.. என்றவன்,
எம்மா நீலா , சித்த இங்கேயே இரு, கோவிலுக்கு ஓடிறாதே , நா போய் பஞ்சகவ்யா எடுத்துட்டு வாரேன். இன்னிக்கி ஒரு நா அளவா நீயே எடுத்து நீயே கொடு, அந்த வாடை எனக்கே பிடிக்காது, கோழிங்க எப்படி குடிக்குதுங்க பாக்கிறேன்.
என்றவன் ஓட்டமாய் ஓடி எடுத்து வந்தான்.
ஆமா என்னாமா அங்கே கார்த்தி காட்டுக் கொய்யா மரத்துக்கு அடில ஏதோ பொட்டனம் பொட்டனமா ஆட்கள் கொண்டாந்து எறக்கிருக்காங்க. பாத்தா ஏதோ மண்ணு மூட்ட கணக்கா இருக்கு என்ன, வேந்தன் கூட ஏதும் சொல்லலியே.. என்று அவளிடம் கேட்க,
ஆட்டுக் குட்டியை தடவிக் கொஞ்சிக் கொண்டிருந்தவள். ஆச்சரியமாக பார்த்தாள்.
அங்கே அந்த டேவி.. ப்ச் க்ருஷ்ணா கோட்ஸ் காரவுங்க வயல்லயும் கிடந்தது. ஏதோ கெமிக்கல் வாசனை வேற.. என்னான்னே யாராச்சும் ஏதாச்சும் கொடுத்தா வாங்கிப் போடறதா.
இல்லைம்மா வேந்தன் தா இறக்கச் சொன்னதா சொன்னான் அந்த பய. அதான் விட்டுட்டேன்.
சரி அத்தான்ட்ட என்னான்னு கேட்போம். ஃபோன் பண்ண வேண்டாம்னு சொன்னாங்க என்று வாய் பேசியபடி இருக்க, கோழித்தீவனத்தில் சில மூடி அளவு திரவத்தை கலந்தவள், ஒரு கப்பினை எடுத்து அளந்து, கோழிகள் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தில் உள்ள நீரிலும் ஊற்றினாள். இது இரு வருடங்கள் முன்பு அம்பாசமுத்திரத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட போது அறிந்து கொண்ட விஷயம்.
இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளும் ஒரு சங்கிலிப் பிணைப்பு போல, ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கும். அவற்றின் உணவு முறை அப்படித்தான். மனிதனுக்கு மண்புழுவும் தேவை பாம்பும் தேவை.. கண்கள் மின்ன மண்புழு உரத்திற்கென இருக்கும் பெரிய பேரல்களைப் பார்த்தாள்.
அப்போது அய்யனார் கோவில் மணியொலி கேட்க, சட்டென்று எழுந்தவள்,
அண்ணே நீங்க , எலக்கட்டு, பழங்களை எல்லாம் வெரசா கொண்டாரச் சொல்லுங்க. அந்த ஆக்களுக்கு ஒரு சத்தம் கொடுங்க. நான் அய்யனாரை பார்த்துட்டு உடனே வர்றேன். என்றவாறு நடந்தாள்.
வழிக் கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தவள் ஆழத்தில் தெரிந்த நீரினை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அவளைப் பொறுத்தவரை எல்லமே சாமி தான். அதும் நீரின்றி எதுவும் அசையாது அவளின் பிடித்தமான விவசாயத்தில்.
ஆழத்தில் இருக்கு, ஆடி பதினெட்டுக்குள்ளாற ஒரு மழை வரும். வந்தா ஊருணி தண்ணி ஏறும் கேணித் தண்ணியும் கூடும். என்று எண்ணியவாறு நிமிர்ந்தவள் கண்களில் கொய்யா தோப்பில் ஒரு மரத்தின் அடியில் இருந்த பாக்கெட்டுகள் பட்டன.
வேகமாக சென்றவள் எடுத்து முகர்ந்து பார்க்க ஏதோ நைட்ரஜனும் அம்மோனியாவும் கலந்த வாசனை வருவதாக தோன்ற.. இது போலவெல்லாம் அத்தான் வாங்க மாட்டானே. என்று யோசித்தாள் ,
அவன் , அந்த பாரியின் வேலையாக இருக்குமோ, அவனைத்தான் வேந்தன் என்று அந்த ஆள் சொல்லி இருப்பானோ. கேட்டுப் பார்க்கலாமா என்று
கண்களை இறுக மூடியவள், ம்கூம் அத்தான் அவனுங்க வழிக்கே போகக் கூடாது சொல்லிருக்காங்க.. நேற்று வேற என்னென்னவோ உளறி வைத்து இருக்கோம். அந்நேரம் அவனின் பார்வை, ஆத்தாடி! இப்பவும் வயிறு சுருளும் உணர்வு. பேசிக் கொண்டிருந்த அத்தையை அங்கேயே விட்டு விட்டு ஓடி வந்தாயிற்று. இப்ப சாமி அய்யனாரப்பா, அவன பாக்கவே கூடாது..
என்று மனதுள் சொல்லியவளாய், பாதையில் ஏற, அங்கே தாழ இருந்த புங்கன் மரத்தினைக் கடந்து , தனை மறைத்த கிளைகளை தள்ளிவிட்டு வெளியே வந்தான் அவன்..
எப்பவும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் எங்கோ பார்த்து உதாசீனம் செய்யும் விழிகள், அவளின் மீதே நிலைத்ததாய்.. உச்சியிலிருந்து கால் வரை கூறிடுவது போல உணர்வாக, பொதுவாக இந்த பாதையில் வர மாட்டானே.. ஏதும் வம்பு வேணாம், அப்புறமா கோவிலுக்குப் போகலாம். என்று எண்ணி வேகமாக திரும்பப் போனவளை அவனின் குரல் நிறுத்தியது.
எப்பவும் பக்கத்து காட்டுல என்ன பண்றாகன்னு வேவு பாக்கது தா வேல போல.. எனவும்
யோசனையாய் புருவம் சுருக்கியவள், என்ன உளறுகிறாய் என்பது போலப் பார்த்தாள்.
உன் பெரியப்பன் அடமானம் வச்ச நிலப் பத்திரம் இப்போ என் கையிலே..இப்போதைக்கு அனுபவப் பாத்தியதைக்கு எழுதி வாங்கிருக்கு சீக்கரமே. முழுசா.. என்றவனின் பார்வையில் குரலின் தீவிரத்தில் உடலுறைய நிற்க,
மண்ணை மிதிச்சு ஆளனும் பொண்ணை முறிச்சுத்தா ஆளனும்.. ஆண்டு காமிக்கிறேன். சீக்கிரமே இந்த கொட்டாரம், பட்டறை எல்லாம் பிரிக்க ரெடியா இருங்க.. என்று கையசைத்த திமிரைக் கண்டவள்,
ஆத்திரத்தில் ஒற்றைப் புருவம் உயர, நிறுத்து என்றாள்.
என்ன.. குறுக்கு வழியில பாயற உனக்கு இம்புட்டு ஏத்தமிருந்தா , காலமெல்லாம் பாடுபட்டு காப்பாத்தின எங்களுக்கு எம்புட்டு இருக்கும், நாங்க என்ன பிரிக்கணும், ஒனக்கு இவ்ளோ தான் மரியாதை, அடமானம் வச்ச நிலத்தை , உரிமை கொண்டாடடுறது எந்த சட்டத்தில இருக்கு. என்ன ரூல்ஸ் தெரியாத ஆடிட்டு இருக்க.
ஒற்றை விரல் உயர்த்தி, எச்சரிக்கை செய்வது போல அசைத்தவள், மரத்தடியில் இருந்தவற்றை சுட்டிக் காட்டி, மரியாதையா நீ கொட்டின குப்பைய எடுத்து ஒன் நிலத்தில கொண்டு போட்டுக்க.. முதல்ல இடத்தைக் காலி பண்ணு. என்று இறுகிய குரலில் எச்சரித்தாள்.
முகம் இறுக, ” ஒன் பெரியப்பன்ட்ட பேசு, இந்த நிலம் யாருதுன்னு தெளிவா சொல்லுவான். அப்புறமா யார் எடத்தை யார் காலி பண்றதுன்னு பாக்கலாம். என்னிய பாத்தா கைநீட்டி மரியாத இல்லாம பேசற.. உன்னை… எப்படி பாக்கனுமோ அப்படி பாத்துக்குறேன்டி.. ” என்று சொல்லிவிட்டு கிணற்றின் சுவற்றின் மீது ஏறி கால்மீது கால் போட்டு அமர்ந்தவனின் அசைவில் பாசனக் குழாய் தாக்கத்திற்கு வைத்திருந்த கல் கிணற்றுக்குள் தடாரென்ற ஒலியுடன் விழுந்து பேரலைகளைக் கிளப்பியது.
நாயகன் ஆடுவான்..