NPNN 1
” பாரி.. இதான் நம்ம வாங்கிருக்க இடம்.. இந்த கண்மாய் தண்ணீர் இரண்டு பேருக்கு பாத்தியதை.. இதில கிணறுகள் மூன்று நமக்கு சொந்தம்.. ஆனா அந்த மேற்காம இருக்க நிலத்திலே இருக்கிற இரண்டு கிணறுகள் நிறைஞ்சாத்தான், இங்கே தண்ணீர் வரும்.. இந்த மண்ணை டெஸ்ட்டுக்கு அனுப்பிருக்கு. என்று தன் தோழன் பேச்சில் காதுகள் கவனமாய் இருந்தாலும் கண்கள் சுற்றுப்புறத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. எதிரே பசுமை கம்பளமாய் விரிந்து கிடந்தது நெல் நாற்றுகள் வளர்ந்திருந்த வயல்கள். வேகமாக வீசிய ஆனி மாதக் காற்றில் அலையடித்தது போல அவற்றில் ஒரு சிலிர்ப்பும் ஓடியது.. வண்டி ஓடும் மண்பாதைகளில் தேக்கு மரங்கள் வரிசையாய் நேராய் நின்றன.
அந்த லேண்ட் யாரோடது? என சுட்டிக் காட்ட, அதான் சொன்னேனே.. இந்த ஊரு சிவந்தியப்பர் அவர் குடும்பத்துக்கு சொந்தம். அவங்களே குடும்பமா பாத்துக்கறதாலே நல்ல வெள்ளாமை.
இந்த நிலத்துக்கார டேவிட் பல வருடங்களா ஏதும் பாக்கல , அதான் புதர் மண்டிக் கிடக்கு. நம்ம கைக்கு வந்திடுச்சுல்லா உன் ப்ளான்படி எல்லாம் பண்ணிடலாம்.. என்றவன் விசிலடித்தான்.. அவனின் பார்வை போன பக்கமாய் பார்வை திருப்பியவன் கண்கள் சுருங்கின..
சேறாய் இருந்த நிலத்தில் ட்ராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தாள் கருநீல உடையணிந்த ஒருத்தி.. பெரிய சக்கரங்கள் உருண்டு களிமண் கட்டிகளாய் இருந்த மண்ணை மசிய வைத்து.. குழப்பிக் கொண்டிருந்தது. சுடிதார் அணிந்து இருந்தாள். கழுத்து தலையைச் சுற்றி இருந்தது துப்பட்டாத் துணி , கண்கள் மட்டுமே தெரிந்தன. மெல்லிய உடல்வாகு கொண்ட பெண். கியரில் கவனமாய் உழவு வேலையில் கவனமாய் இருந்தாள். பாதையில் புத்தம் புதிய ஹோண்டார் ஆஸ்ட்ரோ இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. லுங்கி அணிந்த ஒருவன் தலை தெறிக்க ஓடி வந்தான்.
” யம்மா யம்மா.. எப்பம்மா வந்தீக. இலைக்கட்டு அறுக்கச் சொல்லி ஆடரு வந்ததுன்னு நெல்லையப்பன் சொன்னான் அதா வாழக்காட்டுக்கு போனேன் மா. இந்தப் பக்கமா வாங்கம்மா. வேந்தனுக்கு தெரிஞ்சா வம்பாப் போய்டும்.. கண்டபடி ஏசிடுவான்.. வாங்கம்மா” என்றான் சத்தமாய்.
அவன் அழைத்தது காதில் விழவில்லையோ.. அவள் போக்கில் ஓட்ட.. கை தட்டியவன்.. யம்மா நீலாம்மா.. உங்களத்தா.. நா வந்துட்டேன் இங்க பாருங்க என்று சத்தமிட..
வேகத்தை சற்றே குறைத்தவள்,
ஆங்.. ஆங் நீ போய் காய்கறி, தேங்கா மூட்டைங்களை ஜீப்ல ஏத்து.. ஒரு மணிக்குள்ளாற பாவநாசம் மார்க்கெட் கொண்டு சேர்க்கனுமில்லா.. இங்கே தண்ணீ விட்டு நேரமாகிடுச்சு.. கட்டி தட்டிப் போச்சுன்னா ரெண்டு வேலையாகிப் போய்டும்.. போ போ.. எனவும்..
தலையைச் சொறிந்தவன்.. சிறிதாய் குழம்பி.. பின் எதிர்பக்கமாய் சென்றான்.
மீண்டும் ட்ராக்டர் வேகமெடுத்தது.
“என்னாமா ஓட்றா பாரு.. சிவந்தியப்பர் பொண்ணு நினைக்கிறேன். அக்ரி படிச்சுட்டு காடு கரை அவதான் பாக்கிறான்னு கேள்வி. என்றவன் அவளையே பார்த்தவாறு நிற்க,
அருகில் இருந்த கிணற்றை எட்டிப் பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கி , சுற்றுபுறம் நோக்கிய கண்கள் பசுமையாய் விரிந்து கிடந்த தோட்டம் நடுவில் உழவடிக்கும் நிலத்தைக் கூர்ந்தன..
திரும்பி தன் சகோதரனைப் பார்த்தவன், அவனின் பார்வை ட்ராக்டரின் பின் வலம் வருவது கண்டு,
“அந்த வேந்தன்ங்காறாங்களே அவன் நமக்குப் போட்டியா நிலத்தை பேரம் பேசினவன் தானே..” என கேட்டவாறு அலைபேசியை எடுக்க, சகோதரனின் புறமிருந்து பதில் வராதது கண்டு திரும்பி ” டேய் இந்திரா, வந்த வேலைய விட்டு என்ன பாத்திட்டு இருக்க?” எனவும்
ப்ச் என்னடா, ஒரு பொட்டப்புள்ள என்னா லாவகமா ட்ராக்டர் ஓட்றா, வண்டில ஆயிரத்தில ஒர் பங்கு கூட வெயிட் இருக்க மாட்டான்னு பாத்திட்டு இருந்தா ?”
” வேந்தன்ங்கறவே யாரு? நம்ம நெலம் வாங்க போட்டி போட்டவன் தானேன்னு கேட்டேன்.”
” ஆமா ஆமா, செவந்தியப்பரோட அக்காபுள்ளையோ தங்கச்சி புள்ளையோ.. இந்த அம்பத்தி ரெண்டு ஏக்கரா அவங்க குடும்பத்து ஆட்கள் எல்லார் பேர்லையும் தான் . நாம கொஞ்சம் யோசிச்சுருந்தா அவன் அந்த வேந்தன் தட்டிருப்பான்.. நாம தா வொயிட்டு ப்ளாக்குன்னு பணத்தைக் கொட்டி அந்த டேவிட்டை அசைச்சு தூக்கிட்டோம்ல.. ” என,
என்னத்த அசைச்சு.. தண்ணீர் எடுக்கவும் தோதில்ல, விவசாயமும் பாத்து பல காலம் ஆனது போல இருக்கு. எல்லா ஜீரோல இருந்து ஆரம்பிக்கனும்.. ” என ,
டணார் கோயில் மணி ஓசை கேட்டது.
கண்மாயை ஒட்டியிருந்த ஊருணி காத்த அய்யனார் கோவிலில் இருந்து தான் வந்தது போலும். டணார், பணார் என்று மூன்று முறை ஒலித்து அடங்க..
ட்ராக்டர் ஓட்டிக் கொண்டிருந்த பெண் தன் மணிக்கட்டை திருப்பிப் பார்த்து விட்டு, வரப்போரம் பக்கமாய் ட்ராக்டரை திருப்பியவள், ட்ராக்டரை நிறுத்தி விட்டு இறங்கினாள்.
படியில் கால் வைத்து இறங்கியவள் லாவகமாய் குதித்து வரப்பு மேட்டில் இறங்க,
பார்றா.. என்றான் செல்வேந்திரன். திருநெல்வேலி பொண்ணுன்னா சும்மாவா.. எப்படி தாண்டிக் குதிக்குது பாரூ.. என்று சிலாகித்தவனை திரும்பி முறைத்த பாரி, நீ மண்ணைப் பாக்க வந்தியா பொண்ணைப் பாக்க வந்தியா. கிளம்பு, இந்த ஏரியா அக்ரி ஆஃபீஸரைப் பாக்கனும். நம்ப ப்ளானுக்கு அந்தாள் சரி வருவானா செக் பண்ணனும் .என
அவனேயும் அறியாமல் பார்வை தன் முக்காட்டை நீக்கும் பெண்ணின் மேல் படிந்தது.
அலையாய் நெளியும் கூந்தல், காதில் கழுத்தில் கைகளில் அளவாய் நகைகள்.. எந்த முகப்பூச்சும் கண்டதில்லை என சருமம் சொல்லியது. இடை தாண்டிய நீண்ட பின்னலை பின்னுக்கு தள்ளியவள் , தனது வாகனத்தினின்று சிறிய பையை எடுத்தவள்,
முத்தூ.. பச்சை முத்து என அழைக்க, ம்மா.. என எங்கிருந்தோ சத்தம் வந்தது.
மோட்டார் ரூமில சாப்பாடு வச்சட்டு போறேன். அத்தானை சாப்பிடச் சொல்லு என சத்தமிட.. அவன் ஏதோ பதில் சொல்வது தெளிவற்றுக் கேட்டது.
சரி சரி என்றவள் வரப்பு பாதை தாண்டி இறங்க பார்வை விட்டு மறைந்து போனாள்.
தன் சகோதரன் நகரும் உத்தேசமே இல்லாமல் இருப்பது கண்டு எரிச்சலடைந்த பாரி, ” கிளம்பலாம்னு சொன்னேன்.. ” என உரக்க சொல்ல,
ஆங்.. அது அந்த ஆஃபீஸர்ட்ட வெவரம் கேட்கறது விட, இந்த பொண்ணு தா அக்ரி படிச்சுர்க்கே இதுட்டையே கேட்டுப் பாக்கலாமா..எனவும்,
புருவம் சுளிக்க, “பொட்டச்சி அதும் கத்துக்குட்டிட்ட என்ன கேட்க வேண்டிதிருக்கு..? கெளம்பு ” எனக் கடுமையாய் சொல்லித் திரும்பிவன், தன் முன்னால் தெரிந்த பாதையில் நின்றவளைக் கண்டு திகைத்தாலும் சட்டென்று பாவனையற்ற முக பாவம் கொண்டு வந்தவன், பின் தொடருமாறு கையசைத்து விட்டு, பாதையில் ஏறி கோவில் அருகே நிறுத்தியிருந்த தங்கள் வாகனத்தை நோக்கிச் சென்றான்.
**********************
கோடை வெயிலால் நீர் குறைந்து இருந்த குளத்தின் கரையில் கூட்டமாய் நின்ற சிறுவர்களைக் கண்ட பெரியவர்,
“என்னடே இங்க கும்பலா நின்னுட்டுருக்கிய.. ? எவனாச்சும் கொளத்துக்குள்ள எறங்கிறாதீக டே.. இந்த குளத்தில மொதல இருக்கு தெரியுமா.. ” என்று பீடிப் புகையை வெளியே விட்டவாறே சொல்ல,
“என்னா மொதலையா.. எல்லாம் தெரியும் நீரு போரும்.. ” என்று பதில் சொன்ன சிறுவனின் கண்கள் குளத்தில் பதிந்து இருந்தன.
அவனுக்கு பக்கத்தில் நின்ற இன்னொரு சிறுவன் தன் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்து விட்டு ,
“என்னாடா! அண்ணே தண்ணீல உள்ள போய் முளுசா இருவது நிமிஷம் ஆச்சு.. எப்புடிரா மூச்சடக்கி இருப்பாரு. ஒரு வேள கோயிலு மண்டபத்துக்கு அந்தப்பக்கமா நீஞ்சிட்டே போய் கரை ஏறிட்டாரோ ?”
பீடியை அவசரமாக வாயிலிருந்து எடுத்த பெரியவர், “ஏலே கோட்டிக்கார பயலுகளா! கசமான எடத்தில எவன்டா உள்ளே எறங்கினது ? இரண்டு நிமிசமே மூச்சடக்கி உள்ளாற இருக்கது கஷ்டம்.. இருவது நிமிஷமாச்சா சேத்துல மாட்டி, செத்துகித்து போயிறப் போறான்.. எவனாது நீச்ச தெரிஞ்சவங்கள போய் கூட்டியாங்கடா..” என்று பதட்டமாய் சொல்லி குளத்தைப் பார்த்த நேரத்தில்.. பத்தடி தொலைவில் தண்ணீர் மட்டத்தில் அலைகள் அதிகமாக தெரிந்தன..
முதலில் கையும் அது பற்றியிருந்த கூடை மட்டுமே தெரிய..
“அண்ணே வந்திடுச்சு அண்ணே வந்திடுச்சு..”
என்று கூவிய சிறுவர்கள் தண்ணீர் கரை அருகில் சென்று பார்க்க.. கூடையில் ஏதோ அசைவு தெரிய.. அதனை தலைக்கு மேல் பிடித்து நீந்தி வந்தான் மகிழ்வேந்தன்.. அவன் கையில் இருந்த மூடி வைத்த அரிகூடையில் குளத்து மீன்கள்..
ஹே என்று கூச்சலிட்ட சிறுவர்களை நோக்கி நீந்தி வந்தவன் , கரையேறி கூடையை கவனமாக அங்கிருந்த பெரிய பையனிடம் கொடுக்க,
அண்ணே.. சூப்பருண்ணே.. சொன்னா மாரியே கொரவை மீனு, நாலு நண்டுங்க கூட இருக்கு.. எப்படி எப்படிண்ணே பிடிச்சீங்க.. என
பையனின் கையிலிருந்த தனது ஆடைகளை வாங்கி, சாரத்தை மேலிட்டுக் கொண்டு ஈர ஆடைகளை கழற்றியவன். உலர்வான ஆடைகளை போட்டுக் கொண்டவாறே, “நாளைக்கு லீவு தானேடா. வயல் பக்கம் இருக்க கம்மாய்க்கு வா, எப்படின்னு சொல்லித் தாரேன்.. இப்போ அடிச்சிக்காம நாலு பேரும் மூனுங்களை நண்டை பங்கு போட்டுக்கங்க செரியோ?” ” என்றுவாறு தனது அலைபேசியை வாங்க,
பீடியை வைத்திருந்த பெரியவர், ஆச்சரியத்துடன், ஏலே வேந்தா நெசம்மா அது நீ புடிச்ச மீனாடே.. எப்புடிரே புடிச்ச. அதும் கொரவை மீனு சரியா ஆட்டங்காட்டுமே.. என்று எட்டிப் பார்த்து விட்டு..
எப்படி முளுசா இருவது நிமிஷம் மூச்சுப்புடிச்சு உள்ளேருந்த.. ?” என் ஆச்சரயமாய் கேட்க.. அவரின் அருகில் வந்தவன்..
அவரின் கை பற்றி உயர்த்தி காட்டி, “இந்த பீடி கருமத்த குடிச்சா தரைலேயே உங்களுக்கு மூச்சு விடறது செரமம் தா.. இதுல தண்ணீல எங்க மூச்சு பிடிக்க.. அப்படின்னு நான் சொன்னா கேட்டு இத விட்ருவீரா?? ”
எனவும்..
“அட போப்பா..” என சொல்லிய அவர் இருமியவாறே அங்கிருந்து நகர..
ஹூம் என்று புன்னகை செய்தவன். “பாத்துக்கிடுங்க டே.. இந்த எளவக் குடிச்சா இருமி இருமி தரைல நடக்கையிலேயே மூச்சு தெணறிட்டு கெடக்க வேண்டியது தா.. பத்தாததுக்கு அஞ்சு மணியானா ஊத்திக்கிடறது வேற.. ”
என்றவனின் தோள் தட்டப்பட்டது..
“கருத்தெல்லா அப்புறமா சொல்லிக்கிடலா.. என்னிய கோவிலு வாசலுக்கு வர சொல்லிட்டு.. நீ என்னா டே குளத்தாங்கரைல நிக்கறவே.. ஃபோனுல கூப்பிட்டாலும் எடுக்கல..
எனவும் கிளுக்கிச் சிரித்தவாறு சிறுவன், தன் கையிலிருந்த அலைபேசியை நீட்டியவாறு “அண்ணே நீங்களான்னே கூப்பிட்டீங்க .. வாழைப்பழம் காலிங்னு வந்திச்சுண்ணே. உங்க பேரு செந்திலு தானே.. எப்பண்ணே வாழப்பழம்னு மாத்துனீங்க? ” என்று சொல்லியவாறு ஃபோனைக் கொடுக்கவும்..
தன் நண்பனை முறைத்தவன்,
“ஏலே இநதக் கோரமை எம்புட்டு நாளா? என்னான்துக்குடே வாழைப்பழம்னு என் பேர மாத்தி வச்சிர்க்கறவே? இரநூத்தி முப்பத்தி ஏழாவது தடவையா கரகாட்டக்காரன் படத்து வாழப்பழ காமெடி பாத்தியா டே”
“ஆ.. அது எப்பவும் போலத்தா.. ஆமா நேத்து உன்னிய என்னா வேல பாக்கச் சொன்னே.. ?” என நிதானமாய் கேட்கவும்,
திருதிருவென விழித்தவன், என்னா மாப்பிள்ள நீ சொன்ன வேலை எல்லா பண்ணிட்டேனே..
ஊத்தம் வச்சு பழுக்க வச்ச பழத்தை மார்க்கெட்டுக்கும் ஏற்கெனவே கனிஞ்சு போன பழத்தை தோட்டத்துக்க ஒரம் தயாரிக்க எடுத்துப் போகச் சொன்னா , என்னலே பண்ணி வச்சிருக்க நீ.. எனவும்
அது அது.. நல்லாருக்க பழத்தை ஏன் மாப்பிள்ள வம்பாக்கனும். அதா பன்னெண்டு தாரையும் மார்க்கெட்டுக்கு தூக்கிட்டே. காசு கூட வாங்கி மாமாட்ட கொடுத்திட்டே லே. நாயமா என்னைய நீ பாராட்டனும்..
ஆங்.. வா வா.. கமிஷன் கடை கோனாரு உன்னிய பாராட்டத்தா கூப்பிட்டாரு வா போய் அதை வாங்கிட்டு வந்திடலாம். எனவும்,
எச்சில் விழுங்கியவன், தோளில் விழுந்த கையின் அழுத்தத்தில் மிரண்டு, ” அது அது.. நல்லா பக்குவமா பழுத்து இருந்திச்சு பா அதா ஏன் உரத்தில போட்டு வேஸ்ட்டு பண்ணனும்னு பழ வியாபாரிட்ட தள்ளச் சொன்னேன் பா.”
பக்குவம். சரி சரி வா.. உன்னை வச்சே அதை பஞ்சாமிர்தம்.. பஞ்சகவ்யம் எல்லாம் பண்ண வைக்கிறேன். என்று இழுத்துச் செல்ல , ஊப் என்று மூச்சைப் பிடித்தபடி அவனின் இழுப்பிற்கு சென்றான்.
****************
எட்டு மணியடித்த சத்தம் கேட்டு எழுதிக் கொண்டிருந்த போனாவை நிறுத்தி வைத்த நீலாம்பரி, சோர்வாய் உள்ளே நுழைந்து தன் முன் பணத்தை நீட்டும் தகப்பனை நிமிர்ந்து பார்த்தாள்.
இந்தம்மா, ஆட்கள் சம்பளம் எல்லாம் கொடுத்தது போக இன்னிக்கு இவ்ளோ தா மிஞ்சனது.. எனவும் வாங்கி எண்ணிக்கை சரிபார்த்து ஏட்டில் குறித்தவள்,
சோர்வாய் நகர்ந்து கையைக் கழுவும் தந்தையைப் பார்த்து , வேகமாக சென்று சாப்பிட தட்டை எடுத்து வைத்தாள்.
இன்னிக்கு நம்ப சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு கெழக்கால இருக்க குளத்து வண்டல் மண் எடுக்க டெண்டரு. இந்த க்ருஷ்ணா கோட்ஸ் காரனுங்க அதுலேயும் போட்டிக்கு வந்துட்டானுங்க. நெலத்தை தான் போட்டி போட்டு ரேட்டு ஏத்திவிட்டு அடிச்சிட்டு போனானுகன்னு பாத்தா, எல்லாத்திலேயும் போட்டிக்கு வாரனுக.. நீ அந்த மண்ணு போட்டாத்தா நம்ம பாசுமதி வெளைய வைக்க நல்லத்தன்னு சொன்னது னாலே , சண்ட போடாத கொறயா ஏலம் பேசி எடுத்திருக்கு. அதிலேயும் பேர் பாதி அவனுங்க ஏதோ சூழ்ச்சி பண்ணி அவிங்க நிலத்துப் பக்கம் திருப்பிட்டானுங்க. பேரு தா பாரி.. இந்திரன்னு , எங்கடா அடிக்கலாம்னு இருக்கானுங்க ” என சொல்லியவாறு இட்லியை உண்ணத் தொடங்க,
பொட்டச்சி கத்துக்குட்டி எனும் குரல் காதில் ஒலிக்க, புன்னகை சிந்தியவள்,
தண்ணீர் எடுத்து தட்டின் அருகில் வைத்தாள்.
உண்டவாறே, “கேரளாவில எல்லாம் ஆளுக்கு இத்தனைன்னு சொல்லிடுவாங்களாம், ஏத்து, ஆள் கூலி மட்டும் பண்ணா போதும். இங்கே தா அதுக்கும் ஒரு வரி போடுதானுங்க. கொள்ளக்கார பயலுக.. இன்னும் இந்த புது பங்குக்காரனுங்க என்னென்ன பண்ண காத்திருக்கானுங்களோ,திரும்புன பக்கமெல்லா பிரச்சனையா கிடக்கு ” என பொறும,
“பிரச்சனைகள் இல்லாம வாழ்க்கை இல்லையே ப்பா.. நம்ம வேலையை நாம பார்ப்போம்.. அவங்கட்ட கவனமா இருக்கது நல்லது தான். அதுக்காக கவலப் பட்டுக்கிட்டே இருந்தா கூட நாலு முடி தான் நரைச்சுப் போகும்.” என்றவாறு அவர் உண்ட தட்டை எடுத்துச் செல்ல உள்ளே நுழைந்தான் மகிழ் வேந்தன்..
“நீலு என்ன சமையல்?” என்றவாறே அமர்ந்தவன் கண்ணில் மாமனின் இரண்டாம் பெண்ணான தேவ மஞ்சரி பட, “என்ன டீச்சரம்மா நாளைக்கு நடத்த வேண்டிய பாடமெல்லா படிச்சுட்டியா.. போன செமஸ்டர்ல ஒன் சப்ஜெக்ட்ல தான் நிறைய பேரு ஃபெயிலாமே..?” என்றவாறு தட்டெடுத்து இட்லிகளை வைத்துக் கொள்ள, அவனை முறைத்தவள்,
“ஆமா இவுரு தா மனோன்மணீயம் யுனிவர்சிடி.. வைஸ் சான்ஸிலர்.. ஸ்டேட்டிஸ்டிக்ஸ் ரிப்போர்ட் வந்திருக்கு , கையெழுத்து போடும் போது விசாரிக்கிறரு.. மொதல்ல சர்வீஸ் கமிஷன் பரீட்சை பாஸ் பண்ற வழி பாருங்க. அப்புறமா எங்கிட்ட வம்பு வழக்குக்கு வாங்க.” என எகிற..
” அட உண்மைய சொன்னா ஏன் குதிக்கற, நீலு , நீ வேணா அந்த எச்ஓடிட்ட விசாரிச்சு பாரு.. நான் சொன்னது ஆமாவா இல்லியான்னு.. என்றவாறு இடக்கையை நீட்ட,
அவன் கையிலிருந்த பையை சிரித்தவாறே வாங்கினாள் நீலாம்பரி.
“என்ன அத்தான்? வழக்கம் போல மருதாணியா.. ?” என்றவாறே பிரிக்க
“ஆமா சட்டுபுட்டுனு அரைச்சு கொண்டு வா.. இந்த பார்த்தீனியம் களை செடிகளை அழிக்க உப்புப் போட்டு கரை.. கரைன்னு கரைச்சனா.. போன வாரம் வச்சது கலர் போய்டுச்சு.. அதான் ஃப்ரெஷ்ஷா பறிச்சிட்டு வந்தேன்.. ஏ மஞ்சு.. வாய் தான் இருக்கு. அத்தான் சாப்பிடும் போது பாட்டு போடனும் தெரியாதா? ” எனவும் உதட்டைச் சுழித்தவள்.. எழுந்து ப்ளூடூத் ஸ்பீக்கரை ஆன் செய்ய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது,
” ஏ தந்தனதந்தன தந்தன தந்தா.. சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரப் போல வருமா…. அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..”. என அலறத் தொடங்க.. காதுகளை பொத்திக் கொண்ட மஞ்சரி
“மகிழ்வேந்தன்னு பேர் வச்சதுக்கு இராமராஜன்னு வச்சாருக்கலாம் .” என சொல்ல..
சிரிப்புடன் கெத்தாக காலரை பின்னால் தூக்கி விட்டவன், இட்லியை ரசித்து உள்ளிறக்கியவன் , பாட்டு சத்தம் கேட்டு வந்து நின்ற தாயைப் பார்த்தான்.
” என்ன தாய்க்குலமே சாப்பிட்டீங்களா? சீரியலுல வெளம்பர இடவேளையா எட்டியெல்லா பாக்குறீங்க..” என்றவாறு உணவுண்ண,
” இல்லைடா அந்த வில்லி மீனாட்சியம்மா இல்ல, அது ஸ்டெயிலா பாத்துட்டே இப்போ தான் படியிறங்க ஆரம்பிக்குது, அதுக்குள்ளாற அடுத்த ஈடு இட்லி ஊத்திட்டு பொழக்கட பக்கமா , நாய்ங்கள அவுத்து விட்ருவேன் என்றவாறு வேகமாக சென்றார்.
மொள்ளமா போங்க அத்த, அந்த மீனாட்சியம்மாக்கு ஒரு ஃபோன் கால் வந்தது, அத்தோட விளம்பர எடவேள விட்டுடங்கா.. எனவும்.
அட பாவிங்களா அந்த மாடிப்படி லொக்கஸனுலேயே இன்னிக்கு கதை முழுசாய் முடிச்சீருவானுங்க போலவே என அங்கலாய்த்தவாறு பின்புறமாய் சென்று வந்தவர்,
“அண்ணாச்சி நீங்க சாப்பிட்டு போட்டு, உறங்க போய்டாதீங்க உங்கட்ட ஒரு விசயம் பேசனும்னு உங்க மாப்பிள்ளை சொன்னாரு என்று விட்டு அந்த பெரிய காம்பவுண்டுக்குள் இருந்த தன் வீடு நோக்கிச் சென்றார் .
தன் மகள் பாத்திரங்கள் எடுத்துக் கொண்டு சமயலறை நோக்கி செல்வதைக் கண்ணுற்று திரும்பி தன் சின்ன மகள் தனது அறைக்குள் அமர்ந்து ஏதோ எழுதுவதைப் பார்த்தவர், ” வேந்தா! வார ஆவணில ஒனக்கும் நீலாக்கும் நிச்சயம் போல வச்சிடலாமா? உன் பரீட்சை பாஸூ ஆகுறதெல்லா அப்புறமா பாத்துக்கிடலா” எனவும்
ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தான், ” ஏன் மாமா என்ன அவசரம், எனக்கு இருபத்தி ஏழாகட்டும், நீலுக்கும் வயசு இருவத்தி மூனு வந்திடும். என்று தானே சொன்னீங்க.”
” ஆங். அது , நம்ம ஜோசியரு பாக்க போனேன். அவர் தா சொன்னாரு. நீலுக்கு கட்டாயக் கல்யாணம் ஆகற யோகம் இருக்காம். அது.. நாலாறு மாசம் கிரகம் வேற செரியில்லையாம்.. அதான் யோசனையா இருக்கு. ”
நாயகன் ஆடுவான்..