(20)
ஒரு வழியாக விமானம் தரை இறங்க மூவருமாக பெட்டி படுக்கையுடன் வெளியே வந்தார்கள். அக்டோபர் மாதம் என்பதால் ஏழு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கி இருந்தது.
இங்கிருந்து வீட்டிற்குச் செல்ல குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்களாவது எடுக்கும். இதில் அதீத போக்குவரத்து நெரிசல் இருந்தால் அவ்வளவுதான்.
குழந்தையை ஒரு கரத்தில் ஏந்தியவாறு, மறு கரத்தில் பெட்டிகள் அடங்கிய தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு அபராசிதன் நடக்கத் தொடங்க, அவன் பின்னால் ஏதோ அடிமை போல வந்தாள் திகழ்வஞ்சி. வாகனங்களின் தரிப்பிடம் நோக்கி வந்தவன், அங்கிருந்த லெக்சஸ் லிஙீ 600 ஐ நெருங்கி அதன் டிரங்கைத் திறக்க, உள்ளே ஒரு கார் சீட் இருந்தது.
அதை வெளியே எடுக்க, விழிகளை விரித்தாள் திகழ்வஞ்சி. அவனுடைய வண்டிக்குள் கார் சீட் இருக்கிறது என்றால், குழந்தையை அழைத்து வருவோம் என்கிற நிச்சயம் அவனிடத்தே இருந்திருக்கிறது.
திகைத்து நிற்க,
“என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் ஒன்றை முடிக்கவேண்டும் என்று நினைத்தால், அதில் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை திகழ்வஞ்சி. அமலனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பதை அறிந்த உடனேயே அவனுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டேன். இந்தக் கார் சீட் உட்பட. இவன் என் அண்ணனின் மகனாக இருந்தால், எப்படியும் இங்கே அழைத்து வந்து விடுவது என்பதில் உறுதியாகவும் இருந்தேன்…” என்றவன் கார் சீட்டை பின் இருக்கையில் வைத்து அதில் குழந்தையையும் இருத்தி, அதற்கான பட்டியைப் போட்டு விட்டு நிமிர, இவளோ அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தாள். பெட்டிகளை டிரங்கில் ஏற்றிவிட்டுத் திரும்பியவன்,
“புறப்படலாமா? இல்லை இங்கேயே நிற்கப் போகிறாயா?” அவன் கேட்கப் பதில் சொல்ல முடியாமல், முன்னிருக்கையில் வந்து அமர்ந்தவள் இருக்கைப் பட்டியை இடது கரத்தால் இழுக்கத் தொடங்கியவள், மார்பு வலிக்க, உடனே வலது கரத்தால் இழுத்துப் போட முயன்ற நேரம், அவளுக்கு உதவிக்கு வந்தான் அபராசிதன்.
தானே இருக்கை வாரை இழுத்து அவள் இடை நோக்கி எடுத்துச் சென்று கொளுவி விட, அவனுடைய அந்த நெருக்கத்தில் ஒரு கணம் திக்குமுக்காடிப் போனாள் திகழ்வஞ்சி.
அதுவும் அவனுடைய உடல் சூட்டையும், அவனுடைய ஆண்மை வாசனையையும் நுகர்ந்து கொண்டவளுக்கு இதயத்தில் இனம்புரியாத ஒரு தவிப்பு. அந்தத் தவிப்பு கொடுத்த வியப்பில் இரு விழிகளையும் விரித்து அவனைப் பார்க்க, அவனும் இருக்கை வாரைப் போட்டுவிட்டு நிமிர்ந்து அவளைத்தான் பார்த்தான். அந்த நொடி இரண்டு கண்களும் ஒன்றை ஒன்று சந்திக்கச் சட்டென்று இருவருக்கும் உலகம் தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு.
அந்த நீண்ட பெருவிழிகளைக் பார்த்தவனால் அத்தனை சுலபத்தில் அங்கிருந்து தன் விழிகளைப் பிரித்தெடுக்க முடிந்திருக்கவில்லை. ஆழ் கடலில் தோன்றிய சுழியில் சிக்கிச் சுழல்வது போல, அந்த விழிகள் அவனை இழுத்து முழுங்குவது போலத் தோன்ற, அப்படியே சுருண்டு அந்த விழிகளுக்குள் நுழைந்து காணாமல் போவது போன்ற உணர்வில் திணறிப் போனான் அபராசிதன்.
ஒரு கணத்தில் அனைத்தும் மறந்து போனது. அமலன், அவன் வாழ்க்கையில் நடந்தது, இவள் செய்த அநீதி அனைத்தும் தொலைந்து போனது. மாயக்காறி. அப்படி என்னதான் அந்த விழிகளில் வைத்திருக்கிறாளோ? குழம்பியவன், இமை தட்டி விழித்து, தான் நிற்கும் நிலை புரிய அவசரமாக அவளை விட்டு விலகிக் கொண்டான்.
மனமோ குழப்பத்தில் தவித்தது,
அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது. அல்லது அவள் ஏதோ மாய தந்திரம் செய்கிறாள். இல்லை என்றால், இப்படி அவளைப் பார்க்கும் போதெல்லாம் செயல் மறந்து போகமாட்டான். சும்மா சொல்லக் கூடாது இவள் ஆண்களை மயக்கும் வித்தையை நன்றாகவே கற்று வைத்து இருக்கிறாள். எண்ணியவனின் உள் மனது ஏனோ அதை மறுத்தது.
அபராசிதன் சுலபமாகவே பெண்களின் போக்கைக் கண்டுபிடித்து விடுவான். பல்கலைக் கழகத்தில் படித்த போதும் சரி, மருத்துவனாகப் பணியாற்றுகிற போதும் சரி, பெண் தாதிகளும், பெண் மருத்துவர்களும் அவனைத் தம் தேவைக்காக நெருங்குவது உண்டு. அதனால் அவர்களின் கண்ணசைவும், உடல் மொழியும் வைத்து அவர்கள் எந்த நோக்கத்தில் நெருங்கி வருகிறார்கள் என்பதைச் சுலபமாகவே கண்டுபிடித்து விடுவான். அந்த நெருக்கம் உடல் தேவைக்கானதா, இல்லை இவனை வலைவிரித்துப் பணம் பறிக்கப் போடும் திட்டமா என்பதைச் சிரமமின்றியே கண்டுபிடித்து விடுவான். ஆனால் இவளிடம் மட்டும் அது நடக்க மாட்டேன் என்கிறது. அவளைப் பார்த்தால் இவன்தான் தொலைந்து போகிறான். இப்போது கூட அவளுடைய விழிகளைக் கண்டதும் எல்லாம் மறந்து போனது. அதுவும் அந்த விழிகளில் எந்தத் தவறும் தெரியவில்லை. இந்த விழிகளுக்கு உரியவள் எப்படிக் கெட்டவளாக இருக்க முடியும். அந்தப் பார்வையில் நேர்மை இருந்தது. உண்மை இருந்தது. எந்த இடத்திலும் அவனைத் தன் பக்கமாக ஈர்க்கும் வகையில் அவள் நடந்து கொண்டதாகத் தெரியவில்லையே. ஒரு வேளை அவனுடைய கணிப்பு தவறோ? குழம்பிப் போனான் அபராசிதன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான பெரிய வீட்டின் முன்பாக அவனுடைய கார் வந்து நின்றது. வீட்டைச் சுற்றி மின்விளக்குகள் ஒளிர்ந்து அந்த வீட்டின் அழகைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆறு வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்த கூடிய அளவுக்கு முன்பாதை. கூடவே மூன்று வண்டிகளை உள்ளே விடுவதற்குக் கார் கராஜ். மூன்று அடுக்குகள் கொண்ட நவீன முறையில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீடு. சுத்தவரப் பச்சைப் பசேல் என்று புற்தரை. அது அளவாக வெட்டப்பட்டுப் பச்சைக் கம்பளம் விரித்தது போல அத்தனை அழகாக இருந்தது. இடை இடையே சூரிய சக்தியை உள் எடுத்து அதன் மூலம் இயங்கிப் பாதை காட்டும் விளக்குகள்.
உயர்தர வர்க்கம் வசிக்கும் வீடு என்று பார்த்ததும் சொல்லிவிடலாம். வியந்து பார்க்கையில், அவளுடைய இருக்கைப் பட்டியைக் கழற்றி விட்டவன், வெளியேறிப் பின்னால் சென்று ஆராவமுதனைப் பார்க்க அவன் நல்ல உறக்கத்திலிருந்தான்.
அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தவன், அவள் பக்கத்துக் கதவையும் திறந்து,
“வா” என்றதும் மெதுவாக வண்டியை விட்டு வெளியே வந்தாள் திகழ்வஞ்சி. அவள் பத்திரமாக இறங்கியதை உறுதிசெய்து கொண்டவன் முன்னால் நடக்க, இவளோ அந்த வீட்டையும் சுத்தவர இருந்த காட்சிகளையும் கண்டு வியந்தவாறு அவன் பின்னால் சென்றாள்.
வீட்டுக் கதவுக்கு இலக்கத்தினாலான கடவுச் சொல் போட்டால் திறந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்க, அதில் அபராசிதன் ஏதோ சில இலக்கங்களை அழுத்த, கிளிக் என்கிற சத்தத்தோடு கதவு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்த திகழ்வஞ்சி வீட்டின் உள் அமைப்பைக் கண்டு வாயைப் பிளந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
அத்தனை அழகாக இருந்தது உள்ளே. திரைப்படங்களில் பார்த்த காட்சி நிஜமாக விரிந்ததில் வியப்புதான்.
“உனக்குப் பிறகு வீட்டைச் சுற்றிக்காட்டுகிறேன். இப்போதைக்கு வா, உன் அறையைக் காட்டுகிறேன். முதலில் நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.” என்றவாறு அவளை ஒரு பக்கமாக அழைத்துச் சென்றவன், அங்கிருந்த ஒரு பொத்தானை அழுத்த, மின்தூக்கி வந்து கதவைத் திறந்தது.
வீட்டிற்குள்ளேயே மின்தூக்கியா திகைத்துத் தான் போனாள் திகழ்வஞ்சி. அவளையும் ஏற்றிக் கொண்டு இரண்டாம் தளத்திற்கு வந்தான்.
இரண்டாம் தளமும் மிகப் பிரமாண்டமாக இருந்தது. அதில் நிறையக் கதவுகள். அதில் ஒரு கதவைத் திறந்தவன்,
“இதுதான் உன்னுடைய அறை…” என்றவாறு உள்ளே சென்று குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான்.
“அதோ அது குளியலறை…” என்று கைகாட்டி விட்டு, மறுபக்கமாக நடந்து சென்று, அங்கிருந்த ஒரு கதவைத் திறந்துகொண்டே திகழ்வஞ்சியைப் பார்த்தான்.
“இது ஆராவுக்காக ஏற்பாடு செய்திருக்கிறேன். அவனுக்காகச் சில தளபாடங்கள் தருவிக்க நினைத்தேன். இன்னும் வந்து சேரவில்லை. அது வரை இவன் உன் கூட இங்கேயே இருக்கட்டும்…” என்றவன் உள்ளே செல்ல, இவளும் அவன் பின்னால் சென்று பார்த்தாள்.
அதிகம் பெரிதில்லாத அளவான அறைதான். சுவர் முழுக்கக் குழந்தைகள் இரசிக்கும் வகையில் சித்திரம் வரையப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது அந்த அறை. இன்னும் எந்தத் தளபாடங்களும் போடப்படாததால், அறை பெரிதாகத் தெரிந்தது. கூடவே நான்கைந்து பெட்டிகள் முழுக்க அறிவூட்டும் வகையில் விளையாட்டுப் பொருட்கள்.
“இந்த அறை ஆராவுக்குப் போதும்தானே…?” அவன் சந்தேகம் கேட்க,
“அவனுக்கு எதற்குத் தனி அறை… அவன் என் அறையிலேயே தங்கட்டுமேன்.” என்று தயக்கத்தோடு சொல்ல, மறுப்பாகத் தலையசைத்தான் அபராசிதன்.
“அவனுக்குத் தனி அறை இருப்பது நல்லது. எந்த நேரமும் நான் உன்னுடைய அறைக்கு வந்து கொண்டிருக்க முடியாது அல்லவா…?” என்றவன், அந்த அறையிலிருந்த இன்னொரு கதவைத் திறக்க, நான்கடி அகலமான தாழ்வாரம் தெரிந்தது. அவன் பின்னால் வந்த திகழ்வஞ்சி அகன்ற தாழ்வாரத்தையும் அதற்கு மறு பக்கத்திலிருந்த கதவுகளையும் கண்டு வியக்க, முன்னால் இருந்த அறையைச் சுட்டிக் காட்டி,
“இது என்னுடைய அறை…” என்றவாறு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ஓக்கே…! நீ போய்க் கொஞ்சம் ஓய்வெடு… நான் போய் உன்னுடைய பெட்டிகளை எடுத்து வருகிறேன்…” சொன்னவன் ஐந்து நிமிடங்களில் பெட்டிகளை எடுத்து வந்து அவளுடைய அறையில் வைத்தான்.
“ஆராவமுதனின் பொருட்களை ஓரமாக வைத்துவிடு, அவனுடைய அறையில் பிறகு அடுக்கிவிடலாம்…” என்றவன் கதவை நோக்கிச் சென்று நின்று திரும்பிப் பார்த்து,
“எதைப் பற்றியும் யோசிக்காமல் ஓய்வெடு…” சொன்னவன், கடைசியாகத் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றினான்.
ஒரு சில நாட்களாகச் சரியான உறக்கமில்லை. இப்போது ஓய்வெடுத்தால்தான் உண்டு. இப்போதே நேரம் பத்து மணி. காலை ஏழுமணிக்கு தயாராகி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் முக்கியச் சத்திர சிகிச்சை இருக்கிறது.
எண்ணியவாறே, குளியலறைக்குள் குளித்து விட்டு வெளியே வந்தவன், ஐந்து முப்பதிற்கு எழுப்பொலியை வைத்துவிட்டுப் படுக்கையில் சரிந்து விழிகளை மூட, மனக் கண்ணில் மின்னலாக வந்து நின்றாள் திகழ்வஞ்சி.
இந்த விநாடிவரைக்கும் அவளை எதற்காகத் தன்னோடு அழைத்து வந்தோம் என்று அவனுக்குத் தெரியவேயில்லை. அவளுக்கு ஆபத்தென்றால் எதற்காகப் பதறினோம் என்றும் புரியவில்லை. அவள் குழந்தையை அழைத்துச் செல் என்று சொன்னபோது, குழந்தையை மட்டும் அழைத்து வராமல், அவளையும் கூட்டி வந்ததற்கான காரணமும் புரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு வகையில் அவனுடைய நினைவுகளையும், சிந்தனைகளையும் அவள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறாள் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்தில்லை. இப்போது கூட உடல் அடித்துப் போட்டது போலக் களைப்பாக இருக்கிறது. உறக்கம் என்னை அணைத்துக் கொள் என்கிறது. ஆனாலும் அவனால் முடியவில்லை. அவளை நினைத்துக் கொண்டு தூக்கம் வராமல் படுத்துக் கிடக்கிறான்.
நீண்ட நேரம் விழிகளை மூடி உறங்க முயன்றவன், ஒரு கட்டத்தில் முடியாமல் எழுந்து அமர்ந்து விட்டான்.
எரிச்சலோடு கரத்தில் முகத்தைப் பதித்து சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், தன் மீதே எரிச்சல் கொண்டவனாக, ‘ம்கூம் இது சரிவராது.’ என்று எண்ணியவனாக அறையை விட்டு வெளியே வந்தவன், படிகளை நோக்கி நகரத் தொடங்க திகழ்வஞ்சியின் அறைக் கதவும் திறந்தது.
திரும்பிப் பார்க்க, வெளியே வந்தவள் அங்கே அபராசிதனை எதிர்பார்க்கவில்லை என்பது விரிந்த விழிகளிலிருந்து தெரிந்தது.
தலைக்குக் குளித்திருந்தாள் போல. தலையில் இருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் எதற்குத் தலைக்கு ஊற்றினாள்? யோசனையோடு அவளை ஏறிட, அவளும் தயக்கமாக அவனைப் பார்த்தாள்.
”சாரி… ஆராவுக்கு பால் வேண்டும்…” அவள் மெல்லிய தயக்கத்தோடு சொல்ல அப்போதுதான் அவளுடைய கரத்திலிருந்த பால்போத்தலைப் பார்த்தான் அபராசிதன்.
“ஆரா எழுந்து விட்டானா?” கேட்டவன் அவளுடைய அறையை எட்டிப் பார்க்க, அவனோ அவளுடைய கட்டிலின் மத்தியில் அமர்ந்தவாறு போர்வையோடு விளையாடிக்கொண்டிருந்தான்.
“ம்… இரவு விமானத்தில் வந்ததால் இன்னும் சாப்பிடவில்லை… பசிக்கிறது போல…” அவள் கூற,
“ஓ… அவன் இன்னும் இரவு சாப்பிடவில்லை அல்லவா…?” சொன்னவன், “சரி… தள்ளு…” என்றுவிட்டு உள்ளே சென்று கட்டிலிலிருந்த குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“வா…!” என்கிற கட்டளையோடு குழந்தையை ஏந்திக்கொண்டு மின்தூக்கியின் அருகே செல்ல,
“படிகளால் இறங்கலாமே. எதற்கு மின் தூக்கி?” என்றாள் தயக்கமாக.
“ம் படிகளில் ஏறி இறங்குவது உனக்கு நல்லதுதான்… ஆனால்… காயம் கொஞ்சம் ஆறும் வரைக்கும் மின்தூக்கிய பயன்படுத்து. அதற்குப் பிறகு படிகளை பாவித்துக் கொள்…” சொன்னவன், அவளோடு உள்ளே நுழைந்து கீழே வந்தான்.
குழந்தைக்காகப் புதிதாக ‘ஹைசெயர்’ எல்லாம் வாங்கி வைத்திருந்தான். அது ஒரு ஓரமாக இருக்க, ஒற்றைக் கரத்தால் அதைத் தூக்கி வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தவன் அதில் குழந்தையை இருத்திவிட்டுத் திகழ்வஞ்சியை நிமிர்ந்து பார்த்து,
“என் கூட வா…” என்றுவிட்டு சமையலறையைக் காட்ட அழைத்துச் சென்றான்.
பிரமாண்டமாகப் படு சுத்தமாக இருந்தது சமையலறை. இவள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு வர, அங்கிருந்த ஒரு கபேர்டின் முன்னால் வந்து நின்று அதைத் திறந்து காட்டினான்.
அங்கே ஆராவுக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவள் வியந்து பார்க்க,
“எப்போது ஆராவுக்கு வேண்டுமானாலும் இங்கிருந்து எடுத்துக் கொள்…” என்றவன் ஒரு பெட்டியை எடுத்து அதை உடைத்து அவளிடம் நீட்ட, நன்றியோடு பெற்றுக்கொண்டவள்,
“இதெல்லாம் எப்போது வாங்கி வைத்தீர்கள்?” என்றாள் திகைப்பாக.
“உன்னை இங்கே அழைத்து வருவது என்று முடிவுசெய்த உடனேயே, கமலாவிடம் சொல்லித் தேவையானதை வாங்கி வைக்கச் சொல்லி விட்டேன்…” என்றதும், கமலாவா? அது யார் என்பது போல அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி. அவளுடைய பார்வையை வைத்தே அவளுடைய கேள்வியைப் புரிந்து கொண்டவனாக,
“கமலா… அவர்கள்தான் இந்த வீட்டைப் பராமரிக்கிறார்கள்…” அவன் சொல்ல, காரணம் இன்றியே அவளுடைய இதயத்தில் நிம்மதி படர்ந்தது. அவனே நடந்து சென்று குழந்தைக்கு உணவு கரைக்க பாத்திரமும் எடுத்துக் கொடுக்க, நன்றியோடு வாங்கிக் கொண்டவள், அதில் குழந்தைக்குத் தேவைக்கு ஏற்ப உணவு மாவைப் போட்டு பாலூற்றிக் கலந்தெடுத்து, குழந்தையை நோக்கி வந்தாள்.
தன் தாயின் கையில் உணவிருப்பதைக் கண்ட ஆராவுக்கு வாய் முழுக்கப் பல்லானது. கால் கையை அடித்து, உணவைப் பறிக்க முயல, அதைக் கண்ட இருவருக்குமே புன்னகை மலர்ந்தத.
கழுத்தைச் சுற்றி விப் கட்டி, உணவை ஊட்டத் தொடங்க, நல்ல பசி போல, “மம்ம்ம்ம்ம்மா…” என்று எச்சில் தெறிக்க உணவை வரவேற்ற குழந்தை, உடனே விழுங்கிவிடடு அடுத்த வாய்க்காகக் காத்திருக்க, மீண்டும் குட்டிக்கரண்டியில் அள்ளி எடுத்த உணவைக் குழந்தையின் வாயில் வைக்க, குழந்தையோ அதை சப்புக்கொட்டிச் சாப்பிடத் தொடங்கியது.
அந்த அழகைக் கண்டு இரசித்த அபராசிதன்,
“இவன், சாப்பாட்டுப் பிரியன் போலவே…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
குழந்தைகளுக்குத்தான் இரு எதிர்த்துருவங்களையும் இணைக்கும் சக்தி இருக்கிறது போல. தற்காலிகமாக உள்ளே இருந்த கசப்பு காணாமல் போக,
“ம்… பிறந்த நாளிலிருந்தே நேரத்திற்கு அவனுக்குச் சாப்பாடு கொடுத்துவிட வேண்டும். இல்லை என்றால் போச்சு. ஊரையே கூட்டி விடுவான்… இதில் நடுச்சாமத்தில் எழுந்து பாலுக்காகக் கத்துவான். ஓடிப்போய் பால் கரைத்து எடுத்து வந்து அவனுக்குப் புகட்டுவதற்குள் ஊர் முழுவதையும் எழுப்பிவிடுவான்” என்றான் திகழ்வஞ்சி அடுத்த வாயைக் குழந்தைக்கு ஊட்டியவாறு.
“ம்… அதுதான் எனக்குத் தெரியுமே…” என்றவன், குழந்தையின் உதட்டோரம் வழிந்த உணவுத் துகளைக் குனிந்து சுட்டுவிரலால் துடைத்து விட்டவன் எதுவோ உறுத்த அவளைப் பார்த்தான்.
“பால் கரைத்துக் கொடுத்தாயா? ஏன்? நீ கொடுக்கவில்லை?” அவன் கேட்க, புன்னகையோடு அவனைப் பார்த்தவள்,
“ம்… நான்தான் கரைத்துக் கொடுத்தேன்…” என்றாள் அடுத்த வாயை ஊட்டியவாறு.
“நான் கேட்பது நீ ஏன் தாய்ப்பால் கொடுக்க வில்லை என்று…” அவன் அழுத்தமாகக் கேட்க, அடுத்த வாயைக் கரண்டியில் அள்ளி எடுத்தவளின் கரம் அப்படியே நின்றுவிட்டது.
அபராசிதனோ, குழந்தை ஆவென்று வாயைப் பிளப்பதையும், அவள் ஊட்டாமல் அப்படியே நிற்பதையும் கண்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஏய்… என்னாச்சு…? குழந்தை ஆவென்கிறான் பார்…” அவன் சொல்ல, திடுக்கிட்டு சுயத்திற்கு வந்தவள், அவசரமாகக் குழந்தையின் வாயில் உணவை ஊட்ட, இப்போது அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்ல வில்லையே திகழ்வஞ்சி…?” என்றான் யோசனையாக. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? திணறியவள்,
“அது… நான்… வந்து… அவனுக்குத் தாய்ப்பால் கொடுக்கவில்லை?” என்றாள் அவன் முகம் பார்க்க முடியாமல். அதைக் கேட்டு அதிர்ந்தவன்,
“வட்…? பட் வை…? குழந்தைக்குத் தாய்ப்பால் எத்தனை முக்கியம் என்று உனக்குத் தெரியுமா? தெரியாதா? ஒரு குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியம். அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…” என்று கோபமாகச் சொன்னவன், அடுத்த கணம் இகழ்ச்சியாக உதடுகளை வளைத்தான்.
“ஓ… புரிகிறது… தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும் என்று நினைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவளா நீ…?” என்றான் ஏளனமாக. இவளோ பொறுமையிழந்தவளாக அவனைப் பார்த்து,
“குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்பதற்காக ஒரு பெண் தாயில்லை என்று ஆகிவிடாது அபராசிதன்… எனக்குக் கொடுக்கத் தோன்றவில்லை, கொடுக்கவில்லை…” என்றவளை ஏளனத்துடன் பார்த்தவன்,
“தாயிருந்தும், தாய்ப்பாலைக் கொடுக்க மறுப்பது எத்தனை பெரிய அநீதி. அது குழந்தைக்குச் செய்யும் துரோகம் தெரியுமா. தாயிடம் பால் அருந்துவது குழந்தையின் உரிமை. அதைக் கொடுப்பது அன்னையின் கடமை. அதுதானே இயற்கை. அதை மறுப்பது எத்தனை பெரிய அறிவீனம். அது குழந்தைக்கும் தாய்க்குமான உறவைப் பலப்படுத்தும் என்பது உனக்குத் தெரியுமா இல்லையா? அது சரி.. பணத்துக்காக குழந்தையைக் கருவில் சுமந்தவள்தானே நீ. நீ ஏன் குழந்தையின் நன்மையைப் பற்றி யோசிக்கிறாய்…” என்றவனை அடிபட்ட பாவனையுடன் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றாலும், என்னுடைய உயிரும் உலகமும் இவன்தான் அபராசிதன். அதை வைத்து என் தாய்ப்பாசத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள்…” நெஞ்சம் நிறைந்த வலியோடு, சொன்னவள், உண்டுவிட்ட களைப்பில் உறங்கத் தயாரான குழந்தையைத் தூக்க முயல, உடனே குறுக்கே வந்து தடுத்தான் அபராசிதன்.
“தள்ளு, நான் தூக்கி வருகிறேன்…” சொல்ல அவனை வெறித்துப் பார்த்தவள்,
“தேவையில்லை… நானே தூக்கிவருகிறேன்…” என்று அவனுடைய முகம் பார்க்காமல் குழந்தையைத் தூக்க முயல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்டான் அபராசிதன். ஒருவித விதிர் விதிர்ப்புடன் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ,
“போதும் நிறுத்து… அதுதான் நான் தூக்கி வருகிறேன் என்று சொன்னேனே…” அழுத்தமாகச் சொன்னவன், குழந்தையைத் தூக்கிச் சமையலறைக்குக் கொண்டு சென்றான்.
அவனுடைய வாயைக் கழுவித் துடைத்துவிட்டு, இன்னும் மேசையினருகே நின்றிருந்தவளைப் பார்த்து,
“எவ்வளவு நேரமாக இங்கேயே நிற்பதாக உத்தேசம்?’ கேட்டுவிட்டு மின்தூக்கியை நோக்கிச் செல்ல, வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றாள் திகழ்வஞ்சி.
குழந்தையை அவளுடைய படுக்கைக்கு அருகேயிருந்த தொட்டிலில் கிடத்தி விட்டு, அவளை ஏறிட்டவன்,
“எதைப் பற்றியும் யோசிக்காமல் வலி நிவாரணியைக் குடித்துவிட்டுத் தூங்கு… நாளை மாலை அக்காவும் அத்தானும் இவனைப் பார்க்க வருகிறார்கள்…” என்றதும் அதிர்ந்தாள் திகழ்வஞ்சி.
‘அதற்குள்ளாகவா. ஐயோ இன்னும் இவன் சாட்டையாக வீசும் வார்த்தைகளையே தாங்க முடியவில்லையே. இதில் அவனுடைய அக்கா வேறா? அவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ…’ நடுங்கினாள் திகழ்வஞ்சி. பேசாமல் ஆராவையும் அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணாத தேசத்திற்கு சென்றுவிடலாமா என்று கூடத் தோன்றி விட்டது அவளுக்கு. நல்லவேளை அவனுக்குத் தாய் தந்தை யாருமில்லை. இருந்திருந்தால் அவள் நிலை என்னாகும்? நினைக்கும் போதே உதறியது..
எது எப்படியோ, சமாளித்துத்தானே ஆக வேண்டும். வேறுவழி? வந்தமர்ந்தவளுக்கு நாளையப் பொழுதை நினைக்கும் போதே கதிகலங்கியது.
சோர்வோடு நடந்து சென்று கைப்பையிலிருந்த மாத்திரையை எடுத்து விழுங்கிவிட்டுத் படுக்கையில் சரிந்தாள்.
“ஷ்…” வலித்த காயத்தை அழுத்திக் கொடுத்தவள், முகச் சுருக்கத்தோடே விழிகளை மூட, அவளுடைய அனுமதியின்றியே அபராசிதன் வந்து நின்றான்.
ஏன் அவனைப் பத்தோடு பதினொன்றாக அவளால் எண்ண முடியவில்லை? அவன் என்னதான் அவளை வெறுத்து ஒதுக்கினாலும், யாரிடமும் உணராத புது வித உணர்வு அவனிடம் தோன்றுகிறது. மனது அவனைக் கண்டால் சிலிர்க்கிறது. நெருங்கினால் தவிக்கிறது. இளமை இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று அவளிடம் சொல்கிறது. உடல் அன்னியப் பட்டதாக அவளை விட்டுத் தள்ளி நிற்கிறது. இதற்கான காரணம் என்ன என்று சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளே உருவாகும் அந்தத் தவிப்பு ஒரு பக்கம் கசப்பைக் கொடுக்கிறது. மறு பக்கம் இனிக்கிறது.
இரண்டுக்கும் மத்தியில் சிக்கித் திணறியவளுக்கு தூக்கம் சுத்தமாக வர மறுத்தது. திரும்பித் திரும்பிப் படுத்தவளுக்கு, குழந்தையின் சூடு தேவைப்பட, சற்று எழுந்து பார்த்தாள். ஆரா நல்ல உறக்கத்திலிருந்தான்.
இதுநாள் வரை குழந்தையைப் பிரிந்து அவள் தனியாகப் படுத்ததில்லை. அதற்கு மேல் தயங்காமல் எழுந்தவள், குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கட்டிலில் கிடத்திவிட்டு, குழந்தையை அணைத்துக்கொண்டு படுக்க, குழந்தையோ அந்த உறக்கத்திலும் திரும்பி அன்னையின் மார்புச் சூட்டில் முகத்தைப் புதைத்து ஆழ்ந்து உறங்கத் தொடங்கியது.
இதோ இந்தப் பாசம், இந்தப் பிணைப்பு, இந்த அன்பு இருக்கும் வரைக்கும் அவளையும், குழந்தையையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. பிரிக்கவே முடியாது. இவனுக்காக எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்வேன்.. தாங்குவேன்… உறுதியாக நினைத்தவள், குழந்தைக்கும் தனக்குமாகத் தடித்த போர்வையைப் போர்த்தி குழந்தையை அணைத்தவாறு உறங்கிப் போக, அந்த நிலையிலும் ஒற்றை வரிக் கவிதையாய் அபராசிதன் வந்து போனான்.
அருமையான பதிவு 😍😍😍😍.
🙄🙄🙄🙄🙄🙄🙄 பால் கொடுக்கலையா திகழ்????🤔🤔🤔.
எனக்கு டவுட்டா இருக்கே???? சம்திங் ராங்…..
ஒரு டவுட்டும் வேணாம்யா. எல்லாம் நாகரிகம் படுத்துற பாடு
wow awesome
நன்றி நன்றி
ஒருவேளை இவள் திகழ்வல்லபையா இருக்குமோ🤔🤔🤔
ஆயா வச்ச பாயா மேல சத்தியமா இது திகழ்தான்