Fri. May 23rd, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 37/38

(38)

ஜெயராம் முடிந்த வரைக்கும் மீநன்னயாவின் மனத்தை மாற்ற முயற்சித்துப் பெரும் தோல்வியைத் தழுவிக் கொள்ள, எப்படி அவளைத் தடுப்பது என்பது புரியாமல் அன்று இரவும் அவருக்குத் தூங்கா இரவாகிப் போனது. அதிகாலையில்தான் சற்று விழிகளை மூடினார் ஜெயராம்.

ஆனாலும், அதிகம் அவரைத் தூங்க விடாது யாரோ கதவைத் தட்ட, அப்போதுதான் அயர்ந்த போகத் தொடங்கியவர் திடுக்கிட்டு விழித்து நிமிர்ந்து பார்த்தார். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, சோர்வுடன் எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தார். அங்கே நின்றிருந்த மாதவியைக் கண்டதும் முதலில் அதிர்ந்த பின் திகைத்து இறுதியில் கோபத்தில் முகம் கடினமுற,

“இங்கே எங்கே வந்தாய்…” என்றார் கடுமையாய். இவளால் அல்லவா இத்தனை சிக்கல்களும். இத்தனை காலங்கள் அவரோடு வாழ்ந்தவளுக்கு அவரைப் பற்றித் தெரியாமல் போனதே. அவரைப் பற்றிய சந்தேகம் தோன்றிய அந்த விநாடியே விபரங்களைக் கேட்டிருந்தால், நிச்சயமாக மறைக்காமல் கூறியிருப்பாரே. போதாததற்கு தம்பியின் உதவியோடு ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அல்லவா பாழாக்கிவிட்டாள். நினைக்க நினைக்கத் தாளவில்லை அவருக்கு.

தன் கணவனின் கோப முகத்தைக் கண்ட மாதவிக்கும் கண்கள் கலங்கிப் போனது. இதுவரை ஜெயராம் அவளைக் கோபித்ததாகச் சரித்திரமே கிடையாது. ஆனால் இப்போது, தான் செய்த காரியத்தால், அவருடைய அன்பை மொத்தமாக முறித்து விட்டோம் என்பதைப் புரிந்துகொண்ட போது இதயமே நின்றுவிடும் போலத் தோன்றியது மாதவிக்கு.

பன்னிரண்டு வருடங்கள் அவரோடு வாழ்ந்தவளுக்கு அவரைப் பற்றிய தெரியாதா. வியாபார விடையங்களாகப் பல தேசங்கள் சென்று வருபவர். அவருக்கு வேறு பெண்ணோடு செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்காமலா இருந்திருக்கும். ஆனால் இதுவரை மாதவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் நிமிர்ந்து கூடப் பார்த்தது கிடையாது. அப்படிப்பட்டவர், தன்னைவிட அதிக வயது குறைந்த ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கிறார் என்று யாரோ ஒருத்தர் சொன்னதை நம்பித் தப்பாக நினைத்ததோடு, அவருக்கும் தண்டனையும் கொடுக்கவேண்டும் என்று எண்ணினாரே. எத்தனை பெரிய தவறு அது.

ஜெயராமன், ஒருத்தியைக் காதலித்து அவளை ஏமாற்றிவிட்டு மாதவியை மணந்திருந்தால், எக்காலத்திலும் ஜெயராமனின் முகத்தில் விழித்தே இருந்திருக்கமாட்டார். ஆனால், இறந்துவிட்டதாக நினைத்த காதல், இப்படி இன்னொரு உருக்கொண்டு வரும் என்று கற்பனையிலும் எண்ணியிராத வேளையில், மகள் உருக்கொண்டு வந்தால், யார்தான் தாங்கிக் கொள்வார்கள்.

தன் கணவனின் நிலையைக் காதல்கொண்ட அவர் உள்ளம் முழுதாகப் புரிந்துகொள்ள, செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய, உடனே இங்கே புறப்பட்டு வந்துவிட்டாள் மாதவி.

இப்போது கூட, ஜெயராமனின் கோப முகத்தைக் கண்ட மாதவிக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. என்ன சொன்னாலும் அவள் செய்தது தவறுதானே. தவிப்புடன் அவரைப் பார்த்து

“ஜெய்…” என்று எதையோ கூற வரத் தன் பற்களைக் கடித்த ஜெயராம்,

“தயவு செய்து என்னை அப்படிக் கூப்பிடாதே… அப்படிக் கூப்பிடும் தகுதியை நீ இழந்து விட்டாய்…” என்றவரை வலியோடு ஏறிட்ட மாதவி,

“நான் செய்தது தவறுதான்… ஒத்துக்கொள்கிறேன்… ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறாள் என்று எனக்கெப்படித் தெரியும்… நீங்கள் இப்படி ஒரு இளம் பெண்ணோடு நெருங்கிப் பழகுகிறீர்கள் என்பதைத் தெரிந்ததும்…” என்று முடிக்க முடியாமல் திணற, ஜெயராமோ மாதவியை ஏளனத்துடன் பார்த்து,

“சுலபமாகவே என்னைத் தப்பாக எடைபோட்டுவிட்டாய் அப்படித்தானே… அது எப்படி மாதவி… இத்தனை காலம் உன்னோடு வாழ்ந்திருக்கிறேன்… என்றாவது ஒரு நாள், ஒரு விநாடி கூட, உனக்குத் துரோகம் செய்யத் துணிந்திருக்கிறேனா… அப்படியிருக்கையில் உன்னால் எப்படி அத்தனை சுலபமாக என்னைச் சந்தேகப்பட முடிந்தது… என்னை மட்டுமா… என் மகளின் வாழ்க்கையையும் சேர்த்துப் பாழாக்கிவிட்டீர்களே… சே… இந்த ஜென்மத்தில் என்னால் உங்களை மன்னிக்கவே முடியாது…” என்று சீற,

“ஜெய்.. தயவு செய்து என் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்களேன்… இப்போது நான் ஒரு ஆணோடு அடிக்கடி வெளியே சென்றால், நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்களா…? தப்பாக யோசிக்க மாட்டீர்களா?” என்றார் பரிதவிப்பாக.

“நோ… நிச்சயமாகத் தப்பாக நினைத்திருக்க மாட்டேன்… ஏன் ஒரு ஆண் உன் கரத்தைப் பற்றியிருந்தால் கூடச் சந்தேகப்பட்டிருக்கமாட்டேன்… ஏன் என்றால் என் மாதவியைப் பற்றி எனக்குத் தெரியும்” என்கிற பதில் ஜெயராமிடமிருந்து வர, ஆடிப்போனாள் மாதவி.

“ஜெய்…” என்று வார்த்தைகள் வராமல் தடுமாற, இப்போதும் மறுப்பாகத் தலையை ஆட்டி,

“நிச்சயமாகச் சந்தேகப்படமாட்டேன் மாதவி… உன்னைச் சந்தேகப்படுவது என்னைச் சந்தேகப்படுவது போல… அப்படியே உறுத்தியிருந்தாலும் உன்னிடம் விபரம் கேட்டிருப்பேன்… நீ சொல்வதை நம்பியும் இருப்பேன்.. ஏன் என்றால் என் மனைவி எப்படிப் பட்டவள் என்று எனக்குத் தெரியும்… ஆனால் அதே நம்பிக்கை உன்னிடமும் இருந்திருந்தால், நான் சந்தோசப்பட்டிருப்பேன்…” என்று அவர் வேதனையுடன் கூற,

“ஓ… ஜெய்… ஐ ஆம் சோ சாரி… உங்களுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையில் ஏதோ உறவிருக்கிறது என்பதை அறிந்த போது, எனக்கு என் அப்பாவின் நினைவுதான் வந்தது ஜெய். அவரைப் போலத்தான் நீங்களும் என்று…” என்றவருக்குக் குரல் அடைத்துக் கொண்டு வந்தது. அவளுக்குத் தன்னை நினைத்தே அருவெறுத்துப் போனது.

தன் கணவனைப் போய்த் தந்தையோடு ஒப்பிட்டுவிட்டாளே. இதை விட ஒரு அவமானம் தன் கணவனுக்குக் கொடுத்திருக்க முடியுமா… வேதனையுடன்,

“நீங்கள் மட்டும் என்னை நம்பவில்லையே… இப்படி ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரிந்ததும், என்னிடம் வந்து சொல்லியிருக்கலாம் அல்லவா… சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காதே… ஏன் சொல்லவில்லை… நான் தப்பாக எடுத்துக்கொள்வேனோ என்கிற பயம்தானே அதற்குக் காரணம்… உங்களுக்கும் என் மீது முழு நம்பிக்கை இருந்திருந்தால், நான் உங்கள் மகளை என் மகளாக ஏற்றுக்கொண்டிருப்பேன் என்று யோசிக்கவேயில்லயே…” என்று அழுதவாறு கேட்க, ஒரு கணம் பதில் சொல்ல முடியாது அமைதி காத்தார் ஜெயராம்.

பின் அவளை நிமிர்ந்து பார்த்து,

“சொல்லியிருப்பேன் மாதவி… அதற்கான சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சரியாக இருந்திருந்தால் மெதுவாகச் சொல்லியிருப்பேன்… முதலில் மீநன்னயாவை கனடா எடுப்பித்தபின் உன்னிடம் அழைத்து வரலாம் என்று நினைத்திருந்தேன்… அவள் முகத்தைக் கண்டால் நிச்சயமாக உன் மனம் மாறும் என்று நினைத்தேன்… ஆனால்…” என்று அவர் கலங்கும்போதே,

“ராம்…” என்கிற இனிமையான பெண் குரல் மாதவியின் செவியைத் தீண்டக் கலக்கம் சற்றும் குறையாதவராகத் திரும்பிப் பார்த்தாள் மாதவி.

அங்கே அழுது அழுது முகம் சிவந்திருந்தாலும் தன் அழகில் சற்றும் குறையாமல் நின்றிருந்த அந்த இளம் பெண்ணைக் கண்டதும், அதுதான் மீநன்னயா என்று புரிந்துபோனது மாதவிக்கு.

அவள் தன் கணவனின் முன்னால் காதலியின் மகள் என்பதையும் மீறி, தங்களின் அவசரப் புத்தியால் பலியானவள் என்கிற கழிவிரக்கமே அதிகமாகிப் போக, இரண்டெட்டில் மீநன்னயாவை நெருங்கிய மாதவி, அவளுடைய கரங்களைப் பற்றித் தன் கரங்களுக்குள் வைத்துக் கண்ணீர் கன்னத்தில் வழிந்து செல்ல,

“சா… சாரிம்மா… ரியலி ரியலி சாரி… எனக்கு நல்லது செய்வதாக நினைத்து என் தம்பி உன் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டான்… தயவு செய்து எங்களை மன்னித்துவிடுமா…” என்று கலங்கித் தவிக்க, இவள்தான் மலைத்துப்போய் நிற்கவேண்டியதாயிற்று. அதிகாலையில் இத்தகைய ஒரு காட்சியை அவள் கனவிலும் நினைக்கவில்லை.

தன் கரங்களைப் பற்றியவாறு கண்ணீர் விடும் மாதவியைக் கண்டு கலங்கித்தான் போனாள் மீநன்னயா. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்தவாறு ஜெயராமை ஏறிட, அவரோ வெறுப்புடன் மாதவியைத்தான் வெறித்துக்கொண்டிருந்தார்.

அவளால் எத்தனை பேருக்கு எத்தனை சிக்கல். ஜெயராமும் நிம்மதியாக இல்லை, அவர் குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இங்கே வராமலே இருந்திருப்பாள்… கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம். கண்கள் கலங்கத் தன் கரங்களைப் பற்றியவாறு நின்றிருந்த மாதவியை ஏறிட்டாள் மீநன்னயா.

அவரைப் புகைப்படத்தில்தான் பார்த்திருக்கிறாள். ராம் அவருடைய படத்தைக் காட்டும்போது அதில் தெரிந்த காதலைக் கண்டு வியந்திருக்கிறாள். நிச்சயமாக மாதவியில்லாமல் அவரால் இருக்க முடியாது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறாள். ஆனால் இப்போது, இவள் ஒருத்தியால், அந்த இரண்டு நல்ல உள்ளங்களும் கசப்பைச் சுமந்து நிற்கின்றனவே. இவளுக்குத்தான் குற்ற உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

பெரு வலியுடன் தன் முன்னால் நின்றிருந்த மாதவியை ஏறிட்டவள்,

“மாதவிமா… என்னிடம் மன்னிப்பு வேண்டாதீர்கள்… நான்தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்… என்னால்தான் உங்கள் அழகான கூடு கலையும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் கவலைப் படாதீர்கள்… நான் மீண்டும் இலங்கைக்கே போக முடிவு செய்துவிட்டேன்… இனி நிச்சயமாக என்னால் உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ எந்தச் சிக்கலும் வராது… நான் சத்தியம் செய்கிறேன்… இனி ராம் வாழ்க்கையில் நான் வரவே மாட்டேன்…” என்று உறுதியுடன் கூறியவளைப் பதட்டத்துடன் பார்த்த மாதவி மறுப்பாகத் தலையசைத்து,

“இல்லை… இல்லை… அதெல்லாம் முடியாது… நீ எங்களை விட்டு எங்கும் போக முடியாது. இனி நீ எங்களோடுதான் இருக்கப்போகிறாய்… இனி எனக்கு இரண்டு குழந்தைகள் இல்லை… உன்னோடு சேர்த்து மூன்று…” என்று மாதவி உறுதியாகக் கூற, ஜெயராம் கூட நம்ப முடியாதவராகத் தன் மனைவியைப் பார்த்தார்.

மாதவியோ, திரும்பித் தன் கணவனைப் பார்த்து,

“என்ன ஜெய் இது… அவள்தான் ஊருக்குப் போகிறேன் என்கிறாள்… நீங்களும் சரி என்று தலையாட்டினீர்களா என்ன?” என்று கோபமாகக் கேட்டுவிட்டுத் திரும்பி மீநன்னயாவைப் பார்த்து,

“நான் சொல்கிறேன்… நீ எங்கும் போகக் கூடாது.. எங்கள் கூடக் கனடாவிற்கு வருகிறாய்…” என்றவர், பின் முகம் கசங்க,

“நான் மட்டுமல்ல, என் தம்பியும் தவறு செய்திருக்கிறான். அதற்குப் பிராயச்சித்தம் செய்யவேண்டாமா… தயவு செய்து நாங்கள் செய்த தவறை மன்னித்துவிடுமா…” என்று கையெடுத்துக் கும்பிட்டு வேண்ட, அதிர்ந்து போனாள் மீநன்னயா.

“அம்மா… என்ன இது… என் முன்னால் கையெடுத்துக் கும்பிடுகிறீர்களே…” என்று பதறியவாறு அவருடைய கரத்தைப் பற்றிக் கீழே இறக்கிவிட்டவள்,

“நான் உங்கள் கூட வருவது சரிவராதுமா… என்னால் மேலும் மேலும் சிக்கல்தான் வருமே தவிர, நிம்மதி வராது… ராமுடைய பெயர் கெட்டுப் போகும்… உங்கள் உறவினர்கள் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்… நான் இடையில் வந்தவள்… இடையிலே காணாமல் போவதுதான் சரி… இனியும் உங்கள் குடும்பத்திற்குள் நான் நுழைவது… சரிவராது.. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்…” என்று கெஞ்ச மறுப்பாகத் தன் தலையை ஆட்டினார் மாதவி.

“யார் சொன்னார்கள் சிக்கல் வரும் என்று…? உறவுகளைப் பற்றி நீ வருந்தாதே… அவர்களுக்காக நாங்களும் வாழப்போவதில்லை, எங்களுக்காக அவர்களும் வாழப்போவதில்லை… அவர்களுக்கு ஐந்துநாள் பேச்சு… நமக்கு ஐம்பது வருட வாழ்க்கை… அவர்களுக்காகப் பயந்தால் நாம் வாழ முடியாது… இதோ பார்…” என்ற மாதவி எதையோ யோசித்தவளாக,

“உன் அப்பா உன்னை எப்படி அழைப்பார்…” என்று கேட்டாள். இவளோ தயக்கத்துடன் ஜெயராமைப் பார்த்துவிட்டு,

“மீனா…” என்றாள். முகம் மலர்ந்த மாதவி,

“இன்றிலிருந்து நீயும் எனக்கு மீனாதான் சரியா…” என்று தன் உரிமையை நிலைநாட்டியவர், பின்,

“இதோ பார் மீனா… நீ எங்கும் போக முடியாது… நிச்சயமாகப் போக முடியாது. அதற்கு நான் விடவும் மாட்டேன்… நீ என்னை மன்னித்தது நிஜம் என்றால், எங்கள் கூட வா…” என்று மாதவி பிடிவாதமாக நிற்க, மீநன்னயாவோ என்ன செய்வது என்று தெரியாத கலக்கத்துடன் தலைகுனிந்து நின்றாள். அதைக் கண்டதும் அவள் இன்னும் சமாதானமாகவில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாக,

“நீ ஊருக்குப் போவதால் நம் பிரச்சனை தீரும் என்று நினைக்கிறாயா மீநன்னயா… இல்லைமா… நம் பிரச்சனை இன்னும் பெருக்குமே தவிர நிச்சயமாகப் பழைய நிலைக்கு வராது… நீ சென்ற மறு கணம், உன் அப்பாவுக்கு என் மீதிருக்கும் வெறுப்பு அதிகமாகுமே தவிர எள்ளளவும் குறையாது. உன்னை இலங்கைக்கு அனுப்ப நானும் ஒரு காரணம் என்கிற விதை அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போகும். அது நமக்கான பிரிவை மேலும் வலுவாக்கும்… அது நம் பிரிவுக்கும் வழிவகுக்கும் மீனா… நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நீ நினைப்பது உண்மையானால் அதற்கு ஒரே வழி நீ நம்மோடு கனடா வருவதுதான்… உனக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்றால், தாராளமாக இலங்கைக்குப் போ… ஆனால் எந்த நோக்கத்திற்காகப் போக நினைக்கிறாயோ, அது நடக்காது என்பதையும் மனதில் இருத்திக் கொள்…” என்று கூற மீநன்னயாவிற்கும் என்ன பதிலைக் கூறுவது என்று சுத்தமாகத் தெரியவில்லை.

மாதவி கூறுவதும் சரிதானே. இவள் பிடிவாதமாக ஊருக்குப் போவதால், தந்தைக்கும் மாதவிக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு மேலும் விரியுமே தவிரச் சேராதே. இவர்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டு என்ன சாதிக்கப் போகிறாள்? பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்க,

“நிஜமாகவே உனக்கு நானும் உன் அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் எங்களோடு கனடாவிற்கு வந்துவிடு, இல்லையென்றால்…” என்று அவர் முடிக்க முதல்,

“வருகிறேன் அம்மா… எனக்காக இல்லை… உங்களுக்காகவும், ராமிற்காகவும்…” அவள் முடிக்க முதல், அவளைத் தடுத்த மாதவி,

“ராமில்லை… அப்பா.. இனி அவரை நீ அப்படித்தான் அழைக்கப்போகிறாய்…” என்று அழுத்தமாகக் கூற, நீண்ட நேரத்திற்குப் பின்பு மீநன்னயாவின் உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது.

(39)

ஆயிற்று மீநன்னயா கனடாவில் கால்பதித்து ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தன. ஆனாலும் ஜெயராமனுக்கும் மாவிக்குமிடையில் திரைமறைவாய் எழுந்த சுவர் மட்டும் உடையவில்லை.

தன் அவசரத்தால், ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி மாதவியிடமும், தன் மனைவியிடம் தன் காதலைச் சொல்லாமல் மறைத்த குற்ற உணர்ச்சி ஜெயராமனிடமும் இருந்ததால் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்கப் பெரிதும் தயங்கினர். தவிர, முதலில் அந்தச் சுவரை யார் உடைப்பது என்கிற தயக்கம் இருவருக்குள்ளும்.

கனடா வந்த பின் மீநன்னயா மாதவியுடன் நன்றாகவே பொருந்திக்கொண்டாள். செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வது போலத் தான் பெற்ற மகளாகப் பார்த்துக்கொண்டாள் மாதவி. ஆனாலும் அவளைப் பார்க்கும்போதெல்லாம் மாதவிக்குள் மிகப் பெரும் தவிப்பு. அவருடைய அவசரப் புத்தியால்தானே அவள் வாழ்க்கை இப்படியானது. அவர் கொஞ்சம் சுதாரித்திருந்தால், தன் கணவன் அப்படித் தவறு செய்திருக்கமாட்டார் என்கிற நம்பிக்கை இருந்திருந்தால், தன் கணவன் இப்படிப் பெண்ணோடு சுற்றித் திரிகிறார் என்கிற செய்தியைக் கேட்ட அந்தக் கணம், அந்தப் பெண் யாராக இருக்கும் என்று ஆராய்ந்திருப்பார். குறைந்தது நேராகவே கணவனிடம் கேட்டும் இருந்திருப்பார். ஆனால் தந்தை கற்றுக்கொடுத்த பாடம், இது தவறுதான் என்று முடிவுசெய்யப் போதுமானதாக இருந்துவிட்டது,

அன்று ஐந்து முப்பதிற்கு எழுப்பொலி அடிக்கப் படுக்கையில் கிடந்த மாதவி மெதுவாக விழிகளைத் திறந்து திரும்பிப் பார்த்தார். கணவன் படுக்கும் இடம் வெறுமையாக இருந்தது. முன்பெல்லாம் அவளுடைய கையால் தேநீர் வாங்கிக் குடித்தபின்தான் படுக்கையை விட்டே எழுவார். அப்படி எழும்போது வயசுக்கு ஏற்றாட்பொல நடந்துகொள்வதும் கிடையாது. மாதவியை ஒரு வழி செய்தபின்தான் வெளியே விடுவார். இப்போது அவள் அருகே படுப்பதையே முற்றாக நிறுத்திவிட்டார். நினைக்கும்போதே ஏக்கம் பேரலையாக எழுந்தது.

மீண்டும் அந்தப் பழைய நாட்கள் போல வராதா என்கிற வேதனை பிறந்தது. வேளை கெட்ட நேரத்தில் அன்று அவளை அணைக்க அவர் ஆசை கொண்டது நினைவுக்கு வர, விழிகளில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

பெரும் வேதனையுடன் தயாராகிச் சமையலறைக்குள் புகுந்து தேநீர் வார்த்து முடிய ஜெயராம் உள்ளே வந்தார். மீண்டும் அவர் முகம் பார்க்க முடியாமல் சங்கடம் ஒட்டிக் கொண்டது. ஆனாலும் வார்த்த தேநீரை அவருக்கு அருகாமையில் தள்ளி வைக்க, ஜெயராமோ அதைத் தவிர்த்துவிட்டுத் தனக்கான தேநீரை வார்க்கத் தொடங்க, மாதவிக்குக் கண்கள் பொங்கிக் கொண்டு வந்தன. ஆனாலும், அந்த மௌனத்தை உடைக்கப் பிரியப்படாதவராக, மீநன்னயாவிற்கு வார்த்துக்கொண்டு சமையலறை விட்டு வெளியேற, சென்ற தன் மனைவியின் முதுகைத் திரும்பிப் பார்த்து வெறித்தார் ஜெயராம்.

பின் தேநீர் வார்ப்பதில் தன் கவனத்தைச் செலுத்தியவருக்கு மாதவி வார்த்த தேநீர் அவரை வா வா என்று அழைப்பது போலத் தோன்றியது. எரிச்சலுடன் அதை முறைத்துவிட்டுத் தன் வேலையில் கவனமாக, மீண்டும் அவர் கண் அந்தத் தேநீர் குவளையில் சென்று நிலைத்தது.

எத்தனை நாட்களாயிற்று அவள் கையால் தேநீர் குடித்து. அவரையும் மீறி நா உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ள, என்ன நினைத்தாரோ, அடுப்பை நிறுத்திவிட்டு யாராவது வருகிறார்களா என்று எட்டிப்பார்த்தார்.

நல்லவேளை யாரும் இல்லை. உடனே அந்தத் தேநீர் குவளையை எடுத்து ஒரு இழுவை இழுக்க, உச்சந்தலை முதல் தித்தித்தது தேநீர். அடுத்த கணம் அத்தனையையும் மறந்தவாறு தேநீரை ரசித்துக் குடித்துக்கொண்டு வெளியேற, மாதவியோ தன் கணவனின் இந்தத் தில்லுமுல்லுத் தெரியாமல் மீநன்னயாவின் அறையைத் தட்டிவிட்டுத் திறந்தார்.

மீநன்னயா அப்போதுதான் குளித்துவிட்டு வந்தாள் போலும், அவள் முகத்தில், நீர் முத்துக்கள் கொட்டிக்கொண்டிருந்தன.

அந்த அழகிய முகத்தைக் கண்டு அப்போதும் வியந்தவராக முகம் மலர, அவள் முன்னால் தேநீர் குவலையை நீட்ட, அதை வாங்கிக் கொண்ட மீநன்னயா,

“அம்மா… எனக்காக எதற்கு இங்கே எடுத்து வந்தீர்கள்… அழைத்திருந்தால் நானே வந்திருப்பேன் அல்லவா…” என்று உரிமையாகக் கடிந்துவிட்டு அவர் கரத்திலிருந்த தேநீர் குவளையை வாங்கிக் கொள்ள,

“இதில் என்ன சிரமம் எனக்கு.. சொல்லப்போனால் மகிழ்ச்சிதான்மா… செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் போல…” என்றவரின் விழிகள் கலங்கிப்போக, அவசரமாகத் தன் கரத்திலிருந்த குவளையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுக் கலங்கி நின்ற மாதவியின் கரத்தைப் பற்றி,

“அம்மா… இது என்ன… நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்… அதைப்பற்றியே நினைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி… தவிர, உங்களிடம் எந்தத் தப்பும் இல்லையே… உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பேனோ என்னவோ… எந்தப் பெண்ணும் தன் கணவனை இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்தால், கைக்கட்டி வாய் பொத்தி நிற்கமாட்டார்கள்… என்னால் உங்கைளைப் புரிந்து கொள்ள முடிகிறது…” என்று எப்போதும் போல அப்போதும் கூறி மாதவியைச் சமாதானப்படுத்த முயல, பெரும் வேதனையுடன் தன் முன்னால் நின்றிருந்தவளை ஏறிட்டு,

“நீ என்னதான் சொன்னாலும், என் மனம் ஆறமாட்டேன் என்கிறதே… இந்தப் பாவத்திற்கு மன்னிப்பு என்பது கிடையாதுமா… நான் உன் வாழ்க்கையை மட்டுமல்ல, என் தம்பியின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டேன். நான் மட்டும் கொஞ்சம் சுதாரித்திருந்தால், நிச்சயமாக இப்படி ஒரு தப்பை அவன் செய்திருக்க மாட்டான்… இந்தப் பிரச்சனையை என் கையில் விடு என்று அவன் சொன்னபோது நான் தடுத்திருக்கவேண்டும். என் பிரச்சனை நான் அதைக் கையாள்கிறேன் என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக அவன் அதை மீறியிருக்கமாட்டான்…. முடிந்தால் என்னை மன்னித்தது போல அவனையும் மன்னிக்க முயற்சிசெய் அது போதும்..” என ஏக்கம் நிரம்பிய குரலில் அவர் கேட்க, மீநன்னயாவின் முகம் இறுகிப் போனது.

மன்னிப்பா… அதகனாகரனையா… அவனை இந்த ஜென்மத்தில் மன்னிக்க முடியுமா… நம்பினாளே… முழுதாக நம்பினாளே. தனக்கு நல்லதுதான் செய்வான் என்று உறுதியாக நம்பினாளே… அந்த நம்பிக்கையில்தானே அவனை மணந்தாள். அந்த நம்பிக்கையில்தானே காயம்பட்ட அந்தத் தேகத்தை அவனுக்குக் காட்டினாள். அந்த நம்பிக்கையில்தானே அவளைத் தொட விட்டாள். எல்லாம் முடிந்த பின், நான் நீ நினைப்பவனல்ல என்று பெரிய குண்டைப் போட்டு அவளை உயிரோடு அல்லவா கொன்றுவிட்டான். எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம். அவனை எப்படி மன்னிப்பது…? பதில் கூறாமல் மௌனம் சாதிக்க மாதவிக்கும் புரிந்துபோனது மீநன்னயாவின் நிலை.

“உன்னுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறதுமா… அதகனாகரனுக்கு நான் என்றால் உயிர். ஜெய் என் வாழ்க்கையில் நடந்த கசப்புகளை உனக்குச் சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது என் தந்தை அவரோடு வேலை செய்யும் ஒருத்தியோடு தொடர்பில் இருப்பது தெரிந்த போது, என் அம்மா அடைந்த ஏமாற்றம் வலி… அதற்குப் பிறகு நாம் பட்ட சிரமங்கள்… சொல்லில் அடங்காது நன்னயா… உனக்கொன்று தெரியுமா, ஆகரன் இன்றுவரை எங்கள் அம்மாவின் பெயரைத்தான் ‘லாஸ்ட் நேம்’ ஆகப் போடுவான்… அவனுக்கு அப்பா இப்படி ஒரு துரோகத்தைச் செய்ததை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்தக் காயம் இன்றுவரை ஆறாத வடுவாகத்தான் அவன் மனதில் இருக்கிறது. ஜெயும் இப்படி ஒரு பெண்ணோடு சுற்றுவது தெரிந்ததும், சரியான பாதையில் சிந்திக்க அவனையும் விடவில்லை, என்னையும் விடவில்லை. ஆனால் எத்தனை பெரிய மகத்தான தவறு அது என்று இப்போதுதான் தெரிகிறது… மீநன்னயா… இதை உன்னிடம் கேட்கும் தகுதி எனக்கில்லை தான். இருந்தாலும், என் தவறை மன்னித்தது போல அவனுடைய தவறையும் மறந்து மன்னிக்கப்பாரம்மா…” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டுத் தளர்வுடன் கீழே செல்ல, மீநன்னயா வேதனையுடன் மாதவியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளால் முடியுமா… அதகனாகரனை மன்னிக்க அவளால் முடியுமா… உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றிணைந்து இல்லை என்று சொன்னது.

What’s your Reaction?
+1
19
+1
6
+1
3
+1
0
+1
0
+1
3

Related Post

2 thoughts on “வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 37/38”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!