Tue. Apr 22nd, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 23/24

(23)

தன் அறைக்குள் நுழைந்து, ஆயாசத்தோடு படுக்கையில் சரிந்தபோது, அவனுடைய கைப்பேசி அடித்தது.

எடுத்துப் பார்த்தான். ரஞ்சன்தான் எடுத்திருக்கிறான். பதட்டத்தோடு அதை உயிர்ப்பித்தவாறு எழுந்தமர்ந்து காதில் வைக்க,

“டேய்… எங்கேடா இருக்கிறாய் இப்போது…” என்றான் அவன் ஒருவித அவசரத்தோடு.

“எங்கே என்றால், உன்னுடைய கோட்டையில்தான்…” என்றான் அதகனாகரன்.

“ஆகரன், உன்னுடைய அத்தான் என்ன அழைத்திருந்தார்…” என்றதும் இவனுடைய உடல் இறுகியது. இதை அவன் எதிர்பார்த்திருந்தான்தான். ஆனால் அத்தனை விரைவாகக் கண்டுபிடிப்பார் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

“சொல்லு…” என்றான் இவன். என்னதான் முயன்றும், குரலிலிருந்த இறுக்கத்தை இவனால் மறைக்க முடியவில்லை.

“என்னைச் சந்திக்கவேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறார்…”

“அதற்கு நீ என்ன சொன்னாய்…”

“என்ன சொல்ல, நகரத்திற்கு வெளியே இருக்கிறேன், இரண்டு நாட்கள் கழித்துத்தான் வருவேன் என்றேன். அதற்கு அவர், நீ எங்கே நிற்கிறாய் சொல், நான் வந்து பார்க்கிறேன் என்கிறார். இது என் தனிப்பட்ட நேரம், இந்த நேரத்தில் நான் யாரையும் சந்திப்பதில்லை என்று கூறிச் சமாளித்துவிட்டேன்…” என்று கூற, அதகனாகரனோ,

“மீநன்னயாவைப் பற்றி ஏதாவது கேட்டாரா…?” என்றான். அதற்கு நிரஞ்சன்,

“அவர் கேட்க முதலே கைப்பேசியை அணைத்துவிட்டேன். அடுத்து அதைத்தான் கேட்பார் என்று எனக்குத் தெரியும்… எப்படியும் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கலாம். அதற்கிடையில் எதையாவது செய்யப்பார்…” என்ற நண்பனிடம்,

“நன்றிடா… உன் உதவி இல்லை என்றால், சிரமப்பட்டிருப்பேன்…” என்றவனிடம்,

“டேய்… நமக்குள் என்ன நன்றி மண்ணாங்கட்டி… எனக்கு ஒரு உதவி என்றால் நீ வரமாட்டாயா…. அதுவும் நீ உன் சகோதரியின் வாழ்க்கைக்காக இத்தனை போராடும்போது, நான் உதவ மாட்டேனா…” என்ற நண்பனுக்கு மீண்டும் நன்றியைக் கூற, ரஞ்சனோ,

“டேய்… உன் அத்தான் காவல்துறைக்குப் போனால் என்ன செய்வது?” என்றான். இவனோ அதைப் பற்றி யோசித்துவிட்டு,

“இல்லை… போக வாய்ப்பில்லை நிரஞ்சன். நிச்சயமாக அவருடைய இந்தத் தகாத உறவை உலகம் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்க மாட்டார். அதனால் தனிப்பட்ட முறையில்தான் விசாரிப்பார். அப்படி அவர் கவலைப்படாத ஆள் என்றால், இத்தனைக்கும் இவளைக் கனடாவிற்கே வரவழைத்திருப்பார். இங்கே இங்கிலாந்திற்கு அழைத்துவரவேண்டிய அவசியமில்லை.” கூறிவிட்டுக் கைப்பேசியை அணைத்து அதை நெற்றியில் அழுத்தியவாறு எதையோ யோசித்தான்.

இரண்டு நாட்களில் எப்படியாவது நிரஞ்சனைச் சந்தித்துவிடுவார் ஜெயராம். அதன் பின், கோட்டையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. ஜெயராமன் இவர்களைத் தேடி வர முதல் இவன் அதற்கான முற்றை வைத்துவிடவேண்டும்.

முடிவு செய்தவனாக, அடுத்து காயை எப்படி நகர்த்துவது என்று யோசிக்கத் தொடங்கினான்.

மறுநாள் காலை, மீநன்னயா எழுந்தபோது, அவளை விட்டு, களைப்பு அனைத்தும் பறந்துபோய் விட்டிருந்தது. சுவாசமும் சீராக வந்துகொண்டிருந்தது. நிம்மதியுடன், தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு எழுந்தவளின் விழிகளில், ஒரு ஓரமாக, இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த அதகனாகரன் கண்ணில் பட்டான்.

வியந்தவளின் விழிகள் அவளையும் மீறி ஒரு வித ஆர்வத்துடன் அவனை அளவிட்டன. அவன் மேலாடையின் பொத்தான்கள் இரண்டு கழற்றப்பட்டிருந்ததால், அவனுடைய மார்பு ரோமங்கள் சுறுண்டு வெளியே தெரிய, அந்த ரோமங்களுக்கூடாக விரல்களை நுழைத்து விளையாடவேண்டும் என்கிற பேரவா எழத் திணறிப்போனாள் மீநன்னயா.

ஏனோ அவன் அருகே இருக்கும்போது இந்தப் புத்தி சரியாகவே வேலை செய்யமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. என்ன செய்வது.

அவனோ இவளுடைய அசைவை உணர்ந்ததும், தன் கரத்திலிருந்த புத்தகத்தை மூடிவிட்டு, அவளைக் கனிவுடன் பார்த்து,

“ஹாய்… ஸ்லீப்பிங் பியூட்டி.. இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்க, இவளோ, சங்கடத்துடன் தலைகுனிந்து,

“இ… இப்போது நன்றாக இருக்கிறேன்…” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து,

“சா… சாரி ரஞ்சன், உங்களுக்கு நான் நிறையச் சிரமம் கொடுத்துவிட்டேன்… சத்தியமாக இப்படியாகும் என்று நினைக்கவில்லை….” என்று அவள் திணற, அவனோ,

“ஹே… எதற்கு இந்த மன்னிப்பெல்லாம்? நோயை யாராவது வருந்தி அழைத்து வாங்கிக் கொள்வார்களா… ஆனால், உனக்குத் தூசு ஒத்துக்கொள்ளாது என்கிற விஷயம் நேற்றே தெரிந்திருந்தால், நீ தும்மத் தொடங்கியபோதே மருத்துவமனை அழைத்துச் சென்றிருப்பேன். நீ இப்படிச் சிரமப்பட்டிருக்கவேண்டி இருக்காது…. சரி நடந்தது நடந்துவிட்டது… அடுத்த முறை, சிறிதாக மூச்செடுக்கச் சிரமப்பட்டாலும் உடனே வைத்தியர் கொடுத்த மருந்தைப் போட்டுவிடு சரியா…” என்றான் கண்டிப்பாய். இவளும் தலையை ஆட்டி,

“சரிபா… செய்கிறேன்… போதுமா…” என்றவளின் கரத்தை விடுவித்தவன், இப்போத தன் தொண்டையைச் செருமி,

“நன்னயா… நான் நிறைய இடங்களில் உன் பிரச்சனை பற்றி விசாரித்துவிட்டேன். என் நண்பனிடமும் கேட்டுவிட்டேன். அவன் ஒரு திட்டம் சொன்னான்…” என்றவன் தயங்குவது போல மீநன்னயாவைப் பார்க்க, அவளோ முகம் மலர,

“என்ன ரஞ்சன்… சொல்லுங்கள்… எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன்…” என்று கூற இவனோ, சங்கடத்துடன் அவளைப் பார்த்து,

நன்னயா… நீ நிரந்தரமாக இங்கே தங்கவேண்டுமானால், ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அது…” என்று மீண்டும் தயங்க,

“சொல்லுங்கள் ரஞ்சன், தற்போதிருக்கும் நிலையில் எதுவென்றாலும் செய்யச் சித்தமாக இருக்கிறேன்… சொல்லுங்கள்… நான் என்ன செய்தால், இங்கேயே தங்கலாம்…” என்றாள் பரபரப்புடன். அவனோ அவளைக் கூர்மையாகப் பார்த்து,

“நீ திருமணம் செய்யயவேண்டும்…” என்றதும்தான் தாமதம், அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து,

“வட்…” என்று கிட்டத்தட்ட அலறினாள் மீநன்னயா.

(24)

தன் முன்னால் நின்றிருந்தவளின் அதிர்ச்சியை ஒரு யோசனையுடன் பார்த்த அதகனாகரன், பின் தன் தலையை ஆட்டி,

ஆமாம் நன்னயா… நீ இந்தக் சிக்கலிலிருந்து தப்பவேண்டுமானால் ஒரே ஒருவழிதான் இருக்கிறது… அது நீ திருமணம் முடிப்பது…” என்றதும் மீநன்னயா குழப்பத்துடன் அவளைப் பார்த்து,

“என்ன உளறல் இது நிரஞ்சன்… நான் இங்கே தங்குவதற்கும், திருமணம் முடிப்பதற்கும் என்ன சம்பந்தம்?…” என்று புரியாமல் கேட்டவளிடம்,

“சம்பந்தம் இருக்கிறது மீநன்னயா… இங்கிலாந்து குடியுரிமை உள்ள ஒருவனை மணந்தாயானால், நீ இங்கே தங்க உரிமை உண்டு. இப்போதைக்கு உனக்கிருக்கும் ஒரே வழியும் இதுதான்…” என்றவனைக் கலக்கத்துடன் பார்த்தாள் மீநனன்யா.

“திருமணமா… ரஞ்சன், திருமணம் என்கிறது கத்திரிக்காயா நினைத்த உடன் சந்தையில் போய் வாங்கிவர… அது வாழ்க்கை… அதைப் போய்…” என்று திக்கித் திணற, உடனே அவள் அருகே அமர்ந்த அதகனாகரன்,

‘”இதோ பார் நன்னயா… நாம் நம்மைக் காப்பாற்ற ஒரு வழி இருக்கும் போது அந்த வழியைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம்… நீ மட்டுமில்லை… உன்னைப் போல நிறையப் பேருடைய வாழ்க்கை இப்படித்தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. குடியுரிமை பெறும் வரைக்கும் கணவன் மனைவியாக இருப்பார்கள். கிடைத்ததும், பிரிந்தும் விடுவார்கள். சொல்லப்போனால் ஒரு வித வியாபாரம் என்று வைத்துக்கொள்ளேன்…” என்றவனைக் கலங்கிய கண்களுடன் பார்த்தாள் மீநன்னயா.

“ஆனால்… அது என்னால் முடியாதே ரஞ்சன்… திருமணம் என்பது புனிதமானது… அது ஒரு முறைதான் ஒருத்தனின் வாழ்க்கையில் நடக்கவேண்டும். அதைப் போய் இப்படித் தேவை கருதி எப்படி… ஒரு வியாபாரமாகப் பார்ப்பேன். அது என்னால் முடியாதே…” என்றவளை ஒரு பெருமூச்சுடன் ஏறிட்டவன்,

“உனக்கு இதை விட்டால் வேறு வழியில்லையே நன்னயா. உன் இருப்பிடத்தைத் தேடிவந்த, குடியுரிமை ஆணையம், இங்கேயும் தேடிவராதென்று என்ன நிச்சயம். அப்படிக் கண்டுபிடித்தால் அந்தக் கடவுளால் கூட உன்னைக் காப்பாற்ற முடியாது நன்னயா…. இப்போதைக்கு உனக்கிருக்கும் ஒரே வழி, இது மட்டும்தான்…” என்று அவன் கூற, இவளோ தவிப்புடன் பேச வார்த்தைகள் அற்றுச் சற்று நேரம் அமைதி காத்தாள். பின், புரிந்தது என்பதுபோல நிமிர்ந்து அவனைப் பார்த்து,

“ஆனால் இப்படி… என்னைத் திருமணம் முடிக்க யார் முன் வருவார்கள் ரஞ்சன்… என்னை யாருக்கும் தெரியாதே…. ஜெயராம் கூட இங்கேயில்லை… நான் என்ன செய்யட்டும்…” என்று அழுகை பிறக்கக் கூறியவளை உற்றுப் பார்த்த அதகனாகரன்,

“ஏன்நானில்லையா… உனக்கு” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மீநன்னயா.

“ரஞ்சம்… நீங்களா…” என்று வார்த்தைகள் வராமல் தடுமாற, இவனோ அவளை நேருக்கு நேராகப் பார்த்து,

“யெஸ்… இட்ஸ் மீ… நன்னயா…மரி மீ…” என்றான் அழுத்தமாகத் தெளிவாக.

இவளுக்கோ பேச்சு வராமல் தடுமாறின. ஒரு பக்கம் நம்ப முடியாத அதிர்ச்சி. மறுபக்கம் அவன் திருமணம் முடிக்கக் கேட்டானா என்கிற சந்தேகம். இன்னொரு பக்கம் அப்படியா கேட்டான் என்கிற மகிழ்ச்சியின் ஆர்ப்பாட்டம், அத்தனைக்கும் மத்தியில் திணறியவளாக,

“எ… என்ன சொன்னீர்கள்…” என்றாவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்தவன், இப்போது அவளை நெருங்கி, அவளுடைய கரங்களைப் பற்றி,

“உன்னுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழி என்னிடம் இருக்கிறது என்கிறபோது நான் ஏன் மறுக்கப்போகிறேன் நன்னயா… தவிர இதைக் கட்டாயத்திற்காகவோ, உனக்காகவோ நான் கேட்கவில்லை… மனதாரத்தான் கேட்கிறேன்… என்னை மணந்து கொள்… இதுவரை திருமணம் பற்றிய ஆர்வம் இல்லாமல் இருந்தேன்… இப்போது உன்னோடு பழகப் பழக அந்த ஆர்வம் கூட எனக்கு வந்துவிட்டது… எனக்கு மனைவியாக நீ வருவாய் என்றால்… நான் மகிழ்ச்சியாகவே உன்னை மணந்து கொள்கிறேன்….” என்றவன் அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைச் செலுத்தி.

“சே… யெஸ்… ஐ வில் டே கெயர் ஆஃப் எவ்ரிதிங்… உனக்காக, உன் நலனுக்காக நான் எதையும் செய்வேன்… அக்சப்ட் மை ப்ரபோசல்…” என்று அவன் வேண்டுவது போலக் கேட்க, இவள்தான் திணறிப்போனாள்.

இப்போதும் அவன் கோரிக்கையில் நம்பிக்கையில்லாமல் அவனை வெறித்தவள், எதையோ சொல்வதற்கு வாய் எடுத்தாள். ஆனால் காற்றுதான் வந்தது. அவனை மணப்பது என்பது வரம்… ஆனால் அது எந்தளவுக்குச் சாத்தியம். அவளைப் பற்றி அவன் தெரிந்துகொண்டது கொஞ்சமல்லவா… மிகுதியையும் தெரிந்தால், இவளைப் பற்றி என்ன நினைப்பான்? நம்ப முடியாமல் உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“ர.. ரஞ்சன்… நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று புரிந்துதான் பேசுகிறீர்களா? நான்… உங்களை… நீங்கள் என்னை…” என்று திக்கித் திணறித் தடுமாற, இவனோ வாய்விட்டுச் சிரித்தவாறு,

“கமோன் மீநன்னயா… நான் என்ன பத்துவயது பையனா? என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பேசுவதற்கு? லிசின்… நான் நன்றாக யோசித்துத்தான் உன்னிடம் இதைக் கேட்கிறேன். உனக்குப் பிரச்சனையிலிருந்து தப்பவேண்டும்… அதற்கு இருக்கும் ஒரே வழி இங்கிலாந்து குடியுரிமை உள்ள ஒருவனை மணக்கவேண்டும்… கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு யாராவது நெய்க்கு அலைவார்களா… உன் பக்கத்தில் நான் இருக்கிறேன்… உனக்கான தீர்வு என்னிடம் இருக்கிறது என்றால், அதைச் செய்வதில் என்ன தடை… அதுவும் உன்னை விரும்பியே மணக்க சம்மதிக்கிறேன் என்கிற போது எதற்குத் தயங்குகிறாய்…” என்றவனைத் தவிப்புடன் பார்த்தாள் மீநன்னயா.

அவனை மணப்பது அவளைப் பொறுத்தவரைக்கும் வரப்பிரசாதம்தான். அவள் மீது அவன் வைத்த மதிப்பும் மரியாதையையும் மீறி அவன் மீது உள்ள காதலையும் அவள் அறிவாள். ஆனாலும் ஏதோ ஒரு வித தயக்கம் அந்த மகிழ்ச்சிக்கு அணைபோடுவதை இவளால் தடுக்க முடியவில்லை. பரிதாபத்திற்காகச் செய்யும் திருமணம் நிலைக்குமா? குழம்பி நிற்க அவனோ,

“நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது நன்னயா… லிசின்.., எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது மிக மிகப் பிடித்திருக்கிறது. அதுவும் உன் கூடச் சேர்ந்து வாழும் அளவுக்கு நிறையப் பிடித்திருக்கிறது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் இப்படி ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஒரு வேளை இதைத்தான் காதல் என்கிறார்கள் என்றால்… ஜெயஸ்… ஐ லவ் யு… நீ என் மனைவியானால், அதை விட மகிழ்ச்சி எதுவும் எனக்கு இருந்துவிடப்போவதில்லை.” என்றவனை அதீத மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் மல்கப் பார்த்த மீநன்னயாவிற்கு அதீத உணர்ச்சியல் உதடுகள் நடுங்கின.

அவன் கூறியதை நம்ப முடியாதவளாக,

“உங்களுக்கு… உங்களுக்கு என் மீது…” அவள் முடிக்கவில்லை,

“ஆமாம்… காதல்தான்… சந்தேகம் இருந்தால் பரிசோதித்துப் பார்…” என்று கிண்டலுடன் கூற, அதற்கு மேல் மறுக்க அவளுக்குப் பைத்தியமா என்ன? அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாதவளாக, சற்றும் யோசிக்காமல் பாய்ந்து அவனை இறுகக் கட்டிக்கொண்டு விம்மிவிட்டாள் மீநன்னயா.

அதகனாகரனோ, அவளைத் தன்னோடு இறுக்கியவாறு அவளுடைய முதுகை வருடி,

“ஹே… எதற்கு இப்படி அழுகிறாய்… என்னை மணப்பது அந்தளவு கசப்பாகவா இருக்கிறது…” என்று கேட்க, அழுகையுடனேயே அவனை விட்டுப் பிரிந்தவள், மறுப்பாகத் தலையை ஆட்டி,

“அது எப்படி…. நாம் சந்தித்து அதிக நாட்கள் கூடக் கிடையாதே… அதற்குள் எப்படிக் காதல்” என்று விக்கியவாறு கேட்க, அவனோ, உதடுகளைப் பிதுக்கித் தோள்களைக் குலுக்கி,

“தெரியவில்லை… ஆனால் உன்னைப் பிடித்திருக்கிறது. நிறையப் பிடித்திருக்கிறது. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் இங்கே மலர்கிறது… அதுவும் இரவில் உன் நினைவுகள் என்னைத் தூங்க விடாமல் படுத்தி எடுக்கின்றன நன்னயா. நீ எனக்கு வேண்டும். என் அருகே வேண்டும்…” என்றவன் நடுங்கிக்கொண்டிருந்த அவளுடைய கரங்களைப் பற்றித் தூக்கித் தன் உதடுகளில் பொருத்தி எடுத்தவன், மீண்டும் அவளை ஏறிட்டுப் பார்த்து,

“மீநன்னயா.. காதல் என்பது, நாள் நட்சத்திரம் பார்த்து வருவதில்லை. ஒருவன் ஒருத்தியைப் பார்க்கும்போது, இவள் தான் எனக்கானவள் என்று முடிவு செய்ய ஒரு நிமிடமே போதும்…” என்றவன் உண்மையான உணர்வோடு தன் இடது மார்பைத் தொட்டுக் காட்டி,

“இங்கே சொல்லும் நன்னயா… நீ எனக்கானவள் என்று… உன்னைக் கண்ட அந்த நொடி இங்கே பலமாக அடித்துக் கொண்டது. உள்ளே பலவித இரசயான மாற்றம்… உன்னோடு வாழும் வாழ்க்கை மட்டும்தான் என் புத்திக்குள் ஓடியது… இப்போது கூட, நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்கைதான் மனக்கண்ணில் தோன்றுகிறது?” என்றவன் அவளை நெருங்கி அவளுடைய கரங்களைத் தன் உள்ளங்கையில் எடுத்து,

“சரி என்னை விடு… நீ சொல்… இத்தனை நாள் என்னோடு பழகியிருக்கிறாய்… உனக்கு என் மீது எந்த ஈர்ப்பும் தோன்றவில்லையா… இவ்வளவு ஏன்… இந்தத் தனியிடத்திற்கு மறுபேச்சுப் பேசாமல் என்னோடு தங்கியிருக்கிறாயே… அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன…?” என்று அவன் மென்மையாகக் கேட்க அதற்குப் பதில் கூறமுடியாது தலைகுனிந்தாள் மீநன்னயா.

அவன் மீது ஈர்ப்பு மட்டும்தானா தோன்றியது… உயிரையே தாரைவார்த்துக் கொடுக்கும் அளவு காதல் அல்லவா பிறந்திருக்கிறது. இல்லையென்றால் எதை நம்பி அவன் பின்னால் வந்தாள். வேறு யாரும் அழைத்திருந்தால் இப்படி வந்திருப்பாளா…? நிச்சயமாக இல்லையே… ஆனால் அவள் தயக்கத்திற்குக் காரணம் வேறாயிற்றே… கலக்கத்துடன் அவனை ஏறிட்டவள்,    

“ஒத்துக்கொள்கிறேன் ரஞ்சன்… உங்களை எனக்குப் பிடிக்கும். மிக மிகப் பிடிக்கும். காதலிக்கும் அளவு பிடித்திருக்கிறது… ஆனால்… உடனே திருமணம் என்றால்… அதுதான் தயக்கமாக இருக்கிறது… நான் யார், நான் எப்படிப்பட்டவள், என் பின் புலம் என்ன… எதுவுமே தெரியாமல், என்னை மணக்க ஆசைப்படுகிறீர்களே… இது சரிவருமா?” என்றவளின் முகத்தைத் தன் உள்ளங்கைகளால் பொத்தித் தன்னை நோக்கி நிமிர்த்தியவனாக,

“உன் பின்புலம் அறிந்துதான் காதல் வரவேண்டுமானால், அதற்குப் பெயர் காதல் அல்ல… வியாபாரம்… நன்னயா… எனக்கு உன் கூட வாழவேண்டும்… அதற்கான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைத் தட்டிக்கழிக்கும் முட்டாள்தனத்தை நான் செய்யமாட்டேன்…” என்றதும், கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டவளாக அவனை ஏறிட்டு,

“ஆனால் ஏனோ பயமாக இருக்கிறதே…” என்றவளுக்குக் கண்கள் கலங்கிப் போக, அவளை நிதானமாகப் பார்த்தவன்,

“அதனால் என்ன… பயத்தை போக்கிவிட்டால் போயிற்று…” என்றவன் அடுத்தக் கணம் அவளைச் சுண்டி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி விழ, அவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

“இப்போதே மொத்தப் பயத்தையும் துடைத்து எறிந்துவிடுகிறேன்..” என்றவன் மறுகணம் அவளுடைய செழித்த செவ்விய உதடுகளைத் தன் கடிய உதடுகளால் கவ்வி மூடிக்கொண்டான்.

What’s your Reaction?
+1
13
+1
6
+1
1
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!