(17)
சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல தோன்றியது. அதுவும் அந்த நிலவொளியில், அதன் பிரமாண்டம் இன்னும் அதிகமாகவே தெரியத் தன்னை மறந்து வாய்பிளந்தாள் மீநன்னயா.
நான்கு பக்கங்களும் அகன்ற தூண்களால் கட்டப்பட்ட கோபுரங்களைக் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் அது. எங்குப் பார்த்தாலும் கடிய மரங்களில் கைவேலை செய்யப்பட்ட, ஜன்னல்கள். அந்தக் கோட்டையைப் பிரமாண்டமாகக் காட்டும் வகையில் கருங்கற்களால் அமைக்கப்பட்ட சுவர். கைவேலைப்பாடு கொண்ட பன்னிரண்டடி உயரமான கதவு. அதைத் திறப்பதற்கே நான்கு பேர் வேண்டும்போல். தன்னையும் மறந்து ஆவென்று அதையே பார்த்தவாறு,
“அம்மாடி எத்தனை பெரிது…” என்று வாய்பிளக்க, அவனோ மெல்லியதாகச் சிரித்துவிட்டு,
“நீ நினைப்பதுபோல இது அத்தனை பெரிதில்லை நன்னயா. சிறியதுதான். அது கட்டிய விதத்தைப் பார்க்கும்போது உனக்குப் பெரிதாகத் தெரிகிறது…” என்றதும், வியப்பு மாறாமலே,
“ரஞ்சன்… கோட்டையை இத்தனை நெருக்கத்தில் பார்ப்பது இதுதான் முதன் முறை…” என்றாள் திகைப்புடன். இவனும் அவளைப்போலத்தான் அந்தக் கோட்டையின் வடிவமைப்பைப் பார்த்தவாறு,
“ஏன் யாழ்ப்பாணத்திலும் ஒரு கோட்டை உண்டே. போத்துக்கேயர் காலத்தில் கட்டிய கோட்டை.” என்றவனைத் திரும்பிப் பார்த்து ஆம் என்பதுபோலத் தலையை ஆட்டியவள்,
“அது 1625 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஈழப் போரில் நிறையச் சேதமடைந்து போனாலும், இப்போது திரும்பப் புனரமைத்திருக்கிறார்கள். ஈழப்போரில் அங்கே போக முடியாமல் தடை விதித்திருந்தார்கள். அதனால் இதுவரை அந்தக் கோட்டையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை தெரியுமா…” என்றவள் மீண்டும் ஆர்வத்துடன் நடக்கத் தொடங்கியவள், அந்தக் கோட்டைக்குள் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட கருங்கல் படியைப் பார்த்ததும் சற்றுத் தயங்கி நின்றாள்.
அது சற்று உயரமாக அமைக்கப்பட்டிருந்ததால், வலித்த காலை ஊண்டி அதன் மீது ஏறமுடியும் போலத் தோன்றவில்லை. என்ன செய்வது என்று தடுமாற, அதகனாகரனோ, சற்றும் யோசிக்காமல் தன் கரத்திலிருந்த பொருட்களைக் கீழே வைத்துவிட்டு அவளைத் தன் கரங்களில் குழந்தையென ஏந்திக்கொண்டான்.
முதலில் பதறி விடுபட முயன்றவள், அதன் பின் அவன் உடல் கொடுத்த வெம்மையில் தன்னை மறந்து விழிகய் விரிய அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனும், ஏதோ ஒரு வித மாயை தன்னைச் சூழ்ந்துகொண்டது போலத் திகைப்புடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
மீநன்னயாவுக்கும் அத்தனை சுலபத்தில் அவனிடமிருந்து தன் கவனத்தைத் திருப்பவே முடியவில்லை. அவளுடைய தொடைகளையும், புறமுதுகிலிருந்து மார்புவரையும் வளைத்திருந்த அவனுடைய கரங்கள் செய்த மாயாஜாலத்தில் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு வித போதை ஏறியது. மெல்ல மெல்லமாக அவள் இதயக் கதவுகளை தட்டி நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தவனாயிற்றே. அவனுடைய கரங்களில் இப்படி மாலையெனக் கிடப்பதும் சொர்க்கம்தானே.
அவளை ஏந்தியவாறு நான்காவது படிகளைத் தாண்டிய பின்னும் அவளைத் தரையில் இறக்கும் எண்ணமேயில்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அதகனாகரன். ஏனோ அவளைத் தரையிறக்குவது மாபாதகங்களில் ஒன்றுபோலவும் தோன்றியது. ஆனாலும் கீழே இறக்கியாகவேண்டுமே… மனமில்லாதவனாக அவளைத் தரையில் இறக்க, அப்போதுதான் அவளுக்கும் முழு உணர்வும் வரப்பெற்றது. ஏனோ வெட்கம் அவளைச் சூழ,
“ந… நன்றி ரஞ்சன்…” என்று அவள் முணுமுணுக்க, அவனோ, தன் மூச்சுக்காற்று அவள் மீது படும் வகையில் நெருங்கி, மெல்லிய காற்றிலும் நெற்றியை வருடி விலகிய மெல்லிய கூந்தல் கற்றையைச் சுட்டுவிரலால் ஒதுக்கிவிட்டவாறு,
“டோன்ட் சே தாங்க்ஸ்… இட்ஸ் மை ப்ளஷர்…” என்று கிசுகிசுப்புடன் கூற, ஏனோ அந்தக் குரலில் மேலும் சிவந்துபோனாள் மீநன்னயா. ஒரு வித அவஸ்தையோடு அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளைத்தான் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பார்வைக்கு முன்னால் நின்றுபிடிக்க முடியாமல் இமைதாழ்த்த, வேளை கெட்ட நேரத்தில் ஜெயராமன் மனதில் வந்து நின்று இவன் உள்ளத்தை இறுகச் செய்தார்.
அவர் மட்டும் இவள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இவனல்லவா அவளைக் கொண்டாடியிருப்பான். என்னசொன்னாலும் ஜெயராம் மிகுந்த அதிர்ஷ்டசாலிதான். இல்லையென்றால் இப்படி ஒருத்தி அவருக்குக் கிடைத்திருக்குமா? நினைக்கும் போதே இவனுக்கு ஜெயராம்மீது கொலைவெறியே வந்தது.
அதுவரையிருந்த இன்ப நிலை துணிகொண்டு துடைத்தாற்போல மறைந்து போக, எரிச்சலுடன் கதவின் பக்கம் திரும்பி, பான்ட் பாக்கட்டிலிருந்து பெரிய சாவி ஒன்றை வெளியே எடுத்து, கதவைத் திறக்க இருட்டடித்த உட்புறம்தான் இவர்களை வரவேற்றது.
உள்ளே நுழைந்தவன் சரியாக, மின்சாரத்தை உயிர்ப்பிக்கும் விசையை அழுத்த, அடுத்த கணம், புதிய உலகம் ஒன்று அங்கே விரிந்தது. வெளியே நின்று பார்த்தபோது சற்று பழைய கோட்டைபோலத் தோன்றினாலும், உள்ளே மிக நவீன முறையில் பழமை மாறாமல் வடிவமைத்திருந்தார்கள். என்ன அதிகம் பாவனையில் இல்லாததாலோ என்னவோ, தூசி மண்டிக் கிடந்தது.
தூசியிலிருந்து பொருட்களைக் காப்பாற்ற, இருக்கை முதற்கொண்டு மேசை வரை வெள்ளைத் துணிகளால் மூடப்பட்டிருந்தன. அந்தது் துணிகள் கூடத் தூசியால் தம் நிறத்தை இழந்திருந்தன.
கருங்கற்களால் ஆன தரையில்கூட, நடக்கும் போது, இவர்களின் பாத சுவடிகள் பதியும் அளவுக்குத் தூசி மண்டிக் கிடந்தது. ஆனாலும் அந்தக் கோட்டையின் அழகும் கம்பீரமும் சற்றும் குறையவில்லை.
எங்குப் பார்த்தாலும் பிரமாண்டம்தான். அண்ணாந்து பார்த்தால், வானைத் தொடும் தொலைவில் கூரைகள். அதிலிருந்து கீழே விழுவதுபோல பன்முகம் கொண்ட மின்விளக்கு. சுவர்களில் புராதன பிரபலங்களின் வர்ணம் தீட்டப்பட்ட சித்திரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அப்படங்களில் கூடத் தூசி படிந்திருந்தன.
சற்றுத் தள்ளி இரண்டு கதவுகள். தன்னை மறந்து வாய் பிளந்து அந்தக் கோட்டையின் வரவேற்பறையைப் பார்த்தவள்,
“அம்மாடி… எத்தனை பிரமாண்டமாக இருக்கிறது… இந்தக் கோட்டை அதிக விலையாக இருக்குமே…” என்று அங்கிருந்த பழைய சித்திரங்களைப் பார்வையிட்டவாறு கேட்க, இவனோ,
“யாருக்குத் தெரியும்… என் நண்பனைத்தான் கேட்கவேண்டும்…” என்றான் தன்னை மறந்து. இவளோ திகைப்புடன் அவனைப் பார்த்து,
“என்னது… உங்கள் நண்பரைக் கேட்கவேண்டுமா? ஏன்? இது உங்களுடைய கோட்டைதானே…” என்று வியக்க, அப்போதுதான் தான் வாய்விட்டு உளறியது புரிந்தது இவனுக்கு. தன்னையே மனதிற்குள் திட்டியவனாக,
“அது… இந்தக் கோட்டையை அலங்கரித்தவன் அவன்தான்… அதனால்தான் சொன்னேன்…” என்று கூறிச் சமாளிக்க,
“ஓ…” என்றவள், “இந்தக் கோட்டை எப்போது கட்டப்பட்டது ரஞ்சன்?” என்றாள் ஆர்வமாக.
முதன் முறையாக அவனுடைய நண்பன் இந்தக் கோட்டையை வாங்கி விருந்து வைத்தபோது, இவனும் வந்திருந்தான். அப்போது அவன் சொன்னவை நினைவுக்கு வர,
“பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது நன்னயா… அரச வம்சத்தைச் சேர்ந்த ஒருவர்தான் ஓய்வு எடுப்பதற்காக இந்தக் கோட்டையைக் கட்டினாராம். இது பார்க்கப் பெரிதாக இருந்தாலும், பிற கோட்டைகளோடு ஒப்பிடும்போது சிறியதுதான். நான்கு படுக்கையறைகளும், வேலையாட்களுக்கு இரண்டு படுக்கையறைகளுமாக ஆறு படுக்கையறைகள் மட்டும்தான். அவன்… ம்கூம்… நான் வாங்கும்போது, முழுவதும் பாழடைந்திருந்தது… என் நண்பன்தான், பழமை கெடாத வகையில், புனரமைத்துக் கொடுத்தான்…” என்று எப்படியோ தட்டுத்தடுமாறிக் கூற, இவளோ, ஆச்சரியத்துடன் கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளை விழுங்கிய அந்தக் கோட்டைகளின் சுவரை வருடிக் கொடுத்தவாறு,
“அம்மாடி… முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருடைய இடத்தில் நாமும் நிற்கிறோம் என்று உணரும் போது… நம்ப முடியவில்லை இல்லையா…” என்று நிஜமான வியப்பும் மலர்ச்சியும் போட்டிபோட சொல்ல,
“மே பி…” என்றான் சுவாரசியமற்று. அவளோ அதைக் கருத்தில் கொள்ளாது,
“உங்களுக்கு ஒன்று தெரியுமா… எனக்குத் தஞ்சை பெரிய கோவில் பார்க்கவேண்டும் என்று பேராசை உண்டு. ஆயிரம் வருடங்களைச் சுலபமாக விழுங்கிய பின்னும் கம்பீரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. வெறும் முந்நூறு வரடங்களோடு ஒப்பிடுகையில் அந்தக் கோவில் மிக மிகப் பழையது. ஆனாலும் அதன் மதிப்பு அப்படியேதான் இருக்கிறது இல்லையா…” என்றவள், அங்கிருந்த சித்திரங்களில் குறிப்பிட்ட ஒரு சித்திரத்தை வியப்புடன் பார்த்தாள். அதில் ஒருத்தர் அரச தோரணையில் இடையில் வாளை வைத்தவாறு நின்றிருந்தார். அந்தப் படத்தைச் சுட்டிக்காட்டி,
“இது யார் ரஞ்சன்…?” என்றாள் ஆர்வமாய். அவனும் அந்தப் படத்தைப் பார்த்து,
“இந்தக் கோட்டையைக் கட்டிக் காப்பாற்றிய இறுதி வாரிசு. இவர் அறுபது வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டார். அவர் இறந்தபின், இந்தக் கோட்டையைப் பராமரிக்க யாருமில்லை… இறுதியாக என் நண்… இறுதியாக என் கைக்கு வந்து சேர்ந்தது…” என்று கூறு, அவனுடைய தடுமாற்றத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, மீநன்னயா,
“என்ன விலைக்கு வாங்கினீர்கள்…?” என்றாள் ஆவலாய். அதைக் கேட்டதும் ஏளனத்துடன் அவள் முதுகை வெறித்தவன்,
“அதிகமில்லை ஐநூறாயிரம் பவுன்ட் மட்டுமே… புனரமைக்க கிட்டத்தட்ட முன்னூறாயிரம் பவுன்ட் முடிந்தது. மொத்தம் எண்ணூறாயிரம் பவுன்ட் என்று வைத்துக்கொள்ளேன்…” என்றதும் இவளுடைய விழிகள் இரண்டும் ஆச்சரியத்தில் தெறித்துவிடும்போல விரிந்தன.
“அம்மாடி.. எப்போதாவது வந்து தங்கும் இந்தக் கோட்டைக்கு இத்தனை பணமா…” தோள்களைக் குலுக்கியவள், பின் அவனைத் திரும்பிப் பார்த்து,
“இதைப் பராமரிப்பது அத்தனை சுலபமில்லையே…” என்றாள்.
“ம்… உண்மைதான்… எப்போதாவது நான் வரும்போது, ஒரு சிலரை அனுப்பிச் சுத்தம் செய்யச் சொல்வேன். இல்லை என்றால், என் நண்பர்கள் வருவதாக இருந்தாலும், யாராவது சுத்தம் செய்ய வருவார்கள். நாம் திடீர் என்று வரவேண்டியிருந்ததால், அனைத்தையும் தயாராக்கி வைக்க நேரம் கிடைக்கவில்லை…” என்று கூற, இவளோ,
“அதனால் என்ன, நான் சுத்தப்படுத்துகிறேன் ரஞ்சன்…” என்றவள், உடனே அந்தக் காரியத்தில் இறங்கத் தொடங்க, அதகனாகரனோ, உடனே அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான். இவள், என்ன என்பதுபோல அவனை ஏறிட்டுப் பார்க்க,
“சும்மாவே உன் காலில் சுழுக்கு. இதில் நீ சுத்தப்படுத்த போகிறாயா…? நீ ஒன்றும் செய்யவேண்டாம்… நானே செய்கிறேன்…” என்றவன், இருக்கையிலிருந்த துணிகளை இழுத்து எடுக்க, தூசி இருவரின் நாசிகளையும் பலமாகத் தாக்க, இருவருமே தும்மத் தொடங்கினார்கள்.
முகத்தில் அடித்த தூசியைக் கரங்களால் விலக்கியவாறு, விரைந்து சென்ற மீநன்னயா, அந்தப் பெரிய உயரமான ஜன்னலைத் திறக்க முயல, அது இறுகிப்போய்த் திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது.
உடனே உதவிக்கு வந்தான் அதகனாகரன்.
அவள் சிரமப்பட்டு ஜன்னலைத் தள்ள, சற்றும் யோசிக்காமல், அவளுடைய கரத்தின்மீது தன் கரத்தைப் பதித்து அழுத்த, ஒரு வித ஒலியோடு ஜன்னல் திறந்து கொண்டது. ஜன்னல் திறந்துவிட்டது, அவன் கரம்தான் அவளுடைய கரத்தைவிட்டு விலகமாட்டேன் என்று அடம் பிடித்தது.
கூடவே அவனுடைய முன்னுடல், அவளுடைய பின்னுடலோடு பட்டும் படாமலும் உரசி நிற்க, வெளியிலிருந்து வந்த குளிர்காற்றால் கூட, இருவருக்குள்ளும் பற்றிக்கொண்ட தீயை அணைக்க முடியவில்லை.
யாருமற்ற தனிமை, களவு செய்பவருக்குத் தைரியம் ஊட்டும் இருட்டு… பிறகு என்ன? பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருந்தால் என்னாகும். அந்த நிலையில்தான் இருவரும் அப்போது நின்றிருந்தனர்.
இருவருக்குள்ளும் இனம்புரியாத ஒரு மாயை. அவள் வெம்மையை அவனும், அவன் வெம்மையை அவளும் மெளனத்தின் ஆட்சியோடு உணர்ந்த தருணம் அது. இப்போது அவள் உடல் கொடுத்த சூடு அவனுக்குப் போதாதோ, இன்னும் அவளை நெருங்க, ஏனோ பெண்ணவளுக்குள் ஒரு வித நடுக்கம் ஊடுருவத் தன்னையும் மறந்து விழிகளை மூடினாள்.
மூடிய மொட்டுக்களில் எப்போதுதான் வண்டு தேன் எடுத்திருக்கிறது. அவனுடைய அருகாமையில் உடலும் உள்ளமும் இளகி நின்றிருக்க, அவனோ ஜன்னலைத் திறக்கும்போது பற்றிய அவள் கரங்களை விடாமலே, அவளை நோக்கிக் கொண்டு வந்தவன், தன் கரத்தையும் அவள் கரத்தையும், அவளுடைய தளிர் வயிற்றில் வைத்து அழுத்த, அவன் அழுத்திய வேகத்தில் மொத்தமாய் அவன் முன்னுடலின் மீது சாய்ந்தாள் அந்தக் கோதை.
இப்போது அவனுடைய முகம் ஒருவித தாபத்தோடு அவளுடைய கழுத்து வளைவை நோக்கிப் பயணிக்க, நல்ல காலமோ இல்லை கெட்ட காலமோ சற்றுத் தொலைவிலிருந்து நரி ஊளையிடும் ஓசை, திறந்திருந்த ஜன்னலுக்கூடாக இவர்களின் செவியில் வந்து விழ, அதுவரையிருந்த மாயை முற்றாக அறுபட்டு, இருவருமே திடுக்கிட்டு விழித்தனர்.
முதலில் சுயத்திற்கு வந்தது மீநனன்யாதான். அப்போதுதான் அவளை அணைப்பதுபோல அதகனாகரன் நிற்பது உறைக்க, அதிர்ந்துபோனவளாக, அவனை உதறிவிட்டு விலகியவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.
ஏனோ அந்த இனம்புரியாத உணர்வில் தேகம் நடுங்கியது. அவளுக்கு என்னவாகிவிட்டது. அவன் தொட்டால் இந்த உடல் ஏன் குழைந்து உருகிப் போகிறது. அப்படி என்ன வித்தையைக் கற்றுவைத்திருக்கிறான் இந்த மாயவன்? ஏனோ அவனை ஏறிட்டும் பார்க்க முடியாத அவஸ்தையுடன் உதடுகளைக் கடித்தவாறு தரைபார்த்து நிற்க, அவனும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாதவனாகத்தான் திணறிக்கொண்டிருந்தான்.
அவனுக்குள் ஏதாவது பேய் பூதம் நுழைந்துவிட்டதா என்ன? இப்படித் தடுமாறிப்போகிறானே. இதுவரை இப்படி ஒரு பெண்ணின் அருகாமையில் சுயம் கெட்டு இருந்ததில்லையே. கொஞ்ச நேரம் என்ன நடந்தது என்றுகூட நினைவில்லையே. அவள் அருகே வந்த உடன் மொத்தமாக எல்லாம் தொலைந்து போகிறதே. அம்மாடி… தவித்தவனாக மீநன்னயாவை ஏறிட்டவன்,
“இதை நாளை சுத்தப்படுத்தலாம் நன்னயா… இப்போதே நேரம் இரண்டு மணியையும் கடந்துவிட்டது. பசிவேறு வயிற்றைக் கிள்ளுகிறது. இருப்பதைச் சாப்பிட்டுவிட்டுப் போய்ப் படுக்கலாம். இதைக் காலையில் சரிப்படுத்தலாம்…” என்றவன், அவளுடைய முகத்தையும் பார்க்காது, வாசலிலிருந்த பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, இவளுக்கும் எதுவும் பேச முடிந்திருக்கவில்லை.
ஏனோ, ஆபத்தான பாதையில் காலெடுத்து வைத்திருக்கிறோம் என்று மட்டும் உள்ளுணர்வு சொன்னது. கூடவே அந்த ஆபத்தும் அவளுக்குப் பிடித்திருக்க, மறுக்காது அவன் பின்னே சென்றாள் மீநன்னயா.
(18)
சமையலறையும் முன்னறைபோலப் பெரிதாகத்தான் இருந்தது. பாத்திர பண்டங்கள் எல்லாவற்றையும் சுவரின் ஒரு பக்கத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். மறு பக்கத்தில் பழமை மாறாத வகையில் மின்சார அடுப்பு.
உள்ளே வந்த அதகனாகரன் சுவரில் தொங்கிய ‘பான்’ ஒன்றை எடுத்து அதைக் கழுவிவிட்டு மின்சார அடுப்பில் வைத்துக் கொண்டுவந்த பால் பையை வெட்டி, அதை ஊற்றிக் காய்ச்சத் தொடங்கிய நேரத்தில் மீநன்னயா மேசையிலும், கதிரைகளிலும் விரித்திருந்த வெண்ணிறப் போர்வையை இழுத்து எடுத்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, மேசையைச் சுத்தமாகத் துடைத்துவிட, இவனோ, இலகுவாக உண்ணக் கூடிய, பால், பிரட், பழம் போன்றவற்றை மேசையில் அடுக்கி வைத்தான்.
கொஞ்ச நேரத்தில் பாலும் கொதிக்க. இருவரும் திருப்தியாக உண்டுவிட்டு, எழ, அதகனாகரனோ, அவள் உண்டு முடித்த தட்டை வாங்கப் போனான். உடனே மறுத்துவிட்டு,
“இல்லை… நானே கழுவிக் கொள்கிறேன்…” என்று கூற,
“ப்ச்… இதில் என்ன இருக்கிறது… என்னதைக் கழுவும்போது உன்னதையும் கழுவப் போகிறேன்…” அவ்வளவுதான் என்றவன், அவள் மறுப்பைக் காதுகொடுக்காது அவளுடைய பாத்திரங்களையும் எடுத்துச் சென்று கழுவத் தொடங்க, இவளும், அவன் கழுவிய பாத்திரங்களைத் துடைத்து அங்கிருந்த தட்டில் அடுக்கிவைக்கத் தொடங்கினாள்.
வேலை முடிந்ததும், மீநன்னயாவைப் பார்த்து,
“என் கூட வா…” என்றுவிட்டு முன்னறைக்கு வந்தவன், வாசலில் தனியாகக் கிடந்த அவளுடைய உடுப்புப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு, சற்றுத் தள்ளி ஒரு திருப்பத்தில் வளைந்து சென்று படிகளில் ஏறத் தொடங்க, இவளும் மறுக்காமல் அவன் கூட நொண்டியவாறு நடக்கத் தொடங்கினான்.
அது கோட்டை என்பதால், படிகள் ஒவ்வொன்றும் சற்று உயரத்தில் இருக்க, சற்று மூச்சைப் பிடித்துத்தான் ஏறவேண்டியிருந்தது.
அதுவும், வலித்த காலோடு ஏறுவது பெரும் சவாலாகவே இருந்தது மீநன்னயாவிற்கு.
மேலே ஏறியதும், இன்னொரு உலகம் விரிந்தது. அது படுக்கையறைகள் கொண்ட பகுதி. கீழ்த்தளம் போலவே அத்தனையும் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
அவனோ, அங்கிருந்த ஒரு அறையைத் திறந்து,
“இதுதான் உன்னுடைய அறை. நீண்ட நாட்களாகப் பாவனையில் இல்லாததால், கீழ்த்தளம்போலே இங்கேயும் தூசி இருக்கும்… இன்று மட்டும் தேவையான இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டு உறங்கு… அந்தக் கபேர்டில், புதிய படுக்கை விரிப்புகள் இருக்கும்… அதைப் பயன்படுத்திக் கொள், அதோ, அதுதான் குளியலறை… வேண்டுமானால் உபயோகித்துக் கொள், இப்போதைக்கு எதைப் பற்றியும் யோசிக்காமல் நன்றாக உறங்கு… மிச்சத்தைக் காலையில் பார்க்கலாம்…” என்றவன், பின் எதையோ நினைத்தவன் போல,
“என்னிடம் பனடோல் இருக்கிறது… கொஞ்சம் பொறு எடுத்துவந்து தருகிறேன்… அதைக் குடித்தாயானால் காலின் வலி குறைந்து போகும்…” என்றவன் அவள் பதிலையும் கேட்காமல் கீழே சென்றுவிட்டு அடுத்த இரண்டு நிமிடங்களில் மேலே வர அவன் கரங்களில் இரண்டு வெண்ணிற மாத்திரைகளும், கூடவே தண்ணீர் போத்தலும் இருந்தன. அதை அவளிடம் நீட்டியவாறு,
“உனக்குப் பக்கத்தில் இருப்பதுதான் என் அறை. எப்போது வேண்டுமானாலும் ஏதாவது தேவையென்றால் கதவைத் தட்டாமலே உள்ளே வரலாம் சரியா…” என்றவன்,
“குட் நைட் நன்னயா. சுவீட் டிரீம்ஸ்…” என்றுவிட்டுத் தன் அறை நோக்கிச் செல்ல, அவன் சென்று மறையும் வரைக்கும் வாசற்கதவில் நின்றவாறே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீநன்னயா.
ஏனோ கணத்துக்குக் கணம் அவன் அவளை மயக்கிக்கொண்டு செல்கிறான்.
அவனோடு பயணித்த இத்தனை நேரத்தில், ஒரு கணமாவது ஜெயராமனை அவள் நினைத்தாள் இல்லை. இதோ இப்போது கூட அவன்தான் மனதில் நின்று ராட்டினம் சுற்றுகிறான். அதுவும் சற்று முன், அவனுடைய தேகத்தோடு உரச நின்றது நினைவுக்கு வர, ஏதோ இப்போதே முட்டிநிற்பது போல இதயம் பலமாக அடிக்கத் தொடங்க, தன்னை மறந்து உதடுகள் கடித்து விடுவித்தவள் ஒரு பெருமூச்சுடன் அறைப்பக்கம் திரும்பினாள்.
கூடவே அவன் கொடுத்துவிட்டுச் சென்ற பனடோல் நினைவுக்கு வர, கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். அது மருந்து என்பதை விட அவனுடைய அக்கறைதான் அங்கே தெரிந்தது. உடனே அதை வாய்க்குள் போட்டுத் தண்ணீர் குடித்து உள்ளே தள்ளியவள், உதட்டோரம் வழிந்த தண்ணீரைப் புறங்கையால் துடைத்துவிட்டுத் தண்ணீர் பொத்தலை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுக் கவனத்தை அந்த அறையில் செலுத்த முயன்றாள்.
அந்த அறை சற்றுப் பெரியதாகத்தான் இருந்தது. அங்கேயும் ஒரு பழைய காலத்துப் பெண்மணியின் சித்திரப்படம் மாட்டியிருக்க, நடந்து சென்று அந்தப் படத்தைப் பார்த்தாள். தூசு படிந்திருந்த அந்த உருவத்தின் முகம் தெளிவாகத் தெரியாததால், தன் கரம் கொண்டு துடைத்துப் பார்த்தாள். யாரென்று தெரியவில்லை. ஆனால் செல்வச் சீமாட்டி என்று தெரிந்தது. அந்தப் படத்திலிருந்து கவனம் கலைந்தவளாக, மீண்டும் அறையை நோட்டம்விட்டாள்.
அந்தத் தூசியோடு சேர்ந்து அவளால் உறங்கமுடியும் போலத் தோன்றவில்லை. உடனே, தன் அசதியை ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட்டுக் கடகடவென்று அந்த அறையைச் சுத்தப்படுத்த முயல, அது ஒன்றரை மணி நேரத்தை விழுங்கிக்கொண்டது. இறுதியாகக் கட்டிலுக்குப் புதிய போர்வை விரித்துத் தரையை ஒரு ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தி நிமிர்ந்தபோது, அவளுடைய இடையை யாரோ இரண்டாகப் பிரித்துத் தனித்தனியே வைத்ததுபோன்ற உணர்வில் தவித்துப் போனாள்.
ஆனாலும் தன் அறை சுத்தமான திருப்தியுடன், குளியல் அறைக்குள் நுழைய, அதுவேறு அவளுக்கு நிறைய வேலையை வைத்திருந்தது. ஆனாலும் சளைக்காமல், குளியல் அறையையும், கையோடு துப்பரவாக்கிக் குளித்துவிட்டு வந்தபோதும் கால்வலி சுத்தமாக மறைந்துவிட்டிருந்தது.
பனடோலின் மகிமையா, இல்லை அங்கும் இங்குமாக வேலை செய்ததால் வலி போய்விட்டதா தெரியவில்லை. ஆனால் நிம்மதியுடன் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தவள், காலில் போட்டிருந்த செருப்பை ஏனோ தானோ என்று கழற்றி ஒருபக்கமாகப் போட்டுவிட்டு மல்லாக்காக விழ, இங்கிலாந்து குளிர் அவளை ஊசியாகத் துளைத்தது.
அவள் அணிந்திருந்தது கையில்லாத இரவாடை என்பதால், இன்னும் குளிர் அவளை வாட்ட, அதற்கு மேல் படுக்க முடியாமல் எழுந்தவள், தன் பெட்டியைத் திறந்து சுவட்டர் ஒன்றை அணிந்துகொண்டு அந்த அலமாரியைத் திறந்து இன்னொரு போர்வையையும் எடுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்து தன்னைப் போர்த்திக்கொள்ள, இப்போது குறிர் சற்றுப் பரவாயில்லாமல் இருந்தது.
களைப்புடன் விழிகளை மூட, உறக்கம் அத்தனை சுலபத்தில் அவளை நெருங்குவதாக இல்லை. அதையும் மீறி எதிர்காலம் அவளைப் பயமுறுத்தியது. இந்தச் சொற்ப காலங்களில் அவளுடைய வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றங்கள். எதற்கோ அஞ்சி எங்கோ இழுபட்டு வந்து நிற்கிறோம். நாளைக்கு என்ன பயங்கரத்தை விதி கொண்டுவரப்போகிறதோ. ரஞ்சன் மட்டும் இல்லையென்றால் அவளுடைய நிலை என்ன? பெரும் வேதனையுடன் சரிந்து படுத்தவளுக்கு ஜெயராம் வந்து மனதில் நின்று சிரித்தார். மீண்டும் மனம் சுனங்கிப்போனது.
ஜெயராம் எங்கே போனார். அவளுடைய அழைப்பை ஏன் ஏற்கவில்லை? ஒருவேளை அவருடைய மனைவிக்கு உண்மை தெரிந்திருக்குமோ? அதனால்தான் இவளோடு பேச அச்சப் படுகிறாரோ? குழப்பமும் வேதனையுமாக விழிகளை மூடியவளின் கண்களிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிந்து செல்ல, அவளையும் மீறி உறங்கியபோது நான்கு மணியையும் கடந்துவிட்டிருந்தது.