(10)
இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால் தலையை அழுத்திக் கொடுத்தவாறு, சிறு தள்ளாட்டத்துடன் எழுந்தமர்ந்தாள். தலை சுற்றியது. சிரமப்பட்டு ஆழ மூச்செடுத்துத் தன்னை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தவளாக, எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் சுத்தவரப் பார்த்தாள். சுத்தமாக எதுவும் தெரியவில்லை.
எங்கு பார்த்தாலும் கடும் இருட்டு. அவள் கரங்கள் கூட அவளுக்குத் தெரியவில்லை. அத்தனை இருட்டு. மேலே மட்டும் சிறிய ஒளி கீற்றுப் போல அவள் இருந்த இடத்தை நோக்கி வீசிக்கொண்டிருந்தது. வேறு கதவோ ஜன்னலோ எதுவுமே கண்களுக்குத் தென்படவில்லை. எங்கோ பாதாளத்தில் இருப்பது போல உணர்ந்தவளின் காலில் எதுவோ உராய்ந்துகொண்டு ஓடத் தன்னையும் மறந்து ‘வீல்’ என்று கத்தியவள் நான்கடி தள்ளிப்போய் விழுந்தவாறு சுத்தவரப் பார்த்தாள். எதுவும் தெரியவில்லை.
பயத்தில் பயங்கரமாகத் துடித்த இதயம் வாய்க்குள் வந்து வெளியே குதித்துவிடுமோ என்று அஞ்சியவள் போல, கரங்களால் வாயை அழுந்த மூடிக் கொண்டவளுக்கு அழுகை வந்தது. வியர்வை ஆறாகப் பெருகியது. குளிரில் வேறு உடல் நடுங்கியது. நடுக்கத்தோடு வெற்றுத் தோள்களைக் கரங்கள் கோண்டு தேய்த்துவிட்டவாறு எழ முயன்றாள் இதங்கனை. ஆனால் நடுங்கிய கால்களுக்குப் பலம் வரவில்லை. தடுமாறி விழுந்தவள், மீண்டும் முயன்றவளாக எழுந்து நின்றாள்.
எங்கே போனான் மகிந்தன். என்னை இன்னும் காக்க வரவில்லையா? என்னை இந்த நிலைக்குத் தள்ளி விட்டு என்ன செய்கிறான். இப்போது நான் எங்கே இருக்கிறேன். கடவுளே… எப்படி இந்த நரகத்திலிருந்து வெளியேறப் போகிறேன்… ஆயிரம் கேள்விகள் மனதைக் குடைந்தன.
“ஹலோ… யாராவது இருக்கிறீர்களா…” என்று தன்னால் முடிந்த வரைக்கும் கத்திப் பார்த்தாள். அவள் கத்திய சத்தம் அதிர்வலையாக மீண்டும் அவள் காதில் பாய்ந்து மேலும் அவளைக் கலங்கடித்தது.
இப்போது என்ன செய்வது… நடுக்கத்தோடு சற்றுத் தூரம் நடக்க, ஒரு இடத்தில் முட்டுப்பட்டாள். கரங்களால் முட்டுப்பட்ட இடத்தைத் தடவிப் பார்க்க, குளிர்ந்தது. கூடவே கரகரப்பாக எதுவோ கொட்டுப்பட அது மண் பகுதி என்று புரிந்தது. அப்படியானால் நிலத்துக்குக் கீழேயா அடைத்துவைக்கப்பட்டிருக்கிறாள். நிச்சயமாகத் தப்ப வழியில்லை என்பது தெளிவாகப் புரிந்து போக, இயலாமையில் மேலும் அழுகை வர, அப்படியே சுவரில் சாய்ந்தவள், கூனிக் குறுகியவாறு தரையில் அமர்ந்தாள்.
பயத்தையும் மீறி அதீத குளிரில் உள்ளுறுப்பு வரை நடுங்கியது. உதடுகளோ தந்தியடித்தன. அடுத்து என்ன நடக்கப் போகிறது… எதுவும் தெரியவில்லை. அச்சம் பிறந்தால் தைரியம் தானாக விலகிவிடுமே. இத்தனைக்கும் பிறகு தெய்வ நம்பிக்கை வேறு வர மறுத்தது.
“யாராவது இருக்கிறீர்களா…” மீண்டும் அழைத்துப் பார்த்தாள். ம்கூம் எந்தப் பிரதிபலிப்புமில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது? அந்த அரவன் இங்கேயே என்னை அடைத்துச் சாகும் வரை விட்டுவைக்கப் போகிறானோ? ஐயோ…! இனி அம்மாவைப் பார்க்கவே முடியாதா? அவள் மடி சாய முடியாதா? நான் இல்லாமல் அப்பா துடித்துப் போவாரே! பதறிப்போவாரே! சிறு துரும்புகூட என் மீது பட அவர் விட்டதில்லையே! நான் தற்போதிருக்கும் நிலை தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவாரே.! பாலு… என்னதான் அவளோடு மல்லுக்கு நின்றாலும், என் மீது உயிரையே வைத்திருப்பவன். நிச்சயமாக நான் இல்லாமல் தவித்துப் போவான்… இவர்கள் எல்லோருக்கும் சமாதானம் யார் சொல்லப் போகிறார்கள்.. அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் வேறு… மகிந்தன் என்னைத் தேடி எங்கேயெல்லாம் அலைகிறானோ தெரியவில்லையே…’ என்று கலங்கித் துடித்தவளுக்கு அப்போதுதான் கைப்பேசியின் நினைவு வந்தது.
உற்சாகம் பீறிடக் காலை வருடியவளுக்கு வெறும் கால்கள்தான் தட்டுப்பட்டன. நம்ப முடியாதவளாக மீண்டும் வருடிப் பார்த்தாள். அப்படியானால் அந்தக் கைப்பேசியைக் கண்டு கொண்டானா… ஏமாற்றத்தில் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.
இருந்த ஒரு நம்பிக்கையும் போயிற்றா… இனி என்ன செய்யப் போகிறாள்? விம்மலுடன் கண்களைத் துடைக்கக் கரத்தைத் தூக்கியவளுக்கு மகிந்தன் செலுத்திய சிப்பின் நினைவு வந்தது. அதாவது இருக்கிறதா, இல்லை அதையும் கண்டு பிடித்து எடுத்துவிட்டானா? இழந்த நம்பிக்கையை மீளப் பெற்றவளாகக் கரத்தைத் தூக்கி சிப் ஏற்றிய இடத்தை வருடிப் பார்த்தாள். வலித்தது. கூடவே மெல்லிய மேடும் தெரிந்தது.
அப்படியானால் அந்த சிப் இன்னும் அவளிடம்தான் இருக்கிறது. அதன் அர்த்தம் மகிந்த நிச்சயமாக அவளைத் தேடி வந்துவிடுவான். அதுவரையிருந்த அழுத்தமும், தவிப்பும் கரைந்து போக உடல் சற்றுத் தளர்ந்தது,
மகிந்த, எப்போது வருவாய்… சீக்கிரம் வந்து தொலை… எனக்குப் பயமாக இருக்கிறது…” மனதாரக் கெஞ்சிக்கொண்டிருந்தவளுக்கு இன்னொரு சந்தேகமும் எழுந்தது.
அவள் இருப்பது நிலவறை என்றால், இவளுக்குள் செலுத்திய ஜிபிஎஸ் செயல்படுமா? இருந்த நம்பிக்கையும் வடிந்து போக சோர்வுடன் விழிகளை மூடியவளுக்கு அடுத்து என்ன நடந்தது என்று நினைவில்லை. அவள் எப்போது தூங்கினாள்? அவளுக்கே தெரியாது கண் விழித்தபோது சிறிதாகத் தெரிந்த வெளிச்சம் கூட இப்போது மறைந்திருந்தது. அதை உணர்ந்தவளுக்கு மேலும் உடல் நடுங்கியது. இப்படியே பயத்தில் இறந்துவிடுவோமோ என்கிற எண்ணம் தோன்ற மேலும் உடல் உதறியது.
இன்னும் மகிந்த என்னைத் தேடி வரவில்லையே. ஏன் வரவில்லை? அப்படியானால் நான் நினைத்தது போல அந்த ஜிபிஎஸ் வேலை செய்யவில்லையா…? தவித்தவளின் மனம் தாய் தந்தையிடம் நிலைத்தது. மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
இன்னும் வந்து சேரவில்லை என்று அம்மாவும் அப்பாவும் வருந்தத் தொடங்கியிருப்பார்கள். அவள் தற்போதிருக்கும் நிலையை எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.
எதுவுமே புரியவில்லை. பசி வேறு அந்த நிலையிலும் வயிற்றைக் கிள்ளியது. வயிற்றை அழுந்தப் பற்றியவாறு மீண்டும் பழைய இடத்தில் அமர்ந்தாள். அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு சுத்தமாகத் தெரியவில்லை. இப்படியே இருப்பதா? இல்லை தப்புவதற்கு வழியைத் தேடுவதா? அப்படியே வழியைத் தேடுவதாக இருந்தாலும் எப்படித் தேடுவது?
அழுது அழுது கண்கள் வீங்கியதுதான் மிச்சம். மீண்டும் சுறுண்டு கொண்டவளுக்கு அருகே யாரோ நடக்கும் அசைவு புரிய, விறுக் என்று எழுந்தமர்ந்தாள். எப்படி எங்கிருந்து வருகிறார்கள். அப்படியானால் வருவதற்கான பாதை இங்கே எங்கோ இருக்கிறது என்றுதானே பொருள்.
தவிப்புடன் அங்கே வருவது யார் என்று பார்க்க விழிகளைக் கூர்மையாக்கினாள். ம்கூம், அந்த இருட்டில் யார் நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை.
அச்சத்துடன் விறைத்துப்போய் நின்றவளின் அருகே வந்தான் அவன். இதங்கனை மேலும் ஒடுங்கி உட்கார்ந்தாள். அந்த இருட்டில் நிழல்போல ஒருத்தன் வருவது தெரிந்தானே அன்றி யார் வருகிறார்கள் என்று கணிக்க முடியவில்லை. அடுத்து என்ன நடக்குமோ என்கிற கிலியில் அப்படியே அமர்ந்திருக்க, வந்த உருவம், அவளுடைய தேள்களைப் பற்றியது.
இவளோ பதட்டத்தோடு பற்றிய கரத்தை உதற முயல, அந்த வலிய கரமோ, அவளை வேகமாக எழுப்பிச் சுவரோடு அழுத்தி மோதியது.
இதங்கனை வலியில் துடித்துப் போனாள். மீண்டும் மயக்கம் ஆட்கொண்டுவிடும் போலத் தலை கிறுகிறுத்தது. அப்படியிருந்தும் முயன்று அண்ணாந்து பார்த்தாள். இப்போது ஒற்றை விளக்கொன்று பளிச்சென்று அவளுடைய தலைக்கு மேல் ஒளிர, அதுவரை இருண்ட உலகம் இப்போது ஓரளவு விரிய, அங்கே படமெடுத்த நாகமென நின்றிருந்தான் அவன்.
அரவன்… அதே அரவன். அவளை இந்த நிலைக்குத் தள்ளிய அந்த அரவன் மலைபோல அவளைக் கொல்லும் வெறியுடன் பார்த்துக்கொண்டிருக்க அவனிடமிருந்து தன்னை விடுவிக்கும் பலமில்லாதவளாக.
“ப்ளீஸ்… லெட் மி கோ.. சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது… நம்புங்கள்…” என்றாள் கலக்கத்தோடு.
அதைக் கேட்டதும், எப்போதும் சிரிக்கும் அந்தப் பயங்கர மென்மைச் சிரிப்பைச் சிந்தியவன், மறு கணம், தன் கரத்தால் அவளுடைய குரல்வளையை இறுகப் பற்றிக்கொண்டான். கூடவே சுவரோடு அழுத்தி அவளை மேலே தூக்க, அவனுடைய கரத்தின் பலத்தில் இரண்டடி மேலே தூக்கப்பட்டாள் இதங்கனை.
மூச்சுக் குழாய் தடைப்பட, சுவாசிக்க முடியாது திணறியவள், அவனிடமிருந்து விடுபடத் திக்கித் திணறிக் கால்களை உதற, அந்த இராட்சதனின் பலத்த கரத்திலிருந்து அவளால் இம்மியும் விலகமுடியவில்லை. .
அவனுடைய அழுத்தம் கூடக் கூட, இதங்கனையின் மூச்சுக் காற்று தடைப்படத் தொடங்கியது. விழிகள் பிதுங்கி கண்ணீர் வெளிவரத் தொடங்க,
“அ… ஹக்… அ… என்… ம்…. என்னை…” துடிக்க, அதுவரை அவள் திமிறுவதை ரசித்துக்கொண்டிருந்தவன், பின் என்ன நினைத்தானோ மறு கணம் தன் கரத்தை விட, அப்படியே பொத்தென்று தரையில் விழுந்தாள் இதங்கனை.
அப்படியிருந்தும் சட்டென்று அவளால் மூச்செடுக்க முடிந்திருக்கவில்லை. அங்கசைந்து இங்கசைந்து சிரமப்பட்பட்டு வாயைத் திறந்து திக்கித் திணறி, வெளிவந்த இருமலைச் சமாளித்து, இறுதியாகக் கிடைத்த இடைவெளியில் ஆழ மூச்செடுத்தபோது பெரும் விம்மலே வெளியே வந்து விழுந்தது.
விழிகளில் கண்ணீர் பொங்கி வழிய அவனை நிமிர்ந்து பார்த்து வெறித்தவளுக்கு, அங்கேயே அவனை ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்தில் இருக்கிறோமே என்று தன் மீதே வெறுப்பு வந்தது இவளுக்கு.
இவனோ அவள் வலியையும் வேதனையையும் ஒரு பொருட்டாகக் கண்டுகொண்டானேயில்லை. மறாக அவளுக்கு முன்பாக ஒற்றைக் கால் மடித்து அமர்ந்து, அவளுடைய முடிக் கற்றைகளை வலிக்க வலிக்க இறுகப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
“லிசின்… எது வரை நம்மைப் பற்றி மகிந்தன் தெரிந்து வைத்திருக்கிறான்…?” என்றான் பற்களைக் கடித்தவாறு. இவளோ பதில் சொல்லாமல் அவனையே முறைத்துப் பார்க்க, மீண்டும் அவள் கூந்தலை இறுகப் பற்றித் தன் முகம் நோக்கி இழுக்க இவளுக்கு வலியில் உயிரே போவது போல இருந்தது. ஆனாலும் அவனை முறைத்துப் பார்த்தாளின்றி பதில் சொன்னாளில்லை.
இவனோ அவளுடைய விழிகளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். பின் தன் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தி,
“லிசின்… ஐ ட்ரை நாட் டு ஹேர்ட் யு… மரியாதையாக என் கேள்விக்கு பதில் சொல்… உனக்கு எது வரைக்கும் தெரியும்… மகிந்தனுக்கு எதுவரைக்கும் தெரியும்?” என்றான் பற்களைக் கடித்து வார்த்தைகைளைத் துப்பி. அப்போதும் அவள் பதில் சொன்னாளில்லை. அந்த விழிகளில் எதைக் கண்டானோ, அவளுடைய கற்றை மயிரிலிருந்து தன் கரத்தை விலக்கியவன்,
“இதோ பார், உன் மகிந்தன் உன்னைக் காப்பாற்ற வருவான் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே மறந்துவிடு. நான் நினைத்தாலின்றி, உன்னால் இங்கிருந்து போக முடியாது. வீணாக உன் பிடிவாதத்தால் உனக்குக் கிடைக்கும் வாய்ப்பைத் தொலைக்காதே…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, அவனுடைய காதில் பொருத்திய ஒலிவாங்கி ஏதோ ஒரு செய்தியை அவனுக்குப் பரிமாறியது. அதைக் கேட்டதும், இவனுடைய புருவங்கள் சுருங்க,
“ஹௌ…” என்றவன் சந்தேகத்தோடு இதங்கனையைப் பார்த்தான். பின்,
“அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள்… நாம் இங்கே இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இங்கே இருக்கக் கூடாது. குவிக்…” என்றவன் இதங்கனையை ஏறிட்டான்
“சங்கிலியில் ஒலிப்பதிவு, காதில் ஒலிவாங்கி, ம்…. இடத்தைக் கண்டறியும் கருவியை எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்?” என்று இவன் அழுத்தமாகக் கேட்க அதுவரையிருந்த கலக்கம், பயம் அத்தனையும் துணிகொண்டு துடைத்ததுபோலாக முகம் பளிச்சிட்டது. தன்னை மறந்து,
“மகிந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டானா?” என்றாள் குதுகலமாக. அதைக் கண்டதும், கடுமை ஏற,
“என் கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை…” என்றான் பற்களைக் கடித்தவாறு. இவளோ அவனை அலட்சியமாக ஏறிட்டு,
“என்ன… பயமாக இருக்கிறதா… மகிந்தன் வந்தால் உன்னைக் கைது செய்துவிடுவான் என்று அச்சமாக இருக்கிறதா… இங்கேயில்லை உலகின் எந்த மூலைக்கு என்னை அழைத்துச் சென்றாலும் மகிந்தன் கண்டுபிடிப்பான், உன்னை வேட்டையாடுவான்…” என்று அவள் சூளுரைக்க இவனோ பொறுமை இழந்தவனாகத் தன் நெற்றியை வருடிக் கொடுத்து விட்டுப் பின் அவளை ஏறிட்டு,
“இதோ பார், என் பொறுமையை அதிகம் சோதிக்கிறாய். நீயாக பதில் சொன்னால், எனக்கு வேலை மிச்சம், உனக்கும் சங்கடம் மிச்சம்… எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்…” என்று கேட்க, இவளோ உதடுகளைப் பிதுக்கி,
“என்னிடம் இல்லை…” என்றாள். அதைக் கேட்டதும் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன், இரண்டெட்டில் அவளை நெருங்கி அவளுடைய கரத்தைப் பற்றிச் சுவரோடு மோதி, அவள் உடல் மீது தன் உடலைப் பொருத்தி,
“வெயர் இஸ் இட்…” என்றான் அழுத்தமாக. இவளோ பற்களைக் கடித்தவாறு அவனுடைய நெருக்கத்தைச் சகிக்கத் தொடங்க, இப்போது அவனுடைய உள்ளங்கை அவளுடைய இடையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டது. பற்றிக்கொண்டதோடு நின்று விடாமல் மொல்ல மெல்ல மேலே ஏறத் தொடங்கப் பதறியவளாக அவனைத் தள்ளி விட முயன்ற நேரம், அவனுடைய உடல் அழுத்தத்தில் மேலும் சுவரோடு நசிபட,
“ஏய்… மரியாதையாக… என்னை விடு…” என்றவாறு திணறி விடுபட முயன்றவளுக்கு இம்மியும் அசைய முடியவில்லை. இறுதியில் அவனைத் தள்ளிவிடும் நோக்கில் அவனுடைய மார்பில் கரத்தைப் பதிக்க, அந்தக் கரங்களைப் பற்றித் தலைக்கு மேலாகத் தூக்கி ஒற்றைக் கரத்தால் அவளுடைய இரண்டு கரங்களையும் அழுந்தப் பற்றி, விழிகளால் வெறித்து,
“வியர் இட் இஸ்…” என்றான் கடுமையாக. .
இப்போதும் அவள் பதில் சொன்னாளில்லை. அவனுடைய பயணிக்கும் கரங்களுக்கு அஞ்சி சொல்லிவிடலாம்தான். அதன் பிறகு என்ன நடக்கும். நிச்சயமாக அதை அவளிடமிருந்து எடுத்துச் செயலிழக்கச் செய்துவிடுவார்கள்… அதன் பிறகு மகிந்தன் அவள் இருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பான்…? பற்களைக் கடித்துக்கொண்டு அவனைச் சகிக்க, அவனுடைய கரம் முகம், கழுத்து தோள் என்று பயணித்து அவளுடைய மார்பகங்களை நோக்கி நகரத் தொடங்க, துள்ளி விடுபட முயன்றாள் இதங்கனை. ஆனால் அவனுடைய அழுத்தமான பிடியிலிருந்து அவளால் இம்மியும் விலகமுடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல்,
“ப்ளீஸ் லெட் மி கோ… என்னிடம் எதுவும்…” அவள் முடிக்கவில்லை, அடுத்த அவன் செயலில் துடித்தவளாகத் திமிற, அவனோ அவள் திமிறலை ரசித்துப் பார்த்தவாறு, அவளை நோக்கிக் குனிந்து,
“எங்கே இருக்கிறது?” என்றான் கிசுகிசுப்பாய். பின் அவள் காதுகளுக்கு நேராகத் தன் உதடுகளைக் கொண்டுவந்தவன்,
“இப்போது நான் தொட்டது உதாரணத்திற்காகத்தான். இனியும் நீ சொல்லவில்லை என்றால், என் கரங்கள் அக்குவேறு ஆணுவேறாக உன் தேகத்தை வருடிப் பரிசோதிக்கும்… அதற்குப் பிறகு வாழ்க்கை முழுவதற்கும் என் வருடலை உன்னால் மறக்க முடியாது… கூடவே வேறு எந்த ஆணுடைய வருடலையும் உன்னால் சகிக்க முடியாது… மகிந்தன் உட்பட….” என்றவன், அவள் பதிலுக்காகக் காத்திருந்தான். இவளோ உதடுகளை அழுந்த மூடிநிற்க,
“என் வருடலை நீ ரசிக்கிறாய் என்றால், எனக்கும் மகிழ்ச்சிதான் இதங்கனை…” என்றவன் மேலும் பரிசோதிக்கிறேன் என்கிற பெயரில் அவள் தேகத்தில் கரங்களை அலையவிடத் தொடங்கினான். மெல்ல மெல்லக் கரங்கள் தீண்டத் தகாத இடங்களை நோக்கி நகரத் தொடங்க, அதற்கு மேல் இதங்கனையால் தன் பிடிவாதத்தை இழுத்து வைத்திருக்க முடியவில்லை. நிச்சயமாக அவன் சொன்னது போலச் செய்வான் என்று புரிந்தது. அதன் பிறகு வாழ்நாள் முழுவதற்கும் அந்த வருடலை மறக்க முடியாது. பற்களைக் கடித்தவள்,
“சொ… சொல்கிறேன்… தயவு செய்து என்னை விடு…” என்று திக்கித் தணற, எந்த சிக்கலும் இல்லாமல் மென்னகையுடன் அவளை விட்டு விலகி நின்றான் அரவன்.
இவளுக்கோ சற்று நேரம் எதுவும் பேச முடிந்திருக்கவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவன் கரங்கள் தீண்டி பாகங்கள் அனைத்தும் தீ பற்றிக்கொண்டது போல எரிந்தது. கூடவே உள்ளே ஒரு வித தகிப்பு. தவிப்பு. திணறல்.
நிச்சயமாக அவனோடு தன்னால் போராட முடியாது என்பதைப் புரிந்துகொண்டவளுக்கு, அந்த ‘சிப்’ எங்கிருக்கிறது என்று காட்டினால், மகிந்தனால் அவளைக் கண்டுபிடிக்க முடியாது போய்விடும் என்பது புரிந்தது.
ஆத்திரமும் அவமானமும், ஏமாற்றமும் ஒன்று சேர அரவனை வெறித்தவள்,
“நீ… நன்றாகவே இருக்கமாட்டாய் அரவன்… சத்தியமாக நன்றாக இருக்க மாட்டாய்… இப்போது சொல்கிறேன் கேள்… உன் சாவு என் கையில்தான்…” என்று சீற, இவனோ பொருமையற்ற மூச்சுடன்,
“எங்கே…” என்றான் அடுத்து.
வேறு வழியில்லாமல அவன் முன்னால் வலது கரத்தை நீட்ட, அவனோ, அவளுடைய கரத்தைப் பற்றிப் பார்த்தான். சந்தேகப்படும்படி எதுவும் தெரியவில்லை. திருப்பிப் பார்த்தவன், பெருவிரலால் அவள் கரத்தை வருடிப் பார்த்தான். குறிப்பிட்ட இடத்தில் அவனுடைய பெருவிரல் தடைப்பட்டு நின்றது. திருப்பிப் பார்க்க. கண்டலுடன் சேர்ந்த மேடு தெரிந்தது. அதுவரை அதற்குப் பூச்சுப் பூசி மறைத்திருந்தாள் போல. இப்போது அந்தப் பூச்சு கலைந்து காயம் வெளிப்படையாகத் தெரிந்திருந்தத. அதைக் கண்டதும், ஏளனத்துடன் சிரித்தவன், அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு, தன் பாக்கட்டிற்குள் கை விட்டு எதையோ எடுத்தான். பின் அதன் பொத்தானை அழுத்த மெல்லிய கத்தி ஒன்று தலை நீட்டியது. அவள் என்ன ஏது என்பதை உணர்வதற்குள்ளாகவே, பெருவிரல் அழுத்திய பகுதியில் அழுத்தமாக ஒரு கீறு கீற, துடித்துப் போனாள் இதங்கனை.
“அம்மா…” என்று அலறிக் கரத்தை இழுக்க முயன்றபோதும் அவன் கரத்தை விட்டானில்லை. அடுத்த கணம் வெட்டிய பகுதியை மெதுவாகப் பிதுக்க, அந்த மிகச் சிறிய வஸ்து இரத்தத்துடன் சேர்த்து வெளியே தலை காட்டியது, அதை எடுத்துப் பார்த்தான்.
“பரவாயில்லையே…. இந்த வாட்டி மிகப் பக்குவமாகத்தான் செயல்பட்டிருக்கிறான் உன் மகிந்தன்…” என்று கிண்டலுடன் கூறியவன், அதைத் தரையில் போட்டுக் காலால் ஒரு நசி நசிக்க, அது உடைந்ததா செயல் இழந்ததா என்று கூடத் தெரியவில்லை, இயலாத தன்மையுடன் சிதைந்த அந்த ஜிபிஎஸ் ஐ பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்க, அடுத்த விநாடி, அவளை ஒரு பக்கமா இழுத்துச் சென்றான் அந்த அரவன்.