Wed. Jan 15th, 2025

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 11

(11)

 

அவள் வதங்கிக் கரைந்துகொண்டிருந்த அதே நேரம் அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஏகவாமனின் சிந்தையும் ஒரு நிலையில் இருக்கவில்லை. அது தாரு மாறாகத் தறிகெட்டு நாலா திசைகளிலும் பாய்ந்துகொண்டிருக்க, மனமோ எதையோ எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது.

அன்று அவள் ஏணியிலிருந்த இறங்கியபோது, அவளைத் தாங்கிக்கொண்ட நேரம், பட்டைவிட மென்மையான வயிறு அவன் கரத்தில் பதிந்ததே, அந்த மென்மையை எண்ணும் போதே அவனுடைய உணர்ச்சிகள் கொந்தளித்தன. அந்தக் கொந்தளிப்பிலிருந்து வெளி வர முடியாதவனாகத் தவித்தவன் தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தான்.

அதே கரம்தான்… அதே உள்ளங்கைதான்… ஆனால் என்றுமில்லாதது போல அதில் ஒரு அழகுடன் கூடிய மென்மை தெரியக் குழம்பிப் போனான். கூடவே இன்னும் மெல்லிய குளிர்மை உள்ளங்கரத்தில் ஒட்டியிருப்பது போலத் தோன்ற, தவித்துப்போனான் அந்த ஆண்மகன்.

ஏனோ உடலின் தேடல் மனதிற்குப் பெரும் தவிப்பைக் கொடுக்க, சடார் என்று எழுந்தமர்ந்தான் ஏகவாமன். காய்ந்த உதடுகளை அழுந்த மூடியவன் விழிகளை மூடித் தன் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்குக் கொண்டு வர முயன்று தோற்றான்.

இதுவரை யாருக்காகவும் அவனுடைய உணர்ச்சிகள் இப்படிக் கிளர்ந்து எழுந்ததில்லை. இதுதான் முதன் முறை. அதுவும் ஒரு சில விநாடிகள் தீண்டலில் இப்படிக் கொந்தளிக்கும் என்று கனவிலும் எண்ணவில்லையே…

மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு மின்சாரத்திற்கும் மின் குமிழுக்கும் உள்ள தொடர்புபோல… சும்மா இருக்கும் உடலை மனதின் சலனம்பற்றி எரியச் செய்கிறதே… தாறுமாறாக யோசிக்கச் செய்கிறதே… தப்பாக எண்ணத் தோன்றுகிறதே. அவள் உடலின் மென்மை அது கொடுத்த சுகம்… வேறு உலகத்திற்கு இழுத்துச் செல்கிறதே… அவள் வேண்டும் என்று கேட்கிறதே… என்று எண்ணியவனுக்கு அந்த உணர்வுகள் கொடுத்த வலியில் பெரிதும் தவித்துப் போனான்.

முழங்கைகளைத் தொடையில் பதித்தவன், உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்து,

‘கடவுளே… இதுவரை எந்தப் பெண்ணின்மீதும் சலனமில்லாதிருந்தேன்… என் பாட்டிற்கு மனித மிருகங்களை வேட்டையாடிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது… ஏன்… இப்படித் தடுமாறுகிறேன்… என் கடிய மனம் இளகிப் போகிறதே… அழிக்கும் ஆவேசம் தணிந்து போகிறதே… அவளுடைய ஒற்றைப் பார்வை என்னை மொத்தமாய் வீழ்த்திச் செல்கிறதே… அதுவும் என் தம்பியின் மனைவி என்று பொய்சொல்லி ஏமாற்ற வந்தவளிடமா என் மனம் சாயவேண்டும்…?” என்று தவித்தவனுக்குத் தன்னை எண்ணியே பெரும் அவமானமாக இருந்தது.

கூடவே முதன் முறையாக அவளைக் கண்டது நினைவுக்கு வந்தது. அவளைத் தொலைவிலிருந்து கண்டபோதே மனதில் ஒரு வித சலனம். இதுவரை யாரிடமும் அவன் உணராத புதுவித உணர்வ அது. அதுவும் எந்த வித ஆடம்பர ஒப்பனையுமில்லாமல். விழிகளில் கேள்விகளையும் வலிகளையும் சுமந்து அவனைப் பார்த்தபோது, அந்தக் கணமே விரைந்து சென்று அவள் வலியைத் துடைக்கவேண்டும் என்று பரபரத்த உள்ளத்தை அவன் அடக்கப் பட்ட பாடு.

அது மட்டுமா, இவள்தான் அவனைப் பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது என்று தெரிந்தபோது கூடக் கோபம் கொல்லாமல் அவளைப் பற்றி ஆராய்ந்தானே… இதுவரை அவன் இப்படி இருந்ததில்லையே… அவனுக்கு என்ன ஆனது… அதுவும் எதிரியின் கையாளைக் கொன்றபோது அவள் விழிகளில் தெரிந்த அதிர்ச்சி, பயம், பதட்டம்… அந்த நிலையிலும், அந்தக் கையாளுக்குத் துணையாக வந்தவள் என்கிற சந்தேகம் இருந்தாலும் அவளிடம் விரைந்து சென்று அவள் கரங்களைப் பற்றி, “ஒன்றுமில்லை… பயப்படாதே என்று சொல்லத்தானே மனம் விளைந்தது…

அதுவும் அவள் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றைக் கண்டபோது அவன் பட்ட ஏமாற்றம்… இப்போது நினைத்தாலும் உடல் திகு திகு என்று எரிந்தது. அதை அடக்க எத்தன சிரமப்பட்டான். வேறு ஒருத்தனின் மனைவி என்றபோதே உள்ளுக்குள் எரிந்தவன், அந்த மஞ்சள் கயிற்றுக்குரியவன் அவனுடைய தம்பி என்று சொன்னபோது, அவன் எப்படி உணர்ந்தான். அந்த உணர்வுக்கு ஏதாவது பெயர் வைக்க முடியுமா என்ன? யாரோ தீக்குழம்பை அள்ளி முகத்தில் வீசியது போல அல்லவா உணர்ந்தான். அவள் கூறியது உண்மையாக இருக்குமா என்று அவளைப் பற்றி விசாரித்து அறிந்த பின் ஒரு பக்கம் அப்பாடா என்று இருந்தாலும் இன்னொரு பக்கம், சே! அவளும் மற்றவர்களைப் போல ஏமாற்றுப் பேர்வழிதானா? என்று சோர வைத்ததே… அவள் நேர்மையற்றவள் என்று தெரிந்தபோது அவன் அடைந்த ஏமாற்றம்.

அவனுக்குக் கிடைத்த அந்த அறிக்கையை இப்போது நினைத்தாலும் உடல்பற்றி எரிந்தது. விரைந்து சென்று அவளைப் பற்றி உலுக்கி, எதற்காகப் பொய் சொன்னாய் என்று கேட்கவேண்டும் என்கிற ஆவேசம் தோன்றியது. விழிகளை மூடியவனுக்கு அன்று படித்துத் தெரிந்துகொண்ட அறிகை நினைவுக்கு வந்தது.

அலரந்திரியின் பராமரிப்பிலிருந்தவனின் பெயர் காருண்யன். அவர்கள் மணம் முடித்தவர்கள் என்பதற்குத் தாய் தந்தையைத் தவிர வேறு எந்தச் சாட்சியோ ஆதாரங்களோ கிடையாது. திருமணம் முடித்த அன்றே விபத்துக்குள்ளானவன், கோமாவிற்குச் சென்றுவிட, மூன்று வருடங்களின் பின்பு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதால், உடலை அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது… தவிர அவர்களுக்கும் காருண்யன் திருமணம் முடித்தது பற்றி எதுவும் தெரியாது. பத்து வருடங்களுக்கு முன்பு தொலைந்து போனவனைப் பிணமாகத்தான் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதை அந்த மருத்துவமனையும், காருண்யனின் உடலை வாங்கிச்சென்ற அவனுடைய பெற்றோரும் உறுதி செய்திருக்கிறார்கள். ஆக அவள் தன் கணவன் என்று சொல்லப்படுகிற காருண்யன் என்பவன் இறந்தது உன்மை, ஆனால் அந்தக் காருண்யன்தான் இவனுடைய தம்பி ஜெயவாமன் என்றது சுத்தப் பொய்.

காரணம் மருத்துவ அறிக்கையில் காருண்யன் விபத்துக்குள்ளான நாளும், ஜெயவாமன் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளும் வேறு வேறு. காருண்யன் என்று சொல்லப்படுகிற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு கிழமை கழிந்தே ஜெயவாமன் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறான். தவிர ஜெயவாமன் மருத்துவமனையின் பராமரிப்பிலேயே கடந்த மூன்று வருடங்களாக இருந்திருக்கிறான். அவன் இருந்தபோது என்ன என்ன மருத்துவம் பார்க்கப்பட்டது என்கிற அத்தனை ஆதாரங்களையும் அவனிடமே மருத்துவமனை கொடுத்துவிட்டது.

ஆகக் காருண்யன், ஜெயவாமன் இரண்டும் வேறு வேறு… எப்படியோ ஜெயவாமனின் பின்புலத்தையும் அறிந்துகொண்ட அலரந்திரி, அதைத் தனக்குச் சாதகமாக்க எண்ணி, என்னிடமிருந்து பணம் பறிக்கத் தான்தான் ஜெயவாமனின் மனைவி என்று சொல்லி வந்திருக்கிறாள்… அவனுடைய மனைவி என்றதும், கொஞ்சப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுவேன் என்று நினைத்திருக்கிறாள். இல்லை அவனுடைய பெயரைக் கெடுப்பேன் என்று மிரட்டி, ஒரு தொகையைக் கறந்துவிடலாம் என்று திட்டம் போட்டிருப்பாள். பாவம்… அவளுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், ஆரம்பத்திலேயே அவனை எய்க்க யோசித்திருக்க மாட்டாள்.

ஆனால் அவள் அறியாத ஒன்றும் உண்டு. ஜெயவாமனின் மனைவியென்று சொல்லி வந்ததால், அவள் அறியாமலே பலத்த சிலந்தி வலையொன்றிற்குள் சிக்கிவிட்டாள். அவள் மட்டும் பெரிய சிக்கலில் மாட்டாமல் இருந்திருந்தால், அவளைத் தேடி அவன் இங்கே வந்திருக்கவும் மாட்டான்… தேவையற்று இந்தச் சின்னத் தொழிற்சாலையை வாங்கியிருக்கவும் மாட்டான். பத்தோடு பன்னிரண்டாக மறந்தும் போயிருப்பான்…

ஆனாலும் மனதில் சின்னதாக ஒரு குறுகுறுப்பு.

‘அவளுக்கு என்ன நடந்தால் இவனுக்கென்ன… இவன் எதற்காகத் தன் வேலைகளை விட்டுவிட்டு, அவளைப் பின் பற்றி வரவேண்டும்…? காசை விட்டெறிந்தால் அவளைப் பாதுகாக்க ஆட்களா இல்லை? இவன்தானா வரவேண்டும்? அப்படி என்ன அக்கறை அவள்மீது?’ பதிலில்லாத கேள்விகள். அடிக்கடி இந்தக் கேள்விகள் மனதில் எழும் போதெல்லாம், ‘எங்கள் குடும்பத்தின் பெயரில் அநியாயமாக ஒரு உயிர் போகக் கூடாது என்கிற அக்கறைதான்…’ என்ற மனம் சமாதானப் படுத்திக்கொண்டாலும், அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவளைப் பாதுகாத்தே ஆகவேண்டும் என்கிற ஆவேசம் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

அவன் தன் நினைவில் உழன்றுகொண்டிருக்க, அவனுடைய அறைக் கதவு தட்டுப்பட்டது. அதுவரை வேறு உலகில் நனைந்துகொண்டிருந்தவன், ஒரு பெரிய மூச்சுடன் அனைத்தையும் மூட்டைகட்டி ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, தலையைத் திருப்பி,

“கம் இன்…” என்றான். சங்கரன்தான் உள்ளே வந்திருந்தார்.

“சார்… நம்முடைய நிறுவனம் என்ன என்ன ஆடைகளை அனுப்ப வேண்டும் என்கிற செய்திகள் இங்கே இருக்கிறது…” என்றவாறு நீட்ட அலட்சியத்துடன் அதை வாங்கியவன், அதை மேசையின் ஓரமாகப் போட்டுவிட்டு,

“அந்தப் பெண்… வைத்தியரிடம் போனாளா?” என்றான் ஏகவாமன் எதோ அக்கறையில்லாதவன் போல.

“அந்திரியையா கேட்கிறீர்கள் சார்… தெரியவில்லையே… விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றாள்…” என்று கூற,

“சரி…” என்றவன் சுட்டுவிரலால் தன் நெற்றியின் மையப்பகுதியை அழுத்திக் கொடுத்துவிட்டு,

“ஏற்புக்கு ஊசி போட்டிருப்பாள் அல்லவா?” என்றான் அடுத்து.

அவருக்கு எப்படித் தெரியும்? ஊசி போட்டாளா இல்லையா என்று…? என்று அவர் குழம்ப, நிமிர்ந்து பார்த்தவன்,

“உங்களைத்தான் கேட்டேன் சங்கரன்… ஏற்புக்கு ஊசி போட்டிருப்பாளா?” என்றான் ஏகவாமன் எரிச்சலுடன். இவரோ எச்சிலைக் கூட்டி விழுங்கி

“எ… எனக்கு எப்படித் தெரியும் சார்…” என்று நடுங்க,

“இதுதானா வேலையாட்களின் மீது நீங்கள் காட்டும் அக்கறை…?” என்று சுள்ளென்று விழுந்தவன்,

“போங்கள்… போய் வேலையைப் பாருங்கள்…” என்று கர்ஜித்துவிட்டு, அவள் நினைவுகளிலிருந்து வெளி வர முடியாது தவித்துக்கொண்டிருந்த வேளையில் அங்கே குடிசையில் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்த அலரந்திரி மெதுவாகத் தன் விழிகளைத் திறந்தாள்.

எழுந்த போதே, இமைகள் இரண்டும் வீங்கி எரிச்சல் தந்தன. நீண்ட நேரமாக அழுததால் வந்த வினை. எழுந்தவள், கண்களை அழுந்தத் துடைத்தவாறு மங்கிப்போன கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவள், தன்னையே பார்க்கச் சகிக்காமல் சலிப்புடன் தொப் என்று அப்படியே சுவரோடு சாய்ந்தமர்ந்தாள்.

மீண்டும் அந்த ஏகவாமன் நினைவுக்கு வந்தான். கூடவே அவன் கரத்தின் தொடுகை உணர்ச்சியும் இணைந்து வர, வயிற்றில் மீண்டும் ஒருவித கூச்சம்.

தன்னையும் மறந்து ஒரு கரத்தால் இடையை அழுந்தத் துடைத்து விட்டவளுக்கு, இனி ஒரு போதும் அவன் இருக்கும் இடத்தில் தன்னால் நிலைத்து இருக்க முடியாது என்று புரிந்தது. அவனைச் சந்தித்தால், மறக்க நினைக்கின்ற சம்பவங்கள் மீண்டும் நினைவுக்கு வருவான். கூடவே இறந்துபோன காருண்யன் கண் முன்னால் வந்து நின்று சிரிப்பான். ஏதோ தவறு செய்ததுபோல மனம் தவிக்கும். இது எல்லாம் தேவையா?

சுலபமாக வேலைக்குப் போவதில்லை என்று முடிவு செய்தாகிவிட்டதுதான். ஆனால், அது சுலபமா என்ன? அவளுடைய என்சாண் உடம்பில் வயிறு என்று ஒன்றிருக்கிறதே. அது பசிக்கும் போதெல்லாம் அலறுமே… இவளுடைய ரோசம் அதற்குத் தெரியப் போகிறதா என்ன? அது அதன் பாட்டுக்கு அழத் தொடங்கிவிடும். அதை அமைதிப் படுத்த ஏதாவது சாப்பிடவேண்டும். சாப்பாடு சும்மா இருக்கிற இடத்தில் ஓடி வந்துவிடுமா என்ன? அதற்குப் பணம் சம்பாதிக்க வேண்டாமா…?

அவள் படித்தது எம் எஸ் சி பாருங்கள். அவளுக்காகவே பெரிய பெரிய நிறுவனம் எல்லாம் வேலை கொடுப்பதற்காகக் காத்திருக்கிறது. அவளுடைய நிலைக்கு இந்தத் தையல் நிலையத்தில் வேலை கிடைத்ததே பெரிய விஷயம். அதுவும் நிலையில்லாமல் போய்விட்டதே.

சோர்வும் யோசனையுமாக விரல் நகங்களைக் கடிக்கத் தொடங்கியவள், தன்னை மறந்து சுட்டுவிரலை அழுந்தக் கடிக்க வேதனையில் உயிர் போய் வந்தவளாக முகத்தைச் சுழித்தாள். அப்போதுதான் விரல் காயத்தைப் பார்த்தாள்.

அது கண்டிக் கறுத்துப்போயிருந்தது. போதாததற்கு வீங்கியும் இருந்தது. அவன் சொன்னதுபோல வைத்தியரிடம் சென்று காட்டியிருக்கலாமோ…? யோசனையுடன் விரலைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். காய்ந்த இரத்தத்துடன் விரலைப் பார்க்க அசிங்கமாக இருந்தது. கூடவே சுள் சுள் என்று குத்திய வலியைத் தாங்கமுடியாமல் உதடுகளைக் கடித்தவளுக்கு மனம் மீண்டும் வேலையில் வந்து நின்றது.

சோர்வுடன் எழுந்தவள், பக்கத்துக் குடிசையிலிருக்கும் சுமதியைத் தேடிச் சென்றாள்.

சுமதி அருமையான பெண்மணி. கணவனில்லை. நண்டும் செண்டுமாக நான்கு பிள்ளைகள். இவள் தனி ஒருத்தியாகப் பல இடங்களுக்குச் சென்று வீட்டு வேலைகள் செய்து தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் சிங்கப்பெண்… அவளுக்கு ஒரு சிரமம் என்றால் தயங்காமல் தட்டிக் கேட்பவளும் அவள்தான்.

சுமதியின் குடிசையை நெருங்கியவள், கதவைத் திறந்து எட்டிப் பார்க்கக் குடிசை காலியாக இருந்தது. இன்னும் வேலையிலிருந்து வரவில்லை போல…’ என்று எண்ணியவள், சோர்வுடன் வெளியே வந்தபோது, அவள் குடிசைக்கு முன் புறம் வசித்த அந்த அம்மாள் தன் உதட்டைச் சுளுக்கி,

“சே… வெளியே கிளம்பும் போதே இந்தப் பீடையின் முகத்தில் விழிக்கவேண்டியதாயிற்றே… போன காரியம் உருப்பட்டால் போலத்தான்…” என்று சேலைத் தலைப்பை உதறி இடையில் செருகிக் கொண்டு வெளியேற இவள் முகம் வாடிப் போனது.

ஏன் இந்த மனிதர்கள் இப்படியாக இருக்கிறார்கள்? என்று உள்ளம் கலங்கியது. அவள் விரும்பியா விதவை என்கிற பட்டத்தைப் பெற்றாள்… அவள் வேண்டியா வறுமையின் பிடியில் சிக்கினாள்… எப்போதும் போல மனத்தைக் குத்திய முள்ளைத் தூக்கி எறிய முடியாமல் தன் குடிசைக்குள் நுழைந்தவளுக்குச் சற்றுப் பசித்தது.

நைந்துபோன கைப்பையைத் திறந்து அதிலிருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டு பத்து நிமிட நடையில் சாப்பாட்டுக் கடையை நோக்கிப் போகத் தொடங்க அந்தக் குறை மாதத்தில் பிறந்த தறுதலைகள் கிடைத்த இடத்தில் அமர்ந்தவாறு போய் வரும் பெண்களுக்குப் புள்ளிகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்க எப்போதும் போலக் கண்டும் காணாததுமாகக் கடையை நெருங்கி ஒரு பொட்டலம் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, வெளியே வந்தபோது, அந்தக் கடையிலிருந்த தொலைப்பேசியைக் கண்டாள்.

இனி வேலைக்கு வரப்போவதில்லை என்பதை இப்போதே அறிவித்தால் என்ன? சிந்திக்கக் கூட நேரம் வைக்காமல், கடைக்காரரிடம் தோலைபேசி எடுப்பதற்காக அனுமதி பெற்றுவிட்டு இலக்கத்தை அழுத்த, மறு பக்கம் அழைப்புப் போனது. ஏனோ அவளையும் அறியாமல் கரங்கள் நடுங்கின. கூடவே நாளை என்கிற யோசனையும் இவளைப் படுத்தியது. தன்னை மறந்து உதடுகளைக் கடித்தவாறு சங்கரனின் குரலுக்குக் காத்திருந்தால், அவளுடைய காதைக் கிழித்துச் சென்றது ஏகவாமனுடைய அழுத்தமான ஆழமான குரல்.

அவனுடைய குரலைக் கேட்டதும், விதிர் விதிர்த்துப் போனாள் அலரந்திரி. மறுபக்கம் அவன் நிற்கிறான் என்கிற எண்ணமே, சொல்ல வந்த அத்தனை வார்த்தைகளையும் மறக்கடித்துச் செல்ல, மொழியே புரியாதவள் போலப் பேந்தப் பேந்த விழித்தாள் அலரந்திரி. தொண்டை வறண்டு போனது. வளைந்த இடையின் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. பதில் சொல்ல முடியாதவளாக, மறந்தவளாக மலைத்துப் போய் நிற்க,

“ஹலோ… ஹலோ…” என்கிற பொறுமை இழந்த குரல் மறு பக்கமிருந்து கறாராகக் காதில் பாய, சடார் என்று தெலைபேசியை அதன் தாங்கியில் வைத்துவிட்டு, எங்கே அதற்குள்ளிருந்து இவளை விழுங்குவதற்காக, குதித்து வெளியே வந்துவிடுவானோ என்பது போல, அந்தத் தொலைப்பேசியையே சற்று நேரம் அச்சத்துடன் பார்த்தாள்.

இப்போது என்ன செய்வது? சங்கரன் சாருக்கு எடுத்தால் இவன் எடுக்கிறானே. என்று எச்சில் கூட்டி விழுங்கியவாறு யோசித்தவள், சற்றுப் பொருத்து எடுத்துப் பார்க்கலாம் என்கிற எண்ணத்தில், ஒரு கதிரையில் அமர்ந்தாள்.

சற்று நேரத்தில் ஏதோ சங்கடமாக, ஒவ்வாமையாகத் தோன்றத் திரும்பிப் பார்த்தாள். அதுகள்தான்… வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சொற்களைச் சமிக்ஞையில் செய்து காண்பித்துக்கொண்டிருக்க, இவளுக்கு அது சுத்தமாகப் புரியவில்லை. ஆனாலும் பிறரின் முகச் சுழிப்பிலிருந்து அவர்கள் கூறுவது அருவெறுக்கத்தக்கது என்பது புரிய, அவசரமாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். என்றாவது ஒரு நாள், இவர்களுக்குரிய தக்க பாடம் கிடைத்தே தீரும் என்கிற உறுதியுடன் நேரத்தைக் கழித்தவள், அடுத்த பதினைந்தாவது நிமிடம் தொலைப்பேசியை எடுத்தாள்.

அவளுடைய நல்ல காலம் இப்போது சங்கரன்தான் எடுத்தார்.

அவளுடைய குரலைக் கேட்டதும், அவளையும் அறியாது உடல் நிம்மதியில் தளர்ந்தது. அவரோ இவளுடைய குரலைக் கேட்டதும்,

“என்னம்மா… காயம் இப்போது எப்படி இருக்கிறது? மருத்துவரிடம் காட்டினாயா? ஏற்பூசி போட்டாயா? வைத்தியர் என்ன சொன்னார்? நாளைக்கு வேலைக்கு வந்துவிடுவாயல்லவா? ஏதோ கூட்டம் வைக்க வேண்டும், அனைவரையும் நாளைக்கு ஒன்று கூட வேண்டுமாம்… நீ நாளை வருவாய்தானே…?” என்றார் சங்கரன் அவசரமாக.

“நாளை… இ… இல்லை சார்… நான்…” என்று அவள் முடிப்பதற்குள்ளாக

“ஓ… கை நன்றாக வலிக்கிறதா?” என்றார் பரிதாபமாக.

“அதெல்லாம் ஒன்றுமில்லை சார்… நான்… நான் இனி இந்த வேலைக்கு வரப்போவதில்லை சார்… அதைச் சொல்லத்தான் தொலைபேசி எடுத்தேன்…” என்ற இவள் அவசரமாகக் கூற. அதைக் கேட்டதும், மறு பக்கம் சற்று நேரம் அமைதி காத்தது. பின்,

“என்ன…! நீ இனி வேலைக்கு வரப்போவதில்லையா? என்னம்மா… இப்படித் திடீர் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதுவும் புதிய ஆடர் வந்திருக்கிறபோது இடையில் நின்றால் என்ன செய்வது… இனி புதிதாக ஆட்களை எடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து… நடக்கும் காரியமா… இப்போது போய் இப்படிச் சொல்கிறாயே…” என்றார் சங்கரன் கோபத்துடன் கேட்க, அலரந்திரி தன்னையும் மறந்து கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்துப் பார்த்தாள்.

அவள் இல்லையென்றால் இந்தத் தொழிற்சாலை மூழ்கிவிடுமா என்ன?… அங்கே வேலைசெய்யும் அறுபது பேரில் அவளும் ஒருத்தி. அதுவும் எடுபிடி வேலையோடு தையல் வேலையும் செய்யும் சாதாரணப் பெண்… இவர் சொல்வதைப் பார்த்தால், இந்தத் தொழிற்சாலையே நட்டத்தில் மூழ்கிவிடும் போல அல்லவா பேசுகிறார். ஏற்கெனவே நஷ்டத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது… இதில் புதிய ஆர்டர் வேறா…? இதென்ன புதுக் கதை… எரிச்சலுடன் எண்ணியவள், மீண்டும் கைப்பேசியைக் காதில் வைத்து,

“மன்னித்துவிடுங்கள் சார்… இனி என்னால் வர முடியாது…” என்று அவள் முடிப்பதற்குள்ளாகக் கைப்பேசிக் கரம் மாறியிருக்க வேண்டும்,

“விருப்பப்பட்டால் வேலைக்குச் சேர்வதற்கும், வேண்டாம் என்றால் விட்டு விலகுவதற்கும் இதென்ன வேலைத்தளமா இல்லை சந்தைச் சாவடியா? எதுவாக இருந்தாலும் அவசரப்படாமல் ஆறுதலாக யோசித்து முடிவை எடு… புரிந்ததா?” என்று அழுத்தமான கடுமை நிறைந்த குரல் மறுபக்கமிருந்து வர, மறு கணம், எதையும் யோசிக்காமல் அலரந்திரி தொலைவாங்கியயை, அதன் தாங்கியில் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது ஏனோ உடல் வியர்த்துக் கொட்டியது. கூடவே இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது.

கடவுளே அவன் குரலைக் கேட்டாலே இதயம் படபடக்கிறதே… அவனைப் பார்த்தால்… மூகூம்… அந்தப் பக்கம் போகாதிருப்பதே சால மதி… என்று எண்ணியவள், பேசியதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

அந்த ரோட்டோர ரோமியோக்களின் பார்வையிலும், அவர்களின் செயலிலும், போதாததற்கு அவர்களின் அசிங்கமான பேச்சிலும் கூனிக் குறுகிப் போனாள் அலரந்திரி.

“எருமை மாடுகள். குச்சித் தடிக்குத் துணியைக் கட்டினாலும் இப்படித்தான் வழிந்து சாகுங்கள்… இவற்றைச் சொல்லிக் குற்றமில்லை. இவற்றைப் பெற்றுப் போட்ட பெண்களைச் சொல்லவேண்டும்… பெற்று போட்டால் ஆச்சா… அவை என்ன செய்கிறது என்று கவனிக்கவேண்டாம்… ஆண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு நெஞ்சை நிமிர்த்தி எனக்கு ஆண் குழந்தை என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது… அவற்றை ஒழுங்காக வளர்க்கவேண்டாமா… தறுதலைகள்… இப்படி வளரும் பிள்ளைகள் ஒரு சமூகத்தை எப்படிக் கட்டியாளப் போகிறார்கள்… இவர்களின் கரங்களிலிருக்கும் சமூகம் உயர்ந்தால் போலத்தான்… பன்னாடைகள்… இவை உயிரோடு இருப்பதும் ஒன்றுதான்… இல்லாமல் போவதும் ஒன்றுதான்… இந்தப் பூமிக்குப் பரமாக இவை பிறக்கவில்லை என்று யார் அழுதார்கள் சே…” என்று மனதிற்குள் சினந்தவள் பின்னிய கால்களைச் சமப்படுத்த முயன்றவாறு அவர்களைத் தாண்டிப் போக முயல,

“டேய்… குடிசை வீட்டுத் தாமரை போகுதடா…” என்றான் ஒருவன்.

சேலைக்குள்ளாகப் பளிச்சென்று தெரிந்த இடையைப் பார்த்து இழித்தவாறு”டேய் இடுப்பைப் பார்ரா… கடைந்தெடுத்த பளிங்குச் சிலைபோல…” என்றான் மற்றவன்.

அதைக் கேட்டதும் பதற்றத்துடன் இடது கரத்தால் இடையைத் தொட்டுப் பார்க்க, சேலை சற்றுக் கீழிறங்கி இடை வெளியே தெரிய. அவசரமாகச் சேலையை மேலே தூக்கி விட்டவள், முந்தானையால் இடையை மறைத்துக்கொண்டு தன் வேகத்தைக் கூட்ட, இன்னொருவன், அவள் மார்பின் எழிலைக் கண்டு,

“டேய்… காய் பழுத்துவிட்டதா தெரியவில்லையே…” என்றான் காய்ந்த வாயைத் துடைத்தவாறு…,

“அதைப் பறித்துப் பார்த்தால்தான்டா தெரியும்…” என்றான் இன்னொருவன்… அதைக் கேட்டதும் அலரந்திரியின் சினம் உச்சத்தைத் தொடத் தொடங்கியது.

வந்த கோபத்துக்கு அவர்களை நெருங்கி ஒவ்வொருத்தரினதும் கன்னத்தில் பளார் பளார் என்று நான்கு அறை வைக்கவேண்டும் என்கிற ஆவேசம் பிறந்தது. அதற்குப் பிறகு? அவளால் இந்தத் தெருவில் நிம்மதியாக நடக்க முடியுமா? அவர்களுக்குப் பின்னால் பெரிய பின்புலமிருக்கிறதே… இவர்களுக்குப் பதிலாக அதல்லவா பேசும்… அதன் பின்… இந்தக் குடிசையில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே அவள் இருக்க முடியாது. வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதை விட, துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பதற்கிணங்க புத்திசாலித்தனமாக விலகிப் போவதே சாலச் சிறந்தது.

காது கேட்காதவளாக நடையைக் கட்ட, அவளுடைய பின்னழகைக் கண்டு சீட்டியடித்த ஒருவன்,

“அதுதான் கட்டியவன் மண்டையைப் போட்டுவிட்டானாமே… தனிமையில் இருக்கப் பயமாக இருக்குமே… வேண்டுமானால் உதவிக்கு வரலாமா?” என்று ஒருத்தன் கேட்க,

“ம்கூம்… உயிரோடு இருந்திருந்தால் மட்டும்… பிள்ளையைக் கொடுத்துவிடுவானா?” என்று கிண்டலாக மற்றைய ஒருவன் சொல்ல,

“வேண்டுமானால் நான் கொடுக்கவா?” என்றான் முதலாமவனன்.

“எதையடா?” என்று மூன்றாமவன் கேட்க,

“வேறு எதை… புள்ளையைத்தான்டா…”

“அதுக்கு ஆண்மை இருக்கவேண்டும்டா…”

“வேண்டுமானால் பரிசோதித்துப் பார்க்கலாமா?” என்றதும் கொல்லென்று அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.

அலரந்திரிக்கோ உடல் எல்லாம் தீப்பற்றி எரிவதுபோலத் தோன்றியது. பெண் என்பதற்காகவே வார்த்தைகளால் வதைபட வேண்டுமா இல்லை ஆண் என்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாமா? அவள் உள்ளுக்குள்ளேயே எரிமலையாக வெடித்துக்கொண்டிருக்க,

“என்னடா… எப்படிக் கூப்பிட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறதே…”. என்றான் பரிதாபமாக.

“இப்போது நம் பக்கம் திரும்ப வைக்கிறேன் பார்…” என்ற பரட்டைத்தலை ஒன்று, கீழே இருந்த சிறிய கல் ஒன்றை எடுத்தது அவள் பின்புறமாக விட்டெறிய, அது கச்சிதமாகப் படவேண்டிய இடத்தில் பட்டுக் கீழே விழச் சுளீர் என்கிற வலியுடன் ஒரு கணம் அதிர்ந்துபோய் நின்றாள் அலரந்திரி.

அதற்கு மேலும் பொறுமை இழந்தவளாகப் பெரும் சீற்றத்துடன் திரும்பியவள், தன் கையிலிருந்த சாப்பாட்டுப் பையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டுச் சுத்தவரப் பார்த்தாள். அங்கே பெரிய கட்டையொன்றிருக்க, ஓடிப்போய் அதை எடுத்தவள்,

“டேய்… பன்னாடை நாய்களா… யார் மேலே கல்லெறிந்து விளையாடுகிறீர்கள்… நீங்கள் யாரும் அக்கா தங்கையோடு பிறக்கவில்லை… போய் உன் அக்காவுக்கும் தங்கைக்கும் கல்லெறிந்து பாருங்கள்டா… தறுதலை நாய்களா… போனால் போகிறது என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தால்…” என்றவள் வேகமாக அவர்களை நெருங்கிக் கண் மண் தெரியாமல் விளாசத் தொடங்க, அவளுடைய அந்த ஆவேசத்தைச் சத்தியமாக அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும். அவள் அடிப்பது கூட உறைக்காமல் ஒரு கணம் அதிர்ந்துபோய் நின்றிருந்தனர்.

நாய் கூட நாம் ஓடும் வரைதானே துரத்திக்கொண்டு வரும். நின்று திரும்பிப் பார்த்தால் அது இரண்டடி பின்னால் வைத்து ஓடத் தயாராக இருக்கும். அந்த நிலையில்தான் அந்த ரோமியோக்கள் நின்றிருந்தன.

அலரந்திரியோ இருபத்து நான்கு கரம் கொண்ட பத்ரகாளியாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண் பொறுமையில் பூமாதேவியாகவும் இருப்பாள்… சீற்றம் வந்தால் மகா காளியாகவும் மாறுவாள் என்பதை அவள் நிரூபித்துக்கொண்டிருந்தாள்.

“ஏன்டா… உன்னைப் பெத்துப்போட்டவளும் ஒரு பெண்தான்டா… இப்போது நீ எனக்கு என்ன செய்தாயோ… நாளைக்கு உன் அம்மாக்குப் போய்ச் செய்வாயாடா? ஒரு பெண் நிம்மதியாகத் தெருவில் போக முடிகிறதா? எப்போதுதான்டா எங்களை நிம்மதியாக இருக்க விடப்போகிறீர்கள்… நாடு அதலபாதாளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறதே… அதை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்று யோசிப்பதை விட்டுவிட்டு, பெண்களுக்கு மதிப்பெண்களா போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்… சே… குழந்தைகளிலிருந்து கிழவிகள்வரைக்கும் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய நீங்களே பரதேசிகள் போல நடந்துகொண்டால்… பெண்களை யார்தான் பார்த்துக்கொள்வார்கள்… தெருப் பொறுக்கிகளே… குழந்தை தரப்போகிறாயா நீ… நாயே… அதுக்கெதுக்குடா நீ… தெருவில் போகும் பிச்சைக்காரன் போதாது?… ஆண்மையென்றால் குழந்தை மட்டும் கொடுப்பதுதானா…? அவளைப் பாதுகாப்பதில் ஆண்மை இருக்கவேண்டும். அவளை மதிப்பதில் ஆண்மையிருக்கவேண்டும்… பெண்ணைப் போற்றுவதில் ஆண்மையிருக்கவேண்டும்… இப்படி ஐந்து நிமிடம் படுத்து எழுவதில் ஆண்மை இருக்கக் கூடாது…. உண்மையான ஆண்பிள்ளை என்றால், நடத்தையில் காட்டுங்கடா…” என்று கர்ஜித்தவள், தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் சோரும் வரைக்கும் தாறுமாறாக விளாசத் தொடங்கினாள்.

ஒரு கட்டத்தில் உடல் சோர்ந்து போக, தனக்குப் பின்னால் யாரோ வருவது தெரிய, வந்தவரை அடிக்க ஆவேசமாகக் கட்டையை உயர்த்தி வீசியவாறு திரும்பியவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் பெரும் அதிர்வுடன் தான் செய்ய விளைந்த காரியம் மறந்துபோய்ச் சிலையாக நின்றாள்.

What’s your Reaction?
+1
21
+1
0
+1
8
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!