Wed. Dec 4th, 2024

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 1

(1)

அதிகாலைச் சூரியன் கிழக்குத் திசையில் மெதுவாக விழிகளைத் திறந்து, தன் பொன் கதிர்களைக் கிடைத்த இடங்களை எல்லாம் நிரப்பித் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய நேரம். அடடே மன்னவன் வந்தானடி என்பது போலத் தாமரை மலர்கள் இதழ்கள் விரிக்க, சூரியகாந்தி மலர்களோ கதிரவனின் கரத்தின் வருடலுக்காக ஏக்கத்துடன் வானைப் பார்க்கத் தொடங்க, அந்தப் பகலவன் காமம் கொண்டோ இல்லை காதல் கொண்டோ, தன் கரங்களால் புவி மகளை வருடிக்கொண்டு மெல்ல மெல்ல மேலேறிச் சென்றுகொண்டிருந்தான்.

அந்த நேரம், ஓட்டுக் குடிசையின் வெளிப்புறத்தில் கரங்களைப் பின்புறமாகக் கட்டியவாறு, மண் சுவரோடு சாய்ந்து நின்றிருந்தாள் அவள்.

விழிகள் மூடியிருந்தன… பரவிவரும் கதிரவனின் தெளிந்த கரங்கள் தன் மீது படுமோ… படுமோ… என்கிற ஏக்கத்துடன் அவன் வருடலுக்காகக் காத்திருந்தவளுக்கு, அன்றும் அவளை ஏமாற்றிச் சென்றான் கதிரவன்.

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கும் காலைதான். எந்த மாற்றமும் இல்லாது அதே அழகுடன் ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது… ஆனால் வீட்டின் மண் சுவரில் சாய்ந்திருந்தவளுக்கு? சூரியனின் பிறப்பால் உலகமே புத்துயிர் பெறுகிறது. அவளுடைய வாழ்க்கையில் மட்டும் அது ஏன் நடக்கமாட்டேன் என்கிறது… கனவுகளும், கற்பனைகளும், ஏன் வாழ்க்கை கூடக் கானல் நீராகிப் போகிறதே ஏன்? உன்மை என்று நம்பிக் கையை நீட்டினால் அது பொய் என்று அறைகூவல் விட்டல்லவா ஒதுங்கிப் போகிறது. நினைத்தபோதே நீண்ட அந்த நயனங்களில் முனுக்கெனக் கண்ணீர் கோர்த்துக்கொள்ள ஏக்கத்துடன் வீட்டிற்குள் நுழையத் திரும்பினாள் அவள்.

அடேங்கப்பா… சோகம் கூட இத்தனை அழகாக இருக்குமா என்ன? சுருண்ட குழல்… இயற்கையே மினக்கட்டு செதுக்கிய வில் புருவங்கள்… நீண்ட விழிகளில் பெரிய கரிய மணிகள்… அவற்றில் கடலளவு சோகம். மெல்லிய கூர் நாசியில் எப்போதோ மூக்கில் குத்திய அடையாளமாய்ச் சிறிய ஓட்டை. சுண்டினால் சிவக்கும் வெண்ணிறக் கழுத்தில் சற்று அழுக்கேறிய மஞ்சள் கயிறு. மெல்லிய கொடியிடையில் தவழும் நைந்துபோன சேலை கூட அவளுக்கு அம்சமாகத்தான் இருந்தது. எந்த வித அலங்காரமும் இல்லாமல் எந்த வித நகையும் இல்லாது துடைத்து வைத்த குத்துவிளக்காய் இருந்தவளைக் கண்டால், வறுமை கூட அழகுதான் என்ற எண்ண வைத்துவிடும். மன்மதனும் சுவாசிக்க மறப்பான். ஆனால்… இத்தனை அழகும் மொத்தமாய்க் கொட்டி என்ன லாபம்? அவளுடைய வாழ்க்கை…?

அலரந்திரி… பெயர் என்னவோ உலகை ஆளும் அம்மனின் பெயர்தான். மலர்ச்சியைக் கொடுக்கக்கூடிய பார்வதிதான்… ஆனால்… நிஜத்தில்?

நினைக்கும் போதே அவளுடைய உதட்டில் விரக்திப் புன்னகை ஒன்று நெளிந்தது. அவளுடைய வாழ்க்கையில் மலர்ச்சியா? சிரிப்புதான் வந்தது. பிரம்மா அவளைப் படைக்கும்போது மலர்ச்சி என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கிவிட்டுத்தான் படைத்திருக்கிறார் போலும். அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இன்று வரை அது தொலை தூரத்தில் எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது.

பிறந்து இரண்டு வருடங்களில் தாயை இழந்தாள். மறு வருடமே புதிதாகச் சித்தி என்று ஒருத்தி நுழைத்தாள். சித்தி சித்தியாகவே இருந்ததால் அன்னையின் பாசம் அவளுக்கு எட்டாமலே போய்விட்டது. ஒரு தங்கையும், ஒரு தம்பியும். சிற்றன்னையின் வயிற்றில் பிறந்த முத்துக்கள்.

அலரந்திரி வளர வளரப் பொறுப்புக்கள் அதிகரித்ததோ? அவசர அவசரமாகப் பதினெட்டு வயது முடிவதற்குள்ளாகவே திருமணம்.

காருண்யன்… அழகன். நெடு நெடு என்ற உயரம். கனிவு வழியும் கண்கள். சிரிக்கத் துடிக்கும் உதடுகள். கூரிய நாசி. எந்தப் பெண்ணாலும் வேண்டாம் என்று மறுக்க முடியாத தோற்றம்தான். அவளை எங்கோ கண்டு விரும்பி வந்து கேட்டான். எப்போதடா அவளைக் குடும்பத்திடமிருந்து துரத்தலாம் என்று சிற்றன்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் போலும். சந்தர்ப்பம் கிடைத்ததும் அவனைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் போனால் போதும் போடா என்று திருமணத்தை முடித்து வைத்தாயிற்று.

அவனுக்கும் சொல்லிக்கொள்ள உறவுகள் இல்லை. அதனால் யாரையும் அழைக்காமலே அவள் தந்தை சிற்றன்னையோடு எந்தவித எடுபாடுகளுமின்றித் திருமணம் கோவிலில் வைத்து எளிமையாகவே முடிந்தது.

அவளுக்கும் அந்தத் திருமணத்தில் பிடித்தமே. தலையே நிமிர்த்த முடியாத வேலைப் பளுவிலிருந்து பெரும் விடுதலைதான். இனி அவளும் அவனுமாய்… அவர்களுக்கென்ற குடும்பத்தில் அவள் ராணியாக, அவன் ராஜாவாக… இந்த மகிழ்ச்சியுடன்தான் கழுத்தை நீட்டினாள். கழுத்தில் மூன்று முடிச்சை அவன் போடும்போது கூட அந்த விழிகளில் கனிவுதான் அப்பிக் கிடந்தது. அது கொடுத்த தைரியத்துடன் அவனுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கப் புறப்பட்டாள்…

திருமணம் முடித்துப் புதுப்பெண்ணாய் ஆயிரம் கற்பனைகளுடன் தன் கணவனுடன், வீடு திரும்பிய நேரத்தில், யார் கண் பட்டதோ… பெரிய சுமையுந்து ஒன்று இவர்களின் காரை மோதித் தள்ளியது. அந்த நிலையிலும் அவள் பக்கத்துக் கதவைத் திறந்து இவளைத் தள்ளிவிட்ட காருண்யன்தான் இப்போதும் நினைவிலிருந்தான். அவன் தள்ளியதால் சில காயங்களுடன் இவள் பிழைத்துக் கொண்டாள். ஆனால் அவன்,

சுயநினைவு இல்லாமல் கிடந்தவனை முடிந்த வரை விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவனைச் சிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் ஒட்டு மொத்தமாகக் கோமா என்றார்கள்… சின்னதாக ஒரு சாரி சொன்னார்கள். அதோடு தங்கள் கடமை முடிந்தது என்பது போல விலகிச் சென்றார்கள். அவர்களுக்கென்ன ஒரு சொல். தலைச்சுமை அவளுக்கல்லவா…! பெரிய பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்ய அவள் என்ன பணத்தின் மீதா குடும்பம் நடத்துகிறாள்? நாளாந்த செலவுக்கே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலையிலிருப்பவளால் எத்தினையென்றுதான் செலவு செய்ய முடியும்?

ஒரு வேளை உயர்ரக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவனுக்குச் சுயநினைவை வரவழைத்திருக்க முடியுமோ என்னவோ.

கையிலிருந்த பணம் முழுவதையும் செலவழித்து, அவன் கட்டிய தாலி முதல் கொண்டு விற்றுச் செலவழித்து அவன் உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. ஆம் உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. உயிரோடு உணர்வோடு திருமணம் முடித்தவன், இறுதியில் புலன்கள் முழுவதும் மழுங்கி ஒரு தாவரம்போல வீடு வந்து சேர்ந்தான்.

அவனுடைய வீடும் வாடகை வீடு. அதனால் அவளால் தொடர்ந்து அங்கே இருக்க முடியாத நிலை. விரலுக்குத் தக்கதுதானே வீக்கம்… தன் வசதிக்கேற்ப தற்போதிருக்கும் குடிசைக்கு வந்து சேர்ந்தாள் அலரந்திரி.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்… இன்னும் அவன் கோமாவிலிருந்து மீளவில்லை. இடையில் ஏதாவது முடியாமல் போகும்போது பெரிதும் திணறித்தான் போவாள். அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அவளைப் படுத்தி எடுத்த பிறகே அமைதியாவான் காருண்யன்.

வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிவதற்குள்ளாகவே எல்லாம் பட்டுப்போயிற்று. அன்பாக அணைத்துக் கனிவாகப் பேசிக் காதல் சாம்ராஜ்யம் நடத்தவேண்டிய இடத்தில் ஒரு தாதியாக அவனுக்கு வேண்டிய சேவைகளைச் செய்யவைத்தது காலம்.

திருமணம் முடிந்ததும் தங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது என்று விலகிச்சென்ற தந்தையும், சிற்றன்னையும், இன்றுவரை அவர்களைத் திரும்பிப் பார்த்ததில்லை. திரும்பிப் பார்த்தால், அவளும், அவள் கணவனுமாய் வந்து தம்மோடு தங்கிவிடுவார்களோ என்கிற அச்சமாகக் கூட இருக்கலாம். அவள் தனி ஒருத்தியாக எப்படிச் சமாளிக்கிறாள் என்று அவர்கள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. வேண்டாம் என்று ஒதுங்கிப்போனவர்களிடம் சென்று கையேந்தவும் அவளுடைய தன்மானம் விடவில்லை. அதனால் தனித்துப்போனாள்.

வயிற்றுப் பாட்டுக்கு எதையாவது செய்யவேண்டுமே… ஏதாவது படித்திருந்தால் எங்காவது மேசையிலிருந்து வேலைசெய்யலாம். வெறும் பத்தாம் வகுப்புப் படிப்புக்கு எந்த நிறுவனம் வேலை கொடுக்கும். அதுவும் இந்தக் காலத்தில்.

யாரோ எவரோ ஒருவரின் கைகால்களைப் பிடித்து நடை பயிலும் தூரத்திலிருந்த தையல் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தாள். கிடைத்த வருமானத்தில் அவளுடைய சாப்பாட்டையும், காருண்யனின் மருத்துவச் செலவையும் பார்க்கவே மட்டு மட்டாக வந்தது.

அதையும் மீறித் திடீர் என்று காருண்யன் மூச்செடுக்கச் சிரமப்படும்போதோ, அல்லது குழாயின் மூலம் செலுத்தும் உணவு தடைப்படும்போதோ, அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டித்தான் வரும். அப்போதெல்லாம் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல அதிகமாகவே திணறிப்போவாள். இருந்தும் எப்படியோ சமாளித்துவிடுவாள்.

காருண்யனை ஓரளவு சமாளித்தாலும் அவள் சுற்ற உள்ள உற்றம் சுற்றத்தைச் சமாளிப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது. அவர்களின் அலட்சியப் பார்வையாலும் பேச்சுக்களாலும் நிறையவே உடைந்து போவாள்.

ராசியில்லாதவள், பிறந்த உடனேயே தாயை விழுங்கியவள். இப்போது புருஷனையும் படுத்த படுக்கையாக்கிவிட்டாள். இவள் முகத்தில் விழித்தாலே பாவம்… இப்படி எண்ணுக் கணக்கில்லாத பேச்சுக்கள். அனைத்தையும் சமாளித்து வெளிவருவதற்குள் மூச்சு முட்டிவிடும். இதோ முன்னால் இருக்கும் அறுபது வயது மதிக்கத் தக்க பெண்மணி. அவள் வீட்டில் தப்பாக எது நடந்தாலும் அதற்குக் காரண கர்த்தா இவளாகிப்போவாள்.

அதற்கு ஒத்து ஊத இன்னும் பலர். நல்லவர்களும் அவளுக்குச் சார்பாகப் பேச இருந்தார்கள்தான். ஆனால் கணக்கெடுப்பின் படி அவர்களின் தொகை மிகக் குறைவு எண்பதால், அவர்களின் பேச்சு அம்பலம் ஏறியதில்லை.

ஆரம்பத்தில் இதயத்தைக் குத்திக் கிழிக்கும் அவர்களின் பேச்சு, நாளாக நாளாகப் பழகிப் போய்விட்டது. இருந்தாலும் சுருக் என்று முள்ளாகக் குத்துவது மட்டும் இந்த மூன்று வருடங்களாக மாறவேயில்லை.

எப்போதும் வேதனையையே கண்டு பழகியதால் அவளுக்குச் சிரிப்பதுகூட எப்படியென்று மறந்துவிட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே வாழ்க்கை போகப்போகிறது? இன்னும் எத்தனை காலங்களுக்கு இப்படித் தவிக்கப்போகிறாள்? தெரியவில்லை. ஆனாலும் ஓட்டத்தை நிறுத்த முடியாதே… ஓட வேண்டும்… முடிந்த வரை ஓட வேண்டும். பெருமூச்சுடன் திரும்பினாள் அலரந்திரி.

காருண்யனின் படுக்கை காலியாக இருந்தது. மெதுவாக அதை நெருங்கியவள் அவன் சதா படுத்திருக்கும் படுக்கையின் ஓரமாக அமர்ந்தாள். நடுங்கும் கரம் கொண்டு வெற்றுக் கட்டிலை வருடிக் கொடுத்தவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் மூச்சுத் திணறல் எடுத்துக் காருன்யனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள். இப்போது கிளம்பினால்தான் அவனைப் பார்க்க நேரம் சரியாக இருக்கும். பார்த்து என்ன செய்யப்போகிறாள்… எப்போதும் போல வெறித்துப் பார்க்கும் அவன் விழிகளைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டியதுதான். நினைக்கும் போதே ஆயாசமானது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் போராட்டம் என்று தெரியவில்லை. இப்படியே போனால் மனதளவில் மட்டுமல்ல. உடலளவிலும் ஓய்ந்துபோவாள்.

பெருமூச்சுடன் எழுந்து தயாரானவள், தன் குடிசையை விட்டு வெளியே வந்தாள். இவளைக் கண்டதும் முகத்தைச் சுழித்துவிட்டுத் திரும்பிச் சென்ற பக்கத்துவீட்டுப் பெண்ணை நினைத்து மெல்லியதாக நகைத்தவள், நடையைக் கட்ட, சற்றுத் தள்ளி அந்தப் பெண்மணியின் கணவர் இவளைக் கண்டு முப்பத்திரண்டையும் காட்டிக்கொண்டு வந்தார்.

“எங்கே போகிறீர்கள்… மருத்துவமனைக்கா… வேண்டுமானால் உதவிக்கு வரட்டுமா?” என்று கேட்க, அவர் கூறும் உதவி எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளாத அளவுக்கொன்றும் அவள் முட்டாள் அல்லவே. அவர் பேச்சை ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டவாறு குறுக்குச் சந்தில் புகுந்து முக்கியப் பாதையில் ஏறினாள்.

‘கட்டிப்புடி கட்டிப்புடிடி… கண்ணாளத்தி… கண்டபடி… கட்டிப்புடிடி…’ சில மந்திக் கூட்டம் மதிலின் மீது ஏறியிருந்து அவளைப்பார்த்துத்தான் பாடிக்கொண்டிருந்தன. இலவச வானொலி… இவளைக் கண்ட உடன் மட்டும் பாடத் தொடங்கும்… இப்படிப் பாடினால் வேறு எண்ணங்கள் வராது… அருவெறுப்புத்தான் தோன்றும் என்று அவர்களுக்குப் புரிய வைப்பது யார்? எப்போதும் போல அதைக் குப்பை என்று ஓரமாகப் போட்டுவிட்டுத் தன் நடையைக் கட்ட,

‘மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…’ என்றது இன்னொரு குரங்கு. திரும்பிப் பார்த்து முறைக்கலாம்தான். அதற்குப் பிறகு? சும்மா போன சொறி நாயை வீட்டுக்குக் கூப்பிட்டாற்போலத்தான் ஆகும்.

இது அவளுக்குப் பழக்கம்தான். காருண்யன் படுக்கையில் விழுந்த பிற்பாடு, சில பெரிய மனிதர்கள் அவளைத் தனியாக வீட்டிற்கு வருமாறு நாகரிகமாக அழைப்பதும் உண்டு. சிலர் நேரடியாக அழைப்பதும் உண்டு. இன்னும் சிலர் அவளுடைய குடிசைக்கும் வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவளுக்குக் காவலுக்கு நின்றது அவளின் மீது அன்புகொண்ட ஒருசில குடிசைவாசிகள்தான்.

எத்தனையோ நாய் நாம் போகும்போதும், வரும் போதும் குரைக்கத்தான் செய்கின்றன. அதற்காக நாமும் சேர்ந்து குரைக்க முடியுமா? அமைதியே அவளுடைய ஆயுதமாக,

“டேய்… என்னடா… எவ்வளவுதான் தூண்டில் போட்டாலும் மீன் சிக்க மாட்டேன் என்கிறதே…” என்று ஒருவன் சேலையினூடாகத் தெரிந்த வெண்ணிற இடையை ஆவென்று பார்த்தவாறு கேட்க, சற்று ஏறியிறங்கிய மென் மார்பைப் பார்த்தவாறு மற்றொருவன்,

“சிக்குமடா… சிக்காமல் எங்கே போகும்…? என்றைக்காவது ஒரு நாள்… நிச்சயமாகச் சிக்கும்…” என்று உதட்டை ஈரப்படுத்தியவாறு அவன் கூற, இப்போதும் திரும்பி அவர்களைப் பார்த்து முறைத்தாளில்லை.

மழை பெய்தாலும் சுரனைவராத எருமைகள். இவற்றோடு மாரடிப்பதும் ஒன்றுதான், நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதும் ஒன்றுதான்… உள்ளுக்குள்ளேயே கோபப்பட்டவள், நடையின் வேகத்தைக் கூட்டினாள். இப்போதைக்கு அவளால் முடிந்தது அது மட்டுமே.

எப்படியோ பேருந்தைப் பிடித்து, மருத்துவமனைக்குள் நுழைந்தவள், நேராகக் காருண்யனைக் கிடத்தியிருந்த கட்டிலை நோக்கிச் சென்றவளை வரவேற்றது என்னவோ வெறுமையான அவனுடைய கட்டில்தான்.

(2)

தன் கணவனின் வெறுமையான கட்டிலைக் கண்டு முதலில் அதிர்ந்தவள் பின் குழம்பிப் போனாள்.

‘கடவுளே… அவனை எங்கே அழைத்துச் சென்றிருப்பார்கள்… ஏதாவது பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருப்பார்களோ… ஐயோ…! புதிதாக எத்தனை ஆயிரங்களை அவை விழுங்கப் போகின்றனவோ? இன்னும் பணம் என்றால் எங்கே செல்வது?’ வயிற்றைக் கலக்க சுத்தவரப் பார்த்தாள். அங்கே ஒரு தாதி வர, எழுந்தவள் அவரை நோக்கி ஓடினாள்.

“மன்னிக்க வேண்டும்… சிஸ்டர்… என்னுடைய கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். அதோ… அந்த நாலாவது கட்டில்தான் அவருடையது. இப்போது அவரைக் காணவில்லை. அவர் எங்கே?” என்று அவள் தடுமாறியவாறு கேட்க அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தாள் அந்தத் தாதி.

அவள் முகத்தில் எள்ளளவும் இரக்கமில்லை. அடிக்கடி இப்படியான நோயாளிகளைப் பார்த்துப் பழக்கப்பட்டதால், சலித்துவிட்டதோ. அல்லது ஏழ்மையைப் புழு கூட மதிக்காதோ? அலட்சியமாக இவளை ஏறிட்டு,

“ஓ… அந்தக் கோமா கேசா… அந்தாள் நேற்றிரவே மண்டையைப் போட்டுவிட்டானே… இப்போது மோச்சுவரி அறையில் இருப்பான் போய்ப் பார்…” என்று மின்னாமல் முழங்காமல் ஒரு அணுக்குண்டைத் தூக்கிப் போட அரண்டு போனாள் அலரந்திரி.

அவளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அதிர்ச்சியில் அந்தத் தாதி என்ன சொன்னாள் என்று கூடப் புரியவில்லை. முதலில் குழம்பியவள்,

“எ… என்ன சொன்னீர்கள்… என் கணவர்… இற… இறந்து விட்டாரா… இருக்காது… இல்லை… நீங்கள் ஏதோ தப்பாக…” என்று தடுமாற, அவளை மேலும் கீழும் பார்த்த தாதி,

“இந்தாம்மா… உன்னோடு மல்லுக்கட்ட எனக்கு நேரமில்லை… நேற்று இரவே உயிர் போய்விட்டது… எதுவாக இருந்தாலும் மோச்சுவரி அறையில் போய் விசாரி… இங்கே வந்து என் உயிரை எடுக்காதே…” என்று கறாராகச் சொல்லிவிட்டு, சில கோப்புகளுடன் வெளியேற, அலரந்திரி எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியுடன் சிலைபோலச் சற்று நேரம் நின்றுவிட்டாள்.

எத்தனை அலட்சியம், எத்தனை திமிரான பதில். ‘உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும்.’ கண்ணதாசனின் பாடல் அவளுக்காகவே பாடப்பட்டதோ?

வேதனை நெஞ்சை அரிக்க, மோச்சுவரியை நோக்கி ஓடினாள். அந்த நேரம் பார்த்துக் காலில் அணிந்திருந்த செருப்பு வார் அறுந்துவிட, நின்றவள், அதைக் கரத்தில் எடுத்துக்கொண்டு பிணவறை வாசலில் நின்றிருந்தவரை நெருங்கியவள்,

“சார்… காருண்யன்… அவர் இறந்துவிட்டதாக…” என்று கண்ணீர் மல்கித் தவிக்க,

“காருண்யனா… அவர் யாரும்மா உணக்கு?” என்று கேட்டார் பிணவறை முன் நிற்பவர்.

“அவர்… கணவர் சார்…” என்றதுமத், அவள் சொன்ன விபரத்தை வைத்து, ஏதோ புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தார். பின் புருவம் சுருங்க,

“காருண்யன் என்றா சொன்னாய்?” என்று கேட்க,

“ஆ… ஆமாம் சார்…” என்றாள் இவள் திக்கித் திணறி.

மீண்டும் சரி பார்த்தவர், இவளை ஒரு மாதிரியாகப் பார்த்து,

“என்னம்மா… நீ சொன்ன ஆளுடைய உடலை அப்போதே உறவினர்கள் வந்து எடுத்துச் சென்று விட்டார்களே…” என்று அவர் கூற இவளோ புரியாத மொழி கேட்ட உணர்வில், திருத் திரு என்று விழித்தாள்.

“எ… என்ன சார் சொல்கிறீர்கள்… அவருடைய உறவினர்கள் எடுத்துச் சென்று விட்டார்களா? இருக்காது சார்… என்னைத் தவிர அவருக்கு உறவென்று சொல்ல யாருமில்லை… நிச்சயமாக யாரும் எடுத்துச் சென்றிருக்க மாட்டார்கள்… மீண்டும் ஒரு முறை பாருங்கள் சார்… தவறாக வேறு யாரையோ பார்த்து…” என்று அவள் மறுக்கத் தொடங்க,

“என்னம்மா… உன்னோடு பெரிய ரோதனையா போச்சு… செத்துப்போன பிணத்தை வைத்து நான் என்ன அரசியலா செய்யப்போகிறேன்… உனக்குச் சந்தேகமா இருந்தால் உள்ளே போய்ப் பார்… உன் புருசன் இருந்தால் சொல்லு…” என்று மோச்சுவரி அறையைத் திறந்து விட, பக்கென்று அடித்தது க்ளோரோஃபோமுடன் சேர்ந்து ஏதோ இரசாயன மணம். அது வயிற்றைப் புரட்டச் சேலைத் துணியால் தன் மூக்கையும் வாயைiயும் பொத்தியவாறு உள்ளே சென்றாள்.

எத்தனை பிணங்கள்… அடேங்கப்பா… மரணம் கூட ஒரு வகையில் விடுதலைதானே. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் உலகம்பற்றிய வருத்தமுமின்றி… நிம்மதியாக… ஏனோ அந்த நேரத்திலும் இறந்தவர்கள் பெரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் போலவே இவளுக்குத் தோன்றியது.

அங்கே கிடத்தியிருந்த பன்னிரண்டு பேரிலும் அவள் கணவனில்லை. அப்படியானால் அவர் சொன்னது சரிதானா… அவள் கணவனை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்களா? யார் எடுத்துச் சென்றிருப்பார்கள்? அவளை விட்டால் அவனுக்கு வேறு யாரும் கிடையாதே. இந்த நிலையில் அவனுடைய பிணத்தை யார் வந்து உரிமை கொண்டாடியிருப்பார்கள்? எதுவும் புரியாமல் வெளியே வந்தவளை இரக்கத்துடன் பார்த்தார் அவளை உள்ளே அனுப்பியவர்.

“என்னம்மா… நன்றாகப் பார்த்தாயா? உன் கணவருடைய உடல் இருக்கா?” என்று கேட்க விழிகளில் கண்ணீர் மூட்ட, மறுப்பாகத் தலையை அசைத்தவளைப் பரிதாபமாகப் பார்த்தார் அவர்.

“இதோ பாருமா… இங்கே நின்று யோசிப்பதில் ஒரு புண்ணியமும் இல்லை. போய்ப் பெரிய மருத்துவரிடம் விசாரித்துப் பாரம்மா… நிச்சயமாக அவருக்குத் தகவல் தெரிந்திருக்கும்…” என்றதும் அழுவதற்குக் கூட நேரம் வைக்காமல் கரத்திலிருந்து செருப்பைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெறுங்காலுடன், பெரிய வைத்தியரை நோக்கி ஓடினாள் அலரந்திரி. மனமோ யார் அவளுடைய கணவனின் பிரேதத்தை எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள்? என்பதிலேயே உழன்றது.

நிச்சயமாக அவளுடைய தந்தையோ, சிற்றன்னையோ வந்து எடுத்துப் போயிருக்க மாட்டார்கள். வேறு யார்? எதுவுமே புரியாமல் பெரிய வைத்தியரின் அறை முன்னால் வந்து நின்றாள் அலரந்திரி.

பெரிய வைத்தியரை உடனே போய்ப் பார்த்துவிட முடியுமா என்ன? அது அவருடைய மரியாதைக்கு இழுக்காகிவிடுமே. வெளியே காத்திருக்க, அரை மணி நேரம் கடந்தும் இவள் உள்ளே செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. கிடைக்கும் கிடைக்கும் என்று பார்த்தால் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது புரிய. உள்ளே சென்ற நோயாளி வெளியே வந்ததும், சற்றும் தாமதிக்காமல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளை, நிமிர்ந்து பார்த்தார் வைத்தியர். அவளுடைய திடீர் வரவை அவர் சற்றும் விரும்பவில்லை என்பது அவர் முகம் போன போக்கில் தெரிய,

“யாரும்மா நீ… இப்போது மதியவுணவு நேரம்… இப்போது உன்னைப் பார்க்க முடியாது… பிறகு வா…” என்று அவர் எரிச்சலுடன் கூறினார்.

“இ… இல்லை சார்… நான்… காருண்யனின் மனைவி…” என்றதும் அதுவரை அலட்சியமாக நின்றிருந்தவர் சட் என்று நிமிர்ந்து அமர்ந்து கொண்டார். தன் கூரிய விழிகளால் இவளை ஊடுருவிப் பார்த்தவர்,

“காருண்யனா…” என்றவர் நம்பாதவராக இவளை உற்றுப் பார்த்தார்.

“ஆமாம் டாக்டர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரை இங்கே அனுமதித்திருந்தேன்… கேட்டபோது, அவர்… அவர் இறந்து… இறந்து விட்டதாகக் கூறுகிறார்கள்…” என்று திக்கித் திணற, வைத்தியரோ தன் இருக்கையில் சற்று சாய்வாக அமர்ந்தவாறு எதையோ எண்ணினார். பின் நிமிர்ந்து இவளைப் பார்த்து,

“இதோ பாரம்மா… நீ காருண்யன் என்று நீ சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாயே… அவர் பெயர் ஜெயவாமன்…” என்று அழுத்தமாகக் கூற, இவளோ அதிர்ந்து போனவளாக,

“என்ன… என்ன சொல்கிறீர்கள்… அவர் எப்படி… ஜெயவாமனாக… இல்லை நீங்கள் ஏதோ தவறாக…” அவள் முடிக்கவில்லை, தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்த வைத்தியர்,

“இதோ பாரம்மா… நீ நினைப்பது போல அவர் காருண்யன் இல்லை… அவருடைய நிஜப் பெயர் ஜெயவாமன். அவருடைய தந்தையின் பெயரில் ஒரு கிராமமே இருக்கிறது. அந்தக் கிராமத்திற்குக் கூடச் சேதுபதி கிராமம் என்று பெயர். அந்தக் கிராமத்தை அண்டிய ஊர் எல்லாமே அவர்களுக்கு உரிமையானதுபோல. அவர்கள் பெரும் புள்ளி. இலங்கை மட்டுமில்லாமல் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற இடங்களில் எல்லாம் அவருக்கு நிறையச் செல்வாக்கிருக்கிறது. அவரை நம்பியே நிறைய அரசியல் கட்சிகள் இருக்கிறன. அவருடைய மூத்த மகன் ஏகவாமனைப் பற்றித் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பெயரைப் போவவே அவனைப் போல ஒருவன் இதுவரை பிறந்ததும் இல்லை. பிறக்கப் போவதும் இல்லை. ஒப்புவமை இல்லாதவன்… கெட்டவர்களுக்கு அவர் பெரும் தாதா. அவரை எதிர்த்து ஒரு துரும்பைக்கூடஅசைய முடியாது. அசைந்தால் அவர்களை வேரோடு அழித்துவிடுவார். அத்தனை கோபக்காரன். பிடிவாதக்காரன். ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்திலிருக்கும் அவருடைய தம்பிதான் உன் கணவன் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்…” என்று அழுத்தமாகக் கூற அலரந்திரிக்கு ஐயோ என்றிருந்தது.

இந்த வைத்தியர் என்ன பேசுகிறார். காருண்யனின் பெயர் ஜெயவாமனா… என்ன உளறுகிறார்… இல்லை… இதில் எங்கோ ஏதோ தவறிருக்கிறது… காருண்யன் அநாதை. அவனுக்கு இவளைத் தவிர யாரும் கிடையாது. மறுப்பாகத் தலையை ஆட்டியவர்,

“இல்லை டாக்டர்… நீங்கள் சொல்கிற அந்த ஜெயவாமனனுக்கும், என்னுடைய கணவருக்கும் சம்பந்தமே இல்லை. என்னுடைய கணவர் கடந்த மூன்று வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார். நேற்று முன்தினம் மூச்செடுக்கச் சிரமப்படுகிறார் என்பதால் இங்கே அழைத்துவந்தேன்… அவர் எப்படி அந்தத் தாதாவுக்குத் தம்பியாக இருக்க முடியும்” என்றாள் அவள் திக்கித் திணறி.

“தாதாவா…” என்ற வைத்தியர் அவசரமாகச் சுற்றிவரப் பார்த்துவிட்டு, அலரந்திரியைப் பார்த்து முறைத்து,

“யாரைப் போய்த் தாதா என்கிறாய்? அவனுடைய ஆட்கள் இங்கேதான் சுற்றித்திரிகிறார்கள்… நீ சொன்னதைக் கேட்டால்… உன் நிலை மட்டுமல்ல… என் நிலையும் கவலைக்கிடமாகப் போய்விடும்… கொஞ்சம் அடக்கி வாசி…” என்று எரிச்சலுடன் கூறிவிட்டுப் பின்,

“ஆமாம்… கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக மிஸ்டர் ஏகவாமன் தன் தம்பி ஜெயவாமனைக் காணாமல் எல்லா இடமும் தேடிக்கொண்டுதான் இருந்தார். இப்போதுதான் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. ப்ச்… பாவம்… கடைசியில்…” என்றவர் முடிக்காமல் சற்று அமைதி காத்துவிட்டுப் பின் அலரந்திரிய அலட்சியமாகப் பார்த்து,

“லிஸின்… நான் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். இந்தச் செய்தியை இப்படியே விட்டுவிடு… இதற்கு மேலும் தோண்டித் துருவாதே… நீ நினைப்பதுபோல அவர் காருண்யன் அல்ல. அவர் பெயர் ஜெயவாமன். ஏதோ அவர் குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பால் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறுகிறார்கள். எனக்கே அவர் ஏகவாமனனின் தம்பி என்கிற உண்மை இன்று காலைதான் தெரியும். தெரிந்ததும் எப்படி ஆடிப்போனேன் தெரியுமா?” என்றவர் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று அலரந்திரியின் அருகே வந்தார்.

“லிசின்… உன் நன்மை கருதி, யார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் என்கிற செய்தியைக் கூறவில்லை. யாரோ வழியில் போனவர்கள் இங்கே அனுமதித்தார்கள் என்றும் மூன்று வருடங்களாக இங்கேயிருந்துதான் அவருக்குச் சிகிச்சை கொடுத்துக்கொண்டு வருகிறோம் என்றும் கூறினேன். உடனேயே அந்தச் செலவுக்கும் மேலாகப் பணத்தைக் கட்டிவிட்டார்கள். என்னாலும் வந்த பணத்தை மறுக்க முடியவில்லை. ஏன் என்றால் என்னுடைய வைத்தியசாலையையும் நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? இனி அவர் பாடு… அவர் தம்பிபாடு…” என்று கூறிவிட்டு மீண்டும் இருக்கையில் சாய்வாக அமர்ந்து அவளைக் கீழ்க்கண்ணால் பார்த்து,

“இனிமேல் நீ இந்த மருத்துவமனைக்கு வராமல் இருப்பதே உனக்கு நல்லது. தவிர நீ ஜெயவாமனனின் மனைவி என்பதை அவர்கள் கேட்டால் தேவையற்றப் புதிய பிரச்சனைதான் கிளம்பும். உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். விலகிவிடு. உன் வாழ்க்கையில் நடந்த பழையதுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு உனக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்…» என்று கூற இவளோ ஆத்திரத்துடன் வைத்தியரைப் பார்த்தாள்.

அது எப்படி மூன்று வருடங்கள்… மூன்று வருடங்கள் அவனுக்கு ஒரு தாதியாக, சேவகியாக இருந்திருக்கிறாள். கண் சிமிட்டும் நேரத்தில் எங்கிருந்தோ ஒருவன் வந்து அவள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா… அதற்கு இந்த வைத்தியரும் உடந்தை. என்ன செய்வது… இதெல்லாம் அவர் பேசவில்லை… அந்த ஏகவாமன் கொடுத்த பணம் பேசுகிறது. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்குமே.

வேதனையுடன் எண்ணியவளுக்குக் கணவனின் நிலைக்காக அழுவதா? இல்லை தன் நிலைக்காகக் கலங்குவதா என்றே புரியவில்லை. அடுத்து அவளுக்கு என்ன செய்வதென்று கூடப் தெரியவில்லை. இந்த அகண்ட தேசத்தில் அவள் கணவனை எங்கே என்று தேடிச் செல்வாள்… உயிரோடு இருந்தபோது அவள் கூடவே இருந்தான். மரணித்த பிறகு அவன் தூசி கூட எங்கே போனதென்று தெரியவில்லையே.

எத்தனை நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, தலையை நிமிர்த்திப் பார்த்த வைத்தியரின் விழிகளுக்கு விறைத்துப்போய் நின்றிருந்த அலரந்தரி தெரிய, புருவம் சுருங்க பொறுமை இழந்தவராக,

“நீ இன்னும் இடத்தைக் காலி செய்யவில்லையா? அதுதான் சொல்லவேண்டியதை அப்போதே தெளிவாக, விளக்கமாகச் சொல்லிவிட்டேனே… பிறகு என்ன? இதோ பாரம்மா… இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்… இறந்துபோன ஜெயவாமனின் மரணத்திலும் இப்போது சந்தேகம் எழுந்திருக்கிறது. அது கொலையாக இருக்கலாம் என்பதால், அதைப் பற்றித் துப்பறிய ஏகவாமன் தொடங்கிவிட்டார். அவருடைய கண்ணில் படாமல் எங்காவது மறைந்துவிடு. நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உன் இஷ்டம்…” என்றவாறு வைத்தியர் வாசலைக் குறிப்பாகப் பார்க்க அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டாள் அலரந்திரி.

வெளியேறுமாறு கூறுகிறார். அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் மெதுவாக வெளியேறச் சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவள் அவரை அழுத்தமாக ஏறிட்டாள்.

இத்தனை காலமாகச் சக்திக்கும் மேலாக அவனைப் பாதுகாத்தவள் அவள். உடல் முடியாதபோது அவனைக் கொண்டு வந்து அந்த வைத்திய சாலையில் அனுமதித்தவள் அவள். அவனுடைய அத்தனை பொறுப்பும் தன்னது என்று கையொப்பமிட்டவள் அவள். அப்படியிருக்கையில் எங்கிருந்தோ ஒருவன் வந்து நான்தான் அவன் உறவென்று கூறி, அவள் கணவனுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டால் ஆயிற்றா…? அப்படியே விட்டுவிட அவள் என்ன ஏதுமறியாத மடந்தையா? இல்லை இதை இப்படியே விட முடியாது இதற்கு இந்த வைத்தியரும், இந்த மருத்துவமனையும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தன் உயரத்திற்கும் நிமிர்ந்தவள்,

“எப்படி டாக்டர்? யாரோ ஒருவன் எங்கிருந்தோ வந்து, நான்தான் என் கணவரின் உறவு என்று சொன்னதும் காருன்யனின் உடலை அவரிடம் ஒப்படைக்கலாம்? என் கணவரின் அத்தனை பொறுப்பும் என்னதென்று கையொப்பம் இட்டிருக்கிறேன்… அவர் உடலை ஒப்படைக்கும் முன்பு என்னிடம் ஒரு வார்த்தை செல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா? குறைந்தது நான் வரும் வரைக்காவது காத்திருந்திருக்கலாமே… நான் அந்த… அந்த… ஏகவாமனுடன் பேசியிருப்பேனே…” என்று அழுத்தமாகக் கேட்டவள் பின், பொறுமை இழந்தவளாக”இதை நான் சும்மா விடமாட்டேன்… டாக்டர்… நிச்சயமாகச் சும்மா விடமாட்டேன்… இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்…” என்று ஆவேசமாகக் கூற, அவளை அமைதியாகப் பார்த்தார் வைத்தியர். என்ன நினைத்தாரோ, எழுந்து அவளருகே வந்து உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் தெரிந்தது என்ன பரிதாபம்? கிண்டல்? ஏளனம்?… இல்லை நக்கல்?

“உன்னால் என்ன செய்ய முடியும்? வழக்குப் போடுவாயா? எப்படி… காருண்யன் என் கணவன், அவரை ஏகவாமன் தன் தம்பி என்று அழைத்துச் சென்றுவிட்டார்… அதற்கு இந்த வைத்தியசாலையும் உடந்தை என்று சொல்வாயா?” என்று கேட்டவர் மெல்லியதாகச் சிரித்து,

“உன்னைப் பார்த்துத்தான் சிரிப்பார்கள் பெண்ணே… புரியவில்லை… ஜெயவாமன் ஏகவாமனின் தம்பி என்கிறதுக்கான ஆதாரம் ஆயிரம் இருக்கிறது… ஆனால் ஜெயவாமன் உன் கணவன்தான் என்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீயே அவனைக் காருண்யன் என்றுதான் அனுமதித்திருந்தாய்… அவருடைய பெயர் காருண்யன் என்பதைத் தவிர வேறு என்ன உனக்குத் தெரியும்…?» என்று மிகுந்த கிண்டலுடன் கேட்டவர்,

“சரி… அப்படியே எனக்கெதிராக வழக்குப் போடுவதாக இருந்தால் லட்சக் கணக்கில் செலவாகுமே… உன்னிடம் அதற்குப் பணம் இருக்கிறதா… ப்ச்… இருந்திருந்தால்தான் இதைவிட இன்னும் நல்ல மருத்துவமனையாக, வசதிகள் கூடிய மருத்துவமனையாக உன் கணவனைச் சேர்த்திருப்பாயே…” என்று கூறப் பெரிதும் உடைந்து போனாள் அலரந்திரி.

ஆம் அவர் சொன்னதில் என்ன தவறிருக்கிறது… அவளால் ஒரு அடி மட்டும்தான் வைக்க முடியும். ஆனால் இந்த வைத்தியரால் அவளைவிடப் பல மடங்கு அதிக அடிகளை முன்னால் எடுத்து வைக்க முடியுமே… அவருக்கு முன்னால் அவள் வெறும் சிறு புள்ளிதானே… இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக அவளால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாதே. பெரும் வலியுடன் வைத்தியரைப் பார்க்க, அவரோ,

“போம்மா… போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் செய்… இந்தக் கணத்திலிருந்து இந்த வைத்தியசாலை, உன் கணவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் புதிய வாழ்க்கையை நோக்கிப் போ…” என்று கூறிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து கொள்ள அடிபட்ட பாவனையுடன் அவரை ஏறிட்டாள் அலரந்திரி.

‘அவ்வளவும்தானா… வெறும் விரல் சுண்டும் கணத்தில் எல்லாம் முடிந்து விடுமா? இல்லை…! நிச்சயமாக இல்லை…! காருண்யனின் உடலைப் பார்க்காமல் அவள் ஓயப்போவதில்லை…! நிச்சயமாக ஓயப்போவதில்லை…!’ உறுதியாக எண்ணியவள்,

“சரி டாக்டர் போய்விடுகிறேன்இ அதற்கு முதல் எனக்கு மிஸ்டர் ஏகவாமனின் விலாசம் வேண்டும்.” என்றாள் அழுத்தமாக.

அவளை விசித்திரமாகப் பார்த்தவர், “இவ்வளவு சொல்கிறேன்… அதற்குப் பிறகும் புலியின் வாலைப் பிடிக்க விரும்புகிறாயா?” என்றார் வைத்தியர் பொறுமையற்றவராக.

“இதோ பாருங்கள் டாக்டர். நான் பிடிப்பது புலியின் வாலோ, எலியின் வாலோ… அது என் பிரச்சனை. மிஸ்டர் ஏகவாமன் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால்… காருண்யன் என் கணவர். மூன்று வருடங்களாக அவருடைய மனைவியாக இருந்து சேவகம் செய்திருக்கிறேன். அதே உரிமையோடு. அவருடைய இறுதிக் காரியங்களுக்கும் ஒரு மனைவியாக நான் கலந்துகொள்ள வேண்டும்… நான் போக வேண்டும். தயவுசெய்து அவர்களுடைய விலாசத்தைத் தாருங்கள் டாக்டர்…” என்று தன்னை மீறிக் கெஞ்சியவாறு கேட்க, அவளை எரிச்சலுடன் பார்த்தார் அவர்.

அவள் அங்கே போனால், அவருடைய குட்டு உடைந்து விடுமே. என்ன செய்வது என்று யோசித்தவர்,

“சாரிம்மா… என்னால் தர முடியாது…” என்றார் கறாராக.

“டாக்டர்… தயவு செய்து…!” அவள் முடிக்கவில்லை, கரம் நீட்டி அவள் பேச்சைத் தடுத்தவர்,

“இதோ பாரம்மா… வேலையாட்களை அழைத்து, உன்னை வெளியேற்றுவதைவிட நீயாக வெளியே போனால் உனக்கு மரியாதை… என்ன சொல்கிறாய்” என்றார் இரக்கமற்று. இயலாமையில் கண்கள் பணிக்க, வைத்தியரை வெறித்துப் பார்த்தவளுக்கு அவர் இனி இளகப் போவதில்லை என்பது புரிந்தது.

இனி விவாதித்தும் பயனில்லை என்பது தௌளத் தெளிவாகப் புரிந்தது. சேற்றின் மீது கல் எறிந்தால் நம் மீதுதானே தெறிக்கும் என்கிற ஞானோதயம் பிறக்கச் சோர்வுடன் வெளியேற, அவளுக்கு இந்த உலகமே இருட்டானதுபோலத் தோன்றியது. அளவுக்கு மீறிய துக்கத்தால் அழுகைகூட வர மறுத்தது. அந்த மருத்துவமனையின் தூணில் சாய்ந்தவள் அப்படியே தரையில் பொத்தென்று அமர்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று கூடப் புரியவில்லை.

இந்தக் கலக்கம், இந்தத் தவிப்பு எல்லாம் காருண்யன் இறந்ததால் அல்ல. சொல்லப்போனால் காருண்யன் இறந்ததில் அவளுக்குப் பெரும் நிம்மதிதான். பெரும் ஆறுதல்தான். மூன்று வருடங்களாக, ஒரே இடத்தில் வெறும் தாவரமாகக் கிடந்த காருண்யனுக்கு அவனுடைய மரணம் பெரும் விடுதலைதான். வலியில்லை, மூச்சுத் திணறலில்லை, படுக்கையிலேயே கழிவகற்றிவிட்டு அதைச் சொல்லத் தெரியாமல் மரம்போலக் கிடக்க வேண்டியதில்லை… முக்கியமாக அசிங்கமாய்ப் பார்க்கும் மனிதர்களைப் பார்க்க வேண்டியதில்லை, சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை… இனி பரமானந்தம்… நிம்மதி… ஆறுதல்’ அந்த நிலையிலும் மரணம் கூட இத்தனை அழகானதா என்று ஆச்சரியம் கூடத் தோன்றியது.

அவளுடைய கவலை அவன் இறந்ததனால் அல்ல. அவளுக்கென்று இருந்த ஒரே ஒரு உறவு அவன்தான். அவனுடைய சுவாசம் இருந்த வீட்டில் அவளுக்காக ஒரு ஜீவன் மூச்செடுத்துக்கொண்டிருக்கிறது என்கிற ஒரு வித சந்தோஷம் இருந்தது. வெளியே செல்லும்போது அவனுக்கு வேண்டியதைச் செய்துவிட்டுப் போவதும், மாலையானதும் அவனுக்காகவே விழுந்தடித்து ஓடி வருவதும் என்று அவளுடைய வாழ்க்கை அவனைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். ஆனால் இனி அந்த அவசரம் இல்லை. அவசியமில்லை. யாருக்காக இத்தனை ஓட்டம் ஓடினாளோ, அவனே இல்லை என்கிறபோது இனி அவளுடைய உலகம் எப்படிச் சுற்றப் போகிறது. எப்படிப் பயணிக்கப்போகிறது. அதை நினைத்தபோதுதான் அவளால் தாங்கமுடியவில்லை.

அவளையும் மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இதயம் கனக்க எழுந்தவள் மெதுவாகப் பேருந்து நிலையத்தை நோக்கிப் போனாள். மனது நிம்மதியில்லாது தவித்தது. மீண்டும் மீண்டும் படுக்கையிலிருந்த காருண்யனே நினைவுக்கு வந்தான். முதன் முதலாக அவளைக் கனிவுடன் பார்த்த காருண்யன்… தாலி கட்டிய காருண்யன், விபத்தில் சிக்கிய காருண்யன்… அந்த நிலையிலும் அவளைக் காக்க முயன்ற காருண்யன்’ என்று அவன் நினைவாகவே இருந்தது. அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டு போனவள், திடீர் என்று தடை போட்டதுபோல நின்றாள்.

ஒருவேளை காருண்யன் இறந்தது என்பது பொய்யாக இருக்குமோ. இந்த ஏகவாமன் தன் தம்பியைக் கண்டுபிடித்ததும், தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பான். உண்மை அறிந்தால் அவள் ஏதாவது பிரச்சனையைக் கிளப்பிவிடுவாள் என்கிற எண்ணத்திலும் பொய் சொல்லியிருக்கலாம். அவன்தான் நிறையப் பணம் வேறு கொடுத்திருந்தானே. அதனால் வைத்தியரும் அவனுடைய வேண்டுதலுக்குத் தலை சாய்த்திருப்பார்…’ என்று எண்ணியவளுக்கு அதுவே உண்மை என்றும் தோன்றலாயிற்று.

‘விடக் கூடாது… இதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும்… ஆனால் எப்படி? இது என்ன சிறு உலகமாக விரல்களைச் சுற்றி ஓர் இடத்தைத் தொடுவதற்கு… இந்தப் பரந்த பூமியில் எங்கேயென்று தேடுவது?’ பெரும் யோசனையில் மலைத்து நின்றவளுக்கு, எங்கிருந்தோ

“சேதுபதி கிராமத்திற்குப் போகிறவர்கள் வந்து ஏறுங்கள்…” என்று அழைக்கும் குரல் கேட்டது.

விலுக் என்று நிமிர்ந்தாள் அலரந்திரி. அந்த மருத்துவர் கூறும்போது, அவருடைய தந்தையின் பெயரில் ஒரு கிராமமே இருக்கிறது என்றார் அல்லவா… அந்தக் கிராமத்தின் பெயர் கூடச் சேதுபதி கிராமம் என்றல்லவா சொன்னார்… இந்தக் கிராமம் கூட அவனுடைய கிராமமாக ஏன் இருக்கக் கூடாது?’ புதிதாக எழுந்த சக்தியுடன் அந்தப் பேருந்தை நோக்கி ஓடினாள் அலரந்திரி.

எப்படியாவது காருண்யன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை அறிந்தேயாகவேண்டும் என்கிற வெறி எழுந்தது. காருண்யனுக்கு நல்ல சிகிச்சையும், வளமான எதிர்காலமும் கிடைக்கும் என்றால், நிச்சயமாக அதற்குக் குறுக்காக நிற்கப் போவதில்லை. சந்தோஷமாகவே வழிவிட்டுச் சென்று விடுவாள். ஆனால் காருண்யன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்கிற உண்மையை அவள் தெரிந்தேயாகவேண்டும். உறுதியுடன் பேருந்து இருக்கையில் ஏறி அமர்ந்தாள் அலரந்திரி.

What’s your Reaction?
+1
13
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!