Thu. Nov 21st, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)

 

மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன் சுகத்தில், மலர்ந்தவள், மெல்லியதாக அசைந்துவிட்டு, மீண்டும் ஆழ்ந்து உறங்கத் தொடங்கினாள் விதற்பரை.

இப்போது அதே தென்றல் காற்று செவிப்பறையை இதமாகத் தீண்டிச் சென்றது. இப்போதும் உதடுகளில் தளிர் சிரிப்பு. மீண்டும் அந்தத் தென்றல் காற்றின் சுகத்தை உணரவேண்டித் திரும்பிப் படுக்க முயன்றவளை அசைய விடாது ஏதோ ஒரு பாரம் இடையை அழுத்திப் பற்றிக்கொள்ள, அந்தப் பாரம் கூட ஒரு வித சுகத்தைக் கொடுக்க, மேலும் ஆழ்ந்து உறங்கத் தொடங்கினாள்.

இப்போது அவளுடைய கழுத்து வளைவில் மெல்லிய குறுகுறுப்பு. யாரோ மயிலிறகால் அவள் கழுத்தில் சித்திரம் தீட்டுவது போன்று தோன்ற, தன் கரத்தைத் தூக்கிக் கழுத்தை வருடிப் பார்த்தாள்.

ம்கூம் யாரும் அங்கே எதுவும் தீண்டவில்லை. மீண்டும் உறங்க முற்பட்டவளின் வழு வழுத் தொடையிலும் அதே இதமான தீண்டல் வரிவடிவமாய் ஓவியம் தீட்ட அங்கேயும் வருடிப் பார்த்தாள். எதுவும் தட்டுப்படவில்லை. தன் போக்கிலேயே விலகிய ஆடையைச் சரியாக்கும்போதே மீண்டும் காதுக்குள் தென்றல் காற்றின் வீச்சு.

அதுவரை உறக்கத்தின் பிடியில் ஆழ்ந்துபோயிருந்தவளுக்கு மெல்ல மெல்லச் சுரனை வரச் சடார் என்று விழிகளைத் திறந்தாள்.

அணையத் தொடங்கியிருந்த கணப்படுப்புத்தான் முழுவியலமாகக் கண் முன்னால் தெரிந்தது. அப்போதுதான் அவளுக்குச் சூழ்நிலையே உறைத்தது.

முன்தினம் மயங்கிக்கிடந்த அவ்வியக்தன் நினைவுக்கு வர, பதறியவளாக எழுந்தமர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள்.

பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான் அவ்வியக்தன். அச்சம் நெஞ்சைப் பிளக்க, அவன் முகத்தைத் தட்டிப் பார்த்தாள். அவனிடமிருந்து எந்த அசைவும் வரவில்லை. அதைக் கண்டதும், உடலில் உள்ள இரத்தம் வடிந்து போன உணர்வில்,

“அ… அயன்…” என்று அழைத்துப் பார்த்தாள்.

ம்கூம் எந்த அசைவுமில்லை என்றதும் பதைத்துத் துடித்து நடுங்கும் கரங்கள் கொண்டு அவனுடைய மூக்கிற்கு முன்னால் பிடித்துப் பார்த்தாள். மூச்சு விடுவதற்கான எந்த அறிகுறியுமில்லை. நம்ப மாட்டாமல் தன் கன்னத்தை அவனுடைய நாசியில் வைத்துப் பார்த்தாள். இல்லை மூச்சு வரவில்லை… அப்படியானால் அவன் இந்த உலகில் இல்லையா…? மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்க, விதற்பரைக்குத் தன் உயிரே விட்டுப் போவது போன்ற உணர்வில் துடித்துப் போனாள்.

நேற்று இரவு நன்றாகிவிட்டான் என்று நினைத்தாளே… ஆனால்… தாள முடியாத வலியுடன், அவனுடைய தோள்களைப் பற்றிக் குலுக்கியவள்,

“அயன்… தயவு செய்து எழுந்து கொள்ளுங்கள்…” என்று துடிக்க, அவனோ, இன்னும் அசைவற்றவனாக அப்படியே கிடக்க, இவளுடைய தளிர் உடலோ அச்சத்தில் வெடவெடக்கத் தொடங்கியது. யாரோ இதயத்தைப் பிதுக்கி இரத்தத்தை வடித்து எடுப்பதுபோன்ற உணர்வில் செயலிழந்து போனாள்.

கடவுளே இப்போது என்ன செய்யப்போகிறாள்… இத்தனை சிரமப்பட்டதற்கு அர்த்தமேயில்லையா… காட்.. இவனில்லாமல் எப்படி வாழ்வாள்… தாங்க முடியாத வேதனை அவளைக் கொல்லாமல் கொல்ல, அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை என்பதை உணர்ந்தவள்போலத் தொப்பென்று சரிந்து அமர்ந்தவளுக்கு அந்த உலகமே தன் சுழற்சியை நிறுத்திவிட்டது போலத் தோன்றியது. எதுவும் பேசப் பிடிக்காமல், சிந்திக்கப் பிடிக்காமல், செயல்படப் படிக்காமல் அத்தனை சக்திகளும் வடிந்துபோன உணர்வில் அவனையே வெறிக்கத் தொடங்கினாள் விதற்பரை.

விழிகளோ கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. முடிந்தது… எல்லாமே முடிந்ததா. இவ்வளவும்தானா வாழ்க்கை…? இந்தக் குறுகிய வாழ்க்கையை முடிக்கத்தானா இத்தனை ஆட்டங்கள்… இத்தனை சண்டைகள்… ஐயோ…! முன் தினம்தானே தன் ஆசையை அவளிடம் வேண்டி நின்றான்… இப்படி மொத்தமாகப் பிரிந்து செல்வான் என்று தெரிந்திருந்தால், அவன் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதித்திருப்பாளோ…?’ அதற்கு மேல் எதையும் யோசிக்க சக்தியற்றவளாக, என்ன யோசிப்பது, எதை எதிர்ப்பது, என்று எதுவும் புரியாதவளாக, அப்படியே கிடந்தாள்.

சற்று நேரம் காலம் தன் போக்கில் கடந்து சென்றது. பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்,

“ஐ கிவ் அப்…” என்றவாறு அவள் பக்கமாகத் திரும்பினான் அவ்வியக்தன். பெரி கிருஷ்ண பரமாத்மா என்கிற எண்ணமோ? அது போலவே, தலைக்குக் கரத்தை முட்டுக் கொடுத்தவாறு அவளைப் பார்த்துச் சிரித்தவன்,

“ஹாய் பேபி… குட் மார்னிங்…” என்றான் ஆளை மயக்கும் அந்த அழகிய புன்னகையுடன்.

சற்று முன், இதமான உடல் சூட்டில் பஞ்சுத் தலையணையை அணைத்து உறங்குவது போன்ற உணர்வில், மெதுவாகத் தன் விழிகளைத் திறந்த அவ்வியக்தனுக்கு, முழுவியலமே அவன் வெற்று மார்போடு முகம் உரச ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த விதற்பரைதான்.

முதலில் அவன் அதைக் கனவென்றுதான் நினைத்தான். இத்தனை இனிய கனவை அவன் இதுவரை கண்டதில்லையே. ஏனோ அந்தக் கனவிலிருந்து விலகப் பிடிக்காமல் மீண்டும் விழிகளை மூடியவாறு முகம் மலர தன் பஞ்சு மெத்தையில் தொப்பென்று தலையைப் போட்டபோதுதான், நங்கென்று கட்டாந்தரை மண்டையைப் பதம்பார்க்க நிதர்சனம் உறைத்தது. அந்தத் தரை கொடுத்த வலியில்,

“அவுச்…” என்றவாறு தலையைத் தடவிக் கொடுத்தவனுக்கு மெல்ல மெல்ல முதல் நாள் நடந்தது அனைத்தும் படமாக ஓடியது.

உடல் அடித்துப் போட்டது போல வலித்தது. தொண்டை எரிச்சலுடன் கூடிய வலியில் உயிரைப் பிறாண்டியது. மூக்கு அடைத்துக் காற்றே வெளிவரமாட்டேன் என்பது போலச் சண்டித்தனம் செய்தது. உடலும் விழிகளும் எரிந்தன… அதையும் மீறிக் குளிர்ந்தது. ஆனாலும் சமாளிக்கும் அளவுக்குத் தைரியம் வந்திருந்தது.

விதற்பரையைத் தள்ளிவிட்டுப் பள்ளத்தில் விழுந்து தண்ணீருக்குள் மூழ்கும் போதே அவனுக்கு நினைவு தப்பியிருந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவில் இல்லை. எப்படி இந்தக் குடிலுக்கு வந்தோம், யார் அழைத்து வந்தார்கள் எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை.

பெரும் அதிசயமாக எப்படி விதற்பரை அவனுக்குப் பக்கத்தில்…? அதுவும் அவனுடைய அணைப்பில், மார்பில் முகம் பதிய உறங்கிக்கொண்டிருக்கிறாள். நம்ப முடியாதவனாக, குனிந்து பார்த்தவனுக்கு, அவளுடைய முகத்திலிருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை. அவன் கனவு காணவில்லை. உண்மையாகவே அவளுடைய மலர் வதனம் அவனுடைய கடிய பாறைபோன்ற மார்பில் பூத்துத்தான் கிடந்தது.

அவள் தள்ளி இருந்தாலே உள்ளே இதயம் பலமாய்த் துடிக்கும். இப்படி அவனுடைய கைவளைவில் கிடந்தால் எப்படித்தான் தாங்குவான்? அந்தக் கணம் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தை அடக்கும் வழி தெரியாமல் திணறினான் அவ்வியுக்தன்.

என்ன தான் முயன்றும் கட்டுப்பாடு இழந்த மனதைக் கடிவாளம் பூட்ட சக்தியற்றவனாகத் தன் விரல்கள் கொண்டு அவள் தேகத்தில் கோலம் போட முயன்றான். அணிந்திருந்த பாத் ரோப்பை மீறித் தெரிந்த உடல் அங்கங்களின் அழகில் மொத்தமாய்த் தொலைந்தவனாய் விரல்கள் கொண்டு தீண்ட முயன்றான். அவன் ஸ்பரிசம் பட்டதும் அவளுடைய தூக்கம் கலைந்ததோ, மெல்லியதாகத் தன் உடலை அசைக்கச் சடார் என்று விரல்களை இழுத்துக்கொண்டவனிடம் அச்சம் பிறந்தது.

இதுவரை எந்தப் பெண்ணைக் கண்டும் இந்தளவுக்கு அவன் அச்சம் கொண்டதில்லை. அவளோ, தன் உடலை முறுக்கிவிட்டு மீண்டும் அவன் கை வளைவில் திரும்பிப் படுத்துக் கொள்ள, இவனுடைய முகத்தில் மெல்லிய குறும்பின் புன்னகை.

மெதுவாக அவள் முகம் நோக்கிக் குனிந்தவன், தன் உதடுகளைக் குவித்து, இவள் காதடியில் ஊத, அவன் சுவாசக் காற்றுப் பட்ட அந்த நொடி அவளுடைய உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்த். அந்தப் புன்னகையில் மொத்தமாய்த் தொலைந்துபோனான் அவ்வியக்தன்.

இப்போதுதான் பெண்களை ஏன் மலரோடு ஒப்பிடுகிறார்கள் என்பதே அவனுக்குப் புரிந்தது. அப்போது மொட்டு விரித்த மல்லிகை போல வாசனை பரப்பியதோடு உள்ளத்தையும் கொள்ளை கொள்ளச் செய்கிறதே. மீண்டும் அந்த நகைப்பைப் பார்க்கவேண்டும் என்கிற ஒரு வித வேகம் தோன்ற, மீண்டும் அவள் காதடியில் ஊத, இப்போதும் அதே அழகிய புன்னகை சிலிர்த்துப் போனான் அவ்வியக்தன்.

ஏனோ ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழும்போது அந்த அழகிய முகத்தைத் தரிசித்தவாறே எழவேண்டும் என்கிற வெறி எழுந்தது. அவனுடைய கையணைப்பில் அந்த மென்னுடல் குழைந்து உருகவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. இரவின் ஆழ்ந்த உறக்கத்திலும், அவளுடைய சுவாசக் காற்றை நுகர்ந்தவாறே அவளோடு கைகோர்த்துக் கரைசேரக் கனவு காணவேண்டும் என்கிற ஏக்கம் பிறந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருட்டின் தனிமையில் தவிக்கும் போது அவள் கரம் பற்றி வெளிச்சம் நோக்கி நடக்க வேண்டும் என்கிற பேராவல் தோன்றியது.

இவை நடக்குமா? முன் தினம் இருவருக்குமான உரையாடல் நினைவுக்கு வர அவ்வியக்தனின் முகம் வாடிப்போயிற்று. திருமணத்தை வெறுக்கும் அவனைத் திருமணமின்றி ஒரு ஆணோடு வாழ மாட்டேன் என்று சொல்லும் அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்….? முதன் முறையாக அவள் தனக்குக் கிடைக்க மாட்டாளோ என்கிற அச்சம் பூதாகரமாகத் தாக்க அது அவனைப் பலவீனப் படுத்தியது. அதைக் கற்பனையில் கூட அவனால் சிந்திக்க முடியவில்லை.

ஏன் என்று தெரியவில்லை, அத்தனை சுலபத்தில் அவளைத் தொலைத்துவிடும் தைரியம் தனக்கு இல்லை என்பது அவனுக்கு நன்கு புரிந்து போயிற்று.

மீண்டும் அவன் தன் உதடுகளைக் குவித்து அவள் முகத்தில் ஊத, இப்போது தூக்கம் தொலைந்து தன் விழிகளைத் திறந்தாள் விதற்பரை.

‘ஐயையோ, அவசரப்பட்டு, அவளை எழுப்பிவிட்டோமே…” என்று பதறியவன், அவள் சுயத்திற்கு வர முதலே, விலகிப் படுத்தவன், அவள் எழும்புவதற்காகக் காத்திருக்க, அவளோ எழுந்த மறு விநாடி அவனைத்தான் நாடினாள். அதை உள்ளுணர்வால் புரிந்துகொண்டவனுக்கு உள்ளத்திலே மத்தாப்பூவின் சிலிர்ப்பு.

ஆனால் அவன் நினைத்ததிற்கு மாறாக அவள் அச்சம் கொண்டு அவனைத் தட்டிப்பார்க்க, ஏனோ அவளோடு விளையாடிப் பார்க்கவேண்டும் என்கிற குழந்தைத்தனமான பேராவல் எழுந்தது.

உடனே மூச்சை அடக்கியவனாகக் கிடந்தான்.

உண்மையாகவே அவனுக்கு ஏதோ நடந்துவிட்டது என்று பயந்தவளாய், அப்படியே மலைத்துப்போயிருக்கத் தன் மீது விழுவாள், எழுவாள், தட்டிப் பார்ப்பாள், துடிப்பாள் என்று பல கற்பனைகளோடு காத்திருந்தவனுக்கு அது நடக்காமல் போக, ஒற்றை விழியை மட்டும் திறந்து விதற்பரையைப் பார்த்தான்.

அவளோ தன் மூச்சைக் கூட எடுக்க மறந்தவளாக அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த நிலை இவன் அடிவயிற்றைக் கலக்க, அதற்கு மேல் நடிக்க முடியாதவனாக எழுந்தவனைக் கண்டு, முதலில் நம்ப முடியாதவளாக, அதிர்ந்தவள், பின் ஆவேசம் கொண்டவளாக,

“வட் த xxxxx ஆர் யு திங்கிங்…?” என்று சீறியவள், ஓங்கி அவனுடைய கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள் விதற்பரை. அவ்வியத்தன் அவளுடைய இந்த ஆவேசத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடித்த கன்னத்தை ஒற்றைக் கரத்தால் பற்றியவாறு அவளை நம்ப முடியாமல் பார்த்தான்.

இது வரை யாரும் அவனை அடித்ததில்லையே. முதன் முறையாக அறைவாங்கிய அதிர்ச்சியில் அவன் சிலையாய் நிற்க, அவளோ, ஆத்திரம் அடங்காதவளாக,

“ஐ… ஐ தோட்… ஐ லொஸ்ட் யு… பட் யு… xxxxx xxxxx” என்று சீறியவள், மீண்டும் மீண்டும் அவனை அடிக்க முயல, அதிர்ச்சி நீங்கயவனாய் அவளுடைய அடியிலிருந்து தப்ப முயன்றவன், முதலில் தன் கரங்களைக் குறுக்காக வைத்து அவள் அடியிலிருந்து தன்னைக் காக்க முடியன்றான்.

“ஹே… ஐ ஆம் சாரி… ரியலி ஐ ஆம் சாரி… ஸ்டாப்… டோன்ட் ஹிட் மி… அவுச்… இட்ஸ் ஹேர்ட்…” என்று ஒரு பக்கம் வாய்விட்டுச் சிரித்தாலும், மறுபக்கம் அவள் அடியிலிருந்து தப்ப முயன்றவன், ஒரு கட்டத்தில் அது இயலாமல் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு, மறு கணம் சுழன்று அவளைத் தரையில் போட்டு, அவளுடைய இரு கரங்களையும் தூக்கித் தலைக்கு மேலாக பற்றி அழுத்தி அவளை நோக்கிக் குனிந்து பரவசத்துடன் வெறித்தான்.

விதற்பரையோ விழிகள் கலங்க, உதடுகள் நடுங்க முகம் சிவக்க அவனைத்தான் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவனோ தனக்காகத் துடிக்கும் அவள் அழகில் தன்நிலை கெட்டவனாய், அந்தக் காட்சியை முழுதாக உள் வாங்கி ரசித்தவனாய், அவள் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தவன், கண்கள் பணிக்க,

“எனக்காக இந்தளவு யாரும் துடித்ததில்லை தெரியுமா… மிஸஸ் ஜான்சியைத் தவிர” என்றான் கிசுகிசுப்பாய். பின்,

“எனக்காய் நீ இப்படித் துடிப்பாயானால், என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பேன் தற்பரை…” என்றான் ஏக்கமாக. பின் அவளை ஆவலுடன் பார்த்து,

“பிடித்திருக்கிறது… எனக்காய் நீ துடிப்பது…. மிகப் பிடித்திருக்கிறது தற்பரை…” என்று கூறியவனை வெறித்துப் பார்த்தவள், பின் தன்னை விடுவிக்க முயன்று திமிறியவளாக,

“விடுங்கள் என் கையை…” என்றாள் சீறலாய். அவனோ கலங்கிய அந்த விழிகளையே கண்வெட்டாமல் பார்த்தவன்,

“நோ… எனக்காய் துடிக்கும் இந்த அழகிய முகத்தை நான் கொஞ்சம் ரசிக்கவேண்டும்… இட்ஸ் பியூட்டிஃபுள்…” என்றவன், ஒரு கரத்தை விடுவித்துவிட்டுக் கோபத்தில் சிவந்த அவளுடைய கன்னத்தைத் தன் உள்ளங்கையால் பற்றி,

“எனக்காகத் தவிக்க, எனக்காய் கலங்க என் கூட வந்துவிடேன் தற்பரை… இதுவரை அனுபவிக்காத மகிழ்ச்சியை உன் அருகே மட்டும்தான் அனுபவிக்கிறேன்… புதிய உலகத்தைக் காண்கிறேன்… நானே புதியவனாய்ப் பிறக்கிறேன்… தயவு செய்து என் கூட வந்துவிடேன்…” என்று கெஞ்சுவது போலக் கேட்க, அது வரை அவனுடைய பிதற்றலைப் பற்களைக் கடித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தவள், அடுத்தக் கணம் தன் பலம் முழுவதையும் திரட்டி அவனைத் தள்ளிவிட்டு,

“சீ… உங்களை அந்தப் பனிக்குள் உறைந்து சாக விட்டுவிட்டு வந்திருக்கவேண்டும்… முட்டாள் தனம் செய்துவிட்டேன்… இத்தனை பெரிய ஆபத்தைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம். கொஞ்சமாவது புத்தி வருகிறதா பார்…” என்று ஆத்திரத்துடன் கூறியவாறு, எழுந்தவள், முன்தினம் விரித்துப்போட்ட தன் ஆடைகளை எடுத்துப் பார்த்தாள். ஈரம் சரியாகக் காயவில்லை. ஆனாலும் அணியக் கூடிய விதத்தில்தான் இருந்தது. உடனே அத்தனை ஆடைகளையும் சேகரித்துக்கொண்டு, அங்கிருந்த அறைக்குள் நுழைந்தவள், தன்னுடையதை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

வந்தவள், அவனுடைய ஆடைகளை எடுத்து அவன் முகத்தை நோக்கி விசிறி அடிக்க, அவனோ வியப்புடன் தன் ஆடைகளைப் பார்த்துவிட்டுப் போர்வையை விலக்கிப் பார்த்தான். அப்போதுதான் தன் முழு நிலையும் அவனுக்குப் புரிந்தது.

“என் ஆடையை நீயா கழற்றினாய்?” என்றான் நம்ப மாட்டாமல். இவளோ எரிச்சலுடன் அவனைப் பார்த்துவிட்டு,

“இல்லை… இதற்கெனச் சேடிப்பெண்களை அழைத்து வந்தேன்…” என்று எரிந்து விழ,

“இதை வாய்ப்பாக வைத்து என் கூடத் தப்பாக நீ நடக்கவில்லைதானே…” என்றான் மெல்லிய நமட்டுப் புன்னகையுடன்.

முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று இவளுக்குப் புரியாமல் விழித்தவள், பின், அவன் கூற வந்ததன் அர்த்தம் தெரிய, அவனை எரிப்பது போலப் பார்த்தவள்,

“நிச்சயமாக இல்லை… அதுவும் உங்கள் கூட வாய்ப்பேயில்லை…” என்று அவள் பலமாக மறுக்க, இப்போது வாய் விட்டுச் சிரித்தவன், பின் தன் தோள்களைக் குலுக்கிவிட்டு,

“ஐ டோன்ட் மைன்ட்… பேபி… இட்ஸ் மை ப்ளஷர்…” என்றவனைக் கொல்லும் வெறியுடன் வெறித்தாள் இவள்.

அவனோ தன் இடையைச் சுற்றி அந்தப் போர்வையுடன் எழுந்து அவளுக்கு முன்பாகவே ஆடைகளை மாற்றத் தொடங்க, இவளோ பெரும் அவஸ்தையுடன் விழிகளை இறுக மூடியவாறு திரும்பி நின்று கொண்டாள். ஏனோ இதயம் பலமாக அடித்துக் கொண்டது.

இதுவரை ஒரு ஆணை முழுதாக அவள் பார்த்தது இல்லை. ஆனால் முதன் முறையாக, ஆணழகன் போட்டிக்குத் தயாரானவன் போலத் திரண்ட புஜங்களும், அகன்ற மார்பும், இரையைக் குறிவைத்த ஆக்ரோஷத்துடன் சிறகை விரித்துப் பறக்க முயலும் கழுகைப் பச்சையாகக் குத்தப்பட்ட முதுகும், இறுகிய வயிறும், அதில் தெரிந்தும் தெரியாமலும் எம்பியிருந்த சிக்ஸ்பாக் வயிறும், இத்தகைய ஆண்மையைச் சஞ்சிகையிலும், தொலைக்காட்சிகளிலும் மட்டும்தான் கண்டிருக்கிறாளே தவிரக் கண்முன்னால் கண்டதில்லை.

அதில் மனம் கவர்ந்தவன் வேறு. அது வேறு இவளைக் குறுகுறுக்க வைத்தது. அதன் விழளைவாகத் தன்னையும் மீறி அவன் பக்கமாகப் போக முயன்ற விழிகளை அடக்கும் வழி தெரியாது பற்களைக் கடித்தவள்,

“அங்கேதான் அறை இருக்கிறதே… அங்கே போய் மாற்றுவதற்கு என்ன…?” என்று சுள்ளென்று விழ, இவனோ, புருவங்கள் சுருங்க அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,

“ஏன்… இங்கே மாற்றினால் என்ன?” என்றான் குழப்பமாக.

“இங்கே மாற்றினால் என்னவா? நான் ஒரு பெண்… கொஞ்சமாவது வெட்கமில்லையா உங்களுக்கு…?” என்று முகம் சிவக்கக் கோரியவளை, ஏறிட்டுப் பார்த்து நகைத்தவன்,

“சோ வட்… நேற்று நீதானே என் ஆடைகளைக் களைந்தாய்? அப்போது நீ ஆணாகவா இருந்தாய்… தவிர, இதில் வெட்கப்படவோ சங்கடப் படவோ என்ன இருக்கிறது…” என்று இவன் அலட்சியமாகக் கேட்கத் தன் பற்களைக் கடித்தவள்,

“அப்படியானால் எதற்கு ஆடைகள் அணிகிறீர்கள்… நிர்வாணமாகத் தெருவில் சுத்த வேண்டியதுதானே…” என்றவளிடம், பான்ட் ஜிப்பை இழுத்து விட்டவாறு,

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை தாயே… ஆனால் பார்… அப்படிப் போனால் சிறையில் அடைத்து விடுவார்கள்… குறைந்தது, தலையில் பிழை என்று முத்திரையும் குத்திவிடுவார்கள்… நான் வேறு கம்பீரமாக இருக்கிறேனா… பெண்களின் தொல்லை வேறு… வேண்டுமானால் சொல்… உனக்காக, இப்போதே அனைத்தையும் துறுந்துவிட்டு…” என்று அவன் கிண்டலுடன் கூற, இவளோ பதற்றமாக இரண்டடி தள்ளி நின்றவாறு,

“இல்லை… இல்லை… தெரியாமல் சொல்லிவிட்டேன். ஆளை விடுங்கள்…” என்று அச்சத்தில் அலறியவளுக்கு, அப்போதுதான் முன்னிரவு அவன், ரனி என்று கூறியது நினைவுக்கு வந்தது. என்னதான் முயன்றும் அடக்க முடியாமல் எழுந்த பொறாமையை வெளிக்காட்டாது, தன் விரல்களில் உள்ள நகத்தின் வளர்ச்சியைப் பரிசீலித்தவாறே,

“அது… அந்த… அந்த ரனி யார்…” என்றாள் ஏதோ அக்கறையற்றவள் போல. சற்றுக் காய்ந்தும் காயாமலுமிருந்த ஷேர்ட்டை அணிந்தவன் ஒரு கணம் தன் செயலை விட்டுவிட்டு அப்படியே அமைதியானான். பின் திரும்பி அவளைப் பார்த்து,

“ஏன் கேட்கிறாய்…” என்றான் அதுவரையிருந்த குறும்பு மொத்தமாய் விடைபெற்றுச் செல்ல. இவளோ தன் தோள்களைக் குலுக்கி,

“நேற்று… குளிரில் நடுங்கியபோது அந்தப் பெயரைச் சொன்னீர்கள்… உங்களை விட்டுப் போகவேண்டாம் என்று கேட்டுக் கொண்டீர்கள்…” என்றாள் சுரத்தில்லாமல்.

அதைக் கேட்டததும் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுத் தன் ஷேர்ட்டை அணிந்துகொண்டு இவள் பக்கமாகத் திரும்பி,

“ரனி என்னுடைய பெண் தோழி…” என்று முடிக்க முதல் ஆவேசத்துடன் அவனை நோக்கித் திரும்பியவள்,

“எத்தனை தைரியமிருந்தால், பெண் தோழி இருக்கும்போதே, என்னோடு சரசமாட முயல்வீர்கள்…” என்றாள் சீற்றமாக. அவனோ,

“ஹே… ஹே… கூல்… ரனி என்னுடைய கல்லூரித் தோழி… தவிர என்னுடைய முதல் காதலியும் கூட. என்னுடைய பதினேழாவது வயதில் அவளைச் சந்தித்தேன். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம்…” என்றவனின் முகம் ஏனோ திடீர் என்று வாடிக் கறுத்துப் போனது.

அதைக் கேட்டதும் திகைத்தவள்,

“பதினேழு வயதிலேயா?” என்றாள் வாயைப் பிளந்தவாறு. அவனோ அதில் என்ன இருக்கிறது என்பது போல அவளைப் பார்க்கத் தன் தலையைக் உலுப்பியவள்,

“தென்…” என்றாள் எரிச்சலுடன்.

எதையோ விழுங்குவது போலத் தொண்டையை அசைத்தவன். பின், அவளைப் பார்த்து வலி நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தினான்.

“ஒரு வருடம் காதலித்தோம்… அதற்குப் பிறகு இருவருக்கும் ஒத்துப்போகவில்லை… சொல்லப்போனால் காதலின் மீது வெறுப்பு வர அவளும் ஒரு காரணம் என்று வைத்துக்கொள்ளேன்…” என்றவனைக் குறுகுறுவெனப் பார்த்தவள்,

“நேற்று உணவகத்தில் பார்த்த அந்தப் பெண்ணும், உங்கள் மாஜிக் காதலியும் ஒன்றா…” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க, இவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“ஆமாம்…” என்றான் எந்தவிதக் கிலேசமும் இல்லாமல். விதற்பரையோ பற்களைக் கடித்துத் தன் ஆத்திரத்தை அடக்கியவாறு,

“சோ அவளுடைய பொறாமையைத் தூண்டத்தான் என்னை அங்கே அழைத்துச் சென்றீர்களா?” என்று சீற்றமாகக் கேட்டவளை நிதானமாகப் பார்த்தவன்,

“இல்லை… உன்னை விட இன்னும் அழகான ஒருத்தி எனக்குப் பெண் தோழியாக வர முடியும் என்று காட்ட அழைத்துச் சென்றேன் தற்பரை…” என்றான் உண்மையை மறைக்காமல்.

இவளோ அவனைக் கொல்வது போலப் பார்த்தாள்.

கொஞ்சமாவது மனம் அமைதியடைவது போல ஏதாவது சொல்கிறானா பார்… மெய் கசக்கும்தான்… ஆனால் அதைக் கூறாமல் இருந்தால் குறைந்தது இவள் மனமாவது அமைதி அடைந்திருக்குமோ… எதையும் மறைக்காது உண்மையைக் கூறும் அவன் மீதும் ஆத்திரம் ஏகத்திற்கும் பிறந்தது. எரிச்சலுடன் அவனை ஏறிட்டவள்,

“நான் ஒன்றும் உங்கள் பெண் தோழியில்லை…” என்றாள் சீறலாய். இப்போது மெல்லியதாகச் சிரித்தவன்,

“அது எனக்கும் உனக்கும் மட்டும்தானே தெரியும். ரனிக்குத் தெரியாது அல்லவா?” என்றான் பற்கள் தெரிய. எரிச்சலுடன் அந்தச் சிரிப்பைக் கண்டவள்,

“ஏன் உங்களுக்குள் ஒத்துப்போகவில்லை…” என்றாள் அடுத்து. அவனோ அவள் விழிகளைப் பார்க்காமல் எங்கோ பார்த்தவாறு,

“இதைப் பற்றிப் பேச எனக்குப் பிடிக்கவில்லை விதற்பரை… இதை இப்படியே விட்டுவிடலாம்…” என்றுவிட்டு சிறு தள்ளாட்டத்தோடு சுவரில் சாய்ந்து நிற்க, இவளோ அவனை நெருங்கி, அவன் முகத்தில் எதையோ தேட முயன்றாள். அவனோ விழிகளை அழுந்த மூடி ஒரு கணம் நின்றுவிட்டு அவளுடைய குறுகுறுப் பார்வையைத் தாங்கும் சக்தியில்லாதவனாக, விழிகளைத் திறந்து “வட்…” என்றான்.

“நேற்று மிஸஸ் ஜான்சியை அதிகம் தேடினீர்கள்… எதிலிருந்தோ உங்களைக் காக்கச் சொல்லி வேண்டினீர்கள்… என்ன நடந்தது…? எதற்காக அத்தனை அச்சம்… என்னோடு பகிர்ந்து கொள்ள விருப்பம் என்றால் பகிர்ந்து கொள்ளுங்கள். கேட்க நான் தயாராக இருக்கிறேன்…” என்றவளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான் அவ்வியக்தன். பின் அவள் விழிகளைப் பார்க்கும் தைரியமில்லாதவனாக எங்கோ பார்த்தவாறு,

“பெரிதாக ஒன்றுமில்லை. வெறும் கனவு… அவ்வளவுதான்…” என்றவன், அவசரமாக அவ்விடத்தை விட்டு நகர முயல, விதற்பரையின் கரம் அவனுடைய கரத்தை அழுந்த பற்றியது. இவனோ அழுந்த மூடிய உதடுகளுடன், அவளைத் திரும்பிப் பார்க்க,

“கனவு அடி ஆழத்தில் படிந்துபோன வலிகளின் எச்சம். உங்கள் கனவில் வலி இருந்தது. அச்சமிருந்தது. எதிலிருந்தோ மீள வேண்டும் என்கிற வெறி இருந்தது… என்னாச்சு அயன்…” என்று அவள் மென்மையாகக் கேட்க, அவனோ, அவளிடமிருந்து வரும் கேள்விகளிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தடுமாறியவனாக,

“நான்தான் சொன்னேனே… ஒன்றுமில்லை என்று… யோசிக்கும் அளவுக்கு அது பெரிய விஷயம் இல்லை தற்பரை…” என்றான் அப்போதும் முடிந்தளவு நிதானத்தோடு. ஆனாலும் அவனுடைய விழிகள் அவளை ஏறிட்டுப் பார்ப்பதாயில்லை. அவசரமாக விழிகளை அங்கம் இங்கும் கொண்டு சென்றவனுக்கு ஏனோ அவளைத் தைரியமாகப் பார்க்கும் திடம் இருக்கவில்லை.

அவளைப் பார்க்க சங்கடப் படும் விழிகளும், எதையோ சொல்லத் தவிப்பதும், பின் வேண்டாம் என்று மறுப்பதும் போன்ற அவனுடைய முகப் பாவமும், ஏதோ ஒரு வலியில் சிக்கி உழல்கிறான் என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து போக, அதை அறிந்தே ஆகவேண்டும் என்கிற பரபரப்பும் வேகமும் அவளிடம் எழ, அவனுடைய மேல் கரங்களைப் பற்றிக் கொண்டவள்,

“நான் உங்களுக்கு உதவத்தான் முயல்கிறேன் அயன்… ஏதோ ஒன்று உங்களை அரித்துக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரிகிறது… உங்களைச் சங்கடப்படுத்தும் விஷயம் என்ன? என்னால் உங்கள் வேதனையைப் போக்க முடியும்… உதவ முடியும்… உங்களுக்குத் திருமணத்தின் மீதும் காதலின் மீதும் வெறுப்பு வர அந்தச் சம்பவம் ஒரு காரணமாக இருந்தால், உங்களை மாற்ற என்னால் முடியும்… நிச்சயமாக முடியும்… சொல்லுங்கள்” என்று எப்படியாவது அவனுடைய வலியைப் போக்கவேண்டும் என்கிற ஒரு வித வேகத்தில் கேட்க, அதுவரை அமைதியாக இருந்தவன் மறு கணம், அவளுடைய மேல் கரங்களை வலிக்கும் அளவுக்கு இறுக பற்றித் தன்னை நோக்கி உயர்த்தினான்.

“ஐ டோன்ட் வோட் யுவர் சிம்பதி… டு யு ஹியர் மீ… ஐ டோன்ட் வோட் யுவர் xxxxx சிம்பதி… ஐ ஆம் ஓக்கே… ஐ ஆம் எ நோர்மல் பேர்சன்… புரிந்ததா… புரிந்ததா” எனப் பற்களைக் கடித்தவாறு ஒரு வித உறுமலோடு சீற, அந்த உறுமலைக் கண்டு விதற்பரை விதிர்விதிர்த்துத்தான் போனாள்.

சிவந்த அவன் முகமும், விழிகளில் தெரிந்த அந்த வெறியும், தகித்த அவன் உடலும், அவளை வெலவெலக்கச் செய்ய, முதன் முறையாகக் கண்ட அவனுடைய புதிய பரிமாணத்தைக் கண்டு அதிர்ந்தவளாக அவனை அச்சத்துடன் பார்க்க, அதுவரை எரிதணலாய்க் கொதித்துக்கொண்டிருந்த அவனுடைய முகம், அவளுடைய வெளிறிய முகத்தைக் கண்டதும் மறு கணம் இளகிப் போயிற்று.

நொடியில் சீற்றம் தணிந்தவனாய், உடல் தளர்ந்தவன், வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு, தன் பிடியின் இறுக்கத்தைத் தளர்த்தினான். பின் உள்ளங்கையை அவளுடைய கன்னத்தில் வைத்துப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவன்,

“லிசின் பேபி… எனக்கு உன்னுடைய பரிதாபம் தேவையில்லை… உன்னுடைய அக்கறையும் தேவையில்லை… எனக்கு வேண்டியது… நீ… நீ மட்டும்தான்…” என்றவனைச் சுடுவது போலப் பார்த்தாள் விதற்பரை. அது வரையிருந்த அச்சம் வடிந்து போக அங்கே கடுமை குடியேறியது.

பலமாக அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டவள்,

“கனவில் கூட இது நடக்காது அயன்… நம் இருவருக்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லை… நான் ஒரு கொள்கையோடு வாழ்பவள்… நீங்கள், எந்தக் கொள்கையும் இல்லாமல் தான்தோன்றியாக வாழ்பவர். எனக்கென்று ஒரு பாதை உண்டு. அந்தப் பாதையைத் தாண்டி என்னால் விலக முடியாது. நீங்கள், பாதையே இல்லாமல் முற்களும், விஷ ஜந்துக்களும் வாழும் பற்றைக் காட்டிற்குள் திக்குத் திசை தெரியாது அலைந்து திரிகிறீர்கள். அந்தப் பற்றைக் காட்டைச் சுத்தப்படுத்தி அழைத்துப் போக நான் தயாராகத்தான் இருக்கிறேன்… ஆனால் என் கரத்தைப் பற்றி வெளியேற நீங்கள் தயாராக இல்லை. இதில் நான் என்ன செய்யட்டும்… உங்களைச் சுற்றியுள்ள கசடுகளைச் சுத்தப்படுத்தினால் மட்டும்தான் போக வேண்டிய பாதை உங்களுக்குப் புலப்படும். இல்லையென்றால் அங்கே இருக்கிற விஷ ஜந்துகளிடம் சிக்குப்பட்டு அழிந்து போகவேண்டியதுதான்…” என்றுவிட்டு, விழிகள் கலங்க,

“நீங்கள் இப்போது நினைக்கிற மகிழ்ச்சியான வாழ்க்கை அதிகக் காலத்திற்கு உங்களோடு வரப்போவதில்லை. இன்னும் கொஞ்சக் காலங்களில், இந்த அழகு ஆண்மை எல்லாமே போய்விடும். அப்போது தோள் சாய்த்து இளைப்பாற நீங்கள் படுத்து எழுந்த பெண்கள் யாரும் வரப்போவதில்லை.” என்றவள் என்ன நினைத்தாளோ, சோர்வுடன் தன் தோள்களைக் குலுக்கியவள், “ப்ச்… அறிவிலிக்கு உரைப்பவன் அவனிலும் மடையன் என்பது தெரிந்தும் வாழ்க்கை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத உங்களிடம் பேசுகிறேன் பாருங்கள்… நான் ஒரு முட்டாள்…” என்றவாறு அவனை விட்டு விலகி நின்றவள், தன் கரத்திலிருந்த கைச் சங்கிலியைப் பக்குவமாகக் கழற்றி, அதை ஒரு கணம் ஏக்கத்துடன் பார்த்தாள். பின் அவனுடைய கரத்தைப் பற்றி, அதில் வைத்துவிட்டு,

“எனக்கு உரியதில்லாத எதையும் என் கூட வைத்திருந்து எனக்குப் பழக்கமில்லை…” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து, உங்கள் விருப்பத்தை உணர்ந்து ஒருத்தி நிச்சயமாக வருவாள்… அவளிடம் கொடுங்கள்…” என்றவள், விரைந்து சென்று ஜாக்கட்டை மாட்டினாள்.

தன் கசங்கிய முகத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல், தலையைக் குனிந்தவாறே, பாதணியை எடுத்து அணிய அவ்வியக்தனோ தன் கரத்திலிருந்த கைச் சங்கிலியைப் பார்த்துக் கலங்கியவனாய்,

“தற்பரை… ப்ளீஸ்… டோன்ட் டு திஸ் டு மி…” என்றான் வலியுடன். அவளோ, தன் பாதணியை இழுத்தவாறு எங்கோ பார்த்து, .

“யு ஆர் நாட் டிசேர்வ் மி அயன்… ஆனாலும் உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்….” என்று விட்டு அவனைத் திரும்பிப் பார்த்து, “வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே இருந்துவிடாது… வலியும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர வைத்துவிட்டீர்கள்… இது எனக்கு நல்ல பாடம்…” என்று வலியுடனான புன்னகை ஒன்றைச் சிந்தியவள், வாசலை நோக்கிச் செல்ல, பதறியவனாக அவளருகே வந்தவன்,

“எங்கே போகிறாய்?” என்றான். இவளோ

“இது என்ன கேள்வி… என் வீட்டுக்குத்தான்… இப்படித் தனியாகக் கொட்டும் பனியில், உங்கள் கூட அமர்ந்து உங்களுடைய மனம் மாறும் வரைக்கும் பிரசங்கம் செய்யும் அளவுக்கு எனக்குப் பொறுமையும் கிடையாது, நேரமும் இல்லை… சோ… இப்போதே விடை பெறுகிறேன்…..” என்றவளுக்கு முன்பாக வந்து நின்றவன், மறுப்பாகத் தலையை அசைத்து,

“இல்லை… இந்தக் கால நிலையில் தனியாக உன்னால் போக முடியாது… சற்றுப் பொறு… நான் இங்கிருந்து செல்ல ஏதாவது போக்கு வரத்து இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன்…” என்று விட்டு வெளியேற முயன்றான்.

“லீவ் இட்… எனக்குக் கால் கைகள் நன்றாகத்தான் இருக்கின்றன அயன்… என்னால் தனியாகப் போக முடியும்… என்றவாறு வெளியே வர, முன் தினம் போல் அல்லாமல் ஓரளவு பனி வீழ்ச்சி மட்டுப்பட்டிருந்தது. நிம்மதியுடன் அந்தக் குடிலின் படியை விட்டு இறங்க, பனி முழங்கால் வரை பனி ஏறியிருந்தது. கூடவே அந்தக் குளிர் காற்றில் உடல் நடுங்கியது.

அதைக் கண்டு வாய்க்குள் எதையோ முணுமுணுத்த அவ்வியக்தன், வேகமாக அவளை நெருங்கி, அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தி,

“ஸ்டாப் இட் தற்பரை… இந்தப் பனிக்குள் உன்னால் போக முடியாது…” என்று அவன் மறுக்க, இவளோ ஏளனத்துடன் பார்த்துச் சிரித்து,

“வை நாட்… நேற்று அந்த ஆற்றில் உங்களைக் காப்பாற்றி, இங்கே வரைக்கும் ஒற்றையாளாக அழைத்து வந்தேன்… இப்போது மட்டும் துணை எதற்கு… என்னால் சமாளிக்க முடியும்… உங்கள் உதவிக்கு நன்றி…” என்று விட்டு மேலும் நடக்கத் தொடங்க, பொறுமையை இழந்த அவ்வியக்தன்,

தற்பரை… முட்டாள் தனத்திற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். நேற்றைய சம்பவத்திலிருந்து நான் இன்னும் முழுதாகக் குணமாகவில்லை. தொண்டை வலிக்கிறது. மூக்கு அடைக்கிறது. உடல் பயங்கரமாக வலிக்கிறது… இந்த நிலையில் அதிகத் தூரம் பயணிக்க முடியாது… தயவு செய்து சொல்வதைக் கேள், உள்ளே போ… நாளை இங்கிருந்து கிளம்பலாம்…” என்று அவன் இதமாகவே கூற, விதற்பரையோ, சற்றும் மலை இறங்காதவளாக அவனைப் பார்த்து,

“கோ… டு ஹெல்…” என்றவாறு விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள்.

 

 

பாகம் ஒன்று முற்றும்.

What’s your Reaction?
+1
20
+1
4
+1
1
+1
0
+1
7
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!