Thu. Nov 14th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)

 

பத்து வருடங்களுக்குப் பிறகு

திருகோணமலை கென்யாவில்

சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. முகத்தை உள்ளங்கைகளால் தேய்த்துவிட்டவள், படுக்கையை விட்டு எழுந்தபோது இடுப்புக்குக் கீழே வலித்தது.

மெல்லிய முனங்கலோடு, அழுத்தி விட்டுக் கொண்டவள், சிரமப்பட்டுப் படுக்கையை விட்டு எழுந்தபோது சுர்… என்று பெரும் வலியொன்று வலது குதிக்காலிலிருந்து இடைவரைப் பயணப்பட, அதற்குமேல் எழ முடியாது பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள்.  வலியில் உயிர் போக தன்னை மறந்து “ம்மா…” என்று முனங்கியவாறு வலித்த காலைத் தேய்த்துவிட, அவளுடைய முனங்கலில் பக்கத்திலிருந்த உருவம் மெதுவாக அசைந்து இவள் பக்கமாகத் திரும்பியது. அதை உணர்ந்து தன் நாக்கைக் கடித்தவாறு திரும்பிப் பார்த்தாள். நல்லவேளை, திரும்பிய உருவம் மீண்டும் துயிலில் ஆழ்ந்து விட இவள் முகம் கனிந்து குழைந்து போயிற்று.

முகம் மலர்ச்சியில் பொங்க, அந்த உருவத்தை நோக்கிக் குனிந்தவள், அதன் அடர் குழலை நன்றாக வாரிவிட்டு அதன் நெற்றியில் முத்தம் பதிக்க, அதைக் கூட உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்து போனது அந்த உருவம்.

அதைக் கண்டதும் உள்ளம் அப்பழுக்கற்ற காதலில், அன்பில் உருகிக் குழைந்து போயிற்று. சுருண்ட குழல், கூரான நாசி, அழுத்தமான உதடுகள், வயதுக்கும் மீறிய வளர்ச்சி… அப்படியே அவளுடைய உயிரானவனைக் கொண்டிருந்தது அந்த உருவம். மீண்டும் உள்ளம் கனிந்து உருகிப்போக, நெஞ்சே வெடித்துப்போய்விடுமோ என்னும் அளவுக்கு வீங்கிப்போன பாசத்தில் மீண்டும் குனிந்து அதன் கன்னத்தில் முத்தமிட, மெதுவாக உறக்கம் கலைந்தது அந்த உருவம்.

அதைக் கண்டு தன் மீதே கோபம் கொண்டவள் போல, அசைந்த உருவத்தின் முதுகில் தட்டிக் கொடுக்க, சற்று விழித்த அந்த உருவம் அந்த இருட்டிலும் தெரிந்த அந்த மதி உருவத்தைக் கண்டு,

“மா…” என்றவாறு சிரிக்க மேலும் உருகிக் கரைந்து போனாள் அம்மேதினி.

“சாரி கண்ணா… எழுப்பிவிட்டேனா…” என்று கேட்க, இப்போது நிமிர்ந்து படுத்த அந்த உருவம் விழிகளை மீண்டும் மூடியவாறு திரும்ப,

“கண்ணா…” என்றாள் மென்மையாக. அந்தச் சிறிய உருவமோ,

“என்னா…” என்றது. அவன் கேட்ட தோரணையில் தன்னை மறந்து சிரித்தவள்,

“அது வந்து… இன்று சீக்கிரம் அம்மா வேலைக்குப் போகவேண்டும்…” என்று இழுக்க அதுவரை தூக்கத்தில் ஆட்பட்டிருந்த உருவம் சடார் என்று எழுந்தமர்ந்து திரும்பித் தன் முன்னால் அசடு வழிந்தவாறு நின்ற அன்னையைக் கண்டு முறைத்து,

“மறுபடியுமா…” என்றது சீற்றமாக.

“அது… வந்து… நான்…” என்று திணற, அவளுக்கு முன்பாகத் தன் கரத்தை நீட்டிப் பேச்சைத் தடுத்த உருவம் சற்று எட்டி மேசை விளக்கைப் போட, இப்போது இருண்ட அறை வெளிச்சத்திற்கு மாறியது. அந்த ஒளி கூட விழிகளைக் கூசச் செய்ய நிமிர்ந்து அன்னையை முறைத்தான் அந்த ஒன்பது வயது சிறுவன். அவன் பார்த்த பார்வையில் இவள் சொக்கித்தான் போனாள்.

கடவுள் எல்லாவற்றையும் அவளிடமிருந்து பறித்துவிட்டான். ஆனால் இதோ இந்தச் சொத்தை, விலைமதிப்பற்ற வைரத்தை அவனுக்குக் கொடுத்து விட்டானே. இதோ அவளுடைய உயிரானவனை அச்சில் வார்த்தது போல அப்படியே கரங்களில் கொடுத்துவிட்டானே கடவுள். அதனால் அவன் நல்லவன்தானே.

ஆனால் சிறுவனோ கனிந்த தாயின் முகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

“மா… இன்று ஞாயிற்றுக்கிழமை… நாம் கடற்கரைக்குப் போவதாக முடிவு செய்திருந்தோம்…” என்று கோபத்துடன் கூற, இவளோ நெளிந்தவாறு,

“அது… கண்ணா… வந்து… தமிழ் வருடப்பிறப்பு வரப்போகிறது அல்லவா… அதற்கு… நிறையத் தைக்கும் ஆர்டர்கள் கிடைத்திருக்கிறதுடா… அதனால் கட்டாயம் என்னை வருமாறு முதலாளி சொல்லிவிட்டார்டா… நான் என்ன செய்யட்டும்… மறுக்க முடியாதே… மறுத்தால் வேலை போய்விடும்… வேலை போனால் இதற்கு என்ன செய்வதாம்?” என்று சாப்பிடுவது போலச் செய்கை காட்டிக் கேட்கத் தன் தலையை ஆட்டிய மகன்,

“சரி… சரி… எத்தனை மணிக்கு வருவீர்கள்?” என்றான் இன்னும் கோபம் தணியாதவனாக.

“வந்துவிடுவேன்டா… ப்ராமிஸ்… நல்ல பிள்ளையாக வீட்டு வேலைகளைச் செய்வாயாம், அம்மா, வேலை முடிந்து வந்ததும் கடற்கரைக்குப் போகலாமாம்… என் கண்ணல்லவா?” என்று கெஞ்ச அன்னை கெஞ்சுவது பிடிக்காமல்,

“சரி சரி… நீங்கள் வந்தவுடன் போகலாம்… ஆனால் நான்கு மணிக்கெல்லாம் வந்துவிடவேண்டும் புரிந்ததா? ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் நீங்கள் வீட்டில் இருப்பீர்கள். அந்த ஒரு நாளுக்கும் ஆப்பு வைத்துவிட்டானா அந்த சொட்டைத் தலையன்…” என்று கூறியதும் அதுவே சம்மதமாக எடுத்துக்கொண்டவள், மீண்டும் அவன் பக்கமாகச் சரிந்து முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு, எழுந்தவளுக்கு மீண்டும் காலின் வலி உயிரைப் பிளந்தது.

சற்று நேரம் சுவரைப் பிடித்தவாறு தன்னைச் சமாதானப் படுத்தியவள், ஒருவாறு நிதானமாக நிமிர்ந்தபோது வலி மட்டுப்பட்டிருந்தது.

பெருமூச்சொன்றை விட்டவள், சற்று விந்தியவாறு, சமையலறைக்குப் போக அவளையும் மீறிக் கடந்தகால நினைவுகள் அவளைத் துடிக்கச் செய்தன.

அன்று கந்தழிதரனை ரெட்க்ராஸ் வாகனம் அழைத்துச் சென்ற சில நிமிடங்களில் அவர்கள் நின்ற இடத்தில் பாரிய குண்டுகளைப் பொழிந்துவிட்டு விலகிச் சென்றது பொம்மர். அதில் செத்து மடிந்தவர்களுள், அவளுடைய அன்னையும் வேலனும் அடங்குவர். விழுந்த குண்டில் அவளுடைய வலது காலின் சதைப்பகுதி மொத்தமாகச் சிதைந்து போக, அப்போது சுயநினைவு இழந்தவள்தான். அதன் பின் இரு கிழமைகள் கழித்துத்தான் விழிகளையே திறந்தாள். அதில் பெரிதாக யாரும் தப்பவில்லை என்று அறிந்து துடித்துப்போனாள் அம்மேதினி.

அதுவும் தன் தாயும் வேலனும் கூடவே உயிராக வளர்த்த நாலுகால் பிராணிகளும் உயிரோடு இல்லை என்பதை உணர்ந்த பொது அவள் பட்ட பாடு. உடல்கள் கூட அவளுக்குக் கிடைக்கவில்லையே. கூட்டி அள்ளிப் புதைத்ததாகச் சொன்னார்கள்.

அதில் கந்தழிதரனும் சிக்கி இறந்திருப்பான் என்பதை அறிந்தபோது அவள் துடித்த துடிப்பு. அவன் இறந்தபின்னும் உயிரோடு இருக்கிறோமே என்று அவள் கதறிய கதறல். அதன் பின் அவளுடைய கால்கட்டை அவிழ்க்கும் போது, அவளுடைய அதிர்ஷ்டத்தைத்தான் வைத்தியர்கள் சொன்னார்கள். கொஞ்சம் பலமாகப் பட்டிருந்தாலும் அவளுடைய எலும்புகள் சிதைவுற்றிருக்கும். அப்படிச் சிதைவுற்றிருந்தால் காலையே அகற்றவேண்டியதாக இருந்திருக்கும் என்று சொன்னபோது, அவர் யாரோ பக்கத்துப் படுக்கையில் இருப்பவருக்கு உரைக்கிறார் எண்டுதான் கேட்டுக்கொண்டிருந்தாள். உள்ளே அப்படி ஒன்றும் மகிழ்ச்சி வந்துவிடவில்லை உயிரானவனே இறந்துவிட்டான். இவளுடைய உடலுறுப்பா மகிழ்ச்சியாக வைத்திருக்கப்போகிறது.

தன்னவனின் இழப்பில் மொத்தமாய் மரித்தவள்தான், தன் காயத்தைக் கவனிக்காது சுத்தமாக மறந்துவிட்டிருந்தாள். அதன் விளைவு, இதனை வருடங்களுக்குப் பின்னும் காலின் வலியை அவளால் தங்க முடிவதில்லை.

ஒரு வேளை நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால் இன்றைய கால்வலி அவளுக்கு இல்லாது போயிருக்கும். எந்த மருத்துவ வசதியும் இல்லாது, இலங்கை அரசு மருந்துகளைத் தடைசெய்திருந்தபோது கிடைத்த சிகிச்சை முறையில் அவளுடைய காயத்தை எங்கனம் ஆற்றுவாள்.

அதன் பிறகும் அமைதியானதா ஈழம்…?

போர் போர் போர்… அகோரப் போர்… தாண்டவமாடிய போர்… ஓட்டம்… ஓட்டம் ஓட்டம்… திரும்பிப் பார்க்க முடியாத ஓட்டம். திரும்பி வர முடியாத ஓட்டம். இந்த விநாடி உண்மையா பொய்யா என்று உணர்ந்து கொள்ள முடியாத ஓட்டம்… உணர நேரமில்லா ஓட்டம். குறைந்தது ஓடும் நதியில் விழுந்த இலைக்காவது ஓரிடத்தில் ஓய்வுண்டு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அந்த ஓய்வு அன்றுவரை கிடைக்கவேயில்லை. அந்த ஓட்டத்தில் மரணித்தவர் ஆயிரம் ஆயிரம். உறவுகளைத் தொலைத்தவர்கள் லட்சத்திலும் லட்சம். உடல் உறுப்புகளை இழந்தவர்களோ எண்ணிலும் அடங்காது. அது சொல்ல முடியாத வலி. உணர முடியாத கசப்பு. மீட்சியில்லாத அலைச்சல். உலகம் கூடத் திரும்பிப் பார்க்காத அவலம்… நீதி தேவதை கூடக் கண்களை இறுக மூடிக் கொண்டாள். கேட்டால் உள்ளூர் யுத்தம் தலையிட வழியில்லை என்றது உலக நாடு. ஆனால் மரணித்த தமிழர்களுக்கு யார்தான் பதில் கொடுப்பர்.

‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்…’

இது கீதா உபதேசம்.

இதைக் கூறும்போது கிருஷ்ணர் கூடப் போதையில்தான் இருந்தான் போலும். ஈழத்தமிழர்களின் இழப்புக்கு முன்னால் இந்தக் கீதா உபதேசம் கூட வெட்கிக் கூனிக் குறுகி மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும்.

ஆம், பெற்ற குழந்தைகளின் மரணத்திற்கு முன்னால், மார்பில் பால்வடியக் குழந்தைக்குப் பால்கொடுக்கும் தருணத்தில் மடிந்து போன அன்னைக்கு முன்னால், அன்னை இறந்தது கூட அறியாது மார்பில் பால் வராது போகப் பசியில் ஓங்காரமிட்டு அழுத அந்தக் குழந்தைகளுக்கு முன்னால், வீழ்ந்த குண்டில் உடல் பாகங்கள் சிதைவுற்ற நேரத்தில் வீறிட்டழும் குழந்தையை அணைக்க முடியாது காக்க யாருமில்லாது கதறியழுத அந்தத் தாயின் கண்ணீருக்கு முன்னால், காதல் மனைவியின் மரணத்தில் கதறிய காதல் கணவனின் அந்தக் கண்ணீருக்கு முன்னால், ஒன்றாய் கூடியாடி விளையாடிய தோழனின் மரணத்தைக் கண் முன்னால் கண்ட இளையவர்களின் கதறலுக்கு முன்னால், சிதைந்த பிணங்களுக்கு மத்தியில் எது தன் மகன், எது தன் கணவன், எது தன் மனைவி, எது என் சகோதரன் என்று தெரியாது அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமா எது என் உறவு? என்று உருண்டு புரண்ட அந்த உறவுகளுக்கு முன்னால் பகவத்கீதை கூனிக் குறுகி மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும். அதைச் சொன்ன கிருஷ்ணன் கூட, அவர்களின் முன்னால் மண்கவ்வி மன்னிப்புக் கேட்கத்தான் வேண்டும்.

அந்தப் பத்து வருடங்களில்தான் எத்தனை மாற்றங்கள். திருப்பிப் போட முடியாத மாற்றங்கள். மீளப்பெற முடியாத இழப்புகள். அவளுடைய அத்தனை குதுகலங்களையும், மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் இளமை உணர்வுகளையும் காலம் என்ற பெருவெள்ளம் அடித்துக்கொண்டு போக, அவள் அதில் சிக்குண்ட சிறு இலையாக அதன் போக்கில் அடித்துச் செல்லப்பட்டு ஏதோ ஒரு இடத்தில் முட்டி மோதி நின்றாள். உலகமே வெறுத்துப்போய் இனி வாழ்வேயில்லை என்று முடிவுசெய்த வேளையில்தான் கர்ப்பம் என்பதையே அறிந்தாள். அதுவும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு. அப்போது அவள் பட்ட ஆனந்தம். மகிழ்ச்சி… வார்த்தைகளால் வடித்துவிட முடியுமா என்ன?

பாலைவனத்தில் நாவறண்டு தண்ணீர் தாகத்தில் தத்தளிக்கும் போது பெரும் ஆறே பொங்கி வந்தால் எப்படி இருக்கும். கடும் வெய்யிலில் கால் கொப்பளிக்க நடந்து செல்கையில் நிழல் தரும் ஆலமரம் கண்முன்னே சிலிர்த்து நின்று இருகரம் நீட்டி வாவென்று அழைத்தால் எப்படியிருக்கும். உயரமான செங்குத்து மலையிலிருந்து கீழே விழும்போது தெய்வக் கரங்கள் இரண்டு தாங்கிக்கொண்டால் எப்படி இருக்கும். அப்படி உணர்ந்தாள் அம்மேதினி. தன் கந்தழியே மீண்டும் தன்னிடம் வந்துவிட்ட பேரானந்தம். அந்த நிலையிலும் தன்னை மறந்து துள்ளிக் குதித்தாள்.

எங்கெங்கோ அலைந்து சாவச்சேரியில் தங்கியிருந்த வேளையில் அப்படியே கந்தழிதரனை உரித்துவைத்தாற் போல ஆண்மகன் ஒன்றைப் பெற்றாள். உதயதரன்… அவள் வாழ்க்கையில் ஒரு உதயத்தைக் கொடுத்தவன் அல்லவா அவன்.

அதன் பின் காலங்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காகவாவது நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில், ஓரளவு போக்குவரத்து சீர் பட, திருகோணமலை வந்தாள். தையல் தொழிற்சாலை ஒன்றில் வேலையும் கிடைக்க, அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழத் தொடங்கி இதோ பத்துவருடங்கள் ஆகிவிட்டன.

இப்படியே காலங்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாகக் கழிந்துவிடும் என்றுதான் நினைத்தாள். அவளுடைய போதாத காலம், அவள் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளியின் மகன் உருவத்தில் வந்து சேர்ந்தது.

அவனுக்குப் பெண்கள் என்று ஒன்று இருந்தாலே போதும், வேறு எதுவும் தேவையில்லை. அவனுடைய தந்தை வேறு பாராளுமன்ற உறுப்பினர். நிறையச் செல்வாக்கு வேறு. பிறகு என்ன? கிடைத்த சந்தில் சிந்து பாடினாலும் ஏன் பாடினாய் என்று கேட்பதற்கு ஆளில்லை.

இதுவரை காலமும் வவுனியாவிலிருந்த தொழிற்சாலையை மேற்பார்வை செய்துகொண்டிருந்தவன், அங்கே வேலை செய்த வேலையாளின் பதினைந்து வயது மகளின் மீது கையை வைக்க, அதில் கையும் களவுமாகப் பிடிபடத் தன் மகனைக் காக்கவேண்டி, வேறு வழியில்லாமல் இங்கே அனுப்பிவைக்கப்பட்டான். அவன் வந்து சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் கிடைத்த பெண்களை ஒரு வழியாக்கிவிட்டான். இது வரை அவன் கரம் படாத இடம் என்றால் அது அம்மேதினிதான். மேனிதான்.. ஆனால் விழிகள் தாராளமாகவே அவள் மீது பட்டெழுவது என்னவோ உண்மைதான்.

அவனுடைய பார்வை மட்டுமல்ல, கரங்களும் அவள் பக்கம் அடிக்கடி நீளத் தொடங்கியிருந்தது. இதுவே விடுதலைப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக இருந்திருந்தால், வரதனின் மாறுகை மாறுகால் எப்போதோ வாங்கப்பட்டிருக்கும்.

எது எப்படியோ. நாகரீகமாகவே அவனை விட்டுத் தள்ளி வந்துவிடுவாள் அம்மேதினி. ஆனால் எப்போதும் அந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாதே.

இதோ இன்று கூட ஞாயிற்றுக்கிழமை, அவளுக்கு மட்டுமல்ல, எல்லா வேலையாட்களுக்கும் ஓய்வு நாள்தான். ஆனால் வருடப்பிறப்பைக் கருத்தில் கொண்டு வேலைக்கு வரவேண்டிய இக்கட்டான நிலை. வேறு வழியில்லை. இந்த வேலையும் இல்லையென்றால் இன்னொரு வேலையைத் தேடுவது அத்தனை சுலபமல்லவே.

பெருமூச்சுடன் வேலையிடத்திற்கு வந்தவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல அப்போதுதான் கண்டாள், வேலைக்கு யாருமே வந்திராததை.

குழப்பத்துடன் தன்னுடைய தையல் இயந்திரத்திற்கு அருகாமையில் வந்து பையை ஓரமாக வைத்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள். வெறுமையாக இருந்தது தொழிற்சாலை. ஒரு வேளை மற்றவர்கள் வர சற்று நேரம் எடுக்குமோ? குழம்பியவள் நிமிர்ந்து கொளுவியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். எட்டுமணி என்றது கடிகாரம். எல்லோரையும் எட்டுமணிக்குத்தான் வரச்சொல்லியிருந்தார்கள். இன்னுமா வரவில்லை. குழம்பிக்கொண்டிருக்கும் போதே, அவள் முதுகில் ஒரு கரம் விழுந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அந்த வரதன் ஈ என்று இழித்தவாறு நின்றிருந்தான். முதன் முறையாக நெஞ்சாங்கூட்டில் ஒரு பயம் அலை அலையாகப் பரவி சென்றது. பதறிப்போனவளாக, எழுந்து இரண்டடி பின்னால் வைத்தவள், எதைப்பற்றியும் யோசிக்காமல், வெளியே போக எத்தனிக்க அவளுடைய தோளைப் பற்றித் தடுத்தான் வரதன்.

ஒரு கணம் தன் ஆத்திரத்தை அடக்குபவளாகப் பற்களைக் கடித்தவள், வேகமாக அவன் கரத்தைத் தட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்து முறைக்க, அவனோ, அவளுடைய அங்கங்களை ரசனையாகப் பார்த்தவாறு,

“என்ன அவசரம்… கொஞ்சம் தங்கிவிட்டுப் போகலாமே…” என்றான்.

“இ… இல்லை.. நான் அவசரமாகப் போகவேண்டும்… சாரி…” என்றவள் அந்த இடத்தைவிட்டு விலக முயல, அவளுடைய பாதையை மறைத்து நின்றவாறு,

“ஏய்… கொஞ்சம் பொறு…” என்றவன் அவளுடைய திருமேனியை விழிகளால் ரசித்தவாறு, தன் உதடுகளைக் கடித்து விடுவித்து,

“உனக்கு ஒரு பிள்ளை இருப்பதை நம்பவே முடியவில்லை அம்மேதினி…” என்று ரசனையுடன் கூறும் போது இவளுக்குள் தீப்பொறி பறந்த பூகம்பம்.

அவள் வந்திருக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வரமுடியாது என்று மறுத்திருக்கவேண்டும். தப்பு செய்துவிட்டாள். அச்சத்துடன் அவனைத் தாண்டிப் போக முயல, அவனோ அந்த முயற்சியையும் தடுத்தவனாக,

“இங்கே பார்… இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு… நீ மட்டும் சம்மதித்தாயானால், நீ ராணி போல என்கூட வாழலாம்…” என்று உதடுகளை ஈரமாக்கியவாறு கேட்டபோது, இவளுக்குள் தீப்பற்றி எரிந்தது.

ஆனாலும் தன்னை அடக்கியவளாக, அவனை நிதானமாக ஏறிட்டவள்,

“ராணி போல என்றால்…” என்றாள் புருவங்களை மேலே உயர்த்தியவாறு.

“ராணி போல என்றால்… இருக்கச் சொந்த வீடு… கணக்குப் பார்க்காது செலவழிக்கப் பணம்… ஆசை தீர அணிய நகைகள்… அவ்வளவுதான்…” என்று ஆசை காட்ட, இவளோ தலையைச் சற்று மேலும் கீழும் அசைத்து,

“ஓ…” என்றவள், பின் அழுத்தமாக அவனைப் பார்த்து,

“ஆனால் பாருங்கள், வைப்பாட்டியாக வர எனக்கு இஷ்டமில்லையே…” என்று அவள் கூற, ஒரு கணம் தயங்கியவன், பின் முகம் மலர,

“அதனால் என்ன… உன்னைத் திருமணம் முடிக்கிறேன்…” என்று அவன் பரபரக்க, இவளோ உதடுகளைக் குவித்து,

“ஓ… ஆனால் உங்கள் முதல் மனைவியின் நிலை என்ன?” என்று கிண்டலாகக் கேட்க, அவனோ சற்றுத் தயங்கிவிட்டு,

“அவள் கிடக்கிறாள் கழுதை… ஆஸ்திக்கும், அந்தஸ்துக்கும் அவள் இருக்கட்டும்… சுகத்திற்கு நீ இரு… உன் மகனைப் படிக்க வைப்பது என் பொறுப்பு…” என்று உறுதியாகக் கூற,

“அருமை… அருமை…” என்றவள், மறுகணம் அவன் முகத்திலேயே காறித் துப்ப அதிர்ந்துபோனான் வரதன்.

“ஏய்…” என்று சீறியவாறு அவளை நெருக்க முயல,

“அடச் சீ… நிறுத்து… உடல் இச்சைக்காகப் பெண்களைத் தேடும் நீ எல்லாம் கோபப்படுகிறாயா… யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்…? கந்தழிதரனுடைய மனைவியோடு… அதை நினைவில் வைத்துக்கொள்…” என்றவளுக்கு, அந்த ஆபத்திலிருந்த போதும், அத்தனை இராணுவத்தையும் துவசம் செய்து தன்னைக் காத்த கந்தழிதரன் நினைவுக்கு வர அவளையும் மீறி மார்பு  பெருமையில் விம்மி நின்றது. தலை  நிமிர்ந்தது. அடங்காத் திமிருடன் தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டவள்,

“என் மீது உன்னுடைய கரத்தின் விரல் நுனி பட்டாலும்… அந்தக் கரத்தை அறுத்து எறிந்துவிடுவேன் ஜாக்கிரதை…” என்று சீறிவிட்டுத் தன் கைப்பையை எடுக்கப் போக, சடார் என்று அவளுடைய பாதையை மறைத்து நின்றான் வரதன்.

ஒரு கணம் இவளுக்குத் திக்கென்றாலும் அதை வெளிக்காட்டாது இவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க,

“என்னடி… திமிரா… கொஞ்சம் அழகா இருக்கிறாயே… உன்னால் எனக்கும் சுகம், உனக்கும் சுகம் என்று பார்த்தால் அதிகம்தான் எகிறுகிறாய்…” என்றவன் அவளை நோக்கி மெல்ல மெல்ல நடக்கத் தொடங்க, ஒரு விநாடி அம்மேதினியின் நெஞ்சுக்கூடு காலியானது போன்ற உணர்வில் தவித்துப் போனாள்.

பதறியவாறு இரண்டடி பின்னால் நகர்ந்தவளுக்கு எப்படியாவது அவனிடமிருந்து தப்பிவிடவேண்டும் என்கிற நோக்கமே முதன்மை பெற்றிருந்தது. சுத்தவரப் பார்த்தவளின் கண்களுக்கு எதற்கோ போடப்பட்ட நான்கடி நீளமான இரும்புக் கம்பி கண்ணில் பட வலித்த காலையும் பொருட்படுத்தாது, ஓடிப்போய் எடுத்தவள், அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாக அவனை விளாசித் தள்ளிவிட்டாள். அவனுக்கு யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்கவில்லை.

கடைசியில் முடிந்த வரைக்கும் ஓங்கி அவன் மண்டையில் அடித்துவிட்டு, அவன் இருந்தானா செத்தானா என்பதைக் கூடப் பரிசோதிக்காமல் அந்த இடத்தைவிட்டு மாயமானாள் அம்மேதினி.

What’s your Reaction?
+1
18
+1
6
+1
1
+1
0
+1
7
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!