Thu. Nov 14th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 30/31

(30)

 

நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத் தொடங்கிவிட்டார்கள் என்று. தவிரப் போராளிகளும் போக மறுத்த பலரை அங்கிருந்து வெளியேற்ற முயன்று கொண்டிருந்தது.

எப்படியும் இராணுவம் உள்ளே நுழைந்தால் ஊரையே சிதைத்துவிடும். இதில் மக்களும் தங்கியிருந்தால் தயங்காமல் பலிவாங்கிவிடுமே. இந்நிலையில் தெரு முழுவதும் மக்களின் நெருக்கடி. கால் வைக்கக் கூட இடமில்லை.

அப்படியிருக்கையில் கந்தழிதரனை எப்படி அழைத்துச் செல்வது. ஆனாலும் சலிக்காமல் வேலன் இழுத்தான். அம்மேதினி வண்டியைத் தள்ளினாள்.

யசோதா கண்களில் கண்ணீர் மல்கத் தன் மருமகனின் நிலை கண்டு துடித்தவராக நடக்கத் தொடங்கினார். நடந்தார்கள் நடந்தார்கள். அவர்களின் நடைகளும் ஓயவில்லை, இராணுவத்தால் வீசிய குண்டுகளும் ஓயவில்லை.

இந்த நிலையில் மரணித்தவர்கள் பலர். காயப்பட்டுக் கைகால் இழந்தவர்கள் இன்னும் பலர். உறவுகளை இழந்தவர்களோ பலவிலும் பல. ஆனாலும் ஈழ மக்களின் ஓட்டம் மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை நிற்கவேயில்லை.

கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோமீட்டர்கள்… நடந்தார்கள். சாதாரணமாக நடப்பதாக இருந்தால் ஐந்து மணி நேர நடைதான். ஆனால் இரண்டு நாட்கள் எடுத்தன அவர்கள் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய.

அத்தனை சனத்திரள்களும் மொத்தமாய் இடம்பெயர்ந்தால் எப்படிப் பாதை தாங்கும்? இதற்குள் போராளிகள் தங்கள் வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அங்கும் இங்குமாகப் போய்க்கொண்டிருக்க அவர்களுக்கு வேறு இடம் கொடுக்கவேண்டி இருந்தது. போதாததற்கு வாட்டும் வெய்யில் வேறு. தண்ணீர் குடிக்கக் கூட வழியில்லை. இந்த நிலையில் கந்தழிதரனை மட்டும் பக்குவமாகப் பார்த்துக்கொண்டார்கள் அம்மேதினியும் யசோதாவும்.

நீண்ட நடைக்குப் பின் உரும்பிராய் வர, அந்த ஊர் மக்கள் இன்னும் கிளம்பத் தொடங்கியிருக்கவில்லை. அந்த நேரம் ஓய்வெடுப்பதற்காகத் தெரு ஓரத்தின் ஒதுக்குப் புறத்தில் அமர்ந்த கொள்ள. கந்தழிதரனோ வலி பொறுக்க முடியாமல் முனங்கிக் கொண்டிருந்தான். காய்ச்சல் வேறு மிகத் தீவிரமாக இருந்தது. அதை அறிந்து பாய்ந்து வண்டிக்குள் ஏறியவள், அவன் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்து,

“கந்து… ஒன்றுமில்லை… ஒன்றுமே இல்லை… இன்னும் கொஞ்சத் தூரம்தான்… அதற்கிடையில் நாம் மருத்துவமனை சென்றுவிடலாம்…” என்று குரல் கம்ம, அவன் தலை முடியை வருடிக் கொடுத்தவாறு அவள் கூற, இப்போது மெதுவாகத் தன் விழிகளைத் திறக்க, அவன் விழிகளின் ஓரத்திலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்து சென்றது. அதைக் கண்டு துடித்தவளாக, துடைத்து விட்டு,

“ஷ்… ஷ்… உங்களுக்கு ஒன்றுமில்லை… கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள்…” என்று குரல் கம்ம்மியவாறு கூற, இவனோ அவள் கலங்கிய முகம் கண்டு மேலும் கசங்கியவனாக,

“அ… அழாதே… ச… சகிக்..க… வில்லை…” என்று அந்த நிலையிலும் திக்கித் திணறிக் கூற, தன்னை மறந்து சிரித்தவள்,

“அடிபட்ட குண்டு வாயில் அடிபட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் இப்படிப் பேசி இருப்பீர்களா…” என்று சிடுசிடுத்தவாறே, மூக்கை உறிஞ்ச வலியோடு சிரித்தவன்,

“அம்மணி… தண்ணீர் கிடைக்குமா…” என்றான் முனங்கலாய்.

“இதோ…” என்றவள், எட்டி,

“வேலா… தண்ணீர் தருகிறாயா?” என்று கேட்க, உடனே தண்ணீர் போத்தலை எடுத்த வேலன் அப்போதுதான் பார்த்தான் போத்தலில் தண்ணீர் இல்லாததை.

“ஐந்து நிமிடம் பொறுத்துக்கொள்… இதோ வருகிறேன்…” என்று ஓடியவன், திரும்பி வந்தபோது நல்ல செய்தியோடு வந்து சேர்ந்தான்.

அது உரும்பிராயில் உள்ள மருத்துவமனை தற்காலிகமாக இயங்குவதாகக் கூற, அத்தனை களைப்பும் மொத்தமாய்த் தொலைந்து போனது அவர்களுக்கு. பிறகு என்ன! வண்டியை இழுத்துக்கொண்டு அந்த மருத்துவமனைக்கு ஓடினார்கள்.

ஏற்கெனவே நிறையப் பேர் அங்கே குழுமியிருக்க, அதைக் கண்டு அனைவரும் சோர்ந்து போனார்கள்.

வேலனை வரிசையில் நிற்குமாறு பணித்துவிட்டுச் சோர்வுடன் வந்த அம்மேதினியைக் கண்டு, அவளை அருகே அழைத்தான் கந்தழிதரன். மீண்டும் வண்டிக்குள் ஏறி அவனை நெருங்க,

“அம்மணி, இது உரும்பிறாய் மருத்துவமனைதானே…” என்றான் திக்கித் திணறி. அவள் ஆம் என்று தலையை ஆட்ட,

“என் அப்பா…வுடைய ந… நண்பர் இளங்கோவன்… இங்… இங்கேதான்… வேலை… செய்கிறார்… அவர் இருந்தா…ல் அழை… அழைத்து வா…” என்று திக்கித் தணிற, வேகமாக உள்ளே ஓடினாள் அம்மேதினி.

அங்கே வேலை செய்த வேலையாள் ஒருவனைப் பிடித்து அவனை விசாரிக்க அவர்களுடைய நல்ல காலம் அவர் அங்கே தான் வேலையிலிருந்தார். ஏதோ நோயாளியைப் பார்த்துக் கொண்டிருந்தவர், வேகமாக வந்தவளைப் பார்த்ததும் புருவம் சுருங்க, என்ன என்பது போலப் பார்த்தார்.

“டாக்டர்… நான்… அம்மேதினி… என் அத்தான்… கந்தழிதரன்… பரந்தாமனுடைய மகன்… உங்களைத் தெரியும் என்று சொன்னார்…” என்று அவள் கூறும்போதே விழிகள் கலங்கி முகம் சிவந்து உதடுகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. இப்போது அவளுக்கு அவர் கடவுளாகவே தெரிந்தார். கூடவே எங்கே மறுத்துவிடுவாரோ என்கிற அச்சமும் தோன்ற, பெரும் அவஸ்தையுடன் பார்க்க ஒரு கணம் புருவத்தைச் சுருக்கியவர் பின் முகம் மலர,

“பரமுவின் மகன் கந்தழியா… எங்கேயம்மா இருக்கிறான் அவன்… அவன் கொழும்பில் பொறியியல் படித்து முடித்துவிட்டான் என்று கேள்விப்பட்டேனே…” என்றதும், அதுவரை இருந்த அழுத்தம் மாயமாகிப் போகப் பெரும் நிம்மதியுடன்,

“அவரேதான் டாக்டர்… அவருக்கு அடி.. அடிபட்டிருக்கிறது… உடனேயே சிகிச்சை கொடுக்கவேண்டும்…” என்று உதடுகள் துடிக்கக் கூற, பதறியவராய்,

“வாட்… அவனுக்குக் காயம் பட்டிருக்கிறதா? எப்படி…” என்றவர் அவளை விட வேகமாக நடக்கத் தொடங்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் மாட்டுவண்டியை நெருங்கியிருந்தார் வைத்தியர் இளங்கோவன்.

கந்தழிதரனின் நிலையைக் கண்டு அதிர்ந்தவராக, உள்ளே ஏறியவர்

“கந்தழி… என்னடா இது…?” என்று பதற,

“ஹாய்… அங்கிள்… சும்மா… கிளித்தட்டு விளையாடும் போது… குச்சி… அடி… அடித்து விட்டது… அங்கிள்…” என்று வலியும் கிண்டலும் சேர்ந்து அவன் பிதற்ற,

“வடுவா… அடிபட்டும் உன் வாய் அடங்கவில்லை…” என்றவர் உடனே கீழே இறங்கி அங்கிருந்த வேலையாளை அழைத்து ஸ்ரச்சரைக் கொண்டுவருமாறு கட்டளையிட மறுகணம் எல்லாமே மாறிப்போனது.

உடனே கந்தழிதரன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவனுடைய காயங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. தொற்று பல இடங்களில் பரவியதால் தொற்று எதிர்ப்புக்காக மருந்து கொடுக்கப்பட்டது. சலைன் ஏற்றப்பட்டன.

அந்த நிலையிலும் அம்மெதினியின் காயம் பற்றிக்கூறி, அவளுக்கு சிகிச்சை செய்யுமாறு இவன் வேண்டியவாறு மயங்கிப்போக, சிகிச்சையை முடித்து நிம்மதியாக யசோதாவையும் அம்மேதினியையும் தேடி வந்தவர்,

“நல்ல வேளை கை மீற முதல் அழைத்து வந்துவிட்டீர்கள். உயர்தொற்று இதயத்தைச் சென்றடைந்திருந்தால் எங்களால் எதுவும் முடிந்திருக்காது. பரமு செய்த புண்ணியம், இவன் தப்பிவிட்டான்…” என்றவர், பின் அம்மெதினியைப் பார்த்து.

“உனக்கு காலில் காயம் என்று சொன்னான் கந்தழி… வா… என்னவென்று பார்க்கலாம்…” என்று அழைத்துச்சென்று, அவளுடைய காயத்திற்கும் சிகிச்சை கொடுத்து, தோற்று ஏற்படா வண்ணம் மருந்து கொடுத்துவிட்டு நிமிர்ந்து யசோதாவைப் பார்த்து,

“நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றார் அக்கறையாக.

“தெரியவில்லை டாக்டர்… சாவகச்சேரிக்குப் போகத்தான் யோசிக்கிறோம்…” என்று கூறு,

“உங்களுக்கு அங்கே யாரையாவது தெரியுமா?” என்றார் கனிவாக.

“இல்லை… யாரையும் தெரியாது. ஆனாலும் அங்கே போய்த்தானே ஆகவேண்டும்…” என்று யசோதா கம்மிய குரலில் கூற,

“ஒன்று செய்யலாம். இப்போதைக்கு எங்கள் கூடத் தங்குங்கள். இதுவரை இங்கே பிரச்சனை வரவில்லை. கிளம்பச் சொன்னால் கிளம்பிடலாம்…” என்று விட்டுத் திரும்ப,

“டாக்டர்… எங்களைப் பற்றிப் பிரச்சனை இல்லை… கந்தழியை எப்படியாவது கொழும்புக்கு அண்ணன் அண்ணியிடம் அனுப்பிவிட்டால் போதும் டாக்டர். அவன் இங்கே இருக்கவேண்டாம்…” என்று வேண்டுதலாகக் கேட்க,

“ஏற்பாடு செய்யலாம் கவலைப் படாதீர்கள்… ரெட் க்ராசுக்கு செய்தி அனுப்புகிறேன். நிச்சயமாக அவனை அழைத்துச் செல்ல முடிந்த உதவியைச் செய்கிறேன். அவன் எனக்கும் பையன் போலத்தான்…” என்றுவிட்டு அவர் விடைபெற, அம்மேதினி கந்தழிதரனின் படுக்கை நோக்கி ஓடினாள்.

இப்போது முகம் சற்றுத் தெளிந்திருந்தது. வலி மட்டுப்பட்டிருக்கிறது என்பது ஆழ்ந்து உறங்கும் அவன் முகத்திலிருந்து தெரிந்தது. விழிகள் கனக்க, அவனருகே அமர்ந்தவள், அவனுடைய சுழல் குழலை வாரிக் கொடுத்தவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவர்கள் மட்டும் தனிமையிலிருந்திருந்தால் தன் வலியை வேதனையை அழுகையை வேறு விதமாக அவனுக்குக் காண்பித்திருந்திருப்பாள். ஆனால் அவளுடைய போதாத நேரம், அவனுக்கு அருகாமையில் நான்கைந்து நோயாளிகள் அவனைப்போலவே காயம்பட்டுப் படுத்திருந்தார்கள். அதனால் அவனுடைய கரத்தைப் பற்றித் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டவளாக, விழிகளை மூடியிருந்தவனின் முகத்தைப் பெரும் வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் அவனுடைய கரத்தைப் பற்றித் தன் உதடுகளில் பொருத்தி எடுத்தாள்.

எப்படியும் அவனை ரெட்க்ராஸ் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைத்து விடுவார்கள். அதன் பின் அவனைக் காணும் பாக்கியம் எப்போது கிடைக்கும்? இனி எப்போது அவன் அவர்களைத் தேடி ஈழம் வருவான்? வருவானா? எது எப்படியாக இருந்தாலும் அவள் விரும்பியது போல அவனை மணந்துவிட்டாள். அவளையும் அவனிடம் கொடுத்துவிட்டாள் அது போதும் அவளுக்கு. மீராவைப் போல ஆண்டாளைப் போல அவனை எண்ணியே காலத்தைக் கழித்து விடுவாள்.

பெரும் வேதனையுடன் இடது கரத்தால் அவனுடைய இடது கரத்தைப் பற்றி மார்போடு அணைத்தவள், வலது கரத்தால் அவனுடைய தலை முடிகளைக் கோதிவிட்டவாறு அவனுடைய காதின் புறமாகக் குனிந்தவள்,

“கந்து… என் கந்து… ஐ லவ் யு டா… ஐ லவ் யு சோ மச்…” என்று முணுமுணுக்க, அவள் கூறியது அவனுக்கும் கேட்டதோ, அந்த மயக்கத்திலும் அவனுடைய உதடுகள் மெதுவாகப் பிளந்து புன்னகையைச் சிந்தின.

(31)

 

இரண்டு நாட்களில் கந்தழிதரன் ஓரளவு எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தான். சுள் சுள் என்று குத்தும் வலி முற்றாக மறைந்திருந்தது. உள்ளே குளிரும் குளிரும் உடல் நடுக்கமும் மட்டுப்பட்டிருந்தது. இப்போது பார்வை தெளிவாக இருந்தது. மந்தமாக இருந்த நிலை மட்டுப்பட்டிருந்தது. அந்த இரண்டு நாட்களும், யசோதாவும் அம்மேதினியும் வேலனும் அவனைக் கண்ணை இமை காப்பது போலக் காத்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அன்று அவனுடைய காயத்தைப் பரிசோதித்த இளங்கோவன் திருப்தியுடன்,

“தாங் காட்… காயங்கள் ஆறத் தொடங்கிவிட்டன. இனி எந்தப் பயமுமில்லை…” என்றவர் மலர்ச்சியுடன் யசோதாவைப் பார்த்து,

“ரெட் க்ராசிடம் பேசிவிட்டேன். இன்று மாலையே இவனைக் கொழும்பு அழைத்துச் செல்ல வருகிறார்கள்…” என்றதும் அதுவரை வைத்தியர் சொன்னதைப் பெரும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்த அம்மேதினியின் முகம் வாடிப்போனது. கூடவே பெரும் வலியும் எழக் கண்களில் கண்ணீர் பொங்க நிமிர்ந்து கந்தழிதரனைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பெரும் வலியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளோடு அவன் வாழ்ந்தது ஒரு நாள் மட்டுமே. அந்த ஒரு நாளே அவளுடனான காதலை முழுதாகப் புரிந்துகொண்டவனுக்கு அவளை எப்படிப் பிரிந்து செல்வது என்றுதான் புரியவில்லை. அந்த நினைப்பே அவனுடைய உயிரையே பிரித்து எடுப்பதுபோலத் தோன்றத் துடித்துப்போனான் கந்தழிதரன்.

அத்தனை சனத் திரள்களுக்கு மத்தியில் அவளை அணைக்கவும் முடியாமல், மெல்லிய முத்தம் கொடுக்கவும் முடியாமல் பெரிதும் திணறிப் போயிருந்தவனுக்கு ஒரேயடியாகத் தன்னைப் பிரிந்துவிடுவோமோ என்று அவள் கலங்குவது புரிய, அவளை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் தடுமாறினான்.

அப்போது அவனுக்குக் கழிவறைக்குப் போகவேண்டி வர, எழ முயன்றவனை ஓடிவந்து தாங்கிக்கொண்டாள் அம்மேதினி. அவனை அழைத்துச் செல்வது வேலன்தான். அன்று அவன் எங்கோ சென்றிருக்க அம்மேதினி உடனே உதவிக்கு வந்தாள்.

அவன் இடையைச் சுற்றிக் கரத்தைப் பதித்து தன் உடலோடு தாங்கியவாறு நடத்திச் செல்ல, அங்கே பார்வையாளர்கள் மறைந்து போக அவனும் அவளும் மட்டுமே தாழ்வாரத்தில் நின்றிருக்க மறுகணம் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன், அவளைச் சுழற்றிச் சென்று அங்கிருந்த சுவரில் மோதவைத்து அவளுக்கு இரு புறமும் கரங்களைப் பதித்து, முகம் நோக்கிக் குனிந்து, தன் மூக்கால் அவள் மூக்கை உரசியவாறு,

“ப்பா… உன்னைத் தனிமையில் சந்திக்க எத்தனை சிரமமாக இருக்கிறது தெரியுமா?” என்றான் மெல்லிய கிசுகிசுப்புடன். கூடவே உதடுகள் அவளுடைய கன்னத்தை உரசி ரகசியம் பேச, அவளோ சூரியனைக் கண்ட தாமரையென முகம் மலர்ந்தவளாக அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“கந்து… கந்து… ஐ லவ் யு… லவ் யு.. லவ் யு…” என்று மந்திரம்போல ஜெபிக்க, யாரைக் குழந்தையென்று எண்ணித் தள்ளி நின்றானோ, யாரைச் சிறுமி என்று எண்ணி அவள் காதலை ஏற்க மறுத்தானோ, யாரை இளையவள் என்று எண்ணித் தள்ளிவைக்க நினைத்தானோ, அவளே எல்லாமாகிப்போகப் பழைய தயக்கத்தைச் சுத்தமாகத் தொலைத்தவனாக,

“ஓ… மை பேபி கேர்ள்…” என்றவாறு ஆவேசத்துடன் அவளை அணைத்துப் பின் அவள் முகம் தாங்கித் தன் உதடுகளை அவள் முகம் எங்கும் பரவச் செய்து கழுத்து மார்பு என்று இறங்கத் தொடங்க, அவளுக்கும் அவனுடைய அந்த அணைப்பு வேண்டியதாக இருந்ததோ? முழுதாகத் தன்னை அவனிடம் இழக்கத் தொடங்க, இறுதியாக அவளைத் தன்னோடு இறுகி அணைத்தவனாக,

“ஓ… அம்மணி…” என்றான் வேதனைக் கிறக்கத்துடன். அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து நன்றாக அவனுக்குள் புதைந்துகொண்டவளுக்கு அன்றே அவன் சென்றுவிடுவான் என்கிற நினைவு வரக் கண்கள் கலங்கிப்போயின. தன் தலையை நிமிர்த்தி, அவனைப் பார்க்க, கலங்கிய அவள் முகத்தைக் கண்டு துடித்தவனாக, தன் உள்ளங்கையில் அவள் முகத்தைத் தாங்கியவன்,

“என்னடா… எதற்கு இந்தக் கலக்கம்?” என்றான் அவள் கண்ணீரைத் தன் பெருவிரலால் அழுந்த துடைத்தவாறு.

அவளோ அவனை ஏக்கத்துடன் பார்த்துத் தன் வலது கரத்தைத் தூக்கி அவனுடைய கன்னத்தில் பதித்து,

“கந்து…” என்றாள் விழிகள் கலங்க.

தன் கன்னத்தில் பதித்த அவள் கரத்தைப் பற்றி உதட்டில் ஒற்றி எடுத்துக் கொண்டவனாக,

“எ… என்னடி…” என்றான் அவள் கூந்தலை ஒதுக்கியவாறு. நிமிர்ந்து அண்ணாந்து அவனைப் பார்த்தவள்,

“நீ கொழும்புக்குப் போய்விடுவாய்… நீ இல்லாமல் எப்படி… இருக்கப்போகிறேன் என்றுதான்…” எனத் தடுமாற, அவனோ தன் நெற்றியை அவளுடைய நெற்றியோடு முட்டி எடுத்து,

“அசடு… நீங்கள் எல்லோரும் என் கூடத்தானே வரப்போகிறீர்கள்… நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படித் தனியாகப் போவேன்…?” என்று கனிவாகக் கேட்டாலும் வேட்கை கொண்ட உதடுகள் தன் வேலையை அடிக்கடி தன் இஷ்டத்திற்கு அவள் மேனியில் சுற்றித் திரியத்தான் செய்தன. அவன் கூறியதும் இவளுடைய முகம் பளிச்சென்று மலர்ந்து போனது.

“உண்மையாகவா?” என்று விழிகள் விரித்துக் கேட்க,

“இது என்னடி வம்பாகப் போய்விட்டது… நீ என் மனைவி… உன்னை இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படிப் போவேன்…” என்று கோபத்துடன் கேட்க, மலர்ந்தவள் பின் முகம் வாடியவளாக அவன் மார்பில் தொப்பென்று விழ, அவளை இறுக அணைத்துக் கொண்டவன், உச்சந்தலையில் முத்தமிட்டு,

“இப்போது என்ன?” என்றான். அவளோ நிம்மதியுடன் அவன் இடையைச் சுற்றிக் கரத்தைக் கொண்டு சென்றவாறு,

“நம்முடைய பசுமாடு, ஆடு… பப்பி… இவற்றை எப்படி அழைத்துச் செல்வது…” என்று மெய்யான வருத்தத்துடன் கேட்க அந்த நிலையிலும் தன்னை மறந்து பக்கென்று சிரித்துவிட்டான் கந்தழிதரன். வயதுக்கேற்ற புத்தி என்ன செய்வது… ஆனாலும் அவளைச் சமாதானப்படுத்த வேண்டி,

“அவற்றை வண்டிக்கு மேலே கட்டிக் கொண்டு போகலாம்…” என்றான் நிஜம்போல. அதை நம்பியவளாக, பளிச்சென்று சிரித்தவாறு அண்ணாந்து பார்த்து,

“நிஜமாகவா…” என்று விழிகள் விரித்தவள், அவன் கிண்டலடிக்கிறான் என்பது புரிய அவனைப் பார்த்து முறைத்தவள்,

“டேய்… கந்து வட்டிக் காரா… உன்னை…” என்றவாறு அவன் மார்பில் அடிக்கப் போனவள் அங்கே காயம் இருப்பது நினைவுக்கு வர, அடிக்காது வருடிக் கொடுத்துவிட்டு,

“சரி சரி… அம்மா தேடப்போகிறார்கள்… வாருங்கள்…” என்று அவன் கரத்தைப் பற்ற, அவனோ அவளுடைய இடையைச் சுற்றித் தன் கரத்தைக் கொண்டு சென்று தன்னோடு இறுக்கியவனாக, அவளுடைய பலத்தில் நொண்டியவாறு கழிவறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் அறைக்குள் வர, யசோதா கந்தழிதரனுக்கு உணவு ஊட்டுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

தன் மருமகனைப் பத்திரமாக அழைத்துவரும் மகளைக் கண்டு புன்னகைத்தவர்,

“நீ சாப்பிட்டாயா தங்கம்…” என்று கேட்டவாறு கந்தழிதரனுக்கு மறுபக்கம் வந்தவர், அவன் கரத்தைப் பற்றி இருக்கையில் அமர்த்திவிட்டு, உணவுப் பொதியைப் பிரித்து கந்தழிதரனின் முன்னால் வைக்க, அம்மேதினி உடனே அதை வாங்கி உரிமையாகப் பினைந்து அவன் வாயில் ஊட்ட மறுக்காமல் வாங்கிக்கொண்டான் கந்தழிதரன். இதைத் திகைப்புடன் பார்த்த யசோதா,

“என்னடி இது உலக அதிசயமாக இருக்கிறது… பூனையும் எலியும் இப்படிக் கூட்டுச் சேர்ந்து விட்டதே…” என்று வாயில் கை வைக்க, அதைக் கேட்டு மெல்லியதாக நகைத்த கந்தழிதரன், யசோதா கவனிக்க முதல் தன்னவளைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு,

“எல்லாம் இராணுவத்தால் வந்த புண்ணியம் அத்தை…” என்றான் எதையோ குறிப்பிடுவது போல. அதைக் கேட்டதும் இவளுடைய முகம் குப்பென்று சிவந்துபோனது. அவளையும் மீறிக் கரங்கள் நடுங்கின.

அன்று அந்தப் பதுங்கு குழியில் இருவரும் கணவன் மனைவியாக, இறுதி நிமிட வாழ்க்கை என்கிற பயத்தில் ஒருவரை ஒருவர் தேடி முடித்திட வேண்டும் என்கிற வேகத்துடன் இணைந்தபோது, ஏதோ அந்த மரணத்தையே ஜெயித்துவிட்ட மகிழ்ச்சி அவர்களுக்குள். ஆனால் இப்போது ஆற அமர ஒருவரை ஒருவர் புரிந்து இணையவேண்டும் என்று உள்ளமும் உடலும் ஏங்கியது. ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைக்குக் கிடைக்காதே. அதை நினைக்கும் போதே பெரும் ஏக்கம் எழுந்தது. அதை உணர்ந்துகொண்டவன் போல அவளைப் பார்த்து விழிகளை மூடித் திறந்து சமாதானப் படுத்த, தன் முக வாட்டத்தை உடனேயே மலர்ச்சியாக்கினாள் அம்மேதினி.

அவன் உண்டு முடிந்ததும் புறங்கையால் அவனுடைய வாயைத் துடைத்து விட்டவள், தண்ணீர் போத்தலை எடுத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டுத் தன் கரத்தைக் கழுவ வெளியே செல்ல, அவனருகே வந்த யசோதா,

“இப்போது எப்படி இருக்கிறது தம்பி…” என்றார் கனிவாக.

“பரவாயில்லை அத்தை… முன்னை விட, எவ்வளவோ பரவாயில்லை…” என்றவன், பின்,

“எப்போது ரெட்க்ராஸ் வருமாம் அத்தை…” என்று கேட்டான்.

“தெரியவில்லையே தம்பி… எப்படியும் நான்கு மணிக்கு முதல் வந்துவிடுமாம்…” என்று கூற,

“அத்தை… நீங்கள் எல்லோரும் என் கூடத்தானே வருகிறீர்கள்…” என்றான் ஒரு வித வேண்டுதலோடு. அதற்கு இரக்கத்தோடு கந்தழிதரனைப் பார்த்த யசோதா,

“இல்லை அப்பு… நாங்கள் உன் கூட வர முடியாதாம்… உனக்கு மட்டும்தான் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். எங்களைப் பற்றிக் கவலைப்படாதே கண்ணா… இன்னும் ஐந்தாறு மாதங்களில் இந்தப் பிரச்சனை ஓய்ந்துவிடும், நாம் நம்முடைய வீட்டிற்குப் போய்விடுவோம்… நீ பத்திரமாகக் கொழும்புக்குப் போய் வைத்தியத்தைப் பார்…” என்று கூற இவனுடைய உடல் அதிர்ந்தது.

“என்ன… நான் மட்டும் தனியாகப் போவதா…. நோ… முடியாது அத்தை… நீங்கள் வருவதாக இருந்தால் கொழும்புக்குப் போகிறேன்… இல்லையென்றால் இங்கேயே இருந்துவிடுகிறேன்…” என்று அவன் உறுதியோடு கூற, யசோதாவோ வாயடைத்துப் போனார்.

“இல்லை ராஜா… நமக்குச் செல்ல அனுமதியில்லையேப்பா… இதுவே சிரமப்பட்டுத்தான் வைத்தியர் இளங்கோ ஏற்பாடு செய்தார். அதுவும் உன் அப்பாவுக்குச் சில அரசியல் தலைவர்களைத் தெரியும் என்பதால்தான் இந்தளவாவது சாத்தியமாயிற்று. இந்த நிலையில் நாமெல்லாம் கொசுறாக உன் கூட வரமுடியாது கண்ணா…” என்று அவன் கூற,

“ஆனால் அத்தை நீங்கள் எப்படி இந்தப் பிரச்சனைக்குள்…” என்று அவன் கலங்க, அவனுடைய சுழல் குழலை வருடிக் கொடுத்த யசோதா,

“இங்கே நான் மட்டும் இல்லையே ராஜா. என்னைப் போல லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறோம் தப்பிப் பிழைத்துவிடுவோம். நீ சங்கடப்படாமல் போய் வா…” என்று கூற, அதை வேகமாக மறுக்கும் முன்னே, யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அழுதவாறு உள்ளே நுழைந்தார் பவானி. பவானி உள்ளே வர, யசோதா எந்தச் சிக்கலுமின்றிப் பின்னே நகர்ந்து கொண்டார்.

வந்த பவானி பரிதவிப்போடு கந்தழிதரனின் தலையை வருடிக் கொடுக்க, விழிகளோ கண்ணீரைச் சொரிந்தன. தள்ளி நின்றிருந்த ரோகிணி விரைந்து வந்து அவனுடைய ஒரு கரத்தைப் பற்றி,

“எப்படி இருக்கிறீர்கள்” அத்தான் என்று கலங்க, அப்போது தன் பாவாடையால் ஈரக் கரத்தைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்த அம்மேதினி அந்தக் காட்சியைக் கண்டு அடிவாங்கியவள் போலப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கந்தழிதரனோ,

“ஹே… ஐ ஆம் ஓக்கே… இப்போது எதற்குக் கலங்குகிறாய்?” என்று மென்மையாகக் கேட்க,

“நம்முடைய நிச்சயதார்த்தம் இப்படி நின்றுவிட்டதே…” என்றவளின் கரத்தை இறுக பற்றிக் கொண்டவன்,

“அதனால் என்ன… திருமணம்தான் நடந்து முடிந்துவிட்டதே…” என்றான் அவன் தன்னை மறந்து. அதைக் கேட்டதும், அதிர்ந்து போன ரோகிணி,

“வாட், திருமணம் நடந்து முடிந்துவிட்டதா… என்ன… என்ன சொல்கிறீர்கள்…” என்று கேட்க, அப்போதுதான் தான் உளறியதே அவனுக்குத் தெரிந்தது.

இந்த நிலையில் அவனுக்கும் அவளுக்கும் நடந்த திருமணம் பற்றி எப்படிக் கூறுவான். சொன்னாலும் நம்புவார்களா என்பதையும் மீறி, உன்னை நம்பி என் மகளை அனுப்ப இப்படிச் செய்துவிட்டாயே என்று யசோதா அவனைப் பார்த்துக் காறித் துப்ப மாட்டாரா? தவிர, பதினெட்டு வயது ஆகாதவளை ஆட்சிசெய்தேன் என்று எப்படிச் சொல்வான். சொல்ல முடியாது தவித்தவனுக்கு ஒரு கணம் மூச்சு முட்டியது. திணறிக்கொண்டிருக்கும் போதே,

“அது… நிச்சயதார்த்தம் ஆகாவிட்டால் என்ன… திருமணத்தில் சந்திக்கலாம் என்று அத்தான் சொல்கிறார். அப்படித்தானே அத்தான்?” என்று முன்னால் வந்தவாறு அம்மேதினி கேட்க நன்றாகவே தடுமாறினான் கந்தழிதரன். அவன் மறுப்பாக எதையோ சொல்ல வர, அவனைப் பார்த்து விழிகளால் எதையோ கூற முயல,

“உண்மையாகவா அத்தான்…” என்ற ரோகிணி, இடம் பொருள் ஏவல் மறந்து அவன் மீது பாய்ந்து விழுந்து அணைத்துக் கொள்ள, அவளுடைய கரம் கச்சிதமாக அவனுடைய காயத்தின் மீது சென்று விழுந்தது. வலியில் ஒரு கணம் எம்பி விழுந்தான் கந்தழிதரன்.

அம்மேதினிக்கோ ஆத்திரத்தில் ரோகிணியின் சடையைப் பிடித்து இழுத்துச்சென்று சுவற்றில் மோதவேண்டும் போலத் தோன்றியது. யாருடைய உரிமையை யார் கையாள்வது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாதவளாகக் கை முஷ்டிகள் இறுகப் பற்களைக் கடித்தவாறு நின்றிருக்க, கந்தழிதரனோ, வேகமாக ரோகிணியின் கரத்தை விலக்கி,

“ஹே… இது மருத்துவமனை… எழுந்து கொள்…” என்றான் சீற்றமாக. அப்போதுதான் தான் செய்த காரியம் உறைத்தவளாக,

“ஹீ… ஹீ… சாரி… சாரி… எங்கே… நம்முடைய திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று பயந்துவிட்டேன்…” என்று அவள் திணற, கோபத்துடன் அவன் எதையோ கூறவந்தான்.

அதைப் புரிந்துகொண்டவள் போல, அவனுடைய விழிகளுக்கு முன்னால் வந்து நின்ற அம்மேதினி மறுப்பாகத் தலையை ஆட்டி எதையோ கூறினாள். அதை உணர்ந்தவன் போல வாயை மூடிக்கொண்டாலும், பற்கள் ஒன்றோடு ஒன்று அரைபடத் தவறவில்லை. ரோகிணியோ, அதை உணராது,

“அத்தான்… நீங்கள் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை தெரியுமா? எங்கள் கூடவே அன்று வந்திருந்தால் இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருந்திருக்காது அல்லவா. இப்போது பாருங்கள். எத்தனை சிரமப்படுகிறீர்கள் என்று… எல்லாம் அம்மேதினியால்தான் வந்தது… அவள் மட்டும் எங்கள் கூட வராது இருந்திருந்தால்…” என்று பொரிந்து கொட்ட ஒரு கணம் கந்தழிதரனின் முகம் இறுகிக் கடுமையானது. தன் பல்லைக் கடித்து விடுவித்தவன், பின் முகத்தை மலர்ச்சியாக வைத்தவாறு,

“நடந்ததைப் பற்றிப் பேசி என்ன பயன்… விடு ரோகிணி…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இளங்கோவன் பரபரப்புடன் வந்தார். இவர்களைக் கண்டு ஒரு கணம் புருவம் சுருக்கியவள் பின் நேராகக் கந்தழிதரனிடம் சென்று,

“ரெட்க்ராஸ் வாகனம் வந்துவிட்டது… இப்போதே கிளம்பவேண்டும்…” என்றதும் அனைவரின் முகங்களும் மலர்ந்தன.

அம்மேதினியோ, ‘ஐயோ புறப்படுவது பற்றி இன்னும் வேலனிடம் கூடச் சொல்லவில்லையே. நமக்காகத் தன் குடும்பத்தோடு போகாமல் வந்தானே…” என்று பரிதவித்தவள் அவசரமாக வெளியே ஓடினாள். பாவம் அவளுக்குத் தெரியாது, அவன் மட்டும்தான் கொழும்பு போகிறான் என்று.

அங்கே வேலன் உணவு உண்டுகொண்டிருக்க அவனை நோக்கி ஓடியவள்,

“வேலா…!” என்றாள் வேகமாக.

“என்ன தாயி…” என்றவாறு தன் உணவைத் தரையில் போட்டுவிட்டுக் கரத்தை உதறி நிமிர,

“நானும் அம்மாவும் கந்துவோடு கொழும்பு போகிறோம்… இப்போதே போகிறோம்… நீ… நீ கவனமாக இருந்துகொள்வாய் தானே…” என்று பரபரப்புடன் கேட்க,

“இதென்ன கேள்வி… நீ சந்தோஷமாகப் போட்டுவா… நான் பத்திரமாக இருந்துகொள்வேன்…” என்றதும் இவள் கரங்களைப் பிசைந்தாள்.

“ஆனால் வேலா நீ தனியாக எப்படி…?” என்று திணற,

“அட… என்ன இது… சிறுபிள்ளை போல… நான் என்ன குழந்தையா? தவிப்பதற்கு… பார்த்தாய் தானே… எத்தனை மக்கள் கூட்டம் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று…? அவர்களோடு இணைந்தேன் என்றால் என் பாட்டைப் பார்த்துக் கொள்வேன். நீ கலங்காதே தாயி… மகராசியாகப் போய்விட்டு வா…” என்று அவளை அனுப்பிவைக்க முயல, இவளோ மீண்டும் கரங்களைப் பிசைந்தாள்.

வேலன் அவர்கள் வீட்டு வேலைக்காரனாக மட்டுமல்ல, காவல்காரனும் அவன்தான். இன்றுவரை அவர்கள் குடும்பத்தைப் பிரிந்து சென்றதில்லை. வேலனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதுபோலத்தான் அவனோடு வாழ்ந்தார்கள். இப்போது, அவனைக் கைகழுவிவிட்டுப் போவதை நினைத்தால் அடி நெஞ்சு கலங்கியது அம்மேதினிக்கு.

“ஆனால் வேலா நம்முடைய பசு, ஆடு, பப்பி…” என்று திணற,

“அட… இதெற்கெல்லாமா கவலைப்படுகிறாய்… நான் பார்த்துக்கொள்கிறேன் கண்ணு… நீ போ… சீக்கிரம் போ… வண்டி புறப்படப் போகிறது… இதோ நானும் வந்துவிடுகிறேன்…” என்று அவளை அனுப்பிவிட்டு உணவை உண்டு முடிக்காமலே ஓரமாகப் போட்டுவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு அவள் பின்னால் நடையைக் கட்ட, அங்கே வாசலில் பெரிய களேபரமே நடந்துகொண்டிருந்தது.

பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு கந்தழிதரனை சக்கர நாற்காலியில் வைத்து வைத்தியசாலைப் பணியாளர் ஒருவர் தள்ளிக்கொண்டு வர, அவர்களின் பின்னால் வந்த இளங்கோ, ரெட்க்ராஸ் சிப்பந்தி கொடுத்த பத்திரத்தில் கையொப்பமிட்டுவிட்டுக் கந்தழிதரனைப் பற்றி வண்டியில் அமர உதவிசெய்துவிட்டுக் கதவைப் பூட்ட முயல, அவசரமாகத் தடுத்த கந்தழிதரன்,

“அத்தை, அம்மணி எங்கே…” என்றவன், திரும்பி வண்டி ஓட்டுநரைப் பார்த்து “சற்று நில்லுங்கள்… அவர்களும் எங்களோடுதான் வரப்போகிறார்கள்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை நோக்கி வந்த யசோதா,

“கண்ணா… நாங்கள் உன் கூட வரவில்லைப்பா… நீ போய்விட்டு வா…” என்றார். அதைக் கேட்டதும் இவன் அதிர்ந்து போனான்.

“நோ… நோ… நீங்கள் வராமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்… நிச்சயமாகப் போக மாட்டேன்… எங்கே அம்மணி…” என்று அவன் அவசரமாகக் கேட்க, இளங்கோவோ,

“கந்தழிதரன்… அவர்கள் உன் கூட வரமுடியாதுப்பா… உனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இவர்களை ஏற்றிச் செல்ல முடியாது. தவிர நான்கு மணிக்கு எல்லையைப் பூட்டிவிடுவார்கள். அதற்கிடையில் நீங்கள் போய்விடவேண்டும்… சீக்கிரம் உள்ளே உட்கார்…” என்று கடிய இவனோ அதிர்ந்துபோய் யசோதாவைப் பார்த்தான்.

“இல்லை… இல்லை அத்தை… நீங்கள் யாரும் வராமல் நான் எப்படிப் போவேன்… அதுவும் அம்மணி… இல்லை அத்தை… ப்ளீஸ்… என் கூட வாருங்கள்…” என்றவன் அவசரமாகச் சுற்றும் முற்றும் பார்த்து,

“அம்மணி…. அம்மணி…” என்று அவளைப் பெரும் குரலில் அழைக்க, பவானியும் ரோகிணியும் முகம் கறுக்க அவனுடைய பதட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கந்தழிதரனின் பதட்டமும் தவிப்பும் இவர்களுக்கு வேறு செய்தியைக் கூற, அந்தச் செய்தி இருவருக்குமே உவப்பானதாக இருக்கவில்லை.

அதே நேரம் வானத்தில் பொம்மர்கள் நான்குக்கும் மேற்பட்டவை பறக்கத் தொடங்க, உடனே ரெட்க்ராஸ் சிப்பந்தி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து,

“சார்… இனி தாமதிக்க முடியாது… நாங்கள் கிளம்புகிறோம்…” என்று கூறி வண்டியை உயிர்ப்பிக்க, இவனோ,

“இல்லை… இல்லை… கொஞ்சம் பொறு… அம்மணி வரட்டும்…” என்று பதறிக் கொண்டிருக்கும்போது, மீண்டும் பொம்மர் அந்த இடத்தைச் சுற்றி வர, அந்த நேரம்தான் அம்மேதினி கந்தழிதரனோடு செல்லும் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள்.

ஆனால் வாசலில் நடந்த சத்தத்தைக் கண்டு புருவங்கள் சுருங்க, முன்னேறத் தொடங்கவும், மொம்மர்கள் சுற்றுவதால் அடுத்து நடக்கப்போகும் தார்ப்பரியத்தை உணர்ந்த இளங்கோ சற்றும் தாமதிக்காமல் கந்தழிதரனை உள்ளே தள்ளிவிட்டுக் கதவைப் புட்டி வெளியே தாழ் போடவும் நேரம் சரியாக இருந்தது.

மறு கணம் வண்டி வேகமாகச் செல்லத் தொடங்க, நெஞ்சம் துடிக்க, அவனைக் காணும் வேகத்துடன் ஓடி வந்தவளுக்கு இறுதியாகத் தெரிந்தது கதவைத் திறக்க முயன்றுகொண்டிருந்த கந்தழிதரனின் நிழல் உருவம் மட்டும்தான்.

அதிர்ந்து போனாள் அம்மேதினி. புறப்பட்டு விட்டானா… அவளுடைய கந்தழிதரன் அவளை விட்டுச் சென்றுவிட்டானா… அப்படியானால் அவனோடு நாம் போகப்போவதில்லையா…? நெஞ்சம் விம்மி வெடிக்க, அசைய கூட மறந்தவளாக, சிலையெனக் கண்களில் பொங்கிய கண்ணீர் வழிவது கூடத் தெரியாது, மறைந்துகொண்டிருந்த ரெட்க்ராஸ் வாகனத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, ஆகாயத்தில் வேகமாகப் பறந்துகொண்டிருந்த விமானங்களிலிருந்து குண்டுகள் கடகடவென்று அத்திசையை நோக்கிப் பொழியத் தொடங்க, அங்கே எழுந்த புகை மூட்டத்தைப் பல அடி தூரங்கள் சென்றுவிட்டிருந்த வாகனத்திலிருந்து பார்த்த கந்தழிதரன் தன்னையும் மறந்து,

“அம்மணி………………….” என்று அலற, அவனுடைய அலறல், விழுந்த குண்டின் ஓசையை விட, பலமடங்கு வேதனையோடும் அவலத்தோடும், கதறலோடும் வானத்தைச் சென்று அடைந்தது

What’s your Reaction?
+1
16
+1
0
+1
0
+1
0
+1
9
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!