Fri. Nov 15th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 21/22

(21)

 

இப்போது ஷெல் பத்தடி தள்ளி விழச் சடார் என்று குப்புற விழுது தெறித்து வந்த ஷெல் துண்டுகளிடமிருந்து தன்னைக் காக்க முயன்றவனாகத் தலையைக் கவிழ்த்துச் சற்று நேரம் அப்படியே கிடந்தான். மீண்டும் மீண்டும் ஷெல் கைக்கெட்டும் தூரம் வந்து விழ அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை.

நெஞ்சமோ நடுக்கத்துடன்,

“கடவுளே… அம்மேதினியைக் காத்துக் கொடுத்துவிடு காத்துக் கொடுத்துவிடு…” என்று மன்றாடிக்கொண்டிருக்க, கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் ஷெல் விழுவது நின்றிருந்தது.

இப்போது கண்கள் கலங்கத் தலையைத் தூக்கிப் பார்க்க, எல்லா இடங்களும் புகை மூட்டாக இருந்தன. கண்கள் எரிந்து எரிச்சல் கிளப்பியது. நாசிக்குள் மருந்து நெடி சென்று அரித்தது. இருமிக்கொண்டே தலையைத் தூக்கிப் பார்த்தவனின் விழிகளில் அதுவரை அழகாகக் காட்சிகொடுத்த இடம் அனைத்தும் சிதைவுற்றுப் படு பயங்கரமாகக் காட்சி கொடுக்கத் துடித்துப்போனான் அந்த ஆண்மகன்.

எத்தனை பேருடைய வாழ்வாதாரங்கள்… அத்தனையும் கண்ணிமைக்கும் நொயில் மொத்தமாய்ச் சிதைந்து போனது. இனி இதை எப்படிக் கட்டி எழுப்புவார்கள். கட்டி எழுப்புவதற்கு உயிரோடு இருக்கவேண்டுமே… கலக்கத்துடன் எழ அவனைப் போலவே நான்கைந்து பேர் மெதுவாக எழுந்தனர். அவர்களுக்கும் தாங்கள் உயிரோடு இருப்பதையே நம்ப முடியவில்லை. அனைவரின் உடலிலும் தூசும் அழுக்குமாக அப்பியிருந்தது.

ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நடக்கத் தொடங்க, அதில் ஒருவர் தன் மனைவியுடையதும், மகனுடையதும் சிதைந்த உடலைக் கண்டு அலறித் துடிக்க, அதில் இன்னொருவர் சிதைந்த உடலுடன் குற்றுயிராய் கிடந்த தன் மனைவியை அள்ளி எடுத்துக் கதறிக்கொண்டிருந்தார்.

“தண்ணீர்… தண்ணீர் விடாய்க்கிறது… தண்ணீர்… தண்ணீர் வேண்டும்…” என்று கெஞ்சும் இறுதி நிமிட உயிரின் தாகச் சாந்திக்கு எங்கே போவார் அவர்.

“ஒன்றுமில்லைடா… ஒன்றுமில்லை… இதோ கொண்டு வருகிறேன்… இதோ கொண்டுவருகிறேன்…” என்று மனைவியைக் கட்டிப்பிடித்து அழுதாரேயன்றி, செல்ல முயன்ற உயிரைக் கைவிடப் பிடிக்காது துடித்து முனங்கும் மனைவியை அங்கேயே விட்டுவிட்டுப் போகும் மனநிலை இல்லாதவராகக் கதறிக்கொண்டிருந்தார்.

சற்றுத் தள்ளி, மனைவி குழந்தைகளைக் காக்கவேண்டி அந்த வீட்டுத்தலைவன் அவர்களை அனைத்திருந்தார் போலும், சிதைந்திருந்தார். அவருடன் சேர்த்து அவர் குடும்பமும் மொத்தமாய் உயிர் தொலைத்திருந்தது. காணக்கூடாத காட்சிகள் இவை.

இன்னொரு பக்கம் யாருமற்ற அனாதைபோல உயிர்போகும் நிலையிலிருந்த அன்னை. அவளின் குழந்தையைப் பிரசவித்த பாகங்கள் எங்கேபோனது தெரியவில்லை. எழக் கூட முடியாது. ஓரடிக்குத் தள்ளி குப்பிற விழுந்திருந்த தன் குழந்தையைக் கைகாட்டி,

“என் குழந்தை… என் குழந்தை.. யாராவது காப்பாற்றுங்களேன்… தம்பி… என் குழந்தை… அவளை காப்பாற்றி விடேன்… அசையாமல் இருக்கிறாள்… காப்பாற்றேன்…” என்று அப்போதுதான் எழுந்த ஒருவரைப் பார்த்துக் கெஞ்ச, துடித்துப்போனார் அவர்.

ஓடிப்போய் மூன்றுவயது கூட நிரம்பாத அந்த சிசுவைத் தூக்கிப் பார்க்க, அவள் சிதைந்த நிலையில் ஏற்கனவே உயிரை விட்டிருந்தாள். அதை எப்படி அந்தத் தாயிடம் சொல்வார். நெஞ்சம் பதைக்கத் தங்க முடியா வலியுடன் அந்தத் தாயைப் பார்க்க, அவளும் புரிந்துகொண்டாள் போலும்.

“ஓ… இறந்துவிட்டாளா… என் மகள் இறந்துவிட்டாளா? நல்லது… நல்லது… நானும் இறந்தால் அவளை யார் பார்த்துக்கொள்வார்கள்…? அனாதையாக அலைந்து திரியும்… அவள் இறந்ததுதான் நல்லது… நாசமா… நாசமா போன… இந்த… தே… தேசத்தில் வாழ்வதை விட… சா.. சாவதே… தம்பி… கொஞ்சம்.. த… தண்ணி கிடைக்கு… கிடைக்குமா… தா… தாகம்.. தாகம்… தாகம்… வாட்டுகிற…” என்றவர் அடுத்து மூச்சிழந்து போக, அந்த மனிதர் அக்காட்சியைக் கண்டு உடைந்துபோனவராய் முழங்காலில் விழுந்து கதறத்தொடங்க, இந்தக் காட்சியைக் கண்ட கந்தழிதரனுக்கு மயக்கமே வரும்போலிருந்து.

யாரோ இதயத்தைப் பிழிந்து பிரித்து எடுப்பதுபோலத் துடித்துப்போனான். அவனால் எதையும் சரியாகச் சிந்திக்க முடியவில்லை. புத்தியோ தாறுமாறாக யோசித்தது. கூடவே அம்மேதினியின் நிலையை எண்ணி ஆவி பிரியும் நிலைக்கு வந்தவனாக ஓடி ஓடிக் கவிழ்ந்திருந்த உருவங்களைத் திருப்பிப் பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது காலில் எதுவோ தட்டுப்படக் குனிந்து பார்த்தான். யாரோ எவருடையதோ ஒரு கால் தெறித்து இங்கே வந்து விழுந்திருந்தது. அதைக் கண்டதும் அவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கூடவே இரத்த வாடையுடனான குண்டுகளின் மருந்து நெடி அவனை மூச்செடுக்கவே விடவில்லை.

தன் வாயைப் பொத்தியவனாகத் திரும்ப இப்போது அவன் விழிகளில் தட்டுப்பட்டாள் அம்மேதினி. அவளும் அவனைப்போலத்தான் தலைதூக்கி இவனைத்தான் தேடிக்கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் அதுவரை இருந்த அழுத்தம் வடிந்து செல்ல, அவனையும் மீறி உதடுகளில் புன்னகை மலர விழிகளை மூடித் திறந்தவன் தளர்ந்த நடையுடன் அவளை நோக்கிப் போகத் தொடங்க, இன்னொரு ஷெல்… கூவும் ஓசை கேட்க, அதன் ஓசையை வைத்து அடுத்து எங்கே விழப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டவன் போல,

“அம்மணி…” என்ற அலறலுடன், அவளை நோக்கிப் பாய்ந்தான். எப்படி அத்தனை வேகமாகப் பாய்ந்தான் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

அவன் பாய்ந்த விநாடியில் அவளுக்கு அருகாமையில், மிக அருகாமையில் விழுந்த ஷெல் வெடித்துச் சிதற, அதில் ஒரு துண்டு அவனுடைய வலது தோளைத் துளைத்துக்கொண்டு செல்ல அதைக் கூடப் பொருட்படுத்தாது அவளுக்குச் சிறு காயமும் பட்டு விடாது முழுவதுமாகத் தன் உடல் கொண்டு அணைத்துக்கொண்டான் கந்தழிதரன். அவனுக்குச் சற்று நேரம் எடுத்தது காதுகள் சமப்பட.

ஷெல் விழுந்த ஓசையில் காதுகளில் ‘ஙொய்….’ என்கிற சத்தம் மட்டுமே அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு கணம் விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் அவளை அழைத்துப் பார்த்தான். அவன் அழைத்த சத்தம் அவனுக்குக் கேட்கவேயில்லை. தன்னையும் மீறி,

“அம்மணி… அம்மணி…” என்று அவளை அழைத்தவன், தன் குரலே தனக்கு எட்டாத நிலையில் அவளை விட்டு விலகி எழுந்தமர்ந்தவனாகக் காதுகளைப் பொத்தித் தலையைக் குலுக்கித் தன்னைச் சமப்படுத்த முயல, இப்போது ஓரளவு காதுகள் கேட்கத் தொடங்கின.

அப்படியிருந்தும் இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் தட்டித் தட்டிப் பார்த்து அதைச் செயற்பட வைத்தவன், ஓரளவு காதுகள் கேட்கத் தொடங்கியதும், பதட்டத்துடன் அவள் பக்கமாகக் குனிந்து அவள் கன்னத்தைத் தட்டி,

“அம்மணி… அம்மணி…” என்று அழைத்துப் பார்த்தான். அவளோ அவன் அழைத்தது கூடப் புத்திக்கு எட்டாதவளாக மயங்கிக் கிடந்தாள். பதறிப்போனான் கந்தழிதரன். அந்த நேரம் மீண்டும் ஒரு ஷெல் சற்று எட்டி விழ அவளைத் தனக்குள் முழுவதுமாகப் புதைத்தவாறு தரை சாய்ந்தவன், கரங்களால் அவளைச் சுற்றித் தன்னோடு இறுக அணைத்தவாறு தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு இழைத்துச் சற்று நேரம் அப்படியே கிடந்தான்.

அவனுடைய தேகமோ நடுங்கியது. கடவுளே சற்று முன் ஒருவன் தன் மனைவியை இழந்துவிட்டுக் கதறினாரே… அது போலத் தானும் இவளை இழந்துவிடுவோமோ என்கிற பயம் பூதாகரமாகத் தாக்கியது. கூடவே சில தினங்களுக்கு முன் என்ன செய்கிறோம் என்பது கூற உறைக்காமல் முத்தமிட்டாளே… அந்த நினைவு வேறு அவனைத் துடிக்க வைத்தது. கூடவே அவள் தன் காதலைக் கூறியதோடு ஐந்து வருடங்கள் காத்திருப்பாயா என்று கேட்டதும் நினைவுக்கு வர அவனுடைய நெஞ்சமே வெடித்துப்போனது.

எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை வேண்டுதல்கள், எத்தனை ஏக்கங்கள். அத்தனையும் நிறைவேறாமல் ஒரு நொடியில் மறைந்துபோய்விடுமா என்ன? பரிதவிப்புடன் தலையைத் தூக்கித் தனக்குள் புதைந்து கிடந்தவளைப் பார்த்தான்.

முகத்தில் தூசி. அதையும் மீறி நெற்றியிலிருந்து வழிந்த இரத்தம். அவளுக்குச் சிறு காயம் வந்தாலும் தாங்கிக்கொள்ள மாட்டானே, இப்போது… துடித்தவனாக, அவளை அணைத்திருந்த வலக்கரத்தை விடுவித்து உள்ளங்கைகளை அவள் கன்னத்தில் பதிக்க அவனையும் மீறி விழிகளில் கண்ணீர் பொங்கியது. பொங்கிய கண்ணீர்த் துளிகளாகி மூடிய அவள் விழிகளின் மீது தெறிக்க,

“அம்மணி… கண்ணம்மா… பேபி கேர்ள்…” என்று மெதுவாக அசைத்துப் பார்த்தவன் அவள் அசையாது இருக்கவும் அவளுக்கு ஏதாவது பாரதூரமாக ஆகியிருக்குமோ என்று எண்ணியவனுக்கு அதற்கு மேல் எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

துடித்துப்போனவனாக மீண்டும் அவளைத் தனக்குள் புதைத்து இறுக அணைத்து உடல் குலுங்கியவனுக்கு விழிகளில் பட்டது சிதைந்துபோன அவளுடைய தோழிதான். அதிர்ந்துபோனான் கந்தழிதரன்.

சற்று முன் அவளோடு கைகோர்த்து வெளியே அழைத்துச் சென்ற பெண், கண் மூடி முழிப்பதற்குள் உயிரில்லாப் பிணமாகக் கிடக்கிறாளே… பதற்றத்துடன் சற்றுத் திரும்பிப் பார்க்க அவனுடைய சகோதரனுக்கும் அதே நிலைதான். அப்படியானால் அம்மேதினி… அதற்கு மேல் அவனுடைய புத்தி மரத்துப்போனது. அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. அந்த நிலையில் அவளுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூடப் பரிசோதிக்கத் தோன்றவில்லை. அந்தளவுக்குப் புத்தி மறந்துபோய் இருந்தது. அப்போது கூட அவளுக்கு ஒன்று என்றால் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை உணராமலே இருந்தான்.

“அம்மணி… ப்ளீஸ்… எழுந்துகொள்… என் கண்ணல்லவா… ப்ளீஸ்டி… எழுந்துகொள்…” என்றவன் அவளுடைய கன்னத்தைத் தட்டிப் பார்த்தான். மூக்கிலிருந்து, விழிகளிலிருந்தும், உதடுகளிலிருந்தும் தண்ணீர் ஆறாக வழிந்து செல்ல, பலமுறை அழைத்து அழைத்துப் பார்த்தான். அப்போதும் அசைவில்லை. தன்னையும் மீறி அவள் முகம் நோக்கிக் குனிந்தவன் நெற்றியில் உதடுகளைப் பதித்து, எழுந்தமர்ந்தவாறு, அவளை வாரித் தன் மடியில் போட்டுக்கொண்டவனாக அவளுடைய கன்னத்தைத் தட்டிக் கொடுத்து,

“இதோ பார்! நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்டி… விழிகளைத் திற அம்மணி…” என்று கேட்டும் அசையாதிருந்தவளைக் கண்டு இவனுக்கு உயிரே போய்விடும்போலத் தோன்றியது.

“சொல்கிறேன் அல்லவா… விழித்துக்கொள்ளடி… இதோ பார்… நீ என்ன கேட்டாலும் செய்கிறேன் என்று சொல்கிறேன் அல்லவா… பிறகு என்ன… விழித்துக் கொள்…” என்றவன் அதை வெளிப்படுத்தும் முகமாக, ஆவேசத்துடன் அவளுடைய கன்னத்தில் உதடுகளைப் பொருத்தினான். கழுத்தில் உதடுகளைப் பொருத்தினான். மூக்கில் உதடுகளைப் பொருத்தினான்… இறுதியில் எதைப்பற்றியும் சிந்திக்காது அவளுடைய உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்த, இப்போது ஷெல் சற்றுத் தள்ளிப்போய் விழ, இவனுக்கு அது உறைக்கவேயில்லை.

மனித சிதைவுகளுக்கும் கட்டடங்களின் சிதறல்களுக்கும் மத்தியில் இளையவளின் உதடுகள் பற்றித் தன்னிலை கெட்டு நின்றான் அந்த ஆண்மகன். மறு கணம் அவன் கரங்களில் கிடந்தவளின் உடலில் மெல்லிய சலனம் மெல்லிய மாற்றம். அதைக்கூட உணராதவனாக அவள் உதடுகளை விட்டு விலகியவன்,

“அம்மணி… எழுந்துகொள்… இதோ பார்… நான் சத்தியம் செய்கிறேன்… நீ சொன்னது போல ஐந்து வருடங்கள் என்ன ஐம்பது வருடங்களானாலும் உனக்காகக் காத்திருக்கிறேன்… உன்னையே மணந்துகொள்கிறேன்… விழித்துக்கொள்… விழித்துக்கொள்…” என்று  கதறியவனுக்கு ஏனோ அவனுடைய உயிரே அவனை விட்டுப் போவதுபோல் இருந்தது.

அவளுக்கு மட்டும் ஏதாவது நடந்தால் அதன் பின் அவன் உலகில் உயிரோடு இருந்தும் நடைபிணம்தான். அது நன்கு புரிந்துபோக, வெடிக்கத் தயாரான இதயத்தைக் கூடச் சமாதானப் படுத்த நேரமில்லாது, மூச்சுக்காற்று வேறு நடுங்க அதற்கு இணையாகக் கரங்கள் உதற, எங்காவது காயம் பட்டிருக்கிறதா என்று அஞ்சியவனாகத் தன் கரம் கொண்டு தேடினான்.

அவனுடைய கரங்கள் தொடைகளைத் தழுவும்போது ஈரத்தை உணர “கடவுளே அவளுக்குக் காயம் பட்டிருக்கிறதே…” என்று பதறியவனுக்குத் தன் தோளிலிருந்து உதிரம் கொட்டுவது சுத்தமாக மறந்து போயிற்று.

சற்றும் யோசிக்காமல் அவளுடைய பாவாடையை உயர்த்திப் பார்த்தான். விழுந்த ஷெல்லின் ஏதோ ஒரு துண்டு அவளுடைய தொடையை ஓரங்குலத்திற்குக் கிழித்துக்கொண்டு போயிருந்தது. சதை சற்று வெளியே தெரிந்தது. நிச்சயமாகத் தையல் தேவை. ஆனால் ஆபத்தில்லை. நிம்மதி கொண்டவனாகத் தன் காதை அவளுடைய நாசியின் அருகே வைத்து மூச்சு வருகிறதா என்று அறிய முயன்றான். ஒரு மண்ணும் தெரியவில்லை. சுட்டுவிரலும் நடுவிரலும் கொண்டு கழுத்தோரத்தில் வைத்து இதயம் துடிக்கிறதா என்று கண்டறிய முற்பட்டான். மெல்லிய துடிப்பை உணர்ந்தவன் போல அதுவரை அழுத்திய பாரம் சற்றுக் கரைந்து போகத் தன் முத்தத்தால்தான் அவள் உயிர்த்தெழுந்தாள் என்கிற உண்மையைக் கூட உணராதவனாகப் பெரும் நிம்மதியுடன் ஆழ மூச்செடுத்தவாறு அவளை இறுக அணைத்துக் கொண்டவனுக்கு விழிகள் தாமாக மூட முயன்றன. கூடவே ஏதோ இருண்ட லோகத்திற்குள் நுழைவது போலத் தோன்ற, அது கூட ஒரு வித சுகமாகத்தான் இருந்தது. அப்படியே உறங்கிவிடமாட்டோமா என்று உடல் கெஞ்சியது. தன்னையும் மீறி விழிகளை மூடப்போனவனுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது.

அவன் தூங்கிவிட்டால் அம்மேதினியைக் காப்பாற்றுவது யார்? இப்போதுதான் குண்டு பொழிவது நின்றிருக்கிறது. இதற்குள் தப்பித்தால்தான் உண்டு.

அதற்கு முதல் அவளுடைய காயத்திற்குக் கட்டுப் போடவேண்டும். உறங்க முயன்ற தன்னை விழிப்படையச் செய்தவன், தாமதிக்காமல் தன் டீ ஷேர்ட்டைக் கழற்ற அதைக் கிழித்து அவளுடைய காயத்தின் மீது வைத்து இறுகக் கட்டுப்போட்டு இரத்த ஓட்டத்தை நிறுத்த முயன்றான். முதலில் அங்கிருந்து போகவேண்டும். மீண்டும் அவளைத் தரையில் கிடத்திவிட்டு எழுந்தவனுக்கு உடல் தள்ளாடியது. எதற்கு இப்போது தள்ளாடுகிறேன்.. என்று புரியாமலே தடுமாறியவனுக்கு அவளைத் தூக்கிச் செல்லும் சக்தி தனக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் தோன்றியது. அதனால் அவளுக்கு இரு புறமும் கால்களைப் போட்டு அவளை நோக்கிக் குனிந்து கன்னத்தைத் தட்டி,

“அம்மணி… விழித்துக் கொள்… நாம் இங்கிருந்து புறப்படவேண்டும். அம்மணி…” என்று அழைத்துப் பார்த்தான். இன்னும் விழிகள் மூடித்தான் இருந்தன. அவள் கன்னத்தைத் தட்டியவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். தப்பித்த ஒரு சிலர் அவனைப் போலத்தான் உயிரோடு குற்றுயிராக இருந்தவர்களை எழுப்பி அழைத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்.

எப்படி இருந்த இடம்… சொற்ப நேரத்தில் அத்தனை காட்சிகளும் மாறிப்போயினவே. யாராவது நினைத்திருப்பார்களா இப்படி நடக்கும் என்று? எத்தனை சந்தோஷமாக இங்கே உலாவித் திரிந்திருப்பார்கள்… அத்தனையும் ஒட்டுமொத்தமாக நாசமாகப் போனதே… எல்லையில்லா வேதனையுடன் திரும்பியவனுக்கு உயிரற்றுக்கிடந்த ஈழபுவனும், வான்மதியும் விழிகளில் பட, மேலும் நெஞ்சம் துடித்தது.

‘கடவுளே…. எவ்வளவு ஆசையாக இவர்களின் பெற்றோர்கள் இவர்களை வளர்த்திருப்பார்கள். இப்போது இந்த நிமிடம் இவர்கள் உயிரோடு இல்லை என்பதை அவர்கள் அறிவார்களா… அவர்கள் அறியும் போது எப்படித் துடிப்பார்கள். இவர்கள் இருவர் மட்டும்தானா.. இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் உதிர்த்து எழும் முன்னே கருக்கிச் சாம்பலாக்கப்பட்டனர். எதைச் சாதிப்பதற்கென்று இந்தப் போர்? எதைச் சாதிப்பதற்காக இத்தனை இழப்பு….? ஒரு இனமே அழிந்து போகிறதே. அதுவும் சாதாரண இனமா, ஈழத்தின் தொன்மைக் குடிகள் அல்லவா அழிந்து போகிறது… யார் குற்றம் இது… தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா? அவன் கோலோச்சி நின்றது குற்றமா? ஈழத்தின் பழங்குடி அவன் என்பது குற்றமா… எது குற்றம்? எதைச் சாதிக்க, எதை வென்று தொலைக்க இத்தனை அகோரம்… யாருடைய இராட்சசப் பசிக்காக இத்தனை இழப்புகள்? நினைக்க நினைக்கத் தாளவில்லை அவனுக்கு.

அந்த நேரம் மீண்டும் ‘டப்…’ என்கிற ஓசை. அதைத் தொடர்ந்து ‘கூகூகூ ஊஊஊ’ என்கிற சத்தம். உடனே ஷெல் வந்து விழப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டவனாக, மீண்டும் அம்மேதினியின் மீது கவிழ்ந்து படுத்தான்.

அந்த அகோரத் தாண்டவத்தில் இருவரும் பிழைப்பார்களா, இல்லை மரிப்பார்களா? அது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்

(22)

 

சற்றுப் பொருத்து ஓசை அடங்கியதும், எழுந்தவன், குனிந்து அம்மேதினியைத் தன் தோளில் போட்டுக்கொண்டு விரைந்து ஓடத் தொடங்கினான்.

தொடர்ந்து ‘படபடப் பட்பட்…’ என்று துப்பாக்கி சுடும் ஓசைகள் மிக அருகே கேட்க விறைத்துப்போனான் கந்தழிதரன். ஓடிப்போய்ச் சிதைந்த கடையின் சுவர் ஓரமாகப் பதுங்கிக் கொண்டவனுக்கு எங்கோ அருகேதான் சுடுபாடு நடக்கிறது என்பது புரிந்து போயிற்று.

எங்கே… என்றுதான் தெரியவில்லை. அப்படியானால் இராணுவம் உள்ளே வந்துவிட்டதா என்ன? கடவுளே… எப்படியாவது பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லவேண்டுமே… எங்கே செல்வது… எங்கே பாதுகாப்பு… அங்கேயிருந்தால் இருக்கும் சொச்ச உயிரையும் இராணுவத்தின் துப்பாக்கி பறித்துவிடும். பதறியவனாக எந்தத் திசை நோக்கிப் போவது என்று புரியாமல் அங்கும் இங்கும் பார்த்தான். அந்த நேரம் திடீர் என்று இராணுவத்தின் வாண ஊர்தியின் சத்தம் கேட்க இவனுடைய உடல் விறைத்தது.

சுத்தம். தப்பிக்க எந்த வழியுமில்லை. மேலிருந்து கீழ் பார்க்கும் போது இவர்களைத் தெரியும். மறு கணம் துப்பாக்கிச் சூடு இவர்களை நோக்கி வரும்… அதற்கிடையில் எங்காவது பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டும். எங்கே… எங்கே…’ என்று எண்ணியவனுக்குப் புத்தி சுத்தமாகச் செயல்பட மறுத்தது.

போதாததற்கு உடலின் குருதி படு வேகமாகப் பொங்கி ஓடத் தொடங்க உடல் தளரத் தொடங்கியது. ஆனாலும் அம்மேதினியைக் கருத்தில் கொண்டவனாகத் தன் தளர்வை ஓரங்கட்டிவிட்டு அந்தக் கடைக்குள் நுழைந்து, பின்பக்கமாக வெளியேறித் தன் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான் கந்தழிதரன்.

அதே போலச் செல் அடியில் பிழைத்தெழுந்த ஒரு சிலரும் தம்மைக் காக்கும் பொருட்டு நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினர். வானிலிருந்து வந்த துப்பாக்கிச் சூடு அவர்களைத் தரை சாய்த்தது.

அப்போது எங்கிருந்தோ, வானவூர்தியை நோக்கி ஒரு குண்டு பாய மறு கணம் புகையைக் கக்கியவாறு சுழரத் தொடங்கியது விமானம். அதைக் கண்டதும் போராளிகள் வந்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டான் கந்தழிதரன். அதை அறிந்ததும் ஒரு பக்கம் நிம்மதி எழுந்தாலும், மறு பக்கம் பதட்டமும் ஏற்பட்டது.

இந்த ஒரு வான ஊர்திக்காகப் பல வான ஊர்திகள் வரப்போகின்றன. சுட்ட போராளிகளைத் தேடித் தேடித் துவசம் செய்வார்கள். அப்போது சிக்கப்போவது சாதாரண மக்கள்தான். நிச்சயமாக அந்தக் கலவரத்தில் தப்புவது இயலாத காரியம். என்ன செய்வது? எப்படித் தப்பிப்பது? அவனால் தப்பிக்க முடியுமா? இராணுவம் சண்டிலிப்பாயைச் சுற்றிவளைத்திருந்தால், நிச்சயமாகத் தப்புவது இயலாத காரியம்.

அதுவும் பட்டப்பகலில் தப்புவது என்பது எண்ணிப் பார்க்க முடியாத கடினம். என்ன செய்வது? ஓடிக்கொண்டிருந்த கந்தழிதரனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. மூச்சு வேறு வாங்கியது. அவனையும் மீறி இருட்டிக்கொண்டு வந்தது. நெஞ்சில் குருதி வழிவது போன்ற உணர்வில் தவித்துப் போனவனாக, மேலும் ஓடத் தொடங்க, திடீர் என்று ஷெல் புறப்படும் ஓசை கேட்டது. அந்த ஓசையை வைத்தே எங்கே விழும் என்பதைப் புரிந்துகொண்டவனாகச் சற்றும் தாமதிக்காமல் அம்மேதினியுடன் சேர்ந்து தரையில் விழ, இரண்டாம் நான்காம் விநாடி இவர்களுக்குப் பத்தடி தள்ளி ஷெல் விழுந்தது.

இவனுக்கே தன் இதயம் பலமாகத் துடிக்கும் சத்தம் கேட்டது. அம்மேதினியைக் கை வளைவில் வைத்துக்கொண்டே நாலா பக்கமும் பார்த்தான். இவளைக் கரங்களில் ஏந்திக்கொண்டு ஓடுவது சுலபமான காரியமில்லை. இவள் விழித்துக் கொண்டால் தப்புவது எளிது. மீண்டும் அவள் கன்னத்தைத் தட்டிப் பார்த்தான். அதே நேரம் தப்பாக்கிச் சுடும் ஓசை மெல்ல மெல்ல அருகே கேட்கத் தொடங்க, நடுங்கிய கரங்கள் கொண்டு. மீண்டும் அவளை உசுப்பிப் பார்த்தான். அடுத்து வேகமாக எழுந்தவன், மீண்டும் அவளைக் கரங்களில் ஏந்தியவாறு ஓடத் தொடங்கியவனின் விழிகளில் பட்டது அது.

இராணுவச் சீருடை. ‘அப்படியானால் இராணுவம் உள்ளே நுழைந்துவிட்டதா? இப்போது என்ன செய்வது?’

பதறும் வேளையில் விமான ஊர்தி வேறு படவென்கிற சத்தத்தோடு இவர்கள் நின்றிருந்த திசை நோக்கி வரத் தொடங்க, தப்புவதற்கான அவகாசம் மிகச் சொற்பம் என்பதைப் புரிந்துகொண்டான் கந்தழிதரன்.

கூடவே அதிக நேரம் அம்மேதினியைக் கரங்களில் வைத்தவாறு ஓடவும் முடியாது. தோளில் பட்ட காயம் வேறு விண் விண் என்று வலித்தது. இராணுவத்தின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் அதுதான் அவர்களின் இறுதி மூச்சாக இருக்கும். மேலே இருப்பவனின் பார்வை பட்டாலும் போதும் அதுவே அவர்களின் இறுதி விநாடித் துளிகளாக இருக்கும். தப்ப வேண்டும்… தப்பவேண்டும்.. என்று தன் புத்திக்கும் மனதிற்கும் கட்டளையிட்டவாறு குனிந்து தன் கரங்களிலிருந்தவளை ஏறிட்டான்.

இன்னும் விழிகளை மூடியிருந்தாள். அவனுக்கு ஏதாவது நடந்தால் அவன் வருந்த போவதில்லை. ஆனால் அம்மேதினிக்கு ஏதாவது நடந்தால்…

பதறிக்கொண்டிருக்கும் போதே, எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டுகள் நடந்துகொண்டிருந்த இராணுவத்தை நோக்கிப் பாய, அதில் ஒரு சில இராணுவம் மண்ணைக் கவ்வ, உடனே இராணுவம், துப்பாக்கியை ஏந்திக்கொண்டு குண்டு வந்த திசையை நோக்கி ஓடத் தொடங்கினர்.

விடுதலைப் போராளிகள் இராணுவத்தை நோக்கிச் சுடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் இறுதி வீரன் இறக்கும் வரை தொடர்ந்து போராடுவார்கள். இப்போதைக்கு இது ஓயாது. சுற்று முற்றும் பார்த்தவனின் விழிகளில் சேதமடைந்த வீடொன்று தென்பட, சற்றும் யோசிக்காமல் அந்த வீட்டை நோக்கி ஓடத் தொடங்க அது வானூர்தியின் கவனத்தைத் திசை திருப்பியது.

அதுவரை இடப்பக்கம் திரும்பி நின்று மறைந்திருந்த போராளிகளைத் தேடிக் கொண்டிருந்த வானூர்தி, உடனே திசைதிருப்பி இவர்களின் பக்கமாக வரத் தொடங்க, கந்தழிதரன் சற்றும் யோசிக்காமல் அசுரவேகத்தோடு ஓடத் தொடங்கினான்.

அந்தக் கட்டடத்தை நெருங்கத் தொடங்கவும், படபடவென்று வான ஊர்தியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் இவர்களை நோக்கி வரவும் நேரம் சரியாக இருந்தது.

பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்தவன், அம்மேதினியை ஒரு மூலையில் கிடத்திவிட்டு, தெறித்து வந்த துப்பாக்கிக்குண்டிலிருந்து தப்புவதற்காக அவள் பக்கத்திலே அமர்ந்து கொண்டபோது அவனுக்கு மேல்மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது. விழிகளை மூடி வாயைத் திறந்து பல முறைப் பலமாக மூச்செடுத்து விட்டபோதும் படபடப்பு சற்றும் குறையவில்லை.

நெஞ்சைப் பிளந்து வெளிவரத் துடித்த இதயத்தை அழுத்திக் கொடுத்தவாறு விழிகளை மூடிச் சற்று நேரம் இருந்தவன், மெதுவாகத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். இவர்கள் இதற்குள் மறைந்திருக்கும் செய்தி இராணுவத்திற்கு இப்போது தெரியப்படுத்தியிருப்பார்கள். எந்த நேரமும் இராணுவம் இவர்களைத் தேடி வரலாம். வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை… அவனைக் கொல்வார்கள்… அவளை…?

திரும்பி விழிகள் மூடிக் கிடந்தவளை ஏறிட்டவனுக்கு நெஞ்சைப் பிசைந்தது. நிச்சயமாக அவளுடைய பெண்மையைச் சிதைப்பார்கள். பின்னர்க் கொன்று புதைப்பார்கள். இல்லையென்றாலும் அவன் கண்முன்னால் அந்தக் காட்சி அரங்கேறும். அவன் தனி ஒருவன். நூற்றுக்கணக்கான இராணுவத்தின் மத்தில் அவளைக் காப்பது நடக்கும் காரியமில்லை. அதற்கு முதல் அத்தகைய சந்தர்ப்பம் வராது அவளைக் காக்கவேண்டும்… இல்லையேல் அத்தகைய நிகழ்வு நடக்காதிருக்க அவளையும் கொன்று இவனும் மடியவேண்டும். மீண்டும் யோசிக்க விடாமல் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை இவனை நிலையிழக்கச் செய்தது. கூடவே விழிகள் மூட முயன்றன. தன்னை உலுப்பி எடுப்பவன் போலத் தலையைப் பலமாச் சுவரில் அடித்தவன், அதன் வலியில் மயக்கம் கலைந்து புத்தி ஓரளவு விழிப்படைந்தது.

“யோசி கந்தழி… யோசி… ஏதாவது வழி இருக்கும்… யோசி…” இப்போது விமான ஊர்தியிடமிருந்து துப்பாக்கி ஓசை நிறுத்தப்பட, மெதுவாகச் சுவரில் துளையிட்டிருந்த ஓட்டைக்கூடாக ஏதாவது தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தான். இல்லை. திரும்பி மறுபுறம் பார்த்தான். அடர்ந்த மாமரங்களும் வேப்பமரங்களும் காடுகள் போலக் காட்சி கொடுக்க, இப்போதைக்கு அவனுக்கான பாதுகாப்பு அரண், அந்த மரங்கள் அடர்ந்த பகுதிதான்.

உடனே அம்மேதினியைத் தூக்கித் தோளில் போட்டவன் ஓடத் தொடங்கினான். அவன் ஓடிய ஓட்டத்தில் அதுவரை மூச்சடைபட்டுக் கிடந்த அம்மேதினி, வாயைத் திறந்து பலமாக மூச்செடுக்கத் தொடங்க அது புரியாமலே இன்னும் வேகத்தைக் கூட்டினான் கந்தழிதரன்.

மீண்டும் இவன் ஓடுவதை மேலிருந்து வானூர்தி கண்டு கொள்ளப் படபடவென்று சுட்டவாறு வேகமாகப் பின் தொடர்ந்தது.

அந்த நேரம் ஒரு துப்பாக்கிக் குண்டு கந்தழிதரனின் தொடையைக் கிழித்துக்கொண்டு செல்ல உடனே அவனுடைய ஓட்டம் தடைப்பட்டது. ஆனாலும் நின்றானில்லை. அந்த அடர் மரங்களுக்குள் மறைந்துகொண்டான் கந்தழிதரன்.

இனியும் அவனால் ஓடமுடியும் போலத் தோன்றவில்லை. உடல் களைத்துப் போனது. கூடவே மனமும். இதற்கிடையில் இவர்களைப் பற்றிய தகவல்கள் இராணுவத்திற்குச் சென்று சேர்ந்தது போலும். ஐந்து பேர் இவர்களைத் தோடிக் கிளம்பத் தொடங்க, அது தெரியாமல் மரத்திற்குள் முடிந்த வரை வேகமாக நடக்கத் தொடங்கினான் கந்தழிதரன்.

மரங்களுக்குள் மறைந்து கொண்டதால் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் வானூர்தி அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வரத் தொடங்கியது.

இது கூட அதிக நேரத்திற்கல்ல என்பது கந்தழிதரனுக்கு நன்கு புரிந்தது. தன் தோளில் கிடந்தவளை மெதுவாக பற்றி, ஒரு மரத்தில் சாய்ந்தது போல அமர்த்திவிட்டவனுக்குச் சற்று நேரம் தேவைப்பட்டது சுயத்திற்கு வர எப்படியாவது அவளை எழுப்பியே ஆகவேண்டும் என்கிற வேகத்தில், வேகமாக அவள் புறமாக முழங்காலிட்டு அமர்ந்தவன், பலமாக அவள் கன்னத்தைத் தட்டி,

“கமோன் பேபிகேர்ள்… பிறீத்… கமோன்…” என்று கூறும்போதே, மெதுவாகத் தன் கண்களை விழித்துப் பார்த்த அம்மேதினி, முதலில் எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.

சற்று முன்பு நடந்த குண்டு வெடிப்பு நினைவிற்கு வர, அவள் மூளையில் வந்துதித்தது வான்மதியும், புவனும் தான். அதுவும் இறுதியாக அவளிடம் காதல் யாசித்த ஈழபுவன் நினைவுக்கு வர, சடார் என்று விழிப்படைந்தவளாக நிமிர்ந்து பார்க்க, அங்கே அவள் கண்ட காட்சி முற்றிலும் வேறுபட்டிருக்கப் புத்தியும் மனமும் ஒரு கணம் தொடர்பாடல் இல்லாது தடுமாறின.

குழப்பத்துடன் தலையைப் பற்றியவாறு நிமிர்ந்து பார்க்க அங்கே கந்தழிதரன் இவள் முகம் பார்த்தவாறு நின்றிருக்க இவளுடைய இதயம் ஒரு கணம் தடுமாறிப் பின் நிலையானது. கூடவே தொடையில் சுள் சுள் என்கிற வலி தோன்ற முகத்தைச் சுளுக்கியவாறு வலித்த இடத்தைப் பற்றிக்கொண்டாள்.

அவளுக்கு என்னவாகிவிட்டது…? இப்போது எங்கே இருக்கிறாள்? கந்தழிதரன் இங்கே என்ன செய்கிறான். எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. தன்னையும் மறந்து, விழிகளை மூடியவாறு மரத்தில் தலையைச் சாய்த்தபோதுதான் ஷெல் விழுந்ததும், மூவரும் பதறி அடித்து வெளியே ஓடிவந்ததும் நினைவுக்கு வந்தது.

துடித்தவளாகத் தன் விழிகளைத் திறந்து,

“வான்மதி… புவன்… இருவரும் எங்கே…” என்று அவள் கலக்கத்துடன் கேட்க, உண்மையைச் சொன்னால் அவள் தாங்கமாட்டாள் என்பதைப் புரிந்துகொண்டவனாக, நெஞ்சைப் பிளந்து வெளியே வர முயன்ற தவிப்பை விழுங்க முயன்றவாறு,

“நான் ஒடி வந்த போது நீ மட்டும்தான் அங்கே இருந்தாய் அம்மணி… அவர்கள்… அவர்கள் இருவரையும் காணவில்லை…” என்று கூற, உடனே புரிந்துகொண்டாள் அம்மேதினி.

“பொய்… பொய்… நீங்கள் சொல்வதை நான் நம்பமாட்டேன்… நாங்கள் மூவரும் ஓடிவந்த போது, ஒருவரின் கரத்தை ஒருவர் பிடித்துக்கொண்டுதான் வந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் தப்பி ஓடும் அளவிற்கு யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. உண்மையைச் சொல்லுங்கள். வான்மதிக்கும் புவனுக்கும் என்ன நடந்தது…” என்று ஆவேசமாகக் கேட்டாள் அம்மேதினி.

“அம்மேதினி… ப்ளீஸ்… நீ நினைப்பதுபோல் எதுவுமே இல்லை… உண்மையாக அவர்கள்… அந்த இடத்தில்…” என்று அவன் முடிக்கவில்லை, அம்மேதினி பாய்ந்து அவனுடைய உள் பெனியனைப் பிடித்தாள்.

“உண்மையைச் சொல்லுங்கள்… வான்மதிக்கும், அவள் அண்ணனுக்கும் என்ன நடந்துவிட்டது… கடவுளே… சொல்லுங்கள்…” என்று பதறியவாறு அம்மேதினி கேட்க, அதற்கு மேல் அவனால் மறைக்க முடியவில்லை. பெரும் வலியுடன் அவளை ஏறிட்டவன், அவளுடைய கரத்தைத் தன் கரங்களில் ஏந்தி அழுத்திக் கொடுத்தவாறு எதையோ சொல்ல முயன்றான். ஆனாலும் வார்த்தைகள் வராது தடுமாறின.

உண்மையைச் சொன்னால் துடிப்பாள். தவிப்பாள்… வேதனையுடன், உதடுகளை அழுந்த மூடி நின்றவன், பின் அவளை நிமிர்ந்து பார்த்து,

“உன்னைத் திடப்படுத்திக்கொள் அம்மேதினி… அவர்கள்… அவர்கள் அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டார்கள்…” என்று அவன் முடிப்பதற்குள் அம்மேதினி பேரதிர்ச்சியுடன் கந்தழிதரனைப் பார்த்தாள்.

“ஓ…” என்று திணறியவளுக்கு ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. தன்னை மறந்து மார்பை அழுத்தியவளுக்கு அதை எப்படி எடுத்துக்கொள்வது என்றுகூடப் புரியவில்லை. அவளுக்கு இந்தச் செய்தியைத் தாங்கவே முடியவில்லை.

கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை என்னுடன் சிரித்துச் சிரித்துப் பேசிய வான்மதியா இறந்துவிட்டாள்… தன் காதலைக் கூறிக் கொஞ்ச விநாடிகள் கூட ஆகவில்லையே. அதற்குள் போய்விட்டானா புவன்? இவ்வளவுதானா வாழ்க்கை… ஒரு நொடிதானா மனிதனின் ஆயுள் கரைவதற்கான நேரம்… ஏன் இப்படி… எதற்காக இப்படி நடந்தது. யாருடைய குற்றம். உயிர் இழப்பு என்பது அத்தனை சர்வசாதாரணமா? யாருக்குக் காட்ட இத்தனை வெறித்தாண்டவம்? ஐயோ… கடைசி நிமிடம் வரை என் அருகிலேயே நின்றார்களே.. அவர்கள் இறந்தது கூட எனக்குத் தெரியாமல்… இது என்ன கொடுமை…” என்று மூச்செடுக்க மறந்து நின்றிருந்தவளின் தோள்களில் தன் கரங்களைப் பதித்த கந்தழிதரன், அவளை நோக்கிக் குனிந்து அவளைச் சமாதானப் படுத்தவேண்டி,

“அம்மணி… இங்கே பார்… அவர்களுடைய விதி… அவ்வளவுதான்…! போய்விட்டார்கள்… இதற்காக இப்படிக் கலங்கலாமா…?” என்று அவளைத் தேற்ற முயல, இவளோ கண்களிலிருந்து கண்ணீர் பொழபொழ என்று கொட்ட,

“க… கந்து… அவர்களுடன் தானே நானும் வந்தேன்… நான் மட்டும் எப்படித் தப்பினேன்… அவர்களுடனேயே நான் போய் இருக்கவேண்டியதுதானே… அவர்களை நான்தான் அந்த உணவுச்சாலைக்குள் அழைத்துச் சென்றேன்… அவர்களை நான்தான் வெளியே இழுத்துக்கொண்டு வந்தேன்… அவர்களை நான்தான் கொன்றுவிட்டேன். என்னால்தான் அவர்கள் இறந்தார்கள். அவர்களை அங்கேயே விட்டிருந்தால் தப்பியிருப்பார்கள்… நான்தான் கொன்றுவிட்டேன்…” என்று வெறிபிடித்தவள் போல அழ, அதைப் பார்க்கும் சக்தியற்றவனாக இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் கந்தழிதரன்.

“ஷ்… ஷ்… கண்ணம்மா… போதும்… அம்மணி… இதோ பார்…. அவர்களின் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை புரிந்ததா.. நீ வெளியே அவர்களை அழைத்து வரவில்லையென்றாலும், நீங்கள் உள்ளே நிற்கும்போது அந்தக் கட்டடத்தின் மீது குண்டு விழுந்திருக்கும்… அவர்களின் விதி அவ்வளவுதான். அதைப் புரிந்துகொள்… இதோ பார்.. அழுது கரைவதற்கோ இரக்கப்பட்டுத் துடிப்பதற்கோ இது நேரமல்ல….” என்றவன் மேலும் அவளை இறுக அணைத்துக் கொள்ள அவளுக்கும் அவனுடைய அணைப்பு வேண்டித்தான் இருந்ததோ? அவனுடைய பரந்த மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கதறத் தொடங்கிவிட்டாள்.

அவளால் அந்த நிஜத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. எல்லாமே மாயை என்பதுபோல அல்லவா நடந்து விட்டது. இந்த நொடி உண்மை என்று நம்பி இருக்கையில், அல்ல என்று காட்டிவிட்டதே இரக்கமற்ற விதி… கடவுளே… அவள் வாழ்நாளில் இத்தகய பயங்கரச் சம்பவத்தை மறப்பாளா? மறக்கத்தான் முடியுமா? துடித்துப்போக, அவள் கலங்குவதைப் பார்க்கப் பிடிக்காதவனாக, அவள் முதுகை வருடிக் கொடுத்து,

“இப்படித் துடிக்கிறாயே கண்ணம்மா… நான் என்ன செய்யட்டும்…” என்று கலங்கியவன், அவளைத் தன்னிடமிருந்து விலக்கி முகத்தை இரு உள்ளங்கைகளாலும் பற்றித் தூக்கினான். வெளிறியிருந்த முகம்… அழுததால் சிவந்துபோன நாசி, வேதனையில் துடித்த உதடுகள்… குற்ற உணர்ச்சியாலும் நடந்த சம்பவத்தை எண்ணிக் கலங்கியதாலும் நடுங்கிய உடல் என்று எதுவுமே அவன் கண்களுக்குத் தப்பவில்லை. அவனுக்குள் ஏதோ ஒரு அவஸ்தை. தவிப்பு. வலி. இவளை ஒரு போதும் கலங்க விடக்கூடாது என்கிற வேகம் அவனைத் துடிக்கச் செய்ய, மீண்டும் அவளைத் தன்னோடு அணைத்தவாறு,

“இட்ஸ் ஓக்கேடா… இட்ஸ் ஓக்கே… என்னுடைய பேபிகேர்ள் இப்படிக் கலங்கலாமா… ம்…” என்று சமாதானப் படுத்த முயன்றாலும் இவனுடைய விழிகளில் வந்த கண்ணீர் அவள் தலையில் பட்டுத் தெறித்ததை யாராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரம் இவர்களைத் தேடி இராணுவம் வர, அதைக் கண்ட வானூர்தி வந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் தொலைவிலிருந்து சுட்டுக்கொண்டிருந்த விடுதலைப் போராளிகளைத் தேடிப் போகத் தொடங்க இராணுவம் அந்த அடர் மரங்கள் கொண்ட காட்டுக்குள் நுழையத் தொடங்கியது.

கந்தழிதரனோ, அதிக நேரம் இந்தப் பாதுகாப்பு இருக்காது என்பதைப் புரிந்துகொண்டவனாக, மார்பில் கிடந்தவளை மெதுவாக விலக்கி, அவள் கன்னத்தை இரு உள்ளங்கரங்களாலும் பற்றித் தூக்கி,

“அம்மணி… இதோ பார்… இப்போது நாம் கலங்கும் நிலையில் இல்லை… மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கலங்கும் நிலையிலிருக்கிறோம். எப்படியாவது இங்கிருந்து தப்பவேண்டும்… எந்த நேரமும் நம்மைத் தேடி இராணுவம் வந்து விடும்… அதற்கிடையில் பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்துவிடவேண்டும்” என்றவனுக்குக் காலிலிருந்து வந்த வலியில் உயிர் போனது. பல்லைக் கடித்துக்கொண்டு எழ, அப்போதுதான் அவன் அணிந்திருந்த வெள்ளை உள் பெனியனையும் மீறி வெளியே பரவிக்கிடந்த இரத்தத்தைக் கண்டாள் அம்மேதினி. அதைக் கண்டதும் துடித்துப்போனாள்.

“ஐயோ கந்து… இரத்தம்…” என்று பதறியவளாகக் காயத்தைத் தொட முயல, அவசரமாக அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன்,

“அது ஒன்றுமில்லை… சின்னக் காயம்தான்… விடு… இதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நாம் இங்கிருந்து தப்புவதற்கான வேலையைப் பார்க்கவேண்டும்… எழுந்திரு” என்று ஆழ மூச்செடுத்து அசுவாசப் படுத்தியவாறு எழுந்தவன் நிற்க முடியாதவனாக மரத்தில் சாய்ந்து கொண்டு தடுமாறிய உடலை நிலைப்படுத்த முயன்றான்.

அப்போது, எங்கோ சருகுகள் மிதிபடும் ஓசைகள் கேட்டது. பதற்றத்துடன் குனிந்து அம்மேதினியைப் பார்த்தான். அவளும் பதறியவாறு எழுந்து நிற்கத் தலைப்படக் கால்களோ அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் சரிந்தன. படு பயங்கரமாக நடுங்கின. சற்று முன் நடந்த அவலத்தின் பிரதிபலிப்பு அது.

அதைப் புரிந்துகொண்டவனாகத் தாங்கிக்கொண்டவன்,

“ஈசி… ஈசி…” என்றவன் பதட்டத்துடன் காதுகளை உன்னிப்பாக்கியவாறு ஓசையைக் கேட்க முயன்றான். அப்போதிருந்த நிலையில் காதுகள் அடைத்தன. எரிச்சல் கொண்டவனாகக் காதடியைக் கரத்தால் தட்டிவிட்டு மீண்டும் உன்னிப்பாகக் கேட்டான். சந்தேகமேயில்லை. சருகுகள் மிதிபடும் ஓசைதான். அதுவும் நான்கு திசைகளிலிருந்தும் வருவது தெரிய, விறைத்துப்போனான் கந்தழிதரன்.

அப்படியானால் இராணுவம் இவர்களைச் சுற்றி வளைத்து விட்டதா… எப்படித் தப்பப் போகிறார்கள்… எப்படித் தப்பப் போகிறார்கள்… தப்புவதற்குக் காலமும் நேரமும் கைகொடுக்குமா? செய்வதறியாது சிலையென நின்றான் அந்த ஆண்மகன்.

What’s your Reaction?
+1
15
+1
1
+1
0
+1
0
+1
12
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!