Fri. Nov 15th, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 10/11

(10)

அன்று மதியம் விதற்பரையின் பாடம் முடிந்ததும், பசி வயிற்றைக் கிள்ள, போகும் வழியில் எதையாவது வாங்கலாம் என்று முடிவு செய்தவளாக வெளியே வந்தபோது தன் பற்களைக் காட்டியவாறு நின்றிருந்தான் நகுலன். ஏனோ வயிற்றைக் கலக்க, அவனைக் கண்டும் காணாதவளுமாக செல்லத் தொடங்கியவளை இடை மறித்தான் அவன்.

“என்ன என்னைக் கண்டதும் பயந்து ஓடுகிறாயா…” என்றவாறு அவளுக்குப் பின்னால் நெருக்கமாக வர, இவளுக்கு உடலில் மெல்லிய நடுக்கம் தோன்றியது. ஆனாலும் காது கேட்டும் கேளாதவளுமாகத் தன் வேகத்தைக் கூட்ட, மேலும் அவளை நெருங்கியவாறு,

“என்ன அவசரம் பேபி… கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போகலாமே…” அவளுடைய காதுகளுக்கு மிக அருகே வந்து கூறப் பதறி இரண்டடி விலகி நின்று அவனைப் பார்த்து முறைத்தாள்.

பின், கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக அவனை விட்டு வெளியே வந்தபோது, வாசலில் இவளுக்காகக் காத்திருந்தான் அவ்வியக்தன்.

அவனைக் கண்டதும் பெரும் நிம்மதி எழ, வேகமாக அவனை நோக்கிச் சென்றவாறு திரும்பிப் பார்த்தாள். நகுலனைக் காணவில்லை. இவள் அவ்வியக்தனின் வாகனம் நோக்கிப் போவதைக் கண்டதும், தன் பாதையை மாற்றிச் சென்றிருப்பான். பெரும் நிம்மதியுடன் திரும்பியவளை ஆச்சரியமாகப் பார்த்த அவ்வியக்தன்,

“ஹலோ…. என்னாகிவிட்டது… ஏன் முகம் வெளிறியிருக்கிறது… ஏதும் பிரச்சனையா?” என்றான் அக்கறையாய். அவசரமாகத் தன் முகப் பாவத்தை மாற்றியவள், புன்னகையைத் தேக்கி.

“இ… இல்லை… ஒன்றுமில்லை” என்று கூறிச் சமாளித்தாலும், அவ்வியக்தனின் விழிகள் யோசனையாகச் சுத்திவரை பார்த்தன. சந்தேகப்படும் படி எதுவும் இல்லை. ஆனாலும் சமாதானம் ஆகாதவனாக,

“அப்படியானால் ஏன் உன் முகம் வியர்த்திருக்கிறது. வெளிறியிருக்கிறது?” என்றான் சந்தேகமாக.

“கால் நோகிறது… அதை விடுங்கள்… எதற்காக வந்தீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள்… நான்தான் என் பாட்டில் போவேன் என்று சொன்னேனே பிறகு ஏன்…” என்று கண்டிப்புடன் கேட்க, அவனோ அவளுக்கான கதவைத் திறந்து வைத்தவாறு,

“இன்று என் வேலையும் சீக்கிரம் முடிந்து விட்டது. போகும் வழிதானே என்று வந்தேன்… சரி ஏறு… போகும்போது சாப்பிட்டுவிட்டே போகலாம்…” என்று கூற மறுக்காது ஊன்றுகோலையும் பையையும் கழற்றிப் பின்னால் எறிந்துவிட்டு, அவ்வியக்தனின் உதவியில்லாமலே ஏறி அமர்ந்ததும் அவள் சரியாக அமர்ந்துவிட்டாள் என்பதை உறுதிப்படுத்திவிட்டு வண்டியை எடுத்தவாறு இவளைத் திரும்பிப் பார்த்து,

“பரிசு பிடித்திருந்ததா?” என்றான் மென்மையாக. உடனே முகம் மலரக் குதுகலத்துடன்,

“மிக மிகப் பிடித்திருந்தது தெரியுமா. அதுவும் அந்தப் பூனைக் குட்டி… அத்தனை அழகு…” என்றாள் மகிழ்ச்சியில் விழிகளை விரித்து.

“ஐ ஆம் கிலாட்…” என்றவன், “அந்தப் பூனைக் குட்டியைப் பார்த்தபோது நீதான் நினைவுக்கு வந்தாய்… அதனால் அதையே வாங்கினேன்…” என்று கூற, இவளோ மெல்லிய வெட்கத்துடன் தலை சாய்த்து,

“நன்றி…” என்றாள்.

இதோ ஒரு கிழமை கடந்து விட்டது. இத்தனை நாட்களும் அவ்வியக்தன் காலையில் இவளை அழைத்துச் சென்று பல்கலைக் கழகத்தில் விட்டுவிட்டு மாலையில் தவறாமல் மீண்டும் வீட்டிற்குப் பத்திரமாக அழைத்த வந்து விட்டு செல்வான். அந்த நேரம் மறக்காமல் அவளுக்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் தவறமாட்டான்.

இருவரும் ஒன்றாக இருக்கும் அந்த நேரம் இருவருக்குமே மிகச் சுவாரசியமாகத்தான் கடந்தது.

இரண்டு நாட்களில் தவணை முடிவு என்பதாலும் வருட முடிவு என்பதாலும், பல்கலைக் கழக மாணவர்களால் விழா வைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

போன வருடம் அந்த விழாவுக்கு விதற்பரையால் போக முடியவில்லை. இந்த வருடம் எப்படியாவது வருவதாக அவள் நண்பர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தாள். அதனால் அன்று எல்லோருமாகக் கடைக்குப் போய் விழாவுக்கு வேண்டிய பொருட்களை வாங்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள்.

அன்று எப்போதும் போல விக்டர் அனைவரையும் அழைத்துச் செல்ல முன் வந்தான்.

விக்டர் அவர்களின் வகுப்பில் வாகனம் வைத்திருப்பவன் என்பதால், யாருக்கு ஏதாவது தேவையென்றால் மறுக்காமல் அழைத்து செல்வான். அதனால் அனைவருக்கும் அவனை மிகப் பிடிக்கும். எல்லோரும் விக்டரோடு குதுகலத்துடன் போகத் தயாராக விதற்பரை மட்டும் தயங்கி நின்றாள்.

அவளை அழைத்துச் செல்ல அவ்வியக்தன் வருவானே. நண்பர்களோடு போனால் சுவாரசியமாக, குதுகலமாகத்தான் இருக்கும். ஆனால் அவ்வியக்தனோடு போகும்போது ஏற்படும் அந்தப் புரியாத இனம் தெரியாத சுகம் வராதே. எதை இழந்தாலும் அதை இழக்க முடியும் போலத் தோன்றவில்லை விதற்பரைக்கு. ஏனோ அவனுடைய அருகாமை சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அளவு முக்கியமாகிப் போனது .

அவளை வருமாறு வற்புறுத்திய நண்பர்களிடம் இதமாகவே மறுத்துவிட்டு வெளியே வந்தவளை ஏமாற்றாமல் அவளுக்காய்க் காத்திருந்தான் அவ்வியக்தன்.

எப்போதும் போல அவனைக் கண்டதும் நண்பர்கள் தொலைந்துபோகத் தேவை மறைந்துபோக முகம் பளிச்சிட்டு மலர, மகிழ்ச்சியாகவே அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் விதற்பரை.

அவ்வியக்தனும் அவளை அழைத்துச் செல்வதைப் பெரும் வரமாகவே நினைத்தான். அவளோடு தங்கும் ஒவ்வோர் மணித் துளிகளும் அவனுக்குச் சொர்க்கமாகவே இருந்தது. அவளோடு பேசும்போது அவனுடைய உலகம் வேறாயிற்று.

பேச்சு வாக்கிலேயே அவளுக்குப் பிடித்தவை பிடிக்காதவை, போக ஆசைப்படுபவை என்று கேட்டறிந்தான். கூடவே தனக்குப் பிடித்தவை பிடிக்காதவை என்று தன் ரசனையைப் பகிர்ந்து கொண்டான். அதுவும் விதற்பரை கூறியதை மிக ஆர்வமாகவே செவிமடுத்தான்.

“எனக்குக் குளிர் காலம் என்றால் மிக மிகப் பிடிக்கும். அதுவும் பனி கொட்டும்போது, எத்தனை அழகாக இருக்கும் தெரியுமா? எனக்கு ஸ்கேட்டிங் செய்ய ஆசை… ஆனால் தெரியாது. பழக வேண்டும் என்று ஆர்வம் உண்டு. அப்புறம் இங்கே ஒட்டாவாவில் நடக்கும் வின்டர் லூட் திருவிழாவிற்குப் போகவேண்டும் என்று ஆசை இருக்கிறது. சென்ற வருடம் போவதாக இருந்தேன். வாய்ப்புக் கிடைக்கவில்லை. குறைந்தது இந்த வருடமானது போய் வந்துவிடவேண்டும்…” என்று தன் சின்னச் சின்ன ஆசைகளைச் சொல்ல அதைக் கேட்டு நகைத்தான்.

“உன் கால் நலமாகட்டும்… ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன்…” என்று உறுதியாகக் கூற, முகம் மலர்ந்தவள்,

“உண்மையாகவா… ஆனால் எனக்கான செலவை நான்தான் செய்வேன்… அதற்குச் சம்மதம் என்றால் உங்களோடு வருகிறேன்… இல்லையென்றால்… ம்கூம்…” என்று தலையைப் பலமாக ஆட்டி மறுக்க, அதைப் பார்த்து ரசித்துச் சிரித்தான்.

“டன்… குண்டுமணி அளவு செலவழித்தாலும் அதற்கான பணத்தை உன்னிடமிருந்து வசூலித்து விடுவேன் சரியா…” என்று கூறி அவள் சம்மதத்தைப் பெற்றபின் சற்று நேரம் அது பற்றிப் பேச்சுப் பயணித்தது.

அவள் கடைக்குப் போக ஆசைப்பட்டு அழைத்துச் சென்றாலும் கூட அவள் வாங்கும் அழகை ரசிப்பானே தவிர அவள் என்ன வாங்குகிறாள் என்பதில் எல்லாம் தலையிட மாட்டான். இவளாக வந்து இது நன்றாக இருக்கிறதா இது எப்படியிருக்கிறது என்று கேட்டால் மட்டும் ரசனையோடு தன் கருத்தைச் சொல்வான். விழிகள் மட்டும் ஒரு அங்குலம்தன்னும் விலகாமல் அவள் பின்னாலேயே பயணித்துக்கொண்டிருக்கும்

இப்படியே நாட்கள் மிக அழகாக நகர்ந்தன. விதற்பரைக்கும் அவ்வியக்தனோடு பழகிய நாட்கள் புதுமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தன. சொல்லப்போனால் இருபத்து நான்கு மணி நேரமும் அவனோடு ஒன்றாக இருக்கவேண்டும் என்றாலும் அவள் தயார்தான்.

அவனோடு பழகப் பழக மாசு அறும் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவன் மீதிருந்த குற்றங்கள் குறைகள் சுத்தமாகத் துடைத்து எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவனுடைய வரவை மறுத்தவள், பின் ஆவலாகவே எதிர்பார்க்க தொடங்கினாள்.

அவ்வியக்தன் என்னும் உயிர் விந்து மெல்ல மெல்ல அவள் உள்ளத்திற்குள் சிக்கி முக்காமல் நுழைந்து இதயம் என்னும் கருவறைக்குள் குடியேறிக் காதல் என்னும் கருவை உருவாக்கத் தொடங்கி, அக் கரு மெல்ல மெல்ல உருப்பெற்று வளரத் தொடங்கியது.

காதல் வந்ததால், எதிராளியின் எதிர்மறை செயல்கள் கூட ஓட்டைவிழுந்த காற்றாடியாக எங்கோ இழுபட்டுச் சென்று சிக்கிக் கொள்ளும் போல. நேர்மறை செயல்கள் மட்டும் மசுமரத்தாணியாய் மனசில் பதிந்து போனது.

இந்நிலையில், விதற்பரை அவனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க முயன்றாள். அவனும் முடிந்த வரை அவளுடைய தமிழையும் நாசமாக்கி திட்டும் வாங்கினான்.

எது எப்படியோ தமிழை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளவும், ‘இங்கே வா… அங்கே போ… சாப்பித்தியா… டூங்கினாயா… சுகமாய் இருக்கிதாயா…’ என்று கேட்கும் அளவுக்குத் தேறினான்.

அன்றுதான் விதற்பரையின் கால்கட்டை அவிழ்க்கும் நாள். அவ்வியக்தன்தான் அவளை அழைத்து வந்திருந்தான். அத்தனை பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு, கால்கட்டைப் பிரித்துப் பரிசோதித்துவிட்டு, எல்லாம் நன்றாகிவிட்டது, முடிந்த வரை காலுக்குப் பயிற்சி கொடுங்கள் என்கிற.. அறிவுறுத்தலோடு வைத்தியர் அவர்களைச் செல்ல அனுமதிக்க. விதற்பரைக்கு ஏதோ சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சி. கால் பாத மூட்டருகே ஒரு வித இறுக்கம் இருந்ததன்றி, வேறு எந்த வலியும் இருக்கவில்லை.

அப்பாடா இனி அந்த ஊன்றுகோலைப் போட்டுக்கொண்டு நொண்டி நொண்டி நடக்கத் தேவையில்லை. அந்தக் கணமே துள்ளிக் குதிக்கவேண்டும் என்று தோன்றியது.

நன்றியோடு, அவளைக் கவனமாக அழைத்து வந்துகொண்டிருந்த அவ்வியக்தனைப் பார்த்தவள்,

“நன்றி அயன்… நீங்கள் மட்டும் இல்லை என்றால் சிரமப்பட்டிருப்பேன்?” என்றவாறு மருத்துவ வளாகத்துப் பாதையில் கவனமில்லாமல் ஓடு பாதையில் காலை வைக்க முயன்ற அந்த நேரம், ஒரு வாகனம் அவள் பக்கமாக வர, பதறிய அவ்வியக்தன், மின்னல் நொடியில் அவளைப் பற்றி இழுத்துத் தன் மீது பொட்டுக் கொள்ள, அவன் மார்பில் விழுந்த விதற்பரைக்கு, அவன் உடல் கொடுத்த செய்தியில் உலகமே மறந்து போனது.

அந்தப் பரந்து விரிந்த தேக்கு மார்பில் மலரென ஒட்டியிருந்த தன் முகத்தை, அங்கிருந்து பிரித்தெடுக்க முடியாதவளாக நெற்றி முட்டிக் கிடந்தவளுக்கு உள்ளே பெரும் பேராளியின் முழக்கம்.

அந்தக் கணமே, அவன் கூடவே பிரியாது வாழ்ந்துவிடவேண்டும் என்கிற தவிப்பும் பேராவலும் எழ, அந்தத் தவிப்பு அவனுக்கு ஏற்பட்டது போலவே தெரியவில்லை. மாறாக அவளை அணைத்துப் பிடித்திருந்தவன்,

“யு ஓக்கே…” என்றான்.

அது இவள் காதுகளுக்குக் கேட்டால் அல்லவோ. அப்படியே விழிகள் மூடிக் கிடக்க, அவள் பயந்துவிட்டாள் போலும் என்று எண்ணியவன், மேலும் அவளை இறுக அணைத்தவாறு, இடது கரத்தைத் தூக்கி அவள் தலையை வருடிக்கொடுத்து,

“ஒன்றுமில்லை… அதுதான் உன்னை இழுத்துப் பிடித்துவிட்டேனே. பிறகு என்ன?” என்று சமாதானப் படுத்த அவனுடைய அணைப்பு கொடுத்த தித்திப்பிலும் பாதுகாப்பிலும் மொத்தமாய்த் தொலைந்து போனாள் விதற்பரை.

சற்று நேரம் அப்படியே கிடந்தவளுக்கு மெல்ல மெல்ல உணர்வு வர முதலில் தெரிந்தது கதகதப்பான அந்தச் சூடுதான். கூடவே அவனுக்குரிய அந்தப் பிரத்தியேக வாசனை. இரண்டும் சேர்ந்து அவனுக்குள் புதைந்துவிட மாட்டோமா என்கிற ஒரு வெறியைக் கொடுத்தது மட்டும் நிஜம். அவனிடமிருந்து விலக வேண்டுமா? ஏன் விலக வேண்டும் தவிப்புடன் அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்து,

“பார்த்து நடக்க மாட்டாயா? கொஞ்சம் தவறியிருந்தாலும் என்ன ஆகியிருக்கும்?” என்று கடிந்து விட்டு அவளுடைய கரத்தைப் பற்றியவாறு தெருவைக் கடக்க முயல, இவளோ அவனைச் சங்கடத்துடன் பார்த்துவிட்டு,

“என்ன ஆகியிருக்கும்… இன்னும் ஒரு மாதம் என்னோடு லோ லோ என்று வீட்டுக்கும் பல்கலைக் கழகத்திற்குமாக அலைந்திருப்பீர்கள்…” என்றாள் கிண்டலாய்.

அதைக் கேட்டவனுடைய உதடுகள் புன்னகையில் விரிய,

“அது சரி… என்னை அவுஸ்திரேலியா போகவிடும் எண்ணம் உனக்குச் சுத்தமாக இல்லையா என்ன?” என்றவாறு அவளை அழைத்து வந்தவன், வாகனத்தை நெருங்கிய பின்தான் அவளுடைய கரத்தையே விட்டான்.

“அட நான் அதை மறந்து விட்டேனே… எப்போது அவுஸ்திரேலியா போகிறீர்கள்… சீக்கிரம் போகவேண்டும் என்றீர்களே” என்று கேட்டவாறு வண்டியில் ஏறி அமர்ந்து இருக்கைப் பட்டியை அணிய. அவனும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, வாகனத்தை உயிர்ப்பித்தவாறு,

“ஆமாம்… இனி கிளம்ப வேண்டியதுதான். உன் கால் கட்டை அவிழ்க்கும் வரைக்கும் பயணத்தைத் தள்ளிப்போட்டேன். இப்போதுதான் சரியாகிவிட்டதே… இனி கிளம்ப வேண்டியதுதான்… நீ சமாளித்து கொள்வாய் தானே…” என்று இதமாகக் கேட்க ஏனோ அதைக் கேட்டதும் இவளுடைய முகம் வாடி வதங்கிப் போயிற்று.

அவன் கூறுவதைப் பார்த்தால் இவளை விட்டுப் போவதொன்றும் பெரிய வருத்தம் கொடுக்கும் செயல் போலத் தெரியவில்லையே. மிக மகிழ்ச்சியாக அல்லவா சொல்கிறான். அப்படியானால் அவனுடைய பிரிவு இவளுக்குத்தான் அவஸ்தையைக் கொடுக்கிறதா? நெஞ்சில் பெரும் பாரம் வந்து உட்கார்ந்து கொண்டது.

ஐயோ… இவன் சென்றால் இனி பார்க்க முடியாதோ. எப்போது திரும்பி வருவான்? வருவானா மாட்டானா? தவித்தவளாய்,

“போனால் எப்போது திரும்பி வருவீர்கள்…?” என்றாள் ஏக்கமாய். அவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“தெரியவில்லை… இங்கே நான் செய்ய வேண்டியவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து விட்டன. அதனால் திரும்பி வரவேண்டிய வாய்ப்புகள் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்…” என்றதும் இவளுடைய உள்ளமும் முகமும் ஒன்றாய்க் கூம்பிப் போயின.

“ஓ…” என்றாள் சுரத்தில்லாமல். இவனோ அந்த ஓவில் கவரப்பட்டவனாய் திரும்பிப் பார்த்துவிட்டு,

“என்ன.. நான் போவது உனக்குப் பிடிக்கவில்லையா என்ன?” என்றான் வியப்புடன். அவளோ, அசடு வழிந்தவளாய், தன் முகபாவத்தை மாற்றி,

“யார் சொன்னார்கள்… பிடிக்காமல் போக என்ன இருக்கிறது? அதெல்லாம் இல்லை… என்ன நீங்கள் இல்லாமல் கொஞ்சம் சலிப்பாக இருக்கும்…” என்று சொன்னாலும், குரலிலிருந்த இறுக்கத்தை அவன் கண்டுகொண்டானோ,

“அப்படியானால் இங்கேயே தங்கிவிடவா?” என்றான் புன்னகையுடன். பளிச்சென்று முகம் மலர,

“நிஜமாகவா…” என்று குதுகலித்தவளைக் கண்டு, தலையைப் பின்னால் சரித்து வாய் விட்டுச் சிரித்தவன், பின் இவளைப் பார்த்து,

“ஒன்றைச் சொன்னால் நம்பிவிடுவாயா என்ன? அங்கேயும் எனக்குத் தொழில் இருக்கிறதே… அதை யார் பார்த்துக் கொள்வார்களாம்” என்றான் கிண்டலாய். இவளோ உதடுகளைச் சுழித்துவிட்டு,

“அங்கே இருக்கிற தொழிலைப் பற்றி யோசிக்கிறீர்களே, இங்கே தொடங்கும் தொழிலை யார் அக்கறையாகப் பார்ப்பார்களாம்” என்றாள் எரிச்சலுடன்.

ஒரு முறை இவளைப் பார்த்துவிட்டு மீண்டும் தெருவில் கவனமானவனாய்,

“ம்… நீ நல்ல பெறுபேறுகளுடன் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வா, உன்னிடம் இதை முழுதாக ஒப்படைத்து விட்டு நான் அங்கே என் தொழிலைக் கவனிக்கிறேன்…” என்று கூற இவளுடைய விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்தன.

“நிஜமாகவா சொல்கிறீர்கள்?” என்று வாய் பிளக்க, இவனோ,

“நான் நடக்காததைச் சொல்வதில்லை விதற்பரை… தவிர இதில் வியக்க என்ன இருக்கிறது? நீ கற்கும் கல்வி நிச்சயமாக என் தொழிலுக்கு உதவி செய்யும். உன்னால் திறமையாகவே இந்த நிறுவனத்தை வழி நடத்த முடியும். ஆரம்பக் காலத்திற்குக் கொஞ்சம் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கும். அதன் பின் நீயாகவே கற்றுக் கொள்வாய்…” என்று கூறியவன், தொழில் பற்றிய விளக்கங்களை அவளுக்குக் கூறியவாறே அவளைக் கட்டடத்தின் அருகே இறக்கிவிட்டு,

“ஓக்கேமா… நான் புறப்படுகிறேன்… பத்திரமாக உள்ளே போ…” என்று விட்டு அவன் விடைபெற, இவளோ அவனுடைய வண்டி சென்று மறையும் வரைக்கும் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தவள்.

வீட்டிற்குள் வந்து கதவைப் பூட்டும் வரைக்கும் மனம் முழுவதும் அவ்வியக்தனே குடியேறியிருந்தான்.

மீண்டும் மீண்டும், அவளை அவன் அணைத்து நின்ற நொடி மனதில் ஆழமாய்ப் பதிந்து போக உள்ளம் உருகிக் குழைந்து போக விழிகளை மூடி ஒரு கணம் நின்றாள்.

“உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்” என்று பாடியவள், பின் தன் தலையை மறுப்பாக ஆட்டி, ம்கூம்,

“உன்னோடு வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

உன் மார்பில் சாய்கையில்

என்னையே நான் மறக்கிறேன்

ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன்

உன்னோடு… உன்னோடு

உன்னோடு வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

என்று தன்னை மறந்து பாட, அந்தப் பாடலின் சுதி அங்கும் இங்கும் இழுபட்டுத் தப்பும் தவறுமாக வந்து விழுந்தாலும் கூட, அவளுக்கு அது இனிய சுதியை மீட்டும் பாடலாகவே தோன்றியதால் தன்னை மறந்து பாடலில் லயித்துப்போனாள் அந்தப் பேதை.

(11)

ஒரு வெள்ளைத் தாளில் கரிய கோடு இருக்கும்போது, அதற்குப் பக்கத்தில் பெரிய கோடு போடும்போது முன்னது சின்னதாகி விடுவது போல, அவ்வியக்தன் மீதான தவறான எண்ணங்கள் யாவும் அவன் நடந்த கொண்ட முறையில் சின்னதாகிப் புள்ளிகளாகிக் காணாமலே போய்விட்டிருந்தன. எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய்யுரைக்காது உண்மையை மட்டும் பேசும் அவனுடைய நேர்மை விதற்பரையைப் பெரிதும் கவர்ந்தது.

ஏனோ அவன் அருகிலிருந்தால் புத்தி, வேறு எதையும் சிந்திக்க மறுத்தது. ஒரு வேளை காதல் வந்தால் அது புத்தியை மழுங்கடித்து விடுமோ? தெரியவில்லை. ஆனால் எப்போதும் அவன் கூடவே இருக்கவேண்டும் என்கிற ஏக்கம் பூதாகரமாக அவளைத் தாக்க, எது சரி, எது தவறு என்று யோசிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. இரவு முழுவதும் அவன் நினைவில் மயங்கியவளாய்த் தன்னைத் தொலைத்தவளாய் நீண்ட நேரம் விழித்திருந்தவள், மறுநாள் அவனைக் காணும் ஆவலோடு விடிவதற்காய் காத்திருந்தாள்.

மறுநாள் காலை விடிய முதலே பரபரப்புடன் எழுந்தவள், என்றுமில்லாத் திருநாளாய்த் தன்னை அலங்காரம் செய்து கண்ணாடியைப் பார்த்தாள். சற்று முகத்திற்குப் பூச்சுப் போட்டு, மெல்லியதாய் எடுத்துக் காட்டும் வகையில் உதட்டுச்சாயமிட்டுக் கண்களுக்கு மையிட்டுக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு அவளையும் மீறி வெட்கம் பிறந்தது.

ஒரு போதும் இப்படி அலங்காரம் செய்ததில்லை… அன்று அவனுக்காகச் செய்தது ஒரு மாதிரி மனதைத் தவிக்க வைத்தது. கூடவே அந்த முகம் தன்னதல்ல என்கிற ஒரு வித ஒவ்வாமையும் ஏற்படுத்த ஏதோ திருமணத்திற்கு அலங்காரம் செய்ததுபோலத் தோன்ற, அவசரமாக அவற்றைக் கலைக்கப் போனாள். ஆனாலும் கரம் தயங்கி நின்றது. முன்னை விடப் பரவையில்லாமல்தானே இருக்கிறது என்று தன்னுடனே விவாதித்தவள், அப்படியே இருக்கட்டும் என்றுவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.

ஐயையோ தாமதமாகிவிட்டதே… அவன் வெளியே காத்திருப்பானே… பதற்றம் தொற்றத் தனக்கு வேண்டியவற்றைச் சேகரித்து கொண்டு, கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள். நல்லவேளை அவன் இன்னும் வந்திருக்கவில்லை. எப்போதும் அவள் வெளியே வரும்போது அவன் காத்திருப்பான். இன்று அவனைக் காணவில்லை. யோசனையுடன் பத்து நிமிடங்கள் காத்திருந்தவளுக்கு அவன் வராது போனது பெரும் யோசனையைக் கிளப்பியது.

எங்கே போனான். இன்று வரமாட்டேன் என்று எதுவும் அவன் கூறவில்லையே… குழப்பத்தோடு கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கிளம்பவேண்டிய நேரத்தைத் தாண்டிப் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தன.

ஏன் இன்னும் வரவில்லை? குழப்பத்தோடு, மேலும் பதினைந்து நிமிடங்கள் அவனுக்காகக் காத்திருந்தவள், இடையில் பல முறை அவனோடு தொடர்பு கொள்ள முயன்றாள். ம்கூம் அழைப்பு போகவில்லை.

அவனுக்கு என்னவாயிற்று? ஏன் கைப்பேசியும் எடுக்கவில்லை? எதையோ இழந்தது போன்ற உணர்வில், சோர்வுடன் நடந்து சென்று பேருந்தில் ஏறிப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றாள்.

அன்றைய பாடம் சுத்தமாகத் தலைக்குள் ஏறவில்லை. ஒரு பக்கம் பாடம் நடந்துகொண்டிருக்க மறு பக்கம் அவனை அழைத்து பார்த்துப் பார்த்துச் சோர்ந்து போனாள். அன்று முழு நாளும் அவனைப் பார்க்கவில்லை. அவனைப் பற்றிய எந்தச் செய்தியும் தெரியவில்லை. ஏனோ விதற்பரைக்குப் பைத்தியம் பிடிப்பதுபோலத் தோன்றியது.

அன்றைய நாள் முழுவதும் முள்ளின் மீது இருப்பது போன்ற உணர்வில் தவித்தவளுக்குச் சாப்பாடு கூடச் சுத்தமாகத் தொண்டைக்குள் இறங்கவில்லை.

மறு நாளும், அடுத்த நாளும் அவளை அழைத்துச் செல்ல அவ்வியக்தன் வரவில்லை. கூடவே அலைபேசியும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் உத்தியுக்தனை அழைத்துக் கேட்டுவிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனாலும் அவனை அழைக்க போய், ஏன் எதற்காகக் கேட்கிறாய் என்று கேட்டால் என்ன சொல்வது? அதனால் அந்தச் சிந்தனையையும் கைவிட்டவள் மறு நாள் எப்படியாவது அவன் தங்கும் விடுதியில் சென்று விசாரித்துவிடுவது என்கிற உறுதியோடு, படுக்கையில் விழுந்தவளுக்குத் தூக்கம் சுத்தமாய் வருவதாக இல்லை.

இரவு பத்து மணி கடந்த பின்னும், படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. அவனைப் பார்க்காத நாள் முழுவதும் பாலைவனத்தின் மத்தியில் கடும் வெய்யிலில் நடந்து களைத்துப்போனது போல உள்ளம் சோர்ந்து போனது.

எதற்காக அவன் வரவில்லை ஏன் கைப்பேசி எடுக்கவில்லை. ஏதாவது சிக்கலில் மாட்டியிருப்பானோ… எங்காவது விபத்து…?’ அதற்கு மேல் எதையும் கற்பனை செய்து பார்க்கும் சக்தியற்றவளாக விதிர் விதிர்த்து எழுந்தவளுக்கு வியர்வை ஆறாகாப் பெருகத் தொடங்கியது. இதயத்தின் வேகம் பல மடங்கு அதிகமானது போலத் துடித்தது. தொண்டை வறண்டு போக எழுந்தவள், சமையலறை வந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கப்போன போது கைப்பேசி அடித்தது.

இந்த நேரத்தில் அன்னையைத் தவிர யாரும் அவளை அழைக்க மாட்டார்கள். அவள் இருந்த மனநிலையில் தாயோடு பேச முடியும் போல இல்லை. ஆனால் பேசாமலும் இருக்க முடியாது. எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து அழைப்பார்கள்.

வேறு வழியில்லாமல் கைப்பேசி இருந்த இடத்தை நோக்கிச் சென்று அதன் மீன்னூட்டியைக் கழற்றிவிட்டு, எடுத்துப் பார்த்தாள் விதற்பரை. அது அன்னையில்லை. வேறு யாரோ. யாருடைய இலக்கம் அது என்று குழம்பியவளாக உயிர்ப்பித்து காதில் பொருத்தி,

“ஹலோ…” என்றாள்.

“ஹாய்… இன்னும் தூங்கவில்லையா?” என்கிற அழுத்தமான ஆழமான குரல் அவள் செவிப்பறையில் மோதி, புத்திக்குள் ஏற, முதலில் அதிர்ந்தவள், பின் மகிழ்ந்து துடித்துப் பதைத்து அங்கிருந்த சுவரிலேயே தொப்பென்று சாய்ந்து நின்றாள். தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. அவனைக் காணாத நாட்கள் எல்லாம் எப்படிப் பதைத்துப் போனாள். தன்னை மறந்து

“அயன்…” என்றாள் கம்மிய குரலில்.

“யெஸ்… இட்ஸ் மீ…” என்றான் அவனும். அவசரமாய்க் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

“இது என்ன புது இலக்கம்… இது கனடியன் இலக்கம் இல்லையே ஏன் கொஞ்ச நாட்களாக என்னை அழைத்துச் செல்ல வரவில்லை… உங்களுக்கு ஒன்றுமில்லை தானே…?” என்று கோபமும் குறையும் தவிப்புமாய்க் கேட்க, சற்று நேரம் அமைதி காத்தான் அவ்வியக்தன். அதற்குள் இரு முறை அவனை அழைத்துவிட்டாள் விதற்பரை.

“சாரி… அவசரமாக அவுஸ்திரேலியாவிற்கு வரவேண்டியதாகப் போயிற்று. வேலைப்பழுவால் உன் கூடப் பேச முடியவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது… அழைத்தேன்” எனக் கூற அதைக் கேட்டதும், இவளுடைய முகம் வாடி வதங்கிப் போயிற்று.

என்னது அவுஸ்திரேலியா சென்றுவிட்டானா… அதுவும் அவளிடம் சொல்லாமலே… அப்படியானால் இவனை இனி எப்போது பார்ப்பது? அங்கே போனால் வரமாட்டேன் என்று வேறு சொன்னானே. அப்படியானால் இனி அவனைப் பார்க்கவே முடியாதா? நெஞ்சம் தவித்தது.

“ஓ… எப்போது வருவீர்கள்…” என்றவளின் குரலில் வெளிப்படையாகவே ஏமாற்றம் தெரிந்தது.

“சொன்னேனே… இனி அங்கே வரவேண்டிய தேவை எனக்கு இருக்காது என்று. சரி அதை விடு, இப்போது என்ன செய்கிறாய்?” என்றான் ஆவலாய். தன் வருத்தத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்காது,

“ப… படித்துக் கொண்டிருக்கிறேன்…” என்றாள் வலியைத் தொண்டைக்குள் விழுங்கி.

“ஓக்கே விதற்பரை நான் போகவேண்டும்… நீ படி… பரீட்சையை நன்றாக எழுது… நேரம் கிடைக்கும் போது அழைக்கிறேன்… பாய்” என்று கைப்பேசியை வைக்க இவள் ஏமாற்றத்துடன் தன் பேசியை வெறித்தாள்.

எத்தனை சுலபமாக சொல்லிவிட்டான். ஆனால் இவனைப் பார்க்க முடியாது என்கிற எண்ணமே பாடாகப் படுத்துகிறதே. அவளையும் மீறிக் கண்ணீர் பொங்க அறைக்கு வந்தவள் கட்டிலில் குப்புற விழுந்து, விழிகளை மூடக் கண்ணீர் வழிந்து படுக்கையில் புகுந்து கொண்டது.

அதே நேரம், அவுஸ்திரேலியாவில் தன் வீட்டில் நீள் இருக்கையின் மீது காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அமர்ந்திருந்த அவ்வியக்தனுடைய ஒரு கரம் கைப்பேசியைச் சுழற்றி விளையாடிக் கொண்டிருக்க, விழிகளோ ஆடாது அசையாது எங்கோ வெறித்துக்கொண்டிருந்தன.

மனமோ எதையோ தவறவிட்டது போலப் பெரும் தவிப்பில் சதிராகிக்கொண்டிருந்தது. என்னவாகிவிட்டது எனக்கு, நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்… கனடாவில் விமானம் ஏறிய விநாடி முதல், இந்தக் கணம் வரை விதற்பரையின் நினைப்பாகவே இருக்கிறதே, ஏன்? முன் தினம் முக்கியக் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்தில் கூடக் கவனம் செலுத்த முடியாமல், காணும் இடங்கள் எல்லாம் அவள் அல்லவா நின்று தொலைக்கிறாள். அந்தக் கூட்டத்தை முழுமையாக முடித்துவிட்டு வெளியே வருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டதே. அதில் ஓரிடங்களில் அவன் குழப்பி அடித்து அதைச் சரிப்படுத்தி நிமிர்வதற்குள் வியர்த்துக் கொட்டிவிட்டது.

இத்தகைய உணர்வுகள் எல்லாம் அவனுக்குப் புதிது. என்று விதற்பரையைக் கண்டானோ அந்த நாள் ஆரம்பித்த தவிப்பு. இன்று வரை குறைந்த பாடில்லை. என்னவோ தெரியவில்லை அவள் அருகே நெருங்கினாலே இவனுக்குள் தீப்பற்றிக் கொள்கிறது. முதன் முறையாக மதுவின் ஆதிக்கமில்லாமல் அவளை உணர்ந்து நுகரவேண்டும், அவள் மடியில் தலைசாய்த்து உறங்கவேண்டும், தினம் தினம் அவள் அணைப்பில் துயில் கலையவேண்டும் என்று ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவனைப் பெரிதும் இம்சித்தன.

மற்றைய பெண்களைப் போல ஓர் இரவுக்கு மட்டும்தான் அவள் வேண்டுமா… என்று எண்ணிப் பார்க்கையில், இல்லை என்று மனம் ஓங்காரமிட்டு அலறுகிறது. அவள் வேண்டும் காலக் காலத்திற்கும் அவள் வேண்டும். அதிகாலை விழிக்கும் வேளையிலும் தூங்கும் வேளையிலும் அவனருகே அவள் வேண்டும். இந்தத் தவிப்பை, இந்தத் துடிப்பை என்னவென்று தீர்ப்பான் எப்படித் தீர்ப்பான். அதற்கான விளக்கம்தான் என்ன?

அந்தத் துடிப்பை அடக்க என்னவெல்லாம் செய்து பர்த்துவிட்டான். இரண்டு மணியில் முடிக்கும் உடற்பயிற்சியை நான்கு மணி நேரமாக நீடித்தும் அவஸ்தை குறையாமல் இரவுகளில் குளிர் நீரில் குளிக்கும் துன்பம் அவனுக்குத்தான் தெரியும். அவளுடைய அருகாமைக்காகத் தகிக்கும் உடலைக் குளிரவைக்க எத்தனை ஆயிரம் முயற்சிகள்.

எல்லா விதத்திலும் தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போய், இங்கிருந்தால்தானே இந்த அவஸ்தை என்று அவுஸ்திரேலியா வந்த பின்பும் இருந்த தவிப்பு பலமடங்கானதன்றிச் சற்றும் சமநிலைப் படவில்லை.

சரி அவளுடன் பேசாததால்தான் இந்த நிலை என்று அவளை அழைத்துப் பேசியுமாகிவிட்டது, அந்தோ பரிதாபம் நிலைமை மோசமானதன்றி எள்ளளவும் குறையவில்லை.

அதுவும் அவளுடைய குரலில் அவனை எதிர்பார்த்தாள், பார்க்கிறாள் என்பதை உணர்ந்த பின், அவனால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை.

குழம்பிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய கைப்பேசி அடித்தது. எடுத்துப் பார்க்க, அவனுடைய தொழிற்சாலையிலிருந்துதான் எடுத்திருந்தார்கள்.

ஒரு பெருமூச்சுடன் எழுந்த அவ்வியக்தன், கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,

“இதோ கிளம்பிவிட்டேன்… கொஞ்ச நேரத்தில் அங்கே இருப்பேன்…” என்றுவிட்டுக் கைப்பேசியைப் பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்துவிட்டு, அருகே இருந்த கதிரையில் போட்டிருந்த கோட்டை இழுத்து எடுத்துக்கொண்டு வெளியேற, இங்கே இரவின் மடியில் படுக்கையில் கிடந்த தற்பரைக்குக் கனவிலும் அவனே தோன்றி இம்சித்துக்கொண்டிருந்தான்.

இதோ அவன் அவுஸ்திரேலியா சென்று மூன்று கிழமைகள் முடிவடைந்து விட்டன. ஆனாலும் அவன் தன்னை அழைத்துச் செல்ல வருவானோ என்கிற எதிர்பார்ப்பு மட்டும் அவளிடமிருந்து குறையவில்லை.

இத்தனை நாட்களில் நிச்சயமாக அவளை மறந்திருப்பான் என்று புத்தி திரும்பத் திரும்ப அவளுக்கு அறிவித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அதை ஏற்கத்தான் மனம் தயாராக இல்லை. இனி அவன் வரமாட்டான் என்று புத்திக்குத் தெரிந்ததுதான். ஆனால் மனம் அதை ஏற்கவேண்டுமே. அன்று அவன் அவுஸ்திரேலியா போன பின் ஒரு முறை அவளோடு பேசியதுதான். அதற்குப் பிறகு இவளிடம் பேச அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை போலும். எந்தச் சத்தமும் இல்லை.

அன்றோடு அந்தத் தவணைக்கான இறுதிப் பரீட்சை. கூடவே இறுதித் தவணைக்கான விழா வேறு. எத்தனை ஆவலாகக் காத்திருந்தாள் அந்த விழாவிற்காக. ஆனால் இப்போது அந்த விழாவை எண்ணிப் பார்க்க கூட அவளால் முடியவில்லை. மனதில் மகிழ்ச்சி இருந்தால்தானே களிப்பை ரசித்துக் குதுகலிக்க முடியும்.

இந்த முறையும் எதையாவது சொல்லி நின்றுவிடவேண்டியதுதான். அவளோடு சண்டைக்கு வருவார்கள். எப்படியாவது சமாளித்துவிடவேண்டும். உறுதியோடு, தயாராகி, குளிருக்குத் தோதான ஆடைகள் அணிந்து வெளியே வந்தபோது குளிரையும் மீறி சூரியன் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தான்.

எப்போதும் போல அவ்வியக்தன் வந்திருக்கிறானா என்று ஆவலாக எட்டிப் பார்த்தாள். ஒரு மாதமாக வராதவன் அன்றைக்கு வந்துவிடுவானா என்ன? சலிப்பும் ஏமாற்றமுமாக, முக்கியப் பாதையில் ஏற, கிறீச் என்கிற சத்தத்தோடு ஒரு முறை சுழன்று அவளருகே வந்து நின்றது கவசாக்கி மோட்டார்வண்டி ஒன்று.

ஒரு கணம் திடுக்கிட்டு துள்ளியவளாகத் திரும்பிப் பார்க்க, உறுமும் மோட்டார் சைக்கிளின் மீது, முகக் கவசம் அணிந்தவாறு ஒருவன் நின்றிருந்தான். அந்த முகக் கவசம் அவன் முகத்தை மறைத்திருந்ததால் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. அவன் கரிய பான்டும் கரிய தடித்த லதர் ஜாக்கட்டும் அணிந்தவாறு ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி இவளைப் பார்த்தான்.

இவளோ யார் அவன் இப்படிப் பயமுறுத்துவது என்பதுபோல அவனை முறைத்துவிட்டு நடக்கத் தொடங்க அந்த வண்டி அவளைப் பின்தொடர்ந்தது.

யார் அது. ஏன் அவளைப் பின் தொடர வேண்டும். பயத்துடன் சுத்தவரப் பார்த்தாள். குளிர்காலத்தில் யார் வெளியே நிற்கப் போகிறார்கள். ஐயோ அவளைக் காக்க அருகே யாருமில்லையே. அச்சத்தில் வயிறு சுண்டியிழுக்க அவசரமாக ஓட முயன்றவளை மறித்தாற் போல வந்து நின்றது அந்த வண்டி.

What’s your Reaction?
+1
20
+1
5
+1
4
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!