Sat. Oct 19th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 16

(16)

 

அன்று இரவு ஏனோ கந்தழிதரனுக்கு உறக்கம் சுத்தமாக வரவில்லை. உள் மனனோ, அம்மேதினி முன்பு சொன்னதைத்தான் திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது.

‘உண்மையாகவே அவளுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா என்ன? நம்ப முடியாது திணறிப்போனான் அவன்.’ அதற்கு மேலும் படுத்திருக்க முடியாமல் எழுந்தவன், வெளிக்காற்றையாவது சுவாசிக்கலாம் என்கிற எண்ணத்தில், வீட்டின் பின் புறம் வர, அங்கே பின் வாசல் படியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பதைக் கண்டு, ஒரு கணம் அதிர்ந்து போனவனாய் அப்படியே நின்றவன், பின்புதான் தெரிந்தது அது அம்மேதினியென்று.

அன்று முழு நிலவு பாலாகப் பொழிந்திருக்க, இரவு கூடப் பகலாய் அழகாய் வரிவடிவத்தோடு இருக்க, அம்மேதியோ அந்த நிலவையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

புருவங்கள் சுருக்க, ‘இந்த நேரத்தில் தனியாக என்ன செய்கிறாள்? அதுவும் வெளியே… ஊர் இருக்கும் நிலையில் இவளுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது. திருடன் வந்தால் என்னாகும்… யோசிக்க வேண்டாம்?’ மெல்லிய கோபம் கொண்டவனாக, அவளை நெருங்கி,

“அம்மணி…!” என்று சற்று அதட்டலாக அழைக்கத் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் விழிகளில் நிறைந்திருந்த கண்ணீரைக் கண்டு, ஒரு கணம் குழம்பிப்போனான் கந்தழிதரன். தன்னை மறந்து அவளை இரண்டெட்டில் நெருங்கியவன்,

“அம்மணி…! என்னம்மா…? என்னாச்சு…? எதற்கு இப்படி வெளியே உட்கார்ந்து இருக்கிறாய்?” என்று கேட்க, இவளோ அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்துவிட்டு எழுந்தவள், அவனுக்குப் பதில் கூறாமல் உள்ளே போக முயல, அவனோ அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்துத் தன்னை நோக்கி இழுக்க, இழுபட்டு வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாகத் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அம்மணி…! என்னடி பிரச்சனை உனக்கு…? எதுவாக இருந்தாலும் வாய்விட்டுச் சொன்னால்தானே புரியும். இப்படி வந்து அழுதுகொண்டிருந்தால் யாருக்கு என்ன தெரியும்?” என்று பொறுமையற்று கேட்க, அவன் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றவள், முடியாமல்,

“மரியாதையாகக் கையை விடுங்கள்…!” என்றபோது குரல் சீற்றத்தோடு சேர்ந்த கலக்கத்துடன் வெளியே வந்தது.

“கையை விடுகிறேன்… முதல் உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்…! எதற்காக இப்படித் தனியாக வந்து அழுதுகொண்டிருக்கிறாய்…?” என்றவன் தன் சுட்டுவிரலால் அவளுடைய நாடியைப் பற்றித் தூக்க அவளோ அப்போதும் அவனைப் பார்த்தாளில்லை.

சடார் என்று விழிகளை மூட மேலும் கண்ணீர் கன்னத்தில் வழிந்து போக, அந்த அன்புக்கினியவன் துடித்துப்போனான். பதட்டத்தோடு வழிந்த கண்ணீரை இரண்டு உள்ளங்கைகளாலும் துடைத்து விட முயன்றவாறு,

“கண்ணம்மா…! என்னடா ஆச்சு…?” என்று கேட்க, அவளோ வேகமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்து, அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“என்னை… என்னைத் தொடாதீர்கள்…! என்னைத் தொடும் அருகதை உங்களுக்குக் கிடையாது…!” என்றாள் நடுங்கிய குரலில். கூடவே குரலில் மெல்லிய விம்மலும் தெறிக்க, மேலும் துடித்துப்போனான் கந்தழிதரன்.

அவள் இப்படி மனம் கசங்கி அழுது அவன் பார்த்ததில்லை. அந்தக் கலக்கம், தவிப்பு இவனையும் தொற்றிக் கொள்ள, அவள் பேசியதை ஒரு பொருட்டாக எடுக்காதவனாக,

“ஓ மை… பேபி கேர்ள்…! என்னடா ஆச்சு… எதுவாக இருந்தாலும் சொல்லுமா… என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்… ப்ளீஸ்டி… இப்படி அழாதேமா…” என்று கெஞ்ச அவளோ…

“அடடே…! என்ன நடிப்பு…! என்ன நடிப்பு…! அங்கே ஒருத்தியைக் கண்டு பல்லிழித்துவிட்டு இங்கே வந்து என்னுடைய வேதனையைப் போக்க உதவி செய்யப் போகிறாராம்… நல்ல வேடிக்கைதான்…!” என்று சுள்ளென்று கூற முகம் கறுத்துப் போனான் கந்தழிதரன்.

“இது என்ன பேச்சு அம்மேதினி… யாரிடம் பேசுகிறாய் என்று புரிந்து பேசு…” என்று கடுமையாகக் கூற, இப்போது ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அம்மேதினி.

“தெரிந்துதான் பேசுகிறேன்… சிறுவயது முதல் என் கைப்பற்றி நடந்த கந்தழிதரனோடு பேசுகிறேன்… என் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்த கொண்ட கந்தழியோடு பேசிக்கொண்டிருக்கிறேன்… எல்லாவற்றிற்கும் மேலாக என் காதல் உணர்வை மலரச் செய்த என் தரனோடு பேசிக்கொண்டிருக்கிறேன்… என் உயிரோடு கலந்துவிட்ட கந்துவோடு பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று ஆவேசமாகக் கூற ஒரு கணம் அதிர்ந்துபோய் நின்றான் கந்தழிதரன். அவனுக்கு முதலில் அவள் கூறியது உறைக்கவேயில்லை. நம்ப மாட்டாமல் அம்மேதினியை ஏறிட்டுப் பார்க்க, அவளோ மீண்டும் துளித்த கண்ணீரைத் துடைத்தவாறு, மூக்கை உறிஞ்சி விட்டுக்கொண்டு,

“ஆமாம்… காதல் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த என் கந்துவோடு பேசிக்கொண்டிருக்கிறேன்…” என்று அழுத்தமாகக் கூற, ஒரு கணம் தடுமாறியவன், தன் தலையைக் குலுக்கி,

“அம்… அம்மணி…! என்ன… என்ன உளறுகிறாய்…!” என்றான் நம்பமாட்டாத தடுமாற்றத்தோடு.

இப்போது அவனை நெருங்கி நின்று அவனை அண்ணாந்து பார்த்தாள் அம்மேதினி. அவளுடைய விழிகள் அவன் விழிகளுடன் கலந்து எங்காவது தன் மீது காதல் இருக்கிறதா என்று அறிய முற்பட்டன. அந்தோ பரிதாபம், காதலுக்குப் பதிலாக அதிர்ச்சிதான் அங்கே தெரிந்த்தது அதைக் கண்டு ஆத்திரம் கொண்டவளாக, தலையை மறுப்பாக ஆட்டி,

“இல்லை…! உளறவில்லை…! என் மனதில் இருப்பதை உனக்குச் சொன்னேன்… எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. உன்னை மட்டும்தான் பிடித்திருக்கிறது… அதுவும் உயிருக்கும் மேலாகப் பிடித்திருக்கிறது… வாழ்ந்தால் உங்களோடு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்…” என்று அவள் முடிக்கவில்லை, எழுந்த சீற்றத்தில் ஆவேசத்துடன் தன் கரத்தை ஓங்கியிருந்தான் கந்தழிதரன்.

அவனால் ஓங்கத்தான் முடிந்தது. ஆனால் அவளை நோக்கிக் கரத்தை ஒரு அங்குலம் கூட இறக்க முடியவில்லை. ஆத்திரத்துடன் ஓங்கிய கரத்தின் விரல்களைச் சுருட்டிக்கொண்டவன், தன் பற்களைக் கடித்து,

“என்ன முட்டாள்தனமான பேச்சு இது…” என்று கர்ஜித்தவாறு அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்று,

“சீ… உனக்கென்ன புத்தி குழம்பிவிட்டதா? முளைத்து இரண்டு துளிர்கூட விடவில்லை. அதற்குள் கண்டறியாத காதலா உனக்கு…? அதுவும் என் மீது…! யாராவது கேட்டால் காறித் துப்புவார்கள்…” என்று அவன் கடுமையாகச் சீற, அவளோ ஆத்திரம் சற்றும் மட்டுப்படாதவளாக,

“ஏன்… ஏன் காறித் துப்பப் போகிறார்கள்… சொல்லப்போனால் என்னைக் கட்டிக்கொள்ளும் முறைப் பையன்தானே நீ…” என்று அவள் அலட்சியமாகக் கேட்க, கந்தழிதரனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

“உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது…? உனக்கு என்ன வயதென்றாவது புரிகிறதா? பதினாறு வயது… இந்த வயதில் காதலா? முதலில் காதலுக்கான அர்த்தம் என்னவென்றாவது தெரியுமா…?” என்று அவன் சினக்க, இவளோ,

“இந்த வயதில் காதலைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் எந்த வயதில் தெரிந்து கொள்ளச் சொல்கிறாய்? முப்பது நாற்பதிலா?” என்று அலட்சியமாகக் கேட்டவள், அவனை நிமிர்ந்து பார்த்து,

“இந்த வயதில் காதல் வரவில்லை என்றால்தான் அது தவறு கந்து… சரி நீ சொல்வது போல, இப்போது காதலிப்பது தவறு. பின்னாடி காதலிப்பதுதான் சரி என்றால், அந்தப் பின்னாடி தோன்றும் காதல் கூட, உன் மீதுதான் தோன்றும் கந்து…” என்றவள் அவனை ஒரடி நெருங்கி அவனுடைய மார்புச் சட்டையை அழுந்த பற்றித் தன்னை நோக்கிச் சற்று இழுத்து,

“அது உன்னிடம் மட்டும்தான் தோன்றும்…” என்று முடிக்கவில்லை, இவனுடைய பற்கள் ஒன்றோடு ஒன்ற அரைபட்டன.

அதைக் கண்டதுமே தெரிந்தது அவன் தன் கோபத்தை அடக்கப் படாத பாடு படுகிறான் என்று. ஆனாலும் இவள் பயந்து ஒதுங்குபவளாகத் தெரியவில்லை. மாறாக எதிர்த்தே அவனை நிமிர்ந்து பார்க்க, ஓரளவு தன்னைக் கட்டுப்படுத்தியவன், தன் சட்டையைப் பற்றியிருந்த அவள் கரத்தை இழுத்து எடுத்து எறிவது போலத் தள்ளிவிட்டு,

“ஓங்கி அறைந்தேன் என்றால் முப்பத்திரண்டு பற்களும் விழுந்துவிடும் ஜாக்கிரதை… உனக்கும் எனக்கும் எத்தனை வயது வித்தியாசம் என்கிற அறிவாவது உனக்கு இருக்கிறதா? முட்டாள்… முட்டாள்…” என்று சீற, இவளோ,

“பத்து வயது… அதற்கென்ன… காதல் வயதைப் பார்த்தோ அழகைப் பார்த்தோ வருவதில்லை… மனதைப் பார்த்து உணர்வைப் பார்த்து உள்ளே இருந்து மலர்வது…” என்று அவள் ஒரு வித பரவசத்துடன் உரைக்க, அவளை எரிச்சலுடன் பார்த்தான் கந்தழிதரன்.

“நிச்சயமாக உனக்கு மூளை பேதலித்துத்தான் விட்டது… எல்லாம் கண்ட கண்ட புத்தகங்கள், படித்ததால் வந்த பருவக் கோளாறு…” என்று சீறியவன், சற்று நேரம் தன்னை அடக்க அங்கும் இங்கும் நடந்தான். அவனால் இன்னும் நம்பவே முடியவில்லை.

‘அவனுடைய அம்மணிக்கா காதல்… அதுவும் அவன் மீது. சிறு வயது முதலே கரத்தைப் பற்றி நடத்திச் சென்றவன்… அவனைப் பொறுத்த வரைக்கும் அவள் ஒரு குழந்தையே. அப்படியிருக்கையில்… அவளை எப்படித் தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பான்… கடவுளே.. இவளுக்கு ஏன் புத்தி இப்படித் தறிகெட்டுப் போகிறது…’ குழம்பியவன், ஆழ மூச்செடுத்து அவளருகே வந்து, ஒற்றைக் கரத்தைத் தூக்கி அவளுக்கு அறிவுறுத்தும் வகையில்,

“அம்மணி… இதோ பார்… காதலைப் பற்றிச் சிந்திப்பதற்கும், அதை நுகர்வதற்கும் இது காலமுமல்ல, வயதுமல்ல. இது வெறும் பருவக் கோளாறு. உன்னுடைய ஹோர்மோன்ஸ் தறிகெட்டு ஓடுவதால் வந்த வினை… இதோ இப்போது தோன்றிய காதல் இன்னும் கொஞ்சக் காலத்தில் காணாமல் போய்விடும்…” என்றவன் அவளை நெருங்கி அவளுடைய தோள்களில் தன் கரங்களைப் பதித்து,

“இதோ பார் அம்மணி… நீ எப்போதும் எனக்குக் குழந்தை போல… உன்னை எப்படி நான் அப்படித் தவறாக…” என்று சொல்ல வந்தவனுக்கு, அன்று அவளுடைய உதடுகளைக் கண்டு தடுமாறியது நினைவுக்கு வந்தது. கூடவே சுளுக்கு எடுக்கும்போது பூம்பந்தாய் முதுகில் விழுந்தாளே அப்போது ஏற்பட்ட தடுமாற்றம், வேளைகெட்ட வேலையில் நினைவு வந்து இவனை நிலைகுலையச் செய்தன. வேகமாகத் தன் தலையை உலுப்பியவன்,

“இல்லை அம்மணி… நீ போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. நீ முதலில் படிக்க வேண்டும்… நல்ல வேலைக்குப் போகவேண்டும்… உனக்கான பாதை மிக அழகானது… அதை இந்தக் காதலால் சிதைத்து விடாதே… உனக்கான வயதும் காலமும் வரும் போது, உனக்குரியவன் உன்னைத் தேடி வருவான்… அது வரை காத்திரு… தயவு செய்து இத்தகைய எண்ணத்தை இத்தோடு அழித்துவிடு… நாம் ஒரு போதும் இணைய முடியாது கண்ணம்மா…! புரிந்து கொள்..” என்று அவன் சற்று இதமாகக் கூற, இவளோ தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி, அவனை நிமிர்ந்து பார்த்து,

“எனக்கானவன் நீதான் கந்து…! உன்னைத் தவிர வேறு யாராலும் என்னைப் பாதுகாக்க முடியாது…” என்றவளின் முகம் இளகிக் கனிந்து போக, ஏதோ வேறு உலகத்திலிருந்து பேசுவது போல,

“என்னைச் சிறுவயதிலிருந்து உள்ளங்கையில் தாங்கிப் பாதுகாத்தவன் நீ! எனக்கு ஒன்றென்றால் துடிப்பவன் நீ! எனக்காக உலகையே அழிக்கும் வல்லமை கொண்டவன் நீ! என்னைப்பற்றி முழுவதுமாக அறிந்தவனும் நீ. உன்னைத் தவிர வேறு யாரும் என்னை இந்தளவு அன்போடு பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள் கந்து. அம்மா கூட உனக்கு அடுத்துதான்… எனக்கு நிச்சயமாகத் தெரியும், எனக்கானவன் நீதான்..ஸ நீ மட்டும்தான்ஸ” என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் திணறிப்போனான் கந்தழிதரன்.

“காட்! உனக்குள் எந்தச் சாத்தான் புகுந்தது என்று கூடத் தெரியவில்லையே…! உன்னால் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது… ஒரு மனுஷன் சொன்னால் கேட்கவேண்டும்… அம்மேதினி… காதல் என்றால் என்ன என்பதை உணரும் வயதைக் கூட நீ நெருங்க வில்லை… இப்போது போய் அதைப் பற்றிப் பேசுகிறாயே…”

“யார் சொன்னார்கள் காதல் பற்றி உணரும் வயதை நான் நெருங்கவில்லை என்று? நான் சொன்னேனா? நீங்களாக முடிவு செய்து சொன்னால், நான் என்ன செய்யட்டும்…” என்று அலட்சியமாகக் கேட்டவள், அவனை ஏக்கத்துடன் பார்த்து,

“முன்பு இது காதல் என்று எனக்குத் தெரியாது கந்து…! ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக உன்னை நினைக்காத நாளில்லை தெரியுமா… இதோ நீ வரப்போகிறாய் என்பதை அறிந்ததும் நான் பட்ட மகிழ்ச்சி… ஆமாம் உன் மீது கோபமாக இருந்தேன் மறுக்கவில்லை. அந்தக் கோபத்திற்குப் பின்னால் இருந்தது நான் உன் மீது வைத்த காதல்தான்… யோசித்துப் பார்… நான் வயதுக்கு வந்த போது கூட, உன்னிடம்தானே வந்தேன்… அது ஏன்? அப்போதே நீ என் மனதில் பதிந்துவிட்டாய் என்பதால்தானே…? கந்து… என் காதல் பருவக் கோளாரால் வந்த காதல் அல்ல… உண்மையான காதல் கந்து… உன்னைத் தவிர வேறு எவனையும் சிந்தையால் கூட நினைக்காத காதல்…” என்றவள், பின் முகம் கசங்க, அவனுடைய கரத்தைப் பற்றி, அந்த மோதிரத்தை வெறித்துப் பார்த்தவாறு,

“இன்று அந்த ரோகிணி உன் கரத்தில் இதை அணிவித்தாள் அல்லவா…” என்றவள், அதே கரத்தைப் பற்றித் தன் இடது மார்பில் பதித்து,

“அப்போது… இங்கே வலித்தது கந்து! தாளமுடியாது வலித்தது… யாரோ இங்கிருந்து உயிரைப் பறிப்பது போல வலித்தது தெரியுமா?” என்று அவள் முடிக்கவில்லை, வேகமாகத் தன் கரத்தை இழுத்துக்கொண்ட கந்தழிதரனின் கரங்கள் ஏனோ காரணமின்றியே நடுங்கத் தொடங்கின.

‘கடவுளே… இத்தகைய ஒரு நிலையை அவன் கனவிலும் நினைக்கவில்லையே…’ என்ன செய்வது, ஏது சொல்வது என்று புரியாமல் தடுமாற, அவளோ அவனை இன்னும் நெருங்கி,

“இன்று எங்கே போனேன் போனேன் என்று கேட்டீர்கள் அல்லவா? பிள்ளையார் கோவில் கேணியில் அமர்ந்து கதறிவிட்டு வந்தேன்… என்னால் இதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?” என்றவள் பின் அவன் மார்பில் தன் தலையைச் சாய்த்து, அவன் கழுத்தைத் தன் கரங்களால் கட்டிக்கொண்டவாறு,

“என் வாழ்க்கையில் ஒருவன் கணவனாக வருவான் என்றால் அது நீ மட்டுமாகத்தான் இருக்கும்… உன்னைத் தவிர நான் வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டேன்… இது கடவுள் மீது சத்தியம்…” அவள் முடிக்கவில்லை வேகமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்து விலக்கி நிறுத்தியவன்,

“அம்மேதினி…! மேலும் மேலும் பைத்தியம்போல உளறினாய் என்றால் அடுத்து நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது… கடவுளே! உன் வயதென்ன என் வயதென்ன… நீ இளம் குருத்துடி… இன்னும் வாழ்க்கையென்றாலே என்னவென்று புரிந்துகொள்ளும் வயதைக் கூட நெருங்கவில்லையே… உனக்கேற்றவன் நானில்லைமா… உன்னை என் மனைவியாக…” என்றவன் அதற்கு மேல் முடியாதவனாக விழிகளை இறுக மூடித் திறந்து,

“காட்! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதோ பார்… சின்னக் குழந்தையிலிருந்து என் கரங்களில் தவழ்ந்தவள் நீ…! உன்னை எப்படி நான்…” அதை நினைக்கும்போதே அவனுடைய கம்பீர தேகம் நடுங்கியது.

“நோ…! நிச்சயமாக நீ நினைப்பது நடக்காது… இதோ பார் நீ காதல் என்கிறாயே… இதெல்லாம் காதல் இல்லைமா… வெறும் கவர்ச்சி. இந்த வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தோன்றும் உடல் சார்ந்த மாற்றங்களால் ஏற்படும் இனக் கவர்ச்சி… இதைத் தவிர வேறு எதுவும் இல்லைடா…” என்று அவன் முடிக்க முதல் வேகமாகக் கந்தழிதரனை நெருங்கியவள், மறு கணம் அவளுடைய சிவந்த அதரங்களால் அவனுடைய கடிய அதரங்களை இறுக பற்றி மூடிக்கொண்டாள்.

மறு கணம் கந்தழிதரனின் உலகம் சுழல்வதை நிறுத்திக் கொண்டது. இளம் குருத்தின் உதட்டு முத்தம்… ஆவேசமாக அவனுடைய உதடுகளைப் பற்றிக்கொண்டு சுவைக்கத் தொடங்க, செயல் மறந்து, புத்தி பேதலித்து உலகம் மறந்து நின்றிருந்தான் அந்த ஆண் மகன்.

அவன் படிகளுக்குக் கீழே நின்றிருந்தான். இவள் இரண்டு படிக்கு மேலே நின்றிருந்தாள். அதனால் அவனை விடச் சற்று உயரம் கூடியவளாக நின்றிருந்தவளுக்கு அவனை இழுத்து முத்தமிடுவது மிகச் சுலபமாகவே இருந்தது.

கந்தழிதரனின் இடத்தில் வேறு ஆண் இருந்திருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். ஆனால் இவனோ, அந்த இதழ் முத்தத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. அதனால் அதிர்ந்து திகைத்து நின்றது ஒரு சில நொடிகளே… மறுகணம் நிதர்சனம் உறைக்கப் பதறியவனாக அவளைத் தன்னிடமிருந்து விலக்க முயல, அவளோ ஆவேசத்துடன் அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டுத் தன்னோடு இறுக்கியவாறு அவன் இதழ்களோடு பிரியாது நின்றுகொள்ள அவனுக்கோ மூச்சு முட்டியது.

‘எங்கே கற்றுக்கொண்டாள் இந்த வித்தையை. யார் சொல்லிக் கொடுத்தார்கள். எங்கே பார்த்து அறிந்து கொண்டாள்… சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பார்களே… அது இதுதானா? என்ன செய்கிறோம் என்கிற தெளிவும், அறிவும் இல்லாமல் இப்படி நினைத்ததைச் செய்ய எது கற்றுக் கொடுத்தது. அவளுடைய அந்தப் பதினாறு வயது பருவமா? இல்லை இவன் எனக்கில்லை என்று குழம்ப வைத்த பொறாமையா? தெரியவில்லை.’ ஆனால் அந்த முத்தத்தால் மொத்தமாய்த் தொலைந்துபோய் நின்றான் கந்தழிதரன்.

ஒரு பெண்ணின் இதழ் தித்திப்பை முதன் முதலாக அறிந்துகொண்டபோது உணர்ச்சிகள் தட்டுத்தடுமாறுவது இயற்கைதானே. அவன் என்ன முற்றும் துறந்த ஞானியா எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல ஞான நிலையில் இருக்க… அவளுடைய உதடுகளின் வருடல் அவனையும் ஒரு கணம் தடுமாற வைத்தது என்பது மட்டும் உண்மை. சொல்லப்போனால் அந்த முத்தத்தை அவனையும் மீறி இரசிக்கத் தொடங்கினான் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.’

ஒரு கட்டத்தில் சுயத்திற்கு வந்த கந்தழிதரனுக்கு இன்னும் பிரியாது நின்றிருந்தவளை உணர்ந்தபோது, உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டியது. பின் வேகமாக அவள் இடையில் கரத்தைப் பதித்துத் தன்னிடமிருந்து பிரித்துப் பலமாகத் தள்ளிவிடப் பொத்தென்று மேல் படியில் விழுந்தாள் அம்மேதினி.

இவனுக்குத்தான் பேச்சே வரவில்லை. தவிப்புடன் பேசுவதற்கு வாய் எடுப்பதும் பின் மூடுவதுமாக இருந்தவனுக்கு உதடுகள் நடுங்கின. என்னவென்றாலும் அவன் ஆரோக்கியம் நிறைந்த ஆணாயிற்றே…! எப்படி உள்ளே எழுந்த உணர்வுகளை எளிதில் அடக்குவான். வழி தெரியாது ஆழ மூச்செடுத்தவனுக்குத் தன் கையறு நிலையை எண்ணிக் கலங்கித் தவித்தான். ஓரளவு நிதானத்திற்கு வந்த பின்தான் முழுதாக அவள் செய்ததே இவனுக்கு உறைத்தது.

மறு கணம் கண் மண் தெரியாத ஆத்திரம் வர, என்ன செய்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாதவனாக, ஆவேசத்துடன் அவளை நெருங்கி மிகப் பலமாக ஓங்கி அறைந்திருந்தான்.

ஆனால் அவளோ அவன் அறைந்தது கூட உறைக்காது, இப்படி நடந்து கொண்டோமே என்கிற வெட்கமோ, அச்சமோ, படபடப்போ எதுவும் இல்லாமல், விழிகளை மூடி முகம் மலர அவன் இதழின் தித்திப்பை எண்ணிக் கிறங்கிப்போய் நின்றிருந்தாள்.

ற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்கும்மோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

‘கண்ணனின் வாயமுதம் எப்படி இருக்கும் என்று அறிய வேண்டி, அவன் இதழ்களைச் சுவைக்க ஆசைப்பட்டாள் ஆண்டாள். ஆனால் பாவம் அவளால் நேரடியாக அந்த முத்தத்தைக் கொடுக்க முடியவில்லை… அதனால் அவன் கரங்களில் வீற்றிருக்கும் வெண்சங்கிடம் கேட்டு ஏக்கம் கொண்டாள். இது ஆண்டாளின் நிலை. ஆனால் இவள் ஏன் காத்திருக்கவேண்டும்? இவள் ஏன் அனுமதி கேட்கவோண்டும்? இதோ அவளுடைய மாயக்கண்ணன் கண்முன்னாலேயே உயிரோடு இருக்கிறான். தன் காதலின் ஆழத்தையும் வேகத்தையும் அவனிடம் சொல்லவேண்டிய அவசியம், கட்டாயம்… இருந்ததால் எதைப் பற்றியும் ‍யோசிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

ஆண்டாள் கண்ணனின் இதழ் சுவையை அறிய ஆசைப்பட்டபோது அவளுக்கு வெறும் பதினான்கு பதினைந்து வயதுதான். ஆனால் இறுதி வரைக்கும் அவன் நினைவாகவே இருந்து அவனோடு கலந்துகொண்டாளே. எத்தனை புனிதமான காதல் அவளுடையது. அந்தப் புனிதத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல இவளுடைய காதல்.. ஆண்டாளுக்குக் கண்ணன் மீதான காதல் புனிதமானது என்றால், இவளுக்குத் தன்னவன் மீதிருக்கும் காதலும் புனிதமானதுதானே.’

அந்த மயக்கத்தில், அந்தப் பரவசத்தில் தன்னிலை இழந்தவளாக, இன்னும் அவன் இதழ்கள் கொடுத்த சுவையிலிருந்து வெளிவராதவளாக மயங்கிக் கிடந்தாள் அந்தக் கோதை. கந்தழிதரனோ இன்னும் விழிகள் மூடி அமர்ந்திருந்தவளை இன்னும் நம்பமுடியாது பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இந்த ஒரு சிறு பெண்ணுக்குள் இத்தனை ஆவேச வேண்டுதலா. இது வயதின் கோளாறு என்று இவளுக்குப் புரிகிறதா இல்லையா… கடவுளே…! முத்தம்…! அதுவும் இதழ்கள் கலக்கும் முத்தம் அல்லவா கொடுத்துவிட்டாள். இது எத்தனை பெரிய பாரதூரமானது என்று இவளுக்குத் தெரியவில்லையா…? அதுவும் தனக்குப் போய்க் கொடுத்தாளே… இது தவறு என்று புரியவேயில்லையா…?’ இப்போது சுயத்திற்கு வந்தவனுக்கு அவனையும் மீறிக் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. உள்ளங்கைகள் வேர்த்தன. ஆழ மூச்செடுத்து விட்டவனுக்குத் தன் உடலின் மாற்றம் புரிந்து மாபெரும் அதிர்ச்சி.

‘யார் முத்தம் கொடுத்தாலும் உடலில் இத்தகைய மாற்றம் தோன்றுமா? இல்லை இவள் கொடுத்ததால் இந்த மாற்றம் பிறந்ததா… எனக்கென்னவாகி விட்டது? என்று தவிப்புடன் எண்ணியவன் எரிப்பது போல அமர்ந்திருந்தவளைப் பார்த்துவிட்டு, நடுங்கும் உடலைச் சமப்படுத்தும் முகமாக அங்கும் இங்குமாக நடந்தான். அவள் முத்தமிட்டதையும் மீறி, அந்த முத்தத்தில் தன்னிலை கேட்ட தன்மீதுதான் கடும் ஆத்திரத்தில் இருந்தான்.

‘அவள் முத்தமிட்டதும் அவளை உடனே தள்ளி இருக்க வேண்டாமா. அதை விட்டுவிட்டு… அதுவும் அம்மேதினியின் முத்தத்தைச் சுவைத்துக் கொண்டு இருந்தானே… இது என்ன கொடுமை.’  ஒரு கட்டத்தில் நிலைத்து நின்றவன் விழிகளை மூடி எதை எதையோ யோசித்தான். பின் முடிவு செய்தவன் போலத் திரும்பி அம்மேதினியைப் பார்த்து,

“இல்லை…! இது சரி வராது…! ரோகிணியை மணப்பதா வேண்டாமா என்கிற குழப்பத்திலிருந்தேன். இப்போது அந்தக் குழப்பம் முற்றாகத் தீர்ந்து விட்டது… யெஸ்…! அவளை மணக்கச் சம்மதம் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகாவது உன்னை மாற்றும் வழியை யோசி…” என்றவனுக்கு ஏனோ அவளைப் பார்க்கவே முடியவில்லை. வெறி கொண்டவன் போல உள்ளே நுழைய, இவளோ விழிகளை மூடி சற்று முன் கொடுத்த முத்தத்தின் தித்திப்பிலிருந்து வெளிவராதவளாகப் பெரும் பரவசத்தில் திளைத்துப்போய் நின்றிருந்தாள்.

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!