(3)
அன்றைய முக்கிய வகுப்புகளை முடித்துக்கொண்டு மதியம் போலப் புறப்பட்ட விதற்பரைக்கு, ஏனோ சலிப்புத் தட்டியது. எப்போதும் அவள் கூட வரும் கதரின் அன்று வரவில்லை.
கதரின் இவளை விட ஒரு வயது அதிகமானவள். அதே போலப் பல்கலைக் கழகத்திலும் ஒரு வருடம் முன்னால் படிப்பவள். இருவரும் ஒரே குடியிருப்புப் பகுதியில்தான் வசிக்கிறார்கள்.
இதில் கதரின் வாகனம் வைத்திருப்பதால், பல்கலைக் கழகம் போகும்போது விதற்பரையையும் அழைத்துச் சென்று பின் மீண்டும் அழைத்து வருவாள். விதற்பரைக்கு அது பெரிதும் துணை புரிந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஏன் எனில் போக்குவரத்துச் செலவை முடிந்த வரை மிச்சம்பிடித்து விடுவாள். அதனால் அரை மணி நேரம் தாமதமானாலும், கதரினுக்காகக் காத்திருந்து அவள் கூடவே வீட்டுக்குச் செல்வது இவளுடைய வழக்கமாக இருந்தது.
அன்றும் கதரினுக்காக ஒரு ஓரமாய்க் காத்திருந்தவளுக்கு முன்பாக நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள்.
நகுலன். ஈழத் தமிழன். இவளை விட இரண்டு வயது அதிகமானவன். அவனுடைய தந்தை பெரிய வியாபாரி என்பதாலும், அரசியலில் ஈடுபட்டிருப்பதாலும் பல்கலைக்கழகத்தில் பிரபலமானவன். அதனால் அவனுக்கு நட்பு வட்டமும் அதிகம். அந்த நட்பு வட்டத்தில் இவளையும் சேர்க்கச் சற்று மெனக்கெடுபவனும் கூட.
ஆரம்பத்தில் நகுலனோடு நன்றாகப் பேசிப் பழகியவள்தான் விதற்பரை. ஒரு கட்டத்தில் அவனுடைய பேச்சில் தெரிந்த மாற்றத்தையும், அவளுடைய விடயத்தில் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வதையும் உணர்ந்து அவனிடமிருந்து விலகத் தொடங்கினாள்.
அளவுக்கு மீறிய அக்கரையும் உரிமையும் வேறு ஒன்றுக்கான வித்து என்பதைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாளில்லையே.
ஆனால் நகுலன்தான் அதைக் கருத்தில் எடுப்பதாகயில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விடாமல் அவளோடு பேச வந்துவிடுவான். பூடகமாகச் செயலாலும் சொல்லாலும் உன்னோடு பேச விரும்பவில்லை என்று சொல்லியாயிற்று. ஆனால் அதைப் புரிந்து கொள்ளாது மீண்டும் மீண்டும் வருபவனை என்ன செய்வது? ஒருபக்கம் எரிச்சல் தோன்றினாலும், முகம் முறிக்க விரும்பாமல், உதட்டை இழுத்து வைத்துப் புன்னகைத்தவள்,
“ஹாய் நகுல்…” என்றாள்.
“என்ன தனியே இருக்கிறாய்? கதரின் இன்னுமா வரவில்லை…” என்று கேட்டவாறு அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர, இவளும் ஆம் என்று தலையாட்டினாள். ஒரு முறை சுத்தவரப் பார்த்துவிட்டு,
“இந்த நேரத்தில் தனியாக இருப்பது சரியல்ல… என் கூட வாவேன்… அழைத்துச் சென்று விடுகிறேன்…” என்று அக்கறையாகக் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவள்,
“இல்லை நகுல்… கதரின் வரட்டும்…” என்றாள் அழுத்தமாக. சற்று நேரம் அமைதி காத்தான் அவன். பின் அவளைப் பார்த்து,
“இன்று மாலை உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா?” என்றான் ஆவலாக.
எதற்காகக் கேட்கிறாய் என்பது போல முன்னால் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் விதற்பரை.
“நீ சும்மாதான் இருக்கிறாய் என்றால், நாம் இருவரும் இரவு உணவகனத்திற்குப் போகலாமா? நீயும் நானும் மட்டும். உன் கூட நான் சற்றுப் பேசவேண்டும்…” என்றபோதே அது எதற்கான அழைப்பு என்பது விதற்பரைக்குத் தெரிந்து போனது. இப்போது மெல்லியதாகப் புன்னகைத்தவள்,
“இன்று வசதிப் படாது நகுல்… பரீட்சை இருக்கிறது. படிக்க வேண்டும். சாரி…” என்றாள் மறுப்பாய். இவனோ ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்து,
“நீ என்னை அதிகம் தவிர்க்கிறாய் விது…” என்றவன், ஒரு வித தவிப்போடு அவளைப் பார்த்து,
“நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்குப் புரிகிறதுதானே… விது ஐ திங்க், ஐ ஆம் இன் லவ் வித் யு… அதையேன் நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்…?” என்றான் ஒரு வித எதிர்பார்ப்புடன்.
அவன் காதல் என்றதும் இவள் ஒன்றும் அதிர்ந்துபோகவில்லை. இப்படி ஏதாவது உளறுவான் என்று சற்றுக் காலங்களாக எதிர்பார்ப்போடு இருந்தவள்தானே. அதனால்தானே ஒதுங்கிச் செல்லவும் நினைத்தாள். எதற்காக ஒதுங்கினாளோ, அந்தச் சம்பவம் இப்போது கண் முன்னால் நடக்கத் தொடங்கி விட்டது. ஒரு பெருமூச்சுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“சாரி நகுல்…. ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்…” என்றாள் தெட்டத் தெளிவாக.
இத்தகைய நிராகரிப்பு அவனுக்குப் புதிது போல. முகத்தல் அதிர்ச்சி தெரிந்தது.
“வித்து ஐ ஆம் நாட் ஜோக்கிங்… ரியலி ஐ ஆம் இன் லவ் வித் யு…” என்று கூற, இவளோ நிதானமாகத் தன் காலுக்கு மேல் மறு காலைப் போட்டுத் தன் முன்னால், அமர்ந்திருப்பவனை அழுத்தத்துடன் பார்த்தாள்.
நிலையில்லா விழிகள் ஒரு இடத்தில் நிலைக்காமல் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. அந்த விழிகள், அவளுடைய விழிகளை மட்டுமல்ல, முகத்தையும் நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் வேறு எங்கங்கோ பார்த்தன. முக்கியமாகச் சற்று மேடிட்டிருந்த அவளுடைய மார்புகளில் மிக அழுத்தமாகப் பதிந்தன. கூடவே டெனிமையும் மீறித் திரண்ட தொடைகளை ஈர உதடுகளுடன் பார்த்தான். இது போதாதா அவனுடைய காதல் எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய.
காதல்…?: அதுவும் இவனுக்கு…! இங்கே படிக்கும் காலத்திலேயே மூன்று பெண்களைக் காதலித்து ஒத்துவரவில்லை என்று கைவிட்டுவிட்ட செய்தி எல்லோரும் அறிந்ததுதான். அதற்குக் காரணம் பலவாக இருந்தாலும் முக்கியக் காரணம், காதலி இருக்கும்போதே வேறு பெண்களைத்தேடி அவன் செல்வது என்பதுதான் பரவலாகப் பேசப்படுவது. ஆனால் அது மெய்யா பொய்யா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். அப்படி இருக்கையில் இவளிடம் காதல் என்று வந்தால் அருவெறுக்காமல் மகிழ்ச்சியா தோன்றும். தன் தொடைக்கு மேல் கரங்களைப் பிணைத்து வைத்தவள், தலையை மறுப்பாக ஆட்டி,
“இல்லை நகுல் இது சரிவராது” என்றாள் முடிவாக.
“ஏன் விது…” ஏன் சரிவராது? எனக்கு என்ன குறை… எல்லாப் பெண்களும் விரும்புவதற்கான அத்தனை தகுதியும் எனக்கு இருக்கிறது… பணம், அழகு, அந்தஸ்து இதை விட வேறு என்ன உனக்கு வேண்டும்…” என்று கெட்டவன், இப்போது அவள் பக்கமாக நன்கு குனிந்து, “வித்து உனக்கு என்னைப் புரியவில்லையா? எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நாம் ஏன் சேர்ந்து வாழக் கூடாது… தினம் தினம் நீதான் என் நினைவில் நிற்கிறாய்… உன்னை விட வேறு எதையும் என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை?” என்று என்று தவிப்புடன் கூற, இப்போது பொறுமை இழந்தவளாக முன்னால் இருந்தவனை வெறித்தாள் விதற்பரை.
“எத்தனை நாட்களுக்கு?” என்றாள் சுள்ளென்று. இவனோ புரியாமல் பார்க்க,
“இல்லை எத்தனை நாட்களுக்கு என்மீதான உன் காதல் இருக்கும்…?” என்கிற கேள்வியைக் கேட்க, அவன் எதையோ சொல்ல வந்தான். அவன் முன்பாகத் தன் கரத்தை நீட்டி அவனுடைய பேச்சைத் தடுத்தவள்,
“சாரி நகுலன்! உன் பாதை வேறு என் பாதை வேறு! என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீ இல்லை…” என்று உறுதியாகக் கூற, முகம் கறுத்துப்போனான் நகுலன். அவளை ஆத்திரத்துடன் உறுத்து விழித்து,
“ஏன்… ஏன் இல்லை… அப்படி என்னிடம் இல்லாதது எது உனக்கு வேண்டும்…” என்று கிட்டத்தட்ட சீற, இவளோ அதைப் புரிந்து கொண்டவள் போல, மெல்லியதாக நகைத்தாள்.
“நம்பிக்கை நகுலன்… கூடவே பெண்களின் மீது ஒரு ஆண் வைக்கும் மதிப்பு… இது இரண்டும் உன்னிடம் இல்லை… தெளிவாகச் சொல்லவேண்டுமானால்… இதோ உன்னோடு பேசிய இந்த அரை மணி நேரத்தில் உன் விழிகள் நூறாவது முறையாக என் மார்புகளை அளவிட்டு விட்டன. அந்தப் பார்வைக்குப் பின்னால் உன்னுடைய கற்பனை எந்தளவுக்குப் பாய்ந்து செல்கிறது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… உனக்கு வேண்டியது காதல் இல்லை… வெறும் பெண்ணுடல் மட்டும்தான்… நிச்சயமாக உன்னால் நல்ல ஒரு காதலனாகவும் இருக்க முடியாது… உன்னால் பெண்களை மதிக்கவும் முடியாது… தெளிவாகச் சொல்லவேண்டுமானால், நீ காதல் என்கிற பொய்யான அடையாளத்துடன் உன்னுடைய இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளப் பெண் தேடுகிறாய்… அது நானில்லை… எனக்குக் கணவனாக அல்லது காதலனாக வருபவன் உண்மையானவனாக இருக்கவேண்டும். தவறு செய்தாலும், அதைத் தைரியமாக செய்தேன் என்று சொல்லும் நெஞ்சழுத்தம் உள்ளவனாக இருக்கவேண்டும்… காதல் என்றால் அவளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். காதலி பக்கத்தில் இருக்கும்போது இன்னொரு பெண்ணின் அங்கங்கள் அழகா இருக்கிறதே என்று ரசிக்கக் கூடாது… இதோ பார் நகுலன், உன்னைப் பொறுத்தவரைக்கும் காதல் என்பது சும்மா வெறும் பொழுது போக்கு. எனக்கு அப்படியில்லை. அது வாழ்க்கை. காதல் பிறழ்ந்தால் என் வாழ்க்கையும் பிறழ்ந்து போகும்… புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்…” என்றவள் இனியும் அங்கிருந்தால் நகுலன் எதையாவது பிதற்றத் தொடங்கிவிடுவான் என்கிற அச்சத்தில், அந்த இடத்தை விட்டு விலகத் தொடங்க மறு கணம் நகுலனின் கரம் இவளுடைய கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டது.
பதறிப்போனாள் விதற்பரை. அச்சத்துடன் சுத்தவரப் பார்க்க. அவளுடைய போதாத நேரம் அங்கே யாரும் இருக்கவில்லை. தொண்டைத் தண்ணீர் வற்றிப் போக, தன் முன்னால் நின்றிருந்தவனை வெறித்தாள். அவனோ, அவளைத் தன்னை நோக்கி இழுக்க, இழுத்த வேகத்தில் நகுலனோடு மோதி நின்றாள்.
அவளை அசைய விடாது, இடையின் ஊடாகக் கரத்தைக் கொண்டு சென்று மேலும் தன் உடலோடு அழுத்தியவன்,
“இதுவரை நான் கேட்டதற்கு யாரும் மறுப்புச் சொன்னதில்லை விதற்பரை… முதன் முறையாக நீ மறுத்திருக்கிறாய். அது உனக்கு நல்லதல்ல…?” என்றான் ஆத்திரத்தோடு. அதைக் கேட்டதும் ஒரு கணம் இவளுடைய முகம் வெளிறிப் போனது. அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்றவள் தோற்றவளாக,
“மரியாதையாக என்னை விடு நகுலன்… இல்லையென்றால்…” என்று இவள் தன்னை மறந்து குரலை உயர்த்த அவனோ கிண்டலுடன் இவளைப் பார்த்தான்.
“இல்லையென்றால்…?” என்றவன் அவளை நோக்கிக் குனிய, நெஞ்சம் பதறினாலும், அதை வெளிக்காட்டாது,
“இல்லையென்றால் என்னைப் பலவந்தப் படுத்த முயன்றாய் என்று புகார் கொடுப்பேன்… மேலே பார் சிசிடிவி கமரா. இங்கே நடப்பவை அனைத்தையும் அது படம் பிடித்துக்கொண்டிருக்கிறது. நீ என் கரத்தை விடவில்லை என்றால், அடுத்து நடப்பதற்கு நான் பொறுப்பல்ல…” என்று பற்களைக் கடித்தவாறு சீற, அவள் சொன்ன திசைக்குத் திரும்பி அண்ணாந்து பார்த்தான் நகுலன்.
அவள் சொன்னது சரிதான். சிசிடிவி கமார இங்கே நடப்பதைப் படம்பிடித்துக் கொண்டு இருந்தது.
அவசரமாக அவளுடைய கரத்தை விடுவிக்க, மறு கணம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் விதற்பரை.
அவள் ஓடுவதைக் கண்ட நகுலன் ஏளனமாக நகைத்தான்.
“இப்போது நீ தப்பிவிட்டாய் விதற்பரை… ஆனால் ஒரு நாள் என்னிடம் சிக்காமலா போவாய்? அப்போது பார்த்துக்கொள்கிறேன்…” முணுமுணுத்துவிட்டுத் திரும்பிச் செல்ல, அவனிடம் தப்பி ஓடிவந்த விதற்பரைக்குக் கைகால்கள் நடுங்கிக் கொண்டு வந்தன.
அதற்கு மேல் ஓட முடியாமல், அங்கிருந்த ஒரு இருக்கையில் தோளில் தொங்கிய பையைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொப்பென்று அமர்ந்தாள். கீழ் மூச்சு மேல் மூச்சு வேறு வாங்கியது.
இத்தனை காலம் வெறும் பேச்சில் மட்டும் தொல்லை கொடுத்தவன், இப்போது செயலிலும் காட்டத் தொடங்கிவிட்டானே… அச்சத்தில் தொண்டை வறண்டுபோக நடுங்கும் தன் கரத்தைத் திருப்பி நேரத்தைப்பார்த்தாள். இரண்டு மணி.
இன்னுமா கதரினுக்கு வகுப்பு முடியவில்லை? எரிச்சலுடன், கைப்பேசியை எடுத்துக் கதரினை அழைத்துப் பார்த்தாள். இணைப்பு கிடைக்கவில்லை. அதற்கு மேல் அவளுக்காகக் காத்திருக்க முடியாமல், எழுந்தவள், இருக்கையில் கழற்றி வைத்திருந்த தன் புத்தகப் பையை எடுத்துத் தோளில் மாட்டியவாறு நடக்கத் தொடங்கினாள். மனசு ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
ஒரு மனிதன் படித்து முடித்து வெளியேறுவதற்குள் எத்தனை சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் போதைப் பழக்கம் என்றால், இன்னொரு பக்கம் இவனைப் போன்ற ரோமியோக்களின் தொல்லை. இதையெல்லாம் தாண்டிப் படித்து முடித்து வெளியேறுவதற்குள் பாதி உயிர் போய்விடும் பொல. எரிச்சலுடன் வெளியே வந்தவளை வரவேற்றது அடர்ந்து கொட்டிய பனிப்பொழிவுதான்.
சுத்தம் அன்று வீட்டிற்கு நேரத்திற்குப் போனது போலத்தான். முக்கிய ஒப்படை வேறு கொடுக்கவேண்டுமே… எப்போது வீட்டிற்குப் போய், எப்போது ஒப்படை செய்து, எப்போது கையளித்து… இதில் நகுலன் வேறு அவளுடைய மனநிலையை நாசமாக்கி விட்டான்’ எரிச்சலுடன் எண்ணியவாறு, பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
பனியைச் சுத்தமாக்காத பாதை பயங்கரமாக வழுக்கியது. ஒருமுறை வழுக்கியும் விழப் பார்த்தாள்.
அன்று அவசரமாக கிளம்பிய போது பனிச்சப்பாத்தைப் போட நேரம் கிடைக்காமல் சும்மா சப்பாத்தைப் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அதுவும் சற்று குதி உயர்ந்த சப்பாத்து.
அதுவேறு இன்றைக்கு உன்னைத் தரையைக் கவ்வ வைக்கிறேன் என்று கங்கணம் கட்டியது போல ஓரிரு முறை அவளைச் சரிய வைக்க முயன்றது.
கவனமாகவே என்றாலும், தன்னுடைய வேகத்தைக் கூட்டியவளின் புத்தி சற்று மந்தப்பட்டிருந்த காரணத்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அக்கம் பக்கம் கூடப் பரிசீலிக்காமல் சடார் என்று தெருவில் இறங்கி நடக்கத் தொடங்க, அந்த நேரம் வேகமாக வந்த ஒரு வாகனம் அவளை மோதித் தள்ளியதோடு மட்டுமல்லாது, அந்த வாகனத்தை நிறுத்துவதற்காகக் கடுமையாகத் தடையை அழுத்தியதன் விளைவாக, அந்த வாகனம் சற்றுத் தூரம் பனியில் வழுக்கியவாறு இழுபட்டுச் சென்று சற்றுத் தொலைவில் போய் நின்றது.
அந்த வாகனம் மோதிய வேகத்தில் சுழன்றுபோய்த் தரையில் குப்புற விழுந்திருந்த விதற்பரைக்கும் உலகம் மங்கிக்கொண்டு வந்தது.
எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ, ஓரளவு சுதாரித்த போதுதான் தன்னை ஒரு வாகனம் மோதிச் சென்றதே உறைத்தது.
“xxxx…” முனங்கியவள், தலையை உலுப்பித் தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
அதுவரை அவிழலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த அந்த உயர்ந்த கொண்டை, அவள் தலையை உலுப்பிய வேகத்தில் அவிழ்ந்து தூசி படியாதிருக்க சித்திரத்திற்குப் போடும் திரை போல அவள் முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டது.
அவிழ்ந்த கூந்தலைக் கூட ஒழுங்கு படுத்த முடியாத அளவுக்கு உடலில் ஏற்பட்ட வலியில் துடித்தவளாக. மூச்சை ஆழ இழுத்துப் பற்களைக் கடித்து விழிகளை அழுந்த மூடியவாறு சற்று நேரம் அப்படியே கிடந்தாள்.
அதே நேரம் இவளை மோதித் தள்ளிவிட்டு சற்றுத் தொலைவுக்கு இழுபட்டுச் சேன்ற வாகனத்தில் அமர்ந்திருந்தவனுக்கும் முதலில் ஒன்றும் புரிந்திருக்கவில்லை. இப்படி ஓடு பாதையில் திடீர் என்று ஒரு உருவம் குறுக்கே பாயும் என்று அவன் இம்மியும் யோசித்திருக்கவில்லை. ஏதோ குறுக்கே பாய்கிறது என்பதை உணர்ந்தவனாய், தடையை அழுத்திய போதும், வாகனம், வழுக்கும் பனித்தரையில் நிற்காமல் இழுபட்டுச் சென்றதோடு அந்த உருவத்தை மோதித் தள்ளிவிட்டுத்தான் நின்றிருந்தது.
அதை உணர்ந்தவனின் முகம் வெளிறிப்போனது. தன்னால் ஒரு உயிருக்கு ஆபத்து ஏதும் வந்திருக்குமோ என்கிற எண்ணம் பேரலையாய் அவனுள் எழ வியர்த்துக் கொட்டியது. வாகனம் நின்ற வேகத்தில் ஸ்டியரிங் வீலை முட்டி நின்றவனின் மார்பும் மிகப் பலமாக விரிந்து பின் சுருங்கியது. அச்சத்தில் உடல் ஒரு முறை உதறிப் பின் நிதானித்தது.
எப்படியோ சுய நினைவு பெற்றவனாக நிமிர்ந்து அமர்ந்த அந்தக் காரோட்டி நிலைமையின் தாற்பரியம் புரிந்தவனாய், மறு கணம் வாகனத்தின் இயக்கத்தை நிறுத்தி விட்டு வெளியே வந்து, அவன் மோதிய இடத்தைப் பார்த்தான்.
அங்கே ஒரு உருவம் சரிந்திருப்பது தெரிந்ததும், வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு அந்த உருவத்தை நோக்கிப் பாய்ந்து வந்தான்.
அதே நேரம் சுள் சுள் என்று எழுந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முனங்கியவளாக, நடுங்கிய கரம் கொண்டு வலித்த பாதத்தைப் பற்றுவதற்காக எழ முயன்றவளை நெருங்கியவன், அவளுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, அவளுடைய முதுகில் தன் வலது உள்ளங்கையைப் பதித்து,
“ஆர் யு ஓக்கே…” என்றான் பரிதவிப்போடு.
இவளோ, அவன் முகம் பார்க்காமலே, தலையை ஆம் என்பது போல ஆட்டினாலும், பற்களைக் கடித்து வலியை அடக்க முயன்றவாறு எழ முயல, உடனே அவளுடைய தோள்களைப் பற்றி அவளுடைய முயற்சியைத் தடுத்தான் அவன்.
“ஈசி… ஈசி… டோன்ட் கெட் அப்… ஸ்டே தெயர்… ஐல் கால் த அம்புலன்ஸ்…” என்று கூறியவாறு தன் பான்ட் பாக்கட்டிலிருந்து கைப்பேசியை எடுக்கத் தொடங்க, அதுவரை வலியில் முனங்கியவள், மருத்துவமனை என்பதைக் கேட்டதுமே சிரமப்பட்டு எழுந்தமர்ந்து,
“ப்ளீஸ்… டோன்ட் கால்… த ஆம்புலன்ஸ். ஐ ஆம் பேர்ஃபக்ட்லி ஓக்கே…” என்றவளுக்கு அப்போதுதான் முழங்கையும் வலிப்பது புரிந்தது. தன்னை மறந்து முழங்கையைத் திருப்பிப் பார்த்தாள். தோல் வழன்று இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.
அதைக் கண்டதும், “காட்… இட்ஸ் ப்ளீடிங்…” என்று அவன் பதற, இவளோ, அவசரமாகத் தன் கரத்தை இறக்கிவிட்டு, மீண்டும் எழ முயன்றாள். ஆனால் பாத மூட்டிலிருந்து வந்த வலியிடமிருந்து இவளால் தப்பவே முடியவில்லை.
தாங்கமுடியாத அந்த வலியில் அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்ட விழிகளை இறுக மூடி நின்றவளிடமிருந்து அவளையும் மீறி முனங்கல் சத்தம் ஒன்று வெளிவந்தது.
அந்த ஓசை முன்னால் நின்றிருந்த அந்த ஆண்மகனின் அடிவயிற்றில் ஒரு விதப் பிரளயத்தை ஏற்படுத்தியதோ, ஏதோ உந்தப்பட்டவன் போல, அவள் பக்கமாகக் குனிந்து அவளுடைய முகத்தை மறைத்திருந்த கூந்தலை ஒற்றைக் கரம் கொண்டு விலக்கிக் காதின் ஓரம் செருக, இவளோ, அடக்க முடியாத வலியுடன் முகம் இரத்தப் பசையை இழக்கத் தன் முன்னால் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றாள் என்றால், கரிய அடர் திரைக்கும் பின்னால் மறைந்திருந்த முழு நிலவைக் கண்ட அந்த ஆண்மகனின் இதயமும் முதன் முறையாகத் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது.
ஒரு கணம் தன் விழிகளைக் கூட இமைக்க மறந்தவனாய், வலியில் சுருங்கிப் பின் அதிர்ச்சியில் விரிந்த அந்த எழில் விழிகளைக் கண்டு பேச்சற்றுப் போனான். அவனுடைய நாசி அவசரமாகப் பிராணவாயுவை முடிந்த வரை உள்ளே இழுக்க, அது நுரையீரலை ஏகத்திற்கும் வீங்க வைத்தது. அந்த வடிவான உருவத்திடமிருந்து தன் சிந்தையைத் திசை திருப்பச் சக்தியற்றவனாக, அதுவரை உள்ளே சேர்த்து வைத்திருந்த பிராணவாயுவைச் சீற்றமாக வெளியேற்றிய போது, அவனையும் மீறி அவனுடைய உதடுகள்,
“கோர்ஜஸ்…” என்று முணுமுணுத்தன.