Fri. Oct 18th, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 2

(2)

கடாவிற்குச் சற்றும் பொருத்தமில்லாத, எதிர்மறை காலநிலையைக் கொண்ட அவுஸ்திரேலியாவில்,

மங்கிய இரவுப்பொழுதின் தனிமையில் எங்கோ ஒரு வெட்டவெளியில் காற்றுகூட அசைய மறுத்து சிலையாய் நின்றிருந்த நேரம், அதற்கேற்ப அசையா மரங்களும், காய்ந்த முட்புதர்களும் மண்டிக்கிடக்க, அதன் மத்தியில் அவன் மட்டும் ஒற்றையாய் தனிமையில் எதையோ தேடிச் சென்றுகொண்டிருந்தான். அங்கு பார்த்தான், இங்கு பார்த்தான். சுழன்று தேடினான்… ம்கூம் அவன் தேடியது மட்டும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பயத்தில் வியர்த்துக் கொட்டியது. மருந்துக்குக் கூடப் புழு பூச்சிகளின் ஓசையில்லாத அந்த மயான அமைதி, இதயத்தின் பயவேகத்தை அதிகரிக்கச் செய்ததோ, அந்த முட்புதற்குக்குள் கால்கள் காயப்படுவதைக் கூடப் பொருட் படுத்தாது, முடிந்த வரைக்கும் வேகமாகக் கிடைத்த திக்கை நோக்கி ஓடத் தொடங்கினான் அந்தப் பன்னிரண்டு வயது சிறுவன். அந்த ஓட்டத்தின் முடிவு எங்கே என்று மட்டும் தெரியவில்லை. தொடக்கமும் முடிவுமில்லா ஓட்டம் அது.

ஒரு கட்டத்தில் இனியும் ஓட முடியாது என்பது போல மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, ஓட்டத்தை நிறுத்திவிட்டு வலித்த அடிவயிற்றைப் பற்றியவாறு குனிந்து நின்றான். வியர்த்துக் கொட்டியது. இதயம் பலமாகத் துடித்தது. அடுத்து எத்திசை போவதென்று தெரியவில்லை.

திடீர் என்று ஒரு பெண்ணுடைய கரம் அவன் முதுகில் படிந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நாற்பது, நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்தப் பெண்ணுக்கு. நீண்டிருந்த வேட்டைப் பற்களைக் காட்டியவாறு தன் கரங்களை அவன் மேனியில் பரவச் செய்ய, அச்சம் பிடரியில் அறைய, அந்தக் கரங்களைத் தட்ட முயன்றான். முடியவில்லை.

ஏனோ அவனுடைய கரங்கள் பலவீனமானது போல அசைய மறுத்தன. மறுப்பாய்ச் சொல்வதற்கு வாய் எடுத்தவனுக்கு வார்த்தைகள் வராமல் காற்று மட்டும்தான் வெளி வந்தது. ஒவ்வாத அந்தச் சூழ்நிலை கொடுத்த அச்சத்தில் வியர்த்து விறுவிறுக்க அந்தப் பெண்ணிடமிருந்து தன்னை விடுவிக்கப் பலமாக முயன்றவன், இறுதியில் முடியாதவனாகச் சோர்வுற்றுத் தன்னைக் காக்க யாராவது வருவார்களா என்பதுபோலச் சுத்திவரை பார்த்தான். எங்கும் கும்மிருட்டு. எதுவும் தெரியவில்லை.

சற்றுத் தொலைவில் இவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள் அன்னை. அவரை நோக்கித் தன் கரத்தை நீட்டிக் காக்குமாறு வேண்டினான்.

இவன் அவலம் அவருக்குப் புரியவில்லை போலும். நீதான் உன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்… சொன்னவாறு விலகிச் செல்ல, இவனோ முடிந்த வரைக்கும் தன் கரத்தை நீட்டி அன்னையின் கரத்தைப் பற்ற முயன்றான். பற்றியும் விட்டான்.

‘என்னையும் கூட்டிச் செல்லுங்கள்’ என்று யாசித்தான். அவரோ புன்னகைத்தவாறு, அவனுடைய கரத்தை உதறிவிட்டு விலகிச் சென்றார்.

இவனோ கதிகலங்கிப் போனான். திடீர் என்று அந்த நாற்பது வயது பெண்ணின் முகம் பயங்கரமாய் உருமாறி இவனை விழுங்குவது போல வாயைத் திறந்தது. அந்த வேட்டைப் பற்கள் இவனுடைய கழுத்தைக் கவ்வ நெருங்கியது. பதறியடித்து எழுந்தமர்ந்தான் அவ்வியக்தன்.

உடல் வியர்வையில் நனைந்துபோயிருந்தது. சுவாசப்பை காற்றைப் பலமாக உள்வாங்கிக்கொண்டது. வாயைத் திறந்து ஒரு வித சீறலுடன் மூச்செடுத்தவன், நடுங்கும் கரம் கொண்டு முகத்தைத் துடைக்க, ஆறாய் வியர்வை அவனுடைய கரத்தை நனைத்தது.

எப்போதாவது வந்து அவனைத் துடிக்க வைக்கும் பாழாய்ப் போன கனவு திரும்ப வந்திருப்பது புரிய, பற்களைக் கடித்தான்.

“xxxxx xxxx” என்று கெட்ட வார்த்தையால் எதையோ திட்டியவாறு, மல்லாக்காகப் படுக்கையில் விழுந்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர. அந்த நேரம் பார்த்து

டி… டி… டி…” என்று எழுப்பொலி அடிக்க, தலையைத் திருப்பிப் பார்த்தான். அவன் கைப்பேசிதான் அலறியது. எரிச்சல் மாறாமலே அதை எடுத்து நிறுத்திவிட்டு, நிறுத்திய கரத்தை தூக்கிக் கட்டிலில் போட, கரம், மெத்தென்ற எதிலோ விழுந்தது.

திரும்பிப் பார்த்தான்.

சற்றுத் தள்ளி, இவனுக்கு முதுகு காட்டியவாறு சரிந்து படுத்திருந்தாள் அந்த வெள்ளையினக் கொடியிடையாள்…

புருவம் சுருங்க அவளை உற்றுப் பார்த்தான். ‘யார் இவள்?’ யோசித்தவனுக்கு அவளுடைய முகம் நினைவில் வரவில்லை.

முன்னிரவு மதுக்கூடத்தில் மது அருந்தியபோது, தானாக இவன் வலையில் வந்து விழுந்தவள்தான் அந்தப் பெண். இவன் கிளம்பும்போதே அவளும் கிளம்பினாள். இவன் அறைக்கு வந்தபோது, எந்தச் சிக்கலுமில்லாமல் அவனோடு அறைக்கு வந்தாள். அதன் பிறகு, வழமையாக நடப்பதுதான். எல்லாம் ஓய்ந்த பிற்பாடு, அத்தனை யோசனைகளும் சிந்தனைகளையும் மறந்து விழிகளை மூடி உறங்கி விட்டிருந்தான். ஆனால் எப்போதாவது வந்து பயமுறுத்தும் அந்தப் பாழாய்ப் போன கனவு வந்து அவன் தூக்கத்தைக் கெடுத்து விட்டது.

எரிச்சலுடன் தோள்வரை வளர்ந்திருந்த சற்று சுருண்ட குழலைப் பின்னோக்கி வாரி இழுத்து விட்டவாறு தன்னைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டுப் படுக்கையை விட்டு எழ, ஆடையில்லாத அந்த ஆறடி மூன்றங்குல உயரத் தேகம் புலராத அந்தக் காலைப் பொழுதிலும் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது.

தேகமா அது தேக்கால் செதுக்கிய இறுகிய சிற்பமா? தூங்கி எழுந்திருந்தாலும் சற்றும் சோராத தசைகள், உருண்டு திரண்டு எழுந்து நிற்க, சோம்பல் முறிப்பது போலத் தன் தோள்களைப் பின்னால் கொண்டு சென்று தலையைப் பின்னுக்குச் சரித்து அங்கும் இங்கும் அசைக்க, பின் கழுத்திலிருந்து முதுகுவரை படர்ந்திருந்த பிரமாண்டமான சிறகை விரித்தாடும் கழுகின் பச்சை குத்திய படம், அவன் தசைகளை அசைத்தற்கு ஏற்ப சிறகை விரித்தும், சற்று சுருங்கியும் ஒடுக்கியும் நின்றது.

அவன் கரங்களை அசைத்த விதத்தில் திருகி எம்பி நின்ற இருதலைப் புஜங்களும் மேலும் அவனுக்கு வலுவூட்ட, உடலை முறுக்கி அசைத்ததால்,

தோள்கள் வலித்தனவோ? அகன்ற விரிந்த தோள்களை அழுத்திக் கொடுத்துவிட்டு, பின் தசைகளைச் சற்று இளக்கவைக்கும் நோக்கில் இடையை அங்கும் இங்கும் திரும்பியவாறு குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான்.

ஒரு மணி நேரம் கடந்த பின், குளியலறைக் கதவு திறக்க, ‘க்ளிம் பாடி வாஷ்’ வாசனை அந்த அறையையே நிரப்பியது.

பெண்களுக்குத்தான் அவன் மீது காதல் என்றால், அவன் குளித்துவிட்டு வந்த தண்ணீருக்குமா அவன் மீது காமம். அத்தனை சுலபத்தில் அவனை விட்டுச் செல்லமாட்டோம் என்பது போல, அவன் முடியிலிருந்து சொட்டு சொட்டாய் உதிர்ந்து அவன் தேகத்தில் உருண்டு வருடி முத்தமிட்டுத் தழுவிச் சென்று, ஒரு கட்டத்தில் மேலும் வேகத்தைக் கூட்டி உருண்டு சென்றது. ஆசை பேராசையானால் அதன் விளைவு என்னவாகும் என்று நமக்குத் தெரியாததா? அந்தோ பரிதாபம், ஆசைப்பட்டு வேகமாக இறங்கி என்ன பயன்? அவன் கட்டியிருந்த துவாய்க்குள் சிக்கிக் காணாமல் போயின.

இவனோ ஈரத் தலையை ஒற்றைக் கரம் கொண்டே மேவிவிட்டவாறு, கபேர்ட் அருகே வந்து அதில் தொங்கிக் கொண்டிருந்த டீ ஷேர்ட் ஒன்றை இழுத்து எடுத்து அணிந்தவாறு திரும்பிப் பார்த்தான்.

இன்னும் அந்தத் தேவதை எழவில்லை. மீண்டும் கபேர்டிலிருந்து ட்ராக் சூட்டையும் அணிந்து, இடையிலிருந்த துவாயை இழுத்து எடுத்து அங்கிருந்த இருக்கையில் போட்டுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன், கடகடவென்று படிகளில் இறங்கி சமையலறை நோக்கிச் சென்றான்.

யாருமில்லாத வீடு மயான அமைதியாக இருந்தது.

காப்பித் தயாரிக்கும் இயந்திரத்தில் காப்பியை வார்த்து ஒரு வாய் குடித்தவன், அதை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டுக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான்.

அதிலிருந்து முட்டையை எடுத்து, உடைத்துப் பாத்திரத்தில் இட்டு நுரை பொங்க அடித்துத் தேர்ந்த சமையல் வீரர் போல, சோஸ் பானில் ஆம்லட் போடும் போதே கைப்பேசி அடித்தது.

உடனே அடுப்பின் சூட்டைக் குறைத்தவன், மீண்டும் ஒரு முறை காபியை ஒரு வாய் அருந்திவிட்டுக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அங்கே மின்னிய இலக்கங்களைக் கண்டு முகம் மலர்ந்து போக, உடனே அதை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவன்,

“ஹாய் யங் லேடி… ஹெள ஆர் யு…” என்றான் குதுகலமாய்.

“நான் நன்றாக இருக்கிறேன் கண்ணா… நீ என்ன செய்கிறாய்?” என்றது இனிமையான குரல்.

“ம்… ஆம்லட் போட்டுக்கொண்டிருக்கிறேன் மிஸஸ் ஜான்சி…” என்றவன் சோஸ்பானைத் தூக்கி ஒரு எத்து எத்த, ஆம்லட், மேலே சென்று திரும்பி மீண்டும் கச்சிதமாய்ச் சோஸ்பானில் விழ, மீண்டும் அடுப்பில் வைக்கும்போதே

“இதற்குத்தான் சொன்னேன்… திருமணத்தை முடி என்று… நீயும் கேட்கிறாய் இல்லை…” என்று சந்தர்ப்பம் பார்த்து அவன் மூளையைச் சலவை செய்ய முயன்றார் ஜான்சி. இவனோ சிரித்தவாறு,

“மிஸஸ் ஜான்சி நான் திருமணம் முடிக்கத் தயாராகத்தான் இருக்கிறேன்… ஆனால் நீங்கள்தான் மாட்டேன் என்கிறீர்கள். இப்போது வேண்டுமானாலும் சரி என்று சொல்லுங்கள்… நாளைக்கே நம் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்…” என்று கிண்டலுடன் கூற, ஜான்சியோ,

“டேய் வடுவா… எனக்கு அன்றும் இன்றும் என்றும் என் ஜானத்தன்தான்… அவரை விட வேறு ஒருவரைச் சிந்தையிலும் தீண்டேன்…” என்றார் மறுப்பாய்.

அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தவன்,

“ப்ச்… திருமணத்தை முடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறீர்கள்… பின்பு மணம் முடிக்கக் கேட்டால் மறுக்கிறீர்கள்… என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்…” என்றவன், பேச்சு வாக்கிலேயே அடுப்பை நிறுத்திவிட்டுச் செய்த ஆம்லட்டை நேர்த்தியாய் இரண்டாய் வெட்டி, அவற்றை இரண்டு தட்டுகளில் அழகாய் வைத்து, பிரட்டையும் டோஸ்ட் பண்ணி முடித்திருந்தான்.

ஜான்சியோ,

“ஜோக் அப்பார்ட் சன்… நீ கட்டாயமாகத் திருமணம் முடிக்க வேண்டும் கண்ணா… உத்தியைப் பார்… அவன் திருமணம் முடித்துவிட்டான்… நீதான்… திருமணம் என்றாலே காத தூரம் ஓடுகிறாய்…” என்றார் வருத்தமாக.

“மிஸஸ் ஜான்சி… அண்ணா திருமணம் முடித்துப் பட்ட சிக்கல் பற்றித் தெரிந்திருந்தும், என்னை மணக்கச் சொல்கிறீர்களே… உங்கள் தைரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்…” என்றான் கிண்டலாய்.

“அவ்வி… கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கும். இப்போது சண்டை பிடிப்பார்கள்… பின்பு சேர்ந்துகொள்வார்கள்… உன் அண்ணனுக்கு அவன் மனைவியில்லாமல் இருக்க முடியாது… இன்னும் கொஞ்ச நாட்களில் அவளைக் கையோடு அழைத்து வந்துவிடுவான்…” என்று அவர் உறுதியாகக் கூற, தன் தோள்களைக் குலுக்கியவன்,

“ஐ டோன்ட் திங்க் சோ… ப்ரோவின் பெயரைப் பொது இடத்தில் ஏலம் விட்ட பின்பும் சமர்த்தியை மன்னித்து ஏற்றுக் கொள்வான் என்று நினைக்கிறீர்களா?” என்றான், தன் அண்ணனைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட தம்பியாக.

“நிச்சயமாக ஏற்றுக்கொள்வான் அவ்வி…” உறுதியாக வந்தது ஜான்சியின் குரல்..

“அடேங்கப்பா… அத்தனை உறுதியா?” ,

“நிச்சயம்தான் அவ்வி… ஏன் என்றால் உன் அண்ணா சமர்த்தியை உயிருக்கும் மேலாகக் காதலிக்கிறான். அந்தக் காதல், சமர்த்திச் செய்த தவறைச் சுலபத்தில் மன்னித்து விடும்…” என்றதும், தன் உதடுகளைப் பிதுக்கியவன்,

“தெரியவில்லை… ஆனால்… அவன் மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குப் போதும் மிஸஸ் ஜான்சி…” என்றான் மெல்லிய வருத்தத்துடன்.

“அவன் இருப்பான்… அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை… இப்போது நீ பேச்சை மாற்றாமல் நான் கேட்டதற்குப் பதிலைக் கூறு… திருமணம் முடிக்கத்தான் மறுக்கிறாய்… குறைந்தது ஒரு வேலையாளையாவது வைத்துக் கொள்ளேன்… உனக்குச் சுலபமாக இருக்குமே…” என்று அறிவுறுத்த அவ்வியக்தனின் முகம் ஒரு கணம் இறுகிப் போயிற்று. பின் சிரித்தவனாய்,

“வேலையாளா… இந்த ஜென்மத்திற்கு என் வீட்டில் ஒரு வேலையாள் இருக்காது மிஸஸ் ஜான்சி. அதே போல எனக்குத் திருமணம் முடிக்கும் எண்ணமும் கிடையாது… இப்படித் தனியாக இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது….” உறுதியாகச் சொல்ல, மறு பக்கம் கனத்த அமைதி நிலவியது.

“இல்லைப்பா… நிச்சயமாக உனக்கொரு துணை வேண்டும்… அப்போதுதான் வாழ்க்கை நிறைவா சந்தோஷமா இருக்கும். உனக்கென்று குழந்தை குட்டி வேண்டாமா? அது இருந்தால்தானே உன் வாழ்க்கை முழுமையடையும்…”

அதைக் கேட்டதுமட், அவ்வியக்தன் வேதனையுடன் ஒரு சிரிப்பைச் சிந்தினான்.

“எல்லாம் தெரிந்தும் இப்படிப் பேசுகிறீர்களே மிஸஸ் ஜான்சி. எங்களைப் பெற்றவர்களே இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்…? இந்தக் குடும்பம், குழந்தை.. குட்டிகள் இதெல்லாமே பொய் மிஸஸ் ஜான்சி. இட்ஸ் ஃபேக். திருமணம் என்பதே வெறும் உடல் உறவுக்காக… அதைத்தான் தினம் தினம் வித விதமான பெண்களுடன் அனுபவிக்கிறேனே. இதை விட என்ன வேண்டும்… எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாமல், சுதந்திரமாய், விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வது எத்தனை நன்றாக இருக்கிறது. இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்…”

“ப்ச்… இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? உன் அம்மாவும் அப்பாவும் அப்படி இருந்தார்கள் என்பதற்காக மற்றவர்களும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று எழுதி இருக்கிறதா… ஏன் நான் மகிழ்ச்சியாக வாழவில்லையா?” கோபமாக வந்தது அவருடைய குரல்.

“எங்கே வாழ்ந்தீர்கள்…? இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு, உங்களைப் பெற்றவர்களுக்காகவும், கூடப் பிறந்தவர்களுக்காகவும் உழைத்துக் கொட்டினீர்கள். உங்களுக்கே உங்களுக்காய் எப்போது வாழ்ந்தீர்கள் மிஸஸ் ஜான்சி…” என்று அவன் அழுத்தமாகக் கேட்க மறு பக்கம் சற்று அமைதி நிலவியது.

மறுக்க முடியாத உண்மை. திருமணம் முடித்துக் கணவரோடு ஐந்து வருடங்கள்தான் வாழ்ந்தார். அதன் பின் இலங்கைப் போர்ச் சூழலில் அவரைக் காவு கொடுத்த பின் தன் பெற்றவர்களுக்காகவும் சகோதரர்களின் முன்னேற்றத்திற்காகவும் கனடா வந்து உத்தியுக்தன் அவ்வியக்தனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதன் பின் இலங்கை சென்ற பிற்பாடு, தன் சார்ந்த குடும்பங்கள் நல்ல நிலைக்கு வந்ததும் கர்த்தருக்குத் தன்னை அர்ப்பணித்ததோடு, ஏழை எளிய மக்களுக்காக வாழத் தொடங்கினார். அவர் தனக்காக வாழ்ந்தது கிடையாதுதான். அதனால் அவர் ஒன்றும் நொடிந்து போகவில்லையே. மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார். இதைச் சொன்னால் நானும்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பான். ஒரு பெருமூச்சுடன்,

“கண்ணா… என் கதை இப்போது எதற்கு… எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக வாழவில்லையா?”

“வாழ்ந்தார்களா இல்லையா என்று அவர்களைத்தான் கேட்கவேண்டும் மிஸஸ் ஜான்சி. எத்தனை விழாக்களுக்குப் போய் வருகிறேன். அங்கே வந்து பாருங்கள் கணவன் மனைவியின் ஒற்றுமை தெரியும்… வீட்டின் உள்ளே பேசிக்கொள்வது கூடக் கிடையாது. வெளியே பார்த்தால் ஒற்றுமையான தம்பதிகள் என்று தம்பட்டமட் அடிப்பார்கள். இதில் கணவன் மனைவியைக் குற்றம் சொல்வதும், மனைவி கணவனைக் குற்றம் சொல்வதும்… ஒருவரின் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு… இதில் ஆதர்ச தம்பதிகள் என்று பீற்றல் வேறு. ரபிஷ்… என்னால் இப்படியெல்லாம் நடிக்க முடியாது மிஸஸ் ஜான்சி…” என்றான் அவன் முடிவாக. ஆனாலும் அப்படியே விட்டுவிட ஜான்சியால் முடியவில்லை.

“இல்லைடா… உனக்கு வயது வந்து தளர்ந்த பின்னாடி தோள் சாய என்று ஒருத்தி வேண்டாமா… நீ தினம் தினம் அழைத்து வருகிறாயே பெண்கள்…. அவர்களா வந்து நிற்கப்போகிறார்கள்? சொன்னால் வாக்குவாதம் செய்கிறாய்.” என்று கடுப்படிக்க, இவனோ அழகாக அலங்கரித்த சாப்பாட்டுத் தட்டுக்களை மேசையில் வைத்துவிட்டுப் படியேறிச் சென்றவாறு,

“ப்ச்… பணம் இருந்தால் போதும் மிஸஸ் ஜான்சி… தெரியாமல்தான் கேட்கிறேன்… திருமணம் முடித்துப் பிள்ளைகள் பெற்றவர்கள் எல்லோரையும் அவர்கள் பிள்ளைகளா வைத்துப் பார்க்கிறார்கள்… அப்படியானால் எதற்காக முதியோர் இல்லங்கள் இருக்கிறது…? எனக்கும் வயது வந்த காலத்தில், முதியோர் இல்லம் ஒன்று கிடைக்காமலா போய்விடும்” என்று அவர் காலை வார,

“குழந்தைகளை, காப்பகத்தில் விட்டால், குழந்தைகள் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விடத்தான் செய்வார்கள். கண்ணா, பணத்தின் பின்னால் ஓடாமல், குழந்தைகளுக்காக மட்டும் வாழ்ந்தால், அந்தக் குழந்தை ஒரு போதும் கை விடாதுடா… சொல்வதைக் கேள்… நல்ல பெண்ணாக உனக்குப் பார்க்கட்டுமா?” என்றார் ஆவலாக.

“அட… கர்த்தருக்குச் சேவகம் செய்யும் தொழிலை எப்போது கைவிட்டீர்கள்… இப்போது திருமணத்திற்கு ஆண் பெண் சேர்க்கும் தொழிலைத் தொடங்கிவிட்டீர்களா…?” கிண்டல் தொனித்தது அவனுடைய குரலில்.

“அவ்வி… நான் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்…” என்றபோது ஜான்சியின் குரலில் மெல்லிய சலிப்பும் கோபமும் எட்டிப் பார்த்தது. விடுவானா இவன்?

“ப்ச்… நான்தான் ஒருத்தியைச் சொன்னேன். நீங்கள் மறுத்துவிட்டீர்கள்… அப்படியிருக்கையில் யாரை நான் மணப்பதாம்…” என்று சலிப்புடன் கூறி, மிஸஸ் ஜான்சியின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்ய, அவரோ,

“உன் கூட யார்தான் பேசுவார்கள்… வை கைப்பேசியை…” என்று கோபத்துடன் கூறிவிட்டு அவர் இணைப்பைத் துண்டிக்க, இவனுடைய முப்பத்திரண்டு பற்களும் வெளியே தெரிந்தன. கூடவே விழிகள் கனிந்தும் போயின.

அவருடைய பதினெட்டு வருட வாழ்க்கையை இவர்களுக்காகவே அர்ப்பணித்த தேவதை. அவனைப் பொறுத்தவரைக்கும், தாய் தந்தை தோழி எல்லாமே அவர்தான். நெஞ்சம் நெகிழ்ந்து போகக் கைப்பேசியைப் பான்ட் பாக்கட்டில் போட்டவன், தன் அறைக்குள் நுழைந்தான்.

அந்த அழகி இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள். உதட்டில் மெல்லிய குறும்புப் புன்னகை படர, சற்றுத் தள்ளியிருந்த வானொலியின் அருகே சென்று, அதன் ஒலியை அதிகரிக்கச் செய்துவிட்டு, கறுப்பினர்களின் பயங்கர சத்தம் கொண்ட பாடல் ஒன்றை இசைக்க விட, அது ஆரம்பத்திலேயே “பூம்…” என்று அலறியவாறு ஆரம்பித்தது.

அந்த அலறலில் அந்த அழகி துடித்துப் பதைத்து எழுந்தமர்ந்தாள்.

எழுந்தவள், வீட்டின் மீது இடியேதும் விழுந்துவிட்டதோ என்பது போன்ற அச்சத்தில் வேகமாகத் துடித்த மார்பை அழுத்தியவாறு அண்ணாந்து பார்த்தாள்.

இல்லையே… எதுவும் உடைந்தது போலத் தெரியவில்லையே. குழப்பத்துடன் திரும்பியவளின் விழிகளில் பட்டான் அந்த ஆணழகன்.

அங்கிருந்த மேசையில் சாய்ந்தவாறு இவளைத்தான் ரசித்துக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் முன்னிரவு நடந்தவை நினைவுக்கு வர அழகாய் சிரித்தாள்.

“ஹாய் பேப்… குட் மார்னிங்…” என்றாள் கிரக்கமாய்.

“குட் மார்னிங் பியூட்டி… டைம் டு கோ ஹோம்…” என்றான் அழகிய பல்வரிசையைக் காட்டி.

அவன் சொன்னது, பாழாய்ப் போன அந்தப் பாடலின் சத்தத்தில் சுத்தமாகக் கேட்கவில்லை.

தன் காதுகளைச் சுட்டிக்காட்டிக் கேட்கவில்லை என்று கரங்களை விரித்துச் சைகை செய்ய அப்போதும் பாடலின் ஓசையை அவன் குறைக்கவில்லை. பதிலுக்கு நடந்து சென்றவன், காலடியில் நசிபட்ட அவள் மேலாடையை எடுத்து, அவளை நோக்கி வீசிவிட்டுத் தன் மணிக்கட்டைக் காட்டி சுவரில் மாட்டியிருந்த நேரத்தைச் சுட்டிக்காட்ட, அந்த அழகியின் முகம் வாடிப்போயிற்று.

நேரமாகிவிட்டது போ என்கிறானா? அவ்வளவும்தானா… ஒரு இரவோடு அவனுக்கும் அவளுக்குமான உறவு முடிந்ததா? இன்னொரு நாள் தங்க முடியாதா? முன்னிரவின் இனிமை கொடுத்த தித்திப்பு இன்னும் மிச்சமிருக்க, மேலும் ஆர்வம் பொங்கத் தன் முன்னால் திமிர் மிடுக்குடன் நின்றிருந்தவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.

அப்பாடி… எப்படி இப்படி இருக்கிறான். எத்தனையோ ஆண்களுடன் அவள் சுகித்திருக்கிறாள்தான். ஆனால் இவனோடு உறவு வைத்தது போல மகிழ்ச்சி எங்கும் கிடைத்ததில்லை. இன்னும் இன்னும் என்று ஏங்க வைத்த அவன் கூடல் கலையை எண்ணி இவளால் வியக்காமலும் இருக்க முடியவில்லை. அவனுடைய அணைப்பில் அவள் அடைந்த ஆனந்தம், இன்பம், இதுவரை எங்கும் அனுபவித்திராதது. அப்படியிருக்கையில் அவ்வளவும்தான் என்று எப்படி விட்டுச் செல்வது. இன்னும் ஒரு இரவு… ஒரே ஒரு இரவு அவனோடு கூடி மகிழ்ந்தால் போதும்… ஆசையில் விழிகள் மின்ன அவனைப் பார்த்து ஒற்றை விரலைக் காட்டி,

“ஒன் மோர் டே…” என்றாள் கெஞ்சலாய். புன்னகை மாறாமல் அவளை நோக்கிக் குனிந்தான் அவ்வியக்தன்.

அவன் குனிந்ததும், அந்தப் பெண்ணுடைய முகம் பெரும் எதிர்பார்ப்புடன் மலர்ந்தது.

உதடுகளோ சிவந்து துடிக்க அவன் முத்தமிட வருகிறான் என்கிற எண்தண்தில், தலையைச் சற்று மேலே உயர்த்தி அவனுடைய உதடுகளின் தொடுகைக்காகக் காத்திருக்க, அவனோ, ஏக்கத்துடன் பார்த்த அந்த முகத்தையே ஒரு கணம் உற்றுப் பார்த்தான். பின் அவளுடைய கீழ் உதட்டைப் பெருவிரலால் வருடிக் கொடுத்துவிட்டு,

“ஃபை மோர் மினிட்ஸ் பேபி. இஃப் யு ஆர் நாட் ரெடி ஐ த்ரோ யு அவுட் வித் அவுட் யுவர் க்ளோத்…” என்றவன், அழகாய் புன்னகைத்து அவளுடைய கன்னத்தைத் தட்டிவிட்டு வானொலியை நோக்கிச் சென்று இசையை நிறுத்திவிட்டுக் கீழே செல்ல, அந்தப் பெண்ணோ நிராகரிக்கப்பட்ட ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தவாறு வெளியேறிச் சென்றவனை வெறித்துப் பார்த்தாள்.

அந்தப் பெண் தயாராகிக் கீழே வர, உணவு மேசையில் அமர்ந்தவாறு தன் உணவை இரசித்து உண்டுகொண்டிருந்தான் அவ்வியக்தன்.

இவளைக் கண்டதும், அதே புன்னகையுடன்,

“வா… வந்து சாப்பிடு…” என்றான்.

மறுக்காமல் இருக்கையில் அமர்ந்தவள், அவன் செய்துவைத்த காலை உணவை உண்ணத் தொடங்க, அந்த உணவின் தித்திப்பில் கிரங்கித்தான் போனாள்.

“ம்… மிக நன்றாக இருக்கிறது…” என்று ரசித்து உண்டவள்,

“பைத வே… என்னுடைய பெயர்…” என்று தன்னை அறிமுகப் படுத்த முயல, தன் கரம் நீட்டி அவள் பேச்சைத் தடுத்தான் அவ்வியக்தன்.

“ப்ச்… ஐ டோன்ட் நீட் யுவர் நேம்… அப்படியே நீ பெயரைச் சொன்னாலும் அது என் நினைவில் நிற்கப்போவதுமில்லை… அதனால் உன் நேரத்தை விரயமாக்காதே…” என்றவன், சாப்பிட்டு முடித்து எழுந்து, சமையலறைக்குச் சென்றவன், திரும்பி வந்தபோதே, தன் பான்ட் பாக்கட்டில் கைவைத்து ஒரு காகித உரையை வெளியே எடுத்து அவள் முன்பாக மேசையில் வைத்தான்.

“இரவு என்னோடு தங்கியதற்கு மிக நன்றி…” என்று விட்டுத் திரும்ப, இவளோ,

“இனி நாம் எப்போது சந்திக்கலாம் அவ்வியக்தன்…” என்றாள் ஆவலாய்.

இவனோ ஒரு கணம் நிதானித்துப் புருவங்கள் சுருங்க திரும்பி இவளைப் பார்த்தான்.

“உனக்கு என்னைத் தெரியுமா?”

“ஒஃப் கோர்ஸ்… உன்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தெரியவில்லை என்றால் உன்னோடு ஏன் வருகிறேன்…” என்றவள், இப்போது அவ்வியக்தனை நெருங்கி நின்று தன் முன்னுடல் அவன் முன்னுடலுடன் உராயுமாறு நின்று, அவன் இடை சுற்றிக் கரங்களை எடுத்துச் சென்று,

“நீ எப்போது அழைத்தாலும் நான் வரத் தயாராக இருக்கிறேன் ஹான்சம்… இப்போதே இங்கேயே தங்குவதாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை… என்ன சொல்கிறாய்…” என்றவளின் குரலில் காமம் மிதமிஞ்சித் தெரிய,

இவனோ அதே இனிமை மாறாமல் அவள் கரங்களை விலக்கி, அவள் முகம் நோக்கிக் குனிந்தான். இப்போதும் முத்தமிடப்போகிறானோ என்கிற ஆவலில் அவள் காத்திருக்க, அவளுடைய காதுகளுக்கு நேராகத் தன் உதடுகளை எடுத்துச் சென்றவன், முன்னிரவில் அவன் கண்ட குறைகளைக் குறையின்றி வெட்கமின்றி அப்பட்டமாக அவள் காதுகளுக்குள் பச்சை பச்சையாகக் கூற, அவளுடைய முகம் அவமானத்தில் சிவந்து கறுத்துப் போனது,

இப்போது திருப்தியுடன் விலகியவன்,

“அதனால் நீ எனக்கு வேண்டாம் சோ…” என்றவன் அவளை விட்டுத் தள்ளி நின்று, வாசலைப் பார்த்துவிட்டுப் புன்னகை கொஞ்சம் கூடக் குறையால், “ப்ளீஸ் கோ அவுட்…” என்றான்.

அந்தப் பெண்ணோ, சற்றும் இளகாது நின்ற அவன் முகத்தையே வெறித்துப் பார்த்தாள். அவன் புன்னகைத்திருந்தான்தான். அந்தப் புன்னகைக்குப் பின்னால் மறைந்திருந்த ஏளனத்தையும் கிண்டலையும் புரிந்துகொண்டவளாக, அதற்கு மேல் அங்கிருந்து பயனில்லை என்பதையும் தெரிந்து கொண்டவளாக, ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்பது போல, அவன் மேசையில் வைத்த பணக் கவரை இழுத்து எடுத்தவாறு, முன்தினம் ஒரு பக்கத்து மேசையில் எறிந்திருந்த கைப்பையையும் எடுத்துக்கொண்டு வாய்க்குள் இதையோ முணுமுணுத்தவாறு வெளியேற, இவனோ

“உஃப்….” என்கிற பெரிய மூச்சொன்றை எடுத்து விட்டான்.

அந்த நேரம், இவனுடைய கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தான். அவனுடைய காரியதரிசிதான் எடுத்திருந்தாள். அதை உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி,

“யெஸ் லிசி…” என்றான்.

“மிஸ்டர் அவ்வியக்தன், கனடாவில் தொடங்கும் புதிய கிளைக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அது சம்பந்தமாக நீங்கள் ஒட்டாவா போகவேண்டியிருக்கிறது…”

லிசி சொன்னதைக் கேட்டதும்,

“இட்ஸ் குட் நியூஸ் பேபி… உடனே அங்கே செல்ல ஏற்பாடுகளைச் செய்…” என்று விட்டுக் கைப்பேசியை அணைத்தவனுக்கு, முகம் பளிச்சென்றானது.

What’s your Reaction?
+1
14
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1

Related Post

2 thoughts on “தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 2”
  1. 😬😬😬😬😬மேய்க்கிறது எருமை இதுல பெருமை வேற அடங்காப்பிடாரனுக்கு.
    ஜான்சிகிட்ட எம்பூட்டு எகத்தாளம் பேசுது இந்த வாயி பல்லு 32ம் தெரியறமாதிரி.
    தட்டிக்கைல குடுத்தா சரியாப் போயிடும் .பொக்கைவாயத் திரியட்டும்😤😤😤😤😤😤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!