Fri. Oct 18th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 5

(5)

 

அதன் பின், யசோதா கொடுத்த சிற்றுண்டியை உண்டு விட்டு, சற்று தள்ளியிருந்த அலைபேசி வைத்திருக்கும் கடையொன்றிற்குச் சென்று தான் வந்து சேர்ந்தது பற்றி அன்னைக்கு அறிவித்துவிட்டுக் கிணற்றுத் தொட்டியில் வேலன் நிறைத்து வைத்த தண்ணீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, யசோதாவுடன் பழைய பேச்சுக்களைப் பேசியவாறே இரவு உணவையும் முடித்துக்கொண்டு நிமிர்ந்தபோது கந்தழிதரன் மிகவும் களைத்துவிட்டிருந்தான்.

எட்டு மணிக்கே விழிகள் தூக்கத்தில் சொக்கத் தொடங்க, அதைக் கண்ட யசோதா,

“அட, தூக்கம் வருகிறதா… நான் வேறு பேசிக் கொண்டிருக்கிறேன், போப்பா… போய்த் தூங்கு… நாளைக்கு உன்னைக் காணவென்று உறவினர்கள் வரத் தொடங்கி விடுவார்கள்…” என்று கூற, நிம்மதியுடன் படுக்கைக்குப் போனவன், தொப்பென்று மல்லாக்காகச் சரிந்ததுதான் தெரியும், சரிந்த வேகத்தில் துள்ளி எழுந்தான் கந்தழிதரன்.

சுள்ளென்று வலித்த தேகத்தைத் தட்டிக் கொடுத்தவன், வேகமாக விரிப்பை ஒரு இழுவை இழுக்க, அங்கே கட்டில் முழுவதும் பரவியிருந்தது நெருஞ்சிமுற்கள்.

அதைக் கண்டதும் இவனுக்குச் சினம் எகிறியது. இப்படியேதாவது செய்வாள் என்று தெரியும்தான். ஆனால் இன்றே இப்போதே செய்வாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

‘ராட்சஷி… களைத்து விழுந்து வந்தவனைத் தூங்க விடுகிறாளா?” சினந்தவனாக, போர்வையையும், விரிப்பையும் சுருட்டி இழுத்து எடுத்தவாறு வெளியே நடந்தவன் ஒதுக்குப்புறமாக விரிப்புகளை உதறி, அங்கும் இங்குமாக ஒட்டிக்கொண்டிருந்த முற்களை இழுத்து எடுத்து எறிந்துவிட்டுப் போர்வையைச் சுருட்டிக்கொண்டு திரும்ப, பின் வாசல் கதவில் கரங்களைக் கட்டி, ஒற்றைப் புருவங்களை மேலே தூக்கியவாறு இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மேதினி.

அதைக் கண்டதும் இவனுக்குச் சுரு சுரு என்று கோபம் வந்தது. ‘உன்னை…’ என்றவாறு அவளை நோக்கி வந்தவன், அவள் விழிகளில் ஒரு கணம் வந்து மறைந்த அச்சத்தைக் கண்டு என்ன நினைத்தானோ, தன் திசையை மாறி அறைக்குள் நுழைந்து மீண்டும் விரிப்பை விரித்து, அதன் மீது விழுந்தவன்தான். மறு கணம் அவனிடமிருந்து அசைவு சுத்தமாக நின்று போக விழிகள் மூடிக்கொண்டன.

மறுநாள் காலை அழகாகவே விடிய, சிறிய அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த அம்மேதினி சூரியக்கதிர் பரவத் தொடங்கியதும், சோம்பலுடன், படுக்கையை விட்டு எழுந்தாள். முழங்கால்களும் கைகளும் விண் விண் என்று தெறித்தன. அப்போதுதான் முன்தினம் மருந்து போடாமல் படுத்ததே நினைவுக்கு வந்தது. போட்டிருந்தால் வலி சற்றுக் குறைந்திருக்கும். இனி இதைச் சொன்னால் மண்டகப்படிதான் கிடைக்கும் என்பதைப் புரிந்தவளாகக் கிணற்றிற்குச் சென்று முகத்தைக் கழுவிவிட்டு, காயத்தின் மீதும் தண்ணீர் ஊற்றி வலிக்காமல் துடைத்துவிட்டு விந்தியவாறே, சமையலறைக்கு வர, அன்னை வரப்போகும் உறவினர்களுக்காகப் பலகாரம் செய்யும் முனைப்பில் இறங்கியிருந்தார்.

‘ஆம் கந்தழிதரனை பார்ப்பதற்கென்று பெரிய பட்டாளமே வரத்தொடங்கும். இனி வருபவர்களை வெறும் தேநீருடன் கொடுத்து அனுப்பிவிட முடியாதே. மூக்கு முட்டத் தின்பதற்கு ஏதாவது பலகாரங்கள் கொடுக்க வேண்டும். சரி கொடுத்ததைத் தின்றுவிட்டுப் போனால் பரவாயில்லை, சற்றுத் தள்ளிச் சென்று குறை பேசியவாறு போவார்கள். இவர்களுக்காக எல்லாம் அம்மா ஏன்தான் மெனக்கெடுகிறார்களோ,’ என்று எண்ணியவளுக்கு, ஏனோ உறவினர்களின் வருகை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணமும் இல்லாமல் போகவில்லை.

இதுவரை இவர்களை விசாரித்து வீடு தேடி யாரும் வந்ததில்லை. இப்போது கந்தழிதரன் வந்துவிட்டான் என்பதைத் தெரிந்ததும், அவனைப் பார்க்கப் படையோடு வருகிறார்கள். அவர்கள் வருவதில் பிரச்சனை இல்லை. அவள் அன்னையல்லவா முறிகிறார். பாவம் வாழ்வில் எந்தச் சுகத்தையும் அனுபவிக்காதவர். தந்தை இறந்த பின்பு ஒருத்தியாகவே குடும்பத்தைக் கொண்டு நடத்துபவர்… அவர் சிரமப்படுவதுதான் இவளுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது.

அன்னையை நினைத்ததும் நெஞ்சம் அன்பில் வீங்க, அவரை நெருங்கி அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், அவர் பொரித்தெடுத்த பயிற்றம்பணியாரத்தை வாய்க்குள் போட்டு அதன் சுவையை விழிகள் மூடி அனுபவித்து,

“ம்… அந்தக் கந்துவட்டிக் காரன் வந்ததும் நன்மைக்குத்தான்… சும்மா… பலகாரங்கள் அள்ளுகிறது…” என்று ரசிக்க, கழுத்தைக் கட்டியிருந்த தன் மகளின் கையில் கரண்டியால் ஒரு போடு போட்டவர்,

“ஏய்… அவருக்கு மரியாதை கொடு என்றல்லவா சொன்னேன்… அவன் உன் அத்தானடி… வயசுக்கு மூத்தவனை இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா… இந்த மரியாதைதானா நான் உனக்குச் சொல்லிக் கொடுத்தேன்…” என்று கடிய, அவரைச் செல்லக் கோபமாக முறைத்தாள் அம்மேதினி.

“கந்துவுக்கு மரியாதையா… உலகம் தலைகீழாக மாறிவிடாது… அவனுக்கு மரியாதை கொடுப்பதற்குப் பதில், நான் வீட்டிலிருக்கும் மரத்துக்கு மரியாதை கொடுப்பேன்…” என்றாள் அலட்சியமாக.

“ஏய்… என்னடி ஆச்சு உனக்கு… இப்படிப் பேசுகிறாய்… எது வேண்டும் என்றாலும் அவனிடம்தானே செல்வாய்… இப்போது சின்னதிற்கும் துள்ளுகிறாய்… எதற்கு இத்தனை வெறுப்பு அவன் மீது?” என்ற அன்னையை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தாள் அம்மேதினி. பின் தன் கரத்தலிருந்த இரண்டு பயற்றம் உருண்டைகளையும் தூக்கிப் பார்த்து அதில் எது சிறியது, எது பெரியது என்று ஆராய்ந்தவாறே அன்னையைப் பார்த்து,

“வெறுப்பு இல்லைமா… ஆதங்கம்…  நம்மை எல்லாம் விட்டுவிட்டு ஆயுதம் ஏந்தப் போனாரே… அப்போது தோன்றிய கோபம். இன்னும் அது மனதினில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது… மாமியும் மாமாவும் பட்ட வலி… கதறல்… இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… அன்றுதான் அவர்கள் கதறி நான் பார்த்தேன்… நாம் எல்லோரும் வேண்டாம் என்றுதானே போராட்டத்தில் சேர்ந்தார். அவருக்கு நாம் வேண்டாம் என்றால் எனக்கும் அவர் வேண்டாம்… அந்த ஆத்திரம் வேதனை… இன்னும் அப்படியே இருக்கிறதும்மா… அதைச் சுலபத்தில் என்னால் மறக்க முடியவில்லை…” என்று அவள் கூற ஒரு கணம் அமைதி காத்தார் யசோதா.

“கண்ணம்மா… அது நாட்டுத் தேவை கண்ணம்மா… அந்த உணர்வில் போராட்டத்தில் இணைந்து கொண்டார். இது தவறா? அதற்கெல்லாம் பெரிய மனம் வேண்டும்டா…! இத்தனை அன்பான குடும்பத்தை விட்டுவிட்டுப் போராட்டத்தில் இணைவது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. அதற்கு நிறைய மனக் கட்டுப்பாடு வேண்டும். தியாக எண்ணங்கள் வேண்டும். எல்லா வற்றிற்கும் மேலாக நாட்டுப் பற்று வேண்டும். அந்த உணர்வு இருப்பவர்களுக்குக் குடும்பம் இரண்டாம் பட்சம் தான்டா… இதை நாம் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது…” என்று அவளுக்கு விளங்கப் படுத்த முயல,

‘பதினொரு வயதில் மனதில் ஆழமாக விழுந்த அடி அத்தனை சுலபத்தில் அழிந்துவிடுமா என்ன? என்னவன், எனக்கானவன் என்று நம்பியிருந்த அந்த நாயகன்… எனக்கு நீயெல்லாம் முக்கியமல்ல, அதை விட முக்கியமானது ஒன்றிருக்கிறது அதை நோக்கிப் போகிறேன் என்று சொல்லாமல் கொள்ளாமல் போன போது சாதாரணப் பெண்ணவள், எப்படித் தாங்கிக் கொள்வாள். அன்று உள்ளத்தில் அடிவாங்கியவள், இன்றுவரை எழவில்லை.’

எப்படியோ அவனை மீட்டெடுத்து வந்த பிறகும், இவளால் அவனோடு சகஜமாகப் பேச முடியவில்லை. மனதின் ஆழத்தில் விழுந்த அந்தக் கரும் புள்ளியை அவளால் அழித்து விடவும் முடியவில்லை. சொல்லப்போனால் அந்தப் போராட்டத்தின் மீது கூட அவளுக்குக் கோபம்தான். அது இருந்ததால் தானே அவன் அதில் இணைந்து கொண்டான். பாவம், அது உரிமையை மீட்டெடுக்க எழுந்த போர் என்பதை அப்போதும் அவள் உணர்ந்து கொள்ளவில்லை, இப்போதும் அவளால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

இவர்கள் இருவரின் பேச்சுச் சத்தம் கேட்டு விழித்த கந்தழிதரன், அத்தையின் கரத்தால் தேநீர் வார்த்துக் குடிக்கும் ஆர்வத்தோடு, முகத்தைத் தேய்த்தவாறு சமையலறைக்குள் வந்தவனுக்கு, இருவரும் பேசுவது கேட்க அப்படியே நின்றுவிட்டான்.

அவன் மீது இத்தனை கோபத்தை வைத்திருக்கிறாளா அம்மேதினி? இன்று வரை குற்ற உணர்ச்சியில் வேதனைப்படும் சம்பவங்களில் ஒன்று, தாய் தந்தையின் அனுமதியில்லாது போராட்டத்திற்குப் போனதும், அதே போராட்டத்தில் இருந்து முற்றுக் காணாமல் இடையிலே திரும்பி வந்ததும்.

அப்போது இருந்த ஆத்திரத்தில், உயிரைக் கொடுத்தாவது நீதி கண்டுவிட வேண்டும் என்கிற ஆவேசத்தில்தான் போராட்டத்தில் இணைந்தான். அதனால்தான் தாய் தந்தை வந்து அழைத்த போது ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டும் போரில் முற்றுக்காணாது, வெற்றியும் காணாது வீடுகாணப் போக மறுத்தான். ஆனால் என்னதான் போராட்டத்தை விட்டு வர முடியாது என்று மறுத்தாலும், உயர் பதவியிலிருப்பவர்களின் கட்டளையை மதித்துத் திரும்பி வரவேண்டித்தான் இருந்தது.

இன்று வரை நாட்டிற்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்கிற வலி அவனைத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாட்டையும் தாயையும் ஒரே தராசில் வைத்தபோது, அன்னையின் பாசம் அவனை வென்றுவிட, அவருக்காய் தன் ஆசைகளைக் குழி தோன்றிப் புதைத்துவிட்டு வாழப் பழகிக் கொண்டான் கந்தழிதரன்.

தமிழ்த் தாய்க்காய், தாய் தேசத்திற்காய், போராடப் போனவன், ஒரு மகனாய் பெற்ற தாய்க்காகத் திரும்பி வந்தான்.

அவன் வலி யாருக்குத் தெரியப்போகிறது. ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குள் நுழைந்தவன், மீண்டும் கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விழிகளை மூட, ஆறு மாதங்கள் அவன் மேற்கொண்ட போர்ப் பயிற்சிகள் நினைவுக்கு வந்தன. முதன் முதலாக அவன் கரங்களில் ஆயுதத்தைக் கொடுத்தபோது, உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை இன்று வரை மறக்க முடிந்ததில்லை.

அங்கே சமையலறையில், அவன் வந்ததும், தாம் பேசியதைக் கேட்டுவிட்டுச் சென்றதும், எதுவும் தெரியாமல், தாயோடு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.

“அம்மா… இந்த நாட்டுப்பிரச்சனை வந்ததிலும்  நம்மளுக்கு ஒரு லாபம் இருக்கிறதுதான்…” என்றாள் திடீர் என்று.

“என்னடி சொல்கிறாய். நாட்டுப்பிரச்சனையால் நம்மளுக்கு என்ன லாபம் இருக்கப் போகிறது? என்று பொரிப்பதற்காக உருண்டைகளைப் போட்டவாறு கேட்க,

“இல்லை… இந்த நாட்டில் இருக்கும் நம்முடைய பத்து வீதத்து உறவினர்களையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. இந்த நிலைமையில், நாட்டுப் பிரச்சனையால் சிக்கிச் சின்னா பின்னப்பட்டு வெளிநாடுகளுக்குப் போன அத்தனை உறவினர்களும் இங்கே இருந்திருந்தால், நம்முடைய நிலை என்னவாகியிருக்கும்… அம்மாடியோ…! நினைத்தாலே பயமாக இருக்கிறதே… தூக்கு மாட்டித் தொங்கிவிட வேண்டியதுதான்..” என்று சொன்னவளைத் தாய் மெல்லிய வலியுடன் பார்த்தார்.

“நீ சொல்வதும் சரிதான் மேதினி… உறவுகள் எல்லாமே சிதறிவிட்டதே! என்று நினைக்கும்போதுதான் தாள முடியவில்லை. சொந்த சகோதரங்கள், மாமன் மச்சான், அங்காளி பங்காளி என்று எல்லோரும் ஒவ்வொரு திசைக்குப் போய் விட்டார்கள். எல்லோரும் ஒவ்வொரு நாடு… நிறையப் பேருடன் தொடர்பாடல் கூடக் கிடையாது… முன்னமெல்லாம் ஆயிரம் உறவுகள்… எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். திருமணம் காட்சி என்றால் ஊரே கூடி நிற்கும்… இப்போது… யார் எவர் எந்த உறவு என்று எதுவும் தெரிவதில்லை. இவ்வளவு ஏன்? சொந்த சகோதரர்களின் பிள்ளைகளைக் கூட அறிமுகப் படுத்தப்பட வேண்டிய இக்கட்டான நிலைமை. அவர்களுக்கும்  இது என்னுடைய உறவுகள் என்கிற பாசம் பிறப்பதில்லை… அவர்களையும் குறை சொல்ல முடியாதே. சேர்ந்து வாழ்ந்தால்தானே உறவுகளின் பாசம் வரும்” என்று பெருமூச்சுடன் கூறியவர், வேதனையுடன் நிமிர்ந்து எங்கோ பார்த்துவிட்டு, “கூடி இருப்பதுதானே உறவு… இப்படி அந்நியப் பட்டிருந்தால் அது என்ன உறவு? முன்னம் என்றால் அக்கம் பக்கம் வந்து உதவி செய்வார்கள். வேலை எல்லாம் பழுவாகவே தெரியாது. இப்போது நமது வேலையை நாம்தான் மாங்கு மாங்கென்று செய்யவேண்டும். ம்… அன்று நாங்கள் அனுபவித்த மகிழ்ச்சியை, இன்றைய இளம் சந்ததிகள் அனுபவிக்கிறார்களா? இல்லையே… அந்தப் பழைய காலம் எப்போது வருமோ…” என்று வேதனையுடன் கூற,

“வாய்ப்பில்லை கண்ணா… வாய்ப்பில்லை… நடக்காததிற்காக ஏங்கிப் புண்ணியம் இல்லை அம்மா…” என்று கூறிவிட்டு அன்னை பொரித்த பலகாரங்களைப் பெட்டியில் போட்டு அடுக்கத் தொடங்கினாள்.

ஒருவாறு எல்லா வேலைகளும் முடித்து, ஒரு குவளையில் தேநீரை ஊற்றிக்கொண்டே,

“தம்பி எந்த நேரமும் எழுந்து விடுவார்… போ… போய்த் தொட்டியில் தண்ணீரை நிரப்பு… வேலன் வேறு வேலையாக வெளியே சென்றிருக்கிறான்…” என்ற அன்னை தேநீர் குவளையுடன் கந்தழிதரனின் அறை நோக்கிச் செல்லத் தொடங்க, தன் நெற்றிக் கண்களைத் திறந்தாள் அம்மேதினி.

“ஏன்..? ஏன் நான் தண்ணீர் நிரப்ப வேண்டும்…? ஐயாவுக்கு நிறைக்க முடியாதாமா? ஐந்து வருடங்களுக்கு முன்பு அவர் செய்ததுதானே… இப்போது மட்டும் செய்வதற்கு என்னவாம்…”

“ஏன்டி ஒரு நியாயம் வேண்டாமா… அங்கிருந்து இங்கே வர எத்தனை சிரமப்பட்டிருப்பார்… களைத்திருப்பார்… ஒரு நாளில் போகும் பயணக் களைப்பா கொழும்பிலிருந்து இங்கே வருவது… பாவம் என்று கேட்டால் அதிகம்தான் சிலிர்த்துக் கொள்கிறாய்… தெரியாமல்தான் கேட்கிறேன்… முன்னம் அவன்தானே உனக்குத் தண்ணீர் அள்ளித் தந்தான்… இப்போது அவனுக்கு அள்ளிக்கொடுத்து உன் கடனைத் தீர்க்கவேண்டியதுதானே…” என்று அன்னையாய் கேட்க, எரிச்சலுடன் தாயைப் பார்த்தாள் அம்மேதினி.

அன்னை சொன்னது உண்மைதான். முன்பு அவள் குளிக்க முன்பு அவனே தண்ணீர் இறைத்துக் கொடுப்பான். அதுவும் அவளே போய்க் கேட்பாள்,

“கந்து கந்து… குளிக்கவேண்டும்… தண்ணீர் இறைத்துக் கொடேன்…” என்பாள். அவள் கேட்டதற்காகவே தொட்டியில் தண்ணீர் நிரைப்பான் கந்தழிதரன். இப்போது நினைத்தாலும் அவனை எண்ணி உள்ளம் உருகும்.

ஆனாலும் ஏனோ இப்போது அவனுக்குச் செய்யப் பிடிக்கவில்லை. அவன் செய்த காரியம் ஒரு பக்கமிருந்தாலும், அதையும் தாண்டி எதோ ஒரு தயக்கம்… முன்னைப் போல அவனோடு ஒன்ற விடவில்லை.

‘ஒரு வேளை ஐந்து வருட இடைவெளி, பழைய அன்னியோன்யத்தை மீட்டுக் கொடுப்பதற்குப் பதில், ஒரு வித சங்கடத்தைத் தவிப்பை, ஒரு வித ஒவ்வாமையைக் கொடுக்கிறதோ? இல்லை பழைய இளைஞனின் உருவம் மாறி, அங்கே முழு ஆண்மகனாக வந்ததும் காரணமாக இருக்கலாமோ… அல்லது முன்னிருந்த சிறுமி மாயமாக மறைந்து அங்கே கன்னியாய் உருவெடுத்தது காரணமாக இருக்குமோ… இவை எல்லாவற்றையும் விட, உறவுகள் வேண்டாம் என்றுவிட்டுப் போராட்டத்தில் இணைந்ததால் அவனை வெறுக்கிறோம் என்று மனம் சுட்டிக்காட்டுவதால், வந்த ஒதுக்கமாக இருக்குமோ… எது எப்படியோ… அவளுடைய கந்தழிதரன் வேறு… இவன் வேறு. புதிதாக வந்தவனிடம், முன்னைபோலப் பழக முடியவில்லை. அதுதான் நிஜம்.’

முறுக்கியவாறு நின்ற தன் மகளைக் கண்டதும்,

“சரி சரி வேண்டாம் விடு… இந்தத் தேநீரைக் கொடுத்துவிட்டு நானே நீர் இறைக்கிறேன்… நீ போய் வேலையைப் பார்…” என்று சலிப்புடன் கூறிவிட்டுத் திரும்ப,

“நானே போய்த் தொலைகிறேன்…” என்று அன்னையைத் தடுத்தவள், முகத்தை ஓரடிக்கு நீட்டியவாறு கிணற்றடியை நோக்கிச் சென்றாள்.

அவள் தாய் கடைசியாக இந்த அம்பைத்தான் எய்வாள். அவர் சிரமப்பட வேண்டுமே என்ற எண்ணம் வந்தால், அம்மேதினி தானாகவே அந்த வேலையைச் செய்துவிடுவாள்.

அவன் குளிப்பதற்காகத் தண்ணீர் இறைக்கக் கிணற்றை நோக்கிப்போன அம்மேதினி, கந்தழிதரன் வருவதற்குள் நீர் இறைக்கவேண்டும் என்கிற வேகத்தில், துலாவில் தொங்கிக் கொண்டிருந்த வாளியைப் பற்றி இழுத்துக் கிணற்றிற்குள் இறக்கத் தொடங்க, அவள் இறக்கிய வேகத்தில் ‘தொப்’பென்கிற சத்தத்துடன் வாளி தண்ணீருக்குள் சென்று மூழ்கியது. அடுத்துக் கட கட என்று வேகமாக நீரை மொண்டு மொண்டு தொட்டிலில் நிரம்பத் தொடங்கினாள்.

அவள் கால்வாசி கூட இறைத்திருக்கமாட்டாள். சற்றுத் தொலைவில் மெல்லிய சரசரப்புக் கேட்கத் தன் விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தாள். கந்தழிதரன்தான் பற்களைப் பற்தூரிகையால் தீட்டியவாறு வந்துகொண்டிருந்தான்.

“ம்கும்… மந்திர ஆலோசனைய முடித்துவிட்டு வந்துவிட்டார் இளவரசர்… இவருக்குச் சேவகம் செய்யச் சேடிப்பெண்ணாக நான் ஒருத்தி… எல்லாம் தலையெழுத்து…” என்று மனதிற்குள் சினந்தவாறு நிமிர்ந்து பார்க்க,

வெண்ணிற டீ ஷேர்ட்டிற்குச் சிவப்பில் ஷோர்ட்ஸ் அணிந்திருந்தான். கழுத்தில் தூவாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. இடது கரத்தில் சவர்க்காரம் ஏந்திவந்தவனைக் கண்டு அலட்சியமாக உதடுகளைச் சுழித்தவள், தன் வேலையில் கவனமாக, இவனோ கரத்திலிருந்த துவாயைக் கிணற்றுக் கட்டிலில் போட்டுவிட்டு, சவர்க்காரத்தை எடுக்க வசதியாகத் தொட்டியின் மேற்புரத்தில் வைத்து,

“என்ன தண்ணீர் இறைக்கிறாயா?” என்றான். இவளே கீழே இறக்கிய வாளியைத் தண்ணீரோடு மேலே இழுத்தவாறு,

“ம்… பனைமரம் ஏறிக் கள்ளு இறக்கிக்கொண்டிருக்கிறேன்… ஒரு வாய் குடிக்கிறது…” என்று விட்டு வாளியை மேலே இழுக்க, இவனோ மெல்லியதாகச் சிரித்தவாறு,

“நீ இறக்கிறது கள்ளாயிற்றே… போதை உச்சியில் சென்று அடிக்கும்… அதனால் ஆளை விடு…! அது சரி…! கள் ஏன் தண்ணீர் நிறத்தில் இருக்கிறது…” என்று கிண்டலடித்தவாறு தன் டீ ஷேர்ட்டை ஒரு இழுவையில் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டுத் திரும்பிய  நேரம், இவளும்தண்ணீரை எடுத்துத் தொட்டிக்குள் ஊற்றுவதற்காகத் திரும்பினாள். இருவரும் நேர் கோட்டில் மிக மிக நெருக்கத்தில் சந்தித்தனர். கந்தழிதரனை வெற்று மேலுடன் கண்ட அம்மேதினிக்கு, அதன் பின் அத்தனை அசைவுகளும் மறந்து போயின.

இது வரை இத்தகைய உடல் திடத்தோடு யாரையுமே பார்த்தது கிடையாது. இதுதான் முதன் முறை. இப்படியும் ஆண்களுக்கு உடம்பு இருக்குமா என்ன? இங்கே விவசாயம் செய்யும் ஒரு சில ஆண்களின் உடல் இப்படித்தான் இருக்கும். ஆனால் இந்தளவு திரண்டிருப்பதில்லை. அன்று வெக்கை சற்று அதிகமாக இருந்ததாலோ என்னவோ நன்றாகவே வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தான் கந்தழிதரன். அதனால் அவனுடைய திருமேனியும் எண்ணெய் பூசிய உடலெனத் தினவெடுத்துத் தன் திடகாத்திரத்தை அப்பட்டாக அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

அவள் ஒன்றும் கந்தழிதரனை வெற்றுடம்போடு பார்க்காதவள் அல்ல. அவன் கடும் வேலைகள் செய்யும் போதெல்லாம் மேலாடையைக் கழட்டிவிட்டு, சாரத்தை சண்டிக்கட்டாகக் கட்டிக்கொண்டுதான் வேலை செய்வான். அப்போதெல்லாம் இந்தளவுக்குத் தேகம் தினவெடுத்து இருந்ததில்லை. ஆனால் இப்போது…

முன்னை விட அகன்றிருந்தான். முகத்திலிருந்த மென்மை மாயமாக மறைந்திருந்தது. கன்னங்கள் இறுகி, முகம் இறுகி அந்தக் குழந்தை முகம் முற்றாகத் தொலைந்திருந்தது.

அவன் பற்களைத் தீட்டிக் கொண்டிருக்கும்போதே அசைந்த கரங்களின் பலத்தைக் கண்டு தடுமாறித்தான் போனாள். சிகிரியா குன்றைப்பிளந்து இரு கரங்களில் ஒட்டிக்கொண்டானா என்ன? கடவுளே இவன் கரத்தால் ஒரு அடி வாங்கினால் போதும், நிச்சயமாக அடி வாங்கியவன் பரலோகம் போய்விடுவான். மெதுவாக விழிகளை விலக்க, இப்போது அவனுடைய கழுத்தில் சென்று தங்கியது அவளுடைய விழிகள் என்னும் வண்டுகள். அப்பா அவற்றைப் பற்ற இவளுடைய இரு கரங்களும் போதாது. அத்தனைக்கு அகன்றிருந்தது. ஆண்களுக்கு இப்படி உடல் இருக்கிறதா என்ன? அல்லது இவனுக்கு மட்டும்தானா இப்படி?

தன்னை மீறி விழிகளைச் சற்றுக் கீழே இறக்க அவனுடைய அகன்ற பரந்த பாவடிப மார்புகள்… தேக்கால் செதுக்கி வைத்த மார்புகளா என்ன… ஏனோ அந்த இறுகிய மார்பைத் தொட வேண்டும் என்று பேரவா எழ,  அடிவயிற்றிலிருந்து அந்தக் குட்டி இதயம் வரை வண்ணத்துப் பூச்சிகளின் படபடப்பு. அந்தப் படபடப்பைச் சிரமப்பட்டு அடக்கியவளாக விழிகளை இன்னும் கீழே இறக்க, முடியடர்ந்த அடி மார்பிலிருந்து அடி வயிறு வரை தெரிந்தன மெல்லிய வரி வரியாய் எம்பி நின்ற திரட்சிகள். அந்தத் திரட்சிகளைக் கண்டு வியந்தவளாக நிமிர்ந்தவளுக்கு ஏனோ அவனுடைய அகன்று விரிந்த பரந்த தோள்களும் மார்பும் அவளைப் பார்த்து என் மீது சாய வா அரவணைத்துக் கொள்கிறேன் என்று அழைப்பது போல இருக்க அம்மேதினி விழிகளைச் சிமிட்டக்கூட மறந்துபோனாள்.

இதோ இவனுடைய இந்த உருவ மாற்றம்தான், மேலும் அவனை நெருங்க விடாது செய்கிறது. ஏதோ ஒரு தயக்கத்தைக் கொடுக்கிறது. ஒரு வித அச்சத்தை… எல்லாவற்றையும் மீறி ஒரு வித படபடப்பைக் கொடுக்கிறது. அடி வயிற்றில் இனம் தெரியாத ஒரு அவஸ்தை சிட்டுக்குருவியாய் பறந்து நெஞ்சில் வந்து முட்டி நிற்கிறது. அது பருவக் கோளாறா, இல்லை இளமைக்கான தேடலா… அது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் அவனுடைய வருகை, அவனுடைய அருகாமை, அவனுடைய ஆண்மை இவளை நிலை குழையச் செய்தது என்பது மட்டும் உண்மை.

அவளுடைய கந்தழிதரன் இத்தனை இறுக்கமானவன் அல்ல. இத்தனை பெரியவன் அல்ல. இத்தனை பலசாலி அல்ல. அவன் மென்மையானவன். இவன்… இவன்… அசுரன்.

அவளையும் மீறித் துடித்த உதடுகளை, மேல் பற்கள் கொண்டு கடித்து அடக்க முயன்றவாறு நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ இடையில் தன் இடக்கரத்தைப் பதித்து வாயிலிருந்த நுரையை ஓரமாகத் துப்பிடவிட்டு, அவள் நிறைத்த தண்ணீர் தொட்டியைச் சற்று எட்டிப் பார்த்தான்.

கால்வாசி கூட நிரம்பவில்லை. இது போதாதா அவனுக்கு?

“வக்கணையாக வாய்கிழியப் பேசத் தெரிகிறது… இத்தனை நேரமாக இவ்வளவுதானா இறைத்திருக்கிறாய்?” என்று அவன் கிண்டலாகக் கேட்டாலும் அவனுடைய விழிகள் கனிவுடன் தன் முன்னால் நின்றிருந்த அந்தத் தையலவளைத்தான் ரசனையுடன் பார்த்தன. பார்த்தவனின் இதயத்தில் என்றுமில்லாத புதுவித தடுமாற்றம்.

வெக்கையாலும், செய்யும் வேலையாலும் வியர்வைத் துளிகள் நெற்றியில் பூத்திருக்கத் தலைக்கூடாக வெளியேறிய தண்ணீர் கன்னம் வழியாக வழிந்து கழுத்து வியர்வையோடு சேர்ந்து பயணித்து மார்பில் அடைக்கலமாகியிருக்கக் கூடவே தண்ணீர் இறைத்ததின் பயனாய், அவளுடைய சட்டை தண்ணீராலும், வியர்வையால் அரைவாசி நனைந்திருந்தன.

முன்பு ஒரு வேலையும் செய்யாதவள். அவளுக்குச் சேவகம் செய்யவென்றே இரு குடும்பங்களும் காத்திருக்கும். இப்போது… நினைக்கும் போதே ஆச்சரியமாக இருந்தது கந்தழிதரனுக்கு.

முதன் முதலாக அவன் கரங்களைப் பற்றிப் பொக்கை வாய்ச் சிரிப்புச் சிரித்த குழந்தைதான் அவனையும் மீறி நினைவுக்கு வந்தது.

‘அவனிடம் வந்து பெரிய பெண் ஆனது கூடத் தெரியாது, முகம் கசங்க செத்துவிடுவோமோ என்று பயந்து அழுத பெண் இவள்தான் என்று இன்னும் நம்பக் கூட முடியவில்லை. காலங்கள் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. அதுவும் பெண்களைத் தலைகீழாக அல்லவா மாற்றி விடுகிறது. பதினாறு வயது பருவத்தையும் மீறி இயற்கை எப்படி அழகாக இவளை வடித்திருக்கிறது. கோவில் சிற்பங்கள் கூட இவளைக் கண்டு நாணுமே.’

தன்னையும் மீறி அவள் தலையை வருட எழுந்த கரங்களை அடக்குபவனாக அவள் அள்ளி இறைத்த தண்ணீரைக் கரத்தால் அள்ளி ஏந்தியவன், வாயைக் கொப்பளித்துவிட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து, அவள் முகத்தை நோக்கி விட்டெறிந்துவிட்டு, அவள் கையிலிருந்த வாளியின் கயிற்றைப் பற்ற, இவளோ அவன் மீதிருந்த மயக்கம் தெளிந்து முறைத்தாள்.

ஆத்திரம் மேலிட தன் கரத்தின்மீது படிந்திருந்த அவனுடைய அகன்ற பெரிய கரங்களை விழிகளால் சுட்டிக் காட்டி,

“என்ன இது…” என்றாள் அடக்கிய கோபத்துடன்.

“இதென்ன கேள்வி… என்னுடைய கை… இது கூடத் தெரியாமல் பள்ளிக்கூடத்தில் எப்படிக் குப்பை கொட்டுகிறாய்?” என்று அவன் புருவங்களை மேலேற்றியவாறு கேட்க, இவளோ ”ஈ” என்று உதடுகளை இழித்து விட்டு,

“காமடிக்கு இந்த அளவு சிரித்தால் போதுமா? இதோ சிரித்துவிட்டேன்… கையை எடுங்கள்…” என்றாள் எரிச்சலோடு.

“அதுதான் உன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் போதே தெரிகிறது… விலகு… உன் சூடு தண்ணீரிலும் கலந்து விடப் போகிறது… சும்மாவே வெக்கை தாங்க முடியவில்லை. இதில் நீ அள்ளி ஊற்றும் தண்ணீரும் கொதித்தால் என் நிலை என்னாவது…” என்று சொல்லியவாறு, கயிற்றை அவள் கரத்திலிருந்து வாங்க முயல, அவளோ பிடிவாதமாகக் கயிற்றை அழுந்த பிடித்தவாறு,

“தேவையில்லை… நானே அள்ளி ஊற்றுகிறேன்…” என்றவாறு, வாளியில் ஏந்தியிருந்த தண்ணீரைத் தொட்டியில் ஊற்றிவிட்டு, வெற்றுவாளியைக் கிணற்றுக்குள் போட்டு கயிற்றை விறுவிறு என்று கீழே இறக்கத் தொடங்க, அவனோ,

“ப்ச்.. இது என்ன பிடிவாதம் அம்மணி… சொன்னால் கேட்க மாட்டாய்… எடு கையை…” என்று அவன் கூற, அந்த அம்மணியில் மேலும் தடுமாறினாள் அம்மேதினி.

‘முன்பு சாதாரணமாகத் தோன்றிய அழைப்பு, இப்போது ஏனோ ஒரு வித அவஸ்தையைக் கொடுக்க, ஒரு கணம் குழம்பியவள், தன்னைச் சுதாரித்தவளாக,

“தேவையில்லை… நான்… நானே… இறைக்கிறேன்… விடுங்கள்…” என்றவாறு கயிற்றை இழுக்க முயல, அவனோ பொறுமை இழந்த மூச்சுடன்,

“ப்ச்… இதென்ன பிடிவாதம்… சொன்ன சொல் கேட்கும் பழக்கம் உன் அகராதியிலேயே இல்லையா…? போ… போய் வேறு வேலையைப் பார்… நானே அள்ளிக் குளிக்கிறேன்.” என்று கூறிவிட்டு, கயிற்றிலிருந்த அம்மேதினியின் கரத்தைப் விடுவித்துவிட்டுத் தண்ணீரை அள்ளி மேலே இழுத்து, அவள் அருகே நிற்கிறாள் என்பதைக் கூடக் கருத்தில் கொள்ளாது தன் தலையில் ஊற்ற, அவன் ஊற்றிய வேகத்தில் இவள் மீதும் தெறித்தது தண்ணீர். இல்லை தெறிக்கட்டும் என்று வேண்டும் என்றுதான் ஊற்றினானோ. அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கடியக் கயிற்றைப் பற்றி இழுக்கச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது. தவிர நீண்ட நாட்களாக இத்தகைய வேலை செய்யும் பழக்கம் விட்டுப் போனதால், அந்த முரட்டுக்கயிறு கரங்களைச் சற்றுப் பதம் பார்க்கத்தான் செய்தது.

என்னதான் வாய் சவடாலாக, அவன் செய்யட்டுமே என்று பேசினாலும், அவன் இப்படிச் சிரமப்படுவதைக் கண்டபோது இதயத்தில் முணுக்கென்ற ஒரு வலி தோன்றவதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் சற்று விட்டுப் பிடித்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாதவளாக,

“இல்லை விடுங்கள்… நானே அள்ளி ஊற்றுகிறேனே,…” என்று தயக்கத்துடன் அவனருகே வர, அவளுடைய போதாத காலமோ என்னவோ, காலை ஈரப் பாசி படிந்த கிணற்றுத் தரை வழுக்கிவிட, தன்னை நிலைப் படுத்துவதற்கு முயன்று தோற்றுப் போய்க் கிணற்றிற்குள் விழப் போன விநாடியில், அதைக் கண்டு கொண்டவனாகக் கண்ணிமைக்கும் நொடியில் துலாவின் பலத்தால் இழுப்பட்டுச் சென்ற கயிற்றை வலக் கரத்தால் பற்றியவாறு இடக் கரத்தால், அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்டவன் சற்றும் யோசிக்காமல் அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் தடுமாறியவாறு, திரண்ட தினவெடுத்த திண்ணிய இடது மார்பில் மலரென மோதி நின்றாள் அம்மேதினி. அவனுடைய வலது கரமோ பாதுகாப்பாக அவள் இடை சுற்றித் தன்னோடு வளைத்துக் கொண்டது.

முதன் முறையாக ஒரு ஆணின் மார்பில் மோதி நின்றது அந்தப் பருவத் தேகம். அதுவும் அவனுடைய கையணைப்பில், இதயத் துடிப்பை உணர்ந்தவாறு மெய்யது கெட்டு மயங்கி நின்றாள் மாது. அவள் அணிந்திருந்த பருத்தி ஆடையையும் மீறி அவனுடைய கரத்தின் வெம்மை இடையூடாகப் பயணித்து மலர்த் தேகமெங்கும் பரவத் தொடங்க, அடுத்து என்ன செய்யவேண்டும் என்கிற சிந்தனை கெட்டவளாக அப்படியே நின்றிருந்தாள் அம்மேதினி.

அவனுடைய இதயத் துடிப்பும் படு வேகமாகத் துடித்ததோ…? அதை விட வேகமாகத் துடித்தது அவளுடைய இதயம். அவள் பெண்மையை அவனும், அவன் ஆண்மையை அவளும் உணர்ந்த தருணம் அது. உலகமே செயல் இழந்த உணர்வில் இருவருமே மதிகெட்டிருந்த வேளையில், குழப்பத்துடன் தலை நிமிர்த்திப் பார்த்தாள்.

தலையிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட அவளைத்தான் பார்த்திருந்தான் அவனும். அந்த ஆண்மகனின் கூரிய விழிகளைக் கண்டதும் செயல் கெட்டது அவளுக்கு.

விழிகளா அவை…? அவளை அப்படியே உரிஞ்சி உள்ளே இழுப்பது போல அல்லவா தோன்றுகிறது. அவன் காந்தமென இவளை இழுக்கிறானே… ஏதோ ஒரு இன்பம்… ஏதோ ஒரு பரவசம்… கிடைத்தற்கரிய வாய்ப்புக் கிடைத்த தித்திப்பு. எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, மெல்லிய தென்றல் காற்று அவர்களைத் தழுவிச் செல்ல, நிழல் மறந்து நிஜத்திற்கு வந்தனர் இருவரும்.

எப்போதும் முதலில் மயங்குவது ஆண்… விழிப்பது பெண்தான்… இங்கேயும் விதிவிலக்கா என்ன, இருக்கும் நிலையினைப் புரிந்து கொண்டவளாகப் பதற்றத்துடன் அவனைத் தள்ளிவிட முயல, உடனே சுதாரித்தவனாக மீண்டும் அவளைத் தன்னோடு இறுக்கியவனாகத் தரையைப் பார்த்துவிட்டு,

“ஹே… பார்த்து… மீண்டும் கிணற்றின் பக்கம் தாவப் போகிறாய்…” என்ற கடிந்தவனாக, அவளைப் பிடித்த பிடியை விடாமலே கீழே இறக்கி, சரியாக நின்றுவிட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் கரத்தை விடுவிக்க, வேகமாக அவனை விட்டுத் தள்ளி நின்று கொண்டவளுக்குப் பேச்சு வராது அடம் பிடித்தது.

ஏனோ முகம் அந்தி வானமாய்ச் சிவந்து போனது. வார்த்தைகள் தடுமாறின. இது அவளுக்குப் புதிது. இதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு அசம்பாவிதம்… நடுவிலோ பட்டாம்பூச்சிகளின் குதூகலம், மேலே உணர்வுகளில் தாக்கம்… இவை மூன்றும் சேர்ந்து அவளுடைய அடிவயிற்றைச் சில்லிடச் செய்ய, அந்தப் புது உணர்வு அது ஒரு பக்கம் பிடித்திருந்தாலும் மறு பக்கம் ஒரு வித அச்சத்தை விளைவிக்கவே செய்தது. கூடவே தடுமாறவும் செய்தது.

இப்போது அவளை விலக்கிவிட்டான்தான். ஆனாலும் இது என்ன அவஸ்தை… இன்னும் அவன் அவளைத் தீண்டுவது போல அல்லவா தோன்றுகிறது. அதனால் ஏற்பட்ட குறுகுறுப்பில், அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல் வீடு நோக்கி ஓட, வெளியே வந்துகொண்டிருந்த தாயின் மீது பலமாக முட்டிக்கொண்டாள்.

தன் மகளைப் பிடித்து நிறுத்தியவர்,

“என்னம்மா… இந்த ஓட்டமாக ஓடி வருகிறாய்… தம்பிக்குத்… தண்ணீர் இறைத்துக் கொடுத்தாயா…” என்று மருமகனுக்காய் உருக, அதைக் கண்டதும் அதுவரை இருந்த அவஸ்தை மறைந்து போனது. தாளம் தப்பிய இதயத்தைச் சமப்படுத்தியவாறே,

“அவருக்கு இரண்டு கைகள் திவ்வியமாகத்தானே இருக்கிறது… உடைந்தொன்றும் போகவில்லையே…? அவரே அள்ளி வார்க்கட்டும்…” என்று விட்டுத் தன் அறைக்குள்… அதாவது தற்போது அவன் பாவிக்கும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றி, அதன் மீது சாய்ந்து நின்று கொள்ள ஏனோ கால்கள் துவண்டன.

வலது கரத்தை இடது மார்பின் மீது வைத்து அழுத்திக் கொடுத்தவள், வழிகளை மூடி சற்று நேரம் நின்றாள். ஏனோ உடல் எல்லாம் வெடவெடத்தது. கூடவே அவன் மேனியில் பட்ட ஈரம் அவள் உடலிலும் இடம் பெயர்ந்திருக்க அது வேறு சிலிர்த்தது.

இன்னும் அவனுடைய உடலின் இறுக்கம் அவளைத் தடுமாற வைத்தது. இது என்ன மாயம்… அவன் அணைத்தால் உடல் ஏன் இப்படிக் குழைந்து போகிறது… ஏன் உருகிப் போகிறது… மேலும் மேலும் அந்த அணைப்புக்குள் சிக்கிவிடவேண்டும் என்று மனம் ஏங்குகிறதே… என்ன விந்தை இது?’ நம்ப மாட்டாதவளாக ஆழ மூச்செடுத்தவளுக்கு அப்போதுதான் வேர்த்துக் கொட்டுவதே புரிந்தது.

மெதுவாக நடந்து சென்று படுக்கையில் அமர்ந்தவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.

அதே நேரம் தலையில் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்த கந்தழிதரனோ, அந்த இளம் உள்ளத்தில் பெரும் பூகம்பத்தை  ஏற்படுத்திவிட்டோம் என்கிற சிறு எண்ணமும் இல்லாமல் தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

What’s your Reaction?
+1
17
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!