Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14

மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது.

காலை எழுந்து நாதஸ்வர ஓசை கேட்டதும், அனைவரும் தூக்கம் கலைந்து எழுந்தனர்.

விதற்பரை, சமர்த்தியைத் தயார்ப்படுத்துகிறேன் என்று அவளுடைய அறைக் கதவைத் தட்டத் திறந்தது உத்தியுக்தன்தான். எப்போதும் போல அவனைக் கண்டதும், மெல்லிய தயக்கத்துடன் இரண்டடி பின்னால் வைத்த விதற்பரைக்கு அது அவ்வியக்தன் அல்ல என்று மண்டைக்குள் ஏற்ற சற்று நேரம் தேவைப்பட்டது.

“ஹாய்.. இப்போதுதான் உன் அத்தை குளிக்கச் சென்றாள்…” என்றவனிடம்,

“இல்லை மாமா… பரவாயில்லை… பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன்…” என்று விட்டு வெளியேறிப் படிகளில் இறங்கத் தொடங்க, மறு கணம் ஒரு அழுத்தமான கரம் அவளைப் பற்றி இழுத்தது. இழுத்த வேகத்தில், அவ்வியக்தனுடைய கடிய மார்பில் பலமாக மோதி நின்றாள் விதற்பரை.

ஒரு கணம் அதிர்ச்சியில் தடுமாறியவள், பலமாக அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்றவளாக,

“லீவ் மீ…” என்று சீறியவாறு திமிர, அவனோ தன் ஒற்றைக் கரம் கொண்டு அவளுடைய இடையை வளைத்தவன் தன்னை நோக்கி இழுத்து இறுக்கிக்கொண்டவாறு,

“எப்போது என் கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறாய்?” என்றான் தன் வண்டுகளை ஒத்த விழிகளை, அம்மலர் முகத்தில் பதித்தவாறு.

இவளோ, அடக்க முடியாத ஆத்திரத்துடன் அவனைப் பார்த்து,

“எப்போதும்… எப்போதும் என் பதிலை உங்களுக்குச் சொல்ல மாட்டேன்… உங்கள் ஆசைக்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன்…” என்று ஆத்திரத்துடன் சீற, மறு கணம் அவனுடைய அழுத்தமான உதடுகள் அவளுடைய செவ்விய இதழ்களை இறுகப் பற்றிக்கொண்டன.

பதறிப்போனாள் விதற்பரை. பலமாக அவளைத் தள்ளிவிட முயன்று தோற்றவளாக, மூச்சுக்குத் திணறிய அந்த நேரத்தில் மெதுவாக அவளை விடுவித்தவன்,

“யெஸ்… யு வில்… நம்முடைய கதை இத்தோடு முடியவில்லை… இன்னும் தொடர்ச்சி இருக்கிறது…” என்றவாறு தன் மூக்கால் அவளுடைய மூக்கை உரசி,

“விரைவாக என் கேள்விக்குப் பதில் சொல்வாய்” என்றுவிட்டு மேலும் அவளை இறுகத் தன்னோடு அணைத்து விடுவித்தவாறு, “என் தொலைதூரத்து வெளிச்சம் நீ… அந்தக் கதையில் நான்தான் நாயகன் நீதான் நாயகி… அதற்குத் தயாராக இரு…” என்றுவிட்டு அவளுடைய உச்சந்தலையில் மென்மையாகக் குட்டிவிட்டு, விலகிச் செல்ல, விதற்பரையோ, தன்னிலை கெட்டுப் பேசும் சக்தியற்று அதிர்ந்துபோய் அசைவற்றுக் கிடந்தாள்.

எத்தனை நேரமாக அப்படியே நின்றிருந்தாளோ,

“விதற்பரை…” என்கிற அழுத்தமான ஆழமான குரல் வரத் துள்ளித் திரும்பிப் பார்த்தாள். உத்தியுக்தன் நின்றிருந்தான்.

“ஹே… ரிலாக்ஸ்… உன் அத்தை தயாராகி விட்டார்கள்… போ…” என்றதும், விட்டால் போதும் என்பதுபோலப் பாய்ந்து அவர்களுடைய அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றியதும்தான் அவளுக்கு நிம்மதியானது

வறண்ட உதடுகளை அவசரமாகத் தன் புறங்கை கொண்டு தேய்த்து விட்ட பின்னும் அவன் கொடுத்த முத்தத்தின் தாக்கம் அப்படியே இருக்க, திரும்பத் திரும்பத் துடைத்துக்கொண்டிருந்தவளைக் கண்டு,

“ஹே… என்னாச்சு உனக்கு?” என்றவாறு சமர்த்தி ஜாக்கட்டும், பாவாடையுடனும் வந்தாள்.

சுயநினைவுக்கு வந்தவளாக,

“ஒ… ஒன்றுமில்லை அத்தை… உதடுகளில் எதுவோ கடித்துவிட்டது…” என்றாள் பற்களைக் கடித்தவாறு.

“ஐயோ! மருந்து போட்டாயா? இங்கே எப்படிப் பூச்சிகள் வந்தன… வர வாய்ப்பில்லையே…” என்று அன்பான தோழியாகச் சமர்த்திப் பதற,

“ப்ச்… ஒன்றுமில்லை… விடு அத்தை… நீ வா… உன்னை அலங்காரம் செய்யவேண்டும்…” என்றவாறு தன் பிரச்சனைகளை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு சமர்த்தியைத் தயாராக்கத் தொடங்கினாள்.

சும்மாவே சமர்த்தி, தேவதைகளுக்கே சவால் விடுவாள் அழகில், இந்த விலையில் கொஞ்சம் ஒப்பனை செய்தால் கேட்கவும் வேண்டுமா என்ன? அதுவும் விதற்பரையின் ரசனை மிக்க வர்ணத் தீட்டலுக்கு, அந்தச் சிற்பத்தின் அழகு மேலும் மெருகேறியது. தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த விதற்பரைக்குத் தன் அத்தையின் முகத்தில் இருந்து விழிகளை விலக்கவே முடியவில்லை.

“அம்மாடியோ… அத்தை… உன் அழகுக்கு ஐஸ்வர்யாராயே பிச்சை வாங்கவேண்டும்” என்றவள், சட்டென்று முகம் துடைத்து நெட்டி முறிக்க, கதவு திறந்தது.

இருவரும் திரும்பிப் பார்க்க உத்தியுக்தன் தான் உள்ளே வந்துகொண்டிருந்தான். வந்தவன், சமர்த்தியைக் கண்டதும் ஒரு கணம் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றுவிட்டான். அவனால் தன் விழிகளைத் தன்னவளிடமிருந்து விலக்கவே முடியவில்லை.

திருமணத்தின் போது அவள் சேலையுடுத்திப் பார்த்திருக்கிறான். இப்போதுதான் இரண்டாம் முறையாக அவளைச் சேலையோடு பார்க்கிறான். முன்பு கோவில் சிற்பமாகய் இடை வளைய இளமை எழிலோடு கொள்ளை கொண்டாள்.

இப்போது, தாய்மையின் அழகில், இவன் இதயத்தைச் சுண்டி இழுத்தாள்.

உத்தியுக்தனுக்குச் சமர்த்தியைக் கண்டதும் தன் விழிகளை விலக்கவே முடியவில்லை. ஏதோ உருவமில்லா ஒரு ஊருளை ஒன்று மார்பிற்கும் தொண்டைக்கும் இடையில் நின்று அங்கும் இங்கும் ஏறி இறங்கி மாயவித்தை காட்டியது.

உத்தியுக்தகைனக் கண்டதும், சமர்த்தியை விட்டு விலகிய விதற்பரை,

“இ.. இதோ வருகிறேன் அத்தை…” என்றுவிட்டு, உத்தியுக்தனைப் பார்த்து சங்கடமாய் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு வெளியேற, அவளைக் கவனிக்கும் நிலையில் இருவருமே இருக்கவில்லை.

தன்னவளின் அழகில் மயங்கியவனாக, அவளை நோக்கிச் சென்ற உத்தியுக்தனுக்குள் பயங்கரமான இரசாயன மாற்றம்.

சமர்த்தியும் அவனுடைய பார்வையில் கிறங்கித் தான் போனாள். அதுவும் முன்னிரவில் அவனுடைய அணைப்பில் உறங்கியது வேறு நினைவுக்கு வர மொத்தமாய் சிவந்து போய் நின்றாள்.

வெட்கத்தில் உதடுகள் கடித்துத் தலை குனிந்து, புதிய பரிணாமத்தில் நின்ற தன் இல்லத்தாளின் அழகை இமைக்காமல் தலை முதல் பாதம் வரை பார்த்து ரசித்தான்.

“பியூட்டிஃபுள்…” என்றவன் அவளை நோக்கிச் செல்ல, மேலும் சிவந்து போனாள் அந்தக் கோதை. அதுவும் அவளுடைய பார்வை அவள் உடலின் மொத்தத்தையும் உறிஞ்சிக் குடிப்பது போன்ற ஒரு மாயைத் தொற்றத்தைக் கொடுக்கத் திணறிப்போனாள் அவள்.

அவளை நெருங்கியவன், அதற்கு மேல் அவளைத் தொடாது இருக்க முடியாது என்பது புரிய, அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துத் தன்மீது போட்டுக் கொள்ள, மொத்தமாய் அவன் மேனி சாய்ந்தாள் சமர்த்தி.

அவளை இறுக அணைத்து, அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தி, அவள் வாசனை முழுவதையும் உறிஞ்சிக் குடிப்பவன்போல ஆழ மூச்செடுக்க, அவனுடைய அந்த செயலில் மொத்தமாய் குழைந்து நின்றாள் அக்கோதை.

அதன் விழைவாக விழிகளை மூடி, அவன் நெருக்கத்தை ரசிக்கத் தொடங்க,

“ஓ மை ஏஞ்சல்…” என்றவனின் உதடுகள் இப்போது வழி தப்பி, அவளுடைய கன்னத்தில் பயணித்து இப்போது உதடுகளுக்கு நேராக வந்து நின்று எவ்வழியில் குசலம் விசாரிப்பது என்று தடுமாறுவது போல, மேலும் கீழும் என்று அசைந்து நிற்க, சமர்த்தியோ அந்த உதடுகளின் சேட்டையில் பெரிதும் தடுமாறிப் போனாள்.

எந்த நேரத்திலும் தனக்கு இணையான உதடுகளை அது பற்றிக்கொள்ளலாம் என்பதுபோல, அவளுடைய உதடுகளை நோக்கிப் பயணப்படத் தொடங்க, அதற்கு மேல் அந்த உதடுகளின் குறும்புத் தனத்தைத் தாங்க முடியாதவளாக,

“உ… உதி..” என்றாள் தாமத்தில் மூச்சடைக்க.

அந்த அழைப்பில், மொத்தமாய்த் தொலைந்தான் அந்தக் காதலன்.

அடுத்த கணம், அவன் பெயரை அழகாய் உச்சரித்த அந்த உதடுகளை சற்று ஆவேசத்துடன் பற்றிக்கொள்ள, அந்த ஆவேசம் அவளுக்கும் பிடித்துக்கொண்டதோ? மேலும் அந்த இதழ் முத்தத்தில் முழுதாய் அவன் வசம் தொலைந்து போனவளாய் தன் கரத்தைத் தூக்கி அவன் கன்னத்தில் பதித்து அந்த முத்தத்தை இன்பமாகவே வரவேற்க, இடம் கொடுத்தபின்னும் மடம் பிடிக்கா விட்டால் எப்படி? இப்போது அவனுடைய உதடுகள் சற்றுக் கர்வமாகவே தன் இருப்பை அவளுடைய உதடுகளுக்குக் கூறத் தொடங்கின.

எத்தனை நேரம் அந்த இதழ் முத்தத்தில் சிக்கிக் கிடந்தார்களோ, வேளை கேட்ட நேரத்தில் உத்தியுக்தனின் கைப்பேசி அலறி அவனை நினைவுலகுக்குக் கொண்டுவந்தது.

அந்த ஒலியில் வாய்க்குள் எதையோ முணு முணுத்துத் திட்டியவனாக, அவளை விட்டு விலகியவன், தாபத்துடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

அவளோ அவனுடைய முத்தத்தின் வேகத்தில் உடல் தளரத் தள்ளாடி நின்றிருந்தாள்.

“ஓ… காட்… உன்னை எப்படிக் கையாளப் போகிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை சதி… எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது…” என்றவன், அவளுடைய தலையின் பின்புறத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து மார்பில் விழ வைத்து, உச்சந்தலையில் உதடுகளைப் பதித்து,

“பம்கின்…” என்றான் மென்மையாக.

“ம்…” என்றாள் அவனுடைய மார்பின் வாசனையை உள் இழுத்தவாறு.

“உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்…” என்றான் கிசுகிசுப்பாய். இவளோ என்ன என்பது போல அவனை நிமிர்ந்து பார்க்க, அந்த வண்டாடும் விழிகளில் தெரிந்த பரபரப்பில் சொல்லவந்ததை மறந்தவனாய், அவசரமாகக் குனிந்து அவ்விழிகளில் தன் உதடுகளைப் பாதிக்க இவளும், தன் விழிகள் மூடி அவன் இதழ்களின் சமரசப் பேச்சில் தன்னை மறந்து கிடந்தாள்.

முத்தமிட்டு முடித்தவன், அள்ளி அணைக்கத் தோன்றும் தன் உயிரானவளின் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தி,

“பம்கின்… ஐ…” என்று கிசுகிசுப்பாய்ச் சொல்வதற்கு வாய் எடுத்த நேரம்,

“டொக் டொக்…” என்று கதவு பலமாகத் தட்டுப் பட்டது.

‘சே… யாரது… எத்தனை முக்கியமான விஷயம் சொல்ல முயல்கிறான். அதற்குள் யாரோ வந்து அந்த இன்ப நிலையைக் குலைக்கிறார்களே…’ ஆத்திரத்தில் விழிகளை அழுந்த மூடி நின்றிருக்க, இவளோ அந்த அழகிய தருணத்தை நாசமாக்கும் நபரை எண்ணிக் கோபம் கொண்டவளாகக் கதவைத் திரும்பிப் பார்த்தாள்.

யார் என்று தெரியவில்லை. ஏதோ அவசரம் போல. ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும் நிமிர்ந்து தன்னவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. கடு கடுத்து நின்றவனுக்கு, சமர்த்தி புன்னகைத்ததும், எரிச்சல் கொண்டவனாய்,

“வட்…” என்றான். இவளோ அவசரமாய்த் தன் புன்னகையை மறைத்து,

“நத்திங்… யாரோ கூப்பிடுகிறார்கள்… என்ன என்று பாருங்கள்…” என்று கூற, தன்னவளை விட்டுப் பிரிந்தவன், கோபத்துடன் சென்று கதவைத் திறந்தான்.

அங்கே தயாளன் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் தன் கோபத்தை மறந்தவனாய்,

“தயளான்…?” என்றான்.

“சாரி தம்பி… நேரம்… போ… போ…” என்றவருக்கு ஏனோ வார்த்தைகள் பாதியிலே தடைப்பட்டன. இவனோ, குழப்பத்துடன்,

“சொல்லுங்கள் தயாளன், என்ன வேண்டும்…” என்றான்.

“ஒ… ஒன்றுமில்லை தம்பி… நேரம்… வந்து… நேரம் போகிறது… புஷ்பா சதியை அழைத்து வரச் சொன்னார்கள்… உங்களைக் கைபேசியில் அழைத்துபார்தேன். எடுக்கவில்லை… அதுதான் நேராகவே வந்து அழைத்துச் செல்லலாம் என்று…” எனத் தடுமாறியவாறு தலையைச் சொரிந்தவருக்கு அவரையும் மீறிப் புன்னகை எழுந்தது.

“ஓ… இதோ அவளை அழைத்து வருகிறேன்… நீங்கள்… போங்கள்…” என்று அவரை அனுப்பி வைக்க முயல,

“இல்லை… இல்லை… அது வந்து நீங்கள் நீங்கள் வேட்டிக் கட்டவில்லையா..? நல்ல காரியங்களுக்கு வேட்டிக் கட்டுவது சம்பிரதாயம்…” என்றார்.

“ஓ… எனக்குக் கட்டத் தெரியாதே தயாளன்…” என்று கூற,

“சதி கட்டிவிடுவாள் தம்பி… அவளிடம் கேளுங்கள்… அதற்கு முன்பு ஒரு முறை உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே… எதுவோ பூசிக் கிடக்கிறது…” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டுச் செல்ல, இவனோ அறைக்குள் வந்து கண்ணாடியைப் பார்த்தான்.

அங்கே சமர்த்தியின் உதட்டுச் சாயம் இவனுடைய உதடுகளில் அப்பியிருந்தது. இதைக் கண்டுதான் தயாளன் சங்கடப்பட்டாரா? என்று எண்ணியவனுக்குச் சற்று முன் சமர்த்தியும் கிண்டலுடன் சிரித்தது நினைவுக்கு வந்தது.

கள்ளி, வேண்டும் என்றே அவனை அப்படியே அனுப்பி வைத்திருக்கிறாள். இவளை என்ன செய்தால் தகும்? கோபத்துடன் திரும்பி சமர்த்தயைப் பார்க்க, தலையைச் சற்றுச் சரித்தவாறு, அந்தக் குறும்புப் புன்னகை மாறாமல் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தக் குறும்புக்காரி.

அதைக் கண்டதும், நிதானமாக அவளை நோக்கிச் சென்றவன், தன் உதடுகளைக் காட்டி,

“என் பிரிய ராட்சஷி… இது தெரிந்துமா என்னை வெளியே அனுப்பினாய்…” என்றவாறு அவளை இழுத்து அணைக்க, அவனுடைய அணைப்பில் வாகாக சாய்ந்தவள், அவனுடைய சட்டைக்காலரைக் கரங்களால் பற்றி இழுத்தவாறு,

“என்னைக் கேட்டால்… நானா வேலை கேட்ட நேரத்தில் முத்தமிட்டேன்…” என்றவளுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை.

தன்னை மறந்து கிளுகிளுத்துச் சிரிக்க, இவனோ அவளை நோக்கிக் குனிந்து தன் உதடுகளை அவளுடைய கன்னத்தில் அழுந்த தேய்த்துத் தன் உதட்டில் படிந்திருந்த சாயத்தை அவள் கன்னத்திற்கு இடம் மாற்ற, இவளோ சிரிப்பை விடுத்துக் கோபத்துடன் அவனைத் தள்ளி விட முயன்றாள்.

“என்ன செய்கிறீர்கள்… என் ஒப்பனை கலைந்து போகிறது…” என்று திமிற விட்டானா. மீண்டும் மீண்டும் அவளுடைய இரு கன்னத்திலும் தன் உதடுகளைப் பதித்துத் தேய்த்து உதட்டுச் சாயத்தை அவளுடைய கன்னத்தில் பூசிய பின்புதான் அவனை விடுவித்தான்.

இவளோ அவனை முறைத்துவிட்டுத் தன் கன்னத்தை அழுந்த துடைத்தவாறு,

“என்ன காரியம் செய்து விட்டீர்கள். ஐயோ… என் ஒப்பனை…” என்று பதறியவாறு கண்ணாடியை நோக்கி ஓட, குலுங்கி நகைத்தவாறு தன் அறைக்குள் நுழைந்தான் உத்தியுக்தன்.

திருமணத்திற்கு அணிந்த வேட்டியை எடுத்துக் கொண்டு, சமர்த்தியை நோக்கி வந்தவன், தன் ஷேர்ட்டையும் பான்டையும் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, கையில்லாத பெனியன், மற்றும் பாக்சரோடு எதோ உள்ளாடைகளுக்கு விளம்பரம் கொடுப்பது போலக் கரங்களை விரித்துக்கொண்டு அவள் முன்னால் நிற்க, சமர்த்திக்கோ மூச்சு இறுகிப்போனது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை அந்தக் கோலத்தில் பார்க்கிறாள்.

ஆண்மைக்கு இலக்கணமாக நின்றிருந்தவனை இமைக்க மறந்து பார்த்தவளுக்கு, இவன் என்னவன் என்கிற பெருமை ஒரு கணம் எழுந்தாலும், மறு கணம், அந்தப் பெருமை வடிந்து போயிற்று.

இல்லையே… அவளுக்கு மட்டும் உரியவன் அல்லவே.. அந்த ஜூலியட் அல்லவா அவனுக்கு உரியவள்.

ஏனோ அந்தக் கணம், அந்த ஜூலியட்டாகத் தான் இருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் சமர்த்தியைப் பாடாகப் படுத்த, அவளையும் மீறி விழிகளில் கண்ணீர் துளித்தது.

“ஹே… என்ன யோசிக்கிறாய். நேரம் போகிறது சமர்த்தி.. வேட்டியைக் கட்டிவிட. எந்த நேரமும், உன் அண்ணா வந்துவிடுவார்… கமான்..” என்றவாறு நிற்கத் தன் சிந்தை கலைந்தவளாக அவன் முகத்தைப் பார்க்கும் தைரியம் அற்றவளாய், அவனுக்கு வேட்டியைக் கட்டிவிட்டு நிமிர, இவனோ பெரும் ஆச்சரியத்துடன் பாந்தமாகக் கட்டப்பட்ட தன் வேட்டியை பார்த்தான்.

“உனக்கு எப்படி வேட்டிக் கட்டத் தெரியும் சதி?” என்று கேட்க, தற்காலிகமாக ஜூலியட்டின் நினைவுகளை ஒதுக்கிவிட்டு,

“அது, வசந்தனுக்கும், ரகுவுக்கம் தேவைப்படும் போது கட்டிவிட்டிருக்கிறேன்…” என்றாள்.

“ஓ…” என்றவன்,

“சரி வா… கீழே போகலாம்… என்றுவிட்டு வெண்ணிற ஷேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வெளியே செல்வதற்காகக் கதவைத் திறக்க, புஷ்பா சமர்த்தியை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

அங்கே அழகுப் பதுமையாக நின்றிரந்தவளைக் கண்டு கனிந்தவர், அவளுக்கு நெட்டி முடித்துக் கரத்தைப் பற்றி நடத்திச் செல்ல, உத்தியுக்தனும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

வருகை தந்திருந்த உறவினர்களுக்கு மத்தியில் ஒரு கதிரை வைக்கப்பட்டிருக்க, சமர்த்தியை அழைத்துச் சென்று அதில் அமரச் செய்துவிட்டு, உத்தியுக்தனைப் பார்த்து,

“தம்பி… அந்த மாலையை எடுத்து சமர்த்திக்குப் போட்டுவிடுங்கள்…” என்றார்.

உடனே அவர் குறிப்பிட்ட மாலையை எடுத்து அவளுக்கு அணிவிக்கக் கரங்களோ, அவளுடைய தோளையும் சேர்த்து வருடிச் சென்றது.

அடுத்து புஷ்பா சொன்னது போல, அவளுடைய நெற்றியிலும், வகிட்டிலும், கட்டியிருந்த தாலியிலும் குங்குமம் வைத்து, புஷ்பா நீட்டிய சந்தாப் பேழையிலிருந்து இரு கரங்களாலும் சந்தனம் எடுத்து, அவளுடைய கன்னங்கள், கரங்கள், என்று நலுங்கு பூசி, புஷ்பா நீட்டிய காப்பை வாங்கி அவளுக்கு வலிக்காமல் மென்மையாய் போட்டு விட்டு நிமிர்ந்து பார்க்க, சமர்த்தியோ, கண்கள் மின்ன கன்னங்கள் குழிய, அவன் தன் கரங்களில் காப்புகளைப் போடும் அழகையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

காரணமின்றியே உத்தியுக்தனுக்குக் கண்கள் கலங்கிப்போயின. கூடவே உள்ளே துடிக்கும் இதயம், காதல் பாரம் தாங்காமல் கழன்று அவளுடைய காலடியில் விழுந்துவிடும் போன்ற உணர்வில் சற்று திணறித்தான் போனான்.அவனிடம் பன்னீர் செம்பையும், அருகருசியையும் நீட்டிய புஷ்பா

“தம்பி, கருவிலிருக்கும் உங்கள் குழந்தை, எந்த சிக்கலுமில்லாமல், ஆரோக்கியமாக, நிறைவான அதிர்ஷ்டத்தோடு, பூமியில் ஜனிக்கவேண்டும் என்று வாழ்த்தி அருகருசி போட்டு பன்னீர் தெளித்தது வாழ்த்துங்கள்…” என்று கூற, எனோ அவனுடைய கரங்கள் நடுங்கின.

குழந்தையை கொடுத்தது மட்டும்தானே அவன். அதை பாதுகாப்பாய் கருவில் தங்கி பூமியில் பிரசவிப்பவள் அவனுடைய மனைவியாயிற்றே. அவனுக்கு வெறும் இன்பம் மட்டும்தான். ஆனால் அவளுக்கு… எத்தனை வலிகள், எதனை வேதனைகள்… இதையெல்லாம் தங்கி அவன் வம்சத்தை விருத்தி செய்யும் அவளுக்கு எதை கொடுத்தால் ஈடாகும். அவன் உயிரைக் கொடுத்தாலும் அது போதாதே. நெஞ்சம் தவிக்க, சில விநாடிகள் விழிகளை மூடி நின்றான்.

யாரிடம் வேண்டுவது என்று தெரியவில்லை. இதுவரை வேண்டிப் பழக்கமும் இல்லை. ஆனால் தன்னவளுக்காக யாரிடமோ அவள் சுகமாப் பிரசவித்து எந்த சிக்கலும் இல்லாம் தன் கைக்கு வந்துவிட வேண்டும் என்று வேண்டவேண்டும் போலத் தோன்றியது. அதையே உருவமில்லா ஒரு சக்தியிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டு விழிகளைத் திறந்து தன்னவளைப் பார்த்தான். அவளோ புன்னகை மாறாமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

புஷ்பா சொன்னது போல அறுகரிசி போட்டவன், அடுத்து தன்னை மறந்து சமர்த்தியின் பக்கமாகக் குனிந்து, அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு,

“உன்னை காக்கவேண்டி என் உயிரையும் கொடுப்பேன் கண்ணம்மா…” என்று முணுமுணுத்து விட்டு, விலக, அவன் என்ன சொன்னான் என்பதை சரியாகக் கேட்காதவளாகக் குழப்பத்துடன் விலகிச் சென்றவனையே பார்த்தாள்.

அதே நேரம் புஷ்பா உறவினர்களை முன்னால் வருமாறு அழைக்க, அடுத்து அனைவரும் நலுங்கு வைத்து ஆசீர்வதித்தனர்.

இறுதியில் வயதான சுமங்கலி பெண்கள் சமர்த்திக்கு திருஷ்டி கழிக்க வளைகாப்பு இனிதே நிறைவுற்றது.

அதன் பின் விருந்தும் படைக்கப்பட, புஷ்பா சமர்த்தியைச் சாப்பிடச் சொல்லிக் கேட்டார்.

“இல்லை அண்ணி… பசிக்கவில்லை… பிறகு சாப்பிடுகிறேனே…” என்று மறுக்க, சமர்த்தி சாப்பிடாததால், உத்தியுக்தனும் சாப்பிட மறுத்து விட்டான்.

எப்படியோ விழா நிறைவுபெற்று அனைவரும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப நேரம் மூன்று மணியையும் கடந்திருந்தது.

வந்திருந்த ரதியின் உறவினர்கள் அனைவரும், அந்த விழாவைப் பற்றிச் சிறப்பாக விமர்சித்து, அந்தப் பெருமையை ரதியின் தலையில் போட, நசுக்காக அந்தப் பெருமையை மறுத்த ரதி, சற்றுத் தள்ளி நின்று தன் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த புஷ்பாவைக் காட்டி, இதற்கெல்லாம் அவர்கள்தான் காரணம் என்று மெய்யை ஒப்பித்தார்.

ரதி சார்பாக வந்தவர்களில் அதிகமானவர்கள் வேற்றினத்தவர்கள். இதுவரை வறுமையென்றாலே என்னவென்று தெரியாதவர்கள். தவிர, இத்தகைய பண்பாட்டு நீதியான விழாக்களிலும் அதிகம் பங்குபற்றாதவர்கள். அவர்களுக்கு இந்த விழா புதுமையாகவே இருக்க, அதைப் பற்றிய விபரங்களைக் கேட்டனர்.

ரதிக்குத்தான் அடியும் தெரியாது நுனியும் தெரியாதே. உடனே புஷ்பாவை அழைத்து அவர்களிடம் கோர்த்துவிட, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் புஷ்பா பொறுமையாக ஒவ்வொன்றிற்குமான அர்த்தங்களை விளக்கத் தொடங்கினார்.

அதை, ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இத்தகைய பண்பாட்டு ரீதியான விழாக்களில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்தே போனார்கள்.

அவர்களும் பேபி ஷவர் என்று செய்வதுண்டு தான். ஆனால் அதற்கு நாள் பார்ப்பதில்லை. நட்சத்திரம் பார்ப்பதில்லை. சனி, அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு நாளை தேர்வு செய்து அழைப்பார்கள். பரிசு கொடுக்க அதை வாங்குவார்கள். அன்று ஆண் குழந்தையா, இல்லை பெண் குழந்தையா என்கிற புதிர் விடுவிக்கப் படும். அத்தோடு உண்டுவிட்டு சற்று நேரம் குதூகலமாகப் பேசிவிட்டு விடைபெறுவார்கள். அவ்வளவுதான். ஆனால் இத்தகைய அர்த்தம் நிறைந்த விழாக்களில் கிடைக்கும் மனநிறைவே தனிதானே. ஆளாளுக்குப் புஷ்பாவைப் பாராட்டிவிட்டுச் செல்ல, இதுவரை இத்தகைய பாராட்டுக்குப் பழக்கமில்லாத புஷ்பா சற்றுத் திணறித்தான் போனார்.

அதே நேரம், அதிக நேரம் ஒற்றை இருக்கையில் அமர்ந்திருந்த சமர்த்திக்கு இடுப்பு வலிக்கத் தொடங்கியது. கால்கள் வேறு வீங்கிப்போனது. சற்று எழுந்தால் நல்லது என்று தோன்ற, இருக்கையை விட்டு எழ, கால்கள் விறைத்துப் போனதால் சற்றுத் தடுமாற, எங்கிருந்து வந்தானோ, அவளுடைய தோள்களைப் பற்றித் தாங்கிக் கொண்டான் உத்தியுக்தன்.

“பம்கின்… ஆர் யு ஓக்கே…” என்றான் கரிசனையாக. ஆம் என்பது போலத் தலையை ஆட்டியவள், பின் முள்ளந்தண்டுப் பகுதியை மெதுவாக நீவிவிட்டவாறு,

“ஐ நீட் டு கோ வோஷ்ரூம்…” என்றுவிட்டுக் கீழ்த்தளத்திலிருந்த கழிவறைக்குச் செல்ல, இரும்பு இழுத்த காந்தமாய் அவளோடு சென்றான் உத்தியுக்தன்.

களைத்த முகத்துடன் வெளியே வந்தவளிடம்,

“பசிக்கிறதா? சாப்பிடுகிறாயா?” என்றான். இரண்டு கரங்களையும் இடையெலும்பில் பதித்துத் தேய்த்தவாறு,

“சரி…” என்றாள்.

“சரி… வா… உட்கார்… எடுத்து வருகிறேன்…” என்று அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு புஷ்பாவை நோக்கி ஓடினான்.

புஷ்பா ரதியின் நண்பர்களோடு எதையோ பேசிக்கொண்டிருந்தார்.

நேராக வந்தவன், அனைவரையும் பார்த்து, “எக்ஸ்கியூஸ் மி…” என்றுவிட்டு புஷ்பாவிடம்,

“சதி சாப்பிடப் போகிறாளாம்… எதைக் கொடுப்பது?” என்றான் பரபரப்பாக.

“பதினொரு சாதத்திலும் ஒவ்வொரு கரண்டி போட்டுக் கொடுக்கவேண்டும் தம்பி… இருங்கள் நான் போட்டுத் தருகிறேன்…” என்றவர் உடனே மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு உத்தியுக்தனோடு உள்ளே செல்ல, ஏனோ ரதியின் முகம் விழுந்து போனது.

இப்படி உரிமையாக அவரிடம் அவன் எதையும் கேட்டதில்லையே. புஷ்பாவிடம் எதார்த்தமாக எப்படிப் பேசுகிறான்…? நினைக்கும்போதே மனம்

தவித்துப்போனது ரதிக்கு. ஆனாலும் அதை லாவகமாக மறைத்துக்கொண்டவராக, மற்றவர்களை வழியனுப்பத் தொடங்கினார்.

இங்கே சமையலறை வந்த புஷ்பா,

“தம்பி… சத்தி சாப்பிடுவதை யாரும் பார்க்கக் கூடாது… உணவைத் தருகிறேன், நீங்கள் அவளை அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிட வையுங்கள்..” என்றதும் இவன் புரியாமல் பார்த்தான்.

“ஏன்… பார்த்தால் என்ன?” என்று கேட்க,

“கர்ப்பிணிப் பெண்கள் சில வேளை பசிக்குச் சற்று அதிகம் சாப்பிடுவார்கள். பார்ப்பவர்களுடைய கண் ஒரேபோல் இருப்பதில்லை. அடடே… இப்படிச் சாப்பிடுகிறாளே என்று கண் வைத்தால், உண்ட உணவு செரிக்காது என்று என் அத்தை சொல்வார்கள்…” என்று கூற, அதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்று அவனுக்குத் தெரிய வில்லை. ஆனால், சமர்த்தி நன்றாகச் சாப்பிட வேண்டுமே என்கிற எண்ணம் மட்டும் இருந்ததால், மறுக்காது சாப்பாட்டுத் தட்டோடு சமர்த்தியை நோக்கிச் சென்றான்.

சாப்பாட்டுத் தட்டைக் கண்டதும் வாங்குவதற்காகத் தன் கரத்தை நீட்ட, தட்டைக் கொடுக்க மறுத்தவனாய்,

“வா… அறைக்குப் போய்ச் சாப்பிடலாம்…” என்றான். அதைக் கேட்டு உதடுகளைச் சுளித்தவள்,

“ஏன் இங்கே சாப்பிட்டால் என்னவாம்?” என்றாள் களைப்புடன்.

ஏனோ அத்தனை படிகளை ஏறிப் போக முடியும் போல இவளுக்குத் தோன்றவில்லை. இந்தளவுக்கு நாரி வலித்தது அவளுக்கு.

“ப்ச்… புஷ்பாதான் சொன்னார்கள், அறைக்குப் போகச் சொல்லி, வா… அறைக்குப் போகலாம்…” என்று அவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் செல்ல, வேகமாகத் தன் கரத்தை இழுத்தவள்,

“என்னால் நடக்க முடியும்” என்று அவனுடைய உதவியை மறுத்துவிட்டுக் கண்ணில் தென்பட்டவர்களிடம், விடைபெறுவது போலப் புன்னகைத்துவிட்டுப் படிகளில் ஏறத் தொடங்க, உத்தியுக்தனும் அவள் பின்னால் மெதுவாகவே நடக்கத் தொடங்கினான்.

அறைக்கு வந்ததும், மாற்றுடையை எடுத்தவள், குளியலறைக்குச் சென்று சேலையைக் களைந்து, வீட்டு உடுப்பைப் போட்ட பிற்பாடுதான் பெரும் பாரமே நீங்கிய உணர்வு.

தரையில் போட்ட சேலையைக் குனிந்து எடுக்கச் சோம்பல்பட்டு, அப்படியே விட்டுவிட்டு அறைக்கு வந்தவள் சோர்வுடன் படுக்கையில் அமர்ந்தவாறு பின் நாரியைக் கரத்தால் நீவி விட, உணவுத் தட்டை எடுத்துக்கொண்டு வந்தான் உத்தியுக்தன்.

அதன் மூடியை விலக்கிவிட்டுப் பார்க்க, பதினொறு வகையான சாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கப்பட்டிருந்தன.

ஒரு கவளம் எடுத்தவன், அவள் வாயருகே நீட்ட, “நான் சாப்பிடுவேன் உதி கொடுங்கள்…” என்றவாறு கரத்தை நீட்டினாள்.

“உன்னால் முடியாது என்றா நான் சொன்னேன்.. பேசாமல் சாப்பிடு…” என்று கடிந்துவிட்டு ஒவ்வொரு கவளமாக அவளுக்கு ஊட்டத் தொடங்க, மறுக்காது வாங்கி உண்ணத் தொடங்கியவள், ஏழு வாய் வாங்கியதும்,

“போதும்… எனக்கு…” என்று மறுத்துவிட்டாள்.

“போதுமா? உன் அண்ணி பதினொறு வகையறா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நீ என்னவென்றால் நான்கு வகையறாக்களை மட்டும் உண்டுவிட்டுப் போதும் என்கிறாயே… சத்தம் போடாமல் சாப்பிடு…” என்று கடிந்துவிட்டு இரண்டு வாயை ஊட்ட, சிரமப்பட்டு உண்டவள்,

“ஏற்கனவே இரண்டு லட்டு, நான்கு பாலப்பம், கொஞ்சம் அரியதரம் எல்லாம் சாப்பிட்டேன் உதி…” என்று சினுங்க, இவனோ அடிப்பாவி என்பதுபோல பார்த்தான்.

இவள் சாப்பிடவில்லையே என்று இவன் சாப்பிடாமல் இருந்தால், கிடைத்த இடைவெளியில் நன்றாக உண்டுவிட்டா இருக்கிறாள்…” என்று எண்ணும்போதே, அவன் முகம் போன போக்கை பார்த்து அசடு வழிந்தவள்,

“நான் என்ன செய்யட்டும்? பசித்தது… அது தான்…” என்று கூற, தலையாட்டியவாறு, தட்டை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, மறு கையால் அவளுடைய உதடுகளைத் துடைத்தவன், அங்கிருந்த குவளையில் தண்ணீரை ஊற்றி நீட்ட மறுக்காது வாங்கிக் குடித்தாள் சமர்த்தி.

அதன் பின் மிச்சமிருந்த உணவைத் தான் உண்டு விட்டுக் கோப்பையைக் குளியலறைக்கு எடுத்துச் செல்ல, காலில் எதுவோ சிக்குப்படத் தடுக்கி விழப் பார்த்தான்.

கோபத்துடன் குனிந்து பார்த்தால், சமர்த்தியின் சேலை. கோபம் மறைந்து போகத் தரையிலிருந்த ஆடைகளை எடுத்து அங்கிருந்த கைகழுவும் தொட்டியில் போட்டுவிட்டு, வெளியே வர, சமர்த்தி இருக்க முடியாதவள் போல நாரியைப் பிடித்துக் கொண்டும் தேய்த்துக்கொண்டும் அமர்ந்திருந்தாள். அதைக் கண்டதும், தன் கரத்திலிருந்த கோப்பையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு,

“பம்கின் இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்கிற மெல்லிய பதட்டத்தோடு அவளை நோக்கி வந்தான்.

“ஆமாம்… ஏன் கேட்கிறீர்கள்…?” என்றாள் புரியாதவளாக.

“இல்லை அப்போதிலிருந்து பின் முதுகைத் தேய்த்து விடுகிறாயே… அதுதான் கேட்டேன்…” என்றதும்,

“ப்ச்… ஒற்றைக் கதிரையில் அமர்து இருந்ததால் நாரி வலிக்கிறது… அடி வயிறு வலிக்கிறது… தோள்கள் வலிக்கின்றன, கால்கள் வலிக்கின்றன…” என்று குற்றப் பத்திரிகை வாசிக்க, உண்மையாகவே உத்தியுக்தனுக்கு அவளைக் காணப் பரிதாபமாக இருந்தது.

“கான் ஐ ஹெல்ப் யு…?” என்றவன் மெதுவாக அவளை நெருங்க, அப்போதிருந்த நிலையில், இடுப்பையும் காலையும் அழுத்திவிட்டால் சற்றுச் சுகமாக இருக்கும் போலத்தான் தோன்றியது. ஆனாலும் அவன் தொட்டால் இவள் உடல் குழைந்து போகுமே. மலர்ந்து போகுமே. அவன் அணைப்புக்காய் ஏங்குமே.. அந்தப் பயத்தில்,

“இல்லை… வேண்டாம்…” என்று மறுக்க, இவனோ குளியலறைக்குள் நுழைந்தான்.

ஜக்கூசியில் இதமான சுடுநீரைத் திறந்து விட அது சற்று நேரத்தில் நிறைந்தது. தண்ணீரின் சூட்டை அளந்து சரிபார்த்தவன், திருப்தி வர, ‘ஆர்கானிக் பாத் பாம்’ இரண்டை தண்ணீருக்குள் போட்டான். அது மெல்லியதாக வெடித்து நுரைத்துக்கொண்டு மேலெழுந்தது.

எழுந்து அங்கிருந்த மோட்டாரை விசையை அழுத்தச் ஜக்கூசியிலிருந்த தண்ணீர் அதிர்ந்து சீறி அடங்கி அங்கும் இங்கும் பாயத் தொடங்கியது. திருப்தி கொண்டவனாகத் தன் ஷேர்ட்டையும் வேட்டியையும் கழற்றி, அவளுடைய சேலை மீதே போட்டவன் மீண்டும் அறைக்கு வந்தான்.

அவளோ எழுந்து அங்கும் இங்கும் நடந்தவாறு தன் இடையை நீவிக்கொண்டிருந்தாள். இவன் அரவம் உணர்ந்து திரும்பியவள், கையில்லாத பெனியனோடும், பாக்சரோடும் நின்றிருந்த அவன் கோலத்தைக் கண்டு வியந்தாள்.

அவனோ, அவளை நெருங்கிச் சற்றும் யோசிக்காமல் தன் கரங்களில் ஏந்திக் குளியலறைக்கு எடுத்துச் சென்று ஜக்கூசியில் மெதுவாக அமர வைக்க, அந்த வெதுவெதுப்பான தண்ணீர் சமர்த்திக்குப் பெரும் இதமாகவே இருந்தது.

தன்னை மறந்து,

“ஹ… ஃபீல்ஸ் குட்…” என்று முனங்க, இப்போது அவளுக்குப் பின்புறமாக வந்து அவளுக்கு இரு பக்கமும் கால்களைப் போட்டவாறு அமர்ந்தவன், தன்னுடைய பரந்த கரங்களால்; அவளுடைய முதுகையும் இடையையும் இதமாகப் பிடித்துவிடத் தொடங்கினான். சமர்த்திக்கு சொர்க்கமே தெரிந்தது.

அந்த நிலையில், அவனுடைய சேவகம் அவளுக்கு மிக அவசியமாகவே தெரியக் கண்மூடி அவன் சேவகத்தை வரவேற்க, இதமான எல்லை மீறாத அந்த வருடல் சமர்த்திக்கு சொர்க்கத்துக்கான வழியைக் காட்ட அவளுடைய விழிகள், மெதுவாக மூடத் தொடங்கின.

தன்னையும் மறந்து பின்புறமாகச் சாய்ந்தவள் அவன் மார்பில் தலைசாய்த்து விழிகளை மூட, சாய்ந்தவளை அணைத்துக்கொண்டவனின் கரங்கள் முன்புறமாகச் சென்று அவளுடைய வயிற்றோடு அணைத்துப் பிடித்து நின்றன. கூடவே உதடுகள் அவளுடைய உச்சந்தலையில் பொருந்தி நிற்க, அவனுக்கும் அந்த அணைப்பு எல்லையில்லா நிறைவைக் கொடுக்க, அவனுடைய விழிகளும் தாமாக மூடிக்கொண்டன.

எத்தனை நேரமாக இருவரும் விழிகளை மூடி நின்றனரோ, முதலில் விழித்தது உத்தியுக்தன்தான். அப்போதுதான் தான் தூங்கிவிட்டது தெரியத் தன் தலையைக் குலுக்கியவன், குனிந்து பார்த்தான். தையலவள் இன்னும் விழிகளை மூடித் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள்.

அவள் உறக்கம் கலையாது மெதுவாக அவளை விட்டு விலகி எழுந்தவன், தன் ஈர ஆடைகளை மாற்றிவிட்டு, அறைக்குச் சென்று அவளுடைய ஆடை ஒன்றை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, இரண்டு துவாயைப் படுக்கையில் விரித்து வைத்தான். கூடவே அறையின் வெப்பநிலையைச் சற்று அதிகரிக்கச் செய்துவிட்டு, இன்னொரு துவாயைக் கழுத்தைச் சுற்றிப் போட்டவாறு மனைவியை நெருங்கி வந்தான்.

அவள் துயில் கலையாதவாறு மென்மையாகத் தன் கரங்களில் ஏந்த, அது வரையிருந்த கதகதப்பு மறைந்து உடல் குளிரத் தொடங்க, நடுங்கியவள், அவனோடு ஒன்றியவாறு தன் முகத்தை அவன் கழுத்து வளைவில் புதைத்து மீண்டும் உறக்கத்தின் வசமானாள்.

அவளைத் தாங்கியவாறு படுக்கைக்குச் சென்றவன், விரித்த துவாயின் மீது அவளைக் கிடத்தி விட்டு, ஈரமாகிவிட்ட மிச்ச சொச்ச ஆடைகளையும் களைந்துவிட்டு ஈரத்தை மெதுவாகத் துடைக்கத் தொடங்கினான்.

இப்போது மெதுவாக விழிகளைத் திறந்தாள் சமர்த்தி. திறந்த விழிகளில் இன்னும் தூக்கம் அப்பி இருப்பதைக் கண்டவன்,

“இட்ஸ் ஓக்கே டார்லிங்.. ஆடை மாற்றுகிறேன்.. அவ்வளவுதான்… நீ தூங்கு?” என்றுவிட்டு இரவாடையை அவளுக்கு அணிவித்து விட்டான்.

அவளும் களைப்போடுநன்றாகவே அவனுக்கு ஒத்துழைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் விழுந்து தூங்கத் தொடங்க, சற்று ஈரமாகிவிட்டிருந்த முடியை அவிழ்த்து விட்டான். அது உணராமலே மூசி மூசி உறங்கத் தொடங்கினாள் சமர்த்தி. அதைக் கண்டதும் இவன் உதட்டிலும் மென்மையான புன்னகை ஒன்று தவழ்ந்தது.

மெதுவாக அவளை நெருங்கி அவளுடைய தலையை வருடிக்கொடுத்தவனுக்கு ஏனோ நெஞ்சமெல்லாம் வீங்கிப்போய் ஒரு வித இன்ப நிலைக்குத் தள்ளப்பட்டான். கூடவே, எந்த சிக்கலும் இல்லாமல் குழந்தையைப் பெற்று மீண்டு வரவேண்டுமே என்கிற வேண்டுதலும் எழுந்தது.

அந்த நேரம் பார்த்து, உத்தியுக்தனின் கைப்பேசி அலற, சமர்த்தியின் தூக்கம் கலைந்துவிடுமோ என்று அஞ்சியவன் போல அவசரமாகத் தன் கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் பொருத்த, மறுபக்கம் சொன்ன செய்தியில் உடல் இறுகி நின்றான். அடுத்த கணம்,

“இதோ… இப்போதே வருகிறேன்…” என்றவன் புயலென ஆடைகளை மாற்றிவிட்டு உடனே வெளியேறினான்.

What’s your Reaction?
+1
35
+1
6
+1
3
+1
0
+1
6
+1
4

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14”
  1. அடேய் அடேய் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டா😉😉😉😉😉😉
    சாப்பாடு ஊட்டி வுடறதென்ன
    இடுப்பு கையி காலு அமுக்கறதென்ன🤭🤭🤭🤭🤭
    ரொம்பவே பொண்டாட்டி தாசனாகிட்டானே😂😂😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!