(15)
உள்ளம் குதுகலிக்கக் கைப்பேசியின் திரையையே வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், சாவதானமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து அந்த இருக்கைக்கு முன்னிருந்த மேசையில் கால்களைத் தூக்கிப் போட்டுச் சாய்வாக அமர்ந்தவாறு திரையையே வெறிக்க, கைப்பேசியோ, அடித்து ஓய்ந்து போனது.
அதைக் கண்டு அவனையும் மீறிப் புன்னகையில் உதடுகள் மேலும் விரிந்தன. அடுத்த அரை நிமிடத்தில் மீண்டும் மீநன்னயாவிடமிருந்து அழைப்பு வர, அவள் அழைத்த வேகத்திலேயே அவளுடைய அவசரம் இவனுக்குப் புரிந்து போனது.
அது கொடுத்த திருப்தியில் மீண்டும் அது அடித்து ஓயும் வரை ஒருவித நகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சற்றுப் பொறுத்து மீண்டும் கைப்பேசி அடிக்க, அதற்கு மேல் காக்க வைக்காமல், அதை உயிர்ப்பித்தவன்,
“ஹலோ… நிரஞ்சன் பேசுகிறேன்…” என்று யாருடனோ பேசுவது போலக் கூற, மறு பக்கத்தில்,
“ரஞ்சன்… இது நான்… மீநன்னயா…” என்கிற பதட்டமும் பரிதவிப்பும் நிறைந்த கம்மிய குரல்தான் அவனுடைய செவியை ஆனந்தமாக வந்து சேர்ந்தது. இவனோ அப்போதுதான் கேட்பதுபோல,
“நன்னயா… நீயா… என்னம்மா… கொஞ்சத்துக்கு முன்புதானே உன்னை விடுதியில் விட்டுவிட்டு வந்தேன்… ஏதாவது பிரச்சனையா? ஏன் உன்னுடைய குரல் கம்மியிருக்கிறது?” என்று தவித்தவன் போலக் கேட்க, அவளோ,
“ரஞ்சன்… நான்… நான் உங்களைப் பார்க்கவேண்டும்… உடனே இங்கே வருகிறீர்களா… ப்ளீஸ்” என்று கெஞ்ச, அந்தக் குரல் உள்ளுக்குள்ளே இனம்புரியாத ஒருவித அவஸ்தையைக் கொடுத்தாலும், அதை ஒதுக்கிவிட்டு,
“நிச்சயமாகக் கண்ணம்மா… இதோ இப்போதே கிளம்புகிறேன்…” என்றதும், மறுபக்கமிருந்து வெளிப்பட்ட நடுங்கிய மூச்சு இவன் செவியைத் தீண்டிச் செல்ல, அது அவனைச் சுட்டதோ. அவசரமாகக் கைப்பேசியை அணைத்துவிட்டு, அதை முன்னிருந்த மேசையில் எறிந்துவிட்டு, எறிந்த கைப்பேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
எதற்கு அவள் கலங்கிய குரலைக் கேட்டதும் உள்ளுக்குள்ளே பதறுகிறது. இந்தக் குரலைக் காட்டித்தானே ஜெயராமையும் மயக்கியிருப்பாள்…! அதை நினைத்ததும் அதுவரையிருந்த மாயை அறுந்துபோய் அங்கே கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது. கூடவே உதடுகளில் ஏளனப் புன்னகையும்.
‘ஜெயராமை மயக்கியதுபோல என்னை மயக்கலாம் என்று நினைத்தாயா மீநன்னயா…? அது இக்காலத்தில் மட்டுமில்லை. எக்காலத்திலும் உன்னால் முடியாது’ என்று கறுவியவனாக நீளிருக்கையின் மேற்புறத்தில் தலையைச் சாய்த்த போது உதடுகளில் வெற்றிப்புன்னகை அப்பட்டமாக மலர்ந்திருந்தன.
யாருடைய வாழ்க்கைக்குள் நுழையப் பார்க்கிறாய்… கலங்கு… நன்றாகக் கலங்கு… உன்னைக் கதறவைத்த பின், அந்தாளைக் கதற வைக்கிறேன்… என் அக்காவின் வாழ்க்கையையா சூனியமாக்கப் பார்க்கிறாய்…’ என்று ஏளனத்துடன் எண்ணியவனாகச் சற்று நேரம் அப்படியே கிடந்தவன், கற்பனையில் அவள் கலக்கத்தைக் கொஞ்ச நேரம் ரசித்துவிட்டுப் பின், எழுந்து சாவதானமாகத் தயாராகி மீநன்னயாவின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.
அதே வேளை ஜெயராமிற்கு நூறாவது முறையாக் கைப்பேசி எடுத்துவிட்டாள் மீநன்னயா. அழைப்புச் சுத்தமாகச் செல்லவில்ல. ஏன் அவளுடைய அழைப்பை எடுக்கவில்லை. என்னவாயிற்று…? கலக்கத்துடன் கைப்பேசியை அணைத்துவிட்டுப் பெரும் அச்சத்துடன் தன்முன்னால் நின்றிருந்தவர்களை ஏறிட்டாள் மீநன்னயா. அந்த இருவரும் அவளைத்தான் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து காவல்துறையினர். சற்று முன்தான் பெரிய அணுகுண்டை அவளுடைய தலையில் போட்டுவிட்டுச் சாவதானமாக நின்றிருந்தார்கள்.
மீண்டும் தொண்டை அடைக்க, இப்போதுதான் தன் நண்பனை அழைத்தோம் என்கிற எண்ணமேயில்லாமல் வாசல் கதவை ஆவலும் பயமுமாகப் பார்த்துவிட்டு அவன் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து நின்றிருந்த அந்தக் காவல்துறையினரைப் பார்த்தாள்.
என்ன பேசுவது? என்ன சொல்வது? எதுவும் தெரியவில்லை. அத்தனையும் மந்தமாகிப்போன நிலைமை அவளுக்கு.
உடனே கிளம்பவேண்டும் என்றால் எப்படிக் கிளம்புவது? அவள் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைந்துவிட்டாள் என்பதை அறிந்து அவளைக் கைதுசெய்து, மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்காக வந்திருக்கிறார்கள் அந்தக் காவல் துறையினர்.
உடலிலிருந்து இரத்தம் வடிந்து சென்ற உணர்வுடன், என்ன செய்வது என்று கூடப் புரியாமல், ஜெயராமனையும் அழைக்க முடியாமல், வேறு வழியில்லாது அவளுடைய அடுத்த நம்பிக்கைக்குரிய நிரஞ்சனையும் அழைத்தாகிவிட்டது. நல்லவேளை அவனாவது கைப்பேசியை எடுத்துவிட்டான். அதுவும் முதல் இரு முறை அவனும் எடுக்காது போக, இவள் பட்ட பதட்டம், பயம், கலக்கம். அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு அல்லவா அது.
எப்படியோ அவன் வருவதாகக் கூறிவிட்டான். இனி எந்தச் சிக்கலாக இருந்தாலும் அவன் பார்த்துக்கொள்வான். நிச்சயமாகப் பார்த்துக்கொள்வான். அது போதும் அவளுக்கு.
நம்பிக்கையுடன் காத்திருக்க அடுத்த அரைமணி நேரத்தில் வந்துவிட்டிருந்தான் நிரஞ்சன்.
அவளுடைய அறைக் கதவைத் தட்டிவிட்டுக் கதவைத் திறந்ததுதான் தாமதம், அதுவரை கையறு நிலையில் என்ன செய்வது என்று தெரியாது தவித்துக்கிடந்த வேளையில், நம்பிக்கை வெளிச்சமாய்க் கதவைத் திறந்த அவனைக் கண்டதும், அதுவரை அடைத்துக்கிடந்த அழுகை வெடித்துக்கொண்டு கிளம்ப, சற்றும் யோசிக்காமல் இருக்கையை விட்டு எழுந்த மீநன்னயா அவனை நோக்கிப் பாய்ந்து அவனை இறுக அணைத்துவிட்டிருந்தாள்.
இப்படித் திடீர் என்று பாய்ந்து தன்னை அணைப்பாள் என்று நிரஞ்சனும் யோசிக்கவில்லை. அவள் பாய்ந்த வேகத்தில் இவனும் தடுமாறி இரண்டு அடி பின்னால் சென்றுதான் தன்னை நிதானிக்கவேண்டியிருந்தது.
தன் மார்பில் விழுந்தவளைத் தன்னை அறியாமல் இறுக அணைத்தவன்,
“ஷ்… என்னம்மா… என்ன நடந்தது…?” என்று கேட்டவன், அப்போதுதான் புதிதாக அங்கே நின்றிருந்த காவல்துறையை பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டு,
“எதற்காகக் காவல் துறை இங்கே வந்திருக்கிறது?” என்று கேட்டான் இவன். இவளோ எங்கே அவனை விட்டு விலகினால், காவல்துறை தன்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில், இன்னும் அவனை விட்டுப் பிரியாமல்,
அவன் மார்பிலிருந்து தன் முகத்தையும் விலக்காமல்,
“அவர்கள்… அவர்கள் என்னைத் திரும்ப இலங்கைக்கு அனுப்பப் போகிறார்களாம் ரஞ்சன்…” என்றாள் விம்மலுடன். இவனோ அதிர்ந்தவன் போல,
“வட்…” என்று கத்த, இவளும், அந்தக் காவல்துறையினரைப் பார்த்துவிட்டு,
“வட்ஸ் கோய்ங்க ஆன் ஹியர்…” என்றான் கோபம் போல. அதில் ஒருவர், அவர்களை நோக்கி வந்து,
“ஆமாம், இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்த நாட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அதனால் இவர்களைக் கைதி செய்து, மீண்டும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப் போகிறோம்…” என்றதும், இவன் அதிர்ச்சியுடன் மீநன்னயாவைப் பார்ப்பதுபோலப் பார்த்தான்.
“சட்டத்திற்குப் புறம்பாகவா?” என்று அதிர்ந்தவன் போல நின்றவன், பின் நம்பாதவன் போல அவளைப் பார்த்து,
“அவர்கள் சொல்வது உண்மையா…? சட்டத்திற்குப் புறம்பாகவா இங்கே வந்திருக்கிறாய்?” என்று அப்போதுதான் செய்தி அறிந்தவன் போலக் கேட்க, என்ன பதிலைச் சொல்வாள்? வாய்விட்டுச் சொல்லக்கூடிய செய்தியா அது. ஜெயராமன் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் எப்படி இங்கிலாந்து வந்தோம் என்று யாரிடமும் சொல்லாதே என்று. அப்படியிருக்கையில் எப்படி உண்மையைச் சொல்வாள்?
கோபத்தோடு கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாது தலை குனிந்தவள், ஆம் என்று தலையை ஆட்ட, இவனோ ஆத்திரம் போல அவளைப் பார்த்து,
“இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை…?” என்றான் அந்தச் செய்தியே புதிது என்பது போல. அவளைப் பற்றி விசாரித்தபோது கரங்களில் விழுந்த அற்புதச் செய்திதான் அது. அதைக் கொண்டுதானே காயை நகர்த்தத் தொடங்கினான்.
உள்ளே எழுந்த மகிழ்ச்சி அலையை மறைத்தவனாக்க கோபம் போல அவளைப் பார்த்துவிட்டுப் பின் காவல்துறையினரிடம்,
“எங்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் தர முடியுமா… ப்ளீஸ்…” என்றதும்,
“ஓக்கே… கோ எஹெட்…” என்றுவிட்டு அவர்கள் வெளியேற, கதவைப் பூட்டிய அதகனாகரன், தன் மீது கிடந்தவளை விலக்கி,
“என்ன இது மீநனன்யா… இங்கே சட்டத்திற்குப் புறம்பாக உள்ளே வரமுடியாது என்று உனக்குத் தெரியாதா? எப்படி இங்கே வந்தாய்?” என்றான். அவன் கேட்ட விதத்திலேயே ஏதோ கொலைக் குற்றம் செய்துவிட்ட உணர்வு அவளைத் தாக்க, எச்சில் கூட்டி விழுங்கியவள்,
“வேறு என்ன செய்வது ரஞ்சன். என்னை இங்கே எடுப்பிக்க வேறு என்ன வழி இருக்கிறது சொல்லுங்கள். இந்த நாட்டின் சட்டம் நியாயமான வழியில் வர வழிவகுக்காதே. ராம் சட்ட ரீதியாக என்னை எடுப்பிக்கப் பல வகையில் முயன்றார். அத்தனையும் தோல்வி என்ற பிறகுதான், சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் கட்டி என்னை இங்கே அழைத்து வந்தார். ஆனால் இத்தனை சுலபமாகக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை…” என்று கலங்கிய குரலில் கூற, இவனோ,
“ஜெயராமை அழைத்தாயா? அவர் என்ன சொன்னார்?” என்றான் குழப்பம் கொண்டவன் போல. இவளோ கண்களில் கண்ணீர் மல்க, நிமிர்ந்து பார்த்து,
“பல முறை அழைத்துப் பார்த்தேன் ரஞ்சன்… அவருக்கு அழைப்பு போகுதில்லை… என்ன செய்யட்டும்… அதுதான் உங்களை அழைத்தேன்…” என்றபோது அவளுடைய கன்னத்தில் கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது.
உடனே அவளுடைய கன்னத்தைத் தன் உள்ளங்கைகளால் பற்றியவன், வழிந்த கண்ணீரைப் பெருவிரலால் வருடிக் கொடுத்து,
“இப்போது எதற்கு இந்த அழுகை. சமாளிக்க முடியாதது என்று எதுவுமில்லை… சமாளிக்கலாம் விடு…” என்று கூற, அவளோ,
“நான் இலங்கைக்குப் போக மாட்டேன் ரஞ்சன்… இத்தனை காலமும் நரகத்தில் வாழ்ந்துவிட்டேன்… இப்போதுதான் சுதந்திரக் காற்றை அனுபவிக்கிறேன். அதை அத்தனை சுலபத்தில் இழக்க விரும்பவில்லை. இனி இங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால், அங்கே என்ன செய்வார்களோ… பயமாக இருக்கிறது ரஞ்சன்…” என்று மீண்டும் அழத் தொடங்கியவளை, இரக்கத்துடன் பார்த்து,
“ஹே… எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டுமா. நம்பு… நான் காவல்துறையினரிடம் பேசிப் பார்க்கிறேன்.. நீ வருந்தாதே…” என்றவன் அவளைச் சமாதானப் படுத்திவிட்டுக் கதவைத் திறந்தபோது, அவனுடைய உதடுகள் புன்னகையைச் சிந்திக்கொண்டிருந்தன.
அரை மணிநேரம் அந்தக் காவல்துறையினரோடு என்ன பேசினானோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். உள்ளே வந்தவன்,
“நன்னயா… புறப்படு…” என்றான் பரபரப்புடன்.
இவளோ அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து,
“எங்கே…?” என்றாள் திக்கித் திணறி.
“இனி நீ இங்கே இருக்க முடியாது நன்னயா… காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நாம் தப்பவேண்டும்… புறப்படு…” என்று பதட்டமாகக் கூற, அப்போதிருந்த நிலையில் அவளுக்கு வேறு வழியும் இருக்கவுமில்லை.
அந்த நிலையிலும் அவசரமாக ஜெயராமுக்குக் கைப்பேசி எடுக்க முயல, கைப்பேசி இப்போதும் அணைத்துத்தான் வைக்கப்பட்டிருந்தது. இவனோ எரிச்சலுடன் அவளைப் பார்த்து,
“இப்போது யாருக்குக் கைப்பேசி எடுக்கிறாய்?” என்று கேட்க,
“ராமிற்கு… அவருக்குச் சொல்லவேண்டுமே…” என்று நடுங்கிய கரங்களுடன் முயற்சிசெய்ய,
“நன்னயா, இப்போது இதற்கெல்லாம் நேரமில்லை… முதலில் இங்கிருந்து தப்பவேண்டும், நாம் போன பின்னாடி அவரோடு பேசிக்கொள்ளலாம்… இப்போது புறப்படு…” என்று கூற, இவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
உடல் நடுங்க மனம் சோர்வுற, எப்படியாவது இந்தச் சிக்கலிலிருந்து தப்பவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, அவசரமாகக் கிடைத்த ஆடைகளை ஒரு பெட்டியில் திணித்துவிட்டு நிமிர, அவளுடைய கரத்திலிருந்த பெட்டியைத் தன் கரத்திற்கு இழுத்து எடுத்த அதகனாகரன், “வா…” என்கிற அழைப்புடன் வெளியே வந்தான். காவல்துறையினர் மறுபக்கம் திரும்பி நின்றவாறு எதையோ பேசிக்கொண்டிருக்க, இவனோ உதட்டில் தன் சுட்டுவிரலை வைத்து அவளைச் சத்தம்போடவேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு, அவளுடைய கரத்தைப் பற்றி, மறுபக்கமாக நடக்கத் தொடங்க, இவளும் அச்சத்துடன் அந்தக் காவல் துறையினரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அவனுடைய இழுப்புக்கு ஏற்ப நடக்கத் தொடங்கினாள்.
படிகளின் பக்கம் அவளை இழுத்துக்கொண்டு சென்றவன், அடுத்து ஏறி அமர்ந்த இடம் அதகனாகரனின் வாகனம்தான்.
மீநன்னயாவோ அச்சத்துடன் காவல்துறையினர் தங்களைப் பின் தொடர்கிறார்களா என்று என்று பார்த்து, இறுதியில் இல்லை என்பதை உணர்ந்த பின்தான் நிம்மதியுடன் வாகன இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.
“ஓ காட்… நன்றி ரஞ்சன்… நீங்கள் மட்டும் இல்லையென்றால், இந்தச் சிக்கலை எப்படிக் கையாண்டிருப்பேனோ எனக்குத் தெரியவில்லை.” என்று கலகத்துடன் கூற, அவனோ, அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு,
“ஹே… எதற்கு நன்றியெல்லாம்… நமக்கிடையில் நன்றி தூரமாக இருக்கவேண்டும்… புரிந்ததா?” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு, வாகனத்தை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.
(16)
கொஞ்சத் தூரம் போனதும், ஒரு கடைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்தியவன்,
“இதோ வருகிறேன் நன்னயா…” என்று கூறிவிட்டு உள்ளே சென்று பத்தாவது நிமிடத்தில் வெளியே வந்தபோது, அவனுடைய கையில் ஒரு பை வீற்றிருந்தது. வந்தவன், அவளிடம்
“நன்னயா… உன்னுடைய கைப்பேசியைத் தா…” என்று கேட்க, அவள் மறுக்காது நீட்டினாள்.
அதை வாங்கியவன், அதிலிருந்த சிம்மைக் கழற்றி அதை ஒரு மடி மடித்து உடைக்க, இவளோ பதறியவளாக,
“என்ன செய்கிறீர்கள்…”’ என்றாள். இவனோ அந்தச் சிம்மோடு சேர்ந்த கைப்பேசியையும் நின்றவாக்கிலேயே சற்றுத் தள்ளியிருந்த குப்பைத் தொட்டியை நோக்கி விசிறி எறிந்துவிட்டுத் தன் கரத்திலிருந்த பெட்டியைத் திறந்து அதிலிருந்து புதிய கைப்பேசியை அவளிடம் நீட்ட, இவளோ வாங்காமல் அவனைத்தான் பார்த்தாள்.
“இந்தா இது உனக்குத்தான்…” என்றதும், விழிகள் கலங்க அவனைப் பார்த்தவள்,
“எதற்காக அந்தக் கைப்பேசியை எறிந்தீர்கள். அது ராம் எனக்கு வாங்கிக் கொடுத்தது…” என்றபோது அவளுடைய குரல் கரகரக்தக் தொடங்கியிருந்தது. ராம் என்கிற அழைப்பைக் கேட்டதுமே பற்றிக்கொண்டு வர,
“நன்னயா, அந்தக் கைப்பேசியை வைத்து உன்னை இங்கிலாந்து ஆணையகத்தால் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும். அதுதான் பழையதை எறிந்துவிட்டுப் புதியதைக் கொடுக்கிறேன்… ஏன், அந்த ராம் கொடுத்தால் உன்னால் வாங்க முடிகிறது, இந்த ரஞ்சன் கொடுத்தால் வாங்க முடியாதா?” என்று சற்று எரிச்சலுடன் கேட்க, அதற்கு மேல் மறுக்காது அதை வாங்கிக்கொண்டாள் மீநனன்யா.
“குட்…” என்றவன், மீண்டும் வாகனத்தை எடுக்க, சற்று நேரம் அமைதி காத்தவள், பின், அவனை நிமிர்ந்து பார்த்து,
“இப்போது எங்கே போகிறோம்…? என்று கேட்டாள்.
சற்றுத் தூரம் அமைதியாகப் போனவன், பின் அவளைத் திரும்பிப் பார்த்து,
“இங்கே எனக்கொரு கோட்டை சொந்தமாக இருக்கிறது. இப்போதைக்கு நீ பாதுகாப்பாக இருப்பதற்கு அந்தக் கோட்டைதான் வசதி. அங்கே போனதும், என்ன செய்வது என்று யோசிக்கலாம்… என் நண்பன் இங்கிலாந்து குடியுரிமை ஆணையகத்தில்தான் வேலை செய்கிறான். அவனிடம் விசாரித்துப் பார்க்கலாம். அவனுடைய அறிவுரைப்படி அடுத்து என்ன செய்வது என்று கேட்கலாம்… சரியா…” என்றவன், பின் அவளைத் திரும்பிப் பார்த்து,
“என்னை நம்பி என் கோட்டைக்கு வருவாய்தானே…” என்றான். இவளோ அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் விழிகளில் தெரிந்த நம்பிக்கையைக் கண்டு, இவனுக்குள் ஏளனப் புன்னகை மலர்ந்தது. நீ ஒருத்தனை ஏமாற்றினாய், நான் உன்னை ஏமாற்றுகிறேன். நீ செய்த வினை பூமராங் மாதிரி உன்னையும் வந்து தாக்கிவிட்டது பார்…’ என்று மனதிற்குள் எண்ணும்போதே,
“உங்களை நம்பாமலா உங்கள் வாகனத்தில் ஏறி அமர்ந்திருக்கிறேன்… இன்றைய நாளில் என்னை விட, உங்களைத்தான் முழுதாக நம்புகிறேன் ரஞ்சன்…” என்று மனதாரக் கூற, ஏனோ அவன் நெஞ்சம் சுடத்தான் செய்தது.
ஆனாலும் தன்னைச் சமாளித்தவனாக,
“நன்றி நன்னயா…” என்றவன் மேலும் ஒரு இரண்டு மணி நேரம் வாகனத்தை ஓட்டினான். அடுத்துப் பலசரக்குக் கடை ஒன்றின் முன்னால் வாகனத்தை நிறுத்த, இவள் ஏன் என்பது போல அவனைப் பார்த்தாள்.
“அந்தக் கோட்டை ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது நன்னயா. அங்கே கடைகள் எல்லாம் கிடையாது… எப்போதும் அங்கே போகும் போது சில நாட்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்வது வழக்கம்…” என்றதும், அந்த ஒதுக்குப் புறம் என்ற சொல் இவளைச் சற்று யோசிக்க வைத்தது.
ஏன் சாதாரண இடம் எதுவும் கிடைக்கவில்லையா… எதற்காக ஒதுக்குப் புறமாகச் செல்லவேண்டும்? யோசனையுடன் அதகனாகரனைப் பார்க்க, அவளுடைய விழிகளில் தெரிந்த குழப்பத்தைக் கண்ட அதகனாகரன், உடனே சுதாரித்தவனாக,
“யாருடைய கவனத்தையும் திசைதிருப்பாத இடமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன்… நாம் காவல் துறையை ஏமாற்றிவிட்டுத் தப்பியிருக்கிறோம்… இத்தனை நேரத்திற்கு நாம் தப்பி வந்தது காவல்துறைக்குத் தெரிந்திருக்கும். அதனால் எல்லா இடமும் வலைவீசித் தேடுவார்கள். அவர்களின் பார்வையிலிருந்து அத்தனை சுலபத்தில் உன்னால் தப்ப முடியாது நன்னயா. கொஞ்ச நாளைக்கு அவர்கள் தேடி ஆறும் வரைக்கும், நீ மறைந்திருக்க ஏற்ற இடம் அந்தக் கோட்டைதான். உனக்குப் பயமாக இருந்தால், என் மீது நம்பிக்கை இல்லை என்றால் சொல்… இப்போதே திரும்பிவிடலாம். எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை…” என்று அவன் கூற, அதற்கு மேல் அவளால் அவனைச் சந்தேகப்பட முடியவில்லை.
“இல்லை… இல்லை… அங்கேயே போகலாம்…” என்று இறங்கிவிட்ட குரலில் கூற, வெற்றிப் புன்னகையுடன் கடையை நோக்கிச் சென்றவன், திரும்பி வந்தபோது, மூட்டை மூட்டையாகப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தான்.
என்ன இது, கொஞ்ச நாட்களுக்கு என்றான், ஆனால் இத்தனை பொருட்களோடு வருகிறானே… ஆனாலும் சந்தேகப்பட்டு அவனிடம் கேட்க எதுவோ தடுத்தது. அது பாழாய் போன நாகரிகமாக இருக்கலாம். இல்லை அவன் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கலாம். ஏதோ ஒன்று, வாயடைத்து நிற்கச் செய்தது.
அத்தனை பொருட்களையும் வாகனத்திற்குள் ஏற்றிவிட்டு, முன்னிருக்கையில் வந்து வாகனத்தை உசுப்ப, அதன் பின் தங்கு தடையில்iலாது வாகனம் ஓடத் தொடங்கியது. வேகமாகப் போனதாலோ, என்னவோ, மீநன்னயா தன்னை மறந்து உறங்கத் தொடங்கினாள்.
மீநன்னயா விழிகளைத் திறந்தபோது, அடர்ந்த மரப்பிரதேசம்தான் கண்களில் பட்டன. முதலில் குழம்பியவளாக, விழிகளைச் சுருக்கி, சுற்றும் முற்றும் பார்த்தாள். நிலவின் மங்கிய ஒளியில் அந்தப் பரந்த பிரதேசம், ஒருவித கிலியைக் கொடுக்க, பதறியவாறு நிமிர்ந்தமர முயன்றாள். ஆனால், அவளுடைய இருக்கை சரித்துவைக்கப்பட்டிருந்ததால், அவளால் சடார் என்று எழமுடியவில்லை. பதட்டத்துடன் கைக் கடிகாரத்தைப் பார்க்க அது இரவு ஒரு மணி என்றது.
இது என்ன இடம்? ரஞ்சன் எங்கே போனான்? மீண்டும் எழ முயன்றவளுக்கு அப்போதுதான் தன்னைப் பிணைத்து இருக்கைப்பட்டி போட்டிருப்பது உறைத்தது. ஒருவித நடுக்கத்துடன், இருக்கைவாரைக் கழற்றியவள், வாகன இருக்கையையும் நேராக்கிவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அது அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், குளிர் ஊசியாகக் குத்தியது. அதிலிருந்து தப்பக் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு, அங்கும் இங்கும் பார்த்தபோதுதான் தட்டுப்பட்டான் அதகனாகரன்.
கையில் எடுத்துச் செல்லக் கூடிய இருக்கை ஒன்றை விரித்துப் போட்டு, அதில் அமர்ந்தவாறு தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடி உறங்கிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும்தான் அச்சம் விலகியது அவளுக்கு. உறங்கும் அவனை எழுப்பப் பிடிக்காமல், குளிர்ந்த தேகத்தைச் சூடேற்ற வேண்டி இரண்டு கரங்களாலும் மேல் கரங்களைத் தேய்த்துவிட்டவாறு சற்றுத் தூரம் நடந்து பார்த்தாள்.
எது பாதை, எது திசை என்று எதுவும் தெரியவில்லை. ஏதோ திரைப்படங்களில் பேய்ப்படங்களுக்காகக் காட்டும் காட்சியமைப்பு போல இருந்தது அந்தச் சூழல்.
இவளை அழைத்துவர இவனுக்கு வேறு இடங்களா கிடைக்கவில்லை. அச்சம் அடித்தொண்டையில் வந்து நின்று துடிக்க, திரும்பலாம் என்கிற எண்ணத்தில் காலை எடுத்து வைக்க, அப்போது பார்த்தா ஒரு மரத்தின் வேர் அவளைத் தடுக்கிவிழச் செய்யவேண்டும். என்ன ஏது என்று யோசிப்பதற்குள்ளாகவே, தரையில் விழுந்தவள், சற்றுத் தூரம் உருண்டு சென்று இறுதியில் அங்கிருந்த ஒரு மரத்தின் மீது பலமாக மோதி நின்றாள்.
உருண்டதில் ஆங்காங்கே சிறிய கற்களும், தடிகளும் அவளுடைய தளிர் மேனியைச் சற்றும் பதம் பார்க்க, அதனால் ஏற்பட்ட வலியிலும் எரிச்சலிலும், “ஷ்…” என்கிற முனங்கலுடன், எழுந்தவளுக்கு ஒற்றைக் காலைத் தரையில் பதிக்க முடியவில்லை.
விழுந்ததில் சுளுக்கியிருக்கவேண்டும். “ம்மா…” என்று முனங்கியவாறு நொண்டிக்கொண்டே வாகனம் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி வந்தவள், அதகனாகரனைக் காணாமல் திகைத்துப் போனாள்.
இப்போது இங்கேதானே இருந்தான். அதற்கிடையில் எங்கே போனான்? மேலும் அச்சம் அடித்தொண்டையில் வந்து சிக்கப் பதட்டத்துடன் திரும்பியவளின் முன்னால் ராட்சசனாக நின்றிருந்தான் அதகனாகரன்.
இப்படித் திடீர் என்று பின்னால் முளைப்பான் என்று நினைத்தும் பார்த்திராதவள், அதிர்ச்சியில் இரண்டடி வைக்க முயல, ஒற்றைக் கால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் சண்டித்தனம் செய்ய, என்னதான் முயன்றும் தன்னைச் சமப்படுத்த முயன்று தோற்றவளாகப் பின்புறமாகச் சரிய முயன்றவளின் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவனின் மறு கரம், அழுத்தத்துடன் அவளுடைய இடையைப்பற்றி நின்றது.
அந்த நிலவின் ஒளியிலும், பளபளத்த அவன் விழிகளைக் கண்டு, ஒரு கணம் தடுமாறித்தான் போனாள் மீநன்னயா.
அவனும் தயங்காமல் அவளுடைய விழிகளைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
நடுக்காடு, நடு நிசி, பயங்கரக் குளிர், பளபளத்த விழிகளுடன் அவன்… அவளையும் மீறி அச்சம் உச்சத்தைத் தொட, அவசரமாக அவனை உதறிவிட்டு விலகியவள்,
“நா… நாம் இப்போது எங்கே இருக்கிறோம்… இது என்ன இடம்?” என்றாள் திக்கித் திணறி. ஆனால் அவனுக்கோ இவளுடைய பதட்டம் கொஞ்சம்கூட உறுத்தியதாகத் தெரியவில்லை. மாறாகத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைச் செலுத்தியவாறு,
“ம்… இது என்ன இடமா? பார்த்தால் தெரியவில்லை…? காடு… நடுக்காடு…” என்றான் அவன் குரலைப் பயங்கரமாக மாற்றி. அந்தக் குரலில் மேலும் நடுக்கம் பிறக்க,
“எதற்காக இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள்?” என்றாள் திக்கித் திணறி. அவனோ அவளை வன்மமாகப் பார்த்து,
“ஏனா… ஹா ஹா ஹா… இது என்ன கேள்வி. இத்தனைக்கும் சின்னக் குழந்தைக்குக் கூடப் புரிந்திருக்கும்…“ என்றவன் ஆத்திரத்துடன் அவளைப் பார்த்து, “சந்தேகமே வேண்டியதில்லை… நான் உன்னைக் கடத்தித்தான் வந்திருக்கிறேன்…” என்று கூற இவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது.
நம்ப முடியாதவளாக எதையோ கூற வாய் எடுத்தவளுக்கு வெறும் காற்றுதான் வந்தது. ஒருபக்கம் அவன் அப்படிச்செய்வான் என்று நம்பவும் முடியவில்லை, அதேவேளைச் சூழ்நிலை கொடுத்த தாக்கம் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்ட, அடுப்புக்குப் பயந்து வாணலியில் விழுந்தவிட்டாளா? என்கிற சந்தேகம் எழுந்தது.
எந்த நோக்கத்திற்காகக் கடத்தி வந்திருக்கிறான்… அதற்கான பதில் தெரியாமலில்லை. எத்தனை திரைப்படங்கள், அக்குவேறு ஆணிவேறாகச் சொல்லியிருக்கின்றனவே… கடவுளே… இப்போது இந்தச் சிக்கலிலிருந்து எப்படித் தப்பிக்கப்போகிறாள்? பயங்கர மன அழுத்தமும் பயமும், அவளுடைய உயிரைக் காவு வாங்கிவிடும் போலத் தோன்ற, சிரமப்பட்டு அந்த உணர்வுகளை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, முதலில் அங்கிருந்து தப்பவேண்டும் என்பது புரிந்தவளாக, ஓடத் தயாராக, அவளுடைய அந்த நிலையைக் கண்டு, அதகனாகரன், கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான்.
ஓடுவதற்குக் கால் எடுத்து வைத்தவள், குழப்பத்துடன் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ, மேலும் அவளைப் பார்த்து வாய் விட்டுச் நகைத்துக்கொண்டே இருந்தான். அந்தச் சிரிப்புச் சொன்னது, அவன் பொய் சொல்கிறான் என்று.
இன்னும் நம்ப முடியாமல் அவனைப் பார்க்க, அவனோ சிரமப்பட்டுத் தன் சிரிப்பை அடக்கியவனாக,
“பயந்துவிட்டாயா?” என்றான் கிண்டலுடன். இப்போதுதான் முழுதாகத் தெளிந்தாள், அவன் பொய் சொல்கிறான் என்று.
ஆத்திரம் கண்மண் தெரியாமல் பிறக்க.
“உங்களை….” என்று பற்களைக் கடிக்க இவனோ மேலும் சிரித்தவாறு,
“சாரிமா… நீ என்னை ஒரு வில்லன் நிலையில் வைத்துப் பார்த்தாயா… அதுதான், அதைத் தொடர நினைத்தேன்…” என்றவன், சிரித்தவாறே.
“வாகனத்தின் இரண்டு டயர்களிலும் பஞ்சர்…” என்று அவன் கூறும்போது அவளையும் மீறி விழிகள் டயர்களைப் பரிசோதித்தன. அவன் சொன்னது சரிதான். முன் இரண்டு டயர்களும் காற்றுப்போய்தான் இருந்தன. சரிதான் என்று அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ,
“சரி இங்கேயே வாகனத்தை விட்டுவிட்டுப் பொடிநடையாக நடக்கலாம் என்று நினைத்தால், நீ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய். உன்னை எழுப்ப மனம் வரவில்லை. அதுதான். நீ எழும்பும்வரை காத்திருக்கலாம் என்று உட்கார்ந்திருந்தேன்… சும்மா சொல்லக்கூடாது… நீ முற்பிறப்பில் கும்பகர்ணனாகப் பிறந்திருப்பாயோ என்றுகூட நினைத்தேன்…” என்று அவன் கிண்டலாகச் சொல்ல, அதுவரையிருந்த பயம் மாயமாக மறைந்து அங்கே சங்கடமும் வெட்கமும் பூத்தது. சற்று அசடு வழிந்தவளாக,
“ஓ… அவ்வளவு நேரமாகவா நான் உறங்கினேன்… சாரி ரஞ்சன்… எப்படித் தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை…” என்றவள் அவனைச் சங்கடத்துடன் பார்த்து,
“நான் உங்களைத் தப்பாக நினைத்துவிட்டேன்… அதற்கும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூற, அவனோ,
“ஹே… ரிலாக்ஸ்… யாராக இருந்தாலும் இந்தச் சூழ்நிலைக்கு இப்படித்தான் நடந்திருப்பார்கள்… அதனால் பீ கூல்…” என்றவன், சுத்தவரப் பார்த்துவிட்டு,
“என்னுடைய கோட்டைக்கு இன்னும் கொஞ்சத் தூரம் நடக்கவேண்டும்… உன்னால் நடக்க முடியுமா? இல்லையென்றால் இங்கேயே தங்கிவிட்டுக் காலையில் போகலாமா… எப்படியும் டயரைத் திருத்தாமல் வாகனத்தை எடுக்க முடியாது.” என்று அவன் யோசனையுடன் கூற, இவளும் சுத்தவரப் பார்த்துவிட்டு,
“இல்லை அதகனாகரன்… போகலாம்… உதவி கிடைப்பதாக இருந்தாலும் காலையில்தான் கிடைக்கும். அதுவரை இங்கேயே இருப்பதை விட, கோட்டைக்குப் போவது மேல்…” என்றவள் தயக்கத்துடன் அவனைப் பார்த்து,
“அதிகத் தூரமோ?” என்று கேட்டாள். அவனோ தோள்களைக் குலுக்கி,
“மே பி… டூ கிலோமீட்டர்ஸ்…” என்று கூற,
“அவ்வளவுதானா… அப்படியானால் நடந்தே போகலாம்…” என்று கூறியவளை யோசனையுடன் பார்த்தவன்,
“நடக்கலாம்தான்… ஆனால் இரவில் பாம்புகளின் நடமாட்டம் இருக்குமே…” என்றதும், அதிர்வுடன் அவனைப் பார்த்தாள் மீநன்னயா.
“எ… என்னது… பா… பாம்பா…” என்று அவள் அலற, அவளைக் கடைக்கண்ணால் பார்த்தவாறு,
“ஆமாம் மீநன்னயா… பாம்புதான். ஆனால், பயப்படாதே… அதைப் பிடித்துத் தின்ன, கழுகுகள் வரும். கழுகென்றால், சும்மா கழுகல்லம்மா… பிணந்தின்னி கழுகுகள். மனிதர்களைக் கண்டால் போதும்… அவர்களை இரையாக்காமல் இங்கிருந்து பறந்து செல்லாது…” என்றதும் இவள் முகம் வெளிறியது. தன்னையும் மறந்து அதகனாகரனை நெருங்கி நின்றவள், பயத்தில் வியர்த்துக் கொட்ட அந்தக் காட்டைச் சுத்தவரப் பார்த்தாள்.
நிலவின் ஒளி இருந்தாலும், அந்த அடர்ந்த மரங்கள் கொண்ட பகுதி ஒருவித அச்சத்தைக் கொடுக்கவே செய்தது. எச்சில் கூட்டி விழுங்கியவள், அவனை நிமிர்ந்து பார்க்க, அப்போதும் சும்மா விட்டானா கிராதகன்.
“கழுகு மட்டும் அல்ல மீநன்னயா… எப்போதாவது நேரம் கிடைக்கும்போது மட்டும், இந்தப் புலி, சிங்கம், கரடி இவையெல்லாம் வந்து ஹாய் சொல்லிவிட்டுப் போகும். மற்ற படி பயப்படுவதுபோல் ஒன்றுமில்லை…” என்று மேலும் கிலியூட்ட, இவளோ ஆத்திரத்துடன் அவனைப் பார்த்துவிட்டு ஓடுவதற்குத் தயார் என்பது போல நின்றவாறு,
“இது… இதையேன் எனக்கு முன்பே சொல்லவில்லை… வாருங்கள் திரும்பிப் போய்விடலாம்…” என்றதும் அதகனாகரன் மீண்டும் கடகடவெனச் சிரிக்கத்தொடங்கிவிட்டான்.
அவன் சிரிப்பதையே சற்று நேரம் வாய்பிளக்க பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் மீண்டும் மொக்கைவாங்கியது அவளுக்குப் புரிந்தது. தன் இடையில் கரங்களைப் பதித்து அவனைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்து,
“பொய்… பொய்தானே சொன்னீர்கள்…” என்றாள். இப்போது தன் சிரிப்பை நிறுத்தியவன்,
“கமோன் மீநன்னயா… எதற்கு இந்தப் பயம்… ம்… நீ நினைப்பதுபோல இங்கே சிங்கம் புலி, எதுவுமே கிடையாது. அதற்காக இந்தக் காடு மிகவும் பாதுகாப்பு என்றும் சொல்லமாட்டேன். தனியாக இதற்குள் போகாதவரை ஆபத்தில்லை. இந்தக் காட்டிற்குள் ஒரு சில ஆபத்தான விலங்குகள் உண்டுதான். முக்கியமாக நரிகள்… பாம்புகள்… இதைத் தவிர நமக்குப் பெயர்தெரியாத ஏதாவது சிறிய பூச்சிகள்…” என்றவன் மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்து,
“ஒன்று… நாங்கள் மிருகத்திடம், சண்டைக்குப் போகாதவரை, அவை நமக்கு நண்பர்கள்தான்… என்ன புரிந்ததா?” என்று அவன் சொன்னதும், பயம் மறைந்து ஆழ்ந்த மூச்செடுத்து விட்டவளிடம்,
“ஆனால் ஒன்று மீநன்னயா… இந்த உலகத்தில், மிருகங்களைவிடப் பயங்கரமான உயிரினமும் உண்டு… அது சுயநலமானது. தன் தேவைக்காக எதையும் செய்யும் அதிலிருந்து தப்புவதுதான் மிகக் கடினம்…” என்று கூற, அவனை ஏறிட்டவள்,
“உண்மைதான்… மனித மிருகங்கள், மிக ஆபத்தானவைதான்…” என்று ஒத்துக்கொள்ள, அவனோ அவளை ஒரு வித ஏளனத்துடன் பார்த்துவிட்டு, வாகனத்தின் ட்ரங்கைத் திறந்து, அதிலிருந்து ஒரு சில பொருட்களை எடுத்துக்கொண்டு, அவளோடு நடக்கத் தொடங்கியபோதுதான் கவனித்தான், அவள் குளிரில் நடுங்குகிறாள் என்பதை.
அதை உணர்ந்தவன் போல, தன் கரத்திலிருந்த பொருட்களைக் கீழே வைத்தவன், தான் அணிந்திருந்த கோட்டைக் கழற்றி, அவள் மீது போர்த்திவிட, ஏனோ அவனுடைய அக்கறையில் நெஞ்சம் குளிர்ந்துபோனது மீநனன்யாவிற்கு.
மறுக்காது அதைப் பெற்றுக்கொண்டவளின் நாசியைத் தீண்டிச் சென்றது அவனுக்கே உரித்தான அந்தப் பிரத்தியேக மணம். ஏனோ அந்த வாசனை அவளுடைய மனதிலிருந்த பயத்தை மாயமாக்கிச் செல்ல, அவனுடைய அந்தக் கோட்டைத் தன்னோடு இறுக்கப் பற்றி அணைத்துக்கொண்டாள்.
கடவுள் நிஜமாகவே இருக்கிறார் போல. இல்லையென்றால், இத்தகைய இக்கட்டான நிலையில் அவளைக் காக்கவென்று இப்படி ஒருவனை அவர் அனுப்பியிருக்கமாட்டாரே… மன நிறைவுடன், அவனுடைய வாடையைத் தாராளமாக வழங்கிய அந்தக் கோட்டை இறுக அணைத்தவாறு விந்தி விந்தி நடக்கத் தொடங்க, அவள் விந்தி நடப்பதை வியப்புடன் ஏறிட்டவன்,
“ஹே… என்னாச்சு… எதற்காக விந்தி நடக்கிறாய்?” என்றான் அக்கறையாக. இவளோ தோள்களைக் குலுக்கியவாறு நடந்ததைக் கூற,
“ப்ச்.. என்ன இது? பார்த்து நடக்கமாட்டாயா?” என்று கடிந்துவிட்டு அவளுடைய வேகத்திற்கு ஏற்பத் தன் வேகத்தையும் குறைக்க, இருவரும் எதையெதையோ பேசியவாறு அந்தக் கோட்டையை வந்து சேர்ந்துவிட்டிருந்தனர்.
இருட்டானாலும், அந்தக் கோட்டை தெளிவாக நிலவின் வெளிச்சத்தில் நிமிர்ந்து நின்றவாறு இவர்களை வரவேற்றது. அந்த உயர்ந்த கோட்டையைக் கண்ட மீநனன்யாவிற்குத் தன் விழிகளைத் திருப்பவே முடியவில்லை.
தன்னை மறந்து,
“வாவ்… நிஜமாகவே இது உங்கள் கோட்டைதானா?” என்றாள் வாய்பிளந்தவாறு.
“இல்லை… என் நண்பனுடையது… உன்னை அழைத்துவருவதற்காக எடுத்திருக்கிறேன்…” என்று கிண்டல் போலக் கூற, அப்போது போல இப்போதும் அவளைக் கிண்டலடிக்கிறான் என்று எண்ணியவளாக, அவனைப் பார்த்து முறைத்தவள்,
“சரி… தெரியாமல் கேட்டுவிட்டேன், போதுமா?” என்றவள், பின் திரும்பி அந்தக் கோட்டையை வியப்புடன் பார்த்தவாறு முன்னேறத் தொடங்க, இவனோ இவளுடைய முதுகை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
நிஜத்தைச் சொன்னாலும் பொய் என்றுவிட்டுச் செல்கிறாளே… முட்டாள்…” என்று எண்ணியவாறு அவள் பின்னே உள்ளே சென்றாள்.
பாவம் மீநன்னயா
ரொம்ப பாவம்பா