(12)
அன்று மீநன்னயாவோடு உணவகத்தில் உணவு உண்டுவிட்டு விடைபெற்றவன், அடுத்த இரண்டு நாட்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தான். அந்த இரண்டு நாட்களும் அவளைப் பற்றி விசாரித்தபோதுதான், அந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது. அது அவள் சட்டத்திற்குப் புறம்பான முறையில்தான் இங்கிலாந்து வந்தாள் என்று..
அந்த செய்தி கிடைத்ததும் வக்கிரம் நிறைந்த புன்னகை ஒன்று அவன் உதடுகளில் மலர்ந்தது. மறு நாள், அவள் எங்கே போகிறாள் என்பதை அறிந்து, அப்போதுதான் அவளைச் சந்தித்ததுபோலப் பேசி, அவளிடமிருந்தும் ஒரு சில தகவல்களை அறிய முயன்றான். அவள் பெசியதில் இருந்தே அவனுக்குக் கிடைத்த தகவல் சரியானது என்று உறுதியாக, அவளோடு சற்று நேரம் உரையாடிவிட்டு நாகரிகமாகவே விடைபெற்றவன் அடுத்த இரண்டு நாட்களும் ஒதுங்கியிருந்தான்.
அவனுடைய நாகரிகமான பேச்சு, கண்ணியமான நடத்தை, அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வது என்று மெல்ல மெல்ல அவள் உள்ளத்தில் உயர்ந்த நிலையையும் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டான். அதன் விளைவு அவள் உள்ளத்தில் மின்னாமல் முழங்காமல் நிரஞ்சனாய் இடம்பெயர்ந்தான் அதகனாகரன். அவன் யார் என்று தெரியாமலே, அவனைப் பற்றி ஜெயராமனிடம் கூறினாள் மீநன்னயா.
அவள் கூறுவதைக் கேட்ட ஜெயராமனும்,
“அப்படியா… நான் அவரைச் சந்திக்கவேண்டுமே…’ என்று சற்று யோசனையுடன் கேட்க, இவளோ மலர்ந்தவளாக,
“நிச்சயமாக அழைத்து வருகிறேன்…” என்று உறுதி கூறியவள், அதகனாகரனிடமும் இதைப் பற்றிக் கூற, அவனும் நிச்சயமாக வருவதாகக் கூறித் தட்டிக் கழிக்க, எப்படியோ நிரஞ்சன் என்கிற அதகனாகரனைச் சந்திக்கும் வாய்ப்பு ஜெயராமனுக்குக் கிடைக்காமலே போனது. அவருக்கு வேறு கனடா போகும் அவசரம். அவனைச் சந்திப்பதற்காக அவர் இங்கிலாந்திலேயே தங்கமுடியாதே. அவருக்கும் நிறைய வேலைகள் உண்டே. முக்கியமாக அவர் மனைவி குழந்தைகள். அதனால் அதகனாகரனைத் திரும்பி வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுக் கனடா சென்றுவிட்டார் ஜெயராமன்.
அவர் சென்ற மறுநாளே மீநன்னயாவைத் தொலைப்பேசியில் அழைத்தார். இவள் கைப்பேசியை எடுத்ததும்,
“ஹாய் பேபி… ஹவ் ஆர் யு…?” என்று பரபரப்புடன் கேட்க,
“நான் நன்றாக இருக்கிறேன்… உங்கள் பயணம் எப்படி இருந்தது? எந்தச் சிக்கலும் இல்லாமல் போய்விட்டீர்கள்தானே…” என்று கேட்க, இவரும்,
“எந்தப் பிரச்சனையும் இல்லை மீனா… நீ என்ன செய்கிறாய்…? சாப்பிட்டாயா? ஐ மிஸ் யு பேபி..” என்று வருந்தியவராகக் கூற,
இவளோ,
“நேற்றுதானே இங்கிருந்து சென்றீர்கள். அதற்கிடையில் என்னை மிஸ் பண்ணுகிறீர்களா?’ என்று கிண்டலுடன் கேட்க, இவரோ,
“போதாது மீனா… உன்னோடு காலம் முழுக்க வாழவேண்டும்… இழந்த அன்பை மீளப் பெறவேண்டும்…” என்று ஏக்கத்துடன் கூற,
“என்ன ராம் இது… ப்ளீஸ்… காலம் என்ன இன்றோடு முடிந்து விடப்போகிறதா? இன்னும் எவ்வளவு இருக்கிறது… சேர்ந்தே வாழலாம்பா… கவலைப் படாதீர்கள்… தவிர நாம் விரும்பினாலும் அதற்கு உங்கள் மனைவி சம்மதிக்க வேண்டும்…” என்றாள் இவளும் மென்மையாக.
“ஆமாம்… மாதவி மட்டும் நம் உறவை ஏற்றுக்கொண்டால், அவள் சம்மதத்துடனேயே சேர்ந்து வாழலாம் மீனா… அந்த நாளுக்காகத்தான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மாதவி மட்டுமில்லை, புகழும் பூவும் சம்மதிக்கவேண்டுமே…” என்று அவர் வேதனையுடன் கூற,
“ராம்… இது என்ன பழைய காலமா, அடித்துத் துரத்த, இப்போது உலகம் மாறிக்கொண்டே வருகிறது. விவாகரத்து ஆன பிறகும், ஒரே சமையலறையில் பழைய மனைவியும் புது மனைவியும் இணைந்து சமையல் செய்யும் காலம் வந்துவிட்டது. அப்படியிருக்கையில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன?” என்று கேட்டவளிடம்,
“உண்மைதான் மீனா… கொஞ்சக் காலம் கொடு… நான் பக்குவமாக மாதவியிடம் நம்மைப் பற்றிக் கூறுகிறேன்… ஒரு வேளை மாதவி மறுத்தால், என்னால் எதுவும் செய்ய முடியாது மீனா… புரிந்துகொள்வாய்தானே…” என்று தவிப்புடன் கேட்க,
“நிச்சயமாக… எனக்குத் தெரியும், உங்களுக்கு உங்கள் குடும்பம் எத்தனை முக்கியமென்று…. என்னைப் பற்றி வருந்தாதீர்கள்… என் வாழ்க்கையைக் கடந்த பன்னிரண்டு வருடங்களாகத் தனியாகத்தான் அமைத்துக்கொண்டேன். அதுவும் பாட்டி இறந்தபோது எந்தத் துணையுமின்றித்தான் வாழ்ந்தேன். இனியும் வாழ்வேன்…” என்று அவள் கூறினாலும், அதில் இழையோடிய வலியை ஜெயராம் நன்றாகவே புரிந்துகொண்டார். அவருடைய நெஞ்சிலும் இயலாமையின் வலி பேரலையாக எழ,
“சாரிடா…” என்றார் மெய்யான வருத்தத்துடன்.
“ஹே… இட்ஸ் ஓக்கேபா… என்னால் சமாளிக்க முடியும்… எனக்காக வருந்தாதீர்கள்…” என்றதும், சற்று நேரம் அமைதி காத்த ஜெயராம் ஒரு பெருமூச்சுடன்,
“பிரின்சஸ்… இங்கே நிறைய வேலைகள் தேங்கிக்கிடக்கின்றன. அதனால் கொஞ்ச நாட்களுக்கு என்னால் லண்டன் வரமுடியாது. குறைந்தது ஒரு மாதத்திற்கு என்னால் உன்னைப் பார்க்க வரமுடியாது. நீ… சமாளிப்பாய்தானே…” என்று அக்கறையும் கவலையும் சேர்ந்து போட்டிப்போடக் கேட்டார். இவளோ,
“ப்ச்… என்ன கேள்வி இது… இப்போது ஓரளவு இங்கே பழகிவிட்டேன்… அதனால் என்னைப் பற்றி வருந்தாதீர்கள். உங்களால் எப்போது வர முடிகிறதோ, அப்போது வாருங்கள்… போதும்…” என்று மென்மையாகக் கூற, ஜெயராமின் உள்ளமும் குளிர்ந்து போனது. ஆனாலும் வருந்தியவராக,
“ஆனாலும் என் மனம் ஆறமாட்டேன் என்கிறது… உன்னை மட்டும் கடனாவிற்கு எடுப்பித்துவிட்டேன் என்றால், அது போதும் எனக்கு… அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். விரைவாக எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்… அது வரை அங்கே சமாளிப்பாய்தானே…” என்று கேட்க,
“நிச்சயமாக முடியும் ராம்… இப்போதுதான் நல்ல நட்பாக நிரஞ்சன் இருக்கிறாரே. ஏதாவது தேவையென்றால் உதவி செய்வார்… கவலைப் படாதீர்கள்…” என்றதும், சற்று சமாதானமானவராக,
“உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்… அந்த நிரஞ்சனின் வலைத்தளத்தைப் பார்த்தேன் மீனா, சின்ன வயதிலேயே பெரிய தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்துகிறான். அவனைப் பற்றி விசாரித்தும் பார்த்தேன். நல்லவன் என்று சொன்னார்கள். அதனால் அவனை நம்பலாம்… ஆனாலும் அளவோடு நடந்துகொள் புரிந்ததா… நமக்கான எல்லையை நாம்தான் வரையறுக்க வேண்டும்…” என்று எச்சரித்துவிட்டுச் சற்று நேரம் அவளுடன் பேசியபின்,
“சரி பேபி…. நான் பிறகு பேசுகிறேன்… சரியான சந்தர்ப்பம் வந்ததும் மாதவியிடம் பக்குவமாகச் சொல்லி உன்னை என்கூடவே வைத்திருக்க ஆவன செய்கிறேன்” என்றவர் இறுதியாக,
“ஐ லவ் யு ஏஞ்சல்… ரியலி ஐ ஆம் கோய்ங் டு மிஸ் யு” என்று கூறிவிட்டுக் கைப்பேசியை அணைக்க, வேளை கெட்ட நேரத்தில் இறுதியாக அவர் கூறியது கச்சிதமாக மாதவியின் காதுகளுக்குள் வந்து விழுந்தது.
உள்ளே கொந்தளித்த ஆத்திரத்தில் அவர் சட்டையைப் பற்றி ஒரு உலுக்கு உலுப்பி ஆவேசமாகக் கத்தும் ஆத்திரம் வந்தது. ஆனாலும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள் மாதவி.
இல்லை, அவசரப்பட்டுத் தாழியை உடைந்த கதையாகிவிடக் கூடாது. ஆகரன் சொல்லும் வரைக்கும் அமைதி காக்கவேண்டும்… சிரமப்பட்டுத் தன் முகபாவனையை மாற்றியவர், ஒரு வித ஆராய்வோடு தன்னைப் பார்த்த கணவனை ஏறிட்டும் பார்க்கப் பிடிக்காமல்,
“சாப்பாடு தயார்… சாப்பிட வாருங்கள்…” என்றுவிட்டுத் திரும்ப, அவளுடைய கரத்தைப் பற்றினார் ஜெயராமன்.
ஏதோ பாம்பொன்று கரத்தைப் பற்றிய உணர்வில் அருவெறுத்துப் போனாலும் பற்களைக் கடித்து அந்த உணர்வைத் தள்ளிவிட முயல, கையை விடாமலே மனைவியின் பின்னால் வந்து நின்ற ஜெயராமன், அவளுடைய தோளில் தன் நாடியைப் பதித்து,
“என்ன முகம் வாடி இருக்கிறது…” என்றார் மென்மையாக. மாதவியோ சிரமப்பட்டுப் புன்னகையை முகத்தில் தேக்கி, அவரை விட்டு விலகித் திரும்பி தன் கணவனை ஏறிட்டு,
“ஒன்றுமில்லையே…” என்றபோதும் அவளுடைய கண்களில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்தவர் போல,
“ஒன்றுமில்லை என்று உன்னுடைய வாய்தான் சொல்கிறது. ஆனால் முகத்தில் அப்படித் தெரியவில்லையே… ம்…” என்றவர் அவருடைய முகம் நோக்கிக் குனியத் தொடங்க, அருவெறுத்தவராக் கணவரிடமிருந்து விலகிய மாதவி,
“நேரம் போகிறது… சாப்பிட வாருங்கள்…” என்றதும், பெரும் காதலுடன் அவளுடைய தோள்களின் தன் கரத்தைப் பதித்த ஜெயராமன்,
“ஹே… வயிற்றுப் பசியை விட வேறு பசிதான் அதிகமாக இருக்கிறது மாது…” என்றவர் தன் மனைவியின் மூக்கோடு தன் மூக்கை உரசி, “அதிக நாட்களாகிவிட்டன நாம் இருவரும் ஒன்றாக உறங்கி…” என்றார் தாபத்துடன். மாதவியோ, கறுத்துச் சிவந்த முகத்தை அவருக்குக் காட்டாமல்,
“அதுதான் பசிக்கும்போது சாப்பிட வேறு இடங்கள் சென்று வருகிறீர்களே… பிறகு எதற்கு வீட்டுச் சாப்பாடு…” என்று சுள்ளென்று விட, தன் மனைவியை விட்டு விலகிய ஜெயராமன்,
“என்ன உளறுகிறாய்?” என்றார் ஆத்திரமாக. மாதவியோ, உண்மையைக் கொட்டிவிடும் எண்ணத்தோடு வாயெடுத்துவிட்டுப் பின் சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவராக,
“இல்லை வியாபாரம் அது இது என்று வேற்று நாடுகளுக்குப் போய் வருகிறீர்களே… அங்கே பசித்தால் விடுதியில்தானே சாப்பிடுவீர்கள்… அதற்காக வீட்டிற்கா வந்து சாப்பிடமுடியும்…? அதைச் சொன்னேன்…” என்று சிரமப்பட்டுத் தன் கோபம் வார்த்தைகளில் தெரியாதவாறு இழித்துவைத்துக் கூற, அதை நம்பிய ஜெயராமன், தன் மனைவியை இழுத்துத் தன் கைவளைவிற்குள் வைத்தவாறு,
“ஹே… நான் என்ன சொல்கிறேன், நீ என்ன சொல்கிறாய்… கிட்டத்தட்ட ஒரு மாதம் நீ இல்லாமல் தனியாக இருந்திருக்கிறேன்… நேற்றும் உன் அருகே உறங்க விடவில்லை, வேலை இருக்கிறது என்று போய்விட்டாய். நான் காலை எழுந்தபோதும் என் அருகே நீயில்லை. நான் வந்த அன்றும். அதற்கு முன்பும் உன் பக்கத்தில் கூட வர விடுகிறாயில்லை… என்னடி ஆச்சு உனக்கு…?” என்று ஏக்கமும் தாபமுமாகக் கேட்க, அவருடைய அந்த நெருக்கத்திலும், பேச்சிலும் காதல் கொண்ட அவருடைய உள்ளம் உருகி இளகத் தொடங்க, அந்த இளக்கத்தைக் கலைக்க முயன்று தோற்றதால் ஏற்பட்ட இயலாமையில் கண்கள் கலங்க, அது விழிகளில் வழிந்து செல்லத் தன் கணவனை உதறி விடுவித்தவர், அவருக்கு முகத்தைக் காட்டாமல்,
“இனி முன்பு போல நாம் ஒன்றும் இளம் சிட்டுகளில்லை கண்ட கண்ட நேரத்தில் இப்படி நடந்துகொள்ள…” என்றவரை இழுத்து அணைத்த ஜெயராமன்…
“ஏய்… என்ன அப்படிப் பேசுகிறாய்? நமக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது. எனக்கு முப்பத்தொன்பது, உனக்கு முப்பத்தைந்து… இதெல்லாம் ஒரு வயதாடி…” என்று அவர் முனங்கியவாறு தன் முகத்தை மனைவியின் கன்னத்தில் பதிக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தன் கணவனை உதறித் தள்ளிய மாதவி,
“சீ… என்னது… நடுக் கூடத்தில் வைத்து…. நமக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு முன்னுதாரணமாக இருக்கிறோமோ இல்லையோ, நம் குழந்தைகளுக்கு முன்மாதரியாக இருப்பது அவசியம்… நாளைக்கு அவர்களும் தப்பு செய்துவிட்டு, உங்களைப் பார்த்துத்தான் இப்படி நடந்தோம் என்று சொல்லும் நிலைக்கு அவர்களை வைக்கக் கூடாது…” என்று பொதுப்படையாக்க கூறிவிட்டு உள்ளே செல்ல, ஜெயராமனோ சென்ற தன் மனைவியையே புரியாத புதிருடன் பார்த்துக்கொண்டிருந்தார். இப்படி முறுக்கி நிற்பவளிடம் எப்படி மீநன்னயாவைப் பற்றிப் பேசுவது? குழம்பிப்போய் நின்றார் ஜெயராமன்.
அதேநேரம் ஜெயராமன் கைப்பேசியை வைத்ததும், பெரும் கலக்கத்துடன் அந்தக் கைப்பேசியைத் தூக்கிப் பார்த்த மீநநன்யாவிற்கு வயிற்றைக் கலக்கியது.
ஜெயராம் சொல்வதுபோல, இவர்களுக்கிடையேயான தொடர்பு ஜெயராமுடைய மனைவிக்குத் தெரியவந்தால், இவள் நிலை என்ன? நிச்சயமாக அவர்கள் இவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவளுக்கும் ஜெயராமை விட்டால் வேறு போக்கிடமில்லையே. அவரை நம்பித்தானே இத்தனை தூரம், வந்தாள். அதுவும் முறையற்ற வழியில்.
இலங்கைச் சூழ்நிலை இனி சரிவராது என்பதாலும், அங்கிருந்தால், இவளை அடிக்கடி சென்று பார்க்க முடியாது என்பதாலும்தானே, ஜெயராம் முப்பது லட்சம் இலங்கைப் பணத்தை ஏஜன்டுக்குக் கொடுத்து, கனடாவிற்கு வரவழைக்க முயன்ற நேரத்தில், ஏதோ ஒரு குழறுபடியில் இலண்டனில் இறக்கிவிட்டார்கள். ஆனாலும் பாதகமில்லை. இலண்டன் அவளுக்குப் பிடித்துப்போனது. இலங்கையோடு ஒப்பிடுகையில் அது தேவநகரமாக அல்லவா இருக்கிறது. இதோ இப்போது அவள் வாழும் வாழ்க்கை அவர் போட்ட பிச்சைதான். ஆனால் இந்த வாழ்க்கையும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை.
இலண்டன் குடியுரிமைக்குத் தகாத முறையில் இவள் குடியேறியிருப்பது தெரிந்தால், இவளை உடனே இலங்கைக்கு அனுப்பிவிடுவார்கள். அதற்கிடையில் இவள் கனடாவிற்குச் சென்றுவிடவேண்டும்… அதை நினைக்கும்போதே ஆயாசமானது. எப்படி இந்தச் சிக்கலிலிருந்து மீளப்போகிறாள்? பெரும் கலக்கமாக இருக்க, அருகிலிருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்து மல்லாக்காக விழுந்து விழிகளை மூட விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் தாராளமாக விழத் தொடங்கியது. நினைவலைகள் பழைய நினைவில் நின்று தத்தளித்து இறுதியாக அதகனாகரனிடம் வந்து நின்றது.
அவனுடைய நினைவு தன்னைப் பெரிதும் சலனப்படுத்துவது தெளிவாகத் தெரிய, பளிச்சென்று தன் விழிகளைத் திறந்தவளுக்குத் தன் சிந்தனை போகும் திசை கொடுத்த அதிர்ச்சியில் விருக்கென்று எழுந்தமர்ந்தாள் மீநன்னயா.
சீ சீ… இது என்ன மனம் தப்புத் தப்பாக நினைக்கிறது… இது மட்டும் அவருக்குத் தெரிந்தால்? பதட்டத்தோடு எழுந்தவள், எதிலிருந்தோ தப்புவதுபோல, விழுந்தடித்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் மீநன்னயா..
ஆனாலும் அவன் நினைவிலிருந்து அவளால் வெளியேறவே முடியவில்லை. குளிக்கும்போதும், உணவு அருந்தும்போதும் அவன் நினைவுதான் நெஞ்சம் முழுவதும். கூடவே அவனுடைய வெம்மைக் கரங்கள் அவள் கரத்தைப் பற்றியிருப்பது போன்ற உணர்வில் பெரிதும் தவித்துப்போனாள் மீநன்னயா.
அதே நேரம், ஜெயராமன் வேலை விடையமாக வெளியே செல்ல, உடனே அதகனாகரனுக்குக் கைப்பேசி எடுத்தார் மாதவி. எடுத்தவர் தன்னை மறந்து அழுது விட்டார். இவனுக்குத்தான் அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
பிறகுதான், நடந்ததை அதகனாகரனிடம் கூற, இவனுடைய இரத்தம் பயங்கரமாகக் கொதித்தது. உடல் அம்பிழுத்த வில்லாக நிமிர்ந்து கொள்ளத் தன் சகோதரியைச் சமாதானம் செய்தவன், கண்கள் சிவக்க, முகம் இறுகத் தன் கைப்பேசியை எடுத்து அதில் ஒரு சில இலக்கங்களைத் தட்டத் தெடாங்கினான்.
(13)
மறுநாள் விழிகளைத் திறக்கும்போதே அதகனாகரன்தான் மனதில் வந்து நின்றான். ஏனோ அவனைப் பார்த்துவிடவேண்டும் என்று உள்ளம் நின்று துடித்தது. அதற்கான காரணம் என்ன என்றும் புரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. அவனோடு பேச, பழக, நேரத்தைச் செலவிட மிக மிகப் பிடித்திருந்தது. இதோ இப்போதும் அவனைப் பார்த்துவிடவேண்டும் என்று மனம் நினைக்கிறதே… இப்போதெல்லாம் ஜெயராமனோடு பேசுவது வேறு குறைந்து விட்டது. முன்பு அடிக்கடி அவரோடு பே துடிப்பவளுக்கு, இப்போது அந்த ஆர்வம் போய் அவனோடு மட்டும் பேசவேண்டும் என்று தோன்றுகிறது. சோர்வுடன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு அப்போதுதான் பளிச்சென்று அது தோன்றியது. பரபரப்புடன் நேரத்தைப் பார்த்தாள். அவளையும் மீறி உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.
அன்று இதே நேரம்தான் அன்று அவனை நூல்நிலையத்தில் சந்தித்தாள். ஒரு வேளை இன்றும் அவன் அங்கே வருவானோ. அதற்கு மேல் யோசிக்காமல் உள்ளம் குதுகலிக்க மின்னல் வேகத்துடன் தயாராகத் தொடங்கியவள் தன்னைப் பார்த்துப் பார்த்து அலங்கரித்தாள். உள்ளாடைகளைக் கூட நல்லதுதானா என்று பார்த்து அணிவதற்குள் அத்தனை ஆடைகளும் கட்டிலிலும் தரையிலும் விசிறி அடிக்கப்பட்டிருந்தன.
திருப்திப்பட்டவளாக, படுக்கைப் பகுதியை விட்டு வெளியேறிக் கைப்பையை எடுக்கும்போதுதான் அவளுடைய அறைக்கதவு தட்டுப்பட்டது.
இந்த நேரத்தில் யாராக இருக்கும்? யோசனை கிளம்ப, விரைந்து சென்று கதவைத் திறக்க, அங்கே பான்ட் பாக்கட்டில் கைகளை விட்டவாறு நின்றவனைக் கண்டதும் முதலில் அதிர்ந்து, பின் பட்டாசுகள் வெடிக்க, புத்தியும், மூளையும் ஓரிடத்தில் நிற்காது அங்கும் இங்குமாக ஓட, இரத்த நாளங்கள் விரிய, இதயம் வேகமாகத் துடிக்க… அப்பப்பா.. அவனைக் கண்டால் மட்டும் ஏன் இந்த இதயம் இப்படி வேகமாத் தறிகெட்டு ஓடுகிறது. அவளுடைய மீறி முகம் வெட்கத்தைப் பூச, அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரியப் பூரிப்புடன் சிரித்தவள்,
“ரஞ்சன்… நீங்களா?” என்றாள்.
அவள் முகத்திலிருந்த பூரிப்பைக் கண்ட அதகனாகரனுக்கும் உள்ளே பெரும் கொந்தளிப்பு. அது அவளைக் கண்டதால் இல்லை. ஏற்பட்ட ஆத்திரத்தால். என்னமா நடிக்கிறாள். எத்தனை தத்ரூபமாக முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறாள். இவள் மட்டும் ஹாலிவூட் நடிக்கப்போனால், அத்தனை பேரும் துண்டைக்கானணாம் துணியைக் காணோம் என்று ஓடுவார்கள். இந்தப் பூரிப்பைக் காணும் நானே தடுமாறுகிறேனே, ஜெயராமன் எந்த மூலைக்கு. ஜெயராமன் மட்டும்தானா, இல்லை இன்னும் வேறு யாரும் இருக்கிறார்களா?
சிரமப்பட்டுத் தன் ஆத்திரத்தை அடக்கியவனாக, முகத்தில் மலர்ச்சியைக் கொண்டுவந்து,
“ஹாய்… என்ன வெளியே புறப்படுகிறாய் போல…” என்று வினவ, இவளோ, பெரும் மலர்ச்சியுடன், வாசல் கதவை நன்றாகவே திறந்து,
“உள்ளே வாருங்கள் ரஞ்சன்…” என்றாள் குதுகலமாக.
உள்ளே வந்தவன், எதேச்சையாகத் திரும்ப அவளுடைய படுக்கைப் பகுதி கண்ணில் பட்டது. கூடவே அது கிடந்த கிடையும். அப்படி அவன் என்ன பார்க்கிறான்? என்று புரியாதவளாகத் திரும்பியவள், படுக்கைப் பகுதி கிடந்த கிடப்பைக் கண்டு அதிர்ந்துபோய்த் தன் வாயைப் பிளந்தாள். முன்னறைக்கும் படுக்கைக்கும் இடையே தடுப்பில்லை. அது திறந்தவெளி என்பதால், அப்பட்டமாக அந்தப் பக்கம் அதன் நிலையைப் பறைசாற்றியது.
‘ஐயையோ… படுக்கையிடத்தை இந்தப் பாடு படுத்திவைத்திருக்கிறேனே…” என்று அதிர்ந்து நிற்க, அவனோ அங்கும் இங்கும் எறியப்பட்டிருந்த அவளுடைய ஆடைகளைப் பார்த்துவிட்டு,
“சாரி… தப்பான நேரத்தில் வந்து உனக்குத் தொல்லை கொடுத்துவிட்டேனோ…” என்றான். இவளோ,
“ஐயோ…! அதெல்லாமில்லை…. நீங்கள் அமருங்கள்….” என்றவள், இறைந்துகிடந்த ஆடைகளை நோக்கிப் பாய்ந்தாள்.
சே… இந்தப் பகுதிக்கு ஒரு தடுப்பாவது இருந்திருக்கலாம். இப்படித் திறந்த வெளியாக இருந்து தொலைக்கிறதே… முட்டாள் முட்டாள்.. இப்படியா ஆடைகளை இறைத்துவிடுவது… இப்படி மாணம் போக வைத்துவிட்டதே…’ தன்னையே திட்டியவாறு திரும்பியவள், அப்போதுதான் கவனித்தாள், அவளுடைய உள்ளாடை ஒன்று கபேர்டின் இழுப்பறைக்கு வெளியே தொங்கி, ‘பிக்கபூ…’ என்றது.
வெட்கத்தில் தேகம் எல்லாம் சூடேற, ஐயோ, புறப்படும் அவசரத்தில் இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே, என்று மானசீகமாகத் தன் தலையைத் தட்டியவள் மின்னல் விரைவுடன் பாய்ந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த உள்ளாடையை உள்ளே தள்ளிவிட்டுத் திரும்பி அசடுவழிந்தவாறு அவனைப் பார்க்க, அவள் பாய்ந்த விநாடிக்குள் அவனும் அதைக் கண்டுவிட்டான் போல. ஆனாலும் கண்டும் காணாதவனுமாகத் திரும்புவதற்குள், கட்டிலிலிருந்த துவாய் மாயமாக மறைந்துவிட்டிருந்தது. கூடவே தரையில் எறிந்திருந்த ஆடைகளைக் கண்டவள், பாய்ந்து காலால் ஒரு எத்து எத்த, அவையும் கட்டிலின் அடியில் சென்று பதுங்கிக் கொண்டன.
எப்போதும் சுத்தமாக அதை அதை அந்த அந்த இடத்தில் வைப்பவள்தான். ஆனால் என்று அதகனாகரன் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்தானோ, அந்தக் கணம் எல்லாமே மாறிப்போயிற்று. எதிலும் மனத்தைச் செலுத்தமுடியவில்லை. தவிர ஜெயராமன் இல்லாத சுதந்திரம் கொடுத்த தைரியம், யார் வரப்போகிறார்கள் என்கிற அலட்சியத்தில் எல்லாவற்றையும் ஆங்காங்கே இறைத்துவிட்டிருந்தாள்.
ஆனால் இப்படித் திடீர் என்று அதகனாகரன் வருவான் என்று கனவா கண்டாள். ஓரளவு சுத்தப்படுத்தியவள், நிம்மதியுடன் அவனை நோக்கித் திரும்ப, அவன் இன்னும் அமராமல் நின்றுகொண்டுதான் இருந்தான்.
“இன்னுமா நிற்கிறீர்கள். உட்காருங்கள் ரஞ்சன்… என்ன குடிக்கிறீர்கள்… தேநீர், காப்பி…” என்று உபசரிக்க, அவனோ இருக்கையில் நன்றாகச் சாய்ந்தமர்ந்தவாறு,
“எதுவென்றாலும் எனக்குச் சரிதான்…” என்றவனிடம், அங்கேயே இருந்த சமையல் பக்கமாகச் சென்றவள், கேத்தலில் தண்ணீரை நிரப்பியவாறு,
“ஆமாம் நீங்கள் எங்கே இங்கே…?” என்றாள் வியப்புடன். அவனோ காலின் மீது காலை அலட்சியமாகப் போட்டு, இவளைத் திரும்பிப் பார்த்து,
“ஏன்மா… நான் வரக்கூடாதா உன்னைப் பார்க்க?” என்றான், தன் புருவங்களை உயர்த்தி. அதைக் கேட்டு மகிழ்ச்சியுடனேயே புன்னகைத்தவள், அவனுக்கு முன்பாக இருந்த நீளிருக்கையில் அமர்ந்தவாறு,
“இது என்ன கேள்வி, நீங்கள் தாராளமாக வரலாம் ரஞ்சன்… இல்லை, எப்போதும் இல்லாமல் இப்போது வந்திருக்கிறீர்களே, அதுதான் கேட்டேன்… பொதுவாக இந்த நேரத்தில் உங்களுக்கு வேலை இருக்குமே” என்றதும், அழகாய் நகைத்தவன்,
“ம்… இன்று எனக்குப் பெரிதாக வேலைகள் இல்லை. நீ வேறு ஜெயராமன் வேலை இருப்பதாகக் கனடா சென்றுவிட்டார் என்று சொன்னாயா… சரி… உன்னை எங்காவது அழைத்துப் போகலாம் என்று நினைத்தேன். வருகிறாயா…?” என்று கேட்க, மறுக்க அவளுக்கென்ன பைத்தியமா. இதற்காகத்தானே காத்திருக்கிறாள். அவனோடு செலவிடும் ஒவ்வொரு விநாடியும் அழகாகத் தோன்றும்போது, அதை மறுக்க அவளுக்குப் பைத்தியமா என்ன? உடனே அழகிய முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவள்,
“போகலாமே… நான் வேறு போரடித்துத்தான் இருந்தேன்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, கேத்தில் சத்தம் சுடுதண்ணீர் தயார் என்று அறிவித்தது. எழுந்தவள்,
“ஐந்து நிமிடங்கள் தாருங்கள் ரஞ்சன், தேநீர் வார்த்ததும் குடித்துவிட்டுக் கிளம்பலாம்…” என்றவாறு, சமையல் பக்கம் போக, இவனோ,
“ஜெயராமன் இல்லாமல் போரடிக்குமே… எப்படிச் சமாளிக்கிறாய்…?” என்று பேச்சுக் கொடுக்க, தேநீர் வார்த்தவாறே இவனைப் பார்த்துச் சிரித்தவள்,
“பழகிவிட்டது ரஞ்சன்… கடந்த மூன்று மாதங்களாக இப்படியேதானே போகிறது. அதற்கு முன்பு பாட்டி இறந்த பின், கொஞ்சக்காலங்கள் தனியாகத்தான் வாழ்ந்தேன். அதனால் தனிமை ஒன்றும் எனக்குப் புதுசு அல்ல…” என்று கூற, முன்னறையில் அமர்ந்திருக்க முடியாது எழுந்தவன், அவளை நோக்கி வந்து,
“ஹே… நான் இன்னும் சாப்பிடவில்லை, பசிக்கிறது… சாப்பிட ஏதாவது இருக்கிறதா நன்னயா…” என்றவாறு உரிமையுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்க்க, இவளும் புன்னகையுடன்,
“மேல் கபேர்ட்டில் பான் இருக்கிறது, முட்டையும் இருக்கிறது..” என்று கூற, இவனோ, முட்டைகளைப் பார்த்தவாறே,
“சுப்பர்…நீ எப்படி..? சாப்பிட்டுவிட்டாயா?” என்றான். இவளோ, மறுப்பாகத் தலையை அசைத்து,
“இன்னும் இல்லை…” என்றதும் அவளைக் கோபமாகப் பார்த்தவன்,
“என்னது? சாப்பிடாமலா வெளியே கிளம்பினாய்?” என்று கடிய, இப்போதும் அவனுடைய அக்கறை அவளைப் பெரிதும் இளக்கியது. ஆனாலும் அவனைப் பார்த்து,
“என்னைச் சொல்கிறீர்களே… நீங்கள் எப்படி? சாப்பிடாமல்தானே இருக்கிறீர்கள்” என்று கிண்டலாகக் கேட்க, இவனோ தன் தோள்களைக் குலுக்கி,
“நான் பத்துநாள் சாப்பிடாவிட்டாலும், அதே திடத்துடன் இருப்பேன். நீ அப்படியா?” என்றவன், முட்டைகள் அடங்கிய தட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்த மேசையை நெருங்கியவன், தட்டை அங்கேயே வைத்துவிட்டு, அவளைக் கிண்டலுடன் பார்த்து,
“நான் ஒரு ஊது ஊதினாலே இலங்கையில் சென்று விழுந்துவிடுவாய் போல அத்தனை மெல்லியவளாக இருக்கிறாய். நேரத்திற்குச் சாப்பிடவேண்டாமா? இதுதான் அந்த ஜெயராமன் உன்னைக் கவனிக்கும் லட்சணமா?” என்று கிண்டலாய்க் கேட்பதுபோலக் கேட்டாலும் அதில் தெரிந்த ஏளனத்தை அவள் புரிந்துகொள்ளவில்லை.
அவன் ஜெயராமனை இழுத்துப் பேசினதால் கோபம் கொண்டவளாய்,
“ஹலோ… என்னைப் பற்றி என்னவேண்டுமானாலும் பேசுங்கள்.. ஆனால் அவரைப் பற்றி மட்டும் பேசினால், எகன்குக் கெட்ட கோபம் வரும்…” என்று நிஜமான கோபத்துடன் கூற இவனுக்குள் மீண்டும் எரிமலையின் வெடிப்பு.
ஆனாலும் வெளிக்காட்டாமல் தன் தோள்களைக் குலுக்கியவன்,
“உண்மைக்குக் காலமில்லை என்பது இதைத்தான் போல…” என்றான். அவளோ தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து, உதடுகளைச் சுளுக்கி,
“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்… நான் மெல்லியவளாக உங்களுக்குத் தெரிந்தால் நிச்சயமாக உங்கள் கண்ணில் ஏதோ தவறு இருக்கிறது, இல்லை என்றால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நான், அத்தனை மெல்லியவள் அல்ல…” என்று குறையோடு கூற, இவனோ திரும்பி நிஜமான ரசனையுடன் அவளைப் பார்த்து,
“ம்… மாடலிங் செய்யும் பெண்களோடு பார்க்கும்போது உனக்குப் பூசிய தேகம்தான். ஆனால், சாதாரணப் பெண்ணாகப் பார்க்கும்போது, இன்னும் சற்று உடம்பு வைக்கலாம் உனக்கு…” என்றவாறு அவளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே, முட்டைகளை எடுத்து ஆம்லட் போட்டு, அவற்றை அழகாகத் தட்டுகளில் வைத்து அவளுக்கும் தனக்குமாகப் பான் துண்டுகளை அடுப்பில் காயவைத்து அதையும் ஆம்லட்டிற்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தட்டத்தைத் தன் கரங்களில் ஏந்தியவனாக அருகிலிருந்த மேசையில் வைத்து அவளை அமருமாறு பணிந்துவிட்டுத் தானும் ஒரு இருக்கையை இழுத்து அமர்ந்து கொள்ள, மீநன்னயா மறுக்காமல் அவனுக்கு முன்பாக அமர்ந்து அவன் படைத்த உணவை ஆர்வத்துடனேயே ஒரு கிள்ளு கிள்ளி வாய்க்குள் போட, அது அமிர்தமாய்த் தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.
அவள் உண்பதையே ஆர்வத்துடன் பார்த்தவன்,
“ஹௌ இஸ் தட்…” என்றான் தன் செயலில் பெருமிதம் கொண்டவனாய்.
“அமேசிங்…” என்றவள் இன்னும் ஒரு விள்ளலை வாய்க்குள் போட்டு ரசித்துச் சுவைத்தவாறு,
“அம்மாடி… என்ன ருசி…. நீங்கள் இப்படிச் சமைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாதே…” என்றாள் வியந்து போனவளாய்.
“ம்… ஐயா… சகலகலாவல்லவனாக்கும்…” என்றவாறு அவளுடன் சேர்ந்து இவனும் உண்டு முடித்துத் தட்டுக்களைக் கழுவி வைத்துவிட்டு,
“ஜெயராமன் எப்போது உன்னைப் பார்க்க வருகிறார்?” என்றான் ஆர்வம் போல. இவளோ உதடுகளைப் பிதுக்கி,
“இன்னும் ஒரு மாதம் எடுக்கும் என்று சொன்னார் ரஞ்சன்…” என்று கூற,
“ஓ… ஓக்கே… சரி… கிளம்புகிறேன்… ஜெயராமன் வந்ததும் எனக்கு அறிவி… அவரை வந்து பார்க்கிறேன்…” என்றுவிட்டுத் தன் கைப்பையைத் திறந்து வியாபார அட்டை ஒன்றை எடுத்து,
“உன்னிடம் ஏற்கெனவே ஒன்று கொடுத்திருந்தேன். இருந்தாலும் இதை வைத்துக் கொள். எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குச் சொல், வந்துவிடுவேன்…” என்று கூற. மறுக்காமல் அவன் நீட்டியதை வாங்கியவள் நன்றியுடன் அவனைப் பார்த்து,
“நன்றி ரஞ்சன்… உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியவில்லை…” என்றாள் குரல் கம்ம. இவனோ,
“ஹே இதில் என்ன இருக்கிறது. என்னால் முடிந்த உதவியைச் செய்ய முயல்கிறேன்… அவ்வளவுதான்… என்றுவிட்டு விடைபெற்றவனை மன நிறைவுடனேயே அனுப்பிவைத்தாள் மீநன்னயா.
very nice
மிக மிக நன்றி