(8)
வாகனம் அவளுடைய விடுதியை அடைந்ததும், வாகனத்தை விட்டு வெளியே வந்தவன், பின்னால் சென்று அவளுடைய பைகளை எடுத்தவாறு முன்பக்கம் வந்து கதவைத் திறக்க, மீநன்னயா நன்றியோடு தன் கைப்பையைத் தோளில் மாட்டியவள், அவனிடமிருந்து தன் பைகளை வாங்குவதற்காகக் கரங்களை நீட்ட, அவனோ,
“இல்லை… உள்ளே எடுத்துவருகிறேன் மீநன்னயா…’ என்றதும்,
“ஐயோ, “இதுவரை நீங்கள் உதவியதே போதும் நிரஞ்சன்… இனி நான் சமாளித்துக் கொள்வேன்…” என்றவாறு அவனை நோக்கி முன்னேற, அவனோ, கொடுக்க மறுப்பவனாக,
“எனக்குத் தெரியும் நீங்கள் சமாளிப்பீர்கள் என்று. ஆனால் பாருங்கள், உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை காயம்பட்ட கரத்தின் மீது எனக்கில்லை. இத்தனை தூரம் அழைத்து வந்துவிட்டேன்… உங்கள் குடியிருப்பு வரைக்கும் அழைத்து வருவதா எனக்குச் சிரமம்? வாருங்கள்…” என்றவாறு முன்னால் நடக்கத் தொடங்க, மறுக்க முடியாது அவன் பின்னே சென்ற மீநன்னயாவிற்குக் கணத்துக்குக் கணம் அவன் மீதிருந்த நல்ல அபிப்பிராயம் வளர்ந்து செல்லத் தொடங்கியது.
அவளுடைய அறை, பத்தாம் மாடி என்பதால், மின்தூக்கிக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.. அன்றைக்கென்று, ஒரு மின்தூக்கி ஏதோ காரணத்திற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், வேலை செய்த ஒரே மின்தூக்கியும் நின்று நிதானமாகத்தான் வந்துகொண்டிருந்தது. அதனால், காத்திருந்தவர்களின் தொகையும் சற்று அதிகரித்திருக்க, இருவருக்குமே பொறுமை சற்றுத் தொலைந்துதான் போனது.
எப்படியோ அத்தனை பேரையும் காக்கவைத்து மின்தூக்கி வந்து சேர, முதலாவதாகக் காத்திருந்த அதகானகரன் உள்ளே செல்ல அவனை தொடர்ந்து, மீநன்னயாவும் நுழையத் தொடர்ந்து கடகடவென்று அத்தனை பேரும் உள்ளே நுழைந்ததன் விளைவு, மீநன்னயா தாராளமாகவே அதகனாகரனுடன் நெரிபட்டாள். போதாததற்கு, அதிலிருந்த ஒருவன் மது அருந்தியிருந்தான் போலும். பக்கென்று அடித்த வாடையில் மீநன்னையாவிற்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அது கொடுத்த அருவெறுப்பில் மூச்சை நன்றாகவே உள்ளே இழுத்து வைத்து அந்த வாடையிலிருந்து தப்ப முயன்றவளுக்குத் தோல்விதான் கிடைத்தது.
பொதுவாக மீநன்னயாவிற்கு மதுவாடை சிறுவயதிலிருந்தே சுத்தமாக ஒத்துக் கொள்ளாது. சற்றுத் தள்ளி மணந்தாலே இவளுக்குக் குமட்டிக்கொண்டு வரும். அப்படியிருக்கையில், மிக அருகே அந்த நெடி குப்பென்று அடித்தால், எப்படித்தான் சமாளிப்பது.
எப்போதும் போல மூச்சை ஆழ இழுத்து வைத்து அந்தச் சமாளித்துப் பார்த்தாள். ஆனால் எந்தளவு என்றுதான் சமாளிப்பது. ஒவ்வொரு தளமாக அது நின்று நின்று ஏற, வேறு வழியில்லாமல் உடலைத் திருப்பியவளின் முன் தேகம், அதகனாகரனின் பலம் பொருந்திய இறுகிய தேகத்தோடு பசையென ஒட்டி நிற்க, அந்த ஒட்டி நின்ற கணம், இருவருக்குள்ளும் மிகப்பெரும் பூகம்பத்தின் ஆட்சி.
தீக்குச்சிகள் ஒன்றை ஒன்று உரசும்போது இப்படித்தான் சூடேறுமோ. தெரியவில்லை. ஆனால் சூழ்கொண்ட இரு மேகங்கள் முட்டிக்கொள்ளும் போது ஏற்படும் துடிப்பில்தானே மின்னல் முழங்கி இடி இடிக்கிறது. அந்த மின்னலும் இடியும் ஆர்ப்பாட்டம் இன்றியே இருவருக்குள்ளும் நர்த்தனம் ஆட, அந்தப் புது உணர்வில் வியந்தவளாய், நிமிர்ந்து தன் உடலைத் தாங்கிநின்ற அந்த ஆண்மகனை நிமிர்ந்து பார்த்தாள் மீநன்னயா. அவனும் அதே திகைப்புடன்தான் அவளைக் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
இரண்டு விழிகளும் முதன் முறையாக ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன. தொட்டுக் கொண்டன. வெட்டிக் கொண்டன. ஆண் ஆண்மையை உணர்ந்தான். பெண் பெண்மையை உணர்ந்தாள். எத்தனை நேரமாக இருவரும் ஒருவரை ஒருவர் தம்மை மறந்து பார்த்துக்கொண்டிருந்தார்களோ, அவள் தளம் வந்ததும் மின்தூக்கி நின்றது.
அதை உணர்ந்து இருவருமே சுயம் பெற்றவர்களாக, நெருங்கி நின்றவர்களிடம் மன்னிப்பு வேண்டியவாறு வெளியே வந்தனர்.
ஒரு நிமிட நடையில் அவள் தங்கும் அறை வந்ததும்,
“மிக மிக நன்றி நிரஞ்சன். இதுதான் என் அறை…” என்றவாறு காயம் பட்ட கரத்தைத் தூக்கிப் பிடித்தவாறு மறு கரத்தால் கைப்பையைத் துழாவ, அந்த நேரமா கைப்பையின் ‘வார்’ அறவேண்டும். அது அறுந்த வேகத்தில், கைப்பை கவிழ்ந்து தரையில் விழ, பொருட்கள் அத்தனையும் சிதிறின.
“ஊப்ஸ்…” என்றவாறு ஒற்றைக் கால் மடித்துச் சிதறிய பொருட்களைக் கைப் பைக்குள் போடத் தொடங்க, அதகனாகரனும், அவளுக்கு உதவும் பொருட்டு, சிதறிய பொருட்களை எடுத்துப் பையில் போட தொடங்கினான். இறுதியாகத் தன் பாதத்திற்குச் சற்று அருகாமையில் கவிழ்ந்த நிலையில் விழுந்திருந்த ஒரு படத்தைக் கண்டு, அதை எடுத்துத் திருப்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் ஒரு கணம் இருண்டு கறுத்துப் போனது.
அதே நேரம் மீநன்னயா அவனிடமிருந்து அந்தப் படத்தைப் பெறுவதற்காகத் தன் கரத்தை நீட்ட, சிரமப்பட்டுத் தன் முகபாவத்தை மாற்றியவனாக, அவளை நோக்கி அந்தப் படத்தை நீட்ட, இவளோ அதை ஒரு பொக்கிஷம் போல வாங்கி, அந்தப் படத்தை வருட, அதில் சிரித்துக்கொண்டிருந்தார் ஜெயராமன்.
இவனோ அந்தக் காட்சியைக் கண்டு ஆத்திரம் கொண்டவனாக அவளையே வெறித்தர்ன. தன் பற்களைக் கடித்து ஆத்திரத்தை அடக்கியவனாக,
“ஆமாம்… யார்… இது…?” என்றான். என்னதான் முயன்றும் உள்ளே கொழுந்துவிட்டெரிந்த ஆத்திரத்தின் வேகத்தை இவனால் அடக்கவே முடியவில்லை.
அவளோ வெண்பற்கள் வெளிப்படையாகவே தெரியச் சிரித்தவாறு
“இவரா?” என்றாள். அந்தப் படத்தை வருடியவாறு,
“மிக வேண்டப்பட்டவர்…” என்றாள் இனிமையாய்.
“ஓ… நெருங்கிய நண்பரோ?” என்றவனின் குரலிலிருந்த பேதத்தை உணராதவளாகக் கனிவுடன் அந்தப் படத்தைப் பார்த்தவள்,
“ம்… அதற்கும் மேல்.. சொல்லப்போனால் அவரில்லை என்றால் நானில்லை…” என்று கனவில் பேசுவது போலக் கூற மீண்டும் இவனுக்குள் பெரும் பூகம்பம்.
என்னது அவரில்லை என்றால் நீ இல்லையா… அவளை எரிப்பதுபோலப் பார்த்தவன், தன் பற்களைக் கடித்து,.
“இரு… ஜென்மத்திற்கும் ஜெயராமனைப் பார்க்காத மாதிரி செய்கிறேன். என்று கறுவியவாறு,
“சரி… திறப்பெங்கே…” என்று கேட்டான் பெரும் எரிச்சலுடன். அப்போதுதான் கதவைத் திறக்காமல் இருக்கிறோம் என்பதைப் புரிந்தவளாக,
“சாரி… இதோ…” என்றவாறு மீண்டும் துளாவித் திறப்பை எடுத்துத் திறக்க முயல, இவனோ தன் கரத்திலிருந்த பொருட்களைக் கீழே வைத்துவிட்டு,
“நான் உதவி செய்கிறேன்…” என்றவாறு முன்வர, இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“இல்லை… நானே திறந்துகொள்வேன்…” என்றவாறு காயம் படாத கரத்தால், கதவைத் திறந்து, “உள்ளே வாருங்களேன்…” என்றாள் கனிவாய். உடனே மறுக்காமல் மீண்டும் பொருட்களை ஏந்தியவாறு உள்ளே வந்தவனின் விழிகள் நாலாபக்கமும் அலசின.
ம்… மிகுந்த வசதியோடுதான் தங்கவைக்கப்பட்டிருக்கிறாள். ஏளனம் பொங்க, அவளைப் பார்த்து,
“நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள் இங்கே…” என்றான் வியந்தவன் போல. இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“என் ராம்… இப்போது படத்தில் பார்த்தீர்களே, அவரும் என் கூடத்தான் தங்குகிறார். சொல்லப்போனால் இது அவர் அடிக்கடி தங்கும் அறைதான். இப்போது நான் தங்கவும் அனுமதி கொடுத்திருக்கிறார்…” என்று தாராளமாகவே அவனுடைய வைத்தெரிச்சலை அள்ளிக் கொட்டிக்கொண்டாள் மீநன்னயா.
ஏனோ அங்கே நிற்பதே மூச்சு முட்டுவதுபோலத் தோன்ற,
“சரி நான் கிளம்புகிறேன்…” என்றவாறு திரும்பியவன், அப்போதுதான் நினைவு வந்ததுபோல,
“இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? ஏதாவது வாங்கிவரட்டுமா?” என்று கேட்க, இவளோ,.
“ஐயோ…! அதெல்லாம் வேண்டாம் ஃபிரிஜ்ஜில் ஏற்கனவே நிறைய உணவுகளை ராம் வாங்கி வைத்திருக்கிறார். தவிர, இரவு வரும்போதும் எனக்குப் பிடித்தமானதை வாங்கி வருவார்… அதனால் எதுவும் வேண்டாம்… நிஜமாகவே உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் சிரமப்பட்டிருப்பேன்…” என்று கூற, அவள் நன்றியை ஏற்றுக்கொள்வது போலத் தன் தலையை அசைத்தவன்,
“சரி கிளம்புகிறேன். எப்போது என் உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னை அழை…” என்றவன், அவளருகே வந்தான். அவள் காயம்படாத கரத்தைத் தன் கரத்தில் எடுத்தவன், அவளை ஆழமாகப் பார்த்து,
“எனக்கு உன்னுடைய அழைப்பு, உபத்திரவமாக இருக்கும் என்று நினைக்காதே… உனக்கு உதவுவதாக இருந்தால் எனக்கு அது மகிழ்ச்சிதான்…” என்று புன்னகையுடன் சொன்னவன், அவள் கரத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு வெளியேற, மீநன்னயாதான் அசையவும் மறந்தவளாக அவன் பற்றிய கரத்தைத் தூக்கிப் பார்த்தான்.
ஏனோ அவளைத் தொடும்போதெல்லாம் அவனுடைய ஸ்பரிசம் அடிநெஞ்சுமுதல், அடிவயிறு வரை ஒருவித படபடப்பை ஏற்படுத்துகிறதா. சற்று முன் மின்தூக்கியில் அவளை உரசிக்கொண்டு நின்றபோது ஏற்பட்ட மாற்றம்… அதை என்னவென்று சொல்வது… இப்போதும் அவனுடைய வெம்மை, இவளுக்குள் புகுந்து சென்றதுபோல அல்லவா உடல் கதகதக்கிறது.
இது என்ன புதுவிதமான உணர்வு. அவன் தொட்டதும் ஏன் உருகிப்போய் நிற்கிறேன். அத்தனையும் மறந்து போகிறதே. உள்ளே பெரும் பட்டாம்பூச்சியின் ஆர்ப்பாட்டமே நடக்கிறதே. எனக்கென்னவாகிவிட்டது. என்று குழம்பியவாறு, அறைக் கதவைப் பூட்டிவிட்டு, அன்று நடந்தவற்றை வரிசையாக ஜெயராமிடம் கூறுவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள் மீநன்னயா.
(9)
வீட்டிற்கு வந்த அதகனாகரனுக்கு இருப்பே கொள்ளவில்லை. புத்தி ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. மனமோ மீண்டும் மீண்டும் உடலோடு மோதிநின்ற மீநன்னயாதான் வியாபித்திருந்தாள். அவன் உடலோடு மோதியபோது அவன் உணர்ந்த உணர்வை எப்படி விவரிப்பான். இதுவரை இத்தகைய ஒரு உணர்வுக்கு அவன் ஆட்பட்டதில்லையே. உடலின் ஒவ்வொரு அணுவும் அவள் வேண்டும் என்றல்லவா கூப்பாடு போடுகிறது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அப்படியான ஒரு உணர்வு அவனுக்கு வந்ததில்லையே… கடைசியில் அடுப்புக்குப் பயந்து வாணலியில் விழும் கதைபோல அல்லவா இருக்கிறது. அக்காவின் வாழ்க்கையைக் காப்பாற்றப்போய், இவன் அந்தச் சூறாவளிக்குள் சிக்கிவிடுவான் போலத் தோன்றுகிறதே…’ என்று நினைத்தவன், உடனே தன் தலையை உலுப்பி அந்தச் சிந்தனையிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றான்.
“இல்லை… இல்லை… நிச்சயமாக இல்லை… அந்தப் பெண்மை, என் உடலில் பட்டதும் சற்றுத் தடுமாறிவிட்டேன். அவ்வளவுதான். மற்றும்படி, அவன் மனதில் எதுவும் இல்லை. நிச்சயமாக இல்லை…” என்று திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்தாலும், உள்ளுணர்வு அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கத்தான் செய்தது.
அதே நேரம் இவனுடைய கைப்பேசி இவனை அழைக்க, தற்காலிகமாகத் தன் சிந்தனையை ஓரம்கட்டிவிட்டு அதை உயிர்ப்பித்துக் காதில் பொருத்த, சகோதரிதான் எடுத்திருந்தாள்.
“என்னடா… ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்று கேட்டவரின் குரலில்தான் எத்தனை சோர்வு, எத்தனை பயம், எத்தனை கலக்கம். அதைப் புரிந்துகொண்டவனாக,
“ஷ்… அக்கா நான்தானே சொன்னேன்… நான் பார்த்துக்கொள்கிறேன் என்று. பிறகு எதற்கு இந்தக் கலக்கம்..?” என்று கண்டிப்பதுபோலக் கேட்க, அவன் நினைத்தது சரிதான் என்பதுபோல மூக்கை உறிஞ்சியவர்,
“யார் கலங்கினார்கள்… நான் ஒன்றும் கலங்கவில்லை. அவருக்கே எங்கள் மீது அக்கறையில்லாதபோது எனக்கென்ன வந்தது??” என்று சீற்றம்போலக் கூற முயன்றாலும் அதில் தெரிந்த மிதமிஞ்சிய வேதனையைப் புரிந்துகொண்ட அதகனாகரனுக்கும் பெரும் வலி எழவே செய்தது.
எத்தனை மகிழ்ச்சியான குடும்பம். இப்படி ஒரு சம்பவத்தால் உருக்குலைந்து போகிறதே. நெஞ்சம் வலிக்க ஒரு பெருமூச்சை விட்டவன்,
“அக்கா, ஏன் இப்படி உடைந்து போகிறாய்… உனக்குத் துணையாக நான் இல்லையா… உன்னை அப்படியே கைவிட்டுவிடுவேன் என்று நினைக்கிறாயா… அத்தானை மீட்டு உன்னிடம் கொண்டுவருவது என் பொறுப்பு…. ஆனால் நீ எனக்கொரு சத்தியம் செய்யவேண்டும்…” என்றான் இவன் வலியோடு. அவரோ, பெருமூச்சுடன்,
“சொல்லுடா…”
“எக்காரணம் கொண்டும் அத்தான் திரும்பி வந்ததும் உன் கோபத்தையும் வேதனையையும் அவரிடம் காட்டாதே… சின்னச் சந்தேகம் வந்தாலும் அவர் சுதாரித்துக் கொள்வார்… அப்படிச் சுதாரித்தால் என் திட்டமெல்லாம் வீணாகப் போய்விடும்… நமக்குச் செய்தி தெரியாது என்கிற வரைதான் அது பலம். தெரிந்துவிட்டது புரிந்தால், அதுவே அவருக்குப் பலமாக மாறிவிடும்… நான் சொல்வது புரிகிறதா…” என்று அழுத்தமாகக் கேட்க, மாதவியோ,
“எப்படிடா… எப்படி நான் பொய்யாக நடிப்பேன். அது எனக்குப் பழக்கமில்லையே… அந்தாளின் முகத்தைப் பார்த்தாலே அவர் செய்த துரோகம்தானே நினைவுக்கு வரும்…” என்று மாதவி கலங்க, இவனோ விழிகளை மூடிச் சற்றுநேரம் அமைதிகாத்தான்
சகோதரியின் நிலை அவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் ஜெயராமனை ஏய்ப்பது ஒன்றும் அத்தனை சுலபமில்லை. அவர் பழம் தின்று கொட்டையும் போட்டவர். மாதவியின் முகத்தில் சிறு சலனம் தெரிந்தாலும் அதைச் சுலபத்தில் கண்டுகொள்வார். அதன் பின் அதற்கான காரணத்தை அவர் அறிவதொன்றும் சிரமமில்லை. தவிர, அந்த மீநன்னயாவை யாரும் எட்டாத தொலைவுக்கு இடம் மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கிடையில் இவன் முந்திக்கொள்ள வேண்டும். அதற்குச் சகோதரி ஒத்துழைத்தால் மட்டும்தான் முடியும். பெருமூச்சுடன் விழிகளைத் திறந்தவன்,
“அக்கா… அத்தானின் வாழ்க்கையிலிருந்து அந்தப் பெண்ணை விலக்கவேண்டும் என்றால், அதற்கு நீயும் ஒத்துழைக்க வேண்டும்…” என்றவனிடம்,
“அதை விட உன் குட்டு உடைந்துவிட்டது, இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்திவிடவா? இப்படிப் பட்டவர் எனக்குத் தேவையில்லை. அந்தப் பெண்ணோடே நின்று கூத்தடிக்கட்டும்” என்றார் மாதவி கடும் ஆத்திரத்தோடு சொல்ல. இவனோ, ஏளனத்துடன் சிரித்து,
“நீ அம்மாவின் பிள்ளை என்று நிரூபிக்கிறாய் பார்… இதையேதான் அம்மா சொன்னார்கள். அடுத்து என்ன நடந்தது என்று உனக்குத் தெரியும்தானே. அவர் சந்தோஷமாக, மிக மிகச் சந்தோஷமாக அந்தப் பெண்ணோடு சென்று வாழ்ந்தார்? கடைசியாக மூக்குடைபட்டது நாங்கள்தான். அக்கா…! ஒன்றைப் புரிந்துகொள், உண்மை தெரிந்தால் அது அவருக்குத்தான் வாய்ப்பு. அதைவிட, உள்ளேயே இருக்கவைத்து அவர் நிம்மதியைக் கெடுப்பதுதான் அவருக்குக் கொடுக்கும் சரியான தண்டனையாக இருக்கும். அக்கா உண்மை தெரிந்து நாம் எகிறினால், போடி நீயும் உன் குடும்பமும் என்று மகிழ்ச்சியாகவே போய்விடுவார். ஆனால் புகழேந்தியும் பூங்கோதையும்… அவர்கள் என்ன தவறு செய்தார்கள்…. நம்மைப் பெற்ற அந்தப் புண்ணியவான் சென்றபின் விபரம் தெரியாமல் நாங்கள் பட்ட வலி உனக்கு மறந்துவிட்டதா அக்கா… அதே வலியை புகழேந்தியும் பூவும் படவேண்டுமா? ஒரு குடும்பத்திற்குத் தாய் மட்டுமில்லை, தந்தையும் மிக மிக முக்கியம்… அவர்களுக்காகவாவது எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற முடிவை எடுக்காமல் இருப்பது நல்லது…” என்று கூற, மாதவி சற்றுநேரம் அமைதி காத்தார்.
அவன் சொல்வதும் உண்மைதான். தந்தை சென்றபின், அவர்கள் தாய்ப் பட்ட பாடு. அதுவரை பொருளாதார ரீதியாக அவரையே நம்பியிருந்த கோதை, எப்படித் திணறிப்போனார். எப்படியோ தன் குழந்தைகளை நன்றாக்கவேண்டும் என்கிற வைராக்கியத்தோடு, கடனை உடனை வாங்கி இரண்டு மாடுகள் வாங்கி, அதன் பாலைக் கறந்து அதை விற்றுத்தான் மக்களின் தேவையை நிறைவேற்றினார். ஆனால் அந்த ஊர் இவர்களைப் படுத்திய பாடு. இப்போது நினைத்தாலும் ஆத்திரம் முட்டிக்கொண்டு வரும்.
இவர்களின் காதுபடவே, ‘பெண்டாட்டி சரியாக இல்லை என்றால், புருஷன் இன்னொன்றைத் தேடத்தான் செய்வான்…’ என்று சொன்னார்கள். சற்றும் கூசாமல் தாயின் ஒழுக்கம் சரியில்லை என்பதால்தான் கைகழுவிவிட்டுப் போனார் என்றார்கள்… அப்பப்பா எத்தனை வக்கிரம் பிடித்த மனிதர்கள். ஏன், புருஷன் சரியில்லை என்றால் பெண்டாட்டி இன்னொன்றைத் தேடிக்கொண்டா இருக்கிறாள். எத்தனையோ ஆண்களால் தம் மனைவியரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிவதில்லைதான். அதற்காக அவள் இன்னொரு ஆணைத் தேடிக்கொண்டா செல்கிறாள். அப்படிச் சென்றால் அவளுக்குப் பெயரே வேறாயிற்றே. இதையே ஒரு ஆண் செய்தால் அதைப்பற்றிப் பேச யாரும் கிடையாது. சே… எத்தனை கேடுகெட்ட சமுதாயம்… அதுவும் கோதை தன் குடும்பத்திற்காகவே வாழ்ந்தவர். அவரையே எப்படியெல்லாம் பந்தாடியது இந்த உலகம்.
அன்று ஒரு வேளை அந்தாளைத் தாய் துரத்தாமல் இருந்திருந்தால், தந்தை என்கிற பெயரில் ஒரு ஓரமாகக் கிடந்திருப்பாரோ. அன்னையும் வாழ்க்கையில் அத்தனை சிரமப்பட்டிருக்க மாட்டாரோ. கூசும் வார்த்தைகளைக் கேட்டு ஒடுங்கிப்போயிருக்க மாட்டாரோ. இவர்களும் தந்தையில்லாத வெறுமையை உணர்ந்திருக்க மாட்டார்களோ. பெரும் வேதனையுடன் தன் தலையை உலுப்பியவன்,
“இதோ பார் அக்கா, திருமணமே முடிக்கக் கூடாது… அப்படியே திருமணம் முடித்தாலும் குழந்தைகளைப் பெறக்கூடாது. சரி அதையும் மீறிக் குழந்தைகளைப் பெற்றால், நாம் நமக்காக வாழக் கூடாது. அந்தக் குழந்தைகளுக்காக வாழவேண்டும்… அவர்களின் எதிர்காலத்திற்காக வாழவேண்டும்… புகழும் பூங்கோதையும் அத்தான் மீது தம் உயிரையே வைத்திருக்கிறார்கள். இனி தங்கள் தந்தை தமக்கு உரியவர் அல்ல என்பதை அறியும்போது அவர்களின் மனம் என்ன பாடுபடும் யோசித்துப் பார்.. இதே சூழலைக் கண்டு வந்தவர்கள்தானே நாம்… நாமே அந்தத் தவறைச் செய்யலாமா. அத்தானுக்கும் உனக்கும் உள்ள பிரச்சயைப் பிறகு தீர்த்துக் கொள்ளலாம். முதலில் அவர்களுக்காக அவர்களுடைய தந்தையை மீட்டெடுப்போம்…” என்றவன்,
“நான் சொல்வதை நினைவில் வை… எக்காரணம் கொண்டும் என் எதிர்ப்பை வெறுப்பை அவரிடம் காட்டாதே… அந்தப் பெண்ணை அப்புறப்படுத்திய பிறகு அவரை ஒரு கை பார்க்கலாம். புரிந்ததா…” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைத்தவனுக்கு ஏனோ மீநன்னயா மனதில் வந்து நின்று நகைத்தாள்.
பார்த்து முழுதாக ஒருநாள் கூட ஆகவில்லை. அதற்குள் அவள் முகம்தான் மனதில் நிற்கிறது என்றால்…? பதறியவாறு விழிகளைத் திறந்தவனுக்கு ஏனோ வியர்த்துக் கொட்டியது.
பெண்கள் என்றாலே சற்றுத் தொலைவில் நிற்கும் அவனையே சிந்திக்க வைத்திருக்கிறாள் என்றால், ஜெயராமனை மயக்குவது ஒன்றும் அத்தனை கடினமில்லையே. ஜெயராமன் வசதியானவன் என்று தெரிந்துதான் அந்தப் பெண் அவரை மயக்கியிருக்கிறாள். இவ்வளவு ஏன், அவன் கைப்பையிலிருந்த பணத்தைக் கண்டபின்தானே, இவனோடு அவள் இருப்பிடம் செல்லவே சம்மதித்தாள்.
அவளைத் தன் பக்கம் திருப்புவது ஒன்றும் அத்தனை சிரமமில்லை. வசதியான ஆண்களை மயக்கி அவர்களின் பணத்தில் பெண்கள் வாழ்வதொன்றும் புதுமையில்லையே. அவனுக்கே இத்தகைய சம்பவங்கள் பல நடக்க முயன்றதுதானே. ஜெயராமன் சும்மாவே இளகிய மனம் கொண்டவர். அவரை மடக்குவது ஒன்றும் சிரமமான காரியமில்லை. என்ன செய்வது, தவறு செய்வது மனித இயற்கை. அதைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்புக் கொடுப்பதில் தப்பில்லையே. அத்தானுக்குக் கொடுத்துப் பார்க்கலாம்… அவர் கனடா சென்றதும், முதல் வேலை அவளை அவர் வாழ்விலிருந்து முழுதாக அகற்றுவது. நிச்சயமாக அது தன்னால் முடியும் என்கிற முழு நம்பிக்கையோடு மீநன்னயா பற்றி அறிவதில் முழு மூச்சாக ஈடுபடக் கரங்களில் சிந்தாமல் சிதறாமல் வந்து விழுந்தது அந்தச் செய்தி.