Thu. Apr 3rd, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –6/7

(6)

மறுநாள், அந்த விடுதியில், அங்கே தன்னை நோக்கிப் புயல் பயங்கரமாக வீசப்போகிறது என்பதைச் சிறிதும் அறிந்துகொள்ளாத மீநன்னயா, அந்த ஆடம்பர அறையோடு ஒட்டியிருந்த குளியல் தொட்டியில், நிறைத்திருந்த கதகதப்பான தண்ணீரில் சவர்க்கார நுரை பொங்க அதற்குள் விழிகளை மூடி சுகமாய் அமிழ்ந்திருந்தாள்.

அப்பப்பா இப்படித் தொட்டியில் மிதமான வெந்நீரில் உலகம் மறந்து சுகித்திருப்பதுதான் எத்தனை ஆனந்தம். அந்தத் தொட்டில் குளியல் அவளுக்குப் பெரும் இதத்தைக் கொடுத்ததோ, இல்லை தற்கால வாழ்க்கை முறை அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்ததோ, முகம் பொலிவுற்றிருந்ததையும்  மீறிச் சிவந்த அந்தச் செழித்த உதடுகளில் மெல்லிய மலர்ச்சி தொக்கி நின்றதால், அது அவளுடைய முக அழகை ஒரு படி மேலேயே எடுத்துச் சென்றது.

ஈரம் படாதிருக்க உயரக் கட்டிய கொண்டையின் அடர்த்தித் தாங்க முடியாமல் தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடி அந்தச் சுகத்தில் இன்பக் கனா கண்டுகொண்டிருக்க, எத்தனை நேரம் அப்படியே கிடந்தாளோ, அவளுடைய கைப்பேசி அந்த இனிமையைக் குழைப்பதுபோல அழைத்தது.

விழிகளைத் திறக்கப் பிரியப்படாமலே, தலையைத் திருப்பிப் பார்த்தாள். கைப்பேசி சற்றுத் தள்ளியிருக்க, படுத்த வாக்கிலேயே கைப்பேசியை இழுத்து எடுத்து யார் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தாள். அதில் விழுந்திருந்த இலக்கத்தைக் கண்டதும் முகம் மேலும் பளிச்சிட, உதடுகள் புன்னகையில் மலர்ந்தன. அப்பப்பா… ஒரு பெண்ணால் இத்தனை அழகாகப் புன்னகைக்க முடியுமா? இவள் சிரிப்பைக் கண்டுதான் பொன் நகைகளை விடப் புன்னகை சிறந்தது என்றார்களோ?? பற்களா அவை? முத்துக்களைக் கோர்த்து உள்ளே பதியவைத்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. சிரிக்கும் போது சற்றுத் தெரிந்த சிவந்த ஈறுகள் கூட எத்தனை கவற்சியைக் கொடுக்கிறன.

அதுவும் அந்த நீண்ட விழிகள்… கடலில் துள்ளி விளையாடிய கயல் மீன்கள், வானத்து நட்சத்திரத்தையும் பறித்துக் கொண்டு அவள் விழிகளாக மாறிவிட்டனவோ. அப்பப்பா எத்தனை பிரகாசம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியப் பெரும் குதுகலத்தோடு, கைப்பேசியை எடுத்துக் காதில் பொருத்தி,

“ஹாய்…” என்றாள்.

அம்மாடி… குரலா அது… அந்தக் குரலில் அங்கிருந்த இரும்புகள் கூட ஒரு கணம் குழைந்து உருகிப் போயினவே. பெண்ணின் குரலில் இத்தனை மென்மை, இத்தனை இதம், இத்தனை கருணை இருக்க முடியுமா என்ன? இதோ இருக்கிறதே… அவள் பேசுவதைக் கேட்டால், எதிரியின் உள்ளமும் கரைந்து போகும் என்பது மட்டும் நிஜம்.

அவளுடைய குரல் மறுபக்கம் நின்றிருந்த ஜெயராமனையும் உருக வைத்ததோ, அவர் முகத்திலும் ஆயிரம் மலர்ச்சி. ஆயிரம் குளிர்ச்சி. இருக்காதா, மனதுக்குப் பிடித்தவளோடு பேசினால் உலகம் என்றும் சொர்க்கம்தானே.

“ஹாய்… பேபி… என்ன செய்கிறாய்?” என்றார் குழைவாய். இவளோ புன்னகையை மேலும் பெரிதாக்கி,

“குளித்துக்கொண்டிருக்கிறேன்…” என்றாள் குதுகலமாய். அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்குமோ தெரியவில்லை. அத்தனை மெதுவாக இரந்தது. அப்படியிருக்கையில் ஜெயராமிற்கு எப்படிக் கேட்கும்?

“என்ன?” என்று திரும்பக் கேட்க, இப்போது தன் குரலைச் சற்று உயர்த்தி,

“குளித்துக்கொண்டிருக்கிறேன்…” என்றாள் மீண்டும்.

“ஓ…. சரி… சரி… விரைவாகத் தயாராகு… நாம் ஒரு இடத்திற்குப் போகிறோம்…” என்று கூற, உடனே கைப்பேசியை அணைத்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட எழுந்தவளின் தேகத்தைப் பாழாய்ப்போன ஒரு துண்டு மார்பிலிருந்து முழங்கால் வரை மறைத்துக்கொண்டு நின்றது.

அவள் எழிலைக் கண்டு இன்புறலாம் என்று காத்திருந்த காற்றுகூட  பெரும் ஏமாற்றம் கொண்டதாய், குளிர் மூச்சை வெளிவிட, இவளோ, சற்றுத் தள்ளியிருந்த ஷவரின் கீழ் நின்று உடலில் படிந்திருந்த சவர்க்கார நுரையைச்  சுத்தப்படுத்தத் தொடங்கினாள்.

ஈரம் தொட்ட ஆடை அவள் உடலோடு ஒட்டியிருக்க அவளுடைய சிற்ப உடலை என்னவென்றுதான் சொல்வது? அவளைப் படைத்தது பிரம்மன் என்றால், அவன் நிச்சயமாக ரசனைக்காரன்தான். இல்லை என்றால் இப்படிப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்க முடியாது.

ஏற வேண்டியவை ஏறி இறங்கவேண்டியவை இறங்கி ஒடுங்கவேண்டியவை ஒடுங்கி… அவள் உடலில் வழிந்து செல்லும் நீர்த் துவலைகள் கூட, ரசித்து ருசித்து வருடியல்லவா வடிந்து செல்கின்றன.

அதுவும் தண்ணீர் பட்டதும் தளைத்தெழும் கொடியாக வளைந்து நெழிந்து நிற்க, அவள் அங்கங்களோ அக் கொடி தாங்காத மலர்கள் எனப் பூத்துக் குலுங்கியல்லவா நிற்கின்றன. அவள் வயது பெண்களோடு ஒப்பிடுகையில் சற்றுச் செழித்த தேகம்தான்… ஆனால் அந்தச் செழிப்புகள் சும்மா இருக்கும் ஆடவரையும் இவள் பக்கம் திரும்பச் செய்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இலக்கிய மாந்தர்கள் உருப்பெற்று வந்தது போல அத்தனை அழகோடு நின்றிருந்தவளை அந்தக் காமன் எப்படி விட்டு வைத்தான்…? ஒரு வேளை காமனின் பார்வையில் இவள் இதுவரை சிக்கவில்லையோ?

தான் இத்தனை அழகா என்பது கூடத் தெரியாமல், தன்னை நன்றாகச் சுத்தப்படுத்தியவள், ஷவரை நிறுத்திவிட்டு வெளியேறும்போதே, தளிர் உடலிலிருந்து, அவளை விட்டுப் பிரியப் பிடிக்காது அவள் மேனியோடு ஒட்டியிருந்த ஈரத்தைக் கரங்களாலேயே வழித்தெடுத்தவாறு வெளியே வந்தவள், அந்த நான்கு சுவருக்குள் குளித்தாலும் உடலை மறைத்திருந்த ஈரத்துண்டைக் களைய முதல், புதிய துவாய் ஒன்றால் தன் மேனியை மறைத்தவாறு ஈரத்துணியை களைந்து, அதை அங்கிருந்த கைகழுவும் தொட்டியில், போட்டுவிட்டு அறைக்கு வந்தவள், அடுத்த அரை மணி நேரத்தில், மின்னாமல் முழங்காமல் தயாராகி வெளியே வரும்போதே கதவைத் திறந்துகொண்டு ஜெயராமன் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் பூரிப்புடன் அவரிடம் சென்றவள், அவர் கரங்களிலிருந்த கைப்பையைத் தன் கரங்களுக்கு வாங்கியவாறு,

“அதிக அலைச்சலா ராம்…?” என்றாள் உருகிப்போய். அந்தக் குரலைக் கேட்ட மாத்திரத்தில், களைப்பு மறைந்து அங்கே மலர்ச்சி பொங்க, அவளுடைய கன்னத்தைச் செல்லமாகத் தட்டி விட்டு,

“உனக்கு முன்னால் எந்த வேலையும் பழுவாகத் தெரியாது மீனா…” என்றவாறு குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு,

“பத்து நிமிடம் கொடு, குளித்துவிட்டு வருகிறேன்…” என்றுவிட்டு உள்ளே செல்ல, இவளோ, தன் கரத்திலிருந்த பையை அங்கிருந்த நீளிருக்கையில் வைத்துவிட்டு உள்ளே ஓடிப்போய், அவருக்குப் பிடித்தமான பான்ட் ஷேர்ட்டை எடுத்துக் கவனமாகக் கட்டிலில் வைத்துவிட்டுச் சமையல் பகுதிக்குள் நுழைந்தாள். ஜெயராமனுக்குப் பிடித்தமாதிரி காப்பியை தயாரித்துவிட்டு நிமிர, ஜெயராமனோ, அவள் எடுத்துவைத்த ஆடையை அணிந்தவாறு தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்தார்.

வந்தவரின் முன்னால் மணக்க மணக்கக் காப்பியை நீட்ட, உருகிப்போனார் ஜெயராமன். முகம் கனிய, விழிகளில் அன்பு பெருக்கெடுத்து ஓட,

“நன்றி கண்ணம்மா…” என்றதும், பளிச்சென்று புன்னகைத்தவள்,

“இதற்கெல்லாமா நன்றி சொல்வீர்கள்…?” என்று செல்லமாகக் கடிந்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்து இருக்கையின் முன்னே அமர்ந்துகொள்ள, ஜெயராமனோ அங்கிருந்த ஒற்றையிருக்கையில் அமர்ந்தவாறு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த மீநன்னயாவையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தார்.

ஏனோ நெஞ்சில் மிகப்பெரும் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது. எப்படி இந்தப் பிரச்சனையைக் கையாளப்போகிறோம் என்று அவருக்குச் சுத்தமாகப் புரியவில்லை. அதுவும் மாதவிக்கு உண்மை தெரிந்தால்… சும்மா கடைக்கண்ணால் ஒரு பெண்ணைப் பார்த்தாலே கொதித்துப் போவாள்… அப்படியிருக்கையில், இவளை எப்படி ஏற்றுக் கொள்வாள்? என்கிற கேள்வி அவரை வாட்டி எடுத்தது. இவர்களைப் பற்றிய உண்மை மட்டும் அவருடைய மனைவிக்கும், அதகனாகரனுக்கும் தெரிந்தால்… நினைக்கும்போதே நெஞ்சம் பதறியது.

அதுவும் அதகனாகரன் இவரைக் கொன்று புதைத்தே விடுவான். இன்று அவர் இத்தனை வசதியோடு நான்கு பேர் பார்க்க நிலையாக நிற்பதற்குக் காரணம் அதகனாகரன்தான். அவன் உழைத்த பணத்தில்தான் இவருடைய வியாபாரம் இத்தனை செழிப்பாக உயர்ந்து நிற்கிறது. சொல்லப்போனால் அவன் தன் உயிரைப் பணயம் வைத்துக் கார் ஓட்டப்பந்தையத்தில் வென்ற பணத்தை இவருக்கு முதலீடாகக் கொடுத்துத்தான் தனியாக வியாபாரம் செய்து பணக்காரன் என்கிற வரிசையில் இடம் பிடித்தார். அப்படியிருக்கையில் இவருடைய இந்த இரட்டை வாழ்க்கை மட்டும் தெரிய வந்தது, நினைக்கும் போதே அச்சத்தில் இதயம் பலமாகத் துடிக்கத் தொடங்கியது. ஆனாலும் மறைக்க முடியாது. எப்படியாவது ஒரு கட்டத்தில் இவளைப் பற்றித் தெரிய வரத்தான் போகிறது… யார் சொல்லாவிட்டாலும் இவர் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இப்போதில்லை. முதலில் மீநன்னயா கனடா வரட்டும். அதற்குப் பிறகு மெல்லமாக மாதவியிடம் கூறலாம்.

முடிவு செய்தவராகக் காப்பியை அருந்திவிட்டு, அதைக் கழுவி அங்கேயே கவிழ்த்துவிட்டு முன்னறைக்கு வர, மீநன்னயா தொலைக்காட்சியில் டாம் அன்ட் ஜெரி பார்த்து மென்மையாகக் குலுங்கி நகைத்துக் கொண்டிருந்தாள். சிரிப்பதில் கூட எத்தனை மென்மை அவளிடத்தே… அதுவரை இருந்த சங்கடங்கள் கலைந்து போக, அவரையும் மீறிப் புன்னகை உதட்டில் வளைய,

“கிளம்பலாமா மீனு…” என்றார் ரசனையுடன்.

துள்ளி எழுந்தவள்,

“நான் ரெடி….” என்றாள் குதுகலமாய்.

(7)

தொடர்ந்து இரண்டு நாட்கள் அதகனாகரன் ஜெயராமனையும் மீநன்னயாவையும் பின்தொடர்வதையே தன் வேலையாக வைத்துக்கொண்டான். இந்த இரண்டு நாட்களில் முடிந்தளவு மீநன்னயாவைப் பற்றி விசாரித்துவிட்டான். ஆனால் யாருக்கும் எந்தத் தகவல்களும் திரட்ட முடியவில்லை. இவனாலும் ஆழமாக இறங்கி விசாரிக்க முடியவில்லை. ஒருவேளை ஜெயராமின் காதிற்கு இது போனால் இவனுடைய திட்டம் பாழாகிவிடும். அதனால் முடிந்தவரை இரகசியமாகவே அவளைப்பற்றிய அறிய முயன்று தோற்றும் போனான்.

அன்றும் அவர்களைப் பின்தொடர்ந்தவன், ஒரு கட்டத்தில் ஜெயராமன், அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எதையோ கூறியவாறு விடைபெற்றுச் செல்ல, இவளும் இழித்தவாறு கைகாட்டி அவரை அனுப்பிவிட்டு நடக்கத் தொடங்க, இவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

அடேங்கப்பா… எத்தனை நெருக்கம், எத்தனை காதல். அதுவும் பொதுவெளியில் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் அணைத்து முத்தமிடும் அளவுக்கு நெருக்கம்… அருவெறுப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, ஜெயராமன் சென்றதும், இவன் பக்கமாகத் திரும்பினாள் மீநன்னயா. எங்கே அவள் தன்னைக் கண்டுவிடுவாளோ என்று அஞ்சியவன் போலச் சட்டென்று தன்னை அவளுடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ள, அவளோ, தன்னை ஒருத்தன் கண்காணிக்கிறான் என்பது கூடத் தெரியாமல், அவனைத் தாண்டிச் செல்ல, அப்போது அவள் தேகத்தில் பட்டு வீசிய காற்று அவள் வாசனையையும் சுமந்துகொண்டு அதகனாகரனை வந்தடைய, ஒரு கணம் அந்த வாசனையில் மெய்மறந்துதான் போனான் அதகனாகரன். பின் நினைவு வந்தவனாய் தன் தலையை உலுப்பிவிட்டு மீண்டும் அவளைப் பின்பற்றத் தொடங்கினான்.

ஜெயராமனிடமிருந்து விடைபெற்ற மீநன்னயாவிற்குக் குதுகலம் பிடிபடவில்லை. வாழ்வில் பட்ட அத்தனை சிக்கல்களும் துன்பங்களும் ஜெயராமனைக் கண்ட அந்த விநாடியே சூரியனைக் கண்ட பனியாய் உருகிப் போன மாயத்தை உணர்ந்தவளாய், நெஞ்சம் முழுக்க அவர் நினைவுகளைச் சுமந்துகொண்டு நடக்கத் தொடங்கினாள்.

தனக்கே தனக்கென்று ஒரு உறவு இருக்குமானால், அதைப் போலப் பெரும் ஆனந்தம் உலகத்தில் இருந்துவிடப் போவதில்லையே. ஜெயராம்… அந்தப் பெயரே உள்ளமெல்லாம் தித்திக்கச் செய்கிறதே. என்று முதன் முதலாக ஜெயராமை சந்தித்தாளோ, அந்தக் கணம் முதலே, அவரைத் தன்னோடு வைத்திருக்கவேண்டும் என்கிற பேரவா பிறந்துவிட்டது. சொல்லப்போனால் வெறி என்றே சொல்லலாம். ஆனாலும் அவளால் அது முடியாதே. ஏனெனில் அவருக்கென்று தனியாக ஒரு குடும்பம் இருக்கிறதே. மனைவி குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக வாழும் ஜெயராமனை அவள் சுயநலத்திற்காக எப்படிப் பிரித்து வருவாள்…? நினைக்கும் போதே பெரும் ஏக்கம் தோன்றியது அவளுக்கு. அவளையும் மீறி விழிகள் கலங்கிப் போயின.

அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், ஒரு வித சங்கடத்துடன் தான் அழுததை யாராவது பார்க்கிறார்களா என்று கவனித்தாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. நிம்மதியுடன், நடக்கத் தொடங்கியவளுக்கு அப்போதுதான் ஏதோ ஒன்று உறுத்தியது. யாரோ தன்னைப் பின்தொடர்வது போலத் தோன்ற, சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தாள். யார் யாரோ அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்களே அன்றி, சந்தேகப்படும்படி எதுவும் தெரியவில்லை. ஆனாலும் குறுகுறுப்பு அடங்கவில்லை. அதனால் சுத்தவரப் பார்த்தாள். அவரவர் தம் தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

அப்போதுதான் அவன் கண்ணில் பட்டான். அம்மாடி என்ன உயரம்… அவனுடைய தலையைத் தொடுவதாக இருந்தால் ஏணி வேண்டும் போலையே… அவன் உயரம் மட்டுமல்ல, அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன். லதரினால் தைத்த தடித்த மேலாடைதான் அணிந்திருந்தான். ஆனாலும் அதையும் மீறி இறுகிய தசைள் எம்பியிருந்தன… அவன் கூட யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். ஏனோ அத்தனை சுலபத்தில் விழிகள் அவனை விட்டுப் பிரிவதாக இல்லை. சுவாரசியத்துடன் அவனை மேலும் கீழும் பார்த்தவளுக்கு எதுவோ உறுத்தியது.

இவனை எங்கோ பார்த்திருக்கிறோம். எங்கே… எங்கே… என்று யோசித்தவளுக்குச் சுத்தமாக அது நினைவுக்கு வரவில்லை. ஆனால் எங்கோ எதிலோ பார்த்திருக்கிறோம் என்று மட்டும் நன்றாகப் புரிந்தது. ஆனாலும் இங்கேதான் என்று அவளால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அவனும் கைப்பேசியில் பேசியவாறு இவளை நோக்கித் திரும்ப, அப்போதுதான் அவனை வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது உறைக்க, அவசரமாகத் தன் விழிகளைப் பிரித்தவள், அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.

சற்றுத் தூரம் செல்ல, அப்போதுதான் ஒருசில அத்தியாவசிய பொருட்கள் வாங்கவேண்டும் என்கிற நினைப்பு வந்தது.

உடனே அதற்குரிய கடையைத் தேடிச் சென்றவள், உள்ளே நுழைந்து வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு கைகொள்ளாப் பைகளுடன் வெளியே வந்தாள் மீநன்னயா.

இப்போதெல்லாம் நினைத்தவற்றை உடனே வாங்க முடிகிறது. அதற்குக் காரணம் ஜெயராம்தான். அவள் விரும்பியவற்றை வாங்கச்சொல்லி கடனட்டை வேறு கொடுத்திருக்கிறார்.

நன்றி பெருக்கும் அன்பும் ஊற்றெடுக்க, நடந்துகொண்டிருந்தவளின் சிந்தனை அவளிடம் இல்லாது போனதால், முன்னால் வந்துகொண்டிருந்த உருவத்தைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.

அந்த உருவம் மிக அருகே நெருங்கியதும்தான், ஏதோ நிழல் தன்னை நெருங்குவது போன்ற உணர்வில், சுதாரித்து விலகுவதற்குள், கரங்களிலிருந்த பொருட்கள் அனைத்தும், சிதறிவிழத் தரையில் குப்புற விழுந்திருந்தாள். நல்லவேளை முகம் அடிபடவில்லை. ஆனாலும் விழுந்த வேகத்தில், அருகிலிருந்த கூரான ஏதோ ஒன்று அவளுடைய வலது உள்ளங்கையையும், முழங்கையையும் நன்கு பதம் பர்த்துவிட்டிருந்தன. வேதனையில் முகம் சுழிக்க, “ஷ்… அம்மா…” என்ற முனங்கலுடன், எழுந்தமர்ந்தவாறு கையை மடித்து முழங்கையின் காயத்தைப் பார்த்தவள் உதட்டைச் சுழித்தாள். சீமந்துத் தரை என்பதால், முழங்கை பகுதி நன்றாகவே தேய் பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. இப்போது உள்ளங்கையில் சுளீர் என்கிற வலி பிறக்க, பற்களைக் கடித்தவாறு கரத்தைத் திருப்பிப் பார்த்தாள். போத்தல் துண்டொன்று உள்ளங்கையைக் கீறியதோடு உள்ளே சற்று ஏறியும் விட்டிருந்தது. வலியில் உயிர் போக, கையில் குத்தியிருந்த கண்ணாடியை இழுத்து எடுக்க, இரத்தம் அதிலிருந்து கொடகொட என்று கொட்டத் தொடங்கியது.

வலியில் கண்கள் கலங்க, இரத்தம் வெளிவராதிருக்க மறு கரத்தால் அழுத்திப் பிடித்தவாறு, மெல்லிய முனங்கலோடு, தான் விழக் காரணம் என்ன என்பதை ஆராய முற்பட்டபோதுதான், இரண்டு உறுதியான கால்களைக் கண்டாள் மீநன்னயா.

தன் வலி மறந்தவளாக நிமிர்ந்து பார்க்க, அங்கே இமயத்தின் சிகரம் வழிதப்பி இவள் பாதையை மறைத்துக் கொண்டிருக்கிறதோ? சூரிய வெளிச்சம் அவனுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்ததால், அவனுடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் விழிகளைச் சுருக்கியவாறு அவனைப் பார்க்க விளைய, அதுவரை நிமிர்ந்து நின்றவாறு தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை விட்டுக்கொண்டு அவள் வேதனையை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன், கண்கள் கூசத் தன்னைப் பார்க்க முயன்றுகொண்டிருந்தவளைக் கண்டு பரிதாபப்பட்டோ என்னவோ அவள் முன்னால் மண்டியிட்டமர்ந்தான். இப்போது அவன் முகம் மிகத் தெளிவாக அவளுக்குத் தரிசனமானது.

இவன், இவன் சற்று முன்பு யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவனாயிற்றே… இவன் எப்படி இங்கே? வலி மறந்து வியந்து நிற்க, அவனோ, காயம்பட்ட அவளுடைய கரத்தைப் பற்றித் திருப்பிப் பார்த்தான். அதுவரை இரத்தம் அதிகம் வெளிவராது, அழுத்தியிருந்த மறுகரத்தை மீநன்னயா எடுத்துவிட, அதுவரை அமுங்கியிருந்த இரத்தம் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. அவனோ, காயத்தைப் பார்த்தவாறே,

“பாதையில் கவனமின்றி, சிந்தையை வேறு திசையில் பயணிக்க விட்டால், இப்படித்தான் ஆகும்…” என்றான் அழுத்தமாக.

இவளோ புரியாமல் விழிகளைச் சுருக்க, இப்போது நிமிர்ந்து அவள் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து,

“நடக்கும்போது சிந்தனை அதிலிருந்திருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது அல்லவா…” என்றான் பின், அவள் விழிகளில் குழப்பத்தையும் மீறித் தெரிந்த வலியைக் கண்டுகொண்டவனாக,

“யு ஓக்கே…?” என்றான். அதுவரை ஒரு வித திகைப்பிலிருந்தவள், சுயம் பெற்றவளாகத் தன் கரத்தைப் பார்க்க, அங்கே அவள் கரத்தை ஏந்தியவாறு, கசியும் இரத்தத்தைத் தடுப்பதுபோலத் தன் பெரிய விரலால் அழுத்திக்கொண்டிருந்தான் அவன்.

அவசரமாகத் தன் கரத்தை விலக்க முயன்றவளுக்கு அவனுடைய இறுகிய பிடியிலிருந்து அத்தனை சுலபத்தில் கரத்தை விலக்க முடியவில்லை. அதுவும் அவனுடைய அழுத்தமான பிடி, அந்தக் கண்ணாடி குத்திய வலியை விட, அதிகமாக இருக்க மீண்டும் கரத்தை விடுவிக்க முயன்றாள். அவனோ,

“ஹே… ரிலாக்ஸ்… இன்னும் இரத்தம் கசிகிறது” என்றுவிட்டு, மெதுவாகப் பெருவிரலை விலக்கி, அவளுடைய உள்ளங்கையைப் பரிசோதித்தான். அவனுடைய விரல் அகன்றதும் மீண்டும் இரத்தம் எட்டிப்பார்க்கத் தொடங்க, மீண்டும் அங்கே பெருவிரலை வைத்து அழுத்த, வலிபொறுக்க முடியாமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

பார்த்தவளுக்கு இதயத்தில் அச்சம் பேரலையாக எழுந்தது. அவன் சாதாரணமாகப் பார்த்திருந்தால், இவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது. ஆனால் அந்த விழிகளில் தெரிந்த ஒருவித நெருப்பு, இல்லை ஆக்ரோஷம், அல்லது சீற்றம் ஏதோ ஒன்று எதுவோ சரியில்லை என்று அவளுக்கு உணர்த்த, அவசரமாக அவன் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்று தோற்றவளாக,

“இல்லை நான்… நான் சமாளித்துக் கொள்வேன்… கரத்தை விடுங்கள்” என்றாள் ஒருவித நடுக்கத்துடன்.

அதுவரை அவளுடைய கரத்தை இறுகப்பற்றியிருந்தவனின் கரங்கள் மெதுவாக இளகிப் போக, அவனுடைய உள்ளத்திலும் ஒரு வித தடுமாற்றாம். அந்தக் குரல்… அதன் மென்மை… அவளை இளக்க வைத்தது என்பது மட்டும் நிஜம். ஆனாலும் தன்னைச் சமாளித்தவனாக,

“நீங்கள் சமாளித்துக் கொள்ளமாட்டீர்கள் என்று யார் சொன்னது. ஆனால் பாருங்கள், காயம் ஆழமாகப் பட்டிருக்கிறது… அதனால்…” என்று சுத்த தமிழில் அவன் கூற, இவளோ ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

இவள் தமிழ்தான் என்று எப்படிக் கச்சிதமாகக் கண்டுபிடித்தான்? அவள் திகைப்புடன் விழிக்கும் போதே, அவன் சுத்தவர எதையோ தேடினான்.

அப்போது அவன் கண்களுக்குச் சிக்கியது, தண்ணீர் போத்தல். அவளுடைய கரத்தை விடாமலே அதை எட்டி எடுத்து பற்களால் அதன் மூடியைக் கழற்றித் துப்பிவிட்டு, அவளுடைய காயத்தின் மீது கொடகொட என்று கொட்டிச் சுத்தப்படுத்த தொடங்க, இவளுக்குத்தான் உயிர்போவது போலானது. காயம் பட்ட வலியை விடத் தண்ணீர் பட்டதும் ஏற்பட்ட எரிச்சல் அதிகமாகத் தெரியத் தன்னை மறந்து,

‘ஷ்…” என்று முனங்கினாள். இவனோ தன் காரியத்தில் கண்ணாக இருந்தவாறு மேல் கண்ணால் அவளை அலட்சியமாக ஏறிட்டான். அவளுடைய வலி இவனுக்குச் சற்று இதமாக இருந்ததோ, ஒரு விரலால் காயத்தை ஒரு அழுத்து அழுத்த துடித்துப் போனாள் அந்தக் காரிகை.

“ஆ…” என்று மெல்லியதாக அலற, இவனோ,

“ஊப்ஸ்… சாரி…” என்று விட்டு மேலும் சுத்தப்படுத்தத் தொடங்க, இவளுக்கோ, அவன் காயத்தைச் சுத்தப்படுத்துவதை விட, சும்மா இருப்பதே மேல் என்று தோன்றியது. அதனால் தன் கரத்தை இழுக்க முயன்றவாறு,

“ஆ…. இ… இல்லை… பரவாயில்லை… நான்… நான் சமாளித்துக் கொள்வேன்…” என்று வலியில் முனங்க, அவனோ அலட்சியமாக, அவளுடைய மறுகரத்தையும் பற்றி, அதன் பெருவிரலைக் காயத்தின் மீது அழுத்துமாறு வைத்துவிட்டு,

“இன்னும் கொஞ்ச நேரத்தில் இரத்தப்போக்கு நின்றுவிடும்…” என்றவாறு எழுந்து, தரையில் கிடந்த அவளுடைய பைகளைச் சேகரிக்கத் தொடங்க, இவளோ,

“இ… இல்லை நானே… எடுத்துக் கொள்கிறேன்…” என்றாள் தயக்கமாக.

இவனுக்கு மற்றவர்களின் சொல் பேச்சுக் கேட்டுப் பழக்கமில்லை போலும். அவளை ஒரு பொருட்டாக மதியாதவனாக, அத்தனை பைகளையும் சேகரித்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து,

“கம் வித் மி…” என்றவாறு முன்னால் நடக்கத் தொடங்கினான்.

இவளோ, என்ன செய்வது, ஏதுசெய்வது என்று தெரியாத குழப்பத்தோடு தன் பொருட்களோடு நடந்து சென்றவனின் முதுகையே வெறித்தாள்.

யார் இவன்…? எங்கிருந்தோ வந்தான்… இவளோடு மோதுப்பட்டான். சரி இவளும்தான் மோதினாள். தரையில் விழுந்த வேகத்தில் கையில் காயம் வந்துவிட்டது. அதைச் சுத்தப்படுத்துகிறேன் என்று சித்திரவதை செய்தான். அதற்குப் பிறகு அவளுடைய பொருட்களைச் சேகரித்தான்… அத்தோடு விடாமல், ‘வா’ என்று அதிகாரமாகக் கூறிவிட்டுத் தன் போக்கில் செல்கிறானே. இவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான். கொண்டவன் போல அல்லவா இவளை வா என்றுவிட்டுப் போகிறான். முதலில் இவன் யார்…? என்றுமில்லாத மாதிரி அன்று சுருசுரு என்று ஆத்திரம் பிறக்கப் பிடித்துவைத்த பிள்ளையார் போல அப்படியே அமர்ந்திருந்தாள் மீநன்னயா.

அவனுக்கும் சற்றுத் தூரம் சென்றபின்தான், அவள் தன்னைப் பின் தொடரவில்லை என்பதே உறுத்தியது போலும். புருவங்கள் சுருங்க, நின்று திரும்பிப் பார்த்தான். இவளோ அதே இடத்தில் ஆடாது அசையாது அமர்ந்திருந்தாள்.

அப்போது கூட, எதற்காக அவள் அப்படி நிற்கிறாள் என்பதை அவன் சற்றும் உணர்ந்துகொள்வது போலத் தெரியவில்லை. அழைத்ததும் நிச்சயமாக வந்துவிடுவாள் என்றுதான் நினைத்தான். மாறாக, அங்கேயே அமர்ந்திருக்கிறாளே. எரிச்சல் பிறக்க,

“என்ன… ஏன் அங்கேயே நிற்கிறாய்… உன்னை என்னோடு வரச்சொன்னேனே..” என்றான் அதிகாரத்தோடு.

இவளோ, அவனை எரிச்சலோடு பார்த்து,

“உங்களுக்கு என்னைத் தெரியுமா?” என்றாள் கூர்மையாக. இவனோ தன் தோள்களைக் குலுக்கி.

“ம்… தெரியும்….” என்றவனை வியப்போடு பார்த்தவள்,

“தெ… தெரியுமா… எப்படி?” என்றாள். அவனோ தோள்களைக் குலுக்கி,

“இதோ இப்போதுதான்…! நீ என்னோடு மோதுப்பட்டுத்தானே விழுந்தாய்…” என்றவனை மேலும் எரிச்சலோடு பார்த்தவள்,

“நான் அதைக் கேட்கவில்லை, என்னை உங்களுக்கு முன்பே தெரியுமா…” என்றாள் மீநன்னயா. அவனோ இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்பதுபோலப் பார்த்துவிட்டு,

“என்ன கேள்வி இது… உன்னை எப்படி எனக்குத் தெரியும்?” என்றான் அவன். இப்போது தரையிலிருந்து எழுந்தவள்,

“அப்படியானால் என்னை எதற்காக வரச் சொல்கிறீர்கள்…? தெரியாத உங்களுடன் நான் வருவேன் என்று எப்படி நினைத்தீர்கள்…? முதலில் யார் நீங்கள்?” என்று அழுத்தமாகக் கேட்க, அப்போதுதான் அவனுக்கும் தான் அவசரப்பட்டதே புரிந்தது. இதைக் கையாளும் விதம் இந்த வழியில்லை… வேறு வழியில்தான் போகவேண்டும்… புரிந்துகொண்டவனாகத் தன் இறுக்கத்தை தளர்த்தியவன்,

“ஐ ஆம் சாரி… நான் வேலைக்குப் போகவேண்டிய அவசரம்… அதுதான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன் போல… என் பெயர்…” என்றவன் சற்று நிதானித்து,

“நிரஞ்சன்… இங்கேதான் இருக்கிறேன்… என்னைப் பற்றிய தகவல்களைப் பிறகு தருகிறேன். முதலில் காயத்திற்கு மருந்து போடவேண்டும்.. வாருங்கள்…” என்று தன் குரலில் இதத்தைத் தேக்கிக் கூற, அப்போதும் அவள் இளகினாளில்லை.

“அது என் பிரச்சனை… இந்தக் காயம் ஆழமா இல்லையா, என்பதை நான்தான் சொல்லவேண்டும்… வைத்தியரிடம் போகவேண்டுமா இல்லையா என்பதையும் நான்தான் முடிவு செய்யவேண்டும்…” என்று தன் எரிச்சல் தாராளமாக வெளிப்படக் கூறியவளை இப்போதும் முகம் மாறாத தன்மையுடன் பார்த்தான் அதகனாகரன்.

நாய் வேடம் போட்டாயிற்று. குரைத்துத்தானே ஆகவேண்டும்.

“இதோ பாருங்கள்… நீங்கள் அடிபட நானும் ஒரு காரணம். அப்படியிருக்கையில் உங்களை இப்படி அம்போ என்று விட்டுவிட்டு என்னால் போகமுடியாது. உறுத்திக்கொண்டே இருக்கும்… அதை விட, உங்களை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டினேன் என்றால், என் வேலைகளை நிம்மதியாகச் செய்வேன்… ப்ளீஸ்… மறுக்காதீர்கள்…” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, அதுவரை இருந்த அழுத்தம் இவளுக்குச் சற்றுக் குறைந்து போனது.

“புரிகிறது… ஆனால் என்னால் சமாளித்துக்கொள்ள முடியும் மிஸ்டர் நிரஞ்சன். நிச்சயமாக உங்கள் உதவி எனக்குத் தேவைப்படாது… ஆனால் கேட்டதற்கு நன்றி… எனக்காக நீங்கள் சங்கடப்படவேண்டியதேயில்லை… நீங்கள் புறப்படுங்கள்…” என்று அவள் கூற, இவனோ,

“நீங்கள் சமாளிப்பீர்கள்தான்… ஆனால்…?” என்றவன், தன் கரத்திலிருந்த பைகளைத் தூக்கிக் காட்டி,

“இதை எப்படிக் கொண்டு செல்லப் போகிறீர்கள்…” என்று அவன் அக்கறையாகக் கேட்பது போல இருந்தாலும் அதில் மிதமிஞ்சித் தெரிந்த கிண்டலைப் புரிந்து கொண்ட மீநன்னயா ஒரு கணம் திணறித்தான் போனாள்.

அவன் சொல்வதும் சரிதான். ஒரு பையென்றால் சுலபமாகவே அவளால் கையாள முடியும். ஆனால், வாங்குகிறேன் என்று ஒன்றுக்கு ஐந்து பைகளை வாங்கினால் எப்படித்தான் காவிச் செல்வது… நிச்சயமாக இந்தக் கையை வைத்துக்கொண்டு அவளால் போக முடியாது என்பது நிச்சயம்தான். ஆனாலும் அவனோடு செல்லத் தயக்கமாகவே இருக்க,

“இட்ஸ் ஓக்கே மிஸ்டர் நிரஞ்சன்… நான் வாடகை வாகனத்தில் போய்க்கொள்கிறேன்… இல்லை என்றாலும் என் நண்பர் ஒருவர் இருக்கிறார்… அவரையாவது அழைத்துக் கொள்கிறேன்… நீங்கள் உங்கள் முக்கியமான வேலையைப் பாருங்கள்…” என்று அவள் கூறியதும், அதகனாகரன் அவளைப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, மீண்டும் அவளை நோக்கி வந்தான். நிதானமாக அவளைப் பார்த்து,

“புரிகிறது… முதன் முதலாகப் பார்க்கும் ஒருவனை நம்பி எப்படிப் போவது… அதுதானே… நானும் சற்று அவசரப்பட்டுவிட்டேன் போல… சாரி… ரியலி ஐ ஆம் சாரி” என்றவன், தன் கரத்திலிருந்த பொருட்களைத் தரையில் வைத்துவிட்டுக் கையோடு பான்ட் பாக்கட்டில் கைவிட்டுப் பணப்பையை வெளியே எடுத்தான். குறிப்பாகக் கட்டுக்கட்டாக இருந்த பணத்தைத் தாராளமாகவே அவளுக்குக் காட்டிவிட்டு, அதிலிருந்து தன் அறிமுக அட்டையை எடுத்து அவளிடம் நீட்டி,

“இதோ இதுதான் என் அறிமுக அட்டை…” என்றவாறு, தன் கைப்பேசியை எடுத்து அதில் எதையோ தட்ட, அதில் பிறந்தது வலைத்தளம் ஒன்று. அதில் இவனுடைய படத்தைப் போட்டு, இவனைப் பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டிருக்க, அதை அவளிடம் நீட்டி,

“இது என்னுடைய வலைத்தளம்… இதில் என்னைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. வேண்டுமானால் நீங்களே படித்துப் பாருங்கள். அப்போதும் உங்களுக்கு என் மீது நம்பிக்கை பிறக்கவில்லை என்றால், நீங்கள் விரும்பியது போலவே வாடகை வாகனத்தை வரவழைத்துப் பத்திரமாக அனுப்பிவிடுகிறேன் சரியா…” என்று கூற, இவளும் தயக்கத்துடனேயே கைப்பேசியை வாங்கி, அதில் உள்ளதைப் படிக்கத் தொடங்கினாள்.

பல கோடிப் பெறுமானமுள்ள பல்முகத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளன் என்று அதில் போடப்பட்டிருந்தது. கூடவே அவனுடைய சாதனைகள் என்று பல பட்டியல் அதை வியப்புடன் படிக்கும் போதே, இவனுடைய உதடுகளில் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

பின்னே, இதுவரை ஜெயராமனின் பணத்திற்குப் பின்னால் போனவள், இப்போது இதைக் கண்டதும், தயங்காமலே இவன் பின்னால் வந்துவிடுவாள்… அவன் பார்க்காத பெண்களா… இவள் மட்டும் விதிவிலக்கா என்ன. இதற்காகத்தானே இரவோடு இரவாகத் தன் நண்பனின் பெயரில், தன் படத்தைப் போட்டுப் புதிய வலைத்தளம் ஒன்றை உருவாக்கினான். உள்ளே சென்று ஆழ்ந்து பார்த்தால் மட்டும்தான் அதைப் பொய்யென்று உணர முடியும்.

அதிகம் அவளை யோசிக்க விடாமல் அவளுடைய கரத்திலிருந்த கைப்பேசியை தன் கைக்கு மாற்றி,

“இப்போது சந்தேகம் தெளிந்ததா?” என்றான் தன் அழகிய புன்னகையைச் சிந்தி.

ஏனோ மீநன்னயாவிற்கு அந்தப் புன்னகையிலிருந்து தன் விழிகளைத் திருப்பவே முடியவில்லை. அப்பாடி சிரிக்கும் போது எத்தனை கம்பீரமாக இருக்கிறான். விழிகளை விலக்கவே முடியவில்லையே. திணறும்போதே, தரையில் வைத்த அவளுடைய பைகளைக் குனிந்து எடுத்தவன்,

“இனியாவது நம்பி வரலாமே…” என்றான் அந்தப் புன்னகை வாடாமல்.

அவன் அலட்சியத்தைச் சுலபமாக மறுக்க முடிந்த அவளால், இந்தப் புன்னகையை மறுக்கவே முடியவில்லை. தன்னை மறந்து மலர்ந்த உதடுகளுடன், “ஆம் என்பது போலத் தலையை ஆட்ட, இவனோ வெற்றிக் களிப்பு வெளியே தெரியாதிருக்க,

“மிக நன்றி…” என்று இழுத்தவன், அப்போதுதான் கேட்பதுபோல,

“மன்னிக்கவேண்டும்… உங்கள் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா…” என்றான் ஆர்வம் போல. அவளோ மென் நகையைச் சிந்தியவாறு,

“மீநன்னயா…” என்றாள்.

“மீநன்னயாவா… புதிய பெயராக இருக்கிறதே. இதுவரை இத்தகைய பெயரை நான் கேள்விப்பட்டதில்லை…” என்று நிஜமான வியப்புடன் கூற, அதற்கும் அழகாய் சிரித்தவள்,

“ம்… புதிதுதான்… என் அன்னை திருக்குறளுக்கு விசிறி. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” இந்தக் குறள் என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்குமாம். அதுதான், எனக்கு மீநன்னயா அப்படி என்று பெயர் வைத்தார்களாம். மீ என்றால் ஏற்றம் மேன்மை என்று பொருள். நன்னயம் அப்படி என்றால், நன்மை, இன்சொல், இன்செயல் அப்படியென்று பொருள். யார் எந்தக் கெட்ட நோக்கத்தில் எதைச் செய்தாலும், அவர் வெட்கப்படுவது போலத் திரும்ப நன்மையையே செய்யவேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அவர்கள் சொல்வது மட்டுமில்லை, அப்படித்தான் வாழ்ந்தும் காட்டினார்கள். அதனால்தான் இந்தப் பெயரையும் எனக்கு வைத்தார்களாம்…” என்று கூற,

“ம்… மிக அழகான பெயர்… உங்களைப் போலவே… கூடவே புதுமையாகவும் இருக்கிறது…” என்றதும், அவனுடைய வாயிலிருந்து பாராட்டைக் கேட்டதும் ஏனோ மீநன்னயாவின் முகம் சிவந்து போனது. மீண்டும் அழகாய் வெட்கத்துடன் புன்னகைத்தவள்,

“நன்றி…” என்று கூற,

“நிஜத்தைத்தான் சொன்னேன்… அதற்கெதற்கு நன்றி…” என்று அவளோடு பேசியவாறே வாகனத்தின் அருகே வந்துவிட்டிருந்தான்.

வாகனத்தின் ட்ரங்கைத் திறந்து, அதில் அவளுடைய பொருட்களை வைத்தவன், அங்கேயிருந்த, முதலுதவிப் பெட்டியை இழுத்து எடுத்துக்கொண்டு முன்பக்கம் வந்தான்.

வந்தவன், முன் கதவைத் திறந்துவிட்டு,

“அமருங்கள் நன்னயா…” என்றான் இதமாய். மறுக்காமல் அவள் அமர்ந்ததும், அவளுக்கு முன்பாக ஒற்றைக் கால் மடித்து அமர்ந்து, கரத்திலிருந்த பெட்டியைத் திறந்து, அதை அவள் மடியிலேயே வைத்துவிட்டு, அவளுடைய கரத்தைப் பற்றித் திருப்பிப் பார்த்தான். இரத்தபோக்கு முன்னையதைப் போல இருக்கவில்லை. பெரும்பாலும் நின்றுவிட்டிருந்தது. திருப்திப் பட்டவனாக,

“ம்… இரத்தம் வடிவது நின்றுவிட்டது…” என்றவன், முதலுதவி பெட்டியிலிருந்த பொருட்களைக் கொண்டு அவளுடைய காயத்திற்குக் கட்டிட்டுவிட்டு, அவளுடைய கரத்தைத் திருப்பிப் பார்த்தான். முழங்கைதான் நன்றாகத் தேய்ந்திருந்தது.

அதையும் கவனமாகத் துடைக்க முயல, மருந்து கொடுத்த எரிச்சலில், மெல்லியதாய் முனங்கியவாறு கரத்தை இழுக்க முயல, அவனோ கரம் அசையாதவாறு மறு கரத்தால் பற்றி உதடுகளைக் குவித்துக் காயத்தின் மீது ஊத, ஊதிய காற்று காயத்தின் மீது பட்டதோ இல்லையோ, அவள் மீது தாராளமாகவே பட்டுச் செல்ல, ஏனோ மீநன்னயாவிற்கு அத்தனையும் அப்படியே நின்றுவிட்ட உணர்வு. தன்னை மறந்து இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனோ நிதானமாகக் காயத்தைத் துடைத்து, அதற்கும் கட்டுப்போட்டுவிட்டு, பெட்டியை மூடியவாறு அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ இமைக்காமல் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹே…” என்று அவன் அழைத்துப் பார்த்தும் அவள் அசைந்தாளில்லை.

“நன்னயா… யு ஓக்கே…” என்று குரலைச் சற்று உயர்த்தி அவன் கேட்க, அதுவரை தன்னை மறந்திருந்தவள், சுயம் பெற்றவளாகத் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து மலங்க மலங்க விழித்தாள். பின் அவன் கட்டுப்போட்டது நினைவுக்கு வர தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள்.

ஏனோ கண்கள் கலங்கிப் போயிற்று. என்னவோ தெரியவில்லை, யாராவது கொஞ்சம் அன்பு காட்டினாலும் அந்த அன்பை இறுகப்பற்றிக்கொள்ளச் சொல்கிறது மனம்.

அகத்தின் குழைவு முகத்தில் தெரிய அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“நன்றி…” என்றாள் கம்மிய குரலில். அவள் குரலில் தெரிந்த தளர்வைக் கண்ட அதகனாகரனுக்கும் உள்ளே மெல்லிய தவிப்புப் பிறக்கத்தான் செய்தது. தன்னை மறந்து அவளைத் தவிப்போடு பார்த்தவன்,

“மிகவும் வலிக்கிறதா… எதற்கும் நாம் வைத்தியரிடம் போய்விட்டு வரலாமா…” என்று அவன் கனிவோடு சொல்ல, இவளோ,

“ஐயையோ…! அதெல்லாம் தேவையில்லை மிஸ்டர் நிரஞ்சன்… இது சின்னக் காயங்கள்தான். தானாக ஆறிப் போகும்… தயவு செய்து என்னை என் இடத்தில் விட்டுவிடுங்கள். அது போதும். என்றதும், மறுக்காமல் ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தான் அதகனாகரன்.

ஏனோ தெரியவில்லை, அவளுடைய குரலைக் கேட்கும் போது உள்ளே என்னவோ செய்கிறது. இப்போதும் அவளுடைய அந்த நன்றியில் மயிர்க்கால்கள் எழும்பி நிற்கத்தான் செய்கின்றன. வியந்தவனாகத் தன் வாகனத்தை உசுப்பிவிட்டு, அவளைத் திரும்பிப் பார்த்து,

“நீங்கள் எங்கே போகவேண்டும்?” என்றான். இவள் விலாசத்தைச் சொல்ல, அடுத்த கணம் அவனுடைய வண்டி மீநன்னயாவின் விடுதியை நோக்கிப் பயணப்பட்டது.

What’s your Reaction?
+1
10
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!