Thu. Apr 3rd, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 4/5

(4)

இப்போதும் அந்தக் காட்சி மனதில் தோன்ற, உச்சக் கோபத்தில் உடல் நடுங்கியது. எத்தனை பெரிய துரோகம், அநியாயம்… சே… அவனுடைய அத்தானா இத்தகைய காரியத்தை வெட்கமின்றிச் செய்தார்.

அதுவும் அந்தப் பெண் தங்குவதற்காகத் தன் பெயரில் அந்த அறையை வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஒரு நாள் இரண்டு நாட்களில்லை. மூன்று மாதங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு முன்னூறு பவுன்ட் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கே இத்தனை பணம் என்றால், மூன்று மாதங்களுக்கும்… கொஞ்சம் கூடப் பணத்தை யோசிக்காது செலவழிக்கும் அளவுக்கு அவள் அந்தளவு முக்கியமானவளா. அத்தனை வசதியோடு அந்தப் பெண்ணை அங்கே அமர்த்த என்ன அவசியம்.

இதை யோசிக்க ஒன்றும் பிரமாதமான மூளை தேவையில்லையே. இந்த வகையறா உறவுகள் எத்தகையது என்று அறியாத அளவுக்கு அவன் ஒன்றும் குழந்தையில்லையே. நினைக்க நினைக்கத் தாளவில்லை அவனுக்கு. கூடவே ஆத்திரம் கனன்றுகொண்டு எரியத் தன் தலையை மறுப்பாக ஆட்டியவன்,

இல்லை இதைச் சும்மா விடக் கூடாது. நிச்சயமாக விடக் கூடாது… இருவரின் முகத்திரையையும் கிழித்தேயாகவேண்டும். எத்தனை  தைரியமிருந்தால்  என் சகோதரியை ஏமாற்றுவார்…’ ஆத்திரத்துடன் தன் கைப்பேசியை எடுத்து சகோதரியை அழைத்தான். முதலில் கண்களால், கண்டதை அப்படியே கொட்டிவிடத்தான் நினைத்தான்.

ஆனால் கணவன் மீது அதீத காதல் வைத்திருக்கும் மாதவி அதை நம்புவாளா என்பதையும் மீறி, உடைந்து போவாள். அதை நினைக்கும்போது இவனுடைய மனம் வலித்தது.

சிரமப்பட்டுத் தன் குரலில் ஆத்திரம் தெரியாதிருக்க அடக்கியவனாக, “உங்கள் கணவரோடு பேசினீர்களா… ஏதாவது சொன்னாரா?” என்றான் எரிச்சலுடன்.

“என் கணவரா… என்னடா… இது புதிதாக இருக்கிறது… எப்போதும் அத்தான் என்று அன்பாக அழைப்பாய்… இப்போது என் கணவன் என்கிறாய்…” என்று குழப்பத்துடன் கேட்க, ஒரு கணம் விழிகளை மூடி அமைதி காத்தான் அதகனாகரன். பின்,

“ப்ச்… அவர் உண் கணவர்தானே…” என்று எரிச்சலுடன் கூறியவன், பின் எதையோ நினைத்தவனாக,

“”கனடாவில் உள்ள என் தொழிற்சாலையில் சின்னப் பிரச்சனையாம் அக்கா… அத்தானை வந்து பார்க்கச் சொல்கிறாயா?” என்று இவள் கேட்க, மாதவிக்குக் கோபம் வந்தது.

“டேய்… என்னடா நீ… உன் அத்தான் சும்மாவா இருக்கிறார்… ஒற்றையாளாக எத்தனை பிரச்சனைகளைத்தான் கையாள்வது….? அவரோடு கதைக்கும்போது கேட்டேன்… அங்கேயும் ஏதோ பிரச்சனையாம்… அதைத் தீர்த்து முடித்ததும் வந்துவிடுவாராம். அனேகமாக இன்னும்  நான்கைந்து  நாட்களில் வந்துவிடுவார்…” என்றவர் பின் கவலை கொண்டவராக,

“பாவம்டா… குளிர் காலத்தில், தூசி வேறு ஒத்துக்கொள்ளாது. மூச்சிழுப்பில் அவதிப்படுவார்…” என்று கலக்கத்துடன் கூற, இவனுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

தகுதியில்லாத ஒருத்தர் மீது இத்தனை அக்கறைகொள்ள வேண்டியதில்லையே… அங்கே அவருடைய நலனுக்காக உரிமையுள்ளவள் கலங்கிக் கொண்டிருக்க, இங்கே இன்னொருத்தியின் மடியில் இன்பம் கண்டுகொண்டிருக்கிறார்… ஆத்திரத்துடன் அத்தனை கசப்பையும் ஒட்டுமொத்தமாக மென்று முழுங்கிவிட்டு,

“பின்னே இருக்காதா… எத்தனை பெரிய வேலையை ஒற்றை ஆளாகச் செய்துகொண்டிருக்கிறார்? சிரமமில்லாமல் இருக்குமா?” என்றான் ஏளனத்துடன். நல்லவேளை இவனுடைய ஆத்திரம் மாதவிக்குப் புரியவில்லை. உண்மையான வருத்தத்துடன்.

“ப்ச்… அவர் இல்லாமல் சிரமமாக இருக்கிறது ஆகரன்… பாவம்… சரியாகச் சாப்பிடுகிறாரோ இல்லையோ… இங்கே என் கையால் மட்டும்தான் சாப்பிடுவார். வெளிச்சாப்பாட்டில் அத்தனை நாட்டமில்லை அவருக்கு. கொலைப் பட்டினியாக இருப்பார்…” என்று அங்கலாய்க்க இவனுடைய தேகமோ அதீத ஆத்திரத்தில் நடுங்கத் தொடங்கியது.

பட்டினியா… அவரா…. ஹா ஹா… இங்கே ஒருத்தியோடு மூக்கு முட்டத் தின்று கூத்தடிக்கிறார். அது புரியாமல் கவலைப் படும் சகோதரியின் அப்பாவித்தனத்தை என்ன சொல்வது?. தன்னை மீறி எழுந்த ஆத்திரத்துடன்,

“அதிகம் அக்கறை கொள்ளாதே… அந்த மனுஷன் வக்கணையாக மூக்கு முட்டத் தின்று கொழுத்துப்போய்தான் இருக்கிறார்…” என்றான் சுள்ளென்று. மறுபக்கம் நீண்ட அமைதி நிலவியது. அப்போதுதான் அவசரப்பட்டு  வார்த்தைகளைத் துப்பியது உறைக்க, சற்றுத் தடுமாறுகையில்,

“என்ன சொன்னாய்?” என்றார். அவர் குரலில் அடக்கிவைத்திருந்த ஆத்திரம் தெரிய, அதை உணர்ந்தவனாக,

“இல்லை… எதற்காக அவருக்காக வருந்துகிறாய்… அவர் என்ன குழந்தையா நேரத்திற்குச் சாப்பிடாமல் இருக்க… பசித்தால் குழந்தை  கூடக் காத்திருக்காது… அவரும் ஒழுங்காகச் சாப்பிடுவார் என்று சொன்னேன்…” என்றான் சமாளிப்பாக. இப்போதும் மறுபக்கம் சற்று நேரம் அமைதி காத்தது. பின்,

“என்ன பிரச்சனை… ஆகரன்? நீ ஒரு போதும் இப்படி எடுத்தெறிந்து பேசும் ஆளில்லை. அதுவும் அத்தான் மீது அதீத மதிப்பு வைத்திருப்பன்… சொல்… ஏதாவது பிரச்சனையா” என்றாள் மாதவி கூர்மையா.

இதுதான் சகோதரி, பக்கென்று ஒன்றை வைத்து முக்கியப் புள்ளியைப் பற்றிக் கொள்வாள். இவனுடைய குரலையும், எடுத்தெறிந்து பேசிய விதத்தையும் வைத்து ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டாள் என்பது புரிந்தது. இப்போது அவரை எப்படிச் சமாளிப்பது? ஒரு கணம் தடுமாறியவன்,

“ப்ச்… நான் எதற்கு எடுத்தெறிந்து பேசப்போகிறேன். இங்கே… நாளைக்குப் போட்டி… அந்தப் பதட்டம் எனக்கு…” என்று அவன் கூற, இப்போதும் ஒரு விநாடி அமைதி மறுபக்கம் நிலவியது.

“ஃபாமியூலா வன் போட்டியில் கூடப் பதற்றப்படாத என் தம்பி, வெறும் இங்கிலாந்து கார்பந்தையத்திற்குப் பதற்றப்படுகிறான்… ஆச்சரியமாக இல்லை…?” என்று கேட்டுவிட்டுத் தம்பியின் பதிலை எதிர்பாராமல்கைப்பேசியை அணைக்க, இவனோ விழிகளை அழுந்த மூடிக் கைப்பேசியால் நெற்றியை ஒரு தட்டுத் தட்டித் தன்னையே திட்டிக்கொண்டான்.

அவசரப்பட்டு அந்தாளைப் பற்றி விசாரித்துச்  சகோதரியை  சந்தேகமடையச் செய்துவிட்டான். இனி தூங்காமல் அதையேதான் நினைத்துக்கொண்டிருப்பாள். மாதவிக்கு மட்டும் உண்மை தெரிந்தால்அவ்வளவுதான்… உயிரையே விட்டுவிடுவாள்… இல்லை… இது மாதவிக்குத் தெரியக் கூடாது… நிச்சயமாகத் தெரியக்கூடாது… அதனால், அவளுடைய கவனத்திற்கு வர முதல், நகர்த்தவேண்டும். எப்படி? எப்படி?. இத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் செய்த அந்தாளையும் சும்மாவிடக் கூடாது, அந்தப் பெண்ணையும் சும்மா விடக் கூடாது. திருமணம் ஆன ஆணுடைய  வாழ்க்கையில் நுழைந்தால் என்ன விபரீதம் எழும் என்பதை அந்தப் பெண்ணிற்குக் கற்பித்தேயாகவேண்டும். அப்பாவின் வாழ்க்கையில் நுழைந்த அந்தப் பெண்ணை எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது… இவன் அடிக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்த இரண்டு பேரும் வலியில் துடிக்கவேண்டும்.

முடிவு செய்தவனாக இருக்கையை விட்டு எழுந்தவன், வராத தூக்கத்தை இழுத்து வரவழைக்கும் நோக்கோடு கட்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்

(5)

மறுநாள், அவன் போட்டியில் பங்கேற்று அத்தனை வேகத்தையும்ஆத்திரத்தையும் தன் வாகனத்தை ஓட்டுவதில் காட்டி, எப்போதும் போல முதலாவது இடத்தைத் தட்டிக்கொண்டாலும், அந்த மகிழ்ச்சி இம்மியும்  அவனிடத்தே எழவில்லை. மனம் முழுவதும் அந்தப் பெண்ணும்ஜெயராமனும்தான் வியாபித்திருந்தார்கள்.

சற்றும் மகிழ்ச்சியில்லாமல் உடல் இறுக பற்களைக் கடித்துக்கொண்டு வாகனத்திலிருந்து வெளியே வந்தவனை, ஓடிவந்து அணைத்து வாழ்த்துக் கூறியபோதும் உள்ளே எப்போதும் எழும் பெருமை சற்றும் பிறக்கவில்லை. மாறாக வெறுமைதான் வியாபித்திருந்தது.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் பேட்டிக்கு முகம் கொடுத்துப் பதில்கொடுத்து வெளியே வருவதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. எப்போதும் கலகலத்துச் சிரித்தவாறு நகைச்சுவை இழையோடப் பதில் கொடுக்கும் கோதை அதகனாகரன் அன்று அமைதியாகப் பதில் கொடுத்தது மற்றவர்களின் புருவத்தை ஏற்ற வைத்தது என்னவோ உண்மைதான். அவனுடைய சக போட்டியாளர்கள் அவனை வாழ்த்தியபோதும், ஏனோ தானோ என்று கைகுலுக்க, அதில் ஒருவன்,

“ஹே… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்றபோதுதான் இவன் விழித்துக் கொண்டான். தன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைப் புரிந்து கொண்டவனாகஉடனே தன் பாவனையை மாற்றி,

“யா… யா… ஐ ஆம் ஓக்கே…” என்று எப்படியோ சிரித்து மாலை நடக்க இருக்கும் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று மன்னிப்பு வேண்டி, விடைபெற்று வெளியே வந்தபோது மாலையைக் கடந்தும் விட்டது.

அதன் பின் தன் விடுதிக்கு வந்து குளித்து முடித்துப் படுக்கையில் தொப்பென்று விழ, இவனுடைய கைப்பேசி அலறியது. எடுத்துப் பார்த்தால், அவனுடைய சகோதரிதான். அவனுடைய போட்டிபற்றிக் கேட்டு எடுக்கிறார் என்று எண்ணியவனாய் அதை உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி, “ஹலோ…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“அத்தானை இங்கிலாந்தில் கண்டாயா…” என்கின்ற அழுத்தம் நிறைந்த நேரடிக் கேள்விதான் சகோதரியிடமிருந்து வந்தது.

அந்தக் குரலைக் கேட்டவனுக்கு வயிற்றில் புலியைக் கரைத்தது. ஒரு வித தடுமாற்றத்துடன்,

“அக்கா… என்ன திடீர் என்று…” எனப் பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணற,

“கண்டாயா இல்லையா…?” என்றார் மாதவி அடக்கிய ஆத்திரத்துடன்.

அதற்கு மேல் மறைக்க முடியாதவனாக,

“ஆமாம்…” என்றான் இறங்கிய குரலில். சற்று நேரம் மறுபக்கம் அமைதி காத்தது. பின்,

“அவர்… அவர் கூட… ஒரு பெண்ணும் இருந்தாளா…?” என்று உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்க, இதற்கு என்ன பதிலைச் சொல்வான். இதுவரை அவன் சகோதரியிடம் எதேச்சையாகக் கூடப் பொய் சொன்னதில்லையே. அப்படியிருக்கும்போது எப்படிப் பொய்யுரைப்பான்? தவிர, அக்காவிற்கு இது எப்படித் தெரியும்? யார் சொல்லியிருப்பார்கள். அவளுக்குத் தெரியாமல்  இந்தப் பிரச்சனையை முறியடிக்கலாம் என்று பார்த்தால், யாரோ போய் வத்தி வைத்து விட்டார்களே.

“அக்கா… உனக்கு எப்படித் தெரியும்” என்றவனுக்குப் பேச்சு தடுமாற, மாதவியோ,

“நான் உன்னுடைய அக்காடா… இதுவரை அவரைப் பற்றி விசாரிக்காத நீ, விசாரித்தபோதே அது எனக்கு உறுத்தத் தொடங்கிவிட்டது… அதுவும் இதுவரை அவரை மதிப்போடு பேசிப் பழகியவன் நீ, முதன் முறையாக அவரைப் பற்றிப் பேசியபோது உன் குரலில் இருந்த அலட்சியத்தைக் கண்டேன்… அதனால் ஏதோ உன்னை உறுத்துகிறது என்பதையும் புரிந்துகொண்டேன். விசாரித்தேன்… நிறைய விசாரித்தேன்… அவர்  அமெரிக்காவில் இல்லை என்பது தெரிந்தது. கூடவே அவர் இங்கிலாந்து சென்றிருப்பதும் தெரிய வந்தது. இதுவரை எனக்கு மறைத்து எதையும் செய்யாதவர் முதன் முறையாக… இப்படி… திருட்டுத் தனமாக…” என்ற மாதவிக்கு அதற்கு மேல் பேச்சு எழவேயில்லை. தொண்டை அடைக்க, குரல் கமறச் சிரமப்பட்டு அழுகையை அடக்க முயல, அதை இங்கிருந்தே புரிந்துகொண்டான் அதகனாகரன். சகோதரிக்காகத் துடித்தவனாய்,

“த… தயவு செய்த அழாதே அக்கா… தீர்க்க முடியாத பிரச்சனை என்று உலகில் எதுவும் கிடையாது. இதை நான் பார்த்துக் கொள்கிறேன்… வருந்தாதே…” என்று சமாதானப்படுத்த முயல, அவனுடைய சமாதானம் மாதவிக்கு வேண்டியிருக்கவில்லையோ. ஆத்திரத்துடன் ஆழ மூச்செடுத்துத்  தன்னைச் சமாளித்தவர்,

“நான் எதற்கு வருந்தவேண்டும்… என்னை வேண்டாம் என்றுவிட்டு ஒரு பெண்ணோடு போன அவர் அல்லவா வருந்தவேண்டும்?” என்று சீறியவர்,

“அவரைச் சும்மா விடக் கூடாது ஆகரன்… சும்மா விடவே கூடாது. ஓட ஓட விரட்டவேண்டும்… இங்கே குடும்பம் குழந்தைகள் என்று இருக்கும்போதுவேறு ஒரு பெண்ணைத் தேடிச் சென்ற அந்தாள் நிம்மதியாகவே இருக்கக் கூடாது… இதோ பார்… நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது, அந்தாள் செய்த தவற்றை எண்ணி எண்ணித் துடிக்க வேண்டும்… செய்வாயா?” என்று ஆணித்தரமாகக் கடுமையாகக் கேட்க, இவனும் இறுக்கத்தோடு நின்று கொண்டான். அவனும் சற்று முன் இதைத்தானே யோசித்தான். அவன் யோசித்ததையே சகோதரியும் சொல்கிறாளே.

“நிச்சயமாக அக்கா… அத்தானை விட, முதலில் அந்தப் பெண்ணைத்தான் ஏதாவது செய்யவேண்டும். ஒருத்தன் வசதியானவன் கிடைத்தால் போதுமே… உடனே யார் எவர் என்றும் பார்க்காமல் மயக்கிவிடவேண்டியது…” என்று சீற, மாதவியோ,

“நிறுத்துடா உன் பேச்சை… உடனே பெண்கள் மீது தவற்றை  போடவிடுவீர்களே… பன்னிரண்டு வருடங்கள்… பன்னிரண்டு வருடங்களாக அவருக்கு ஒரு நல்ல மனைவியாக இருந்திருக்கிறேன். அவர் குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன்… இன்றுவரை அவருக்குத் தெரியாமல் ஒரு துரும்பைக் கூட நான் அசைத்ததில்லை… அப்படிப்பட்ட என்னையே ஏமாற்றத்  துணிந்தவர்அந்தப் பெண்ணை ஏமாற்றியிருக்கமாட்டார் என்று என்ன நிச்சயம்? என்னை நம்பிக் கழுத்தறுத்தது போல அந்தப் பெண்ணிடம் என்ன, என்னவெல்லாம் சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறாரோ… அந்தப் பெண்ணுக்கு என்ன துன்பமோ. எந்த இக்கட்டான நிலையில் அவருடைய ஆசைக்கு அடிபணிந்தாளோ… கட்டாயத்திற்காக, இப்படி நடக்கிறாளோ? நமக்குச் சுலபமாகத் தவறுகளைப் பெண்களின்மீது போட்டே பழகிவிட்டது அல்லவா…” என விரக்தியுடன் சொல்ல, இவனோ,

“அடேங்கப்பா, அந்தப் பெண்ணின் மீதுதான் எத்தனை கரிசனம். நீ ஒன்றை மறந்துவிட்டாய்? நம்மைப் பெற்றாரே ஒருத்தர், அவரைத் தன்னிலை இழக்க வைத்தது ஒரு பெண் என்கிறதை மறந்துவிடாதே…” என்றான் இவன் எரிச்சலுடன். அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்த மாதவி,

அவள்தான் மயக்கினாள் என்றால், இவருக்கு எங்கே போனது புத்தி?

“நீ உன் இனத்தை விட்டுக்கொடுப்பாயா என்ன? நீ என்னதான் சொன்னாலும்என்னால் அந்தப் பெண்ணை மன்னிக்கவே முடியாது…” என இறுகிய குரலில் சொல்ல, மாதவியோ,

“எது எப்படியாக இருந்தாலும், அந்தாள் நிம்மதியாக இருக்கக் கூடாது ஆகரன். நினைத்து நினைத்துத் துடிக்கவேண்டும்… நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. இருவரும் செய்த தவறுக்குத் தண்டனை அடைந்தே ஆகவேண்டும். குறிப்பாக, உன் அத்தான். என் நம்பிக்கையை முற்று முழுதாக அழித்த அவர் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது…” என அத்தனை வலி உணர்ச்சிகளையும் கொண்டவராய் குரல் கம்மக் கூற, இவனோ தன் உயரத்திற்கு ஏற்ப நிமிர்ந்து நின்றவாறு, கண்களில் தீப்பொறி பறக்க, சீற்ற மூச்சு வெளிப்பட,

“டோன்ட் வொரிகா… ஐ நோ ஹௌ டு ஹான்டில் திஸ்… நான் பார்த்துக் கொள்கிறேன்… அத்… உன் கணவரும் சரி, அந்தப் பெண்ணும் சரி, உயிரோடு இருக்கும் வரைக்கும் தாங்கள் செய்த தவறை நினைத்து நினைத்துக் கதற விடுகிறேன்…” என்று கூறுவிட்டுத் தன் கைப்பேசியை அணைத்த அதகனாகரனின்  முகம் பழிவெறியில் விகாரமாக மாறிப்போனது.

முதலில் அந்தப் பெண்ணை ஜெயராமிடமிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு முதல் ஜெயராம் இங்கிருந்து செல்லவேண்டும். எப்படியும் ஒரு கிழமையில் கனடா வருவதாகத்தான் அக்காவிடம் கூறியிருக்கிறார். அதுவரை அவன் காத்திருக்கவேண்டும். வேறு வழியில்லை. இப்போது உடனே கனடா வருமாறு அழைத்தால் தேவையில்லாத சந்தேகங்கள் எழ நேரிடும். அது இவனுடைய திட்டத்திற்குத்தான் ஆபத்து. காத்திருக்கலாம். இன்னும் ஒரு கிழமைதானே. அதற்குப் பிறகு வைக்கிறேன் செக். என்று எண்ணியவன்அடுத்து என்ன செய்யவேண்டும் என்று பட்டியலிடத் தொடங்கினான்.

What’s your Reaction?
+1
17
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!