Sat. May 24th, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 48/49

(49)

மீநன்னயாவிற்கு, அதகனாகரனை நினைக்க நினைக்கத் தாளவில்லை. அவன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான். இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்ததும், இவள் மன்னித்து அவனை ஏற்றுக்கொள்வாள் என்றா? மன்னிக்கும்படியான காரியத்தையா செய்திருக்கிறான். அன்று லண்டனிலிருந்து குடியுரிமை ஆணையத்திலிருந்து காவலர்கள் வந்திருக்கிறார்கள் என்றதும் எப்படி அரண்டு போனாள். எப்படியெல்லாம் திட்டமிட்டு அவளை நம்ப வைத்துக் கழுத்தறுத்தான். இதில் திருமணம் வேறு… இப்போது நினைத்தாலும் நெஞ்சம் வரை தீயாக எரியத்தானே செய்கிறது. இதில் அவனை உடனே மன்னித்து ஏற்றுக்கொள்ளவேண்டுமாக்கும். யாரைப் பயங்காட்ட இந்த நாடகம். எரிச்சலோடு எண்ணியவள் அதற்குப் பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை.

மறுநாள் விடியும் போதே அதகனாகரன் புறப்பட்டு விட்டான் என்கிற செய்திதான் காதில் வந்து விழுந்தது.

அடுத்த ஒரு கிழமை எந்தச் சிக்கலும் இல்லாமல் அழகாகவே பயணித்தது. அன்று சனிக்கிழமை. பூங்கோதையும், புகழேந்தியும் தொலைக்காட்சியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, இவளும் மாதவியும் சமையலுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். ஜெயராம் அலுவலக அறையிலிருந்து ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்க, திடீர் என்று,

“அம்மா…. மாமா…” என்று குதுகலத்துடன் அழைக்க, சமையல் வேலையிலிருந்த மாதவி,

“தம்பி வந்துவிட்டானா…?” என்கிற ஆரவாரத்தோடு தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு முன்னறைக்கு ஓடி வந்தார்.

“இல்லைம்மா… தொலைக்காட்சியில்…” என்று குடும்ப அறையிலிருந்து புகழேந்தி குரல் கொடுக்க,

“தொலைக்காட்சியிலா…” என்றவாறு யோசனையுடன் குடும்ப அறைக்குப் போக, மீநன்னயாவும், தன் வேலையை அப்படியே விட்டுவிட்டுத் தன்னை மறந்து குடும்ப அறை நோக்கி நடக்க, அங்கே எழுபது அங்குலத் திரையில் புன்னகைத்தவாறு நின்றிருந்தான் அதகனாகரன்.

ஏதோ கார்பந்தையப் போட்டிக்குத் தயாராகி நின்றிருந்தான் போல, வெள்ளையும் சிவப்பும் கலந்து தோள்களின் இரு பக்கமும் கனடிய அடையாளமான மேப்பில் இலையின் சின்னம் பொறிக்கப்பட்டு, கர இடுக்கில் தலைக்கவசத்தைச் சுமந்தவாறு சிரித்துக்கொண்டிருந்தான். அதே போல வேறு நாட்டிலிருந்து வந்த பந்தய வல்லுநர்களும் அவ்வாறே நின்றிருந்தனர்.

“இந்தப் போட்டி எங்கேடா நடக்கிறது?” என்று மாதவி உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்க,

“அம்மா இது பைக்ஸ் பீக் (Pikes Peak)…” என்றதும் அதிர்ச்சியில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார் மாதவி.

“எ… என்னடா சொல்கிறாய்… ‘பைக்ஸ் பீக்’கா” என்றவர் அடுத்தக் கணம், “ஜெய்…” என்று தன்னை மறந்து அலற, அலுவலக அறையில் முக்கிய வேலையாக இருந்த ஜெயராம் மனைவியின் குரல் கேட்டுத் தன் கோபம் எல்லாவற்றையும் மறந்தவராக ஓடி வந்தார்.

அது வரை இருக்கையில் அமர்ந்திருந்த மாதவி, தன் கணவனைக் கண்டதும், பாய்ந்து அவரை நோக்கிச் சென்று கணவரின் கரங்களைப் பற்றி,

“அங்கே பாருங்கள் ஜெய்… நம்முடைய ஆகரனை… பைக்ஸ் பீக் போட்டிக்காகப் போயிருக்கிறான்… ஐயோ… நான் என்ன செய்ய…” என்று அழத் தொடங்க, ஜெய்ராம் தன் கோபத்தை மறந்து தன் மனைவியை அணைத்தவாறு யோசனையுடன் திரையைப் பார்த்தார்.

மீநன்னயாவொ, புரியாத குழப்பத்துடன் மாதவியையும் ஜெயராமையும் பார்த்துவிட்டுக் குனிந்து ஆர்வத்துடன் திரையைப் பார்த்துக்கொண்டிருந்த தன் மருமக்களை நெருங்கி,

“டேய்… பை்க்ஸ் பீக் என்றதும் எதற்கு அம்மா அழுகிறார்கள்…. பைக்ஸ் பீக் என்றால் என்ன?” என்று குழப்பத்துடன் கேட்க, குதுகலத்துடன் திரும்பி தன் சகோதரியைப் பார்த்த புகழேந்தி,

“இது தெரியாதா அக்கா உங்களுக்கு… பைக்ஸ் பீக் என்கிறது ராக்கி மலைகளின் தெற்கு முன்னணித் தொடரின் உள்ள பிராந்தியம். இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 14115 அடி உயரத்தில் இருக்கிறதுக்கா. இங்கே கார் பந்தயம் மிகப் பிரசித்தம். அது மிக ஆபத்தான விளையாட்டும் கூட. இதைப் பைக்ஸ் பீக் இன்டர்நேஷனல் ஹில் க்ளைம்ப் (PPIHC) அல்லது The Race to the Clouds அப்படி என்றும் சொல்வார்கள். இந்த விளையாட்டு மிக ஆபத்தானது மட்டுமில்லை, சுவாரசியமுமானது. இந்தப் போட்டி, வேகமாக வாகனத்தைச் செலுத்தி கொலராடோவில் உள்ள பைக்ஸ் சிகரத்தின் உச்சிக்குப் போகவேண்டும். இது வருடா வருடம் நடக்கும் ஒரு விளையாட்டு தெரியுமா… இந்த விளையாட்டில் கரணம் தப்பினால் மரணம்தான். ஏன் என்றால் இந்த மலைச் சாரலில் கண்ணுக்குத் தெரியாத திருப்பங்கள் மட்டும் 156. அதிகம் இங்கே வாகனங்களை ஓட்டிப் பழகியவர்களுக்குத்தான் அந்தத் திருப்பங்களைக் கண்டறிய முடியும். புதிதாக ஓடுபவர்களுக்கு மிக மிகச் சிரமம்.” என்று கூற, மீநன்னயாவுக்கு உடலிலிருந்து இரத்தம் வடிந்து செல்வது போலாயிற்று.

அதிர்ச்சியில் பேச்சற்றவளாகத் திரையை வெறிக்க, இப்போது திரையில் வேறு வேறு ஓட்டப்பந்தைய வீரர்கள்  வந்து போனார்கள். அடுத்து ஸ்பெயின் நாட்டு வீரர் கார் பந்தயத்திற்குத் தயாராக, அவர் தலைக்குக் கவசம் அணிந்தவாறு வாகனத்தின் உள்ளே அமர்ந்தார். வாகனத்தின் உள்ளே ஒளி மற்றும் ஒலிவாங்கி பொருத்தப்பட்டிருந்ததால், திரையில் அவர் செய்வது அனைத்தும் நேரலையாகத் தெரிந்தது.

அவர் வாகனத்தை எடுத்ததும், மீநன்னயா இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, ஒரு மணி நேரத்திற்கு 20 கிலோமீட்டர் போகவேண்டிய பாதையில் நூறுக்கும் மேலாக அந்த வாகனம் பயணப்பட, அடுத்துத் திடீர் என்று வந்த திருப்பத்தில் அந்த வாகனம், கிட்டத்தட்ட 60 பாகை சரிவிலிருந்த மலையின் முனையைத் தொட்டு நேராகிப் பின் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்கியது. அதைக் கண்ட மீநன்னயாவிற்கு மயக்கமே வரும்போலத் தோன்றியது.

கடவுளே… இந்தப் பாதையிலா அவன் ஓடப் போகிறான். இவனுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது. உடல் நடுங்க, இதயம் தன் வேகத்தை அதிகரிக்கப் பதட்டத்தோடு திரும்பி மாதவியைப் பார்க்க, மாதவியும் ஜெயராமின் அணைப்பில் நடுங்கிக்கொண்டிருந்தார்.

அடுத்த கணம் எழுந்தவள், தன் நிலையையும் பொருட்படுத்தாமல் படு வேகமாகத் தன் அறை நோக்கி ஓடியவள், அங்கே மின்னூட்டப்பட்டிருந்த கைப்பேசியை நடுங்கும் கரங்களைக் கொண்டு அதகனாகரனுடன் தொடர்பு கொள்ள முயன்றாள். அவள் கரங்கள் நடுங்கிய நடுக்கத்தில் கைப்பேசி தரையில் விழுந்தது.

வியர்த்துக் கொட்டப் புறங்கையால் வியர்வையைத் துடைத்தவள். அவனுடைய கைப்பேசியின் இலக்கத்தை அழுத்தினாள்.

முதல் அழைப்பு, இரண்டாம் அழைப்பு மூன்றாம் அழைப்பு… அவன் எடுக்கவில்லை.

“கமான்…” என்றவளுக்கு அழுகை வேறு வந்தது. இல்லை… அவன் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது. நிச்சயமாகக் கலந்து கொள்ளக் கூடாது… மீண்டும் மீண்டும் அழைக்க, ஒரு கட்டத்தில் அவளுடைய அழைப்பை எடுத்தான் அதகனாகரன்.

“நன்னயா… ஆர் யு ஓக்கே…” என்கிற அவனுடைய பரபரப்புக் குரலைக் கேட்டவளுக்கு அடிவயிற்றிலிருந்து பெரும் வலி கிளம்பி நெஞ்சில் வந்து முட்டிக் கொள்ள.

“என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்… என்ன தைரியமிருந்தால் அந்தப் போட்டியில் கலந்து கொள்வீர்கள்… இங்கே எங்களைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்தீர்களா… அம்மா உங்களைத் திரையில் கண்டதும் எப்படித் துடித்துப் போனார்கள் தெரியுமா… மரியாதையாகச் சொல்கிறேன்… அந்தப் போட்டியிலிருந்து விலகிவிடுங்கள்…” என்று அழுகையும் ஆத்திரமுமாகக் கிட்டத்தட்டக் கத்த,

“ஹே.. ரிலாக்ஸ்… இப்போது எதற்கு இத்தனை பதட்டம்… திடீர் என்று விலகிவர இது என்ன கூட்டமா… போட்டிமா… ஒப்பந்தம் செய்திருக்கிறேன். விலக முடியாது…” என்று அவன் முடிக்கவில்லை,

“மண்ணாங்கட்டி ஒப்பந்தம்… ஒப்பந்தத்தை மீறினால் என்னாகும்… நட்ட ஈடு கேட்பார்கள்… அதைக் கொடுக்க உங்களால் முடியாதா… தயவு செய்து இந்த விஷப்பரீட்சை வேண்டாம் அதகன்… வந்துவிடுங்களேன்… இதோ பாருங்கள்… வேண்டுமானால் இந்த விவாகரத்து வேண்டாம் என்று சொல்கிறேன்… ப்ளீஸ்…” என்றவளுக்கு அப்போதுதான் தெரிந்தது அவனுடைய கைப்பேசியின் இணைப்பு அறுந்துவிட்டது என்று.

“ஐயோ…! அணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதே…” மீண்டும் அவனோடு பேச அவள் முயல்கையில்,

“இதோ.. இப்போது மாமா வாகனத்தை ஓட்டப் போகிறார்…” என்கிற புகழேந்தியின் குரல் கேட்டுப் பதறியவாறு வெளியே ஓடிவந்தாள் மீநன்னயா.

அழுகையும் வேதனையும் ஏமாற்றமும் ஒன்று சேரப் படிகளில் இறங்கி குடும்ப அறைக்கு வந்து எட்டிப் பார்க்க, அங்கே கைகளை ஆட்டியவாறு புன்னகைத்தவனைத் திரை நெருக்கத்தில் காட்ட, அதை உணர்ந்தவன் போல, இரண்டு விரல்களை உதட்டில் பொருத்தி உயர்த்திக் காட்டியவன், ஒற்றைக் கண் அடித்து,

“ஐ லவ் யு பேபி…” என்றுவிட்டு வேகமாகக் கவசத்தை முகத்தில் போட்டு மின்னல் விரைவுடன் வாகனத்திற்குள் அமர, அடுத்து அவன் வாகனத்தின் உள்ளே அதன் முன் புறம் காட்டப்பட்டது. அதில் அவனுடைய முகம் தெரியாவிட்டாலும், ஓட்டத்திற்குத் தயார் என்பது போல,

“ஐ ஆம் ரெடி…” என்று கூற, ஐந்திலிருந்து ஒன்று வரை அவனுக்கு முன்னாலிருந்த இலக்கங்கள் மாறத் தொடங்க, மூன்று இரண்டு ஒன்று, என்றதுதான் தாமதம் அதகனாகரனின் வாகனம் சீறிப் பாயத் தொடங்கியது.

80, 90,120,130,140,150,160km/hr என்கிற வேகத்தில் அவன் வாகனத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்க, இங்கே திரையில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் அடிவயிறு அச்சத்தில் சுண்டி இழுக்கத் தொடங்கியது.

வேகமாகப் பாய்ந்த அந்த வாகனத்தின் முன்னால், திடீர் என்று ஒரு திருப்பம் வர, அதற்கேற்பத் தன் வாகனத்தைத் திருப்ப, அது சரிவின் முடிவை முத்தமிட்டுச் சுழன்று நேராகி மீண்டும் வாகனம் தன் வேகத்தை அதிகரித்தது. மீண்டும் ஒரு திடீர் திருப்பத்தில், சில்லுகள் சீறிப் பாய்ந்து திரும்பிய திரும்பலில் அந்த வாகனத்தைச் சுற்றிப் புகை மண்டலம் போல மணல் தூசி மறைத்துக் கொள்ள, அதையும் தாண்டிச் சீறி வெளியேறியது அவனுடைய வாகனம். எப்படியோ 134ஆவது கண்ணுக்குத் தெரியாத திடீர் திருப்பங்களைப் பார்ப்போர் நுனி இருக்கையில் இருந்து பார்க்குமாறு ஓட்டியவனின் வாகனத்தின் வேகம் மேலும் முன்னேற, 135 ஆவது திருப்பத்தில்தான் அது நடந்தது.

ஆம் படு வேகமாகப் பாய்ந்த வாகனம், எல்லை மீறிய திருப்பத்தில் தன் கட்டுப்பாட்டை இழக்க, சற்றும் எதிர்பாராத தருணத்தில் அது சரிவிலிருந்து கீழே உருண்டு புரண்டு விழத் தொடங்க, அதைத் திரையில் பார்த்துக்கொண்டிருந்த மீநன்னயாவுக்கு அந்தக் காட்சி கொடுத்த அதிர்ச்சியை மூளை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்காலிகமாகச் செயல்பாட்டை இழக்க, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

(50)

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவளுக்குச் சற்றும் நினைவிருக்கவில்லை. யாரோ எங்கோ இழுத்துச் சென்றது மட்டும் நினைவுக்கு மங்கலாக வந்தது. அடுத்தது விமானம் ஏறி ஒரு மருத்துவமனைக்கு வந்தார்கள். ஏதேதோ யார் யாரோடோ எவர் எவரோடோ பேசினார்கள். என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்று சுத்தமாக நினைவில்லை.

பிறகு அவளை அழைத்துச் சென்றார்கள். ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே படுக்கையில் உடல் முழுவதும் குழாய்கள் பூட்டப்பட்டிருந்த ஒரு உருவத்தைக் காட்டி அதுதான் அதகனாகரன் என்றார்கள்.

சும்மா ஒரு பொருளைக் காட்டி அதுதான் அதகனாகரன் என்றால் அவள் நம்பிவிட முட்டாளா என்ன? அப்போது அவளுக்குக் கோபம்தான் வந்தது.

எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தபோது மாதவி சத்தம் வெளியே வராதவாறு விம்மிக்கொண்டிருக்க, ஜெயராமும் கன்னத்தில் கண்ணீர் வழிவது கூடத் தெரியாமல் படுக்கையில் கிடந்தவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

எரிச்சலுடன் இருவரையும் பார்த்தவள்,

“உங்கள் இருவருக்கும் பைத்தியமா..?. என் அதகனாகரன் இப்படியா இருப்பான்… அவன் கம்பீரமாக…. ம்கூம்… இது அவரில்லை… இப்போது அதகன் எங்கே… அவரோடு நான் பேசினால் நிச்சயமாக எல்லாப் பிரச்சனையும் சரியாகும்…” என்று நம்பிக்கையில் சொன்னவளை உடைந்து போய்ப் பார்த்தார் ஜெயராமன்.

“ஓ… நான் என்ன செய்வேன்” என்றவர் தன் மகளை இழுத்து அணைத்து அவளுடைய தலையில் தன் உதடுகளைப் பொருத்தி விம்ம, நன்னயாவிற்கும் அதுவரையிருந்த குழப்பம் மறைந்து அழத் தொடங்கினாள்.

“அப்பா… இது அவரில்லை… நம்புங்கள்பா… இப்படிச் சுயநினைவில்லாமல் படுத்திருக்க அவருக்குத் தெரியாது… இவர்கள் தவறுதலாக எதையோ போட்டுக் குழப்புகிறார்கள்… நிச்சயமாக அதகனுக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று இன்னும் அவன் தன்னவன்தான் அது என்கிற நம்பிக்கை இல்லாமல் அவள் உளற, புரிந்துபோனது, அந்த விபத்து கொடுத்த அதிர்ச்சியில் அவள் குழம்பிப்போய் இருக்கிறாள் என்று.

உடனே தன் மகளின் முதுகை வருடிக் கொடுத்தவர்,

“சரிமா… சரிமா… அவனுக்கு ஒன்றுமில்லை… எந்தப் பிரச்சனையும் இல்லை…” என்றவர் அவளை வெளியே அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைக்க, இப்போது மீநன்னயாவின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது.

“அப்பா… அவர் சொன்னபோது நான் நம்பவில்லை… உயிரோடு இருக்கும்வரை விவாகரத்துத் தரமாட்டேன் என்று சொன்னார்பா… அப்போது கூடக் கோபத்தில் கடலலை ஓய்ந்தபின்தான் குளிக்கலாம் என்றால், எப்போது குளிப்பது என்று கூடக் கேட்டேன்… அதற்குச் சுனாமி வரும்போது கடல் அமைதியாக இருக்கும் அப்போது குளி என்றார்… அப்போது கூட, எதுக்குச் சுனாமி என்னையும் இழுத்துச் செல்லவா என்று கேட்டேன். அப்போது ஒரு சிரிப்புச் சிரித்தார்பா. அந்த நேரத்தில் அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் புரியவில்லை. இப்போது புரிகிறபோது எனக்குத் தாளவில்லையே… நான் என்ன செய்யட்டும்… கடவுளே… இப்படியாகும் என்று  தெரிந்திருந்தால், பாழாய்ப்போன அந்த மன்னிப்பைக் கொடுத்துத் தொலைத்திருப்பேனே. அவரை ஏற்றுக்கொண்டிருப்பேனே… உயிரை விட என் கோபமும் அகந்தையுமா பெரிது… அது ஏன் அந்த நேரத்தில் எனக்குப் புரியவில்லை… அப்போது மரணம் பற்றிப் பேசும்போது அலட்சியமாக நினைத்தேன். ஆனால் அதை அனுபவிக்கும்போது… ஐயோ… தாளவில்லையே…” என்று விம்மியவள், நெஞ்சம் பிழியத் தந்தையைப் பார்த்து,

“அதகனுக்கு ஒன்றென்றால் நான் என்ன செய்யட்டும்பா… என் வாழ்க்கையே தொலைந்து போகுமே… அவர் இல்லாத உலகத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லையே… நினைக்கும் போதே நெஞ்சம் நடுங்கிப் போகிறதே… இல்லை… இல்லை… அவருக்கு ஒன்றுமாகாது… நிச்சயமாக ஒன்றுமாகாது…” என்றவளைத் தேற்றும் வழி தெரியாது தவித்துப் போய் நின்றார் ஜெயராமன்.

இந்தச் சிறுவயதில் எத்தனை வலிகளைத்தான் அவள் தாங்குவாள். கடவுளே… அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா… ஊரில் முகாமில் அநாதைபோல இருக்கிறாள் என்றுதானே இங்கே அழைத்து வந்தார்… வந்த இடத்திலும் அவளுக்கு நிம்மதியில்லை என்றால்…

பெரும் வேதனையுடன் தன் மகளை அணைத்து வருடிக்கொடுக்க மட்டும்தான் அப்போதைக்கு ஜெயராமனால் முடிந்தது.

அது அவசரச்சிகிச்சைப் பிரிவு என்பதால், மாதவியும் அழுது அழுது களைத்துச் சோர்வுடன் வெளியே வர, ஜெயராமன் தன் கோபம் அத்தனையையும் ஓரத்தில் போட்டுவிட்டுப் பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்து, மறு கரத்தை விரித்துப் பிடிக்க, மறுக்காமல் அந்தக் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்து மறு தோளில் தன் தலையைச் சாய்த்தார் மாதவி.

மெதுவாகத் தன் மனைவி பக்கமாகக் குனிந்தவர்,

“எல்லாம் சரியாகும் மாது… கவலைப் படாதே… நம் ஆகரன் ஃபீனிக்ஸ் பறவை போல. எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து வருவான். ஏற்கெனவே மூன்று முறை விபத்தைச் சந்தித்து மீண்டு வரவில்லையா. அதுபோலத்தான் இதுவும். எழுந்து வந்துவிடுவான்… நம்பு…” என்று மென்மையாகக் கூற, நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த கணவனின் அரவணைப்பில் உள்ளம் திடம் பெற தன் தம்பிக்காக இறைவனிடம் வேண்டத் தொடங்கினாள் மாதவி.

திடீர் என்று,

“அதகனாகரன் குடும்பம் யாராவது இருக்கிறீர்களா…” என்கிற ஒரு குரல் கேட்க மூவரும் திடுக்கிட்டு நிமிர, உடனே ஜெயராமன் பெண்களை விடுவித்துவிட்டு எழுந்து நின்றார். அடுத்து நீல மருத்துவ ஆடைக்கு மேல், வெள்ளை அங்கி அணிந்த வைத்தியர் இவர்களை நோக்கி வர மூவரும் வாய்வரை வந்து துடித்த இதயத்தை உணர்ந்தவாறே அவரைப் பார்க்க,

“உட்காருங்கள்…” என்று விட்டுச் சற்றுத் தள்ளியிருந்த இருக்கையை இவர்களுக்கு அருகில் போட்டுவிட்டு மென்மையாக மூவரையும் பார்த்தார்.

“ஹாய்… ஐ ஆம் டாக்டர் ஃப்ருட்மன்…” என்றவர், நடந்த விபத்தில் அவன் எப்படி அடிபட்டான்… எப்படி எப்படி அவனுக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டது, என்ன என்ன சிகிச்சை மேற்கொள்ளப்படப் போகிறது அவன் சந்திக்க இருக்கும் ஆபத்துக்கள் என்ன, என்ன விடயங்கள் சிக்கலில்லாமல் இருக்கிறது… எது எது சிக்கலாக இருக்கிறது…” என்று விலைவாரியாக வைத்தியருக்கே உரிய குரலில் மென்மையாகக் கூற, அவர் கூறிய ஒவ்வொன்றும் அந்த மூவரின் உயிரையும் மெல்ல மெல்லக் குடிப்பதற்கு ஏதுவாக இருந்தது.

இறுதியாக,

“நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டுதான் இருகிறோம்… நாங்கள் நல்லதையே நினைக்கலாம்…” என்றதும், கலக்கத்துடன் அவரைப் பார்த்த ஜெயராம்,

“அவனுக்கு.. அவன்… பிழைப்பான் தானே…” என்றதும், அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கிய வைத்தியர்,

எங்களால் முடிந்த சிறந்த மருத்துவத்தைத்தான் நாம் பார்க்கிறோம்… அவர் பிழைக்க வாய்ப்பகள் உண்டு…” என்று அவர் கூறிவிட்டு விலகப் புரிந்துபோனது அவனுடைய நிலை.

அப்படியானால் வாய்ப்புகள் குறைவு என்றுதானே அர்த்தம். விம்மி வெடித்துக்கொண்டு வந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்ட மீநன்னயா, தன் கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டுத் தந்தையை விட்டு விலகி, வேகமாக வைத்தியரிடம் செல்ல, சத்தம் உணர்ந்து திரும்பிப் பார்த்தார் வைத்தியர்.

“டாக்டர்… நான்… நான் அவருடைய மனைவி… அவரை நான் பார்க்கவேண்டும்…” என்று கலங்க, அவளைப் பரிதாபமாகப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ,

“கம் வித் மி…” என்று விட்டு நடக்கத் தொடங்க, கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு அவர் பின்னால் செல்ல, அவரே அழைத்துச் சென்று அவளை அதகனாகரனின் அருகே விட்டுவிட்டு,

“ஐந்து நிமிடங்கள் மட்டும்தான் நீங்கள் உள்ளே நிற்கமுடியும்…” என்று கூறியவாறு வெளியேற, அவருக்கு நன்றி கூறிவிட்டுத் தன் கணவனைப் பார்த்தாள்.

உடல் முழுவதும் ஏதேதோ பூட்டியிருக்க, அவன் முகம் கூட அவளுக்குத் தெரியவில்லை. இதில் அவனோடு என்னவென்று பேசுவாள். மீண்டும் கால்கள் துவளத் தொடங்க, தன்னை நிலைப்படுத்துபவளாக அவனுடைய கட்டிலைப் பற்றியவாறு நின்றாள் மீநன்னயா.

அவனுக்குப் பூட்டப்பட்டிருந்த இயந்திரத்தின் டீ டீ ஒலியையும் மீறி அவளுடைய இதயம் பயங்கரமாகத் துடித்தது. கூடவே பயப்பந்து அடிவயிற்றிலிருந்து எழுந்து உச்சந்தலையை அடித்தது. ஏனோ மயக்கம் வரும்போல தோன்றத் தன் தலையை உலுப்பியவள், ஓரளவு தன்னைத் திடப்படுத்தியவளாக, அவனை நோக்கிக் குனிந்தவள் சற்று வெளியே தெரிந்த நெற்றியில் தன் உதடுகளைப் பொருத்தி எடுக்க இரண்டு துளி கண்ணீர் அவனுடைய நெற்றியில் பட்டு வழிந்து சென்றது. தவிப்புடன் ஓரளவு தெரிந்த ஒற்றைக் கன்னத்தைப் பெருவிரலால் பட்டும் படாமலும் வருடிக் கொடுத்தவாறு,

“ஹே… இட்ஸ் மீ… உங்கள் நன்னயா…” என்றவள், மீண்டும் பொங்கிய கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு,

“ஐ ஆம்… சாரி… ரியலி… ரியலி சாரி… நான்… நான் தவறு செய்துவிட்டேன்…” என்றவள் வலியோடு சிரித்து,

“உங்களுக்கு ஒன்’று தெரியுமா… நான் விவாகரத்தை மீளப் பெறப்போகிறேன்… அதற்கான அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதுதானே… நீங்கள் மீண்டும் என்னிடம் திரும்பி வரவேண்டும்… வந்தே ஆகவேண்டும்…” என்றவள் சிரமப்பட்டுத் தன் விம்மலை அடக்கியவாறு, உதடுகள் துடிக்க, ட்ரிப் ஏறிக்கொண்டிருந்த அதகனாகரனின் கரத்தைத் தன் கரத்தில் எடுத்து மென்மையாக அதிலே தன் உதட்டைப் பொருத்தியவள், பின் பருத்த வயிற்றில் அந்தக் கரத்தைப் பதித்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருக்க, தாயின் வேண்டுதல் குழந்தைக்கும் புரிந்ததோ, அது வேகமாகத் தந்தையின் கரத்தை உதய, அதன் அசைவு மின்சாரமாக, அதகனாகரனின் கரத்திற்குள் போனது. அதை உணர்ந்தவள் போலப் புன்னகைத்தவள், மீண்டும் அவன் கரத்தைப் படுக்கையில் வைத்துவிட்டு,

அவனை நோக்கிக் குனிந்து,

“உங்களுக்கு விபத்து நடந்த அந்தக் கணம் புரிந்துகொண்டேன்… நீங்கள் இன்றி எனக்கு எதுவுமில்லை என்று… ஆகரன் நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்… எத்தனை போட்டிகள்… அத்தனை போட்டிகளிலும் சீறி முன்னேறியவர்.. இதோ இப்போது வாழ்க்கைக்கான போட்டியில் இறங்கியிருக்கிறீர்கள்… உயிர் மீண்டால் மட்டும்தர்ன நீங்கள் வெற்றியாளர்… நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதுதானே…” என்றவள், மேலும் அவன் காதை நோக்கிக் குனிந்து,

“யோசித்துப் பாருங்கள்… ஒரு வேளை நிரந்தரமாக நீங்கள் என்னை விட்டு நீங்கினால். ஒரு வருடமோ, வருந்துவேன். அதன் பிறகு உங்கள் நினைவு மெல்ல மெல்ல மறைந்து போகும். அதன் பிறகு எனக்கென்று புதிய வாழ்க்கை அமையலாம். அப்போது. நம் குழந்தைக்கு இன்னொருத்தன் தந்தையாக வருவார். நம் குழந்தை அவரைத்தான் அப்பா என்று அழைக்கும்… தவிர.. நீங்கள் தீண்டிய இந்த உடலை இன்னொரு ஆண் கரம் தீண்டும்… உங்களுக்கு அதுதான் வேண்டும் என்றால் தாராளமாக எங்களை விட்டுச் சென்று விடுங்கள்… நான் தடுக்க மாட்டேன்… ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… நீங்கள் எழுந்து வந்தால், உங்களோடு நானும் நம் குழந்தையும் மகிழ்ச்சியாக வாழ்வோம். இல்லை என்றால்…” என்றவள் அவனை விட்டு நிமிர்ந்த போது, அவள் முகத்திலிருந்த கலக்கம் போய், இப்போது அமைதி வந்து குடிகொண்டிருந்தது.

நிச்சயமாக அவன் மீண்டு வருவான். இவளுக்கு விவாகரத்துக் கொடுக்க மறுத்தவன், விவாகரத்துக் கொடுத்தால், இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், அதைப் பார்க்கும் சக்தியில்லாமல், சாவையே இரு கரணம் நீட்டி அழைத்தவன், இப்போது இவளாகவே உன்னோடு வாழத் தயார், ஆனால் நீ விட்டுப் போனால் இன்னொருத்தனை மணப்பேன் என்று சொன்ன பின், நிச்சயமாகத் தன் சாவை எதிர்த்துப் போராடி வென்று வருவான் என்கிற நம்பிக்கை உதயமாக, அங்கிருந்து வெளியே வந்தாள் மீநன்னயா.

அவளைக் கண்ட ஜெயராமன், பாய்ந்து வந்து மகளின் கரங்களைப் பற்றி அவளை ஆசுவாசப்படுத்த முயல, தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தவள்,

“அவருக்கு ஒன்றுமாகாதுப்பா… நிச்சயமாக எதுவும் ஆகாது… அவர் மீண்டு வருவார்… வேண்டுமானால் பந்தயம் வைக்கிறேன்..” என்று புதிதாய் பிறந்தவள் போலப் பேசியவளை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஜெயராமன்.

கடைசியாக மீநன்னயா சொன்னதுதான் நடந்தது. சரியாக மூன்றாம் நாள், அதகனாகரனின் உடலில் பாரிய மாற்றம் நிகழ்ந்தது. அவனுடைய உள்ளுறுப்புகள் மெல்ல மெல்லப் பலப்படத் தொடங்க, அவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி மீண்டு வந்தான்.

மீண்டும் அதகனாகரனுக்கு அத்தனை பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இறுதியாக வைத்தியர் ஃப்ருட்மன், இன்னொரு வைத்தியரோடு வந்தார்.

“ஹாய்… நாங்கள் எல்லாம் பரிசோதித்துவிட்டோம்… உடல் அளவில் இனி பயப்பட எதுவுமில்லை…” என்று நல்ல செய்தியைச் சொல்லிவிட்டுத் தனக்குப் பக்கத்திலிருந்த வைத்தியரை அறிமுகப்படுத்தி, இவர் மூளைக்கான சிகிச்சை நிபுனர்… டாக்டர் எட்வேர்ட்… இவர் உங்கள் கூட ஏதோ பேசவேண்டுமாம்…” என்று விட்டு அவருக்கு இடம் கொடுக்க.

“ஹாய்…” என்றவர் அதிகம் அலம்பாமல் நேரடியாக விடயத்திற்கு வந்தார்.

“நாங்கள் அத்தனை பரிசோதனைகளும் செய்து பார்தோம், வாகனம் அடிபட்ட வேகத்தில் இவருடைய மூளையின் முக்கிய இடம் சற்று பலமாகவே அடிவாங்கியிருக்கிறது. இரத்தக்கசிவும் இருந்தது. இப்போது அவையெல்லாம் சரியாகிவிட்டாலும், சிலவேளைகளில் தற்காலிகமாக அவருக்கு நினைவுகள் திரும்பாதிருக்க வாய்ப்புகள் அதிகம்…” என்றதும் மீநன்னயாவிற்குக் கண்களில் கண்ணீர் பொங்கத் தொடங்கியது. மாதவியோ பதறியவாறு,

“ஐயோ… எங்களை எல்லாம் மறந்துவிடுவானா…” என்று பதற, மெல்லியதாகச் சிரித்த வைத்தியர்,

“அப்படியெல்லாம் இல்லை… இந்த மூளை நீங்கள் நினைப்பது போலச் செயல்படுவதில்லை. நாளாந்தம் நடக்கும் நினைவுகள் மூளையின் பல பகுதிகளிலும் சேகரித்து வைக்கப்படும்… ஒரு பக்கம் பாதிக்கப்பட்டால், உடனே அவை அந்தச் செய்திகளைப் பரிமாறும்… அதனால் முழு நினைவும் மறைந்து போக வாய்ப்பில்லை. பழைய சம்பவங்கள், பழக்கவழக்கங்கள், இல்லை ஒரு பொருளை எப்படிப் பயன்படுத்துவது இப்படியான சில குழப்பங்கள் இருக்கும்… சில வேளைகளில் உங்களையும் தற்காலிகமாக மறந்துபோக வாய்ப்புண்டு.” என்றதும் அழுகையுடனே வைத்தியரைப் பார்த்த மீநன்னயா,

“இது… இது சரியாகும்தானே…” என்றாள் கலக்கத்துடன்.

“ஒஃப் கோர்ஸ்… நிச்சயமாகச் சரியாகும்… இது கூட என் ஊகம்தான். இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்றுதான் நான் சொல்கிறேன். சில வேளை அவருக்கு முழுதாகச் சுயநினைவு வரும்போது, அத்தனையும் சரியாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை வரவேற்கத் தயாராக இருங்கள்… ஒரு வேளை நான் சொன்னது போல நினைவுகளில் மாற்றங்கள் இரந்தால் அஞ்சத் தேவையில்லை. அதிக பட்சம் ஆறிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் நினைவுகள் திரும்ப வந்துவிடும். இதற்காக நிறையப் பயிற்சிகள் உண்டு. சிகிச்சைகள் உண்டு. அதைப் பின்பற்றினாலே போதும்… அவர் சரியாகிவிடுவார்… ஆனால் மீண்டும் ஒரு முறை அவருடைய மூளையில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்… அது அதிக ஆபத்தை விளைவிக்கும்…” என்றவர் இறுதியாக,

“நல்லதையே நினைக்கலாம்…” என்று விட்டு விடைபெற, மீநன்னயாவிற்கு அவனுடைய நினைவுகள் தவறலாம் என்கிற செய்தி ஒன்றும் அந்தளவு பாதிப்பைக் கொடுக்கவில்லை. மாறாக அவன் உயிருக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சொன்னதே பெரும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. அவளுக்கு அது போதும், அவளுடைய நாயகன் உயிரோடு இருந்தாலே அவளுக்குப் போதும். வாழ்ந்துவிடுவாள். எல்லையில்லா நிம்மதியுடன் அதகனாரகனைத் தேடிப் போனாள் மீநன்னயா.

What’s your Reaction?
+1
26
+1
4
+1
2
+1
0
+1
1
+1
1

Related Post

One thought on “வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 48/49”
  1. muttal..muttal..muttal meena..ipo alu..nalla alu..ipo aluthu enna iruku? avlo kenjunane apo manniciya nee? setthalum paravale nu solla vendiyathu apuram unmaiyave apadi yethacum nadantha ayyo amma mudiyaliye nu oppari vaike vendiyathu? ipo un mannipu vendiya neratthule kodukame..chaiikk…apadi enna kobam ego timiru…nalla alu..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!