(43)
அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில் பெரும் அமைதி நிலவியது.
இருவருக்குமே எதுவும் பேசத் தோன்றவில்லை. அப்படியே அதகனாகரன் பேசினாலும், அவன் பேச்சை இவள் கேட்பாள் போலில்லை. அப்படியே கேட்டாலும், என்னை இறக்கிவிடு என் பாட்டில் போகிறேன் என்றால்…! எதற்கு வம்பு… அதனால் அவனும் அமைதியாகவே வந்தாலும், அவளுடனான அந்தப் பயணத்தை மிகவும் ரசிக்கவே செய்தான்.
கூடவே அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்து அவளை இளக்க வைக்க முடியுமா என்றும் பரிசீலித்தான். ம்கூம்… காற்றுக் கூட உள்ளே நுழைந்துவிடாதிருப்பது போல அத்தனை திசையையும் இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது போலத் தோன்றியது.
கொஞ்சத் தூரம் சென்றதும்,
“எந்தக் கடைக்குப் போகப்போகிறாய்…?” என்று கேட்க,
“ஷாப்பர்ஸ் ட்ரக் மார்ட் என்றாள் எங்கோ பார்த்தவாறு. அதைக் கேட்டதும், யோசனையுடன் அவளை ஏறிட்டவன்,
“ஷாப்பர்ஸ் ட்ரக் மார்ட்டா…? அங்கே எதற்கு… ஏதாவது மருந்து வாங்கவேண்டுமா… என்ன மருந்து…?” என்னதான் முயன்றும் குரலில் தெறித்த பதட்டத்தை அவனால் மறைக்கவே முடியவில்லை.
ஒரு கணம் ஏளனத்துடன் திரும்பி அவனைப் பார்த்தவள்,
“ஏன்… எதற்கு என்று சொன்னால்தான் இந்த வண்டி அங்கே போகுமோ?” என்று கேட்க, கப்பென்று வாயை மூடிக்கொண்டான் அதகனாகரன்.
தவறு செய்தவன் அவன். அடங்கித்தான் போகவேண்டும். வேறு வழியில்லை. ஆனாலும் அந்தக் கடைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு அவளோடு இறங்க முயல,
“எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை… நானே போய்க்கொள்வேன்…” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு வலித்த பாதத்தையும் பொருட்படுத்தாமல் கடகடவென்று உள்ளே நடந்து செல்ல, இவன்தான் தயங்கி நிற்கவேண்டியதாயிற்று.
மறுப்பவளோடு மல்லுக்கட்டவும் முடியவில்லை. இவன் வேறு எதையாவது செய்யப்போய், அது மேலும் அவன் மீதான வெறுப்பை வளர்த்துவிட்டால்… சில நேரங்களில் அமைதிதான் சாலச் சிறந்தது. அதனால் வாகனத்திற்குள்ளேயே அமர்ந்து கொள்ள. அரை மணி நேரத்தில் திரும்பி வந்தாள் மீநன்னயா. முகம் பெரும் யோசனையிலிருந்தது,
மீண்டும் அவளை ஏற்றிக்கொண்டு வீடு வந்தவன், அவளை இறக்கிவிட்டதும், அவனை ஏன் என்று கூடக் கேட்காது தன் அறைக்குள் வந்து சேர்ந்தாள் மீநன்னயா.
கைப்பையைக் கட்டிலில் போட்டுவிட்டு அதன் பக்கத்திலேயே அமர்ந்தவளுக்கு, வாங்கிவந்த பொருளைக் கொண்டு பரிசோதிக்க அச்சமாக இருந்தது. ஒரு வேளை அவள் கர்ப்பம் என்று வந்துவிட்டால்… நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது.
குழப்பத்துடன் உதடுகளைக் கடித்தவாறு கைப்பையையே சற்று நேரம் வெறித்தவள், ஒரு கட்டத்தில், பரிட்சித்துப் பார்த்து விடுவது என்கிற முடிவில் கைப்பையை எடுக்கப் போனாள். அவளையும் மீறிக் கரங்கள் நடுங்கின. ஆனாலும் கைப்பைக்குள் திணித்திருந்த அந்தப் பெட்டியை வெளியே எடுத்தவள் அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தாள்.
கட்டாயமாகப் பரிசோதிக்கவேண்டுமா என்கிற கேள்வியும் பிறந்தது. ஆனால் பரிசோதித்தே ஆகவேண்டுமே. வேறு வழியில்லாமல் பெருமூச்சொன்றை எடுத்து விட்டவள், பெட்டியின் பின்புறத்தில் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று எழுதியிருந்ததைக் கவனமாகப் படித்துவிட்டு, அந்தப் பரிசோதனைச் சாதனத்தை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றாள்.
இரண்டு நிமிடங்களில் அதில் தெரிந்த பதிலைக் கண்டு ஆடிப்போய் நின்றாள் மீநன்னயா. அவள் சந்தேகப்பட்டது போல, கர்ப்பம் என்று உறுதிசெய்திருந்தது அந்தச் சாதனம்.
ஒரு பக்கம் அழுகையும் வேதனையும் சேர்ந்து வந்ததென்றால் இன்னொரு பக்கம் அச்சம் தோன்றியது. இம்மிகூட மகிழ்ச்சி பிறக்கவில்லை அவளுக்கு.
கடவுளே இதை எப்படிக் கையாளப்போகிறாள். அவளை ஏமாற்றியவனின் குழந்தையைச் சுமப்பது ஒரு பக்கமிருக்க, அவனோடு சேர்ந்து வாழ முடியாத நிலையில், இந்தக் குழந்தைக்கு நாளை தந்தையென்று யாரைச் சுட்டிக் காட்டுவது. அவள் தந்தையில்லாது வாழ்ந்த போது பட்ட அவலத்தை அவள் குழந்தையும் சந்திக்குமா… எத்தனை ஏளனப் பேச்சுக்கள். அவமான வார்த்தைகள். எத்தனை முறை அவற்றைக் கேட்டுக் கூனிக் குறுகி நின்றிருக்கிறாள். அதே வலியை அவள் குழந்தையும் அனுபவிக்க நேருமோ… கடவுளே… இப்படி ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டுவிட்டாளே. இதிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறாள்… அழுகையும், கோபமும், ஆத்திரமும் ஒன்றாக இணைந்து வர அந்தச் சாதனத்தோடே படுக்கையறைக்குள் நுழைந்தவள் தொப்பென்று படுக்கையில் அமர்ந்து முகத்தைக் கரங்களால் மூடிக்கொள்ள அழுகை வெடித்துக்கொண்டு கிளம்பியது.
இது அழகான திருமணமாக இருந்திருந்தால், இந்தத் தருணத்தை எத்தனை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்பாள். அனுபவித்திருப்பாள். ஆனால் இப்போது… கலக்கத்தோடு சற்று நேரம் கண்ணீர் உகுத்தவள், வேகமாகத் தன் கண்ணீரை அழுந்த துடைத்துக்கொண்டாள்.
எதற்காக அவள் அழவேண்டும்… இல்லை… அழக் கூடாது… இப்போது என்ன அவள் குழந்தைதானே தரித்திருக்கிறாள். உலகம் ஒன்றும் அழிந்து போகவில்லையே இப்படி இடிந்து போக… வாழ்வில் எத்தனையோ வலிகளையும் சிக்கல்களையும் கண்டு வந்தவளுக்கு இதெல்லாம் ஒன்றுமில்லை. அவளால் சமாளிக்க முடியும். நிச்சயமாக முடியும். என்று தன்னையே சமாதானப் படுத்த முயன்றாலும் இன்னொரு மனமோ,
“அதுதான் எப்படி என்று கேள்விகேட்டது.
அதுதானே… எப்படி… அவளால் எப்படி இதை மறைக்க முடியும். இப்போதே வாந்தி தலைச்சுற்றல் என்று தொடங்கியிருக்கிறதே. தவிர மாதம் போகப் போக வயிறு வேறு காட்டிக் கொடுக்குமே… எதை மறைத்தாலும் இதை மறைக்க முடியாதே… எப்படியும் தெரிய வந்துவிடுமே… என்ன செய்யப் போகிறாள்? குழப்பத்துடன் கலங்கி நிற்கையில் அவளுடைய அறைக்கதவு தட்டுப்பட்டது.
ஆனாலும் எழுந்து சென்று திறக்கவேண்டும் என்று தோன்றாததால் அப்படியே அமர்ந்திருக்க மீண்டும் அறைக் கதவு தட்டுப்பட்டது. இப்போதும் அமைதியாக இருக்க,
“மீனா… சாப்பிடவில்லையா…” என்கிற மாதவியின் குரல் வெளியே இருந்து வர, அவசரமாகத் தன் கண்களைத் துடைத்தவள்,
“இ… இதோ வருகிறேன் அம்மா…” என்றவள் அவசரமாகக் கரத்திலிருந்த அந்தப் பரிசோதனை சாதனத்தை நின்ற வாக்கிலேயே குப்பை வாளியில் போட்டுவிட்டு ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவளாகச் சென்று கதவைத் திறக்க, மாதவி வருத்தத்தோடு வெளியே நின்றிருந்தார்.
முகம் கசங்க வந்து நின்ற மீநன்னயாவைப் பார்த்து,
“என்னம்மா… உனக்கொன்றுமில்லையே… நீ ‘ஷாப்பர்ஸ் ட்ரக் மார்ட்டிற்குப்‘ போனதாக ஆகரன் சொன்னான்… ஏன்மா… ஏதாவது மருந்து வாங்கவேண்டி இருந்ததா… ஏதாவது பிரச்சனையாடா… வேண்டுமானால் வைத்தியரைப் போய்ப் பார்க்கலாமா…” என்று கரிசனையோடு கேட்கத் தன்னால் அந்த நல்ல பெண்மணியின் மனம் கலங்குகிறதே என்கிற வருத்தத்தில், அவசரமாகப் புன்னகைத்து,
“அது… அது ஒன்றுமில்லைமா… கொஞ்சம் தலையிடி… என்னிடமிருந்த டைலனோல் முடிந்துவிட்டதா… அதுதான் வாங்கி வரலாம் என்று…” என அவள் கூற, பெரும் நிம்மதியுடன் ஆசுவாச பெருமூச்சை விட்டுக்கொண்ட மாதவி,
“ஓ… டைலனோல் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாமேமா… அதை வாங்க இந்தப் பனிக்குள் போகவேண்டுமா…?” என்று கடிந்து விட்டு,
“சரி வா… வந்து சாப்பிடு… பசித்தாலும் இப்படித் தலையிடிக்கும். காலை கூட நீ சாப்பிடவில்லை…” என்று கூற,
“சாரிமா… உங்களிடம் இருக்குமா என்றும் தெரியவில்லை… அதுதான் நான் போனேன். அடுத்த முறை கட்டாயம் உங்களிடம் கேட்கிறேன்…” என்றவள்,
“நீங்கள் போங்கள்… நான் இன்னும் ஐந்து நிமிடங்களில் வருகிறேன்…” என்று அனுப்பிவிட்டுக் குளியலறைக்குள் நுழைய, மாதவியும் சரிதான் என்று கீழே சென்றாள்.
கீழே வந்தவரைப் பரபரப்புடன் எதிர்கொண்டான் அதகனாகரன்.
“அக்கா… அவளுக்கு ஒன்றுமில்லையே… எதற்கு அந்த மருந்துக் கடைக்குப் போனாளாம்?’ என்று கேட்கும் போதே அவன் குரல் மெல்லியதாகப் பிசிர் தட்டியது. தன் தம்பியின் தவிப்பைப் புரிந்து கொண்டவராக மெல்லியதாக நகைத்த மாதவி.
“டேய்… ஏன்டா… நீயும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துகிறாய். அவளுக்கு ஒன்றுமில்லை. தலையிடியாம். டைலனோல் முடிந்துவிட்டதென்று வாங்கப் போயிருக்கிறாள்…” என்று கூற,
“ஓ…” என்றவன், பின் குழம்பியவனாக,
“நம்முடைய மருந்துப் பெட்டியில் இருக்கிறதே அக்கா… அதை எடுத்திருக்கலாமே…” என்று சந்தேகம் கேட்க,
“நானும் அதைத்தான் சொன்னேன்பா… ஆனால் அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா… இனி ஏதாவது தேவையென்றால் அங்கே எடுத்துக்கொள்வாள்…” என்றுவிட்டு,
“நீயும் இன்னும் சாப்பிடவில்லையே… வாவேன் சாப்பிட…” என்றதும், தயக்கத்தோடு நிமிர்ந்து மேல் மாடியைப் பார்த்தவன், பின் திரும்பித் தன் சகோதரியைப் பார்த்து,
“நன்னயா முதலில் சாப்பிடட்டும்… அதற்குப் பிறகு நான் சாப்பிடுகிறேன்…” என்றுவிட்டுக் கீழே செல்லப் பெரும் வருத்தத்தோடு அதகனாகரன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாதவி.
அவராலும்தான் என்ன செய்ய முடியும். பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் இருவரும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசி மற்றவரைப் புரிய வைக்க முயல வேண்டும். இங்கே என்னவென்றால், அதற்கான வாய்ப்பு இம்மியும் இல்லாத போது, பிரச்சனையைத் தீர்ப்பதுதான் எப்படி.
ஆனாலும் இருவரையும் எப்படி இணைப்பது என்கிற குழப்பத்துடன் சமையலறைக்குள் நுழைந்தார் மாதவி.
(44)
அன்று காலை எழுந்தபோது, மீநன்னயாவிற்கு மிகவும் சிரமமாக இருந்தது. தலையைச் சுற்றிக்கொண்டு வர, மீண்டும் படுக்கையில் அமர்ந்து தன்னை நிதானப்படுத்தச் சற்று நேரம் எடுத்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்துவிட்டது. ஆனால் தீர்வுதான் இன்னும் புரியவில்லை.
எது எப்படியோ, எதற்கும் மருத்துவரிடம் செல்லவேண்டும். ஆனால் எப்படி எங்கே என்றுதான் குழப்பமாக இருந்தது. இங்கே வந்த ஒன்றரை மாதத்தில் இதுவரை அவளுக்கென்று வைத்தியரைக் கண்டுபிடிக்கவில்லை. மாதவி வளமையாகச் செல்லும் மருத்துவரிடம் போகலாம்தான். ஆனால், இவளுடைய பிரச்சனை உடனே இவர்களுக்குத் தெரிய வருமே. முதலில் மருத்துவர் இதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகுதான் எப்படிச் சொல்வதென்று யோசிக்கவேண்டும்.
யோசனையோடு எழுந்தவள், ஒரு கணம் தடுமாறி, அங்கிருந்த மேசை ஒன்றைப் பற்றியவாறு தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
சே… என்ன இது… இப்படிப் படுத்துகிறதே. இவளுக்கு மட்டும்தான் இப்படியா, இல்லை மற்றவர்களுக்கும் இப்படித்தான் இருக்குமா? கர்ப்பம் என்றதனால் உடலில் உள்ள சுரப்பிகள் எல்லாம் தாறுமாறாக வேலை செய்ததால், அவளாலும் எதையும் தெளிவாகச் சிந்திக்கவும் முடியவில்லை. செயல்படுத்தவும் முடியவில்லை.
எப்படியோ, குளியல் அறைக்குள் நுழைந்து, காலைக்கடனை முடித்துவிட்டு, வெளிவந்தபோதும் அவளால் நிலையாக நிற்க முடியவில்லை. குமட்டிக்கொண்டு வேறு வந்தது. அதனால் அங்கிருந்த இருக்கையில் தலையைப் பற்றியவாறு அமர்ந்தேவிட்டாள் மீநன்னயா.
எத்தனை நேரம்தான் அப்படியே அமர்ந்திருப்பது. இவளைக் காணவில்லை என்று மாதவி தேடிக்கொண்டே வந்துவிட்டார். இரண்டு தரம் கதவைத் தட்ட,
“இதோ வருகிறேன்…” என்று அவள் குரல் கொடுத்த பின்தான் மாதவி அமைதியானார்.
“சீக்கிரம் வாம்மா… நேரம் ஏழுமணிக்கும் மேலாகப்போகிறது..” என்று அறிவுறுத்திவிட்டுச் செல்ல, அதிக நேரம் இப்படியே இருக்கமுடியாது என்பது புரிந்தது. இரண்டு மூன்று தரம் ஆழ மூச்செடுத்துவிட்டு வெளியே வந்தபோது அவளுக்குக் கிடைத்த முகத் தரிசனமே அதகனாகரன்தான்.
மாதவி அழைத்துவிட்டுச் சென்றபிறகும் அவள் வெளியே வரவில்லை என்றதும், ஏதோ உறுத்த, அவளைத் தேடி வந்துவிட்டிருந்தான்.
என்னதான் அவள் டைலனோல் வாங்க மருந்துக் கடைக்குப் போனேன் என்று சொல்லியிருந்தாலும் கூட, மனதிற்குள் ஓரு சலனம் இருந்துகொண்டே இருந்தது.
டைலனோல் வாங்க இவள் இந்தப் பனியிலும் பிடிவாதமாகப் போகவேண்டுமா? சாதாரண வலிக்கு யாராவது இத்தனை ஆபத்தை எதிர்கொள்வார்களா? அதுதான் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.
என்னதான் அவனை அவள் வெறுத்தாலும், ஒதுக்கினாலும், இவனால் சரிதான் போடி என்று ஒதுங்கிச் செல்ல முடியவில்லை. தவறு முழுவதும் இவனதாயிற்றே. தவறு செய்தவன் இறங்கிப்போவதுதானே பிரச்சனையைச் சமாளிக்க ஒரே வழி. காலை எழுந்ததும் மீநன்னயாவின் வருகைக்காகக் கீழே காத்திருந்தவன், அவள் வரவில்லை என்றதும் நேரத்தைப் பார்த்தான். ஏழுமணி என்றது கடிகாரம்.
எப்போதும் அதிகாலையில் எழுந்து பழக்கம் என்று பேச்சுவாக்கில் அவள் சொன்னது நினைவுக்கு வர, உடனே மாதவியிடம் சென்று,
“நன்னயா எழுந்துவிட்டாளா?” என்று தயக்கத்துடன் கேட்க, அப்போதுதான் மாதவிக்கும் அவளுடைய நினைவு வந்தது.
“அட… ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாளே… இன்று என்ன அவளுடைய சத்தத்தையே காணவில்லை… பொறு நான் போய்ப் பார்க்கிறேன்…” என்றுவிட்டு மேலே செல்ல, சகோதரிக்குப் பின்னால் ஒரு வித பதட்டத்தோடு சென்ற அதகனாகரன், அவளுடைய குரலைக் கேட்டபின்புதான் நிம்மதியானான்.
ஆனாலும் அந்தக் குரலில் இருந்த சோர்வை இவன் உடனேயே புரிந்துகொண்டான். எப்போதும் அவளுடைய குரலில் ஒருவித கணீர் ஒலி இருக்கும். அந்தக் குரலைக் கேட்டால் உள்ளே என்னவோ செய்யும். புதிது பதிதாய் பூக்கள் மலரும். ஆனால் இப்போது அந்தக் குரலைக் கேட்டால் பூத்த அந்த மலர்கள் வாடியதுபோல உணர வைக்க, சற்றுக் கலங்கித்தான் போனான் அதகனாகரன்.
நிச்சயமாக ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய, மாதவி கீழே சென்றாலும், அவளுடைய முகத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்கிற வேகத்தில் அங்கேயே நின்றிருந்தான் அதகனாகரன்.
சற்றுப் பொருத்து மீநன்னயா கதவைத் திறந்துகொண்டு வெளியே வர, இவன் ஆவலுடன் நிமிர்ந்து பார்த்தான். இவளும் கதவைத் திறந்ததும், வாசலில் அதகனாகரன் நிற்பான் என்று சற்றும் யோசிக்கவில்லை. அவனைக் கண்டதும், வெறுப்புடன் முகத்தைத் திருப்பியவள், அவன் திசைக்கு எதிர்த்திசை திரும்ப எத்தனிக்க, ஏற்கெனவே இதோ இதோ என்று பயமுறுத்திக்கொண்டிருந்த வாந்தி அவள் அழையாமலே மேலே வர, அதற்கு மேல் முடியாமலும் வாயை மூடிக்கொண்டு தன் படுக்கையறைக்குள் பாய்ந்தாள் மீநன்னயா.
சத்தியமாக இப்படி ஒரு எதிர்வினையை அதகனாகரன் எதிர்பார்க்கவில்லை.
அவளுடைய முகம் கசங்கியதையும், இரத்தப் பசையை இழந்த முகத்தையும் கண்டவன், அவள் வாயை மூடிக்கொண்டு உள்ளே ஓட, சற்றும் தாமதிக்காமல் இவனும் அவள் பின்னால் சென்றான்.
அடுத்து அவள் சென்று சேர்ந்தது குளியலறைதான். சற்றும் யோசிக்காமல் அவள் பின்னால் சென்றவன், அவள் வாந்தி எடுப்பதைக் கண்டு பதறியவனாக,
“நன்னயா… என்னாயிற்று உனக்கு…” என்றவாறு அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு அவளுடைய தலையைப் பற்ற, இதை எதையும் உணரும் நிலையில் மீநன்னயா இருக்கவில்லை.
மீண்டும் மீண்டும் குமட்டிக்கொண்டிருக்க அதை எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தவளிடம்,
“ஈசி பேபி… ஈசி…” என்றவன், ஒரு கட்டத்தில் தண்ணீரைத் திறந்து தன் கரங்களைக் குவித்து அதில் தண்ணீரை எடுத்து அவளுடைய வாயில் பிடிக்க, மறுக்காது தண்ணீரை உறிஞ்சியவள், கொப்பளித்துவிட்டுத் துப்ப, மேலும் தண்ணீர் எடுத்து அவளை இரண்டு வாய் அருந்த வைத்தான். பின் அவளுடைய முகத்தை ஈரக் கரம் கொண்டு துடைத்துவிட, இப்போது மெதுவாகத் தள்ளாடினாள் மீநன்னயா.
தள்ளாடியவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டவன், அவளுடைய முதுகைத் தட்டிக் கொடுத்தும் வருடிக் கொடுத்தும் அசுவாசப்படுத்தி,
“யு ஆர் ஓக்கே… யு ஆர் ஓக்கே…” என்று சமாதானப்படுத்தியவனாக அவளைக் கைவிடாமலே அழைத்து வந்து படுக்கையில் அமர்த்திவிட, இவளுக்குத்தான் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஏனோ உடல் முழுவதும் இயலாமையில் சோர்ந்துபோவதை உணர்ந்தவளாக,
“என்னால் இதைக் கையாள முடியவில்லையே என்ன செய்யட்டும்…” என்றாள் குரல் கம்ம.
இவனோ அங்கிருந்த துவாயை எடுத்து அவளுடைய முகத்தை அழுந்த துடைத்துவிட்டு,
“ஹே… இட்ஸ் ஓக்கே பேபி… உனக்கு ஒன்றுமில்லை…” என்று சமாதானப்படுத்தியவாறு, அவளுடைய அனுமதியையும் கேட்காது அவள் முகத்தைக் கழுவியபோது, ஈரமாகிவிட்டிருந்த சுவட்டரைக் கழற்றி எடுத்தவன், விரைந்து சென்று காய்ந்த மேலாடை ஒன்றை எடுத்து வந்து அவளுக்கு அணிவிக்க, மறுக்காது அணிந்துகொண்டவளின் கன்னங்கள் அவளுடைய கண்ணீரைக் கடன்வாங்கியிருந்தன.
நிச்சயமாக அவளுக்கு ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்ட அதகனாகரனுக்கும் பெரும் கிலி பிடித்துக்கொண்டது.
அவளுக்கு என்னாயிற்று. ஏன் வாந்தி எடுத்தாள். ஏன் தள்ளாடுகிறாள். ஏன் முகத்தில் இரத்தப் பசையில்லை. இப்போதுதான் என்னென்னவோ நோய்கள் பற்றிச் சொல்கிறார்களே. அப்படி ஏதாவது இவளுக்கு வந்திருக்குமோ? அதனால்தான் கையாள முடியவில்லை என்று அழுகிறாளோ… பெரும் பயப் பந்து உருண்டுவந்து நெஞ்சை அடைக்க, அவளை இழுத்துத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டவன்,
“ஓ… கண்ணம்மா… நான் என்ன செய்யட்டும்…” என்றவாறு சற்று நேரம் நின்றான். பின் அவளை விடுவித்து அவளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்தவன், கலைந்த அவளுடைய கூந்தலைத் தன் கரங்களால் சரியாக வாரிவிட்டவாறு,
“இதோ பார்… கண்ணம்மா… இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை தெரியுமா… எதுவாக இருந்தாலும் சுலபமாகவே அதைக் கடந்து வந்துவிடலாம்… நான் இருக்கிறேன் நன்னயா உனக்கு… எப்போதம் உன் பக்கத்தில், உன் கூட…” அவன் முடிப்பதற்குள் எங்கிருந்துதான் அவளுக்கு அத்தனை பலம் வந்ததோ, தன் முன்னால் மண்டியிட்டு நின்றவனை ஒரு தள்ளுத் தள்ள, அவள் தள்ளிய வேகத்தில் பின்னால் சரிந்தவனின் கரம் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் பட, குப்பைத் தொட்டிச் சரிந்து அதிலிருந்த பொருட்கள் அத்தனையும் சிதற, அதைக் கூடக் கவனிக்காமல் நிமிர்ந்து மீநன்னயாவைப் பார்த்தான். அவளோ ஆத்திரத்துடன் அவனைப் பார்த்து,
“என்னால் தீர்க்க முடியாத பிரச்சனையே நீங்கள்தான்… நீங்கள் மட்டும்தான்… வாழ்க்கையில் மகிழ்ச்சியே கிடைக்காதோ என்று எப்படித் தவித்திருப்பேன். அந்தத் தவிப்புக்கு வரமாக ராம் வந்து சேர்ந்தார்… தொலைத்த மகிழ்ச்சியைப் பெற்றுவிட்ட ஆனந்தத்தில் எப்படி இருந்தேன் தெரியுமா. அத்தனையையும் ஒரு நொடியில் பொசுக்கிவிட்டீர்களே… காதல் அன்பு எல்லாவற்றையுமே வெறும் கனவாக்கிவிட்டீர்களே… இப்போது எந்தத் தைரியத்தில் என் முகத்தில் வந்து விழித்தீர்கள்… உங்களைப் பார்க்கப் பார்க்க… எனக்கு வெறுப்புதான் வருகிறது தெரியுமா… இந்த உலகத்திலேயே நான் வெறுக்கும் ஒரே மனிதர் நீங்கள்… நீங்கள் மட்டும்தான்… எனக்கு மட்டும் கடவுள் வரம் தந்தால், நீங்கள் இல்லாத உங்கள் காற்றுக்கூடப் படமுடியாத தொலைவுக்கு ஓடிவிடுவேன்…” என்று இயலாமையும் சீற்றமும் ஒன்று சேரக் கத்தி அழ, அதகனாகரனோ, எழுந்து, மீண்டும் அவள் முன்னால் மண்டியிட்டமர்ந்து அவளை வருத்தத்தோடு பார்த்தான்.
“நன்னயா… ஐ ஆம் சாரிமா… ரியலி ரியலி சாரி…” என்றவன் தன் இடது மார்பில் உள்ளங்கையைப் பதித்து, “இங்கிருந்து உணர்ந்து கொல்கிறேன்… சத்தியமாக உனக்குச் செய்ததை இட்டு வருந்துகிறேன்… ப்ளீஸ் ஃபார்கிவ் மீ” என்று வேண்ட. விருக்கென்று தலை நிமிர்ந்து அவனை வெறித்தாள் மீநன்னயா.
பின் என்ன நினைத்தாளோ, சுத்திவரப் பார்த்தாள். மேலே பார்த்தாள். பின் கீழே பார்த்தாள். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள். தொடர்ந்து உதடுகளைப் பிதுக்கி, ஏளனத்துடன் அவனை ஏறிட்டு,
“எதுவும் மாறவில்லையே…” என்றாள் எகத்தாளமாக. அவன் மன்னிப்பு வேண்டியதால் நடந்தது எதுவும் மாறவில்லையே என்று கிண்டலாகக் கூறுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன், பெரும் வலியுடன் அவளை நோக்கிச் சரிய, அருவெறுப்புடன் பின்னால் சாய்ந்தவளை உணர்ந்து மீண்டும் தன்னிலையில் அமர்ந்தவனாக,
“எனக்குத் தெரியும் நன்னயா… செய்த தவறு மாறாதுதான்… ஆனால் திருத்திக்கொள்ளலாம் இல்லையா.. அதற்கு ஒரே ஒரு வாய்ப்பு… ஒரே ஒரு வாய்ப்பு எனக்குக் கொடு நன்னயா… நான் திருத்திக் காட்டுகிறேன்… ஒத்துக் கொள்கிறேன்… நான் தவறு செய்தவன்தான்… ஆனால் நான் தப்பானவன் கிடையாது… என் வாழ்க்கையில் நடந்த கசப்பு, என் அக்காவின் வாழ்க்கையிலும் நடந்துவிடுமோ என்கிற பயத்தில்தான் அப்படி நடந்துகொண்டேனே தவிர, சத்தியமாக இப்படி ஒரு திருப்பம் என் அத்தானின் வாழ்வில் நடந்திருக்கும் என்று நினைக்கவேயில்லை… சத்தியமாக இந்தக் கணம் வரை நானே என்னை வெறுக்கிறேன்… தெரியுமா… இப்போது கூட, நான் செய்த தவறை மாற்றி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தால், என் உயிரைக் கொடுத்தாவது அதைச் செய்வேன்… ஆனால் அது முடியாது என்று உனக்கும் தெரியும்… நன்னயா… நீ என்னை மன்னிக்காவிட்டாலும், உன் அருகே உனக்குச் சேவகம் செய்ய ஒரே ஒரு வாய்ப்புக் கொடேன்…” என்று கெஞ்சிக் கேட்டவனை அதீத வெறுப்புடன் பார்த்தாள் மீநன்னயா.
“அதற்குக் கூட உங்களுக்குத் தகுதி கிடையாது அதகனாகரன்.. இன்றைய தேதியில் நான் மனதார வெறுக்கும் ஒரே நபர் அது நீங்கள்தான்… எனக்கு உங்கள் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை… பேசப் பிடிக்கவில்லை… தயவு செய்து என் கண் முன்னால் வராதீர்கள்… போங்கள் வெளியே…” என்று சீற, அதற்கு மேல் அவளோடு தர்க்கம் புரிவதால் அவளுடைய வெறுப்பை மேலும் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்தவன் போலப் பெரும் வலியோடு எழுந்து திரும்பியவனின் காலில் தட்டுப்பட்டது அது.
எதேச்சையாகத்தான் குனிந்து பார்த்தான். பின் புருவங்கள் சுருங்க, அதை வெறித்தான். ஏதோ புரிந்தும் புரியாமலும் இருக்கக் குனிந்து அதை எடுத்தவனின் முகத்தில் அதுவரையிருந்த வாட்டம் போய், அங்கே ஆத்திரமும் ஆதங்கமும் நிறைந்து போகத் திரும்பி மீநன்னயாவைப் பார்த்தான்.
அவள் இவனைப் பார்க்கப் பிடிக்காமல் தரையைத்தான் வெறித்துக்கொண்டிருந்தாள். அவளையும் தன் கரத்திலிருந்த அந்தப் பொருளையும் பார்த்தவன்,
“வட் த ஹெல் இஸ் தட்?” என்றான் ஆத்திரமாக. இவளோ, எரிச்சலுடன் அவனை ஏறிட்டவள், அவன் கரத்திலிருந்த பொருளைக் கண்டு அதிர்ந்தவளாகப் பேச வாய் வராமல் தடுமாறியவாறு மலங்க மலங்க விழிக்க, இப்போது அவளுக்குப் போட்டியாக அதகனாகரனுக்கும் இரத்தம் வடிந்து செல்வது போலக் காதுகளை அடைத்துக் கொண்டது.
கடவுளே… மீநன்னயா கர்ப்பமாகவா இருக்கிறாள். அதுவும் அவனுடைய குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கிறாள். நேற்று கடைக்குப் போனது கூட இதை வாங்கத்தான். பரிசோதித்தும் பார்த்திருக்கிறாள். ஆனால், இதுவரை அவள் அறிந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லவில்லை. இப்போது சொல்லவில்லையென்றால் எப்போது சொல்வாள். சொல்லியிருப்பாளா, இல்லை சொல்லாது மறைத்திருப்பாளா… அதுவரை அவனை ஆட்டிப்படைத்த குற்ற உணர்ச்சியும் வலியும் மாயமாக மறைந்து போக, உள்ளம் முதுல்கொண்டு தேகம் வரை திகு திகு என்று ஆத்திரத்தில் எரிந்தது. அதே ஆத்திரத்தோடு அவளை வெறித்தவன்,
“எப்போது சொல்வதாக உத்தேசம்…” என்றான் கடுமையாக.
யாருக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தாளோ, அவனுக்கே தெரிந்துவிட்டதே… ஏமாற்றத்துடன் அவனை வெறித்தவள், பின் அவன் முகம் பார்க்கப் பிடிக்காமல்,
“எப்போதும் சொல்வதாக இல்லை…” என்றாள் அலட்சியமாக. அதுவரை அடக்கிவைத்திருந்த ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வெடிக்க, தன் கரத்திலிருந்த கர்ப்பத்தை அறியும் சாதனத்தை விசிறி அடித்தவன்,
“ஹௌ டெயர் யு…” என்று சீறியவாறு எதை எதையோ கூற வந்தான். அவள் பெண்… அதுவும் காதல் கொண்டவள். அவளைத் தகாத வார்த்தைகளால் பேச முடியாமல் பற்களைக் கடித்து வார்த்தைகளை விழுங்கியவன்,
“புறப்படு… வைத்தியரிடம் போக…” என்றான் பற்களைக் கடித்தவாறு.
அதைக் கேட்டதும் சற்று ஆடித்தான் போனாள் மீநன்னயா. இதுவரை அவள் இந்தக் குழந்தையைப் பற்றிப் பெரிதாக எதுவும் நினைக்கவில்லைதான். என்ன செய்வது ஏது செய்வது என்று எதுவும் யோசிக்கவில்லைதான். ஆனால் அவன் வைத்தியரிடம் கிளம்பு என்றதும், முதன் முறையாக அந்தக் குழந்தையை அழிக்கத்தான் அழைக்கிறானோ என்கிற கேள்வியில் நெஞ்சம் திக்கென்றானது.
அவளால் இந்தக் குழந்தையைக் கருவிலேயே அழிக்க முடியுமா… மீண்டும் அச்சத்தால் காதுகள் அடைத்துக்கொள்ள, அந்த நினைவே உயிரைக் குடித்துவிடும் போன்ற உணர்வில் அவனை ஏறிட்டவள்,
“எ… எதற்கு வைத்தியரிடம்…” என்றாள் இவள் திக்கித் திணறி.
“எதற்கா… சும்மா காத்துவாங்க…” எனச் சுள்ளென்று விழ, இவளோ, கலக்கத்துடன் அவனைப் பார்த்து,
“இந்தக் குழந்தை எனக்கு வேண்டும்… நான் அழிக்கமாட்டேன்…” என்றாள் விம்மலுடன். அவள் கூறியதைக் கேட்டதும், முதலில் குழம்பியவன், பின் அவள் சொன்னதன் பொருள் புரிய,
“ஏய்…” என்றவாறு வலது கரத்தை ஓங்கியவன், அடுத்த கணம், அத்தனை கோபத்தையும் மொத்தமாய்ச் சேர்த்து, சுவரை அறைய, அவன் அறைந்த வேகத்தில் ட்ரைவால் கூட உடைந்து உள்ளே சென்றது.
அதைக் கண்டு பதறி எழுந்தேவிட்டாள் மீநன்னயா. இதுவரை இத்தகைய கோபத்தை அவள் யாரிடமும் கண்டதில்லை. பயத்தில் உடல் சில்லிட ட்ரைவாலையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள். இவனோ பற்களைக் கடித்துச் சுட்டுவிரலை உயர்த்தி,
“இன்னும் ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை நீ பேசினாலும் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்…” என்று சீறிவிட்டு அவளுடைய கரத்தைப் பற்றியவன் தரதரவென்று இழுத்துச் செல்ல, இவளோ தன்னை விடுவிக்கப் போராடியவாறு,
“இல்லை… நான் வரமாட்டேன்… என்னை விடுங்கள்… நான் வரவில்லை… தயவு செய்து என்னை விடுங்கள்…” என்று விசும்ப, மறு கணம் அவள் அவனுடைய கரங்களில் குழந்தை என வீற்றிருந்தாள்.
இவளோ அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவளை ஏந்தியவாறு கடகடவென்று படிகளில் இறங்கத் தொடங்க, சத்தம் கேட்டு வெளியே வந்த மாதவி இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்தவளாக,
“டேய்.. என்னடா… என்னாயிற்று…” என்று பதற, இவனோ,
“இவளுடைய ஜாக்கட் எங்கே…” என்றான் அடக்கிய ஆத்திரத்துடன். அந்தக் குரலைப் புரிந்துகொண்ட மாதவி, அதற்கு மேல் எதையும் கேட்காமல் விரைந்து சென்ற எடுத்துவந்து அவனிடம் நீட்ட, மீநன்னயாவைத் தரையில் இறக்கியவன், அதை அவளிடம் நீட்டி,
“போடு…” என்றான் அழுத்தமாக. இவளோ அழுதவாறு,
“நான் வரவில்லை… ப்ளீஸ்… என்னை விட்டுவிடுங்கள்…” என்று கெஞ்ச,
“லிசின் நன்னயா… இப்போது நாம் வைத்தியசாலைக்குப் போகிறோம்… நீ சண்டித்தனம் புரிந்தால் தூக்கிச் செல்வேன்…” என்று கூற, வேறு வழியில்லாமல் விம்மியவாறே அந்தத் தடித்த மேல்சட்டையை அணிய, மாதவியோ,
“என்னடா… என்ன பிரச்சனை… மீனாவை எங்கே அழைத்துச் செல்கிறாய்…” என்று பதற,
“வந்து சொல்கிறேன் அக்கா…” என்றவன், மீண்டும் மீநன்னயாவின் கரத்தை அழுந்த பற்றியவாறு இழுத்துச் சென்றான்.
superb
நன்றி நன்றி❤️❤️❤️❤️