(2)
இரண்டு நாட்களுக்கு முன்புதான் கார் ஓட்டப்பந்தையத்திற்கு லன்டன் வந்திருந்தான் அதகனாகரன். வந்தவனை அன்று காலை நண்பர்கள் கூட்டம் உணவகம் ஒன்றிற்கு அழைத்திருக்க, மறுக்கமுடியாது சென்றவன், வேண்டிய உணவைச் சொல்லவிட்டு நண்பர்களோடு சிரித்துப் பேசியவாறு எதேச்சையாகத் திரும்பியவனின் பார்வையில் விழுந்தாள் அவள்.
முதலில் அவன் அலட்சியமாகத்தான் பார்த்தான். ஆனால் அவனுக்கு முதுகுகாட்டியவாறு அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் உடலமைப்பைக் கண்டவனுக்கு ஏனோ அத்தனை சுலபத்தில் விழிகளைத் திருப்ப முடிந்திருக்கவில்லை. உடுக்கை என்னும் இடை என்று இதைத்தான் சொல்வார்களோ? அது மட்டுமா, அந்தத் தலைமுடி… அப்பா… தலை முடியா அது, தின்று கொழுத்த கரிய நிற, நாகப்பாம்பொன்று படமெடுத்து நிற்பது போல அல்லவா உருண்டு திரண்டு கிடக்கிறது. அதுவும், பின்னப்பட்டிருந்த அந்தக் கூந்தல், இருக்கையின் பின்னால் போடப்பட்டிருந்ததால் அது கிட்டத்தட்டத் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டிருந்தது.
இங்கிலாந்தில், அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில், இத்தனை நீளக் கூந்தலா? யார் இவள்…? அந்தக் கூந்தலின் நிறத்தைப் பார்க்கும் போது தென் இந்தியப் பெண்ணாக இருக்கவேண்டும். இல்லை என்றால் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம். அவளுடைய பின்புறம்தான் தெரிந்ததால் சரியாகக் கணிக்கமுடியவில்லை. ஆனாலும் அவளுடைய கரங்கள் ஏதோ ஒரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டிருந்ததால் சற்று அசைந்து அவள் உடலின் ஏதாவது பகுதி தெரிகிறதா என்று ஆர்வத்துடன் எட்டியும் பார்த்தான். பளிச்சென்ற பளிங்கு நிறத்தில் வெண்கரம்தான் கண்களுக்குப் பட்டன. அந்த நிறத்தைப் பார்க்கும் போது நிச்சயமாகத் தென்னிந்தியாவைச் சேர்ந்தவளாக இருக்க முடியாது என்று புரிந்தது. அப்படியானால் வட இந்தியாவா… மேலும் சுவாரசியம் கூட அவளுடைய முதுகையும், கூந்தலையும் பார்த்துக் கொண்டிருந்தான் அதகனாகரன். ஏனோ டிஸ்னி வேர்ள்ட் நாயகி ‘ரப்பன்ஸெல்…’ தான் அவனுடைய நினைவுக்கு வந்தது. அதை வாய்விட்டும் முணுமுணுத்துவிட்டுச் சிரமப்பட்டுத் தன் விழிகளைத் திருப்ப முயல பாழாய்ப் போன புத்தியும், விழிகளும் அவன் அனுமதியையும் கேட்காமல் அந்தப் பெண்ணை நோக்கித்தான் பயணித்தன. இறுதியாகத் தன்னோடு போராடுவதை விடுத்து விழிகள் சென்ற திசைக்கே புத்தியையும் அனுப்பி வைத்தான்.
அவன் கேட்ட உணவு வந்ததோ, அதை உண்ணவேண்டும் என்றோ எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை. ஏனோ அந்தப் பெண் யார் என்று பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவனைச் செயல்பட வைக்க, ஒரு கட்டத்தில் இனியும் பொறுக்க முடியாது என்று எண்ணியவனாக, அவளிடம் பேசிவிடவேண்டியதுதான் என்கிற முடிவோடு, நண்பர்களிடம் விடைபெறத் திரும்பியவன் அதிர்ந்துபோய் நின்றான்.
அங்கே அவன் மட்டுமில்லை, அவனுடைய நண்பர்களும், அந்தப் பெண்ணுடைய பின்புறத்தைத்தான் வாய்பிளக்கப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவனுக்கு ஏனோ அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதிலும், ஜெர்மன் நாட்டு நண்பன் ஒருவன்,
“அந்தக் கூந்தலின் அடர்த்தியைப் பார்த்தீர்களா… அந்த ஒடிசலான இடை எப்படித்தான் அந்தக் கூந்தலைத் தாங்கிக்கொள்கிறதோ… ஒரு வேளை அந்தக் கூந்தல் செயற்கையாக இருக்குமோ. இப்போதுதான் அங்கங்களைப் பெரிதாகக் காட்ட ஏதேதோ சத்திர சிகிச்சை செய்கிறார்களே. இவளும் கூந்தலை அடர்த்தியாகக் காட்டச் செயற்கையாக எதையாவது செய்து வைத்திருக்கிறாளோ…?” என்று சந்தேகம் கேட்க, அவர்களோடு அமர்ந்திருந்த பிரஞ்சு நண்பன் ஒருவன்,
“நிச்சயமாக இது செயற்கையில்லை… கூந்தலின் மினுமினுப்பைப் பார்… அதுவும் மெல்லிய காற்றுக்கும் இறுக்கமாக இல்லாமல் கூந்தல் அசைகிறது… நிச்சயமாக அது அவளுடைய கூந்தல்தான்…” என்று கூற, அதே பிரஞ்சு நண்பன்,
“வாவ்… இப்போது ரப்பன்ஸெல் டிஸ்னிவேர்ள்ட் நாயகியை நம்பவேண்டித்தான் இருக்கிறது… அம்மாடி எத்தனை அடர்த்தியாக நீளமான, கூந்தல்…” என்று வியக்க, அதைக் கேட்டுச் சிரித்த இங்கிலாந்து நண்பன் ஒருவன்,
“ரப்பன்ஸலா… ஹே… அப்படியானால் நீதான் ஃப்ளின் என்கிறாயா?” என்றான் கிண்டலுடன். இவனோ சுவாரசியத்துடன்,
“ம்… இவள் ரப்பன்ஸெலாக வருவாள் என்றால், நான் ஃப்ளினாக இருக்கத் தயார்தான்…” என்றான் குதுகலமாய்.
“அப்படியானால், லின்டாவை என்ன செய்வதாக எண்ணம்?” என்று இன்னொருவன் கிண்டலாக விசாரிக்க,
“லிண்டாவா, யார் அது… எனக்கு அப்படி யாரையும் தெரியாதே…” என்றதும்,
“அடப்பாவி, அப்படியானால் இரண்டு வருடக் காதல் அம்போதானா?” என்று மற்றவன் பலமாகக் கேட்டுச் சிரிக்க, அங்கே சிரிப்பொலி பேரலையாக எழ, ஏனோ இவனுக்குள் பயங்கரமாகப் பொறாமைத்தீ பரவத் தொடங்க, ஏன் தன் நண்பர்களை முறைக்கிறோம் என்பது புரியாமலே,
“ப்ச்… இப்போது எதற்கு இந்த ஆராய்ச்சி, சாப்பிடுங்கள்… தெரியாத பெண்ணைப் பற்றி என்ன பேச்சு…” என்று தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டிவிட்டுத் தன் உணவில் கவனத்தைச் செலுத்த, அவன் கோபத்தைக் கண்டுகொண்ட ஒரு நண்பன்,
“அட… எதற்கு உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது… ஒரு வேளை ஃப்ளினாக நீ வர விரும்புகிறாயோ…? என்றான் கிண்டலாக. இவனோ அவனை முறைத்துவிட்டு,
“வட்… என்ன உளறல் இது?” என்று சிடுசிடுக்க, அவனோ தன் தோள்களைக் குலுக்கிவிட்டு,
“இல்லை.. இங்கே நம் நால்வருக்கும் பெண்தோழிகள் உண்டு. உனக்குத்தான் யாருமில்லை… அதுதான் கேட்டேன்…” என்றதும்,
“கார்பேஜ்…” என்று கூறிவிட்டுத் தன் உணவை உண்ணத் தொடங்கினாலும், அவனையும் மீறிக் கவனம் என்னவோ அந்தப் புறமுதுகு காட்டிக்கொண்டிருந்த பெண்ணிடமே நிலைத்திருந்தது.
ஒரு பெண்ணின் புறமுதுகையும், கூந்தலையும் கண்டு இப்படிச் சலனப்பட முடியுமா என்ன? ஏன் உள்ளே என்னவோ செய்கிறது. அவள் எப்படியிருப்பாள் என்றுகூடத் தெரியவில்லை… ஆனால் இதயம் பலமாகத் துடிக்கிறதே. அது அடிக்கும் ஓசை கூடக் காதுகளில் விழுகிறதே…
குழப்பத்துடன் சாப்பிடத்தொடங்கியவனுக்கு எப்படியாவது அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என்கிற வேகம் எழுந்தது.
சற்றுப் பொறுத்துப் பார்த்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் அடங்கியிருக்க முடியாமல், சற்றும் யோசிக்காமல் இருக்கையை விட்டு எழுந்தும் விட்டிருந்தான்.
வியந்து பார்த்த நண்பர்களிடம்,
“இதோ வருகிறேன் என்றுவிட்டு, அந்தப் பெண்ணை நோக்கிச் செல்ல முயன்ற வேளையில், அதுவரை இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணும் சடார் என்று எழுந்தாள்.
அத்தனை உயரமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐந்தடி நான்கு அங்குலங்கள்தான் இருப்பாள். எழுந்தவள் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த குளிருக்கான மேலாடையையும், கைப்பையையும் இழுத்து எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்புறமாக இருந்த வாசலை நோக்கிச் செல்ல முயல, எப்படியாவது அவளோடு பேசிவிடவேண்டும் என்கிற நோக்கில், அவளைப் பின்தொடர முயன்றான் இவன்.
அப்போது உணவகத்தின் வாசல் கதவைத் திறந்து கொண்டு ஒருவர் உள்ளே வர, அவரை நோக்கித்தான் அந்தப் பெண் அத்தனை வேகமாகப் போக முயன்றாள் போலும்.
அலட்சியமாக வந்துகொண்டிருந்தவரை ஏறிட்டுவிட்டு, மீண்டும், அந்தப் பெண்ணிடம் தன் கவனத்தை நிலைக்க வைத்தவனின் புத்தியில் திடீர் என்று எதுவோ உறைத்தது.
சந்தேகத்துடன் மீண்டும் விழிகளை உயர்த்திக் கதவைத் தாண்டி வந்தவரைப் பார்த்தான். அங்கே நின்றுகொண்டிருந்த உருவத்தைக் கண்டு ஒரு கணம் குழம்பிப்போய் நின்றான் என்றால், அடுத்து அந்த உருவத்தை நோக்கிச் சென்ற அந்தப் பெண், அவரை அணைத்துக்கொள்ள, இவனுக்குள் மாபெரும் அதிர்ச்சி.
நம்ப முடியாமல் தன் விழிகளைச் சிமிட்டிவிட்டும் பார்த்தான். காட்சிகள் மாறவில்லை. அந்த ஆண்மகனை அணைத்து விடுவித்த அந்தப் பெண், அவருடைய வலக்கரத்தை அழுந்த பற்றித் தன்னோடு அணைத்தவாறு பெரும் குதுகலத்துடன், அவருடைய காதுக்குள் எதையோ கூற, அவரும் புன்னகைத்தவாறு பதிலுக்கு எதையோ கூறியவாறே அவளை அணைத்து, தலையில் முத்தமிட்டுப் பின், அவள் பிடியிலிருந்த கரத்தை விடுவித்து அவளுடைய தோள்களைச் சுற்றிப் போட்டுத் தன்னோடு நெரிக்க, இவனோ தீயை மிதித்தது போல அதிர்ந்துபோய்ச் செயலற்று நின்றான். அவனால் தன் விழிகளையே நம்ப முடியவில்லை.
ஒரு வேளை அவன் கனவு ஏதாவது காண்கிறானா என்ன? இல்லை… அவன் கனவு காணவில்லை. அது நிஜம்… அவன் விழிகள் பொய் சொல்லவில்லை. அது அவனுடைய அத்தான் ஜெயராம்தான். நிச்சயமாக அது ஜெயராமன்தான். அவன் கண்கள் பொய் சொல்லவில்லை… அந்தக் காட்சியைக் கண்டவனுக்கு எழுந்த அதிர்ச்சியில், வியர்த்து வேறு கொட்டத் தொடங்கியது. ஏதோ தவறு செய்தது போல இதயம் வேறு பலமாகத் துடிக்கத் தொடங்கியது.
ஜெயராமன் எப்படி இங்கே வந்தார்… அதுவும் இவன் வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தொழில் விடயமாக அமரிக்கா செல்வதாகக் கூறிச் சென்றிருந்தார். அமரிக்கா சென்றவர் எப்போது லண்டன் வந்தார்… ஏன் வந்தார்… அதுவும் அக்காவிடம் கூறாமல்…? கூறியிருந்தால், இறுதியாகப் பேசியபோது மாதவி நிச்சயமாகச் சொல்லியிருப்பாள்…. ’ என்று குழம்பியவனுக்கு ஏனோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலானது.
அவர் எந்தப் பெண்ணை அணைத்து விடுவித்தாலும் அவனுக்கு அது உறுத்தியிருக்காது. அவன் அக்கறைப்பட்டும் இருக்கமாட்டான். ஆனால், அமரிக்கா போவதாகச் சொல்லிவிட்டு, லண்டன் வந்து அணைத்து நிற்பதென்றால்…? இதை எப்படி எடுப்பது. குற்றம் செய்பவன்தானே பொய் சொல்வான். மறைத்து வாழ்வான். நிச்சயமாக இருவருக்கும் இடையில் ஏதோ ஒன்று இருப்பதை ஐயமறப் புரிந்துகொண்டான் அதகனாகரன்.
அதே நேரம், ஜெயராமன், அந்தப் பெண்ணின் தோளில் தன் கரங்களைப் போட்டு எதையோ அவளிடம் கேட்க, அவள் அதற்குப் பதிலாகத் தலையை ஆட்ட, பிடித்த பிடியை விடாமலே, அவளை அழைத்துக்கொண்டு அந்த உணவகத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார் அவர்.
அந்த நேரம் பார்த்து அவளுடைய நீண்ட பாவாடை தடுக்கியதோ, அவள் தடுமாறச் சடார் என்று தோள்களைப் பற்றி நிலை நிறுத்தி, எதுவோ அந்தப் பெண்ணிடம் கூற, அவளோ ஏதோ பதில் சொல்ல, அவள் முதுகில் தட்டிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு முன்னேறத் தொடங்க, இவனுக்குள் மாபெரும் பூகம்பத்தின் இரைச்சல்.
யார் அந்தப் பெண்? அவளுக்கும் ஜெயராமுக்கும் என்ன தொடர்பு? அறிந்தேயாகவேண்டும் என்கிற ஆவேசத்தோடு, தன் நண்பர்களை அங்கேயே விட்டுவிட்டு அவர்களின் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
(3)
ஏனோ அதகனாகரனுக்கு அவர்களைப் பின்பற்றிய ஒவ்வொரு அடியும் தீக்குள் இறங்கியது போன்ற அவஸ்தையைக் கொடுத்தது. ஏன் எனில் ஜெயராமன், சும்மா போகவில்லை. சும்மா சும்மா அந்தப் பெண்ணைத் தொட்டார்… அப்படித்தான் இவனுக்குத் தோன்றியது. அவனுடைய சந்தேகத்தை மேலும் வலுவாக்குவது போல, கடைகளுக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிற்கு நிறையப் பொருட்களைப் பரிசாகக் கொடுக்க, அவளும் மறுக்காமல் வாங்கினாள். போதாததற்கு அடிக்கடி அவளின் தோளிலே தட்டி, அவளை உற்சாகப் படுத்திக்கொண்டிருந்தார். அதைக் காணக் காண இவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
அங்கே தன் கணவன் ஏகபத்தினி விரதன் என்கிற இறுமாப்போடு ஒருத்தி காத்திருக்க, இங்கே யாரோ ஒரு பெண்ணோடு இத்தனை உல்லாசமாகத் திரிகிறாரே.. இவருக்கு எத்தனை திண்ணக்கம் இருக்கவேண்டும். ஆத்திரம் பற்றிக்கொண்டு வர, அந்தக் கணமே விரைந்து சென்று அவருடைய சட்டையைப் பற்றித் தூக்கி உலுப்ப வேண்டும் போலத் தோன்றியது. ஒரு வேளை இது அக்காவிற்குத் தெரிந்துதான் நடக்கிறதோ?
உடனே தன் கைப்பேசியை எடுத்துச் சகோதரியோடு தொடர்பு கொள்ள, உடனே கைப்பேசியை எடுத்தார் மாதவி.
“அக்கா… அத்தான் எப்போது அமெரிக்காவிலிருந்து வருகிறாராம்?” என்று இவன் கூர்மையாகக் கேட்க,
“ஏன்டா திடீர் என்று கேட்கிறாய்? கொஞ்சத்துக்கு முன்னம்தான் பேசினார். எப்படியும் ஒரு கிழமை எடுக்கும் என்கிறார்…” என்ற சகோதரியின் குரலில் எந்த வித்தியாசமும் இல்லை.
“ஓ… அவர் இங்கிலாந்து வருகிறேன் என்று ஏதாவது செனான்னாரா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க,
“இல்லையேடா… இன்னும் அமரிக்காவில்தான் இருக்கிறார்.” என்றதும்,
“ஓ… ஓக்கேக்கா… சரி… நான் பிறகு பேசுகிறேன்…” என்றவனுக்கு இன்னொரு சந்தேகமும் உதித்தது.
ஒரு வேளை இது ஜெயராம் போல வேறு ஒருவராக இருக்குமோ. இவன்தான் தப்பாகப் புரிந்துகொண்டிருக்கிறானோ? குழம்பியவனாக உடனே ஜெயராமின் கைப்பேசிக்கு எடுத்துப் பார்த்தான். இவன் இங்கே அடிக்க, சற்றுத் தொலைவிலிருந்தவர் கைப்பேசியைத் தூக்கிப் பார்த்தார்.
அதைக் கண்டதும் ஏனோ நெஞ்சை அடைத்தது இவனுக்கு. ஏதோ நடக்கக் கூடாதது நடப்பது அவனுக்குப் புரிந்து போக, அப்போதும் தன் கண்களை நம்பாதவனாகக் கைப்பேசியைக் காதில் வைத்து,
“ஹாய்…” என்றான். சற்று முன்னால் நின்றிருந்தவரோ,
“சொல்லு ஆகரன்…” என்ற ஜெயராம், இவனுக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்த பெண்ணுக்கு முன்பாகத் தன் உதடுகளில் சுட்டுவிரலை வைத்து அவளைப் பேசவேண்டாம் என்பது போல எச்சரிக்க, உடனே அந்தப் பெண் இரண்டடி தள்ளி நின்றாள்.
இதைக் கண்டவனுக்குள் பிராணவாயு பற்றிக்கொண்ட தீயாகக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
நம்பிய மனைவிக்குத் துரோகம் இழைப்பது எத்தனை கேவலமான செயல். அதைச் செய்துவிட்டு எத்தனை தைரியமாக உலாத்தித் திரிகிறார்… கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தாலும், அதை அடக்கியவனாக,
“ஹாய்… எங்கே இருக்கிறீர்கள்…” என்றான் அதகனாகரன். என்னதான் முயன்றும் அவன் குரலில் சீற்றம் வந்து விழத்தான் செய்தது. ஆனாலும் அதனை ஜெயராமன் கண்டுகொண்டதுபோலத் தெரியவில்லை. அவரோ கிண்டலுடன்,
“இது என்ன கேள்வி? இப்போதுதான் கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன்… ஏன் கேட்கிறாய்?” என்று அவர் கேட்க, இவனோ,
“இல்லை கனடாவில் நம் தொழிற்சாலையில் ஏதோ சின்னப் பிரச்சனையாம்… அதுதான், உங்களால் சென்று பார்க்க முடியுமா என்று கேட்க எடுத்தேன்…” என்று அவரை உற்றுப் பார்த்தவாறு கேட்க, அவரோ,
“உடனே என்றால் சிரமம் ஆகரன்… இங்கே ஒரு முக்கிய வேலையில் இருக்கிறேன் எப்படியும் கனடா செல்ல கிழமையாவது எடுக்கும்…” என்றதும் இவன் தன் பற்களைக் கடித்தான்.
‘ஆமாமாம். மிக முக்கியமான வேலைதான்….’ என்று நிறுவியவனாகப் பற்களைக் கடித்தவன், உடனே கைப்பேசியை அணைத்துத் தடித்த மேலாடையின் பையில் போட்டுவிட்டு அவர்கள் இருவரையுமே இமைக்காமல் பார்க்க, ஜேயராமும் கைப்பேசியைப் பான்ட் பாக்கட்டிற்குள் வைத்துவிட்டு, அந்தப் பேண்ணைப் பார்த்துப் புன்னகைத்து வா என்பது போலத் தலையையாட்டி முன்னே நடக்கத் தொடங்க இவன் கை முஷ்டிகள் இறுகின.
அவன் எதையும் மன்னிப்பான், ஆனால் இத்தகைய நம்பிக்கைத் துரோகத்தை… நிச்சயமாக அவனால் முடியாது. எத்தனை தைரியம் ஜெயராமிற்கு. இதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தாரா என்ன? இதைச் சும்மா விடவே கூடாது.
“அன்று தந்தை… இன்று தந்தைக்கு நிகரான அத்தான். இது… இதுதான் அவன் திருமணத்தை வெறுப்பதற்குக் காரணம். திருமணம் முடித்தபின்னும் வேறு இடத்தில் பெண் தேடுவதென்றால் அந்தத் திருமணத்திற்குத்தான் என்ன மதிப்பு. அதுவும் அந்தப் பெண்ணிற்குப் புத்தியே இல்லையா… கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தன்னையும் விட அதிக வயதுடைய ஒருவரோடு நெருங்கிப் பழகுவதென்றால், அதற்கான காரணம் பணத்தைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்… அத்தகைய பெண்களை என்னவென்று சொல்வது. சே… வெட்கம் கெட்ட ஜென்மங்கள். இதனால்தான் பணம் இருந்தால் பிணமும் வாய்பிளக்கும் என்றார்களோ? ஆத்திரமும் எரிச்சலும் போட்டிபோட அவர்களையே வெறித்துக்கொண்டு நின்றான் அதகனாகரன்.
அந்தக் கணமே நேராக அவர்களிடம் சென்று, இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துவிடவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால், உடனே அந்த எண்ணத்தை மாற்றியும் கொண்டான்.
இல்லை…! இப்போது நேராகச் சென்று விசாரித்தால் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அவனுக்கு ஆதாரம் வேண்டும்… அதற்கு முதல், அந்தப் பெண் யார் என்பதைக் கண்டறியவேண்டும். எந்தளவுக்கு அத்தானின் வாழ்க்கையில் அவள் நுழைந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இருவருக்குமான நட்பு எந்தளவு ஆழமாக இறங்கியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்….
முடிவு செய்தவனாக, அவர்களின் பின்னனாலேயே நடக்கத் தொடங்கினான் அதகனாகரன். இப்போதும் ஜெயராமின் கரம் ஒன்றைப் பற்றியவாறு எதை எதையோ பேசிக்கொண்ட நடந்த அந்தப் பெண்ணின் பின்புறம்தான் இவன் கண்களுக்கு விருந்தானது. அப்போதிலிருந்து அவளுடைய நீண்ட கூந்தலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறானே தவிர, அவள் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
அப்படி அத்தானே மயங்கும் அளவுக்குப் பேரழகியா என்கிற கேள்வியும் எழுந்தது. கூடவே உதடுகள் ஏளனமாக வளையவும் செய்தன. அவன் அக்காவிடம் இல்லாத அழகையா இவளிடம் கண்டுகொண்டார்? மீண்டும் அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பாத வகையில் பின் தொடர்ந்த அதகனாகரின் பொறுமையை அதிகம் சோதிக்காது அவளுடைய முக தரிசனம் விரைவிலேயே கிடைத்தது.
அந்தக் கடைக்குள் ஜெயராமனோடு நடந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணின் நீண்ட பாவாடையில் அமைந்திருந்த மணிகள், பொருட்களை அடுக்கும் நடுத் தட்டில் சிக்கிக் கொள்ள, “ஊப்ஸ்…” என்கிற முனங்கலோடு திரும்பிச் சிக்கிய பாவாடையைப் பற்றிக்கொள்ள. அதுவரை அவளுடைய முகத்தைக் காண்பதற்காகக் காத்திருந்த அதகனாகரன் திரும்பிய அவள் எழில் வதனத்தைக் கண்டு ஒரு விநாடி, விழிகளை மூட மறந்தவனாய், அத்தனையையும் மறந்தவனாய் சிலையாய் நின்றிருந்தான்.
அவன் பார்க்காத அழகிகளா… ஆனால் இவள்… இவள் வேறு… இத்தகைய அமைதியான அழகை அவன் இதுவரை கண்டதில்லை. சிக்கிய மணிகளை விடுவிப்பதற்காக இவன் பக்கமாகத் திரும்பியவள், மணிகள் அறுந்துவிடாத வகையில் அவற்றை விடுவிப்பதற்காகச் செழித்த கீழ் உதட்டை மேல் பற்களால் பட்டும் படாமலும் கடித்தவாறு, மெதுவாக விடுவிக்க முயன்ற அந்தத் தருணத்தில் இவனுக்குள் இனம் தெரியாத தவிப்பொன்று பேரலையாக எழுந்தது.
ஏனோ அவளைப் பொறுமையாக ரசிப்பதென்றால் ஆயுட்காலமே போதாது போலத் தோன்றியது. ஐயோ…! பிறை நுதலைக் கண்டு பித்தம் கொள்வானா? வில்போன்ற நீண்ட புருவங்களை ரசிப்பானா, இல்லை காதுவரை நீண்ட விழிகளைக் கண்டு மயங்குவானா, பற்களுக்குள் சிறைப்பட்ட செழித்த சிவந்த செவ்விய இதழ்களைக் கண்டு கரைவானா? சிக்கிய மணிகளை விடுவிக்க முயன்ற பிஞ்சுத் தளிர் கரங்களைக் கண்டு புத்தி பேதலித்து நிற்பானா, இல்லை சிலையாய் வடித்த மேடு பள்ளங்களைக் கண்டு கிறங்குவானா…? அவள் தேகத்தில் மலர்ந்த எந்த அங்கம்தான் அழகில்லை. மொத்தத்தில் வடித்து எடுத்த சிலையாய் வளைந்து நெளிந்த உடலைக் கண்டு பேச்சற்று நின்றான் அந்த ஆண்மகன். அம்மாடி… அவனே மயங்கிவிட்டான் என்றால், ஜெயராமன் எம்மாத்திரம்.
இந்த அழகை வைத்துத்தான் அவரை மயக்கினாளோ… மீண்டும் உள்ளே எதுவோ திகுதிகு என்று எரியத் தொடங்கியது. கிட்டத்தட்ட நாற்பது வயதை எட்டும் ஜெயராமனுக்கு இருபதின் ஆரம்பத்தைத் தொட்டிருக்கும், இத்தகைய அழகி கேட்கிறதா என்ன?
அந்த நேரத்திலும் ஜெயராமன் அவளைத் தப்பாகத் தொட்டிருப்பார் என்பதை ஏனோ இவனால் கற்பனையில் கூடச் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. அதை நினைக்கும் போதே அமிலத்தைக் கரைத்து அவன் மேல் ஊற்றியது போல உடல் எரிந்து போனது.
அந்தக் கணமே அக்கா கணவரின் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் துணிகொண்டு துடைத்தாற்போல வடிந்து செல்ல, ஆதிகால மனிதன் போல, அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று கண்காணாத தேசத்திற்கு மனித நடமாட்டமே இல்லாத இடத்திற்குச் சிறைவைக்கும் வேகம் பிறந்தது.
அவளை எதற்குக் கண்காணாத தேசத்திற்கு இழுத்துச் சென்று சிறைவைக்க வேண்டும்? ஜெயராம் அவளைத் தொட்டிருந்தால் இவனுக்கு ஏன் தேகம் கொதிக்கவேண்டும்…? அந்தக் கேள்விக்கான பதில் இவனிடமில்லை. ஆனாலும் அவளை ஜெயராம் இல்லாத திசைக்குக் கவர்ந்து சென்றிடவேண்டும் என்கிற வெறியே வந்தது அவனுக்கு.
தொடர்ந்து அவர்களின் பின்னால் சென்ற அதகனாகரனுக்கு ஒன்று மட்டும் நன்கு தெரிந்தது. ஜெயராமனுடன் தமிழில் பேசினாள். அதுவும் யாழ் தமிழில். அப்படியானால் இலங்கைத் தமிழாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயமாக இங்கிலாந்தில் பிறந்து வளர வாய்ப்பில்லை. ஏன் எனில் தமிழ் சுத்தமாக அறுத்து உறுத்து வெளியே வருகிறது. இவள் அண்மையில்தான் இலங்கையிலிருந்து வந்திருக்கவேண்டும். காரணம் அவளுடைய நடை உடை பாவனையில் ஊர்வாடை நிறையவே அடித்தது. முகப்பூச்சில்லாத முகம். நீண்ட புருவங்களின் மத்தியில் பொட்டு வைத்திருந்தாள். அந்த நீண்ட கூந்தல்… காற்றுக்கு ஆடை சற்று அசைந்தாலும் பதறியவாறு தன் உடலின் பாகம் வெளியே தெரியுமோ என்கிற பதட்டத்தோடு மறைக்க முயன்ற விதம்… கண்டு ரசித்த அத்தனைக்கும் வெளிப்படையாகக் குதுகலித்தாள். ஒவ்வொரு இடத்தையும் ஆவலாக ரசித்தாள். சின்னச் சின்ன விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்தாள். ஆக இன்னும் அவளிடம் மேற்கத்திய நாகரிகம் சென்று சேரவில்லை. சேர்ந்திருந்தால் ஆர்ப்பாட்டங்களைக் கூட நாகரிகமாகத்தான் காட்டியிருப்பாள். அதைப் புரிந்துகொண்டவனுக்கு அவர்கள் இருவரின் நெருக்கமும் அதீத சினத்தைக் கிளப்பியது.
நிச்சயமாக இருவருக்குமான நெருக்கம் உப்புடையதாக இருக்கப்போவதில்லை. எதற்கெடுத்தாலும் ஜெயராமனின் கரங்களைப் பற்றித் தன்னோடு அணைத்தாள். அவர் தோள் மீது சாய்ந்தாள். அவர் இடையை அணைத்தவாறு நடந்தாள். போதாததிற்குக் கிட்டத்தட்ட தோளுக்கும் சற்று உயர்ந்திருந்த அவளுடைய தலையில் ஜெயராமன் அடிக்கடி குனிந்து முத்தமிட்டு இவனுடைய இரத்த அழுத்தத்தை எகிறச் செய்தார். அவளும் ஈ என்று இழித்தவாறு அந்த முத்தத்தை ரசித்தாள். ஆக இவர்களின் நெருக்கம் எப்போதோ ஆரம்பித்திருக்கிறது. இவர்கள்தான் அது தெரியாமல் ஏமாந்திருக்கிறார்கள்.
ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர, அவர்களை மேலும் பின் தொடர்ந்தான் அதகனாகரன். இறுதியாக இருவரும் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தான்.
அப்போது கூட அக்கறையாக ஜெயராமன் அந்தப் பெண்ணின் கரங்களிலிருந்த பொருட்களை வாங்கி முன்னே செல்ல, இவளோ பெரிய இளவரசி போல ஜெயராமனைப் பின்தொடரத் தொடங்கினாள்.
மனதின் உள்ளே வன்மம் பேரலையாக எழ, நேராக வரவேற்பாளர் இடத்திற்குச் சென்றான்.
அங்கே ஜெயராமனின் பெயரில் விசாரித்தபோது, அவர் பெயரில்தான் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் கடந்த மூன்று மாதங்களாக. அப்படியானால் கடந்த மூன்று மாதங்களாக இவள் இங்கேதான் இருக்கிறாளா…? என்று எண்ணியவனுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. முன்பு அடிக்கடி இலங்கை சென்று வந்த ஜெயராமன், இப்போது சரியாகச் சொல்லவேண்டுமானால் மூன்றுமாதங்களாக முக்கியக் கூட்டம் இருக்கிறது என்று அடிக்கடி அமரிக்கா சென்றுவிடுவார். மாதவி கூட என்ன அப்படி அடிக்கடி போகவேண்டிய கூட்டம் என்று சலித்திருக்கிறாள். ஆனால் இப்படி இருக்கும் என்று சிறுதுளி கூடச் சந்தேகப்படவில்லையே.
மேலும் அந்த அறை சார்ந்த விபரங்களைச் சேகரித்துக்கொண்டு, தன் இருப்பிடத்தை வந்தடைந்த அதகனாகரன் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.