(32)
ஒரு கணம் அதகனாகரனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. என்ன சொன்னார், பெற்ற குழந்தையா…? அதிர்வுடன் அவர்கள் இருவரையும் வெறிக்க, மீநன்னயாவோ கலக்கத்துடன் ஜெயராமைப் பார்த்து,
“ராம்…” என்றாள். குனிந்து தன் கைவளைவில் இருந்தவளைப் புன்னகையுடன் பார்த்த ஜெயராம்,
“இல்லை… ராமில்லை… அப்பா… இதை ஏற்கெனவே உன்னிடம் கூறியிருந்தேன்… நீதான் உடனே அப்படி அழைக்க முடியவில்லை என்று மறுத்தாய்… நான் சொன்ன போதே என்னை முறை வைத்து அழைத்திருந்தால் இத்தனை சிக்கல் வந்திருக்காது…” என்று கண்டிப்புடன் கூற, அவளோ,
“இல்லை ராம் இப்போது உண்மையகை் கூறவேண்டுமா…” என்றாள் பெரும் வலியுடன். மெல்லியதாக வலிநிறைந்த புன்னகையைச் சிந்தியவர்,
“இப்போது சொல்லவில்லையென்றால் எப்போது சொல்வது… காலதாமதமாகும் உண்மையால் வலிதான் மிஞ்சும் மீனா… என்ன… நேரம் காலம் பார்த்து மாதவியிடம் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்… ப்ச்… இப்படி உன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடும் என்பதை முன்பே தெரிந்திருந்தால், உன்னை அழைத்து வந்த அன்றே மாதவியிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன்… எனக்கு இந்த வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பதை அறிந்தால், அவள் துடித்துப்போவாள் என்பதால்தான் சந்தர்ப்பம் பார்த்துச் சொல்ல நினைத்தேன்… எப்படியும் அவளுக்குப் புரிய வைத்துவிடலாம் என்றுதான் நம்பினேன்… ஆனால் இப்படியாகும் என்று நான் இம்மியும் எண்ணவில்லை… ரியலி சாரிமா… என்னால்தான் உனக்கு இந்தச் சிக்கல்…” என்றவர் அதகனாரனை அழுத்தத்துடன் பார்த்து,
“மீனா… வேறு யாருமில்லை… என் மகள்…” என்றதும் அதகனாகரனின் முகத்திலிருந்து இரத்தம் அப்படியே வடிந்து சென்றது. தலையை மறுப்பாக ஆட்டி,
“நோ… நோ… நான் நம்ப மாட்டேன்… இது எப்படிச் சாத்தியம்… அவளுக்கும் உங்களுக்கும் பதினெட்டு வயதுதான் வித்தியாசம்… அவள் எப்படி உங்களுக்கு மகளாக முடியும்…” என்று அதிர்ந்துபோய்க் கேட்க, மென்மையாகச் சிரித்தார் ஜெயராம்.
“ஏன்… பதினான்கு வயதிலேயே ஒரு ஆண் தந்தையாக முடியும் என்றால், பதினெட்டு வயதில் ஒரு ஆண் தந்தையாக முடியாதா என்ன?” என்று ஒற்றைப் புருவத்தை மேலேற்றிக் கேட்க, அதகனாகரனுக்குக் கால்கள் வலுவிழந்து போன உணர்வில் தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
ஏனோ அவனுடைய உடல் நடுங்கியது.
ஜெயராம் சொல்வது உண்மையா… மீநன்னயா அவருடைய மகளா… மறுப்பாகத் தலையை அசைத்தவனாக.
“இல்லை… நான் நம்ப மாட்டேன்…” என்று கூற, இப்போது சிரித்த ஜெயராம்,
“நீ நம்பவேண்டும் என்பதற்காக நான் பொய்யா சொல்ல முடியும்…?” என்றவர் கைவளைவில் கிடந்த மீநன்னயாவை விடுவித்து,
“போ… தயாராகி வா… இனி நாம் இங்கிருக்க வேண்டாம்… இனி நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை..” என்று கூற, இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“இல்லை ராம்… நான் ஈழத்திற்கே போகிறேன்… இங்கே எனக்குப் பிடிக்கவில்லை…” என்றாள் கண்களில் கண்ணீர் மல்க.
“ப்ச்… நான் இங்கே இருக்கும் போது அங்கே சென்று என்ன செய்யப் போகிறாய்… தவிர இத்தனை நாட்கள் உன்னைப் பிரிந்திருந்தது போதும்… இனி நான் இருக்கும் இடத்தில்தான் நீ இருக்கப்போகிறாய்… புரிந்ததா… போ…” என்றவர், அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த அதகனாகரனை ஏளனத்துடன் பார்த்துவிட்டு,
“நீ தயாராகி வருவதற்கிடையில் அதற்கிடையில், நம் கதையை விளங்கப்படுத்தி விடுகிறேன்…” என்றவர் அவளை அனுப்பிவிட்டு, அதகனாகரனுக்கு முன்பாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்து காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அதகனாகரனை ஆழுத்தத்துடன் ஏறிட்டார். அவன் இருந்த நிலையைக் கண்டதும், அவருடைய இதழ்களில் ஏளனப் புன்னகை ஒன்று நெழிந்து மறைந்து போக, அதகனாகரனோ, இன்னும் நம்ப முடியாதவனாக ஜெயராமைப் பார்த்து,
“எப்படி…” என்றான் ஒற்றைச் சொல்லாக. இவரோ,
“எப்படி என்றால்…”
“இவள்… இவள் உங்கள் மகளாக… எப்படி…” என்றவனுக்கு ஏனோ வார்த்தைகள் வெளிவரத் தடுமாறியது. மெதுவாகச் சிரித்தவர்,
“எப்படி என்றால்… இயற்கையான வழியில்தான் ஆகரன்…” என்றதும், ஆத்திரத்துடன் நிமிர்ந்து ஜெயராமைப் பார்த்த அதகனாகரன்
“நான் என்ன கேட்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்…” என்றான் வார்த்தைகளைக் கடித்துத் துப்பி.
இப்போதும் சிரித்தவர், பின் சற்று நேரம் அமைதி காத்துவிட்டு,
“பூங்கோதை… என் முதல் காதலி…” என்றார் ஜெயராமன் மென்மையாக. இவனோ புருவங்களை மேலே தூக்கி,
“பூங்கோதை…?” என்றான். அதற்குத் தலையை ஆட்டியவர்,
“இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு…” என்றவர் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லத் தொடங்கினார்.
(33)
முல்லைத் தீவின் ஒரு கிராமத்தின் மத்தியில் நித்திலமாய் நிமிர்ந்து நின்றது அந்தக் கலவன் பாடசாலை. தரம் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை கொண்ட அந்தப் பாடசாலையில் மானவர் கூட்டம் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருக்க, அப்போதுதான் உயர்தர வகுப்பில் காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் பெரும் கூச்சலும் கும்மாளமுமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருக்காதா, சாதாரணத் தரப்பரிட்சையை முடித்துவிட்டு நீண்ட விடுப்பின் பின்பு உயர்தரம் கற்பதற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்களே. விட்டுப்போன கதைகள் எத்தனை உண்டு பேச. அதுவும் தரம் ஆறு முதல் பத்தாம் ஆண்டுவரை ஒன்றாகக் கற்ற நண்பர்கள், தமக்குரிய பாடங்களைத் தேர்வு செய்து வகுப்புகள் பிரியும் நாள் அல்லவா அது. நிறைய ஆலோசனைகள், நிறையக் கிண்டல்கள், நக்கல்கள், நகைப்பு என்று அந்த இடமே அதிர்ந்துகொண்டிருந்தது.
பேசிக்கொண்டிருக்கும் போதே, பள்ளி ஆரம்பம் என்பதை அறிவுறுத்தும் வகையில் பாடசாலை மணி அடிக்க அனைவரும் எழுந்து நின்றனர். தேவாரம் திருவாசகத்தோடு பாடசாலை இனிதே ஆரம்பிக்க, இனியும் அங்கே கூடியிருக்க முடியாது என்பதால், ஆள் ஆளுக்கு விடைபெற்று தமக்குரிய வகுப்புகளில் புகுந்துகொண்டனர் மாணவர்கள்..
வணிகத்தை முக்கியப் பாடமாக எடுத்த மாணவர்கள் அனைவரும் தமக்குரிய வகுப்பறை இருக்கையில் அமர்ந்தவாறு ஆசிரியரின் வரவுக்காகக் காத்திருந்தவாறு ஆள் ஆளுடன் பலமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, கையில் ஒரு நீண்ட பிரம்போடு உள்ளே வந்தார் ஆசிரியர் சபாரத்தினம்.
அவரைக் கண்டாலே அத்தனை பேருக்கும் வயிற்றைக் கலக்கும். அவர் பேச முதல், அவருடைய கரத்திலிருந்த பிரம்பு பேசும் என்பதால், அவருக்குப் பயப்பட்டார்களோ இல்லையோ, அந்தப் பிரம்புக்கு அத்தனை பேரும் பயந்து அடங்கி ஒடுங்கிப் போவார்கள். அவர் உள்ளே நுழைந்ததும், அதுவரை மாவரைத்துக்கொண்டிருந்த வாய்கள் அத்தனையும் மூடிக்கொள்ள, உள்ளே வந்தவர், மூக்கின் ஓரம் வழிந்த கண்ணாடிக்கூடாகத் தன் மாணவர்களை உற்றுப் பார்த்தார்.
“குட் மார்ணிங் சார்…” என்று அத்தனை பேரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல,
“குட் மார்ணிங்… உட்காருங்கள்…” என்று விட்டுத் தன் கரத்திலிருந்த பிரம்பையும் புத்தகத்தையும் மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்து தன் முன்னால் நின்றவர்களைப் பார்த்தார். இன்னும் அமராமல் நின்றிருந்தார்கள் அவர்கள். மரியாதையாம். அவர்கள் மரியாதை எப்படிப்பட்டது என்று அவருக்குத் தெரியாதா என்ன? பிடிக்காத ஆசிரியர் என்றால், பச்சை பச்சையாகச் சுவர் வழியே எழுதிவிட்டு ஓடும் திறமை மிக்கவர்கள் ஆயிற்றே. அதனால் கையால் அவர்களை அமருமாறு பணிந்துகொண்டு,
“உட்காருங்கள்…” என்றார். அத்தனை பேரும் உட்கார, அந்த மேசையின் மீது சாய்வாக அமர்ந்துகொண்ட ஆசிரியர், ஒவ்வொரு மாணவர்களையும் தன் கூரிய பார்வையால் அளவிட்டுக்கொண்டிருக்க,
“எக்ஸ்கியூஸ்மீ சார்…” என்கிற இனிய குரல் அத்தனை பேரின் கவனத்தையும் வாசல் பக்கம் திருப்பியது.
அனைவரும் திரும்பிப் பார்க்க, முழங்கால் வரை நீண்ட வெண்ணிறச் சீருடையில் அந்தப் பாடசாலைக்கு உரிய டையைக் கட்டியவாறு இறுகப் பின்னி மடித்துக் கட்டிய இரட்டை ஜடையுடன், நீண்ட விழிகள் படபடக்க, சுண்டினால் சிவந்துபோகும் வெண்ணிறத் தோலுடன் நின்றிருந்தாள் அந்தப் பதினேழு வயதுப் பருவ மங்கை.
அவளைக் கண்ட அந்த மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு கணம் வாயடைத்துப் போனார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அத்தனை அழகாக இருந்தாள் அந்த நங்கை. வாய் பிளந்திருந்த மாணவர்களுக்குத் தம் வாயை மூடச் சற்று நேரம் தேவைப்பட்டது மட்டும் நிஜம்.
அழைப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த சபாரத்தினம், அவளை அடையாளம் கண்டுகொண்டவர் போல,
“ஓ… நீதான் பூங்கோதையா… இன்று புதிதாக இங்கே சேர்வதாக அதிபர் சொன்னார்…” என்று கூறத் தயக்கத்துடன் ஆம் என்று தலையசைத்தவளைக் கனிவுடன் பார்த்து,
“உள்ளே வாம்மா…” என்றார்.
கையில் புத்தகப் பையுடன் உள்ளே வந்தவளைச் சுட்டிக்காட்டிய சபாரத்தினம், இன்னும் விழிகளை மூடாமல் முன்னால் நின்றிருந்த அந்த அழகிய குமரியைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களிடம்,
“பிள்ளைகள்… இவள் பூங்கோதை… யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கே வந்திருக்கிறார்கள்…” என்று முடிக்கவில்லை,
“ஏன் சார்… யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிட்டார்களாமா…” என்று கிண்டலாக ஒரு குரல் பின்னாலிருந்து வந்தது. குரலை மாற்றிப் பேசியதால் யார் கேட்டது என்று தெரியவில்லை. இல்லையென்றால் சபாரத்தினத்தாரின் பிரம்பு அதற்குப் பதில் சொல்லியிருக்கும்.
யார் பேசியது என்று புரியாமல் எட்டிப் பார்த்த ஆசிரியர், கோபமாக மாணவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு,
“இவர்கள் கிராமத்தை இராணுவம் கைப்பற்றியதால், இடம் பெயர்ந்து இங்கே வந்திருக்கிறார்கள். பள்ளிப்படிப்பை முடிக்க இங்கே சேர்ந்திருக்கிறார்கள்…” என்றவர், தொடர்ந்து
“இவருடைய பெயர் பூங்கோதை…” என்று முடிக்கவில்லை,
“பூ… பூ…” என்கிற சிரிப்புச் சத்தம் பின்னாலிருந்து வந்தது.
உடனே ஆத்திரத்தோடு பிரம்பைக் கரத்தில் எடுத்த சபாரத்தினம்,
“டேய்… யாரடா அது… தைரியம் இருந்தால் முன்னால் வந்து பேசுடா…” என்று சீற, மீண்டும் வகுப்பு அமைதி காத்தது.
பின் மாணவர்களை வெறித்தவர்,
“ஊர் விட்டு ஊர் வருவது எத்தனை கடினம் தெரியுமா. அதுவும் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு வேற்று மண்ணுக்கு அகதிகளாக வருவது, அதுவும் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்வது எத்தனை கொடுமை தெரியுமா. அவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், ஆறுதலாகவாவது இருக்கலாம் அல்லவா… நீங்கள் எல்லாம் படித்து என்ன கிழிக்கப் போகிறீர்கள்…” என்று சீறிப்பாய்ந்து விட்டு, பூங்கோதையிடம் திரும்பி,
“அவர்களை விடுமா… நீ போ… போய் உட்கார்…” என்றதும், மருண்ட விழிகளுடன் அத்தனை மாணவர்களையும் பார்த்தவள், பின்பு தலையைக் குனிந்தவாறு கிடைத்த இடத்தில் அமர்ந்து கொள்ள, அதற்கு மேல் நேரத்தை விரயமாக்காமல் பாடத்தைத் தொடங்கினார் சபாரத்தினம்.
அவருடைய பாடம் முடிந்து அடுக்கடுக்காய் அடுத்த ஆசிரியர்களும் வரத் தொடங்க, இடைவேளையில்தான் அத்தனை பேருக்கும் மூச்செடுக்கவே நேரமே கிடைத்தது.
இடைவேளை என்றதும் அத்தனை பெண்களும் தம் தம் தோழிகளோடு உணவுண்ண வெளியே செல்லப் பூங்கோதை மட்டும் தனித்திருந்தவளாகப் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருந்தாள். அதை இரண்டு விழிகள் முதன் முறையாக ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தன.
(34)
ஆயிற்று இரண்டு கிழமைகள் கழிந்து விட்டன. ஆனாலும் பூங்கோதை யாருடனும் ஒட்டாமல் தனித்துத்தான் அமர்ந்திருந்தாள். விழிகளில் மட்டும் நிறையக் கேள்விகள், ஏக்கங்கள், தவிப்புகள், தேடல்கள். ஆனாலும் மன நிம்மதியற்றவளாக யாரையும் நேருக்கு நேர் பார்க்கப் பிடிக்காதவளாகக் கற்பிக்கும் பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துபவளாக இருந்தாள். அவளுடைய இந்த ஒதுக்கம்தான் அந்த இரு விழிகளையும் கவர்ந்திழுத்ததோ.
அந்த வகுப்பு மாணவர்கள் முடிந்தவரை அவளைத் தம்மோடு இணைத்து வைத்திருக்கத்தான் முயன்றார்கள். இரண்டு கைகள் கோர்க்கவேண்டும் என்றால், இரண்டு கரங்களும் எழவேண்டும் அல்லவா. இது ஒரு கரம் எழ, மறு கரம் கீழு இருந்தால் எப்படி இணைவது. இறுதியாக இவள் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டாள் என்று பிற மாணவர்கள் விலகிக் கொள்ள, பூங்கோதை அதைப்பற்றி அக்கறை கொள்ளாது தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள்.
அன்று இடைவேளையில் ஒரு ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பூங்கோதை. அன்று பாட வேலைகள் அதிகம் இருந்ததால், காலை சமைத்து எடுத்துவர முடியவில்லை. அவளுடைய சீற்றன்னைக்கும் உடல் நலம் சரியில்லை. அதனால் சமைக்க முடியவில்லை. எப்படியும் இன்று பட்டிணிதான். பெருமூச்சுடன் நிமிர, அங்கே ஆடிப்பாடித் திரியும் மாணவர்கள்தான் கண்களை நிறைத்தார்கள். அதைக் காணும் போது. உள்ளத்தில் பெரும் ஏக்கம் பூதாகரமாகத் தாக்கியது.
இப்படித்தானே அவளும் அவள் நண்பர்களோடு அகமகிழ்ந்திருந்தாள். எத்தனை குறும்புகள், எத்தனை கூத்துகள். அத்தனையும் ஒற்றை விநாடியில் காணாமல் போயினவே. எங்கிருந்தோ வந்த விமானங்கள் குண்டுகளைப் பொழிய அத்தனையும் மாறிப்போயின. அன்று நடந்த அனர்த்தத்தில் யார் எந்தத் திசையில் போகிறோம் என்றுகூடத் தெரியாமல் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு சிதறி ஓடியபோது இவளும் தந்தை சீற்றன்னை முல்லைத்தீவில் வந்து கரை சேர்ந்தாள். அவளுடைய நண்பர்கள் எங்கெங்கு சென்றார்களோ. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லையே. உலகத்திலேயே மிகப் பெரும் வலி, நல்ல நட்புகளைத் துறப்பது தானே. இதோ புதிய வாழ்க்கை ஆரம்பித்தாகிவிட்டது. ஆனாலும் புதிய நட்புகளைத் தேட மனம் விளையவில்லை. ஏற்கெனவே தொலைத்த நட்புகளின் வலி அவளை விட்டுப் போகவில்லை. இன்னும் புதிதாக நட்புகளைச் சேர்த்து, மீண்டும் அதே சிக்கல் வந்து இந்த நட்புகளையும் பிரியவேண்டி வந்தால்… வேண்டாம்… வேண்டவே வேண்டாம். உள்ளே ஆறாத வடுவாக இருக்கும் ரணத்தையே ஆற்ற முடியாமல் தவிக்கும்போது, புதிதாக இன்னொரு ரணம் வேண்டாம்… இப்படியே இருந்து படித்து முடித்துவிட்டுப் போய்விடவேண்டும்.
மீண்டும் மனதில் ஏக்கம் பேரலையாக எழுந்தது. இனி எப்போது அவளுடைய சொந்தக் கிரமாத்திற்குப் போகப் போகிறாள்? போகும் வாய்ப்பு கிடைக்குமா? ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அங்கே பெரிய வீடும், பரந்த நிலமுமாகக் குதுகலத்துடன் வாழ்ந்துவிட்டு, இங்கே சிறிய ஓட்டு வீட்டில் சிக்கி வாழச் சிரமமாகத்தான் இருந்தது. மீண்டும் அந்தச் சுதந்திரம் கிடைக்குமா என்றும் தெரியவில்லை.
கலங்கி நிற்கையில்,
“ஹே….” என்கிற சத்தம் அவள் செவிகளில் விழ, பழைய நினைவில் ஆழ்ந்திருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவள் முன்னால் அவள் வயதை ஒத்த ஒரு இளைஞன் நிற்பதைக் கண்டு, சங்கடத்துடன் சரியாக அமர்ந்தவாறு,
“ஹாய்…” என்றுவிட்டுத் தலை குனிய, அந்த இளைஞன், எந்தச் சிரமும் இன்றி அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஏனோ இவளுடைய இதயத்திற்குள் தொடர்வண்டி வேகமாகத் தடதடத்து ஓடத் தொடங்கியது.
“என் பெயர் ஜெயராம்…”
“ஓ…”
“உன் வகுப்பில்தான் படிக்கிறேன்…” என்றதும் வியந்தவளாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் தலை குனிந்து,
“ஓ…” என்றாள். சற்று நேரம் அவள் ஏதாவது பேசுவாளா என்று காத்திருந்தான் போல, அமைதியாக இருந்துவிட்டு,
“நீ சாப்பிடவில்லை…?” என்று கேட்டான் ஜெயராம். இவள் இல்லை என்று தலையை ஆட்ட,
“ஏன் சாப்பாடு எடுத்துவரவில்லையா?” என்றான் இவன். இவள் ஆம் என்று தலையை ஆட்ட, உடனே தன் புத்தகப்பையை இழுத்து எடுத்த ஜெயராம், அதிலிருந்து தன் சாப்பாட்டுப் பெட்டியை வெளியே எடுத்து,
“புட்டும் சம்பலும் இருக்கிறது சாப்பிடுகிறாயா?” என்றான். இவள் மறுப்பாகத் தலையை ஆட்டி,
“இ… இல்லை… வேண்டாம்… பசிக்கவில்லை…’” என்று கூற, அவனோ தன் உணவுப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த உணவை இரண்டு பிரிவாக்கிக் கொஞ்சத்தை உணவுப்பெட்டியின் மூடியில் வைத்து அவளிடம் நீட்ட, இவளோ தயக்கத்துடன் உணவைப் பார்த்தாள்.
பசி பெற்றுக்கொள் என்றது. புத்தியோ மறுத்தது. தயங்கி நிற்க, அவனோ அவளுடைய கரத்தைப் பற்றி அதில் பாதி உணவை வைக்க, அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை.
வாங்கியவள், இரண்டு வாய் உள்ளே தள்ள, இவனோ, அவளிடம் பேச்சுக் கொடுத்தான். அதிலிருந்து அவள் தனி ஒருத்தி என்பதும், அவள் பிறந்தபோதே வைத்தியரின் அஜாக்கிரதையால் தாயை இழந்துவிட்டாள் என்றும், தந்தை வேறு திருமணம் முடித்ததால், சிற்றன்னையோடுதான் வாழ்கிறாள் என்றும் அறிந்தபோது வதங்கித்தான் போனான் ஜெயராமன்.
ஆனால் அவளுடைய அதிர்ஷ்டம் சிற்றன்னை சிற்றன்னையாக இல்லாமல் பெற்ற தாய்போல அவளைப் பார்த்துக்கொண்டதால் அன்புக்குக் குறைவில்லைதான். ஆனாலும் பெற்ற தாய் போல ஆகாது அல்லவா… அதன் பின்பு அவள் மீது மேலும் ஈர்ப்பு வந்தது அவனுக்கு.
அதற்குப் பிறகு இருவரும் நிறையப் பேசினார்கள் நெருங்கிப் பழகினார்கள். அந்த நெருக்கத்தில் பூங்கோதை மீது பரிதாபத்தையும் மீறிக் காதல் பிறந்தது. அதை மறைத்து வைக்காமல் வாய்விட்டுச் சொல்லியும் விட்டான்.
ஆரம்பத்தில் சற்றுத் தயங்கி மறுத்தாலும், பின்னாளில் அவனுடைய அன்பும் கரிசனையும் இவளை அவன் பக்கம் இழுத்துக் கொள்ள, ஒரு மாதத்திற்குள் இருவரும் நகமும் சதையுமாகப் பழகத் தொடங்கினர்.
இவளுக்கோ ஜெயராமின் நட்பு வரப்பிரசாதத்தையும் மீறி, ஒரு விதப் போதையைக் கொடுத்தது என்பதுமட்டும் நிஜம். போதை ஏற ஏற, அது இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் கேட்குமே, அது போல ஜெயராமின் அன்பை மேலும் மேலும் பெற்றுக்கொள்ளும் வெறி அவளுக்கு வந்தது.
நண்பனைப் பார்க்கப் போகிறேன் என்று ஜெயராமனும், தோழிகளிடம் செல்கிறேன் என்று பூங்கோதையும் தம் வீட்டில் பொய்சொல்லி யாரும் இல்லாத் தனியிடங்களில் சந்தித்துக் கொண்டனர்.
இளம் கன்று பயமறியாது என்பது எத்தனை உண்மை. அந்தக் காதல் மெல்ல மெல்லக் காமத்திற்கும் வித்திட்டது. இது சரியா தவறா, நல்லதா தீயதா, சரிவருமா வராதா, இது தகுமா தகாதா என்று எதைப் பற்றியும் சிந்திக்கும் நிலையில் இருவருமே இருக்கவில்லை. காற்றிற்குக் கூட வேலியிடலாம். ஆனால் இளமைக்கு…? அதற்கேது கட்டுப்பாடு? அது சரியையும் தவறாக்கும், தவற்றையும் சரியாக்கும். இல்லாததையும் உண்டெனக் கூறும், இருப்பதையும் இல்லையென்று உறுதி செய்யும். அந்த வயது கொடுத்த துணிவில், ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் கண்டுவிடும் வேகத்தில் ஒருவரை ஒருவர் மெல்ல மெல்ல இழந்து முற்றாக இழந்த போது, இருவருக்குமே எந்தக் குற்றங்குறுகுறுப்பும் இருக்கவில்லை. ஏதோ ஒன்றைச் சாதித்த பெருமை வேறு.
அது கொடுத்த சுவையில் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர். இளமையைப் பரிமாறினர். இப்படியே காலம் சென்றிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும், ஆனால் விதி வில்லனாக இருவரின் காதலையும் பிரிக்கச் சதி செய்தது.
ஆம், அவர்கள் வசித்த பிரதேசத்தில் அரசியல் பேயாட்டம் ஆடியதன் விழைவு, மக்கள் மீண்டும் நாலா பக்கமும் சிதறி ஓடவேண்டியதாயிற்று.
அந்த நேரத்தில் கையில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு விழும் குண்டு மழைகளிலிருந்து தப்ப முயன்று ஒரு சிலர் வெல்ல, பலர் மடிந்து வீழ்ந்தனர்.
அந்த நிலையிலும் தன்னவளைத் தேடி ஓடிய ஜெயராமை வரவேற்றது சிதைந்து சிதறிய உடல் சதைத் துணுக்குகளோடான அவளுடைய வீடுதான். அதைக் கண்டு துடித்துப்போனான் ஜெயராம். அவள் எப்படியாவது தப்பியிருப்பாள், இங்கே எங்காவதுமறைந்திருப்பாள் என்கிற நப்பாசையில், அவளை அங்கும் இங்கும் தேடி ஓடினான். சிதைந்த வீட்டோடு அவளும் சிதைந்து போனாளோ. கத்திக் கதறினான். துடித்தான். மண்ணில் புரண்டான்… ஒரு வேளை அவள் தப்பியிருப்பாளோ என்று கொஞ்ச நம்பிக்கையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் விசாரித்தான். எங்கே என்று விசாரிப்பான். விசாரிக்க மனிதர் கூட்டம் அங்கே இருக்க வேண்டுமே.
முடிந்த வரை முயன்றான். சிக்கிய அவளுடைய நண்பர்களிடம் விசாரித்தான். அப்போதுதான், அந்தப் பகுதியில் வாழ்ந்த அத்தனை பேரையும் அங்கே விழுந்த குண்டு பலிவாங்கிவிட்டது என்கிற செய்தியை அறிந்து உடைந்து நொறுங்கிப் போனான் ஜெயாரம்.
இதற்கிடையில் இனி அங்கே இருக்க முடியாது என்பதை அறிந்த அவனுடைய பெற்றோர், அவனையும் இழுத்துக்கொண்டு கிடைத்த தோணியில் திருகோணமலைக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்து சேர்ந்தார்கள்…
ஆனாலும் பூங்கோதையின் இழப்பிலிருந்து ஜெயராமனால் மீண்டு வரவே முடியவில்லை. கிட்டத்தட்ட அவள் நினைவை ஒதுக்க அவனுக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன. மெல்ல மெல்லத் தேறி நிமிர்ந்தவனைப் பணம் கட்டிக் கனடா அனுப்பி வைத்தார்கள் அவனைப் பெற்றவர்கள். கனடா வந்தான். படித்தான், அதற்கேற்ற தொழிலைச் செய்தான். கிட்டத்தட்ட முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த மகனுக்குத் திருமணம் செய்து வைக்க அவனுடைய பெற்றோர் விரும்ப, பூங்கோதையை மனைவியாக ஏற்றுக்கொண்ட ஜெயராமனால் அத்தனை சுலபத்தில் இன்னொரு பெண்ணை ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை.
பல மறுப்புகள், விவாதங்கள், கெஞ்சல்கள், வேண்டுதல்கள். இறுதியில் ஓரளவு தன்னைச் சமப்படுத்தியவனாக திருமணத்திற்குச் சம்மதித்தான் ஜெயராம். ஆனால் ஒரே ஒரு உறுதியோடு.
தனக்கு ஈழத்தில்தான் பெண் வேண்டும் என்று அவன் விடாப்பிடியாக இருக்க, ஈழத்திலேயே பெண் தேடத் தொடங்கினார்கள்… என்று பிசிறில்லாமல் சொல்லிக்கொண்டு வந்தவர், நிமிர்ந்து அதகனாகரனைப் பார்த்து, அப்போது கிடைத்தவள்தான் உன் அக்கா.
தாய் தந்தை இல்லாமல், தன் தம்பியைத் தனியாக வளர்த்த உன் அக்கா மீது எனக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் வந்தது. அப்போது அவளைத்தான் திருமணம் முடிப்பது என்று முடிவு செய்தேன். ஆனால் என் அம்மாவுக்கு அத்தனை உடன்பாடு இல்லை. தன் மகனின் படிப்புக்கும் சம்பாத்தியத்திற்கும், நல்ல வரதட்சணையோடு பெண் பார்க்கலாம் என்று எதிர்பார்த்திருந்தார்கள் போல. நான் மாதவியைத் தேர்ந்தெடுத்ததும் முதலில் மறுத்தார்கள். ஆனால் அவர்களின் மறுப்பை என் கருத்தில் போடவில்லை. வேறு வழியில்லாமல் என் விருப்புக்கே விட்டுவிட்டார்கள். இறுதியாக,
“மாதவியை மணம் முடித்து அவளைக் கனடா அழைத்துக்கொண்டேன். அவளோடு உன்னையும் வரவழைத்தேன்..” என்று கூற, அதகனாகரனுக்குச் சற்று நேரம் பேச்சே எழவில்லை.
எத்தனை பெரிய தவறு செய்துவிட்டான்… இப்படியேன் அவன் யோசிக்கவில்லை. அதுவும் ஜெயராமனுக்கும் மூச்சிழுப்பு உண்டு. மீநன்னயாவுக்கும் மூச்சிழுப்பு வந்தபோது, இரண்டையும் சேர்த்துப் பார்க்க ஏன் தவறினான்…? அப்படி யோசித்திருந்தால் ஒரு வேளை இந்த அசம்பாவிதம் இத்தனை தூரத்திற்கு வந்திருக்காதோ. ஆனால் அவனும் என்னதான் செய்வான். அப்படிச் சந்தேகப்படுவதற்கான வழி இம்மியும் இருக்கவில்லையே. கலக்கத்தோடு ஜெயராமைப் பார்த்தவன்,
“இது… அ… அக்காவிற்குத் தெரியுமா?” என்றான் வேதனையோடு.
அவனை நேராகப் பார்த்த ஜெயராமன், மறுப்பாகத் தலையை ஆட்டி,
“இல்லை… என் காதல் மண்ணோடு மண்ணாகப் புதைந்த கதை என்று நினைத்தேன், அதனால் இறந்து போன என் காதல் இறந்ததாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்தேன். தவிர உனக்கு உன் அக்காவைப் பற்றி நன்கு தெரியுமே… அவள் ஒருத்திக்கு ஒருத்தன் என்கிறதில் அசையாத நம்பிக்கை கொண்டவள். அப்படியிருக்கையில் நிச்சயமாக எனக்கு ஒரு காதலி இருந்தாள் என்பதை அறிந்தால் அவளால் தாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும்… அதனால் இதுவரை அது பற்றி அவளிடம் பேசவில்லை. ஆனால் புதைந்த காதல் துளிர்த்து இப்படி விருட்சமாகும் என்று சத்தியமாக நினைக்கவில்லை. ஆனால் ஒன்று, நிச்சயமாக என் பூங்கோதை உயிரோடு இருந்திருந்தால், அவளைத் தவிர நான் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்திருக்கமாட்டேன்…” என்றவரைக் கோபமும் வலியும் சேரப் பார்த்தான் அதகனாரகன்.
அவர் சொல்வதில் பொய்யில்லை என்பது புரிந்தது. அதற்கு ஆதாரமே தான் பெற்ற மகளுக்குத் தன் முன்னால் காதலியின் பெயரை வைத்ததே சான்று. ஆனால் தன் மகளுக்கு இவருடைய காதலியின் பெயரைத்தான் வைத்தார் என்று அக்கா தெரிந்துகொண்டால், அவளால் அதைத் தாங்க முடியுமா?
“நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்… திருமணத்திற்கு முன்பு அக்காவிடம் உங்கள் காதல் கதையைக் கூறியிருக்கவேண்டும்…” என்று அவன் கூற, ஆம் என்பது போலத் தலையை ஆட்டிய ஜெயராமன்,
“ஆமாம்… இப்போது அதை எண்ணி வருந்துகிறேன்… மாதவியிடம் முன்பே என் காதல் பற்றிக் கூறியிருக்கவேண்டும்… கூறியிருந்தால், நிறையப் பிரச்சனைகளுக்கான தீர்வைச் சுலபத்தில் கண்டிருக்கலாம்…” என்று வாய்விட்டு முனங்கிவிட்டு வலியோடு அதகனாகரனைப் பார்த்து,
“அப்போது அது தேவையில்லை என்று நினைத்தேன். ஆனால்…” என்றவர், எதையோ மென்று முனங்கிவிட்டு, “இப்படி எனக்கு ஒரு வாரிசு இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லையே… எனக்கும், பூங்கோதைக்கும் ஒரு குழந்தை உருவாகும் என்று கனவில் கூடச் சந்தேகிக்கவில்லையே… அப்போதிருந்த சூழ்நிலையில் இதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் நாம் இருவரும் இருக்கவில்லை… கிடைத்த சொற்ப நேரத்தில் சந்தோஷமாக இருந்துவிடவேண்டும் என்றுதான் நினைத்தோமே தவிர, இத்தனை விபரீதம் நிகழும் என்று யோசிக்கவேயில்லை ஆகரன். தவிர, இன்று இருக்கும் அறிவுக் கல்வி அப்போது நமக்கு இருக்கவில்லையே… ஒரு வேளை இப்போதிருக்கும் அறிவுக்கல்வி அப்போது இருந்திருந்தால், மீனா உருவாகியிருக்கமாட்டாளோ என்னவோ…” என்றவர், சற்று நிதானித்து,
“மீனா எதிர்பார்க்காத விபத்துதான் ஆகரன்…” என்றவரை முறைத்தவன்,
“மீநன்னயா உங்கள் மகள்தான் என்பதற்கு என்ன ஆதாரம். அவள் அந்தப் பூங்கோதையின் மகள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று அவள் இவர் மகள் என்பதை நம்ப முடியாதவனாகச் சற்று எரிச்சலுடன் கேட்க, அதை உணர்ந்தவர் போல வலிமிக்க ஒரு புன்னகையைச் சிந்தினார் ஜெயராம்.
“இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இலங்கை போனது உனக்கு நினைவிருக்கிறதா… அப்போது தமிழ் ஈழத்தில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு முகாம் இருந்தது. அந்த முகாமிற்குள் அத்தனை சுலபத்தில் யாரும் சென்றுவிட முடியாது, என்பதால் என் நண்பரின் துணையோடு அங்கே இருக்கிற மக்களைப் பார்க்க அனுமதி வாங்கிச் சென்றிருந்தேன். அப்போதுதான் மீநன்யாவை எதேட்சையாகப் பார்த்தேன்.
அந்த முகாமில் அநாதை போல, தண்ணீர் தொட்டியின் அருகே இருந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். அது வேறு பெண்ணாக இருந்திருந்தால் என் கருத்தைக் கவர்ந்திருக்காது, ஆனால், அவளைப் பார்க்கும் போது, அப்படியே என் பூங்கோதையை நகல் எடுத்ததுபோலத் தெரிந்தது ஆகரன். அதே கண்கள், அதே நாசி, அதே தங்க நிறம்… நான் என்னையும் மறந்து பூங்கோதை என்று அழைத்தே விட்டேன்.
என்னால் அந்த விநாடியை மறக்கவே முடியவில்லை. என் தேகமே நடுங்கத் தொடங்கிவிட்டது. பூங்கோதை என்று அழைத்தபோது, பளிச்சென்று சிரித்தாள்.
“என் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா…?” என்று கேட்டாள். அப்போதுதான் அவள் பூங்கோதையின் மகள் என்பதே தெரிந்தது. நான் நினைத்தது போல என் பூங்கோதை இறக்கவில்லை, யாரையோ மணந்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நினைத்து நான் பட்ட ஆனந்தம். ஆனால்… ஆனால்…” என்றவர் நெஞ்சில் அடைத்துக் கிளம்பிய வலியை விழுங்கி “அவளிடமே அவள் அன்னை எங்கே என்று கேட்டபோது, இறுதிப் போரில் அன்னையைப் பலிகொடுத்துவிட்டு, அவளுடைய தாயின் சிற்றன்னையின் பராமரிப்பில்தான் வாழ்கிறாள் என்று அறிந்ததும் துடித்துப்போனேன் ஆகரன்.
உடனே அவளுடைய பாட்டியைச் சந்திக்கப்போனேன். இன்றோ நாளையோ என்று தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தார் அவர். அவருக்கும் போர் அனர்த்தத்தால் உடல் சேதமாகி இருந்தது. அவரிடம் பேசியபோதுதான், என் தலையில் பெரிய குண்டே விழுந்தது. திருமணம் ஆகாமலே தாயாகிவிட்டாள் என்று கூறி அந்தப் பாட்டி அழுதபோது துடித்துப்போனேன் ஆகரன்.
நான் நினைத்தது போல, மீனா, பூங்கோதைக்கும் வேறு யாருக்கோவும் பிறக்கவில்லை. அவள் எனக்குப் பிறந்திருக்கிறாள் என்கிற நிஜம் தெரிந்தபோது, கடவுளே… என் உணர்வுகளை எப்படி விவரிப்பேன்.” என்றவர் தன் வலியை வழித்தெடுப்பது போல முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டார். ஆனாலும் குரல் கரகரக்கத்தான் செய்தது.
அவள் என் மகள்… என் குழந்தை… நம் அவசரத்தால் ஜனித்தவள், அவள் அங்கே ஒரு தகர வீட்டில், ஒரு மூதாட்டிக்கு ஆயா வேலை செய்யும் சேவகியாகக் கண்டபோது என்னால் தாளவில்லை ஆகரன். அதற்குப் பிறகு, அந்தப் பாட்டியும் அதிகநாட்கள் உயிரோடு இருக்கவில்லை. நான் சந்தித்து விட்டு வந்த மறு மாதமே உயிரை விட்டுவிட்டார் என்கிற செய்தி அறிந்து மீண்டும் போனேன். அது வரை மீனாவுக்கும் நான்தான் அவளுடைய அப்பா என்று தெரியாது. அதைச் சொல்லும் தைரியமும் எனக்கிருக்கவில்லை.
எப்படிச் சொல்வேன். அத்தனை சிக்கலிலும் அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, நான் கனடாவில் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன் என்கிற ஆற்றாமை என்னைச் சொல்ல விடவில்லை. அந்த மூதாட்டி இறந்தபின்தான், அவளிடம் நான் யார் என்பதை மெதுவாகச் சொன்னேன்.
ஆனால் நான் நினைத்தது போல அவள் அழவில்லை, என்னைத் திட்டவில்லை, இரண்டு துளி கண்ணீர் மட்டும் விட்டாள். அதன் பிறகு “ஓ…’ என்றாள். நான் நடந்ததை ஒன்று விடாமல் அவளிடம் சொன்னேன். அமைதியாகவே கேட்டாள். நான் மன்னிப்பு வேண்டிய போது கூட,
மன்னிப்புக் கேட்க நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று என்னிடமே கேட்டாள். மிகச் சுலபமாக என்னை மன்னித்து விட்டாள் ஆகரன்.
அப்போது முடிவு செய்தேன், அவள் இழந்த மகிழ்ச்சியை மீளக் கொடுப்பதென்று. எப்படியாவது மீனாவைக் கனடாவிற்கு வரவழைக்கத்தான் முயன்றேன்… சட்ட ரீதியாக அவளை அழைத்துவர முடியாது. அதனால் பணம் கட்டி அழைத்து வர முயன்றேன். ஆனால், ஏதோ கனடாவிற்கு அழைத்துவருவது சிக்கல் என்று, இங்கிலாந்திற்கு அழைத்துவந்து விட்டார்கள்…” என்று வலியோடு கூறியவர், அதகனாகரனை ஏறிட்டு,
“இதை எப்படி உன் அக்காவிடம் கூறுவது என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்கொரு மகள் இருக்கிறாள் என்று சொன்னால், அதை என் மாதவி ஏற்றுக் கொள்வாளா… நிச்சயமாக அவளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாதே… உன் அக்கா மட்டுமில்லை, எந்தப் பெண்ணாலும் அதைத் தாங்கியிருக்க முடியாதே ஆகரன்… அதனால் சரியான தருணம் வந்ததும் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்… ஆனால் அதற்குள்…” என்று அவர் கலங்க, இவனோ தொண்டையில் எதையோ வலியுடன் விழுங்கிவிட்டு,
“ஆனால் அவள் உங்களை ராம் என்று அழைத்தாளே…” என்றவனுக்கு, அவளின் ராம் என்கிற அழைப்பில் அதிகக் கடுப்பானது நினைவுக்கு வந்தது. அவரை அப்பா என்று அழைத்திருந்தால் சற்று சுதாரித்திருப்பானே. தன் ஆதங்கத்தைக் கூற, இப்போது பெருமூச்சுடன் நிமிர்ந்து அதகனாகரனைப் பார்த்த ஜெயராம்,
“அவளிடம் முதலில் அறிமுகமாகும் போது என்னை ‘அங்கிள்‘ என்றழைத்தாள். அந்த அழைப்பு எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் அப்பா என்று கூப்பிடு என்று சொல்லவும் முடியவில்லை. அதனால் என் பெயரைச் சொல்லி அழை என்று கண்டிப்புடன் சொன்னேன். முதலில் தயங்கிவிட்டுப் பின் ராம் என்று அழைத்தாள். அதற்குப் பிறகு என் மகள் என்று தெரிந்த பின், என்னை அப்பா என்று அழைக்கச்சொல்லிக் கேட்டேன், ஆனால், அவள்தான் மறுத்துவிட்டாள். இதுவரை காலமும் தந்தை என்கிற உறவு இல்லாமலே வாழ்ந்து வந்தவளிடம், திடீர் என்று நான்தான் உன் அப்பா, அப்பா என்று அழை என்றால், உடனே அழைத்து விட முடியுமா ஆகரன். தவிர எனக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்தியாசம், மகனுக்கும் மகளுக்கும் உள்ள வித்தியாசமா சொல்… அவள் தயக்கத்திலும் நியாயம் இருந்ததால் விட்டுவிட்டேன்.. தவிர அந்த ராம் என்கிற அழைப்பே எனக்கு அப்பா என்று அழைப்பது போலத்தான் தோன்றியது. அவர் முடிப்பதற்குள்ளாக மீநன்னயா பெட்டியோடு கீழே வந்துகொண்டிருந்தாள்.
அவளுடய முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமலிருக்க விழிகளோ அதகனாகரனையே வெறித்துப் பார்த்தன. இனி அவள் முடிவு என்னவாக இருக்கும்? அவன் செய்ததை மன்னித்து மறப்பாளா? இல்லை வெறுத்து ஒதுக்குவாளா?