Mon. Apr 28th, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 27/28

(27)

சுவைக்க அறுசுவையுணவு இருக்கும்போது யாராவது அதைத் தவிர்த்து விரதம் இருப்பார்களா என்ன? அந்த ஆண்மகனுக்குத்தான் எத்தனை வேட்கை எத்தனை அவசரம். தன் முன்னால் படைக்கப்பட்ட அக்கனியைப் புசித்துவிடும் அவசரம் அவனுக்கு.

அதனால் அவன் கரங்களோ தம் வித்தையைத் தாறுமாறாக அவளிடம் காட்டிக்கொண்டிருக்க, ஒரு கணம் அவனிடமிருந்து துடித்து விலக முயன்றவள், அந்தக் கரங்களின் ஜால வித்தையில், புத்தியும் சித்தியும் தன்னிலை கெட, அக் கரங்கள் கொடுத்த அதிர்வைத் தாங்க முடியாதவளாக அவளையும் மீறி விழிகள் மூடி ரசிக்கத் தொடங்க, மறு கணம் அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான் அதகனாகரன். அது கூடப் புத்தியில் உறைக்காமல் கிடந்தவளுக்கு உலகமே மறந்துபோயிற்று.

அவன் மந்திரம் தந்திரம் ஏதாவது கற்றுக்கொண்டானோ? இல்லை ஆளை மயக்கும் வித்தையில்தான் தேர்ச்சிபெற்றவனோ… இப்படி மாயவலை பின்னி அவளைச் சிந்திக்கவிடாது செய்துவிடுகிறானே… அடுத்து என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே மீநன்னயா அதகனாகரனின்  அறைக்குள் அவன் கரங்களுக்குள் தஞ்சமெனக் கிடந்திருந்தாள்.

அந்த நேரத்தில் அக் கோதையின் புத்தி எதையும் யோசிப்பதாயில்லை. எதையும் எண்ணுவதாக இல்லை. அவனிடம் தாம்பத்திய வாழ்க்கைக்கு மறுத்தது சுத்தமாக மறந்து போனது. அந்தக் கணம், அந்த விநாடி மட்டுமே நிஜம்போலத் தோன்ற, கடற்தனாலங்கள் அத்தனையும் மொத்தமாய்த் தொலைந்து போக, அந்தக் கணத்தைத் தவறவிட்டால் இனி கிடைக்காதோ என்று அஞ்சியவள் போல விழிகள் மூடி அந்த உலகத்திடமிருந்து தன்னை மறைக்க முயல, அவனோ அந்த மலருக்கு நோகாத வகையில் மெதுவாகப் படுக்கையில் கிடத்தினான். பின் தாபத்துடன் அவளை நெருங்கத் தொடங்கினான்.

மலரின் தேனைப் புசிக்கவேண்டுமானால் அதன் இதழ்களைக் களையவேண்டுமா என்ன? ஆனால் இவனோ அதைத்தானே செய்கிறான்… அந்த அழகிய முகத்திலிருந்து தன் பார்வையை விலக்காமலே, மெல்ல மெல்ல அந்த மலரின் இதழ்களைக் களைந்தவன், இறுதி இதழையும் களைந்த பின், அவளுடைய திருமேனியைக் கண்டு ரசிக்கத் தன் விழிகளை மெது மெதுவாகக் கீழே கொண்டு சென்றான். சங்குக் கழுத்து அவனை வா என்றழைக்க மறுப்புச் சொல்லாமல் கழுத்தை நோக்கிக் குனிந்து தன் உதடுகளை அங்கே பதித்துச் சற்று நேரம் இளைப்பாறிவிட்டு நிமிர்ந்தவன், பின் தாபத்துடன் விழிகளைச் சற்றுக் கீழே எடுத்துச் சென்றான்.

முதலில் குழம்பினான். பின் திகைத்தான். இறுதியில் அதிர்ந்தவனாகப் பதறி விலகி,

“வட் த ஹெல் இஸ் தட்…” என்றான் அதிர்வுடன். அதுவரை இனம்புரியாத சுகத்துடன், ஒரு வித எதிர்பார்ப்புடன் அவனுடைய கரங்களில் குழைந்த களிமண்ணாகக் கிடந்வதள், அந்த அதிர்ந்த குரலில், உடைந்த பானையாகப் பதறியவாறு விழிகளைத் திறந்தாள் மீநன்ன்யா.

அப்போதுதான் அவளுக்குத் தன் நிலையே புரிந்தது. எப்போது நடந்தது. அவன் ஆடைகள் விலக்குவது கூடத் தெரியாமலா தன்னிலை கெட்டிருந்தாள்…? அவள் நினைத்ததென்ன நடப்பது என்ன… பரிதவிப்போடு அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ இன்னும் அவளுடைய உடலிலிருந்து பார்வையை விலக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அதைக் கண்டதும், இவளுக்குக் கைகால்கள் நடுங்கத் தொடங்கின.

இதோ… இதற்காகத்தானே அஞ்சினாள். இதற்காகத்தானே திருமணம் வேண்டாம் என்றாள்… இதற்காகத்தானே படுக்கையைப் பகிர முடியாது என்றாள்… ஒரு முறை அனுபவப்பட்டது போதாதா… மீண்டும் அதை அனுபவிக்கவேண்டுமா… எல்லையில்லா வலியுடன் எழுந்தவள், மேனியை முடிந்த வரைக்கும் கரங்களால் மறைத்தவாறு திரும்பி நின்றுகொள்ள, இவனுடைய முகத்திலும் இனம்புரியாத ஒரு உணர்வு வந்து நின்றது.

நம்ப மாட்டாதவனாக அவளை நெருங்கியவன், சுட்டுவிரல் கொண்டு அவள் வலது தோளிலிருந்து, இடைவரை விகாரமாய் இழித்துக்கொண்டிருந்த அந்தக் கடிய தழும்பின் மீது கோடுவரைய, அந்த நிலையிலும் உடல் சிலிர்த்து நின்றவள் தேகம் நடுங்க, எல்லையில்லா அவமானத்தோடு,

“என்… என் ஆடைகளைக் கொடுக்கிறீர்களா…?” என்றாள் குரல் கம்ம.. அவனோ அவள் முதுகையே வெறித்துப் பார்த்துவிட்டு அவளை நெருங்கித் தன்னை நோக்கித் திருப்ப, அவளோ திரும்ப மறுத்தாள்.

“நன்னயா… ஐ… ஐ நீட்டு சீ யு…” என்று அவன் மென்மையாகக் கிசுகிசுக்க, அந்தக் குரல் அவளை மயக்கியதோ… இப்போது மறுக்காமல் அவனை நோக்கித் திரும்பினாள். மார்புகளுக்குக் குறுக்காகப் போட்டிருந்த கரங்களைக் கண்டு, அத் தளிர் கரங்களின் மீது தன் கரங்களைப் பதித்து மெதுவாக இறக்க, இப்போது இடதுபக்க அடி மார்பிலிருந்து அடித் தொடை வரை ஆங்காங்கே குன்றும் குழியுமாக, இறுகிச் சிதைந்து சுருங்கிக் கறுத்து என்று அசிங்கமான தழும்புகள் அந்தப் பால்போன்ற வெண்ணிற மேனியில் விகாரமாக இழித்துக்கொண்டிருந்தன. கூடவே இடதுபக்கத் தொடையிலும் அதே விகாரத் தழும்புகள்.

பெறுமதி மிக்கச் சிற்பம் ஒன்றைக் கல்லெறிந்து உடைத்தால் எப்படி வலிக்கும். அப்படி வலித்தது அவனுக்கு. அவளுடைய முகத்திற்கும் உடலுக்கும் சம்பந்தமேயில்லாமல் இப்படிச் சிதைந்துபோயிருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே. காமம் மொத்தமாய் விலகிச் செல்ல, அங்கே வலியும் வேதனையும் நிறைந்திருக்க, அவளை ஏறிட்டவன்,

“எ… என்ன ஆயிற்று… உனக்கு எப்படி… இப்படி…” என்றான் ஏதோ அந்தத் தழும்புகள் தன் உடலில் இருப்பது போன்ற உணர்வோடு.

அவனைவலியுடன் ஏறிட்ட மீநன்னயா… அவனை விட்டு விலகிச் சென்று, தரையில் கிடந்த தன் ஆடைகளை நிதானமாக எடுத்து அணிந்தவாறே அவனைத் திரும்பிப் பார்த்து விரக்தியுடன் சிரித்தாள். பின், கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க,

“காலங்கள் விட்டுச் சென்ற அழியாத வடு ரஞ்சன்…” என்றவள் இறுதியாகத் தன் மேலாடையின் பொத்தான்களைப் போட்டுஅசிங்கமான தேகத்தை மறைக்க முயன்றவளாக,

இலங்கை யுத்தம் கொடுத்துவிட்டுச் சென்ற அழியாத வடு இது… என்னுடைய பன்னிரண்டாவது வயதில், அம்மாவும் நானும் நின்ற இடத்திற்கு முன்பாகத் திடீர் என்று குண்டு வெடித்தது… என்னைக் காக்க முயன்ற அம்மா உயிரோடு திரும்பவில்லை… இந்தக் காயங்களோடு நான் மட்டும் தப்பிப் பிழைத்தேன்…” என்றவள் பெரும் வலியுடன் அவனைப் பார்த்துச் சிரித்து,

“இப்படிப் பிழைக்காமலே இருந்திருக்கலாம் இல்லையா…” என்றாள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு. பின் ஆழ மூச்செடுத்து விட்டவள், பின் மெல்லியதாகச் சிரித்து,

“நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருக்கிறீர்களா… ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்… நானும் அப்படித்தான்… என்னைப் பார்க்கும்போது உலக அழகியாகத்தான் தெரியும்… ஆனால்…” என்றவள் முடிக்க முடியாமல் திணற, ஓரேட்டில் மீநன்னயாவை நெருங்கிய அதகனாகரன் அவள் மீதிருந்த பழிவாங்கும் உணர்வை மொத்தமாய் மறந்தவனாக, அவளை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்து,

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே… இது வெறும் வடுக்கள்தான்… வலி கொடுக்கும் காயங்கள் அல்ல…” என்றான் சமாதானப்படுத்தும் முகமாக.

அவனுடைய அந்த அன்பான அரவணைப்பில், விசும்பத் தொடங்கினாள் மீநன்னயா.

“இது… இதற்காகத்தான் திருமணம் வேண்டாம் என்றேன்… இதற்காகத்தனர் படுக்கையைப் பகிரமுடியாது என்றேன்… என்னை நினைக்கும்போதே எத்தனை அசிங்கமாக இருக்கிறது தெரியுமா…? எத்தனை கேவலமாக இருக்கிறது என்று தெரியுமா…? இதிலிருந்து தப்ப எவ்வளவோ முயல்கிறேன்… ஆனால் முடியவில்லையே… நான் என்ன செய்யட்டும்…” என்று விம்மியவள், பின் என்ன நினைத்தாளோ, அவனை உதறிவிட்டு விலகி,

“இது… இது சரி வராது ரஞ்சன்… என் உடல் உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாது… நிச்சயமாகப் பூர்த்தி செய்யாது… இது அசிங்கமான உடல்…” என்றவள் அதற்கு மேல் பேச முடியாதவளாக அவனுடைய அறையைவிட்டு வெளியே ஓட, இவன்தான் பேயறைந்தது போல அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

சத்தியமாக இத்தகைய ஒரு திருப்பத்தை அவன் நினைக்கவேயில்லை… இப்படி ஒரு அவலம் அவள் வாழ்க்கையில் நடந்திருக்கும் என்றும் அவன் சிந்திக்கவில்லை. விழிகளை அழுந்த மூடித் தலைகுனிந்து நின்றவனுக்கு மீண்டும் மீண்டும் அந்த விகார தேகம்தான் நினைவுக்கு வந்து பாடாய்ப் படுத்தியது. பன்னிரண்டு வயது சிறுமிக்கு என்ன தெரியும்… அவளுக்கு ஏன் இத்தனை பெரிய வலியைக் கடவுள் கொடுத்தான். கடவுளே… எப்படியெல்லாம் வலித்திருக்கும்… தாய் இறந்தது அவளுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாதோ… தாய் உலகத்தில் இல்லை என்றபோது எப்படித் துடித்திருப்பாள்… தந்தைவேறு எங்கே போனார் என்று தெரியவில்லை என்றாளே… யாருமில்லாத அநாதையாக எப்படித் தவித்திருப்பாள்… அதிலிருந்து தப்பத்தான் ஜெராமை கேடயமாகப் பற்றிக்கொண்டாளோ. கிளை விட்டுத் தரையில் விழுந்த கொடியொன்று, பற்றுவதற்கு ஏதாவது கிடைத்தால், அதை நோக்கிப் பாயுமே… அதுபோலத்தான், அவளும் ஜெயராமின் துணைகொண்டு உயிர்த்தெழ முயன்றாளோ… ஜெயராமும் அவளுடைய அவலத்தைப் பயன்படுத்திக் கொண்டாரோ. நலிந்து கிடந்தவளிடம் தன் தேவையைத் தீர்க்க இங்கே அழைத்து வந்தாரோ… விளக்கைக் கண்டதும் அது சுடும் என்று தெரியாமலே வந்து பாயும் விட்டில் பூச்சிகள் போல, அவர் மாயையில் வந்து விழுந்துவிட்டாளோ…?

இப்போது அவள் மீதிருந்த கோபம் சற்றுக் குறைந்து போயிற்று என்று சொன்னால் அது மிகையில்லை.

நிச்சயமாக அந்தத் தேகத்தைப் பார்க்கும்போது காமம் சுத்தமாகத் தொலைந்துபோகும். ஆனால் யாரோ செய்த தவற்றுக்காக இவளை எதற்காக விதி தண்டிக்கிறது? தவிப்புடன் எழுந்தவன் அங்கும் இங்கும் நடந்தான்.

மீண்டும் அவன் அணைக்கும் போது ஆர்வமும் தேடலும் ஒன்று சேரப் பார்த்த அவளுடைய முகம் இவன் உள்ளத்தைப் பிசைந்தது. கூடவே அவன் விலகியபோது ஏற்பட்ட வலியும் இவனைத் தவிக்கச் செய்ய, அவளுடைய வலியைத் தன் வலியாக உணர்ந்தவன் போலத் தற்காலிகமாக அவள் மீதிருந்த வன்மத்தை மறந்து, எப்படியாவது அவளைத் தேற்றிவிடவேண்டும் என்கிற வேகத்துடன் அவளுடைய அறையை நோக்கிச் சென்றான் அதகனாகரன்.

அங்கே அவள் இல்லை. எங்கே போனாள்… அப்போதுதான் குளியலறையிலிருந்து குளிக்கும் சத்தம் கேட்க, விரைந்து சென்று தட்டிப் பார்த்தான். திறக்கவில்லை. குமிழைத் திறக்கக் கதவு திறந்து கொண்டது.

(28)

அதே நேரம் தன் அறைக்கு வந்த மீநன்னயாவிற்கும் அழுகை அணையுடைத்துக்கொண்டு வந்தது. கூடவே தன் மீது ஆத்திரமும் பற்றிக்கொண்டும் வந்தது.

எந்தத் தைரியத்தில் அவனோடு கலக்கத் தயாராக இருந்தாள். அவளுடைய தேகத்தைப் பார்த்த கணமே அந்த எண்ணம் தொலைந்துபோகும் என்று தெரிந்த பின்னும், அவன் கரங்களின் வருடலுக்காகப் பெரும் ஆவலுடன் அனைத்தையும் மறந்து காத்திருந்தாளே. ஆனால் அவனுடைய அந்த ஒற்றைக் கேள்வியில் எப்படி உடைந்து போனாள். அழுகையில் உதடுகள் நடுங்க, ஆவேசத்துடன் தன் ஆடைகளைக் களைந்துவிட்டுக் கண்ணாடிக்கு முன்னால் நின்றாள் மீநன்னயா.

பல வருடங்களுக்குப் பிறகு கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவளுக்குத் தன்மீதே அருவெறுப்பு ஏற்பட்டது.

உடலுக்கும் முகத்திற்கும்தான் எத்தனை வித்தியாசம். முகம் கோவில் சிற்பம் என்றால், உடல் நாய்கள் கவ்விக் கிழித்த பொம்மைபோல அல்லவா கிடக்கிறது.

வலதுபக்க மார்பகத்தின் பக்கத்திலிருந்து பரந்து விரிந்து இடை வரை சிதைந்துபோய்… பார்க்கும்போதே குமட்டச் செய்கிறதே. அன்று கடும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களில் அவளும், அவள் அன்னையும் அடங்குவர். பொம்மரிலிருந்து குண்டுகளைப் பொழிந்தபோது, தன் மகளைக் காக்கவேண்டிக் குஞ்சை அடைகாக்கும் கோழிபோலத் தனக்குள் மகளைப் புதைத்து தன்னுயிரைக் கொடுத்தாள் அன்னை.

உடல் பாகம் சிதைவுற்றிருந்தாலும், அதைக் கூட உணராது இறந்த அன்னையை எழுப்ப அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள்… இறுதியில் அன்னை இல்லை என்பதை உணர்வதற்குள் சுயநினைவிழந்து விழுந்த குழந்தையை யார் யாரோ மருத்துவமனை எடுத்துச் சென்றார்கள். அவள் பிழைத்துவிட்டாள்தான். ஆனால் அந்த வடு இன்றும் அப்படியே படிந்துவிட்டதே.

அந்தக் காயத்தைப் பார்க்கும்போதெல்லாம், தனக்காக உயிர்விட்ட அன்னைதானே நினைவுக்கு வந்து தொலைக்கிறாள். அதனாலேயே இதுவரை தன் உடலைக் கண்ணடியில் பார்ப்பதில்லை மீநன்னயா. ஆனால், காமம் என்கிற கொடும் அரக்கன் அவளை மதியிழக்கச் செய்துவிட்டதே…

மீண்டும் அவளுடைய உடலிலிருந்த காயத்தைக் கண்டு விலகிய அவனுடைய நினைவு வந்து பாடாய்ப் படுத்த, கூடவே இன்னொரு முகமும் அவளை அருவெறுப்புடன் பார்த்தது. கூடவே ஏதேதோ கூறிக் காறியும் துப்பியது… அதைக் கேட்கும் சக்தியில்லாதவளாகக் காதுகளைப் பொத்தியவளுக்கு மேலும் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. எதிர்பார்த்து ஏமாந்த வேதனை வேறு அவளைக் கொல்லாமல் கொல்ல, அதற்கு மேல் தன் விம்மலை அடக்கும் சக்தியற்றவளாகக் குளியலறை நோக்கிப் பாய்ந்தாள் நன்னயா.

தன் அழுகை வெளியே கேட்டுவிடாதிருக்கக் குளிர் நீர்க் குழாயைத் திறந்து விட்டவள், உடலை வலிக்கச் செய்யும் அந்தக் குளிர் நீரைக் கூடப் பொருட்டாக எடுப்பதாயில்லை.

அந்தக் கடும் குளிர் கூட அவள் வலியையும் சூட்டையும், ஏமாற்றத்தையும் குறைக்க முயன்று தோற்றுப் போக, எதிலிருந்தோ தோற்றவள் போலச் சுவரில் நெற்றியைப் பதித்து விம்மத் தொடங்கினாள் மீநன்னயா.

என்னதான் உலகத்திற்கு முன்னால் மகிழ்ச்சியானவள் என்ற காட்டிக்கொண்டாலும், தான் அழகற்றவள் என்கிற அந்தத் தாழ்வு மனப்பான்மை பீறிட்டுக் கிழம்பத்தானே செய்கிறது.

விம்மி வெடித்து அழ, இங்கே மீநன்னயாவைத் தேடிக்கொண்டு கதவைத் திறந்தான் அதகனாகரன்.

அங்கே குளிர் நீர் தேகத்தில் பட, சுவரில் நெற்றியைப் பதித்தவாறு அழுகையில் கரைந்து நின்ற மீநன்னயாவைப் பார்த்துத் துடித்தவனாய் அவளை நோக்கிப் பாய்ந்தவன், ஊசியாய் குத்திய குளிர் நீரையும் பொருட்படுத்தாது, அவளைத் திருப்பி இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான் அவன்.

முதலில் அவனிடமிருந்து விடுபடத் திணறியவள், இறுதியில் அவனுடைய இறுகிய அணைப்பில் சோர்ந்துபோய் அழ, அவனோ அவள் அழுகையைத் தாங்கும் சக்தியற்றவனாகத் தன் விழிகளை அழுந்த மூடிச் சற்று நேரம் அப்படியே கிடந்தான்.

பின் மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுக்க, அவன் விழிகள் பார்க்கச் சக்தியற்றுத் தலை குனிந்தவள் விம்மியவாறே எதுவோ சொல்ல முயன்றாள். மறு கணம், அவளுடைய உதடுகளின் மீது தன் சுட்டுவிரலை வைத்தவன்,

“ஷ்…ஷ்…ஷ்… டோன்ட் சே எ வேர்ட்…” என்றான் கிசுகிசுப்புடன். தலையில் விழுந்த தண்ணீரோடு கண்ணீரும் கரைந்து செல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மீநன்னயா. மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தோட,

“நான்… உங்களை…” என்றவளுக்கு மீண்டும் உதடுகள் நடுங்கிக்கொண்டு வந்தன. அதற்கு மேல் அந்த உதடுகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கப் பிரியப்படாதவனாகத் தன் உதடுகளால் அழுந்த மூடியவன், அந்த உதடுகளை விடாமமேல அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான். மெதுவாக அவளுடைய உதடுகளை விட்டுப் பிரிந்தவன், அவளுடைய முகத்திலிருந்து தன் பார்வையை விலக்காமலே, அவளுடைய படுக்கையறை நோக்கி வர, இவளோ அழுகையுடன் பெரும் கூச்சமும் அவமானமும் சேர அவனுடைய விழிகளை நோக்கும் சக்தியற்றவளாகத் தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

அவனோ அவளைப் படுக்கையில் அமர வைத்துவிட்டு அவளை உற்றுப் பார்த்தான்.

கொண்டையாக இருந்த அந்த நீண்ட முடியைப் பற்றியிருந்த ஒற்றை க்ளிப்பை அவன் இழுத்து எடுக்க, கனம் தாங்காமல் அந்தக் கூந்தல் மேகமாய்க் கலைந்து அவள் முதுகில் தொங்க. அதையே பெரும் ஆவலுடன் பார்த்து ரசித்தவன், அந்தக் கூந்தலை இரண்டாகப் பிரித்து அவளுடைய முன்புறம் விழ விட, அவளுடைய வடுகொண்ட தேகம் அந்தக் கூந்தலில் மறைந்து போனது.

அவளுடைய ஒரு குறையை இந்தக் கூந்தலே தீர்த்துவிடும் போல. வியந்தவனாகப் புறங்கை கொண்டு அக் கூந்தலை வருடிக் கொடுக்க அவளோ விம்மியவாறு அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனோ அந்த அடர்ந்த கூந்தலைப் பற்றி ஏந்திப் பார்க்க, ஈரத்துடன் சேர்த்து அக் கூந்தலின் கனம் அதிகமாக இருந்தது. ஆவலுடன் அதன் மென்மையை வருடிக் கொடுத்தவனாக,

“வாவ்… முதல் முதலில் நான் கண்டு வியந்தது உன்னுடைய கூந்தலைத்தான்… அம்மாடி… எத்தனை நீளம்…” என்று ரசனையுடன் கூறியவன், எதுவோ உந்த அக் கரிய கூந்தலை நுகர்ந்த பார்த்தான்.

ஏதோ ஒரு ஷாம்புவின் மணம் நாசியைத் துளைத்துக் கிறங்க வைத்தது.

“உனக்கொன்று தெரியுமா… உன் முகம் எப்படி இருக்கும் என்று தெரிய முதலே இந்தக் கூந்தலைக் கண்டு உன் பக்கம் சாய்ந்துவிட்டேன்…” என்று கூற அவளோ அழுகையை மறந்து அவனை வியப்புடன் பார்த்தாள். அந்த வியப்பை உணர்ந்துகொண்டவனாக,

“நான் சொல்வது நிஜம் நன்னயா… இதுவரை இத்தகைய அடர்ந்த கூந்தலை நான் பார்த்ததில்லை. அதுவும் இத்தனை நீளமாக…” என்றவன் இப்போது கிறக்கத்துடனேயே அக் கூந்தலை விழித்துப் பின்னால் விட, இப்போது கரிய மேகத்திற்குள் மின்னும் சந்திரன் என அவள் முகம் பொழிவாய் மினுமினுத்தது.

அதன் அழகியில் மயங்கியவனாய், காமம் என்னும் அரசன் மீண்டும் அவனைக் கைப்பற்றிக் கொள்ள, ஒரு வித வேட்கையுடன் அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலக்க முயன்றான். அவளோ சங்கடத்துடன் தன் வடுவை மறைக்க முயன்றாள்.

சுலபமாக அவள் முயற்சியைத் தடுத்தவனுடைய விழிகள் கொடுத்த வீரியத்தில் அவனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தியற்றவளாத் தன் விழிகளை மூடிக்கொண்டாள். அது கொடுத்த தைரியமோ என்னவோ, இப்போது அவனுடைய விழிகள் சுதந்திரமாக அவளை அணுஅணுவாக ரசிக்கத் தொடங்கின.

ஈரத்தால் நனைந்து பளபளத்த வட்ட முகம், நீண்ட அடர்ந்த புருவங்கள், கூரிய மெல்லிய நாசியில் ஒரு பொட்டாய் நீர்த் துளி. அதன் கீழ் பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சிவந்த செழித்த உதடுகள். கீழே விட்டுப் பிரியா நீர்த் துளிகளின் ஆதிக்கத்தில் சங்குக் கழுத்து, அதற்குக் கீழே, வள்ளுவனும், கம்பனும் இணைந்து கவி வடித்த பெண்ணுடலில் நிரந்தரமாக பதிக்கப்பட்ட நவீன சித்திரம்… அந்தக் கணம் அவனுக்கு அந்த வடு அசிங்கமாகவே தெரியவில்லை. மாறாக இன்னும் கவற்சி ஊட்டுவதாகவே தெரிந்தது.

அப்பப்பா… விட்டால் நாள் முழுக்க அவள் அழகைப் பருகிக்கொண்டிருப்பான் போல. இமைக்க மறந்து அவளை ரசித்துக் கொண்டிருக்க, இவளுடைய தேகமோ அந்த விழிகளின் தீண்டலில் நடுங்கத் தொடங்கியது.

அவன் விழிகளை விடக் கரங்கள் சற்றுக் கண்ணியம் காக்கும் போலவே… அவசரமாய்த் தன் அழகற்ற தேகத்தைப் போர்வைக்குள் புதைத்துக்கொள்ள எண்ணியவளாய்க் கரங்களை அசைக்க முயல, அதை உணர்ந்தவன் போல அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன்,

“நோ… நோ நீட் டு…” என்றவன் இப்போது அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து,

“பியூட்டிஃபுள்…” என்றான் ஒற்றைச் சொல்லாக. இவளோ நம்பாமல் அவனைப் பார்க்க,

“ரியலி யு ஆர் பியூட்டிஃபுள்…” என்றான். இப்போது தழும்பால் சிதைந்த ஓவியத்தை விரல்களால் வருடியவாறு,

“நீ அழகு… வடித்து வைத்த சிற்பமாய் உன் தேகம் அழகு… அதில் பதிந்துபோன இந்த வடுவும் அழகு… மொத்தத்தில் நீ பேரழகு நன்னயா…” என்று கூற ஏனோ அவன் பேச்சில் அவளை அழுத்தியிருந்த அந்தத் தாழ்வு மனப்பான்மை துணிகொண்டு துடைத்தாற்போல மறைந்து போயிற்று.

எத்தனை நாட்களின் வலி அது. இப்போது நீ அழகி என்று சொன்ன அந்தச் சொல்லில் அந்த வடு கூட அவளுக்கு அழகாகத் தெரியத் தொடங்கிவிட்டதே… மீண்டும் மகிழ்ச்சியில் கண்ணீர் உற்பத்தியாக, இப்போது அவளை நிமிர்ந்து பார்த்து,

“இதைப்பற்றித்தான் அப்போது சொல்லவந்தாயா?” என்றான் அதகனாகரன் மென்மையாக. அவள் சொல்ல வந்ததில் இதுவும் ஒன்றாயிற்றே…

அந்தக் காயம் எத்தனை அசிங்கமானது என்று அவளுக்குத்தானே தெரியும்… தவிப்புடன் அவனை விட்டு விலகியவள், கால்களைக் குறுக்காக வைத்துத் தன் உடலை மறைத்தவாறு பெரும் வலியுடன்,

“தழும்புகளின் வலி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அதுவும் பருவம் அடைந்த பின் இளமையின் துள்ளல்கள் இருக்கிறபோது, பல கற்பனைகள் விரிகிற வேளையில், இந்தக் காயத்தின் நினைவுகள் அந்தக் கற்பனைகளைச் சிதைக்கும் போது ஏற்படும் வலி பற்றி உங்களுக்கு என்ன தெரியும். ஒரு முறை குளிக்கும்போது அந்தக் காயத்தைப் பார்த்துக் கிண்டலடித்த பெண்கள் என் மனதில் ஏற்படுத்திய ரணம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…” என்றவள் தவிப்புடன் நிமிர்ந்து தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டவள் பெரும் வலியோடு,

“என்னுடைய பதினாறாவது வயதில் நான் ஒருத்தனைக் காதலித்தேன்…” என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாதவளாகத் தடுமாற, அவனே கனிவோடு அவளைப் பார்த்து,

“அந்த வயதில் எல்லோருக்கும் வருவதுதானே நன்னயா… எனக்கும் பெண் தோழிகள் இருந்தார்கள் தெரியுமா…” என்றான் மெல்லிய நகைப்புடன். இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து, “இல்லை ரஞ்சன்… இது வேறு…” என்றவள் எதையோ மென்று முழுங்கிவிட்டு,

“எனக்கு யாருமில்லையா… பாட்டிதான் என்னை வளர்த்தார்கள்… பாட்டியும் அந்தளவு உறுதியானவர்கள் இல்லை… அடிக்கடி நோய் என்று படுத்துவிடுவார்கள்… அதனால் எனக்கு அன்பு அத்தனை சுலபத்தில் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் யாரிடமிருந்தாவது அன்பு கிடைக்காதா என்று ஏங்கிய நாட்கள் அவை. அப்போதுதான் தவக்குமரன் என்பவரின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர் சற்று வசதி படைத்தவர் என்பதால் முகாமில் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று அடிக்கடி வருவார்… நன்றாகப் பேசுவார்… அன்பாக இருப்பார்… அவருடைய மனைவியும் வந்து அடிக்கடி பாட்டியிடம் பேசிவிட்டுப் போவார்கள்…” என்றதும் அதிர்வுடன் மீநன்னயாவைப் பார்த்தான் அதகனாகரன்.

“அவருடைய மனைவியா… அப்படியானால்…” என்று நம்ப முடியாதவனாகக் கேட்க, இவளோ அவமானத்தோடு தலை குனிந்து,

“ஆமாம்… அவர் திருமணம் ஆனவர்தான்…” என்றாள் கலக்கத்துடன்.

அதைக் கேட்டதும் அதுவரை அவள் மீதிருந்த இரக்கம் இவனுக்குச் சுத்தமாக வடிந்து போனது. அந்தப் பதினாறு வயதிலும் திருமணம் ஆன ஒருத்தனையா காதலித்தாள். அப்படியானால் இவளுக்குத் திருமணமான ஆண்களின் மீதுதான் ஈர்ப்பா…? ஏனோ அருவெறுத்துக் கொண்டு வந்தாலும், அந்தத் தவக்குமார் மீதும் கொலைவெறி வந்தது.

இவளுக்குத்தான் பதினாறு வயது… புத்தியில்லாத பருவம்… அவனுக்குமா… அதுவும் திருமணமாகி மனைவி கல்லுக்குத்தாக இருக்கும் போது… எப்படி ஒரு சிறுமிக்குத் தவறான வழியைக் காட்ட முடிந்தது… அருவெறுத்துப் போனவனாக மீநன்னயாவைப் பார்த்து முறைக்க, அந்த முறைப்பைத் தாங்கும் சக்தியற்றவளாக,

“சத்தியமாக அப்போது அது தவறு என்று எனக்குத் தெரியாது ரஞ்சன்.. அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றவுமில்லை…” என்றவளை ஏளனத்தோடு பார்த்தான் அதகனாகரன்.

அப்போதுதான் வயது கோளாறு தவறாக முடிவெடுத்தாள். இப்போது என்ன வந்தது. இருபத்து மூன்று வயதைத் தொட்டவளுக்கு ஜெயராமனுக்கும் தனக்கும் உள்ள மாறுபாடு தெரியாமலா போனது…? அதுவும் திருமணம் முடித்தவர் என்று தெரிந்தே அவரோடு கூத்தடித்தாளே… எரிச்சலுடன் பற்களைக் கடித்தவன்,

“அவனுக்கு எத்தனை வயது…?” என்றான் அடுத்து. இவளோ மென்று முழுங்கி

“முப்பத்தி எட்டு…” என்று அவள் முடிக்கவில்லை அதகனாகரன் ஆத்திரத்துடன் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு அந்த இடத்தை விட்டு எழுந்தான். பின் சீற்றத்துடன் அவளைப் பார்த்து,

“காட் டாமிட்… நீ என்ன உளறுகிறாய் என்று உனக்குப் புரிகிறதா… திருமணமான ஒருவன் அதுவும் உன்னை விட இரண்டு மடங்கு அதிக வயது உள்ளவன், உரிய வயதைக் கூட எட்டாத உன்னிடம் எப்படி அப்படி.. சீ…” என்று அருவெறுக்க, இவளோ உதடுகளைக் கடித்து விடுவித்து,

“அப்போது அந்த நேரத்தில் எனக்கு அவரைப் பிடித்திருந்தது ரஞ்சன்… அவர் ஒருத்தர்தான் என்னிடம் அக்கறையாக அன்பாகப் பேசினார்… அந்த அன்பை அத்தனை சுலபத்தில் தூக்கியெறிய என்னால் முடிந்திருக்கவில்லை… அதனால் அந்த மகிழ்ச்சியை இறுகவே பற்றிக்கொண்டேன்… அது… அது… காதல்… என்கிற அளவுக்கு அந்த நட்பு இருந்தது… இழந்த அன்பை அவனிடமிருந்து பெற முயன்றேன்… ஒரு நாள்…” என்றவள், எச்சில் கூட்டி விழுங்கியவளாக,

“இராணுவத்திடம் அனுமதி பெற்று என்னை வெளியே அழைத்துச் சென்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே சென்ற மகிழ்ச்சி எனக்கு. தன் வீட்டைக் காட்டுகிறேன் என்று கூட்டிச் சென்றார். அன்று அவர் மனைவி வேறு அங்கில்லையா… மகிழ்ச்சியாகவே போனேன். சில வருடங்களாகக் குடிசையிலிருந்த எனக்கு அந்த வீடு மாடமாளிகை போலத்தான் தோன்றியது.

வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். இறுதியாக அவருடைய படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்…” என்றவள் சங்கடத்துடன் அதகனாகரனை ஏறிட அவனோ அவளைக் கொல்லும் வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனாலும் சொல்ல வந்ததைக் கூறிவிடும் உறுதியோடு,

“அப்போது அவர் கொஞ்சம் அத்துமீற முயன்றார். எ… எனக்கும் பிடித்திருந்தது…” என்றவள் அவனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு,

“என் மீது உங்களுக்கு மேலும் அருவெறுப்புக் கூடியிருக்கும் அல்லவா…” என்றாள் கலக்கத்துடன். அவனோ சிரமப்பட்டுத் தன் உணர்வுகளை மறைத்தவனாக, மறுப்பாகத் தலையை அசைத்து,

“உன் மீது கோபமில்லை… உனக்கென்ன தெரியும்… உன் அறியாமையைத் தனக்கு சாதகமாக்க முயன்ற அவன் மீதுதான் என் ஆத்திரமெல்லாம் இருக்கிறது. நீ இல்லை… உன்னைப் போன்ற நிறயை அப்பாவிகள் இப்படித்தான் ஏமாந்து போகிறார்கள்… xxxx xxxxx பாஸ்டர்ட்… ஐ விஷ் டு கில் ஹிம் வித் மை பியர் ஹான்ட்… முந்தைய காலம் என்றால் உன்னுடைய வயதில் அந்தாளுக்கு ஒரு குழந்தையே இருந்திருக்கும்… சீ… கட்டிய மனைவி இருக்கும் போது, அவளுக்குத் துரோகம் செய்ததும் மட்டுமில்லாமல்… ஒரு இளம் குருத்தின் வாழ்க்கையை அழிக்க எண்ணியிருக்கிறானே… அவனை எல்லாம்…” என்று சீற, இவளோ வலியுடன் அவனைப் பார்த்து,

“இப்போதெல்லாம் தவறு செய்தவர்கள்தான் நன்றாகவே இருக்கிறார்கள் ரஞ்சன்…” என்று பெரும் வேதனையுடன் கூறியவள், பின் அவனைத் தளராமல் பார்த்து,

“அப்போது அவர் அத்துமீற முயன்றபோது இந்த… இந்தக் காயங்களைப் பார்த்ததும், பயந்துபோய் விலகிவிட்டார். அதன் பின் அருவெறுப்போடு என்னை, அசிங்கமாகத் திட்டி வெளியே துரத்திவிட்டார்… அது என்னை மனதளவில் பாதித்துவிட்டது ரஞ்சன்… அதற்குப் பிறகு என்னிடம் அவர் வரவேயில்லை… முகம் கொடுத்தும் பேசவில்லை… நான் பல முறை… அவரோடு பேச முயன்றேன்… அப்போதுதான்… அசிங்கமான இந்தக் காயங்களைச் சுட்டிக்காட்டி உடல் உறவுக்கு நான் தகுதியானவள் இல்லை என்று, ஏளனமாகத் திட்டி அனுப்பிவைத்தார்… அதற்குப் பிறகு அந்த வடு என் உடலில் மட்டுமில்லை…. மனதிலும் ஆழமாகப் பதிந்து போயிற்று… அதற்குப் பிறகு நான் யாரையும் நெருங்கியதில்லை… நெருங்க விட்டதுமில்லை… ஒரு முறை பட்ட வலியை மீண்டும் சந்திக்கும் தைரியமும் எனக்கு இருக்கவில்லை…” என்றவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“பிறகு கொஞ்சக் காலங்கள் கழிந்த பின், கொஞ்சம் விபரம் புரியத் தொடங்கவும்தான், எத்தனை பெரிய ஆபத்தில் நான் சிக்கியிருந்தேன் என்றே எனக்குத் தெரிந்தது. என் இயலாமையை, என் அவலத்தைப் பயன்படுத்த அந்தத் தவக்குமரன் முயன்றிருக்கிறார் என்பதை பிறகுதான் புரிந்துகொண்டேன். அவரிடமிருந்து என்னைக் காத்தது இந்தத் தழும்புகள்தான்…” என்றவள், பின் முகம் மலர,

“அதற்குப் பிறகு ஜெயராமன் என் வாழ்க்கைக்குள் வந்தார்… அதன் பிறகு எல்லாமே மாறிப்போயிற்று ரஞ்சன்…” என்று எதையோ சொல்ல வர, உடனே தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தான் அதகனாகரன்.

சத்தியமாக அதற்கு மேல் எதையும் கேட்கும் தைரியம் அவனுக்கு இல்லை. அதுவும் ஜெயராம் அவளை என்ன செய்தார் என்று அறியும் திடம் சுத்தமாக அவனுக்கு இருக்கவில்லை. தவிர, அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை ஊகிக்க முடியாத அளவு முட்டாள் அல்லவே. அன்புக்காக ஏங்கியபோது ஜெயராமன் சந்தித்தாள். சந்தித்த இடத்தில் அவரைப் பிடித்துப் போனது. அவரைப் பிடித்தது என்பதை விட, அவருடைய வசதி இவளைப் பிடிக்க வைத்திருக்கும்… பிறகு என்ன… அவர் என்னோடு வா என்றதும் இவள் கிளம்பியிருப்பாள். முன்பாவது பதினாறு வயது உலகம் புரியாத பருவ வயது தப்பு செய்தால் கூட அதை மன்னிக்கலாம்… ஆனால் இப்போது… இதை எப்படி மன்னிப்பது? எரிச்சலுடன் எண்ணியவன், அவள் வாயிலிருந்து ஜெயராமின் கதையைக் கேட்கப் பிரியப் படாதவனாக,

“முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் நன்னயா… இனி நீ புதுவாழ்க்கையை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்…” என்றவனை வேதனையுடன் பார்த்தவள்,

“அது என்னால் முடியுமா ரஞ்சன்… நான் அழகற்றவள் என்கிற எண்ணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துபோயிற்று… அதிலிருந்து என்னால் அத்தனை சுலபத்தில் வெளியே வரமுடியும் போலத் தோன்றவில்லையே… நான் என்ன செய்யட்டும்… ஒவ்வொரு முறையும் அந்த வடுவைப் பார்க்கும் போது என் அம்மாவும் அந்தத் தவக்குமரனும்தான் மனதில் நின்று வதைப்பார்கள்” என்று வேதனையுடன் கூறியவளைக் கண்டவனுக்கு அவனையும் மீறி இதயத்தில் இரத்தம் கசியத் தொடங்கியது.

ஒரு பக்க மனமோ அவளை வெறுத்து ஒதுக்கியது. மறுபக்க மனமோ அவள் நிலையை எண்ணித் துடித்தது. இரண்டுக்கும் நடுவே திக்கித் தவித்தவன், அந்தக் காயம் கொடுத்த வலி மிக ஆழமாக அவளுடைய மனதில் படிந்துவிட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவனாக, சற்றும் யோசிக்காமல், அவளுக்கு அருகே அமர்ந்து, குனிந்திருந்த அவளுடைய தலையைப் பற்றி உயர்த்த, அவள் முகத்தில் தெரிந்த கடல் அளவு வலியைக் கண்ட அதகனாகரனுக்கு அதற்கு மேல் வெறுப்பைத் தூக்கிச் சுமந்துகொண்டிருக்க முடியவில்லை.

என்னவோ தெரியவில்லை… அந்த வலி நிறைந்த முகத்தைக் கண்டால் மட்டும் அவனுடைய ஏமாற்றம் கோபம் அனைத்தும் தொலைந்து போகிறது. உடனே அவளைத் தேற்றவேண்டும் என்கிற வேகம் மட்டும் எழ,

“இந்த அவமானம், ஏமாற்றம், வலி, வேதனை இது எல்லாம் தனி மனித வாழ்க்கையில் சாதாரணம் நன்னயா… அதைக் கடந்து வருவதுதான் வாழ்க்கையின் வெற்றியே…” என்றவன் அவளுடைய விழிகளை உற்றுப் பார்த்து,

“நான் இருக்கிறேன் நன்னயா உனக்கு… உன்னைப் பாராட்ட, சீராட்ட, உள்ளங்கைகளில் ஏந்த நான் இருக்கிறேன்…” என்றவனைப் பெரும் வேதனையுடன் பார்த்த மீநன்னயா,

“சொல்வது சுலபம் ரஞ்சன்… ஆனால்… நடைமுறைக்கு…” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தவன்,

“முயன்றால் முடியாதது எதுவுமில்லை தெரியுமா…” என்றவன் வெறுமையான அவளுடைய பார்வையைக் கண்டு,

“இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா…” என்றான் அடுத்து. இவள் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க. இப்போது இரண்டு கரங்களாலும் அவளுடைய முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்திய அதகனாகரன் அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலக்க வைத்தான். அந்த விழிகள் என்ன சொல்லினவோ, இவளுடைய இறுகிய உதடுகள் சற்றுத் தளர்ந்து போக, அதை உணர்ந்தவனாக

“இப்போதே அந்த நம்பிக்கையை வரவைக்கிறேன்…” என்றவாறு அவளுடைய உதடுகளை நோக்கிக் குனிந்து அடுத்தக் கணம் தன் உதடுகளால் அவளுடைய மெல்லிய உதடுகளை இறுகக் கைப்பற்றிக்கொண்டான் அந்த ஆண்மகன். .

அடுத்து நடந்தது என்ன என்று இருவருக்குமே சுத்தமாக நினைவில்லை.

உதடுகள் யாசித்தன. கரங்கள் பேசின, தேகங்கள் சங்கீதம் இசைத்தன. முள் நிறைந்த காடுகள் கூடப் பூத்துக் குலுங்கின. அந்தத் தழும்புகள் கூட நவீன சித்திரமாயின. பெண்மை பூத்தது. மொத்தத்தில் அவன் செய்கையால், முதன் முறையாக அந்தத் தழும்புகளைக் கூட ரசித்தாள் மீநன்னயா.

எத்தனை நேர இன்ப யுத்தமோ இருவரும் அறியர். அவனுக்குள் அவனும், அவனுக்குள் அவளுமாய்ப் புதைந்து தேடிக் களைத்து ஓய்ந்தபோது நேரம் இரவு இரண்டு மணியையும் கடந்துவிட்டிருந்தது.

இறுதியில் அவனுடைய கைவளைவில் தன்னை மறந்து கிடந்தவளை இறுக அணைத்துக்கொண்டவனுக்குள் ஆயிரம் சிந்தனைகள்.

இப்போது கூட, ஜெயராமின் காதலியை இத்தனை வேகத்தோடும் தாபத்தோடும் பெண்டாள்வோம் என்று இம்மியும் அவன் நினைக்கவில்லையே. அதுவும் மீண்டும் மீண்டும் அவளிடம் எதையோ தேடும் முயற்சியில் முற்றாகத் தன்னிலை இழந்துபோனானே தவிர, ஜெயராம் மறந்துபோயும் அவனுடைய நினைவுக்கு வரவில்லையே. சொல்லப்போனால், அவள் தவிர வேறு நினைவே அவனுக்கு வரவில்லை. இப்போது எல்லாம் ஓய்ந்த பின், ஜெயராமன் மனதில் நின்று சிரித்தார்.

இன்னும் நம்ப முடியாதவனாக விழிகளை மூடியவனுக்குத் தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது. எப்படி நெஞ்சம் முழுவதும் வெறுப்பு இருந்தாலும், அவளை அணைத்த கணத்தில் அத்தனையும் மறந்து போனது. இதோ இப்போது கூட அதையும் மீறி அவள் வேண்டும் என்று புத்தியும் தேகமும் அடம்பிடிக்கிறதே.. ஒரு வித தவிப்போடு அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ அவன் மார்பில் சாய்ந்தவாறு அவனைத்தான் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த முகத்திலிருந்தது என்ன? எதையோ சாதித்த திருப்தியா… கிடைத்தற்கரிய மகிழ்ச்சி கிடைத்த திருப்தியா… தெரியவில்லை. ஆனால் அந்த முகத்தில் தெரிந்த ஒளியைக் கண்டவனுக்கு அதற்கு மேல் எதையும் யோசிக்க முடிந்திருக்கவில்லை. அவசரமாக அவளை நோக்கிக் குனிந்தவன் மீண்டும் உதடுகளால் அவளை அர்ச்சிக்கத் தொடங்கினான்.

இறுதியில் அவளுடன் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் களைத்தபின், ஒன்று மட்டும் அவனுக்கு நன்கு புரிந்தது. இனி அவளை விட்டுப் பிரிய முடியாதென்று.

அதே நேரம் பெரும் திருப்தியுடன் தன்னவன் பக்கமாகச் சரிந்து படுத்திருந்த மீநன்னயாவிற்கு அப்போதுதான் அவன் மார்பு முடிகளுக்கு மத்தியிலும் கரங்களிலும், உடலில் ஆங்காங்கு  கிடந்த தழும்புகள் கவனத்தை ஈர்த்தன.

வியப்புடன் சுட்டுவிரல் கொண்டு மார்பில் கிடந்த தழும்பைக் கோடு வரைந்தவள்,

“இது எப்படி உங்களுக்கு வந்தன…” என்றாள் வியப்புடன். அவனோ அவள் விரல் தீண்டல் கொடுத்த தாக்கத்தில் அவள் கரங்களை அழுந்த பற்றித் தடுத்தவன்,

“வாகன விபத்தில் கிடைத்த பரிசுகள் அவை…” என்றான் வெறுமையாய். இவளோ வியப்புடன் அவனைப் பார்த்து,

“வாகன விபத்தா… என்ன விபத்து ரஞ்சன்…” என்றாள் பரிதவிப்பாய்.

அந்த ரஞ்சனில் இறுகத் தன் விழிகளை மூடி நின்றவன், அவளுடன் கலந்த பின் பொய் சொல்லப் பிடிக்காதவனாக, அவளை நிதானமாகப் பார்த்து,

“நான்… ரஞ்சனில்லை… என்றான் தெளிவாய், அழுத்தமாக.

What’s your Reaction?
+1
14
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

2 thoughts on “வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 27/28”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!