Sat. Apr 19th, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 21/22

(21)

மெதுவாகத் தூக்கம் கலைந்து எழுந்தாள் மீநன்னயா. ஏனோ அடித்துப்போட்டதுபோலச் சோர்வாக இருந்தது. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவளுக்குக் கண்முன்னே விரிந்த புதிய உலகத்தைக் கண்டு முதலில் திகைத்துப் பின் அதிர்ந்து எழுந்தமர, சற்றுத் தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த அதகனாகரன், இவள் எழுந்தமர்வதைக் கண்டதும்,

“ஹே… ஈசி…” என்றவாறு அவளை நோக்கி வர, அவனைக் கண்டபின்தான் மீநனன்யாவுக்குப் பயம் தெளி்ந்தது.

குழப்பத்துடன் சுத்தவரப் பார்த்தவள், கேள்வியுடன் அதகனாகரனை ஏறிட, அவனோ அவளுடைய படுக்கையில் அமர்ந்து, கலைந்திருந்த அவள் குழலை ஒற்றை விரல் கொண்டு ஒதுக்கிவிட்டவாறு,

“ஹே.. ஹவ் ஆர் யு ஃபீலிங் நவ்…” என்றான் மென்மையாக.

“நா… நான்… நன்றாக இருக்கிறேன்…” என்றவள் குழப்பம் மாறாமலே அவனைப் பார்த்து,

“நான்… நான் எப்படி இங்கே…” என்றாள் தடுமாற்றமாய். அவனோ அவளுடைய முகத்தைப் பார்த்து மென்மையாகச் சிரித்து,

“எப்படியென்றால்… நடந்துதான்…” என்றான் கிண்டலாய். அதைக் கேட்டு அவனை முறைக்க முயன்றவள், முடியாமல்,

“இந்த நகைச்சுவைக்குப் பிறகு சிரித்துக்கொள்கிறேன்… கேட்டால் சொல்வதுதானே…” என்றாள் சிறு ஆதங்கத்துடன். அவனோ அவளை ஒரு கணம் ஆழுந்தப் பார்த்துவிட்டு, தன் உள்ளங்கையை அவளுடைய கன்னத்தில் பதித்துப் பெருவிரலால் அந்தக் கன்னக் கதுப்பை மென்மையாக வருடிக் கொடுத்தவாறு,

“வீட்டிற்கு வந்தபோது உன்னைக் காணவில்லை… சரி அறையில் இருப்பாய் என்று திறந்து பார்த்தேன்… அங்க மூச்செடுக்கச் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தாய்… பிறகென்ன… உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தேன்…” என்றவன், தன் கரத்தை விலக்கி அவளுடைய ஒரு கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவாறு,

“தூசி ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்தும் எதற்காக வீட்டைச் சுத்தம் செய்தாய்… விட்டிருந்தால் நான் வந்து சுத்தம் செய்திருப்பேன் அல்லவா…” என்று சிறு கோபத்துடன் கேட்க, இவளோ தன் தோள்களைக் குலுக்கி,

“சும்மா இருக்க முடியவில்லை ரஞ்சன்… அதுதான் சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன்… ஆனால் இப்படி என்னை வாட்டும் என்று எண்ணவில்லை…” என்றவளைக் கனிவோடு பார்த்தவன்,

“உனக்கு மூச்சிழுப்பு முன்பு இருந்திருக்கிறதா?” என்று கேட்டான் அதகனாகரன். இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,

“இல்லையே… இதுதான் முதன் முறை…” என்றவள் பின்பு எதையோ நினைத்தவள் போல,

“நான் சிறுமியாக இருந்தபோது இரண்டு மூன்று முறை மூச்செடுக்கச் சிரமப்பட்டிருக்கிறேன். ஆனால் மருத்துவமனை போன நினைவில்லை…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய அறைக் கதவு திறந்தது.

திரும்பிப் பார்க்க வைத்தியர்தான் நின்றிருந்தார். புன்னகையுடன் வந்தவர், அவளைப் பற்றி விசாரித்துவிட்டு அவளுக்கு அருகேயிரந்த இயந்திரத்தில் எதையோ பார்த்தார். திருப்தி கொண்டவராக, மீநன்னயாவிடம் வந்தவர்,

“எப்படி இருக்கிறாய்?” என்றார் கனிவாக. இவள் பதில் கூற,

“உன் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இந்த இழுப்பு இருக்கிறதா?” என்று கேட்க, இவளோ உதடுகளைப் பிதுக்கி,

“இல்லை…” என்றாள். அதைத் தொடர்ந்து பல கேள்விகள் கேட்க, அவள் தெரிந்த பதிலைக் கூறினாள். இறுதியாக,

“உங்களுக்கு வந்திருப்பது மூச்சுத் திணறல். முடிந்தவரைத் தூசிக்குள் போகாமல் இருக்கப் பாருங்கள். அதையும் மீறி இப்படி மூச்சு திணறல் வந்தால், நான் ஒரு மருந்தை எழுதித் தருகிறேன். அதை எப்போதும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது அதில் ஒன்றை  எடுத்தீர்களானால் திணறல் நின்றுபோகும். கூடவே ‘பஃப்’ தருகிறேன். மருந்துக்குக் கட்டுப்படவில்லை என்றால் அதை உபயோகியுங்கள்…” என்று கூற, இவளோ,

“தூசி ஒன்றும் எனக்குப் புதிதல்ல டாக்டர், நான் வாழ்ந்த நாட்டில் இல்லாத தூசியா இங்கே இருந்துவிடப் போகிறது? ஆனால் இங்கே மட்டும் ஏன் வந்தது;” என்று அவள் வியக்க,

“தெரியவில்லை… அங்கே உள்ள தூசிக்கும் இங்கே உள்ள தூசிக்கும் வித்தியாசம் இருந்திருக்கலாம். சிலவேளை நீங்கள் சுவாசித்த காற்றில் இரசாயனம் கலந்திருக்கலாம். அந்த இரசாயனம் உங்களுக்கு ஒவ்வாமையைக் கொடுத்திருக்கலாம். உடல் எந்த நேரம் எப்படி வேலை செய்யும் என்று யாராலும் சொல்ல முடியாது…” என்று கூறிவிட்டு அதகனாகரனைப் பார்த்தவர்,

“ஒரு நாள் இங்கேயே இருக்கட்டும்… நாளைக்கு நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்…” என்றவாறு விடைபெற, நன்றியுடன் அவரை வழியனுப்பிவிட்டு, மீநன்னயாவைப் பார்த்தவன்,

“இனி நீ வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று ஒரு அடி எடுத்து வைத்தாலும், நான் சும்மா இருக்கமாட்டேன் ஜாக்கிரதை… கொஞ்ச நேரம் என் உயிர் என் கையில் இல்லை தெரியுமா. அப்பா… எப்படிப் பயமுறுத்திவிட்டாய்…” என்று கடிந்தவன், அவளை மீண்டும் படுக்கவைத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்த கொண்டான்.

ஏனோ மீநன்னயாவிற்கு அவனுடைய அக்கறை மிகுந்த பலத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்க, அந்த நிம்மதியுடனேயே விழிகளை மூடி உறங்கத் தொடங்கினாள்.

மறுநாள் மருத்துவமனை அவளை விடுவிக்க, அவளை அழைத்துக்கொண்டு கோட்டைக்கு வந்து சேர்ந்தான் அதகனாகரன். கோட்டைக்குள் நுழையும்போதே தெரிந்தது அது சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று.

மருந்துக்கும் தூசியில்லை. வியப்புடன் நிமிர்ந்து அதகனாகரனைப் பார்த்தவள்,

“கோட்டையை யார் சுத்தம் செய்தார்கள்?” என்று சுத்தவரப் பார்த்தவாறு கேட்கத் தன் தோள்களைக் குலுக்கிய அதகனாகரன்,

“வேறு யார்… நான்தான்… இங்கே வேலைக்கு ஆட்களைத் தேட முடியாதே. நீ வருவதற்குள், சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அதுதான், வந்து அத்தனையையும் துடைத்து வைத்தேன். கூடவே காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகளும் ஆங்காங்கே வாங்கிப் பூட்டியிருக்கிறேன். இனி, ஒரு முறை தன்னும் நீ மருத்துவமனை காணப் போகக் கூடாது…” என்று அவன் உறுதியுடன் கூற, இவளுடைய கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.

அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்கிறானே. நெகிழ்ந்தவளாக, அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

“நன்றி ரஞ்சன்…” என்று கூறத் தன் தோள்களைக் குலுக்கியவன்,

“சரி… போ… போய் அறையில் ஓய்வெடு. உனக்குச் சுலபமாகக் குடிக்கச் சூப் எடுத்து வருகிறேன் என்று அனுப்பிவிட்டுச் சமையலறைக்கு வந்தவனுக்கு ஏனோ மனம் குழம்பித் தவித்தது.

அவளுக்கு ஒன்றென்றால் ஏன் இப்படிக் குழம்பித் தவிக்கிறோம். ஏன் பதறுகிறோம். அவள் சிரமப்பட்டபோது மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்கவேண்டும். மாறாக நெஞ்சில் பெரும் வலி தோன்றுகிறதே. அவளை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்கிற வெறிதானே பிறக்கிறது. சொல்லப்போனால் அவளை அப்படியே விட்டிருந்தால், எல்லோருக்கும் விடுதலைதான். ஆனால் அவனால் முடிந்திருக்கவில்லையே. அந்த நினைவே உயிரைக் கொல்வது போல அல்லவா தோன்றுகிறது. இதோ இப்போது கூட, இந்தத் தூசி அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அவனாகவே, ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்தினானே. இதே பழைய அதகனாகரன் என்றால், இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்திருக்கமாட்டானே. இன்னும் ஒரு முறை அவள் இப்படித் துடிப்பதைப் பார்க்கும் சக்தி எனக்கு ஏன் இல்லாமல் போனது. அவள் துடித்தால் உள்ளுக்குள்ளே எதுவோ சேந்தல்லவா துடிக்கிறது. இது என்ன கொடுமை.

கடவுளே… அவன் என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறான். அவளுக்கே தெரியாமல் இங்கே அழைத்து வந்ததற்கான காரணம் என்ன? இப்போது அவன் செய்துகொண்டிருக்கும் காரியம் என்ன? தன் மீதே எரிச்சல் வர, அங்கிருந்த மேசையில் கரங்களை ஊண்டியவாறு விழிகளை அழுந்த மூடித் தன்னையே படிக்க முயன்ற நேரம், அவனுடைய கைப்பேசி அடித்தது.

எடுத்துப்பார்த்தபோது, அது சகோதரியிடமிருந்து வந்திருப்பது தெரிந்தது. உடனே அதை உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி,

“என்ன விஷயம்?” என்றான் நேரடியாக. மாதவியோ பதறியவாறு,

“ஆகரன்… உன் அத்தான் கிளம்பிவிட்டார்…. இதற்கு மேல் என்னால் அவரைத் தடுத்துவைக்க முடியவில்லை. அந்தப் பெண்ணுக்குத்தான் பல முறை அழைத்துப் பார்த்திருக்கிறார் போல, அவள் கைப்பேசி எடுக்கவில்லை என்றதும், உடனே கிளம்பிவிட்டார்… நான் பல முறை தடுக்க முயன்றும் அவர் கேட்கவில்லையா… நான்… நான் வாய்விட்டு விட்டேன்…” என்றதும் அதகனாகரன் ஆழ மூச்சொன்றை எடுத்து விட்டான்.

“என்ன சொல்கிறாய்…” என்று சீற, மாதவியோ தயங்கியவாறு,

“ஏன் அந்தப் பெண் இல்லாமல் இருக்க முடியவில்லையோ…” என்று கேட்டுவிட்டேன்… அப்போது என்னை ஒரு பார்வை பார்த்தவர்தான் ஆகரன்… அதற்குப் பிறகு என்னோடு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை…” என்று கலங்க, அதகனாகரனுக்கும் என்ன செய்வதென்று அப்போது தெரியவில்லை.

“நான் தான் சொன்னேனே… எக்காரணம் கொண்டும் எதையும் பேசாதே என்று…” எனக் கோபத்துடன் சீறியவன், பின் தன்னை அடக்கியவனாக,

“நான்தான் அவளை அழைத்துச் சென்றேன் என்று அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டான் அதகனாகரன்.

“இல்லை… சொல்லவில்லை… ஆனால், அவரால் யூகிக்க முடியும்…” என்று தயங்க, இவனும் அமைதி காத்தான். ஜெயராம் அதி புத்திசாலி. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சுலபமாகவே விடையைக் கண்டு கொள்வார். இப்போது என்ன செய்வது? குழம்பி நின்றான் அதகனாகரன்.

நிச்சயமாக ஜெயராம் மீநன்னயா எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடித்துவிடுவார். மீநன்னயா விடுதியில் இல்லை என்பதை அறிந்ததும் அவளை முழுமூச்சாகத் தேடத் தொடங்குவார். ஏற்கெனவே இரஞ்சன் பற்றி அவருக்குத் தெரியும். நிரஞ்சனிடம் மீநன்னயாவைப் பற்றி விசாரிக்கும்போது, அவன் தடுமாறுவான். நிச்சயமாக ஜெயராம் நிரஞ்சனைப் பற்றி விசாரிப்பார். அப்படி விசாரிக்கும்போது நான் அவனுடைய நண்பன் என்பதையும் கண்டுகொள்வார்… அவன் வேறு நிரஞ்சனின் கோட்டையைத்தான் பயன்படுத்திக்கொள்கிறான். குறைந்தது ஒரு கிழமைக்குள் ஜெயராம் இவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவார். அதற்கிடையில் இவளை எங்காவது அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், எப்போதும் அவளை அவர் நெருங்கமுடியாத வகையில் எதையாவது செய்யவேண்டும்… என்ன செய்வது… எப்படி…”

குழம்பித் தவித்தவனுக்கு, சடார் என்று ஒரு திட்டம் உள்ளே உருவாகத் தொடங்கியது. உதடுகளும் புன்னகையில் விரிந்தன.

(22)

அவளை ஜெயராமிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்க ஒரே வழிதான் உண்டு…” என்றவன் மீண்டும் விழிகளை மூடி அதை யோசித்துப் பார்த்தான். அந்தத் திட்டம் அவனுக்கும் பிடித்தமானதாகவே தோன்றியது. நிச்சயமாக இதைவிட்டால் சிறந்த வழி எதுவும் இருந்துவிடப் போவதில்லை. அவன் இப்போது செய்யப்போகும் காரியத்தால், அவளாலும் ஜெயராமனை நெருங்க முடியாது, ஜெயராமும் இவளை மறந்து சகோதரியோடு வாழத் தொடங்குவார். முடிவு செய்தவனாக அவளுக்குச் சூப் வைத்தவன், அதை எடுத்துக்கொண்டு அவளுடைய அறைக்குள் நுழைய, அவளோ, கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தாள்.

இவனைக் கண்டதும் முகம் மலர்ந்தவள், தன் கைப்பேசியைக் காட்டி,

“ஜெயராமுக்கு அழைக்க முயன்றேன் ரஞ்சன்… முடியவில்லை…” என்று வருந்த, அதுவரை அவள் மீதிருந்த பரிதாபம் அப்படியே வடிந்து சென்றது அதகனாகரனுக்கு. எரிச்சல் பிறக்கப் பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கியவன், பின் அவளைப் பார்த்து,

“இப்போது எதற்கு ஜெயராமோடு பேச ஆசைப்படுகிறாய்… முதலில் இந்தச் சூப்பைக் குடி…” என்றவாறு உரிமையாக அவளுடைய கரத்திலிருந்த கைப்பேசியைப் பறித்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, அவளுக்கு முன்பாகச் சிறிய மேசையை இழுத்து அதன் மீது உணவை வைக்க, நன்றியுடன் அவனைப் பார்த்து மலர்ந்த சிரித்தவள்,

“நன்றி ரஞ்சன்…” என்றுவிட்டு ஒரு வாய் அருந்தினாள். தொண்டை வரை இதமாக இறங்கியது அந்தச் சூப்.

“மிக அருமையாகச் செய்திருக்கிறீர்களே ரஞ்சன்… உங்களுக்கு வரப்போகும் மனைவி மிக அதிர்ஷ்டசாலியாக்கத்தான் இருக்கவேண்டும்…” என்றவாறு மேலும் ஒரு மிடறு விழுங்க, அவள் சூப் அருந்தும் அழகைத் தன்னை மீறி ரசித்தவாறே,

“அது சரி… இந்தச் சூப்பைச் செய்து கொடுப்பதற்காகவே நான் ஒரு திருமணம் செய்யவேண்டும் என்கிறாயா…” என்றதும், அவனைப் பார்த்துச் சிரித்தவள்,

“ஏன் இதுவரை நீங்கள் திருமணம் முடிக்கவில்லை ரஞ்சன்… குடும்பமாக இருப்பது பலம் தெரியுமா?” என்றவளை ஒரு ஆராய்ச்சியுடன் பார்த்தான் அதகனாகரன். பின் தன் தோள்களைக் குலுக்கி,

“தெரியவில்லை நன்னயா… மனைவி, குழந்தைகள் என்று சாதாரணமாக வாழும் வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளேன்… அதை விட, வேகமாக வாகனம் ஓடும்போது ஏற்படும் சந்தோஷம், அப்படி உயிரைப் பணையம் வைத்து வாகனத்தை ஓட்டி, அதில் வென்று பரிசு வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி… ப்பா.. அது வேற லெவல் தெரியுமா…” என்று அவன் முடிக்கவில்லை, ஒரு வாய் சூப்பை வாயில் வைத்த மீநன்னயா பிரக்கேறிப் பலமாக இருமத் தொடங்கினாள்.

இவனோ தன் பேச்சை விடுத்துப் பதறியவனாக, அவளுடைய தலையைத் தட்டி,

“ஹே… ரிலாக்ஸ்… மெதுவாகக் குடி என்று கடிய, இவளும், இருமியதால் உதடுகளின் ஓரத்தில் வடிந்து சென்ற சூப்பைப் புறங்கையால் துடைத்தவாறு,

“உங்களுக்குக் கார்ப் பந்தயம் பிடிக்குமா? இதுவரை இதுபற்றிச் சொல்லவேயில்லையே” என்றாள் ஆச்சரியத்தோடு. அப்போதுதான் அதகனாகரனுக்குத் தான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டது புரிந்தது.

அவசரமாகத் தொண்டையைச் செருமித் தன்னைச் சமப்படுத்தியவன்,

“ஆமாம் நன்னயா… மிக மிகப் பிடிக்கும். பல முறை நேரில் சென்று பார்த்தும் இருக்கிறேன்… அவர்கள் வேகமாக வண்டியில் போகும்போது, அவர்களைப் போல நானும் வண்டி ஓட்டவேண்டும் என்று வேகம் பிறக்கும்… ஆனால் முடிவதில்லை…” என்று எதையோ கூறிச் சமாளிக்க, இவளோ அவனைச் சிரிப்புடன் பார்த்து,

“ஏன்…. உயிரின் மீது ஆசையில்லையா உங்களுக்கு?” என்றாள் கிண்டலாய்.

“ப்ச்.. அதனால்தான் இன்றுவரை முயன்றதில்லை… உனக்குக் கார்ப்பந்தயம் பிடிக்குமா?” என்றான் ஆவலாய். இவளோ உதடுகளைப் பிதுக்கி,

“இதுவரை அது சார்ந்த பரிட்சியம் எனக்கு இல்லை ரஞ்சன். ஆனால் ஜெயராமின் மனைவி தம்பி, பிரபலியமான கார்ப்பந்தைய வீரர் என்று ஜெயராம் சொல்லியிருக்கிறார். ஏதோ ஃபார்மியூலா 1 என்கிற பந்தயத்தில் தொடர்ந்து மூன்று முறை வென்றிருக்கிறார் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். தவிர, இந்தப் பந்தயத்தால் இரண்டு மூன்று முறை விபத்திற்குள்ளானார் என்றும் சொல்லியிருக்கிறார்…” என்றவள் மீண்டும் இரண்டு வாய் குடித்துவிட்டு,

“அப்படி உயிரைப் பணயம் வைக்கும் போட்டிகள் எதற்கு. அதில் பங்குபற்றி என்னத்தைச் சாதிக்க முடியும் சொல்லுங்கள். உயிர் போனால் திரும்பி வருமா? எத்தனை வெற்றிகளைப் பெற்றபின்னும், மரணத்தைத் தழுவிய பின்னர் அதை அனுபவிக்கத்தான் முடியுமா? மரணம் என்கிறது எத்தனை அவலம் ரஞ்சன்…” என்றவளின் விழிகள் ஏனோ கலங்கிப் போயின. அதே கலக்கத்துடன் நிமிர்ந்து அதகனாகரனைப் பார்த்து,

“ஈழத்தில் எத்தனை மக்கள் குண்டுகளால் உயிரிழந்தார்கள் தெரியுமா. எத்தனை கனவுகள், எத்தனை எதிர்பார்ப்புகள், ஆசைகள், அத்தனையும் ஒரு விநாடியில் இல்லாமல் போயினவே. ஆனால் இங்கே… இத்தகைய பயங்கர விளையாட்டுகளில் உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள்…” என்று வலியுடன் கூறியவள், பின் மீண்டும் சூப்பில் கவனத்தைச் செலுத்தியவாறு, “அதனால், இத்தகைய விளையாட்டுகளில் எனக்கு ஆர்வம் இருந்ததுமில்லை, அதை நோக்கிப் போகும் மனிதர்களின் மீது எனக்கு அக்கறை தோன்றியதுமில்லை…” என்றவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான் அதகனாகரன்.

“ஏன் நன்னயா, ஜெயராமின் மனைவியின் தம்பி என்கிறாய்… அவனை நீ பார்த்ததில்லையா?” என்று கேட்டான் இவன். மறுப்பாகத் தலையை அசைத்து,

“இதுவரை இல்லை… நான் இங்கே வந்து மூன்று மாதங்கள்தானே ஆகின்றன. அதனால் அவரைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. நானும் அக்கறைப் படவில்லை. பார்க்கலாம் என்றாவது ஒருநாள் சந்திக்காமலா இருக்கப்போகிறேன்…” என்றவளைக் கூர்மையாகப் பார்த்த அதகனாகரன்,

“பார்த்தால் என்ன செய்வாய்?” என்றான்.

“என்ன செய்வேனா… முதலில் ஆட்டோகிராஃப் வாங்குவேன் ரஞ்சன்… அவர் வேறு பிரபலியமா… இதுவரை நான் எந்தப் பிரபலங்களையும் நேரில் கண்டதில்லை தெரியுமா?” என்று சிரித்தவளைக் கிண்டலுடன் பார்த்த அதகனாகரன்,

“அப்போ கொஞ்சத்துக்கு முன்பு, சொன்னதெல்லாம்…” என்றான். இவளும் சிரித்துவிட்டு,

“அது வேறு இது வேறு… அது உயிரை மதிக்காத ஒரு நபரின் மீது ஏற்பட்ட கோபம். இல்லை என்றால் வருத்தம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இது பெருமை… தம்பட்டம் அடிப்பதற்காக என்பார்களே, அது போல…” என்றதும் தலையை ஆட்டிச் சிரித்தவன்,

“விபரமாகத்தான் இருக்கிறாய்…” என்றுவிட்டு,

“நீ அந்த அதகனாகரனின் படங்களைக் கூடவா பார்த்ததில்லை…? என்று வியக்க, இவளோ சற்றுப் புருவங்களைச் சுருக்கி,

“ஜெயராம் எப்போதும் தன் குடும்பப் படங்களைத்தான் எனக்குக் காட்டுவார். அவருடைய பேச்சு முழுவதும், அவர் மனைவி, மகன் புகழ், மகள் பூங்கோதை… என்று அவர்களைப் பற்றித்தான் இருக்கும்.. ஆனால் அவர் மனைவி மாதவியின் தம்பி பற்றி நாம் அதிகம் பேசிக்கொண்டதில்லை. பேசவேண்டிய தேவையும் ஏற்படவில்லை. அதனால் அவரைப் பற்றிய செய்திகள் கருத்தில் படவுமில்லை ஆர்வம் இருக்கவுமில்லை…ஒரு முறை அதகனாகரனின் புகைப்படம் ஒன்றையும் காட்டினார்… அவரை மேலோட்டமாகப் பார்த்ததால் அவர் உருவம் மனதில் பதியவில்லை… ஏனோ,அவர் மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதில் இருந்த ஆர்வம் அவர் தம்பியைப் பார்ப்பதில் இருக்கவில்லை.

என்று கூறிவிட்டுக் குடித்து முடித்த சூப் கிண்ணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்த மேசையில் வைக்க, எழுந்தவன்,

“சரி… தூங்கு…” என்று விட்டு விடைபெற்றுத் திரும்பியவனின் உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்திருந்தது.

அவள் மட்டும் அந்தப் படங்களை நினைவில் வைத்திருந்தால், இவனை நிச்சயமாக இனம் கண்டிருப்பாள்.

அன்று இரவு அவளிடம், மருந்தைக் கொடுத்துக் குடிக்கச் சொல்லிவிட்டு, அருகே இருந்த இருக்கையில் சாய்ந்தமர, இவளோ அவனை யோசனையுடன் பார்த்து,

“நீங்கள் ஏன் இங்கே அமர்கிறீர்கள்…” என்றாள் வியப்புடன். அவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“உண்மையைச் சொல்லவேண்டுமானால், தெரியவில்லை நன்னயா… உன்னைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, அங்கே என் அறையில் நிம்மதியாக உறங்கமுடியும் போலத் தோன்றவில்லை. கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கிறேன். நீ தூங்கியதும் போய்விடுகிறேன்…” என்றதும், இவளுடைய நெஞ்சம் மீண்டும் உருகிப்போயிற்று.

அவளுக்காகவே பார்த்துப் பார்த்துச் செய்கிறானே. இந்தக் கணம் வரை, அவளை ஒரு விநாடிகூட அவன் தப்பாகப் பார்க்கவில்லையே. அந்த விழிகளிலிருந்த நேர்மை, இவளை மேலும் அவன் பக்கம் காந்தமாக இழுப்பதைக் கொஞ்சமும் தடுக்கமுடியவில்லையே… கூடவே அவன் அருகாமை மிகவும் பிடித்துத்தானே இருக்கிறது.

அவன் அருகே இருக்கும்போது, பயம் சுத்தமாக விட்டு விலகிச் செல்கிறது. தைரியம் தானாக வந்துவிடுகிறது. ஏனோ தனியாகவே அந்த உலகை வெல்லலாம் என்கிற திடம் பிறக்கிறது. தனக்காய் யோசிக்கும் அந்த ஆணவனின் அன்பில் நெகிழ்ந்து போனவளாக விழிகளை மூட, அவளையே பார்த்து நின்றிருந்த அதகனாகரனுக்கும் பெரும் குழப்பம் எழவே செய்தது.

அவனுக்குத் தன்னை நினைத்தே சிரிப்பாக இருந்தது. தான் நினைத்தது, என்னவோ, நடந்தது என்னவோ. அவன் அவளைப் பழிவாங்க அழைத்துவந்துவிட்டு, தானே அவளை மருத்துவமனைக்கு அவளைக் காப்பாற்றக் கொண்டு ஓடும் நிலைக்கு வருவோம் என்று கொஞ்சமும் நினைக்கவில்லையே.

அதுவும் அவள் சுவாசத்திற்காகத் திணறுவதைக் கண்டதும் இவன் தவித்த தவிப்பு. எப்படி விவரிப்பான். யாரோ அவனுடைய சுவாசத்தையும் நிறுத்த முயல்வது போல அல்லவா தோன்றியது. இதை என்னவென்று சொல்வது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம்… எந்தச் சந்தர்ப்பத்திலும் மீநன்னயாவை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பது.

முதன் முதலாக அவளைப் பார்த்தபோதே ஏற்பட்ட சலனம், அவளுக்கும் ஜெயராமுக்கும் இடையில் உறவு இருக்கிறது என்று தெரிந்தபோது கூட விலகவில்லையே. தன் அக்காவிற்கு ஜெயராம் துரோகம் செய்கிறார் என்பதையும் மீறி, மீநன்னயாவின் மீது விருப்பம் கொண்டார் என்கிற ஆத்திரம்தானே அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? இவள் என்னவள் என்கிற உரிமை தோன்றக் காரணம் என்ன… அவன் இவளை விரும்புகிறானா? எண்ணிய மாத்திரத்திலேயே விருக்கென்று எழுந்தமர்ந்தான் அதகனாகரன்.

“இல்லை… இல்லை… நிச்சயமாக இல்லை.. காட்… அவனுக்கு என்னவாகிவிட்டது. ஏன் இப்படித் தப்புத் தப்பாக நினைக்கிறான். ஆமாம் அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் காதல் எல்லாம் இல்லை. ஜெயராமைக் காதலித்தவளை இவன் காதலிப்பதா… சீ.. சீ… எத்தனை பெரிய அசிங்கம் அது.

மீநன்னயாவிற்கு வேண்டியது பணம். அந்தப் பணம் ஜெயராமிடம் இருந்ததால்தான் அவரோடு தொற்றிக்கொண்டாள். இப்போது என்னிடம் இருப்பது தெரிந்ததும் நான் அழைத்தேன் என்று வந்துவிட்டாள். அப்படிப்பட்டவளிடம் சலனப்படுவதென்றால், அதை விடக் கேவலம் எதுவும் இருந்துவிடமுடியாதே.

விழிகளை ஆழ மூடியவன், தன் புத்தியையும் மனத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டுவர முயன்றாள். மிகச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் வென்றான்.

அவனுடைய பிரச்சனை ஒரு ஓரமாக இருக்கட்டும். முதலில் அக்காவின் பாதையில் உள்ள முள்ளைப் பிடுங்கி எறியவேண்டும். அதற்குப் பிறகுதான் இவன் எதைப் பற்றியும் சிந்திக்க முடியும். அவனால் அத்தனை சுலபத்தில் அந்தச் செடியைப் பிடுங்கி எறிந்துவிட முடியுமா? குழப்பத்துடன் விழிகளைத் திறந்தவன் நிமிர்ந்து பார்த்தான். மருந்தின் வேகத்தில் நன்றாகவே உறங்கிக்கொண்டிருந்தாள் மீநன்னயா.

அப்போதுதான் அவன் கவனித்தான், அவளுடைய வலது புறங்கை நீலநிறமாக மாறி சற்று வீங்கியிருந்தது.

தன்னை மறந்து அவளை நோக்கிக் குனிந்தவன், அந்தக் கரத்தை ஒற்றைக் கரத்தால் எடுத்துப் பார்த்தான்.

ட்ரிப் ஏற்றும்போது குத்தப்பட்டதாக இருக்கவேண்டும். அவளுடைய வெண் தோலுக்கு அப்படியே தெளிவாகத் தெரிந்தது.

குத்தும்போது வலித்திருக்குமோ. இவனுக்கும் வலித்தது. பெரு விரலால் கண்டிய இடத்தை வருடிக் கொடுத்தவன் நிமிர்ந்து பார்த்தான். நெஞ்சைப் பிசைந்தது. அவள் மீது காதல் இல்லை என்றால், ஏன் உள்ளே பிசையவேண்டும்…? குழம்பிப் போனவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. ஆரம்பத்திலிருந்த பழிவாங்கும் வேகம் இப்போது தொலைந்து போயிருந்தது, அன்று அவளுடைய கவனத்தைத் திருப்புவதற்காகவே கால்தடம் போட்டுத் தரையில் விழவைத்தான். இப்போது விழும் அவளைத் தாங்கிப்பிடிக்கவேண்டும் என்று மனம் சண்டித்தனம் செய்கிறது.

இப்படியே போனால், அவனே இவர்கள் இருவரையும் சேர்த்துவைத்துவிடுவான் போலவே… வேகமாகத் தன் தலையை உதறியவன், பதட்டமாக இருக்கையை விட்டு எழுந்தான்.

நிச்சயமாக அவனுக்கு ஏதோ பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. இல்லையென்றால், அவளை ஏமாற்றுவதாக இவன் நினைக்க, இவனே அவளிடம் ஏமாறிகொண்டிருக்கிறான் போல. அவளுடைய ஒற்றைப் பார்வை, இவனுடைய உறுதியை அறுத்தெடுத்துச் செல்கிறது. இவன் முற்றாக முட்டாள் ஆவதற்குள் செய்யவேண்டியதைச் செய்துவிடவேண்டும். காலம் கடந்தபின் வருந்தி எந்தப் பயனும் இல்லை… முடிவு செய்தவனாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

அப்போதைக்கு அந்த அறையை விட்டு மட்டும்தான் அவனால் வெளியே வர முடிந்தது.

What’s your Reaction?
+1
7
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!