Fri. Apr 4th, 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன்- 1

(1)

 

நவம்பர் மாதத்தின் இடைக்காலம், என்பதாலும் கடும் குளிர்காலம் ஆரம்பமாகத் தொடங்கிய காரணத்தாலும், மரங்கள் யாவும் இலைகளை உதிர்த்துவிட்டுத் தூங்கத் தொடங்கிய நேரம். பகலவனோ குளிருக்குப் பயந்து சற்று வேளைக்கே ஓடி ஒளிந்து கொண்டதால் நீல வானம் இப்போது கரிய மையைப் பூசியிருந்தாலும், அது லண்டன் மாநகரம் என்பதால், அத்தனை பனிப்பொழிவு இல்லாமல் வானம் நிர்மலமாக இருந்தது. அங்கே அள்ளித் தெறித்தது  போலப்பகலைப் பார்க்காத அல்லது பகலில் தெரியாத நட்சத்திரங்கள் அத்தனையும் இப்போது கண்களுக்குப் பளிச்சென்று தெரிந்துகொண்டிருந்தன. அவை நிச்சயமாகப் பெண்களாகத்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால் சந்திரன் தேய்ந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அதன் கூடச் சேர்ந்து  கொஞ்சிக்  குலாவிக்கொண்டிருக்குமா… வெட்கம் கெட்ட நட்சத்திரங்கள்… நட்சத்திரங்கள்தான் கூடிக் குலாவுகின்றனவே… பிறகு எதற்குச் சந்திரன் இந்த இயலாத நேரத்திலும் அவற்றோடு பின்னிப் பிணைய நினைக்கிறது.. விலகிச் செல்வதற்கு என்னவாம்? வாய்ப்புக் கிடைத்தால் இயற்கையும் தன் குணத்தை மாறிவிடும் போல…

பொதுவாகக் குளிர் என்றால், உடலை மூடி மறைப்பதுதானே வழக்கம், ஆனால் அந்த விடுதியின் உத்தரத்தில் நின்றிருந்த அந்த உருவம் மட்டும் மேலாடையைத் துறந்துவிட்டு, ட்ரக் பான்டுடன் ஒரு கரத்தில்  மதுப்போத்தலை  ஏந்தியவாறு அங்கிருந்த தடுப்பில் இரு கரங்களையும் ஊன்றிக் குனிந்து நின்று, அப்போதுதான் விழுந்து தரை தொட்ட இலைகளையும் அதை உதிர்த்துவிட்டுத் தினாவெட்டாக நின்றிருந்த மரங்களையும் தொலைவிலிருந்து வந்த வெளிச்சத்தில் வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்.

யாரவன்…? இத்தனை அழகிய திடகாத்திரம் கொண்ட ஆண்மகன் இந்தப் புவியில் உண்டா என்ன? அப்பப்பா…! அது தேகமா அல்லது கருங்காலி மரத்தைக் கடைந்தெடுத்துச் செய்திட்ட சிற்பமா? எத்தனை இறுக்கம், எத்தனை உறுதி. அதுவும் அந்த விழிகள் இருக்கின்றனவே…! இரவின் வெளிச்சத்திலும் இரையைக் கண்டதும் பாயத் தயாராகும் புலியின் பார்வை போல  மின்னிக்கொண்டல்லவா இருக்கின்றன. அதற்குப் போர்வையாய் அடர்ந்த தடித்த கண்ணிமைகள். பாயத் தயாராகும் கூரிய அம்பினை ஒத்த நாசி. கோபத்தைக் கூட அந்த நாசியில் காட்டிவிட முடியுமா என்ன? அப்பப்பா வெளிவரும் சுவாசம் கூட எத்தனை சீற்றத்தோடு வெளியே வருகிறது…  அதற்குக் கீழே அழகாக நறுக்கப்பட்ட மீசையோடு இணைந்த தாடி.  இவற்றிட்கிடையே  சிக்குப்பட்ட சற்றுத் தடித்த உதடுகள். அதில்தான் எத்தனை அழுத்தம். உதட்டின் ஓரத்தில் அதீத அழுத்தத்தால் துடிக்க, அதை இடது விரல்கள் கொண்டு நீவிவிட்டவனின் கம்பீரத்தைத்தான் என்னவென்று சொல்வது.

அதுவும் சற்றுக் கரங்களை அசைத்தாலும், எம்பிய புஜக் குன்றுகள். இதைத்தான் தினவெடுத்த புஜங்கள் என்று சொல்வார்களோ.  அதற்குப்  பொருத்தமாய் அகன்ற பரந்த மார்பும், அதில் ஒளிந்திருந்த ஒன்றிரண்டு வெட்டுப்பட்ட வடுக்களும், ஒடுங்கிய இடையும், வயிற்றில் சீராய்  அமைந்திட்ட ஆறு வரிவடிவக் கட்டுகளும், ட்ராக் பான்டையும மீறி உருண்டு திரண்ட தொடைகளும், நீண்ட கால்களும், சீராய் பராமரித்த பாதங்களும் என்று, எகிப்திய சிற்பம் தவறிவந்த கம்பீரத்தோடு நின்றிருந்த அந்த ஆண்மகனை யார்தான் விட்டுவைப்பர். அட இயற்கைகூட விட்டுவைப்பது போலில்லையே. அந்தக் குளிர் காற்றுக் கூட ஆரவாரமாக அவனைத் தழுவி அணைத்துத் தம் இருப்பைச் சொன்னாலும் கூட, அதை உணரும் நிலையில் அவன் இல்லையே.

அவன் உடல் இறுக்கத்தைப் போல அவன் முகமும் இறுகியிருக்க, எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவன், எதையோ எண்ணித் தன் தலையை மெதுவாக அசைக்க, அவன் குழல் கூட அவனைப் போலப் பிடிவாதமாக அசையாது அப்படியே இறுகித்தான் நின்றிருந்தன.

ஏதோ யோசனையோடு, கரத்திலிருந்த மதுப்போத்தலை வாய்க்குள் கொட்ட, அது தொண்டையை எரித்துச் செல்வதை ஒரு வித சுகத்தோடு விழிகள் மூடி அனுபவித்தாலும், உள்ளே  எரியும் கொந்தளிப்புக்கு முன்னால் அந்த மதுவின் எரிவு சற்றும் தாக்குப்பிடிப்பதாயில்லை.

சலிப்புடன் ஒரு பெருமூச்சை விட்டவன், குனிந்திருந்த நிலை மாறி நிமிர்ந்து நிற்க, அம்மாடி… நின்ற வாக்கிலேயே வானத்தை எட்டித் தொட்டுவிடுவான் போலவே… அத்தனை உயரமாக இருந்தான் அவன்.

அவன் நிமிர்ந்து நின்றதைக் கண்டு, சந்திரனோடு கூடிக் குலாவிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் கூடத் தம்நிலை மறந்து இவனைத் திரும்பிப் பார்த்துக் கண்களைச் சிமிட்ட ஒரு விநாடி அந்த நட்சத்திரங்களை வெறித்தவன் எதையோ எண்ணியவாறு பெரும் மூச்சொன்றை விட்டவாறுத் தலையைப் பின்னால் சரித்தான். கழுத்து வலித்தது. அதை ஒற்றைக் கரம் கொண்டு அழுத்திவிட்டவன், கரத்திலிருந்த மதுப்போத்தலை அருகேயிரந்த மேசையில் வைத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து, ஒற்றைக் காலைத் தூக்கி, மறு காலின் மீது வைத்தவாறு தலையைப் பின்னால் சரித்து, விழிகளை மூடிச் சற்று நேரம் நின்றான்.

எத்தனையோ பிரச்சனைகளை அவன் சந்தித்திருக்கிறான் தான். ஆனால் எந்தப் பிரச்சனையும் இந்தளவு அவனை வதைத்ததில்லை. அவனுக்கு யோசிக்க யோசிக்கத் தாளவில்லை.

இருக்காதா பின்னே, அவன் கண்ட காட்சி அப்படியாயிற்றே. இத்தனை காலம் தந்தைக்கு நிகராகப் போற்றி வந்த அவனுடைய அத்தான் இப்படி ஒரு காரியத்தைச் செய்வார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே. எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகம். எண்ணும்போதே உள்ளே  திகுதிகுவென்று எதுவோ எரிந்தது. ஆத்திரம் எம்பிப் பரவிக் கட்டுக்கடங்காமல் உடலின் அத்தனை அணுக்களிலும் ஊடுருவி நுழைந்து அவனை உயிரோடு வதைத்தது.

தவித்தவனாய் விழிகளை அழுந்த மூடியவனுக்கு மறு நாள்  கார்பந்தையத்திற்கான முக்கியப் போட்டி வேறு இருப்பது நினைவுக்கு வந்தது. இருக்கும் மன நிலையோடு அந்தப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் போகாமலும் இருக்க முடியாதே… ஆனாலும் இருக்கிற மனநிலையில் அந்தப் போட்டியில் கலந்து வெற்றி கொள்ள முடியுமா… நினைக்க நினைக்க மனம் மேலும் சோர்வுற்றதுதான் மிச்சம்.

இத்தனை குழப்பத்தோடு கலங்கிப்போயிருக்கும், அந்தக் கம்பீர ஆண்மகன் வேறு யாருமில்லை, இன்று பலராலும் போற்றப்படுகிற மிகப் பிரபலியம் வாய்ந்த கார் பந்தைய வீரன் கோதை அதகனாகரன். சென்ற வருடம் நடந்த ஃபோர்ம்யூலா வன் (Formula 1) உலகளாவிய போட்டியில் முதலாவது பரிசை மிகச் சுலபமாக வென்று கனடிய நாட்டிற்குப் பெருமை சேர்த்துக் கொடுத்த ஒரே தமிழன். சென்ற வருடம் மட்டுமில்லை, தொடர்ந்து மூன்று வருடங்களாக அந்தப் பரிசைத் தன்னதாக வைத்துக் கொண்டதால்இவனைத் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வருடத்திற்கு மட்டும் இவனுடைய  வருமானம்  ஐம்பது  மில்லியன்  அமரிக்க  டாலர்கள். அது மட்டுமில்லை, அவனுடைய விளையாட்டுத் திறனைக் கண்டு வியந்து அவனைத் தங்கள் குழுவில் இணைத்துக் கொள்ளப் பல நாடுகள் பேரம் பேசியும் கூட, சற்றும் அசைந்து கொடுக்காமல், தன்னை வளர்த்த  கனடிய  நாட்டிற்காக நின்று விளையாடி வென்றும் கொடுத்தான். கொள்ளை கொள்ளையாகப் பணத்தைச் சேர்த்து, அப்பணத்தைப் பல துறைகளில் முதலீடு செய்ததன் பயன், விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்கார வரிசையில் அவனுக்கும் ஒரு இடம் கிடைத்தது.

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் சென்று நிற்கக் கூடிய வசதி, புகழ், பெருமை எல்லாம் மிதமிஞ்சியே இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? நடந்தவற்றை இல்லாதாக்கும் வலிமை அவனிடம் இல்லையே. பெரும் வலியுடன் விழிகளை முட, மனதில் வந்து நின்றாள் அவனுடைய சகோதரி மாதவி.

இந்தப் பரந்த உலகத்தில் அவனுக்கென்று இருக்கும் ஒரே உறவு அவள் மட்டும்தான். கூடவே, அவள் கணவன் ஜெயராம், முத்துக்களாய் அவர்களின் பிள்ளைகள் புகழேந்தி, பூங்கோதை. மிக அழகான கூடு அவன் சகோதரியுடையது. ஆனால் போகும் போக்கைப் பார்த்தால், அந்த அழகிய கூடு சிதைந்து தரைமட்டமாகிவிடும் போல இருக்கிறதே.

நினைக்கும்போதே பெரும் வலி நெஞ்சைப் பிளந்தது. மாதவி, அவனுடைய சகோதரி என்பதை விடத் தாய் என்று கூடச் சொல்லலாம். அவன் சிறுவனாக இருந்தபோதே, அவனைப் பெற்ற தந்தை அவரோடு வேலை செய்த ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு, இவர்களை அனாதையாக விட்டுவிட்டுத் தனக்கென்று ஒரு புதிய குடும்பத்தை அமைத்துக் கொண்ட பின், தன் கணவனின் அந்தச் செயலால் ஆத்திரமுற்ற அன்னை கோதை, கணவனைத் தலை முழுகிவிட்டுத் தனியாளாகத் தன் மகனையும் மகளையும் வளர்த்தார்.

ஆனால் விதி அவருக்கான வாழும் காலத்தைச் சுலபமாகப் பறித்துக் கொண்டது. விறகு எடுக்கப் போன இடத்தில் பாம்பு கொத்திஇறந்துபோகஇவனும் சகோதரியும் என்று இந்த உலகத்தில் தனித்துவிடப்பட்டனர். அதன் பிறகு ஆறு வயதிற்கும் மூத்த சகோதரிதான் இவனுக்கு எல்லாமாகிப்போனாள்.

அவள் வளர்ப்பில் உலகைக் கற்றான். ஒரு கட்டத்தில், அவனுடைய சகோதரி, திருமணமாகிக் கனடாவிற்கு வந்த பின், பதினாறு வயது நிரம்பிய தன் தம்பியையும் தன்னோடு அழைத்துக் கொள்ள, மாதவியின் குடும்பமும் அவன் குடும்பமானது.

தந்தை செய்த துரோகத்தால், தன் பெயருக்குப்  பின்னாலிருந்த  அவருடைய பெயரைத் தூக்கி எறிந்துவிட்டுத் தாயின் பெயரான கோதை என்கிற பெயரையே தன் ‘லாஸ்ட் நேம்’ ஆகச் சுவீகரித்தான்.

கல்வியில் அத்தனை நாட்டம் இருக்கவில்லை. ஆனாலும் படிக்கவேண்டிய கட்டாயம். கற்காது உலகை ஜெயிக்க முடியாது என்கிற ஒரே காரணத்திற்காக வேண்டா வெறுப்பாகவே வியாபார முகாமைத்துவத்தைக் கற்றுச் சிக்கலில்லாமல் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வந்தான்.

அப்போது கற்றுக்கொண்டிருந்த காலத்தில், வாகன ஓட்டப்பந்தையத்தில்  ஆர்வமுள்ள ஒரு நண்பன் சிக்கிக் கொள்ள, இவனுடைய ஆர்வமும் அதில் தொற்றிக் கொண்டது. அதன் விளைவு, கார் பந்தயங்களில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினான்.

அது உயிரைக் கொல்லும் மிக ஆபத்தான விளையாட்டு என்று மாதவி பல முறை தடுத்தும் அவன் அசைந்து கொடுத்தானில்லை. சகோதரி கடுமையாக மறுத்ததால், அவருக்குத் தெரியாமலே பயிற்சி எடுக்கத் தொடங்கினான். ஆரம்பப் போட்டிகளில் பயங்கரமாகத் தோல்விகளைத் தழுவினாலும், அந்தத் தோல்வியே அவனை வெல்லவேண்டும் என்கிற வெறிக்கு உந்தித் தள்ளியது. அதன் பின் முயன்றான் முயன்றான் முயன்றான். இறுதியில் இருபத்து ஓராவது வயதில் கனடிய கார் பந்தயப் போட்டியில் நான்காவது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டான் அதகனாகரன்.

அதுவே அவனுக்கு முதலாவது பரிசை வென்ற மகிழ்ச்சி. மறு வருடமே இரண்டாவது இடத்தைக் கைப்பற்றித் தனக்கென ஒரு முத்திரையைப்  பதித்துக்கொண்டான். அதன் பின் எல்லாமே ஏறுமுகம்தான். அதுவும் கடந்த மூன்று வருடங்களாக ஃபோர்ம்யூலா வன் போட்டிகளின் முதல் பரிசைத் தொடர்ந்து தட்டிச் சென்று சாதனையும் புரிந்தான்.

இதற்கிடையில் மூன்று முறைகள் விபத்திற்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு எப்படியோ உயிரோடு மீண்டும் வந்தான். உடலில் எண்ணற்ற காயங்கள் உண்டு. ஆனாலும் அவன் அடங்கினானில்லை. அந்தக் காயங்களே அவனைக் கர்வம் கொள்ளச் செய்தது. மாதவி கெஞ்சி அழுது வேண்டிக் கோபித்துக் கேட்டும் அவன் அந்த விளையாட்டிலிருந்து ஒதுங்கினானில்லை. அவனைப் பொருத்தவரை அது விளையாட்டில்லை. அவன் வாழ்க்கை.

அவனுடைய போக்குப் புரிந்து, இவனை இப்படியே விட்டால் சரிவராது என்று முடிவுசெய்த மாதவி, இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது இருபத்தாறாவது வயதிலேயே அவனுடைய அனுமதியையும் கேட்காமல் பெண்பார்க்கத் தொடங்கிவிட்டார். ஆனால் இவன் மசிந்தால் அல்லவோ.

ஏனோ தெரியவில்லை வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதிலிருந்த  ஆர்வம் துளியும் திருமணம் முடிப்பதில் இருக்கவில்லை. ஒரு வேளைஇவர்களை நடுத்தெருவில் அம்போ என்று விட்டுவிட்டுப் போன தந்தை காரணமாக இருக்கலாம். இல்லை இவன் வெற்றியையும் பணத்தையும் கண்டு இவனைத் தம் வலைக்குள் விழ வைத்த அதீத பெண்களின் நட்பு இவனைத் திகட்டச் செய்திருக்கலாம். காரணம் எதுவென்று அவனுக்குத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரைக்கும் திருமணம் என்பது வேண்டாத வேலை. தேவையற்றத் தொடுப்பு, மற்றும் உடல் சுகத்தை அறிவதற்கான சடங்கு.

உடல் சுகத்தை அறிவதற்குத்தான் திருமணம் என்றால், அதுதான் அவனுக்கு எதற்கு? சொடக்கினால் தேவையைப் பூர்த்தி செய்ய ஆயிரம் பெண்கள்… அப்படியே வாரிசு வேண்டுமானால், இருக்கவே இருக்கிறது வாடகைத்தாய் முறை. அள்ளிக்கொட்டப் பணமா இல்லை?

இதையே சகோதரியிடம் கூறியபோது உருத்திர தாண்டவமே ஆடிவிட்டாள் மாதவி.

“என்ன இது பைத்தியக்காறத்தனமான பேச்சு. திருமணம் ஆகாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறப்போகிறாயா? ஏன்டா குழந்தைகள் என்ன கூழாங்கற்களா சும்மாதரையைத் தடவிப்  பெற்றுக்கொள்ளஅது  வைரம்டா.. அவற்றைப் பெறவேண்டிய இடத்தில் மட்டும்தான் பெறமுடியும்… ஒருவேளை உன் மனைவியால் குழந்தைகளைச் சுமக்க முடியாது என்கிற நிலை வரும்போது, வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறுவதில் ஒரு நியாயம் உண்டு… ஆனால் திருமணமே முடிக்காமல் குழந்தைகளை யாரோ ஒருத்தியைக் கொண்டு பெறுவதென்றால்… இது என்ன விதமான முட்டாள்தனமான பேச்சு…?” என்று சீறியவர், பொறுமையை இழந்தவராக.

“ஏன்டா என்னை இப்படிப் படுத்துகிறாய். இந்தக் கண்டறியாத விளையாட்டை விட்டுவிட்டுக் குடும்பம் குட்டியென்று வாழ உனக்கு என்ன கேடு… ஒவ்வொரு முறையும் நீ போய்விட்டு வரும் போது நெஞ்சே நின்றுவிடும் போல இருக்கிறது… சரி திருமணம் முடித்துக் குழந்தைகள் என்று வருகிறபோதாவது இந்தக் கோதாரி பிடித்த விளையாட்டை விடுவாய் என்று பார்த்தால், நீ வாடகைத்தாய் மூலம் பிள்ளை பெறுகிறேன் என்று வந்து நிற்கிறாயே…” என்று சீற, அதைக் கேட்டுச் சிரித்தவன்,

“அட… எத்தனை பெரிய ராஜதந்திரம்… இந்த விளையாட்டைக் கைவிட இப்படி ஒரு யோசனையா… நல்ல யோசனைதான்… ஆனால் பாருங்கள்… எனக்குத்தான் இந்தத் திருமணத்தில் பிடித்தமில்லை என்கிறேனே… பிறகு எதற்குத் திரும்பத் திரும்ப அதிலேயே நிற்கிறீர்கள்…” என்று சலித்தவனை எரிச்சலோடு பார்த்தாள் மாதவி.

“இப்படியே திருமணமாகாமல் தனிமையில் இருந்து எதைச் சாதிக்கப்போகிறாய்… அதுதான் ஆசைக்குக் கோடி, கோடியாகச் சம்பாதித்துவிட்டாயே… இதை அனுபவிக்க உனக்கென்று ஒரு சந்ததி வேண்டாமா? அதைப் பற்றிச் சொல்ல வந்தால், வாடகைத் தாய் மூலம் பெறுகிறேன் என்று உளறுகிறாய்..” என்று திட்டினாலும் மாதவிக்குச் சலிப்பு ஏற்படத்தான் செய்தது.

எத்தனை முறைதான் அறிவுரை கூறுவது…? ஒவ்வொரு முறையும் அறிவிலிக்கு உறைப்பவன் அவனிலும் மடையன் என்பதை மெய்ப்பிக்கிறானே… ஆனால் அதகனாகரன் சாதாரணமானவன் இல்லையே. அவன் வேறு மாதிரியாயிற்றே.

அவனுக்கு வாகனத்தை ஓட்டுவது விளையாட்டு என்பதையும் மீறி அவனுடைய மூச்சில் கலந்த ஒன்றாயிற்றே. அவனிடமிருந்து அந்த  விளையாட்டைப் பிரித்தால், அவன் வெறும் சைவர்தான்… இத்தனை பெயர் புகழ், அவனுக்கென்ற ஒரு அங்கிகாரம்… இதையெல்லாம்  அள்ளிக் கொடுத்தது அந்த விளையாட்டுதானே. அதுவும் அந்தக் காற்றைக் கிழித்துக்கொண்டு அத்தனை பேரையும் வென்று வெற்றியைத் தொடும்போது ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே… பெருமை இருக்கிறதே… அந்தக் கர்வம் இருக்கிறதே… அதை எப்படி வார்த்தைகளால் வர்ணிப்பது. அதைத் துறந்துவிடு என்றால்… எப்படித் துறப்பான். அதுதானே அவனுடைய அடையாளம். அதுதானே அவனுடைய உயிர் நாடி… அதற்காய் உயிரைத் தொலைப்பது கூட ஆனந்தம்தானே. தவிர அவன் விளையாடுவதோ ஆபத்தான விளையாட்டு. அப்படியிருக்கையில் உயிரோடிருப்போம் என்கிற எந்த உத்தரவாதத்தோடு திருமணம் முடிப்பது. ஒரு வேளை விபத்தில் அவனுக்கு ஏதாவது நடந்தால், அவனுடைய குடும்பம் அல்லவா நடுத்தெருவில் நிற்கும். ஆனால் அது மதவிக்குத் தெரியமாட்டேன் என்கிறதே…

இதோ இன்று வரை, இந்த இருபத்தொன்பது வயதிலும், இந்தக் கணம் வரை மாதவியின் பேச்சு அவனுடைய திருமணமாகத்தான் இருந்தது. எறும்பூரக் கல்லும் தேயும் என்பார்கள். இவன் காண்டாமிருகம் ஊர்ந்தால்  கூடத் தேயமாட்டேன் என்று அடம்பிடிக்கிறானே. இறுதியாகச் சலித்துப் போனவராக,

“டேய் திருமணம் என்கிறது தேவைடா… அது வாழ்வின் கட்டாயம்… இதோ பார் ஆகரன்… தனி மரம் எப்போதும் தோப்பாகாது… அது அதைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்தால்தான் செய்யவேண்டிய திருமணத்திற்கும் மரியாதை, அதற்கு அர்த்தமும் இருக்கும். இ்பபோது திருமண வாழ்க்கையை வெறுத்தபின், வயதுபோன காலத்தில் விரும்பிய வாழ்க்கையைத் தேடும்போது அது தொலை தூரத்திற்குப் போயிருக்கும். இறுதியாகத் தனிமையின் பிடியில் சிக்கியிருக்கிறபோது, வாய்விட்டுப் பேச ஒரு நாதி கூட இருக்காது…” என்றவர்அவனுடைய அலட்சியப் போக்கில் எரிச்சல் கொண்டவராகஎன்னதான் உயிரைப் பிடித்து அவனிடம் பேசினாலும் அதற்கான பலன் எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல,

“சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உன் இஷ்டம்… ஒன்று மட்டும் சொல்கிறேன் கேட்டுக்கொள்… திருமணம் ஆனால்தான் ஒரு மனிதன் முழுமையடைய முடியும். மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.. இல்லையென்றால்,…” என்று கூற, இவனோ குலுங்கிச் சிரித்து,

“எப்படி.. நம் அம்மா மகிழ்ச்சியாக இருந்த மாதிரியா… அதுவும் நம் அப்பா அம்மாவுக்குக் கொடுத்த மகிழ்ச்சி போலவா” என்றான் கிண்டலாக. அதைக் கேட்டுத் தன் தம்பியை முறைத்துப் பார்த்த மாதவி,

“அந்தாளை எதற்கு உதாரணமாக எடுக்கிறாய்… ஏன் உன் அத்தானில்லையா… என்னைத் திருமணம் முடித்த இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் என்றாவது வருந்தியிருக்கிறேனா. சிறு துன்பம் என்று உன்னிடம் வந்து முறையிட்டிருக்கிறேனா… அவர் என்னைப் பட்டத்து அரசியாக அல்லவா வைத்திருக்கிறார்… இது வரை என்னைக் கேட்காமல் ஒரு துரும்பு கூட அசைத்ததில்லை… உனக்குத் தெரியும்தானே…” என்று ஏகத்திற்கும் எகிற தன் கரங்களைத் தூக்கிச் சமாதானப் படுத்துபவன் போல,

“சரி… சரி… உன் கணவர்… அதாவது என் அத்தான் பத்தரை மாற்றுத் தங்கம், ஏகபத்தினி விரதன், சத்தியவான்… போதுமா…?” என்று கிண்டலடித்தவனுக்கு இப்போது அதை நினைத்தாலும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

எத்தனை பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள் அவர் மீது. ஆனால், கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல்… அத்தனையையும் தரைமட்டமாக ஆக்கிவிட்டாரே… எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார். இவருக்கும், அவனைப் பெற்ற தந்தைக்கும்தான் என்ன வித்தியாசம்.. சே… என்று உள்ளம் கொதித்தவனுக்கு மீண்டும் அன்று காலை சந்தித்த கசந்த நிகழ்வு மனதில் ஓடத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
27
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!