Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் 2/5-6

-5-

நேயநறுமை மெதுவாக விழிகளைத் திறந்தாள். மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருப்பது புரிய, விறுக்கென்று எழுந்தமர்ந்தாள்.

பாஸ்கரன் சொன்ன செய்தி இன்னும் பறை ஒலியாய் காதில் அதிர்ந்தது. அந்தச் செய்தியின் அழுத்தம் இதயத்தைத் தாக்க, அது வெடிக்கப் போகிறேன் என்பது போலப் பலமாகத் துடிக்கத் தொடங்கியது. அது கொடுத்த வலி தாங்க முடியாதவளாக மார்பின் மீது கையை வைத்தவளுக்கு அந்த மீளாத் துயரை எப்படிக் கையாளப் போகிறோம் என்று சத்தியமாகப் புரியவில்லை.

தேகம் நடுங்க, மூச்சுத் திணறத் திரும்பிப் பார்த்தாள். அங்கே சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் பின்புறமாகத் தலையைச் சரித்து விழிகளை அழுந்த மூடியவாறு அமர்ந்திருந்தான் ஆதியதுலன்.

அந்த நிலையிலும், இரண்டு நாள் தாடி மழிக்கப் படாமல் சோர்ந்து போய்ப் பரிதாபமாகக் கிடந்தவனைப் பார்ப்பதற்கே வயிற்றைப் பிசைந்தது. எத்தனை கம்பீரமானவன். ஆனால் இன்று அவன் இருக்கும் நிலையை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

இந்தப் பெரும் இழப்புகளைச் சந்திப்பதற்கா அவள் பூமியில் ஜனித்தாள். மூச்சடைப்பது போன்ற உணர்வில் திணறிப்போனாள்.

அவளுடைய அசைவை உணர்ந்தவன் போலச் சட்டென்று விழிகளைத் திறந்த ஆதியதுலன் எழுந்தமர்ந்து அவளைப் பார்த்தான்.

இறுகிப்போய், பொட்டுக் கண்ணீர் சிந்தாமல், தன்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளைக் கண்டவனுக்கு நெஞ்சில் பலத்த அடி.

அவள் அழவில்லைதான். அவளுக்குப் பெரிதாக அழுது பழக்கமில்லை என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் கண்ணீருக்குப் பதில், இதயத்தில் இரத்தம் கசிவதை உணர்ந்து கொண்டவனுக்கு நெஞ்சம் துடித்துப் போனது.

அவன் மனைவியை மட்டும்தான் இழந்து விட்டான். ஆனால் அவளோ மொத்தமாக இழந்து விட்டு அநாதையாக நிற்கிறாளே? அவனுக்காவது தந்தை இருக்கிறார். குழந்தை இருக்கிறது. அவளுக்கு…? தன்னுடைய வேதனையை உமிழ்நீர் கூட்டி விழுங்கியவன், இருக்கையை விட்டு எழுந்து அவளருகே செல்ல, அவளோ கொஞ்சம் கூட அசையாமல் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

அவளை நெருங்கி நின்றவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் எக்காலத்திலும் நட்பு முறையோடு பேசியதேயில்லை. அப்படியிருக்கிற போது, அவளுடைய வலியில் எப்படிப் பங்கு கொள்ள முடியும்? தன் தவிப்பை உணர்த்த முடியும்? முதலில் அவனால் அது முடியுமா?

ஆனாலும் எழுந்து வந்தவன், எதுவும் பேசாமல் அவளுக்கருகே படுக்கையில் அமர்ந்தான். அவளுடைய விழிகளும் அவனோடு நகர்ந்து அவனிடமே நிலைத்தன.

அவளை ஏறிட்டவனின் விழிகளில் தாள முடியாத வலி.

படுக்கையில் சோர்வோடு விழுந்து கிடந்த, அவளுடைய கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து, “நறுமை…!” என்றான் கிசுகிசுப்பாக.

அந்தக் குரலில் இதயமே குலுங்கியது அவளுக்கு. பற்களைக் கடித்து உள்ளே சீற்றமெனப் பொங்கி எழும் உணர்வுகளை அடக்கிக் கொண்டவள்,

“எ… என்னாச்சு…? எப்படி… அவர்கள் மட்டும்…? நீங்கள்… மாமாக்கு…?” முடிக்க முடியாமல் திணற, அவளுடைய கரத்தை பட்டும் படாமலும் அழுத்திக் கொடுத்தவன், ஒரு பெருமூச்சுடன் விழிகளை அழுந்த மூடித் திறந்தான். அவளுடைய முகம் பார்த்துப் பேசத் தைரியமில்லாமலோ என்னவோ, தன் கரங்களுக்குள் சிக்கியிருந்த அவளுடைய கரங்களைப் பார்த்தவாறே,

“எனக்கும் அப்பாவுக்கும் முக்கிய கூட்டமிருந்தது. அதை முடித்துக்கொண்டு புறப்படுவதாகத்தான் இருந்தோம். இவர்கள் போகும் வழியில், வண்டியின் டயர் வெடித்துக் கட்டுப்பாடில்லாமல், தடம் புரண்டு விட்டது. நே.. நேரிழை, குழந்தையைத் தன்னோடு இறுக அணைத்து தனக்குள்ளேயே பாதுகாத்ததால், கு…குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை…” அவன் உணர்ச்சியை துடைத்த குரலில் சொல்ல, நேய நறுமைக்கு அந்தச் செய்தியை உள்வாங்கவே நீண்ட நேரம் தேவைப்பட்டது. இதயம் விண்டு விடும் போல வலித்தது. உள்ளே எடுத்த மூச்சோ வெளிவராது உள்ளேயே நின்றுகொண்டது.

கடைசி நேரம் என்ன நினைத்திருப்பார்கள். அம்மா என்னை நினைத்திருப்பாளா? என்னிடம் சொல்லாமல் போகிறோமே என்று கலங்கியிருப்பாளா? அப்பா… அப்பா எப்படித் துடித்தாரோ…? அவருக்கு நான் என்றால் உயிராயிற்றே. கடைசியாக அவளைப் பார்க்கும் போது தலையை வருடிக் கொடுத்து விடை பெற்றார். அதுதான் அவரைக் கடைசியாகப் பார்ப்பது என்று அவளுக்குத் தெரியாமல் போயிற்றே! என்னுடைய நேரு மாமா… ஐயோ… அன்றும் அவள் பேசும்போது கூடச் சொன்னாளே. நான் இறந்தால்தான் வருவாயா என்று? என்னை வரவழைக்கத்தான் இப்படி உயிரை விட்டாளா? சத்தியம் கூட வாங்கினாளே. அதுவும் எல்லோர் மீதும் சத்தியம் வாங்கினாள். ஆனால் நான் அலட்சியம் செய்து அந்த சத்தியத்தை ஒதுக்கினேன்.. ஐயோ..! தெய்வமே.. இப்படியாகும் என்று தெரிந்திருந்தால், முன்பே ஓடி வந்திருப்பேனே. அவர்களோடு கோவிலுக்குச் சென்று அவளும் நிம்மதியாகச் செத்துத் தொலைத்திருப்பேனே… இந்த விதி என்னை மட்டும் ஏன் அநாதையாகத் தவிக்க விட்டு ஒதுங்கிக் கொண்டது? காலம் முழுக்கக் குற்ற உணர்ச்சியில் துடிக்கவேண்டும் என்று நினைக்கிறதா? ஐயோ…! தினம் தினம் நேருவை எண்ணிப் பொறாமை கொண்டேனே. அவளைத் திட்டிச் சபித்தேனே. அதுதான் என் நேருவைப் பாதியில் கொண்டு சென்றதோ? நான் பாவி… மா பாவி… நானும் வாழாமல், என் தங்கையையும் வாழ விடாமல்… கடவுளே…! இந்த நாசமாய் போன உயிர் என்னிடம் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறது? கடவுள் என் உயிரை எடுக்காமல், ஏன் என் தங்கையின் உயிரை எடுத்தார்…? நான் பாவி. மகா பாவி.. நான்தான் காரணம். என் பிடிவாதத்தால்தான் இத்தனையும். அன்றே சொன்னது போல வந்து இருந்தால், நேருக்கு எதுவும் ஆகியிருக்காது… எல்லாம் என்னால்தான்…. இந்த வலியிலிருந்து குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படி வெளியேறப் போகிறேன்? என்னுடைய அந்தப் பிடிவாதத்தால், அனைத்தையும் இழந்த விட்டு இப்போது முண்டமாக இருக்கிறேனே! நானும் சந்தோஷமாக இல்லாமல், என்னைப் பெற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடாமல், கடைசியாக எதைச் சாதித்தேன்? இப்போது அனைத்தையும் தொலைத்துவிட்டு உயிரற்ற பிணமாக இருக்கிறேனே! இத்தனை நாட்களும் அவர்களைப் பார்க்காதிருப்பது நிம்மதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இனி அவர்களைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் நரகமாக இருக்கப் போகிறதே. கடவுளே…! இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன். தேகம் நடுங்க அவள் நின்றிருக்க, வெளிறிய முகமும், சொருக முயன்ற விழிகளும், அவனுக்கு என்ன சொன்னதோ, அவளுடைய தோள்களில் கரத்தைப் பதித்து,

“நறுமை…” என்றான். ஆனால் அவளோ அவனுடைய அழைப்பை உள்வாங்காமல், அவளை விட்டுப் போன உயிரானவர்களின் இறுதி நிமிடத்தை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு, உள்ளே அமுங்கிப்போன சுவாசக் காற்றை வெளிவிட மறந்து போனது. உடலோ உயிர்க் காற்றுக்காய் துடிக்கத் தொடங்கியது. அதைப் புத்தி உணர்ந்து கொள்ளாமல் தன் பாட்டுக்கு வலியில் துடிக்க, விழிகளோ சொருகத் தொடங்கியது. பிராணவாயு இல்லாத நிலையில், ஒரு மாதிரியான மந்த நிலைக்குச் சென்றிருந்தவளைக் கண்டு பதறிப்போனான் ஆதிய துலன்.

“ந… நறுமை… என்னாயிற்று?” என்றான் பதட்டமாக. அப்போதும் அவளிடமிருந்து பதில் வராது போக, எழுந்தவன் அவளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்து அவளுடைய தோள்களைப் பற்றி உலுப்பி,

“நறுமை! நறுமை! பிரீத்!” என்றான் கத்தலாக.

அதுவரை எங்கோ ஒரு சுழலில் சிக்கியவள் போல அமர்ந்திருந்தவள் இமைகளைத் தட்டி விழித்து அவனைப் பார்த்தாள்.

அங்கே ஆதியதுலன் அவளை உலுப்பிக் கொண்டிருந்தான். அவனுடைய முகமோ அச்சத்தில் வெளிறியிருந்தது.

‘ஏன் இவன் இந்தளவு பயத்தோடு என்னைப் பார்க்கிறான்? எனக்கு என்னாயிற்று? நான் ஏன் என்னவோ போல உணர்கிறேன்? ஏன் மூளை இயங்க மறுக்கிறது? ஏன் தவிக்கிறேன்? எதற்காக மூச்சுக்காற்றுக்காக ஏங்குகிறேன்? நெஞ்சடைக்கிறதே? உள்ளே என்னவோ செய்கிறதே… உயிர் எதற்கோ தவிக்கிறதே… ஏன்?’ குழப்பத்தோடு அவனைப் பார்க்க அவனோ இப்போது அவளுடைய முகத்தைப் பற்றி உலுப்பினான்.

“நறுமை… பிரீத்…” என்றான் பதட்டமும் தவிப்புமாக.

இவன் ஏன் என்னை மூச்செடுக்கச் சொல்கிறான்? குழப்பத்துடன் அவனைப் பார்க்க, அவளுடைய கன்னம் இரண்டு பக்கத்தையும் விரல்களால் பற்றி அவளுடைய வாயைத் திறக்கச் செய்து,

“நறுமை… பிரீத்…” கிட்டத்தட்ட அவன் சீற, இப்போது அவளுடைய புத்தி மழுங்கத் தொடங்கியது.

“நோ… நோ… நறுமை… இங்கே பார்… மூச்செடு… பிளீஸ்… மூச்சை எடுத்துத் தொலை… நறுமை… இங்கே பார்மா… என்னைப் பார்… ஏய்… மூச்சை எடுடி…” கிட்டத் தட்ட அலறியவன், இப்போது அவளுடைய தலை துவளத் தொடங்க, கொஞ்சமும் யோசிக்காமல், ஓங்கி அவளுடைய கன்னத்தில் அறைந்துவிட்டிருந்தான் ஆதியதுலன்.

அவன் அறைந்த வேகத்தில் படுக்கையில் சரிந்தவள், “ஹக்…” என்கிற சத்தத்தோடு குரல்வளை விரிய, அவளை அறியாமலே ஒரு வித ஒலியோடு மூச்சையெடுத்தாள்  நேயநறுமை.

மூச்செடுத்தவளுக்கு அப்போதுதான் இத்தனை நேரமாக மூச்சை இழுத்துப் பிடித்திருந்தது புரிந்தது. முகம் வெளிற, கண்கள் சொருகிய நிலையில், பலமில்லாது சரிய முயன்ற தலையைத் திருப்பித் தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டாள் நேய நறுமை.

அவளுடைய விழிகளில் தெரிந்த வெறுமையையும், ஏன்டா என்னை உயிர்ப்பித்தாய் என்கிற கேள்வியையும் கண்டு உடைந்து போனான் ஆதியதுலன்.

மறுகணம் ஆவேசமாக எழுந்தவன், அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான். என்ன பேசுவது என்றுகூட அவனுக்குத் தெரிய வில்லை. அந்தளவுக்கு அவனுடைய இதயமும் வெடித்துச் சிதறியிருந்தது. சற்று நேரம் அவளைத் தன்னோடு இறுக அணைத்து வைத்திருந்தவன், நடுங்கும் கரங்களால் அறைந்த கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்தான்.

அவனுக்கும் அந்த நேரத்தில், என்ன செய்வது என்று தெரிந்திருக்கவில்லை. அவனுக்கும் பயத்தில் எதுவும் புரியவில்லை. அவளை மூச்செடுக்க வைக்கவேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருக்க, என்ன செய்கிறோம் என்பதை உணர்வதற்குள்ளாகவே அவளை ஓங்கி அறைந்துவிட்டிருந்தான்.

அவனுடைய அந்தச் செயல், பயனுள்ளதாகத் தான் இருந்தது. ஆனால், அவளை வலிக்கச் செய்து விட்டானே. அப்படி அவன் செய்யவில்லை என்றால், அவளையும் ஒரு வேளை இழந்திருப்பானோ? நினைக்கும்போதே வலி நெஞ்சில் முட்டி மோத,

“சாரி…. சாரி… சாரி… ஐ ஆம் சாரி…” என்று அதை மட்டும்தான் ஓதிக்கொண்டிருந்தானே தவிர, அதை மீறி அவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. தொண்டை அடைத்தது. நெஞ்சம் பிளந்தது.

அதுவரை தோழியாக இருந்த மனைவியையும், எப்போதும் அன்பு கொண்ட அத்தையையும், போற்றிப் புகழும் மாமாவையும் மொத்தமாகத் தொலைத்து விட்டு அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், அழ மறந்து இறுக்கமாய்க் காரியங்களைச் செய்து கொண்டிருந்தவனுக்கு, அவளை அனைத்த அந்த நொடியில் அதுவரையிருந்த இறுக்கம் தொலைந்து போக, எல்லையில்லா வலி சீறல் மூச்சாய் நாசியிலிருந்து வெளி வர, அதனோடு சேர்த்து விம்மலும் அணையுடைத்துப் பாய மறு கணம், அவனுடைய உடல் குலுங்கத் தொடங்கியது. முகம் கசங்கத் தன் கையணைப்பிலிருந்தவளை மேலும் தன்னோடு இறுக அணைத்து அவள் தலையில் தன் முகத்தைப் புதைத்தவனின் கண்களிலிருந்து இரண்டு பொட்டாய் விழுந்த கண்ணீர் தொடர் ஆறாக கொட்டத் தொடங்க அதற்கு மேல் தன்னை அடக்க முடியாதவனாகச், சத்தம் வராது கதறி விட்டான் ஆதியதுலன்.

ஆனால் அவளுக்கோ தன் உயிரானவனின் அணைப்பில் தான் இருக்கிறோம் என்கிற நினைப்பு சுத்தமாக வரவில்லை. சிந்தை முழுவதும் மொத்தமாய் விட்டுச் சென்றவர்களிடம்தான் நிலைத்திருந்தது.

இத்தனை நாட்கள் பாராமுகமாக இருந்தேன். என்னைப் பழிவாங்கத்தான் இப்படி உயிரை விட்டார்களோ? உனக்கு நாங்கள் வேண்டாம் என்றால், எங்களுக்கு நீயும் வேண்டாம் என்பதைச் சொல்லத்தான் இப்படி ஒரேயடியாகப் போனார்களோ? இப்படியே காலம் முழுவதும் குற்ற உணர்ச்சியில் கிட என்று தண்டனை கொடுக்கத்தான் விட்டுச் சென்றார்களோ…? இதுதான் அவளுக்கு அவர்கள் கொடுத்த ஆயுள்தண்டனையா. இதையே அவளால் தாளமுடியவில்லையே. ஆயுள் வரைக்கும் எப்படித் தாங்குவாள்? துடித்து வதைபட்டுக் கிடக்க, ஆதியதுலனோ அவளைத் தன்னுள் புதைப்பது போல இறுக அணைத்தவாறு அப்படியே கிடந்தான்.

எத்தனை நேரமாக அவர்கள் அப்படியே இருந்தார்களோ, கதவைத் திறந்து உள்ளே வந்த பாஸ்கரன் அந்தக் காட்சியைக் கண்டு மேலும் நெஞ்சம் விம்ம, அவர்களின் அருகே வந்தார்.

“ஆதி…” தன் கண்ணீரைத் துடைத்தவாறு மகனின் தோளைத் தொட, அதுவரை அவள் தலையில் முகம் புதைத்து விசும்பிக்கொண்டிருந்த ஆதியதுலன், அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்தவாறு திரும்பிப் பார்த்தான்.

அழுது சிவந்த தன் மகனின் முகத்தைக் கண்டு மேலும் கண்ணீர் சொரிந்த பாஸ்கரன்,

“எல்லாம் தயாராகி விட்டதாம்பா… உடல்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள்” அவர் சொல்ல, மீண்டும் கன்னத்தில் வடிந்த கண்ணீரை அழுந்த துடைத்தான் ஆதியதுலன்.

நேற்று முன்தினம் வரை அவர்களாக இருந்தார்கள். இப்போது அதுவாக மாறிப்போன வலியை அவனால் தாங்கவே முடியவில்லை. ஆனால் இப்படி உடைந்து போனால் அடுத்த வேலையை யார் பார்ப்பது? தன் வலியையும் வேதனையையும் உமிழ் நீர் கூட்டி விழுங்கிவிட்டுக் குனிந்து பார்த்தான்.

இன்னும் அவன் மார்பில் சாய்ந்தவாறு எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள் நேயநறுமை. மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவனுக்கு அவளை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை. அவளுடைய முகத்திலிருந்த வெறுமை இவன் நெஞ்சை மேலும் பிசைய,

“நறுமை… உன்னுடைய வேதனையைத் தீர்க்கும் சக்தி எனக்கில்லை. அதே போல என்னுடைய துன்பத்திற்குப் பதில் சொல்லவும் யாராலும் முடியாது. நான் என்னைத் தேற்றிக்கொண்டது போல… உன்னையும் தேற்றிக்கொள்டா…” என்றான் மெதுவாக.

அதுவரை உயிரற்றவள் போலக் கிடந்தவள் கொஞ்சமாக அசைந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நா… நான்… எனக்கு… நான்… அ… அம்மா… அப்பாவைப் பார்க்கவேண்டும்…” என்றாள் தளர்ந்த குரலில்.

“உன்னால் அவர்களை இந்த நிலையில் பார்க்கும் சக்தி இருக்கிறதா?…” என்றான் கரகரத்த குரலில்.

அவளுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் சத்தியமாக அவனுக்கு இல்லை. நினைக்கும் போதே உடல் தூக்கிப் போட்டது. நெஞ்சமே அடைத்துக் கொண்டு வர இந்த வலியை எப்படிக் கையாளப்போகிறோம் என்கிற கேள்வி அவனைப் பயமுறுத்தியது. அதற்கான பதில் தெரியாது அவன் தடுமாற, அவளோ வலி நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தினாள்.

அவளுடைய உணர்வுகள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு முன்பே செத்துப் போயிற்று. இருந்தது வெறும் உடலும் உயிரும்தான். அந்த உயிர்தான் கொஞ்சத்துக்கு முன்னாடி, தாய் தந்தை தங்கை இறந்த செய்தி கேட்டு மொத்தமாகப் போயிற்றே. இங்கே இருப்பது வெறும் கூடு மட்டும் தான். அந்தக் கூட்டுக்கு எங்கே வலிக்கப் போகிறது? அடித்தாலும், கொன்றாலும் எதுவும் தெரியப் போவதில்லை.

“ப்ளீஸ்… நான் அவர்களைப் பார்க்கவேண்டும்..” என்றாள் இறுக்கமாக. ஆனால் பிடிவாதமாக.

6-

வீட்டிலே அதிகக் கூட்டம் ஏற்கனவே கூடி விட்டிருந்தனர். பார்வைக்காக மூவரின் உடல்களும் முன்னறையில் வைக்கப்பட்டிருந்தன.

உயிரற்றவர்களாக, வெறும் சடப்பொருளாகக் கிடத்தப்பட்டிருந்தவர்களை இமைக்காது வெறித்துக் கொண்டிருந்தாள் நேயநறுமை. மருத்துவமனையில் அவர்களை உயிரற்றவர்களாகப் பார்த்தபோது மீண்டும் மயங்கி விழுந்தவளை, இதோ சடலங்களோடு அவளையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் ஆதியதுலன்.

நிற்க முடியாமல் தடுமாறியவளை, ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு, அவளருகே நின்றவாறு உயிரற்றுக் கிடந்த பிணங்களைத்தான் அவனும் உணர்வு துடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆதியதுலனால் அவர்களின் இழப்பைத் தாங்கவே முடியவில்லை. அவனுடைய தாய்க்கு அடுத்தபடியாக அவரைத்தான் வைத்துப் பார்த்தான்.

அதுவும் இந்திரா நோய்ப்படுக்கையில் கிடந்தபோது, அம்பிகாதான் அவனை அக்கறையோடு பார்த்துக் கொண்டார். தாய் இறந்த பிறகு, அவருடைய நினைவு தாக்கக் கூடாது என்று அடிக்கடித் தொலைப் பேசியில் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்து அவனை வதைத்தது. கூடவே மூன்று வருடங்களாக அவனுடைய கை கோர்த்துப் பயணித்த அவன் மனைவி, தோழி எல்லாமாக இருந்தவளும் இன்று உயிரற்று விறைத்துக் கிடப்பதைப் பார்க்க நெஞ்சமெல்லாம் அடைத்தது அவனுக்கு. எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவசகாயம். நல்ல ஒரு நண்பனாக அவன் தோள் மீது கரம் போட்டுப் பேசும் மனிதர். அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக விட்டுச் செல்வதென்றால்…? அதை எப்படித்தான் தாங்குவது?

எல்லையில்லா வேதனையில், பற்களைக் கடித்தவாறு கைமுஷ்டிகள் இறுக அவன் நின்றிருக்க, பாஸ்கரோ சோகம் தாங்க முடியாது குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தார்.

அவரவர் தங்கள் உணர்ச்சிகளை, தங்களுக்குத் தெரிந்தாற்போலக் காட்டிக்கொண்டிருக்க. நேய நறுமையோ கொஞ்சம் கூடக் கண்ணீர் சிந்தாமல் உயிரற்றுக் கிடந்தவர்களைத்தான் வெறித்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவளுக்கு அழுகை வர மறுத்தது. அவள் அழுதால் மாண்டு போனவர்கள் தான் உயிர்த்தெழுந்து விடுவார்களா?

“இந்தப் பொண்ணு ஏன் அழவே மாட்டேன் என்கிறது… இந்தாம்மா… அழுது கதறுமா. அப்போது தான் வேதனை வடியும். அழாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தால் அது மனதையும் புத்தியையும் தான் பாதிக்கும்… அழுது கதறுமா” பக்கத்திலிருந்த பாட்டி ஒருத்தர் அவளைத் தட்டிச் சொல்ல நேயாவோ அதைக் கூடப் புரிந்துகொள்ளாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

‘அழ வேண்டுமா? எதற்காக அழவேண்டும்? நான் ஏன் அழ வேண்டும்? அழுவதாக இருந்தால் என்னை அநாதையாக விட்டுச் சென்ற இவர்கள் அல்லவா அழவேண்டும்? போகும்போது கொஞ்சமாவது என்னைப் பற்றி யோசித்திருந்தார்களா? அப்படி யோசித்திருந்தால் இப்படி உயிரை விட்டிருப்பார்களா? சுயநலமானவர்கள். இல்லை… நான் அழ மாட்டேன். அழவே மாட்டேன்…’ என்று மனதிற்குள் வைராக்கியமாக நினைத்தவள் தன் விழிகளை அழுந்த மூடினாள்.

“இந்தப் பொண்ணுக்கு பெற்றவர்கள் மீது கொஞ்சமாவது பாசம் இருக்க வேண்டாமா? அப்படி இருந்திருந்தால் இப்படியா மரக்கட்டை மாதிரி இருக்கும்? சும்மா தன்னும் ஒரு துளி கண்ணீர் விடவேண்டாமா” பின்னாலிருந்த ஒரு பெண் குசுகுசுக்க,

“ஆமாம் கா. நானும் அப்போதிலிருந்து பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். சும்மா வந்திருக்கிறவர்களுக்குக் காட்டுவதற்காகவேனும் அழுவது போல நடிக்கலாம்… ஆனால் பாருங்களேன், உம் என்று முகத்தை ஒரு முழத்துக்கு நீட்டிக்கொண்டு அலட்சியமாக இருக்குது…”

“உங்களுக்கு விஷயமே தெரியாதா… இந்தப் பெண் பெற்றவர்களோடு பிரச்சனை செய்து, கோபித்துக்கொண்டு எங்கோ தனியாக இருந்ததாம். இத்தனை நாளும் அவர்களைச் சென்று பார்க்க வில்லையாம்… இவ்வளவு ஏன், தங்கையோட குழந்தை பிறந்ததற்குக் கூட இந்தப் பெண் வரவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போது தாய் தந்தையை ஒட்டுமொத்தமாகத் தொலைத்துவிட்டு, வந்திருக்கிறது. மனுசர் உயிரோடு இருக்கும் போது எனக்கென்ன என்று தள்ளி இருக்க வேண்டியது. செத்ததும் குய்யோ முறையோ என்று கத்தவேண்டியது… என்ன ஜென்மங்களோ… இதுகிட்ட பாசத்தை எதிர்பார்த்தால் எப்படிக் கிடைக்கும்…?”

செத்தவீட்டில் நிறையப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் போல. யார் யார் வீட்டில் என்ன சிக்கலிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து அதை வெட்ட வெளியில் உளறுவதில் ஒரு ஆனந்தம்.

அவர்களின் பேச்சு காதில் விழத் துடித்துப் போனாள் அந்தப் பேதை. அவர்கள் திட்டுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அம்மா அப்பா உயிரோடு இருக்கும் வரை அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அவர்கள் வேண்டும் என்று அழுது கரைந்தாலும் வர முடியாத தொலைவுக்குப் போய்விட்டார்கள்… இப்போது துடித்து என்ன பயன்? மலையளவு குற்ற உணர்ச்சி நெஞ்சைப் பிசைய, மெதுவாக நிமிர்ந்து அருகே நின்றிருந்த ஆதியதுலனை ஏறிட்டாள்.

அவனுடைய அழுந்த மூடிய உதடுகளும், வெறித்த சிவந்த பார்வையும், இறுக்கமாக நின்றிருந்த தோரணையும் அவனுடைய வேதனையைப் பறைசாற்ற, நடுங்கும் கரத்தால் அழுந்த மூடியிருந்த அவனுடைய கரத்தைப் பற்றினாள் நேயநறுமை.

சுயம் பெற்றுக் குனிந்து பார்த்தான் ஆதிய துலன்.

“நா… நான்… தனியாக இருக்க வேண்டும்… ஏதாவது அறை கிடைக்குமா? என்றாள் மரத்த குரலில். பதில் சொல்லாமல் தலையை ஆட்ட, மெதுவாக இருக்கையை விட்டு எழுந்தவள் தள்ளாட, சட்டென்ற அவளைத் தாங்கிக்கொண்டான் ஆதிய துலன்.

அங்கிருந்தவர்களின் விழிகள் இவர்களிடம் சுவாரசியமாகப் பதிய, அதைப்பற்றி ஆதியதுலனோ, நேயநறுமையோ கவலைப்படும் நிலையில் இல்லை. இவர்களின் வலி வேதனையை அவர்களா வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

அவளுடைய பலத்தைத் தன் மீது தாங்கிக் கொண்டவன், நேராக அவளைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று, தன் படுக்கையில் அமர்த்த, மெதுவாகப் படுக்கையில் சரிந்து படுத்தவள் உடலைக் குறுக்கிக்கொண்டாள். அவளுடைய அந்த நிலை இவனை மேலும் வதைக்க.

“நறுமை…” என்றான் கரகரத்த குரலில். அவளோ அவனைத் திரும்பியும் பார்க்காமல்,

“அ.. அவர்களை அழைத்துச் செல்லும்போது என்னை அழைக்காதீர்கள்… அவர்கள் விடை பெறாமல் செல்லும் காட்சியைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை… என்னையும் மீறி நான் உடைந்து அழுதால், அதை அவர்களால் தாங்க முடியாது… ஐ நீட் தெம் டு கோ பீஸ்ஃபுலி’ என்று அறிக்கை போலச் சொன்னவள், சற்றுத் தள்ளியிருந்த தலையணையை இழுத்து தன் வயிற்றோடு அழுத்தி அணைத்தவாறு சுருண்டு கொள்ள, சற்று நேரம் அவளைப் பார்த்தவாறே நின்றிருந்த ஆதியதுலன், அதற்கு மேலும் அவளைத் தொல்லை செய்யாமல் அங்கிருந்து வெளியேறினான்.

மரித்தவர்களை எடுத்துச் செல்லும் நேரம் வர,

“தம்பி கடைசி நேரமாவது பெற்றவர்களையும் கூடப்பிறந்தவர்களையும் நேயா பார்க்க வேண்டாமா… போய் அழைத்து வா கண்ணா…” வேதனையை விழுங்கியவாறு பாஸ்கரன் சொல்ல, தயங்கியவாறு தன் அறைக்கு வந்தான் ஆதியதுலன். அவளோ எந்த அசைவும் இல்லாமல் அப்படியே படுத்திருந்தாள்.

“நறுமை…” இவன் அழைக்க அவளோ காது கேளாதது போல அப்படியே கிடந்தாள். மெதுவாக அவளை நெருங்கியவன்,

“உன்னுடைய வலி எனக்குப் புரிகிறது நறுமை… ஆனால்… பெற்ற மகளாக உன்னுடைய கடைசி மரியாதையை அவர்களுக்குச் செலுத்த வேண்டாமா? வா… வந்து அவர்களின் முகத்தைக் கடைசியாகப் பார்…” கெஞ்சலும், வேதனையும் கலந்து கேட்க, அவளோ காது கேளாதவள் போலத் திறந்த விழிகள் எங்கோ வெறித்திருக்க அசையாது அப்படியே கிடந்தாள்.

“நறுமை…” இவன் மீண்டும் அழைக்க,

“தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் அதுலன். என்னைக் கேட்டுக்கொண்டா செத்துப் போனார்கள். இல்லைதானே. என்னைப் பார்க்காமலே போகட்டும்… தயவு செய்து என்னை இப்படியே விட்டுவிடுங்கள்…” அவள் அழுத்தமாகச் சொல்ல, அதற்குமேல் அவளிடம் பேசி எதுவும் ஆகப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், பெருமூச்சோடு வெளியே வந்தான்.

கேள்வியாகப் பார்த்த தந்தையிடம்,

“அவள் இவர்களைப் பார்க்கவே வேண்டாம் பா…” என்றவன், பிணங்களின் அருகே வந்தான்.

தேவசகாயம், அம்பிகா இருவரின் நெருங்கிய உறவுகள் என்று யாருமே வராத நிலையில், அவர்களின் பிணங்கள் பாடையில் வைத்துத் தூக்கப்பட்டது. அதுவரை அமைதியாக இருந்தவன், கடைசியாக நேரிழையைத் தூக்கும்போதுதான், திரும்பவும் கண்ணீர் விட்டான். பாஸ்கரன்தான், தன் மகனைத் தாங்கித் தட்டிக் கொடுத்தார்.

இதோ உயிரை விட்டவர்கள் அத்தனை பேரும், இறுதியாக விடைபெற்றுச் சென்றுவிட, ஆதியதுலன்தான் இதயத்தில் இரத்தம் கசிய அத்தனை பேருக்குமான கடைசிக் காரியத்தைச் செய்து முடித்து வீடு வந்து சேர்ந்தான்.

கடைசியாக, வந்திருந்தவர்கள் சேர்ந்து வீட்டைக் கழுவி முடித்து சென்று விட்டார்கள்.

வீடு கழுவியாயிற்று. ஆனால் இதயத்தைக் கசக்கும் வலியை யார் கழுவித் துடைப்பார்கள்?

நேயா அது வரை வெளியே வரவில்லை. இனி அவள் ஒரு அநாதை. அவளுக்கென்று யாருமே இல்லை. இனி அவள் ஒரு தனித் தீவு. முதுமை எய்திய பிறகும் அவளுடைய தோள் தாங்கிக்கொள்ள ஒரு நாதியில்லை. ஆறுதல் வார்த்தை கூறி அவளைத் தேற்ற யாருமே இல்லை. இன்ப துன்பங்களைப் பங்கிட யாருமே இல்லை. அவளுக்கு அவள்தான் துணை. அவள்தான் உறவு. அவள்தான் நட்பு. இப்படி வாழ்வதற்கு மரணத்தை வாரி அணைத்துக் கொள்ளலாம். தனக்குள் எண்ணித் துடித்திருக்க. எல்லாம் முடிந்து பாஸ்கரன் ஆதியதுலனோடு அவளிருந்த அறைக்கு வந்தார்.

அவள் இன்னும் அப்படியேதான் படுத்திருந்தாள்.

விழிகள் மட்டும் திறந்திருந்தன. அவர்கள் செல்லும் போது எப்படிக் கிடந்தாளோ, அதில் எந்த வித மாற்றமுமில்லாமல் அப்படியே படுத்திருந்ததைக் கண்ட பாஸ்கருக்கு நெஞ்சம் தவித்தது.

“அம்மா…! நேயா…! உனக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்றே தெரிய வில்லையே…” என்று அழத் தந்தை அழுவதைக் கண்டு நெஞ்சம் கலங்கியவனாக, அவரை நெருங்கினான் ஆதியதுலன்.

“அப்பா… பிளீஸ். அவளே இதை ஜீரணிக்க முடியாமல் கிடக்கிறாள். நீங்கள் வேறு அவளுடைய இழப்பை பெரிதாக்காதீர்கள்… நீங்கள் போங்கள்… நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்று அனுப்பி வைத்தான். அவர் சென்றதும், திரும்பி நேய நறுமையைப் பார்த்தான்.

அவளிடம் என்ன பேசுவது? எப்படித் தேற்றுவது? சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் இப்படியே விடமுடியாதல்லவா? தன்னைத் திடப்படுத்தியவனாக அவளை நெருங்கினான் அவன்.

முதலில் அவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. வாயைத் திறப்பதும், மூடுவதுமாக இருந்தவன், தன் வலியை ஒட்டுமொத்தமாக விழுங்கி நெஞ்சாங் கூட்டில் அடைத்தவன்,

“நறுமை…!” என்றான் புண்ணை வருடும் மயிலிறகாக.

அவன் அழைத்தது அவளுடைய செவிகளில் விழுந்ததாகவே தெரியவில்லை. எந்தவித அசைவுமின்றி அவள் அப்படியே இறுகிப்போய் கிடந்தாள் அவள்.

“நறுமை…!” என்று இப்போது குரலைச் சற்று உயர்த்தி அழுத்தமாக அழைக்க, திடுக்கிட்டு இமைகள் தட்டினாள் அவள்.

மெல்ல மெல்ல நிதர்சனம் உறைக்க, விறுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தாள் நேயநறுமை.

அவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சுத்தமாகப் புரியவில்லை. எல்லாமே மரத்துப் போனது போல, உலகமே தன் இயக்கத்தை நிறுத்தியது போலத் தோன்ற, மெதுவாகக் கட்டிலை விட்டெழுந்தாள். ஒரு வித மரத்த நிலையில், எந்தவித உணர்வும் இல்லாமல் அங்கிருந்து நகரத் தொடங்கிய நேரம், அவளுடைய தோள்களில் தன் கரத்தைப் பதித்து நிறுத்தினான் ஆதியதுலன்.

அவள் மெதுவாக விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அந்த விழிகளில் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை. வலி, வேதனை, தவிப்பு, கோபம், இயலாமை என்று எந்தவித உணர்ச்சியும் அங்கே தெரியவில்லை. அது அவனுடைய நெஞ்சைப் பிசைந்ததோ,

“ந… நறுமை…” என்றான் தவிப்போடு. அப்போதும் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியு மில்லை. மூளை சுவாதீனமற்ற குழந்தை போல, எதுவும் பேசாமல், மந்தமாய் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, மறு கணம் அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் ஆதியதுலன்.

ஆதியதுலன் தன்னை இழுத்து அணைத்து இருப்பது கூட அவளுக்கு உறைக்கவில்லை. ஒரு காலத்தில் இதற்காக எப்படியெல்லாம் ஏங்கி இருக்கிறாள். இவ்வளவு ஏன், அவன் திருமணம் முடித்த பின்னாலும் கூடத் தனிமையின் இரவில் அவன் மார்பில் விழுந்து ஒரு பொழுதாவது கண்மூடி உறங்கவேண்டும் என்று நினைத்திருக்கிறாளே… முழு நிலவின் ஒளியில், மொட்டைமாடியில், அவன் மடியில், அவனோடு ஒட்டி அமர்ந்து அவன் மார்பின் வாசனையை நுகர்ந்து அந்தப் பால் நிலாவைக் கண்டு இரசிக்க ஆவல் கொண்டாளே. அது நடக்காத மாயை என்று தெரிந்தும் கற்பனையில் கண்டு களித்துப் பின் கலங்கித் துடித்திருக்கிறாள். இனி அவன் எட்டாத கனி என்று தெரிந்து எத்தனை முறை அழுதிருக்கிறாள்.

இப்போது அவன் பரந்த வெம்மையான மார்பில் சாய்ந்திருக்கிறாள். ஆனாலும் எதுவும் தோன்றமாட்டேன் என்கிறது. இது என்ன கொடுமை. அவள் அசையாமல் அவன் மார்பில் விழுந்திருக்க, அவளை இறுக அணைத்து அவளுடைய முதுகைக் கரத்தால் தட்டியும் வருடியும் கொடுத்தவன்,

“நறுமை… பிளீஸ்… அழு. உன்னுடைய வேதனை அனைத்தும் கரைந்து போகக் கதறி அழு…” என்றான் கலக்கமாய்.

ஆனால் அவளோ அழவில்லை. அவன் நெஞ்சில் விழுந்து கிடந்தவளிடம் இம்மியளவும் மாற்றமில்லை. அது இவனுக்கு ஒரு வித பயத்தைக் கொடுக்க, அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன், அவளுடைய கன்னத்தில் தன் உள்ளங்கைகளைப் பதித்துத் தன் முகம் நோக்கி இழுத்து, நிமிர்த்தி,

“கமோன் டாமிட்…! அழு… நறுமை! அப்போது தான் உன்னுடைய இறுக்கம் குறைந்து உடல் தளரும்…! வலி குறையும்…! அழு நறுமை…” என்றவனின் விழிகளோ பரிதவிப்போடு அவளுடைய விழிகளைக் கவ்வி இழுக்க முயன்று தோற்றன. அவளுடைய அந்த மந்த நிலை, அவனுக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது.

இப்படியே போனால் அவள் மன அழுத்தத்திற்கு உள்ளாவாள். அழுவதே மன இறுக்கத்தைக் குறைக்கத் தானே. அது இயற்கையாக மனித உடலில் உள்ள ஒரு சக்தி. சிரிப்பது எவ்வளவு அவசியமோ, அழுவதும் அவசியம். அது ஏன் இவளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது.

அவளுடைய முகத்திலிருந்த தன் கரத்தை விலக்காமலே, அவள் தலையை உலுப்பியவன்,

“நறுமை… என்னைப் பார்… உன்னைப் போலத் தான் நானும் பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறேன்… நானும் உயிரானவர்கள் அத்தனை பேரையும் இழந்திருக்கிறேன். இழப்பு என்பது எல்லோருக்கும் பொது… அதற்காக நாம் எல்லோரும் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று தளர்ந்துவிட முடியாது. அவர்களுடன் சேர்ந்து போகவும் முடியாது. வாழ்ந்தே ஆகவேண்டும். இப்படி உடைந்து போக முடியாது. கமோன் நேயா… அழு… கதறு…” என்றான் அவளைத் தூண்டும் விதமாக.

“இதோ பார்… எதுவுமே அழிந்து விடவில்லை… நான் சொல்வது புரிகிறதா…? எதுவுமே… எதுவுமே அழியவில்லை…” என்றான். அப்போதும் அவளிடம் அசைவில்லை.

அவள் கன்னத்தை மாறி மாறிப் பலமாகத் தட்டி அவளைச் சுயநிலைபெறச் செய்ய முயன்றான்.

அப்போதும் அவள் அந்த வெறித்த பார்வையை விட்டாளில்லை. அவள் அப்படித்தான். உணர்ச்சிகளை அத்தனை சுலபத்தில் வெளிக் காட்டாதவள் தான். ஆனால் இத்தனை இறுக்கமாக இருப்பாள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவளை அவன் தொட்டுக் கொண்டு இருப்பதைக் கூட அவள் உணரவில்லையே.

அவளுடைய அந்த நிலை, ஆதியதுலனிற்கு அடி வயிற்றைக் கலக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவன்,

“நறுமை…” என்றான் வருடும் மென்குரலில்.. உயிரை உருக்கும் அந்தக் குரலுக்குக் கூட அவள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது வேறு அவனுடைய பொறுமையைச் சோதிக்க, அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

சற்று நேரம் அவள் முகத்தையே வெறித்தவன், அடுத்து என்ன நினைத்தானோ, சட்டென்று அவளது முகம் நோக்கிக் குனிந்தவன், மறு கணம் இறுகிப்போய் அழுத்தத்தோடு இறுகிக் கிடந்த இரண்டு உதடுகளையும் தன் உதடுகளால் முற்றுகையிட்டு அள்ளி எடுத்துக்கொண்டான்.

 

 

 

What’s your Reaction?
+1
5
+1
2
+1
2
+1
0
+1
8
+1
2
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 14/15

-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…

8 hours ago

வெந்தும் தணியுமோ காதல் – 13

13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…

2 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 12

12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…

5 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 11

-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ…

1 week ago

வெந்தும் தணியுமோ காதல் – 9/10

-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…

1 week ago

வெந்தும் தணியுமோ காதல் – 8

8- எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ, மெதுவாக சுயத்திற்கு வந்தான் ஆதியதுலன். வலியும் வேதனையுமாகக் குனிந்து பார்க்க, அவளுடைய பின்முதுகு…

2 weeks ago