Tue. Mar 3rd, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 1

1

மேகத்தின் போர்வையில், சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சூரியன் மெதுவாக விழிக்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளே பேரம் பேசிக் கொண்டிருந்த நேரம். சோம்பலாகத் தன் கரங்களை

எட்டுத் திசைக்கும் பரப்பி, தனக்கு முன்பே உலகம் விழித்துக்கொண்டதா என்று பரிசோதிக்க முயல, அதுவரை இரவு பனி மகளின் தொடுகையில் சிலிர்த்துக்கொண்டிருந்த ஊசியிலை மரங்கள், சூரியனின் வருடலைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல், வெண்பனி மகளை இறுக அணைத்தவாறு தங்கள் தூக்கத்தைத் தொடங்க, வெண்பனி மகளோ, பச்சோந்திகளாக மாறி, ஊசியிலை மரங்களை விடுத்து, அத்திசை வீசியக் காற்றை அணைக்க முயன்று தோற்றுத் தரையில் விழுந்து, வெண்கம்பளமாகக் கிடக்க, அந்தக் குளிரிலும், நடைப் பயிற்சிக்குப் போகும் ஒரு சில வெள்ளையர்கள், நடைபாதையில் கொட்டிக் கிடக்கும் வெண் கம்பளத்தை மிதித்தவாறு நடந்து செல்ல, ஐயோ பாவம், கிடைத்ததை விடுத்துக் கிடைக்காததற்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி போல.

இங்கே இயங்கை தனக்கென்று ஒரு கதையைப் புனைந்து கொண்டிருக்க, அந்த அழகிய பனிவிழும் காலைப் பொழுதைப் பார்ப்பதற்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். கூடவே அதை ரசிப்பதற்கு நேரமும் வேண்டும்.

குளிரின் அளவு மைனஸ் ஆறாக இருந்தாலும், காற்றின் வேகத்திற்கு மைனஸ் பன்னிரண்டு என்றது கால நிலை.

விட்டால் இந்தக் குளிரில் யாருமே வெளியே போகாமல் கம்பளிப் போர்வைக்குள் தங்களை முடக்கிக் கொள்வார்கள். ஆனால் போகாவிட்டால் அன்றைய நாள் சம்பளம் என்னாவது? பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உழைக்கும் டாலருக்காக அந்தக் காலநிலையுடன் மல்லுக்கட்ட வேண்டித்தான் இருக்கிறது.

தடித்த ஆடைகளும், தலையை மூடிய குல்லாய்களும், பனியில் வழுக்காமல் கவனமாக அதே நேரம் நளினமாகப் போகும் மனிதர்களும் ரசனை மிக்க விழிகளுக்கு அழகுதான்.

இப்படி வெளியுலகமே குளிரோடு மல்லுக்கட்டித் தம் கடமைகளைச் செவ்வனே செய்துகொண்டிருக்க, அவள் மட்டும், யாரும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப் போங்கள், எனக்குத் தூக்கம்தான் முக்கியம் என்பது பொல, தலை முதல் கால்வரை, நன்றாகப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

எங்கோ எழுப்பொலி சத்தம் உறக்கத்தில் இருந்தவளின் செவிப்பறையில் விழுந்த நேரம் மெதுவாக அசைய, அதுவரை போர்வைக்குள் மறைந்திருந்த வெண்ணிறப் பாதங்கள் இரண்டும் கொஞ்சமே கொஞ்சமாய் வெளியே எட்டிப் பார்த்தன.

‘ஆஹா… அவை பாதங்களா? இல்லை இரட்டை வெண் ரோஜா மலர்களா??’ அந்தப் பாதத்தின் அழகைக் கண்டு ஆணாகிய குளிர் மகன் இமைக்க மறந்து வாய் பிளந்து நின்றிருந்தான். காமம் வந்தால் நாகரிகமாவது, மண்ணாவது. சட்டென்று தன் சுயம் தொலைத்த குளிர் மகன், ஆசையோடு அவள் கால்களைத் தழுவி முத்தமிட்டவாறு அவள் முகம் நோக்கிப் பயணப்பட முயன்றது.

அடச் சே… இது என்ன தடித்த போர்வை. அவளைத் தொட விடாமல் இடையில் திரையாக நிற்கிறதே. எரிச்சல் கொண்ட குளிர் மகனோ எப்படியாவது அவளுடைய கால்களுக்கூடாக நகர்ந்து போர்வைக்குள் நுழைந்து அவளைப் பார்த்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளே நுழைய முயல, ம்கூம் எங்கே? அவளை அணைத்து இருந்த அந்தக் கதகதப்பு, அன்னிய மகனான அந்தக் குளிரை உள்ளே நுழைய விடாமல் விரட்டி அடிக்க, கதகதப்புக்கும், குளிருக்கும் சின்னதாய் ஒரு சண்டை அங்கே அரங்கேறியது.

இதற்கிடையில் சிக்கிக்கொண்ட அந்த இளம் நங்கையவளோ, கொஞ்சமாய் உறக்கம் தடைப்பட, போர்வைக்குள் ஒரு கணம் நெளிந்து விட்டுப் போர்வையை மீறி வெளியே தெரிந்த பாதங்களைச் சட்டென்று உள்ளே இழுத்துப் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போக, ஐயோ பாவம் குளிர் மகன். கிடைத்த வாய்ப்பும் கைநழுவிப் போக, அந்தக் கார்குழல் அழகியைப் பார்க்க முடியா சோகத்தோடு, ஒரு ஓரமாக அமர்ந்து கொள்ள, இப்போது அவளுடைய அறைக்கதவில் படபடவென்று தட்டும் சத்தம் கேட்டது.

அவளுடைய சுகமான தூக்கத்தை விரட்டியடிக்க எத்தனை வில்லர்கள்தான் இந்த உலகத்தில்.

கதவு தட்டும் சத்தத்தில் மீண்டும் நெளிந்தவள், திறக்க மறுத்த இமைகளை இழுத்துப் பூட்டுப் போட்டு குப்புறப் படுத்துக் கொள்ள, மறு கணம் சடார் என்கிற சத்தத்தோடு கதவு திறந்து கொண்டது.

அங்கே காளியாக மாறத் தயார் என்பது போல நின்றிருந்தாள் அவளுடைய அன்னை, அம்பிகா.

இன்னும் தன் மகள் எழாது போர்த்து மூடிப் படுத்துக் கிடப்பதைக் கண்டு கோபம் கொண்டவராகப் பற்களைக் கடித்தவர்,

“ஏய்! நேயா! எழுந்திரு! நேரம் என்ன தெரியுமா? இப்போது எழப் போகிறாயா இல்லை முகத்தில் தண்ணீர் ஊற்றவா?” அடக்கி வைத்த ஆத்திரத்துடன் கேட்க, அந்தச் சத்தம், போர்வையைத் தாண்டி அவளுடைய செவிகளை அடைந்து, மூளையைச் சென்றடைவதற்குச் சற்றுநேரம் எடுத்தது.

மீண்டும் அவளைக் கோபத்துடன் அழைக்கும் அந்தக் குரல், அவளை ஓரளவு விழிப்பு நிலைக்குக் கொண்டு வர, எரிச்சலோடு வேண்டா வெறுப்பாக எழுந்தமர்ந்தாள் அக் காரிகை.

அவள் எழுந்தமர்ந்த வேகத்தில், அவளுடைய முகத்தை மறைத்திருந்த போர்வை விலகிப் படுக்கையில் விழ, அதுவரை இலவு காத்த கிளியாக அமர்ந்திருந்த குளிர் மகன் குதுகலத்தோடு அவளை அணைத்து முகம் எங்கும் முத்தமிட, முகத்தில் குளிர் படர்ந்ததால், கொஞ்சமாகத் தன் விழிகளைத் திறந்தாள் அந்த அழகி.

அடேங்கப்பா? வானத்துத் தேவதை ஏதாவது வழி தவறிக் கீழே வந்து விட்டதா என்ன? இத்தனை அழகாக இருக்கிறாளே! உலக அழகிகள் கூட இவளிடம் பிச்சை வாங்கவேண்டும் போலவே. இந்த பிரம்மனுக்குத்தான் எத்தனை ஓரவஞ்சனை. மன்மதனின் இரதியைக் கூட இத்தனை அழகாக அவன் படைக்கவில்லை.. அங்குலம் அங்குலமாக அல்லவா பார்த்து இரசித்தல்லவா படைத்திருக்கிறான்.

அந்த அழகியின் பால் வடியும் குண்டு முகத்தையும், கலைந்த கூந்தலையும், குளிர் மகன் முத்தமிட்டதால், ஆப்பிள் போலச் சிவந்துபோன கன்னங்களையும், சிணுங்கும் அவள் முகத்தையும் கண்டால் கம்பனின் வாய் கூடத் தாமாகக் கவிபாடும்.

ஆனால், அந்த அழகு அவளைப் பெற்ற அன்னையைக் கொஞ்சம் கூட மயக்கவில்லை என்பதுதான் பரிதாபமே. பதிலுக்குக் கோபத்தில் பற்களைக் கடித்தவாறு அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார் அம்பிகா.

பின்னே இருக்காதா? ஒவ்வொரு நாளும் இதே பூபாளம் பாடித்தான் அவளை எழுப்ப வேண்டும் என்றால், பூமாதேவி கூடப் பொறுமையிழந்து விடுவாள். இதில் அம்பிகா எந்த மூலைக்கு?

சினந்த முகத்துடன் மகளைப் பார்க்கக் காலையில் உதித்த தாமரை மொட்டு மெதுவாக இதழ் பரப்பி மலர்வது போலத் தன் நீண்ட கயல் விழிகளை முழுதாகத் திறந்தாள் அந்தப் பேரழகி.

கண்முன்னால் விழிகள் சிவக்க, கோபத்தோடு நின்றிருந்த தாயைக் கண்டதும், உடல் குலுங்கிச் சிணுங்கியது.

“ம்மா…. என்னம்மா…? எதற்காக என்னை இத்தனை அதிகாலையில் எழுப்பினீர்கள்…? இன்னும் கொஞ்சம் தூங்க விட்டிருக்கலாமே?” என்றாள்.

தன் சோம்பேறி மகளைக் கொல்லும் வெறியுடன் பார்த்த அம்பிகா,

“விடியற் காலையில் என் வாயில் கெட்ட வார்த்தைகளை வரவழைத்து விடாதே… மரியாதையாக எழுந்து கொள். இப்போது நேரம் என்ன தெரியுமா? எட்டு மணியையும் தாண்டிவிட்டது. வயசுக்கு வந்த பெண், நேரத்திற்கு எழுந்து வேலைகளை முடிக்காமல் உறங்கிக் கிடந்தால், வீடு எப்படி விளங்கும்…? அங்கே நான் ஒருத்தியாகச் சமையலறையில் கிடந்து அல்லல் படுகிறேன்… இதில் ஆள் ஆளுக்கு ஒரு மூலையில் படுத்துக்கிடந்தால் நான் என்ன செய்வது?” என்று சினத்துடன் கூறிய தாயைத் தன்னுடைய முத்துப்பல்லைக் காட்டிக் கவர முயன்றாள் மகள்.

“அடப் போங்கள் அம்மா… வயதுக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன… இதுவே உங்களுடைய காலமாக இருந்தால் வயிற்றில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாகக் குடும்பஸ்தியாகி இருப்பேன்… இப்போது போய் வயசுக்கு வந்த பெண் என்கிறீர்களே…” என்று குறும்புடன் சொன்ன மகளை அடிக்கவா இல்லை கொல்லவா என்பது போலப் பார்த்தார் அம்பிகா.

“அடி செருப்பால… முழுசா இருபது வயசு கூட முடியவில்லை, அதற்குள் திருமணம் கேட்கிறதா உனக்கு…? முதலில் படித்து முடிக்கிற வேலையைப் பார்…” கோபமாகச் சொன்னாலும், உள்ளுக்குள் மகளின் குறும்புப் பேச்சில் சிரிக்கத்தான் செய்தார். இதுதான் அவள். என்ன கோபமாகப் பேசினாலும், ஏதோ ஒரு வகையில் தாயை இளக வைத்து விடுவாள்.

“ஹலோ? எக்ஸ்கியூஸ் மி! என்னுடைய அப்பாவை டாவடிச்சு அவரைத் திருமணம் செய்த போது மகாராணியாருக்கு எத்தனை வயசு?” மகள் கிண்டலாகக் கேட்க, அந்த நிலையிலும் பட்டென்று முகம் சிவந்து போனது அம்பிகாவுக்கு.

பல ஆயிரம் முறையாக ஏன்டா தங்கள் காதல் கதையை இவர்களிடம் சொன்னோம் என்று மீண்டும் கவலைப்பட்டார் அம்பிகா.

அம்பிகா சுத்தமான பிராமணப் பெண். அவருடைய பதினான்காவது வயதில் அவரை விட ஐந்து வயது பெரியவரான கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தேவசகாயத்தைக் கல்லூரி விழா ஒன்றில் சந்திக்க, இருவருக்குமே ஏதோ ஒரு வகையில் பிடித்துக்கொண்டது. அப்போதெல்லாம் அது காதல் என்று இருவருக்குமே தெரியாது.

விதி அவர்களை ஒரு வகையில் சேர்த்து வைக்கத் திட்டம் போட, எதிர்பாராத வகையில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. அவர்களின் நெருக்கமும் அதிகமானது. அது வெறும் நட்புதான் என்று இருவருமே உறுதியாக இருந்த நிலையில், தேவ சகாயம் பல்கலைக் கழகப் படிப்பு என்று பேராதனை சென்றுவிட்டார்.

இரண்டு வருடங்கள், அவரைக் காணாமல். அவர் கூடப் பேசாமல் மிகவும் நொடிந்து போனார் அம்பிகா. பின் விடுப்புக்காக அவர் திரும்பி ஊருக்கு வந்தபோது தான், அவரின் பிரிவு அவரை எந்தளவு பாதித்தது என்று அந்தச் சின்னப் பெண்ணுக்குத் தெரிந்தது. அவரைக் கண்டதும் விம்மி அழுதுவிட்டார். தேவசகாயத்திற்கும் அப்படித்தான், அம்பிகாவைக் கண்டதும் மனம் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உணர்ந்து கொண்டது. பிறகுதான் தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதைப் புரிந்து கொண்டார்கள்.

இருவரும் தங்கள் காதலைச் சொல்லாமலே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையை நாடிப் பேசினார்கள். சிரித்தார்கள். ஆனால் ஒரு போதும் எல்லை மீறி நடந்துகொண்டதில்லை. தேவ சகாயமும் சரி, அம்பிகாவும் சரி, தங்கள் எல்லைக் கோடு இதுதான் என்பதில் உறுதியாக இருந்ததால், வெறும் கரங்களின் பிணைப்போடு அவர்களின் நெருக்கம் முடிந்து போகும்.

அப்படியிருக்கும் போதுதான், அம்பிகா தேவ சகாயத்தோடு தனியாக ஒரு இடத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட உறவினர் ஒருவர் சரியாக, அவருடைய தாய் தந்தையிடம் போட்டுக் கொடுத்துவிட பிறகென்ன? வீட்டில் மூன்றுவேளைப் பூஜை புனஸ்காரம் என்று வெகு சிறப்பாகவே நடந்தேறியது. அதுவும் அம்பிகாவின் தோல் உரிந்து இரத்தம் வரத் தொடங்கிய பிறகுதான் அவர் தந்தை அடிப்பதையே நிறுத்தினார்.

எத்தனை பெரிய ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்துவிட்டு, ஒரு கிறிஸ்தவனைக் காதலிப்பதா? எந்தப் பெற்றவர்களால்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்?

தங்கள் மகள், கை மீறிப் போக முதல், தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்த அம்பிகாவின் பெற்றோர், அவருடைய மாமன் மகனுக்கு, அதுவும் அவரை விட பதினைந்து வயது மூத்தவரோடு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்ய, அது அறிந்து, அன்று இரவே வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார் அம்பிகா.

நடு இரவில், தேவசகாயத்தின் வீட்டுக் கதவைத் தட்ட, இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்கிற குழப்பத்தோடு வந்து கதவைத் திறந்த தேவசகாயம், உடல் முழுவதும் காயத்தோடு அழுதவாறு நின்று இருந்த அம்பிகாவைக் கண்டதும் அதிர்ந்துபோனார்.

கூடவே தேவசகாயத்திற்குப் பின்னால் வந்து இருந்த அவருடைய பெற்றவர்களும் அங்கே நின்றிருந்த அந்த இளம்பெண்ணைக் கண்டு குழம்பிப் போனார்கள். அங்கே காதல் யாருடைய கண்களுக்கும் தெரியவில்லை. மாறாக மதம் தான் பெரும் எதிரியாக இரு குடும்பங்களுக்கும் தெரிந்தது.

ஒரு பெண் பிள்ளை தன் பிறந்த வீட்டை விட்டு நடுச் சாமத்தில் துணிந்து வெளியேறி வந்து இருக்கிறாள் என்றால், அவள் எப்படிப் பட்டவளாக இருக்க வேண்டும்? இது தேவசகாயத்தின் தாயுடைய கருத்து. வீடு தேடி வந்த அம்பிகாவை உடனே வெளியேற்றும்படி அவருடைய தாய் கட்டளையிட, ஒரு கணம் குழம்பித்தான் போனார் தேவசகாயம்.

தாய் தந்தை மீது அளவுகடந்த பாசம் இருந்தாலும், தன்னை நம்பி வந்தவளை வெளியே போ என்று சொல்லவும் அவரால் முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்திருக்க, அவருடைய தந்தையோ, ஒரு படி மேலாகச் சென்று,

“இதோ பார்… எங்களுடைய மகனாக இருக்கப் போகிறாய் என்றால், அவளை வெளியே அனுப்பு இல்லை நீயும் அவளோடு வெளியே சென்று நாசமாகப் போ… அதற்குப் பிறகு எங்கள் சொத்து சுகத்தில் உனக்கு ஐந்து சதம் கூடக் கிடைக்காது” என்று கடுமையாகச் சொல்ல, அதற்கு மேல் யோசிக்காமல் அம்பிகாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் தேவ சகாயம்.

அவருக்குத் தாய் தந்தை முக்கியம்தான். அதற்காக அவரையே நம்பி வந்தவளைத் தூக்கி எறியவும் முடியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையோடு அம்பிகாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவர், நேராகச் சென்றது பேராதனைக்குத்தான்.

திக்கற்றவனுக்கு நண்பனே துணை. அதற்கு ஏற்ப, அவருடைய நண்பர்கள் எல்லோரும் அவர்களை அரவணைத்துக் கொண்டார்கள். அதுவும் அவருக்கு மூத்தவரான பாஸ்கரனும், அவருடைய மனைவியான இந்திராவும் இவர்கள் இருவரையும் தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டார்கள்.

அவர்களின் அறிவுரைப் படி, சட்டரீதியாகத் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டார்கள். அப்போது அம்பிகாவுக்கு வயது வெறும் பதினாறு தான்.

இவர்கள் திருமணம் முடித்த செய்தி கேட்ட தேவசகாயத்தின் தாயும் தந்தையும், வேறு வழி இல்லாமல் அம்பிகா கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினால், மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று தூது அனுப்ப, தேவசகாயமோ கொந்தளித்து விட்டார்.

அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ள மதம்

தான் தடை என்றால், அப்படியான மதம் எங்களுக்கு வேண்டாம்… உறவுகளும் வேண்டாம். நான் படித்தவன், கை நிறையச் சம்பாதித்து என் மனைவியை நன்றாகப் பார்த்துக் கொள்வேன்…’ என்று சூடாகப் பதில் கூறி அனுப்பிவிட்டார். இதில் அம்பிகாதான் பாவம். அவளுடைய பெற்றவர்களோ, அவளுக்குக் கருமாதியே செய்து திவசமும் கொடுத்து விட்டார்கள் என்பதை அறிந்து நொடிந்து போனர்.

ஆக இருவருக்கும் உறவாகிப் போனது பாஸ்கரன்தான்.

இரண்டு வருடப் பல்கலைக் கழகப் படிப்பை முடித்த கையோடு, பாஸ்கரனின் உதவியோடு தேவ சகாயத்திற்குக் கனடாவில் வேலையும் கிடைத்தது.

அம்பிகாவை அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு கனடா வந்து சேர்ந்தார் தேவசகாயம்.

மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்து, பின்பு அம்பிகாவைக் கனடாவுக்கு வரவழைத்தார். அதன் பிறகுதான் இருவருமே தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தனர். அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை மிக அழகாகவே பயணித்தது.

இதில் தேவசகாயத்திற்கு மத நம்பிக்கை அந்தளவாக இல்லை. இருந்தாலும் “இயேசுவே… அனைவரையும் இரட்சியும்… காத்தருளும்…” என்கிற வேண்டுதலோடு தன் நாளை ஆரம்பிக்க, அம்பிகாவுக்கோ காலையில் எழுந்ததும் குளித்து விட்டுத் தேவார திருவாசகம் பாடித்தான் தன் நாளையே ஆரம்பிப்பார். இதில் சாமி அறையில் இயேசு பிரானும் சிவன் பார்வதிக்குப் பக்கத்தில் அருள்பாலித்து நிற்பார். விளக்கு அவருக்கும் ஏற்றப் படும். வணங்கும் போது அவரிடமும் வேண்டுதல் வைக்க அம்பிகா தவறுவதில்லை.

அம்பிகாவிற்காகத் தேவசகாயம் மாமிசம் உண்பதை நிறுத்த முயல, ‘அதெல்லாம் வேண்டாம். நான் சமைத்துக் கொடுக்கிறேன்… சாப்பிடுங்கள்…” என்றவர் சுவை பார்க்காமலே, தன் கணவனுக்கு மாமிசம் சமைத்துக் கொடுத்தார். உண்மைக் காதல் இருக்கும் போது, வெறுப்பு அருவெறுப்புக்கெல்லாம் இடம் இல்லாமல் போய்விடுகிறது என்பது எத்தனை பெரிய விந்தை.

இதுவரை இருவருக்குள்ளும் மதம் என்கிற ஒரு வஸ்து உள்ளே புகுந்ததே இல்லை. சைவம் உன் நம்பிக்கையா, தாராளமாக அதைப் பின்பற்று. உன் மனத்திருப்திக்காகக் கும்பிடு என்று தேவ சகாயமும், உங்கள் சாமியைச் சேர்த்து நானும் வணங்கிக் கொள்கிறேன் என்று அம்பிகாவும் புரிதலோடு இருபத்தாறு வருடங்களைக் கடந்து வாழ்க்கையை நகர்த்தி விட்டார்கள்.

இதில் அம்பிகாவும் தேவசகாயமும், நேய நறுமையைப் பெற்ற போதுதான் என்ன பெயர் வைப்பதென்று கொஞ்சம் குழம்பினார்கள்.

அம்பிகாவுக்கு நல்ல அர்த்தமுள்ள சைவப் பெயராக வைக்கவேண்டும் என்கிற ஆசை. ஆனால் தேவசகாயம் என்ன சொல்வாரோ என்கிற குழப்பத்தில், கணவனைப் பார்க்க தன் மகளை அள்ளி எடுத்து முத்தமிட்டவர்,

“இத்தனை சிரமப்பட்டுச் சுமந்து பெற்றவள் நீங்கள்தான் அம்பி… உங்களிடம் இந்தப் பெயர்தான் வைக்கவேண்டும் என்று என்னால் கட்டளையிட முடியாது… உங்களுக்கு என்ன பெயர் வைக்கப் பிடிக்குமோ அந்தப் பெயரை வையுங்கள்… ஆனால்…” என்றவர் சற்றுத் தயங்கி விட்டு,

“நம் குழந்தைகளின் வாழ்க்கையில் மத வாடை அடிக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறேன்டா… அதனால்… உங்களுக்குப் பிடித்தால், சுத்தமான தமிழ்ப் பெயராக வையுங்கள்… தமிழ்ப் பெயரில்தான் மதவாடை அடிக்காது…” என்றார் அன்பாக.

அந்த அறிவுரை அம்பிகாவுக்குப் பிடித்துப் போக, மூத்தவளுக்கு நேயநறுமை என்கிற பெயரை வைத்தார். அன்பும், நன்மையும் கொடுப்பவள் என்கிற பொருளில். அடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட, இரண்டு வருடங்கள் கழித்துப் பிறந்தாள் நேரிழை.

அதற்குப் பிறகு ஆண்பிள்ளை ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு இரண்டு பெண்களையும் இரண்டு கண்கள் போலக் கண்டிப்பும் அன்புமாக வளர்த்தார்கள்.

இதுவரை அவர்களிடம் நீ இந்த மதத்தைச் சார்ந்துதான் வளரவேண்டும், இந்த மதத்தைச் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்று எந்தக் கட்டுப் பாடும், கண்டிப்பும் விதித்ததில்லை. விளைவு நேய நறுமைக்கு மதம் சார்ந்த நம்பிக்கைகள் சுத்தமாக இல்லை.

“கடவுள் நம்பிக்கை கொஞ்சமாவது இருக்க வேண்டும் நேயா…” அம்பிகா சிலவேளைகளில் கண்டிப்பதும் உண்டு. அப்போதெல்லாம்,

“கடவுள் நம்பிக்கையா? எந்தக் கடவுளின் மீது வைப்பது? சிவனா? ஜீசஸா? இல்லை அல்லவா?  என்பாள் கிண்டலாக.

“எந்தக் கடவுளாக இருந்தாலும் ஒரு கடவுளின் மீது வைத்துத் தொலை. அது உன்னைப் பதப்படுத்தும். வழி நடத்தும். எப்போதாவது மனது அடித்துக் கொள்ளும் போது, உன்னை அமைதிப் படுத்தும். நம்மை நல்வழிப் படுத்தும்…” சொல்லத் தாயைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தாள் நேய நறுமை.

“அப்படியென்றால், உலகத்தில் பல இடங்களில் இனப்போர் நடக்கிறது. நிறையக் குழந்தைகள் செத்துப் போகிறார்கள். கடவுள் நம்பிக்கையுள்ள மனிதர்கள் அத்தனை பேரும் மாண்டு போகிறார்கள். போனார்கள். அவர்கள் நம்பி வழிபட்ட கடவுள் அந்த நேரம் எங்கே போனார்கள்? இவ்வளவு ஏன், இந்த மதத்துக்காகவே எத்தனை பேர் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொன்றார்கள். அப்போதெல்லாம் இந்தக் கடவுள் ஏன் தடுக்காமல் விட்டுச்சு??” அலட்சியமாகக் கேட்கும் மகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போவார் அம்பிகா.

“நேயா… அப்படியெல்லாம் சொல்லக் கூடாது… அது அவர் அவர் செய்த கர்மா…” அவர் முடிக்க முதலே காதைப் பொத்துவாள் இவள்.

“மண்ணாங்கட்டி கர்மா… இந்தப் பிறப்பில் செய்யும் தவற்றுக்கு அடுத்த பிறப்பில் தண்டனை என்றால், அந்தத் தண்டனையைக் கொடுத்துத்தான் என்ன, கொடுக்காமல் விட்டுத்தான் என்ன? அம்மா… உலகத்தில் இருக்கும் அத்தனை மதமும் ஏதோ ஒரு வகையில் தங்கள் நன்மைக்காகத்தான் இயங்குகிறது. தனக்காக மட்டும்தான் இயங்குகிறது. நாடுகள் கூட மதம் சார்ந்துதான் ஆட்சியை நடத்துகிறது. உலகத்தில் நடந்த அத்தனை போர்களும் மதம் சார்ந்தவைதான். இவ்வளவு ஏன், சிவனே கதி என்று ஆறுவேளைப் பூஜை செய்த உங்கள் அப்பா, நீங்கள் கிறிஸ்தவரை மணந்ததும் என்ன செய்தார்? உங்களுக்குத் திவசம் கொடுக்கவில்லை? அப்பாவைப் பெற்றவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு தன் மகனை விட மதம் பெரிதாக இருந்தது. இதில் சிவனும் இயேசுவும் போய் உங்களைப் பெற்றவர்களிடம் சமாதான உடன் படிக்கை ஏதாச்சும் செய்தார்களா என்ன? அடப் போங்கள்மா…“ பெரியார் வழித் தோன்றல் போல, அம்பிகாவின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்துத் தான் தணிந்து போவாள் பெரியவள்.

ஆனால் மகளிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல், வாயை மூடிக்கொண்டு விலகிவிடுவார் அம்பிகா. ஒரு வகையில் அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

நல்ல வேளையாக இளையவள் நேரிழை அம்பிகாவைக் கொண்டு பிறந்துவிட்டாள். அவளுக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே உண்டு. ஆனால் அந்தக் கடவுள் உசத்தி இந்தக் கடவுள் உசத்தி என்கிற கொள்கைகள் எல்லாம் இல்லை. தேவாலயமும் செல்வாள், கோவில்களுக்கும் செல்வாள். வாய்ப்பு கிடைத்தால் மசூதியும் செல்வாள். எது எப்படியாக இருந்தாலும், நம்மை ஆட்டுவிக்கும் சக்தி என்று ஒன்று உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தால் என்ன? என் வேண்டுதல் அந்தச் சக்திக்குக் கேட்டால் போதும் என்று மனமாற நம்பி, அதன்படி பயணிப்பவளும் கூட.

தேவசகாயம் எதையும் பொறுத்துப் போவார். ஆனால் தன் பெண்களை அம்பிகா திட்டினால் காதல் மனைவி என்றுகூடப் பார்க்க மாட்டார். தன் மனைவியை வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவார். அவர்கள் இருவருக்கும் சண்டை வந்ததில்லை. அப்படியே வருவதாக இருந்தாலும் அது பெண்களின் விஷயமாகத்தான் இருக்கும்.

அனேகமாக நேயநறுமைதான் சண்டையின் கதாநாயகியாக இருப்பாள். அத்தனை குறும்பு. ஒரு இடத்தில் இருக்கமாட்டாள். ஏதாவது செய்து தாயிடம் வாங்கிக் கட்டிக்கொள்வாள். பொறுமைக்கும் அவளுக்கும் வெகு வெகு தூரம். பிடிவாதம் பிடித்தால், உடும்புதான். உலகமே அழியப் போகிறது என்றாலும் தன் பிடிவாதத்தை விட மாட்டாள். முயலுக்கு மூன்று கால் என்று இவள் சொன்னால் மற்றவர்கள் நம்பியே ஆகவேண்டும். இல்லையா, நம்ப வைக்கும் வரைக்கும் அனைவரையும் ஒரு வழி செய்துவிடுவாள். உலகம் இயங்குகிறதா, வாழ்கிறோமா, சந்தோஷமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன் என்று அதன் போக்கில் பயணிப்பாள். சொல்லப்போனால் ஒரு கதையின் நாயகிக்கு இருக்கவேண்டிய இலக்கணம் சுத்தமாக இல்லாத ஒருத்திதான் இந்த நேயநறுமை. ஆனால் நேரிழை இவளுக்கு அப்படியே எதிர்மாறு.

இத்தனைக்கும் வயது பதினெட்டு. பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். ஆனால் நிறையப் பொறுமைசாலி. பெண்களுக்கு இருக்க வேண்டிய மென்மை. நளினம் அனைத்தும் கொண்டவள். பெரியவளைப் போலத் துருதுருப்பு இல்லாவிட்டாலும், பார்க்கப் பேச மிக நேர்த்தியானவள். மொத்தத்தில் அவர்களின் குடும்பம் மிக அழகானது.

தன்னை மறந்து பழைய நினைவில் அம்பிகா நின்றிருக்க,

“என்ன ராஜமாதா… பழைய நினைவில் மூழ்கி விட்டீர்கள் போல… அப்பா அந்த மரத்துக்குக் கீழ் கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்துவிட்டதா என்ன? நமட்டுச் சிரிப்புடன் தாயைப் பார்த்துக் கேட்க,

“அப்பா எங்கே மரத்துக்குக் கீழே முத்தம் கொடுத்தார்? திருமணமாகி நான் கனடா வரும் வரை என்னைத் தொடவேயில்லை தெரியுமா…” என்றவர் அப்போதுதான் தான் உளறிக் கொட்டுவது புரிந்தது. அதிர்ந்தவர் பின் கோபமாகத் தன் மகளைப் பார்த்து முறைத்து,

“ஏய்… என் வாயைப் பிடுங்கப் பார்க்கிறாயா…? காலங் காத்தால என்னிடம் அடிவாங்கித் தொலையப் போகிறாய்… இந்த வம்புப் பேச்சை விட்டு விட்டு, போய்ப் பெண் பிள்ளையாக இலட்சணமாகக் குளித்துவிட்டு வா…” என்று சிவந்த முகத்தை மறைக்கும் வேகத்தோடு, படபடவென்று சொல்ல கலகலவென்று சிரித்தாள் மகள்.

ஒரு பக்கம் வெட்கம், மறு பக்கம் கோபம் என்று தவித்தவர்,

“இருடி… போய் அகப்பை எடுத்து வருகிறேன். அதனால் இரண்டு போடு போட்டால்தான் நீ சரிவருவாய்…” சொன்னவர் திரும்ப,

“ஹலோ…! மிஸஸ் அம்பிகா தேவசகாயம்…! இந்த மிரட்டலுக்குப் பயந்தெழ நான் என்ன ஐந்து வயதுக் குழந்தை என்று நினைத்தீர்களா? இப்போது எனக்கு இருபது வயதாக்கும்…” சொன்ன மகளை நெருங்கியவர் அவளுடைய காதைப் பற்றித் திருக,

“ஆஆஆ,.. அவுச்… வலிக்கிறதுமா… ஆஆவ்…” என்று வலியில் முனங்க, மேலும் காதை முறுக்கியவர்,

“உன்னை எல்லாம் பெற்றதற்கு இரண்டு தென்னம்பிள்ளையை நட்டிருந்தால், அது நான்கு காய்களையாவது கொடுத்திருக்கும்…” என்றார் கோபமும் சிரிப்புமாக. உடனே தன் வலி மறந்து தாயைப் பார்த்தவள்,

“வட் பிரோ… வெரி ராங் பிரோ… கனடாவில் தென்னை மரம் வைத்து அதில் காய் பிடுங்குவதெல்லாம் வாய்ப்பேயில்லை பிரோ…” மேலும் அவள் தாயை வம்புக்கு இழுக்க, அவள் காதை விடுவித்த அம்பிகா, ஓங்கி அவளுடைய முதுகில் ஒன்று போட்டு,

“மரியாதையாக எழுந்து ஓடு…” என்றார் கறாராக. தாய் அடித்ததில் சற்று வலிக்க, முதுகை நெளித்தவள்,

“என்னம்மா… என்னை மட்டும் எழுப்புகிறீர்களே… எங்கே உங்களுடைய செல்ல மகள்…? நேரிழை…?” என்றாள் சற்றுப் பொறாமையாக.

அம்பிகாவோ தரையில் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்த மகளின் ஆடைகளைக் குனிந்து எடுத்தவாறு,

“அவள் உனக்குப் போட்டியாக அடுத்த அறையில் படுத்திருக்கிறாள்… போய் அவளையும் எழுப்பு…” என்று உத்தரவிட்டவர் பின் எரிச்சலோடு தன் மகளைப் பார்த்து,

“என்னடி அறை இது? இத்தனை அசுத்தமாகவா வைத்திருப்பார்கள். போட்டதை எல்லாம் கழற்றி அங்கும் இங்குமாகத் தரையில் சிதறி எறிந்திருக்கிறாய்… கொஞ்சமாவது சுத்தமாக இருக்க வேண்டாமா? இதில் மூச்சிழுப்பு வேறு இருக்கிறது. பொறுப்பு வேண்டாம்?” வைதவாறு அள்ளிய துணிகளை அங்கிருந்த துவைக்கும் கூடையில் போட, அதைக் கேட்க அவள் எங்கே இருந்தாள், துள்ளிக்கொண்டு தன் தங்கையைத் தேடிக்கொண்டு அவளுடைய அறைக்குச் சென்றிருந்தாள் அந்தப் பொல்லாதவள்

What’s your Reaction?
+1
17
+1
5
+1
2
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!