Sat. Jan 31st, 2026

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 9

 

இவளுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாதவனாக நடந்த சென்று கரத்திலிருந்த ஒளிப்பதிவுக் கருவியை கபேர்டில் வைத்துவிட்டுக் கூடவே அங்கிருந்து ஒரு மேல் சட்டையை எடுத்து அணிந்தவாறு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நமக்குத் திருமணம் நடக்கும் வரைக்கும் இது பத்திரமாக என்னிடம் இருக்கும்… திருமணம் முடித்த கையோடு பத்திரிகையாளர்களின் கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்தில் என்னை விரும்பித் திருமணம் முடித்ததாக நீ கூறப் போகிறாய்… நாம் அவர்களுக்கு சிரித்த மாதிரியே காதலர்கள் போலக் காட்டப்போகிறோம்” என்றவாறு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அணிந்த ஷேர்ட்டைப் பான்டுக்குள் செருகத் தொடங்க, அதைக் கூட உணராதவளாகப் பிடித்து வைத்த பிள்ளையார் போல அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவனோ பான்டை சரியாக்கி அதன் ஜிப்பை இழுத்துவிட்டுக் கண்ணாடியின் முன்பாக நின்று தலைமுடியை அழகாக வாரிவிட்டுத் திரும்பிய போதும் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள் சமர்த்தி.

அவளை நெருங்கியவன், அவளுடைய தோளின் மீது கரத்தைப் போட்டு,

“சரி வா… புறப்படலாம்…” என்று கூற அப்போது தான் அந்த சிலைக்கு உயிரே வந்தது. அதிர்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“தி… திருமணமா?” என்றாள் உடல் குருதி வற்றிப் போக.

“அப்படித்தானே சொன்னேன்… திருமணம்…” என்றவாறு அவளுடைய தோள்களை அழுத்த, அப்போதுதான் அவன் தன்னை அணைத்துப் பிடித்தாற்போல இருப்பதே உறைத்தது.

அவனை உதறிவிட்டுத் தள்ளி நின்றவள்,

“ஏன்…?” என்றாள் நடுக்கத்துடன். அவனோ தோள்களைக் குலுக்கி,

“ஏன் என்றால்? உன்னால்தான் ஜூலியட்டை இழந்தேன். அவளால் கிடைக்கும் படுக்கை சுகத்தைத் தொலைத்தேன். அதனால் இனி அவளுடைய இடத்தை நீதான் நிரப்பப்போகிறாய்… படுக்கையில்” என்றதும், மறுப்பாகத் தன் தலையை அசைத்து,

“நோ… முடியாது… உன்னை நான் திருமணம் முடிக்கமாட்டேன்… சத்தியமாக மாட்டேன்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அவளுடைய மறுப்பு அவனைப் பாதித்ததாவே தெரியவில்லை. மாறாக இளம் புன்னகை சிந்தி

“நெவர் மைன்ட்… உன்னை வற்புறுத்த மாட்டேன்… ஆனால்…” என்று யோசிப்பது போல நெற்றியை வருடியவன்,

“சற்று முன் நம்முடைய உல்லாச ஒளிப்பதிவை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம்…? ப்ரைட்டன் பத்திரிகைக்கே அனுப்பி விடுவோமா? ‘பத்திரிகை நிருபரின் காம விளையாட்டு… சிக்கிக்கொண்டாரா உத்தியுக்தன்’ தலைப்பும் அழகாக இருக்கிறது, வாசகர்களையும் சுண்டி இழுக்கும்” என்று சொல்ல ஐயோ என்று வந்தது சமர்த்திக்கு. கரங்களைப் பிசைந்தவள்,

“நோ… நோ… ப்ளீஸ்… அப்படி செய்யாதே…” என்று துடித்தவளை கொஞ்சம் கூட அவன் மதிக்க வில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தவன்,

“நேரம் போகிறது. ஐந்து நிமிடங்கள் தருகிறேன். அதற்குள் நீ கிளம்புகிறாய். இல்லை…” என்றவாறு திரும்பி அவளைப் பார்த்தான்.

கலைந்த முடி, அழுது கசங்கி வீங்கிப்போன முகம், சிவந்த விழிகள். வெண் கழுத்து, அவன் வேகத்தால் இதழ் உதிர்த்த மலராய்க் கிடந்த தேகத்தைப் போர்வையால் சுற்றிப் போர்த்தியிருக்க, அதைக் கண்டு ஏளனத்துடன் நகைத்தவன்,

“விட்ட காரியத்தைத் தொடர்வேன்…” என்றான் அங்கும் இங்கும் மறைந்தும் மறையாமலும் தெரிந்த மென் தேகத்தைப் பார்த்தவாறு.

அதைக் கேட்டதும் பதறித் துடித்து எழுந்தவள் தரையில் கிடந்த மேலாடையை இழுத்து எடுத்து அணியத் தொடங்கியவளுக்குப் பொத்தான்களைப் போட முயலக் கரங்கள் நடுங்கின. தாறுமாறாக நடுங்கிய கரங்களை நிலைப்படுத்த முயன்றவளுக்கு அப்போது தான் தெரிந்தது சட்டையில் பொத்தான்கள் இல்லை என்று.

என்ன செய்வது என்பது போலத் திரும்பி அவனைப் பார்த்தால், அவனோ அவளைத்தான் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

சட்டென்று திரும்பியவள், அணிந்திருந்த மேலாடையை இழுத்துத் தன்னைச் சுற்றிப் பிடித்தவாறு திரும்ப, உத்தியுக்தன், மேசையில் இருந்த வண்டித் திறப்பையும், பணப்பையையும் பான்டிற்குள் நுழைத்தவாறு

“சரி வா…” என்றவாறு நடக்கத் தொடங்க, வேறு வழியில்லாமல் நேந்துவிட்ட ஆடு போல, புத்தியும் மனமும் மரத்துப் போனவளாக அவனைப் பின் தெடார்ந்தாள் சமர்த்தி.

தன் வாகனத்தின் முன்பக்கக் கதவைத் திறந்து அமர்ந்தவன், வண்டியை உசுப்ப, இவளோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தாள்.

கதவுக் கண்ணாடியைக் கீழிறக்க. அவள் பக்கமாகக் குனிந்து,

“எத்தனை நேரமாக இப்படி நிற்பதாக உத்தேசம்…?” என்றான் அழுத்தமாக.

கண்கள் கலங்க அவனைப் பரிதாபமாகப் பார்த்தவள் மீது இவனுக்கு கொஞ்சம் கூட இரக்கம் பிறக்கவில்லை.

“சமர்த்தி… எனக்கு நேரம் போகிறது… உட்கார்…” என்ற அவனுடைய குரலில், பட்டென்று கதவைத் திறந்து அமர்ந்தாள் சமர்த்தி.

அடுத்து வண்டி வேகமெடுக்க இவளுக்கு எல்லாம் மரத்துப்போன உணர்வு. இப்படி ஒரே நாளில் இவளுடைய வாழ்க்கை அதளபாதாளத்திற்குள் விழும் என்று நினைத்திருக்கவேயில்லையே.

கடவுளே… அண்ணா அண்ணிக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறாள்… அதுவும் கிழிந்த ஆடையோடு அவர்கள் முன்னால் நின்றால் நிச்சயமாகத் துடித்துப் போவார்கள். இப்போது அவர்களை எப்படிச் சமாளிப்பது? குழப்பத்துடனேயே அமர்ந்திருக்கத் தேகமோ இன்னும் தொடர்ந்து நடுங்கிக்கொண்டுதான் இருந்தது.

இப்போதும் அவனுடைய கரங்கள் மேனி எங்கும் ஊர்ந்து செல்வதுபோன்ற கூச்சத்தில் தவித்துப் போனாள்.

எத்தனை பெரிய ஆபத்தை எதிர்நோக்கிக் கடந்து வந்துவிட்டாள். கற்பனையில்கூட இத்தகைய காட்சிகளை எண்ணிப் பார்த்ததில்லையே.

கற்பழிப்புச் செய்திகள் ஒன்றும் அவளுக்குப் புதிதல்லதான். அப்போது பத்திரிகைக்குத் தீனி கிடைத்த ஆர்வத்தில் வெறும் செய்தியாகப் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்கும் ஒரு வியாபாரப் பொருளாக எண்ணி அந்த சம்பவகத்தை நேரில் பார்த்ததுபோல உணர்ச்சிகளைக் கொட்டி எழுதியிருக்கிறாள்தான். ஆனால் நேரடியாக அதனை அனுபவிக்கும் போது தானே தெரிகிறது அது எத்தனை பயங்கரமானது என்று.

அப்போதெல்லாம், அந்தப் பெண் எத்தனை வலியைச் சந்தித்திருப்பாள், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாள் என்று பெரிதாக எண்ணியதில்லையே. மீண்டும் உடல் நடுங்க, அதை உணர்ந்தவன் போலத் திரும்பிப் பார்த்தான்.

அந்தப் பார்வையிலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சற்று நேரத்தில் வாகனம் ஒரு இடத்தில் நிற்க, உடல் குலுங்கத் திரும்பிப் பார்த்தாள்.

அதற்குள்ளாகவா அவளுடைய வீடு வந்து விட்டது? இதுவரை கண்டறியாத பயம் அவளைச் சூழச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அது ஒரு அங்காடி. அந்த நிலையிலும் பெரும் நிம்மதியை உணர்ந்தவளாக ஆழ மூச்செடுக்க, அவனோ கதவைத் திறந்து வெளியேறி, அவளை நோக்கிக் குனிந்தான்.

“உட்கார் ஐந்து நிமிடத்தில் வருகிறேன்..” என்று விட்டுத் திரும்பியவன், எதையோ நினைத்தவன் போல நின்றான். இடது இமையைச் சுட்டுவிரலால் சொறிந்தவாறு, மீண்டும் இவள் பக்கமாகக் குனிந்து மெல்லிய புன்னகையைச் சிந்தி,

“நீ இங்கிருந்து தப்பிப் போவதாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை… உன் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியும்… அப்புறம், நம்முடைய படங்கள் இணையத்தில் வரும்…” என்றுவிட்டு அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் கதவைச் சாத்திவிட்டு செல்ல, இவளுக்குத் தேகமெல்லாம் எரிந்தது.

தான் பெரிய சிலந்திவலைக்குள் வசமாகச் சிக்கிக்கொண்டது புரிந்தது.

அவள் மட்டும் தனியாளாக இருந்திருந்தால், என்ன வேண்டும் என்றாலும் செய்து தொலை… என்று அலட்சியமாகச் சென்றிருப்பாள். ஆனால் இவளுக்குப் பின்னால் ஐவர் இருக்கிறார்களே. யாருக்காகப் பார்க்காவிட்டாலும் அவர்களைப் பற்றியும் யோசிக்க வேண்டுமே. கடவுளே என்ன செய்யப்போகிறாள். எப்படி இதிலிருந்து தப்பப் போகிறாள். இருவருக்கும் திருமணம் என்றானே..

உண்மையாகவே திருமணம் செய்யப் போகிறானா.. இல்லை.. அவளை மிரட்ட அப்படிச் சொன்னானா.. ஆனால் அவன் சொன்னதில் பொய் இருப்பது போலத் தெரியவில்லையே.’ தவித்திருக்க, அவன் அந்தக் கட்டத்திற்குள்ளிருந்து வெளியே வருவது தெரிந்தது.

இப்போது எந்த அணுகுண்டைக் கையோடு எடுத்து வருகிறானோ… எண்ணும்போதே தன் பக்கத்துக் கதவைத் திறந்தவன், இருக்கையில் அமர்ந்தவாறு தன் கரத்திலிருந்த பொதியை, அவள் முகத்தை நோக்கி விட்டெறிந்தான், அது அவளுடைய மடியில் வந்து விழுந்தது.

இவள் புரியாமல் மடியில் விழுந்த பொதியை எடுத்துத் திறந்து பார்த்தாள். உள்ளே இளம் மஞ்சள் நிறத்தில் டீ ஷேர்ட் ஒன்றிருக்க அதை எடுத்துப் பார்த்தாள். கையில் வழுவழுத்தது ஆடை.

“உனக்குத்தான்… சீக்கிரம் அணிந்துகொள்…” என்றான்.

இவளோ குழப்பத்துடன் ஆடையை விரித்துப் பார்த்தாள். இவள் சற்று சதைப்பற்றானவள். அதனால் மீடியம் அளவுதான் எப்போதும் அணிவது. அவனும் அதற்கேற்றாற்போல வாங்கிவந்திருந்தான்.

இதுதான் அவளுடைய அளவு என்று இவனுக்கு எப்படித் தெரியும்? என்று குழம்பியவாறு அவனை நிமிர்ந்து பார்க்க அவனுடைய உதட்டின் ஓரத்தில் மெல்லிய கிண்டல் சிரிப்பொன்று துடித்தது.

உடனேயே புரிந்து போனது சமர்த்திக்கு. அவமானமும், வெட்கமும், ஆத்திரமுமாக அவனை முறைக்க, அதை அவன் லட்சியம் செய்தால் அல்லவோ.

“நேரம் செல்கிறது. உன் அண்ணன் அண்ணி இடம் நம்முடைய திருமணப் பேச்சை எடுக்கும் போது இப்படிக் கிழிந்த ஆடையுடன்தான் இருக்கப் போகிறாய் என்றால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை…” என்று அவன் அலட்சியமாகக் கூற இவளோ, தன் கரத்தில் இருந்த ஆடையைக் கசக்கியவாறு,

“நான் உங்களைத் திருமணம் முடிக்க மாட்டேன். வானமே இடிந்து விழுந்தாலும் உங்களை மணக்கவே மாட்டேன்…” என்று கிறீச்சிட்டவளை அதே புன்னகையுடன் பார்த்தான் உத்தியுக்தன்.

புன்னகைத்தே கழுத்தறுப்பது என்பது இது தானோ? பற்களைக் கடித்தவாறு இவனைப் பார்க்க, அவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. என்னைத்தான் மணந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லையே… சுதந்திர நாட்டில் விருப்பப் படி கணவனைத் தேர்வு செய்வதற்கும் உரிமை இல்லையா என்ன? தாராளமாக நீ மறுக்கலாம்…” என்றவன், வாகனத்தை கிளப்பியவாறு,

“ஆனால் இணையத்திலும் நம்முடைய ஒளிப்பதிவு வெளியே வரும்… ஏன் சமர்தி, இந்த ஒளிப்பதிவை, உன் அண்ணன் அண்ணி பார்க்க நேர்ந்தால்… வருந்துவார்களா? பெற்ற குழந்தையாக ஒழுக்கம் தவறாது வளர்த்தவர்களுக்கு இதை ஜீரணிப்பது கொஞ்சம் சிரமம்தான்… இட்ஸ் ஓக்கே… அதை நீ சமாளித்துவிட மாட்டாயா என்ன?” என்றவன் தன் புருவங்களைச் சுருக்கி சந்தேகம்போல இவளைப் பார்த்து, “அவர்கள் தாங்குவார்கள் என்றா நினைக்கிறாய்…?” என்று கேட்க இவளுக்குத்தான் மூச்சுத் தடைப்பட்டுப் போனது.

“ஏன்…? ஏன் என்னைத் திருமணம் முடிக்க எண்ணுகிறீர்கள்? உ… உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்காதே…! பிறகு எதற்கு இந்த விஷப்பரீட்சை…?” என்று குரல் கம்மக் கேட்க,

“பதில்தான் நீயே சொல்லிவிட்டாயே.. உன்னைப் பிடிக்காது என்று… பிடித்த மனைவியை எப்படி வதைக்க முடியும்? உன்னை மணக்கப் பல காரணங்கள். முதலாவதாக உன்னால் தானே ஜூலியட்டை இழந்தேன். அவள் கொடுத்த சுகத்தை இழந்தேன். அதை நீதான் கொடுக்கப்போகிறாய்… பயப்படாதே… படுக்கையில் மட்டும்தான் எனக்கு நீ வேண்டும். இரண்டாவது… உன்னால் இழந்த மரியாதையை மதிப்பை உன் மூலம் மீளப்பெறப் போகிறேன். புரியவில்லை? தனி மனிதனாக இருப்பதை விடக் குடும்பஸ்தனாக மாறினால் அதற்கென்று தனி மரியாதை உண்டு. என்னைக் கண்டதும் ஓரடி தள்ளி நிற்கும் பெண்களின் மனநிலை மாறவேண்டுமானால் எனக்கொரு மனைவி தேவை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இரண்டு வருடங்களாக எனக்குள் கொழுந்துவிட்டெரியும் ஆத்திரத்திற்கு ஒரு வடிகால் வேண்டாமா…? நேர்மையாக வாழ்ந்த என்னை நரகத்திற்குள் தள்ளிய உனக்கு அந்த நரகத்தைக் காட்ட வேண்டாம்? நான் பட்ட அவமானங்களை நீயும் அனுபவிக்கவேண்டாம்…?” என்றுவிட்டு வண்டியின் வேகத்தைக் கூட்டியவாறு,

“சற்று முன் சொன்னாயே, நான் தொடும் போது, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல உடல் காந்துகிறது என்று… அதை ஒவ்வொரு நாளும் நான் பார்த்து ரசிக்கவேண்டும். எனக்கு வேண்டியது உன்னுடைய வலி. அது எப்படியாக இருந்தாலும் சரிதான். என்னை மணம் முடித்து, நான்கு சுவருக்குள் சித்திரவதைப் படப்போகிறாயா, இல்லை காறித்துப்பும் அளவுக்கு அவமானப் படப் போகிறாயா? தேர்வு உன்னுடையதுதான் ” என்றவன் அவளைத் திரும்பிப் பார்த்து, சற்று வெளியே தெரிந்த அவள் உடல் அழகை ரசித்தவாறு,

“ஆடை மாற்றவில்லையா என்ன? இப்படியேவா வரப்போகிறாய்?” என்றான் ரசனையாய். ஆத்திரத்துடன் மீண்டும் சட்டையை இழுத்துப் பிடித்தவாறு அவனை முறைத்தவள்,

“நான் எப்படி இங்கே மாற்றுவது?” என்றாள் சுள்ளென்று.

“ஏன் மேல் ஆடையை மாற்ற உனக்குப் பத்துக்குப் பத்து அறையா தர முடியும்? வேகமாக ஓடும் வாகனத்திற்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க யாராலும் முடியாது… விரைவாக மாற்று…” என்றவனை எரிப்பதுபோலப் பார்த்தவள்,

“நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எப்படி ஆடை மாற்றுவது?” என்றதும், அவனுடைய விழிகள் அவளுடைய மேனியை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு,

“உன்னுடைய மேனிக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஆடையையே வாங்கிவந்து இருக்கிறேன்… அப்படியிருக்கையில் என் முன்னால் ஆடை மாற்ற இப்படி யோசிக்கிறாயே… சொல்லப் போனால் உன்னுடைய வயிற்றின் இடப்பக்கமாகச் சற்றுக் கீழே பொட்டு வைத்ததுபோல அழகிய மச்சம் ஒன்றிருக்கிறது…! வலது மார்பிலும் சின்னதாக ஒரு மச்சம்…” என்றவன், தன் புன்னகையை விரித்தவாறு,

“மிச்சம் நம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியும்…” என்றதும் விதிர் விதிர்த்துப் போனாள் சமர்த்தி. இது கிணறு வெட்டப்போய்ப் பூதம் வந்த கதையாக அல்லவா இருக்கிறது.

வெட்கமும் அவமானமும் போட்டிப்போட, அவன் கொடுத்த பொதியை மார்போடு இறுக அணைத்தவாறு கண்களிலிருந்து கண்ணீர் வழிய நின்றிருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் சமர்த்தியின் வீடு நெருங்கத் தொடங்கியது. நெருங்க நெருங்க இவளுடைய நெஞ்சம் பயங்கரமாகத் துடிக்கத் தொடங்கியது. இனியும் ஆடை மாற்றாமல் இருக்க முடியாது. ஆனால் எப்படி?

யோசித்தவள், அவன் கொடுத்த டீ ஷேர்ட்டைக் கிழிந்த ஆடைக்கு மேலாகப் போட்டாள். அதற்குள்ளாகவே உடலின் சிறு பாகம் கூட வெளியே தெரியாதவாறு பழைய ஆடையைக் களைந்தெடுக்க, அதைக் கண்டு உதட்டைப் பிதுக்கியவன்,

“ஸ்மார்ட்…” என்றவாறு அவர்களின் வீட்டிற்கு முன்னால் வாகனத்தை நிறுத்தினான்.

இவளைக் காணவில்லை என்று புஷ்பா வெளியிலேயே நின்றிருந்தார். இவளைக் கண்டதும், பதறியவாறு வந்தவர்,

“என்னம்மா…. இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்… காணவில்லை என்று எப்படிப் பதறிப்போனோம் தெரியுமா? தயா… சத்தி வந்து விட்டாள்….” என்று குரல் கொடுக்கும்போதே தன் வாகனத்தை விட்டு வெளியே வந்தான் உத்தியுக்தன்.

அப்போதுதான் புஷ்பாவிற்கு அவள் வந்து இறங்கிய வாகனமே உறைத்தது. அதே நேரம் தயாளனும், அவரைத் தொடர்ந்த அத்தனை பட்டாளங்களும் வெளியே வந்திருந்தன.

உத்தியுக்தனை அடையாளம் கண்ட தயாளன் ஒரு கணம் குழம்பிப் போனார்.

அவன் மிகப்பெரும் வியாபாரி என்பதை விட, ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வராகப் போட்டிப்போட முயன்ற பெரிய அரசியல்வாதி யாயிற்றே. ஏன் தயாளன் கூட அவனுக்குத்தான் தன் வாக்கைப் போடுவதாக இருந்தார்.

ஆனால் நடந்த சிக்கலில் தன் எண்ணத்தை முழுதாக மாற்றிக்கொண்டார். ஆனாலும் அந்தப் பெரிய மனிதருடைய கால் சாதார ஒருவனின் வீட்டில் படிவதா என்ன? அது நடக்கும் காரியமா? அதைக் கனவில் கூட யாராவது யோசித்துப் பார்த்து இருப்பார்களா? நம்பாமல் சிலையாக நின்றிருக்கப் புஷ்பாவோ அத்தனையையும் மீறி,

‘இந்தப் பெண் பொறுக்கி இங்கே எங்கே வந்தான்?’ என்பது போலப் பார்த்துவிட்டு சமர்த்தியை ஏறிட்டார். சமர்த்தியோ என்ன பதிலைக் கூறுவது என்று தெரியாமல், திணற,

“ஹாய்… ஐ ஆம் உத்தியுக்தன்…” என்றவாறு அவர்களை நெருங்க, புஷ்பா அவசரமாகச் சமர்த்தியையும் இழுத்துக்கொண்டு இரண்டடி தள்ளி நின்றார்.

அதைக் கண்டதும் உத்தியுக்தனின் முகம் கறுத்துப்போனது. சமர்த்தியோ அடிபட்டவள் போல அவனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் கொல்லும் வெறியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவளுக்குப் பரிந்தது. அவளை மணக்க அவன் என் திட்டமிட்டான் என்று. அவன் படும் வலியை, ஏமாற்றத்தை, அவமானங்களை இவளும் சந்திக்கவேண்டும். அது மட்டுமல்ல, புஷ்பா நிச்சயமாக இவனை மணக்கச் சம்மதிக்க மாட்டார். அப்படி இருக்கையில், அவன்மீது பெண்களுக்கிருக்கும் அபிப்பிராயம் எத்தகையது என்பதை உணர்த்த முயல்கிறான். அவள் செய்த அந்தத் தவறு, எந்த அளவுக்கு அவனைப் பாதிக்கிறது என்பதைக் காட்ட விளைகிறான். நினைக்கும் போதே நெஞ்சம் தளர்ந்து போனது.

முகம் இறுகி நின்றவன், தன் அவமானத்தை மென்று விழுங்கியவனாக,

“ஓக்கே சதி… இப்போது நான் கிளம்புகிறேன்… நாளை காலை ஆறு மணிக்கு உன் அழைப்புக்காகக் காத்திருப்பேன்…” என்றவன் தன் வாகனத்தை நோக்கி நடந்தபோது அவனுடைய ஒவ்வொரு அடியிலும் சீற்றம் இருப்பதைக் கண்டு கலங்கிப் போனாள் சமர்த்தி.

அந்த அடிகள் அத்தனையும் பலமாக அவளுடைய நெஞ்சில் மிதிப்பதுபோல அலமலந்து போனாள்.

அவன் செல்லும் வரைக்கும் அமைதி காத்த புஷ்பா, மறு கணம் திரும்பிப் பளார் என்று அவளுடைய கன்னத்தில் ஒன்று கொடுக்கத் துடித்துப்போனாள் சமர்த்தி. தயாளனோ,

“புஷ்பா… என்ன காரியம் செய்தாய்…” என்று பதறியவாறு வரத் தன் கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளுடைய கரத்தைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்ற புஷ்பா வீட்டுக் கதவைச் சாற்றிவிட்டு,

“இவன்… இவன் எதற்கு இங்கே வந்தான்… என்ன தைரியமிருந்தால் அவனுடைய வாகனத்தில் ஏறி வருவாய்? அவன் எப்படிப் பட்டவன் என்று உனக்குத் தெரியுமல்லவா? தெரிந்திருந்தும் எப்படி வந்தாய்?” என்று ஆத்திரத்தோடு கேட்க இதுவரை அவளைத் தொட்டறியாத புஷ்பாவே இவள் மீது கைவைத்த வேதனையில் சமர்த்தியோ விக்கித்துப் போய் நின்றாள்.

புஷ்பா அன்பானவர். அவளுக்காக எதுவும் செய்வார். ஆனால் ஒழுக்கம் என்பதில் அவர் மிகக் கறாரானவர். கல்வி கூட அதற்கு அடுத்தபடிதான். அப்படியிருக்கையில், பெண் பித்தன் என்று பெயர் எடுத்த, ஒரு ஆணோடு ஒரே வாகனத்தில் வந்தால், ஆத்திரப்படாமல் என்னதான் செய்வார்.

“அண்ணி… அவர்… அவர்…” என்று எதையோ கூற வர, அதைத் தடுத்த புஷ்பா,

“என்ன அவர்.. பெண்களை மதிக்கத் தெரியாதவனுக்கு என்ன மரியாதை…?” என்று சீற அது வரை தள்ளி நின்றிருந்த தயாளன்,

“சரி… சரி விடு புஷ்பா… என்ன நடந்தது என்று தெரியாமல் நாங்களே ஒரு முடிவுக்கு வரக் கூடாது. அவள் எத்தகைய நிலைமையில் அந்தப் பையனைச் சந்தித்தாளோ… நம்முடைய பிள்ளைகளை நமக்கே தெரியாதா? நாமே நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள்…” என்று கடிய, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் விம்மத் தொடங்கிவிட்டாள் சமர்த்தி.

அவள் அழுததும்தான் புஷ்பாவுக்குத் தான் செய்தது உறைத்தது.

பதறியவராக, ஓடிவந்து அவளுடைய முதுகை வருடிக் கொடுத்து,

“சாரிடா… சாரி… சாரி… நான் தெரியாமல் அடித்துவிட்டேன்… அவனோடு பார்த்ததும், கோபம் வந்துவிட்டது… உன்னை அழைத்து வர நீ எப்படி அவனுக்கு இடம் கொடுக்கலாம்? அவனைப் பற்றித் தெரிந்தும் நெருங்க விட்டது சரியா? அதற்காக உன்னை அடித்தது தப்புதான்… அவரசப்பட்டு அடித்துவிட்டேன்… சாரிடா… என்னை மன்னிக்கக் கூடாதா?” என்று கேட்க இப்போது அண்ணனை விட்டு அண்ணியை இறுகக் கட்டிக்கொண்டாள் சமர்த்தி.

அவள் அழுவதற்குக் காரணமே அவர் அடித்ததால் அல்ல, அந்த உத்தியுக்தனால் என்று எப்படிச் சொல்வாள். எத்தகைய இக்கட்டில் அவளைச் சிக்க வைத்துவிட்டான். இப்போது அவள் என்ன செய்யப்போகிறாள்? தவிக்க,

“என் தங்கம்… பட்டுக் குட்டி… அழாதேடா… வேண்டுமானால் இந்த அண்ணியை ஒரு அடி அடித்துவிடுகிறாயா?”என்று தன் நாத்தனார் அழுவது தாங்க முடியாமல் புஷ்பா கேட்க, அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விலகினாள் சமர்த்தி.

அதே நேரம் தயாளனும்,

“ப்ச்… சரி… நடந்தது நடந்து விட்டது… அதைப்பற்றிப் பேசி என்ன பயன்…?” என்று தயாளன் சமாதானப் படுத்த, நாத்தனாரின் கண்களிலிருந்து இன்னும் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்ட புஷ்பா,

“சரி இனி ஒரு தரம் இப்படிச் செய்யாதே… சரியா…” என்றார் தேற்றும் முகனமாக.

அவனோடு வந்ததற்கே இத்தனை கோபம் கொள்ளும் அண்ணி, அவனைத்தான் மணம் முடிக்கப்போகிறேன் என்று சொன்னால், எப்படி ஏற்றுக்கொள்வார்? நினைக்கும் போதே உடல் நடுங்கியது. மேலும் கண்ணீர் நிக்காமல் வழிந்தது.

“அதுதான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன் அல்லவா… பிறகும் எதற்கு அழுகிறாய்?” என்று புஷ்பா கோபத்துடன் கேட்க, அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைக்கத் தங்கையின் அழுகையைத் தாங்க முடியமால் அவளை அணைத்துக்கொண்ட தயாளன்,

“அவள் கிடக்கிறாள்… நீ வா…” என்றவாறு அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தியவர், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் போத்தலைக் கொண்டு வந்து தங்கையிடம் நீட்ட, மறுக்காது வாங்கிக் குடித்தாள் சமர்த்தி.

இப்போது அழுகை நின்றிருந்தது. ஆனால் கலக்கம் எறியிருந்தது. கொஞ்ச நேரம் தன் தங்கையை அசுவாசப்படுத்தியவர்,

“சரி இப்போது சொல்… என்னடா பிரச்சனை… சித்தார்த்தைப் பார்க்கப் போனாயே? அங்கே ஏதாவது சிக்கலாடா…” என்று கனிவாகக் கேட்க அண்ணனைப் பரிதாபமாகப் பார்த்தாள் சமர்த்தி.

“இ… இல்லை அண்ணா… ஆனால்… நான்… நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…” சொல்லும்போதே தொண்டை காய்ந்து வறண்டு போயிற்று.

“சொல்லுடா… அந்த சித்தார்த்தைப் பிடித்து இருக்கிறதா?” என்றார் ஆவலாக.

“இ… இல்லை… ஆனால்… இப்போது வந்தாரே… உத்… உத்தியுக்தன்… நான்… வந்து… அவரை நான்… கா… காதலிக்கிறேன்…” என்று உடலை இறுக்கியவாறு ஒரு வித நடுக்கத்துடன் அத்தனை  தைரியத்தையும் திரட்டிக் கூறி முடிக்க, அவளுக்கு மேலாக அதிர்ந்து நின்றனர் தயாளனும் புஷ்பாவும்.

“என்னது…? சமர்த்தி…! உனக்கு என்ன புத்தி மழுங்கிவிட்டதா…? அவனைப் போய்… சீ… உனக்கென்ன பைத்தியமா…?” என்று படு கோபமாகப் புஷ்பா மறுக்க, தயாளனோ ஒரு வித யோசனையுடன் தன் தங்கையைப் பார்த்தார்.

தன் தங்கைக்குக் காதலா… இன்னும் அவரால் அதை நம்ப முடியவில்லை. தான் உண்டு, வேலை உண்டு, தன் வீடுண்டு என்று இருப்பவளாயிற்றே. அவளுக்கு எப்படிக் காதல் வர முடியும்… இல்லை எங்கோ தப்பு நடந்திருக்கிறது…” என்று திடமாக நம்பியவர்,

“சமர்த்தி… காதலிப்பது தப்பில்லை… ஆனால் காதலிக்கப்படுகிற இடம்தான் தப்பாக இருக்கக் கூடாது. அந்த உத்தியுக்தனைப் பற்றித் தெரிந்தும் நீ அவனைக் காதலித்தாய் என்றால்… என்னால் நம்ப முடியவில்லையே…” என்றபோது அந்த நேரத்தில் அந்த உத்தியுக்தன் மீது மெல்லிய பரிதாபம் எழவே செய்தது.

உண்மை தெரியாமல் இந்த திருமணத்துக்கு அண்ணி சம்மதிக்கமாட்டார் என்பதை நன்கு புரிந்து கொண்டவளாக நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள்.

அந்த ஒளிப்பதிவா, இல்லை அவனோடான திருமணமா என்கிற பட்டிமன்றத்தில் திருமணமே மேலோங்கி நிக்க, தன் தொண்டையை செருமியவள்.

“அவர் நீங்கள் இருவரும் நினைப்பது போலத் தப்பானவர் இல்லை… அவருடைய பெயர் கெடக் காரணம் நான்தான்..” என்றதும் இருவரும் புரியாமல் சமர்த்தியை ஏறிட்டனர்.

“என்ன உளறுகிறாய் சமர்த்தி. அவர் பெயர் கெட நீ எப்படிக் காரணமாவாய்?” என்று புஷ்பா பொறுமை இழந்து கேட்க, அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல், இருவரையும் அழுகையினூடே பார்த்து,

“ஏன் என்றால் அன்று, அவர் மீது அபாண்டமாகப் பழியைப் போட்டுக் கட்டுரை எழுதியது நான்தான் அண்ணி. நிகழ் பதிவு செய்ததும் நான்தான்… அந்த… அந்த ஒரு மில்லியன், நான் எடுத்த நிகழ் பதிவுக்காக எதிர்க்கட்சிகள் கொடுத்த பணம்…” என்று தலை கவிழ்ந்தவாறு கூற இருவருமே வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்.

“என்னம்மா சொல்கிறாய்…? அப்படியானால் இந்தக் கடன் அடைத்ததெல்லாம் அந்தப் பணத்தில் தானா?” என்று புஷ்பா அதிர்ச்சியுடன் கேட்கப் பயத்துடன் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டியவள்,

“பின்னாடி நான் எடுத்தது அவருடைய இரட்டை சகோதரனை என்று தெரிய வந்தது… நம்மால் அநியாயமாக ஒருத்தருடைய வாழ்க்கை பாழாகப் போய்விட்டதே என்கிற கழிவிரக்கம் கா… காதலாய்….” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. யசோதாவுக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. தயாளனோ, நம்ப மாட்டாதவராகத் தன் தங்கையை ஏறிட்டார்.

“ஏன்மா… ஏன் இப்படிச் செய்தாய்… அதுவும் பணம் வாங்கும் அளவுக்கு என்ன அவசரம் வந்தது?” என்று அண்ணனாய்க் கடிய,

“சீ சீ… என்ன காரியம் செய்துவிட்டாய் சத்தி… ஒரு நல்ல மனிதரின் வாழ்கையைச் சற்றும் யோசிக்காமல் புதை குழியில் தள்ளிவிட்டாயே…” என்று கடுமையாகத் தன் நாத்தனாரைச் சாடினாலும், அவள் கலங்கி நிற்பது பொறுக்க முடியாமல் நெருங்கி அணைத்துக் கொள்ள,

“அண்ணி… ஆரம்பத்தில் அவர் தப்பு செய்தவர் என்றுதான் நினைத்தேன். இத்தகைய ஒருவன் ஒன்டாரியோவுக்கு முதல்வராக வருவதா என்கிற ஆத்திரம்… அதுதான் நிகழ் பதிவை எதிர்க் கட்சியாளருக்குக் கொடுத்தேன். ஆனால் அது அவருடைய தம்பி என்று தெரிந்ததும், மன்னிப்பு… மன்னிப்புக் கேட்கப் போனேனா… பெருந்தன்மையாக மன்னித்தார். அதிலிருந்து பழக்கம்… ஏற்பட்டு… இப்போது…” என்று அவள் கலங்கியவாறு கூற, புஷ்பாவோ,

“கண்ணம்மா பரிதாபத்தில் எழுவதையெல்லாம் காதல் என்றுவிட முடியாதே. அவர் மிகப் பெரும் பணக்காரர். நம் குடும்பத்திற்கு ஒத்துவருமா தெரியவில்லையே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தங்கம். நம் வசதிக்கு ஏற்ப ஒருவனை மணந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமே…” என்ற புஷ்பாவுக்கு ஏனோ அந்த உத்தியுக்தனை சமர்த்திக்கு இணையாக யோசிக்கவே முடியவில்லை.

ஒரு வேளை அவனுக்குப் பின்னாலிருந்த அரசியல், இல்லையென்றால் பணம் ஏதோ ஒன்று அவளைத் தம்மிடமிருந்து பிரித்துவிடுமோ என்று அஞ்ச, இறுதியாக, அழுபவளைக் கண்டு சகிக்க முடியாமல்,

“சரிடா… உன்னுடைய முடிவு அதுதான் என்றால் நாங்கள் மறுக்கப்போவதில்லை. எங்களுக்கு உன் மகிழ்ச்சி மட்டும்தான் முக்கியம்… சரி அழாதே, நல்ல நாள் பார்த்துத் திருமணப் பேச்சை எடுக்கலாம்…” என்று கூற, இவளுக்குள் பெரிய யுத்தகளமே ஆரம்பித்திருந்தது.

எப்போதும் தயாளனும் சரி, புஷ்பாவும் சரி, இவள் சொல்வது சரியா பொய்யா என்று ஒரு போதும் ஆராய்ந்தது கிடையாது. தங்களிடம் சமர்த்தி பொய்சொல்ல மாட்டாள் என்பது நூறு வீதம் அவர்களுக்கு நம்பிக்கையே. அந்த நம்பிக்கை தான் இப்பவும் கை கொடுக்க, அவள் சொன்னதை அட்சரம் பிசகாது இருவரும் நம்பினர். ஆனால் சமர்த்திதான் கலங்கிப் பொனாள்.

ஒரு மாதிரி புஷ்பாவையும், தயாளனையும் நம்ப வைத்தாயிற்று. ஆனால் அதற்குப் பிறகான வாழ்க்கை. நினைக்கும்போதே அடிவயிறு கலங்கியது.

எப்படி அவனைச் சமாளிக்கப் போகிறாள். திருமணத்திற்குப் பின்பு வாழ்க்கை எப்படி இருக்கும்? தெரியவில்லை. மனம் கிடந்து அடித்துக் கொண்டது. ஒன்று மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்து போனது. உத்தியுக்தனுடனான வாழ்க்கை அவளுக்கு நரகத்தைத்தான் கொடுக்கப்போகிறது என்று.

What’s your Reaction?
+1
7
+1
0
+1
5
+1
0
+1
4
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!