Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-4

4

 

அந்த சம்பவத்திற்குப் பிறகு கனடா வந்த சமர்த்தி, முதல் வேலையாக அந்த உத்தியுக்தன் பற்றிய கட்டுரையை எழுதி ஆதாரத்துடன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க அவருடைய முகத்தில் எதையோ வென்றுவிட்ட பூரிப்பு.

இருக்காதா பின்னே. இந்தச் செய்தியால் அவருடைய பத்திரிகை வியாபாரமல்லவா களைக் கட்டப் போகிறது. தவிர எதிர்க்கட்சித் தலைவர், பிரைட்டன் பத்திரிகை உரிமையாளரின் நெருங்கிய நண்பர் வேறு. பிறகு சொல்லவும் வேண்டுமா?

அதற்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் வில்லியம் நேக்கரின் தூண்டுதலின் பேரில், மறுநாளே உத்தியுக்தன் பற்றிய செய்திகள் படத்தோடு பிரைட்டன் பத்திரிகையில் வெளிவர, அன்று மட்டும் பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தன.

அது மட்டுமா, உத்தியுக்தனுடைய காதல் லீலைகள் உள்ளடக்கிய நிகழ்பதிவை தன்வசம் பெற்றுக்கொள்ள, எதிர்க்கட்சித் தலைவர் அவளோடு பேரம் பேசத் தொடங்கினார்.

பணம் என்றால் பிணமும் வாய்பிளக்குமே. அவளுடைய குடும்ப சூழ்நிலைக்கு இந்தப் பணம் உதவுமானால், அவள் எதற்காகத் தயங்கவேண்டும்.

இது என் குழந்தை, அது நாத்தனார் என்கிற எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், சொந்தக் குழந்தை போல வளர்த்தவர்களுக்காக இதுகூடச் செய்யவில்லையென்றால் எப்படி? அவள் என்ன திருடியா இந்தப் பணத்தைப் பெறுகிறாள். இல்லையே. நல்லவனாக வேடமிட்டு ஊர் மக்களையே ஏமாற்றும் ஒரு கிராதகனை அம்பலம் ஏற்ற இந்தப் பணத்தைப் பெறுகிறாள். நிச்சமாக இது பாவச் சொத்தாக இருக்காது. தவிர செ…’ சாற்றுக்கடன் தீர்க்கக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணியவன், மகிழ்ச்சியாகவே நிகழ்பதிவுகளைக் கொடுக்க அதற்கான பணம் உடனேயே கைமாறியது.

அதற்கான விலை ஒரு மில்லியன் கனடிய டாலர்கள். அம்மாடியோவ்… ஒரு மில்லியன் டாலர்கள். அண்ணனின் கடன்களை கட்டி முடித்து விடலாம். அடைமானத்தில் உள்ள வீட்டை மீட்டு விடலாம். எஞ்சிய பணத்தில் ஐவரின் படிப்புச் செலவைப் பார்த்துக் கொள்ளலாம்… அதன் பிறகு பணத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் எல்லோரும் சந்தோஷமாக வாழலாம். இதோ இப்படி வெளிநாடு செல்ல பணத்துக்காக அஞ்ச வேண்டியதில்லை. அவள் குதூகலமாக நாட்களைத் தள்ள, இவளுடைய புண்ணியத்தால் உத்தியுக்தனின் மறுபக்கம் வெட்டவெளிச்சமானது.

அவன் சார்ந்த படங்கள் என்று ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.

உள்ளம் கவர்ந்த ஒருவன், காதலியல்லாத வேறு ஒரு பெண்ணை அசிங்கமாய் முத்தமிடும் நிகழ்பதிவைக் கண்டு கனடாவே அதிர்ந்துபோனது.

உத்தியுக்தன் காதலிக்குத் துரோகம் செய்தானா… எத்தனை பெரிய அவமானம். அதுவரை அவன் மீது ஒரு வித பிடிப்பிலிருந்த மக்கள், பெரும் அதிருப்தி கொண்டார்கள். விளைவு மக்களின் ஆதரவு கடகடவென்று விழத் தொடங்கியது. எழுபது வீதமாக இருந்த மக்களின் ஆதரவு ஒரு மாதத்தில் வெறும் இருபது விகிதமாகக் குறைந்தது. அது எதிர்க்கட்சிக்கு மாபெரும் கொண்டாட்டமானது.

அந்த மகிழ்ச்சியில் பத்திரிகை உரிமையாளர், சமர்த்தியை அழைத்துப் பாராட்டியது மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும் கொடுக்க, அவளைக் கையில் கூட பிடிக்க முடியவில்லை. அவளுடைய தலையில் தூக்க முடியாத பெரிய பொற்கிரீடமே வைக்கப்பட்டது. அவளும் தரையை விட்டு வழுவி வானில் மிதக்கத் தொடங்கினாள்.

இதற்கிடையில் அண்ணனின் முழுக் கடனையும் அடைத்தாள். வங்கியில் அடமானத்திலிருந்த வீட்டை மீட்டாள். எஞ்சிய பணத்தை அண்ணனின் பிள்ளைகளுக்குப் பிரித்து வங்கியில் போட்டாள். தன் பல்கலைக்கழகக் கடனையும் அடைத்தாள்.

இது எதுவுமே தயாளனுக்கும் புஷ்பாவிற்கும் தெரியாது. அன்று தயாளன் புஷ்பாவின் திருமண நாள்.

அவர்களை வாழ்த்திய கையோடு அவர்களின் கரங்களில் ஒரு உறையைக் கொடுக்க, இருவரும் புரியாமல் அதைத் திறந்து பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ந்துபோய் நம்ப மாட்டாமல் சமர்த்தியை ஏறிட, புஷ்பாவோ கண்கலங்கத் தொடங்கி விட்டார்.

வழிந்த கண்ணீரைக் கூடத் துடைக்க மறந்தவராய் சமர்த்தியை நிமிர்ந்து பார்த்தவர்,

“கண்ணம்மா என்ன இது… இதை எப்படி அடைத்தாய்?” என்று திக்கித் திணறியவர் மீண்டும் அந்தப் பத்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்.

அங்கே வீட்டுக் கடன் முதல் அவர்களுடைய வாகனத்தின் கடன்வரை கட்டி முடிக்கப்பட்டிருந்தது. ஒருபக்கம் மகிழ்ச்சி, மறு பக்கம் குழப்பம் என்று இருவரும் சமர்த்தியை ஏறிட, சமர்த்தியோ புன்னகை முகத்துடன் அவர்களுடைய முகபாவனையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை மறந்து அழத் தொடங்கிய தயாளனுக்கு நீண்ட நேரம் எடுத்தது சுயத்திற்கு வர. இதுவரை காலமும் கடன் என்கிற அடிமை விலங்கு உடைக்கப்பட்டதே. இனி முதலாம் திகதி வந்ததும் ஐயோ கடன் கட்டவேண்டுமே, வீட்டுக் கடனைக் கொடுக்கவேண்டுமே என்று அஞ்சத் தேவையில்லை. எதிலிருந்து கடனை எடுத்து எந்தக் கடனைக் கட்டுவது என்று குழம்பத் தேவையில்லை.

கண்களைத் துடைக்கத் துடைக்கக் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. புஷ்பாவோ பாய்ந்து சமர்த்தியை இறுக அணைத்து,

“என் தங்கமே… எப்படி இத்தனை பணம் உனக்கு வந்தது. ஏழு லட்சத்திற்கும் மேல் கடன் கட்டியிருக்கிறாயே… எப்படிடா…” என்று குரல் கம்மக் கேட்க, ஒரு கணம் தடுமாறினாள். உண்மையை உரைக்க முடியாமல் மெல்லியதாகச் சிரித்துச் சமாளித்தவள்,

“அது… வந்து ஒரு மில்லியன் டாலர்கள் அதிர்ஷ்ட சீட்டு விழுந்தது அண்ணி… சொன்னால் உங்களுக்காகச் செலவு செய்ய விடமாட்டீர்களே. அதுதான் சொல்லாமல் உங்கள் கடன்களைக் கட்டினேன். இப்போது உங்களை பார்க்கும்போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?” என்று உண்மையை மறைத்து மெய்யான மகிழ்ச்சியுடன் கூற அதை உண்மை என்று நம்பிய தயாளன்,

“கடவுளே! என்னம்மா நீ… இப்படி செய்து விட்டாய். பணத்தை இப்படி மொத்தமாக முடித்து விட்டாயே.. உனக்கென்று எடுத்து வைத்திருக்க வேண்டாமா…” என்று வேதனையுடன் கடிய,

“என்னுடையதாக இருந்தால் என்ன, உங்களுடையதாக இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான் அண்ணா…” என்றவள் அருகே இன்னும் கலங்கிக்கொண்டிருந்த புஷ்பாவைத் தன்னோடு இறுக அணைத்து அவர் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு

“ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போது என் பசியாற்றியது நீங்கள்தானே அண்ணி… அன்றிலிருந்து இன்றுவரை எனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள்… உங்களுக்காக இதைக் கூடச் செய்யவில்லையென்றால் உங்கள் வளர்ப்பிற்கு அர்த்தமேயில்லாமல் போயிருக்கும்.” என்றாள் கண்டிப்புடன். அப்படியிருந்தும் அவர்கள் சமாதானம் ஆகாமல் கண்களைக் கசக்க, இப்போது கோபத்தோடு இருவரையும் பார்த்து,

“இதோ பாருங்கள் இதற்கு மேல் அழுதால்… அதுவும் இந்த நல்ல நாளில் அழுதால் எனக்குக் கெட்ட கோபம் வந்துவிடும்… இந்த விநாடியில் லிருந்து நான் செய்ததை நீங்கள் இருவரும் மறந்துவிட வேண்டும்?” என்று கறாறாக கூறத் தலையை ஆட்டினாலும் இருவருமே குற்ற உணர்ச்சியில் தவித்துத்தான் போனார்கள்.

அவளுடைய கடனை ஒரு அண்ணனாய் அவரல்லவா அடைத்திருக்க வேண்டும். ஆனால் இங்கே அவர் கடனை அவள் அடைத்துவிட்டாளே. யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு தங்கை.

அண்ணனின் முகத்தை வைத்தே அவர் என்னோட்டத்தைப் புரிந்துகொண்ட சமர்த்தி,

“சிவ சிவா…! போதும்… போதும்… இதற்கு மேல் அழுதால் வீடு தாங்காது… நீங்கள் எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டால், இன்று மாலை நம் எல்லோரையும் உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுங்கள்… அது போதும்…” என்று கூற, புஷ்பா தன்னை மறந்து மெல்லியதாகச் சிரித்தார்.

“சரி… சரி… மிச்சப் பணத்தையாவது உன் பெயரில் பத்திரமாகப் போட்டு வைத்திருக்கிறாய் தானே…?” என்று அன்னையாய் மாறிக் கேட்க, அசடு வழிந்தவள்,

“அது வந்து… அண்ணி… நம்முடைய விதற்பரைக்குப் பல்கலைக் கழகம் தொடங்குகிறது… இப்போதே கடன் எடுத்தால் எப்படிக் கட்டி முடிப்பதாம். அதனால் அவள் பெயரிலும், வசந்தனுக்கு வைத்தியர் ஆகவேண்டுமாம், அதனால் அவனுக்காய் கொஞ்சம், நம் ரகு வக்கீலுக்குப் படிக்கவேண்டும் என்றான்… அதனால் அவனுக்காகக் கொஞ்சம், ரஞ்சனி அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த பாடங்கள் படிக்க என்று அவளுக்குக் கொஞ்சம் போட்டு வைத்து இருக்கிறேன்…” என்றதும் புஷ்பா அவளைப் பார்த்து முறைத்தார்.

“உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? எதற்கு இப்போது அவர்களுக்குப் பணத்தைப் போட்டாய்… உன் பெயரில் பணத்தைப் போடுவதற்கு என்ன. உன்னுடைய பல்கலைக்கழகப் படிப்பிற்காக வாங்கிய கடனை அடைத்திருக்கலாமே.. அதை உன் பெயரில் போட்டால் உன் திருமணத்திற்கு உதவுமே.. உன்னையார் இப்படி அதிகப்பிரசிங்கித்தனமாக எல்லோர் பெயரிலும் பணம் போடச்சொன்னது… கொஞ்சமாவது யோசிக்கமாட்டாயா” என்று திட்டத் தன் அண்ணியை இறுக அணைத்துக் கொண்டவள்,

“ஐயோ அண்ணி திட்டாதீர்கள்… நானெல்லாம் அந்தளவுக்கு நல்லவளில்லை… இதுவரை எடுத்த கடன்களை அடைந்துவிட்டு மிச்சத்தில்தான் இதெல்லாம் செய்தேன் போதுமா..” என்று குறும்புடன் கூற, புஷ்பாவோ உதடுகளை சுளித்து எது ஏழு லட்சம் உனக்கு மிச்ச பணமா… உன்னை…” என்று அடிப்பதற்குக் கரத்தைத் தூக்கிவிட்டுப் பின், அவளை இழுத்துத் தன்னோடு அனைத்து உச்சி முகர, தயாளனும் பங்கிற்கு நிம்மதியோடு தன் தங்கையை அனைத்துக்கொண்டார்.

ஆனாலும் தங்கையின் பணத்தை எதிர்பார்த்தால், அவளை வளர்த்ததற்கான கூலியாக அது மாறிவிடாதா? அவளை பெற்ற குழந்தையாக வளர்த்ததற்குரிய அர்த்தமே இல்லாது போய்விடுமே.அதனால் புஷ்பாவின் அறிவுரைப்படி தயாளனும் புஷ்பாவுமாக தங்கள் வீட்டை சமர்த்திக்குத் தெரியாமலே அவளுடைய பெயரில் உயில் எழுதி வைத்தனர்.

இதற்கிடையில் உத்தியுக்தனின் அரசியல் வாழ்க்கை கவிழ்ந்த நிலையில், மக்களின் அவமானப் பார்வைக்கும், அவர்களின் அதீத கோபத்திற்கும் ஆளானவனாக நியாயமான முறையில் கட்சியில் இருந்து விலகித் தன் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

அது மட்டுமன்றி அவனுடைய இரட்டை வாழ்க்கையை அறிந்துகொண்ட காதலி அவனைத் தூசு தட்டுவதுபோலத் தட்டிவிட்டுச் செல்ல, நிச்சயம் செய்யப்பட்ட திருமணமும் ரத்தானது. போதாததற்கு அவனுடைய வியாபார சாம்ராஜ்யமும் தலைகீழானது.

வெளியே ஒரு வாழ்க்கை, உள்ளே இன்னொரு வாழ்க்கை வாழ்பவன், எப்படி வியாபாரத்தில் உண்மையாக இருக்க முடியும் என்கிற எண்ணமோ என்னவோ, அதிகமான ஒப்பந்தங்கள் இரத்தாகின. இதையெல்லாம் செய்திகளாக அறிந்தவளுக்கு அவன் மீது இரக்கமே வரவில்லை. வினை விதைத்தால் அதை அறுவடை செய்துதானே ஆக வேண்டும். செய்யட்டும் என்று எண்ணியவளாய் அவனுடைய நினைவுகளை முற்றாக ஒதுக்கினாள்.

ஒருவனுடைய வாழ்க்கையை முழுதாகக் கேள்விக்குறியாக்கிவிட்டோம் என்கிற சிந்தை கடுகளவும் இல்லாதவளாய் காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப பயணிக்க, அதன் பின் அவளுடைய வாழ்க்கை முறை மிகவும் சுவையாகப் போகத் தொடங்கியது. வேலை, வேலை விட்டால் வீடு. அண்ணா, அவன் குடும்பம், என்று சந்தோஷமாகவே கழிந்தது.

அடுத்தடுத்த மாதங்களில் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் வில்லியம் நேக்கர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற, அவரைப் பேட்டி காணும் பெரு வாய்ப்பும் இவளுக்குக் கிடைத்தது.

அவரைப் பேட்டி கண்டுவிட்டு முடிந்தவரை அவரைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து கட்டுரை எழுதிக் கொடுத்துப் பெயரும் புகழும் சம்பாதித்தாள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழிந்த நிலையில், கனடாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்கார வரிசையில் இருக்கிற ஒரு செல்வந்தரைப் பேட்டி காணவேண்டி இருந்தது.

அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக, இணையத்தில் தேடியபோதுதான் அவள் கண்களுக்கு அந்தப் படம் தட்டுப்பட்டது.

முதலில் அலட்சியமாக அந்தப் படத்தைக் கடந்து வந்தவளுக்கு ஏதோ உறுத்த, மீண்டும் அந்தப் படத்தைத் தேடித் சென்று உற்றுப் பார்த்தாள்.

அது அவள் குறிப்பெடுக்கும் செல்வந்தனுடைய பதினாறு அல்லது பதினேழு வயது படம். அவருக்கு அருகாமையில் அவருடைய தோள்களில் கரங்களைப் போட்டவாறு அதே வயதுடைய இரு விடலைகள் நின்றிருந்தனர். இருவரும் ஒரே அச்சில் வார்த்ததுபோல மாற்றமில்லாத உருவ அமைப்புடன், சிரித்தும் சிரிக்காமலும் தலையைச் சற்று மேலே உயர்த்திக் கீழ்க்கண்ணால் பார்த்தவாறு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஏனோ அந்தப் படம் அவளைச் சற்று உறுத்த அந்தப் படத்திற்குரிய இணையத்திற்குள் நுழைந்து தேடிப் பார்க்க அவளுக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அந்தப் படத்திற்குக் கீழே ஆங்கிலத்தில்,

“பெரும் செல்வந்தர் டேவ் மக்கின்டயரின் மகனான ஜேமி மக்கின்டயரின் பதினாறாவது பிறந்தநாளின் போது அவருடைய நண்பர்களான உத்தியுக்தன் ஆதித்தியன் மற்றும் அவருடைய இரட்டையரான அவ்வியக்தன் ஆதித்தியன்” என்றிருக்க ஒரு கணம் மூச்சே நின்றுபோனது சமர்த்திக்கு.

நம்ப மாட்டாமல் இரு உருவங்களையும் மாறி மாறிப் பார்த்தாள். இருவருக்குமிடையில் இருந்த ஒரே ஒரு வித்தியாசம், ஒருவன் மற்றவனை விட ஒரு அங்குலம் குறைவாக இருந்தான். அது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. ஒருவனுக்குச் சற்று ஒடுக்கமான முகமாக இருக்கையில் மற்றவனுக்குக் கன்னம் சற்று உப்பி இருந்தது. அது கூட உற்றுப் பார்த்தால்தான் தெரியும். அதைத் தவிர இதில் யார் உத்தியுக்தன், யார் அவ்வியக்தன் என்று இனம் காண்பது மிக மிகச் சிரமமே. அடக் கடவுளே. உத்தியுக்தனுக்கு ஒரு இரட்டைச் சகோதரன் இருக்கிறானா? இது எப்படித் தெரியாமல் போனது. ஒருவேளை அன்று இலண்டனில் பார்த்தது உத்தியுக்தனின் சகோதரனாக இருக்கலாமோ?’ என்று எண்ணியவள் அவசரமாகத் தன் தலையை மறுப்பாகக் குலுக்கிக் கொண்டாள்.

“இல்லை.. நிச்சயமாக இல்லை.. அன்று கண்டது உத்தியுக்தனைத்தான்! நிச்சயமாக அவனைத் தான்…!” என்று உருப்போட்டவாறு வேறு படங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தாள். அந்த ஒரு படத்தைத் தவிர வேறு படங்கள் எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை.

அவசரமாக அவ்வியக்தன் ஆதித்தியன் என்று தட்டித் தேடிப்பார்க்க, அவனைப் பற்றிய தகவல்கள் ஒருசில வெளியாகியிருக்க அதைப் படித்தவளின் முகம் வெளிறிப்போனது.

அவ்வியக்தன் ஆதித்தியன், அவுஸ்திரேலியாவில் கொடிகட்டிப்பறக்கும் இளம் தொழிலதிபன். தனியாக வசிக்கும் அவன், பெண்கள் விடயங்களில் சற்றுத் தாறுமாறானவன்… என்கிற செய்தியைப் படித்ததும் இவள் உடலிலிருந்த இரத்தமே வடிந்து சென்ற உணர்வு.

அப்படியானால் அன்று ஒரு பெண்ணுடன் கண்டது, அவனுடைய தம்பியாக இருக்குமோ?… நான்தான் தவறுதலாக அவனை உத்தியுக்தன் என்று எண்ணி, செய்தியைப் பிரசுரித்து விட்டேனோ… ஆனால் அன்று லண்டனில் அந்த விடுதியில் வைத்து, தன் அரசியல் வாழ்க்கையை வீழ்த்த வந்ததாக நினைத்துத் திட்டினானே… அவன்தானே ஒரு சீனப் பெண்ணோடு இடைகோர்த்து முத்தமெல்லாம் கொடுத்தான். ஒருவேளை இங்கிலாந்து வந்த அவனைக் காண்பதற்காக அவ்வியக்தன் தன் பெண் தோழியோடு வந்திருப்பானோ. அது புரியாமல், அவனையும் இவனையும் ஒன்றாக நினைத்துத் தவறாகப் புரிந்துகொண்டு கட்டுரை எழுதினோமோ? இதை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஆனாலும் தன் மீது பழி போட விரும்பாதவளாக, பதட்டத்துடன் மேலும் அவ்வியக்தன் பற்றிக் குடையத் தொடங்க அவுஸ்திரேலிய விழா ஒன்றில் அதே சீனப்பெண்ணை அணைத்தவாறு நடனமாடிய படம் ஒன்றைக் கண்டு மேலும் அதிர்ந்து போனாள் சமர்த்தி.

அப்படியென்றால் அவ்வியக்தனுக்குப் போட வேண்டிய தொப்பியைத் தவறுதலாக மாற்றி உத்தியுக்தனுக்குப் போட்டுவிட்டாளா என்ன? ஓ காட்… நம்ப மாட்டாமல் மீண்டும் மீண்டும் இருவரைப் பற்றியும் கிண்டித் துழாவத் தொடங்க, அந்த அவ்வியக்தன் பற்றிக் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கையில் அவள் தவறு மொத்தமாய் புரிந்துபோனது.

அதுவும் அவ்வியக்தன் ஒரு பெண்ணில்லை பல பெண்களோடு நெருக்கமாக நின்று படமெடுத்து இருந்தான். அதில் எந்த வித கூச்சமோ சங்கடமோ எதுவுமே அவனிடம் தெரியவில்லை. இதுதான் நான் என்கிற இறுமாப்புதான் அந்த அவ்வியக்தனிடம் தெரிந்தது.

இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பிரித்துப் பெருக்கிப் பார்த்ததில், தவறு செய்யாத தவறு செய்யாதவனின் மீது கரும்புள்ளி செம்புள்ளி குத்தியாயிற்று என்பது புலப்பட்டது.

ஓ காட்… என்ன காரியம் செய்துவிட்டாள். இருவரின் உருவ ஒற்றுமையும் அவளைத் தவறு செய்ய வைத்துவிட்டதே.. அந்தக் கட்டுரையை எழுதிக் கொடுக்க முதல், சற்று நிதானித்து இருக்கலாமோ? இன்னும் தீர விசாரித்திருக்கலாமோ. கட்டுரை கொடுக்கவேண்டும் என்கிற அவசரமும், அவளை பற்றி வானளவாகப் புகழ்வார்கள் என்கிற பரபரப்பும், இதனால் வர இருக்கும் பணமும் அவள் புத்தியை மழுங்கடித்துவிட்டதா என்ன?

அவளுடைய அவசரப் புத்தியால், ஒன்டாரியோ மாகாணம் மிகச்சிறந்த ஒரு அரசியல் தலைவரை இழந்தது மட்டுமல்லாமல், அவளுடைய தப்பான கட்டுரையால் அவனுடைய வாழ்க்கையும் அல்லவா கேள்விக்குறி ஆகிவிட்டது. சே! இப்படித் தவறு செய்துவிட்டோமே, என்று நினைத்து வருந்தியவளாகத் தன் அறைக்குள் அங்கும் இங்குமாக நடந்தாள்.

செய்த தவறை எண்ணி மனம் வருந்தினால் அது மனிதன். அதை உணர்ந்து மன்னிப்பு வேண்டி நின்றால் அது மாமனிதன். அதையே பிரயாச்சித்தம் செய்ய நினைத்தால் அது கடவுள். சமர்த்தி கடவுளா என்ன? அவளும் சாதாரண மனுஷி தானே. ஆசா பாசங்கள் கொண்ட மிகச் சாதாரண பெண்தானே.

இப்போது அவள் வருந்தி மன்னிப்பு கேட்டால் அவள் செய்தவை எல்லாம் இல்லை என்றாகி விடுமா? இல்லை இவள் மன்னிப்பு வேண்டி பிராயச்சித்தம் செய்ய முயன்றால்தான் அவன் பாராட்டி விருது கொடுக்கப்போகிறானா? இவள் செய்ததை அறிந்தால் கழுவில் ஏற்றிவிட மாட்டான்? அவள் செய்த புண்ணியம் அவள் யார் என்று அவனுக்கு தெரியாது. தெரியவும் போவதில்லை. கட்டுரை கூட இவளுடைய சொந்த பெயரில் இல்லை. பிறகு எதற்கு கலங்கி வருந்த வேணும்.

அவ்வியக்தனைக் கண்டதும் உத்தியுக்தன் என்று நினைத்து அவனோடு வந்த பெண்ணையும் இணைத்துப் படம் எடுத்தாள். அப்போது அவள் மனதிலிருந்தது ஒன்டாரியோ மக்களின் நலன் மட்டும் தான். அதனால்தான் உத்தியுக்தன் என்று நினைத்து அவ்வியக்தனைப் பற்றி எழுதிவிட்டாள். உண்மை தெரியாது எதிர்க்கட்சித் தலைவரும் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, அதை அவளும் தன் தேவைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள். அவ்வளவுதான். இதையே வெளியே எடுத்துச் சென்றால், இத்தனை நாட்களாக அவள் பெற்ற பெயருக்கும் புகழுக்கும் மதிப்பில்லாது போய்விடுமே. எதை இழந்தாலும் அதை எப்படி இழப்பாள்.

தவிர அவள் உண்மையை விளப்பப் போய், அதுவே அவளுக்குப் பாதகமாகிவிட்டால்? வில்லியம் நேக்கரின் கோபத்திற்கு ஆளாகிவிட்டால். அது அவளை மட்டும் பாதிக்காது! அவளுடைய குடும்பத்தையும் அல்லவா அது பாதிக்கும்!

எப்போதும் போல, செய்த தவற்றை நியாயப் படுத்துபவளாக,

‘இதில் என் தவறு என்ன? அவன் தன் குடும்பம் சார்ந்த செய்திகளை மறைமுகமாக வைத்திருந்தது அவனுடைய குற்றம். அவளென்ன கண்டாளா ஒரே உருவ ஒற்றுமையில் இருவர் இருப்பார்கள் என்று? அவன் தம்பியை அவன் என்று நினைத்து கொஞ்சமே கொஞ்சமாக ஆட்டம் காண வைத்து விட்டோம். வாழ்க்கை நொடிந்து போனதே என்று அவன் தற்கொலையா செய்துவிட்டான்? உயிரோடு நன்றாகத்தானே இருக்கிறான். பிறகென்ன? தூசு தட்டுவது போல தன் குற்ற உணர்ச்சிகளை தட்டி விட்டவளாய், தன காரியத்தை செய்யத் தலைப்பாட்டாள்.

மனிதன் எத்தனை பெரிய சுயநலவாதி. அது பிறரின் தவற்றைத்தான் சுட்டிக்காட்டுமே அன்றித் தன் தவறை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதே. அதை நியாயப்படுத்திச் சப்பைக் கட்டுக் கட்டி தன் மீது குற்றமில்லை என்று நிறுவத்தானே பார்க்கும். தன் நியாயத்துக்காய் தவறினைக் கூட நியாயப்படுத்துமே.

ஒருவாறு தன்னைச் சமாதானப் படுத்தியவள் கிட்டத்தட்ட ஒரு கிழமை மெல்லிய குற்ற உணர்ச்சியோடு அலைந்து திரிந்தாள். அதன் பின் அந்த உத்தியுக்தனை சுத்தமாகவே மறந்து போனாள்.

நீரோடையாகச் சென்றுகொண்டிருந்த அவனது வாழ்க்கையில் எத்தகைய பேரழிவை ஏற்படுத்தினோம் என்கிற அறிவு இல்லாமல், அதைப் பற்றிய துளி அக்கறையும் கொள்ளாது வாழ்க்கையைச் சுவாரசியமாகவே கழிக்கத் தொடங்கினாள் சமர்த்தி.

 

What’s your Reaction?
+1
10
+1
13
+1
3
+1
0
+1
4
+1
4

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!