Fri. Sep 20th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 17

17

“மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்…” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன். அந்தக மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல், கால்கள் நடுங்கி மடங்கத் தன்னை நிலைப்படுத்துபவனாகச் சுவரோடு சாய்ந்து நின்ற உத்தியுக்தனின் விழிகள் இறுக மூடிக்கொண்டன.

அவன் கேட்டது நிஜம்தானா? அவனுடைய தேவதை உயிர்த்து விட்டதா? அவனுடைய உலகம் மலர்ந்து விட்டதா? தள்ளாடத் தன் சகோதரனைப் பற்றிக்கொண்ட அவ்வியக்தன்,

“ஹே… ப்ரோ… ரிலாக்ஸ்…” என்றான்.

தன்னை அணைத்த அவ்வியக்தனின் கரத்தை இறுகப் பற்றி மென்மையாகச் சிரித்துத் தலையை ஆட்டி,

“இனி சரியாகிவிடுவேன் அவ்வி… இனி என்னால் எதையும் சமாளிக்க முடியும்… எதையுமே…” என்றவனுக்கு இப்போது மகிழ்ச்சியில் நிம்மதியில் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளிலேயே இறப்பைக் காட்டி, உயிர்ப்பைக் கொடுக்க முடியுமா.

எல்லையில்லா நிம்மதியுடன், சமர்த்தியின் அறைக்குள் நுழைந்தவனுக்கு மீண்டும் கால்கள் நடுங்கின.

அங்கே தயாளனும் புஷ்பாவும் மட்டும் அவளருகே நின்றிருந்தனர்.

அது அவசர சிகிச்சைப் பிரிவு என்பதால் அதிக நேரம் யாரும் நிற்க முடியாது என்பதால், அங்கே வந்த உத்தியுக்தனைக் கண்ட, தயாளனும் புஷ்பாவும் நிம்மதியுடன் அவனை நெருங்க, உத்தியுக்தனை மெல்லிய தயக்கத்தோடு பார்த்த தயாளனுக்கு எப்படி அவனை ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. சற்றுத் தயங்கி நிற்க, அதைப் புரிந்துகொண்டவனாய், மெல்லியதாய் புன்னகைத்த உத்தியுக்தன்,

“என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் தயாளன்… நான் சரியாகிவிடுவேன்…” என்றுவிட்டு அவர்களை அனுப்பிவிட்டுத் தன் மனைவியை நெருங்கினான்.

சோர்வுற்ற விழிகளை மெதுவாகத் திறந்து பார்த்த சமர்த்திக்கு அந்த நிலையிலும் தன் கணவனைக் கண்டதும் விழிகள் மின்னின. பேசுவதற்காக முயன்றவள் முடியாமல் திணற, இரத்த அழுத்தம் ஏறத் தொடங்கியது. ஆனாலும் அவளுக்குப் போட்ட மருந்துகள் அந்த அழுத்தத்தை அடக்கி வைத்தன.

சிரமப்பட்டு விழிகளைத் திறந்து திறந்து மூடியவள், அதன் பின் உறங்கிப்போனாள். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் விழிப்பதும் விழி மூடுவதுமாக இருந்தாள் சமர்த்தி.

இதற்கிடையில் உத்தியுக்தனும், அவன் தம்பியும் மருத்துவமனையில் அடித்துக்கொண்ட செய்தி பத்திரிகைகளில், சஞ்சிகையில் பக்கம் பக்கமாக வந்தன. கூடவே சமர்த்தியின் அதிவேக ஓட்டத்திற்கும், விபத்து நடந்ததால் ஏற்பட்ட விபரீதத்திற்குமாகக் காவல்துறை விசாரணையில் இறங்கியது. உத்தியுக்தனையும் பல வகையில் விசாரித்தது. அதன் பின் அவ்வியக்தன் அந்தச் சூழ்நிலையைத் தன் கரங்களில் எடுத்துக்கொண்டான்.

அன்று தன் சிகிச்சையை முடித்துக்கொண்டு, அவளிருந்த அறை நோக்கி வந்தான் உத்தியுக்தன். அங்கே அவளுக்குத் தேவையில்லாத குழாய்களை நீக்கியிருந்தார்கள். முக்கியமாக வாய்க்குள் அடைத்து இருந்த அந்தப் பெரிய குழாயைக் காணவில்லை. அதைப் பார்த்தபோதே பெரும் பலம் வந்துவிட்ட உணர்வு.

கடந்த நான்கு நாட்களாக மயக்கமும் விழிப்புமாக இருந்தவள், அன்றுதான் ஓரளவு சுயம் பெற்றிருந்தாள் போலும். இவனுடைய வரவை உணர்ந்து விழிகளைத் திறந்தவளுக்கு ஒரு பக்கம் சோர்வு அவளை இழுத்தாலும், மறு பக்கம் தன் முன்னால் நின்றவனைப் பார்க்காது இமைகளை மூடக்கூடாது என்கிற வேகமும் எழுந்தது.

கூடவே, அவன் செய்த துரோகம் நினைவுக்கு வர, இந்தக் கணமே எழுந்து அவன் சட்டையைப் பற்றி உலுப்பி ஏன் பொய் சொன்னாய் என்று கேட்கவேண்டும் போல வெறி வந்தது.

அவள் தன்னையும் மறந்து எழ முயல, உடல் ஒத்துழைத்தால் அல்லவோ. வலியில் உயிர்போகச் செய்ய, விழிகளை அழுந்த மூடி அந்த வலியை அடக்க முயன்றாள்.

முன்பு சிறிய வலியைக் கூடத் தாங்காதவளுக்கு இந்தப் பெரிய வலி, மனதில் ஏற்பட்டிருந்த வலிக்கு முன்னால் காணாமல் போனது.

எப்படியோ சமாளித்தவளாய் விழிகளைத் திறந்தவளுக்கு உத்தியுக்தனும் நோயாளர்களுக்கான ஆடையில் இருப்பது உறுத்தியது. கூடவே கழுத்தில் பெரிதாகப்போட்டிருந்த கட்டைக் கண்டு புருவங்களைச் சுருக்கியவள்,

“என்ன.. என்ன ஆ.. ஆயி..ற்று…” என்று சிரமப்பட்டுக் கரத்தைத் தூக்க முயன்றவள் அது அசைய மறுக்க, எரிச்சலுடன் முயற்சியைக் கை விட்டவளாக, அவனைப் பார்க்க, அவள் தன் ஆடையையும், கழுத்திலிருந்த கட்டையும்கண்டு கேட்கிறாள் என்று புரிய, நகைத்தவன், அவளை நோக்கி வந்து, அவள் படுக்கையில் கிடைத்த இடைவெளியில் அமர்ந்தவாறு,

“ப்ச்… நத்திங்… சின்ன விபத்து…” என்றான் அவள் முகத்தைத் தாபத்துடன் பார்த்து.

கடந்த நான்கு நாட்களாக விழித்துத் தன்னோடு பேசமாட்டானா என்று ஏங்கியவன் அல்லவா. அந்த ஏக்கம் தளர்ந்த மகிழ்ச்சியில் முகம் மலர, இவளுக்கோ முகத்தில் மெல்லிய திருப்தி.

கடவுள் இருக்கிறான். செய்த தவற்றுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறான். ஆனால் காயங்கள் கொஞ்சமாக இருக்கிறதே… நான் மட்டும் இப்படிப் படுத்திருக்கிறேன்… அவன் மட்டும் குத்துக் கல்லாட்டமாக நிற்கிறானே.. கடவுளுக்குத்தான் எத்தனை ஓர வஞ்சனை… அந்த நிலையிலும் ஆத்திரத்துடன் நினைத்தவள், தன்னவனைப் பார்த்து,

“இது… உ..ங்…க..ளுக்..குப் போ..தாது…” என்றாள் பற்களைக் கடித்தவாறு. அதைப் புரிந்து கொண்டவனாய், மேலும் சிரித்தவன், அவள் கன்னத்தில் தன் உள்ளங்கையைப் பதித்து,

“ஐ நோ பம்கின்…” என்றான், உள்ளே எழுந்த வலியை வெளிக்காட்டாது. இவளுக்கோ கண்கள் குளம் கட்ட,

“ஐ… ஹேட் யு…” என்றாள் அத்தனை கோபத்தையும் மொத்தமாய்ச் சேர்த்து.

“நோ வொன்டர்…” இப்போதும் அவனுடைய விழிகள் காதலுடன்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னும் அவள் உயிரோடு கரங்களுக்குள் இருக்கிறாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை.

அவனைப் பரிசோதித்த வைத்தியர், இனி உயிருக்குப் பயமில்லை என்று கூறியபோது, அவன் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

அவனுக்கு வேண்டியது எல்லாம் உயிரோடு இருக்கும் சமர்த்தி மட்டும்தான். இதோ இப்போது அவள் திட்டுவது கூட அவனுக்குப் பாராட்டு மழை போலவே தோன்றியது. அவனை அடித்தால் கூட அவனுக்கு அது தோற்றாது. எப்படியோ அவள் உயிரோடு இருக்கிறாள். அது போதும் அவனுக்கு.

“ஐ விஷ் டு கில் யு…”

“நட் நவ்… லேட்டர்…” என்றவன், காதலில் வெடித்துவிடும் இதயத்தைச் சமாளிக்கத் தெரியாமல், கலைந்த அவள் கூந்தலை ஒதுக்கிவிட்டவாறு அவள் முகத்தையே இமைக்காது பார்த்தான்.

“நீங்கள் இப்படி என்னைத் தொடுவது பிடிக்கவில்லை…” என்று திக்கித் திணற,

“அப்படியானால் முத்தமிடுகிறேன்…” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். பின் கன்னத்தில் முத்தமிட்டான், தடித்துக் கண்டி வீங்கிய உதடுகளில் வலிக்காமல் முத்தமிட்டான். அப்படியே கீழிறங்கிக் கழுத்தில் முத்தமிட்டான். அதற்கு மேல் தாங்க முடியாதவனாக, அவளை அணைத்தவாறு சற்று நேரம் அப்படியே கிடந்தான். மெல்லியதாய் குலுங்கிய அவன் உடலைக் கண்டு, அதற்கு மேல் கோபப்பட முடியாமல், உயர மறுத்த கரத்தை வெறுத்தவளாக,

“கை… கையைத் தூக்க முடியவில்…லையே… ஏ… ஏன்…” என்று சந்தேகம் கேட்க, இப்போது அவள் அணிந்திருந்த ஆடையிலேயே தன் கண்களைத் துடைத்தவன், நிமிர்ந்து அவளைப் பார்த்து,

“ஒன்றுமில்லை… எல்லாம் பழையது போலச் செயல்படச் சற்று நாட்கள் எடுக்குமாம். அதுவரை எந்த முயற்சியும் செய்யாமல் இரு…” என்றவனுக்கு ஒரு வேளை அவளால் நடக்கவே முடியாது போய்விடுமோ, அவளால் அசையவே முடியாது போய்விடுமோ என்று இம்மியும் வருந்தினானில்லை.

அவனுக்கு வேண்டியது அவளுடைய வாய் மட்டும்தான். அவனை என்நேரமும் திட்டிக் கொண்டிருப்பதாக இருந்தால்கூட அவள் அருகே… மிக மிக அருகே வேண்டும்… உறங்கும்போது அவள் மார்பில் சுருண்டு படுத்து உறங்க வேண்டும். அவ்வளவுதான் அவன் வேண்டுவது. அதை மீறி எதற்கும் அவன் அதீத ஆசைப்படவில்லை.. அவன் அவள்குழந்தை இது போதும்… வேறு எதுவும் தேவையில்லை… எதுவுமே…

“எத்தனை நாட்…கள் எடுக்கு…மாம்?” என்று கேட்டபோதே குரலின் பலவீனத்தைக் கண்டு கலங்கியவனாய்,

“ஹே… அதுவா முக்கியம், எப்போது சரியாக வேண்டுமோ, அப்போது சரியாகும்… அதை விடு… இப்போது உனக்கு எப்படி இருக்கிறது?” என்றான். அதைக் கேட்டதும் உதடுகளைப் பிதுக்கியவள்,

“வ… வலிக்கிறது…. உடம்பு முழுவதும் வலிக்கிறது.” என்று திணறியவாறு கூற, இவனுடைய இதயத்தில் இரத்தமே கசிந்தது.

“இட்ஸ் ஓக்கே… பேபி… யு வில் பி ஆல் ரைட்… ஐ ப்ராமிஸ் யு…” என்றவனின் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்க, அப்போதுதான் சமர்த்திக்குக் குழந்தையின் நினைவு வந்தது.

“கு… குழந்தை… எப்படி… எப்படி இருக்கிறது… அதற்கு… ஒ… ஒன்றும்… இ…ல்லை…தானே…” கேட்கும்போதே தூக்கம் கண்களைச் சுழற்றியது. என்ன உணர்வது, என்ன தெளிவது என்று எதுவும் புரியாமல் மீண்டும் உறங்கிப்போகத் தன் மனையாளின் தலைமுடியை நீண்ட நேரமாக வருடிக்கொண்டே இருந்தான் உத்தியுக்தன்.

அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவு தெளிவாகப் பேசத் தொடங்கியிருந்தாள் சமர்த்தி. விழிகளைத் திறக்கும்போதே குழந்தையின் நினைவுதான் அவளுக்கு.

தன்னருகே அமர்ந்திருப்பவனை வைத்தே அது உத்தியுக்தன் என்பதைத் தெரிந்துகொண்டவளாக,

“எ… என்ன குழந்தை…?” என்றாள். இவள் குரல் கேட்டதும், விரைந்து அவளுக்கு அருகே அமர்ந்தவாறு,

“தேவதை… உன்னைப் போல் அழகிய தேவதை…” என்றவனுக்குக் குரல் கமறியது. விழிகள் பளிச்சிட்டவள். பின் முகம் கசங்க,

“அதற்கு… ஒன்றும்… ஒன்றுமில்லையே…” என்ற போது கால்களுக்குள் எதுவோ வடிந்து சென்றது இப்போதும் நினைவுக்கு வர உடல் உதறியது, அவனோ மறுப்பாகத் தலையை அசைத்து,

“நம் குழந்தை நன்றாக, மிக நன்றாகத்தான் இருக்கிறது… நம்பு…” என்று சமாதானப்படுத்த முயன்றாலும், அதை நம்பும் நிலையில் அவள் இல்லை.

எத்தகைய பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டாள் என்று அவளுக்குத் தெரியாதா என்ன? இவளுக்கே இந்த நிலை என்றால், ஒழுங்காக உள்ளுறுப்புகள் வளராத குழந்தை எப்படித் தாக்குப் பிடித்திருக்கும். இல்லை இவன் பொய் சொல்கிறான். வேதனையில் உடல் பொருள் ஆவி அணைத்து சிதைந்த உணர்வில் வெடித்தவாறு அழுகை கிளம்ப, திடீர் என்று இரத்த அழுத்தம் எகிறியது. உடல் தூக்கிப் போட்டது. மறுகணம் அவளுடைய கணினி போட்ட சத்தத்தில் தாதி ஓடி வந்தார். உடனே அவளை அமைதிப்படுத்த ஒரு ஊசியை ஏறிக்கொண்டிருந்த மருந்துப் பைக்குள் செலுத்த, அடுத்த கணம் விழிகளை மூடினாள் சமர்த்தி.

அன்று மாலை சற்றுத் தெளிந்திருந்தாள் சமர்த்தி. எந்த உணர்வும் உள்ளே தோன்றவில்லை. மனம் அமைதியடையவும், பதட்டமான செய்திகளை நரம்புகள் மூளைக்கு அனுப்பாதிருக்கவும் மருந்துகள் இடப்பட்டிருக்கிறதோ? தெரியவில்லை. அழுகை வரவில்லை. பயம் தோன்றவில்லை. தவிப்புத் தெரியவில்லை. ஆனாலும் புத்தி குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று அடம் பிடித்தது. அப்போதும் தள்ளி அமர்ந்திருந்த கணவனிடம்,

“நான்… நான்… பார்க்க வேண்டும்… என் குழந்தையைப் பார்க்க வேண்டும்…” என்றாள் திணறலாய்.

முன்பு குழந்தையின் நினைவில் துடித்த தன் மனைவியின் நினைவில், உள்ளம் கலங்கியவனாக,

“இப்போது வேண்டாம் பம்கின்… கொஞ்ச நாட்கள் போகட்டும். உன் உடல் நிலை ஒரு நிலைக்கு வரட்டும்… என்று கூற, இவளோ எங்கோ வெறித்தவாறு,

“நா… நான் பார்க்க…” என்றவள் எழுந்த வலியை அடக்க முடியாமல் தவித்து எதையோ விழுங்கி நிலைப்படுத்தியவாறு, “நான்…. கு… குழந்தையை… பார்… பார்க்கவேண்டும்…” என்றாள் மீண்டும்.

நெஞ்சமெல்லாம் தவித்தது இவனுக்கு. பெற்றவள் குழந்தையைப் பார்க்காதிருப்பது எதனை பெரும் அவலம். தவிப்புடன் தன் மனைவியின் கன்னத்தைப் பற்றியவன்,

“பார்க்கலாம்… கொஞ்சம் உன் உடல் நலம் பெறட்டும் சதி… அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்…” என்றபோது மருந்தின் வீரியத்தையும் மீறி விம்மிவிட்டாள் சமர்த்தி.

மருந்தால் அணை கட்டக் கூடிய வலியா அன்னையுடைய வலி? தன் மனைவி படும் துயரத்தைக் காணும் சக்தி இல்லாதவனாய், எழுந்தவன் தன் கலக்கத்தைக் காட்டப் பிடிக்காமல்,

“நா… நான் டாக்டரைக் கண்டுவிட்டு வருகிறேன்…” என்று வெளியேறியபோது உத்தியுக்தனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை.

அவன் தேவதை படும் அவஸ்தையைக் கண் கொண்டு அவனால் பார்க்க முடியவில்லை. இப்படிக் குழந்தைக்காக அழுகிறாளே. குழந்தையின் நிலை தெரிந்தால் துடித்துப்போவாளே… அதை எப்படித் தடுக்கப்போகிறேன். அது மட்டுமா, ஒரு வேளை குழந்தையைத் தூக்கக் கூட அவளால் முடியாது போனால், அதை எப்படித் தாங்குவாள்? எப்படி ஏற்றுக்கொள்வாள். துடிப்பாளே… கதறுவாளே.

உள்ளே நொறுங்கி உடைந்து சிதைந்த வேளையில், அவனை நோக்கி வந்த அவ்வியக்தனைக் கண்டதும் வேகமாக அவனை நோக்கிச் சென்றான் உத்தியுக்தன்.

அந்த நேரத்தில் தோள் சாய்ந்து வலியைக் கூற ஒரு உற்ற துணை வேண்டும்போல் தோன்ற, பாய்ந்து அவனை அணைத்துக்கொண்டான் உத்தியுக்தன். எப்போதும் இத்தகைய ஆழமாக உணர்ச்சிகளைக் காட்டாதவன், தன்னை அணைத்ததும் ஒரு கணம் குழம்பிய அவ்வியக்தன்,

“ஹே…. ப்ரோ… வட் ஹப்பன்…” என்றான் அண்ணனை அணைத்தவாறு.

“எனக்கு பயமாக இருக்கிறது அவ்வி… என்னால்… என்னால் இதையெல்லாம் தாங்க முடியும்போலத் தெரியவில்லையே… ஒரு வேளை அவளால் நடக்க முடியாத நிலை வந்தால், கைகளை அசைய முடியாது போனால், குழந்தையைத் தன் கரங்களில் ஏந்த முடியாத நிலை வந்தால்… அதை எப்படித் தாங்குவாள்… அதை நான் எப்படிக் கண்கொண்டு பார்க்கப் போகிறேன்…” என்று நடுக்கத்துடன் கூறிய தன் அண்ணனை, இறுக அணைத்துக்கொண்ட அந்த மாமலைக்கும் நெஞ்சம் தடுமாறித்தான் போனது. சற்று நேரம் அவனை அணைத்தவாறு நின்றவன்,

“ப்ரோ… எதற்கும் இல்லாத சக்தி காதலுக்கும் அன்புக்கும் உண்டு. நிச்சயமாக எந்தச் சிக்கலும் இல்லாமல் சமர்த்தி எழுந்துவிடுவார்கள். அப்படியே பாரதூரமாக ஏதாவது நடந்தால், உனது அன்பு அவர்கள் வலியை இல்லதாக்கும். அது ஒரு பிரச்சனையே இல்லை என்று உணர வைக்கும்… இதோ பார், முன்பு எப்படியோ, இப்போது நீ ஒரு குழந்தைக்குத் தந்தை… குழந்தைக்காக உன்னைத் திடப்படுத்திக்கொள்…” என்று அவனைச் சமாதானப்படுத்த, ஆழ்ந்த மூச்சுடன் தம்பியை விட்டு விலகியவனுக்கு முகம் தெளிவில்லாது விட்டாலும், மனம் ஓரளவு சமப்பட்டது. தனக்குக் கைகொடுக்கத் தம்பி இருக்கிறான் என்கிற தைரியம் தோன்ற, விலகியவன்,

“அவ்வி… காவல்துறை ஏதாவது…” என்று கேட்க,

“ப்ச்.. அதை விடு.. நான் பார்த்துக்கொள்கிறேன். நட்ட ஈடு கொடுக்கவேண்டும். இரண்டு வாகனங்கள் இதில் பாதிப்படைந்திருக்கிறது. நல்லவேளை யாருக்கும் உயிர்ச்சேதமில்லை. வாகனங்களுக்கு மட்டும்தான். இதுவே நெடுஞ்சாலையாக இருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். தவிர, சமர்த்தி இனி ஒரு போதும் வாகனம் ஓட்ட முடியாதவாறு சாரதி அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்திருக்கிறார்கள். ஐம்பதாயிரம் டாலர்களுக்கு டிக்கட் வைத்து இருக்கிறார்கள். இனி பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதி மூலம் பணம் எடுத்துக்கொள்வார்கள். அதைத் தவிர அஞ்ச எதுவுமில்லை…” என்று சமாதானப் படுத்த, பெரும் நிம்மதி அடைந்தவனாய்,

“தாங்ஸ் அவ்வி… நீ இல்லை என்றால்… என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.” என்று கலங்க, மெல்லியதாய் அண்ணனின் வயிற்றில் குத்தியவன்,

“நான் எல்லாம் உன்னை மன்னிக்கவில்லை…” என்றவன் இப்போதும் முழுதாக மாறாது கண்டி இருந்த தன் முகத்தைச் சுட்டிக்காட்டி,

“இதற்கு நீ பதில் கூறவேண்டும்… இதே போல உன் முகமும் மாறவேண்டும்…” என்றுவிட்டு விலகிச் செல்ல, அதைக் கேட்டு மெல்லிய புன்னகையுடன் விலகிச் சென்றான் உத்தியுக்தன்.

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
0
+1
3
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!