Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 13

13

அன்று மாலை வீடே அல்லோல கல்லோலப் பட்டது. தயாளனும், புஷ்பாவும், ஐந்து வானரங்களுமாக அந்த வீட்டை இல்லை உண்டு என்று ஆக்கிக்கொண்டிருக்க, ரதிதான் அந்தப் புதிய சூழ்நிலையில் திணறிப் போனார். அவருக்கு இத்தகைய சத்தம் ஆகாது. பாடல்கள் கூட மிக மிக மெல்லிய ஒலியில்தான் கேட்பார். விழாக்கள் என்றால் நாகரிகமான மனித கூட்டம்தான் அங்கே கூடும். சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அங்கே இடம் இருந்ததில்லை.

பால்ரூமில் அதி உயர்ந்த விலைகளைக் கொண்ட மதுப்போத்தல்கள்… அதைக் குவளையில் ஊற்றி நாகரிகமாகப் பற்றியவாறு வியாபாரம் சார்ந்த பேச்சுக்கள். மேற்கத்தியப் பாடல்களுக்கு ஆணும் பெண்ணுமாக இணைந்து ஒரு ஆட்டம். அதில் ஒருவரை ஒருவருக்குப் பிடித்துக்கொண்டால் தனியறையில் இன்பம். திருமணம் ஆனவர்களாக இருந்தால், காதலர்களாக இருந்தால் அவர்களின் இரவு வேறு விதம்… அப்படி வாழ்ந்து பழகியவருக்கு இந்தச் சாமிப்பாட்டுகள் சற்று இம்சையாகித்தான் போனது.

உத்தியுக்தனின் வீட்டிற்கு வந்த ஒரு சில நாழிகைகளில் அந்த இடத்தையே கோவிலாக மாற்றியிருந்தார் புஷ்பா. ரகுநந்தன், பிரபஞ்சன், விதற்பரை, வசந்தன் என்று அந்த இடத்தையே அலங்காரம் செய்து தேவலோகமாக மாற்றிக் கொண்டிருந்தனர். போதாததற்கு புஷ்பா ஏவும் ஒவ்வொரு வேலையையும் சுனங்காது ஐவரும் ஓடி ஓடிச் செய்வதைக் கண்ட ரதி தன்னை மறந்து வாயைப் பிளந்தார்.

அவர் இதுவரை தன் மகன்களிடம் சிறிய வேலை கூடக் கேட்டதில்லை. கேட்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததுமில்லை. இது அவருக்குப் பெரும் புதுமையாகவே இருந்தது. அவர் சிறுமியாக இருந்த காலத்திலும் இளவரசியாகத்தான் வாழ்ந்தார். அவருடைய நகத்தில் கூட அழுக்குப் படிந்ததில்லை. அவருக்குச் சரிசமமாக இருக்கக் கூடிய ஆதித்யனைத் திருமணம் முடித்த பின்பும் அப்படித்தான். குழந்தைகளைப் பெற்ற பின்பும் அப்படித்தான். அது அவருடைய தவறு என்றும் சொல்ல முடியாது. ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து வளர்ந்ததன் பாதிப்போ, என்னவோ தெரியவில்லை, தன் மகிழ்ச்சி மட்டுமே அவருக்கு முக்கியமாக இருந்தது. இப்போதும் பெரிய மாற்றமில்லைதான்.

இதோ பழக்கமில்லாத சாமிப் பாடல்கள் அவருடைய முகத்தைச் சுழிக்கத்தான் வைத்தன. ஆனாலும் தாங்கிக் கொண்டார்.

அதிலும் புஷ்பா பம்பரம் போலச் சுழன்று பலகாரங்களைச் செய்த வேகத்தைக் கண்டு லீ கூட மயங்கும் நிலைக்குப் போய்விட்டாள்.

ஒரு மனுஷியால் இத்தனை வேகமாகச் சுழல முடியுமா என்ன? புஷ்பா தன் நாத்தனாருக்காக எந்தத் திசைக்கு வேண்டுமானாலும் சுழல்வாள் என்பது லீக்குத் தெரியாமலே போயிற்று.

அதே நேரம் தயக்கத்தோடு கீழே வந்த ரதியிடமும் வேலை கொடுக்கப் புஷ்பா தவறவில்லை.

“ரதிம்மா… இந்தாருங்கள்… இந்தத் தேங்காயில் மஞ்சளைப் பூசி அந்தத் தட்டில் வையுங்கள்…” என்று உத்தரவிட ரதி விழிகளைப் பிதுக்கினார். மஞ்சளைப் பூசுவதா? கரங்களில் அவை அப்பிக்கொள்ளுமே…! திணற, அதைப் புரிந்துகொண்ட புஷ்பா,

“பாதகமில்லை. விதற்பரை அதைச் செய்யட்டும், நீங்கள் இந்தப் பூக்களின் இதழ்களை உதிர்த்து இந்தத் தட்டில் வையுங்கள்…” என்று கொடுத்துவிட்டு சற்றுத் தள்ளித் தோரணமாக மாலைகளைக் கட்டிக் கொண்டிருந்த கணவனை அழைத்து,

“தயா… ஓடிப்போய், இந்த பட்டியலில் உள்ளவற்றை வாங்கி வாருங்கள்…” என்று கொடுக்க, வீட்டில் ஏற்பட்ட சத்தத்தில் உதட்டில் புன்னகையோடு முக்கிய வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த உத்தியுக்தனுக்கு அது தன் வீடுதானா என்று கூட நம்ப முடியவில்லை. மேற்கத்தியப் பாணியிலிருந்த அவனுடைய வீட்டை இரண்டு மணி நேரத்தில் அக்மார்க் தமிழ் கலாச்சாரமுள்ள வீடாக மாற்றிவிட்டார்களே.. வியந்தவனாய் முன்னறை வர, புஷ்பா தயாளனிடம் பொருட்களை வாங்க அனுப்பிக்கொண்டிருந்தார்.

“நான் வாங்கி வரவா..” அவனாகவே ஆவலுடன் முன் வந்தான்.

“இல்லை தம்பி… இவர் சும்மாதானே இருக்கிறார்… போய் வரட்டும்…” என்றதும் தன் மனைவியைப் பார்த்து முறைத்தார் தயாளன்.

“சும்மாவா? கடவுளுக்கே அடுக்குமா? இங்கே இரண்டு மணிக்கு வந்தோம்… மணியைப் பார், ஆறு மணியாகிவிட்டது. இத்தனை நேரமாக என்னை ஒரு இடத்தில் இருக்க விடாமல் இத்தனை பாடு படுத்திவிட்டு சும்மா இருக்கிறேன் என்று வாய் கூசாமல் சொல்கிறாயே. கடவுளுக்கே அடுக்குமா?” என்று சண்டைக்கு வர,

“சண்டையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், போய் வாங்கி வாருங்கள் தயா… பலகாரம் இன்னும் செய்யக் கிடக்கிறது.” என்றார் புஷ்பா.

“இருடி… இரவு படுக்கைக்கு வருவாய் தானே… அப்போது அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது பிடித்துவிடு என்று கேட்பாய்தானே… அப்போது இருக்கிறதுடி உனக்குக் கச்சேரி…” என்றவாறு வெளியேற, மெல்லிய சிரிப்போடு சமர்த்தியைத் தேடிச் சென்றான் உத்தியுக்தன்.

புஷ்பாவும் கணவரின் பேச்சைக் கேட்டுத் தனக்குள் நகைத்தவராக, சமையலறைக்குள் நுழைந்து விட்ட ரதியோ ஆச்சரியத்தோடு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

இதுவரை இப்படி எதார்த்தமாக ஆதியோடும் பேசியதில்லை, ஜேயோடும் பேசியதில்லை. அதற்கு நேரம் கிடைத்ததும் இல்லை. வேலை… வேலை முடிந்ததும் படுக்கை. அதில் உடல் சுகத்திற்காய் ஒரு உறவு… மறு நாள் வேலை… உழைப்பு.. பணம்… கூட்டம்… அதைப் பற்றிய விவாதம்… வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள்.. நண்பர்களோடு இன்பமான விழாக்கள்… அதைத் தவிர இப்படியெல்லாம் வீட்டு வேலைகள் செய்து, அது சார்ந்து கலந்து பேசியெல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனால் புஷ்பாவும், தயாளனும் பேசுவதைக் கண்டதும், முதன் முறையாக மெல்லிய ஏக்கம் எட்டிப் பார்த்தது.

வாழ்க்கையில் நிறைய விஷயங்களைத் தொலைத்துவிட்டோமோ என்று முதன் முறையாக எண்ணினார். காலம் கடந்த கவலை. தேடினாலும் கிடைக்காத விஷயங்கள்…

அதே நேரம், சமையலறைக்குள் வந்த புஷ்பா,

“விது… இந்தத் தேங்காய்க்கு மஞ்சள் பூசுமா…” என்று விட்டு உள்ளே செல்ல, சரி என்று தலையை ஆட்டியவள், மஞ்சளைத் தண்ணீரில் குழைத்துக் கொண்டு முன்னறைக்கு வர, அழைப்பு மணி அடித்தது.

கதவைத் திறக்கப் போன ரதியிடம்,

“நான் போய்த் திறக்கிறேன் ஆன்டி… நீங்கள் அமருங்கள்…” என்றுவிட்டு ஒரு கரத்தால் மஞ்சள் தட்டை ஏந்தியவாறு, கதவைத் திறந்தவள், யார் என்று நிமிர்ந்து பார்க்க, அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியில் கரத்திலிருந்த மஞ்சள் தட்டைக் கைவிட, வாசலில் நெடு நெடு என்று நின்றிருந்தவன், லாவகமாக விழத் தொடங்கிய தட்டைக் கரத்தில் ஏந்தி, “ஹாய்… ஏஞ்சல்…” என்றான் அந்த மயக்கும் புன்னகையுடன்.

அதிர்ந்து போன விதற்பரை, வேகமாக அவன் கரத்திலிருந்த மஞ்சள் தட்டைப் பறித்தவாறு, சமையலறை நோக்கி ஓட, மெல்லிய புன்னகையுடன் அவள் பின்னால் வந்த அவ்வியக்தனைக் கண்ட ரதியின் முகம் மலர்ந்து போனது.

“அவ்வி… வந்துவிட்டாயா?” என்றவாறு அவனை நெருங்க முயல, புன்னகையுடன்,

“ஹாய் மாம்… ஹவ் இஸ் யுவர் டே…” என்றான் சற்று விலகி நின்றவாறு.

“குட்…” என்று தள்ளி நின்று பேசும் மகனைக் கண்டு முகம் வாடும்போதே, கீழே இறங்கி வந்து கொண்டிருந்த உத்தியுக்தனைக் கண்டதும் உதடுகள் மலர்ந்து சிரித்தவன், அன்னையை மறந்து,

“ஹாய்… ப்ரோ… ஹவ் ஆர் யு” என்றவாறு அவனை நெருங்கி அணைக்க,

“குட் அவ்வி… நீ எப்படி இருக்கிறாய்?” என்றான் பதிலுக்கு.

“ஹெல்த்தி அஸ் எ ஹோர்ஸ் ப்ரோ?” என்றதும், அவனுடைய முதுகில் தட்டி, “என்ன… அடிக்கடி கனடா வாசம் என்று கேள்விப்பட்டேனே…” என்றான் உத்தியுக்தன். அதற்கு மெல்லியதாகச் சிரித்தவன்,

“என் தொழிலை இங்கே மாற்றலாம் என்றிருக்கிறேன் ப்ரோ… சில வேலைகளுக்கு இங்கேதான் வசதி…” கூறிக்கொண்டிருக்கும்போதே, விதற்பரை ஒரு தட்டில் தேனீர் குவளைகளை வைத்து ஏந்தியவாறு வந்தாள்.

எல்லோருக்கும் நீட்டிவிட்டு, அவ்வியக்தனின் அருகே வரும்போதே இவளுடைய கால்கள் இவளையும் மீறி நடுங்கத் தொடங்கின. அவன் முகம் பார்க்காமலே தட்டை நீட்ட, திரும்பியவனின் விழிகள் தலை கவிழ்ந்திருந்த விதற்பரையை விட்டு அங்கும் இங்கும் விலகுவதாயில்லை.

இவளோ அவன் இன்னும் தேநீர் எடுக்காது இருப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க, அவளைக் கண்டு ஒற்றைக் கண்ணை அடித்தவாறு தேநீரை எடுத்துக்கொண்டான் அவ்வியுக்தன்.

அதைக் கண்டதும், அவனை எரிப்பதுபோலப் பார்த்துவிட்டு சமையலறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

இவன் எங்கே இங்கே வந்தான்… கடவுளே.. இவனும் வந்து தொலைப்பான் என்று தெரிந்து இருந்தால், எதையாவது சாக்குச் சொல்லி எங்காவது ஓடியிருப்பாளே…” மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, புஷ்பாதான், அவளை அதிகம் யோசிக்க வைக்காமல்,

“அங்கே என்ன பராக்குப் பார்க்கிறாய்? நேரம் போகிறது… அந்த முறுக்குத் தட்டை எடு…” என்று கடிந்தார்.

அப்போதைக்குத் தன் நினைவுகளைக் களைந்து எறிந்துவிட்டு, அன்னைக்கு உதவத் தொடங்கினாள் விதற்பரை.

மாலை ஏழு மணியளவில் சமர்த்திக்கு மருதாணி இடுவதற்காக ஒரு வட இந்தியப்பெண் வந்திருந்தாள்.

சமர்த்தியின் கைகளிற்கும் கால்களுக்கும் அழகாக மருதாணி இட்டவள், வேறு யாருக்கும் போட இருக்கிறதா என்று கேட்க, சமர்த்தி விதற்பரையைப் பார்த்து,

“நீயும் வந்து போடேன்…” என்றாள் ஆவலாய்.

இவளோ முதலில் வேலையிருப்பதாக மறுக்க, சமர்த்தியின் வற்புருத்தலில், திரும்பி அன்னையைப் பார்த்தாள்.

அவர், தன் விழிகளை மூடித் திறந்து சம்மதம் கூறக் குதுகலத்துடனேயே சமர்த்திக்கு அருகே அமர்ந்துகொள்ள. அவளுக்கும் அழகாக மருதாணி போட்டுவிடத் தொடர்ந்து ரஞ்சனி என்று அனைவருக்கும் போட்டுவிட்டு விடைபெற, நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கரத்தில் காயாதிருந்த மருதாணியை ஊதி ஊதி விடத் தொடங்கினாள் விதற்பரை.

அதைச் சற்றுத் தள்ளி ஒரு வித ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவ்வியக்தன்.

அதேநேரம், சமர்த்தியும் தன் கரங்களில் போட்டு இருந்த மருதாணியை மிகுந்த ரசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் அமர்ந்தவாறு தன் மனைவியை ஒரு வித தேடலுடனும், ஆவலுடனும் பார்த்துக்கொண்டிருந்தான் உத்தியுக்தன்.

இளம் பெண்கள் அனைவரும் கரங்களில் மருதாணி இட்டுக் கொண்டதால் அவர்களால் எதையும் தொட்டு வேலை செய்ய முடியவில்லை.

அப்போது பார்த்து சமர்த்திக்கு முதுகை அரிக்க, நெளிந்தவள் சுத்தவரப் பார்த்தாள். உத்தியுக்தன் அவ்வியக்தனோடு பேசிக்கொண்டிருந்தான். உடனே தன் அண்ணியைத் தேடிச் சமையலறைக்குள் நுழைய, புஷ்பா பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார்.

விரைந்த அவரை நெருங்கியவள்,

“அண்ணி…” என்று சிணுங்கத் தன் வேலையை இடை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார் புஷ்பா.

“அண்ணி… முதுகு அரிக்கிறது அண்ணி… சொறிய வேண்டும்… பேசாமல் கையைக் கழுவி விட்டு சொறியவா?” என்று எரிச்சலுடன் கூற,

“மூச்… இன்னும் காயாத மருதாணியைக் கழுவப் போகிறாயா? உனக்கு எங்கே அரிக்கிறது? சொல்…” என்றவாறு நெருங்க, இவளோ புஷ்பாவிற்கு முன்பாக முதுகைக் காட்டி நடு முதுகிலிருந்து சற்று வலப்பக்கமாகச் சொறிந்து விடுங்கள்…” என்றாள்.

எங்கே அரித்ததோ, அதைத் தவிர மற்றைய இடங்கள் எல்லாம் புஷ்பா சொறிந்து விட,

“அங்கேயில்லை அண்ணி… வலப்பக்கம்… இல்லை… கொஞ்சம் இடப் பக்கம்… ஒரு அங்குலம் மேலே… ஐயோ… அண்ணி… கொஞ்சம் கீழே… சரியான இடத்தைத் தவிர மற்றைய இடங்கள் எல்லாம் சொறிகிறீர்கள்…. இன்னும் வலது பக்கம் வாருங்கள்…” என்று அவரை ஒரு வழி செய்து கொண்டிருக்க, சமர்த்தியைக் காணாமல், அவளைத் தேடி, இரும்பிழுத்த காந்தமாய்ச் சமையலறைக்கு வந்தான் உத்தியுக்தன். அவனைக் கண்டதும், செய்துகொண்டிருந்த வேலையை விடுத்து,

“தம்பி… எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இவள் என்னவென்றால், இங்கே வந்து வேலை செய்ய விடாமல் வதைத்து எடுக்கிறாள். தயவு செய்து என்னை இவளிடமிருந்து காப்பாற்றுங்கள்…” என்றவள் திரும்பி தன் நாத்தனாரிடம்,

“உன் புருஷன் வந்துவிட்டான், அவனிடம் கேள்… என்னை விடு… உனக்கு சொறிந்துவிட்டால் இந்த வேலைகளை யார் செய்வதாம்…” என்று அவளை அவனுடைய தலையில் கட்டிவிட்டுத் தன் வேலையில் கவனமாக, இப்போது சமர்த்திக்கு வயிறும் சேர்ந்து அரிக்கத் தொடங்கியது.

கர்ப்பமான நாள் முதலாக வயிறு பெருக்கப் பெருக்க அவள் சந்தித்த அவஸ்தையில் இதுவும் ஒன்று. பலமுறை சொறிந்து சொறிந்து புண்ணாக்கியும் வைத்திருக்கிறாள். யாரோ சொன்னார்கள் என்று ஏதோ ஒரு களிம்பை வாங்கிப் பூச, அரிப்பு சற்று மட்டுப்பட்டிருந்தது. ஆனாலும் குறைவதில்லை.

“ஏன் என்ன பிரச்சனை… சதி… உனக்கு என்ன வேண்டும்?” என்று அவன் கேட்க, இவளோ, முதுகு அரிக்கிறது சொறிந்துவிடுங்கள்…” என்றவாறு அவனுக்கு முன்பாக முதுகைக் காட்டிக் கொண்டிருக்க, உத்தியுக்தன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் இறுதியில் பக்கென்று சிரித்துவிட்டான்.

திரும்பி அவனைப் பார்த்து முறைத்தவள்,

“இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று கேட்டவள், அவன் மேலும் சிரிப்பதைக் கண்டு கோபம் கொண்டவளாக,

“எனக்கு நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம்… நானே சொரிந்து கொள்கிறேன்” என்று கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு விதற்பரையைத் தேடிச் சென்றாள்.

அங்கே அவளோ காயாத மருதாணியை ஊதி ஊதிக் காய வைக்க முயன்றுகொண்டிருந்தாள். இந்த நிலையில் அவளிடம் எப்படி உதவி கேட்பது? தன் அறைக்குச் சென்றவள், தாங்க முடியாமல் பல்லைக் கடித்தவாறு அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினாள்.

யார் சொன்னார்கள் வலியைத்தான் தாங்க முடியாது என்று. வலியைக் கூடத் தாங்கலாம், ஆனால் அரிப்பைத் தாங்கவே முடியாது. கோவில் மாடுபோலச் சுவரில் முதுகைத் தேய்த்துப் பார்த்தாள். ம்கூம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அரிப்பு போகவில்லை. அது என்னவோ தெரியவில்லை கையை உபயோகிக்க முடியாத போதுதான் உடலின் அரிப்பும் அதிகமாகத் தெரியும்.

அவள் சிரமப்படும்போதுதான் உத்தியுக்தன் சாப்பாட்டுத் தட்டோடு வந்திருந்தான். அவனைக் கண்டதும் உதடுகளைச் சுழிக்க, அதைக் கண்டும் காணாதவனுமாக,

“வா… வந்து உட்கார்… சாப்பாடு எடுத்து வந்திருக்கிறேன்…” என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு, வந்து, படுக்கையில் அமரச் செய்தான்.

இட்லியைப் பிய்த்துச் சட்னியில் தோய்த்து அவளுடைய வாயருகே கொண்டு வர, ஏற்கெனவே பசித்துக் கிடந்தவள், மறுக்காது வாயைத் திறந்து அவன் ஊட்டிய உணவை வாங்கி உண்ணத் தொடங்கினாள். அவனைக் கோபமாகப் பார்ப்பது மட்டும் நிற்கவில்லை.

அவள் உண்டு முடித்ததும், குளியலறை சென்று கரங்களைக்கழுவிவிட்டு வந்தவன், ஒரு துவாயில் ஈரத்தில் நனைத்து வந்து அவளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்து உதடுகளைக் கவனமாகத் துடைக்க, ஏனோ இவனால் அந்த உதடுகளிலிருந்து தன் பார்வையைச் சுத்தமாக விலக்கமுடியவில்லை. அந்த உதடுகள் கொடுத்த பாதிப்பில், அவனுடைய துவாய் உதடுகளை வருடியதை விட, அவனுடைய பெருவிரல்தான் அவளுடைய உதடுகளை வருடிச் சென்றதுதான் அதிகம்.

தாபம் மேலிட அவளை விட்டு விலக முடியாது விலகிச் சென்றவன், கபேர்ட்டைத் திறந்து அவளுக்குரிய இரவாடையை எடுத்து வந்து அவளுடைய சட்டைப் பொத்தானில் கரங்களை வைக்க, கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

“எ… என்ன செய்கிறீர்கள்?” என்றாள். இவனோ, எரிச்சலுடன் அவளைப் பார்த்து,

“என்ன கேள்வி இது? இந்த நிலைமையில் உன்னை என்ன செய்து விடுவேன் என்று நினைக்கிறாய்?” என்று கடிந்துவிட்டு,

“உனக்கு ஆடை மாற்றிவிடப் போகிறேன். இந்தக் கரங்களால் உன்னால் எதுவும் செய்ய முடியாது. ஆடை மாற்றியதும் பேசாமல் தூங்கு…” என்று அவளுடைய ஆடையகளை கழற்ற முயல, இவளோ வேகமாக மறுத்து,

“வே… வேண்டாம்… நானே மாற்றுவேன்…” என்றாள் திணறலாய். இவனோ,

“எப்படி…?” என்றான் பெரும் கிண்டலாய்.

“இது காய்ந்த பின்பு மாற்றுவேன். எனக்கொன்றும் உங்கள் உதவி வேண்டியதில்லை…” என்று கூற,

“அது எப்போது காய்வது, நீ எப்போது ஆடை மாற்றித் தூங்குவது? நேரத்தைப் பார்த்தாய் அல்லவா? ஒன்பது மணி. நாளைக்குக் காலை எட்டு மணிக்கு தயாராக இருக்கவேண்டும்… அதற்கு ஆறு மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும்… அது நடக்கும் காரியமா?” என்று கிண்டலாகக் கூற இவளுக்கு சுரு சுரு என்று வந்தது.

“ஏன் நான் ஆறுமணிக்கு எழுந்துகொள்வது இல்லையா?” எகிற, அதைக் கேட்டு அழகாக நகைத்தவன்,

“எழுந்துகொள்வாயே, ஆறு மணி கடந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு…” என்று கிண்டலடித்தவாறே அவளுடைய கவனத்தைக் கவராமல் மேலாடையைக் களைந்து இரவாடையைப் போடப் போகும் போதுதான் கவனித்தான், அவளுடைய வயிற்றை. எங்கும் சிவந்து தடித்து வரி வரியாய் கீறிக் காயம் பட்டு… அதிர்ந்தவனாக,

“வட் த ஹெல் இஸ் தட்…” என்றான்?” என்றான். இவளோ என்ன? என்பது போல வெட்டவெளியில் தெரிந்த தன் வயிற்றைப் பார்த்தவாறு கேட்டாள்.

“எதற்கு அங்கும் இங்கும் சிவந்து தடித்து இருக்கிறது? கீறி வேறு வைத்திருக்கிறாய்? ஏன்?” என்றான் காயங்களைத் தொட்டுப் பார்த்தவாறு.

“அதுவா… மிகவும் அரித்ததா, அதுதான் சீப்பை வைத்துச் சொறிந்தேன்… அது புண்ணாக்கிவிட்டது போலும்…” என்று அலட்சியமாகக் கூற, இவனோ கோபத்துடன் அவளைப் பார்த்தான்.

“யு ஸ்டுபிட்… அரித்தால் சொல்வதற்கென்ன?” என்று சீறிவிட்டு, மருதாணியில் சட்டை படாதவாறு ஆடையை கழுத்துக்கூடாக அணிவித்தவன், “இதற்கு மருந்து இருக்கிறதா?” என்றான்.

இருக்கிறது.. போட வேண்டும்.. ஆனால் எப்படி என்றுதான்.” என்றவளின் தயக்கத்தை உணர்ந்தவன் போல,

“எங்கே இருக்கிறது…?” என்றான். அவள் சுட்டிக்காட்டக் குறிப்பிட்ட களிம்பை எடுத்துவந்து, இரு கரங்களிலும் பிரளுமாறு தேய்த்து, அவளுடைய வயிற்றில் பட்டும் படாமலும் பூசிவிட, அவனுடைய தடுமாறாத அந்த அக்கறையில் மொத்தமாய் விழுந்துதான் போனாள் சமர்த்தி. பூசி முடித்ததும், மெல்லிய வலியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“நீ படும் இந்தச் சிரமங்களில் பாதியையாவது நான் பெறமுடியுமானால், அதை மகிழ்ச்சியாகவே பெற்றுவிடுவேன் சதி. நான் தந்தையாகப்போகிறேன் என்கிற மகிழ்ச்சி ஒரு பக்கமிருந்தாலும், நீ இப்படி வதைபடுகிறாயே என்று நினைக்கும்போது அந்த மகிழ்ச்சி காணாமல் போகிறது…” என்றபோது சடுதியில் அவனுடைய வலதுபக்க மேல் வயிறு எம்பி நின்றது.

சட்டென்று தன் கரத்தை விலக்கிப் பார்க்க, அது குழந்தையின் கால் போல, குத்திட்டு நின்றது வயிறு. அடுத்து, அவளுடைய வயிறு மேலிருந்து கீழாக இழுபட்டுச் சென்று இப்போது இடதுபக்கத்து முன்வயிறு எம்பி நின்றது. அதைக் கண்டதும் உத்தியுக்தன் தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரித்தவனாய், அவள் பக்கமாகக் குனிந்து எம்பி நின்ற இடத்தில் தன் உதடுகளைப் பொருத்த, சமர்த்திதான் ஆடிப் போனாள்.

அவனுடைய உதடுகளின் வெம்மை, உள்ளே பல இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த, குனிந்து உத்தியுக்தனைப் பார்க்க, அவனோ மேடிட்ட இடத்தை வருடிக் கொடுத்தவாறு முகம் முழுவதும் பூரிக்க,

“மிக மிகத் துருதுருப்பாக இருக்கிறது அல்லவா நம்முடைய குழந்தை?” என்றான் பெருமையுடன்.

இப்போது இவளுடைய உதடுகளும் புன்னகையில் மலர, அந்த அழகில் மொத்தமாய்த் தொலைந்தவனாய், அவளை நோக்கி எழுந்தவன், ஆவேசத்துடன் அவளுடைய உதடுகளைப் பற்றிக் கொண்டான்.

முதலில் அந்த இதழ் அணைப்பில் தடுமாறித் தயங்கியவள், பின் எப்போதும் போலத் தன்னை மறந்து அதில் லயிக்க, எத்தனை நேரமாக அவளுடைய உதடுகளில் சோமபானத்தை அருந்தினானே. மெதுவாக அவளுடைய நிலை அறிந்து பிரியமில்லாமலே தன் உதடுகளைப் பிரித்து, மீண்டும் உதட்டின் ஓரத்தில் தன் உதடுகளைப் பதித்து விடுவித்து,

“நாளைக்குக் காலையில் எழவேண்டும்… தூங்கு” என்றுவிட்டு அவள் தோள்களைப் பற்றிப் படுக்க வைத்தவன், கால்களையும் பக்குவமாகத் தலையணை மீது வைத்துவிட்டுத் தைரியமாக அவளுக்குப் பக்கமாக வந்து படுத்து அவளைத் தன்னோடு அணைக்க இவளுடைய உடல் ஒரு கணம் விறைத்து நின்றது.

இவனோ அவள் பக்கமாகக் குனிந்து கூந்தலில் முகத்தைப் புதைத்து,

“ரிலாக்ஸ் பம்கின்… சும்மா அணைத்துக் கொண்டுதான் படுக்கப்போகிறேன். நீயாக என்னைப் புரிந்துகொள்ளும் வரைக்கும்.. நீயாக என்னை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும்… உன்னை அந்த மாதிரிக் கண்ணோட்டத்தில் தொட மாட்டேன். என்னைப் பற்றிய நிறையச் சந்தேகங்கள் உனக்கு உண்டு. அவற்றைத் தெளிவு படுத்தாமல் நமக்குள் இந்த உறவு வேண்டாம்.. முன்னர் போல இல்லாமல், இந்த முறை உண்மையான கணவன் மனைவியாக நாம் இணையவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் சதி… அதற்கு நீ உன்னைப் புரிந்துகொள்ள வேண்டும். என் மீதிருக்கும் சந்தேகங்களை விலக்கி மாசற்ற மனதோடு என்னை ஏற்கவேண்டும்… அது வரை… உன்னை நெருங்க மாட்டேன்… ஆனால்… உன் கூட, உன்னை உணர்ந்தவாறு உறங்கவேண்டும்… இப்படி உனக்கு அஞ்சி, நீ உறங்கிய பின்பு பட்டும் படாமலும் உன்னை அணைத்தவாறு உறங்குவது எத்தனை சிரமமாக இருக்கிறது தெரியுமா…” என்று கூற, வியந்தவளாக,

“வட்…” என்றவாறு இவன் பக்கம் திரும்ப முயல, அவளைத் திரும்ப முடியாதவாறு இறுக்கிப் பிடித்தவன்,

“தூங்கு பம்கின்… இந்தப் பிரச்சனையை நாளைக்குத் தீர்த்துக் கொள்ளலாம்… தூங்கு…” என்று அவசரமாய்க் கூறி சமாதானப் படுத்தியவாறு தன் விழிகளை மூட, இவளோ, ‘நான் தூங்கிய போது வந்து என்னோடு உறங்கினானா? எப்போது? எப்படி எனக்கு தெரியாமல் போனது…” நம்ப முடியாமல்

“ஏன்?” என்றாள் ஒருவித பரபரப்போடு. இவனோ,

“ஏதோ தூங்கவேண்டும் போல இருந்தது தூங்கினேன்… இது குற்றமா…” என்றவன் மேலும் அணைத்தவாறு விழிகளை மூட,

“அது எப்படி தோன்றும்…?” என்றாள் அடுத்து. உடனே அவளுடைய வாயைப் பொத்தியவன்,

“இப்போது அதுவா முக்கியம்… தூங்கு… இதற்க்கு மேல் விழித்திருந்தால், நம் பிள்ளையும் எழும்பி கேள்வி கேட்க தொடங்கிவிடும்…” என்று கடிந்துவிட்டுத் தன விழிகளை மூட, அப்படி இருந்தும் எழுந்த கேள்விகளை கேட்க முடியாமல், அவனுடைய அருகாமையை இலக்கப் பிரியமில்லாமல், வயிற்றின் மீது விழுந்திருந்த கணவனின் கரங்களை ஒற்றைக்கையால் பற்றியவாறு தன விழிகளை மூடினாள் சமர்த்தி. மறுகணம் தூக்கம் சுகமாய் அவளை தழுவிக்கொண்டது.

What’s your Reaction?
+1
35
+1
8
+1
7
+1
4
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!