Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 11

11

உண்டு முடித்ததும் புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். சமர்த்தியோ, அண்ணனையும் அண்ணியையும் விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்கிற தவிப்பில், தடுமாறி நிற்க, விரைந்த வந்த புஷ்பா அவளை இறுக அணைத்து விடுவித்து,

“எல்லாம் சரியாகிவிடும் கண்ணம்மா.. கவலைப் படாதே… நாங்கள் எல்லோரும் உனக்குத் துணையாக இருக்கிறோம்…” என்று மனமகிழ்வுடன் கூறிவிட்டு, உத்தியுக்தனைப் பார்த்து,

“தம்பி…. நம்முடைய சமர்த்திக்கு ஏழுமாதம் நடக்கிறது… வளைகாப்பு செய்யலாமா?” என்றார் தயக்கமாக. இவனோ புருவங்களைச் சுருக்கி,

“வளைகாப்பா?” என்றான் புரியாமல்.

“ஆமாம்… கர்ப்பிணிப் பெண்களுக்கு, அதுவும் தலைச்சன் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இது முக்கியமான சடங்கு… ஆட்களை அழைத்து, அவளை வாழ்த்துவது அவளுக்கும், குழந்தைக்கும் நீண்ட ஆயுளைக் கொடுப்பதோடு, பிரசவ பயத்தையும் போக்கும் என்று சொல்வார்கள்…” என்றதும், உடனே முகம் மலர்ந்தவன்,

“அப்படியா…? அப்படியென்றால் நாளைக்கே வைத்துக்கொள்ளலாம்…” என்றான். தன்னை மறந்து சிரித்த புஷ்பா,

“இல்லை… அதற்கு நாள் பார்க்கவேண்டும்… இருங்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் செல்கிறேன்.” என்ற புஷ்பா சுவாமி அறை நோக்கி ஓடினார். அங்கிருந்த பஞ்சாங்கத்தை எடுத்து, நாள் பார்த்து விட்டு முகம் பிரகாசமாக வெளியே வந்தவர்,

“தம்பி இந்தக் கிழமை விடுத்து அடுத்த புதன் கிழமை நாள் நன்றாக இருக்கிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்… அன்றைக்கே வைத்துக் கொள்ளலாமா…” என்றதும், புன்னகையோடு தோள்களைக் குலுக்கியவன்,

“வை நாட்… விழாவை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்…” என்றதும், தயங்கிய புஷ்பா,

“இல்லை… எங்கள் வீட்டில் வைப்பதுதான் முறை…” என்றார். இவனோ சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, நிமிர்ந்து புஷ்பாவைப் பார்த்து,

“வேண்டாம்… அவளுக்கு எங்கள் வீடுதான் வசதி… அங்கேயே வைத்துக் கொள்ளலாம்…” என்றவன், அதற்கு மேல் விவாதிக்காமல் அவளை அழைத்துக்கொண்டு செல்ல, சமர்த்திக்குக் கடும் கோபம் வந்தது.

ஏன் அண்ணன் அண்ணி வீட்டில் வைத்தால், இவன் கௌரவம் குறைந்துவிடுமா என்ன? என்ன பணக்கார திமிரா? வாகனத்திற்குள் ஏறி அமர்ந்ததும் ஆத்திரத்துடன் அவனைப் பார்த்தவள்,

“ஏன்… எங்கள் வீட்டில் விழா வைத்தால் உங்கள் கௌரவம் குறைந்துபோய்விடுமோ?” என்றாள் சுள் என்று. இவனோ நிதானமாக அவளைப் பார்த்து விட்டு,

“என்ன சொல்கிறாய் நீ… நான் நம் வீட்டில் விழாவை வைக்கச் சொல்லித் தானே சொன்னேன்…” என்றதும், குழம்பியவள்,

“இல்லையே உங்கள் வீட்டில் வைப்பதாகத் தானே சொன்னீர்கள்” என்றாள். அதைக் கேட்டதும் அவனுடைய முகம் இறுகிக் கறுத்துப் போனது. பற்களைக் கடித்துக் கோபத்தை அடக்கியவன்,

“நீ எதை என்னுடைய வீடு என்கிறாயோ, அதுதான் நம்முடைய வீடு என்பதை எப்போது நீ புரிந்துகொள்ளப்போகிறாய் சமர்த்தி?” என்று அடக்கிவைத்த ஆத்திரத்துடன் கேட்க, இவளோ, அவனை எரிச்சலுடன் பார்த்து,

“ஒருபோதும் இல்லை…” என்றாள் தெளிவுடன்.

அதைக் கேட்ட உத்தியுக்தனின் கரங்கள் ஸ்டியரிங் வீலில் இறுகி நிற்க, இவளோ ஜன்னலுக்கு வெளியாக வேடிக்கை பார்த்துவிட்டுப் பின் திரும்பி இவனைப் பார்த்து,

“பழிவாங்கவேண்டி என்னை மணந்தவர் நீங்கள். வேறு வழியில்லாமல் உங்களோடு வாழ்க்கையைப் பகிர்ந்தவள் நான்… அப்படி இருக்கையில் உங்களது வீட்டை எப்படி என் வீடு என்று ஏற்றுக்கொள்வேன்..” என்று சொன்னவளுக்கு நெஞ்சமோ இடித்துரைத்தது.

அன்று அந்த வீட்டில் காலடி எடுத்துவைத்த போது ஏற்பட்ட நிம்மதி அதுதான் அவள் இருப்பிடம் என்று சொல்லாமல் சொன்னதே. சற்றுத் தடுமாற, இவனோ பற்களைக் கடித்து ஒரு கணம் அமைதி காத்தான்.

என்ன நினைத்தானோ, நிமிர்த்து சமர்த்தியைப் பார்த்து, “உன்னை… உன்னைப் பழிவாங்குவதற்காக மட்டும் மணக்கவில்லை சதி…” என்றான் மென்மையாய்.

“அதுதான் தெரியுமே. நான்கு பேருக்கு நீங்கள் நல்லவன் என்று காட்டவும்தான்… ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள்..” என்று அலட்சியமாகக் கூற, அப்போதும் மறுத்துத் தலையை ஆட்டியவன்,

“அதுவும் ஒரு காரணம் தான்… ஆனால் உண்மைக் காரணம் வேறு…” என்று எதையோ கூற வர, அந்த நேரம் பார்த்து உத்தியுக்தனுக்கு அழைப்பு வந்தது. அந்த இணைப்பை ப்ளுடூத் மூலம் உயிர்ப்பிக்க, மறுபக்கமிருந்து வந்தது ஜூலியட்டின் குரல்.

அதைக் கேட்டதும் சமர்த்தியின் உடல் விறைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள். உத்தியுக்தனோ, எந்தக் கிலேசமும் இன்றி,

“யெஸ் ஜூலியட் வட்ஸ் அப்…” என்றான் கம்பீரமாய்.

“இன்று நாம் சந்திப்பதாக இருந்தோமே” என்று கூற, உத்தியுக்தனோ வண்டியிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.

“ஷிட்.. அட் செவன் ரைட்” என்று புருவங்களைச் சுருக்கியவாறு கேட்க,

“யெஸ்… த சேம் ரெஸ்ட்டோரன்ட்…” என்றாள் ஜூலியட்.

“ஓக்கே சீ யு தென்…” என்றவன், இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தின் ஓட்டத்தைச் சீராக்கச் சமர்த்திக்கோ உடலும் உள்ளமும் தீப்பற்றி எரிந்தது.

அவள் இருக்கும்போதே மாஜிக் காதலியோடு பேசுகிறானே எத்தனை தைரியம் இருக்கவேண்டும். சீற்றத்துடன் அவனைப் பார்த்தவள்,

“என்ன உங்கள் மாஜிக் காதலிக்கு உங்களை விட்டு இருக்க முடியவில்லையாமோ? அது எப்படி உதி… ஒரே நேரத்தில் உங்களால் இரண்டை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கையாள முடிகிறது…? இதைச் சொன்னால் ஒத்துக்கொள்ளவா போகிறீர்கள்?” என்று பற்களைக் கடித்தவாறு எரிச்சலை மொத்தமாகக் கொட்ட, அதைக் கேட்டதும், தன்னை அடக்க முயன்றவன், முடியாமல்,

“ஸ்டாப் இட்…” என்று சீறினான்.

“முதலாவதாக ஒருத்தியைப் பற்றி நம் கற்பனைக்கு ஏற்பப் பேசுவது மிக மிகத் தவறானது. அதுவும் நமக்கிடையில் நமக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தியை இடையில் கொண்டுவருவது அதை விடத் தவறு, எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மை தெரியாமல் பேசுவது மன்னிக்க முடியாத குற்றம்… அன்றும் அதே தவறைத்தான் செய்தாய், இன்றும் அதே தவறைத்தான் செய்கிறாய்… ஏற்னெவே உன்னிடம் சொல்லிவிட்டேன்… எப்போது ஜூலியட் என்னை உதறிவிட்டுப் போனாளோ, அன்றிலிருந்து இன்றுவரை எனக்கும் அவளுக்குமான தொடர்பு வியாபார ரீதியாக மட்டுமே… மீண்டும் மீண்டும் அதிலேயே தொங்கிக்கொண்டிருப்பது, உன் மீதிருக்கும் நல்ல அபிப்பிராயத்தைச் சிதறடிக்கச் செய்கிறது..” என்றான், சீற்றத்தை அடக்கிய குரலில்.

“அடேங்கப்பா… என்ன நியாயவாதி… அது எப்படி உதிதன்… ஒருத்தியைக் காதலித்து, அவள் கூட ஒன்றாகவே ஒரு சில வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு, அந்தக் காதல் பொய்த்துப் போன பின்னாலும் அதே பெண்கூட வியாபார ரீதியாக மட்டும் பழக முடிகிறது? இதை நம்புவதற்கு நான் என்ன முட்டாளா?” என்று எகத்தாளமாக இவள் கேட்க, உத்தியுக்தனின் முகம் கறுத்து இறுகிப் போயிற்று.

“ஏன் ஒருத்தியைக் காதலித்துவிட்டு, அவளோடு வாழ்ந்த பின், அவளைத் தோழியாக ஏற்றுக் கொள்ள முடியாதா? இல்லை ஏற்றுக்கொள்ளத்தான் கூடாதா? ஒரு தோழியைக் காதலியாகப் பார்க்க முடிகிறது. ஒரு காதலியைத் தோழியாகப் பார்த்தால் உடனே அதைத் தப்பாக யோசிக்கவேண்டுமா? உள்ளே குற்றக் குறுகுறுப்பிருந்தால்தான் தொடர்ந்து நண்பர்களாக இருக்க முடியாது… எனக்கு எந்தக் குறுகுறுப்பும் இல்லை… தவிர உனக்குப் பயந்து மறைத்தா வாழ முடியும்? அது என்னால் முடியாது சதி…” என்று எரிச்சலுடன் கூற,

“அதைத்தான் நான் அன்று பார்த்தேனே… விருதில் அணைத்து முத்தமிட்டாளே… அதில் தெரியவில்லையா உங்கள் இருவருக்குமான உறவு…” என்று சுள்ளென்று விழ, இவனோ அவள் நிலை கருதிச் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கியவனாக,

“இதோ பார் சதி… என்னை என்ன வேண்டுமானாலும் சொல்ல, உனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இன்னொருத்தரைப் பற்றித் தரக்குறைவாக நினைப்பதற்கோ, பேசுவதற்கோ உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது… அன்றைய நிகழ்வு அப்பழுக்கற்ற அன்பின் வெளிப்பாடு… அதைப் புரிந்துகொள்ளாமல் பேசும் உன்னோடு மல்லுக்கட்டி என் தரத்தைக் குறைக்கவும் நான் தயாராக இல்லை… மரியாதையாக உன்னுடைய வாயை நீ மூடுகிறாய்… இல்லை…” என்று எச்சரிப்பாகக் கூற, இவளோ தலையைச் சிலுப்பி,

“என்ன மிரட்டுகிறீர்களா? இந்த மிரட்டலை உங்கள் ஜூலியட்டிடம் வைத்துக்கொள்ளுங்கள் என்னிடம் வேண்டாம்…” என்று எகிற இவனோ தன் வாகனத்தை ஓரமாக நிறுத்தி இவளை நிதானமாகத் திரும்பிப் பார்த்தான்.

இவளோ என்ன என்பது போல அவனைப் பார்க்க, மறுகணம், அவளின் பக்கமாகக் குனிந்தவன், அவளுடைய தலையைத் தன் வலக்கரத்தால் பற்றித் தன்னை நோக்கி இழுத்து அவளுடைய உதடுகளைத் தன் உதடுகளால் அழுந்தப் பற்றிச் சிறைப்படுத்திக் கொண்டான்.

முதலில் அதிர்ந்து தன்னை விடுவிக்கத் திமிறியவள், ஒரு கட்டத்தில் அவனுடைய உதடுகள் பேசிய ரகசியத்தில் சற்று முன்பு பேசிய அத்தனை வார்த்தைகளையும் மறந்தவளாய், அவனுடைய உதடுகளுக்கு வழி விட்டு இடம் கொடுத்து விழிகளை மூடிக்கொள்ள. முதலில் தண்டனையாக உதடுகளைப் பற்றிக்கொண்டவன், பின்பு ஒத்தடம் கொடுப்பவனாய் மென்மையாய் உதடுகளை முட்டி முகர்ந்து சுவைத்து மடம் பிடித்துக்கொண்டான்.

எத்தனை நேரமாக அப்படியே நின்றிருந்தனரோ, இருவருக்குமே ஒருவரை ஒருவர் விட்டு விலகும் எண்ணம் இருக்கவேயில்லை. எப்படியோ, காக்கா கரையாமல், குயில் கூவாமல் சுயத்திற்கு வந்தான் உத்தியுக்தன்.

அதுவும் சீற்றமாக வெளிவந்த அவளுடைய மூச்சை உணர்ந்து வேகமாகத் தன் உதடுகளைப் பிரித்தவன், அவளை விடுவித்துவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்து கொள்ளச் சமர்த்திக்குத் தான் உலகமே தட்டாமாலையாகச் சுழன்ற உணர்வில் திணறிப்போனாள்.

எதையோ சொல்வதற்கு வாயெடுத்தவளுக்கு உதடுகள் ஒத்துழைத்தால் அல்லவோ. நடுங்கிய உதடுகளை அடக்க முயன்றவளாகக் கரம் கொண்டு மூடிக்கொள்ள, உத்தியுக்தனின் உடல் முழுவதும் வேகமாக இரத்தம் ஓடத் தொடங்கியது. அதை அடக்கும் வழி தெரியாமல், தன் கோபத்தை வாகனத்தில் காட்டினான்.

வீடு வந்ததும், ஏனோ சமர்த்திக்குக் கால்கள் தடுமாறின. சற்றை முன் கொடுத்த முத்தம் இன்னும் மிச்சமிருப்பது போல உதடுகள் அதை உணர்ந்து தவித்துக்கொண்டிருக்க. உத்தியுக்தனும் அதிகம் பேச்சுக் கொடுக்காமல், அவளுடைய முகத்தைப் பார்க்காமல் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். சமர்த்திக்குத்தான் பெரும் ஏமாற்றமாயிற்று.

அதே ஏமாற்றத்தோடு ஆடைகளைக் களைந்து விட்டுக் கண்ணாடியைப் பார்த்தவளுக்கு அவனுடைய முத்தத்தால் வீங்கிப்போன உதடுகள்தான் கண்முன் தெரிந்தன.

ஒருவித ஏக்கத்தோடு, உதடுகளைத் தொட்டுப் பார்த்தாள். அவை வறண்டு பொய், சற்று வீங்கியிருக்க, ஏனோ மீண்டும் அவனுடைய உதடுகளைச் சுவைக்கமாட்டோமா என்கிற ஏக்கம் எழ, இவளுக்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது.

அவனைப் பற்றித் தெரிந்தும் அவனுக்காக ஏங்குவதென்றால் என்னவென்று சொல்வது?

ஆடை மாற்றி முடித்ததும், அவனுடைய முகத்தைப் பார்க்க அஞ்சி சமையலறைக்குள் நுழைய, லீ புறப்படத் தயாராக நின்றிருந்தாள். சமர்த்தியைக் கண்டதும் முகம் மலர,

“யு ஆர் பக்…” என்றாள் குதுகலமாக.

“யெஸ் ஐ ஆம்… எப்படி இருக்கிறாய் லீ…”

“நான் நன்றாக இருக்கிறேன் மாம்… உங்களை மீண்டும் கண்டதில் மிக மிக மகிழ்ச்சி…” என்றவள் பின், அவளுடைய மேடிட்ட வயிற்றைக் கண்டு, விழிகள் விரிய,

“நீ கர்ப்பமாக இருக்கிறாய்?” என்றாள் நம்ப முடியாமல். பின் ஆசையோடு அவளுடைய வயிற்றின் மீது தன் கரத்தைப் பதித்து,

“எத்தனை மாதம்?” என்றாள்.

“ஏழு…” என்றாள் சமர்த்தி புன்னகையுடன்.

“உங்களைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றவள் பின் பரரபப்பாக,

“தூ யு வோன் து த்ரிங் ஹேர்பல் தீ…” என்று கேட்டாள்.

இவள் உடனே ஆம் என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொள்ள மனமோ நிலையில்லாது தவித்தது. புத்தியோ மீண்டும் மீண்டும் அவன் இதழ் சுவைக்காக ஏங்கியது.

சற்றிற்கு முன்புதானே அவனோடு யாரிக்கு யாரியாக நின்று வாதம் புரிந்தாள்? இப்போது வெட்கம் கெட்டு அவனுடைய இதழ் அணைப்பிற்காக ஏங்கி நிற்கிறாளே! எரிச்சலுடன் எண்ணிக் கொண்டு இருக்கும்போதே உத்தியுக்தன் தயாராகி வெளியே சென்றான்.

அவன் வெளியேறிய அரவம் கேட்டு இவளுடைய முகம் வாடிப்போனது.

அந்த ஜுலியட்டிடம் செல்கிறானே என்று மனம் தவித்தது. அவளுக்கும் அவனுக்கும் எந்த அதீத உறவுமில்லை என்று சொல்லிவிட்டான்தான். ஆனால் நம்பத்தான் இவளால் முடியவில்லை. ஏனோ மனம் தாறுமாறாக நினைத்தது.

அவளே எத்தனையோ தவறுகள் செய்து இருக்கிறாள். அது அவளுக்கு மட்டும்தானே தெரியும். ஆனால் ஒரு போதும் ஒத்துக்கொண்டதில்லை. அப்படியிருக்கையில் இவன் மட்டும் ஒத்துக்கொண்டு விடப் போகிறானா என்ன? அரிச்சந்திரனுக்குப் பிறந்ததாக எண்ணமோ?

லீ சுடச் சுட மூலிகைத் தேநீர் வார்த்துக் கொடுக்க, அவள் மனதைப் போலவே சுட்ட தேநீரின் சுவை அறியாமல் விழுங்கி வைத்தாள் சமர்த்தி.

அன்று லீ சென்ற பின், ஒன்பது மணி வரைக்கும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவளுக்குக் கற்பனைகள் ஏராளமாய்ப் பொங்கி எழுந்துகொண்டிருந்தன. எப்படியோ, அன்றைய உடல் அலைச்சலில் தன்னை மறந்து களைப்புடன் உறங்கிப்போனாள் சமர்த்தி.

தன் வேலை முடித்து வீட்டிற்கு வந்த உத்தியுக்தனுக்கும் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை.

அதுவும் நீண்ட மதங்களுக்குப் பிறகு அவளுடைய உதடுகளைச் சுவைத்த தித்திப்பு வேறு அவனை அலைக்கழிக்க, சமர்த்தியைப் பார்க்கும் வேகத்தில் அறைக்கு வந்தான்.

அவளோ நன்கு உறங்கிக் கொண்டிருப்பது தெரிய, ஒரு பெருமூச்சுதான் வெளியே வந்தது.

சத்தியமாக அவளுக்கு எப்படித் தன்னைப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. இப்படி அவன் யாரிடமும் உணர்ச்சிகளைக் கொட்டியதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை.

இப்போது தன்னவளின் அன்புக்காய் ஏங்கி நிற்கும் அவனுக்கும் அதற்கான வழியை எப்படித் தேடுவது என்றும் புரியவில்லை.

சிலர் சொன்னால் புரிந்துகொள்வார்கள். சிலர் செயலால் புரிந்துகொள்வார்கள். இவளோ, எந்த வகையிலும் அவனைப் புரிந்துகொள்ளாமல், பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதிலே தான் நிற்கிறாள். அவள் எதிர்பார்ப்பது ஜூலியட்டினினுடைய உண்மை வாழ்க்கையை. அதை எப்படி அவளிடம் கூறுவான்? அவன் மனைவியே ஆனாலும், இன்னொருத்தரின் வாழ்க்கையை பற்றிக் கூற அவனுக்கு என்ன அதிகாரமிருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையையே பரமரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன்… அப்படியிருக்கையில், இன்னொருத்தியின் வாழ்க்கையை பற்றி விமர்சிப்பது தவறு அல்லவா… ஜூலியட்டைப் பற்றிய உண்மை தெரிந்தால் மட்டும்தான் இவன் மீதான சந்தேகம் முழுதாக ஓயும். அதற்காக எப்படி சொல்லக்கூடாத ரகசியத்தை சொல்வான்… அவனுடைய முகத்தில் பெரிய வேதனையின் சாயல் அப்பிக்கொண்டது.

அந்த நேரம் சமர்த்தியின் வயிறு ஏறி இறங்க அதுவரையிருந்த யோசனை காணாமல் போக அங்கே மெல்லிய இன்பப் புன்னகை ஒன்று வந்து அமர்ந்து கொண்டது. விரைந்து சமர்த்தியை நெருங்கியவன்,

“ஹே… மை ஃப்ரன்ட்… ஹவ் ஆர் யு…” என்றான் அவளுடைய வயிற்றைப் பெரு விரலால் வருடிக் கொடுத்தவாறு. மீண்டும் குழந்தை அசைய,

“ஐ நோ யு ஆர் ஓக்கே… பட் ஐ ஆம் நாட்… உன் அம்மா கூட சண்டை பிடித்தேன். சொல்லக் கூடாத, சொல்ல முடியாத ஒன்றை நான் சொல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். நான் என்ன செய்யட்டும்?” என்று மென்மையாய் குழந்தையிடம் கேட்க, மீண்டும் அசைந்தது குழந்தை.

“உனக்கு உன் அம்மா பற்றித் தெரியும்தானே… நெஞ்சு முட்டக் காதலை வைத்துக்கொண்டு, அதைக் காட்டப் பிரியமில்லாமல் கண்ட கசடுகளை மனதில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறாள்… நானும் எனக்குள்ளே காதலை பூட்டி வைத்திருக்கிறேன். எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. சொல்லலாம் என்று நினைக்கும்போது ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்தது நினைவுக்கு வந்து அந்த எண்ணத்தையே தவிடு பொடியாக்கி விடுகிறது… இந்த நிலையில் எப்படிச் சொல்வது…” என்றவன், அவள் வயிற்றை உற்றுபார்த்து,

“ஹே… ஜூனியர் டு யு ஹாவ் எனி ஐடியா…” என்று இன்னும் பிறக்காத தன் மகவிடம் கேட்க, குழந்தையோ இப்போது சுத்தமாக அசைவை நிறுத்தி தந்தையின் சுவாரசியமற்ற பேச்சில் உறங்கச் சென்றிருந்தது. இவனோ கோபத்துடன் அவளுடைய வயிற்றை முறைத்து,

“டு யு திங்க் தட் ஐ ஆம் போரிங்…” என்று இவன் கேட்க அப்போதும் குழந்தை அசையவில்லை. பெருமூச்சுடன் தன் தலையை அசைத்தவன், உதடுகளை கடித்து விடுவித்து,

“ஓக்கே ஐ கோட் இட்…” என்று விட்டு எழுந்து தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிவிட்டு, ஆடை மாற்றிவிட்டுப் படுக்கையில் விழுந்தான். உறக்கம் சுத்தமாக வரவில்லை. இரண்டு மணி வரை தூங்க முயன்றவன், முடியாமல் எழுந்து சமர்த்திப் படுத்திருந்த அறைக்கு வந்து அவளருகே படுத்து முன்தினம் போலவே பட்டும் படாமலும் அவளை அணைத்தவாறு விழிகளை மூட மறு கணம் உறக்கம் அவனை சுகமாக அணைத்துக் கொண்டது.

What’s your Reaction?
+1
35
+1
9
+1
2
+1
6
+1
0
+1
3

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!