Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-9/10

 

 9

தயாளன் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததும், அங்கே நின்றிருந்த சமர்த்தியைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தாலும், மறு கணம் பெரும் கூச்சலுடன் அவளைக் குழுமிக்கொண்டனர்.

இரண்டு மணி நேரத்தில் வருவதாகக் கூறி விட்டுச் சென்ற, உத்தியுக்தன் இன்னும் வரவில்லை என்றதும், அத்தனை பேரும் அருகே யிருந்த பூங்காவிற்குப் படையெடுத்தனர். வசந்தன் கூடைப் பந்தையும் எடுத்து வந்திருக்க, சமர்த்தி ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். கொஞ்ச நேரத்தில் ஆவல் தூண்ட சமர்த்தியும் அவர்களோடு இணைந்து கொள்ள, அவள் உடல் நலன் கருதி, அதிகம் அவளுக்குப் பந்தைக் கொடுக்காமல் ஐவரும் விளையாடத் தொடங்கினர்.

அதில் வசந்தன் சமர்த்திக்கும், ரஞ்சனிக்கும் துணையாக இணைந்து கொள்ள. விதற்பரை, ரகுநந்தன், பிரபஞ்சன் மறுபக்கமாக நின்று கொண்டனர்.

சமர்த்தியின் நிலை கருதி, வசந்தன் அதிகம் பந்து அவளிடம் போகாதவாறு பார்த்துக்கொண்டவனாகத் திறம்பட விளையாடத் தொடங்க, மெல்ல மெல்ல விளையாட்டு சூடு பிடிக்கத் தொடங்கியது.

அதுவும் எந்தவிதமான சட்டதிட்டங்களோ, விதிமுறைகளோ இல்லாது, நினைத்த பக்கம் ஓடினர், நினைத்த பக்கம் பாய்ந்தனர், நினைத்த பக்கம் துள்ளினர், நினைத்த பக்கம் கூடையில் பந்தைப் போட்டனர். சின்னத் தவற்றுக்கும் பெரிதாகச் சிரித்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சமர்த்திப் பழையது போல உள்ளம் நெகிழ்ந்து போனவளாய்க் குதூகலமாகவே அந்த நிமிடங்களை அனுபவிக்கத் தொடங்கினாள்.

அதே நேரம் சமர்த்தியை அழைத்துச் செல்ல வந்த உத்தியுக்தன், அவள் அருகேயிருந்த பூங்காவிற்குச் சென்றிருப்பதை அறிந்து நேராக அங்கே வந்தான். தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, அவர்களைத் தேடியவாறு வர, இனிய கலகலத்துச் சிரிக்கும் ஓசை அவனுடைய செவியை வந்து அடைந்தது.

அந்த ஓசை யாருடையது என்று அறியாதவனா அவன்? உள்ளம் சிலிர்க்கச் சட்டென்று அவனுடைய நடை தடைப்பட்டது. செவிகளோ, கலகலத்துச் சிரித்த அந்தச் சிரிப்பை உள்வாங்கிக் கொள்ள உத்தியுக்தன் தன்னையும் மீறி மலர்ந்து போனான்.

அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரி யார் என்று உடனே புரிந்து போனது அவனுக்கு. வேகமாகக் குரல் வந்த திசை நோக்கிச் சென்றவன், அங்கே தன் மருமக்களோடு இணைந்து கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தாலும், மறு கணம் அவளுடைய குதூகலத்தைக் கண்டு தன் அதிர்வை மறந்து கரங்களைக் கட்டியவாறு அங்கிருந்த மரத்தில் சாய்ந்து நின்றவாறு அவளை ரசிக்கத் தொடங்கினான்.

உடல் நலம் கருதி மெதுவாகத்தான் ஓடினாள். பாயவேண்டிய நேரத்தில் பாய முடியாது எக்கிப் பந்தை வாங்கினாள். அவளுடைய நிலைக்கேற்ப மற்றவர்களும் மெதுவாகத்தான் விளையாடினார்கள்.

விளையாடும் போது கலைந்த தலையும், புன்னகையில் அழகாய் மின்னிய வரிசைப் பற்களும், சற்று உடல் களைப்பில் சிவந்திருந்த கன்னங்களும், நீண்ட துருதுருத்த அந்த விழிகளும், எங்கே தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்து நடக்க முடியாமல் நடந்து செல்லும் அழகும், அவனைச் சுண்டி இழுத்தன.

அதுவும் அவள் பந்தைக் கூடையில் போடத் திணறியபோது, ஓடிச்சென்று அவளைப் பற்றித் தூக்கிக் கூடையில் பந்தைப்போட உதவி செய்ய வேண்டும் என்கிற ஆவேசம் எழ, தன்னையும் மீறி அவளை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் உத்தியுக்தன்.

அந்த நேரத்தில், பந்து சமர்த்தியின் அருகே வர லாவகமாகப் பந்தைப் பிடித்தவள், நிலத்தில் அடித்தவாறே, கூடைப்பந்தை நோக்கி மெதுவாக ஓடத் தொடங்க, அவளுடைய இளகிய ஓட்டத்திற்கு ஈடு கொடுத்தாற் போல ரகுநந்தனும் விதற்பரையும் பின்னால் அவளைத் துரத்திக் கொண்டு வர, அவளுடைய போதாத காலம், பந்து வழுக்கித் தரையில் விழுந்து உருள, அதைப் பற்றப்போனவளின் பாதம், பந்தின் மீது பதிய, அது உருண்ட வேகத்தில் சமநிலை தவறித் தரையில் குப்புற விழப்போன அந்த விநாடியில், உத்தியுக்தனின் பலம் பொருந்திய கரம், அவளுடைய மார்பைச் சுற்றி விழுந்து தரை தொடாவண்ணம் காத்துக்கொண்டது.

காத்துக்கொண்டதோடு மட்டுமல்லாது, அவளை இழுத்துத் தன் மீது போட்டு இறுக அணைத்துக் கொள்ள, சமர்த்தியோ, நல்லவேளை விழாது தப்பித்தோம் என்கிற நிம்மதியில், ஓடாமல் ஓடிய களைப்பில் வாயைத் திறந்து மூச்சு விட்டவாறு உத்தியுக்தனின் பரந்த மார்பில் தலைசாய்த்துத் தன்னை ஆசுவாசப் படுத்தினாள்.

10

 

சமர்த்தி விழத் தொடங்கிய அந்தக் கணத்தை உணர்ந்த வசந்தனும், விதற்பரையும் பதறியவாறு அவளை நோக்கிப் போவதற்குள் புயலாக வந்த உத்தியுக்தன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள, பெரும் நிம்மதி பெற்றவர்களாக ஆழ மூச்செடுத்து விட்டனர்.

அவனோ தன் கரத்தில் கிடந்தவளின் ஸ்பரிசத்தை ஒரு கணம் விழிகளை மூடி ஆழ உள்வாங்கிக் கொண்டு மெதுவாக விழிகளைத் திறந்து குனிந்து பார்த்தான். இன்னும் மார்பில் முகத்தைப் புதைத்துக் கிடந்தவளின் தலையில் ஒற்றைக் கரத்தைப் பதித்து,

“ஆர் யு ஓக்கே…” என்றான் மென்மையாய்.

அதுவரை ஓடி வந்த களைப்பு அவளை நிலையிழக்கச் செய்யப் பலமாக மூச்சு எடுத்து விட்டவாறே தலையை ஆம் என்று ஆட்ட, அவளுடைய பதட்டத்தையும் களைப்பையும் புரிந்து கொண்டவனாய் மெதுவாக முதுகைத் தட்டிக் கொடுத்து,

“ஈசி… ஈசி…” என்றான்.

ஓரளவு மூச்சு சமப்பட்டதும், இப்படி எல்லோர் முன்னிலையிலும் அவன் மார்பில் அடைக்கலம் ஆனோமே என்கிற சங்கடத்தில் முகம் சிவக்க, அவனை விட்டுப் பிரிய நினைத்த வேளையில், அவனோ அவளை மேலும் தன்னோடு இறுக அணைத்தவாறு,

“உனது அறிவைக் கொண்டு எங்கே அடகு வைத்தாய்? கொஞ்சமாவது யோசிக்க மாட்டாயா? இந்த நிலைமையில் உனக்கு இந்த விளையாட்டுத் தேவையா? அதுவும் நடப்பதற்கே சிரமப்படுகிறாய்… இந்த நிலையில் கீழே விழுந்திருந்தால் என்னவாகி இருக்கும்…?” என்று கடிய, வேகமாக அவனை விட்டு விலகியவள்,

“அது… ஓடும் போது கால் தடுக்கிவிட்டது… அவ்வளவுதான்… மற்றும்படி நான் நன்றாகத்தான் இருக்கிறேன்…” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி.

அப்போதுதான் கவனித்தான் அவள் ஓடி விளையாடியதில் மேல்சட்டையின் பொத்தான்கள் இரண்டு கழன்றிருப்பதை.

உடனே அவளை நெருங்கி, அவளுடைய அனுமதியையும் வாங்காமல், பொத்தான்களைப் போட்டவாறு,

“இந்த நிலையில் உனக்கு விளையாட்டு தேவையா? உனக்கு மட்டுமல்ல, நம் குழந்தைக்கும் ஆபத்தை வரவழைக்கப் பார்த்தாயே…” என்றான் இன்னும் கோபம் தணியாதவனாக.

தன் ஆடையைச் சரிப்படுத்தும் அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டவள்,

“அதுதானே பார்த்தேன்… என்னடா திடீர் கரிசனை என்று…” என்று எரிச்சலுடன் கூறியவள், தன் மருமக்களை நோக்கிப் போகத் தொடங்க இவனோ அவள் கரம் பற்றி இழுத்து தோள்களின் மீது காரத்தைப் போட்டுத் தன்னோடு இறுக்கி வைத்துக்கொண்டான்.

இவளோ கோபத்துடன் அவனிடமிருந்து விடுபட முயன்றாள். விட்டானா அந்தக் கிராதகன்? நொடியில், தன் வலக்கரத்தை பான்ட்டிற்கும், மேல் சட்டைக்கும் இடையே கொண்டு சென்று சற்றுக் குளிர்ந்த தன் உள்ளங்கையை அவளுடைய மேல் வயிற்றில் வைத்து அழுத்த, சுள்ளிட்ட அந்தக் குளிரில் ஒரு முறை துள்ளி அடங்கினாள் சமர்த்தி.

சற்று நேரம் ஓடி விளையாடியதால், அதுவரை இருந்த குளிர் அப்போதுதான் மட்டுப்பட்டு உடல் சூடேறியிருந்தது. அந்த நேரத்தில் குளிர்ந்த கரத்தை வைத்தால் எப்படியிருக்கும்.

பதறி அவனிடமிருந்து விலக முயல, இவனோ அவளை இறுக்கத் தன்னோடு அணைத்தவாறு, பான்ட் பாக்கட்டிற்குள் மறு கரத்தை வைத்து,

“சொன்னால் கேட்கவேண்டும்… இல்லையா… இதுதான் தண்டனை…” என்று அவளை நோக்கிக் குனிந்து கூறியவனின் உதடுகளில் என்றுமில்லாத குறும்புப் புன்னகை. அதைக் கண்ட சமர்த்தி வாயைப் பிளந்தாள்.

நிஜமாகவே உத்தியுக்தன் குறும்பாய் நகைத்தானா என்ன? நம்ப மாட்டாமல்அவனை அண்ணாந்து பார்க்க, அவனோ அவசரமாகத் தன் முகபாவத்தை மாற்றிவிட்டு எங்கோ பார்த்தான்.

இவளோ குழம்பித்தான் போனாள். இல்லையே அவன் புன்னகைத்ததைப் பார்த்தாளே… அதுவும் குறும்பாய் நகைத்தானே…’ என்று தனக்குள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் போதே,

“ஹாய் மாமா…” என்றவாறு அவனை நோக்கி வந்தனர் அவள் கூடப் பிறக்காத சகோதரர்கள்.

அதுவும் அவனை முதலாய் நெருங்கிய வசந்தன், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சற்றுத் தயங்கி நின்றான்.

உத்தியுக்தனோடு அதிகப் பழக்கம் இல்லாததாலும், அவர்களுக்குள் நடந்த பிரச்சனைகள் ஓரளவு அவனுக்குத் தெரியும் என்பதாலும், ஏனோ அன்னியோன்னியமாக அவனோடு பேச முடியவில்லை. இவனோ தன் மனைவியைக் கைவிடாதவனாக,

“ஹாய் வசந்தன், எப்படியிருக்கிறாய்?” என்றான். அந்தக் குரலிலும் மெல்லிய தயக்கம், சங்கடம் இருந்தாலும், உறவைப் புதுப்பிக்கும் முயற்சி அதில் தெரிய, சங்கடம் கலைந்தவனாய் ஓரிரு வார்த்தைகள் பேசினான் வசந்தன். அப்போது, அவர்களை நோக்கி வந்த பிரபஞ்சன்,

“மாமா எங்களுடன் சேர்ந்து நீங்களும் கூடைப் பந்து விளையாட வாருங்களேன்…” என்றான்.

அவர்களோடு விளையாடவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும், தயக்கத்துடன் சமர்த்தியைப் பார்த்தான். அவன் விளையாடச் சென்றால் இவளும் தொடர்ந்து வருவாள். ஆர்வமாக விளையாட வருபவளை மறுக்கும் சக்தி இவனுக்கில்லை. கூடவே, கவனம் அவள்மீதுதான் இருக்குமே தவிர விளையாட்டில் இருக்காது. அதனால் பிரபஞ்சனைப் பார்த்தது,

“இன்னொரு நாள் விளையாட வருகிறேன்… இப்போது உங்கள் அத்தை விளையாடக் கூடிய மாதிரி இலகுவானதாக விளையாடலாமே…” என்றான். அதைக் கேட்ட விதற்பரை

“ஆமாம்… மாமா சொல்வதும் சரிதான்… வீட்டிற்குப் போய்க் காரம்போர்ட் விளையாடலாம்… இல்லையென்றால், அத்தையோடு சிரமம்” என்றதும், அது எல்லோருக்கும் பிடித்துப்போனது. உத்தியுக்தன் தான் தன் புருவங்களைத் தூக்கி,

“கரம்போர்டா…?” என்றான் வியப்பாய்.

“அது ஒன்றும் சிரமமில்லை அண்ணா… வாருங்கள் சொல்லிக் கொடுக்கிறேன்…” என்ற ரகுநந்தன் அவன் கரத்தைப் பற்றி இழுத்தவாறு வீடு நோக்கி முன்னே நடக்கத் தொடங்கினான்.

அதுவரை தன் மனையாளின் இடையைப் பற்றியிருந்த அவன் கரம் அவளை விட்டுவிடாது, அவளுடய கரத்தைப் பற்றித் தன்னோடு இழுத்துக் கொண்டு செல்ல, இவளும் அவனுடைய இழுப்புக்கு ஏற்ப நடந்து சென்றாள்.

வீடு கால்நடை தூரம்தான் என்பதால், உத்தியுக்தன் வாகனத்தைப் பூங்காவின் அருகேயே விட்டுவிட்டு, இவர்களோடு நடக்கத் தொடங்க, அந்த ஐவரும் போட்ட சத்தத்திலும் கும்மாளத்திலும் பெரிதும் வியந்ததான் போனான்.

இதெல்லாம் வாழ்வில் அவன் அறிந்திராத புதுமையாயிற்றே. இத்தனை மகிழ்ச்சியாகவும் குதுகலமாகவும் இருக்க முடியுமா என்ன?

அவன் எங்கு சென்றாலும் அவனுக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. எல்லோரும் சட்டென்று அவனை நெருங்கிவிடமாட்டார்கள். அவனுடைய பதவி, தராதரம் அனைத்தும் ஏதோ அவன் மலை என்றும் தாங்கள் மடு என்றும் ஒரு உணர்வை எதிராளிக்குக் கொடுத்து விடுவதால், பெரிய நெருக்கம் அதிகமாக வந்துவிடுவதில்லை.

ஆனால் இங்கே, அவனும் ஒரு சாதாரண மனிதனாகவே கணிக்கப்பட்டதால், அவனும் மெல்ல மெல்லத் தன் பொன் கூட்டை விட்டு வெளியே தலைகாட்டத் தலைப்பட்டான்.

கரம்போர்டை வசதியாகச் சற்று உயர்ந்த மேசையில் வைத்துவிட்டுக் காய்களை அடுக்கத் தொடங்க அவனுக்கும் ஒரு இருக்கை கொடுக்கப் பட்டது. அதில் அமரவைத்துவிட்டு, எப்படி விளையாட வேண்டும் என்று கூற அதை உன்னிப்பாகச் செவி மடுக்கத் தொடங்கினான் உத்தியுக்தன். விளங்கப் படுத்தி முடிந்தபின், சமர்த்தியைப் பார்த்த வசந்தன்,

“மாமா ஆடட்டும், நீ அவருக்கு உதவி செய் அத்தை…” என்றுவிட்டுத் திரும்பி விதர்ப்பரையைப் பார்த்து, நீயும் ரஞ்சனியும் ஒரு அணி, என்றான். இவளோ,

“அது எப்படி, ரஞ்சனி டம்மிபீஸ்… விளையாட மாட்டாள். செல்லாது செல்லாது… நானும் பிரபஞ்சனும் ஒரு கட்சி…” என்று முறுக்கிக் கொள்ளத் தன் தலையில் அடித்தவன்,

“இம்சை… வைத்துத் தொலை…” என்று கூறி விட்டு, “ரகு நீயும் ரஞ்சனியும் ஒரு கட்சி… நான் தனித்து விளையாடுகிறேன்… சரியா…” என்று விட்டு மரியாதை கருதி, உத்தியுக்தனின் புறமாக, டிஸ்கைத் தள்ள, அவனோ அதை இரண்டுகோடுகளுக்கும் மேலே வைத்து அடுத்து என்ன செய்வது என்பது போல விழித்தான்.

உடனே அவன் புறமாக முழங்கால் மடித்து அமர்ந்த சமர்த்தி,

“இப்படியல்ல உதிதன்… இப்படி…” என்றவாறு அதைச் சரியாக வைத்துவிட்டு எப்படி அதை சுண்ட வேண்டும் என்று செய்து காட்டிவிட்டுக் கரத்தை எடுக்க, அவனோ விரல்களை வைத்து தக்கதிம்மித் தா ஆடினானே அன்றிச் சுண்டினானில்லை. அதைக் கண்டு கடுப்பான சமர்த்தி,

“பச், சுண்டுவது கூடத் தெரியாமல் எப்படிப் பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை மேய்க்கிறீர்களோ?” என்று எரிச்சலுடன் கூறியவாறு, தன் கரத்தைச் சுண்டுவது போலப் பிடித்துக் காட்டி, அவனுடைய விரல்களையும் பிடித்துச் சரியாக வைத்து,

“ம்… இப்போது சுண்டுங்கள்…” என்றாள். உத்தியுக்தனின் கவனம் சுத்தமாக விளையாட்டில் இருக்கவில்லை.

தன்னை மறந்து அவன் இடது தொடை மீது சாய்ந்தமர்ந்தவாறு, அவனுடைய கரங்களைப் பற்றிச் சொல்லிக்கொடுத்த சமர்த்தியின் மீதுதான் முழுக் கவனமும் இருந்தது.

“எங்கே பராக்குப் பார்க்கிறீர்கள்… ம்… சுண்டுங்கள்…” என்று விளையாட்டின் ஆர்வத்தில் அவள் கடிய, அவனுடைய உதட்டுக்குள் மீண்டும் ஒரு மெல்லிய குறும்புப் புன்னகை தவழ்ந்தது.

கரம்போர்ட் விளையாடுவது ஒன்றும் அத்தனை பிரம்ம ரகசியம் கிடையாதுதான். அதுவும் ஆங்கிலேயர்களுடைய பூல் (ஜீஷீஷீறீ) விளையாட்டில் கைதேர்ந்தவன் அவன். எந்தக் கோணத்தில் அடித்தால் எந்தக் காய் எங்கே சென்று எப்படி விழும் என்று கரைத்துக் குடித்தவனுக்கு இது பெரிய சிரமமில்லைதான். ஆனால் இப்படி இரண்டரை அடி நீள அகலம் உள்ள ஒரு மரப்பலகையில் காய்களை வைத்துக் கரங்களால் அடிப்பது என்பது புதுமையே. அதுவும் கோடுகளுக்கு மத்தியில் தட்டை வைத்து அடிப்பது அத்தனை இலகு அல்லதான்.

அதில் இவனுக்கு எதுவுமே தெரியாது என்பது போலச் சொல்லிக்கொடுக்க வந்த மனைவியின் அருகாமை வேறு இவனுக்கு மிக மிகப் பிடித்துப் போக, புத்தி கொஞ்சம் தன் செயற்பாட்டை இழந்து தான் பொனது.

அவள் உடல் சூட்டைத் தன் உடலால் உணர்ந்தாவேற, நமட்டுச் சிரிப்புடன் அவளை ஏறிட்டவன், பின் வேண்டும் என்றே டிஸ்கைத் தவறாகச் சுண்ட, டிஸ் காயில் படாது எங்கெங்கோ பட்டுச் சென்றது. அதைக் கண்டதும் இவளுக்குக் கோபம் வந்தது.

“உதிதன்…! என்ன முட்டாள் தனமாக விளையாடுகிறீர்கள்…” என்று சினந்தவள், தன் மருமக்களைப் பார்த்து,

“இது செல்லாது செல்லாது… முதலிலிருந்து விளையாடலாம்…” என்றாள்.

உதிதனுக்கு இந்த விளையாட்டு புதிது என்பதால், அவர்களும் சம்மதம் சொல்ல ஒரு வாய்ப்புக் கொடத்தார்கள். அப்போதும் அவன் தவறாகவே அடித்தான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தவள், “உங்களை…” என்றவள் மீண்டும் தன் மருமக்களைப் பார்த்து,

“இதுவும் செல்லாது… இது சும்மா அடித்துப் பார்த்தார்… நிஜமாகவே அவர் விளையாட ஆரம்பிக்கவில்லை…” என்று பாய்ந்து டிஸ்கைப் பறிக்கப் போக, அதை உணர்ந்த ரகுநந்தன்,

“அதெல்லாம் முடியாது… நீ அலாப்புகிறாய்… (தமிழ் ஈழத்தில் விளையாடும்போது ஏமாற்றுதலை அலாப்புதல் என்று சொல்வார்கள்) அடித்தால் அடித்ததுதான்… இப்போது என்னுடைய முறை…” என்று பறித்துச் சுண்டப்போகத் தன் மருமகனைக் கோபமாக முறைத்தவள், சற்றும் யோசிக்காமல் அத்தனை காயையும் கலைத்து விட, ரகுநந்தனோ தன் நெற்றிக்கண்ணைத் திறந்து சமர்த்தியைப் பார்த்தான்.

“இப்போது அடுக்கிங்கள்டா திரும்ப…” என்று தலையை நிமிர்த்திக் கூற, பிரபஞ்சனோ தன் தலையில் தட்டி,

“அத்தை… என்ன இது… உன்னோடு இதுவே வேலையாகப் போய் விட்டது. எப்போதுதான் ஒழுங்காக எங்களை விளையாட விட்டிருக்கிறாய்? நீ தோற்கப்போவது தெரிந்தாலே இப்படித்தான் செய்வாய்… இப்போது மாமாவுக்காக செய்கிறாயா… உன்னை..” என்று எரிச்சலில் சொன்னவாறு மீண்டும் காய்களை அடுக்கிவிட்டு ரகுநந்தனிடம் டிஸ்கைக் கொடுக்க,

“என்கிட்டேயேவா…” என்பதுபோல சமர்த்தியை நெஞ்சை நிமிர்த்திப் பார்த்துவிட்டு டிஸ்கைச் சுண்ட, அவன் சுண்டிய வேகத்தில் காய்கள் சிதறி நாலா பக்கமும் பறந்து சென்று, குறைந்தது நான்கு காய்களாவது பைக்குள் விழுந்து…

பெரும் ஆர்வத்துடன் பறந்து செல்லும் காய்களுக்காக ரகுநந்தன் காத்திருக்க அந்தோ பரிதாபம், அவன் சுண்டிய டிஸ்கைக் காணோம். அது மாயமாக மறைந்து விட்டிருந்தது.

என்னாச்சு? இப்பதானே சுண்டினான். அதற்குள் அது எங்கே போனது?

குழப்பத்துடன் டிஸ்க்கைத் தேட, சமர்த்தியோ கிண்டல் புன்னகையுடன் தன் கரத்திலிருந்த டிஸ்கைத் தூக்கிக் காட்டினாள்.

அந்த அலாப்பி எப்போது டிஸ்கைத் தன்னிட மிருந்து பறித்தாள் என்று புரியாமல் ரகுநந்தன் குழம்ப, சமர்த்தியோ குலுங்கி நகைத்தவாறு, உத்தியுக்தனுக்கு முன்னால் டிஸ்கை வைத்து,

“ஒழுங்காகக் காய்களைப் பார்த்து அடியுங்கள்… இல்லை…” என்று எச்சரித்துவிட்டு அவன் சுண்டுவதைப் பார்க்கும் ஆவலுடன் விழிகளை விரித்து நின்றாள்.

உத்தியுக்தனுக்குச் சிரிப்பு பீரிட்டுக்கொண்டு வந்தது. சிரமப்பட்டு அடக்கியவனாக இப்போதும் டிஸ்கைத் தவறாக அடிக்க, அது இப்போதும் பட்டும் படாமலும் தான் சென்றது.

பொறுமை இழந்தவளாக, உத்தியுக்தனை அண்ணாந்து பார்த்து முறைத்தவள்,

“உண்மையைச் செல்லுங்கள்… இந்த விளையாட்டைக் கூட ஒழுங்காக விளையாடத் தெரியாத உங்களுக்கு வேறு எந்த விளையாட்டு தான் தெரியும்?” என்று எரிச்சலுடன் கேட்க, அவனோ அவளைக் குனிந்து பார்த்து நமட்டுப் புன்னகை ஒன்றைச் சிந்தியவாறு விழிகளால் அவள் விழிகளைப் பார்த்துப் பின், மேடிட்ட அவளுடைய வயிற்றையும் பார்த்து, ஒற்றைப் புருவத்தை மேலேற்றி, உனக்குத் தெரியாதா என்பதுபோலப் பார்க்க, அதுவரையிருந்த சூழ்நிலை மொத்தமாக மாறிப்போனது சமர்த்திக்கு.

அப்போதுதான் தான் இருக்கும் நிலையே அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அவனை விட்டு விலகியவளுக்கு, நெஞ்சம் பலமாக அடித்தது.

என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாள். மருமக்களைக் கண்ட மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்துவிட்டாளே. சீ… அவன் செய்த துரோகத்தை எப்படி மறந்தோம்? குழம்பியவாறு விலக முயன்ற நேரம்,

“ஹூரே…” என்கிற சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சமர்த்தி.

உத்தியுக்தன்தான் இப்போது டிஸ்க்கை வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். மிக அனாயாசமாக ஒவ்வொரு காய்களையும் யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல் கரம்போர்ட் பாக்கட்டில் போட்டுக்கொண்டிருந்தான்.

இறுதியாகக் குயினை விழுத்திக் கறுப்புக் காயை வீழ்த்த வேண்டும். அனைவரும் உயிரைக் கையில் பிடித்திருப்பதுபோலத் திறந்த வாயைக் கூட மூட முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, சமர்த்தியும் தன் நினைவை உதறியவளாகத் தன் கணவனின் வெற்றிக்காகக் காத்திருந்தாள்.

அவனோ சரியாக டிஸ்க்கை வைத்து எங்கோ ஒரு கோணத்திற்குப் பலமாகச் சுண்டிவிட, அது வலது பக்கம் அடிபட்டுச் சுழன்று சென்று கீழ்பக்கம் அடிபட்டு மேலே வந்து சரியாகச் சிவப்புக் காயைத் தட்டிவிட, சமத்தாகச் சென்று பாக்கட்டில் விழுந்தது குயின்.

இப்போது இறுதியாக அந்தக் கறுத்த காயை விழுத்தினால்தான் அவன் வென்றதாகும்.

“மாமா… இந்தக் கறுப்பை விழுத்தினால்தான் குயின் உங்களுக்குச் சொந்தம். இல்லை அது எங்களுக்குரியது…” என்று பிரபஞ்சன் கிண்டலாகக் கூற, மெல்லியதாகச் சிரித்தவன், ஒரு கணம் விழிகளை மூடினான். பின் திறந்து, அந்தக் கறுத்தக் காயைக் குறிவைத்து அடிக்க, அது பலமாக அடிவாங்கி நேராகச் சென்று முட்டுப்பட்டு அப்படியே பின்னோக்கி வந்து பாக்கட்டில் விழுந்து அந்தக் குயின் அவனுக்குரியது என்பதைப் பறைசாற்ற, அத்தனைப்பேரும் தாம் தோற்றுவிட்டோம் என்கிற கவலையே இல்லாமல், மாமா ஜெயித்துவிட்டார் என்கிற மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, அந்த வீடே ஒரு கணம் அலறி அடங்கியது. வென்றவனை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த சமர்த்தியின் புறமாகக் குனிந்தவன்,

“இந்தக் குயின் எப்போதும் எனக்குரியது… எனக்கு மட்டும் உரியது…” என்றவன் பின் இன்னும் குனிந்து, “எதையும் கற்றுக்கொண்டால் சுலபமாக விளையாடலாம் சமர்த்தி… வாழ்க்கையையும்தான்…” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

பின், எழுந்தவாறு, “ஓக்கே காய்ஸ்… நேரம் போய்விட்டது… நாங்கள் புறப்படவேண்டும்…” என்றவாறு மனைவியின் கரத்தைப் பற்றியவாறு புறப்படத் தயாராக, சமையலை முடித்துக்கொண்டு வந்த புஷ்பா,

“தம்பி சாப்பாடு தயார்… சாப்பிட்டு விட்டுப் போங்கள்… சத்தி… போய்க் கை கழுவிவிட்டு வா…” என்று உத்தரவிட, அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

புஷ்பா மனமார அன்பு சொட்டச் சொட்டச் சமைத்ததாலோ என்னவோ உணவு தேவாமிர்தமாக இருந்தது அனைவருக்கும். அதுவும் சமர்த்தி,

“அண்ணி உங்கள் கையால் சாப்பிட்டு எத்தனை நாட்களாகிவிட்டன இந்தச் சாப்பாட்டிற்காக எத்தனை ஏங்கினேன் தெரியுமா?” என்று தன்னை மறந்து சொன்னபோதுதான், அனைவருக்கும் சூழ்நிலையில் தாற்பரியம் புரிந்தது.

எல்லோரும் கடந்தகாலத்தை மறந்து எத்தனை சந்தோஷமாக இருந்துவிட்டார்கள். இந்தச் சந்தோஷம் நிலைக்குமா? இல்லை இடைவெளியில் கரைந்து போகுமா? அதைப் படைத்தவன் ஒருவனுக்கு மட்டும்தானே வெளிச்சம்.

What’s your Reaction?
+1
32
+1
18
+1
5
+1
1
+1
0
+1
3

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-9/10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!