Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-3

3

 

விடுதியா அது. அம்மாடி… அரச மாளிகை. அத்தனை பிரமாண்டமாக இருந்தது விடுதி. அதுவும் அரச குடும்பங்கள் வாழும் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள விடுதியாயிற்றே… பிறகு எப்படி இருக்கும்.

மின்னல் வேகத்தில் உத்தியுக்தனைத் தேடி ஓட, அவளுடைய நல்ல காலம் இருவரும் மின்தூக்கிக்குள் நுழைந்துகொண்டிருந்தனர்.

உடனே ஹூடியைத் தலையை மறைத்தாற் போலப் போட்டுக்கொண்டு, அதே மின்தூக்கியில் ஏறியவள், யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புவது போலப் பாசாங்கு செய்துகொண்டு அவர்களின் நெருக்கத்தைத் தன் கைப்பேசியில் நிகழ்பதிவு செய்தாள்.

மனமோ ஆத்திரத்தில் கொந்தளித்தது. எத்தனை தைரியம்? ஒருத்தரை இரண்டு பேரையா ஏமாற்றினான். பல லட்சம் மக்களை அல்லவா ஏமாற்றுகிறான்.

‘டேய் பாதகா…! இதனால்தான் உன் தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்திருக்கிறாயா? எங்கே உன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சி தான் இப்படி நடந்துகொள்கிறாயா? சிக்கினாயடா மகனே… வா… வா… உனக்கு இருக்கிறது ஆப்பு… உன்னைப் போல இரட்டை வாழ்க்கை வாழும் ஆண்களுக்கு இதுதான் தண்டனை’ என்று மனதிற்குள் அர்ச்சித்தவளுக்கு உள்ளே கொதிக்கத் தொடங்கியது.

அவனோ அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்கிற எண்ணமே இல்லாதவன் போல இதழ் முத்தமும், இடை அணைப்பும், என்று அந்தப் பெண்ணைப் பிழிந்து எடுத்துக்கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் இவளுக்குக் கூட நடிக்க முடியாமல் போனது. மனமோ அருவெறுத்தது.

முகம் சிவக்கத் தடுமாற்றத்துடன் திரும்பிக் கொள்ள, அந்த உத்தியுக்தன் சற்றுக் கவனம் சிதைந்தான் போல. இவளை நிமிர்ந்து மேல்க் கண்ணால் பார்த்துவிட்டு மீண்டும் தன கைவளைவில் இருந்தவளிடம் கவனம் செலுத்தத் தொடங்கினான்.

எப்படியோ அவன் எந்த அறைக்குள் நுழைந்தான் என்பதை அவன் பின்னாலேயே சென்று கண்டறிந்து விட்டு வந்தவளுக்கு ஆத்திரம் சற்றும் மட்டுப் படவில்லை.

மறு நாள் அதிகாலையே சும்மா ஊரைச் சுற்றிப்பார்க்கிறேன் என்று அண்ணனிடம் சம்மதம் பெற்றுக் கொண்டு, அவள் கூட வர முயன்ற விதற்பரையை எப்படியோ சமாளித்துத் தடுத்துவிட்டு, விதற்பரையின் தோளில் தொங்கிக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டு நேராக அந்த உத்தியுக்தன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றாள்.

அருகாமையிலிருந்த தேநீர்க் கடையில் சுடு பாணம் வாங்கிக் குடித்தவாறு விடுதியின் வாசலையே நோட்டம் விட்டுக்கொண்டிருக்க, இவளை முடிந்த வரை காக்க வைத்து ஒரு மணியளவில் வெளியே வந்தான் உத்தியுக்தன். இப்போது அந்தத் தொடுப்பைக் காணவில்லை.

எழுந்தவள், தன் தோளில் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து, முகத்தைச் சுற்றி மறைத்து, நிக்கா போலக் கட்டியவள், மின்தூக்கியில் ஏறி, அவனுடைய தளத்தை வந்தடைந்தாள்.

அவனுடைய அறை நோக்கிச் சென்றவளுக்கு எப்படி உள்ளே நுழைவது என்கிற குழப்பம் தோன்றியது. உள்ளே நுழையத் திறப்பு வேண்டுமே.

அந்த வேளை அறைகளை சுத்தம் செய்யும் பணிப்பாளர் சற்றுத் தொலைவிலிருந்த அறையைச் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார். அதைக் கண்டவளின் முகம் மலர்ந்து போனது. பழம் நழுவிப் பாலில் அல்லவா விழுந்துவிட்டது.

அந்தப் பணிப்பாளர் தள்ளுவண்டியைத் தள்ளியவாறு இவள் திசை வரத் தொடங்க, இவள் அந்த பணிப்பாளரை நோக்கி நடந்தாள்.

பணிப்பாளரின் வண்டியை நெருங்கியதும், அந்த வண்டியில் மூட்டித் தடுக்கி விழுந்தாள் சமர்த்தி. பதறிய பணிப்பாளர்,

“ஓ… சாரி சாரி… ஆர் யு ஓக்கே…” என்றவாறு அவளை நெருங்கித் தூக்கிவிட முயல, எழுந்தவள்,

“இட்ஸ் ஓக்கே… என் மீதும் தவறு இருக்கிறது…” என்று அழகாகப் புன்னகைத்துவிட்டு நடக்கத் தொடங்கியவளின் கரத்தில் அந்தப் பணிப்பாளரின் கதவு திறக்கும் அட்டை சிக்கியிருந்தது.

உத்தியுக்தனின் அறையை நெருங்கும்போது மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பணிப்பாளர் திறப்பை தொலைத்ததுகூடத் தெரியாமல் ஒரு வளைவில் திரும்பிக்கொண்டிருந்தார்.

நிம்மதி மூச்சுடன் அந்தப் பெண் பித்தனின் அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

தேவையின்றி ஒரு மனிதனின் அந்தரங்கத்திற்குள் நுழைகிறோம் என்றோ, இதனால் அவனுடைய வாழ்வில் நிறையச் சிக்கல்களை ஏற்படுத்தப் போகிறோம் என்றோ சற்றும் யோசிக்காமல், கதவை மூடிவிட்டுச் சுத்தவரப் பார்த்தாள்.

பணம் படைத்தவர்களுக்கான விடுதி என்பதால். ஒவ்வொரு அங்குலத்திலும் பணத்தின் செழிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அதைக் கண்டவளின் உதடுகள் மெல்லியதாகச் சுழித்துக் கொண்டன.

ஒரு நாள் படுக்கையில் விழுந்து தூங்குவதற்கு இத்தனை பணம் செலவழிக்க வேண்டுமா என்ன? எல்லாம் பணம் படுத்தும் பாடு. அலட்சியமாக எண்ணியவளின் விழிகள் மட்டுமல்ல, கரத்திலிருந்த கைப்பேசியும் அங்குலம் அங்குலமாக அந்த அறையைப் படம் பிடித்தது.

ஒலிப்பதிவை நிறுத்தாமலே அங்கே இருந்த கபேர்டைத் திறந்து பார்த்தாள். ஓரிரண்டு ஆடைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதைத் தவிர வேறு எதுவும் கருத்தைக் கவரும்படியில்லை. சலிப்புடன் பூட்டியவள், படுக்கையை நெருங்கினாள். பக்கத்தில் இருந்த விளக்கு மேசையின் இழுப்பறையைத் திறந்தாள். சுத்தமாக இருந்தது.

அடுத்த இழுப்பறையைத் திறந்தாள். எதோ வியாபாரம் சார்ந்த புத்தகங்கள். அவற்றை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தாள். சுவாரசியமாக எதுவும் தட்டுப்படவில்லை.

சலிப்புடன் மீண்டும் உள்ளே வைத்துப் பூட்டியவள் மறுபக்கத்திலிருந்த விளக்கு மேசையை நெருங்கி இழுப்பறையைத் திறந்தாள். அதில் ஒரு உறையிருக்க எடுத்துத்துப் பார்க்க அங்கே அவனும், அவனுடைய காதலி ஜூலியட்டும் நெருக்கமாக நின்றவாறு எடுக்கப்பட்ட படம் இருந்தது. அதைக் கண்டதும் இவளுடைய உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன.

‘அடப் பாவமே…? இங்கே இவன் இப்படி ஒரு பெண்ணோடு கூத்தடிப்பது கூடத் தெரியாமல் எந்த நாட்டில் என்ன மாடலிங்குக்குப் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறாளோ…!’ என்று எண்ணியவாறு அதையும் படமெடுக்கும்போதே, உள்ளேயிருந்த பெண்ணியம் தாறுமாறாக விழித்துக் கொண்டது.

எத்தனை தைரியம் இவனுக்கு… அங்கே ஒருத்தியை மணக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, அதுவும் காதலித்துத் திருமணம் செய்ய ஒப்பந்தம் செய்துவிட்டு, இப்படி சைக்கிள் காப்பில் இன்னொரு பெண்ணோடு உல்லாசமாகத் திரிகிறானே… பாவி… பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்ய லாமா என்ன? எல்லாம் ஆண் என்கிற திமிர்…’ கொதித்துக்கொண்டிருக்கும்போதே, வேகமாக அந்த விடுதி அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

அறை திறக்கும் சத்தம் கேட்டதும் விதிர் விதிர்த்துப் போனாள் சமர்த்தி.

நல்லவேளை கதவு திறந்த உடன் படுக்கையறை கண்களுக்குத் தெரியாது. வரவேற்பறையைத் தாண்டித்தான் உள்ளே வரவேண்டும்.

கதவு திறந்த வேகத்திலேயே நடுங்கும் கரங்கள் கொண்டு கரத்திலிருந்த படத்தை மின்னல் விரைவுடன் அந்த உறைக்குள் திணித்தவள், அதை மேசையின் இழுப்பறைக்குள் எறிந்து விட்டு சத்தம் எழாதவாறு பூட்டிவிட்டு, தன் கைப்பேசியை அணைத்து பாண்ட் பாக்கட்டிற்குள் திணித்தவாறு, ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.

அவன் வருவதற்குள் சமாளிக்கவேண்டும்… எப்படி? யோசனை தோன்றப் பாய்ந்து படுக்கையை விரிப்பது போலப் பாசாங்கு செய்யத் தொடங்கினாள்.

அந்த நேரம் தன் நீளக் கால்களை வீசியவாறு உள்ளே நுழைந்தான் உத்தியுக்தன்.

எகிறித் துடிக்க முயன்ற இதயத்தைச் சமப்படுத்த எவ்வளவு முயன்றும், உடலில் சடார் என்று பரவிய நடுக்கத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

ஆனாலும், சிரமப்பட்டு சாதாரணமாகத் திரும்பிப் பார்ப்பது போல அவனைப் பார்த்தவளுக்கு ஏனோ அந்த உலகமே தன் அசைவை நிறுத்திய உணர்வு.

அவனைப் படத்தில் பார்த்திருக்கிறாள்தான். முன்தினம் நேரில் அதுவும் சற்று நெருக்கத்திலும் பார்த்தாள்தான். ஆனால் இப்போது மிக அருகே பார்க்கும்போது பனை மரம் ஒன்றை அண்ணாந்து பார்க்கும் உணர்வுதான் உள்ளே எழுந்தது. இல்லை இல்லை இமய மலையை நெருக்கமாக நின்று அதன் உச்சியைப் பார்ப்பதுபோல பெரும் மலைப்புத் தோன்றியது.

ஏனோ அவனுடைய உருவம் விஸ்வரூபம் எடுத்திருப்பது போன்ற ஒரு மாயைத் தோற்றத்தை உள்ளுக்குள் உருவாக்க, அலமலந்து போனாள். உடலோ அவளையும் மீறி வெடவெடக்கத் தொடங்கியது. தொண்டைக் குழி காய்ந்து நாக்கு வறண்டு போனது. முகம் வெளிறிப்போனது.

அம்மாடி…! எத்தனை உயரம்…! குறைந்தது அவளை விட ஒரு அடியாவது உயரமாக இருப்பான். ஆறடி மூன்றங்குலம் அல்லது நான்கங்குலம் இருப்பானா. அந்த உயரத்திற்குத் தோதாக அகன்ற தோள்கள். சடார் என்று ஒடுங்கிய இடை. உறுதியான கால்கள். பார்க்கப்போனால் சற்று மெல்லிய தேகம் போலத்தான் தோன்றியது. ஆனால் அவன் உடல் மிக்க உறுதி கொண்டவை. அதாவது இரும்பை ஒத்தது என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அதை எடுத்துக்காட்டும் வகையில் பல ஆயிர டாலர்களை விழுங்கிய இத்தாலியன் சூட்டையும் மீறித் திமிறித் தெரிந்த இருதலைப் புஜத் தசைகள். அடர்ந்த சுருண்ட குழலை வாரி ஒரு பக்கமாக இழுத்திருந்தான். பரந்த நெற்றியில் அடர்ந்த இரு புருவங்கள். தொட்டால் சுடும் கூரிய நாசி. அழுத்தமான சிரிக்கா உதடுகள். அவை ஒரு வித விதிர்ப்பைக் கொடுத்தது மட்டும் நிஜம்… ஆனால் அவனுடைய அந்த விழிகள்… இவனா பெண்பித்தன். இவனா பெண்களின் பின்னால் அலைகிறான். அவளால் நம்பவே முடியவில்லை. அந்தக் கூரிய விழிகளில் எந்த சலனமும் இல்லை. எந்தத் தயக்கமோ, சுவாரசியமோ இன்றி இவளை நேரடியாகவே துளைத்தெடுப்பதுபோல ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருக்க உள்ளுக்குள்ளே அச்சம் பயங்கரமாக ஊற்றெடுத்தது.

அவனும் அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை போலும். மெல்லிய அதிர்ச்சி அவன் முகத்தில். கூடவே தன் இரு கரங்களையும் பான்ட் பாக்கட்டிற்குள் செருகியவாறு நிதானமாக அவளைப் பாதம் முதல் தலை உச்சி வரை பார்க்க மேலும் இவளுக்கு உதறல் எடுத்தது. நல்லவேளை முகத்தை மறைத்துத் திரை போட்டிருந்தாள். இல்லை என்றால் என்னவாகியிருக்கும்.

இப்படித் திடீர் என்று வந்து நிற்பான் என்று கனவா கண்டாள்? கடவுளே இப்போது எப்படித் தப்பிப்பது…? தடுமாறிக்கொண்டிருக்கும்போதே,

“ஹூத ஹெல் ஆர் யு…” என்றான் அண்மை பொங்கி வழியும் கரகரத்த அடிக் குரலில். ஒரு கணம் அந்தக் குரலில் சமர்த்தியே தடுமாறிப்போனாள்.

அம்மாடி என்ன குரல் இது…? அந்த அழுத்தத்திலும் அது வெளியே வந்த வேகத்திலும் தான் எத்தனை ஆண்மை! தொலைகாட்ச்சிலும், வானொலியிலும் கேட்ட குரல்தான். இப்போது நேரடியாக கேட்கும்போது அதன் வீரியம் மிக அதிகமாக இருந்தது. விளைவு பயத்தையும் மீறி அவளுடைய இதயம் படபடத்தது.

நிச்சயமாக அவன் குரலைக் கேட்டே பெண்கள் மயங்கிப்போவார்களே… அப்படியிருக்கையில் இவன் பெண்பித்தனாக அலைவதில் தவறில்லைதான் போலும். விட்டில் பூச்சிகள் தாமாக விளக்கின் மீது விழும்போது விளக்கும்தான் என்ன செய்யும் என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் அவனுக்குச் சார்பாகத் தான் நினைப்பதே புரிந்தது.

“உன்னைத்தான் கேட்கிறேன்… இங்கே என்ன செய்கிறாய்?” என்றான் ஆங்கிலத்தில் மீண்டும்.

எச்சில் கூட்டி விழுங்கியவள்,

“நான்… நான்… அறையைச் சுத்தம் செய்ய வந்தேன்…” என்று வாய்க்கு வந்ததை ஆங்கிலத்தில் கூறிய பிறகுதான் வேறு ஏதாவது சொல்லி இருக்கலாமோ என்கிற எண்ணம் வந்தது. அறையைச் சுத்தம் செய்ய வருபவள், இப்படி விருந்தாளிகள் போல டீஷேர்ட்டும் பான்டுடனுமா வருவாள்? அதுவும் அந்தப் பிரமாண்டமான விடுதிக்கு. சீருடை கொடுத்திருக்கமாட்டார்களா…?’ தடுமாறும்போதே, அதை மெய்ப்பிப்பதுபோல, உன்னை நம்ப நான் என்ன முட்டாளா என்பது போலத் தன் கீழ்க் கண்ணால் இவளைப் பார்த்தான் அவன்.

இரத்தம் வடிந்து செல்ல, ஐயோ அவசரப்பட்டு சிங்கத்தின் வாய்க்குள் தலையை நீட்டிவிட்டாளே. இப்போது எப்படித் தப்பிப்பது. ஏனோ தன் உடல் மொழியே அவனுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பது புரிய, சிரமப்பட்டுத் தன் உணர்வுகளை வெளிக்காட்டாது அடக்கியவள்,

“அறையைச் சுத்தம் செய்ய வந்தேன்… என் வேலை முடிந்தது… நான் செல்கிறேன்” என்றவாறு விலக முற்படுகையில் அவனுடைய பாதையை மறைத்தவாறு குறுக்கே வந்து நின்றான் அந்த மாமலை.

மீண்டும் உயிர் மேலே சென்று அவளுக்குள் புகுந்தது. உமிழ்நீர் கூட்டி விழுங்கியவாற அவனை அண்ணாந்து பார்க்க,

“ரியலி…? ஆனால்… இந்த விடுதியில் எப்போது சீருடை கொடுப்பதை நிறுத்தினார்கள்?” என்று அவளை மேலும் கீழும் பார்த்தவாறு கேட்டவனின் குரலில் அதீத கிண்டல் தெரிய, நடுங்கிப்போனாள் சமர்த்தி.

ஐயோ மண்டையிலிருந்த கொண்டையை மறந்து போனோமே… படுபாவி… வெளியே சென்றவன் இத்தனை சீக்கிரமாக வந்து தொலைப்பான் என்று கனவா கண்டாள்? இப்போது என்ன செய்வது… சேதாரமின்றித் தப்ப வேண்டுமே…’ சிரமப்பட்டுத் தன் நடுக்கத்தை மறைத்தவள்,

“இங்கே சுத்தம் செய்ய வருபவளுக்கு உடல் நலமில்லை! அதுதான் அவளுக்காகத் தற்காலிகமாக வந்தேன்…” என்றவள் அவசரமாக, அவனைக் கடந்து சென்றபோதுதான் தெரிந்தது அவனுடைய உயரத்தின் பாரதூரம்.

ஏதோ அவன் மலை போலவும் தான் கடுகு போலவும் ஒவ்வாத மாயை தோன்ற இன்னும் பயம் அதிகரித்தது.

அவள் நேர்மையாக உள்ளே நுழைந்திருந்தால் இத்தகைய பதட்டமும் பயமும் தோன்றியிருக்காது. ஆனால்… கள்ளமாக நுழைந்த குற்றக் குறுகுறுப்பு அவளை மேலும் உதற வைத்தது.

ஆனால் அவனுக்கு அத்தனை விரைவாக அவளை விடும் எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. மெதுவாகத் திரும்பி

“வன் மினிட் என்றான்.”

இவளுடைய உடல் தூக்கிப் போட்டது. இவள் திரும்பாமலே நின்றிருக்க,

“உன்னுடைய அடையாள அட்டையைக் காட்டு…” என்றான்.

‘அடையாள அட்டையையா… ஐயோ… அதை எப்படிக் காட்டுவது… அதைக் காட்டினால் அவள் பத்திரிகை நிருபர் என்று தெரிந்துபோகுமே…’ என்று நடுங்க, அந்த அவஸ்தையான நிலையில் அவன் கேட்பது, அந்த விடுதியில் அவள் வேலை செய்வதற்கான அடையாள அட்டை என்பது புத்திக்குள் ஏறவேயில்லை.

தடுமாற்றத்துடன், என்ன பதிலைக் கூறுவது என்று புரியாமல் திருதிரு என்று விழிக்க, அவனோ அவளை நெருங்கித் தன் கரத்தை நீட்டி,

“ஐடி ப்ளீஸ்…” என்றான் அழுத்தமாக.

அப்போதுதான் அவன் கேட்கும் அடையாள அட்டை அந்த விடுதியில் வேலை செய்வதற்கானது என்பது இவளுக்குப் புரிந்தது.

கடவுளே இப்படிச் சிக்கிக் கொண்டாளே. அவள் திருடி வந்த அடையாள அட்டையில் இருப்பது ஒரு இத்தாலியப் பெண்ணின் படம். லின்டா லீசி. இவளோ சுத்தத் தமிழச்சி. எப்படி ஒத்துப்போகும். தடுமாறி நிற்கையில்,

“உன்னைத்தான்.. உன் அடையாள அட்டையை எடு…” என்றான் சற்றுக் கடுமையாக.

‘சமாளி சமர்த்தி… சமாளி…’ என்று திரும்பத் திரும்பத் தனக்கே சொல்லிக்கொண்டவள், அணிந்து இருந்த பான்டில் கைவிட்டு தேடுவது போலப் பாசாங்கு செய்ய. அவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு இவளைத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஐயோ இப்போது என்ன செய்வது…” தடுமாறி நிற்க அவன் இவளை, மெதுவாக நெருங்கத் தொடங்கினான்.

பதட்டத்தில் இதயம் துடிக்க பின்னடைந்தவாறு அவனை அண்ணாந்து பார்த்தவள்,

“அது… அது வந்து…”

“ஐடி…” என்றான் இப்போதும்.

இதற்கு மேலும் தாமதித்தால் அவள் கதி அதோ கதிதான். புரிந்துபோக அவனிடமிருந்து தப்புவதற்காகத் திரும்ப எத்தனித்த வேளையில், அவளுடைய கைத்தலத்தை இறுகப் பற்றிக் கொண்டான் உத்தியுக்தன்.

அதிர்ந்து போனாள் சமர்த்தி. அச்சத்தோடு அவனை நிமிர்ந்த பார்க்க, அவளை ஒரு இழுவை இழுத்தவன், இழுத்த வேகத்திலேயே தள்ளிவிட, அவன் தள்ளிய வேகத்தில் சுவரோடு பலமாக மோதி நின்றாள். மோதிய வேகத்தில் பின்னந்தலையில் பொறி பறக்கும் அளவுக்கு நல்ல அடி. வலியில் ‘ம்மா…’ என்று முனங்கியவாறு தலையைப் பற்றியவள், அவனை ஏறிட, கொஞ்சமாவது இரங்கினானா அவன்,

இப்போதும் கரத்தை நீட்டியவாறு,

“ஐ… நீட்… யுவர்… ஐடி…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

ஓரளவு வலியலிருந்து விடு பட்டவள், விழிகள் கலங்க அவனைப் பார்த்தாள்.

இப்போது அவன் அவளை மிக மிக நெருங்கி இருந்தான். அவனுடைய சுவாசக் காற்று இவள் முகத்தில் பலமாக மோதியது. அதைத் தாங்கும் சக்தியற்றவளாகத் தன் விழிகளை அழுந்த மூடி நின்றவள், மெதுவாக விழிகளைத் திறந்து அவனை ஏறிட்டாள்.

ஏனோ அந்த விழிகளைக் கண்ட உத்தியுக்தனும் சற்றுத் தடுமாறித்தான் போனான் போல. ஒரு கணம் அவனுடைய விழிகளில் மெல்லயி கனிவு தோன்றியது.

வில்லென நெளிந்த நீண்ட இமைகளுக்குக் கீழே பரந்து விரிந்திருந்த விழிகள், ஏனோ அவனை உறிஞ்சி உள்ளே இழுப்பது போன்ற உணர்வில் தன் விழிகளைச் சற்றும் விலக்க முடியாதவனாக அந்த விழிகள் கூறும் மொழியை அறிய முயன்றான்.

காரணமின்றியே அந்த விழிக்குரிய முகம் எப்படியிருக்கும் என்று பார்க்கும் வேகம் பிறந்தது. உடனே கரம் நீட்டி, அவளுடைய முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கப் போனான்.

அதுவரை அவன் விழிகளின் ஈர்ப்பு விசையில் தன்நிலை கெட்டிருந்தவள், அவனுடைய கரங்கள் உயர்ந்து முகம் நோக்கி வரவும், சுயத்திற்கு வந்தவளாகத் தன் தலையைத் திருப்பி அவனுடைய முயற்சியைத் தடுத்தாள். கூடவே அவனுடைய பரந்த திண்ணிய மார்பில் கரம் வைத்துத் தள்ள முயல, அசையாமல் நின்றது அந்தச் சிலை.

தள்ளியதும் தள்ளுப்பட அவன் கொசுவா என்ன? கொஞ்சம் கூட அசையாமல், அவளுடைய முகத்தை மறைத்த திரையை விலக்கும் எண்ணத்தைக் கைவிட்டவனாகக் குனிந்து பார்த்தான்.

வேடனின் அம்பு பட்டுத் தரை சாய்ந்த சதைப்பற்றுக் கொண்ட இரு புறாக்கள், வெட வெடத்து அவன் மார்பில் விழுந்திருப்பது போலத் தோன்றியது அவனுக்கு.

அதுவும் அந்த் தளிர் கரங்கள் மார்பில் பதிந்ததும், அதன் மென்மையை உள்வாங்கிக் கொண்ட அவனுடைய மார்பு சட்டென்று இறுகியது. காரணம் தெரியாமலே, உள்ளே மாபெரும் இரசாயன மாற்றம். புதிதாய் சீண்டப்பட்டது போல ஆண்மை விழித்துக் கொண்டது.

அவன் மட்டும் அல்ல, அவளும்தான் தடுமாறிப் போனாள்.

அவனுடைய வெம்மைகொண்ட மார்பிலிருந்து கடத்தப்பட்ட சூடானது, அவள் உடல் முழுவதும் பரவிக் குளிரை விரட்ட முயன்றதுவோ? அதுவரை அழுத்திய அச்சம் மறைந்து போக, அங்கே புதுவித உணர்வில் ஆட்பட்டாள் அக் கோதை. தடுமாற்றத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனும் இவளைத்தான் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டு விழிகளும் ஒரு விநாடி மொதிக் கொண்டன. அதன் பின் அந்த நீண்ட விழிகளுக்குள் இருந்து தன் விழியை விலக்க முடியாமல் அவனும், ஊடுருத் துளைக்கும் அந்தக் கூரிய விழிகளிலிருந்து தன் விழிகளை விலக்க முடியாமல் அவளும் தடுமாறி நின்றனர்.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, அவன்தான் சுயத்திற்கு வந்தான்.

இன்னும் அவளுடைய விழிகளை விட்டுத் தன் கவனத்தை விலக்காமலே,

“நீ இஸ்லாமியப் பெண்ணா…” என்றான் ஆங்கிலத்தில். இவளும் சற்றும் யோசிக்காமல் ஆம் என்று தலையை ஆட்ட, உடனே அவள் முழுமதியைப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டவனாக, அவளுக்கு இரு பக்கமும் கரங்களை சுவரில் அழுத்தியவாறு,

“உன் பெயர் என்ன?” என்றான்.

“ச… சல்மா…” என்றாள் அவனுடைய விழிகளிலிருந்து தன் விழிகளை விலக்கியவாறு. ஏனோ அவனுடைய விழிகளின் தீட்சண்யத்தை அவளால் கையாளவே முடியவில்லை.

“சல்மா…! உன் பூர்வீகம் எது?” என்றவன் இன்னும் தன் மார்பில் படிந்திருந்த அந்த வெண்ணிறக் கரங்களைப் பார்த்துவிட்டு,

“வட இந்தியாவா இல்லை பாக்கிஸ்தானியா?” என்று கேட்டான்.

இவளோ வேகமாகத் தன் கரத்தை இழுத்து எடுத்தவாறு அவனை உற்றுப் பார்த்து,

“நான் கனேடியன்…” என்றாள் சுள்ளென்று. இவனோ உதடுகளைப் பிதுக்கித் தலையை ஆட்டி

“ம்… ஸ்மார்ட்…” என்றவனுடைய இலகுத் தன்மை இப்போது மறைந்துவிட்டிருந்தது. விழிகள் கூர்மையுற,

“கனடியப் பெண்ணுக்கு இங்கிலாந்து விடுதியில் என்ன வேலை?” என்றான் அடுத்து.

‘ஐயோ…! திரும்பவும் வாய் விட்டுவிட்டோமே…’ தடுமாறியவள்,

“ஏன் கனடாவில் பிறந்தால் வேற்று நாடுகளில் வேலை செய்யக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?’ என்று கேட்டபோது இவளுக்கு அவன் மீது அடங்கா ஆத்திரமும் வந்தது.

இத்தனை புத்திசாளியாக அவன் இருந்திருக்க வேண்டாம் என்று மனம் அவளையும் மீறி எண்ணியது.

‘படுபாவி துரோகம் செய்த அவனே தைரியமாக எதிர் கொள்ளும் போது, இவள் மட்டும் தவறு செய்தவள் போலத் தடுமாறுகிறாளே’என்று தன்னையே வைதவளுக்கு இப்போது புதுவித அச்சமும் பிறந்தது.

அவனுக்குப் பெண்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல. அப்படியிருக்கையில் இவள் மீதும் பாய்ந்துவிட்டால். இவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியுமா என்ன? நிச்சயமாக முடியாது… ம்கூம் வாய்ப்பேயில்லை. அவனுடைய ஒரு பிடியில், அவளுடைய உடல் எலும்புகளே முறிந்து போகும். உண்மை புரிய, வாய்பேச முடியாது அல்லல்பட,

“பதில் சொல்லாமல் தப்பிவிடலாம் என்று நினைத்தாயா பெண்ணே… உன்னைப் பற்றி அறியாமல் அத்தனை சுலபத்தில் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா என்ன? இப்போது சொல்… யார் நீ… எதிர்க்கட்சி அனுப்பிய அடியாளா நீ…” என்றான் சீற்றத்துடன்.

அவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள்,

“எதிர்க்கட்சியின் கையாளா… என்ன உளறல் இது…” என்றபோதே குரலில் மெல்லிய நடுக்கம். அதை அவன் புரிந்துகொண்டானோ.

“ம்… எல்லை மீறி உள்ளே நுழைந்திருக்கிறாய். அதுவும் என்னுடைய அறைக்குள் நுழைந்து எதையோ துப்புத் துலக்குகிறாய்… இதற்குப் பிறகும் நீ யார் என்று கண்டு கொள்ளாத அளவுக்கு நான் முட்டாளா என்ன? அப்படி முட்டாளாக இருந்து இருந்தால், இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டியாண்டிருப்பேன்? ம்? அதுவும் ஒன்டாரியோ முதல்வர் பதவிக்கு வேறு போட்டியிடுகிறேனே… இன்றைய கால கட்டத்தில் என்னை வீழ்த்தினால் அன்றி எதிர்க்கட்சியால் நிமிர முடியாது. அதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டேயிருப்பார்கள். இது போதாதா ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்வதற்கு…? சொல் அவர்கள் அனுப்பிய ஆள் தானே… நீ…? இல்லை… பத்திரிகையாளரா…? இன்றைய காலகட்டத்தில் என் பின்னால் மோப்பம் பிடித்து அலைந்து திரியும்…” என்றவன் முடிக்காமல் நிறுத்தி நிதானமாக அவளைப் பார்த்து,

“நாய்கள் ஊடகங்கள்தான். இப்போது சொல்…! என்னவெல்லாம் மோப்பம் பிடித்தாய்? அதுவும் யார் நீட்டும் எலும்புத் துண்டுக்காக…?” என்று அவன் கிண்டலாகக் கேட்க அதுவரையிருந்த நடுக்கம் மாயமாக மறைந்து போனது அவளுக்கு.

அவளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் அல்லவா பழிக்கிறான்…! ஆத்திரம் கண் மண் தெரியாமல் வர,

“வார்த்தைகளை அளந்து பேசுங்கள் உத்தியுக்தன். வாய் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லை… மீறிப் பேசினால்… மரியாதை கெட்டுவிடும்…” என்று சீற, கோபம் வருவதற்குப் பதில் அவனுடைய உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று உதயமானது.

“அப்படியானால் நீ பத்திரிகையிலிருந்துதான் வந்திருக்கிறாய்.” என்றான் மெய்யைக் கண்டுவிட்ட நகைப்புடன்.

“ப… பத்திரிகையா… யா… யார் சொன்னார்கள்… அதெ… அதெல்லாம் இல்லை…” என்று திணறித் தடுமாற, மேலும் நகைத்தவன்,

“பத்திரிகையைப் பற்றித் தப்பாகச் சொன்னதும் பொங்கினாய் பார்… இது போதாதா நீ எங்கிருந்து வந்திருக்கிறாய் என்பதை அறிய…”

“அப்படி…யெல்லாம் இ… இல்லை… நான் இங்கே வே… வேலை செய்கிறேன்…” அப்போதும் பொய்யையே மெய்யாக்க முயல,

“சரி… நீ நல்லவளாகவே இருந்துவிட்டுப் போ… இப்போது சொல்… யார் நீ… உண்மையாகவே உன் பெயர் சல்மாதானா இல்லை… அது கூடப் பொய்யா…?” என்றான் மிக மிகத் தன்மையாக.

அந்தத் தன்மையான குரலிலேயே மிதமிஞ்சித் தெரிந்த கிண்டலையும் ஏளனத்தையும் கண்ட சமர்த்திக்குத் தற்காலிகமாக ஏறியிருந்த கோபம் பொசுபொசு என்று நொறுங்கி போக, இப்போது வயிற்றைக் கலக்கியது.

தவறு அவள் பெயரில்தான். என்னதான் இருந்தாலும் அவனுடைய தனிப்பட்ட அறைக்குள் நுழைந்திருக்கக் கூடாது. நுழைந்து கையும் களவுமாகப் பிடிபட்டபின், குய்யோ முறையோ என்று அழுதால்… எல்லாம் சரியாகிவிடுமா? இப்போது என்ன செய்வது. எப்படித் தப்பிப்பது. சுத்தவரப் பார்த்தவளின் விழிகளில் அவனுக்கு அருகாமையில் இருந்த மேசைவிளக்கு தென்பட்டது.

அதை வைத்து என்ன செய்வது? ஆணி கூடப் பிடுங்க முடியாது… என்ன செய்வது? குழம்பிக் கொண்டிருக்கும் போதே, அவளுக்கு இரு பக்கமும் பதித்திருந்த கரங்களில் ஒரு கரத்தை விலக்கி அவள் முன்பாக நீட்டி,

“உன்னுடைய அடையாள அட்டையைக் கொடுத்தாயானால் எந்தச் சேதாரமும் இல்லாமல் தப்பிப் போவாய்… இல்லையென்றால்…” என்று அவன் கூறிய தொனியில் மறுக்க முடியாமல் தன் பான்ட் பாக்கட்டில் கை விட்டவள், அந்த அட்டைத் திறப்பை எடுத்து நீட்ட, அதை வாங்கித் திருப்பிப் பார்த்து அதில் இருந்த படத்தையும் பெயரையும் பார்த்தான்.

“லின்டா லீசி…” என்று வாய்விட்டுப் படித்தவன் இப்போது புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்து,

“அப்படியானால் நீ இஸ்லாமியப் பெண் இல்லையா?” என்றான் வியப்போடு. அவள் அதிர்ந்து நின்றது ஒரு கணம்தான். அடுத்த விநாடி அவன் எதிர்பாரா விதத்தில் தன் பலம் முழுவதையும் திரட்டி அவன் மார்பில் கரங்களைப் பதித்து ஒரு தள்ளுத் தள்ளிவிட, அவனும் எதிர்பாராத அந்தத் தாக்குதலில் ஓரடி தள்ளி நின்றான்.

அதைப் பயன்படுத்தியவளாகப் பாய்ந்த சமர்த்தி, மேசையிலிருந்த விளக்கை எட்டி எடுத்து, கண்ணிமைக்கும் நொடியில் அவன் தலையில் தன் சக்தியெல்லாம் திரட்டிப், பலமாகத் தாக்கிவிட்டு சற்றும் தாமதிக்காமல் பாய்ந்து வெளியேற அவள் தாக்கிய வேகத்தில் நெற்றி பிளந்து இரத்தம் கொட்ட நின்றிருந்தான் உத்தியுக்தன்.

What’s your Reaction?
+1
10
+1
14
+1
2
+1
3
+1
0
+1
2

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!