Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-4

4

எத்தனை நேரமாக மயங்கிக் கிடந்தாளோ, சமர்த்தி, மெதுவாகக் கண்களைத் திறக்க, முதலில் அவள் உணர்ந்தது, மருந்து நெடியைத்தான். அதன் மணத்தில் மூக்கைச் சுழித்தவள், தன் வயிற்றை வருடிக்கொடுக்கும் நோக்கில் கரத்தைத் தூக்கியபோது, கரம் வலித்தது.

மெல்லிய முனங்கலுடன் சிரமப்பட்டு விழிகளைத் திறந்து கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். அதில் ட்ரிப் ஏறிக்கொண்டிருப்பது தெரிய குழம்பியவளாகச் சுத்திவரப் பார்த்தாள்.

மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. கூடவே உத்தியுக்தனின் முகமும்.

பதறியவாறு எழுந்தமர்ந்தவளுக்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது. அவனைக் கண்டதும், மயங்கியது நினைவு வர, ஆயாசமானது சமர்த்திக்கு.

“யா… குட்…” என்று முணுமுணுத்தவாறு தன்னையே திட்டியவள், படுக்கையின் பின்புறமாகத் தொப்பென்று விழுந்தாள்.

யாருக்கு எதுவும் தெரியக்கூடாது என்று நினைத்தாளோ தெரிந்துவிட்டுது. இனி என்ன? நினைக்கும்போதே ஆயாசமானது.

ஆழ மூச்செடுத்துத் தன்னை சமப்படுத்தியவளுக்குக் கழிவறைக்குப் போகவேண்டிய அவசியம் புரிந்தது.

எரிச்சலுடன் சிரமப்பட்டு எழுந்தமர்ந்தவள், டரிப் இருந்த ஸ்டான்டையும் இழுத்துக்கொண்டு, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தபோது, உத்தியுக்தன் வந்துகொண்டிருந்தான்.

இவளைக் கண்டதும், “வட் த ஹெல் ஆர் யு டூயிங்…” என்று ஆத்திரத்துடன் கேட்க, அந்தக் குரலில் துள்ளிக் குதித்த இதயத்தை தட்டிக் கொடுக்க முயன்று தோற்றாலும், அதை வெளிக்காட்டாது,

“நத்திங்… சடு குடு ஆடலாம் என்று… இடம் பார்த்தேனா… அது போதவில்லை என்று” என ஏளனமும் கிண்டலுமாகக் கூறியவளுக்கு அவளையும் மீறிப் படபடத்துக்கொண்டு வந்தது.

இவனைக் கண்டால் மட்டும் ஏன் இப்படி இதயம் தடுமாறுகிறது? இப்படித் துள்ளிக் குதிக்கிறது. சக்தியே வடிந்து சென்றுவிடுவது போலத் தோன்றுகிறதே… தன் மீதே கோபம் கொண்டவளாக, அவனை நிமிர்ந்து பார்த்து,

“எதற்கு என்னை இங்கே அழைத்து வந்தீர்கள்?” என்றாள் சினத்துடன். அவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்து,

“வேண்டுதல்…” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.

“ஊப்ஸ், நெத்தியடி” என்று முணுமுணுத்தவள், நடந்து சென்று படுக்கையில் அமர்ந்தவாறு,

“இப்போது எதற்கு இங்கே வந்தீர்கள்… ஏன் வந்தீர்கள்…” என்றாள் சலிப்புடன். உடனே சுட்டு விரலைத் தன் உதடுகளில் வைத்தவன்,

“ஷ்… எதுவாக இருந்தாலும் வீட்டிற்குப் போய்ப் பேசலாம்… இது பொது இடம்… அமைதியாக இரு…” என்று கண்டிப்பதுபோலக் கூற, பக்கென்று தன் வாயை மூடிக்கொண்டாள் சமர்த்தி.

ஏனோ அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாது ஒரு வித சங்கடம் அவளை ஆட்கொள்ளத் தலையைக் குனிந்துகொண்டாள்.

இருக்காதா பின்னே, அன்று அத்தனை பேரின் முன்னாலும் அவனை அவமானப் படுத்தியது அவள்தானே.

இது… இந்த வலியிலிருந்து தப்பத்தானே இத்தனை கிலோமீட்டர்கள் தள்ளி வந்தாள். இந்த உணர்வைச் சந்திக்கப் பயந்துதானே மறைந்து வாழ நினைத்தாள்… இதோ முன்னால் இருப்பவனைப் பார்த்தால் அந்த குற்ற உணர்ச்சி அதிகமாகும் என்று எண்ணித்தானே இங்கே வந்தாள்… ஆனால் இவன், கண் முன்னால் வந்து மீண்டும் அந்த அவஸ்தையைத் தூண்டிவிடுகிறானே. மனதைத் தவிக்கச் செய்கிறானே…

தன் தலையை உலுப்பி அந்த உணர்விலிருந்து வெளியே வந்தவளுக்கு மீண்டும் ஜூலியட் வந்து நின்றாள். கூடவே அவள் மேடிட்ட வயிறும் நினைவுக்கு வர, அதுவரையிருந்த அந்த ஒவ்வாத உணர்ச்சி உடைந்து சிதற, அங்கே ஆத்திரமும் சீற்றமும் பொங்கி எழுந்தது.

முன்பு எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் மணமான பின்பு அவளுக்கு உண்மையா இருந்திருக்கவேண்டும். அதை விடுத்து… ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தவள்,

“நான் வீட்டிற்குப் போகவேண்டும்” என்றாள் தன் கோபத்தை மறைக்காத குரலில். அவனோ இருக்கையில் அமர்ந்து, காலுக்கு மேல் காலைப் போட்டவாறு தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டே,

“போகலாம். அதற்கு முதல் வைத்தியர் வந்து ஒப்புதல் கொடுக்கட்டும்..” என்றவாறு இருக்கையில் சாய்ந்தமர, இவளோ படு ஆத்திரத்துடன் படுக்கையை விட்டு எழுந்தாள். எழுந்த வேகத்தில் கரத்தில் குத்தியிருந்த ட்ரிப் ஊசி இழுபட்டுக் கையை விட்டுக் கழன்று தொங்க, இழுத்த வேகத்தில் கையிலிருந்து இரத்தம் சீறத் தொடங்கியது.

“ஐயோ என் இரத்தம்…” என்று கலங்கும் முன்னே,

“முட்டாள்…” என்று அவளை நோக்கிப் பாய்ந்தவன், அவளுடைய கரத்தைப் பற்றி இரத்தம் வெளிவராது அழுத்திப் பிடித்தவாறு,

“அறிவில்லையா உனக்கு… எதைச் செய்யும் போதும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டாயா?” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு. இவளோ அவன் கரங்களின் தொடுகையில் மேலும் குழைய முயன்ற உடலை அடக்கியவாறு, அவன் விழிகளைப் பார்க்க முடியாது எங்கோ வெறித்தாள்.

வேகமாகத் தன் கரத்தை ஒரு இழுவையில் விடுவித்து, மறு கரம் கொண்டு காயத்தை அழுத்திப் பிடித்தவாறு, ‘அறிவிருந்தால் எதற்கு உன்னைக் காதலித்துத் தொலைக்கிறேன்…’ என்று மனதிற்குள் திட்டியவாறு படுக்கையில் மீண்டும் தொப்பென்று அமர, உடனே உத்தியுக்தன் அங்கிருந்த மணியை அழுத்தினான். மறு கணம் ஒரு தாதி உள்ளே வந்தார்.

அவரிடம் விஷயத்தைக் கூற, உடனே அவளுடைய காயத்தைப் பார்த்துவிட்டு, இரத்தம் வராதிருக்கக் கட்டுப் போட்டவர்,

“பயப்பட ஒன்றுமில்லை… இனி இவர்களுக்கு ட்ரிப் தேவையில்லை… வைத்தியர் இவர்களின் அறிக்கையைப் பார்த்தபின், அனேகமாக இன்றே வீட்டிற்குச் செல்லலாம்… இன்னும் கொஞ்ச நேரத்தில் வைத்தியர் வருவார்…” என்றுவிட்டுப் பாவித்த ட்ரிப்பையும், அதன் ஊசியையும் கழற்றி, அருகேயிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெளியேற, அங்கே சற்று நேரம் மயான அமைதி நிலவியது.

இவளுக்கோ இருப்புக் கொள்ளவில்லை.

இவன் எப்படி இங்கே வந்தான். இவனிடமிருந்து எப்படித் தப்புவது…? ஏனோ அந்தக் கணமே அவனிருக்கும் இடத்தை விட்டு அதிகத் தொலைவுக்கு, கண்காணாத தேசத்திற்கு ஓடவேண்டும் போல வேகம் எழுந்தது. கூடவே அவன் மடியிலமர்ந்து மார்பில் சாய்ந்து உறங்கவேண்டும் போலவும் தோன்றியது. ஆனால் அந்த மார்பு இவளுக்குரியது அல்லவே… அந்த ஜூலியட்தான் நிரந்தரமாக அதில் தொங்கிக்கொண்டிருக்கிறாளே…

சுரு சுரு என்று எழுந்த ஆத்திரத்தில், அந்த ஜூலியட்டின் உருவத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் போன்றதொரு ஆவேசம் எழுந்தது. ஆனால் முடியாதே.

இவள் குத்தும் வரைக்கும் அவன் கைக்கட்டி பார்த்துக்கொண்டா இருப்பான்? இயலாமையில் வந்த கோபத்தில் அழுகை வேறு வந்தது. அப்போதே வீட்டிற்குச் சென்று ஒரு மூச்சு அழவேண்டும் போலத் தோன்றியது.

சே… என்ன சித்திரவதை இது. இந்தக் குழந்தை உருவான நாளிலிருந்து எதற்கெடுத்தாலும் அழுகை வந்து தொலைக்கிறது. எதையும் அதீதமாக யோசிக்க வைக்கிறது. கடவுளே இவனைப் பார்க்கப் பார்க்க அவன் மீதிருக்கும் கோபத்தை ஒட்டு மொத்தமாகப் புதைத்துவிட்டு அவன் மார்பில் சாய்ந்துவிடுவோம் பொலத் தோன்றுகிறதே.

இல்லை இல்லை… அவள் அப்படியொன்றும் பலவீனமானவள் அல்ல. எக்காலத்திலும் இரட்டை வாழ்க்கை வாழும் ஒருவனோடு குடும்பம் நடத்தப் போவதில்லை.

இறைவா.. இந்த வைத்தியர் எப்போது வந்து, இவள் எப்போது வீட்டிற்குச் செல்வது? ஏதோ சுடுதண்ணி காலடியில் கொட்டி அதன் மீது நிற்பதுபோல நிலையில்லாத் தவிப்புடன் நின்றிருக்க, தாதி ஒருவர் சக்கர வண்டியோடு உள்ளே வந்தார்.

இருவரும் அவரை நிமிர்ந்து பார்க்க.

“அள்ட்ரா சவுன்ட் செய்யப் போகவேண்டும்… போகலாமா?” என்றவாறு வண்டியை முன்னால் நிறுத்தி, அதில் சமர்த்தியை அமருமாறு பணித்தார்.

“இஸ் எவ்ரிதிங் ஓக்கே?” என்றான் உத்தியுக்தன் மெல்லிய பயத்தோடு. தாதியோ,

“திஸ் இஸ் அவர் ப்ரசீஜர்… வேண்டுமானால் நீங்களும் வரலாம்…” என்றவாறு சமர்த்தியைத் தள்ளிக்கொண்டு சொல்ல, உடனே அவன் வேகமாக அவர்களைப் பின்தொடர்ந்தான்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் அல்ட்ரா சவுன்ட் எடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டாள் சமர்த்தி. அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர், அவளை அங்கு இருந்த மெல்லிய நீண்ட படுக்கையில் படுக்குமாறு வேண்டிக் கொள்ள, சக்கர வண்டியிலிருந்து எழுந்தவள், அடிவயிற்றைப் பற்றியவாறே, அந்தப் படுக்கையில் ஏறி அமர முயன்றாள்.

இவளுடைய உயரத்திற்கு அதுவும் பிள்ளை வயிற்றோடு ஏறி அமரக் கொஞ்சம் சிரமப்பட, உத்தியுக்தனோ அவளுக்கு உதவும் நோக்கில், அவளை நோக்கி வந்தான்.

அதை உணர்ந்து கொண்டவளாகச் சடார் என்று பாய்ந்து ஏறிப் படுக்கையில் அமர்ந்துவிட்டிருந்தாள் சமர்த்தி.

அவள் ஏறி அமர்ந்த வேகத்தில் தொழில் நுட்ப வல்லுநர் கூடச் சற்றுப் பயந்துபோனார்.

“ஆர் யு ஓக்கே…” என்று அவர் கேட்க, அசட்டுப் புன்னகையைச் சிந்தியவள்,

“யெஸ் ஐ ஆம் பேர்ஃபக்ட்லி ஓக்கே…” என்று விட்டு உத்தியுக்தனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு, மல்லாக்காகப் படுத்ததும், அவள் மீது நீல நிறப் போர்வை போர்த்தப்பட்டது.

அதிக அலட்டலில்லாமல் அந்தப் போர்வையை இடுப்புக் கீழே இறக்கித் தன் நீல நிற அங்கியை மேலே தூக்கி தன் நரம்போடிய வயிற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, உத்தியுக்தனோ நம்ப முடியாத வியப்புடன் இவளுடைய வயிற்றைப் பார்த்தான்.

அது தன்னவளின் வயிறென்று நம்பவே முடிய வில்லை. எப்போதும் கொழுக் மொழுக்கென்ற வயிறு, இப்போது இறுக்கமாகப் பெருத்து, அங்கும் இங்கும் கண்டிப்போன நரம்புகள் ஓடி… சிவந்த நிறத்தில் வரிவரியாய் கோடுகள் விழுந்து, இதோ இந்தக் கணமே வெடிக்கிறேன் என்பது போல ஊதியிருந்தது.

இதுவரை அவன் கர்ப்பினிகளின் வயிற்றை நேரடியாகக் கண்டதில்லை என்பதால் அவன் முதலில் உணர்ந்தது அச்சத்தைத்தான்.

வலித்திருக்குமோ? அந்த நினைவே அடி வயிற்றைக் கலங்கச் செய்தது.

இவளோ, தன் வயிற்றை இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தவனை எரிச்சலுடன் ஏறிட்டுப் பற்களைக் கடித்தாள்.

“உங்களுக்கு வேறு வேலை இருந்தால்அதைப் போய் பார்க்கலாமே…” என்றாள் எங்கோ பார்த்தவாறு. அவனோ, இன்னும் அவளிடமிருந்து பார்வையை இம்மியும் விலக்காது,

“நோ… இதை விட எனக்கு வேறு எந்த முக்கியமான வேலையும் இல்லை…” என்றான் அழுத்தமாக.

வல்லுனர், அள்ட்ரா சவுனட் செய்யும் கருவியைக் கரத்தில் எடுத்து, அதில் நீல நிற ஜெல் ஒன்றைப் பூசி,

“சற்றுக் குளிரும்…” என்கிற எச்சரிக்கையுடன் அவளுடைய அடி வயிற்றில் அந்தச் சாதனத்தை வைக்க. மறு கணம் கறுப்பு வெள்ளைத் திரையில் ஏதேதோ படங்கள் விரியலாயிற்று.

அதனோடு சேர்ந்த குழந்தையின் இதயத் துடிப்பும் கேட்கத் தொடங்க, உத்தியுக்தனின் உடல் சிலிர்த்துப் போனது. இதயம் வேகமாகத் துடித்தது. உதடுகள் அவனையும் மீறி மலர்ந்தன.

இது அவனுடைய குழந்தையின் துடிப்பு. இந்த உலகிற்கு வருவதற்கான பறையொலி. அப்பா நான் உன் குழந்தை… விரைவாகவே உன்னிடம் வர இருக்கிறேன்… என்று அவனுக்கு அறிவிக்கும் உயிர்த்தாளம்.

அதை உணர்ந்தபோதே அவனுடைய ரத்த நாளங்கள் அனைத்தும் விழித்துக் கொண்டன. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. பிடரிக்குள் இனம் தெரியாத சிலிர்ப்பு. ஏனோ நெஞ்சம் பெருமையில் விம்மி வெடித்துவிடும் போல வீங்கத் தொடங்கியது. முதன் முறையாகத் தந்தைக்கும் மகனுக்குமான தெடர்பொலி அல்லவா அந்த இதயத் துடிப்பு. விழிகளில் கண்ணீர் உற்பத்தியாக, அவசரமாகத் தன் இமைகளை அசைத்து அந்தக் கண்ணீரை உள்ளே இழுக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்த நேரம் அந்தத் தாதி அவளுடைய, வயிற்றின் ஒவ்வொரு பக்கமாக அமுக்கி குழந்தையின் நிலையை அறிய முற்பட்டுக்கொண்டிருந்தார்.

தன்னிடம் இருந்த அல்ட்ரா சௌன்ட் மூலம் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்தார். ஒவ்வொரு அங்குலமாகப் பரிசோதித்தார். ஒவ்வொரு கட்டத்தையும் படம் எடுத்தார். குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டார். எல்லாம் திருப்தியாக முடிந்ததும்,

“இங்கே பாருங்கள்” என்றவர்

“இதுதான் குழந்தையின் இதயத் துடிப்பு…” என்று புன்னகையுடன் கூற, கறுப்பு வெள்ளைத் திரையில் தாமரை மொட்டுப்போல ஒன்று பலமாக முட்டிமோதித் துடிக்க, அது உன் வேர் நான் என்று சொல்வதுபோலத் தோன்றியது இவனுக்கு.

“இதோ, இதுதான் உங்கள் குழந்தையின் தலை…” என்று கூறியபோது, குழந்தையின் தலை, சற்றே குனிந்து நிமிர, அது தாய் தந்தைக்கு வணக்கம் சொல்லி குசலம் விசாரிப்பது போலத் தோன்றியது அவனுக்கு.

“இதோ இதுதான் உங்கள் குழந்தையின் கரங்கள்…” என்றபோது அது ஐந்துவிரல்களையும் விரித்து அங்கும் இங்கும் ஆட்ட, அது தன்னைப் பார்த்து “ஹாய் பா…! ஹவ் ஆர் யு…” என்று கூறுவதாகத் தெரிய, உருகிப்போனான் அந்தத் தந்தை.

“பார்த்தீர்களா கால்களை, எப்படி உதைக்கிறது என்று…” என்றபோது, அது தன்னிடம் உதை பந்தாட்டம் விளையாடலாம் வருகிறாயா…’ என்று கேட்கிறதோ? இவனுடைய உதடுகள் நடுக்கத்துடன் மலர்ந்த சிரிக்க. சமர்த்தியோ புதிதாய் முளைத்து நின்ற உத்தியுக்தனைத் தன்னை மறந்து பார்த்தாள்.

இவனால் இப்படியெல்லாம் உணர்ச்சியை வெளிக்காட்ட முடியுமா என்ன? அப்படியே உருகிப் போய் நிற்கிறானே… ஒரு முறை இந்த உருக்கத்தை அவளிடம் காட்டியிருந்தால், அவனுடைய காலடியில் விழுந்திருந்திருப்பாளே… ஆனால்…” என்று எண்ணியவளுக்கு ஆத்திரத்தோடு அழுகையும் வந்தது. அதேநேரம் உணர்ச்சிப் பிளம்பாய் நின்றவனை விட்டு விழிகளை அசைக்கவும் முடியவில்லை. இவன் குழந்தையே வேண்டாம் என்றிருந்தான் என்று இவளால் நம்பவே முடியவில்லை.

இப்படி வைத்தியர் ஒவ்வொரு அங்கங்களாகக் காட்டிக்கொண்டு வர, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்தான் உத்தியுக்தன். குழந்தை ஒரு இடத்திலிருந்தால் அல்லவோ. அங்கே பாய்ந்தது, இங்கே பாய்ந்தது, காலால் உதைந்தது. கையை வீசியது. பெருவிரலை வாய்க்குள் கொண்டு சென்று சப்பியது. அதைக் கண்ட சமர்த்தித் தன்னை மறந்து சிரித்துவிட்டாள். வல்லுநரும்தான்.

“ஓ மை… மை… உங்கள் குழந்தை மிகத் துடிப்பாக இருக்கிறது. ஒரு இடத்தில் நிற்காமல் என்ன ஆட்டம் காட்டுகிறது பாருங்கள்…” என்றவர், எதை எதையோ மீண்டும் மீண்டும் பரிசோதித்து அதையெல்லாம் படம் எடுத்துப் பத்திரப்படுத்தினார்.

உத்தியுக்தனோ, ‘இது என் குழந்தை. என் இரத்தம். என் வம்சம்… நாளை இதுதான் என்னை அப்பா என்று அழைக்கப்போகிறது.” என்கிற பெருமையில் இதயம் படு வேகமாகத் துடிக்கப் பேச்சற்றுப்போய் நின்றான்.

முகமோ பெருமையில் பூரித்தது. குழந்தை பிறக்க முதலே, இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்லை மெய்பித்துவிட்டான் என்று அகமகிழ்ந்தான்.

“உங்களுக்கு இது என்ன குழந்தை என்று அறிய ஆசையாக இருக்கிறதா” என்று அந்தத் தொழில்நுட்ப வல்லுநர் கேட்க,

“வேண்டாம்…” என்று இருவரும் ஒரே நேரத்தில் மறுத்துவிட்டு வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

வல்லுநர், தன் போக்கிற்கு எதை எதையோ தட்டியவாறு,

“எனி ஃபோட்டரோஸ்…?” என்று கேட்க, இருவரும் சுயத்திற்கு வந்தனர்.

அவர் என்ன கேட்டார் என்று புரியாமல் உத்தியுக்தன் புருவங்களைச் சுருக்க,

“டு யு நீட் எனி ஃபோட்டோஸ்…” வல்லுநர் மீண்டும் கேட்க,

“யெஸ்… ஒஃப் கோர்ஸ்… ஆல் ஆஃப் தெம்…” என்றான் வேகமாக.

“அதற்குப் பிரத்தியேகமாக நீங்கள் பணம் செலுத்தவேண்டும்…”

“மை ப்ளஷர்…” என்றவனிடம் புன்னகைத்து விட்டு,

“ஆல் டன்… முழு அறிக்கையையும் வைத்தியருக்கு அனுப்பிவிடுவேன். அவர் வந்து உங்களோடு பேசுவார்… இப்போது நீங்கள் உங்கள் அறைக்குப் போகலாம். தாதியை வரவழைக்கிறேன்” என்று கூற,

“இல்லை.. என்னால் நடக்க முடியும்… நன்றி…” என்றுவிட்டுக் கீழே இறங்க முயன்றவளைச் சட்டென்று பற்றிக்கொண்டான் உத்தயுக்தன்.

“ஈசி…” என்று சொன்னவன், அவளை இறக்க முயல,

“என்னால் இறங்க முடியும்… உங்கள் உதவி தேவையில்லை…” என்றாள் சமர்த்தி அழுத்தமாக.

“நீயே ஒரு குழந்தைக்கு அம்மாவாகப் போகிறாய்… குழந்தை மாதிரி நடந்துகொள்ளாதே…” என்று பற்களைக் கடித்தவாறு சொன்னவன், பிடிவாதமாக அவளை இறக்கிவிட, இறங்கியதும் அவனுடைய கரத்தை உதறிவிட்டுக் கோபமாக அவனுக்க முன்னால் நடக்கத் தொடங்கினாள் சமர்த்தி.

வேகமாக நடக்க முடியாமல் தத்தக்கா பித்தக்கா என்று நடப்பவளை வியப்பாகப் பார்த்தவாறு பின் தொடர்ந்தான் உத்தியுக்தன்.

அவள் நடையில்தான் எத்தனை மாற்றம். இரு கால்களையும் நேராக வைக்க முடியாமல் ஒரு பக்கமாக வைத்து நடப்பதைப் பார்க்க, இவனுடைய நெஞ்சம் தவித்துத்தான் போனது. கூடவே அடிக்கடி அவள் நாரியைப் பிடிக்கும் போது, இடுப்பு வலிக்கிறதோ என்று கலங்கிப்போனான்.

ஆனால் இவளோ தன் பின்னால் ஒருத்தன் வருகிறான் என்கிற எண்ணமேயில்லாமல், நடந்து சென்று அறைக்குப் புகுந்தவள், எதுவும் பேசாமல் படுக்கையில் ஏறிச் சுறுண்டு படுத்துவிட, இவனும் அவளுடைய அமைதியைக் குலைக்காது அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

இரண்டு மணி நேரங்கள் கடந்த பின், வெள்ளைக் கோட் அணிந்தவாறு அறுபது வயது மதிக்கத்தக்க வைத்தியர் ஒருவர் உள்ளே வந்தார்.

அதுவரை சுருண்டு படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்தாள். இருவரையும் பார்த்துக் கனிவுடன் புன்னகைத்தவர்,

“ஹாய்… பியூட்டி ஐ ஆம் கைனகொலஜிஸ்ட் டாக்டர் மகன்சி. என்றவாறு இருவருடைய கரங்களையும் பற்றிக் குலுக்கிவிட்டு சமர்த்தியை ஏறிட்டார்.

“ஹவ் ஆர் யு ஃபீலிங் நவ் ஹனி? பெட்டர்…? ஸ்டில் ஃபீலிங் டிஸி” என்றவாறு நாடிமானியை காதில் வைத்தவாறு, அவளை நெருங்கி, இதயத் துடிப்பைக் கவனமாக அவதானித்தார். பின் புன்னகையுடன் விலகி, இரண்டு கரங்களையும் மார்புக்குக் குறுக்காக வைத்துக் கனிவுடன் சமர்த்தியைப் பார்த்தார்.

“இவர் முன்னால் பேசுவது பரவாயில்லையா? இவரை வெளியே போகச் சொல்லவா?” என்று மென்மையாகக் கேட்க,

“நோ… நான் இவளுடைய கணவன். என் முன்னாலேயே நீங்கள் சொல்லலாம்…” என்றான் உத்தியுக்தன் அழுத்தமாக.

சமர்த்தியோ அவனை எரிச்சலுடன் பார்த்தாள். ஆனாலும் வாய் திறக்க முடியவில்லை. வாய் திறந்தால், அடுத்து அவன் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது.

வைத்தியரோ, உத்தியுக்தனைப் பார்த்து, “குட்… ஐ செக் எவ்ரிதிங்…” என்றவர் சற்று நிதானித்தார். பின் சமர்த்தியைத் திரும்பிப் பார்த்து,

“ஒழுங்காக அயர்ன், ஃபோலிக் அசிட் எடுக்கிறீர்களா?” என்று கேட்க, இவளோ பதில் சொல்ல முடியாது சற்றுத் திணறினாள்.

எங்கே நினைவில் வைத்து எடுத்தால்தானே? முக்கால்வாசி நாட்களும் மறந்துவிடுவாளே. அதை உத்தியுக்தனுக்கு முன்பாகக் கூற முடியாமல், சற்று அசடு வழிய,

“உங்கள் இரத்தத்தில் செங்குருதியின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. சொல்ல வேண்டுமானால் அபாயகரமான இடத்தில் இருக்கிறீர்கள்…” என்றதும் உத்தியுக்தனின் உடல் ஒரு கணம் விறைத்தது. முகமோ இரத்தப் பசையை இழந்தது போலச் சற்று வெளுறிப் போனது. அவனையும் மீறி முகத்தில் வியர்த்தது.

“அபாயகரமான இடமா? இஸ் ஷி இன் டேன்ஜர்?” என்று கேட்டபோதே அவனையும் மீறிக் குரல் தளர்ந்தது.

“நோ… நோ… நாட் லைக் தட்… இவர்களுக்கு இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் குறைபாடுள்ள இரத்தச் சோகை இருக்கிறது. இதற்குக் காரணம் ஆரோக்கியமான உணவு உண்ணாமை, தன்னைத் தானே கவனித்துக் கொள்ளாமை, இவர்கள் கவனமாக அயன், மற்றும் ஃபோலிக் அசிட் எடுக்க வேண்டும்..” என்றவர் சமர்த்தியை ஏறிட்டுப் பார்த்து,

“லிசின் டியர்… உடலில் போதியளவு இரும்புச் சத்து இல்லையென்றால், அதனால் தேவையான அளவு ஹீமோகுளோபினை உருவாக்க முடியாது. ஹீமோகுளோபினை உருவாக்க முடியவில்லை என்றால் உடலுக்குப் போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இது உன்னை மட்டுமல்ல, குழந்தையையும் பாதிக்கும். குழந்தை பெறுவது என்று முடிவு செய்தால் போதாது. அதற்கான ஆரோக்கியமான செயல்பாடுகளையும் மேற்கொள்ள

வேண்டும்.. தவிர, உன்னுடைய இரத்த அழுத்தத்தின் அளவும் சற்று அதிகமாக இருக்கிறது. இது உன்னை மட்டுமில்லை. குழந்தையையும் பாதிக்கும்…” என்றவர், சமர்த்தியின் தோளில் கரத்தை வைத்து,

“லிசின்… பேபி… யு ஹாவ் டு டே கெயர் ஆஃப் யுவர் செல்ஃப். உன்னைப் பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லையென்றால், அதற்கு நீதான் உன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்… நீ தனியாள் இல்லை. நீ ஒரு குழந்தையைச் சுமக்கிறாய். அதனுடைய ஆரோக்கியத்தையும் நீ பார்த்துக்கொள்ள வேண்டும்… நீயே உன்னைக் கவனிக்கவில்லை என்றால், யாருமே உன்னைக் கவனித்துக் கொள்ள மாட்டார்கள். சொல்வது புரிகிறதா?” என்றவர் திரும்பி உத்தியுக்தனைப் பார்த்து,

“யு போத் லிவ் டு கதர்…” என்றார். இவனோ, வைத்தியரைப் பார்த்து,

“ஐ வில் டே கெயர் ஆஃப் ஹெர்…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“வட்… நோ… என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். யாருடைய உதவியும் எனக்கு வேண்டாம்…” அவசரமாகக் கூற, உத்தியுக்தனோ அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வைத்தியரையே பார்த்து,

“இனி நான் பார்த்துக்கொள்கிறேன் டாக்டர்…” என்றவனைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு,

“வெரி குட்…” என்றார். தொடர்ந்து சமர்த்திய ஏறிட்டு,

“இன்றிலிருந்து நான் எழுதிக் கொடுக்கும் மருந்துகளைக் கவனமாக நாள் தவறாமல் போடுகிறாய்… முக்கியமாக மன அழுத்தங்களை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, முற்று முழுதாக ஓய்வு எடுக்கிறாய்? இது உனக்காக மட்டுமல்ல, உன் குழந்தைக்காகவும் தான் சொல்கிறேன்…” என்றவர் திரும்பி உத்தியுக்தனைப் பார்த்து,

“இவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்… நாம் சந்ததிகளைப் பெறுவது முக்கியமில்லை. அவற்றை ஆரோக்கியமாகப் பெறுவது மிக முக்கியம்.” என்றுவிட்டு இருவரையும் பார்த்து, “ஏதாவது சந்தேகமிருந்தால் என்னை அழையுங்கள்…” என்று விட்டு விடைபெற, இவனோ நிமிர்ந்து சமர்த்தியைப் பார்த்தான்.

“கேட்டாய் அல்லவா? குழந்தை பெறுவது முக்கியமில்லை, அதைச் சரியாக பாதுகாப்பது முக்கியம்… உன்னைப் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலை வெட்டி உனக்கு?” என்று சீற, இவளோ இவனை ஆத்திரத்துடன் பார்த்து,

“இதை நீங்கள் சொல்கிறீர்கள்… ஆச்சரியமாக இல்லை… குழந்தையே பிடிக்காதவர், குழந்தையே வேண்டாம் என்றவருக்கு எதற்கு இந்த அக்கறை…” என்றாள் சுள் என்று.

இவனோ பற்களைக் கடித்துத் தன் நிதானத்தை மீளப் பெற முயன்றான்.

“எனக்குக் குழந்தை பிடிக்காது என்று எப்போது சொன்னேன்…” என்றான் பற்களைக் கடித்தவாறு.

“பின்னே… குழந்தை வேண்டாம் என்று நீங்கள்…?” முடிக்க முடியாமல் திணற,

“குழந்தை வேண்டாம் என்று இருப்பதற்கும், குழந்தையே பிடிக்காது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது சமர்த்தி. குழந்தை வேண்டாம் என்றதற்குக் காரணம், இன்னொரு உத்தியுக்தன், இன்னொரு அவ்வியக்தன் உலகத்தில் பிறக்கக் கூடாது என்பதற்காக… தாய் தந்தை இருந்தும் அநாதையாக அது வாழக் கூடாது என்பதற்காக… அதற்காக என் குழந்தை மீது அன்பிருக்காது என்று எப்படி நீ சொல்வாய்?” என்றவனை உதடுகள் பிதுக்கிப் பார்த்தாள் சமர்த்தி.

“அடேங்கப்பா… குழந்தை உங்களைப் போலப் பாசம் கிடைக்காது வளர்ந்துவிடுமோ என்று பயந்து குழந்தை வேண்டாம் என்றவருக்கு, இப்போது மட்டும் எப்படி வந்தது? இந்த முரண்பாடு ஆச்சரியமாக இல்லை…?” என்று ஏகதாளமாகக் கேட்க,

“கேக்கின் சுவை இன்னதென்று தெரியாத வரைக்கும் அது வெறும் தீனிப்பண்டம்தான். அதன் சுவை தெரிந்தபிறகுதானே அது எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரிகிறது. எனக்கொரு குழந்தை இருந்தால் அதன் மீது என்னால் பாசம் வைக்க முடியாது என்றுதான் நினைத்தேன்… ஆனால்…:” என்றவன் சற்று முன் திரையில் பார்த்த குழந்தையின் உருவத்தைக் கண்டு மனம் கனிந்தவனாய், “நம் குழந்தையை உணர்ந்த அந்த நொடி… என்னாலும் அதன் மீது பாசமாக இருக்க முடியும் சமர்த்தி… நிச்சயமாக முடியும் என்று தோன்றுகிறது” என்றதும் அவனை அலட்சியமாகப் பார்த்தாள் அவள்.

“ரியலி… ஆனால் என் குழந்தைக்கு உங்கள் அன்பு அக்கறை பாதுகாப்பு எந்த இழவும் தேவை இல்லை… அதை நானே நன்றாகப் பார்த்துக் கொள்வேன்… என்னை நிம்மதியாக இருக்க விட்டாலே போதும்…” என்றதும்,

“கிழித்தாய்.. அதுதான் வைத்தியர் சொன்னதைப் பார்த்தாய் அல்லவா? உன்னைப் பார்த்துக்கொள்ள ஒருத்தர் வேண்டும்… உன்னுடைய இந்த நிலையில் எப்படித் தனியாக விடுவது… போதாததற்கு இரத்த அழுத்தம் வேறு…” என்று சிரமப்பட்டுக் குரலை நிதானமாக்கியவாறு அவன் கூற, இவளோ,

“உங்களைக் கண்டதும் இரத்த அழுத்தம் எகிறாமல் வேறு என்ன செய்யும்…?” என்றாள் ஆத்திரத்தோடு. அடுத்துக் கையடித்துக் கும்பிட்டு,

“அப்பா சாமி… எனக்கு உங்கள் உதவி ஒன்றும் தேவையில்லை. ஆளை விடுங்கள்… தயவு செய்து என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்… நான் என் குழந்தையை எப்படி வளர்க்கவேண்டுமோ அப்படியே வளர்த்துக்கொள்வேன்… இங்கே வந்து தேங்காய்ப் பிடுங்குகிறேன் மாங்காய்ப் பிடுங்குகிறேன் என்று எந்த ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் பிடுங்க வேண்டாம்…” என்று சினந்தவளைப் பொறுமையிழந்த மூச்சோடு பார்த்தான் உத்தியுக்தன்.

“சமர்த்தி விவாதத்திற்கு இது நேரமில்லை. இது நம்முடைய குழந்தையின் எதிர்காலப் பிரச்சனை… உன்னுடைய சுயநலத்திற்காக, உன்னுடைய கோபத்திற்காக அதனை எதற்குத் தண்டிக்கிறாய்… இதோ பார்… இது மருத்துவமனை… எதுவாக இருந்தாலும் வீட்டிற்குச் சென்று பேசலாம். தயவு செய்து தர்க்கம் செய்யாமல் புறப்படு…?” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, அவனை அலட்சியமாகப் பார்த்தாள் சமர்த்தி.

பின் எழுந்தவள், அங்கிருந்த கபேர்டில் திணித்திருந்த தன் ஆடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்று மாற்றிவிட்டு வந்தவள், கலைந்திருந்த முடியைக் குவித்துப் பான்ட் போட்டு விட்டுத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் கைவிட்டவாறு அவனைப் பார்த்து,

“இதோ பாருங்கள், நீங்கள் கெஞ்சினாலும், மிஞ்சினாலும் நான் வருவதாயில்லை. இது என் குழந்தை… நானே வளர்த்துக் கொள்கிறேன். ஆனால் சத்தியமாக உங்களைப் போல உணர்ச்சி அற்ற குழந்தையாக நான் வளர்க்க மாட்டேன். அது உங்கள் கூட வளர்ந்தால், ஜடமாகத்தான் வளரும். சத்தியமாக உங்கள் அம்மா உங்களை வளர விட்டதுபோல நான் வளர்க்க மாட்டேன்… தயவு செய்து உங்கள் வேலையைப் போய்ப் பாருங்கள்… ஐ மீன்… அந்த ஜூலியட் கூடப் போய் டான்ஸ் ஆடுங்கள்…” என்று அவள் முடிக்கமுதல், ஆத்திரத்துடன் தன் கரத்தை ஓங்கியவன், ஓங்கிய வேகத்தில் அங்கிருந்த சுவரை அறைந்தான் உத்தியுக்தன்.

அவன் அறைந்த வேகத்தைக் கண்டு இதயம் துடிக்க, ஓரடி தள்ளி நின்று அவனை அச்சத்துடன் பார்த்தாள் சமர்த்தி.

“நெவர் எவர் டாக் லைக் தட் ஃப்ரன்ட் ஆஃப் மி… டு யு அன்டர்ஸ்டான்ட்…” என்று அவன் கூறிய வேகத்தில் ஈரக்குலை நடுங்க நின்றாள் சமர்த்தி.

அவனுடைய கோபத்தைப் பல முறை பார்த்து இருக்கிறாள் தான். ஆனால் இது… நினைக்கும் போதே உதறல் எடுக்க, பதில் சொல்ல முடியாமல் விறைப்புடன் நின்றிருந்தவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“நீ அன்பைப் பற்றிப் பேசுகிறாயா? ஆச்சரியமாக இல்லை… இத்தனை நாள் தங்கள் இன்ப துன்பத்தைத் தொலைத்துவிட்டு உன்னை வளர்த்த உன் அண்ணன் அண்ணியையே அம்போ என்று அங்கே விட்டுவிட்டு வந்தவள்தானே நீ.. நீ அன்பைப் பற்றிப் பேசுகிறாயா? உன்னை எண்ணி அவர்கள் எப்படி வருந்துகிறார்கள்.. துடிக்கிறார்கள்… இதைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்தாயா? இதோ… குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கிறாயே… இதை அவர்களிடம் சொன்னாயா? இத்தனை பெரிய செய்தியை மறைத்ததை அறிந்தால் எப்பத் துடிப்பார்கள் என்று கொஞ்சமாவது நீ யோசித்தாயா? நீ அன்பைப் பற்றிப் பேசுகிறாய் ஆச்சரியமாக இல்லை?” என்று கட்டவிழ்ந்த ஆத்திரத்தோடு கேட்க, அதிர்ச்சி நீங்க அவனை முறைத்துப் பார்த்தாள் சமர்த்தி.

“அதற்குக் காரணம் யார்… நீங்கள்… நீங்கள் மட்டும்தான். அவர்களுக்குச் சொன்னால் அடுத்த விநாடி உங்களுக்கு இது தெரிய வரும்… இதோ இப்போது நடக்கும் காட்சி அன்று நடந்திருக்கும்… உங்களைப் பார்க்கப் பிடிக்காமல், பேசப் பிடிக்காமல், உங்கள் நினைவே பிடிக்காமல்தானே இங்கே வந்தேன்… வந்த பிறகும் எதற்கு என்னை வதைக்கிறீர்கள்… தயவு செய்து என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்…” என்றவளுக்கு முகம் வெளிறிக் கொண்டு வந்தது. அதை உணர்ந்தவன் போல, இவளை நெருங்க முயல, உடனே படுக்கையில் அமர்ந்தவள், ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றாள்.

ஆனாலும் தலை சுற்றல் நிற்கவில்லை. சிரமப்பட்டுத் தலையை நிமிர்த்தி அவனை ஏறிட்டவள்,

“குடிக்கச் சூடாக ஏதாவது வாங்கி வருகிறீர்களா? ப்ளீஸ்…” என்றாள் பரிதாபமாக.

உடனே தன் கோபத்தை அடக்கியவனாக,

“சரி இங்கேயே இரு… வாங்கி வருகிறேன்…” என்றுவிட்டு மருத்துவமனையிலேயே அமைந்திருந்த டிம் ஹாட்டனை நோக்கி ஓடினான்.

அவனுடைய அவசரம், பதட்டம் கடைக்குத் தெரிந்தால் அல்லவோ… அவளுக்காய் வரிசையில் நின்று, பன்னிரண்டு நிமிடங்கள் காத்திருந்து, கிரீன் டீ வாங்கிக்கொண்டு, அவளுடைய அறைக்குள் வர, அங்கே அவளுடைய அறை வெறுமையாக இருந்தது. அதைக் கண்டதும், ஒரு கணம் அதிர்ந்துபோய் நின்றான் உத்தியுக்தன்.

கூடவே படுக்கையில் ஒரு வெண்தாள் படபடக்க, விரைந்து சென்று எடுத்தான். அதில் பெரிதாக ஸ்மைலி ஃபேஸ் ஒன்று வரையப்பட்டு அதன் கீழ், ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் ஆஃப் ஃப்ரம் மீ… என்கிற தெளிவான எழுத்து இருக்க இவனுடைய உடல் இறுகிப் போனது. பலவீனம்போல நடித்திருக்கிறாள் என்பது புரிய, தேகம் திகு திகு என்று எரிந்தது.

வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன், பாய்ந்து மருத்துவமனை வாசலுக்கு வந்தான். அங்கே வாசலும் வெறுமையாக இருக்க, ஆத்திரத்துடன் கையிலிருந்த தேநீரைச் சுழற்றி எறிந்துவிட்டுத் தன் வாகனத்தை நோக்கி ஓடினான் உத்தியுக்தன்.

What’s your Reaction?
+1
35
+1
11
+1
2
+1
8
+1
4
+1
1

Related Post

4 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-4”
  1. ஹாய் நயணிம்மா உங்களுக்கு இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 💖💖💖💖💖

    1. ஹாய் தங்கம். நன்றி நன்றி நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும் செல்லோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!