Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-2

2

 

அன்று சனிக்கிழமை. ஓய்வு நாள். அதனால் சற்று மந்தமாகத்தான் விடிந்தது. காலையிலேயே வேலைகளை முடித்துக்கொண்டு, சில பொருட்கள் வாங்கவேண்டி வீட்டிற்கு வெளியே வர, ஏப்ரல் மாதத்துக் குளிர் அவளை வரவேற்றது.

தடித்த ஜாக்கட்டை இறுகப் பிடித்தவாறு அந்தப் பிரமாண்டமான வணிக வளாகத்திற்கு வந்தாள் சமர்த்தி. அந்த வணிகத் தளத்தைப் புதிதாகத்தான் கட்டியிருந்தார்கள். பல முறை அங்கே வரவேண்டும் என்று நினைத்தவளுக்கு இன்றுதான் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டுக், கடையின் உள்ளே சென்றாள்.

மலைகளாலும், காடுகளாலும் உருவாக்கப்பட்ட, கனடாவின் நான்காவது பெரிய மாநகரம் அல்பேர்ட்டா. இங்கேயுள்ள அதபஸ்கா என்கிற இடத்தில் உள்ள எண்ணை மணல்தான் உலகிலேயே மிகப் பாரியதாகும். இங்கிருந்து எடுக்கப்படும் பாறையெண்ணையை (க்ரூட் ஆய்ல்) தொடர்ந்து எடுத்தாலும், சுமார் நூறு வருடங்களுக்கும் மேல் போதுமானதாக இருக்கும். அதன் காரணமாக மக்களால் அங்கே நினைத்த இடத்தில் வாழ முடியாது.

அது பெரிய மாநகரமாக இருந்தாலும், அதன் தலைநகரான எட்மண்டனை அண்டிய பிரதேசங்களில்தான் அதிக மக்கள் தொகை காணப்படும். அந்த நகரத்தை விட்டுச் சற்றுத் தள்ளிச் சென்றால், பொருட்கள் வாங்குவதெல்லாம் மிகச் சிரமமாக இருக்கும். அதனால் கிராமப் பக்கங்களில் இருப்பவர்கள் வேண்டியவற்றை அங்கேதான் வாங்கிச் செல்வார்கள்.

சமர்த்திக்கும் ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், எப்போதும் செல்லும் கடையைத் தவிர்த்து அந்தப் புதிய அங்காடிக்குள் நுழைந்தாள்.

குழந்தைகளுக்கான பகுதி இவளுடைய கருத்தைக் கவர, முகம் மலர்ந்தவளாக அந்தக் கடைக்குள் நுழைந்தாள்.

ஆவலுடன் ஒவ்வொரு ஆடையாகப் பார்த்துக் கொண்டு வந்தவள், அதிலிருந்து ஒரு ஆடையை எடுக்கப்போன நேரத்தில் இன்னொரு கரமும் நீண்டு அதை எடுக்க முயன்றது.

உடனே மன்னிப்பு வேண்டியவாறு தன் கரத்தை விலக்கியவள் புன்னகையுடன் நிமிர்ந்து பார்க்க, அங்கே நின்றிருந்தவளைக் கண்டதும் அதிர்ந்துபோனாள் சமர்த்தி. இவள் மட்டுமல்ல, அந்தப் பெண்ணும் அதிர்ந்தவளாய் இவளைத்தான் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஜூலியட்…” என்று முணுமுணுக்க, அதுவரை அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்த ஜூலியட்டும் சுயநினைவு வந்தவளாக,

“சமர்த்தி… நீயா… நீ இங்கேயா இருக்கிறாய்?” என்றாள் தன் அதிர்ச்சியை மறைக்காத குரலில். கூடவே இரு பெண்களின் விழிகளும் தள்ளியிருந்த வயிற்றில் நிலைத்தன.

ஜூலியட்டும் சற்றுப் பெரிய வயிற்றோடுதான் நின்றிருந்தாள். சொல்லப்போனால் நான்கு மாதங்கள் அல்லது ஐந்து மாதங்களாவது இருக்கும்.

ஜூலியட் மிக உயரமானவள் என்பதால், வயிறு பெரிதாகத் தெரியவில்லையோ… ஒரு வேளை அந்த விதை கூட அவன் விதைத்ததுதானோ. நினைத்தபோதே இவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கூடவே நெஞ்சமெல்லாம் தவித்துப் போனது. தன் முன்னால் நின்றவளை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல், வெடித்த அழுகையை அடக்க முயன்று தோற்றவளாக,

“சாரி… ஐ ஹாவ் டு கோ…” என்றுவிட்டு அங்கிருந்து ஓட முயல, இரண்டெட்டில் சமர்த்தியை நெருங்கிய ஜூலியட்,

“ஹே… சமர்த்தி… உன் கூட நான் பேச வேண்டும்… ப்ளீஸ்…” என்றாள்.

“சாரி உன்னோடு பேச எனக்கு எதுவுமில்லை.” என்றவள் திரும்பிக் கூடப் பார்க்காமல் ஓடியது அங்கிருந்த கழிவறைக்குத்தான்.

விம்மி வெடித்து வெளியே வரத் துடித்த அழுகையை அடக்க முயன்று தோற்றவளாகத் தன் கைப்பையைக் கைகழுவும் மேடையில் வைத்தவள், இரண்டு கரங்களையும் அந்த மேடையில் அழுந்த பதித்தவாறு உதடுகளைக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றாள். ஆனால் கண்ணீரோ ஆறாகப் பெருகத் தொடங்கியது. கூடவே கோபத்தோடு கண்ணீரைத் துடைத்தவளுக்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது.

எத்தனை முறை அவளைச் சமாதானப் படுத்தினாலும், பாழாய்ப் போன இந்தக் கண்ணீர் வந்து தொலைத்து விடுகிறது. சே…’ என்று தன்னையே திட்டியவளுக்கு நினைக்க நினைக்கத் தாளவில்லை.

மீண்டும் மீண்டும் குழந்தை வயிற்றோடு நின்றிருந்த ஜூலியட்தான் இவளை நிலையிழக்கச் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு மனதோ இது அவனுடைய குழந்தையாக இருக்காது இருக்காது என்று சொன்னது. மறு மனமோ, அவன் மார்பில் பச்சையாகப் பதிந்துபோன ஜூலியட்டின் உருவம் முன்னால் வந்து படுத்தியது.

செய்திகளில் கூட அவனோடுதான் தொடர்பு படுத்திக் கூறப்பட்டிருக்கிறதே தவிர, வேறு யாரோடும் ஜூலியட்டைத் தொடர்புப் படுத்திக் கூறவில்லையே. அப்படியானால் அந்தக் குழந்தை அவனுடையதாகத்தானே இருக்கவேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டத்தெரியாமல் இருக்க அவள் ஒன்றும் பச்சைக் குழந்தையில்லையே.

உன்னைத் தவிர வேறு எங்கும் போகவில்லை என்று அவன் சொன்னதை இந்தக் கணம் வரை அவள் நம்பத் தயாராகவும் இல்லை. அவனும் அவள் பிரிந்து சென்றதை எண்ணி எள்ளளவும் வருந்தியதாகத் தெரியவில்லையே.

அவள் சந்தேகப் பட்டது போல, இவளை மறந்து ஜூலியட்டோடு வாழவே தொடங்கிவிட்டானா… அதற்கு மேல் சமர்த்தியால் எதையும் யோசிக்க முடியவில்லை.

யோசிக்க முடியவில்லை என்பதை விட யோசிக்கப் பிடிக்கவும் இல்லை. மனமோ சரியான பாதையில் சிந்திப்பதாகவும் இல்லை. அது என்ன காரணமோ, இதுதான் என்று மனது ஒன்றை முடிவு செய்துவிட்டால், அதிலிருந்து இம்மிகூட வழுவிச் செல்ல மறுத்து அதிலேயே நின்று யோசிக்கிறது.

ஒரு புள்ளியிருந்தால், அதற்கு எட்டுத் திசைகள் எட்டுப் பக்கங்கள் எட்டுப் பாதைகள் இருக்கின்றன என்பதை யோசிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ சிறிதும் முயல்வதில்லை. மாறாக அந்த ஒற்றைப் புள்ளியில் மட்டும் சண்டித்தனமாய் நின்றவாறு இதுதான் புள்ளி, இது மட்டும்தான் இங்கே இருக்கிறது என்று முடிவுசெய்து விடுகிறது.

பாவம் சமர்த்தி. அவளும் சாதாரண மனுஷி தானே. அவளும் அந்தப் புள்ளியை வைத்துக் கொண்டு அதிலேயே நிலையாய் நின்றுவிட, அந்த எண்ணம் அவளை வதைக்க, உள்ளத்தோடு உடலும் சேர்ந்து துடித்தாள் சமர்த்தி.

அவளுக்கு நீண்ட நேரம் எடுத்தது தன்னை நிலைப்படுத்த. இறுதியாக ஆசுவாச மூச்சு எடுத்தவளுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்து போயிற்று. இனி உத்தியுக்தனின் நிழல் கூட அவளுக்குச் சொந்தமில்லை என்று.

மீண்டும் கண்களைக் கரித்துக்கொண்டு வர, ஆத்திரத்துடன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டுக் குளிர்நீரால் முகத்தைக் கழுவிவிட்டுக் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது அது அதைத்துச் சிவந்துபோயிருந்தது.

வீடு வந்த பின்னும் அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. மனம் அலைபாய்ந்து கொண்டிந்தது.

மனம் முழுவதும் உத்தியுக்தனும், ஜூலியட்டும் அணைத்திருப்பது போலத் தோன்றிப் பாடாய் படுத்தியது. என்னதான் மனத்தை சமாதானப் படுத்தினாலும், நிதர்சனம் அவளை ஒரு நிலையில் இருக்க விடவில்லை.

மறுநாள் எதற்காக விடிகிறது என்று தெரியாமலே விடிந்தது. எங்கும் போகப் பிடிக்காமல் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

முன்னிரவு ஒரு பொட்டுக் கண்கூட அவளால் மூட முடியவில்லை. காலை எழுந்த பின்னும் மனம் அலைபாய்ந்தது.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருக்க முடியாமல் வெளிக்காற்றையாவது சுவாசிக்கலாம் என்று, வீட்டைப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

அன்று சற்று அதிகக் காற்று வீசியதால், குளிர் கூடச் சற்று அதிகமாகத்தான் இருந்தது. அதிலிருந்து தப்பும் பொருட்டு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு நடக்கத் தொடங்கினாலும், ஏனோ அந்தக் குளிர் கூட ஒருவித வரப்பிரசாதமாகவே தோன்றியது.

மனமோ, தற்காலிகமாகக் குடைந்து கொண்டு இருந்த வலியை மறந்து விட்டு, வீசிய குளிர் காற்றிடம் நிலைத்தது. கொஞ்சமாய் குளிர்ந்தது.

உள்ளே இன்னொரு சுவட்டர் போடாமல் வந்த தன் முட்டாள் தனத்தை நினைத்துத் தன்னையே நொந்தவளுக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று கூடத் தோன்றியது. ஆனாலும், போகப் பிடிக்கவில்லை. வீட்டிற்குப் போனால் மீண்டும் அவனுடைய நினைவு வந்து தொலைக்கும். இலவச இணைப்பாக அந்த ஜூலியட்டுமல்லவா வருவாள்.

குரங்கை நினைக்காது மருந்தைக் குடித்தவன் கணக்காக, மீண்டும்பாழாய்ப் போன இருவரும் வந்து மனதில் குத்துக்கல்லாட்டம் அமர்ந்து கொண்டனர்.

எத்தனை தூரம் நடந்தாளோ அவள் அறியாள். அத்தனை நேரமாக அமைதியாக அவள் வயிற்றில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, அவளுடைய வயிற்றை எட்டி உதைத்துவிட்டு, தனக்குப் பசி என்று எச்சரிக்கை செய்ய, நடை தடைப்பட்டவளாக அப்படியே நின்றுவிட்டாள் சமர்த்தி.

இப்போது அவள் சாப்பிடவேண்டும். நேற்று இரவும் அதிர்ச்சியில் சுத்தமாக உண்ணவில்லை. காலையும் சாப்பிடவில்லை. ஏற்கெனவே உணவை விடுத்து வேலைத்தளத்தில் மயங்கி விழுந்து எல்லோருடைய பரிதாபத்தையும் பெற்றுக்கொண்டது நினைவுக்கு வர எங்காவது அருகே கடையிருக்கிறதா என்று பார்த்தாள். அப்போதுதான் வெளியே வரும்போது கைப்பை எடுத்துவரவில்லை என்பதே புரிந்தது.

தன் மீதே கோபம் வரத் தலையைத் தட்டியவள், மீண்டும் வயிற்றை உதைத்த குழந்தையிடம் கோபம் கொண்டவளாக, செல்லமாக வயிற்றில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு,

“டேய்.. கொஞ்சநேரம் சும்மா இருக்கமாட்டாய்.. கொஞ்சம் பொறு… வீட்டிற்குப் போனதும் சாப்பிடுகிறேன்…” என்று கடிய, அவள் சொல்லைக் கேட்டால் அது உத்தியுக்தனின் குழந்தையில்லையே…

இவள் குரலை உயர்த்தியதும் அதைப் புரிந்து கொண்டது போல மீண்டும் அவள் வயிற்றில் முட்டி மோதி, உருண்டு புரள, இப்போது இவளுக்கு வேர்த்துக்கொட்டிக்கொண்டு வந்தது.

உடலில் இனிப்புச் சத்துக் குறைந்து செல்கிறது என்பதை உணர்ந்து எங்காவது அமரவேண்டும் என்று யோசிக்கும் முன்பே, எங்கிருந்தோ சீறிக் கொண்டு வந்த வாகனம் ஒன்று, அவளுக்கு அருகாமையில் கிறீச் என்கிற சத்தத்தோடு வந்து நின்றது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் பதறிப்போய்த் திரும்பிப் பார்த்தாள். அங்கே கதவைத் திறந்து கொண்டு ஆவேசத்துடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் உத்தியுக்தன்.

இவன் எங்கே இங்கே… இங்கே என்ன செய்கிறான்… அதிர்ச்சியில் புலன்கள் மங்கிப்போக, அடுத்து என்ன செய்யவேண்டும் என்கிற அறிவு மழுங்கிப்போக, அவன் நிஜமாவே கண் முன்னால் நிற்கிறான் என்பதை நம்ப முடியாமல் உள் எடுத்த மூச்சை வெளி விட மறந்து தன்னை நோக்கி வந்தவனை வெறித்தாள்.

வந்தவனோ, இறுகிப்போன முகத்தோடு, ஆவேசத்துடன் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றினான். அவன் பற்றியதுதான் தெரியும், எங்கிருந்து அந்தப் பலவீனம் வந்ததோ. அவளுடைய காதுகள் அடைத்தன. உடலிலிருந்த இரத்தம் அப்படியே வடிந்து சென்றது. விழிகள் செருகப் பாதங்கள் செயலிழக்க, முழங்கால்கள் நடுங்க, அப்படியே வேரறுந்த மரமாகச் சரியத் தொடங்கியவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான் அவளுடைய குழந்தையின் தந்தை.

What’s your Reaction?
+1
39
+1
12
+1
4
+1
4
+1
3
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!