Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-1

1

 

ஏழு மாதங்களுக்குப் பிறகு

நீண்ட நேரமாக இருக்கையில் அமர்ந்தவாறு தட்டச்சில் எதையோ தட்டிக் கொண்டிருந்த சமர்த்திக்கு நாரி வலிக்கத் தொடங்கியது.

“ஷ்…” என்கிற முனங்கலோடு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவள், தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடியவாறு தன் இடுப்பை அழுத்திக் கொடுத்தபோது, பலம் பொருந்திய வெம்மையான கரமொன்று, பின்னால் நின்றவாறே அவளுடைய தளிர் கரத்தை விலக்கிவிட்டு அவள் செய்யத் தொடங்கிய வேலையைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டது.

கூடவே மறு கரம் கொண்டு, அவளுடைய கழுத்தையும் இதமாக வருடிக் கொடுக்கச் சொக்கிப் போனாள் சமர்த்தி.

ஆஹா ஆஹா… தன்னவனின் கரங்கள் பட்டாலே எத்தனை சொர்க்கம்…! அதை அனுபவித்தவாறு, உதடுகளை மெதுவாகப் பிளந்து அந்தத் தொடுகையை இரசித்தவாறு தன்னை மறந்திருக்க,

“ஹே… சமர்த்தி… ஆர் யு ஓக்கே…” என்கிற கேள்வியோடு அவளுடைய தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது.

திடுக்கிட்டு விழிகளைத் திறந்தவளுக்கு அதுவரை இதமாய் அழுத்திக்கொண்ட அந்த ஆணின் கரம் மாயமாக மறைந்துபோக, பதிலுக்கு அங்கே வெண்ணிற கரம் ஒன்றுதான் தெரிந்தது.

ஓ.. எப்போதும் போலக் கற்பனைதானா? என்கிற சோர்வில் முகம் வாடிப்போகத் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அங்கே அவளுடைய மேலதிகாரி, கதரின் கனிவுடன் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

ஒரு கணம் கீழ் உதட்டைக் கடித்து விடுவித்தவள்,

“சா… சாரி கதரின்… ஜெஸ்ட் லிடில் பிட் டயர்ட்…” என்று புன்னகைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார, அவளுடைய தோளில் தட்டிக் கொடுத்த கதரின்,

“இட்ஸ் ஓக்கே ஹனி… இஃப் யு வோன்ட்… யு கான் டேக் எ ஸ்மால் பிரேக்… ஐ டோன்ட் மைன்ட்..” என்றவரை நன்றியுடன் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தாள் சமர்த்தி.

“இல்லை கத்தரின்… நிறைய வேலைகள் முடிக்க வேண்டி இருக்கு. இப்போது இடைவேளை எடுத்தால் பின்னாடி சிரமமாகிவிடும்… நான் சமாளித்துக் கொள்வேன்… அதையும் மீறி முடியவில்லை என்றால் நிச்சயமாக நீ சொன்னது போல ஓய்வு எடுக்கிறேன்.” என்று கூற, புன்னகைத்த கதரின்,

“ஓக்கே… டே கெயர் ஒஃப் யுவர் செல்ஃப்…” என்றுவிட்டு விலகிச் செல்ல முயல அவளுடைய கரத்தைப் பற்றத் தடுத்தாள் சமர்த்தி.

நின்று என்ன என்பது போலப் பார்த்தாள் கதரின்.

“நன்றி கதரின்… நிஜமா உன்னோட அக்கறை எனக்கு புத்துணர்வை கொடுக்குது…” என்றதும் புன்னகைத்த கதரின்,

“ஐ ஆம் கிலாட் டு ஹியர் தட்… டேக் கெயர் சமர்த்தி…” என்றுவிட்டு விடை பெற, இவளுக்குத் தான் தர்மசங்கடமாகிப் போனது.

மேலதிகாரி பார்க்கும் வகையில் சோர்ந்து போனோமே, என்கிற மெல்லிய சங்கடத்துடன், விட்ட வேலைகளைத் தொடர்ந்தவளுக்கு ஐந்து மணி சென்றும் வேலை முடிவதாயில்லை.

இருக்காதா பின்னே. அவள் வேலை செய்வது வாராந்திரப் பத்திரிகை நிறுவனம் ஒன்றில். அங்கே வரும் கட்டுரைகள் விளம்பரங்களைப் பிரித்துச் சரி பிழை பார்த்துக் கொடுக்கவேண்டும். வாரம் தோறும், சனிக் கிழமைகளில் மட்டும் வெளியே வரும் அந்தப் பத்திரிகைக்கு, வியாழன் வெள்ளிகளில் வேலை பின்னிப் பெடல் எடுத்து விடும். ஆரம்பத்திலேயே பிரசுரிக்க வேண்டிய கட்டுரைகளை ஒப்படைத்தல் இத்தனை சிக்கல் வராது. என்ன செய்வது அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல கடைசி நேரத்தில் தான் கொண்டுவந்து கொடுப்பார்கள்.

இரவு பன்னிரண்டு மணிக்குள் அனைத்தையும் தயாரித்துக் கொடுத்துவிட வேண்டும். இவள் நேரம், அன்றைக்கென்று கட்டுரைகள் சற்று அதிகமாகத் தான் வந்திருந்தன. இவளால் இருக்கையை விட்டு எழக் கூட முடியவில்லை.

எப்படியோ இறுதிக் கட்டுரையைப் பார்க்கத் தொடங்கிய போது, நேரம் எட்டு மணியைக் கடந்துவிட்டிருந்தது. அனைவரும் கிளம்பியபின்னும் கணினியில் கவனமாக இருக்க, அந்த வழியாகச் சென்ற கதரின் அவள் இன்னும் வேலையில் மும்மரமாக இருப்பதைக் கண்டு கோபம் கொண்டவராக அவளை நோக்கி வந்தார்.

“ஹேய்… நீ இன்னுமா புறப்படவில்லை…” என்று கடிய, செய்துகொண்டிருந்த வேலையிலிருந்து மெல்லியதாகக் கவனம் கலைய நிமிர்ந்து பார்த்தாள்.

புருவம் சுருங்கச் சற்றுக் கோபமாக நின்றிருந்த கதரினைக் கண்டதும், அழகாய் புன்னகைத்தவள்,

“ஆல்மோஸ்ட் டன்… இன்னும் கொஞ்ச நேரம் தான்… முடித்துவிடுவேன்” என்றவாறு தட்டச்சில் எதை எதையோ தட்டிக்கொண்டு வர, வேகமாக அவளை நெருங்கிய கதரின்,

“எனக்கு நீ மேலதிகாரியா, இல்லை உனக்கு நான் மேலதிகாரியா?” என்றார் கோபமாக. கூடவே, கரத்திலிருந்த சுட்டியை (மவுஸ்) பறித்து, எதை எதையோ தட்டி இவள் செய்த வேலையை மின்னஞ்சல் மூலம் யாருக்கோ அனுப்பிவிட்டு,

“உன்னுடைய மிச்ச வேலையை விக்டருக்கு அனுப்பிவிட்டேன். அவன் பார்த்துக்கொள்வான். நீ எழுந்திரு… முதலில் வீட்டிற்குப் போய் ஓய்வெடு” என்றார் கட்டளையாக.

“சரி… சரி… கிளம்பிவிட்டேன்…” என்றவள், மேசையில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்த கோப்புகளை ஒழுங்காக்கி அதன் அதன் இடங்களில் வைத்துவிட்டு, எழுந்தபோது பாதங்கள் வலித்தன.

அப்போதே புரிந்த போனது அவை வீங்கி விட்டன என்று. அதற்கு ஆதாரமாக அவள் அணிந்து இருந்த சப்பாத்து வேறு கடுத்தது.

வலியில் உதடுகளைச் சுழித்தவள், வெளியே எரிக்கும் குளிரிடமிருந்து தன்னை காப்பதற்காகத் தடித்த ஜக்கட்டை அணிந்தவாறு கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, மேசையின் இழுப்பறையைத் திறந்து அதிலிருந்து வண்டித் திறப்பை எடுத்து, இழுப்பறையை மூடிவிட்டு நிமிர்ந்த போது நாரி கொதித்தது. கூடவே வயிறு இறுகுவது போல ஒரு உணர்வு. ஆழ மூச்செடுத்து விட்டு, நிமிர கதரின் இவளைத்தான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“யு ஓக்கே…” என்று கேட்டவாறு அவளை நெருங்கிய கதரின் நன்றாகவே மேடிட்டிருந்த அவளுடைய இறுகிய வயிற்றை வருடிக் கொடுத்து,

“த்ரீ மோர் மந்த்ஸ்…” என்றாள் கனிவாய். ஆம் என்பது போலத் தலையசைத்த சமர்த்திக்குப் புன்னகையில் முகம் விகாசித்தது. தன் மேடிட்ட வயிற்றை வருடிக் கொடுத்தவளுக்கு எப்போதடா அந்த மூன்று மாதங்கள் கழியும் என்கிற பேரவா எழுந்தது.

அந்த எதிர்பார்ப்புடனே, கதரினிடமிருந்து விடை பெற்றுத் தன் வண்டியில் ஏறி, அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்தபோது அவளுக்கு உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட உணர்வு. அளவுக்கு மீறிக் களைத்தது.

வயிறு வேறு அடிக்கடி இறுகி இறுகி இளகியது. இன்னும் முன்று மாதங்களில் அவளுக்கென்று புதிதாய் ஒரு உறவு… நினைக்கும் போதே அத்தனை களைப்பும் மொத்தமாய் மறைந்து போக உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.

மேடிட்ட வயிறை வருடிக் கொடுத்தவாறே மின்தூக்கியை அழுத்த அடுத்த சில வினாடிகளில் இவளை விழுங்கத் தயார் என்பது போல விரிந்து கொண்டது மின்தூக்கி. உள்ளே சென்றவள் ஐந்தாவது மாடியை அழுத்திவிட்டுச் சுவரோடு சாய்ந்து நிற்க, சற்று நேரத்தில் அவள் இறங்க வேண்டிய தளம் வந்தது.

வீட்டிற்கு வந்தவள், கதவைப் பூட்டிவிட்டு, சமநிலைக்காகச் சுவரைப் பற்றியவாறு சப்பாத்தைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு அதுவே பெரும் சாகசம் போலத் தோன்றியது.

யாராவது அவளை அரவணைத்து அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமாட்டார்களா என்கிற ஏக்கம் பிறந்தது. ஆனால், நடக்காத காரியமாயிற்றே.

பெருமூச்சோடு உள்ளே சென்றவளுக்கு பெரும் ஆயாசமானது. கைப்பையை மேசையில் விட்டெறிந்துவிட்டுச் சோர்வுடன் நீள் இருக்கையில் சரிந்து அமர்ந்தபோது, யாராவது ஒரு குவளை தேநீர் வார்த்துத் தரமாட்டார்களா என்கிற ஏக்கம் பிறந்தது.

ஏனோ முன்பு போல எதுவும் இலகுவாக இல்லை. முணுக் என்று அழுகை வருகிறது. களைப்புத் தோன்றுகிறது. பிறரின் உதவியை நாடுகிறது. மூச்சு முட்டுகிறது. நடக்கும்போது இடைக்கும் தொடைக்குமான பகுதி கடுக்கிறது. கால்களைச் சேர்த்தாற் போல வைத்து நடக்க முடியவில்லை. குழந்தையைப் பிரசவிக்கும் பகுதி வலிக்கிறது. ஏதோ வாத்து நடப்பதுபோலத்தான் அவளாலும் நடக்க முடிகிறது. காலுக்கு இரத்தம் போக மறுப்பதால் விறைக்கிறது. குடைகிறது. பாதம் வீங்கிப் போகிறது. இவை எல்லாவற்றிட்கும் மேலாக மனம் தளர்ந்து போகிறது. புத்தி சோர்ந்து போகிறது. அதுவும் மாதம் போகப் போக மிக மிகச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் யாருடைய உதவியையும் இதுவரை நாடவில்லை. நாடுவதாகவும் இல்லை.

அன்று அவளை அண்ணன் வீட்டில் விட்டு விட்டுச் சென்றதன் பின், அவளுடைய வாழ்க்கையே தலைகீழாகிப் போனது.

அவனில்லாமல் வாழவும் முடியாமல், அவனை எண்ணிச் சாகவும் முடியாமல் நரகத்தின் மீது கிடந்தவளுக்கு, டொரன்டோவே கசந்து போனது.

இங்கே இருந்தால் அவனுடைய நினைவுதான் எப்போதும் மண்டையைக் குடையும். நடந்த கசப்பான சம்பவங்கள் அவளை வாட்டி வதைக்கும் என்பதால், எங்காவது கண்காணா இடத்திற்குச் சென்றுவிட முடிவு செய்தாள் சமர்த்தி.

முதலில் புஷ்பா மறுத்து அழுதார். தயாளன் தான் அவளுடைய நிலை உணர்ந்து தனியாச் செல்ல சம்மதித்தார். அண்ணன் சம்மதித்ததுமே, அல்பேர்ட்டாவில் உள்ள சிறிய பத்திரிகை ஒன்றில் வேலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

வந்தபின்தான், குழந்தை உண்டாகியிருப்பதே அவளுக்குத் தெரிந்தது. தலைச்சுற்றல் வாந்தி என்று வந்தபோது, ஏதாவது சாப்பாடு ஒத்துக்கொள்ள வில்லையோ என்கிற சந்தேகத்தில் போய்ப் பரிசோதித்தபோதுதான் அந்த நல்ல செய்தியை வைத்தியர் சொன்னார்.

முதலில் அவளால் அதை நம்பவே முடியில்லை. காரணம், உத்தியுக்தன் குழந்தை வேண்டாம் என்பதில் மிகக் கவனமாக இருந்தான். அப்படி இருக்கையில் எப்படிக் குழந்தை உருவானது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் குழந்தை வந்தது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியே.

உடனே இதைப்பற்றி அண்ணியிடம் சொல்லத் தான் விளைந்தாள். உடனே அந்த எண்ணத்தை மாற்றியும் கொண்டாள்.

அண்ணிக்குத் தெரிந்தால், உடனே உத்தியுக்தனுக்கும் தெரிந்து போகும். தெரிந்தால் அடுத்து என்ன செய்வான் என்று சொல்ல முடியாது.

குழந்தை வேண்டாம் என்று கலைக்கச் சொல்வானா? இது என் குழந்தை இல்லை என்பானா? இந்தக் குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பானா? தெரியவில்லை. ஆனால் குழந்தையைக் கொண்டாட மாட்டான் என்பது நிச்சயமே.

குப்பையை எடுத்து வந்து கொட்டுவது போல, இவள் வேண்டாம் என்று, அண்ணன் அண்ணியின் வீட்டில் தள்ளிவிட்டுப் போனவனுக்கு இந்தக் குழந்தை பற்றித் தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்தாள் சமர்த்தி.

ஆனால் தன்னுடைய அவசர புத்தியால்தான் அவளை வெறுத்து ஒதுக்கினான் என்பதை மட்டும் அவள் ஏற்றுக்கொள்ள மறுத்தாள்.

அடுத்து புஷ்பாவிற்குத் தெரிந்தால் சும்மா இருக்க மாட்டார். அவளைத் தன்னோடு இருக்கச் சொல்லி வற்புறுத்துவரர். ம்கூம், இதுவரை அவர்களுக்கு அவள் கொடுத்த தொல்லை போதும். இனியும் கொடுப்பதாயில்லை.

முடிவு செய்தவளாகக் குழந்தை உருவாகி இருப்பதை மறைத்துவிட்டாள். ஆனால் நாள் போகப் போகப் பயப்பந்து அடைத்துக் கொண்டது.

எத்தனை நாளைக்கு அவளால் மறைக்க முடியும் என்று தெரியவில்லை. குழந்தை பிறந்தால், அவர்களுக்குத் தெரியாமல் போகுமா? எப்படியாவது தெரிவிக்கத்தானே வேண்டும்? ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம், அவர்களிடமிருந்து காரணமின்றியே மறைக்கச் சொன்னது.

இதோ இப்பொது ஏழு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், அவர்களிடம் தன் நிலையைக் கூட முடியாமல் தவித்துக் கிடந்தாள் சமர்த்தி.

ஆனால் மாதம் போகப் போக, அவனைப் பெரிதும் தேடத் தொடங்கினாள் சமர்த்தி. ஒவ்வொரு நாளும் பாதங்கள் வலிக்கும் போதும், இடை நோகும் போதும் இதமாக அவன் அழுத்திவிடமாட்டானா என்கிற பெரும் ஏக்கம் எழும். அதற்கான வாய்ப்பு இல்லை என்று நன்றாகவே புரிந்தாலும், எழும் ஆவலை அவளால் அடக்க முடிவதில்லை.

அவன் மட்டும் அவளுக்குத் துரோகம் செய்யாமல், நல்ல கணவனாக இருந்திருந்தால்…?’ நினைக்கும்போதே நெஞ்சம் கனத்துப் போனது அவளுக்கு.

சோர்வுடன் கால்களை நீட்டித் தேநீர் மேசையின் மீது வைத்து விட்டுச் பின்புறம் சரித்திருந்த தலையை நிமிர்த்தாமலே கண்களை மட்டும் கீழே செலுத்திப் பாதங்களைப் பார்த்தாள். மேடிட்ட வயிருக்கூடாகப் பாதங்கள் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவற்றின் இறுக்கம் அதன் வீக்கத்தைச் சொல்லாமல் சொல்லச் சலிப்புடன் உதடுகளைச் சுழித்தவள், விழிகளை மூடியபோது தன்னிரக்கம் அவளை மேலும் சோர வைத்தது.

இப்போதே இந்தக் கணமே உத்தியுக்தனின் மார்பில் தலைசாய்த்து ஒரு பொழுதாவது ஓய்வெடுக்கவேண்டும் என்கிற ஆவல் பல்கிப் பெருகியது. அவன் கையணைப்பு கொடுக்கும் சுகத்தில் ஆழ்ந்து உறங்கவேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. எல்லாற்றிட்கும் மேலாக அண்ணியின் கையால் ஒரு பிடி உணவாவது உண்ணவேண்டும் என்று நெஞ்சம் தவித்தது. ஆனால் அது முடியாதே.

நினைக்கும் போதே கன்னத்தில் கண்ணீர் உருண்டு சென்றது.

அன்று அவள் சற்று நிதானமாக நடந்திருக்க வேண்டுமோ? என்னதான் அவன் தவறு செய்து இருந்தாலும், பொது இடத்தில் வைத்து அவனைத் திட்டியிருக்கக் கூடாது. அவனைப் போல கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கலாம்.

இப்போது யோசிக்கும்போது, அன்று நடந்தது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றியது. என்னதான் இருந்தாலும், நான்கு சுவருக்குள் தன் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டும் என்று இப்போது புரிந்தது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

மீண்டும் கண்களில் கண்ணீர் வழிய. எரிச்சலுடன் கண்ணீரைத் துடைத்து எறிந்தவளுக்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது.

எதற்காக அழவேண்டும்? ஏன் அழ வேண்டும். வாழ்க்கையில் அவள் மட்டும்தானா பிரச்சனைகளைச் சந்திக்கிறாள். வேறு யாரும் சந்திக்கவில்லையா என்ன? அவர்கள் எல்லாம் இப்படித்தான் கலங்கி நிற்கிறார்களா… அழவேண்டுமானால் அவன்தான் அழ வேண்டும். இத்தகைய ஒருத்தியைத் தொலைத்ததற்காக அவன்தான் கலங்க வேண்டும்.

ஆனாலும் அவளையும் மீறி உத்தியுக்தனின் ஒரு விரல் வருடலுக்காக நெஞ்சம் ஏங்கத்தான் செய்தது.

எத்தனை பேர் அவளுக்கு அருகே அரனாக நின்றிருந்தாலும், அவன் நிற்பது போல, அவன் தாங்கிக் கொள்வது போல வருமா? அவன் பக்கத்தில் நின்றிருந்தாலே ஆயிரம் யானைகள் அருகே நிற்பது போலத் திடம் தோன்றுமே. இதோ இப்போது கூட இடை வலிக்கிறது. தன் அழுத்தம் நிறைந்த கரங்கள் கொண்டு இடை வருடி ‘ஒன்றுமில்லை… சரியாகிவிடும்’ என்று சொல்ல மாட்டானா என்று நெஞ்சம் தவிக்கிறதே. இதோ இப்போது சாய்ந்திருக்கும் நீளிருக்கை அவன் மடியாக மாறாதோ என்று உள்ளம் பரிதவிக்கிறதே… இப்போது கூட அவனில்லாத இந்த வீடு ஏதோ சுடுகாடுபோலத்தானே தோன்றுகிறது.

இத்தனைக்கும் அவள் முன்னால் இன்முகம் காட்டாதவன். கரிசனையாய் ஒரு வார்த்தை பேசாதவன். அவளுக்காய் துடிக்காதவன்… அவள் மீது அளவுக்கதிகமாக வெறுப்பைத் தேக்கி வைத்து இருப்பவன். அவளை ஜடப்பொருளாகப் பார்த்தவன். சொல்லப்போனால் அவனை விட்டுப் பிரிந்து வந்த இந்த ஏழு மாதங்களில் அவள் எங்கே இருக்கிறாள் என்கிற தேடலைக் கூட மருந்துக்கும் செயல்படுத்தாதவன்… அப்படிப்பட்டவனின் அருகாமைக்காக ஏங்கி இவள் தவிப்பது எத்தனை பெரிய வெட்கக் கேடு. இதை விடக் கேவலம், அவமானம் ஒரு பெண்ணுக்கு இருக்க முடியுமா.

ஆனால் இந்த வெட்கம் கெட்ட மனது மீண்டும் மீண்டும் அவனைத் தேடித்தானே ஓடுகிறது. கடவுளே… எத்தனை காலங்களாக இத்தகைய வேதனைகளை நேர்காணப் போகிறாள். பத்து வருடங்கள், இருபது வருடங்கள்… இல்லை அவளுடைய ஆயுளுக்குமா? நினைக்கும் போதே நெஞ்சம் வலித்தது.

நிச்சயமாக அவனுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவள் உயிர் இந்த உடலில் இருக்கும் வரைக்கும், அவன் மட்டும்தான் அவளுக்கு. ஆனாலும் இரட்டை வாழ்க்கை வாழும் அவனோடு, அவளுக்கு உண்மையாக இல்லாதவனோடு, அன்பைப் பகிர்ந்தளிக்கத் தெரியாதவனோடு நிச்சயமாகச் சேர்ந்து வாழ முடியாது. அவனுடைய இறுக்கம் அவளை மட்டுமல்ல, அவர்களுடைய குழந்தையையும் அல்லவா பாதிக்கும்.

அந்த நிலையை ஒரு போதும் அவளுடைய குழந்தைக்குக் கொடுக்கப் போவதில்லை. அவன் இல்லாமல் அவள் ஒன்றும் நொடிந்து போகவில்லையே. நன்றாக, மிக நன்றாகத்தானே இருக்கிறாள். இப்படியே இருந்து கொள்வாள்.

ஆனால் பல காலங்களுக்கு அண்ணன் அண்ணியைப் பார்க்காமல் இருக்க முடியாது என்பது மட்டும் புரிந்து போயிற்று. அந்த நிலையில் குழந்தையோடு எப்படி அவர்களை எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. அதை நினைக்கும் போதே தவறு செய்தவள் போல இதயம் வேகமாகத் துடித்தது.

தவிப்புடன் எப்போதும் போலத் தன் கைப்பேசியை எடுத்தவள் உத்தியுக்தனின் பெயரைத் தட்ட, புதிதாக எந்தச் செய்தியும் இல்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு அவனும் ஜுலியட்டும் இணைந்து செய்த தொழிலில் ஏற்பட்ட வெற்றி பற்றித்தான் அது கூறியிருந்தது. கூடவே பக்கத்தில், ஜூலியட் உத்தியுக்தனோடு உரசியவாறு கண்கள் மின்ன, முகம் பளிச்சிட நின்றிருந்தாள்.

கீழே இருவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்வது போலச் சித்திரிக்கப்பட்டிருக்க, எப்போதும் போல மனம் கலக்கத்துடன் அடித்துக்கொண்டது.

அவள் பிரிந்து சென்றதை எண்ணி அவன் இம்மியும் கலங்கியதுபோலத் தெரியவில்லை. எப்போதும் போல அதே கம்பீரத்துடன், சிரிக்க எவ்வளவு பணம் கொடுப்பாய் என்பதுபோல ஒற்றைக்கால் மடித்துப் படத்திற்குப் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்த ஜூலியட்டோ, அவனுடைய தோளில் ஒரு கரத்தைப் போட்டவாறு மிக மிக அழகாக நளினத்துடன் நின்றிருந்தாள்.

ஏதோ அந்தப் படத்தை முதன் முதலாகப் பார்ப்பதுபோல ஆத்திரமும் அழுகையும் வந்தது.

அவளுடைய தவிப்பு குழந்தையையும் பாதித்ததோ? அவள் வயிற்றை எட்டி உதையத் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தாள் சமர்த்தி. தன் வயிற்றை வருடிக் கொடுத்தவளின் முகத்தில் அதுவரையிருந்த இறுக்கம் மறைந்துபோக இப்போது கனிவுடன் கூடிய புன்னகை அவள் உதடுகளில் தவழ்ந்தது.

“ஹே.. லிட்டில் சப்… ஐ நோ… யு ஆர் ஹங்கிரி…” என்றவள், குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக, இருக்கையை விட்டு எழுந்து, உண்பதற்கு என்ன இருக்கிறது என்கிற யோசனையோடு சமையலறைக்குள் நுழைந்தாள்.

What’s your Reaction?
+1
36
+1
11
+1
3
+1
0
+1
7
+1
2

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!