Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-17

17

 

அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும் வந்திருக்கவில்லை. அவள் ஆறு மணிக்குத்தான் வருவாள்.

தனக்குப் பிடித்தமான தேநீரை வார்க்கும்போதே உத்தியுக்தனுக்கும் அது போல வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது. ஆனால் அவனுக்குத் தேநீர் பிடிக்காது என்று லீ கூறியது நினைவுக்கு வந்தது. அவனுக்குக் கடும் காப்பிதான் பிடிக்குமாம். அதுதான் எப்போது பார்த்தாலும் கடு கடு என்றிருக்கிறான் போல.

உதடுகளைச் சுழித்தவள், தனக்கான தேநீர் குவளையோடு வெளியே வந்தபோது, இளம் காலைக் காற்று மெதுவாக அவளைத் தழுவிக் கொண்டு சென்றது. ஏனோ உள்ளம் சற்று இலேசானது. அது ஜூன் மாதம் என்பதால் நான்கு முப்பதிற்கெல்லாம் நன்றாகவே விடிந்து விடும். அந்த விடியலை ரசித்தவாறே வீட்டின் பின் புறம் வந்தாள்.

உத்தியுக்தனின் வீட்டுப் பின்புறத்தில் பெரிய திண்ணை இருந்தது. அதற்கு இரண்டு பக்கத்திலும் தோட்டத்திற்கு இறங்கிச் செல்ல வசதியாகப் படிகளும் இருந்தன. அந்தப் பரந்த பச்சைப் புல்வெளியின் நடுவே பெரிய பாதவடிவிலான நடைபாதை.

புல்வெளியின் இரண்டு பக்கங்களிலும் அடர்ந்த செடிகளுக்குள் குருவிகளின் மெல்லிய கீச்கீச் ஒலிகள் கேட்பதற்கே மிக ரம்மியமாக இருந்தது. அந்தச் செடிகளுக்கு நடுவில் பெரிய பாறைகளும், சிறிய பாறைகளுமாக அடுக்கப்பட்டிருக்க அவற்றிற்கு இடையிடையே பெயர் தெரியாத வர்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன.

பார்க்கும் போது, நந்தவனத்திலிருப்பது போன்ற மாயையைத் தோற்றுவிக்கச் சற்று அப்பால் வாசனையைப் பரப்பியவாறு மலர்ந்த மலர்ச்செடிகள். அவற்றிலே தேனருந்தச் சுதந்திரமாய் படபடவென்று சிறகை அடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள் நிற்பதுவும் பறப்பதுவும் தங்குவதுமாகப் பறந்து திரிய, அதன் அழகில் மெய் மறந்தவளாய், கரத்திலிருந்த தேநீரை உதடுகளில் வைத்து ஒரு இழுவை இழுத்தவாறு தரையிறங்கினாள் சமர்த்தி. வெற்றுத் தரையில் பாதம் பட்டதும் சில்லிட்டது.

மெல்லிய கதிரவனின் தீண்டலிலும், கவரும் நறுமலர்களின் வாசனை கொடுத்த கிறக்கத்திலும் சிறிய குருவிகளின் கீச் கீச் ஒலிகளிலும் தன்னை மறந்து விழிகளை மூடி ஆழ மூச்செடுத்து விட்டவளின் உதடுகளில் மெல்லிய புன்னகை பரவியது. ஆஹா.. சொர்க்கம் சொர்க்கம். இந்த அழகிய காலை நேரத்தை நுகராது இன்னும் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது? மெதுவாக விழிகளைத் திறந்தவளுக்கு ஏனோ அந்தக் கணம் அவளும் உத்தியுக்தனுமாகக் கைகோர்த்து அந்தப் பாதையின் நடுவே நடந்து செல்லவேண்டும் என்கிற பேரவா எழுந்தது. நடக்க முடியாத ஆசை. அது கொடுத்த வலியை அசால்ட்டாக உதறியவள், மேலும் நடந்து செல்ல, அவளைப் பெரிய நீண்ட நீச்சல் குளம் ஒன்று வரவேற்றது. நீச்சல் குளத்தை அண்டி சாய்மானக் கதிரைகள் அமர்வதற்கு வசதியாக இருக்க, அதில் அமர்ந்தவாறு எஞ்சி தேநீரைச் சுவைத்துவிட்டுக் குவளையை ஓரமாக வைத்தவள், சாய்வாக அமர்ந்தாள்.

தென்றல் காற்று வேறு அவளைத் தாலாட்டிச் செல்ல, விழிகளை மூடியவள், எத்தனை நேரமாக அப்படியே இருந்தாளோ, திடீர் என்று யாரோ நீச்சல் குளத்தில் குதிக்கும் அரவம் கேட்கத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

உத்தியுக்தன்தான், தண்ணீருக்குள் மூழ்கி நீந்திக்கொண்டிருந்தான். அவன் நீந்தும் போது அசைந்த கரங்களும் தொடைகளும் உருண்டு சுருண்டு எழுந்த தசைகளும் அப்பப்பா அவளை மொத்தமாகக் கொள்ளை கொண்டு அல்லவா போகிறான் அந்த ஆண்மகன். அவன் நீந்தும் அழகைக் கண்டவளுக்கு மொத்தமாய் எல்லாமே மறந்து போக அந்த உலகத்தில் அவளும் அவனும் மட்டுமாய் நாட்காட்டி முற்களாய் மாறி இயங்குவது போல ஒரு மாயைத் தோற்றத்தில் இமைக்க மறந்து நின்றாள் சமர்த்தி.

அவனோ, அங்கும் இங்குமாக அரை மணி நேரம் நீந்தியவன், உடல் முழுவதும் நீர் தெறிக்க நீச்சல் குளத்தை விட்டு வெளிவந்தான். அங்கே அவள் ஒருத்தி இருக்கிறாள் என்கிற சிறு உறுத்தலோ, ஆர்வமோ இல்லாதவனாகச் சற்றுத் தள்ளியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாற்ற, அது இவள் முகத்திலேயே அறைந்து சாற்றியது போலத் தவித்துப்போனாள்.

சின்னதாய் ஒரு ‘ஹாய்’ கூடவா சொல்லக் கூடாது. அவளும் மனுஷிதானே. அவளை மதிக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு மனுஷியாகக் கூடவா பார்க்கக் கூடாது.

அதுவரை அழகாய்த் தெரிந்த இடம், தண்ணீர் வற்றிப்போன பாலைவனமாய்த் தெரிய, விழிகளில் நீர்கோர்க்க அப்படியே அமர்ந்திருந்தாள் சமர்த்தி.

அவன் குளித்து விட்டு வேர்ரோப் அணிந்து, அதன் இடைப் பட்டியைக் கரங்களால் முடிந்தவாறு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வெளியே வந்தான். வந்தவனின் விழிகள் ஏனோ இவளைத்தான் நேர் கோடாகப் பார்த்தன.

இவளுக்கோ அந்தப் பார்வையில் உள்ளம் குத்துக் கரணம் அடிக்கப் புத்தியோ தாறுமாறாகத் தடுமாறத் தொடங்கியது. உத்தியுக்தன் என்ன நினைத்தானோ நேராக இவளை நோக்கி வரத் தொடங்க, இவளுடைய நெஞ்சம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது. அவன் நெருங்க நெருங்க இவளுடைய தொண்டை வறண்டு போனது. விழிகளோ வெளியே வந்து விழுந்துவிடும் போல விரியத் தொடங்கின. கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

நிஜமாகவே என்னை நோக்கித்தான் வருகிறானா இல்லை… எனக்கு அப்படித் தெரிகிறதா? பெரும் தடுமாற்றத்துடன் எச்சில் கூட்டி விழுங்கியவள், காய்ந்த உதடுகளைத் தன் நாவால் ஈரப்படுத்தியவாறு நீளிருக்கையை விட்டு எழ முயல, அதற்கிடையில் இவளை நெருங்கியிருந்தான் உத்தியுக்தன்.

அவன் நெருங்கியதும் மீண்டும் நீளிருக்கையில் தொப்பென்று அமர, அவனோ இப்போது அவளை நோக்கிக் குனியத் தொடங்கினான்.

அவன் குனிந்த வேகத்தைக் கண்டதுமே, புத்தி தன் பாட்டிற்கு எதை எதையோ எக்குத்தப்பாகக் கற்பனை செய்யத் தொடங்கியது.

ஐயோ! இப்படி அதிகாலையில் அருகே வருகிறானே… வேலையாட்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?’ அதிர்வும் கூச்சமுமாகச் சுத்தவரப் பார்த்தாள்.

நல்ல வேளை யாருமில்லை. ஒரு வித எதிர்பார்ப்போடு அவனை ஏறிட, இவனோ இப்போது அவளை நோக்கி நன்கு குனிந்துவிட்டிருந்தான். இரு உடல்களும் ஒன்றோடு ஒன்று உரசும் அளவுக்கு நெருங்கியிருந்தது. போதாதற்கு, அவனுடைய சுருண்ட குழலிலிருந்து இரு துளி நீர் இவள் நெற்றியில் விழ, அந்த நீர்த் துளி விழுந்ததால் சிலிர்த்தாளா, இல்லை அந்த ஆண்மகனின் திண்ணிய உடல் இவளைத் தொடும் தூரத்திற்கு வந்ததால் சிலிர்த்தாளா என்று தெரியாமல் தடுமாறி நிற்க, அவன் தன் கூரிய விழிகளால், சிலிர்த்துத் தவித்துத் துடித்த அந்தப் பாவையவளின் முகத்தையே உற்றுப் பார்த்தான்.

அதிர்ச்சியில் நன்கு விரிந்த விழிகள். இவன் அருகாமை கொடுத்த தகிப்பினாலோ, இல்லை உணர்ச்சியின் வேகத்தாலோ சிவந்துபோன முகம்… எங்கே அதிகம் நெருங்கிவிடுவானோ என்று அஞ்சியவை போன்று சற்று நடுங்கிய உதடுகள். அதை அடக்கும் வழி தெரியாது அணை போட்டு அடக்க முயன்ற முல்லைப் பற்கள். அவளுடைய அந்த முக தரிசனத்தைக் கண்டவனுக்கும் தன் விழிகளைத் திருப்ப முடியவில்லையோ? இல்லை அந்த வறண்ட உதடுகளை ஈரப்பற்றாக்கவேண்டும் என்று அவசரமாய் எண்ணினானோ? அவளுக்கு இரு பக்கமும் கரங்களைப் பதித்தவன், எதுவோ உந்திய உணர்வில் மேலும் அவள் உதடுகளை நோக்கிக் குனிய, இவளோ அவன் நெருக்கத்திலிருந்து விலகவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் வீரியம் நிறைந்த அவனுடைய கண்களைப் பார்க்கவும் முடியாமல், எதுவோ ஒன்று அழுத்திய உணர்வில் மார்புகள் மேலும் கீழும் ஏறியிறங்க, எதிலிருந்தோ தப்புபவள் போலத் தன் விழிகளை அழுந்த மூடிக் கொண்டாள்.

அது வரை அவனைச் சுனாமிப் பேரலையாய் உள்ளே இழுத்த விழிகள் மூடிக்கொண்டதும் எதிலிருந்தோ விழித்தவன் போலத் திடுக்கிட்டு அந்த நிலைமையை உள்வாங்கினான் உத்தியுக்தன்.

எப்போது இங்கே வந்தோம்? எதற்காக அவளை நோக்கி வந்தோம்? எதற்காக அவளை நெருங்கினோம்? எதற்காக அவளுடைய முகத்தைக் கண்டு தன்னிலை கெட்டோம்? எதற்காக அவளுடைய விழிகளில் மொத்தமாய் தொலைந்தோம் என்று புரியாமல் குழம்பியவனுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. எனக்கென்னவாகிவிட்டது என்று குழம்பியவனாக, அவளை விட்டு விலகியவன், ஏதோ தவறு செய்தவன் போலச் சடார் என்று வீடு நோக்கிச் செல்ல இவளோ அவன் சென்றது கூடப் புரியாமல் அவனுடைய உதடுகளின் சங்கமத்திற்காக ஒரு வித படபடப்புடன் காத்திருந்தாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்த சங்கமம் நிகழாது போக, அதுவரை அழுத்திய ஒரு வித போதை திடீர் என்று மாயமாகிச் சென்ற உணர்வில் விழிகளைத் திறக்க, அங்கே வெற்று ஆகாயம்தான் அவளை வரவேற்றது. இல்லையே…! உத்தியுக்தன் அவளை நெருங்கி வந்தானே. முத்தமிடுவது போல நெருங்கி நின்றானே…! நம்ப மாட்டாமல் தலையைத் திருப்பி இரு பக்கமும் பார்த்தாள். ம்கூம் மருந்துக்கும் அவனைக் காணவில்லை.

ஒரு வேளை ஏதாவது கனவு கண்டிருப்பாளோ? குழப்பத்துடன் தன் நெற்றியை வருடியவளுக்கு அதிலிருந்த நீர்த் துளிகளை உணர்ந்ததும், அது கற்பனையல்ல, நடந்த நிஜம் என்பது புரிய, வேகமாக எழுந்தமர்ந்தாள் சமர்த்தி.

ஏனோ நெஞ்சத்தில் இனம் தெரியாத ஒரு ஏமாற்றம் தோன்ற விழிகளில் மெல்லிய கண்ணீர் படலம். அவன் முத்தமிடுவது ஒன்றும் புதிதல்லதான். ஆனால் காமத்திற்காக முத்தமிடுவதற்கும், காதலுக்காக முத்தமிடுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே. வேதனையுடன் எழுந்தவள், சோர்வுடன் அவர்களின் பொது அறைக்கு நுழைய, அவளுடைய கைப்பேசியிலிருந்து யாரோ அழைத்ததற்கான அறிவுறுத்தல் வந்துகொண்டிருந்தது.

எரிச்சலுடன் எடுத்துப் பார்க்க, அங்கே அண்ணியின் பெயரைக் கண்டதும், அதுவரையிருந்த வருத்தமும் எரிச்சலும் மாயமாக மறைந்து போக முகம் பளிச்சென்று மலர்ந்து போனது. உடனே புஷ்பாவை அழைக்க, இவளுடைய அழைப்புக்காகத் தான் அவரும் காத்திருந்தார் போலும், உடனே அழைப்பை ஏற்று,

“தங்கம்… எப்படிடா இருக்கிறாய்…” என்றார் கனிவாய். அவருடைய குரலைக் கேட்டதும், இவளுடைய தொண்டை கமறத் தொடங்கியது. விழிகளோ கண்ணீரைச் சொரியத் தொடங்கியது.

“அ… அண்ணி…” என்றவளின் குரலிலிருந்த மாற்றத்தை உணர்ந்துகொண்ட புஷ்பா பதறியவராக,

“கண்ணம்மா… என்னடா? அங்கே ஏதாவது பிரச்சனையா?” என்று தவிக்க, அவருடைய அன்பில் உருகிப்போனாள் சமர்த்தி. வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே,

“அண்ணி… நான்… நான் நன்றாக… இருக்… இருக்கிறேன்…” என்றபோது அவளையும் மீறி விம்மல் வெடிக்கத்தான் செய்தது. அதை உணர்ந்து கலங்கியவராக,

“சத்தி… என்னடா… எதற்கு அழுகிறாய்… அங்கே எல்லாம் நன்றாக… என்னம்மா… அங்கே எந்தப் பிரச்சனையும் இல்லையே…” என்று கேட்ட போது, கழிவிரக்கத்தில் மேலும் அழுதவளாகத் தலையை இல்லை என்பது போல ஆட்டினாள். இவள் மறுப்பாகத் தலையை ஆட்டினாள் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரியவா போகிறது.

“கண்ணம்மா.. என்னடா…? தம்பி ஏதாவது திட்டினாரா…? என்னடா…? என்ன பிரச்சனை…? எதற்கு அமைதியாக இருக்கிறாய்…?” என்று துடிக்க அப்போதுதான் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியது புரிந்தது. அவசரமாக,

“இங்கே எந்தப் பிரச்சனையும் இல்லை அண்ணி… மிஸ் யு…” என்று மேலும் விசித்தவாறு கூற, மறுபக்கத்திலிருந்த புஷ்பாவிற்கு அவரையும் மீறிப் புன்னகை மலர்ந்தது.

இன்னும் குழந்தையாக இருப்பவளை என்ன செய்யலாம். அவளைக் குழந்தையாக வைத்து இருந்ததே தான்தான் என்பதை மறந்தவராக,

“சரிடா தங்கம்… என் செல்லம் இல்லையா… அழக் கூடாது… கண்களைத் துடைத்துக் கொள்… ம்…” என்று சிறு கண்டிப்புடன் கூற, ஓரளவு தன்னை நிலைப்படுத்தியவள், வீணாக அண்ணியையும் மனச்சங்கடப்படுத்துகிறோம் என்பது புரிந்தவளாக,

“ஒன்றுமில்லை அண்ணி… உங்களை விட்டு இத்தனைகால் பிரிந்ததில்லையா.. அதுதான் அழுகை வந்துவிட்டது.” என்றபோது உருகிப்போனார் புஷ்பா.

“சரி சரி… நாங்கள் என்ன தொலைவிலா இருக்கிறோம்? பக்கத்தில்தானே? அதற்குப் போய் இப்படி அழுகிறாயே? பயந்துவிட்டேன் தெரியுமா?” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, கைப்பேசி கைமாறியது. இப்போது அவளுடைய அண்ணனின் குரல் காதை அடைய மீண்டும் குரல் கம்மியது.

“கண்ணம்மா… என்னடா செய்கிறாய்…? எழுந்து விட்டாயா…? தேநீர் குடித்தாயா…? தூங்கினாயா? உத்தியுக்தன் என்ன செய்கிறார்…? உன்னைச் சந்தோஷமாக வைத்திருக்கிறாரா?” என்று ஏதோ பல மைல்களுக்கு அப்பால் சென்றிருப்பவள் போல அன்பைக் கொட்ட ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் மறு பக்கம் சிரிப்புதான் தோன்றியது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு இதர அன்புக்குக் கட்டுப்பட்டவளாகப் பதில் கொடுக்க மீண்டும் கைப்பேசி கைமாறியது.

“கண்ணம்மா…! எப்போது எங்கள் வீட்டிற்கு வரப்போகிறாய்? என் கையால் சமைத்து உங்கள் இருவருக்கும் படைக்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறதுடா… நாளை மறுநாள் நல்ல நாள்…! நீயும் மாப்பிள்ளையும் வருவீர்களா?” என்று பெரும் ஆவலாகக் கேட்க இவளுக்குத்தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவர்களின் வீட்டிற்கு வருவதற்கு என்ன சொல்வான். தெரியவில்லையே.

“அண்ணி… நான்… அவரிடம் கேட்டுவிட்டுச் சொல்லவா…?” என்று தயங்க,

“சரிம்மா… நீ கேட்டுவிட்டே சொல்லு… உன் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்…” என்று கூறிவிட்டுக் கைப்பேசியை நிறைவு செய்ய, இவளும் கைப்பேசியை கரத்தில் வைத்தவாறு யோசனையில் இறங்கினாள்.

இப்போது என்ன செய்வது? நிச்சயமாக அங்கே வர சம்மதிக்க மாட்டான். இவன் சம்மதிக்க வில்லை என்றால் அண்ணா அண்ணியின் மனம் வருத்தமடையும். எப்படிச் சமாளிப்பது. எத்தனை ஆவலாகக் கேட்டார்கள். இரண்டு கிழமைகளாக அவர்களைப் பார்க்காதது வேறு அவளை வதைத்தது.

விட்டால் அவள் தனியாக ஓடிவிடுவாள்தான். ஆனால் திருமணம் முடித்து, முதன் முதலாக எப்படித் தனியாகச் செல்வது. அண்ணி அதை விரும்பமாட்டார்களே. இதை எப்படி அவனிடம் சொல்வது? சொன்னாலும் கூட வரச் சம்மதிப்பானா? சுத்தமாகப் புரியவில்லை சமர்த்திக்கு.

ஆனால் அண்ணியின் வேண்டுகோளை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிற உறுதி மட்டும் மனதில் நிலைத்தது சமர்த்திக்கு.

அதுவும் அவனை எப்படி நெருங்குவது என்கிற குழப்பத்துடன் சமையலறை நோக்கிச் செல்ல, லீ வந்துவிட்டிருந்தாள். இவளைக் கண்டதும்,

“வத் கான் ஐ தூ போர் யு மாம்…” என்று கேட்க, ஏதோ அவள் இளவரசி போலவும், முன்னாளிருந்த லீ சேடிப்பெண் போலவும் தோன்ற அவளையும் மீறி உதட்டில் மெல்லிய புன்னகை தளும்பியது.

“ஒன்றுமில்லை… நீ உன் வேலையைப் பார்…” என்று கூறிவிட்டு, சீரியல் பெட்டியை எடுத்தவாறே லீயைப் பார்த்து,

“நீ சாப்பிட்டுவிட்டாயா?” என்றாள் அக்கறையாக.

“யெஸ் மாம்…” என்று தலையைக் குனிந்தவாறு கூற, இவளோ,

“ப்ச்… எத்தனை முறை சொல்லிவிட்டேன் என்னை மாம் என்று அழைக்காதே என்று. என்னைச் சமர்த்தி என்று அழை லீ…” என்று கடிந்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் சீரியலைக் கொட்டிக் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து குளிர்ந்த பாலை அதில் ஊற்றிவிட்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவாறு உணவைச் சுவைக்கத் தொடங்க,

“தூ யு நீத் தீ?” என்றாள் லீ. இவள் மறுப்பாகத் தலையை அசைத்து,

“இப்போதுதான் குடித்தேன்… வேண்டுமானால் நீ குடி..” என்றுவிட்டு சீரியலில் கவனமானவளுக்குச் சிந்தனையோ உத்தியுக்தனிடம் எப்படி செய்தியைச் சொல்வது என்பதிலேயே இருந்தது.

சீரியலை உண்டு முடித்தவள் கரண்டியைப் பாத்திரத்திலேயே போட்டுவிட்டு வலது உள்ளங் கரத்தில் தன் தலையைத் தாங்கியவாறு லீ செய்துகொண்டிருக்கும் சமையலையே இமைக்காது பார்த்தாள். லீயின் கரங்கள் செய்த மாய வித்தையில் நிச்சயமாக லீ சமையலில் கரைகடந்தவள் என்பது புரிந்தது.

“உன்னுடைய பாண்டித்தியம் சமையல்தானா?” என்றாள் ஆர்வமாய். ஏனோ லீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. சிரித்த லீ இவள் பக்கமாகத் திரும்பி,

“யெஸ் மாம்…” என்று கூற, அந்த மாமில் முகம் சுளித்தவள், கீழே இறங்கி லீயை நோக்கிச் சென்றாள். மேடையில் மரக்கறிகள் வெட்டும் மரப்பலகையில் வெங்காயமும் அதை வெட்டுவதற்காக மிகக் கூரான கத்தியும் இருக்க, அந்தக் கத்தியை எடுத்து அதன் கூர்மையை வியப்போடு பார்த்தவாறே,

“நீ திருமணம் முடித்துவிட்டாயா?’ என்றாள் அந்த கத்தியால் வெங்காயத்தை நறுக்கியவாறு.

கத்தி வெண்ணெய்யில் வழுக்குவது போல வழுக்கிக்கொண்டு செல்ல, எப்போதும் ஒரு கல்லை வைத்துக் கத்தியைத் தீட்டும் அண்ணி நினைவுக்கு வந்து போனது. இத்தனை கூர்மையாக எப்படி வைத்திருக்கிறாள் இந்த லீ… வியந்தவாறு இன்னொரு வெட்டு வெட்ட, லீயோ, அவளைத் தடுக்க முயன்றாள்.

“நோ மாம்… இது என்னுடைய வேலை… நான் செய்கிறேன்…” என்றவளிடம்,

“ஷ்… நீ வெட்டினால் மட்டும்தானா கத்தி வெட்டும்? நான் வெட்டினாலும் வெட்டும்… நீ உன் சமையலைப் பார்… நான் இதைப் பார்க்கிறேன்…” என்றவாறு வெங்காயத்தை லீ போல நறுக்கத் தொடங்கியவளுக்குக் கத்தி வெங்காயத்தைத் தவிர எல்லா இடங்களும் சென்று வெட்டி இவள் எரிச்சலை ஏகத்திற்கு வாங்கிக் கட்டிக்கொண்டது. கூடவே தன்னை சமையலறைப் பக்கமே விடாத புஷ்பா மீது மெல்லிய கோபமும் வந்தது.

இவள் கரங்களை நறுக்கிவிடுவாளோ என்று அஞ்சியே கத்தியைக் கொடுக்க மாட்டார். அவளைச் சமையலறைக்குள் விடாததாலோ என்னவோ இவளுக்கும் சமையலறிவு வெறும் பூஜ்யம் மட்டுமே. இது பெருமையாகச் சொல்லக் கூடிய விஷயம் அல்லதான். ஆனால் நிதர்சனம் அதுதான். இப்போது லீ காய்கறிகளை வெட்டும் அழகைக் கண்டதும் இவளுக்கும் அப்படி வெட்டவேண்டும் என்கிற உந்துதல் தோன்ற, கத்தியைக் கரத்தில் எடுத்துவிட்டாள். ஆனால் பயிற்சி இருந்தால்தானே வெற்றியைத் தழுவ முடியும்.

லீக்கோ இவள் எங்கே கரத்தை வெட்டி விடுவாளோ என்கிற பயம் தோன்ற, அவள் வெட்டுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதை உணர்ந்து கொண்ட சமர்த்தி,

“ப்ச்… நான்தான் வெட்டுகிறேன் அல்லவா… பிறகு எதற்கு இங்கே பார்க்கிறாய்… நீ உன் கதையைச் சொல்… திருமணம் முடித்துவிட்டாயா? எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டுக் கொண்டு ருக்கும் போதே வெங்காயம் அவள் கரங்களில் படாதபாடு பதினெட்டும் பட்டு நொந்து நூடில்ஸ் ஆகியிருந்தது.

லீயோ அவள் கரங்களில் சிக்கித் தவித்த வெங்காயத்தைப் பரிதாபமாகப் பார்த்தவாறே, தன் கதையைக் கூறத் தொடங்க,

“லீ…?” என்கிற கடுமையான குரல் பின்பக்கமிருந்து வந்தது. அதுவரை வெங்காயத்தை நாறடித்துக்கொண்டிருந்த கத்தி கச்சிதமாக அவள் சுட்டுவிரலின் நுனித் தோலைச் சிறு சதையோடு வெட்டி வெங்காயத்தோடு சேர்த்துக்கொள்ள அதைக் கூட உணராதவளாகக் கத்தியைக் கீழே போட்டவள், அதிர்வுடன் திரும்பிப் பார்த்தாள்.

What’s your Reaction?
+1
31
+1
8
+1
0
+1
1
+1
0
+1
1

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-17”
  1. உங்க ரசனையே ரசனாத சிஸ்டர் எவ்ளோ ரசிச்சு எழுதுறீங்க எழுதுறதுனா உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ அதோட உங்க ஸ்டோரி ல இயற்கையை அழகா சொல்றிங்க

    1. ரொம்ப ரொம்ப நன்றிபா. இதை கேட்டதும் ரொம்ப சந்தோஷமாச்சு. ஆமா… இயற்கைன்னா எனக்கு ரொம்ப புடிக்கும். யாருமில்லா காட்டுக்குள்ள போய் இருக்கிறதுன்னாலும் எனக்கு ஓகேதான். என்ன புழு பூச்சிய நினைச்சாதான் பீதியாகுது. 😁😁😁😁😁😁😁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!