47)
இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க, கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய காலடிச் சத்தங்களை உணர்ந்ததும், சுவரோடு ஒட்டியவாறு பதுங்கிக் கொண்டது.
மெல்ல மெல்ல அந்தக் காலடியோசை நெருங்கத் தொடங்க, நீண்ட துப்பாக்கியைத் தன் உடலோடு அழுத்தமாகப் பற்றியவாறு தன் சாகாக்களின் பக்கமாகத் திரும்பிய ஆளியுரவன், வாயால் எதையோ முணுமுணுத்து விட்டு, வலக்கரத்தைத் தூக்கி சைகையால் மூன்று இரண்டு ஒன்று மூன்று என்று காட்டி விட்டு கரத்தை முஷ்டியாக்கி சங்கேத மொழியில் எதையோ கூற, அதை ஏற்றுக் கொள்வதாக இருவரும் தலையை ஆட்டி விட்டுத் தயாராக நின்றுகொண்டனர்.
அந்த எதிரிகள் இருவரும் நாலாம் மாடியைத் தாண்டி ஐந்தாம் மாடியில் காலெடுத்து வைக்க முயன்ற அந்தத் தருணம், சடார் என்று மறைவிலிருந்து வெளிப்பட்ட ஆளியுரவன் சற்றும் தாமதிக்காமல், இடையிலிருந்த குறு வாளைக் கரங்களில் எடுத்துச் சுழன்று அவர்களை நெருங்கி, சதக் சதக்… இருவரின் கழுத்துகளிலிருந்தும் இரத்தம் பீரிட்டுச் சீறியது.
கத்தக் கூட அவகாசமில்லாமல் சுவாசம் தடைப்படத் துடித்துத் தரையில் விழுந்த இருவரையும் அலட்சியம் செய்த ஆளியுரவன், இரத்தம் தேய்ந்த கத்தியை இறந்தவர்களின் ஆடையிலேயே துடைத்துவிட்டு மீண்டும் உறையில் செருகியவாறு, தன் நண்பர்களைப் பார்த்துத் தலையை அசைத்து விட்டு முன்னேறத் தொடங்க, அவனுடைய சங்கேதக் குறிப்புக்கு ஏற்பத் தயாராக நின்றவர்கள், அவனுக்கு எதிர்ப்பக்கமாக நடக்கத் தொடங்கினார்கள். இன்னொரு திருப்பம் வர, அலக்சும் விக்டரும் பிரிந்து தனித் தனியே முன்னேறத் தொடங்க, இங்கே ஆளியுரவன் மூன்றாம் மாடியை நோக்கி இறங்கத் தொடங்கினான்.
அங்கே கணினிகளின் கட்டுப்பாட்டறையிலிருந்தவர்களுக்கு சற்றுச் சந்தேகம் வலுப்பெற்றதோ, வாக்கிட்டோக்கி மூலம் முன்பு சென்றவர்களுடன் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் மயான அமைதிதான் இவர்களுக்குப் பதிலாகக் கிடைத்தது.
அப்போதுதான் அவர்களுக்கு ஒன்று உறுத்தியது. அவர்களின் சகாக்கள் போனதைக் கண்காணிப்புக் கமரா பிரதிபலிக்கவில்லை. எப்படி? குழப்பத்துடன் தலையைச் சொரிந்தவாறு இன்னும் இருவரைச் சென்று பார்த்துவர அனுப்பினார்கள்.
ஆளியுரவன் மிக அவதானமாக மூன்றாவது மாடியை வந்தடைய, கடகடவென்கிற காலடிச் சத்தம் கேட்டது. இப்போது, மீண்டும் கத்தியை இழுத்தெடுத்தவாறு பாய்ந்து வெளியே வந்தவன், எதிரிகள் சுதாரிக்க முன்பே கண்ணிமைக்கும் நொடியில் ஒருவனின் இதயத்திலும் கழுத்திலும் கத்தியை இறக்கி எடுத்து, சுழன்று திரும்பி ஒற்றைக் கரத்தால் மற்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைய, அறைந்த அந்தப் பலமான வேகத்தில், அவன் சுவரோடு மோதுப் பட்டுப் பொறிகலங்கிக் கால்கள் மடித்து விழத் தொடங்க, சரிந்தவனின் கழுத்தைச் சுற்றின் தன் கரத்தை எடுத்துச் சென்றவன், பலமாக ஒரு அழுத்து அழுத்த, அதற்கு மேல் அவனும் எந்த சிரமமும் கொடுக்காமல் மூச்சுக்குழாய் நசிந்து தலை சரிந்தான்.
அடுத்த தளத்தையும் கடந்து வர, இப்போது எதிரிகளின் சந்தேகம் உறுதிபெற்றது.
அதில் ஒருவன்,
“என்னவோ தப்பாகப் படுகிறது… உடனே இதை பின்யாங்கிற்கு தெரிவிப்பது அவசியம்…” என்று ஒருவன் சொல்ல, நடுநாயகமாக இருந்தவன் உடனே மறுப்பாகத் தலையாட்டினான்.
“வேண்டாம்.. இது தெரிந்தால் அவன் நம்மைத்தான் திட்டுவான். முதலில் என்ன நடக்கிறது என்பதைப் பரிசீலிப்போம். அதற்குப் பிறகு அவனுக்குத் தெரிவிக்கலாம்…” என்றவன், உடனே திரும்பி அங்கிருந்த நால்வரிடம், தலையசைக்க, உடனே அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியவாறு விரைந்து வெளியேறத் தொடங்கினர்.
அதே நேரம் அந்த பின்யங் இதங்கனையை நெருங்கியிருந்தான்.
இவளோ அச்சத்தோடு தம்பியின் பாதுகாப்புச் சிறைக்குள் புகுந்துகொள்ள முயல, அவள் முன்னால் ஒற்றைக் கால் மடித்து அமர்ந்த பின்யங், சடார் என்று இதங்கனையின் தலைமுடியை இறுகப் பற்றிக்கொள்ள, அவளுக்குப் பின்னால் நின்றிருந்த பார்வதியோ பதறியவாறு தன் மகளை அவனுடைய பிடியிலிருந்து விடுவிக்க முயன்றவராக,
“ஏய்… விடு அவளை.. அவளை ஒன்றும் செய்யாதே என்று துடிக்க, இவனோ தலையை ஒரு மாதிரிச் சரித்துப் பார்வதியை ஏறிட்டுப் பார்த்தான். பின் திரும்பி இதங்கனையைப் பார்த்தான்.
அந்த விழிகளில் தெரிந்த ஆத்திரம், வன்மம், கோபம் அத்தனையும் தனக்குச் சாவு மணி ஊதப்பட்டு விட்டது என்பதைப் புரிந்துகொண்ட இதங்கனை விழிகளை அழுந்த மூடி நிற்க ஏனோ மனக்கண்ணில் அந்த அரவன்தான் வந்து நின்றான். அவன் யார் எவர் என்று எதுவும் தெரியாது. ஆனால் அவனால் இவளைக் காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை மட்டும் உதயமாகத் தன்னை மறந்து,
“ப்ளீஸ்.. கம் அன்ட் சேவ் மி…” என்று மனதார வேண்டி நிற்க, உடலோ பயத்தில் பயங்கரமாக நடுங்கியது. தன் சகோதரியின் முடியை அந்தக் கொடியவன் பற்றியதைக் கண்டதும் பாலேந்திரனால் பொறுக்க முடியவில்லை. சற்றும் யோசிக்காமல் அந்த எதிரியை நோக்கிப் பாய்ந்துவிட்டான்.
“யு… xxxx…. லெட் ஹர் கோ…” என்று அவன் முடிக்கவில்லை, உயர்ந்த பின்யங்கின் துப்பாக்கி கொஞ்சமும் தாமதிக்காமல் பாலேந்திரனை நோக்கி குண்டைத் துப்ப, நல்லவேளை பக்கத்திலிருந்த ஒரு பெண் என்ன ஏது என்று சற்றும் யோசிக்காமல் பாலேந்திரனைத் தன்னை நோக்கி இழுக்க, அந்தக் குண்டு பாலேந்திரனின் இடது தோளைத் துளைத்துக்கொண்டு சென்றது. அந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பயணிகளும் சுயம் தொலைத்தவர்களாகப் பேரும் அதிர்வுடன் மலைலத்துப் போய் நின்றிருந்தனர்.
இதைத்தான் மயிரிழையில் தப்புவது என்பார்களோ? அந்தப் பெண் மட்டும் இழுத்திருக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்தக் குண்டு பாலேந்திரனுடைய இதயத்தைத் துளைத்துக்கொண்டு சென்றிருக்கும்.
ஒரு கணம் யாருக்கும் எதுவும் பேசமுடியவில்லை. கண்முன்னால் மரணத்தைக் கண்டால் யாருக்குத்தான் பேசவரும். மலைத்துப்போய் நின்றிருந்த பார்வதி, தன் மகனுக்கு நடந்ததை உணர்ந்து அதிர்வு தொலைத்து, அலறியவாறு அவனை நோக்கிப் பாய, இதங்கனையோ உயிரையே துறந்தவளாக,
“பாலு… என்று கத்தியவளாக அவனிடம் ஓட முயன்றாள். எங்கே அவளுடைய கூந்தல்தான் அந்தக் கயவனின் ஒற்றைக் கரத்தில் சிக்கியிருந்ததே. படு சீற்றத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், என்ன செய்கிறோம் என்பது புரியாமலே,
“யு…. Xxxxx xxxx xxxxx” என்றவாறு சற்றும் யோசிக்காமல் பலம் கொண்ட மட்டும் வலது முழங்கையால், அவனுடைய ஆணுறுப்பில் ஓங்கிக் குத்த, அதைச் சற்றும் எதிர்பாராதவன், முக்கிய பகுதியில் பலமாக விழுந்த அடியில் சுருண்டு போனவனாகத் தன் கரத்தை விடுவிக்க, இவளோ விடுபட்ட அடுத்த கணம் பின்யாங்கைத் தள்ளி விட்டு, தன் தம்பியை நோக்கிப் பாய்ந்தாள்.
“பாலு… பாலு…” என்று கதறியவள், தாயின் மடியில் கிடந்தவனை வருடிக் கொடுக்க வலியில் முனங்கிய பாலு,
“ஐ… ஐ ஆம்… ஓக்கே… அஹ்…. குண்டு… குண்டு.. மேலாகத்தான்… ம்மா…” என்று முனங்க, இரத்தமோ ஆறுபோலப் பொங்கி ஓடிப் பெற்றவளின் சேலையை நனைக்கத் தொடங்கியது. பார்வதியோ தன் மகனுக்கு நடந்த நிலையைக் கண்டு நெஞ்சம் வெடித்துச் சிதைந்தவராகக் கதறினார். எந்தத் தாயும் காணக் கூடாத காட்சியாயிற்றே பெற்ற மகனின் நிலை கண்டு அவருக்கு அடிவயிறு வலியில் சுருண்டு போனது. பால் கொடுத்த மார்புகள் தாங்க முடியாத வலியில் சுண்டி இழுத்த. மடியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தவனை மீண்டும் கர்ப்பப்பைக்குள் அனுப்பிவிடமாட்டோமா என்று வெறிகொண்டவர் போல அவனை அணைத்த நின்றவர்,
‘“என் ராஜா உனக்கொன்றுமில்லை… உனக்கொன்றுமில்லை… உனக்கொன்றுமில்லை… கடவுளே… என் மகனை எனக்குத் திருப்பிக் கொடு…” என்று வாய்க்குள் உளறிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட வெறி பிடித்தவர் போல அமர்ந்ததிருக்க, இந்திரகுமாரோ, ஏற்பட்ட அதிர்ச்சியில் என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் தன் மனைவியையும் மகனையும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். சத்தியமாக எதிர்பாராத இந்த நிகழ்வில் அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று கூடப் புரியவில்லை. அந்தளவுக்கு அதிர்ச்சியில் புத்தி மந்தமாகிப்போயிருந்தது.
அதேநேரம் அந்தப் பின்யங் வலி மட்டுப்பட்டவனாக, அதீத ஆத்திரத்துடன் எழுந்து இதங்கனையை நோக்கிப் பாய்ந்து வந்தான். அவன் சீன மொழியில் தாறுமாறாக எதையோ திட்டியவாறு இதங்கனையின் தலைமுடியைப் பற்றித் தூக்க, இவளோ வலியை அடக்கியவாறு அழுகையும் ஆத்திரமும் ஒன்று கூட, பின்யங்கை முறைத்துப் பார்த்தாள். சத்தியமாக அவளுக்கு மட்டும் சக்தியிருந்தால், அந்தப் பின்யாங்கைக் கரங்களால் பிய்த்து எறிந்திருப்பாள்.
ஆனால் அந்த பின்யாங்கோ, அதன் ஆத்திரம் அத்தனையையும் மொத்தமாக அவளிடம் காட்டுபவனாக இவளை இழுத்துச் சென்றவன், பலம் கொண்ட மட்டும் அங்கிருந்த சுவரில் அவளுடைய தலையை மோத, பொறிகலங்கிப் போனாள் இதங்கனை. நெற்றி பிளந்து இரத்தம் கொட்ட இவளுக்கு உலகம் சுழன்றது.
அதைக் கண்ட பார்வதி அழும் சக்தியையே தொலைத்தார். இந்திரகுமாரோ அதிர்ச்சி மறைந்து பதறியவராகத் தன் மகள் நோக்கிப் பாய, பின்யாங் பாய்ந்தவரை நோக்கி ஒரு உதை உதையத் தள்ளிப்போய் அங்கே அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் போய் விழுந்தார்.
கடவுளே மடியில் விழுந்து கிடக்கும் மகனைப் பார்ப்பதா? நெற்றியில் இரத்தம் கசியக் கயவனின் கைப்பிடியில் சிக்கியிருந்த மகளைப் பார்ப்பதா?அவன் உதைந்த உதையில் தள்ளிப்போய் விழுந்த கணவனைக் கவனிப்பதா? என்ன செய்வார் பார்வதி? கையறு நிலையில் கிடந்தவருக்கு அதற்கு மேல் அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியில்லாது போக அவருடைய உலகம் மயங்கிப் போகப் பின்னால் மயங்கிச் சரிந்த பார்வதியைப் பாய்ந்து தாங்கிக்கொண்டார் யாரோ ஒரு நல்ல உள்ளம் கொண்ட கறுப்பினத்தைச் சேர்ந்த மனிதர். அவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன.
அங்கே பீதியில் அமர்ந்திருந்தவர்களுக்குத் தாம் என்ன இனம் என்று தொலைந்து போயிற்று. என்ன மதம் என்று மறந்து போயிற்று. என்ன பதவி, இடம், பெயர், புகழ் அத்தனையும் கரைந்து போயிற்று. தற்போதைய நிலையில் உள்ள கடவுள், உயிர் மட்டும்தான். அதை எப்படிக் காப்பாற்றுவது. எப்படிப் பாதுகாப்பது என்பது மட்டும்தான் அவர்களின் உயிர் நிலையாக இருந்தது.
அவர் அவருக்கு அவர் அவரைக் காத்துக்கொள்ள வேண்டுமே. எங்கே வாயைத் திறந்தால் அடுத்த துப்பாக்கிச் சூடு தங்களுக்குத்தான் என்கிற அச்சத்தில் ஓர் அங்குலம் கூட அவர்களால் அசைய முடிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் ஒரு வயதானவர், பின்யாங்கிடம்,
“ஐயா… பாவம்… இளம் குருத்துகள் அவர்களை ஒன்றும் செய்யாதே… இந்தத் தம்பிக்குக் காயம் பட்டிருக்கிறது… அவரை உடனே காப்பாற்ற வேண்டும்… தயவு செய்து வெளியே அனுப்புங்கள்…” என்று அவர் முடிக்கவில்லை, அவருடைய நெற்றியை நோக்கிப் பின்யங்கின் துப்பாக்கி நீண்டது. அதற்கு மேல் அவராலும் எதுவும் பேச முடியவில்லை.
திரும்பித் தன் கைப்பிடியில் மயங்கியும் மயங்காத நிலையிலும் நின்றிருந்த இதங்கனையை வெறுப்போடு பார்த்தவன், வெளுறிப் போன முகத்துடன் நின்றிருந்தவளை ஏறிட்டு,
“என்ன… பயமாக இருக்கிறதா?” என்று கிண்டலாக பின்யாங் கேட்க, ஆம் என்று தலையை அசைத்தவள், அந்த இயலாத நிலையிலும் பின்யாங்கை ஏறிட்டு,
“ஐ கான் ஸ்மெல் யுவர் டெத்…பட்…” என்றவள், திக்கித் திணறி, “உன்னதும், அந்த ஃபன்ஹூ வின் மரணத்தையும் பார்க்க நான்… உயி… உயிரோடு இருக்கமாட்டேனோ என்று… ப… பயமாக இருக்கிறது…” என்றாள் அழுத்தமாக. அதைக் கேட்டதும், பின்யாங்கின் முகம் மேலும் விகாரமாகிப் போனது.
உன்னை எப்போதோ கொன்றிருக்க வேண்டும்…” என்று சீறியவன், அவளை இழுத்தக்கொண்டு இங்கிலாந்துப் பிரதமருக்குப் பத்தடி தொலைவிலிருந்த இன்னொரு தூணை நோக்கி வந்தான். அருகே அவளை அமர வைத்தவன், அவளுடைய கரங்களையும் இங்கிலாந்து பிரதமரைப் போலவே தூணைக் கட்டிப் பிடிக்க வைத்து, குண்டுகள் துளைக்க முடியாத டைட்டானியத்தினாலான கைவிலங்கைப் போட்டவன், திரும்பித் தன் சாவைப் பார்த்து விழிகளால் எதையோ கூற, உடனே அவனை நோக்கி ஒரு பையை எறிந்தான் அவன்.
அதை ஒற்றைக் கரத்தால் பற்றிக்கொண்டவன், அதைத் திறந்து சிறிய வட்டவடிவமான ஒரு பொருளை வெளியே எடுத்து அதை இதங்கனையிடம் காட்டி,
“இது என்ன தெரியுமா…? நவீனரகக் கிரனைட்…. இதில் இருக்கிற இந்த பொத்தானை அழுத்தி விட்டுக் கரத்தை எடுத்தால் போதும்… ஆறு விநாடிகள்…. அதற்குப் பிறகு பூம்…” என்றவன், அடுத்த கணம் அதை அவளுடைய கைவிலங்கோடு வைத்து டக் டேப்பால் சுற்றிக் கட்டி விட்டு, இதங்கனையைப் பார்த்து விகாரமாக இழித்தான்.
இந்த டக் டேப்பை அவிழ்க்காமல் உன் கைவிலங்கைக் கழற்ற முடியாது… அதே வேளை இந்த டேப்பைக் கழற்றினால், நீ மட்டுமில்லை, உன் அருகில் இருப்பவரின் உயிருக்கும் உத்தரவாதமில்லை…. ம்… மிகுந்த சுவாரசியமாக இருக்கிறது இல்லையா…” என்று அவளிடமே கேட்க, இதங்கனையோ பின்யாங்கைத்தான் வெறித்துப் பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை. பேசும் நிலையிலும் அவள் இல்லை.
“கைவிலங்கை அதிகம் இழுக்காதே… பிறகு உன்னோடு சேர்த்து நாங்கள் எல்லோரும் பரலோகம் போகவேண்டியதுதான்…” என்றான் கிண்டலாய். பின் ஆத்திரத்தோடு அவளை முறைத்து,
“எப்படியும் உன் சாவு உறுதி…” என்றவன், அவளை ஏளனத்துடன் பார்த்து,
“எது எப்படியோ, இனி உன்னைக் காக்க யாராலும் முடியாது… அந்தக் கடவுள் வந்தால் கூட…” என்று எகத்தாளமாகக் கூற, அந்த நேரத்து வலியிலும் இளக்காரமாகச் சிரித்தவள்,
“ரியலி…” என்றாள் விழிகள் கனக்க. ஆனாலும் இமைகளை மூடினாளில்லை. அழுத்தமாக அவனையும், ஃபன்ஹூ வையும் பார்த்து,
“கடவுளால் முடியாது… ஆனால்…” என்றவள் அதற்கு மேல் முறைக்க மடியாமல் தலைப் பாரமாகக் கண்கள் மங்க, தூணின் மீது தலை சாய்த்தவள்,
“அரவனால் முடியும்… அவனால் மட்டும்தான் முடியும்…” என்று முணுமுணுத்தவாறு அரை குறையாகத் தன் சுயநினைவை இழக்கத் தொடங்கினாள்.
அதே நேரம், இங்கே ஒவ்வொரு தளமாக இறங்கி வந்த ஆளியுரவன், இறுதியில் முதலாவது தளத்தில் கால் பதித்தான். அதே நேரம் அவனுடைய காதுக்குள்,
“ஆளி… பத்தடி தொலைவில் உள்ள கதவைத்திறந்தால், கட்டுப்பாட்டறைக்குப் போகும் பாதை… ஆனால், நிறையப் பேர் உள்ளே நிற்கிறார்கள்…” என்று எச்சரிக்க,
“டன்…” என்று விட்டு குறிப்பிட்ட அறை நோக்கி முன்னேறத் தொடங்கினான் இவன்.
இவன் துப்பாக்கியோடு பதுங்கியவாறு நிற்பதை, இரண்டாம் தளத்திலிருந்த எதிரிகள் இருவர் கண்டுகொள்ளப் பதறியவர்களாகத் தங்கள் துப்பாக்கியை ஏந்தி அவனைச் சுட முயல, பட் பட்… அந்த சத்தத்தோடு இருவரும் தரை சாயச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் ஆளியுரவன். இரண்டாவது மடியில் விக்டர் நின்றிருந்தான். உடனே என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து போனது ஆளியுரவனுக்கு.
நன்றி சொல்லும் முகமாகத் தலையை அசைத்து விட்டுத் தன் துப்பாக்கியைச் சரியாகப் பிடித்தவன், கட்டுப்பாட்டறைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய கதவைத் திறக்க, நீண்டு சென்ற அந்தக் தாள்வாரத்தின் வாசலை ஒருவன் அடைகாத்துக்கொண்டிருந்தான்.
இப்படி எதிர்பாராத நேரத்தில் கதவு திறக்கும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை போலும். கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தவன், நிலைமை உணர்ந்து எழுவதற்குள், தன் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்த ஆளியுரவன் இலவசமாக ஒரு குண்டை வெளியே விட, அது சத்தமில்லாது வெளியேறி, அவனுடைய இதயத்தைத் துளைத்துக்கொண்டு சென்றது. தரையில் விழுந்தவனைக் கடந்தவாறு மேலும் முன்னேற, இப்போது புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈசல்கள் போலக் கடவென்று எதிரிகள் அவனை நோக்கி வரத் தொடங்கினர்.
ஐந்து நிமிடங்கள் சூரசம்காரம் எந்த சிக்கலும் இன்றி நடந்தேறியது. எந்த தயவு தாட்சண்ணியமும் இன்றி, இயந்திர கதியில் குண்டுகளைத் துப்பியவாறு ஆளியுரவன் வேகமாக முன்னேறத் தொடங்கினான். அவனுடைய அந்தப் பயங்கர வேகத்திற்குச் சற்றும் எதிரிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் பரிதாபமே. இதில் அவனுடைய குறி இம்மியளவு கூடத் தவறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
ஆளியுரவன் நடந்து செல்லச் செல்ல ஒவ்வொருத்தராகத் தரையைத் தொட்டனர். யாருக்கும் துப்பாக்கியை உயர்த்தவோ, இவனைப் பார்த்துச் சுடுவதற்கோ வாய்ப்புக் கொடுக்கவில்லை.
வந்தவர்கள் அத்தனை பேரையும் இரத்த வெள்ளத்தில் வீழ்த்தி விட்டு முன்னேறியவன், வலப்பக்கம் ஒரு கதவு தெரிய வேகமாக அதைத் திறந்து துப்பாக்கியை நாலா திசைக்கும் அசைத்து யாராவது மறைந்திருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. உள்ளே நடக்க, கட்டுப்பாட்டறை என்கிற அறிவிப்போடு ஒரு கதவு தெரிந்தது. பிறகென்ன, கதவைத் திறந்த அந்த நொடியே யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்பதை அரை மாத்திரைப் பொழுதில் கண்டுகொண்டவன், அதற்கேற்பக் குண்டுகளைக் கடகடவென்று வெளியேற்ற,
“விஷ்க் விஷ்க் விஷ்க் விஷ்க்” நால்வர் நின்ற இடத்திலேயே இரத்தத் துளிகள் சிதறத் தரைசரிய கட்டுப்பாட்டறை இரத்த்தால் சுத்தமானது.
இப்போது வெளியே வந்தவன், ஒரு திருப்பத்தில் திரும்பத் தொடங்க ஒருவன் படு வேகமாக வந்துகொண்டிருந்தான். “பட்பட்…” மேலும் முன்னேறினான்… ஒரு மேசையில் நால்வர் அமர்ந்து ஏதோ உதிரிப்பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைத்துக்கொண்டிருந்தார்கள். “விஷ்க் விஷ்க்” முன்னேறினான்.
இப்போது கீழே போகும் தளம். இறங்கத் தொடங்கினான் ஆளியுரவன்.
இப்போது பின்யாங்கிற்குச் செய்தி போனது. அதைக் கேட்டு ஆத்திரத்துடன் கத்தியவன், திரும்பி ஃபன்ஹூ வைப் பார்த்து,
“உள்ளே நுழைந்துவிட்டார்கள்…” என்றான் முகம் சிவக்க.
அதைக் கேட்டு அதிர்ந்த ஃபன்ஹூ ,
“நமக்கு எந்த சத்தமும் கேட்கவில்லையே….” என்று அதிர,
“இது நிலத்துக்குக் கீழ் இருக்கும் இடம்… தவிர மேலிருந்து சத்தம் கீழே வராது…” என்றான். ஆத்திரத்தில் முணுமுணுத்தவர்,
“நம் ஆட்கள் எங்கே…?’” என்று சீற, பதில்சொல்ல முடியாது பின்யாங் தடுமாற, ஃபன்ஹூ வுக்குப் புரிந்து போனது.
“xxxxx xxxxxx” சீனத்துக் கெட்ட வார்த்தைகளால் பயங்கரமாகக் கத்தித் திட்டிய ஃபன்ஹூ , ஆத்திரத்துடன் பின்யங்கிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அங்கே அமர்ந்திருந்தவர்களை நோக்கித் தாறுமாறாகச் சுட, அதில் நான்கு பேருக்குப் பயங்கரமாகக் காயம் ஏற்பட இருவர் உடனேயே உயிரிழந்தனர். ஃபன்ஹூ வின் ஆவேசத்தைக் கண்ட பின்யங் பதறி அவரைத் தடுத்து,
“தயவு செய்து கோபப் படாதே… இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருக்கின்றன… நீ அத்தனை பேரையும் கொன்றால் நமக்குப் பணையக் கைதிகளாக யாரும் இருக்க மாட்டார்கள்… எஞ்சியிருக்கும் நம் ஆட்கள் அத்தனை பேரும் உள்ளே நுழைந்தவர்களைத் தேடித்தான் சென்றிருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களைப் பிடித்துவிடுவோம். கொஞ்சம் பொறுமையாக இரு… இதோ இப்போதே அவர்களோடு பேசுகிறேன்…” என்றவன், உடனே ஒலிபேசியின் மூலம் பேச முயல, ஒலிபெருக்கி சத்தம்போட மறுத்தது. உடனே வாக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டறையோடு தொடர்புகொள்ள முயல, அங்கிருந்து எந்த சத்தமும் வரவில்லை. திரும்பி தன் ஆட்களில் ஒருவனைப் பார்த்துத் தலையசைக்க, உடனே அவன் கட்டுப்பாட்டறையை நோக்கி ஓடினான்.
இங்கே, வேகமாக முன்னேறிய ஆளியுரவன், ஒவ்வொரு கதவுகளாகத் திறந்து எதிரிகள் இருக்கிறார்களா என்று பார்த்தவாறு வரத் தொடங்க, ஃபன்ஹூ வோ இறந்தும், காயப்பட்டும் கிடந்த மக்களின் அவல நிலையைத் தொலைக்காட்சியில் பார்க்கும் நேரடி ஒலிபரப்பு போலப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.
இவரையா நல்லவர் என்று முத்திரை குத்தினோம். இவருக்கா எங்கள் வாக்குகளைப் போட நினைத்தோம். இவரா மக்களுக்கு நன்மை செய்வார் என்று எண்ணினோம், என்று அங்கிருந்த பயணிகள் வெறுப்புடன் பார்க்க அந்த வெறுப்பு அவரை எதுவுமே செய்யவில்லை. மாறாகத் தங்கள் திட்டங்களை, எண்ணங்களை வெற்றியைத் தவிடுபொடியான நிலைக்கு, மருந்திட்டதுபோல ரசித்துக்கொண்டிருந்தார்.
இப்போது கட்டுப்பாட்டறைக்குப் போனவன் திரும்பி வராது போக, பின்யாங் குழப்பத்தோடு இன்னொருத்தனை அனுப்ப அவனிடமிருந்தும் எந்த சத்தமும் வரவில்லை என்றதும், ஃபன்ஹூ வுக்கும், பின்யாங்கிற்கும் புரிந்து போனது கட்டுப்பாட்டறை இப்போது முடக்கப்பட்டு விட்டது என்று.
அதே நேரம், ஆளியுரவன் அந்த விமான நிலையத்தையே எதிரிகளின் இரத்தத்தால் சுத்தமாக்கியவாறு முன்னேறி கீழ்த் தளத்தில் காலைப் பதிக்க, அவனைப் போலவே விக்டரும் அலக்சும் கம்பீரமாய், நெஞ்சை நிமிர்த்தியவாறு கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளைக் கொன்று விட்டு ஒரு புள்ளியில் ஆளியுரவனுடன் இணைந்து கொள்ள, மக்கள் அடைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் பசிகொண்ட வேங்கைகள் என ஆவேசமாக வரத் தொடங்கினர்.