Wed. Jan 15th, 2025

புயலோடு மோதும் பூவை – 3/4

(3)

 

ஒரு மணியளவில் வன்கூவர் உள்ளூர் விமானநிலையத்தில் கால்பதித்த இதங்கனையை ஏற்றிச் செல்ல வாகனம் வந்திருந்தது. அதில் ஏறி அமர, அவள் தங்கவேண்டிய விடுதியில் அவளை இறக்கி விட்டு வாகனம் சென்றுவிட, வரவேற்பறையில் திறப்பு அட்டையை வாங்கிக்கொண்டு நான்காவது மாடியிலிருந்த தன்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள் இதங்கனை.

கட்டிலில் பயணப் பெட்டியையும் கைப்பையையும் தூக்கிப் போட்டு விட்டு நேரத்தைப் பார்க்க இரண்டுமணி ஆகியிருந்தது. போக்குவரத்தில் அதிக நேரத்தை விரயமாக்கிய எரிச்சலில், உடுப்புப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து துவாயை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றவள், அடுத்த பத்தாவது நிமிடம், குளித்து முடித்துப் புத்தம் புதிதாகத் துவாயை உடலுக்குக் குறுக்காக் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

அன்று அந்த அரவனைச் சந்திப்பதற்குத் தயாராக எடுத்து வந்த, கோட் சூட்டை அணியும்போதே மனம் அவனிடம் எப்படியெல்லாம் பேட்டி காண்பது என்று ஒத்திகை எடுத்துக்கொண்டிருந்தது. எல்லாம் மகிந்தன் கொடுத்த கேள்விகள்தான். ஆனாலும் அந்தக் கேள்விகளை வைத்து மகிந்தன் எந்தத் துப்பைத் துலக்கப் போகிறான் என்று சுத்தமாகத் தெரியவில்லை. எல்லாமே அவனுடைய வளர்ச்சியும், அதற்காக அவன்  பட்ட சிரமங்களும் சார்ந்ததாகத்தான் இருந்தன.

தொடைகளைக் கவ்விக்கொண்ட பான்டை அணிந்து விட்டு இடையைச் சுற்றி அதற்கான பட்டியை அணிந்து பூட்டியவாறு கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்தாள். அவளுக்கென்றே தைத்ததுபோல கன கச்சிதமாக உடலைக் கவ்வியிருந்தது கோட்சூட்.

திருப்தியாக இருந்தாலும் முகம் சற்று வாடியது போலத் தோன்றியது. உடனே முகத்திற்கு இதமாக ஒப்பனை செய்து விட்டு நீண்ட விழிகளுக்கு மையிட்டு விட்டு நிமிர்ந்து பார்க்க முகம் அழகாகத் தெரிந்தது. கூடவே ஏற்கெனவே சிவந்த செரிப்பழ உதடுகளுக்குச் சிவந்த நிறத்தில் உதட்டுச் சாயத்தைப் பூசி உதடுகளைக் குவித்துப் பார்த்தாள். மிகக் கவற்சியாக இருந்தது. சுருண்ட குழலைக் கலைத்து விட்டுத் தலையை அங்கும் இங்கும் அட்டிப் பின் விரல்களால்  கூந்தலை வாரிவிட, சிலிர்த்தும் சிலிர்க்காத மாதிரியும் அந்த குழல் அழகாய் அலையலையாய் தோள்வரை படர்ந்து நின்றது.

அப்படியும் இப்படியும் கண்ணாடியில் திரும்பிப் பார்த்தாள். சற்று சதைப் பற்றுக் கொண்டவள் போலத் தெரிகிறதோ? வயிற்றை எக்கிப் பார்த்தாள். பின் சலிப்புடன் உதடுகளைச் சுழித்தவளுக்கு ‘அவன் பெண்களிடம் சற்று அப்படி இப்படி…’ என்று மகிந்தன் சொன்னது நினைவுக்க வந்தது.  உடனே, அணிந்திருந்த கோட்டிற்கு உள்ளே போட்டிருந்த வெண்ணிற ஷேர்ட்டின் இரண்டு பொத்தான்களைக் கழற்றிவிட வெண்ணிற நெஞ்சும், மார்பகத்தின் ஆரம்பப் பகுதியும், அவ்விடத்தை முத்தமிட்ட தங்கநிற டாலரும் பளிச்சென்று வெளியே தெரிந்தன.

நிச்சயமாக அவளைப் பார்த்தால் அந்த அரவன் பித்தம் கொள்வான். அதில் மாற்றுக் கருத்தில்லை. கூடவே மூன்று அங்குலக் குதிக்கால் கொண்ட கரிய நிற பாதணியை அணிந்து கொள்ள, ஐந்தடி நான்கு அங்குல உயரம் ஐந்து ஏழானது. மீண்டும் கண்ணாடிக்கு முன்பாக வந்து முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தாள். சுருண்ட குழலை இழுத்து விட்டு ஏதாவது குறை இருக்கிறதா என்று அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தாள். பான்டை மேலே இழுத்து இடையை மீண்டும் கவ்வச் செய்தாள். நறுமணம் வீசும் வாசனைத் திரவியத்தை காதுகளின் பின்னாலும், கழுத்தின் ஓரத்திலும் அடித்து விட்டு நிமிர்ந்த போது திருப்தியாக இருந்தது.

“குட்…” என்று முணுமுணுத்தவள், கட்டிலை நெருங்கி அதன் நுனியில் அமர்ந்தவாறு கைப்பையிலிருந்த கணனியை வெளியே எடுத்து, அந்த அரவனிடம் கேட்கவேண்டிய கேள்விகளைச் சரிபார்த்துக்கொண்டிருக்கும் போது, அவளுடைய அறைக்கதவு தட்டுப்பட்டது.

இந்த நேரத்தில் யார்? யோசனையுடன் எழுந்தவள், சென்று கதவைத் திறக்க. சடார் என்று திறந்துகொண்டு உள்ளே வந்தான் மகிந்தன். அவன் கூட இன்னும் இருவர் வந்திருந்தனர்.

மகிந்தனைக் கண்டதும் யானைபலம் வந்த உணர்வில்,

“அப்பாடி வந்துவிட்டாயா…” என்று நிம்மதியுடன் கேட்க,

“சொன்னேனே… வருவேன் என்று…” என்றவன், இதங்கனையை மேலும் கீழும் பார்த்தான். திருப்தி வர, திரும்பி பின்னாலிருந்த இருவரையும் காட்டி,

“இதங்கனை இவர்கள் இருவரும்தான் உனக்குப் பாதுகாப்பு. இவர் சோஜின், இவர் ஒலிவர்…” என்று அறிமுகப்படுத்தி விட்டு,

“இவர்கள்… உன்னோடு வருவார்கள். இவர்கள் ஒளிப்பதிவாளர், மற்றும் உதவியாளராக உன் கூட இருப்பார்கள்… இவர்களும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தான். அதனால் பயப்படாதே…” என்றவன், திரும்பி சகாக்களைப் பார்த்து, தலையை ஆட்ட, உடனே அதில் ஒருவன் தன் கரத்திலிருந்த பெட்டியை மகிந்தன்வை நோக்கி நீட்டினான்.

அதை வாங்கிய மகிந்தன், மேசையில் வைத்துத் திறந்து அதிலிருந்த ஒரு சில பொருட்களை எடுக்க, அவனுடைய கரங்களில் நான்கைந்து பொத்தான்கள் போன்ற  எதுவோ இருந்தன. அதை அவளிடம் காட்டி,

“இது  ஒலிவாங்கி. இவற்றை யாருடைய கவனங்களையும் கவராத வகையில்  பொருத்தமான இடங்களில் பொருத்திவிடு. அங்கிருந்து என்ன பேசினாலும் அதை இங்கிருந்து நம்மால் கேட்க முடியும்… உனக்கு இவற்றை வைப்பதற்கு எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் வைத்துவிடு. ” என்றவன் பின் தன் பான்ட் பாக்கட்டிற்குள்ளிருந்து சிறிய பெட்டி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்ட, அதை வாங்கித் திறந்து பார்த்தாள் இதங்கனை. அதில் சிறிய ஒரு குப்பி இருந்தது.

அதை இவனே வெளியே எடுத்து, அவளிடம் காட்டி,

“இது சோடியம் தியோபென்டல் (sodium thiopental) சக்தி வாய்ந்தது. நூறுக்கு தொண்ணூறு வீதம் உன் அழகில் மயங்கித்தான் போவான். அப்படி அவனுக்கு உன்னைப் பிடித்திருந்து உன்னைத் தன்னோடு வரும்படி அழைத்தால், மறுக்காதே… போ… நேரம் கிடைக்கும் போது அவன் குடிக்கும் ஏதாவது பாணத்தில் இதிலிருந்து இரண்டு துளிகளைக் கலந்துவிடு… அது போதும்… கொஞ்ச நேரத்தில் உளறத் தொடங்குவான். அப்போது அவனிடம் ஆளியுரவனைப் பற்றி விசாரி… நிச்சயமாக எதையாவது சொல்வான்… புரிந்ததா?” என்று கேட்க, ஆம் என்று தலையை ஆட்டினாலும் அதைச் செயற்படுத்துவதை நினைக்கும் போது இதயம் பயங்கரமாகத் துடிக்கத்தான் செய்தது. அவளால் இந்தக் காரியங்களைச் செய்ய முடியுமா என்று சுத்தமாகத் தெரியவில்லை. ஆனாலும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை. உமிழ் நீரைக் கூட்டி விழுங்கியவள்,

“அவன்… அவன் கண்டுபிடித்துவிட்டால்…” என்றாள் இதங்கனை. அவளை நெருங்கி அவளுடைய தோள்கில் தன் கரத்தைப் பதித்த மகிந்தன்,

“பிடிபடாமல் செய்வது உன் கையில்தான் இருக்கிறது… எனக்குத் தெரியும்.. இது சுலபமல்ல என்று… ஆனால்… உன்னால் முடியும்… இதங்கனை.. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள், எக்காரணம் கொண்டும், என்ன நடந்தாலும்,  தயவு செய்து உன் பயத்தையோ பதட்டத்தையோ முகத்தில் காட்டாதே… உன்னுடைய சிறிய தவறான அசைவும் அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்… அது நம்முடைய திட்டத்திற்கு மட்டுமில்லை, உனக்கும் ஆபத்துதான்… புரிந்ததா…” என்று எச்சரிக்க, ஆம் என்பது போலத் தலையை அசைத்தவள் ஆழ மூச்செடுத்தவாறு நிமிர்ந்து நின்றாள்.

இப்போது தனக்குப் பின்னால் நின்றிருந்தவனை நோக்கித் தன் கரத்தை நீட்ட, அவன் இன்னொரு பெட்டியை நீட்டினான். அதை வாங்கியவன், அங்கிருந்த மேசையில் அந்தப் பெட்டியை வைத்து விட்டுத் திறக்க, அதில் ஒரு சிறிய இயந்திரம் இருந்தது. அதைக் கரத்தில் எடுத்தவன், இவளுடைய கையைப் பற்றித் திருப்பி, நீண்டிருந்த சட்டைக் கையைச் சற்றுத் தூக்கி விட்டு,  மணிக்கட்டுக்குச் சற்று மேலாக அதை வைத்து ஒரு பொத்தானை அழுத்த, இவளோ,

“அவுச்…” என்றாள் வலியில்.

மகிந்தன் அந்த இயந்திரத்தை விலக்கிப் பார்க்க, அது பதிந்த இடத்தில் ஒருதுளி இரத்தம் வெளிவந்ததோடு, கண்டியும் போயிருந்தது. அந்த இயந்திரத்தைப் பெட்டியில் எறிந்து விட்டு, அங்கிருந்த கைதுடைக்கும் தாள் கொண்டு, காயத்தைக் கவனமாகத் துடைத்து ஒரு பிளாஸ்த்ரையும் ஒட்டி விட்டு மீண்டும் சட்டைக் கையைச் சரியாக்கி விட்டு, இதங்கனையைப் பார்த்து,

“இது ஜிபிஎஸ். நீ எங்கிருந்தாலும் இதை வைத்துக் கண்டுபிடித்து விடுவேன்…” என்றவன், பின் அவளை ஏறிட்டு,

“உன்னுடைய சங்கிலியைக் கழற்று…” என்றான். அவள் மறுக்காமல் கழற்றிக் கொடுக்க, உடனே தன் பாக்கட்டிற்குள் இருந்த இன்னொரு பெட்டியை எடுத்து அதிலிருந்து மெல்லிய சங்கிலி ஒன்றை எடுத்து, அவளுக்கு அணிவித்து  விட்டு, அதே பெட்டியிலிருந்த சிறிய பொத்தான் போன்ற ஒன்றை அவளுடைய காதுகளுக்குள் செலுத்தி விட்டு அவள் கூந்தலை எடுத்துக் காதுகளை மறைப்பதுபோல வைத்து,

“நான் பேசுவதை நீ கேட்பதற்காகத்தான் இது. நீ பேசும்போதும் என்னால் கேட்க முடியும்… இந்த சங்கிலியில் இருக்கும் பதக்கம் அங்கே நடப்பது அத்தனையையும் ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்யும்… இதுதான் நமக்குக் கிடைக்கிற முக்கியமான ஆவணமாக இருக்கும்.” என்று கூற, இவளோ,

“அதற்கு எதற்கு இந்தச் சங்கிலி, கைப்பேசியில் ஒலிப்பதிவு செய்ய முடியாதா?” என்றாள் இதங்கனை.

“அது ஆபத்து… கண்டுபிடித்தால் நம் திட்டம் அவ்வளவுதான்… இதென்றால் யாருக்கும் சந்தேகம் வராது. தவிர கைப்பேசியை உள்ளே எடுத்தப்போக அனுமதிக்கவில்லை என்றால், ஒன்றும் செய்ய இயலாது” என்றவன் மீண்டும் அவளை ஏற இறங்கப் பார்த்தான் மகிந்தன். திருப்தி கொண்டவனாக,

“பத்திரம் இதங்கனை… முக்கியமாக இந்த சங்கிலியும், காதில் பூட்டிய ஒலிவாங்கியையும் கழறாமல் பார்த்துக்கொள். தைரியமாகப் போ… நான் இருக்கிறேன்” என்று விட்டு,

“ஆர் யு ரெடி…” என்று கேட்டான். இவள் ஆம் என்பது போலத் தலையை அசைக்க, சடார் என்று இதங்கனையை இழுத்து அணைத்துக்கொண்டான் மகிந்தன்.

“ரியலி ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யு மை கேர்ள்… நீ இப்போது செய்வது வார்த்தைகளால் சொல்ல முடியாத உதவி…” என்றவன், பின் அவளை ஒரு முழு நிமிடம் பார்த்து விட்டு,

“சரி புறப்படுங்கள்… உன்னை அழைத்துச் செல்ல அவர்களே வண்டி அனுப்புவதாகக் கூறியிருந்தார்கள்…” என்று விட்டு அங்கேயே நின்று கொள்ள, இவளோ,

“வாசல் வரையாவது வாவேன் மகிந்தன்…” என்றாள் கலக்கத்தை மறைத்தவாறு. இவனோ,

“இல்லை… அரவன் மிகக் கெட்டிக்காரன். வாசலில் வேவுபார்க்க யாரையாவது வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… நீ போய் வா… நான் இந்தப் பக்கமாக வெளியேறி விடுகிறேன்….” என்றவன்,

“பி சேஃப்… அன்ட் கெயர்ஃபுள்..” என்றவன் அடுத்த கனம் அங்கிருந்து விலகிச் செல்ல, இவளோ, ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்தியவளாக, அந்த அறையை  விட்டு வெளியே நடக்கத் தொடங்கினாள். ஆனாலும் கால்கள் நடுங்கத்தான் செய்தன.

ஏனோ அவளுக்குத் தான் ஒரு பலியாடு என்பதுபோலவே தோன்றியது. பாழாய்ப் போன தொண்டை வேறு வறண்டது. ஆனாலும் வேறு வழியில்லையே. முன்னேறத் தொடங்க, மகிந்தனால் அழைத்துவரப்பட்ட அந்த இருவரும் கரங்களில் பேட்டி காண்பதற்கு வேண்டிய உபகரணங்களோடு இதங்கனையைப் பின்பற்றத் தொடங்கினர்.

மூவரும் அந்த விடுதிக்கு வெளியே வர, சடார் என்று அவர்களுக்கு முன்பாக ஒரு லெமோசின் வந்து நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து வெளியே வந்த காரோட்டி, இவள் பக்கமாக வந்து கதவைத் திறந்து,

“கெட் இன்…” என்று பவ்வியமாகக் கூற, உள்ளே வெடிக்கத் தயாரான பயச் சிதறல்களை மறைத்தவாறு உள்ளே அமர்ந்து கொண்டாள் இதங்கனை. அவள் அமர்ந்த உடனேயே  கதவு சாத்தப்பட்ட, ‘ஐயோ இன்னும் மற்றவர்கள் ஏறவில்லையே…!’ பதறியவளாக வண்டியோட்டியைத் தடுக்க முயன்ற நேரம்,

“டோன்ட் வோரி பேபி… அவர்கள் இன்னொரு வாகனத்தில் வருவார்கள்…” என்கிற அழுத்தமான, ஆழமான, இதயத்தைச் சில்லிடவைக்கும் குரல் அருகிலிருந்து வர, அந்தக் குரலில் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை  பரவிய நடுக்கத்தோடு மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள் இதங்கனை.

அங்கே அவளுக்கு எதிரே கதவோடு சாய்ந்தமர்ந்து, ஒரு காலுக்கு மேல் மறுகாலைப் போட்டவாறு இவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அரவன்.

(4)

அரவன்… அதுவும் எதிர்பாராமல் அருகே. மிக மிக அருகே. தொடும் தூரத்தில்… நம்ப முடியாத அதிர்ச்சியில் விழிகள் விரிய, இதயம் தொண்டையில் வந்து துடிக்க, ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டவளாக அவனையே வெறித்தாள் இதங்கனை.

படத்தில் கண்டதற்கும், நேரே பார்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்கள் இருந்தாலும், சட்டென்று அவன்தான் அரவன் என்று புரிந்து போனது. சொல்லப்போனால், படத்தில் பார்ப்பதற்கு, நேராகப் பார்க்கும் போது கம்பீரமாக இருந்தான். மிக மிகக் கம்பீரமாக இருந்தான். ஆனாலும் அந்தக் கம்பீரம் இவளை கவர்வதற்குப் பதில், நடுங்க வைத்தது. புகைப்படத்தில் சற்று ஒடிசலாக இருந்தான். ஒரு வேளை பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படமாக இருக்கலாம். இப்போது அந்த ஒடிசல் மறைந்து பதிலுக்குப் பயத்தைக் கொடுக்கும் அளவுக்கு உடல் பருத்து இறுகி… ஆண்மை ததும்பி வழிய நின்றிரந்தான். அந்தப் படத்தில் அத்தனை உயரமானவனாகத் தெரியவில்லை. நேரில் பார்க்கும் போது  மலையளவு போலத் தெரிந்தான்… அதுவும் அந்த விழிகள்… படத்தில் பார்த்தபோது கண்ணாடி அணிந்திரந்தான். இப்போது நேராகப் பார்க்கும் போது… அவளையும் மீறி இதயம் பலமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்த விழிகள் கோழிக் குஞ்சைத் தொலைவிலிருந்து கண்டுகொண்ட பருந்தின் விழிகளைப் போல, இரையைப் பாய்ந்து உண்ணத் தயாராகும் புலியின் விழிகளைப் போல அத்தனை பயங்கரமாக இருந்தன.

ஒருவேளை மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, அவனைப் பயங்கரமாகச் சித்தரித்து நினைத்ததால், பார்க்கும் போது தானாகவே பயம் ஒட்டிக்கொள்கிறதா தெரியவில்லை. ஆனாலும் அவனுடைய விழிகள் இவள் மீது படிந்த அந்த நொடி, இதயம் சில்லிட்டது மட்டும் நிஜம். அந்த அச்சத்தை வெளிக்காட்டாதிருக்க அவள் பட்ட சிரமம் இருக்கிறதே. அப்பப்பா.

எப்படியோ, வெளுறிய முகத்தை மறைப்பதற்காகச் சிரமப்பட்டுப் புன்னகையைக் கொண்டுவர முயன்று தோற்பதும், வெற்றி காண்பதுமாகத் தடுமாறி நிற்கையில், அவனோ அவள் பக்கமாகக் குனிந்து,

“ரிலாக்ஸ்… ஏஞ்சல்… ஐ வோன்ட் பைட் யு…” என்றான் மென்மையாய்.

மென்மையாகத்தான் கூறினான். ஆனால் இவளுக்குத்தான் அந்த மென்மையில் சில்லிட்டுப் போனது. அந்த மென்மையையும் தாண்டி அதில் எதுவோ அவளை நடுங்க வைத்தது. உமிழ் நீர் கூட்டி விழுங்கிப் புன்னகைக்கிறோம் என்கிற பெயரில் உதடுகளை இழுத்துப் பிடிக்க அவனோ, அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டி,

“ஐ ஆம் அரவன்…! என்னை நேர்காண்பதற்காகத்தான் நீ வந்திருக்கிறாய்” என்றான் புன்னகையுடன். எப்படியோ  சமாளித்தவளாகத் தன் தளிர் கரத்தை அவனை நோக்கி நீட்டி,

“ஐ… ஐ… நோ…” என்றவளுக்கு ஏனோ அவனுடைய விழிகளை நேராகப் பார்க்க முடியவில்லை. அதன் விளைவாக, இமை தாழ்த்தி, “ஐ… ஐ ஆம்…இத… ம்கும்… ஐ ஆம் விந்தியா…” என்றதும், இப்போது அழகான பல் வரிசை தெரிய, சிரித்தவன், நீட்டிய அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றி, மெல்லியதாக நசித்து அழுத்த, இவளுக்குக் குப்பென்று வியர்த்தது.

விரல் நகம் தொட்டுத் தலை உச்சி வரை கிலியில் மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க, அடிவயிற்றில் இனம் தெரியாத ஒரு உருளை ஒன்று உருண்டுவந்து தொண்டைவரை வந்து முட்டி நின்றது. அவனோ, தன் கரங்களுக்குள் மறைந்திருந்த அவளுடைய தளிர் கரத்தைப் பார்த்தவாறே அக் கரத்தைப் பெருவிரலால் பட்டும் படாமலும் வருடிக் கொடுத்து,

“ஐ நோ… ஹூ யு ஆர்… அதனால்தான் உன்னை அழைத்துச் செல்ல நானே நேராக வந்தேன்…” என்றான் மெல்லிய கிறக்கத்துடன்.

அவன் கிறக்கமாகப் பேசினால், இவளுடைய நெஞ்சம் ஏன் வேகமாகத் துடிக்கிறது? அச்சத்தால் துடிக்கிறதா இல்லை, அவஸ்தையில் துடிக்கிறதா? புரியாமல் குழம்பி நிற்க,  அக் கரத்தைப் பொத்தினாற்போலப் பற்றி அழுத்தி, அதன் மென்மையை உணர்ந்தவனாக,

“வாவ்…! மிக அழகான மென்மையான கரங்கள்…” என்றான் ரசனையுடன். ஏனோ இதங்கனைக்குப் பயத்தையும் மீறி அவன் தொடுகையும் பேச்சும் ஒருவித மாயையைத் தோற்றுவிக்க, என்ன செய்கிறோம் என்று புரியாமல் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

அவன் இன்னும் அவளுடைய கரத்தைத்தான் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். பின் நிமிர்ந்து அவளை உற்றுப் பார்த்தான். சுருண்ட கார்குழல், நீண்ட பெரிய மீன் விழிகள், கூரிய நாசி, அதன் கீழ் உதட்டுச் சாயத்தால் மேலும் சிவந்த செழித்த அழகிய உதடுகள், வட்ட முகம், வெண் கழுத்துக்குக் கீழ் தொடத் தூண்டும் வெண்ணிற நெஞ்சில் பளிச்சென்ற கரிய நிற பென்டனைக் கொண்ட மெல்லிய சங்கிலி. அதன் கீழே அவனைக் கவிழவைக்கும் மார்பகத்தின் ஆரம்பப் பகுதி. அதன் கீழே அந்த அழகிய உடலை மறைக்கும் வகையில் கரிய நிற கோட் சூட் சிக்கென்று அவளுடைய பெண் உடலைத் தழுவி அதன் நெளிவு சுழிவுகளை அழகாய் எடுத்துக் காட்டியது. விழிகளாலே அவளைக் கற்பழிக்க முயன்றவனாக,

“யு ஆர் பியூட்டிஃபுள்…” என்றான் வெளிப்படையாக. இதற்கு எப்படி நடந்து கொள்வது என்று இதங்கனைக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. இதுவரை இத்தகைய இக்கட்டான நிலைக்கு அவள் தள்ளப்பட்டதில்லையே. இதை மகிழ்வாகக் காண்பிப்பதா, கோபமாகப் பார்ப்பதா, இல்லை எதுவுமே புரியாத ஜடம் போல நிற்பதா? குழம்பியவள், அடிவயிற்றில் ஏற்பட்ட சிறு வலியை மட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தடுமாறி நிற்கையில்,

“இதங்கனை… அவன் வலையில் விழாதே… கம்பீரத்தை இழக்காதே… தைரியமாக அவனை எதிர்கொள்” காதுக்குள் மகிந்தனின் எச்சரிக்கைக் கூரல் விழ, திடுக்கிட்டு விழித்தாள் இதங்கனை.

‘ஐயோ…! இப்போது என்ன நடந்தது? நான் ஏன் இப்படி குழம்பி நிற்கிறேன்? தடுமாறியவள், ஒரு மாதிரி தன்னைத் திடப்படுத்தியளாக, தன் முகத்தில் கம்பீரத்தை மீட்டெடுத்துக்கொண்டு, அவன் கரத்திலிருந்த தன் கரத்தை உருவி எடுத்து, காலுக்கு மேலாகத் தன் காலைப் போட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு அவனை உற்றுப் பார்த்து,

“நன்றி மிஸ்டர் அரவன்…” என்றாள் புன்னகையாய்.

“மை ப்ளஷர்…” என்றான் அதே குரலில். கூடவே அவனுடைய விழிகளும் அவளை உற்றுப் பார்ப்பதையும் விடவில்லை.

கடவுளே, இவன் பேசும் போது ஏன் உள்ளே என்னவோ செய்கிறது? அந்த விழிகள் இவளை ஊடுரும்போது இதயம் நின்று துடிக்கிறதே… காரணம் என்ன? தவித்திருக்க,  மெல்லிய புன்னகை ஒன்றை சித்தியவன்,

“சோ… யு ஆர் ஃப்ரம்…”

“டொரன்டோ…” என்றாள் புன்னகையுடன். முகம் புன்னகைத்ததுதான், ஆனால் உள் உறுப்புகளும் கை கால்களும் பயங்கரமாக ஆட்டம் காண்பது அவளுக்கு மட்டும்தான் தெரிந்தது.

“ம்… எத்தனை காலமாக  இதழியல் துறையில் வேலை செய்கிறாய்?”

“ஆறு மாதங்களாக…”

“ம்… அதற்குள் என்னைப் போன்றவர்களைப் பேட்டி காணத் தயாராகிவிட்டாய் போல…” என்று அவன் கேட்க, அவன் கேள்வியில் மெல்லிய கிண்டல் இருந்ததோ. அவனைச் சற்றுக் கோபமாக ஏறிட்டவள்,

“திறமை இருந்தால் அனுபவம் தானாக வந்துவிடும் என்பது என் கருத்து மிஸ்டர் அரவன்…” என்றாள் இவள். அதைக் கேட்டு நகைத்தவன், பின் காலை மாற்றிப் போட்டு அமர்ந்தவாறு,

“அரவன்… கால் மி… அரவன்…” என்றான் தெளிவாய்.

நாய் வேடம் போட்டாயிற்று. குரைத்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லையே. தன் உதடுகளைப் பிளந்து கவற்சியாகச் சிரித்தவள்,

“ஐ ஆம் பிளஸ்ட்…” என்றாள் அழகாய். பிளந்த அவள் உதடுகளில் கவனம் சிதறியவனாக,

“உன்னுடைய சிரிப்பு மிக அழகாக இருக்கிறது…” என்று கூற, அதுவரையிருந்த மாயை அறுந்தவளாக, உள்ளே எழுந்த எரிச்சலைச் சிரமப்பட்டு மறைத்து,

“ஓ… நன்றி…” என்றாள் அதே புன்னகை வாடாமல். சற்று நேரம் பயணம் அமைதியாகக் கடந்து செல்ல, என்ன நினைத்தானோ, அவளை நோக்கித் திரும்பிப் பார்த்தவன்,

“உனக்கு ஆண் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்றான் தீடீர் என்று. அந்தக் கேள்வியில் அதிர்ந்து, சுடச் சுடப் பதில் கொடுப்பதற்காக வாயைத் திறந்தவள், உடனே மூடிக்கொண்டாள்.

இந்தக் கேள்வி எதற்காகக் கேட்கப்படுகிறது… ஒரு வேளை இவளை ஆழம் காணக் கேட்கிறானா, இல்லை மகிந்தன் சொல்வது போல, இவளைத் தப்புத் தப்பாக யோசித்து அதற்கான அடித்தளம் போடவேண்டி இந்தக் கேள்வியைக் கேட்கிறானா. அந்தக் கேள்விக்கான பதில்கள் இரண்டுமே அவளுக்கு ஆபத்தானதுதான். இல்லை என்றால், தனக்கான பெண் தேவையை இவளிடம் பூர்த்தி செய்ய முயல்வான். ஆம் என்றால் அந்தக் காதலன் யார் என்று அறிய முயல்வான். அப்படியிருக்கையில் என்ன பதிலைச் சொல்வது…? ஒரு கணம் தடுமாறியவள், அடுத்து அவனைக் கம்பீரமாகப் பார்த்து,

“பேட்டி உங்களுக்கா எனக்கா…” என்றாள் அழுத்தமாக.

இப்போது தன் பற்கள் தெரியச் சிரித்தவன்,

“ஸ்மார்ட்…” என்றான். இவளோ அவனுடைய அந்த சிரிப்பில் ஒரு கணம் தடுமாறித்தான் போனாள். அம்மாடி… எத்தனை அழகாகக் கம்பீரமாக இருக்கிறான். இவனாகப் பெண்களைக் கண்டு மயங்குகிறானா, இல்லை பெண்கள் தாமாக இவன் மீது விழுவதால் அதை இவன் பயன்படுத்திக் கொள்கிறானா? குழம்பிப்போனாள் இதங்கனை.

அவனோ, அவளைக் கீழ்க் கண்ணால் பார்த்து,

“டு யு நோ வட்… என்னவோ தெரியவில்லை… நீ அதிகம் என்னைக் கவர்ந்திழுக்கிறாய்… மேலும் மேலும் உன்னைப் பற்றி அறியவேண்டும் என்கிற தூண்டுதலைக் கொடுக்கிறாய்…” என்றவன், சற்று நேரம் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பார்வையில் மீண்டும் அடிவயிற்றில் இனம்புரியாத கலக்கம் உருவாகத் தொடங்கியது. அதைச் சமப்படுத்துபவள் போல ஒற்றைக் கரத்தால் வயிற்றை அழுத்திக் கொடுத்தவாறு உமிழ் நீர் கூட்டி விழுங்கியவளுக்கு ஏனோ அந்தக் கணமே அந்த வாகனத்தின் கதவைத் திறந்து குதித்தாவது வெளியே ஓடிவிடவேண்டும் போலத் தோன்றியது.

ஒருவர் அருகே அமர்ந்திருந்து குறுகுறுவென்று இமைக்காது பார்த்தால் எப்படியிருக்கும். அதுவும் கெட்டவன்  தப்பானவன் என்கிற பெயர் பெற்ற அந்த அரவன் பார்த்தால் எப்படித்தான் மூச்செடுப்பது? என்ன செய்வது என்று தெரியாமல் சிரிக்கவும் முடியாமல், சிரிக்காதிருக்கவும் முடியாமல், இலகுவாக இருக்கவும் முடியாமல், திருதிரு என்று விழித்திருக்க,

“உன்னைப் பற்றி கொஞ்சம் சொல் கேட்கிறேன்…” என்றான் அவன்.

என்னைப் பற்றி சொல்வதா?  எதை சொல்வது? எப்படிச் சொல்வது? ‘ஆமா… நானு யாரு?’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டவளுக்கு, அந்தக் கணம், விந்தியாவின் வாழ்க்கை வரலாறு சுத்தமாக மறந்து போனது.

“இதங்கனை… தயவு செய்து உன்னை அமைதிப்படுத்திக் கொள். உன் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாதே… நான் சொல்வதை அப்படியே ஒப்பி” என்று மகிந்தன் அவளுடைய காதுக்குள் கிசுகிசுக்க, சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தாள் இதங்கனை.

சிரமப் பட்டு அழகிய புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி,

“என்னைப் பற்றிக் கூற எதுவுமில்லை அரவன்… என் தாய் தந்தைக்கு நான் ஒரே பெண்… நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது ஒரு விபத்தில் என் தாயும் தந்தையும் இறந்து போனார்கள்… அதற்குப் பிறகு யாருடனும் இருக்கப் பிடிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன்…” என்று மகிந்தன் கூற, அதை அப்படியே ஒப்பிக்க, அவளுடைய அந்தக் கதையைக் கேட்டவனுடைய புருவங்கள் ஒரு கணம் சுருங்கி விரிந்தன.

“ரியலி…?” என்று ஆச்சரியம் போலக் கேட்டவன், பின், “ஐ ஆம் ரியலி சாரி…” என்றான் வருத்தமாக. அவன் நிஜமாகவே வருந்துகிறானா என்ன? சந்தேகத்துடன் அவன் முகத்தை உற்றுப் பார்க்க அங்கே எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.

“இட்ஸ் ஓக்கே… அது நடந்து பலவருடங்கள் ஆனதால், இப்போது எதுவும் தோன்றுவதில்லை…” என்றவள், இப்போது அவனை ஏறிட்டு,

“என்னை விடுங்கள். நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…” என்று இவள் ஆர்வம் போலக் கேட்க, தன் அழகிய புன்னகையைச் சிந்தியவன்,

“பேசலாம் பேபி…. நமக்கான நேரம் நிறையவே இருக்கிறது… மெல்ல மெல்லப் பேசலாம்… கொஞ்சம் கொஞ்சமாக என்னைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இப்போது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயலாம்?” என்று அவன் சொல்ல, இவளோ பற்களைக் கடித்தாள்.

ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதா? எதற்கு? பல்லாங்குழி ஆடவா? எரிச்சலோடு நினைக்கும் போதே, அந்த லெமசின் ஏதேதோ மேடு பள்ளங்கள் ஏறி இறங்கி இறுதியாக யாருமற்ற, ஒரு பரந்த நிலப்பரப்பில் ஒற்றையாக நின்றிருந்த அந்தப் பிரமாண்டமான கடல்போன்ற மாளிகையின் முன்பாக வந்து நின்றது.

வண்டியை  விட்டு வெளியேறிய அரவன்,  அவள் பக்கமாக வந்து கதவைத் திறக்க,  அவசரமாக ‘ஈ’ என்று இழித்து விட்டு வெளியே இறங்கியபோதுதான் கவனித்தாள், அவள் வந்திருப்பது மிகப் பயங்கரமான ஒரு ஒதுக்குப்புறத்தில்  தனியாகக் கட்டப்பட்டிருந்த ஒரு மாளிகைக்கு முன்னால் என்று.

அதுவும் சற்றுத் தொலைவில் காடு கூடத் தெரிந்தது. இவனுடைய வீடு ஒரு உயரமான ஒரு பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்தது. என்ன நடந்தாலும் ஏன் என்று கேட்க நாதியே கிடையாத இடம். இங்கே எதற்கு அழைத்து வந்திருக்கிறான்? அச்சத்துடன் தனக்குப் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்களா என்று பார்த்தாள். ம்கூம் அவர்கள் வந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை.

ஏனோ மொத்த பலமும் அடித்துச் சென்ற உணர்வில், அச்சத்துடன் நிமிர்ந்து அரவனை ஏறிட்டாள் இதங்கனை. அவனோ, சுத்தவர ஒரு ரசனையோடு பார்த்து விட்டுப் பின் இதங்கனையை நோக்கித் தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்க, இவளோ சிரமப்பட்டு தன் முக மாற்றத்தை வெளிக்காட்டாது,

“பே… பேட்டி உங்கள் வேலைத்தளத்தில் அல்லவா… இது… இங்கே எங்கே வந்தோம்…” என்று திக்கித் திணறிக் கேட்க, அதற்கும் அழகாய் கவரும் வகையில் புன்னகைத்தான் அந்த அசுரன்.

“சொன்னேனே… உன்னைப் பற்றி அறிய ஆசைப் படுகிறேன் என்று… அதற்கு என் வீடுதான் வசதி… அதுதான்,  உன்னை இங்கே அழைத்து வந்தேன்…” என்றதும், அச்சம் மொத்தமாய் வந்து பிடறியில் தாக்க, அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது இதங்கனைக்கு.

“என்… என்னோடு வந்தவர்கள் எங்கே…?” என்றாள் முயன்ற அளவு தன் நடுக்கத்தை மறைத்தவாறு.

“அவர்கள் எதற்கு இங்கே…? இடைஞ்சலாய்?” என்றவன்,  அவளை நோக்கிக் கரத்தை நீட்டி,

“வா… உள்ளே சென்று நிறையப் பேசலாம்…” என்றதும், அவனுடைய அந்த சாதாரண அழைப்பில் இவளுடைய உடலில் இருந்து இரத்தம் மொத்தமாக வடிந்து செல்வது போலத் தோன்ற, அவனைப் பேந்தப் பேந்தப் பார்த்தாள் இதங்கனை. இதயத்தின் துடிப்பு வேறு காதுகளுக்குள் பறையாய் முழங்கியது.

இப்படியேதாவது நடக்கும் என்று தெரியும்தான். கற்பனையில் தெரிந்தபோது அந்தளவு பாதிக்கவில்லை. நிஜத்தில் அதை நேர்காணும்போது உதறியது. என்ன செய்வது என்று தெரியாமல் உடல் சில்லிட அப்படியே அமர்ந்திருக்க,

“இட்ஸ் ஓக்கே இதங்கனை… யு கான் மேக் இட்… அவனோடு உள்ளே போ… யு கான் டு இட்… கோ…” என்கிற மகிந்தனின் குரல் காதுக்குள் நுழைய, ஆழ மூச்செடுத்து  நிமிர்ந்து அரவனைப் பார்த்தவள் பற்கள் தெரியச் சிரித்து, நீட்டிய அவனுடைய கரத்தில் தன் தளிர் கரத்தைப் பதித்தவாறு எழ, அக் கரத்தைத் தன் கரம்கொண்டு இறுகப் பொத்திக்கொண்டவனாய், உள்ளே அழைத்துச் செல்ல, அடுத்து விதி தனக்கு என்ன அதிர்ச்சியை வைத்திருக்கிறதோ என்கிற கலக்கத்தோடு அந்த மாலிகைக்குள் நுழைந்தாள் அவள்.

What’s your Reaction?
+1
13
+1
1
+1
2
+1
1
+1
0
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!