Wed. Dec 4th, 2024

பாலையில் பூத்த காதல் முள் – 2

(2)

வீடு வந்து சேர்ந்ததும் அவளை வரவேற்க அத்தனை உறவினர்களும் கூடியிருந்தார்கள். அதுவும் அவளுடைய பெரியப்பா அபேசேகர அவள் கதவு திறந்ததும் முகம் மலர ஓடி வந்து, கட்டி அணைத்து,

“எங்கள் தேவதை வந்த பிறகுதான் வீட்டுக்கு வெளிச்சம் வந்திருக்கிறது.” என்றார் ஆர்ப்பாட்டமாக. சற்று நேரத்தில், தந்தையும் மகளைக் காண ஓடி வந்தார்.

அதன் பிறகு நேரம் போனது தெரியவில்லை. இரவு பத்து மணிக்குப் பிறகுதான் அத்தனை பேரும் விடை பெற்றுச் சென்றார்கள். கடைசியாகப் பெரியப்பா விடை பெற, அவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டுத் திரும்பிய இதமியாவுக்கு எதுவோ உறுத்த திரும்பிப் பார்த்தாள்.

ஒரு மோட்டார் வண்டி சற்றுத் தொலைவில் நின்றிருந்தது. அதில் அமர்ந்திருந்த ஒருவன் கரிய நிறத்தில் தலைக் கவசம் அணிந்திருந்தான். அவன் இவர்களின் வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்ற, திரும்பி தன் தந்தையைப் பார்த்து எதுவோ சொல்ல முயன்ற நேரம், அந்த வண்டி புறப்பட்டுச் சென்றிருந்தது.

தான்தான் தவறாகப் புரிந்துவிட்டோமோ என்று நினைத்தவள், உள்ளே திரும்பும் போது மீண்டும் அதே உணர்வு. குழப்பத்தோடு திரும்பும் போது, கிளம்பிய அந்த வண்டி சற்றுத் தொலைவில் நின்றிருக்க, அதில் அமர்ந்திருந்தவன் திரும்பி அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அப்படித் தான் அவளுக்குத் தோன்றியது. குழப்பத்தோடு அவள் அந்த வண்டியையே பார்த்துக்கொண்டிருக்க,

“மகள்.. என்னம்மா.. வாசலிலேயே நிற்கிறாய்?” தந்தை கேட்க, தலையை உலுப்பியவள்,

“ஒன்றுமில்லை அப்பாச்சி…” என்றவாறு திரும்பி தெருவைப் பார்க்க, இப்போது அந்த வண்டி நின்றிருந்த இடம் வெறுமையாக இருந்தது.

தோள்களைக் குலுக்கியவள், தந்தையோடு உள்ளே செல்ல, அந்தத் தெருவின் திருப்பத்தில் நின்றிருந்த அவன், இதமியா உள்ளே சென்று மறைந்ததும், தன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டிருந்தான்.

கடைசியாகத் தாய் தந்தையிடம் இரவு வணக்கம் சொல்லிவிட்டுப் படுக்கையில் வந்து விழுந்தபோது இதமியாவுக்கு மனம் பெரும் குழப்பத்திலிருந்தது.

ஏன் அவளுடைய நண்பர்கள் அவளைப் பார்க்க வரவில்லை. எங்காவது சின்னதாக விழா வைத்தாலே அத்தனை பேரும் ஒன்றாகச் சென்று கும்மாளம் அடிப்பார்கள். அப்படியிருக்கையில், அவளுடைய வீட்டில் வரவேற்பு விழா போலச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு நண்பனைக் கூடக் காணவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு அழைப்பு போகவில்லையோ… இல்லையே… அவளுடைய நண்பர்கள் அத்தனை பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிந்தவர்கள்தான். அதுவும் அவர்களுடைய பெற்றவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக நட்பாகப் பழகக் கூடியவர்… அப்படி அழைப்பு அனுப்பாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி என்றால் ஏன் வரவில்லை? அவர்கள் மட்டுமில்லை, அவர்களைப் பெற்றவர்கள் கூட வரவில்லை.

ஏனோ மனம், முன்பு போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் மகிழ்ந்திருக்க ஏங்கியது. நட்பு என்றாலே அது தனிதானே.

இதமியாவைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை உணரச் செய்யும் இடம் அவளுடைய தோழர்களின் அருகாமைதான். தந்தை எப்போதும் படப்பிடிப்பு என்று சென்றுவிடுவார். சிலவேளைகளில் வீட்டிற்கு வராமல் போவதும் உண்டு. தாய் மஞ்சுளாவுக்கோ மாதர் சங்கம், பெண்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமை என்று ‘மைக்’ பிடிக்கச் செல்வதிலேயே நேரம் போய்விடுவதால், இவளோடு அதிகம் மெனக்கெடுவதற்கு நேரம் இருப்பதில்லை.

அதைச் சமாளிக்க நிறைய விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்வார்கள்.

இதில் தனி ஒருத்தியாகப் பிறந்திருந்ததால் சேர்ந்து விளையாட வீட்டில் யாருமில்லை. இந்த நிலையில் அவள் நெருங்கி இருந்தது என்றால், அவளுடைய நட்புகளோடு மட்டும்தான்.

அதுவும் இவளுடைய நண்பர்கள் அனைவருமே மேல்மட்டம் தான். பணத்தின் மீது புரள்பவர்கள். பசி என்றால் என்ன என்று கூடத் தெரியாதவர்கள். அதனால் கொஞ்சம் தான்தோன்றி வாழ்க்கைதான். இதில் பெற்றவர்களும், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, எங்களைத் தொல்லை செய்யாத வரை போதும் என்கிற நிலையில், தள்ளியே நின்று ரசித்தார்கள். அப்படியே அவர்கள் கண்டிக்க நினைத்தாலும், அதைக் கேட்கும் நிலையிலும் அவர்கள் இல்லை.

விளைவு மது பழக்கமானது. ஆரம்பத்தில் இதமியா, அதன் மீது பற்று இல்லாமல்தான் இருந்தாள். ஆனால் அவளுடன் சேர்ந்த நண்பர்கள் அவளை வற்புறுத்த, பழகிக்கொண்டாள். அதற்காக முழு நேரமும் மது அருந்துவாள் என்று பொருள் இல்லை. விழாக்களில் நீட்டும்போது தவிர்க்காமல் எடுத்துக் கொள்வாள். சிலவேளைகளில் அளவுக்கு மீறிச் செல்வதும் உண்டு.

இதோ இப்போது கூட மனம் பழையது போலக் குதுகலமாகப் பறந்து வரப் பரபரபத்தது. அத்தனை பேரும் ஒன்றாக் கூடி மது அருந்தினால் நன்றாக இருக்குமே என்கிற ஏக்கம் எழுந்தது. அந்தக் கணமே நண்பர்களிடம் பேச வேண்டும் என்கிற பேரவா எழுந்தது.

உடனே கைப்பேசியை எடுத்தவளின் மனதில் ஒஷான் வந்து நின்றான்.

ஒஷானும் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய மந்திரி ஒருவரின் மகன்தான். இவளுக்கும் அவனுக்கும் இடையே நட்பையும் தாண்டி, இருந்தும் இல்லாமலுமாக மெல்லிய ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலைத் தொட்டு முளைவிட முயன்ற நேரத்தில் இங்கிலாந்து போகவேண்டிய நிர்ப்பந்தம்.

இப்போதும் ஒஷானை நினைத்ததும் மனதிற்குள் மெல்லிய பட்டாம்பூச்சியின் சிலுசிலுப்பு.

அவளையும் மீறி அவளுடைய பிறந்த நாளுக்கு அவன் நடந்து கொண்டது நினைவுக்கு வந்தது.

அன்று அவளுடைய பதினெட்டாவது பிறந்த நாள். கேக் வெட்டிக் கொண்டாடிய பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் தனிமை கிடைக்க, அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் சென்ற ஒஷான் ஒரு மறைவிடத்தைக் கண்டதும், அவளைச் சுவரோடு மோதி, அவளுக்கு இரு பக்கமும் கரங்களைப் பதித்து அவளை ஒரு மாதிரி பார்த்தான்.

அந்தப் பார்வையைச் சந்திக்கும் தைரியம் இல்லாமல் தலை குனிந்த இதமியா,

“வட்…?” என்றாள் கிசுகிசுப்பாக.

அவளுடைய முகம் நோக்கித் தன் முகத்தை எடுத்துச் சென்ற ஒஷான்,

“ஐ நீட்டு சே சம்திங்” என்றான் கிசுகிசுப்பாய்.

அந்தக் குரலில் உள்ளம் படபடக்க அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ அவளை தலை முதல் கால்வரை ஒரு மாதிரிப் பார்த்தான். அந்தப் பார்வையில் உடலில் ஒருவித கிளுகிளுப்புத் தோன்ற, உதடுகளைக் கடித்தவள்,

“வட்…” என்றாள்.

இப்போது ஒஷானின் கரங்கள் அவளுடைய இடையில் படிய, ஆழ மூச்செடுத்தாள் இதமியா. அப்படியே அவளை இழுத்துத் தன் மீது போட்டுக் கொண்டவன், அவளை இறுக அணைக்க,

“என்… என்ன செய்கிறாய்… ஒஷான்” என்றாள் நடுக்கத்தோடு. இப்போது அவள் மேனியோடு மோதி நன்ற ஒஷான், கீழ்க்கண்ணால் அவளைப் பார்த்து,

“நீ இப்போது மேஜர்…”

“அதற்கு…?”

“காதலிக்கலாமா…?” என்றான் கிசுகிசுப்பாக.

இப்படி நேரடியாக அவன் கேட்டதும் முகத்தில் வெட்கம் மலர,

“சீ… படிப்பு முடியாமல் காதலெல்லாம் செய்யக் கூடாது என்று அம்மா சொல்லியிருக்கிறார்கள்” என்றாள் இதமியா தடுமாற்றத்தோடு.

“ப்ச்… இப்பவே திருமணம் செய்யச் சொல்லியா சொன்னேன். காதலிக்கலாமா என்றுதான் கேட்டேன்…” என்றவன் அவளுடைய உதடுகளைத் தன் உதடுகளால் தொட வர, சட்டென்று அவனைத் தள்ளிவிட்டவள்,

“ஹலோ… இந்தத் தொட்டுப் பேசும் வேலை எல்லாம் வேண்டாம். எதுவாக இருந்தாலும் இருபத்தொரு வயசுக்குப் பிறகுதான்…” சொல்லி விட்டு அவனைப் பார்க்க முடியாமல் வெட்கம் வர, அங்கிருந்து அவள் ஓடிவிட்டாள்.

இப்போது அதை நினைத்தாலும் இதயம் துள்ளிக் குதிக்கிறது. இத்தனை ஆசையோடு காதலோடும் அன்று பேசினான். அன்று முழுக்க அவன் பார்வை அவளைச் சுற்றித்தானே இருந்தது. இவ்வளவு ஏன், அவள் இங்கிலாந்து சென்ற ஒரு வருடமும் காதல் ரசம் சொட்ட நேரம் காலம் இல்லாமல் அழைத்துப் பேசினானே. திடீர் என்று என்னானது. அவன் மட்டுமில்லை, அத்தனை நண்பர்களும் அவளோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார்கள். எதற்காக? ஏன்? அவள் அப்படி என்ன தவறு செய்தாள்?

இதோ இப்போதும் ஒஷானோடு பேசவேண்டும் என்கிற ஆவல் பிறக்கவே செய்கிறது. எப்படி இருக்கிறானோ என்ன செய்கிறானோ என்கிற எண்ணமும், அவளை வதைக்கவே செய்கிறது. ஆனால் அவன்தான் பேச மறுக்கிறானே.

மனம் கேட்காமல் மீண்டும் ஒஷானின் இலக்கத்தை அழுத்திவிட்டுக் காதில் வைத்தாள்.

“த நம்பர் யு ஹாவ் டயல்ட் இஸ் கரன்ட்லி ஸ்விச்ட் ஆஃப்… ப்ளீஸ் ட்ரை எகெய்ன் லேட்டர்…” என்கிற பதிலில் எரிச்சலானவள் கைப்பேசியை அணைத்து வைத்தாள்.

எப்போது அழைத்தாலும் இப்படித்தான் வருகிறது. எங்கே போய்த் தொலைந்தான்? அதுவும் இரவு பத்து மணிக்கு ஸ்விச் ஆஃப் என்று வருகிறது. குழம்பியவளாக மல்லாக்காக நிமிர்ந்து படுத்தாள் இதமியா.

ஏன் யாருமே அவளுடைய அழைப்பை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? எரிச்சலுடன் கைப்பேசியைக் கட்டிலில் எறிந்தவளுக்குக் கோபம் வந்தது.

கூட்டுக் களவாணிகள் அத்தனை பேரும் எங்கோ சென்றிருக்கிறார்கள் போல. அதனால்தான் அவர்களின் கைப்பேசி வேலை செய்யவில்லை. இருக்கட்டும், நான் வந்தது கூடத் தெரியாமல், ஊர் சுற்றித் திரிகிறீர்களா.. நன்றாகத் திரியுங்கள். எப்படியும் என்னைத் தேடி வருவீர்கள்தானே. அப்போது வைக்கிறேன் கச்சேரி.

எரிச்சலுடன் கூறியவாறு விழிகளை மூட தூக்கம் வந்து தழுவி கொண்டது.

மறு நாள் காலை எழுந்த போதே நண்பர்களின் நினைவோடுதான் எழுந்தாள் இதமியா.

எழுந்த உடனே அவர்களை அழைத்துப் பார்த்தாள். யாரும் கைப்பேசி எடுக்கவில்லை. இன்னுமா வந்து சேரவில்லை. எரிச்சலுடன் எழுந்தவள் குளியலறைக்குள் நுழைய, படுக்கை அறைபோல அத்தனை சுத்தமாக விரிந்தது குளியலறை.

இயற்கைத் தேவைகளை முடித்துக்கொண்டு குளித்துவிட்டு வெளியே வர, அவளுக்குச் சுடச் சுட காப்பி மேசையில் இருந்தது.

நடந்து சென்று அதை எடுத்துக் குடித்தவாறு அறைக்குள் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பார்த்தாள். சுவாரசியமாக எதுவுமில்லை.

ஆனாலும் எப்போதும் போலக் காப்பியைக் குடிக்கும் வரை ஏனோ தானோ என்று தொலை இயக்கியை வைத்துச் சானலை மாற்றி மாற்றித் தொலைக்காட்சிக்கு வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தவள், காப்பி குடித்து முடித்ததும் தொலைக் காட்சியை அணைத்துவிட்டுக் காப்பிக் கப்போடு கீழே வந்தாள்.

அவளைக் கண்டதுமே அவளுடைய கரத்தில் இருந்த வெற்றுக் குவளையை வாங்க இருவர் ஓடி வந்தார்கள். ஒருவரிடம் காப்பிக் குவளையக் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

தந்தை சாய்வாக அமர்ந்தவாறு செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார்.

அதைக் கண்டதும் முகம் மலர, நடந்து சென்று அவருக்கு அருகே அமர்ந்து அவருடைய தோளின் மீது தலையைப் பதிக்க. தன் மகளை உணர்ந்து சிரித்த திலிப் பொன்சேக,

“மை ஏஞ்சல் எழுந்தாச்சா?” என்றார் இதமாக.

“ம்…” என்று சோர்வுடன் சொன்னவள் நிமிர்ந்து தந்தையைப் பார்த்து,

“அப்பாச்சி…” என்றாள்.

அவரோ செய்தியில் கவனமாக இருந்தவாறே,

“ம்…” என்க,

“பா… என்னுடைய நண்பர்களோடு தொடர்பு கொள்ள முயன்றேன் பா. யாரும் கைப்பேசி எடுக்க வில்லை… ஒரு வாட்டி அவர்களின் வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு வரவா… ப்ளீஸ்பா… அவர்களோடு பேசாமல் ஒரு மாதிரி இருக்கிறது…” என்று இதமியா கேட்க, ஒரு கணம் திலீப்பின் உடல் இறுகிப் பின் இளகியது.

அதுவரையிருந்த இலகுத் தன்னமை காணாமல் போனாலும், செய்தித் தாளிலிருந்து கவனத்தை விலக்காமலே,

“இப்போது அவர்கள் எதற்கு உனக்கு?” என்றார் சற்றுக் கடுமையாக.

“என்னப்பா இப்படிச் சொல்கிறீர்கள். அவர்களைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆயிற்றே. பார்க்க ஆசையாக இருக்கிறதுப்பா! முதலில் அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு நல்ல பொழுது போக்கான இடத்திற்குச் செல்ல வேண்டும்…” என்ற மகளைத் திரும்பிப் பார்த்தவர், மீண்டும் செய்தித் தாளில் கவனத்தை வைத்தவாறே,

“ஏன்மா நீங்கள் ஆறு பேரும் சேர்ந்து செய்த காரியம் போதாதா… இன்னும் ஏதாவது விபரீதத்தை இழுத்து வரப் போகிறீர்களா?” கேட்ட தந்தையைப் பொறுமையிழந்து பார்த்த இதமியா,

“கமான் அப்பாச்சி… அப்போது எனக்குப் பதினெட்டு வயது. அறிவில்லாமல் நண்பர்களோடு கொஞ்சம் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டேன். அதற்குப் பிறகு என் அளவைத் தாண்டுவதில்லை. அது உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் இப்படிப் பேசுவது பிடிக்கவில்லை…” சொன்னவள் உடனே கோபத்தை விடுத்து,

“ப்ளீஸ் அப்பாச்சி… ஒரு வாட்டி ஓஷானையாவது சந்தித்து விட்டு வருகிறேன்…” விழிகள் மலர்த்திச் சொன்ன மகளை அழுத்தமாக ஏறிட்டவர்,

“அப்படி என்றால் நீ நியூசலன்ட்தான் போக வேண்டும்…” என்றார் அலட்சியமாக.

அதைக் கேட்டு வியந்தவள்,

“என்னது…? நியூசலன்டா… என்னப்பா சொல்கிறீர்கள்?” என்று இதமியா வியக்க, இப்போது செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டுத் தன் மகளை அழுத்தமாக ஏறிட்டவர்,

“ஆமாம்மா… நீ இங்கிலாந்து போன அடுத்த வருடமே அவர்களும் மேல் படிப்புக்காக ஒவ்வொரு இடங்களாகக் கிளம்பி விட்டார்கள். இனி அவர்கள் எப்போது ஈழத்திற்கு வருகிறார்களோ, அப்போது தான் அவர்களைப் பார்க்க முடியும்…” என்றார்.

அதைக் கேட்டதும் குழம்பிப்போனாள் இதமியா.

இத்தனை ஒன்றாகப் பழகிவிட்டு, அவளிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே. ஒஷான் கூடவா அவளுக்குத் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் இவள் இங்கிலாந்து போக முதல், அத்தனை பேரையும் அழைத்து விருந்து வைத்துவிட்டுத்தானே விடைபெற்றுச் சென்றாள். ஏனோ நண்பர்கள் அவளைத் தள்ளிவைத்தது போன்ற உணர்வில் கலங்கிப் போனாள் இதமியா. அழுகையில் விழிகள் நிறைய,

“ஓ… ஆனால் என்னிடம் இது பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லையே…! அப்படி நான் என்ன பிழை செய்தேன்? அவர்களிடம் பேச முடியாமல் எப்படித் தவித்தேன் தெரியுமா?” என்றாள் தழுதழுத்த குரலில்.

“ப்ச்… அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை இதா…! உன்னிடம் சொல்ல அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்காது…”

“என்னப்பா சொல்கிறீர்கள்? ஒரு வார்த்தை என்னோடு தொடர்புகொண்டு பேசக் கூடவா அவர்களால் முடியவில்லை? அப்படியான நட்பா நமக்கிடையில் இருந்தது? இசுரி, ஒஷான் கூட என்னோடு பேசவில்லை தெரியுமா…!” என்ற மகளை வருத்தமாகப் பார்த்தவர்,

“அவர்கள் வந்ததும் பேசுவார்கள் கண்ணம்மா. தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பாதே. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசி…” என்று தந்தை கூற, ஒரு பெருமூச்சுடன் எழுந்து அறைக்கு வந்தாள் இதமியா.

ஏனோ அவளிடம் சொல்லாமல் அத்தனை பேரும் ஒவ்வொரு திக்காகச் சென்றதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒஷான் நியூசிலாந்து என்றால், அங்கே எங்கே இருக்கிறான். இசுரி, சஹான், கவீன், நடீகா மூவரும் எங்கே போனார்கள். அவர்களுக்கான தொலைபேசி இலக்கம் இருக்கும்தானே. பரபரப்பானவள், அஷிஷ்காவை அழைத்துப் பார்தாள்.

இப்போதும் ஆஷிஷ்கா இவளுடைய அழைப்பை ஏற்கவில்லை. எரிச்சல் கொண்டவளாகத் தன் நண்பர்கள் அத்தனை பேரையும் அழைத்து ஒஷானின் தொலைப்பேசி இலக்கத்தை எடுக்க முயன்றவளுக்கு அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக அவனைப் பற்றிய விபரங்கள் தெரியாது என்று கையை விரித்தனர். ஒஷான் மட்டுமில்லை, அவளுடைய மற்றைய நான்கு நண்பர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை.

‘என்ன இது யாருக்கும் எதுவுமே தெரியவில்லை?’ குழம்பியவளாகக் தயாராகி வெளியே வர, தந்தை வாசலில்தான் நின்றிருந்தார்.

வெளியே செல்லத் தயாராகி வந்த மகளைப் புருவங்கள் சுருங்கப் பார்த்தவர்,

“இதா…! எங்கேமா கிளம்பிவிட்டாய்?” என்றார் அழுத்தமாக.

“ஒஷான் விட்டிற்கு அப்பாச்சி…”

“ஏன்…?”

“ஏனா? அவனுடைய இலக்கம் எனக்கு வேண்டும். அவன் கூடப் பேசவேண்டும். அவனுடன் கடைசியாகப் பேசியதே இரண்டு வருடங்களுக்கு முன்புதான்.. அவன் மட்டுமில்ல என் மற்றைய நண்பர்களின் இலக்கங்களும் வேண்டும். அதுதான் அவர்களின் வீட்டுக்குச் சென்று, தொலைபேசி இலக்கத்தை எடுக்கப் புறப்படுகிறேன்…” என்ற மகளைப் பெரு மூச்சுடன் பார்த்தார் திலிப்.

“வேணாம் போகாதே இதா… போவதில் பயனில்லை…” என்றார் சோகமாக.

“ஏன்?” இவள் குழம்ப, இப்போது நிமிர்ந்து தன் மகளை அழுத்தமாகப் பார்த்தார். இதற்கு மேல் மறைத்துப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டவராகத் தொண்டையைச் செருமியவர்,

“ஏன் என்றால், உன் நண்பர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை” என்றார் அழுத்தமாக.

What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1

Related Post

2 thoughts on “பாலையில் பூத்த காதல் முள் – 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!