Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 5

(5)

 

சர்வாகமனுக்குத் தன்னை எண்ணியே பெரும் வியப்பாக இருந்தது. யார் இவள்? இவளைக் கண்டதும், எதற்காக என் உள்ளம் இளங்கன்று போலத் துள்ளிக் குதிக்கிறது? அவளை விழிகளால் நிறைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆவல் தோன்றுகிறதே? எதனால்? இதோ அவள் மேனியில் அவளுக்கே உரித்தான ஒரு விதமான சுகந்தம், இத்தனை நாள் அலைக்கழித்த என் மனசை அமைதிப்படுத்துகிறதே… ஏன்? இவளைப் பார்த்து முழுதாக அரை மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் என் இதயம் அவள் பின்னால் போகத் துடிக்கிறதே அது எப்படி? இது என்ன விந்தை? இது சாத்தியமா? ஓ காட்… ஐ ஆம் எ கார்டியோலஜிஸ்ட்… விடலைப் பையன் போலத் தடுமாறும் இதயத்தை என் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லையே? எனக்கு என்னாகிவிட்டது? என் மனக் கட்டுப்பாடு எங்கே போனது? பெண்ணே நீ யார்? உன் ஒற்றை விழிப் பார்வையாலே என்னை விழவைக்கும் மாயத்தை எங்கே கற்றுக்கொண்டாய்?’ என்று இவன் பரிதவித்துக்கொண்டிருக்கும் போதே, தன் அறைக்குள் நுழைந்த நிரந்தரி, அறைக் கதவை மூடிவிட்டு அதன் மீது சாய்ந்து நின்றுகொண்டாள்.

 

அவளுடைய மனம் வேகமாகப் படபடவென்று துடிக்கத் தொடங்க, அதற்கேற்ப மார்பும் மேலும் கீழுமாக ஏறி இறங்கியது. உதடுகளோ சற்று வேகமாக நடுங்கத் தொடங்கின.

 

தன்னை மறந்து அவன் பற்றிய கரங்களைத் தூக்கிப் பார்த்தவள், தாள முடியாத வேதனையில் உதடுகளைக் கடித்தவாறு கதவுப் புறமாகத் திரும்பி நின்று, ஓங்கித் தன் வலது உள்ளங்கரத்தைச் சுவரில் அடிக்கத் தொடங்கினாள்.

 

உள்ளங்கையின் வலியைவிட, இதயத்தின் வலி அதிகமாகியிருக்கத் தன் நெற்றியைச் சுவரில் பதித்துத் தன்னை அசுவாசப்பத்த முயன்றவள் முடியாமல் அழுதவாறே திரும்பித்   தன் முதுகைக் கதவில் சாய்த்து நின்றவளின் கண்களுக்கு, கணவனின் புகைப்படம் தட்டுப்பட்டது. நடக்கச் சிரமப்பட்டவள் போல, அப் படத்தை நெருங்கி, அதைக் கரங்களில் எடுத்து வெறித்துப் பார்த்தாள்.

 

அங்கிருந்தவனைக் கண்டதும், ஏதோ மாபெரும் குற்றம் செய்த உணர்வில், பரிதவித்துப் போனாள் அந்தப் பேதை.

 

அவளால் எப்படி முடிந்தது. ஒரு அன்னிய ஆடவனின் தீண்டலில் தன்நிலை மறக்க எப்படி முடிந்தது? நெஞ்சைப் பிளந்துகொண்டு வெளிவரத் துடிக்கும் இதயத்தை, அழுந்தப் பற்றுவது போலத் தன் வலக்கரத்தால் மார்பைப் பற்றியவளுக்கு விழிகளில் கண்ணீர் தாரை தாரையாக உற்பத்தியாகிக் கன்னத்தில் வழியத் தொடங்கியது. எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது,

 

“நிரந்தரி…” என்று மாமனின் குரல் தொலைவில் கேட்கப் பதறியவாறு தன் கரத்திலிருந்த அந்தப் படத்தை மேசையில் வைத்துவிட்டு, விழிகளையும், நாசியையும் கன்னங்களையும் அவசரமாக அழுந்தத் துடைத்து, முகத்தை மேலும் சிவக்கப் பண்ணியவள், நீண்ட பெருமூச்சுக்களை எடுத்தவாறு தன்னைச் சமப்படுத்திக்கொள்ள முயன்று, அதில் ஓரளவும் வெற்றியும் பெற்றாள்.

 

ஆனால் சிவந்து கண்டிய முகத்தை எப்படி மறைப்பாள். அவசரமாக அங்கிருந்த துவாயில், குடிப்பதற்காக வைத்திருந் தண்ணீர் போத்தலைத் திறந்து நடுங்கும் கரங்களால், துவாயில் ஊற்றி, முகத்தை முழு நிமிடம் ஒற்றிப் பின் துடைத்தாள். இப்போது ஓரளவு அழுகையின் அடையாளம் போயிருந்தது. மீண்டும் நீண்ட பெருமூச்சுக்களுடன் தன்னைச் சமப்படுத்தியவள், தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

அவர்கள் நனைந்தவாறு வந்தது நினைவுக்கு வர, இன்னொரு அறைக்குள் புகுந்து, அங்கிருந்த  இரண்டு துவாய்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

நிரந்தரியின் கரத்திலிருந்த துவாயைக் கண்டதும்தான், அங்கிருந்த இரு ஆண்களுக்குமே தாம் மழையில் நனைந்து ஈரத்தோடு இருக்கிறோம் என்பதே உறைத்தது.

 

துவாயை ஆளுக்கொன்றாகக் கொடுத்தவள், சர்வாகமனிடம் நீட்டும்போது மட்டும் அவன் புறமாகத் தன் கவனத்தைத் திருப்பாமல், மிக அவதானமாகத் தன் கரம் படாதவாறு தள்ளி நின்றே கொடுத்துக்கொண்டாள். அதைக் கண்டதும், இவனின் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

 

“சர்வாகமன்… நன்றாகத் தலையைத் துடைத்துக் கொள். உனக்கு இந்த மழை ஒத்துக்கொள்ளுமோ இல்லையோ. நீ அனேகமாக இத்தகைய கடும் மழையில் நனைந்திருக்க மாட்டாய்.” என்று உரைத்தவாறு தன் தலையைத் துவட்டத் தொடங்க,

 

“சரி பெரியப்பா…” என்று தன் தலையைத் துவட்டிக்கொண்டாலும், அவனுடைய கவனம் என்னவோ தள்ளி நின்றிருந்தவளின் மீதே நிலைத்திருந்தது.

 

தன் பெறாமகனின் கவனம், நிரந்தரி மீது நிலைத்திருப்பதைக் கண்ட குலவேந்தருக்கு, முகம் கனிந்தது. நிரந்தரியைப் பெருமையுடன் பார்த்தவர், பின் சர்வாகமனைப் பார்த்து,

 

“அது யார் என்று பார்க்கிறாயா?…” என்றவர், நிரந்தரியின் அருகே சென்று அன்புடன், அவள் தலையில் தன் கரத்தைப் பதித்து, சர்வாகமனைப் பார்த்து,

 

“இவள் நிரந்தரி… என் மூத்த மகனின் மனைவி.. என் மருமகள் என்பதை விட என் மகள்…” என்று கூறியதும்தான் தாமதம், ஆணியால் அடிக்கப்பட்டவன் போல அதிர்ச்சியுடன் பேச்சற்று சிலையாக நின்றான் சர்வாகமன். அதுவரை அவளைப் பற்றி அறியும் ஆவலில் காத்திருந்தவனுக்கு, குலவேந்தரின் வார்த்தைகள் பெரும் இடியென அவன் தலையில் வந்து விழுந்தன.

 

நிரந்தரி மீது தன் பார்வையைப் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தன் விழிகளால் பருகிப் புதிய உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தவனுக்குக் குலவேந்தரின் விளக்கம், யாரோ மலை உச்சியிலிருந்து அவனைத் தள்ளிவிட்டது போலத் தோன்றியது. அவசரமாகக் கட்டிய காதல் கோட்டை தரமட்டமாகப் பரிதவிப்புடன், அவர் சொன்னதை நம்பமாட்டா அதிர்ச்சியில், பேச்சிழந்து நின்றான். கரத்திலிருந்த துவாய் அவன் மனம் போலவே நழுவிக் கீழே விழுந்தது. நம்ப மாட்டாதவனாக,

 

“எ… என்ன பெரியப்பா… சொல்கிறீர்கள்… இவர்கள்…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. முஷ்டிகள் இறுக, முகம் கறுக்க, உடல் அம்பிழுத்த நாணாக இறுகி நிமிர்ந்து நிற்க, மூச்சுக் காற்று படு வேகமாகச் சீற்றத்துடன் வெளி வர, சுரு சுரு என்று எழுந்த பெரும் சினத்துடன் அப்படியே நின்றான்.

 

“இவள் எனக்குரியவள் இல்லையா… இன்னொருத்தனுக்கு உரிமையானவளா? அது எப்படி சாத்தியம்… இவளை இன்னொருவன் எப்படி உரிமை கொண்டாட முடியும். நோ… நோ… ஷி இஸ் மைன்… ஓன்லி மைன்… என்னால் இவளை இழக்க முடியாது… இது வரை எந்தப் பெண்ணிடமும் மயங்காத என் உள்ளம், முதன் முதலாக ஒரு பெண்ணைத் தன்நிலை கெட்டு ரசித்திருக்கிறது. அது பொய்த்துப்போகாது… போகவும் நான் விட மாட்டேன்…’ என்று தனக்குள் எண்ணியவனுக்கு, யாரோ முகம் தெரியாத ஒருவன், தன் முன்னால் நிற்பவளின் தோளை அணைத்தவாறு, அவளுடைய கன்னத்தோடு கன்னம் உரசியவாறு நிற்கும் காட்சி மனக்கண்ணில் தோன்ற, துடித்துப்போனான் அவன்.

 

வெடிக்கும் நிலையிலிருக்கும் எரிமலையாக உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தவனை குலவேந்தரின் குரல் மீட்டு எடுத்துக்கொண்டு வந்தது.

 

“ஆமாம்பா… என் மூத்த மகன் ஜெயப்பிரகாஷின் மனைவி…” என்று கனிவுடன் கூறியவர் பின் எதையோ நினைத்து முகம் கறுக்கச் சற்று நேரம் அப்படியே நின்றவர், பின் தன்னை சமாளித்தவாறு,

 

“சரிப்பா  சர்வாகமன் முதலில் உன் ஈர உடைகளை மாற்று… நோய் வந்தால், இங்கே வந்ததற்கு அர்த்தமேயில்லாமல் போய்விடும்” என்று கூறியவாறு நிரந்தரியைப் பார்த்தார்.

 

“தம்பிக்கு அவர் அறையைக் காட்டுமா… நானும் ஆடையை மாற்றிவிட்டு வருகிறேன்…” என்று பணித்து விட்டுத் தன் அறைக்குப் போக, ‘ஐயோ… இவனுடன் எப்படித் தனித்திருப்பது?’ என்கிற எச்சரிக்கை உணர்வில் தவித்தவள், அந்த ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காமல், அவனுடைய பெட்டியின் மீது தன் கரத்தை வைத்துத் தூக்க முயல,

 

“டூ யு லவ் ஹிம்…” என்றான்.

 

அவன் என்ன கேட்டான் என்பதைப் புரிந்துகொள்ள நிரந்தரிக்குச் சில விநாடிகள் எடுத்தன. புரிந்த போது, அவள் முகத்திலிருந்த குழப்பம் மறைந்து அங்கே பெரும் சீற்றம் எழ, ‘என்ன கேட்டாய்?’ என்பது போலப் பார்க்க அவனோ அதை அறிந்தே ஆகவேண்டும் என்கிற வேகத்துடன்,

 

“என் கேள்விக்குப் பதில் கூறு, உன் கணவனை… நீ காதலிக்கிறாயா…” என்று அவன் கேட்ட விதத்தில் அதிர்ந்து போனாள்.

 

பார்த்துக் கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காத நிலையில், ஒரு அன்னியன் தன்னைப் பார்த்து, இப்படியொரு கேள்வியைக் கேட்டால், அவனைப் பற்றி என்னவென்று நினைப்பது? இல்லை என்னவென்றுதான் பதில் சொல்வது…

 

தாங்க முடியாத ஆத்திரம் எழ, அந்த இடத்தை விட்டுப் போகத் திரும்பியவளின் கரத்தைச் சடார் என்று பற்றித் தன்னை நோக்கித் திருப்ப, அவன் திருப்பிய வேகத்தில் அவனோடு மோதுப்பட்டவள் பதறி விலகித் தன் கரத்தைப் பற்றியிருந்த அவன் கரத்தை வெறித்துப் பார்த்தாள்.

 

எத்தனை தைரியம் இருந்தால் அவளுடைய கரத்தை உரிமையுள்ளவன் போலப் பற்றுவான். அந்த அதிகாரத்தை இவனுக்கு யார் கொடுத்தது? ஆவேசத்துடன் அவன் பிடியிலிருந்த தன் கரத்தை வேகமாக உதறி விடுவித்து, அத்தனை கோபத்தையும் மொத்தமாய்ச் சேர்த்து அவன் கன்னத்தை நோக்கிக் கொண்டு செல்ல, அவனோ அக் கரத்தை லாவகமாகப் பற்றித் தடுத்து,

 

“ஆன்சர் மை குவஸ்டின்… டூ யு லவ் ஹிம்?” என்றான் மீண்டும்.

 

அவனுக்கு அந்த நிலையில், தான் கேட்கும் கேள்வி சரியா பிழையா என்று கூடத் தெரியவில்லை. முதலில் இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா என்று கூட அவன் யோசிக்கவில்லை. எப்படியாவது, அதற்குரிய பதிலை அறிந்துவிடவேண்டும் என்கிற வெறி மட்டும் அவனுக்குள். அதனால் நாகரீகம் கூடத் தொலைந்து போனது.

 

அவளை அன்னியமாக நினைத்தால் தானே அவன் இதைப்பற்றியெல்லாம் யோசிப்பதற்கு. பார்த்த அந்தக் கணத்திலேயே இவள் என்னவள் என்கிற ஒரு எண்ணம் அவன் மனதில் ஆழமாக விதையென புதைந்து விட்டதே.

 

மீண்டும் தன் கரத்தை உதறி விடுவித்தவள், சற்று நேரம் முஷ்டிகள் இறுக அப்படியே நின்றாள். மட்டுப்பட மறுத்த கோபத்தைச் சிரமப்பட்டு, சமப்படுதியவள், அவனைத் திரும்பியும் பார்க்காமல், அந்த வீட்டின் மாடியில் உள்ள அறையை நோக்கி விரைந்து சென்றாள்.

 

அவள் தனக்குரியவள் அல்ல என்பதையோ, அவள் வேறு ஒருவனுக்குச் சொந்தமானவள் என்பதையோ, அவனால் சிறிதும் எண்ணிப் பார்க்க முடியவில்லை. உள்ளம் முழுவதும் வியாபித்த ஏமாற்றத்துடனும், அடக்கப்பட்ட சீற்றத்துடனும் தன் இரு பெரிய பெட்டிகளை எடுத்துக்கொண்டு, அவளைப் பின்தொடர்ந்தான் சர்வாகமன்.

 

மேலே சென்றபோது, அவனுக்குரிய அறையைத் திறந்துவிட்டு வாசலிலேயே நின்றிருந்தாள் நிரந்தரி.

 

அவன் நெருங்கியதும், அவசரமாகத் தள்ளி நிற்க, அவளுடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவனாக, விறுக் என்று உள்ளே சென்று தன் பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் போட, இவள் தன் வேலை முடிந்தது என்பது போலக் கீழே இறங்கத்தொடங்கினாள்.

 

அப்போதுதான், அநாதையாக நின்றிருந்த இன்னொரு பெட்டி இவள் கவனத்தைக் கவர்ந்தது. இது அவனுடையதாகத்தான் இருக்கவேண்டும். சரி அவன் அறையிலேயே வைத்துவிடலாம் என்கிற எண்ணத்துடன் அதைக் கரத்தில் தூக்க முயன்றவளுக்கு, அதை அசைப்பதே பெரும் சவாலாக இருந்தது.

 

‘என்ன இவன், இவற்றுள் உடைகளைக் கொண்டுவந்திருக்கிறானா, இல்லைப் பாறாங்கற்களைக் கொண்டுவந்திருக்கிறானா? அடேங்கப்பா… என்ன கனம்? அவனைப் போலத்தான் பொருட்களும் கனமாக இருக்கின்றன’ என எண்ணியவாறு இருகரத்தாலும் சிரமப் பட்டுப் படிகளால் இழுத்துக்கொண்டு மேலே செல்லத் தொடங்க, அந்தப் பெட்டியை எடுத்து வருவதற்காக வெளியே வந்த சர்வாகமன், நிரந்தரி சிரமப்பட்டு அதை இழுத்து வருவதையும், அவள் நின்றிருந்த முறையின் விபரீதத்தையும் கண்டவன், தற்காலிகமாகக் கோபம் விடைபெற்றுச் செல்ல, அவ்விடத்தில், பதற்றம் தொற்றிக்கொண்டது.

 

பதறியவாறு அவளை நெருங்க, கிட்டத்தட்ட அரைவாசிப் படிகளைக் கடந்து விட்டிருந்தாள் நிரந்தரி.

 

அடுத்த படியின் மீது தன் காலை வைக்க முயலும் போதுதான், சேலை காலுக்குள் சிக்குப்பட, பெட்டியைப் பற்றியிருந்த இரு கரத்தில் ஒரு கரத்தை விலக்கி, சிக்கிய சேலையை இழுத்து விட முயன்ற வினாடி சமநிலை தவறிப் பின்புறமாகச் சரியத் தொடங்கினாள்.

 

ஐயோ! விழப்போகிறோம் என்கிற பதற்றத்தில், பிடிமானத்திற்காகத் தன் கரங்களை வெற்றுக் காற்றில் அலைய விட, அந்தக் கணம், பலம் பொருந்திய சர்வாகமனின், இடக் கரம் அவளுடைய வலக்கரத்தைப் பற்றிக் கொண்டது.

 

பற்றிய கரத்தைத் தன்னை நோக்கி இழுக்க, இழுத்த வேகத்தில், பின் புறமாகச் சரிந்தவள், முன்புறமாக இழுபட்டு நச்சென்று முன்னால் நின்றிருந்தவனின் அகன்ற கடினமான மார்பில் பலமாக மோதி நின்றாள்.

 

தன் மார்பில் விழுந்தவளை, மேலும் அசையவிடாது, அவளுடைய மெல்லிய இடையைச் சுற்றித் தன் வலக்கரத்தைப் போட்டுத் தன்னோடு இறுக்கிக்கொண்ட சர்வாகமனுக்குத் தன்னிலைக்கு வரவே சற்று நேரம் எடுத்தது.

 

அவனுக்குத் தன் இதயத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது. கிட்டத்தட்டப் பன்னிரண்டு படிகள். பெட்டியுடன் உருண்டிருந்தால்… நினைக்கும்போதே அவன் உடல் பதறியது. அதே வேளை தன் மார்புடன் ஒண்டியவள் நடுங்குவதைக் கண்டதும், பற்றியிருந்த கரத்தை விடாமலே, இடையைச் சுற்றியிருந்த கரத்தால், அவளுடைய முதுகை வருடிக் கொடுத்து,

 

“இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே… அதுதான் நான் வந்துவிட்டேனே…” என்று சமாதானப் படுத்த முயல, அது வரை அவனுடைய இறுகிய அணைப்பிலிருந்தவளுக்கு நிகழ்காலம் உறைக்கச் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் புரியப் அவசரமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்தவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

ஏதோ சொல்வதற்கு வாயைத் திறக்க, அவளுடைய போதாத காலம் வெற்றுக் காற்றுதான் வெளியே வந்தது. அவனோ, அதுவரையிருந்த மோன நிலை கலைந்து போக, அவளைக் கோபத்துடன் ஏறிட்டு,

 

“அறிவிருக்கிறதா..… உன்னை யார் இதைத் தூக்கி வரச் சொன்னார்கள்? இத்தனை பாரத்தையும் சுமந்துகொண்டு மாடிப்படிகளில் ஏறி வருகிறாயே. கீழே விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். மூளையில்லை, இந்தப் பெட்டியின் கனமே போதும், உன் உயிரைக் குடிக்க.” என்று சீறினான் சர்வாகமன்.

 

அவனுக்குத் தன் இயலாமையை யார் மீது காட்டுவது என்றே தெரியவில்லை. அவனுக்குத் தன்னை எண்ணியே பெரும் அவமானமாக இருந்தது. அவள் மணமானவள் என்பது தெரிந்தும், அவளை மறக்க முடியாமல் தவிப்பதை எண்ணி, அவனுக்குத் தன் மீதே பெரும் வெறுப்பு எழுந்தது. இத்தகைய பண்பாட்டையா அன்னை அவனுக்குக் கற்றுத் தந்தார்? ‘திருமணமானவள் மீது காதல் கொண்டேன் என்பதை அம்மா அறிந்தால்.. என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இத்தனை கற்றும், தெளிந்தும் அறிவு வரவில்லையே எனக்கு… சே… நானெல்லாம் படித்து என்னத்தைக் கிழித்தேன்… ஆதி வாசிகள் போல…’ என்று எண்ணியவனால், சிறிதும் தன் மனதை  அடக்க முடிந்திருக்கவில்லை. அதனாலேயே தன் கோபத்தை அவள் மீது காட்டித் தன் மனதை ஆறுதல் படுத்த முயன்றான் அப்போது தவறாகிப்போனவன்.

 

அவளோ எதுவும் கூறாமல், சற்று நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின் என்ன நினைத்தாளோ, எதுவும் கூறாமல், திரும்பிச் செல்லத் தொடங்க, இவனுக்கு மேலும் சினம் துளிர்த்தது.

 

‘வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசுகிறாளா பார்…’ என்று எண்ணியவனுக்கு ஏனோ மனம் சோர்ந்து போனது. தன்னை மறந்து அவள் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஏதோ ஒரு சுமை அவனை அழுத்த அந்தப் பெட்டியுடன் தன் அறைக்கு வந்தவன், அதை அப்படியே தரையில் வைத்துவிட்டுக் கட்டிலில் தொப் என்று அமர்ந்து தன் கரங்களால், தன் முகத்தை அழுந்தத் தேய்த்துக்கொண்டான்.

 

மனம் எங்கெங்கோ எல்லாம் கடிவாளத்தை இழந்து சுற்றியது. சற்று முன் ரசித்துப் பார்த்த ஒன்று, தனக்குரியதல்ல, உரியதாக வருவதற்கும் வாய்ப்பில்லை என்பதை அறிந்து அந்த நொடி பரிதவிக்கத் தொடங்கிய உள்ளத்தை அடக்க முடியாமல் பெரிதும் தவித்துப் போனான் சர்வாகமன். எதையும் நினைத்த உடனே நிறைவேற்றிப் பழக்கப்பட்டவனுக்கு, இதை ஜீரணிப்பதற்குப் பெரிதும் சிரமமாக இருந்தது.

 

இதுவரை எந்தப் பெண்ணிடமும் மயங்காத உள்ளம், எதற்காக அவளிடம் சரியவேண்டும் என்கிற கேள்வி எழுந்து இவனை வாட்டியது. மனம் ஒரு நிலையில் நிற்காது தவிக்க எழுந்தவன், தன் துவாயைப் பெட்டியிலிருந்து இழுத்து எடுத்தவாறு குளியலறை நோக்கிச் சென்றவன் குளிர் நீரின் கீழ் அப்படியே நின்றான்.

 

அந்தக் குளிர் நீர் கூட அவன் உடல் சூட்டையும், மனக் கொதிப்பையும் அடக்க மறுக்க, நொந்துபோனான் அவன்.

What’s your Reaction?
+1
22
+1
3
+1
2
+1
1
+1
1
+1
2

Related Post

2 thoughts on “நீ பேசும் மொழி நானாக – 5”
  1. vijayamalar tamil novel .com this id is not available i don’t reason please kindly arrange me this website

    1. அது இனி வேலை செய்யாதுமா. vijayamalarintamilnovel.com இனிமேல் இதிலதான் கதைகள் பதிவிடுவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!